திருப்பரங்குன்றத்தில் ஷ்ரதாவை அடையாளம் கண்டுகொண்டவர், முருகனை தரிசிக்க காரில் குடும்பத்தோடு வந்திருந்த விஜயாதித்தனின் பால்ய சிநேகிதர் குமரகுரு.
அந்த மீசைக்காரர் சேதியை அப்படியே விஜயாதித்தனின் காதில் கொண்டுபோய் சேர்த்ததில் விஜயாதித்தன் உக்கிரமாகிவிட்டார்.
மீசைக்காரருக்கு வீசியை யாரென்று தெரியாததால், "பாப்பாவை ஒரு பையனோட திருப்பரங்குன்ற பஸ் ஸ்டாப்ல பார்த்தேன் விஜயாதித்தா.. பொறுமை காக்கணும்.. அது பாப்பா தான்னு உறுதியா எனக்குத்தெரியும்.. நான் வெளிய யார்கிட்டயும் சொல்லல.. பின்னாடி விஷயம் பெருசாகி நீ தலைகுனிஞ்சி நிற்கக்கூடாதேன்னு தான் உன் காதுல போட்டு வைக்கிறேன்" என்று சூடேற்றிவிட்டுப் போனார்.
விஜயாதித்தனால் ஷ்ரதாவை மன்னிக்கவே முடியவில்லை. 'என்னை ஊரார் முன்பு தலைகுனிய வைக்கவே துஷ்டசக்திகளை எனக்குப் பிள்ளைகளாக கொடுத்து அழகுபார்க்கிறானா அந்த ஆண்டவன்'
விஜயாதித்தன் ஷ்ரதாவின் காதலனாக வீசியை யோசிக்கவில்லை. அவளது கல்லூரி நண்பர்களில் யாரேனும் ஒருவராக இருக்கும் என்று நினைத்தார். மகனிடம் கற்றப்பாடத்தால் அதைப்பற்றி ஷ்ரதாவிடம் அவர் விசாரிக்க முனையவில்லை. ஏன் தன் மனைவி மீனாட்சியிடம் கூட சொல்லவில்லை. விஷயத்தை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாமல் சுளுவாய் முடிக்க நினைத்தார். ஆதலால், நேரே தன் தங்கை கோகிலாவை சந்தித்து விசயத்தை உடைத்தார்.
பின், அவரிடம், "சொல்றதை சொல்லிட்டேன்.. சீக்கிரம் உன் பையனை இந்தியா வந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கச்சொல்லு.. கல்யாணம் முடிஞ்ச பின்னாடி அவன் அங்க இருந்தாலும் சரி, இவ இங்க இருந்தாலும் சரி.." என்று தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டுப் போனார்.
கோகிலா விஜயாதித்தன் சொன்னதைச்சொல்லி ஆதீஸ்வரனை எச்சரித்தார். "உனக்கு கல்யாணம் இல்ல எங்களுக்கு கருமாதின்னு ஏதாவது ஒண்ணை சொல்லி உடனே இந்தியா வாடா" என்று நடுங்கினார். மகனும் ஒரு மாதத்தில் இந்தியா வந்துசேருமாறு கல்லூரி சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துவிட்டு, டிக்கெட் புக் செய்துவிட்டான்.
கோகிலா அத்தோடு நில்லாமல் மறுநாளே விஜயாதித்தனின் வீட்டிற்கு வந்தார். ஷ்ரதாவின் அறைக்குச்சென்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அவரது மூத்த மகனின் சாகசங்களைப் பற்றியும், அவன் அவள் மீது கொண்டுள்ள ஆசையைப் பற்றியும் எடுத்துரைத்தார். ஷ்ரதா சங்கோஜமாக நெளிந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். செல்லும் போது கோகிலா அவளது விரலில் மோதிரம் ஒன்றை போட்டுவிட்டு, ஆதீஸ்வரன் அவளுக்காக பிலிப்பைன்ஸிலிருந்து அனுப்பியது என்றும், ஷ்ரதா அதை கழற்றவே கூடாது என்றும் எச்சரித்துவிட்டுச் செல்ல, ஷ்ரதா அயற்சியாக அந்த மோதிரத்தைப் பார்த்தாள். பத்தாததிற்கு அவர் மகன் ஆதீஸ்வரன் வேறு அடிக்கடி அழைப்புவிடுத்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்தான்.
