Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிருஷ்ண லீலை - சிறுகதை

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
அதிகாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த வண்டி தஞ்சாவூரின் புறநகர் பகுதியின் அந்த தெருவுக்குள் நுழைந்தது. வண்டி அந்த வீட்டின் முன் நின்றது, அதிலிருந்து சுந்தரம் முதலில் இறங்கி, “இந்த வீடுதான்” என்றார். அதைக் கேட்டு இறங்கிய அவர் மனைவி, சுற்றும் முற்றும் பார்த்தார். தெரு நன்றாகத்தான் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அவரை தொடர்ந்து ஒரு கொலுசு சத்தத்துடன் அவருடைய பெண் இறங்கினாள். கொலுசின் சத்தம் அந்த பெண் ஒரு பருவ வயதில் இருக்கிறாள் என்பதைக் காட்டியது. அவள் இறங்கி இருபக்கமும் பார்த்து விட்டு “ரொம்ப அமைதியான தெரு போல” என்று கார் உள்ளே இருந்த தன் தங்கையிடம் சொல்லிவிட்டு தன் அம்மாவை இப்பொழுது என்ன வேலை செய்யவேண்டும் என்றபடி பார்த்தாள்... “எனக்கு இப்ப டையர்ட் ஆக இருக்கு, நான் தூங்கணும்” என்றபடி இறங்கிய தங்கை வீட்டுக்கு கடைசியாகத்தான் இருக்கணும். சுந்தரம், பேங்க் மேனேஜர், சென்னையிலிருந்து தஞ்சாவூர் மாற்றலாகி வந்திருக்கார். மனைவி கோமதி, இல்லத்தரசி. மூத்த பெண் வானதி எம்.எஸ்.சி பிசிக்ஸ் முடித்து, கல்யாணத்தை எதிர்நோக்கி இருப்பவள். இளையவள் செல்வி, எம்.பி.ஏ முடித்துவிட்டு கம்பனிகளுக்கு ஹச்.ஆர் ஜாப்பிற்கு அப்ளை பண்ணிக்கொண்டு இருக்கிறாள். வீட்டுக்குள் நுழைந்தவுடன், சுந்தரம் தன் பெண்களிடம் “மாடியில் உங்க ரூம் இருக்கு , போய் தூங்குங்க” என்றார். இரண்டு பிள்ளைகளும் மாடிக்குச் சென்று அந்த அறையை ஒரு நோட்டம் விட்டார்கள். செல்வி மாடியில் இருந்த ஜன்னலைப் பார்த்து முகம் மலர்ந்து, “அய், நம்ம நல்லா வேடிக்கை பார்க்கலாம்” என்றபடி ஜன்னலின் அருகே சென்று தெருமுழுதும் அங்கிருந்து பார்க்க முடிவதை உறுதிப்படுத்திக் கொண்டு, தன்னுடைய படுக்கையில் போய் பொத்தென்று விழுந்தாள். “கொஞ்சம் மெதுவாத்தான் படேன்டி” என்று தன் தங்கையைப் பார்த்து சொல்லிவிட்டு தன்னுடைய படுக்கையை சரிசெய்தாள் வானதி. “எல்லாம் காலைல பார்க்கலாம்” என்றபடி கனவுலகத்துக்கு விரைந்தாள் செல்வி, “சரி சரி” என்றபடி கீழே போய் அம்மாவிடம் எல்லாம் முடிந்துவிட்டதா என்பதை உறுதிசெய்து விட்டு மேல வந்து படுத்தாள் வானதி.​

சூரியன் தன் ஒளிக்கதிர்களை அந்த அறையில் படுத்திருந்த பெண்களின் அழகு முகத்தில் பாய்ச்சி அந்த அறையை பரவசப்படுத்தினான். அதன் சூடு தன்முகத்தில் படர்ந்து கனவுலகத்தில் இருந்து தன்னை வெளியே எடுக்க முயற்சிப்பதை தள்ளிப்போட புரண்டபடி இருந்தாள் செல்வி.

