மாறாத நேசம்!
அத்தியாயம் 1
மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல்,பாதை முழுவதும் பனியால் மூடி இருள் கவிழ்ந்திருந்த மண் சாலையில்! தன் இருசக்கர வாகனத்தின் ஒளியால், காற்றைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய பால்பண்ணையை நோக்கிச் சீறிப் பாய்ந்தான் சீர்மதியன்.
தன் தாய் 'பொன் மணியின்' பெயரையும்,தந்தை 'கோவழகனின் பெயரையும் சேர்த்து 'கோமணி' என்ற பெயரில் பால்பண்ணையை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பத்து நாட்டு மாடுகளுடன் ஆரம்பித்தான்.
இப்போது நூறு மாடுகளுடன் விரிவடைந்து சிறப்பாக வளர்ந்திருக்கிறது.அதற்கு காரணம், அவனுடைய கடின உழைப்பு மட்டுமே!
உரிய நேரத்தில் , பாலைக் கறந்து அருகில் இருக்கும், நகரங்களில் பசுமை அங்காடிகளுக்கு கொடுத்து வருகிறான்.
இயற்கை முறையில் விளைந்த தீவனங்களை மட்டுமே! மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், அவனுடைய பண்ணைப் பால் நல்ல அடர்த்தியாகவும்,ருசியாகவும் இருந்தது.
அதனாலேயே 'கோமணி' பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதுமட்டுமின்றி மீதமாகும் பாலின் ஆர்டரைப் பொறுத்து வெண்ணெய்,நெய்,பன்னீரும் தாயாரித்து உபரியாக விற்பனை செய்கிறான்.
இத்துடன் மாட்டுச் சாணம், கோமியம் என்று எதையும் வீணாக்காமல் விற்பனை செய்கிறான்.பஞ்சகவ்யம் தாயரித்தும் விற்பனை செய்கிறான்.அவனைப் பொருத்தவரை பசு ஒரு அட்சயப் பாத்திரம் போல்..
கோவழகனோ, மகன் சீர்மதியன் பால் பண்ணை வைக்கிறேன் என்று கூறிய போது விருப்பமில்லாமல் தான் சம்மதித்தார்.ஆனால் ,இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய அசுரவளர்ச்சியைக் கண்டு அவரே பெற்றவராக பெருமை பட்டுக் கொண்டார்.
மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் , அவனோ இளங்கலை விலங்கியல் மட்டுமே படித்துவிட்டு, பிடிவாதம் பிடித்து பால் பண்ணை வைத்தான். முதலில் வருத்தப்பட்டாலும் இப்போது மகனின் வளர்ச்சியில் வியந்தார்.
மகனுக்கு பார்த்து.. பார்த்து, சீர்மதியன்! என்று பொருளுணர்ந்து தமிழ் பெயரை வைத்தார். சீர்மதியன் பெயருக்கு சிறப்பான அறிவு உடையவன் என்று பொருள் .அந்த பெயருக்கு ஏற்றப் போல் நுட்பமான அறிவும்,நன்நெறியும் ஒருச் சேர பெற்றிருந்தான்.
சீர்மதியன் பெற்றவர்கள் மீது மட்டுமின்றி தன் தமக்கை 'தூயமுல்லை' மீதும் அளவுகடந்த அன்பு கொண்டவன்.
திருமணமான தூயமுல்லைக்கு தாய், தந்தை என்ன சீர் செய்தாலும் ,தானும் தன் பங்குக்கு குறைவில்லாமல் செய்வான்.அதுவும் அக்கா மகள் 'ஏந்திழை' என்றால் அவனுக்கு உயிர்.
தன் அக்காவின் கணவர் கனியமுதனிடம் பெரும் மரியாதையும்,பாசமும் கொண்டவன்.
கோவழகனுக்கு மகனின் நற்குணங்கள் பெரும் மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமின்றி, தான் இல்லையென்றால் கூட மகள் தூயமுல்லைக்கு சகோதரனாக,பேத்தி ஏந்திழைக்கு நல்ல தாய்மாமனாக மகன் இருப்பான் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையும் ,நிம்மிதியும் எப்போதும் அவருக்கு இருந்தது.
