Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பெண்கள் டாட் காம்

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 7



மகளிர் டாட் காம்மை விட்டு வந்து இன்றோடு இரண்டு மாதங்களாகிறது. எதிர்பார்த்தது போலவே லைக்ஸ் எண்ணிக்கையும் முப்பதை தாண்டுவதில்லை. இருந்துவிட்டுப் போகிறது. எனக்கு பிரச்சனையாக இருப்பதெல்லாம் வாசகர்கள் கூறும் புகார்கள் தான். அடிக்கடி, எங்களால் இந்த அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை; அந்த அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை என்றே என் பொறுமையை சோதிக்கிறார்கள்.


அவை வெற்றுப்புகார்கள் என்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடலாம். ஆனால், ஃபேஸ்புக்கில் முதல் நாள் இருக்கும் பதிவு, இரண்டாம் நாள் என் அனுமதியின்றியே காணாமல் போவது ஒன்றும் சாதாரண விஷயமல்லவே.


மீண்டும் அந்த பிளாக் லிங்கை பகிர்ந்தாலும், "இது எங்கள் ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானது" என்றே வருகிறது.


'அடப்பாவிகளா! வரைமுறை மீறிய மோசமான பதிவுகளை எல்லாம் வைரல் ஆனப்பின்னே தூக்குங்கள். ஒன்றுமில்லாத என் பதிவிற்கு மட்டும் இப்படி முட்டுக்கட்டை இடுங்கள்' என்று சலிப்பாக இருந்தது எனக்கு.


மேலும், நான்கு அத்தியாயங்களுக்கு இந்தப்புகார் தொடர்ந்துக்கொண்டே இருந்ததால் யாரோ என் பதிவை ரிப்போர்ட் அடிக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது எனக்கு.


கோபத்தில் ஒரு பதிலடிப் பதிவுப்போட்டேன். "என் நாவலை வாசியுங்கள்; விமர்சியுங்கள்; அதென்ன கோழைத்தனமாக ரிப்போர்ட் அடிப்பது? ஒருவேளை சீப்பைத் திருடி நீங்கள் கல்யாணத்தை நிறுத்த நினைத்தால் திரும்ப திரும்ப புது சீப்பு உருவாக்கும் திறன் எனக்குள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்!" என்றேன்.


ஒரு பிளாக் லிங்கை பகிர முடியவில்லையானால் ஐந்து நிமிடத்தில் இன்னொரு பிளாக் லிங்க் உருவாக்கிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு புது பிளாக் லிங்க் உருவாக்குவதொன்றும் சிரமமில்லை.


ஆனால், இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், ஒரே பிளாக்கை தொடர்ந்து உபயோகிக்கும் போது மட்டுமே நாம் கூகுளில் ஆட்சென்ஸ் அப்ரூவல் பெற முடியும். அதுவும் சிறுகச்சிறுக நூறு டாலர் சேர்த்த பின்பே காசைக் கண்ணில் காட்டுவான் அவன்.


விளம்பரத்திற்கான தகுதி பெற ஒரு பிளாக் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறான் அவன். நான் எனது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் பிளாக்கிற்காகவே செலவிட்டேன். ஆனால், அடுத்த ஞாயிறு எனது பிளாக் வேறொரு டாட் காம்மாக மாற வேண்டியிருந்தது. எல்லாம் எழவெடுத்த இந்த ரிப்போர்ட் பிரச்சனையால். சிலர், 'அதிக குழுக்களுக்கு பகிர்ந்தால் இப்படி நடக்க வாய்ப்புண்டு. ஆகையால், உங்கள் கதை லிங்கை நேரே பதிவில் போடாமல் உரையாடல் பெட்டியில் போடுங்கள்' என்றார்கள். அது கொஞ்சம் வேலை செய்தது.


