Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான்கு பாதை!ஒரு வழி!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 21



துயில் எழுந்த கருணாகரன் ஆதித்தன் சொன்னதை போலவே பாதையில் கடந்து போன குதிரைகளின் குளம்படி ஆழத்தை வைத்து சகோதரர்கள் இருவரும் தன்னை கடந்து பயணித்து விட்டதாக தப்பாக கணித்தான்.இரண்டிரண்டாக பிரிந்து செல்லும் பாதையில் தன்னைத் தவிர வேறு யாராலும் சரியான பாதையை கண்டு பிடிக்க முடியாதென்னும் போது இவர்கள் எந்த நம்பிக்கையில் சரியான பாதையில் பயணிக்க முடியுமென்று நினைத்தார்கள் என்று உள்ளூர கருணாகரன் ஆச்சரியப்பட்டான்.பிறகு குதிரைகளின் குளம்படி சுவட்டை பின்பற்றி வெகு கவனமாகவும் மெதுவாகவும் முன்னேற தொடங்கினான்.அதே நேரம் கருணாகரனுக்கு பின் புறமிருந்த பாதையில் ஒரு காத தூரத்திற்கு பின்னால் இருந்த சகோதரர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.



“அண்ணா! கருணாகரன் மெதுவாகவே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பான்.நாம் அவனுக்கு முன்னதாக பயணித்து கொண்டிருப்பதாக அவன் நினைத்து கொண்டிருக்கிறான்.நாம் அவன் பின்னால் வருவதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.இரண்டாக பாதை பிரியுமிடத்தில் வெற்று குதிரைகளை பார்த்தவுடன் நம்மை காணாமல் குழம்ப ஆரம்பிப்பான்.அந்த நேரத்தில் மின்னலாக அவனை பின் தொடரும் நாம் தாக்குதலால் அவனை வீழ்த்த வேண்டும்.நான் கட்டாரியை பயன்படுத்த போகிறேன்! நீ? “



“என் தேர்வு வில்லும் அம்பும்! “



“எனக்கு வலது பக்கம்! உனக்கு இடது பக்கம்! சரியா? “



“சம்மதம்! நம் குறி பார்க்கும் திறமைக்கு கருணாகரன் சிக்கினான்! “



“முதலில் குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்காமலிருக்க அவற்றின் குளம்பை சுற்றி துணிகளை இறுக கட்டுவோம்! அப்போதுதான் குளம்படி ஓசை கேட்காது! “



இளையவனின் யோசனை உடனே செயல்படுத்தப்பட்டது.இருவரும் சத்தமின்றி கருணாகரனை நெருங்கி கொண்டிருந்த போது கருணாகரன் வெகு கவனமாக பாதையை கவனித்தபடி பயணித்து கொண்டிருந்தான்.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளை பார்த்த படி சென்றவனின் முகம் மாறியது.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளில் காணப்பட்ட வித்தியாசம் கருணாகரனின் மூளையை குழப்பியது.சட்டென்று குதிரையிலிருந்து இறங்கியவன் அதில் ஒரு குதிரையின் குளம்படிகளை கூர்ந்து கவனித்து விட்டு அதை மட்டும் பின் தொடர ஆரம்பித்தான்.குதிரையின் குளம்பு சுவடுகள் அழுத்தமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்ததால் கருணாகரனுக்கு குழப்பம் ஏற்பட்டது.அழுத்தம் குறைவான இடத்தில் தேடியவனின் கண்களில் ஆதித்தன் உருவாக்கி குதிரையின் முதுகில் கட்டி அனுப்பிய போலி படுக்கை தென்பட்டது.ஷண நேரத்தில் கருணாகரனுக்கு ஆதித்தனின் தந்திரம் முழுதாக புரிந்தது.போலி படுக்கைகளில் ஒன்று சரியாக கட்டப்படாததால் நழுவி கீழே விழுந்து விட்டதையும் அதனாலேயே குளம்படிகள் மேலோட்டமாக இருப்பதையும் கருணாகரன் தெள்ள தெளிவாக தெரிந்து கொண்டு விட்டான்.தான் வசமாக சிக்கி கொண்டு விட்டதை அறிந்த கருணாகரன் மின்னலென ஒரு முடிவெடுத்தான்்.எப்படியாவது சரியான வழியில் புகுந்து விட்டால் இருவரிடமிருந்து தப்பி விடலாம் என்று நினைத்த கருணாகரனின் நினைப்பு பொய்த்து போனது.எதிரே நாற்காற் பாய்ச்சலில் வந்த புரவிகளின் மேலிருந்த சகோதரர்களின் அரவமற்ற வரவை எதிர்பார்க்காத கருணாகரன் தன் வாளை உருவ எத்தனித்தான்.அரிஞ்சயனிடமிருந்த வில்லிலிருந்து அம்பும், ஆதித்தனின் கையிலிருந்த கட்டாரியும் கருணாகரனை நோக்கி குறி வைத்து பாய்ந்தன.”தொலைந்தேன்! “என்றான் கருணாகரன்.கருணாகரனின் இருபுறமும் சரமாரியாக பாய்ந்த கட்டாரிகளும், அம்புகளும் அவன் உடையை மரத்தோடு சேர்த்து தைத்தன.”மன்னித்து விடுங்கள் தளபதியாரே! உங்களின் புது உடையை சேதப்படுத்தியதற்கு! “என்றான் ஆதித்தன்.மரத்தோடு பிணைக்கப்பட்ட கருணாகரன் எந்த பதட்டமுமின்றி நின்றதோடு “என்னை உன்னால் கொல்ல முடியாது ஆதித்தா! என்னை கொன்றால் வெளியேறும் வழிஉனக்கு தெரியாது“என்றான் இகழ்ச்சி சிரிப்புடன்.



