அக்கொண்டாட்டத்திற்கு அனைவரும் பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட, தன் அன்னையிடம் கெஞ்சிக் கூத்தாடினாள்.
கங்காவுக்கு அவளின் இந்த சேலை அனத்தல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சேலை எவ்வளவு சிறுபெண்ணையும் பெரியமனுஷியாக அல்லவா ஆக்கிவிடும்! அந்த பயம் அவருக்கு. ஆனால், இறுதியில் மகளின் பிடிவாதமே வென்றது.
வெண்முத்துக்களால் பின்னப்பட்ட ரவிக்கை, வெள்ளியிழைப் புள்ளிகள் கொண்ட பேபி பிங்க் புடவை என்று அசத்தலாக வந்தவளின் அழகை இன்னும் மெருகூட்டியது அவளின் வழக்கமான குட்டி டைமண்ட் டாலர் செயின். தலையில் மட்டும் எப்போதும் போல் நேர்வகிடெடுத்து பத்து பின்னல். இந்த அலங்காரத்திற்கு ஒரு சரம் மல்லிகைப்பூ வைத்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், சாமிப்படங்களுக்குத் தவிர்த்து வேறதற்கும் அவர்கள் வீட்டில் பூ வாங்கும் பழக்கமில்லை.
தான் பூ வைப்பது தன் அன்னையை காயப்படுத்திவிடுமோ என்று தானும் பூ வைக்க விரும்பியதில்லை அனன்யா. ஏன் கையில் கலகலவென்று கண்ணாடி வளையல்கள் அணிய, ஜல்ஜல்லென்று கொலுசுகள் அணிய என்று ஒவ்வொன்றிற்கும் சங்கடப்பட்டாள்.
சிறுவயது முதலே தனக்காக அவள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து துறப்பதைக் கண்டு பெருமிதப்பட்டார் கங்கா. ஆனால், காலம் எப்போதும் ஒரேயிடத்தில் நிற்பதில்லையே.
கங்கா என்ன தான் படித்தப் பெண்ணாக இருந்தாலும் இன்னும் சில பிற்போக்குத் தனங்களிலிருந்து வெளிவரவில்லை. ஒரு கைம்பெண் வெள்ளை நிற புடவையை தான் உடுத்த வேண்டும் என்ற கணக்கில் எப்போதும் சாயம் போன நிறத்திலான புடவையையே தேர்ந்தெடுப்பார். கழுத்திற்கு சங்கிலி, முகத்திற்கு பவுடர், நெற்றிக்கு பொட்டு, கைக்கு வளையல் என்று எதுவும் கிடையாது. நீண்ட கூந்தலைக் கூட பின்னியதோடு விட்டுவிடுவார். இளம் வயதிலேயே கணவனை இழந்ததால் பிறரது கண்ணிற்கு உறுத்தாத வண்ணம் வாழப் பழகிக்கொண்டார்.
ஆனால், மகளுக்காக அவர் தேர்வு செய்யும் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கதாக இருக்கும். இன்றும் அப்படி தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே அவளைப் பார்த்து பார்த்து அலங்கரித்தார்.
அனன்யா அலுவலகம் வந்தபோது அவர்களின் வரிசையை வண்ணத்தாள் தோரணம் கொண்டு அலங்கரித்த ப்ரீத்தி, “உனக்கு இந்த சேரி நல்லாயிருக்குயா. எங்க வாங்கின?” என்று கேட்க,
“அய்யோ! இது அம்மா எடுத்ததுப்பா. எங்க வாங்கினாங்கன்னு தெரியாது.” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“உங்க அம்மா செலக்சன் சூப்பர்.” என்றவள் மூன்று விரல்களை காண்பிக்க,
“எனக்குனு அம்மா செலக்ட் பண்ற எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கும்.” என்று முகம் பூரிக்கச் சொன்னாள்.
அப்போது தான் அவளின் பின்னால் வந்து நின்றான் விக்கி.
