Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீயும் என் தாயே

Bharathi Natesan

New member
Messages
1
Reaction score
1
Points
1

நீயும் என் தாயே​


மார்கழி மாதம். சோம்பலுடன் மங்கலாய் ஒளிந்து கொண்டிருந்த சூரியன். பனிமூட்டம் மறைவதற்கு முன்னதாக ஒரு நிலையை பெற்றிருந்தது .பக்தி பரவசத்தில் அந்த கிராமத்தின் அனைத்து வீடுகளின் வாசல்களும் கோலங்களாலும் பனியிலும் கோலமிடும் மங்கையர்களாலும் வண்ணமயமாக இருந்தது. தெய்வ பக்தி பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்க அந்த தெருவில் ஒரு வீட்டில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த கந்த சஷ்டி கவசத்திற்கு நிகராக வெங்கடேச முதலியாரின் சுப்ரபாதமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.


"மனசுல என்னதான் டீ..... நினைச்சுட்டு இருக்கான் உன் மகன்.... இல்ல என்ன நெனச்சிட்டு இருக்கா...? ன்னு கேக்குறேன். காலேஜுக்கு போயி நாலு எழுத்து படிச்சிட்டு வந்த சொந்தமா நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பெத்த அப்பனையே எதிர்த்து பேசுற தைரியம் வந்திருச்சா அவனுக்கு...? இல்ல அவன் என்ன சொன்னாலும் கேட்டுட்டு அதுபடியே நடக்குறதுக்கு இந்த வெங்கடேச முதலியார் நெத்தியில இளிச்சவாயன்னு என்று எழுதிவைத்து இருக்கா...?" கணவன் ஆற்றாமையுடன் கத்திக் கொண்டிருக்க அதை ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி தில்லை நாயகி.ஆனால் அவரது உன் மனமோ "என்னவோ நான்தான் அவனை காலேஜுக்கு போயி படிச்சா மட்டும் பத்தாது.... காதலிச்சுட்டு வாடா னு சொல்லி அனுப்பி வச்ச மாதிரி என்கிட்ட கத்திட்டே இருக்கிறார்.மொத்தத்தில் இந்த வீட்டில் நான்தான் இளிச்சவாய்..!" என்று கணவனை அர்ச்சித்துக்கொண்டே இருந்தது.


"நான் ஒன்னும்....மத்த அப்பனுங்க மாதிரி முரடன் கிடையாது காதலுக்கு எதிரி கிடையாது நான் என்ன காதலிக்க வேண்டாமென்றா சொல்றேன்...?" வெங்கடேசனின் இந்த வார்த்தையில் பிள்ளையை நாயகியின் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்தது. "நம்ம ஜாதி இல்ல நம்ம சொந்தகார பொண்ணுங்கள யாரையாச்சும் காதலிச்சுட்டு அப்பா நான் இவள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா நானே ஜாம்.. ஜாம்னு... நடத்தி வைத்திருக்க மாட்டேனா...?" "ஓ. .. அப்படி சொல்றீங்களா....?சரிதான்...சரிதான் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் தில்லைநாயகி. அத விட்டுட்டு வேற ஜாதி பொண்ணப் போய் காதலி்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு.... பினாத்திட்டு இருக்கான். நம்மளோட குலம் என்ன....? கோத்திரம் என்ன...? நாம கால்வைக்க தகுமா டீ அந்த அந்த இடம்.அதவிடு அந்த சாதியில பொண்ணெடுத்திருக்கோம்னு தெரிஞ்சா நம்ம சொந்தக்காரன் யாராச்சும் மதிப்பானா...? அதான் ங்க நீங்க சொல்றது எல்லாமே சரிதான். ஆனா என்கிட்ட சொல்ற மாதிரியே நீங்களே இதை அவன்கிட்ட தன்மையா எடுத்துச் சொல்லி பார்க்கலாமே? தில்லைநாயகி பிரச்சனையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் பார்த்தார்.மகனது கோபம் அந்த மாதிரி.ஆனால் விடுவாரா வெங்கடேஷ முதலியார். "எத்தனை முறை.... எத்தனை முறை டீ... கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி படிச்சு படிச்சு சொல்றேன். கேட்க மாட்டேங்கிறானே. அவன் கிட்ட பேசி பேசி என் பிபீ ஏறுனது தான் மிச்சம்." என்றவர் அவருக்கு அருகில் இருந்த மேசை மீது வைக்கப் பட்டிருந்த தண்ணீர் சொம்பினை எடுத்து வாயில் சரித்துக் கொண்டார். "தில்லை....கடைசியா சொல்றேன் கேட்டுக்கோ... உன் பையனை நான் பாக்குற பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லு. இல்ல அந்த வீட்டில் கல்யாணம் நடக்காது கருமாதி தான் நடக்கும்."