ஷ்ரதா இதையெல்லாம் வீசியிடம் வாட்ஸாப் உரையாடலில் சொல்லியபோது, அவன் அவசரப்பட வேண்டாமென்றே சொல்லிக்கொண்டிருந்தான். அவளுக்கு எவ்வளவு நாள் தான் காதலை மறைத்து வைப்பது என்று, அவன் பதில் எரிச்சலைத் தந்தது.
ஆனால், அவளால் அதனை அவனிடம் சொல்லமுடியவில்லை. ஏனெனில், இன்னை வரையிலும் அப்படியொரு உரிமையை வீசி அவளுக்கு அளிக்கவில்லை. உரிமையை எடுக்கவும் அவளும் துணியவில்லை.
எத்தனையோ முறை தான் சொல்லும் ஐ லவ் யூவிற்கு பதில் ஐ லவ் யூ சொல்லாமல் அவன், "சரி, ஓகே, ம்ம் அப்பறம்" என்று பற்றற்ற தொனியில் சொல்வதையே ஏனென்று கேட்கத்துணிவில்லாதவளுக்கு இதையெப்படி கேட்க முடியும்?
வீசி அவளின் அவஸ்தையைப்பற்றியெல்லாம் அக்கறைப்படவில்லை. பட்டிருந்தால் பின்னால் நிகழவிருக்கும் அனர்த்தங்களை தடுத்திருக்க முடியும். ஆனால், அஜாக்கிரதையாக விட்டுவிட்டான்.
விஜயாதித்தன் இடையில் அறிவிப்பாக ஷ்ரதாவுக்கு அடுத்தமாதமே திருமணம் செய்யப்போவதாக வீட்டில் சொன்னபோது அருண்மொழியும் மீனாட்சியும் பெரிதாக மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் விஜயாதித்தன் கேட்கமாட்டார் என்று தெரியும். பிறகு, அதை எதற்கு செய்துகொண்டு என்று விட்டுவிட்டார்கள்.
ஆனால், ஷ்ரதா தான் பரிதவித்துவிட்டாள். உடனே அதைப்பற்றி வீசியிடம் சொல்லவேண்டும் என்று அவனைத்தேடி புத்தகக்கடைக்கு ஓடிவந்தாள். போன் விவாதத்தில் எல்லாம் வீசியிடம் முடிவு காண முடியாது என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை அவளிடம்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே எதிரெதிரே நின்றிருந்தார்கள். ஆனால், அவள் மூன்றாம் கட்டில், அவன் நான்காம் கட்டில். அவர்களுக்கிடையே தடுப்பாக ஒரு பாரிய புத்தக மதில்.
அந்த அறைக்குள் நிற்பது புழுக்கமாக இருக்கவும் மின்விசிறியை இயக்கச் சென்ற வீசி, எதை இயக்கவேண்டும் என்று தெரிந்தும் விளையாட்டாக அனைத்து சுவிட்சுகளையும் இயக்கினான்.
விபரீத விளையாட்டு வினையில் முடியும் என்பதற்கேற்ப மின்விசிறி சுற்றத்துவங்கும் ஓசையுடனே நான்காம் கட்டின் சுவற்றோடு ஒன்றிய புத்தக அடுக்கு சரசரவென்று உள்ளே சென்றது. அந்தச்சத்தத்தில் ஷ்ரதாவும் என்னவென்று ஓடிவந்துப் பார்த்தாள். உள்ளே ஒரு குட்டி அறை இலவச இணைப்பாக விரிந்தது.
