வீசி நிச்சயம் தன் வாழ்நாளில் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டான். தன் ரௌத்திரம், சுயமரியாதை என அனைத்தையும் தொலைத்துவிட்டு இப்படி நடுரோட்டில் நிற்பான் எனவும் கனவு கண்டிருக்கமாட்டான். ஆனால், நிற்கிறான். அவளால் தான்! எல்லாம் அவளால் தான்! முருகா முருகா என்று புலம்புகிறவள் இறுதியில் அவனையே புலம்பவிட்டுவிட்டாள்.
வீசி இப்பொழுதுகூட ஏன் ஷ்ரதா மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறான் எனத் தெரியவில்லை. ஆனால், வைக்கிறான். 'அந்த அழுகுனி இம்முறை என்னை ஏமாற்றமாட்டாள்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். போனில் ஏதேனும் காரணம் சொல்லமாட்டாளா என எடுத்து எடுத்துப் பார்க்கிறான். நாம் நைசாக அவனருகில் சென்று இதுதான் வீசி காதலென்றால், கொஞ்சம் யோசித்துவிட்டு இந்த நரகவேதனை தான் காதலா என்று அவன் முகம் சுளிக்கவும் கூடும். காதல் அவனை விட்டுவைக்கவில்லை. ஆனால், அதனை அவன் முழுதாக உணரவும் இல்லை!
வீசிக்கு இந்தப்பக்கம் பார்த்தோமானால், அருண்மொழியிடம் போட்டுக்கொடுத்த பின்பும், இன்னும் அவனையே கண்காணித்துக்கொண்டிருந்தான் சிவனேஸ்வரன். அவனுக்கு வீசியின் தவிப்பைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம்.
வீசி தன் போனை இயக்கியதைப் பார்த்ததும், "இவன் என்ன போனை எடுக்கிறான்?.. இன்னும் அடியாளுங்களை வேறக்காணோம்.. அட! போன்ல வேற ஏதோ டைப் பண்றானே" என வேகமாக தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து, ஷ்ரதாவின் சிம்மை செருகி, வாட்ஸாப்பை இயக்கினான் சிவனேஸ்வரன்.
எடுத்ததுமே எதிர்புறம் வீசி அனுப்பிக் கொண்டிருந்த மெஸேஜ் வந்தது.
***********
Vc: pazhi vaanguriyaa shraddha
Vc: unkitta ennai kenja vaikkuriyaa
Vc: un appavai paththi collector kitta sonnadhu naan illa
Vc: Podhumaa
*************
"டேய் வீசி! எனக்கே நீ கெஞ்சுறதைப் பார்த்தா பாவமா இருக்கேடா.. நல்லவேளை சிம்மை கழட்டிட்டு வந்தேன்.. இல்ல இன்னும் உன் நடிப்புல ஷ்ரதா ஏமாந்துப்போயிருப்பா"
"ஷ்ரதாவே வந்து சொன்னா தான் போவியா?.. இந்தா சொல்றா, போ!"
************
Shraddha: ungalai madhiri oru pichchaikaranai love panninadhu evvalavu periya thappunu naan purinjikitten
Shraddha: ipo unga mugaththula muzhikka kooda enaku viruppamilla
Shraddha: good bye 🙏
**************
வீசிக்கு பதிலனுப்பிவிட்டு ஷ்ரதாவின் சிம்மைக் கழற்றி தலையைச் சுற்றி தூக்கியெறிந்தான் சிவனேஸ்வரன்.
"அட! எங்கேடா போன வீசி?.."
கண் கொட்டும் நேரத்தில் வீசி காணாமல் போயிருந்தான்.
சுற்றி இரண்டு தடவைப் பார்த்துவிட்டு, "ரோஷக்காரன் கிளம்பிட்டான் போல" என்று தானே முடிவுகட்டிக்கொண்டு ஷ்ரதாவின் வீட்டிற்கு வந்தான் சிவனேஸ்வரன்.