“உன்னை கொன்று விட்டு இங்கிருந்து வெளியேறும் வழியை நான் அறிவேன் கருணாகரா! “என்றான் ஆதித்தன்.



கருணாகரனுக்கு ஏனோ பைராகியின் நினைவு வந்து போனது.



“அப்படியானால் பைராகியை உனக்கு தெரியுமா? “என்றான் கருணாகரன்.



யார் அந்த பைராகி என்று சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள தொடங்கினர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 22

கருணாகரன் பைராகி என்ற புதிய பெயரை சொன்னதும் ஆதித்தனுக்கு அந்த பைராகிக்கும் இந்த புதிர் பாதைக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும் என்ற விவரிக்க இயலாத ஒரு ஆர்வத்தை நோக்கி தள்ளப்பட்டான்.ஏற்கனவே சிவப்பு முகமூடி அணிந்ததால் கரிகாலன் என்று மக்கள் ஆர்பரித்ததும் யார் அந்த கரிகாலன் என்ற ஆர்வம் தனக்குள் இருப்பதையும், பிரபாவதிக்கும் கருணாகரனுக்குமான கணக்கை நேர் செய்யும் வேலையை அந்த ஆர்வம் பின் தள்ளியிருந்ததையும் ஆதித்தன் உணர்ந்திருந்தான்.அதே நேரம் கருணாகரனின் எண்ணவோட்டம் வேறு மாதிரி இருந்தது.பைராகியின் வழி சூத்திரத்தை ஆதித்தன் அறிந்திருந்தால் தன் தலை தப்பாது என்பதையும் உடனே தன்னை கொன்று விட்டு அவர்கள் புதிர் பாதையை விட்டு வெளியேறுவது வெகு எளிது என்பதால் எதையாவது சொல்லி நேரத்தை கடத்தி சரியான நேரத்தில் தப்பி சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டான்.



“பைராகியின் பாதை சூத்திரத்தை நீங்கள் அறிவீர்களா? “



கருணாகரனின் கேள்விக்கு ஆதித்தன் மவுனத்தையே பதிலாக தந்தான்.இந்த கேள்விக்கு பதில் சொல்வது கத்தி மேல் நடப்பதை போன்றது என்பதால் அரிஞ்சயனும் அமைதியாகவே இருந்தான்.



கருணாகரனின் கேள்விக்கு ஆதித்தனிடமிருந்து பதில் வந்தது.அது பதில் அல்ல.பதில் என்ற பெயரில் மற்றோரு கேள்வி.