“வேலை இருக்கு எந்திருங்க” என்ற அம்மாவின் குரலைக் கேட்டு எழுந்தாள் வானதி. கண்விழித்து புது வீட்டில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து “அக்கா வீட்டுக்கு வந்திட்டோம்” முகம் மலர்ந்து கூறினாள் செல்வி. எதையுமே நிதானத்துடன் அணுகும் வானதியின் முகம் கூட மலர்ந்தது. ஜன்னலின் அருகே சென்று தெருவை நோட்டம் விட்டாள். இரண்டு பக்கமும் இருந்த மரங்கள் அந்த தெருவின் அழகை கூட்டியது.

ரிங்க்க்க்க் காலிங்பெல்லின் சத்தம். “யாரு வந்திருக்காங்க பாருங்க” அம்மாவின் சத்தம். பேங்ஸ்ல் இருவரும் முகம் கழுவி யாரு அதுக்குள்ள என்ற ஆர்வத்துடன் சென்று கதவை திறந்தனர். 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி, அமைதியின் சொரூபம் முகத்தில் தெரிந்தது. ரெண்டு பெண்களின் முகத்தையும் ஆர்வமுடன் பார்த்துவிட்டு, “அம்மா இருக்காங்களா” என்றார். யாரு என்று கோமதி வந்தாள் . “நான் எதிர்வீட்டுல இருக்கேன், புதுசா வந்துருக்கீங்க, எதுவும் வேணும்னா சொல்லுங்க“ என்றபடி கொண்டுவந்த பாலைக் கொடுத்தார். “ரொம்ப நன்றிங்க, உள்ள வாங்க” என்றழைத்தாள் கோமதி. பெண்கள் இருவரும் தன் வேலைகளைப் பார்க்க போனார்கள். பால் எங்கே வாங்க வேண்டும், காய்கறி எங்கே கிடைக்கும், வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பார்களானு , இல்லத்தரசிகளின் சகலமும் 1 மணி நேரத்தில் பேசப்பட்டு, வீட்டிற்கு வருவதற்கு அழைப்பும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எதிர்வீட்டு பெண்மணி.

அவர் சென்றவுடன், "ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, எல்லா விஷயங்களும் சொன்னாங்க.” தனக்கு ஒரு தோழமை கிடைத்த சந்தோஷத்தில் கோமதி, சுந்தரத்திடம் சொன்னாள். சுந்தரம் தலையாட்டினார்.

புதுவீட்டில் செட் ஆகிவிட்டது, சுந்தரம் பணியில் சேர்ந்துவிட்டார். கோமதி இன்னும் ஆறுமாதத்தில் மாப்பிள்ளை பார்த்து வானதிக்கு திருமணம் செய்யாவிட்டால் உலகம் அழிந்துவிடும் என்பது போல, ஜாதக பக்கங்களை உருட்ட ஆரம்பித்தாள். “போற வீட்டில் நல்ல பேரு வாங்கணும்ன்னு” ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை வானதிக்கு நியாபகப்படுத்திவிடுவாள். "எனக்கு இந்த தொல்லை எல்லாம் கூடாது, மாமியார் மாமனார் இல்லாமல் பாக்கணும்" என்று செல்வி சொல்லிச் சிரிப்பாள். “அடி போடி, உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை, என் மானத்தை புகுந்த வீட்டில் கப்பலேத்திடுவ” என்று கோமதி சொல்லுவாள்.

அப்பா சுந்தரம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர், வேலையில் கடுமை. எதுவும் சரியாக நடக்கவேண்டும். எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும். பெண்கள் அரட்டை அடித்தால் பிடிக்காது. தன்னுடைய பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்துவிடணும்னு தினமும் கோவிலுக்கு போய் வேண்டிக் கொள்வார்.