அவனைப் பார்த்ததும், "எங்கப் போயிட்டு வர்ற சிவா?.. உன் அம்மா காலைலயிருந்து உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா.." என்று அதிருப்தி தெரிவித்தபடியே அருகில் வந்தார் காசிராஜன்.
அவ்வேளை தன்னறையிலிருந்து வெளிப்பட்ட அருண்மொழி, சிவனேஸ்வரனிடம், "கொஞ்சம் என் ரூம் வரைக்கும் வா" என்றுவிட்டு முன்னேப் போனான்.
சிவனேஸ்வரன் தன் தந்தையிடம், "இப்போ வரேன் பா" என்றுவிட்டு அருண்மொழியின் பின்னேயே சென்றான்.
அருண்மொழியின் அறையில் அவன் மகளும் மகனும் முன்பு விளையாடிய சாட்சியங்கள் அனைத்தும் இரைந்து கிடந்தன.
வந்தவனிடம் அருண்மொழி பதட்டமாக, "சிவா, வீசி அங்க பாலத்துக்குக் கீழ இல்லைன்னு நம்ம ஆளுங்க சொல்றாங்க" என்றான்.
சிவனேஸ்வரன் சலிப்பாக, "ஆமா, அவன் ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பின பின்னாடி போனா.." என்று முகத்தைத் திருப்பினான்.
"ரயில்வே ஸ்டேஷனா?.. ஜனங்க அதிகமா நடமாடுற இடத்துல வச்சு அவனைத் தூக்க முடியாதே.. இப்போ என்ன பண்றது?" இப்போது ஏதும் செய்யாமல் வீசியை தப்பிக்கவிட்டால் விஜயாதித்தன் கேட்கும் கேள்விகளுக்கு நாக்கைப் பிடிங்கிக் கொள்ளவேண்டும். அவசரத்தில் ஒன்றும் தோன்றமாட்டேன் என்றது அருண்மொழிக்கு.
"இப்படி பண்ணினா என்ன?" இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். காசிராஜன் அங்கு நின்றிருந்தார்.
"போலீஸ் ஸ்டேஷன்ல அவன் நம்ம பணத்தைத் திருடிட்டு தப்பிச்சுப் போகறான்னு பொய்யா கம்ப்ளைன்ட் ஒண்ணு கொடுத்தா என்ன?"
அருண்மொழி, "நல்ல யோசனை மாமா.." என்று கண்கள் பளபளத்தபடியே போன் பேச விலகிப்போனான்.
சிவனேஸ்வரனின் தோளில் கைப்போட்ட காசிராஜன், "இப்பயாவது அவனைப்பத்தி புரிஞ்சிக்கிட்டயே சிவா.." என்று முதுகைத் தட்டிக்கொடுத்தார்.
அவன், "ஆமாப்பா, இப்போ தான் அவனைப்பத்தி முழுசா புரிஞ்சிக்கிட்டேன்.." என்று குற்றம் செய்தவன் போல் தலைகுனிந்தான். அது காசிராஜனின் செருக்கிற்கு இன்னும் தூபம் போட்டது.
அருண்மொழி போன் பேசிவிட்டு வந்தவன், "மாமா, நம்ம ஏரியா எஸ்ஐகிட்ட சொல்லிட்டேன்.. அரெஸ்ட் பண்ணிட்டு கூப்பிடுறேன்; ஸ்டேஷன்ல வந்து ஃபார்மாலிட்டிக்கு ஒரு எப்ஐஆர் எழுதிக்கொடுத்திட்டு போங்கன்னு சொல்றாரு.. இப்போ என்னன்னு மாமா கம்ப்ளைன்ட் கொடுக்கறது?.." என்று யோசிப்பவன் போல நெற்றியைத் தேய்த்தான்.
காசிராஜன் ஏற்கனவே காரணத்தை யோசித்து வைத்தவர் போல சொன்னார். "அவன் இதோ சிவாவோட பிரெண்ட் தானேப்பா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி சிவாக்கூட அவன் நம்ம வீட்டுக்கு வந்தான்னும், அப்போ எங்க கம்பெனிலயிருந்து நான் டாக்ஸ் கட்ட கொண்டு வந்த பணம் முப்பது லட்சத்தை திருடிட்டான்னும் கம்ப்ளைன்ட் கொடுப்போம்.."
