அத்தியாயம் 3
கதிரவன் தன் செங்கதிர்களை பூமியில் படறவிட்டு, நெடு நேரமாகியிருந்த பொழுதும், உதியனம்பி அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட களைப்பால் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் செவிகளில், மனதிற்கினியவளின் சிரிப்பு சத்தம்! அவனின் உயிர்வரை ஊடுருவிச் சென்று, அவனின் நித்திரையைக் கலைத்தது.
மெல்ல சிரமத்துடன் இமைகளைத் திறந்தவனுக்கு இது கனவா? நனவா? என்றே ஒரு நிமிடம் புரியவில்லை..
நிறையாழி எப்படி இந்த நேரத்தில், தன் வீட்டிலென்று நம்ப முடியாமல் குழம்பினான்.
உடனே படுக்கையிலிருந்து எழுந்து, மகிழ்ச்சியுடன் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.
நிறையாழியோ, வழக்கம் போல அத்தை வீட்டின் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து, தாழ்குழலி கொடுத்த காபியை ரசித்து, ருசித்து குடித்துக் கொண்டே வாயாடிக் கொண்டிருந்தாள்.
"அத்தை உங்க காபிக்கு இணை வேறு எதுவுமே இல்லை. இதற்காகவே தினமும் இங்க வரனும் போல இருக்கு. ஆனால் இத்தனை நல்ல காபியை விட்டு எப்படிதான் தினமும் உங்க மகன் செந்தி காப்பியை குடிக்கிறாரோ.." என்றாள்.
"அண்ணி காபிக்கென்ன? அவர்களும் நன்றாகத் தான் காபி வைப்பார்கள்.." என்ற தாழ்குழலியிடம்..
"ம்ஹூம் உலகத்திலேயே, நீங்களும், உங்க மகனும் தான், செந்தி தரும் காலுநீர் தண்ணியை காபின்னு சொல்வதோடு, ரசித்து... ருசித்து குடிப்பீங்க.." என்றபடி நிமிர்ந்தவள், வாயை மூடாமல் அப்படியே திரு திருவென்று விழித்தாள்.
அங்கே, தூக்க கலக்கத்துடன், சமையலறை கதவில் கைகளை கட்டிக் கொண்டு, சாய்ந்தபடி உதியனம்பி அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
தாழ்குழலியோ, மருமகளின் பேச்சு சத்தம் திடீரென்று நின்றவுடன், தன் கை வேலையை விட்டுவிட்டு, மருமகள் புறம் திரும்பியவர், வாயைத் திறந்தபடி திருட்டு முழி முழிப்பதைக் கண்டு, என்னவென்று மருமகள் பார்த்த திசையைப் பார்த்தார்.
அங்கே மகனைக் கண்டவர் புன்னகையுடன், "உதிம்மா எழுந்துட்டீயா.. காபி கலந்து தரவா?" என்று கேட்டார்.
மகனோ பார்வையை நிறையாழி மீது வைத்தபடியே, தலையை மட்டும் ஆட்டினான்.
அதற்குள் வெளியில் காய்காரர் சத்தம் கேட்டவுடன், தாழ்குழலி, "இருப்பா காய் வாங்கிட்டு வந்த பின் காப்பி கலந்து தரேன்.." என்றபடி காய் வாங்கச் சென்றார்.
தாழ்குழலி நகர்ந்த பின், உதியனம்பி தன்னையே விழி எடுக்காமல், பார்த்துக் கொண்டிருந்த நிறையாழியின் புறம், ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்தான்.
நிறையாழிக்கோ, அப்போது தான் உறக்கத்திலிருந்து விழித்த அவனின் கலைந்த தோற்றமும், அவன் பார்வையும், தன் புறம் அவன் நெருங்குவதையும் கண்டு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.
அவனோ, அவள் அருகில் சென்று, அவளின் இருபுறம் தன் கைகளை சமையல் மேடையில் அரணாக ஊன்றி, அவளை தன் கைகளுக்குள் சிறை செய்தான்.