பிளாக்கை வடிவமைப்பதற்காக நான் பார்த்த ஒவ்வொரு யூடியூப் காணொளியும், "வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி? தமிழ் தெரிந்தால் போதும்! மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம்" என்றே என்னை ஆசைக்காட்டின. ஆனால், பின்பு தான் எனக்குப் புரிந்தது, என் ஆசையை வைத்து அவர்கள் தான் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று.


எல்லா கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் இருப்பதுபோலவே நான் பார்த்த, 'பணம் சம்பாதிப்பது எப்படி?' யூடியூப் காணொளிகளிலும் உருப்படியானது அமேசான் கிண்டில் பற்றியது. நான் மகளிர் டாட் காமில் இருந்திருந்தால் மாதாஜியே எனக்கு இதில் உதவி செய்திருப்பார். ஒரு கட்டத்தில் 'செய்தேன்' என்றும் சொல்லிக்காட்டியிருப்பார். ஏதோ அமேசான் கிண்டிலை அவரே கண்டுபிடித்து நடத்துவது போல் தோரணை இருக்கும்.


அமேசான் கிண்டிலை பொறுத்தவரை நம் கதை ஓடுவதும், ஓரத்தில் கிடப்பதும் வாசகரின் ரசனை சார்ந்தது. காமக்கதைகளோ, ஆன்டிஹீரோக்கதைகளோ பதிவேற்றிய மறுநாளே 'பெஸ்ட் செல்லர்' வரிசையில் வந்துவிடும். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் இதே நிலை தான்.


இதனால், நான் காமக்கதைகளையோ; இல்லை, ஆன்டிஹீரோக்கதைகளையோ வெறுக்கிறேன் என்றெல்லாம் இல்லை. பிழைக்கத்தெரியாத எழுத்தாளர் தான் இவைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டிருப்பார்.


எனது 'சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா' நாவலை அமேசான் கிண்டிலில் பதிவிட்ட போது இரண்டே நாட்களிலே அது 'பெஸ்ட் செல்லர்' வரிசையில் வந்தது. நான் குழம்பிக்கொண்டே இருந்தேன், என் கதை காமக்கதையா? இல்லை, ஆன்டிஹீரோக்கதையா? என்று.


*************


மகளிர் டாட் காம்மை விட்டு வெளியேறி இன்றோடு நான்கு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. என்ன புதிதாக மகளிர் டாட் காம் ஞாபகமென்றால், ஒன்றுமில்லை, திடீரென ஃபேஸ்புக்கில் நான்கு நட்பழைப்புகள். ப்ரொஃபைல் படத்தை வைத்து உள் நுழைந்து பார்த்தபோது, மகளிர் டாம் காமுக்குள் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களைப் பற்றி தெரிய வந்தது. இப்போதெல்லாம் அப்படித்தான். 'People You May Know' சென்றாலே போதும். ப்ரொஃபைல் படத்தை வைத்தே மாதத்திற்கு எத்தனை குடும்ப நாவல் எழுத்தாளர்கள் உருவாகிறார்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.


ஆனால், அவர்களிடம் சென்று மகளிர் டாட் காம் பற்றி சொல்ல எனக்கு ஆர்வமில்லை. கேள்விப்பாடத்தை விட அனுபவப்பாடம் சிறந்ததில்லையா? எப்படியும் இந்நேரம் என்னையொரு துரோகி என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருப்பார் மாதாஜி. நான் எதற்கு வீணாக அவர்களிடம் பேசி என் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்?


ஆனால், அவர்கள் மகளிர் டாட் காம் லிங்கை பகிர்வதைப் பார்க்கும்போது பழையவை எல்லாம் ஞாபகம் வரும். அதுவும் மாதாஜி எனக்கு தெய்வம், அப்படி இப்படியென்றால் கண்கள் சிவந்து, கை நரம்புகள் எல்லாம் புடைக்கும் வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தேவையா இவையெல்லாம்? ஆகவே, ரிக்குவஸ்ட் ரிஜக்டட். ஆனால், அதில் ஒருவர் என் தீவிர வாசகியாகிற்றே? எதற்கு வம்பென்று அக்ஸப்ட் செய்து அன்ஃபாலோவில் போட்டுவிட்டேன்.