பதறிப் போனார் தில்லைநாயகி."என்னங்க.. என்ன பேச்சு பேசுறீங்க...? என்ன இருந்தாலும் அங்க நம்ம பெத்த பையன்ங்க நமக்கு கொல்லி போட இருக்கற ஒரே ஆண் வாரிசு என சொல்லிக் கொண்டே போக , "அடிச்சி நிறுத்துடி....நான் காரியம் பண்ண சொன்னது எனக்கு. இப்படி பெத்தவங்க மானத்த வாங்குற ஒரு பையனப் பெற்றதற்காக தூக்கில் தொங்க போறேன்னு சொன்னேன்"


ஓஹோ அடுத்ததா எமோஷனல் பிளாக்மெயில் இறங்கியாச்சா.....? என்று சோம்பல் முறித்தபடியே தனது அறையிலிருந்து வெளிவந்தான் சிவா தாயையும் தந்தையையும் ஒரு வெற்றுப் பார்வையுடன் கடந்தவன் நேரே சமையலறைக்குச் சென்று "டார்லிங்... காபி" என்றான். அவனது இந்த செயலால் ஆத்திரத்தின் உச்ச நிலைக்குச் சென்ற வெங்கடேசன் குரலில் டெசிபல் அதிகரித்தது. இங்க ஒருத்தன் காட்டுக் கத்தலா கத்திட்டு இருக்கன். இவன் எதுவுமே நடக்காத மாதிரி போறான். இது சரிப்படாது இவன் திருந்த மாட்டான் திருந்தவே மாட்டான். "ஆஹா.... காலையிலே ஆரம்பிச்சிட்டாரு போல.... எத்தனை மணி நேரமா ஓடிட்டு இருக்கு சிரித்தபடியே கேட்டான். எதிர்தரப்பில் பதிலில்லை டார்லிங் உன்னத்தான் கேட்கிறேன் பதில் சொல்லு என அவன் கைகளில் காபி திணிக்கப்பட்டது. பேசமாட்டியா நீயும்...? உன் தம்பி கூட சேர்ந்துக்கிட்டு இதுதான் அவருடைய அடுத்த பிளானா...? முதல்ல அம்மா,தங்கச்சி, கடைசில உன்னையும் என் கூட பேச விடாமல் பண்ணிட்டாரா..? அதற்கும் அகிலாவிடம் இருந்து ஒரு முறைப்பே பதிலாக வந்தது. ஐயோ... செம்ம என்று நெட்டி முறித்தவன் ம்ம்ம்.. இப்படி சிரி... இப்ப எவ்வளவு அழகா இருக்க பாரு என்று சீண்டி அகிலாவின் கன்னம் கிள்ளி கொஞ்சிவிட்டு சென்றான்.