"பிரில்லியண்ட் ஐடியா மாமா.. இப்போவே நம்ம எஸ்ஐ அறிவழகன் கிட்ட இதை சொல்லிடுறேன்.." அருண்மொழி மீண்டும் போனும் கையுமாக நகர்ந்தான். கீழே கிடந்த குரங்கு பொம்மையை வெறித்துக்கொண்டிருந்த சிவனேஸ்வரன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். அவர் கண்ணில் எதையோ சாதித்துவிட்ட மின்னல் வெட்டியது. தன்னைப் பார்த்து சிரித்தவருக்கு தானும் பதில் புன்னகை வழங்கினான் சிவனேஸ்வரன்.
*********************
வஞ்சகர்களின் திட்டபடியே, வீசி டிவிசி எக்ஸ்பிரஸில் ஏறப்போன சமயம், சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டான். அவனை போலீஸ் ஜீப்பில் கைவிலங்கோடு கீரைத்துறை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தபோதே, அருண்மொழிக்கு போனில் அழைப்பு விடுத்து, ஸ்டேஷன் வரச்சொன்னார் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன்.
அப்போது வீசி இப்படித்தான் நினைத்தான். 'ஷ்ரதா உன்னைவிட்டுப் போகணும்னு நினைக்கிறவனை ஏன் விதி உன்கிட்டயே கொண்டு வந்து சேர்க்குது?'
வாசலில் காத்திருந்த அருண்மொழி, எஸ்ஐக்கு தலையசைத்தான். அவரும் பதிலுக்கு தலையசைத்தார். ஏற்கனவே கணித்திருந்தாலும் சிவனேஸ்வரனுக்கு எஸ்ஐ அறிவழகனை நேரில் பார்த்ததும், முகம் அதிர்ச்சியை அப்பட்டமாகக் காட்டியது.
வீசி கைவிலங்கு விலக்கப்பட்டு, உதவுவாரின்றி லாக்கப்பில் அடைக்கப்பட்டான். எப்ஐஆர் கொடுக்க காசிராஜன் அறிவழகனுக்கு முன்பிருந்த சேரில் அருண்மொழிக்கருகில் வந்து உட்கார்ந்தார். வீசி லாக்கப்பின் கம்பிகளை பிடித்துக்கொண்டே பரிதாபமாக அவர்களைப் பார்த்தான்.
காசிராஜன் தன் புனைவை சொல்லிமுடித்ததும், "ம்ம் சொல்லு சிவா" என்று கட்டளையிட்டார்.
மகன், 'ஒரு ப்ரெண்ட் நமக்கு துரோகம் செஞ்சா எப்படி இருக்கும்ன்னு இப்போ தெரியுதா வீசி?' என்று லாக்கப்பில் கிடப்பவனிடம் பார்வையால் வினவிவிட்டு, "ஆங்? ஆமாம் சார், இவனை என் ப்ரெண்ட்ன்னு சொல்லி எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன்.. இவன் என்னடான்னா எங்க அப்பா வச்சிருந்த பணத்தையே திருடிட்டுப் போயிட்டான் சார்.. பணத்தை எங்கேயோ மறைச்சி வச்சிட்டு தான் சார் இப்போ இவன் கேரளா போகப் பிளான் பண்ணியிருக்கான்.." என படபடவென பொரிந்தான் சிவனேஸ்வரன்.
அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியில் சமைந்துப் போயிருந்த வீசி, "இல்ல சார், என் மேல உள்ள விரோதத்துல இவங்க எல்லாரும் பொய் சொல்றாங்க சார்" என்றான்.