“யார் அந்த கரிகாலன்? “



கருணாகரனின் முகம் நிறம் மாறியது.



“அது ஒரு பெரிய கதை.!”



“நடந்தபடியே அந்த கதையை கூறலாமே? “



கதையில் சகோதரர்கள் லயித்திருக்கும் தருணம் தான் தப்பிக்க எதாவது வழி கிடைக்கும் என்று நினைத்த கருணாகரன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.



மகேந்திரபுரியின் மன்னன் வீரசேனன்.மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றவன்.அவனது மனைவி அமிர்தவள்ளி.கணவனுக்கேற்ற மனைவி.அவளது தம்பிதான் மகேந்திரன்.மாமாவிற்கு உதவியாக ராஜிய காரியங்களில் உதவி வந்த மகேந்திரன் வாள் போரில் நிபுணன்.அதில் அவனை வெல்ல யாருமில்லை.அவனது பலவீனம் எதிரிகளை சித்ரவதை செய்து கொல்வது.தங்கத்தின் மீதான பேராசை.அருகிலிருந்து வீர சேனனுக்கு உதவி கொண்டிருந்த மகேந்திரனுக்கு தான் மன்னனாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.குழந்தையில்லாத வீர சேனன் மகேந்திரனை வாரிசாக்கவே விரும்பினான்.இப்படியான சூழலில் அமிர்தவள்ளி இளவரசன் மாற வர்மனை பெற்றெடுத்தாள்.மகேந்திரனின் மன்னனாகும் கனவு நிர்மூலமானது.வாரிசு வந்து விட்டதால் தான் மன்னனாவது சாத்தியமல்லவென்று உணர்ந்த மகேந்திரன் குறுக்கு வழியில் இறங்கினான்.காட்டிற்கு வேட்டையாட சென்ற வீர சேனன் வேங்கையால் வேட்டையாடப்பட்டு இறந்தான்.விபத்தென்றான் மகேந்திரன்.மந்திரி மதிவாணரோ அதை நம்பவில்லை.தற்காலிகமாக மகேந்திரன் மன்னன் ஆனான்.அடுத்ததாக அவன் குறி வைத்தது இளவரசர் மாற வர்மனை.வீர சேனனின் மறைவால் அமிர்தவள்ளியும் இறந்து விட அனாதையானான் மாறவர்மன்.அவனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்றான் மகேந்திரன்.மதிவாணரோ உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விசத்தை கலந்து கொடுத்து மாற வர்மனின் உடலை எந்த விசத்தாலும் பாதிக்காத வகையில் மாற்றினார்.இரவில் மாறவர்மனின் படுக்கையறையில் விசபாம்புகள் வீசப்பட்டன.அவை மாறவர்மனை தீண்டி இறந்து போயின.மகேந்திரனின் அத்தனை சதிகளையும் ராஜிய விசுவாசிகள் முறியடித்து மாற வர்மனை காப்பாற்றி வந்தனர்.அப்படியான சமயத்தில் மகேந்திரனை சந்திக்க வந்தவன்தான் பைராகி.ரசவாதம், புதிர் பாதை, நகர நிர்மாணம் உட்பட பல திறமைகளை பெற்றவன்.அவன் கண்டு பிடித்திருந்த துருப்பிடிக்காத இரும்பால் ஆன வாள் மகேந்திரனுக்கு பிடித்து போனது.அவனை வைத்து கொண்டு மகேந்திரபுரியின் புதிய தலைநகரத்தை நிர்மாணித்தான்.யாராலும் கடந்து வர முடியாத பொய்மான் கரடின் புதிர் பாதையை நிர்மாணித்தவனும் அவனே! அந்த பாதையின் வழியை நினைவு வைத்து கொள்ள அவன் ஒரு சூத்திரத்தை வகுத்திருந்தான்.”நான்கில் பாதி சரி! முதல் வலது இரண்டில் இடது! “என்று தொடங்கும் அந்த சூத்திரத்தை அறிந்தவர்கள் பொய்மான் கரடை எளிதில் கடந்து விடலாம்!