நிறையாழியோ, என்றுமில்லாமல் இன்று அவன் செய்கையில் விதிர் விதித்துப் போனாள்.
உதியனம்பிக்கே இன்று தன் செயல் புதியது என்று புரிந்தாலும், அது புத்திக்கு உறைத்தாலும், மனதிற்குப் புரியவில்லை. அவன் ஓர் இனம் புரியா மயக்க நிலையிலிருந்தான்.
மெல்ல நிறையாழியின் காதருகில் குனிந்து, "காலையிலேயே இப்படி ஒரு தரிசனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.." என்றவன், அவளின் காதுகளில் கதை பேசிய ஜிமிக்கையை சுண்டி விட்டான்.
அவளோ, அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
உதியனம்பி, அவளின் அதிர்ந்த பார்வையை ரசித்தபடியே, "எதுக்கு இப்படி ஆளை முழுங்கிற மாதிரி பார்க்கிறே அழகி.." என்றவன், தாழ்குழலி வரும் ஓசை கேட்டு, அவளின் நெற்றியில் செல்லமாக முட்டிவிட்டு நகர்ந்தான்.
நிறையாழியோ, அவனின் செயலில் உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள்.
தாழ்குழலியோ, உதிம்மா நீ போய் பல்துலகிட்டு வா, நான் காபி கலந்து தருகிறேன்.." என்றவுடன்..
உதியனம்பியோ, பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தவளை, ஒரு பார்வை பார்த்து விட்டு, மனதிற்குள் சிரித்தபடியே நகர்ந்தான்.
உதியனம்பி சென்ற பின்னும் நிறையாழி அப்படியே தான் இருந்தாள்.
தாழ்குழலியோ, மருமகளின் நிலையை அறியாமல் மகனுக்கு காபி கலந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் முகம் கழுவி, பல்துலக்கி விட்டு வந்த மகனிடம் காபியைக் கொடுத்தார்.
உதியனம்பியோ, தாய் கொடுத்த காபியை வாங்கி பருகிய படியே, நிறையாழியைப் பார்த்துக் கொண்டே, "அம்மா இன்னைக்கு என்ன காலையிலேயே அதிசயமா நம்ம வீட்டு பக்கம் வசந்தம் வீசுது.." என்றான்.
தாழ்குழலியும், மகனின் குறும்பைப் புரிந்துக் கொண்டு, "உதிம்மா இன்னைக்கு உன் மாமா, அத்தைக்கு கல்யாண நாள் நீ மறந்துட்டீயா, அது தான் நிறை கேசரி எடுத்துட்டு வந்துருக்கா.." என்றவரிடம்..
"ஓ! மறந்தே போய்ட்டேன் மா.. மேடமுக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?" என்றான். தாயிடம் பேசினாலும் விழிகள் நிறையாழியின் மீது தான் இருந்தது.
நிறையோ, இன்னும் அசையாமல் தான் அமர்ந்து இருந்தாள்.
தாழ்குழலியோ, "இன்னைக்கு இரண்டாம் சனிக்கிழமையாம், அது தான் நிறைக்கு லீவு.." என்றார்.
அவனோ, “ஓ! அப்படியா? ஏன் மேடம் பேசமாட்டாங்களா?” என்று நிறையை வம்புக்கிழுத்தான்.
நிறையோ, அவனைப் பார்ப்பதைத் தவிர்த்த படியே, "அத்தை, நான் வீட்டுக்குப் போறேன். கொஞ்சம் வேலை இருக்கு.." என்றாள்.
நிறைக்கு, அவனின் செயலும், பார்வையும் அவள் மனதிற்குள் ஒரு பிரளையத்தையே ஏற்படுத்தியது.
தாழ்குழலியோ, "நிறை டிபன் சாப்பிட்டு போம்மா, உனக்கு பிடிக்கும்ன்னு ரவா லட்டு செய்ய ரவை எடுத்து வைத்திருக்கேன், சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் கொஞ்சம் எடுத்துட்டு போ தங்கம்.." என்றார்.