அறிவழகன் அருண்மொழியையையும் வீசியையும் மாறிமாறிப் பார்த்து சிரித்தார். பின், முன்னே குனிந்து தணிந்த குரலில், "பேருக்கு எப்ஐஆர் போடறேன்.. ஆனா, கோர்ட்டுக்கு கொண்டு போகிற வழியில தப்பிச்சிட்டான்னு மாத்தி சொல்லிடலாம்.. நீங்க அவனை எப்படி கவனிக்கணுமோ கவனிச்சிக்கங்க.." என்று கண்சிமிட்டினார்.
அருண்மொழி வாயெல்லாம் பல்லாக சரியென்று எழுந்து நின்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டான்.
புகார் கொடுக்க வந்த மூவரும் கிளம்பும்போது சிவனேஸ்வரன் மட்டும் மனம் பிசைய, மெள்ள மெள்ள நடந்து சென்றான். அறுந்துபோன நட்பு இழை இன்னும் லேசாக அவனுள் ஒட்டிக்கொண்டிருந்ததோ என்னவோ!
ஸ்டேஷன் லாக்கப்பில், "ப்ளீஸ் சார் அடிக்காதீங்க சார்.. ப்ளீஸ் சார்" என்று கதறிய வீசிக்கு அங்கு பச்சாதாபம் காட்ட யாருமில்லை. அவன் உடை முழுவதையும் உருவி, கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிப்போட்டு, லத்தியால் வெளுத்துக் கட்டினார்கள்.
அதிகாரத்தின் யானை கால்களில் மிதிபடும் சித்தெறும்பின் நிலையிலிருந்தான் வீசி. வெளிகாயம் உள்காயம் என்று அந்த இரவின் நீளம் விளங்கியது அவனுக்கு.
மறுநாள் கண்துடைப்பாக வீசி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, சுவீகாரம் செய்யப்பட்ட குழந்தை போல் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றப்பட்டான். அடியாட்கள் நிற்கக்கூட முடியாமல் இருந்தவனை, அனாயசமாக தங்கள் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றார்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் காவலாளிகள் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். வீசியுடனான அந்த ஆம்னி குண்டும் குழியுமான அந்த சாலையில் குலுங்கி குலுங்கி சென்றுக்கொண்டிருந்தது.
*******************
அருண்மொழியின் உத்தரவுபடி, நேரே வீசியை செல்லூரிலுள்ள அவர்கள் கிரானைட் குடவுனிற்கு இழுத்துச்சென்ற கைக்கூலிகள், அவனை அங்கு தலைகீழாக தொங்கவிட்டனர். வீசி கொஞ்சநஞ்ச உயிருடன் மீன் போல் முன்னும் பின்னுமாக துள்ளினான்.
அவனின் முயற்சிகள் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்ததோ என்னவோ ரசித்துச் சிரிப்பதற்காகவே சிறிதுநேரம் அவனை அவ்வாறு விட்டுவைத்தார்கள். பின், அவனது முயற்சிகள் அனைத்தும் அடங்கி ஓய்ந்தபோது, அரக்கர்கள் இரக்கமேயில்லாமல் உருட்டுக்கட்டையால் இரத்தம் சொட்டச்சொட்ட அடித்தார்கள். ஏற்கனவே புத்தகக்கடையில் அவனிடம் அடிவாங்கியவர்களில் இருவர் வேறு இந்த ஜோதியில் ஐக்கியம் என்பதால் பழிவாங்கும் படலமும் வேறு சேர்ந்து அரங்கேறிக்கொண்டிருந்தது.
கும்பலில் குட்டையானவன் ஒருவன் பூனைக்குரலில் கத்தினான். "ஜீவாண்ணே, இவனை சும்மாவிடக்கூடாதுண்ணே.. இதை விட பெருசா செய்யணும்ண்ணே.."
"டேய்! சின்னவரோட மச்சான்டா இவன்.." - ஜீவாண்ணாவுடைய பதில் இது.
"ஏண்ணே! அவரு தானே இங்க கட்டிப்போட்டு வைக்கச்சொன்னாரு.. எப்படியும் இவன் பண்ணின வேலைக்கு விஜியண்ணே இவனை சும்மாவிடுவார்ன்னு நினைக்கிறீங்க?.."