“நான்கில் பாதி என்பது இரண்டாவது வழி இல்லையா? “



“ஆம்! அதிலிருந்து செல்லும் பாதை இரண்டாக பிரியும்.அதில் வலது பக்கம் செல்ல வேண்டும்! “



“புரிகிறது.கதையை தொடரும்! “



“எண்ணற்ற திறமைகள் நிறைந்த பைராகியை வெளியே விட விருப்பமில்லாத மகேந்திரன் அவனை சிறையில் அடைத்தான்.அவனது சிறை கூடத்தை ஒரு தொழில் கூடமாக மாற்றி புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்க வைத்தான்.புதிர்பாதை ரகசியத்தை அவன் யாரிடமும் சொல்லாதிருக்க அவனை தனியாக இருக்க வைத்தான்.அவனுடன் இன்னொருவனும் அந்த தொழில் கூடத்தில் இருந்தான்.அந்த கைதி எப்போதும் தூங்கி கொண்டிருக்கும் வினோத வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தான்.அவன் பெயர் அநாபயன்.ஒரு காலத்தில் அரசிற்கு எதிராக செயல்பட்டவன்! “



“அநாபயன்! இந்த பெயரில் எங்களுக்கு ஒரு நண்பன் உண்டு! “என்றான் ஆதித்தன்.



“அவனுடைய தங்கைதான் பத்மாவதி! “என்றான் அரிஞ்சயன்.



கருணாகரனின் முதுகுதண்டு சில்லிட ஆரம்பித்தது.கதையை முழுதாக சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் கருணாகரனை சூழ்ந்தது. .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 23



பதமா்வதிக்கும் தனக்குமான தொடர்புகளை தெரிந்து வைத்திருக்கும் இந்த இருவருக்கும் அநாபயனை தெரிந்திருக்கும் என்றோ அவன் இவர்களின் நண்பனாக இருப்பான் என்பதையோ கருணாகரன் எதிர்பார்த்திருக்கவில்லை.இந்த புதிய இக்கட்டிலிருந்து கருணாகரனை காப்பாற்ற இரண்டாக பிரியும் வழி உதவிக்கு வந்தது.



“இந்த பாதைகளில் இடதில் செல்ல வேண்டுமா? இல்லை வலதில் செல்ல வேண்டுமா என்று ஆதித்தா நீயே கூறேன்!?”என்றான் கருணாகரன்.பைராகியின் வழி சூத்திரம் ஆதித்தனுக்கு தெரியுமா இல்லையா என்பதை கருணாகரன் தெரிந்து கொள்ள இந்த பாதை தேர்வு பயன்படும் என்பதாலேயே கருணாகரன் இந்த கேள்வியை கேட்டான்.



பைராகியின் பாதை சூத்திரம் தெரியாமலேயே தெரிந்தது போலவும், கருணாகரனின் துணையின்றியே புதிர் பாதையை விட்டு வெளியேறி விட முடியுமென்றும் சொன்ன ஆதித்தன் கருணாகரனின் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.விடை தெரியாத இந்த கேள்விக்கு பதிலை சமயோசிதமாக கருணாகரனிடமே தள்ளி விட்டான் ஆதித்தன்.”கருணாகரா! இந்த புதிர் வழியின் சூத்திரம் முழுதாக உனக்கு தெரிந்திருக்கிறதா என்று அறிய நான் விரும்புவதால் பாதையை நீயே தேர்ந்தெடு! “என்றான்.



வழி தெரிந்த ஆதித்தனின் இந்த பதில் கருணாகரனுக்கு தெளிவை கொடுத்தது.எதிரி வழி தெரிந்தவனா இல்லையா என்பதை இப்போது கண்டு பிடித்து விடலாம் என்பதால் முதலில் சரியான வழியை சொல்ல முடிவெடுத்தான்.



“நாம் வலதுபுறமாக பயணிக்க வேண்டும்! “என்றான் கருணாகரன்.



மனித உளவியலை ஓரளவு அறிந்திருந்த ஆதித்தன் கருணாகரன் சொல்வது பொய்யாக இருக்ககூடும் என்று கருதினான்.அதற்கு எதிரான பாதையே சரியான வழி என்று முடிவு செய்தவன் “அப்படியானால் நாம் இடது புறம் பயணிப்போம்! “என்றான்.