*****************


அமேசான் கிண்டிலில் புத்தகம் பதிவிட்டு இரண்டரை மாதங்கள் ஓடியும், அதற்கான பணம் மட்டும் இன்னும் வரவில்லை. எனது தன்மான உணர்வினால் யாரிடம் சென்றும் கேட்கக்கூடாதென்று, புத்தகம் பதிப்பிப்பது தொடங்கி வங்கிக்கணக்கு இணைப்பது, கிண்டில் எழுத்தாளர் கணக்கு துவங்குவது என்று எல்லாம் நானே யூடியூப் காணொளிப் பார்த்து தான் செய்தேன். ஒன்றையும் தவறவிடவில்லை. புத்தகமும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பதிவிட்ட ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.


கிண்டிலில் எந்தக் கணக்கில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகை வழங்குகிறார்கள்? ஒவ்வொரு மாதத்திற்கும் சரியாக ராயல்டி தொகை வந்துவிடும் என்றால் எனக்கு மட்டும் ஏன் இன்னும் வரவில்லை? என்று முடியைப் போட்டு பிய்த்துக்கொண்டிருந்தேன்.


'முடி.. முடி.. முடியாதே நம் காதல் நேசம்.. ஹேஹே பேசாமல் அந்த ஸ்த்ரீ டாட் காம் எழுத்தாளரை அணுகினால் என்ன?' யோசனை தோன்றியதும் நேரே அவரிடம் சென்றேன்.


எனது *** வாசகர் ஐடியில் அவர் கொஞ்சம் நெருக்கம் என்பதால் அந்த ஐடியிலேயே சென்று, தற்போது ஷிவானி எனும் பெயரில் இருக்கும் எழுத்தாளர் நான் தான் என்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேன்.


அறிந்ததும், "அப்படியா?" என்றார் அவர். அது வியப்பான அப்படியாவா? இல்லை, சாதாரணமான அப்படியாவா? என்று எதுவும் யூகிக்க முடியவில்லை என்னால்.


'இப்போது எனது பிரச்சினை அதுவா?'


"இல்ல மேம், நான் அமேசான் கிண்டில்ல.." என்று ஆரம்பித்து எனது பிரச்சனை முழுவதையும் முடிந்தளவு சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துச்சொல்ல முயன்றேன்.


அவர் எந்த பிகுவும் செய்யாமல், "அமேசான் கிண்டில்ல கதை போட்ட மூணு மாசத்துக்கப்பறம் தான் ராயல்டி தொகை வர ஆரம்பிக்கும். அதாவது உங்களோட ஜனவரி மாசத்து ராயல்டி தொகை மார்ச்ல தான் கிடைக்கும். பிப்ரவரி மாசத்துது ஏப்ரல்ல கிடைக்கும்" என்றார்.


நான் திருப்தியோடு வேறொரு சந்தேகத்தை கேட்டேன்.


சில நாட்களுக்கு முன்பாக யூடியூப்காரன் சொன்னான் என்பதற்காக அமேசான் கிண்டிலில் இணைத்த அதே வங்கிக்கணக்கை வைத்தே ஆன்லைனில் 'payoneer' நிறுவனத்திலும் ஒரு வங்கிக்கணக்கு துவங்கி, அமேசான் கிண்டிலுடன் இணைத்திருந்தேன்.