ஷ்ரதா கண்களை அகலவிரித்துப் பார்க்கும்போதே, அவள் போன் இசைத்தது. திரையைப் பார்த்து அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
வீசி உள்ளே சென்றுப் பார்த்தான். சுற்றிப் பார்த்தபோது சுவர் முழுக்க லாக்கராக இருந்தது. தரையில் பார்த்தால் காய்ந்துபோன ரத்தத்துளிகள். உள்ளே ஓரத்தில் ஒரு நாற்காலியின் மீது ரத்தத்தில் போட்டு புரட்டியெடுத்து காய வைத்ததுபோல் தாம்பு ஒன்று கிடந்தது. அங்கு அடித்த துர்நாற்றத்தில் குமட்டிக்கொண்டு வரவும் உடனே வெளியேறிவிட்டான் வீசி.
அறையில் அனைத்தையும் சுற்றிப்பார்த்த வீசி, மேலே மூலையில் கண்காணிப்பு கேமிரா ஒன்று இருந்ததை கவனிக்கத் தவறிவிட்டான். பின்னால் அதுவே அவன்படும் அல்லல்களுக்கு ஆதாரமாக அமைந்தது.
ஷ்ரதா எதிர்புறம் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். விடையளிக்கவில்லை. வீசி வெளியே வந்தவன் அனைத்து சுவிட்சுகளையும் இயக்கி, மீண்டும் பழையபடியே புத்தக அடுக்குகளை கொண்டுவந்தான். இப்போது அந்த புத்தக அடுக்கிற்கு பின்புறம் ஒரு ரகசிய அறை இருக்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
வீசி அதைப்பார்த்துக்கொண்டே ஷ்ரதாவின் புறம் திரும்பினான். அவள் காதில் 'ஐ லவ் யூ பியூட்டி' சொல்லி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த ஆதீஸ்வரனுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். வீசி தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரியவும் போனை கட்செய்துவிட்டாள்.
பின், நெற்றி சுருங்க யோசித்துக் கொண்டிருந்தவனிடம் "அது என்ன ரூம்?" என்று கேட்டாள்.
அவன், "ஏதோ ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கு.. பெர்சனல் யூஸ்க்கு வச்சிருப்பாங்க போல" என்று கூறி மழுப்பிவிட்டான்.
ஷ்ரதா இம்முறை சரியான சுவிட்சை மட்டும் இயக்கினாள். மின்விசிறி சுழன்றது. வியர்த்திருந்த வீசிக்கு அது தேவையாகவும் இருந்தது.
அருகில் வந்தவளிடம், "ஷ்ரதா, நான், உங்கப்பா, முருகன். எங்க மூணு பேர்ல யாரை உனக்கு ரொம்பப்பிடிக்கும்?" என்றான்.
அவள் முகம் திடீரென செங்கொழுந்தானது. "சொல்லவா?" என்று கேட்டுக்கொண்டே அவனை நெருங்கி வந்தாள்.
அவனுக்கு அவளின் அதிகபடியான நாணத்திற்கு காரணம் விளங்கவில்லை. தன்மீது தான் பிடித்தம் அதிகமென்றால் அவளின் அப்பாவைப் பற்றி சொல்லி புரியவைக்கவே இவ்வாறு கேட்டிருந்தான்.
அவள் அவனை உரசி நின்று, பட்டென்று எக்கி அவன் கன்னத்திலொரு முத்தம் பதித்தாள்.
அவள் முத்தம் கொடுத்தவிடம் பற்றியெறிந்தது வீசிக்கு. யோசியாமல் பளாரென அவள் கன்னத்திலொரு அறைவிட்டான். கண்ணீர் கரகரவென்று கன்னத்தில் வழிய, வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா.