“எப்படி ஆதித்தா சரியான வழியை கண்டு பிடித்தாய்? நீ திறமைசாலிதான்! “என்றான் கருணாகரன்.



“நீ ஏன் தவறான வழியை காட்டினாய்? “என்றான் ஆதித்தன்.



“உனக்கு பாதை சூத்திரம் தெரிந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ளத்தான் தவறான விடையை சொன்னேன்! சரி நாம் இடது புறத்தில் பயணிப்போம்! “என்றான் கருணாகரன்.

ஆதித்தன் தன்னுடைய குயுக்தியான வலையில் விழுந்து விட்டதில் பெரும் மகிழ்ச்சியடைந்த கருணாகரன் இடது புற பாதையில் காத்திருக்கும் அபாயத்தில் இருவரையும் சிக்க வைத்து விட்டு தப்பி விட எண்ணமிட்டான்.



சில நொடிகள் யோசித்த ஆதித்தன் “இல்லை! நாம் வலது புற பாதையில் பயணிப்போம்! “என்றான்.



“அது தவறான பாதை ஆதித்தா! அதில் அபாயங்கள் காத்திருக்க கூடும்.இதுவே சரியான வழி! “என்றான் கருணாகரன்.



“கருணாகரன் முதலில் வலது பக்க பாதையைத்தானே சொன்னான்? நீதான் இடது புறம் என்று மாற்றினாய்.இப்போது வலது புறம் என்று குழப்புகிறாய்! “என்றான் அரிஞ்சயன்.



“இல்லை அண்ணா! நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதை வலது புற பாதையே! “



“எதை வைத்து கூறுகிறாய்? “



“சரியான பாதையை நான் கூறியிருந்தால் நண்பரின் முகம் வாட்டமடைந்திருக்கும்.பாதை சூத்திரம் எனக்கும் தெரியும் என்பதால் நண்பர் சோகத்தில் மூழ்கியிருப்பார்.தவறான பாதையை தேர்ந்தெடுத்ததால் நண்பர் மகிழ்ச்சியடைந்ததுடன் என்னை வம்படியாக புகழ்ந்ததுடன் பாதையில் செல்ல அவசரம் காட்டினார்.அவரின் அவசரமும் மகிழ்ச்சியும் எனக்கு ஐயத்தை உருவாக்கின.என்ன நண்பரே? நான் சொல்வது சரிதானா? “



கருணாகரனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.தன் திட்டம் படு தோல்வியடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் “சரிதான்! “என்றான்.



“நல்லது! இனி வலது புற பாதையில் நடந்த படி கதையை தொடருங்கள்.இனி இந்த அழுகுணி ஆட்டமெல்லாம் ஆடாதீர்கள்.என்னிடம் தோற்று போவீர்கள்! “என்றான் ஆதித்தன்.



“வெற்றி உனக்கு மட்டுமே சொந்தமானதில்லை ஆதித்தா? தோல்வியையும் நான் பரிசளிப்பேன்! “



“அதையும் வெற்றியாக மாற்றும் வல்லமை எனக்குண்டு நண்பரே! கதையை தொடரும்! “



கருணாகரன் கதையை தொடர்ந்து சொல்ல தொடங்கினான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்24



மகேந்திரன் மன்னனாக பதவி ஏற்றதும் மகேந்திரபுரியின் தலைநகரை பைராகியை கொண்டு நிர்மாணித்தான்.சிறைச்சாலை கைதிகளை கொண்டு புதிர்பாதை ஒன்றை பொய்மான் கரட்டில் உருவாக்கினான் பைராகி.அந்த பணியில் ஈடுபட்ட அனைவரையும் கொன்ற மகேந்திரன் புதிர் வழியை யாரும் அறியாதிருக்கவும், மகேந்திரபுரி போன்ற இன்னொரு நகரை பைராகி வேறு எந்த நாட்டிலும் உருவாக்க கூடாது என்பதற்காகவும் பைராகியை தொழில்கூடம் போன்ற சிறைக்கூடத்தில் சிறை வைத்தான்.அந்த சிறை கூடத்தில் பைராகியோடு இருப்பவர்கள் புதிர் பாதை ரகசியத்தை அறிந்து கொள்ள கூடும் என்ற சந்தேகத்தில் அநபாயன் என்ற எப்போதும் தூங்கி கொண்டிருக்கும் வினோத வியாதியால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவனும் இருந்தான்.