வானதியும், செல்வியும் தங்கள் அறையில் இருந்து அந்த தெருவில் நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். யார் யார் எந்தெந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பது முதற்கொண்டு அறிமுகம் கிடைத்துவிட்டது.

அந்த வீதிக்கு ரெண்டு பெண்கள் வந்ததை அறிந்து, புதிய பைக்குகள் அந்த வீதியில் வலம்வந்து யூ டேர்ன் போடுவதை அந்த வீதியின் வயதான மாமாக்களும் மாமிகளும் கவனித்ததைப் போல, செல்வியும் கவனித்து, தன் அக்காவிடம் ரகசியமாக சொல்லிச் சிரித்தாள். “இந்த பயலுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ” என்று சிரித்தபடி கடந்தாள் வானதி.

எதிர் வீட்டு அம்மாவும் அவர் கணவரும் அங்கிள் ஆண்ட்டி ஆனார்கள். “அவங்களுக்கு ஒரே பையனாம், பெங்களூரில் வேலையாம்" கோமதி சுந்தரத்திடம் சொல்லும்போது, வானதி கவனித்ததை செல்வி கவனித்து, மனதுக்குள் சிரித்தாள். எதிர் வீட்டு அங்கிளின் தம்பி சண்முகம், சுந்தரத்துடன் பேங்கில் ஒன்றாக வேலை பார்ப்பதால், ரெண்டு வீட்டிற்கும் நெருக்கம் அதிகம் ஆனது. எதிர்வீட்டு அங்கிள் அதிகம் பேசமாட்டார், நியூஸ் பேப்பர்கள் நியூஸ் சேனல்ஸ் தான் அவருடைய ரிட்டையர்மென்ட் லைப்பின் முழுவேலை. சத்தம் எதுவும் இருக்காது. சண்முகம் வந்தால் கொஞ்சம் பேச்சு கேக்கும். அந்த அம்மாவை தெருவில் இருப்பவர்கள் கண்ணனம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். “ஆண்ட்டி , நீங்க ரொம்ப அமைதி, நீங்க பேசுறது கூட வெளில கேக்காது", செல்வி சொல்லும்போது அவர் அதைக் கேட்டு சிரிப்பார்.

சுந்தரம் கோமதியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், “சண்முகம் பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்க்கிறார்களாம், நமக்கு தெரிந்த பசங்க இருந்தா பார்க்க சொல்றாங்க. நாமளும் வானதிக்கு பாக்குறோம், தெரிந்தா சொல்லுவோம்” - யோசனையில் ஆழ்ந்தாள் கோமதி.

அன்று சனிக்கிழமை, எதிர்வீட்டில் இருந்து ஒரே கலகலன்னு வந்த சிரிப்பு சத்தம், வானதியையும் செல்வியையும் எழுப்பி விட்டது.

"என்ன, கண்ணன் வந்திருக்கானா? ஒரே சத்தமா இருக்கு" சிரித்து கொண்டு வீட்டுக்கு வெளியில் வந்து பக்கத்துவீட்டு டிரைவர் அங்கிள் கேட்டார் .

"மாம்ஸ்சே, மதியம் என்ன சாப்பாடு?" உள்ளே இருந்து வந்தது வாய்ஸ். "இன்னைக்கு வெஜ் தான், உனக்கு பிடிக்காது" -டிரைவர் அங்கிள். "எனக்கு என்ன பிடிக்கும்னு நான்தான் சொல்லணும், சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா" சொல்லி ஒரே சிரிப்பு அலை. டிரைவர் அங்கிள் “உன்னோட வாய்க்குடுத்து மாட்டமுடியாது" என்று சொல்லிக் கிளம்பினார். பேசியது தெரு முழுதும் கேட்டிருக்கும்.