சீர்மதியன் பண்ணையை நெருங்கும் போதே காவலாளி 'வீரய்யன்' ஓடோடி வந்து கேட்டை திறந்து விட்டார்.அவரிடம் சிறு தலை அசைப்புடன் வண்டியை நிறுத்திவிட்டு ,நேராக பால் கறக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
பால் கறப்பதற்கு நவீன இயந்திரங்கள் இருப்பதால் பெரிதாக கஷ்டம் இல்லை. வேலையாட்களே , அதைப் பார்த்துக் கொள்வார்கள்.இருந்தாலும் தினமும் அதிகாலையே சீர்மதியன் பால் பண்ணைக்கு வந்து விடுவான்.
'உடையவன் பாராத பயிர் உருப்படாது' என்ற பழமொழி சொல்லுவார்கள்! அது போல், அவன் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை யாரை நம்பியும் விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.
வேலையை முடித்துவிட்டு பால்பண்ணையிலிருந்து,வீட்டுக்கு சென்றவனை பொன்மணி இன்முகத்துடனேயே வரவேற்றார்.
மகனிடம், "சீரா.. சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, என்னைக் கொஞ்சம் பெருமாள் கோவில் கூட்டிட்டு போறியா?"என்றபடியே தட்டை வைத்து, மகனுக்கு சுடச்சுட இட்லியையும்,சாம்பாரையும் பரிமாறினார்.
சீர்மதியன் கைகளை கழுவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தவன், "இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லையே? பெருமாள் கோவிலில் என்ன விஷேசம் மா.."என்றான்.
"என்ன சீரா.. இன்னுமா உனக்கு புரியலை..உங்க பாட்டி வரச் சொல்லியிருப்பாங்க அது தான்.." என்று கூறியபடியே மகன் அருகில் வந்து அமர்ந்தார் கோவழகன்.
"ஓ..!அதுவா சங்கதி..என்ன வில்லங்கம் வரப்போகுதோ தெரியலையே.." என்றபடி சாப்பிட்டான் சீர்மதியன்.
" ஏம்ப்பா அப்படி சொல்றே..?"என்ற பொன்மணியிடம்,
"அம்மா ! பாட்டி எப்போ உங்களைப் பார்த்தாலும், ஏதாவது ஒரு பிரச்சினை வருதே அதனால் சொன்னேன்.."
"என்னமோ போப்பா ..பாட்டியாவது பேசறாங்களேன்னு நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கேன்.." என்று பெருமூச்சு விட்ட மனைவியிடம்,
"மணிம்மா.. நீ வருத்தப்படாதே, எல்லாம் ஒரு நாள் சரியாகும்.."என்றார் கோவழகன்.
கணவனின் வார்த்தைகளை பொன்மணி ஆமோதிப்பது போல் , "அந்த நாளுக்காகத் தான், நானும் தவம் கிடக்கிறேன். நான் கண்ணை மூடுவதற்குள் அது நடந்து விடாதா? என்று ஏங்கித் தவிக்கிறேன்.." என்று கலங்கிய குரலில் கூறியவரிடம்,
"அம்மா இது என்ன பேச்சு.. அவர்கள் பேசாததால், இப்போ என்ன குடியா முழ்கீருச்சு.. எப்ப பார்த்தாலும் அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக் கொள்வது.." என்று தாயைக் கடிந்து கொண்டான் சீர்மதியன்.
தன் பிரியத்திற்குரிய மனைவியிடம் மகன் கடிந்து கொள்வதை காணப் பொறுக்காமல், "விடுப்பா .. நீயும் அவளை புரிந்து கொள்ளாமல் பேசினால் எப்படி? எல்லாம் ஒரு நாள் சரியாகும்.. "என்றார் கோவழகன் பொறுமையாக!
தந்தை சொல்லுக்கு மறு வார்த்தை பேசாமல், சீர்மதியனும் அமைதி காத்தான்.
மகனின் அமைதி அவரையும் வருத்தியது.உடனே , "சீரா நீ போய் அம்மாவை கோயிலில் இறக்கிவிட்டுட்டு.. அப்படியே, போய் மணியகாரைப் பார்த்துட்டு வா! அவர் மகள் கல்யாணத்திற்கு பால் வேண்டுமென்று கேட்டு இருந்தார்.நீ போய் விசாரிச்சுட்டு வாப்பா.." என்று மகனின் மனநிலையை மாற்றினார்.
சீர்மதியனோ தந்தையிடம் தலையை ஆட்டிவிட்டு தாயை அழைத்துக்கொண்டு கோவிலை நோக்கி விரைந்தான்.
அவர்கள் இருவரும் சென்றபின்.. கோவழகன் வாசலில் இருந்த சாய்வு நாற்காலியில் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டு, பழைய நினைவுகளை சிறு வலியுடன் அசைப்போட்டார்.