'சே! நான் ஏன் அவளை அறைஞ்சேன்?.. அம்மா சொன்ன மாதிரியே நிதானம்ங்கிறது துளிகூட என்கிட்ட இல்ல.. நான் அவ லவ்வர்.. அதனால தானே இப்படி செஞ்சா.. ஆனாலும் இப்படி முத்தம் கொடுக்கிறது சரியில்லைன்னு நான் அவகிட்ட எடுத்து சொல்லி இருக்கலாம்.. இப்படி கடுமையா நடந்திருக்க வேணாம்..' மறுநாளே ஷ்ரதா போன் செய்திருந்தால் கூட வீசி அதற்காக மனமுவந்து மன்னிப்பு கேட்டு அவ்விஷயத்தை மறந்திருப்பானோ என்னவோ ஆனால், கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகியும் ஷ்ரதா அவனை தொடர்பு கொள்ளாதது தான் அவன் மனதைப்போட்டு பிசைந்தது. கண்ணில் விழுந்த தூசு போல் தினம் உறுத்தி திணறடித்தது.
அடிக்கடி அவள் பேச்சும், முகமும் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததில் வீசி அவனாகவே இல்லை. காதிற்குள் 'ஐ லவ் யூ.. ஐ லவ் யூ' என்று அவள்குரல் வேறு அகாலத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.
'ஒருவேளை இது தான் லவ்வோ?' முதல்முறையாக மனம் லேசாகி பறப்பது போல் உணர்ந்தான் வீசி. ஒவ்வொருமுறை ஷ்ரதாவைப் பற்றி சிந்திக்கும்போதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. 'மேடம் நமக்கு மேல கோபக்காரங்களா இருப்பாங்கப்போலயே..' என்று தனிமையில் சிரித்துக்கொண்டான்.
'எவ்வளவுநாள் கோபம் தாக்குப்பிடிக்குதுன்னு தான் பார்ப்போமே?' என்று வம்பாக மேலும் இரண்டுநாள் பொறுத்துப்பார்த்தான். ம்ஹீம்! அவள் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.
'ஜாடிக்கேத்த மூடி தான்' என்று சிரித்துக்கொண்டு, தானே முதல்முறையாக வழிய சென்று அவளிடம் பேச முடிவுசெய்தான் வீசி.
அக்காவைப் பார்க்கும் சாக்கில் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம் தான். ஆனால், அது அவ்வளவு சரியாக வரும்போல் அவனுக்குத் தோன்றவில்லை. அவளது பொறியியல் கல்லூரிக்கே சென்று அதிர்ச்சியளிக்கவேண்டும் என்று முடிவுசெய்தான், தனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்.
'முதல்முறை உண்மையாகவே அவள் மீதுள்ள ஈடுபாட்டால் அவளை சந்திக்கச்செல்கிறோம்.. வெறுங்கையோடு செல்வதா?' தனது சட்டைப்பையை தடவிப்பார்த்தான் வீசி. நேற்று அவன் அப்பா உடுமாற்றிற்காக மூன்று சட்டையெடுக்கச்சொல்லி கொடுத்திருந்த பணம் ரூபாய் ஆயிரம் சொலையாக இருந்தது. இதில் ஏதாவது வாங்கிவிட்டு திருடுபோய்விட்டது என்று வீட்டில் பொய்சொல்லிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டான். இதை முதலில் அவனது மூளை எதிர்க்கத்தான் செய்தது. பிறகு, அவன் மனம் போட்ட அதட்டலில் மூளை அடங்கிவிட்டது.
திட்டத்தின் முதல்பகுதியாக ஆவணிமூலவீதி சென்று, தேடி அலைந்து ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கினான் வீசி. பிறகு, தன்னை நினைத்தே சிரித்துக்கொண்டு அவள் கல்லூரிக்குச் சென்றான். கல்லூரியை நெருங்கியதும் மீண்டுமொருமுறை தனது சட்டையை இழுத்து சரிசெய்துகொண்டு, பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் மோதிரத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டு, அவளைத்தேடி உள்ளே சென்றான்.