செல்வி தன் மேல் இருந்த போர்வையை விலக்கி அக்காவைப் பார்த்துச் சொன்னாள்; "கண்ணன்", சிலகணங்கள் கழித்துச் சொன்னாள், "பயங்கர அராத்து போல".

"ஆமாம் , அப்டித்தான் தெரியுது, எதிர்வீட்டு ஆண்ட்டி அங்கிள்க்கு இப்படி ஒரு பையனா" - வானதி.

கொஞ்சம் நேரம் கழித்து, பைக் சத்தம், ஒரே இடத்திலிருந்து தொடர்ந்து கேட்கிறது. வானதியும், செல்வியும் ஜன்னல் வழியே எட்டி பார்க்கிறார்கள். பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு கண்ணன் யாரோடயோ போனில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறான். பைக்கையும் கிளப்பவில்லை, பேச்சையும் நிப்பாட்டவில்லை. சுந்தரம் "யாரு இது? பைக் சத்தம் நிக்காம இருக்குன்னு” கேட்டுட்டே வெளியே வருகிறார். பெண்கள் இருவருக்கும் படபடப்பு, அப்பா ஏதும் சொல்லி தேவையில்லாத பிரச்சனையை இழுத்துவிடுவாரோன்னு .

கண்ணனைப் பார்த்து, “தம்பி, ஒண்ணு பைக் எடுங்க, இல்லை போன் பேசுங்க" - சுந்தரம். போன் பேசுவதை நிப்பாட்டிட்டு கண்ணன் திரும்பி சுந்தரத்தை கூர்மையாக பார்க்கிறான். கலைந்த முடி, கருப்பு கலர் டீஷர்ட், ஜீன்ஸ். "பார்த்தாலே தெரியுது அராத்துன்னு, ஏன் இந்த அப்பா இப்படி தேவை இல்லாம பேசுறாங்க" வானதி சொல்லும்போது பதட்டம் தெரிகிறது.

எதிர் வீட்டு ஆண்ட்டி வெளியில் வந்து, "கண்ணன், அவங்க எதிர்வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க". கண்ணன் முகம் மாறி புன்னகை தெரிகிறது, "சரி அங்கிள், நீங்க சொல்றது சரிதான்" - திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். அவன் அப்படி திரும்பும்போது அவன் கண்கள் தங்களை ஒரு கணம் கவனித்து திரும்பியதாக செல்வி நினைக்கிறாள். அதை கடக்க முடியாமல் கடந்து செல்கிறாள்.

சுந்தரம் உள்ளே வந்து கோமதியிடம் சொல்கிறார், “இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாரு”

மாலைப்பொழுது, சண்முகம் ஒரு பையனோடு எதிர்வீட்டுக்கு வருகிறார். கண்ணனைப் பார்த்து “வாடா வாடா கண்ணா, எப்ப வந்த, எவ்ளோ நாள் லீவு?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே போகிறார்.

கண்ணன் அந்த பையனைப் பார்த்து, "பாலு, நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி, சித்தப்பா வீட்டுக்கு உள்ள போயிட்டார் பாரு".

பாலு - "அப்பா பத்திதான் தெரியுமே, எல்லாத்துலையும் அவசரம்" - ரெண்டுபேரும் சேர்ந்து சிரித்தார்கள்.

சண்முகம் வெளியில் வரும்போது சுந்தரம் நிற்கிறார், ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசுகிறார்கள். பெண்கள் ரெண்டுபேருக்கும் ஆர்வம், அப்படி என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள்னு.

உள்ளே வந்து கோமதியிடம், பாலுவும் கண்ணனும் என்ன வேலை பாக்குறாங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்கனு சொல்லிக்கொண்டிருந்தார். சுந்தரத்தோட பேச்சில் காலைல கண்ணன் மேல் இருந்த எரிச்சல் அகன்று ஒருவித சாஃப்ட் கார்னர் தெரிவதை பெண்கள் ரெண்டுபேரும் நோட் பண்ணுகிறார்கள்.