இறுதியில் தனக்குமா.. அவன் கட்டுபடவில்லை என்று நினைத்துக் கொண்ட அகிலாவின் மனம் குமைந்தது . மனத்திரையில் நிகழ்வுகள் நிழலாடியது.அகிலா சிவாவின் அத்தை.வெங்கடேஷ முதலியாரின் அக்கா.திருமணம் செய்து இரண்டே வருடத்தில் கணவனை இழந்து பின் அண்ணன் வீட்டுடனே தங்கிவிட்டார். கணவனை இழந்த பெண்டிரின் வாழ்வின் அடுத்த பிடிமானம் அவரது குழந்தைகள் தானே. அகிலாவுக்கு ஏனோ அந்த பாக்கியமும் கிட்டவில்லை.பற்றற்று இருந்த வாழ்வில் மீண்டும் உயிர்ப்பு வந்தது தன் மருமகனது பிறப்புக்கு பின் தான். குழந்தை பிறந்த பின் தாயிற்கு பிறகு அவனது எல்லா தேவைகளும் கவனித்து கொண்டாள் என்றால் சிவாவின் இரண்டு வயதில் அவனது தங்கை பிறந்தவுடன் இரண்டு குழந்தைகளை ஒருசேர பார்த்துக்கொள்ள தில்லைநாயகி சிரமப்பட அன்றிலிருந்து சிவாவிற்கு அத்தனையுமாகிப் போனாள் அவனது அத்தை.சிவா உருவத்தில் தனது தாத்தாவினை கொண்டிருந்ததால் அகிலாவுக்கு அவன் உயிர் என்றே சொல்லலாம்.படிப்பு விளையாட்டு எல்லாவற்றிலும் முதன்மைதான்.படிப்பு ஆம் அங்குதான் தொடங்கியது சிவாவுக்கும் அவனது அப்பாவுக்குமான சிறு விரிசல்.சிவா பெரியாரின் கொள்கைகளை கரைத்து குடித்தவன்.கடவுள் மறுப்பு கொள்கையாளன். வெங்கடேஷ முதலியார் சிவ பக்தர்.நீல வானின் கீழிருக்கும் அனைத்து மனிதர்களும் சமம் என்பான் அவன்.தனது குலபெருமை பேசி காலர் தூக்குபவர் அவனது அப்பா.இது போன்ற முரண்களால் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடலில் அவ்வப்போது உரசல் நேர்ந்தாலும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை வெங்கடேஷன்.உன் வழியில் நீ போ... என்வழியில் நான் போகிறேன். மாறாக உனது வழியை பின்பற்ற சொல்லி என்னை வற்புறுத்தக்கூடாது.இப்படியான சமரசம் வெங்கடேஷனுக்கு.எதுவரை என்றால் மகன் தன்னிடம் தனது காதலை சொல்லும் வரைக்கும்.


கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று தானாகவே ஒரு தனக்கான பணியை தேடிக்கொண்டு தனது குடும்பத்தாரிடம் தனது காதலை சொன்னான். கொதித்தெழுந்துவிட்டார் வெங்கடேஷன்.காரணம் அவன் காதல் கிடையாது காதலித்த பெண் மாற்றுசாதி.அன்றிலிருந்து வீடு கலவர பூமியானது. மகனை அழைத்து கொஞ்சி பார்த்தார் மன்றாடி பார்த்தார் மிரட்டியும் பார்த்தார் அவன் எதற்கும் பின்வாங்குவதாய் தெரியவில்லை. இருந்தும் அவரும் அவனது விருப்பத்திற்கேற்ப அவனை விடுவதாய் இல்லை அவனது அப்பா. அவ்வளவு பெரிய மனுசன் ஆகிட்டானா ? எல்லாரையும் தூக்கிப்போட்டு ஒரு பொண்ணு பின்னாடி போற அளவுக்கு என்ன குறை வச்சேனாம் அவனுக்கு ...? என்றும் தந்தையும் எனக்கான இணையை நான் தேர்ந்தெடுகக கூடாதா? ஏன் அந்த உரிமை எனக்கில்லையா..? உங்களுக்கு பிடிக்கிற பெண்தான் எனக்கும் பிடிக்கனும் என்று சட்டம் இருக்கிறதா ...? வாழப்போவது நானா ? நீங்களா ?எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள் விருப்பு வெறுப்புகள் எதுவும் இருக்க கூடாதா ? என்று மகனும் எதிரெதிர் துருவமாய் பிடிவாதத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்க எல்லாவற்றையும் நினைத்து எங்க போய் முடியப் போகுதோ இந்த குழப்பம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார் அகிலா.