அவனைப் பார்த்ததும் ப்ரீத்தி, “குட்மார்னிங் விக்கி” என்க,
சட்டென்று திரும்பி தானும், “குட்மார்னிங் சார்” என்றாள்.
அவனை வேஷ்டி சட்டையில் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை அவளுக்கு. முதலாளியாக இருந்தாலும் இங்கு வேலைபார்க்கும் ஊழியர்களில் ஒருவனாகவே தன்னை முன்னிலைப்படுத்தும் விக்கியின் தன்னடக்கம் வெகுவாக கவர்ந்தது அவளை.
அவனோ அவளின் அழகில் மொத்தமாக வீழ்ந்தான். மலைச்சிட்டானின் றெக்கையை வெட்டி ஒட்டியது போல் இரண்டு கருத்த இமைகள், வெள்ளைச் சிப்பிக்குள் கருப்பு முத்துபோல் அழகிய கண்மணிகள், லிப் டேட்டூ செய்தது போன்ற சிவந்த இதழ்கள், கடிக்கத் தூண்டும் மக்ரூன் மூக்கு, மாராப்பிற்குள் சுவாசத்திற்கு போராடும் பூச்செண்டுகள், இடையில் தெரியும் மென்மையான மாவிளக்கு.. எது தான் கவரவில்லை அவனை.
“உனக்குன்னு உங்கம்மா செலக்ட் பண்ற எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கும்னா உனக்குன்னு ஒரு டேஸ்ட்டே கெடையாதா?” என்றான் தீவிரமாக.
அவனின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தவளை மகேஷ் வந்து காப்பாற்றினான்.
அவன், “அர்ஜென்டா மெயில் ஒன்னு அனுப்பனும்னு சொல்லிட்டு இங்க என்னடா பண்ற? ஓ! இதான் அழகுல மெய் மறந்து நிக்கிறதா?” என்று கிண்டல் செய்ததும்,
“ஆமா இவங்க என் அழகுல மெய் மறந்து வழிய மறச்சிட்டு நின்னாங்க. அதான் தள்ளி நில்லுங்கனு சொல்லிட்டு இருந்தேன். இல்ல அனி?” என்று அவளிடமே கேட்க,
“இல்ல, ஆமா” என்று உளறிக் கொட்டினாள்.
நண்பர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர, பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடம். ஏனோ கன்னங்களிரண்டும் சூடாகியது போல் பிரம்மை.
அதன்பின் மற்றவர்களுடன் சேர்ந்து அவள் செய்த சமத்துவப் பொங்கலையும் சாப்பிட்ட விக்கி கண்களால் அவளை மெச்சினான்.
ஏனோ அவன் தனக்கு வழங்கும் ஒவ்வொரு அறிவுரைகளையும், பாராட்டுதல்களையும் தன் அன்னையிடம் ஒருமுறைக்கு மும்முறையாய் சொல்லி மகிழ்ந்தாள். அப்போது மகள் முகத்தில் ஒருபிடி அதிகமாய் டாலடித்த பிரகாசத்தைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார் கங்கா.
அது புரிந்து அவளும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள். ஆனால், அவனைப் பற்றிய விசயங்களை தன் அன்னையிடம் சொல்லாமல் விடுவதும்கூட குற்றவுணர்வைத் தந்தது.
அவள் வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள் ஓடிய நிலையில் ஒருநாள் தனக்கு உடம்பு சரியில்லையென்று பொய் சொல்லி தன் அன்னையுடன் விடாமுயற்சி படத்திற்குச் சென்றிருந்தாள்.
அவள் நேரம் விக்கியும் மகேஷும் அதே திரையரங்கிற்கு வந்திருந்தார்கள். இடைவேளையின் போது பாப்கார்ன் வாங்கும் இடத்தில் தான் அவளை கவனித்தான். ஆனால், அவள் கவனிக்கவில்லை.