"கண்ணன் எங்க வேலை பாக்குறானு தெரிஞ்சவுடன், இப்ப ரொம்ப நல்ல பையனா ஆகிட்டான்" - மெல்லிய குரலில் செல்வி தன் அக்காவிடம் சொல்லி கண் சிமிட்டுகிறாள். "அக்கா பார்த்து, அப்பா போற வேகத்தைப் பார்த்தா உனக்கு கண்ணனைப் பார்த்திடுவார் போல ".

"அய்யய்யோ, எனக்கு செட் ஆகாதுப்பா" சொல்கிறாள் வானதி. "அப்பா, உனக்கு அந்த ஆப்ஷன் கொடுப்பாரா?" செல்வி கேட்கிறாள், வானதி மவுனம் ஆகிறாள்.

நாட்கள் செல்கிறது, வீட்டில் ஜாதக கட்டுகள் பக்கம்பக்கமாக பார்க்கப்படுகிறது. சுந்தரம் ஆஃபீசிலிருந்து வந்தவுடன், "கோமதி , கோமதி" தேடுகிறார். "என்னங்க" - கோமதி.

"சண்முகம் பொண்ணை என்னோடு பழைய பேங்கில் வேலை பார்த்தவர் பையனுக்கு பேசுறாங்க, இந்த ஞாயிறு பெண் பார்க்க எதிர்வீட்டுக்கு வர்றாங்களாம். கண்ணன் அப்பாத்தான் மூத்தவராம், அதுனால இங்கதான் வர்றாங்களாம், சாப்பாடு ஏற்பாடு பண்றாங்களாம், நம்மளையும் கூப்பிட்டிருக்காங்க " . - சுந்தரம். "சரிங்க, நாமளும் போவோம்". - கோமதி.

அந்த ஞாயிறு வந்தது, அன்றைக்கு நடக்க போகும் சங்கதிகள் எல்லாம் எனக்கு தெரியும் என்று, என்றைக்குமில்லாத வெளிச்சத்துடன், கதிரவன் முன்கூட்டியே வந்துவிட்டான்.

எதிர் வீடு அமர்க்களப்படுது, ஒரே சத்தம். காலைலயே சண்முகம் வீட்டில் இருந்து வந்து விட்டார்கள். பாலு, கண்ணன் எல்லாம் சேர்ந்து தங்கள் தங்கையை வம்பிழுத்து கொண்டிருந்தார்கள்.

சண்முகம் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வந்து வந்து போகிறார். "வேலை செய்யுறீங்களோ இல்லையோ, ஆனா சும்மா இங்கயும் அங்கேயும் சுத்திட்டு இருக்கீங்க சித்தப்பா" கண்ணன் கிண்டல் அடிப்பது இங்கே கேட்கிறது.

வானதி வீட்டிலிருந்தும் அங்கே போய்விட்டார்கள், பாலுவின் தங்கை நன்றாக பேசினாள். நன்றாக பொழுது போயிற்று, பையன் வீட்டிலிருந்து வந்தார்கள். சுந்தரம் தான் ரெண்டு தரப்புக்கும் தெரிந்தவர் ஆனதால், நடுவில் இருந்து பேசினார். கோமதிக்கு பெருமையாக இருந்தது. கலையான தேதியை குறித்துக் கொண்டு பையன் வீட்டிலிருந்து மகிழ்ச்சியாக கிளம்பினார்கள் .

அவர்களை அனுப்பிவிட்டு சண்முகமும், சுந்தரமும் வீட்டுக்கு வெளியில் இருந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

செல்வி அதை கவனித்து அக்காவிடம் கண்ஜாடை காமிக்கிறாள். அக்காவிடம் வந்து "அப்பா என்ன பிளான் போடுறார்னு, தெரியலை, அப்ப கண்ணன்தானா". "சும்மா இருடி, நீ வேற பீதியை கெளப்புற" - வானதியின் பதட்டம் கூடுகிறது.