அகிலாவுக்கும் சிவாவின் விருப்பம் தான் முதன்மை இதுவரையில்.ஆனால் இந்த விஷயம் அவ்வளவு எளிதானது இல்லையே.அவனது வாழ்வு சம்மந்தப்பட்டது.இதுவரை அவனது விருப்பத்திற்கு யாரும் மறுப்பு சொன்னதே கிடையாது. திருமணம் மட்டும் பெற்றோர் சொல்படி கேட்டு நடந்துகொள்ளக் கூடாதா..? அப்படி என்ன அவன் விரும்பும் பெண் நம் குலத்து பெண்களை விட உயர்ந்துவிட்டாள்.முகமே அறியாத பெண்ணின் மீது ஏனோ வெறுப்பு தோன்றிற்று. டார்லிங்.... ஆபிஸ்க்கு டைம் ஆச்சு. பசிக்குது சீக்கிரம் வா...என சிவா கூச்சல் போட எல்லாவற்றையும் புறந்தள்ளி வைத்தவிட்டு உணவு எடுத்துக் கொண்டு சென்றாள்.


அதே நேரம் வெங்கசேஷ முதலியார் தனது நண்பன் கணபதி ஐய்யர் வீட்டு திண்ணையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.அவர் முகம் அத்தனை ஆயாசமாக இருந்தது.அத்தனை துயரையும் நண்பனிடம் இறக்கிவிடும் பொருட்டு நடந்த எல்லாவற்றையும் கூறியவர் என் சம்மதம் இல்லைனாலும் இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்றான். இதுக்கு என்ன அர்த்தம்.இது கேட்கும்போது ஒரு அப்பனா எனக்கு எப்படி இருக்கும்.இந்த தலைமுறை பசங்க பெத்தவங்கள புரிஞ்சிக்கிறதே இல்லை.அவர்களோட கௌவரத்தை பற்றி லட்சியம் செய்றதே இல்லை.கஷ்டமா இருக்குய்யா..என சொல்லி கண்கலங்க


கணபதி ஐய்யரோ "என்னவோய்... இதுக்கு போய் சின்னப்புள்ள மாதிரி கண்கலங்கிட்டு


முதல்ல காபிய குடி நீ என்று உபசரித்தார்.


பரிமளா இந்த தம்ளரை எடுத்திட்டு போம்மா என்று சொல்லிவிட்டு "எனக்கென்னவோ நீ உன் பையன் சொல்றத கேட்குறது தான் சரினு தோணுது".


என்னய்யா சொல்லுற....அந்த இடத்துல சம்பந்தம் பண்ண முடியுமா..?


பொறு...பொறு...இந்த காலத்து பசங்ககிட்ட இதையெல்லாம் பேச முடியாதுடா வெங்கி...


அவனுங்ககிட்ட இதை செய்யாதனு சொன்னா செஞ்சி பாத்தா என்னனு தான் தோணும் என்ன நான் சொல்றது.


ஆமென தலையசைத்தார் வெங்கடேஷன்.


அதனாலதான் சொல்றேன்.உனக்கு இருக்கிறதோ அவன் ஒரு பையன்.அவன் மேல உன் குடும்பமே உசுர வச்சிருக்கு.அவன் கல்யாணம் பண்ணி பிரிஞ்சி போய்ட்டான்னா அதை தாங்கிக்கிற அளவு சக்தி இருக்கா.. உனக்கு..?


அதுக்குனு என் சொந்தக்காரன்லாம் கேவலமா பாப்பானேய்யா..? வெங்கடேஷ முதலியார்னாலே அப்படி ஒரு மரியாதை.இந்த கல்யாணம் நடந்தா எவன் என்ன மதிப்பான்..?


என்னவோய் பெரிய சொந்தக்காரனுங்க.ஒருவேளை உன் பிள்ளை உன்ன எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டான்னு வையி உன் சொந்தக்காரன் நாலு பேரு உன்கிட்ட வந்து சொல்வான் இப்ப இருக்க பையனுங்க அப்படித்தான்னு துக்கம் விசாரிப்பான்.அடுத்த நாலுபேர் உன் பிள்ளைகிட்ட போய் இப்ப எல்லாம் யாரு சாதி பாக்குறாங்க ன்னு சொல்லி விருந்து சாப்பிட்டு போவான். அவ்ளோதான்.


வெங்கடேஷனின் மனம் மேலும் குழம்பியது.


இன்னும் என்னவோய்...மனுதர்மம் படி பொண்ணுக்கு சாதியே இல்லை தெரியுமோ..?நல்லா யோசி அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கொண்டுவந்து வாழவைக்கணுமா..? இல்ல நம்ம பிள்ளைய அங்க தாரை வார்த்து கொடுக்கணுமா? நீ மறுத்தா அங்கதானப் போகணும்.


கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப வெங்கடேஷனின் கல் மனமும் கரைந்தது.அன்று முழுவதும் நன்கு யோசித்தவர் அடுத்தநாள் திருமணத்திற்கு சரியென்று சம்மதித்தார்.ஒரு நல்லநாளில்


குடும்பத்தோடு அவன் விரும்பும் பெண் வீ்ட்டிற்கு முறைப்படி பெண் பார்க்க சென்றனர். சிவாவினது தங்கை புகுந்தவீட்டில் இருப்பதால் குடும்பத்தோடு கணபதி ஐய்யரை மட்டும் கூட்டிச் சென்றனர். சென்ற இடத்தில் தன் வீட்டுடன் அந்த வீட்டை ஒப்பீடு செய்து பார்க்க அப்படி ஒன்றும் மோசமில்லை.சிறிய அளவில் இருந்தாலும் அழகாக திட்டமிடப்பட்டு கட்டியிருக்கிறார்கள்.சுத்தம் வரவேற்பு உபசரிப்பு என்று எல்லாமே பிரமாதம். பெண்ணின் தந்தையும் தாயும் மற்றும் தாய்மாமன் அத்தை மட்டுமே அங்கு கூடியிருக்க வெங்கடேஷனின் மனம் பதைபதைத்தது ஒரு குறையாவது கண்ணில் பட்டுவிட வேண்டுமே என்று.தந்தையின் முகம் வழியே அவரின் அக எண்ணத்தை அறிந்து கொண்ட புதல்வன் தந்தையை முறைக்க குறைகாணும் எண்ணத்தை தனக்குள்ளே போட்டு புதைத்து கொண்டார். தில்லைநாயகிஅதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவன் அப்படியென்ன ஊரில் இல்லாத அழகியை பிடித்துவிட்டான் என்ற எண்ணம்தான் அவருக்கு.பெண்ணை எப்போது வரசொல்வார்கள் என்று சிவாவை விட அதிகமாக காத்திருந்தார் அவர்.


கவிதா வை கூட்டிட்டு வாங்கம்மா....என்றவுடன் எளிமையானஅலங்காரங்களுடன் ஒரு பெண் வந்து நின்றாள்.நல்லவேளை வெங்கடேஷனை ஏமாற்றம் அடையவில்லை.பெண் கொஞ்சம் நிறம் மட்டு. ஒரு குறையை கண்டுபிடித்தாயிற்று.


நாயகிக்கு பலத்த ஏமாற்றம். தன் அண்ணன் பெண்ணின் அழகோடு கவிதா உருவை ஒப்பீடு செய்து பார்த்தார்.பால் சந்தனம் கலந்த நிறத்தழகியோடு ஒப்பீடு செய்யும் போது கவிதா பல படிகள் கீழே நிற்பது போல் தோன்றியது. இவளுக்காக இத்தனை போராட்டம் ? ஆனால் இவர்கள் இருவருக்கும் புரியாத ஒன்று அகிலாவிற்கு புரிந்தது. பெண் மாநிறம் தான் என்றாலும் அழகான முகவெட்டு. ஒல்லியும் அல்லாது பருமனுமல்லாத உடல்வாகு. இதற்கு மேலும் ஒன்று.அதுதான் சிவாவை ஈர்க்க பெரிய காரணம். நேர் கொண்ட தீர்ககமான பார்வை. பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் முகத்தில் பதட்டமோ பயமோ சிறிதும் இல்லை. லேசான புன்னகையை இதழ்களில் தவழ விட்டிருந்தாள்.இவளோடு ஒப்பிடும்போது நம் குடும்ப பெண்கள் அதிக அசடு வழிபவர்களாக தான் தெரிவார்கள். அப்படித்தான் தெரிந்திருக்கும் சிவாவுக்கும் என்பதில் அகிலாவுக்கு ஐயமில்லை.


பெண் பார்க்கும் படலம் முடிந்து வரதட்சணை பற்றிய பேச்சினை கணபதி ஐய்யர் ஆரம்பிக்க சிவாவின் கோபம் கிளர்ந்தெழுந்தது. வரதட்சணை வாங்குவது எனது தன்மானத்திற்கு கேடு என்று நிச்சயமாக மறுத்தான்.வேறுவழியின்றி உடன்பட்டுதான் போயினர் எல்லாரும். வெங்கடேஷ முதலியார் மாற்று சாதி பெண்ணை மருமகளாக்க முடிவு செய்தது ஊரெங்கும் பரவியது.