வகுப்பில் பாடம் கவனித்துக்கொண்டிருந்த ஷ்ரதா, சாளரம் வழியாக வீசியைப்பார்த்ததும் முகம் வெளுத்து வெலவெலத்துவிட்டாள். 'முருகா, என்ன இது சோதனை!'
அவனது சைகையில் பேராசிரியரிடம் 'எஸ்கியூஸ்' கேட்டுவிட்டு வெளியே வந்தாள்.
தனிமையான இடமாகத்தேடி அவளுடன் ஓரத்து அரசமரத்தடியில் சென்று நின்ற வீசி, அங்கு மரத்தில் சுபா-சுந்தர் என்று செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே, "அன்னைக்கு நான் அப்படி முரட்டுத்தனமா நடந்திருக்கக்கூடாது.. சே! சாரி ஷ்ரதா.. உன்னை அடிச்சிட்டு எனக்குத்தூக்கமே வரலை தெரியுமா?.. என் மேலயே எனக்கு கோபம்.." என்றான்.
அவன் மன்னிப்பு வார்த்தைகளில் உலுக்கப்பட்ட பூமரமாய் உள்ளுக்குள்ளேயே அதிர்ந்து உதிர்ந்து போனாள் ஷ்ரதா.
"நான் தான் அப்படி அவசரப்பட்டு அடிச்சிட்டேன்.. நீயாவது அடுத்து வந்து பேசியிருக்கலாம் இல்ல?.."
அவள் ஒருவித அலைப்புறுதலுடனே நின்றிருந்தாள். கைகள் கைக்குட்டையை கண்டமேனிக்கு கசக்கியது.
'என்ன இவ இப்படி நிற்கிறா?' வீசி அவளருகில் நெருங்கி வந்தான்.
அவள் ஓரெட்டு பின்னால் சென்றாள். அவன் அதை உணர்வதற்குள்ளாகவே கல்லூரியின் மதிய உணவுஇடைவேளைக்கான மணி அடித்தது. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவத் துவங்கினார்கள். அவள் கலங்கிய தனது கண்களை அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.
வீசி, "சாரி கேட்டுட்டேன்.. இனிமே போன் பண்ணுவ இல்ல.. புக்ஸ்டாலுக்கு வருவ இல்ல.." என்று சிரித்தான். பின், ஞாபகம் வந்தவன் போல, "நான் சிவாக்கிட்ட உன்னைப்பத்தியும் என்னைப்பத்தியும் சொல்லலாம்னு இருக்கேன் ஷ்ரதா.. ஏன்னா அவன் உன்னை.." என்று சிவனேஸ்வரனின் அவள் மீதான காதலை சொல்லப்போனவன் திடீரென அவளது போன் இடைமறிக்கவும் பேசுவதை நிறுத்தினான்.
அவள் போனின் திரையைக் கண்டதுமே பதற்றமாகி வீசியையும் திரையையும் மாறிமாறிப் பார்த்தாள்.
அவனுக்கு அவளது அதிக பதற்றம் ஏதோ தவறு என்று சொல்லியது. அருகில் வந்து பலவந்தமாக அவள் போனை பிடுங்கிப் பார்த்தான். திரையில் 'ஆதி டார்லிங்' என்று இருந்தது. வீசி வாசித்ததுமே வெக்கென்றாகி அவளையும் திரையையும் மாறிமாறிப்பார்த்தான்.
ஷ்ரதா குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றிருந்தாள். அவளுக்கு அவனை நெருங்கி போனைப்பிடுங்க தைரியமும் இல்லை. 'சாரி' என்று சொல்ல தெம்பும் இல்லை. கண்ணீரை கொட்டியபடியே நின்றிருந்தாள்.
வீசி, அவசரமாக போனை கட் செய்துவிட்டு வாட்ஸாப்பிற்குள் சென்றுப்பார்த்தான். ஆதியுடனான அவளது உரையாடல்களை எல்லாம் ஒருவரிவிடாமல் வாசித்தான். கை தானாக போனை நழுவவிட்டது.