சுந்தரம் வந்து கோமதியைக் கூப்பிடுகிறார், கண்ணன் அம்மாவும் அப்பாவும் கூட போகிறார்கள். என்ன பேசிக்கொள்கிறார்கள்ன்னு இவர்களுக்கு புரியவில்லை. கண்ணனும் பாலுவும் இதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை, டிவி யில் படம் பார்த்து கமெண்ட் அடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பேசிக்கொண்டிருந்தவர்கள் இவர்கள் அறையைக் கடந்து செல்கிறார்கள், “நான் கேக்க மாட்டேன், நீங்களே கண்ணன்ட கேளுங்க" - கண்ணன் அம்மா சண்முகத்திடம் பின்வாங்குகிறார்.

சண்முகம், "அண்ணி, நான் பாத்துக்கிறேன்".

"கண்ணா, இங்க வா" - சண்முகம் கூப்பிடுகிறார். "படம் முடியலை, நான் அப்புறம் வருகிறேன்" - கண்ணன். "நீ முதல இங்க வா, படத்தோட முக்கியமான விஷயம்".

"அப்படி ஒரு விஷயம் இருக்கான்னு" கண்ணனும் பாலுவும் வருகிறார்கள்.

சண்முகம் விஷயத்தை உடைக்கிறார். "கண்ணா, சுந்தரம் அங்கிள் தெரியும்ல, அவர் பொண்ணு வானதியை உனக்கு கேக்கலாம்னு பேசியிருக்கோம் , சுந்தரம் வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க, நீ என்ன சொல்ற?"

இதைக் கேட்டுட்டிருந்த செல்வி அக்காவைப் பார்த்துச் சொல்கிறாள், "நான் அப்பவே சொன்னேன்ல, கொஞ்சம் பேச தெரிஞ்சிக்க அப்பதான் சமாளிக்க முடியும்" .

எல்லோருடைய கண்களும் கண்ணன் மேல்.

கண்ணன் அனைவரையும் ஒருமுறை கூர்மையாக பார்க்கிறான். அந்த பார்வையில் , என்னை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற கேள்வி இருந்தது. தன்னை பார்க்கும்போது, அவனுடைய அம்மா தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை, எல்லாம் அவசர சித்தப்பாதான் என்பதுபோல சண்முகத்தை நோக்கினார். கண்ணன் பேச தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் சண்முகத்துக்கு ப்ளட் பிரஷர் ஏறியது. ‘இவனுக்கு இடம் குடுக்க கூடாது , அழுத்திப் போட்டு இதை முடிச்சிரணும்’ என்று முடிவு செய்து “கண்ணா, வானதி ரொம்ப நல்ல பொண்ணு, உன்னை நல்லா பாத்துப்பா”, சுந்தரம் தன்பங்குக்கு, “தம்பி, அவ எம்.எஸ்.சி படிச்சிருக்கா , வேலைக்கு விருப்பம் இருந்தா போகலாம்”. கண்ணனின் அம்மா “ஆமா, நல்லா தெரிஞ்ச வரன் வரும்போதே முடிச்சிரணும், இப்ப எல்லாம் தெரியாத இடத்தில் வரன் பார்த்து, கல்யாணத்துக்கு அப்புறம் பிச்சிகிட்டு போயிடறாங்க”. கண்னனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை, சண்முகம் கண்டுபிடித்து விட்டார், ‘இவன் ஏதோ ரகளை அடிக்க போறான்னு. கண்ணன் ஆரம்பித்தான் “என்னுடைய கல்யாணத்தை நான்தான் முடிவு பண்ணுவேன்”