நிறையோ, "அத்தை இன்று வேண்டாம்.. இன்னொரு நாள் செய்து கொடுங்க.." என்றாள்.
தாழ்குழலியோ, இன்னைக்கு அண்ணன், அண்ணிக்கு கல்யாண நாள் வேறு.. நீ அரைமணி நேரம் இருடா.. செய்து கொடுக்கிறேன். டிபன் சாப்பிட்டு விட்டு, கையோடு வாங்கிட்டுப் போ.." என்றார்.
"அத்தை எழுத நிறையா இருக்கு.. நான் போகனும்.." என்றாள்.
தாழ்குழலியோ, என்றுமில்லாமல் இன்று அடம்பிடிக்கும் மருமகளை வியப்பாகப் பார்த்தார்.
இவர்கள் பேச்சை கேட்ட படி அமைதியாக காபி குடித்துக் கொண்டிருந்த நம்பியோ, "அம்மா நீங்க செய்யுங்க.. நான் கடைக்குப் போகும் போது நிறையை வீட்டில் விட்டுவிட்டு, அத்தை மாமாவையும் பார்த்துட்டு கொடுத்து விடுகிறேன்.." என்றான்.
நிறையாழிக்கோ, அவன் அப்படி சொன்னதும், மனதிற்குள் படபடப்பாகிருச்சு. 'அச்சோ இவனுடன் வண்டியில் போவதா? சத்தியமா நம்மால் முடியாது. அவன் அருகில் வந்தாலே, என்னமோ ஆகுது..' என்று நினைத்தாள்.
தாழ்குழலியோ, மகன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுடன், "சரிப்பா, நீ குளித்து விட்டு வாப்பா.. நான் சீக்கிரம் செய்யறேன்" என்றார்.
நிறையாழியோ, என்ன சொல்லி அத்தையை தடுப்பது என்று புரியாமல் குழம்பி தவித்தாள்.
தாழ்குழலியோ, மகன் சென்றதும், அவன் வருவதற்குள் செய்யவேண்டுமே என்று அவசரமாக அடுப்பை பற்ற வைத்தவர்..
ரவா லட்டு செய்வதற்காக வானலியில் நெய்யை ஊற்றி, ரவையைப் போட்டு வறுத்தவர், ரவைக்கு ஏற்ற சர்க்கரையை அதனுடன் சரிவிகிதத்தில் கலந்து, ஏலக்காய் பொடியையும் தூவி, திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிவிட்டு, காய்ச்சிய பாலையும் சிறிது, சிறிதாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு ஊற்றினார்.
மிதமான சூட்டில், எலுமிச்சையளவு உருண்டை பிடித்து, டிபன் பாக்ஸில் போட்டு எடுத்து வைத்தார்.
நிறையோ, இதை எல்லாம் பார்த்தபடி அமைதியாகயிருந்தாள். அவள் மனமோ சைத்தானின் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.
உதியனம்பி குளித்து, அன்று மிக அழகாக, கம்பீரமாக தயாராகி வந்தான். கருநீலச்சட்டையும், ஆஃப் வொய்ட் பேண்டும் அணிந்திருந்தான். அவன் நிறத்திற்கு அந்த உடை மிக எடுப்பாக இருந்தது.
உதியனம்பி எப்போதுமே ஏனோ, தானோவென்று உடை அணிய மாட்டான். கடைக்கு கூட நேர்த்தியாகத் தான் அணிந்து செல்வான்..
கடையில் வேலை செய்வதற்கென்று சில உடைகள் வைத்திருந்தான். அதுவும் கூட நல்லதாகத் தான் இருக்கும்..
உதியனம்பி, நிறையாழியைப் பார்த்த சந்தோஷத்தில் அன்று இன்னும் பார்த்து.. பார்த்து ஆடையைத் தேர்வு செய்து உடுத்தியிருந்தான்.
தாழ்குழலியோ, நம்பி வந்ததும், அவனுக்கும், நிறைக்கும் டிபன் கொடுத்தார்.
நிறையோ, வழக்கம் போல சமையல் மேடையிலேயே அமர்ந்து, குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டாள்.