புகுந்த வீட்டிலிருந்த மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர அதனை ஏற்று அன்போடு எப்படிம்மா இருக்க...? அவ்வளவு சுபா பொரிந்து தள்ளிவிட்டாள்.தந்தை எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளலாம் என்றும் தன் மாமியாரிடத்தில் தனது மரியாதை பரிபோய்விடும் என்றும் பிறந்த வீட்டின் கௌரவம் மிகவும் தாழ்ந்ததாக சித்தரிக்கப்படும் என்றும் தனது ஆதங்கத்தையும் பயத்தையும் கொட்டினாள்.அவளை சமாளித்து எப்படியோ சமாதானப்படுத்திய பின் உறவினர்கள் தொல்லை. மகள் சொன்ன வார்த்தைகளையே வேறு வேறு பரிமாணத்தில் கேட்கநொந்துதான் போனார் வெங்கடேச முதலியார்.சரி அவர்கள் தான் அப்படி மகன் அவன் பங்கிற்கு அவனது சித்திரவதைகள். வரதட்சணை வாங்க வேண்டாம் என்பது கூட பரவாயில்லை.சீர்திருத்த திருமணமாக எளிய முறையில் நடத்த வேண்டுமாம்.ஒரே மகன் திருமணத்திற்கு என்னென்ன கனவுகள் கண்டிருப்பார். அத்தனையும் நொறுக்கிவிட்டான்.சரி அதுவும் தேவலாம் என்றால் அடுத்து அடிமடியிலே கை வைப்பது போல ஒன்று செய்தான்.திருமண அழைப்பிதழில் சாதிப்பெயரை இணைக்க கூடாது.இது அவருக்கு எத்தனை பெரிய இடி.ஆற்றில் மூழ்கிய பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன நிலைதான் அவருக்கு.


மகனின் விருப்பப்படி எல்லாம் ஏற்பாடு செய்து மணநாளும் வந்துவிட்டது.கூட்டதோடு ஒருவராக அமர்ந்திருந்த கணபதி ஐய்யரை பார்க்க பாவமாக இருந்தது.அவர் மந்திரம் சொல்லாமல் வெங்கடேஷன் வீட்டில் எந்த சுபகாரியமும் நடந்ததில்லை.என்ன செய்வது காலத்தின் கோலம்


பெரிதாக சடங்குகள் எதுவும் செய்யவில்லை.அவனைப்போல சமூக சீர்திருத்தவாதிகள் சிலர் தம்பதிகளை பற்றி பேசவிட்டு உரையை முடித்து கொள்ள இறுதியில் தாலி எடுத்து கொடுக்க உங்கள் வீட்டு பெரியமனிதர் யாரையாவது அழையுங்கள் என்றான்.சிவாவுக்கு தெரியும் உறவினர் யாரும் இதை செய்ய மாட்டார்கள் என. மேடையிலிருந்து எ௧ழுந்து சென்றவன் அங்கு ஓரமாய் நின்றிருந்த அத்தையை இழுத்து வந்தான். அவன் செய்யப் போகும் காரியம் அறிந்து அகிலா பதறி விலகினார்.நான் இதையெல்லாம் செய்யக்கூடாதுடா என அழ மட்டுமே முடிந்தது அவரால்.இருந்தும் அவன் விடுவதாய் இல்லை. நல்ல மனசு மட்டும் இருந்தாப் போதும் அத்தை.அந்த மனசு இங்க உன்கிட்ட தான் இருக்குனு நான் நினைக்கிறேன். எனக்காக இதை செய்ய மாட்டியா என குரல் கம்ம கேட்க உருகித்தான் போனார் அகிலா. தம்பியின் சம்மதம் வேண்டி வெங்கடேசனை பார்க்க அவரோ கலங்கிய கண்களுடன் அனுமதித்தார். தாலி கட்டியவுடன் அகிலாவின் காலில் விழுந்து வணங்கினர் மணமக்கள்.​
 

New Threads

Top Bottom