அவரின் மனதிற்குள் பல சம்பவங்கள் காட்சியாக ஓடியது.
கோவழகன் கடந்த இரண்டு வருடங்களாக, வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார். சீர்மதியன் பால்பண்ணை வைத்து அதில் ஓரளவு வருமானம் வர ஆரம்பித்ததுமே, தந்தை வேலைக்கு செல்வதை கட்டாயப்படுத்தி தடுத்து விடடான்.
கோவழகன் பக்கத்தூரில் இருந்த அரிசி ஆலைகளுக்கு கணக்கு எழுதும் கணக்காளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். ஓய்வில்லாத உழைப்பு.
எந்த கெட்ட பழக்க பழக்கமும் இல்லாத ஒழுக்க சீலர்! வாங்கும் சம்பளத்தில் தனக்கென்று ஒத்த ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல் மனைவியிடம் அப்படியே கொடுத்து விடுவார்.
பொன்மணியும் அவருக்கு ஏற்ற குணவதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டார். வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, தன் தாயிடம் விருப்ப பட்டு , 'ஊறுகாய்' போடக் கற்றுக் கொண்டதை வீணாக்காமல் கேட்பவர்களுக்கு, எல்லா வகையான ஊறுகாய் போட்டுக் கொடுத்து அதன் மூலமும் சிறு வருவாய் ஈட்டினார்.
கோவழகனுக்கு முதலில் மனைவியின் செயலில் விருப்பமில்லாவிட்டாலும், அவரின் ஆர்வத்தைக் கண்டு அமைதியானார். ஆனால், அவரின் மனம் மட்டும் எப்படி வளர்ந்தவள்! தன்னால் இங்கே வந்து கஷ்டப்படுகிறாளே ! என்று ஊமையாய் அழுதது.
பொன்மணி கணவனைப் போல் எல்லாம் தன் நிலைகண்டு வருந்தவில்லை.விருப்பப்பட்டு அமைத்துக் கொண்ட வாழ்க்கையை விருப்பமாகவே வாழ்ந்தார்.
கணவனின் வருமானத்தையும், ஊறுகாய் வியாபாரத்தில் வந்த சிறு வருமானத்தையும் வைத்து மிக அழகாக குடும்பம் நடத்தினார்.இரு பிள்ளைகளையும் விருப்பப்பட்டதை படிக்க வைத்ததுடன் ,மகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணத்தையும் முடித்தார்.
மருமகன் கனியமுதனும் தன் கணவரைப் போலவே குணசீலன் தான்.அரசாங்க வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார்.மகனுக்கும் நல்லபடியாக திருமணத்தை முடித்து விட்டால் அவர் கடமை தீரும்.
ஆனால், என்ன அவருக்குள் இருக்கும் ஆசை மட்டும் நிறைவேறும் நாளுக்காக காத்துக் கிடக்கிறார்.
மனைவியின் ஆசை நிறைவேற வேண்டுமென்று, கணவனாக கோவழகனுக்குள்ளும் அந்த எண்ணம் எந்நேரமும் புழுவாக அரித்துக் கொண்டே இருந்தது.
அவரைப் பொருத்தவரை மகன் சீர்மதியனை நினைத்தாலே ! கொஞ்சம் பயமாக இருந்தது. எந்ந நேரம் அந்த குடும்பத்துடன் என்ன சண்டையை இழுத்துக் கொண்டு வருவானோ? என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருந்தார்.
இளங்கன்று பயமறியாது என்பதைப் போல் ,அவனின் வேகமும்,கோபமும் அவரை பெரும் கவலைக்குள் தள்ளியது.
என்ன தான் தன் வார்த்தையை மகன் மதித்தாலும், இந்த ஒரு விசயத்தில் மட்டும் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதை அவரால் தடுக்க முடியவில்லையே? என்று மனம் போன திசைக்கு பயணித்தவர் ஒரு நெடிய பெருமூச்சை விட்டு தன்னை சமன் படுத்திக் கொண்டார்.
சீர்மதியனோ, தாயை கோவிலில் இறக்கி விட்டு விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றான்.
பொன்மணியோ, கோவிலுக்குள் தன் தாயை தேடியபடியே தெய்வத்தை கும்பிட்டு முடித்தார்.கோவில் மண்டபத்தில் ஓர் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டு, தாயுக்காக காத்து இருந்தார்.