உதியனம்பியோ, வரவேற்பறையிலிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே உண்டு முடித்தான்.
தாழ்குழலியோ, இருவரும் உண்டு முடித்த பின்னர் இனிப்பை கொடுத்து.. நம்பியுடன், நிறையை கட்டாயப்படுத்தி வண்டியில் அனுப்பி வைத்தார்.
தன் அண்ணன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தாலும், நிறையாழி நடந்தே போறேன்னு, சொன்னதைக் கேட்காமல் மகனுடன் அனுப்பி வைத்தார்.
நிறையோ, தன் அத்தையின் வற்புறுத்தலை தவிர்க்க முடியாமல், நம்பியின் பைக்கில் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
நம்பியோ, இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தான். முதன்முதலாக தன் மனதிற்கு பிடித்தவள், தன் வண்டியில் அமர்ந்தது அவனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.
நிறையோ, அத்தையின் தலை மறைந்ததும், நம்பியிடம், "கொஞ்சம் வண்டியை நிறுத்திறீர்களா..?" என்றாள்.
உதியனம்பியோ, "எதற்கு ?" என்றான்.
"அத்தை கட்டாயப்படுத்தியதால் தான், வண்டியில் ஏறினேன்.. நான் நடந்தே போய்க்கிறேன்.."
"உன்னைப் பாதியில் இறக்கிவிட நான் வண்டியில் ஏற்றவில்லை.. பேசாமல் வா. நானும் எப்படியும் அத்தை, மாமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்து தான் ஆகனும்.."
"நீங்க இப்போ வண்டியை நிறுத்தலைன்னா... நான் குதித்து விடுவேன்.." என்றவளிடம்..
"ஓகே குதித்து கையை, காலை உடைத்துக்கோ.." என்றவன் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
நிறையோ, அவனை எதுவும் செய்ய முடியாமல் மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.
உதியனம்பியோ, சந்தோஷத்தில் ஒரு பாட்டை ஹம் செய்தபடி, காற்றுக்குப் பறந்த தன் கேசத்தை வலது கையால் சரி செய்தபடியே ஓட்டினான்.
நிறையோ, அவனின் செயல்களைப் பார்த்து, முகம் சிவக்க கோபத்துடன் அமர்ந்திருந்தாள். அவனோ, அவளின் கோபத்தை வண்டியின் கண்ணாடி வழியாக கண்டவன், மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
உதியனம்பிக்கோ, கோபத்தில் சிவந்திருந்த அவளின் கன்னங்களை பிடித்துக் கிள்ள வேண்டும் போல் ஆசையாக இருந்தது. தன் ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.
நிறையாழி மீது நம்பி உயிரையே வைத்திருந்தாலும், அவளிடம் எப்போதுமே சரிக்கு சரி வம்பளப்பதை விட்டதில்லை.
நிறையோ, எப்படா வீடு வரும் என்று நினைத்தாள். வீடு வந்ததும், நம்பி வண்டியை நிறுத்துவதற்குள், வண்டியிலிருந்து வேகமாக குதித்து ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினாள்.
நம்பியோ, அவளின் ஓட்டத்தைப் பார்த்தபடியே வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, தாய் கொடுத்த இனிப்பை எடுத்துக் கொண்டு அவனும் உள்ளே சென்றான்.
ஆடலரசும், செந்தழையும் வழக்கம் போல அவனை வரவேற்று உபசரித்தனர். நம்பியும் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினான்.
நம்பி அங்கிருந்து கிளம்பும் வரை.. நிறை தன் அறையிலிருந்து வெளியில் வரவேயில்லை.
உதியனம்பியோ, அன்று முழுவதும் உற்சாகத்துடனே வலம் வந்தான்.
நிறையோ, எதிலும் மனம் ஒட்டாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.
நிறையுடன் அசைன்மெண்ட் எழுவதற்காக வந்த பூவணியிடம் நம்பி செய்த அலப்பறைகளைக் கொட்டித் தீர்த்தாள்.