"சரிடா, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?"
"இவன் நம்மளை ஏன்டா தொட்டோம்னு நினைக்கிற அளவுக்கு பண்ணனும்ண்ணே.. டேய் வாசு! அந்த கிரானைட் கட்டிங் மிஷினை எடுத்துட்டு வாடா.."
வாசு உடனே அதற்கு செவிசாய்த்தான்.
அரைமயக்கநிலையில் கிடந்த வீசி, எதிர்க்க வலுவில்லாமல், அவர்களின் குரோதத்திற்கு செத்து செத்துப் பிழைத்தான். தன் முதுகில் செய்த ஒவ்வொரு விளையாட்டிற்கும் துடித்து துடித்து அலறினான். மொத்தம் பதினேழு கீறல்கள். ஒவ்வொன்றிற்கும் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.
"ம்ம்! போதும் இவனை அவுத்துவிட்டுட்டு இந்த இடத்தை கழுவி விட்ரலாம்" என்று அவர்கள் தங்களுக்குள்ளேயே திருப்தியாக ஒரு முடிவிற்கு வந்தபோது தான், அந்தத் திருப்பம் நிகழ்ந்தது. வீசியைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயம்!
யாரும் எதிர்பார்த்திராத சமயம் திடுமென குடவுனிற்குள் நுழைந்த எட்டுபேர், விஜயாதித்தனின் ஆட்களை சரமாரியாக தாக்கிவிட்டு வீசியை தங்களுடனே தூக்கிச்சென்றார்கள்.
வீசி, தன்னை காப்பாற்றியவர்களைக் கூட கண் திறந்து பார்க்க முடியாமல் கிடந்தான்.
ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஒரு சொகுசு அறையில் வைத்து வைத்தியம் பார்க்கப்பட்ட பின்பே காப்பாற்றப்பட்டது.
தான் விழித்து பேச ஆரம்பித்த ஒவ்வொரு நாளும் தன்னுடன் ஒரு மணிநேரம் அரட்டையடித்துவிட்டுச்சென்ற அந்த மனிதரை வீசிக்கு ரொம்பவேப் பிடித்துப்போனது.
அனைவரும் அவரை 'மாணிக்கண்ணே' என்றார்கள். ஆனால், வீசி அவ்வாறு அவரை கூப்பிட்டபோது 'ராஜ மாணிக்கம்' என்று முழுநாமம் பெற்ற அந்த மனிதர் வேடிக்கையாகச் சிரித்தார். அவனுக்கு அது கூச்சமாக இருந்தது. எப்படி கூப்பிடுவது என்றே பலவாறு யோசித்து, ஒருநாள் 'மாணிக்ஜி' என்றான். அப்போது அவர் அவன் முதுகை தட்டிக்கொடுத்தார். காயம் இன்னும் ஆறாதபடியால் அந்தத் தட்டல் வலியைக் கொடுத்தாலும், வீசி அதை காட்டிக்கொள்ளவில்லை.
நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்தவர்கள் அனைவருடனும் சகஜமாக பேசப் பழகிக்கொண்டான் வீசி. அவர்களும் அவனை தங்களவர்களாக ஏற்கப்பழகிவிட்டார்கள். அதிலும் வித்யாவுக்கு அவனை ஒருபடி கூடுதலாய் பிடித்துவிட்டது. காரணமேயில்லாமல் அடிக்கடி அவனை வந்து சந்தித்தாள். வீசி முடிந்தளவு அவளிடமிருந்து விலகியேயிருக்க முடிவுசெய்தான். இன்னொரு காயத்தை ஏற்க அவன் மனம் தயாராகயில்லை.