சிறிது நேரத்தில், அருகில் "பொன்னு.." என்ற தாயின் குரலில் பூவாய் மலர்ந்த முகத்துடன் திரும்பி பார்த்தார்.
அங்கே தூயநாச்சி , பச்சை வண்ணப் பட்டுப்புடவையில், மஞ்சள் பூசிய முகத்தில் நெத்தி நிறைய குங்குமத்துடன் அழகு சிலையாக நின்றிருந்தார்.
தாயைக் கண்டதும் சிறுகுழந்தையைப் போல், துள்ளிக் கொண்டு எழுந்த மகளை ஆரத்தழுவிக் கொண்டார் தூயநாச்சி.
"அம்மா எப்படி இருக்கீங்க..? அப்பா நல்லா இருக்காரா..?அண்ணா அண்ணி பசங்க எல்லாரும் சவுக்கியமா ? "என்று மூச்சு விடாமல் பேசிய மகளிடம்.
"போதும்..போதும் ..கொஞ்சம் மூச்சு விட்டுத் தான் பேசேண்டி ..எல்லாரும் நல்லா இருக்காங்க. அங்க மாப்பிள்ளே, என் பேராண்டி எல்லாம் நல்லா இருக்காங்களா?முல்லை பேசினாளா ?"என்ற அன்னையிடம்,
"எல்லாம் நல்லா இருக்காங்க மா..முல்லை காலையில கூட பேசினாள்.இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கா.." என்று சொன்ன மகளிடம்,
" அப்படியா ரொம்ப சந்தோஷம் மா.. காலையிலேயே நல்ல விஷயம் சொல்லிட்டே.. இனி எல்லாம் நல்லாதாகவே நடக்கும்.." என்று கூறியவர் தன் பிரசாத தட்டிலிருந்த சர்க்கரைப் பொங்கலை எடுத்து மகளின் வாயில் ஊட்டினார்.
மார்கழி மாதம் என்பதால் கோவிலில் கொஞ்சம் கூட்டம் இருக்கத் தான் செய்தது.பக்கத்து ஊர் என்பதால் இவர்களை யாருக்கும் அதிகமாக தெரியாது.இதே உள்ளூர் என்றால் யாராவது மகளுடன் பேசுவதை பார்த்ததுவிட்டு போய் தன் கணவரிடம் வத்தி வைக்கவும் வாய்ப்பிருக்கு!
அதனால் தான் ,மகளை எப்போது பார்க்க வேண்டுமென்றாலும் இந்த கோவிலுக்கு வரச் சொல்லிவிடுவார் தூயநாச்சி.
என்ன தான் தொழில்நுட்பம் முன்னேறி இருந்தாலும், போனில் இந்த மாதிரி மகளை நேரில் கண் குளிர கண்டு பேசமுடியாதே..அதுவும் இல்லாமல் வீட்டில் இரண்டு வில்லன்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது.
'மகளுடன் பேசுவது மட்டும் தன் கணவன் அருமை நாயகத்துக்கு தெரிந்தால், வீடு ரெண்டாகிவிடும்..' என்று மனதிற்குள் நினைத்தவர். கூட்டம் அதிகம் இல்லாத இடமாக பார்த்து, கோவில் மண்டபத்தில் மகளுடன் அமர்ந்து கொண்டவர், தான் பேச வந்த விசயத்தை மகள் காதில் போட்டார்.
பொன்மணியோ, தாய் சொன்ன விசயத்தைக் கேட்டு விழி அசையாமல் அதிர்ச்சியில் உறைந்தார்.
மகளின் திகைப்பைக் கண்டு கொள்ளாமல், மகளை உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்த தூயநாச்சி , "நான் சொன்னதை நீ சீராவிடம் சொல்லு ..மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று மகளுக்கு தைரியம் சொல்லிச் சென்றார்.
பொன்மணியோ ,திரும்ப அழைக்க வந்த மகனிடம் தாய் சொன்னதை தயக்கத்துடனேயே கூறினார்.
சீர்மதியனோ, பதிலேதும் சொல்லாமல் யோசனையுடனே வீட்டில் பொன்மணியை இறக்கி விட்டுவிட்டு, பால் பண்ணைக்கு செல்லுவதாக கூறிச் சென்றான்.
மகன் பதிலேதும் சொல்லாது பொன்மணிக்கு சிறு ஏமற்றமாக இருந்தாலும், மகனின் மீது இருந்த நம்பிக்கையில் அமைதியானார்.
மனதிற்குள், 'எல்லாம் நல்லபடியாக நடந்தால் பிரிந்த குடும்பம் சேருவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..' என்று எண்ணினார்.