பூவணியோ, "நிறை நிஜமாவா! நம்பியண்ணா இப்படி எல்லாம் செய்தாரா? என்னால் நம்பவே முடியலை.. அண்ணா செம சுமார்ட் தானே!" என்றவளை முறைத்தாள் நிறையாழி.
பூவணியோ, அவள் முறைப்பதைப் பார்த்து, "உனக்கு யாரையும் புகழ்ந்தாலே பிடிக்காதே..." என்று கூறிக் கொண்டே வந்த வேலையை பார்த்தாள்.
மறுநாள் காலையிலேயே நம்பிக்கு செந்தழை போன் செய்தார்.
"நம்பி இன்னைக்கு கொஞ்சம் வெளியில் போக வேண்டும்.. நீ கடைக்கு லீவு விட்டுட்டு அம்மாவைக் கூட்டிட்டு வர முடியுமா?” என்றார்.
"ஓ! அப்படியா, நான் மணியைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வரேன் அத்தை எவ்வளவு நேரமாகும்.." என்றவனிடம்,
"சாயங்காலம் ஆகிடும் பா.. கொஞ்சம் டிரஸ், நகை எல்லாம் எடுக்க வேண்டும்.. மாமாவுக்கு இன்று ஏதோ இன்ஃபெக்ஷன் வேலை இருக்காமா.. முடிந்தால் தான் அவர் வர முடியுமாம்.." என்றவரிடம்,
"ஒன்னும் பிரச்சனையில்லை அத்தை, நான் அம்மாவைக் கூட்டிட்டு வந்துடறேன்.." என்றவன் அழைப்பை துண்டித்தான்.
தாழ்குழலியையும் அழைத்துக் கொண்டு சொன்னபடி உதியனம்பி தன் மாமா வீட்டிற்குச் சென்றான். அங்கு நிறை உள்பட எல்லோரும் தயாராக இருந்தனர்.
வாடகை காரில் கடைவீதி சென்றார்கள். அங்கு முதலில் பனிநிலவுக்கு திருமணத்திற்கும் சில நகைகளை எடுத்தனர். அத்துடன் அடுத்த வாரம் வரும் பொங்கல் திருநாளுக்கும் அனைவருக்கும் புத்தாடை எடுத்தனர்.
பின் பனிநிலவின் திருமணத்திற்காக தாழ்குழலி மறுத்தும் அவருக்கும், செந்தழைக்கும் ஒரே மாதிரியாக ஒரு பட்டுபுடவை எடுத்தார்கள்.
கடைசியாக நிறைக்கும் பட்டுபுடவை பார்த்தார்கள்.. அதுவரை அமைதியாகயிருந்த உதியனம்பி, புடவை பார்த்துக் கொண்டிருந்த நிறையின் அருகில் வந்து நின்றான்.
நிறையோ மும்மரமாக பட்டுப்புடவை பார்த்துக் கொண்டிருந்தாள். நம்பியோ அவள் எடுக்கும் சேலையை எல்லாம் இது நல்லாலை, அது நல்லாலை என்றவன், ஒரு புடவையை எடுத்து இந்த கலர் உனக்கு அழகாக இருக்கும் என்று அவள் கையில் கொடுத்தான்.
நிறையோ, அதை தூக்கிப் போட்டவள்.. உதியனம்பிக்கு மட்டும் கேட்குமாறு, பல்லைக் கடித்தபடி "நான் உங்களை கேட்கலை, அத்தை இருக்கிறாங்கன்னு பார்க்கிறேன். இல்லைன்னா நடப்பதே வேறு.. உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க.." என்றாள்.
அவனோ, “என் வேலையைத் தான் பார்க்கிறேன்.. நீ புடவையை எடு.." என்று கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.
நிறையோ, அவன் எதை வேண்டாமென்று சொன்னானோ, அந்த மெரூன் கலர் சேலையை எடுத்தவள், அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவனோ, அவளைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். அந்த சிரிப்பின் அர்த்தம் நிறைக்கு அப்போது புரியவில்லை.
தொடரும்..
அடுத்த யூடி நாளை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்