இந்த அநபாயன் மருதபுரம் என்ற மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவன்.அவனுக்கு பத்மாவதி என்ற தங்கையும் இருந்தாள்.தேனும், தினைமாவும் தின்று வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த அந்த கிராமத்தை சனியன் பிடிக்க தொடங்கியது.அங்கு நிலத்தின் மேற்பகுதியில் கிடைத்த தங்கம் மகேந்திரனுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது.ஏற்கனவே தங்கத்தின் மீது வெறி பிடித்து ரஸவாதத்தினால் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நினைத்து பைராகியை சிறை வைத்த மகேந்திரனுக்கு இந்த செய்தி பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று.மருத புரத்தை கைப்பற்ற படையுடன் வந்தான் மகேந்திரன்.மகேந்திரனை எதிர்க்கும் திரணற்ற மருத புர வாசிகள் அகதிகளாக நாட்டின் பல பாகத்திற்கு தப்பி ஓடினார்கள்.மீதமிருந்த மருதபுரத்துவாசிகள் மகேந்திரனிடம் மருதபுரத்தை இழந்து விட்டு காட்டின் உள்பகுதியில் சிறு கிராமம் ஒன்றை உருவாக்கி கொண்டு வாழ ஆரம்பித்தனர்.அதற்கு காரணம் அவர்கள் மூதாதையர்களின் கல்லறைகளை புனிதமாக கருதினார்கள்.அதை விட்டு கொடுக்கவும் இயற்கையை அழிப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை.மகேந்திரனை எதிர்த்து தங்களின் வாழிடத்தை இழந்தவர்களின்நியாயத்தை அநபாயன் நாடு முழுவதும் தன் பாடல்களின் மூலமாக பிரசாரம் செய்தான்.அது நாட்டின் பொது பிரச்சனையாக இல்லாததால் அவனை மக்கள் கவனிக்கவில்லை.வீதியில் தெரு நாடகங்கள் நடத்தி பலமுறை தன் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டான் அநபாயன்.நாட்டின் பல பாகத்தில் சிதறி கிடந்தவர்களை வாகை மரத்து புறாக்கள் மூலம் ஒன்றிணைத்தான். அரசுக்கு எதிராக பலமுறை சிறை சென்ற அநபாயனுக்கு சிறையில் பைராகியின் நட்பு கிடைத்தது.பைராகியின் மூலம் அநபாயனுக்கு சில உண்மைகள் தெரிய வந்தது.அது மகேந்திரபுரியின் புதிய தலைநகரை நிர்மாணித்த பைராகி அதில் பல சுரங்க வழிகளை அமைத்திருந்தான்.அடைபட்டுள்ள சிறைசாலையிலிருந்து வெளியேறவே ஆறு வழிகளை பைராகி உருவாக்கி வைத்திருந்தான்.ஆனால் அவனால் வெளியேற இயலாது.வெளியேறிய மறுகணமே மகேந்திரனின் படையிடம் பைராகி பிடிபட்டு விடுவான்.பைராகியின் யோசனையின்படி தன் போராட்டத்தை மாற்றியமைக்க நினைத்தான் அநபாயன்.வாகை மரத்து புறாக்களின் மூலம் செய்தியனுப்பியவன் சில வருடங்களுக்கு காணாமல் போனான்.அந்த வருடங்களில் அவன் கள்வர் புரத்தில் களவு வேலையை கற்று கொண்டதாக கேள்வி.சில வருடங்களுக்கு பிறகு திரும்ப வந்த அநபாயன் புரட்சி கீதம் இசைத்ததற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான்.சிறையில் எப்போதும் தூங்கும் வினோத வியாதியால் அநபாயன் பாதிக்கப்பட்டு பைராகியின் அறை தோழனாக அனுப்பப்பட்டான்.இப்படியாக அநபாயனின் கதை சிறைக்குள் முடிந்தது.