மீண்டும் படம் ஆரம்பித்ததும் அவள் உட்கார்ந்திருக்கும் இடத்தையே உற்று பார்த்தான். முதல் நாள் காட்சி என்பதால் திரையரங்கில் சரியான கூட்டம். ஆனால், அவள் பக்கத்திலும் சரி, அவளின் அன்னையின் பக்கத்திலும் சரி, யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. அவற்றையும் அவர்கள் தான் முன்பதிவு செய்திருந்தார்கள். அது கங்காவின் முன்னெச்சரிக்கைகளில் ஒன்று.
இடைவேளைக்குப் பிறகு விக்கி படத்தைவிட்டு அவளையே அடிக்கடி பார்ப்பது கண்டு தெள்ளத்தெளிவாகியது மகேஷிற்கு, நண்பன் காதல்வலையில் விழுந்துவிட்டான் என்று.
மறுநாள் அவள் வேலை விசயமாக தன்னறைக்கு வந்தபோது, “விடாமுயற்சி படம் நல்லாயிருந்ததா?” என்றவன் கேட்க, அசடு வழிந்தாள்.
“உங்கம்மாவப் பாத்தேன். தூங்கி வழிஞ்சிட்டு இருந்தாங்க”
“ஆமா சார், அம்மாவுக்கு இந்த மாதிரி படம்லாம் புடிக்காது. நாந்தான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன்.”
“வேலையெல்லாம் செட்டாகிருச்சா? தடுக்கி விழுந்தா தாங்கிப் பிடிக்க ஃப்ரெண்ட்ஸெல்லாம் கெடச்சிட்டாங்க போல?” எனவும்,
அவன் கேலியில் வெட்கப்பட்டவள், “வேலையெல்லாம் ஓகே தான் சார். பட் ஃப்ரெண்ட்ஸ்… கான்ஃபிடன்ட்டா சொல்ல முடியல. மேனுஃபாக்சரிங் டிஃபக்ட்.” என்று இலகுவாகி சிரித்தாள்.
“சரி தான்” என தானும் இணைந்து சிரித்தவன் திடீரென, “என் பேரு விக்கி” என்றான்.
அவள் புரியாமல் விழித்தாள், “தெரியுமே” என.
“அப்பறம் ஏன் என் பேர் உன் வாய்க்குள்ள இருந்து வர அடம்புடிக்குது?”
அவன் சொல்ல வருவது புரிந்து தயங்கினாள்.
“கால் மீ விக்கி. ப்ளீஸ் ஒன் டைம்”
மாட்டேன் என்று குனிந்தபடியே தலையாட்டினாள்.
“ஏன்?” என்றவன் ஆர்வமாக வினவ,
“என் அம்மாவுக்கு அவங்க மருமகன நான் பேர் சொல்லி கூப்பிடுறது புடிக்காது” என்று அவன் மேல் தனக்கு ஏற்பட்டுள்ள காதலை வெட்கத்தைவிட்டு சொல்லிவிட்டாள்.
சாதாரணமாக எந்தவொரு பெண்ணிற்கும் இருக்கும் தயக்கத்தை உடைத்து அவளே தன் காதலை வெளிப்படுத்தியது விக்கிக்கு கனவுபோல் இருந்தது.
இருப்பினும், “எனக்கு என் பொண்டாட்டி என்ன பேர் சொல்லித்தான் கூப்டனும்” என்று பிடிவாதம் செய்தான்.
வேறு வழியின்றி மீண்டும் தன் வெட்கத்தை வாடகைக்கு விட்டு அவனை, “விபூ” என்றழைத்ததோடு சிட்டாகப் பறந்தாள்.
“அட! விக்கிரமப் பூபதி விக்கியாகி விபூவாகிட்டேனா?” வாய்விட்டு சிரித்தான்.
தன்னால் சிரிக்கும் நண்பனை கண்ணாடிக் கதவின் வழியே பார்த்த மகேஷ் பொறாமையுடன், “உன் கெட்டநேரம் நெருங்கிருச்சி விக்கி” என்று நகத்தைக் கடித்தான்.
அது உண்மையோ என்னவோ அன்று தான் விக்கியின் வீட்டில் அவனுக்கு பெரிய அதிர்ச்சியொன்று காத்திருந்தது.
கலைடாஸ்கோப் திரும்பும்…