சீர்மதியன் பண்ணையிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாய் சொன்னதையே அசைபோட்டபடியே திரும்பி வந்து கொண்டிருந்தான்.
அப்போது அவனின் சிந்தனையை கலைத்தது வெள்ளி சலங்கையை உதிர்த்து விட்டாப் போல் சிரிப்பொலி ! சிந்தனை கலைந்து பார்த்தவனின் பார்வையில், இடை வரை ஆடிய பின்னலில் அணிவகுத்து நின்ற மல்லிகைச் சரமும் , அதை சூடியிருந்தவளின் அன்ன நடையும், அவனின் கவனத்தை ஈர்த்தது.
பார்த்தவுடனேயே அவனுக்கு அவள் யார் என்று தெரிந்து விட்டது. அவனது தூக்கத்தை இடைவிடாமல் கெடுக்கும் அவனின் மாமன் மகள் 'தண்மதி ' தான் !
அவளின் வானர கூட்டத்துடன் பேசி சிரித்த படி சென்றவளின் குறுக்கே, தன் வண்டியை அவள் வழியை மறித்து நிறுத்தினான்.
தண்மதியோ, யார் குறுக்கே வண்டியை நிறுத்துவதென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே சீர்மதியனைக் கண்டதும் அவள் சொல்ல முடியாத கோவத்துடன் முகம் இரத்தமென சிவக்க..பற்களை நறநறவெனக் கடித்த படி,
"எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி வழி மறித்துக் கொண்டு நிற்பீங்க.." என்று கோபமாக கத்தினாள்.
அவனோ, அவளின் கோபத்தை துளியும் மதிக்காமல் " ம்ம்..! உன் தாத்தன் போட்ட சோத்தில் வந்த திமிர் .." என்றான் நக்கலாக,
அவளோ, " மரியாதையாக வழி விடுங்கள்! இல்லை நடப்பதே வேறு.." என்றவளிடம்,
"என்ன செய்வே ?"என்று அவளின் ஆத்திரத்தை மேலும் கிளப்பினான்.
அவளும் , அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல்.. "என் அண்ணனுக்கு மட்டும் இது தெரிந்தால் ? உங்களைக் கண்ட துண்டாம வெட்டி போட்டுறுவாங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."
" யாரு உங்கண்ணன் என்னை வெட்டுவானா? அவனே ஒரு வெத்து வேட்டு! அவன் என்னை வெட்டற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்குமா? இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் வேறு யாருகிட்டயாவது வச்சுக்கோ !" என்றவனிடம்,
தன் அண்ணனை சொன்ன கோபத்தில், " எங்க அண்ணனையா வெத்து வேட்டுங்கிறீங்க..? மாடு மேய்க்கிற உனக்கே இத்தனை திமிர் இருந்தா ! எங்க அண்ணாவுக்கு எத்தனை திமிர் இருக்கும்.." என்று ஆத்திரத்தில் அவனை ஏகவசனத்தில் பேசியவள், குறுக்கே வண்டியில் நின்ற அவனைச் சுற்றிக் கொண்டு.. ஒதுங்கி நின்று இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளிடம், " வாங்க டீ போலாம்.." என்று கூறியபடி நடையே வேகமாக்கினாள்.
சீர்மதியனுக்கோ, அவளின் வார்த்தைகளை கேட்டு எரிமலையாய் குமரியவன். "போடி போ.. இந்த மாட்டுக்காரன் தான், உனக்கு மூக்கனாங்கயிறு போடப் போறேன் பார்த்துட்டே இரு.." என்று ஆத்திரத்தில் கத்தினான்.
தண்மதியோ, அவன் சொன்னதற்கு நடந்து கொண்டே " அது இந்த ஜென்மத்தில் நடக்காது..கனவு காணதே.." என்றபடி வேகமாக நடந்தாள்.
அவனோ, 'அதையும் பார்போமடி..' என்று மனதிற்குள் குமறியவன்.மதியம் தன் தாய் சொன்னதைக் கேட்டு குழப்பத்தில் இருந்தவன், இந்த நொடி என்ன செய்ய வேண்டுமென்று தெளிவான முடிவெடுத்தான்.
காலம் என்ன வைத்து காத்து இருக்கோ..?யாருக்கு யாரோ? யார் அறிவார்?
நேசம் தொடரும்..
Hi friends,
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்! மாறாத நேசம் முதல் அத்தியாயம் போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்