மகேந்திரபுரியின் புதிய தலைநகரத்தில் மகேந்திரனது ஆட்சிக்கு எதிராக ஒருவன் திடிரென கலக குரல் எழுப்பியபடி இரவு நேரங்களில் அரசாங்க படைகளை தாக்கி கொள்ளையிட ஆரம்பித்தான்.அநியாயமாக லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளை வழி மறித்து தாக்குவதும் கஜானாக்களை கொள்ளையடிப்பதும் அப்படி கொள்ளையடித்த செல்வங்களை நாட்டின் ஏழைகளுக்கு வழங்குவதாகவும் அவனது செயல்கள் அமைய ஆரம்பித்தன.மகேந்திரனது கொடுமையால் தவித்த மக்களுக்கு அவனது செயல் ஆறுதலாக இருந்தது.சிவப்பு நிற துணியால் முகத்தை மறைத்து கொண்டு குதிரையில் நள்ளிரவில் உலா வரும் அவன் தன்னை கரிகாலன் என்றழைத்து கொண்டான்.மக்களிடையே கரிகாலனுக்கு ஆதரவு பெருகலாயிற்று.அவனது செயல்களால் கோபமடைந்த மகேந்திரன் தன் அரண்மனை தர்பார் மண்டபத்தில் தளபதிகளுடன் மந்திரலோசனையில் இருந்தான்.”தளபதிகளே! இந்த கரிகாலனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.அவனை எப்படியாவது தேடி பிடித்து கைது செய்ய வேண்டும்! “என்றான் மகேந்திரன்.



“அவன் எங்கிருந்து வருகிறான்? போகிறான் என்று எதுவும் தெரியவில்லை மன்னா? “



“எப்படியாவது சீக்கிரம் கண்டு பிடியுங்கள்! “



“அந்த கவலை உனக்கு வேண்டாம் மகேந்திரா! இதோ நானே வந்து விட்டேன்! “என்ற கணீர் குரல் தர்பார் மண்டபத்தில் எதிரொலித்தது.மண்டபத்தின் நுழைவாயிலில் சிகப்பு நிற முகமூடியணிந்திருந்த கரிகாலன் நிராயுதபாணியாக இடுப்பில் கை வைத்து நின்றிருந்தான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 25



தான் வலை வீசி தேடி கொண்டிருந்த எதிரி தன் இடத்திற்கே வருவான் என்றும் தன் எதிரிலேயே நிராயுதபாணியாக நிற்பான் என்பதையும் மகேந்திரன் எதிர்பார்த்திருக்கவில்லை.அரண்மனையின் கட்டுகாவலையும் மீறி கரிகாலனின் பிரவேசம் எப்படி நிகழ்ந்திருக்க கூடும் என்று மகேந்திரன் குழம்பினாலும் உடனடியாக நிகழ்காலத்திற்கு வந்தான்.கரிகாலனின் தைரியத்தை மனதிற்குள் மெச்சினாலும் ஒரு வகையில் பரிதாபமும் அவன் மேல் மகேந்திரனுக்கு ஏற்பட்டது.தனியாக வந்து மாட்டி கொண்டு விட்டானே என்பதால் ஏற்பட்ட பரிதாபம் அது.ஆனால் அப்படி பரிதாபத்திற்குரியவன் கரிகாலன் அல்லவென்பதை சற்று நேரத்திலேயே மகேந்திரன் உணர்ந்து கொண்டான்.”ஆயுதமின்றி இருக்கிறான்.பிடியுங்கள் அவனை! “மகேந்திரனிடமிருந்து கட்டளை பறந்தது.அந்த கட்டளையை நிறைவேற்ற காவலர்கள் முனைந்த போதுதான் கரிகாலனுக்கு பின்னாலிருந்த முகமூடி அணிந்த நான்கு உருவங்களில் ஒன்று வில் அம்பால் மகேந்திரனை குறி பார்ப்பதை உணர்ந்தனர்.