நாட்கள் ஒவ்வொன்றும் நடைப்பயிற்சியிலிருந்து ரன்னிங்கிற்கு முன்னேறியது போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. இடையில் ஒருநாள் ராஜ மாணிக்கம் விஜயாதித்தனின் எதிரி என்றும், இருவரும் கேஆர்பிக்கு கீழே வேலை செய்கிறார்கள் என்றும் தெரிய வந்தபோது, வீசி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ராஜ மாணிக்கத்தின் மேல் கோபம், பயம் எதுவுமின்றி தன்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றியுணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது அவனிடம். அதில் முழுமையாய் குணமடைந்த பின், ராஜ மாணிக்கத்தின் கீழேயே கணக்குப்பிள்ளையாக வேலைக்குச் சேர்ந்தான் வீசி.
ராஜ மாணிக்கத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரிகளில் எவ்வளவு பாறைகள் வெட்டியெடுக்கப்படுகின்றன. அவை எங்கெங்கே அனுப்பி வைக்கப்படுகின்றன என்று நயாபைசா விடாமல் துல்லியமாக கணக்குப்பார்த்தான். ராஜ மாணிக்கமே அவன் வேகத்தில் அசந்து தான் போனார்.
ஒருமுறை அவர் அவனிடம் தன் ஆள் என்றாலே துப்பாக்கி இருக்கவேண்டும் என்று ஒரு துப்பாக்கியை நீட்டியபோது, வீசி மறுக்காமல் வாங்கிக்கொண்டான். ஆனால், வாங்கும்போது மறுவாரமே அதை தான் உபயோகிக்க வேண்டிய நிலை வரும் என்று உறுதியாக அவன் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான். ஒரு பருவக்காற்று சுழற்சியில் அவன் வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது. எதிரியின் உயிரை பறித்தல் தர்மமாகிவிட்டது.
****************
வீசியின் வீர தீர செயல்களை எல்லாம் கேள்விப்பட்டபோது விஜயாதித்தனுக்கு மிளகாயை அரைத்துப் பூசியது போல் காந்தியது.
ஏற்கனவே வீசியை தங்களின் கஸ்டடியில் இருந்து அந்த ராஜ மாணிக்கம் கடத்திச் சென்றிருக்கிறான் என்ற கடுப்பிலிருந்த விஜயாதித்தனுக்கும் அருண்மொழிக்கும், வீசி தங்களின் ஆட்களை எதிர்க்க வேறு செய்கிறான் என்று தெரிந்ததும் கோபம் கொப்பளித்தது. ஆத்திரமாக கேஆர்பியிடம் சென்று முறையிட்டார்கள்.
ஆனால், கேஆர்பி விசாரித்த போது ராஜ மாணிக்கம், "என் உயிரை வேணும்னாலும் கேளுங்கண்ணே.. ஆனா அந்தப்பையனை மட்டும் அனுப்ப முடியாது" என்று திண்ணமாக அவரிடம் மறுத்துவிட்டார்.
இதை அடியாட்கள் மூலம் வீசி அறிந்தபோது கண்கலங்கிவிட்டான். அக்கணத்தில் அவன் மனதில் ஒரு தீர்மானம் பிறந்தது, 'இனி மாணிக்ஜி தான் எனக்கு அப்பா, குரு, வழிகாட்டி எல்லாம்'
ராஜ மாணிக்கம் 'நீ செய்ய வேண்டாம் வீசி' என மறுத்தும் வலிய விஜயாதித்தனுக்கு எதிரான சம்பவங்களில் எல்லாம் ஈடுபட்டு, அவரை புருவம் உயர்த்தச் செய்தான் வீசி.
அவனின் புஜபல பராக்கிரமத்தில் ராஜ மாணிக்கமும் 'இனி உன் எதிரி நானல்ல விஜயாதித்தா.. வீசி தான்..' என்று போர்முரசு கொட்டினார்.
வீசியின் தலையீட்டையும் அட்டூழியத்தையும் விஜயாதித்தனால் ஜீரணிக்கவே முடியவில்லை. கைக்கும் வாய்க்கும் வாகான தன் மகனையே கரித்துக் கொட்டினார் மனிதர்.
அருண்மொழி இந்த இயலாமையின் கோபத்தை எல்லாம் வீட்டில் மதுபாலாவிடம் காட்டினான்.