கதை முடிந்தது என்று நினைத்தார் சண்முகம். கண்ணன் தொடர்ந்தான், “அங்கிள், சித்தப்பாவும் அம்மாவும் சொல்லிட்டாங்க உங்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு, ஆனா நான்தான் உங்க பொண்ணுக்கு பொருத்தம் இல்லை”. செல்வி வானதியைப் பார்த்து “தப்பிச்சிட்டே” என்று கண் சிமிட்டினாள். பொண்ணு வேணாம்கிறதை எப்படி அழகா சொல்றான் பாருன்னு, மனதுக்குள் திட்டினார் சண்முகம். சுந்தரம் முகம் வாடியது. கண்ணனின் அம்மா “இந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடைக்க வரம் வேண்டும்” என்று கோபத்துடன் பேசி முகம் திருப்பினார்.

கண்ணன் ஒரு கணம் விட்டுச்சொன்னான், “அங்கிள், எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணு செல்வியை பிடிச்சிருக்கு, கட்டிகுடுப்பிங்களா?”, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. செல்வி 'அப்ப, அன்னைக்கு கண்ணனின் கண்கள் ஜன்னல்ல பார்த்தது நம்மள மட்டும்தான்' என்று நினைத்துக்கொண்டு, வானதியிடம் சொன்னாள், “அக்கா, நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், இப்பவே போய், சொல்றேன்”. அதற்கு வானதி, “அவசரப்படாதே, முகத்தில் அடித்தமாதிரி சொல்லக்கூடாது, அம்மாவை உள்ளே அழைத்து சொல்லலாம்” என்று கிளம்ப எத்தனித்தவளை தடுத்தாள்.

சுந்தரம் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. “தம்பி, நீங்க எப்படி இப்படி சொல்லலாம். மூத்தபெண்ணை வைத்துக்கொண்டு, இளைய பெண்ணுக்கு மாப்பிள்ளை யாரும் பார்ப்பாங்களா, கோபத்தைக் காட்டினார். அந்த இடத்தில் பரபரப்பு தொற்றியது, சண்முகம் வாய் அடைத்துபோய் நின்றார், கோமதிக்கும் கோபம் தாங்கவில்லை. ஏதாவது கேட்டுவிடுவோமோன்னு எண்ணி, சண்முகத்தையும், கண்ணனின் பெற்றோர்களையும் புண்படுத்திவிட வேண்டாமென்று தன் வாயை அடக்கிக்கொண்டாள்.

எதற்கும் அசராத கண்ணன் சொன்னான், “அங்கிள், உங்க மூத்த பொண்ணுக்கு, என்னைவிட அருமையான மாப்பிள்ளை, நம் வீட்டில் இருக்கும், நம்ம பாலுதான் அது'.

அதுவரை எல்லாத்தையும் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்த கண்ணன் அப்பா, “ஆமா, பாலு சரியான மாப்பிள்ளை, நல்லவேலை, தஞ்சாவூரிலேயே வேலை பாக்குறான். ஒரு பொண்ணு உங்க பக்கத்திலேயே இருக்கும், இன்னொரு பொண்ணு வெளியூர் போனாலும்” என்று சரியான நேரத்தில் களத்தில் இறங்கி சிக்ஸர் அடித்தார். சண்முகம் திகைத்துவிட்டார். கண்ணனின் அப்பா தம்பியைப் பார்த்து, “ஒரே முகூர்த்தத்தில், ரெண்டுபேருக்கும் கல்யாணத்தை முடிச்சிரலாம்” சிக்ஸர் மேல் சிக்ஸர்.

கண்ணனின் அம்மா சுந்தரத்தையும் கோமதியையும் பார்த்து, “நீங்க என்ன சொல்றிங்க?” என்றார். சுந்தரத்துக்கு என்ன நடக்குது என்பது புரிபடவில்லை. எல்லாம் பாஸ்ட் பார்வேர்ட்டில் நடப்பது போன்று தோன்றியது. தன்னுடைய கணவரின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை ஒருநொடியில் கணித்த கோமதி சொன்னாள், “பாலு பத்தி எங்களுக்கு தெரியும், நல்ல பையன்னு”. சுந்தரத்தின் குழப்பம் அதில் தெளிவானது, சுந்தரம் தன்னிலை வந்து “ஆமாம்” என்பதுபோல தலையாட்டினார். கண்ணனைப் பற்றி ஒன்றும் வரவில்லையே என்று சண்முகம் முகத்தில் சிறுகவலை.