“யாரும் அசைய கூடாது.மீறி அசைந்தால் மகேந்திரனின் உயிர் பறி போய் விடும்! “கரிகாலனின் கட்டளைக்கு கீழ்படியுமாறு மகேந்திரன் கண்களால் ஆணையிட்டான்.



“நிராயுதபாணியாக உன்னிடம் வர நான் முட்டாள் இல்லை மகேந்திரா! என் நண்பனின் குறி தவறியதாக சரித்திரம் கிடையாது.சோதிக்க நினைப்பவர்கள் தாக்குதல் முயற்சியை மேற் கொள்ளலாம்! “என்றான் கரிகாலன்.



“யார் நீ? “என்றான் மகேந்திரன்.



“மக்களில் ஒருவன்! “



“இல்லை! கள்வர் கும்பலின் தலைவன்! “



“வரி என்ற பெயரில் மக்களை வதைக்கும் உன்னை விட நான் பெரிய கள்வனல்ல மகேந்திரா! “



“உனக்கு என்ன வேண்டும் கரிகாலா? “



“மாற வர்மன் மன்னனாக வேண்டும்.காபாந்து மன்னனாகிய நீர் உமது கொடுமைகளை குறைத்து கொள்ள வேண்டும்.வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.மருத புரத்தில் தங்கம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.இவற்றையெல்லாம் செய்தால் கரிகாலனுக்கு இங்கு வேலையில்லை! “



“நிறுத்தி கொள்ளாவிட்டால்? “



“தர்பார் மண்டபம்வரை வந்த என்னால் உன் படுக்கையறைக்குள்ளும் வர முடியும் மகேந்திரா.ஆளை ஓழிப்பதல்ல என் நோக்கம்.ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்.இன்னொன்றையும் எச்சரிக்கிறேன்.இளவரசரின் உயிருக்கு உன்னால் ஊறு நேர்ந்தால் உன் உயிர் உடலில் தங்காது! “



“என்னிடத்திலிருந்து கொண்டு என்னையே மிரட்டுகிறாய்? இங்கு நான் மன்னனா? நீயா? “



“உயிரற்ற இந்த அரண்மனைக்கு நீ மன்னன்.மக்களின் மனதில் நானே மன்னன்.!”



“நாளை உன்னால் என் உயிருக்கு கேடு விளைந்தால் அதற்கும் நீயே பொறுப்பு! “



“போதும் மகேந்திரா! உன்நாடகம்.ஏழு படுக்கையறைகளை கட்டி அதில் இரவு எதில் உறங்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்கிறாய்.உன்னை நீயே தாக்கி கொண்டு நான் தாக்கியதாக சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.விரைவில் மாற வர்மனை மன்னனாக்கு! அதுவரை இந்த கரிகாலனின் தொல்லை உன்னை தொடரும்.திருந்து! இல்லையேல் திருத்தப்படுவாய்! “



தர்பார் மண்டபத்திலிருந்து திரும்பி வெளியே வந்த கரிகாலனை பின் தொடர்ந்தான் முகமூடியணிந்த கந்தமாறனும் அவன் தோழர்களும்.அவனுடைய அம்பின் நுனி இன்னமும் மகேந்திரனின் நெஞ்சை குறி பார்த்து கொண்டிருந்தது.தர்பார் மண்டபத்தின் கதவுகளை சாத்தி தாழிட்ட கரிகாலன் “போகலாம் கந்தமாறா! “என்றான்.விசாலமான நடைபாதையில் விரைந்த நால்வரும் ஒரு கணம் நின்றனர்.படியின் கைப்பிடி குமிழை திருகியதும் சுவற்றிலிருந்த சிறிய கதவொன்று திறந்தது.அதன் படிகளில்நால்வரும் இறங்கியதும் சுவர் பழையபடி மூடி கொண்டது.”பைராகி! படு பயங்கர திறமைச்சாலிதான்! “என்றான் கந்தமாறன்.



தர்பார் மண்டபத்தில் அடிபட்ட புலியாக சீறிக் கொண்டிருந்தான் மகேந்திரன்.”சகிக்க இயலாத அவமானம்! “மகேந்திரனின் குருதி கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தது.
 
Top Bottom