அவள் தன் தாய்வீட்டிற்குச்சென்று 'வீசி கொடைக்கானல் செல்லவில்லை. இங்கு மதுரையில் தான் ஒரு ரவுடி கும்பலிடம் வேலை பார்க்கிறான்' என்று அழுகையோடு முறையிட்டதும், அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் அவனைத்தேடி ராஜ மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்தார்கள்.
அப்போது வீசி அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான். "நான் இங்க மாணிக்ஜிக்கு கீழ வேலை பார்க்கிற வரை தான் என் உயிருக்கு உத்திரவாதம்.. விலகினா உங்கப்பிள்ளை உங்களுக்கு சொந்தமில்லை" என்று அவர்கள் தன்னை வற்புறுத்த இயலாத அளவுக்கு வாயை கட்டிப்போட்டுவிட்டான்.
ஆனால், அவர்கள் சென்றபின், எப்போதும் ஒருவித மனகலக்கத்துடனே திரிந்தவனை, ராஜ மாணிக்கம், "வீசி, நீ என் கூடயே இரு.. ஆனா, உங்க அம்மா அப்பாவுக்கும் மகனா இரு" என்றதும், அன்று அவன் அடைந்த உவகைக்கு உவமையே கிடையாது. அவரின் இருகைகளையும் பிடித்து புறங்கையில் முத்தமிட்டான்.
ராஜ மாணிக்கம் அவன் தன் அன்னை தந்தையிடம் சேர்வதற்காக பெயருக்கு தனியே, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் கிரானைட் விற்பனை செய்யும் அலுவலகம் ஒன்றை நிறுவிக்கொடுத்தார்.
வீசி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நிறுவனத்திற்கு 'ரூபி கிரானைட்ஸ்' என்று பெயர் சூட்டினான். ராஜ மாணிக்கம் அதில் மனம் குளிர்ந்துப்போனார். 'இந்த துரியோதனனுக்கு ஏத்த கர்ணன் இவன் தான்' என்று வீசியை அப்போது மெச்சுதலாய் பார்த்தார். அந்நாளிலிருந்து அவன் மீதான அவர் கவனிப்பும் பிரத்யேகமானது. அது தவறில்லை என்று மெய்ப்பிக்க, இந்த எட்டு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அவரை வியக்கவைத்துக்கொண்டே இருந்தான் வீசி.
ராஜ மாணிக்கத்தின் மற்ற அடியாட்கள் போல் அவரை தலையில் தூக்கிவைத்து துதி பாடாததும், தன் வேலையை நேரத்திற்குள் செவ்வனே செய்து முடிப்பதுவுமே மற்றவர்களிடமிருந்து அவனை வித்தியாசப்படுத்திக் காண்பித்தது.
ராஜ மாணிக்கத்திற்கு அவன் தொழில் நேர்த்தியில் கேஆர்பியையே தூக்கி சாப்பிட்டுவிடுவான் போல் தோன்றினான். 'ஒருவேளை இவனை என் மருமகனாக்கிக்கொண்டால் தான் என்ன?.. மிகப் பிரமாதம்! விஜயாதித்தனுக்கு இதைவிட பெரிய அடி ஒன்று இருக்கவே முடியாது.. தவிர கமலாவும் வீசி சென்றபின் வித்யா அவன் தங்கியிருந்த அறையில் தங்கி, அவன் போட்டோவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றாள்.. ஆம், இது தான் சரி' ராஜ மாணிக்கம் பகல் கனவு காண ஆரம்பித்தார்.
சமயம் பார்த்து தான் நினைத்ததை தயங்காமல் வீசியிடம் தெரிவிக்கவும் செய்தார். இதனால் விஜயாதித்தன் பாதிக்கப்படுவார் என்பதே வீசியை அவரின் விருப்பத்திற்கு இசைய வைத்தது. "உங்க விருப்பம் மாணிக்ஜி" என்றுவிட்டான்.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
கருத்துத்திரி,
தொட்டால் பூ மலரும்🌷