அவன் அதன்பின் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. கோபத்தில் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்த வெள்ளி மோதிரத்தை அவள் முகத்தில் எறிவது போல் அங்கேயே வீசிவிட்டுப் போனான்.
ஷ்ரதா அந்த மோதிரத்தை கையிலெடுத்து அவன் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் இமைகள் மூடவில்லை. ஆனால், கண்மணிகள் மட்டும் கண்ணீரில் குளித்துக்கொண்டேயிருந்தன.
வீசியால் நம்பவே முடியவில்லை. 'ஒரு பத்துநாள் இடைவெளி எப்படி என்னையும் அவளையும் பிரிக்கமுடியும்? இப்படி நடப்பதற்கு அவள் என்னை அன்றே திருப்பி அறைந்திருக்கலாமே! கத்தித்தீர்த்து சட்டையைப் பிடித்திருக்கலாமே! இல்லை எப்போதும் போல போன்போட்டு அழுதே என்னை சாகடித்திருக்கலாமே! ஏன் இப்படி என்னை ஏமாற்றினாள்?' என்று பலவாறு புலம்பித்தீர்த்தான்.
அவர்களின் வாட்ஸாப் உரையாடல்கள் வேறு அடிக்கடி கண்முன்னே வந்துபோனது.
*******
Adhi: beauty i urgently need 5 kisses.
Shraddha: 💋💋💋💋💋
Adhi: I can feel your lips on my lips. You know what, It is very soft and warm. Can you feel my lips?
Sh: mm
*******
தனக்கு முன்னாலிருந்த பேப்பர் வெயிட்டரை சுவற்றை நோக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினான் வீசி. அடுத்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை தேடி எடுத்துவந்து காட்டியது அவன் மூளை.
*******
Adhi: night nee en bed la endha side paduppa beauty? right or left?
Shraddha: your wish poonaikutti
Adhi: love you beauty 🙈
Shraddha: mm 😘
*******
"எப்படி உன்னால அவன்கூட போன்லயே குடும்பம் நடத்த முடிஞ்சது?" மேசையை தட்டினான் வீசி. புத்தகம் வாங்க வந்திருந்த இருவர் இரண்டாம் கட்டிற்குள்ளிருந்து எட்டிப்பார்த்தார்கள்.
"ஒண்ணுமில்ல" என்று சொல்லி கீழே எதையோ தேடுவது போல பாவலாப் பண்ணினான் வீசி. மீண்டும் ஒரு ஸ்க்ரீன்ஷாட் கிடைத்தது.
*******
Adhi : beauty i will kiss all of your moles. How many kisses will you get at that time? 😉
Shraddha: cheeeeeee🙈
Adhi: please beauty😉
Shraddha: no poonaikutti 🔞
Adhi: please beauty. I want to know where that thiruttu rascals olinjifying👮♂️
*******
"அவன் கேட்டான்னு ஒவ்வொரு மச்சமும் எங்கேயிருக்குன்னு மேப்பு போட்டு சொல்லுவியா?.. எனக்கு ஏன் இப்படி வலிக்குது?.. நான் ஏன் இப்படி புலம்புறேன்?.. உன்னை வெகுளி அப்பாவின்னு நினைச்சேனே.. என்னை இப்படி அடிமுட்டாளாக்கிட்டியே ஷ்ரதா!!!" என்று அலறினான்.
ஷ்ரதா அவன் இப்படி தன்னை தேடி வருவான், இறங்கி வருவான் என்று நினைக்கவே இல்லை. ஏனெனில், அன்று அவன் தன்னை அறைந்தபோது தான் அவன் தன்னை காதலிக்கவே இல்லையென்று அவள் புரிந்துகொண்டாள்.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
தவறு யார் பக்கம்? வாங்க ப்ரெண்ட்ஸ் விவாதிக்கலாம்.
கருத்துத்திரி,
விவாத களம்