கண்ணனின் தந்தை, “அப்புறம் என்ன, அடுத்து நடக்கவேண்டியது பார்க்கலாம்”. சுந்தரம் எல்லாவற்றையும் சட்டென்று யோசித்துச் சொன்னார், “என்னோட, ரெண்டு பொண்ணுகளையும் உங்க வீட்டில் குடுப்பதற்கு, எனக்கு சம்மதம்” - அறையில் இருந்த அனைவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

செல்வி திகைத்துப் போனாள், தன் அம்மாவை கூப்பிட தயாரானாள்.

கண்ணன் திரும்ப, “நன்றி அங்கிள், அதே சமயம் ஒரு கண்டிஷன்”. சண்முகம், இதற்குமேல் தாங்காதுடா என்று நினைத்துக்கொண்டு “கண்ணா, என்னதான்டா உனக்கு வேண்டும், எங்களுக்கு எல்லாம் ஹார்ட் அட்டாக் வரணுமான்னு?” அங்கலாய்த்தார்.

கண்ணன் “அங்கிள், உங்க பொண்ணு செல்வியோட சம்மதம் கேளுங்க, வாழப்போறது உங்க பொண்ணுதானே?”

சுந்தரம், “என் பொண்ணு நான் சொன்னதைக் கேட்பாள், அவளுக்கு தெரியும், தன்னோட அப்பா தனக்கு நல்ல வரன்தான் பார்ப்பாருனு”

கண்ணன், “அங்கிள், எனக்கு செல்வியோட சம்மதம் முக்கியம்.”

சண்முகம், இது என்னடா, ரெண்டுபேரும் கொடாகண்டன்ங்களாக இருக்காங்க என்று திகைத்தார்.

கதவு திறந்து செல்வி வெளியே வந்தாள். எல்லாருடைய கவனமும் செல்விமேல் பதிந்தது. கோமதிக்கு பதற்றம் 'என்ன சொல்லப்போறாளோன்னு'.

செல்வி கண்ணனைப் பார்த்தாள், கண்ணனின் கண்கள் செல்வியின் கண்களைப் பார்த்தது.

செல்வி பேசினாள், “எனக்கு சம்மதம்”

கண்ணன் செல்வியைப் பார்த்து, “உங்க அப்பா சொல்லிட்டார்னு சம்மதமா, இல்லை செல்விக்கு சம்மதமான்னு?” ஒரு கொக்கி போட்டான்.

“அதை உங்கள்ட சொல்லணும்னு அவசியம் இல்லை” என்றாள் ராதிகா செல்வி என்ற செல்வி.

“போட்றா வெடியை, அம்மா, நீதான் கண்ணனுக்கு பொருத்தமான பொண்ணு, அவன் கொட்டத்தை அடக்க சரியான ஆளு” சண்முகம் முகம் முழுவதும் புன்னகையாய் சொன்னார்.

கண்ணனின் அம்மா, “சரியா சொன்னிங்க, இதுக்குத்தான் இவ்ளோ வருஷம் வெயிட் பண்ணினேன்”

அறை முழுவதும் பூக்கள் குலுங்கியதுபோல, சிரிப்பு.

தன்னுடைய சம்மதத்தை கேட்க சொன்ன கண்ணனின் வார்த்தைகள், தன்னுடைய இதயத்தை திறந்ததை நினைத்து பூரித்து நின்றாள் ராதிகா.

கண்ணன் வெட்ஸ் ராதிகா.

இனிதே சுபம்.
 
Top Bottom