நம் நாட்டில் வாசிப்பவர்களால் கிடைக்கும் பணம் பத்துரூபாய் என்றாலும் நேரடியாக நமது வங்கிக்கணக்கில் ஏறிவிடுமாம். ஆனால், வெளிநாட்டில் வாசிப்போரால் வரும் பணம், நூறு டாலர் அளவில் சேர்ந்த பின் தான் கிடைக்குமாம். அதுவும் காசோலையாகத் தான் வருமாம். அதை மாற்ற வைக்க ரொம்ப கடினமென்பதால் 'payoneer' வங்கிக்கணக்கு இடைத்தரகராக செயல்பட்டு, வெளிநாட்டில் வாசிப்போரால் வரும் பணம் பத்துரூபாய் என்றாலும் உடனே நமக்கு வங்கிக்கணக்கில் விழும்படி செய்கிறதாம். இவ்வாறு யூடியூப்காரன் சொன்னதை நம்பி இணைத்திருந்தேன். ஆனால், 'payoneer' நம்பிக்கையானது தானா? என்று சந்தேகம். ஆகையால், அது பற்றி கேட்டேன். அவர் என் மூச்சு சீராகும் விதமாக 'நம்பிக்கையானது தான்' என்றார்.


நான் அவரின் இளகிய தன்மையை பயன்படுத்தும் விதமாக, "நான் என் நாவலை புத்தகம் போட விரும்புறேன். உங்களுக்கு தெரிஞ்ச பதிப்பகம் எதுவும் இருந்தா கொஞ்சம் சொல்றீங்களா மேம்?" என்றேன்.


அவர் என்னிடமிருந்து நழுவும் விதமாக பதிலளித்தார். இல்லை, எனக்கு அப்படி தோன்றியது.


"நான் மரியா பதிப்பகத்துல தான் புத்தகம் போடுறேம்மா. ஸ்த்ரீ டாட் காம்ல ரெக்கமெண்ட் பண்ணினதால தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது. நீங்க வெளியில ட்ரை பண்றதைவிட, நீங்க எந்த வெப்சைட்ல எழுதுறீங்களோ அங்க புக் போட கேட்கிறது பெட்டர். ஏன்னா தெரியாத இடத்துல ஸ்டோரி அனுப்பும்போது அவங்க உங்கக் கதையை மிஸ்யூஸ் பண்ண வாய்ப்பிருக்கு. உங்கக்கிட்ட சொல்லாமலே புத்தகம் போடலாம். ஸோ, நீங்க எப்ப யாருக்கு உங்கக்கதையை அனுப்பினாலும் ஈமெயில் வழியாவே அனுப்புங்க" என்றார்.


இத்தனை நாட்களில் இல்லாத சந்தேகம் இப்போது வந்தது. தளத்திற்காக பதிப்பகமா? இல்லை, பதிப்பகத்திற்காக தளமா?


****************


எதை நாம் மறக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ அது தான் திரும்ப திரும்ப ஞாபகத்திற்கு வரும். இதைச் சொல்லியது யார் என்று தெரியவில்லை. ஆனால், மாதாஜி விஷயத்தில் எனக்கு அப்படித்தான் நடந்துக்கொண்டிருந்தது. எப்படியாவது ஏதாவது ஒரு விஷயம், அவர் சொல்லியவைகளை ஞாபகப்படுத்திவிடும். அப்படி இன்றும் ஒன்று ஞாபகம் வந்தது. அது அவர் 'தொடர்ந்து அத்தியாயம் போடவேண்டும்' என்றது. ஆம், 'குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கொருமுறையாவது அத்தியாயம் பதிவிடவேண்டும். இல்லையெனில் வாசகர்கள் நம்மை பின்தொடர மாட்டார்கள்' என்று பயம்காட்டியிருந்தார் அவர்.


அதை அவர் மகளிர் டாட் காமின் வளர்ச்சிக்காகவே சொல்லியிருந்தாலும் கொஞ்சம் உண்மையும் இருந்தது.


ஒரு கதை தர்க்கப்பிழையின்றி இருக்கிறதோ இல்லையோ; எழுத்தாளரின் எழுத்துநடையில், கதை சொல்லலில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ; புது சொற்பிரயோகங்கள், உவமைகள், உருவகங்கள் என கதை கவர்கிறதோ இல்லையோ; எங்களுக்குத்தேவை தினமொரு அத்தியாயம்! என்று பித்துப்பிடித்து சுற்றிக் கொண்டிருந்தது ஒரு வாசக கூட்டம்.


சிலநேரம் எனது அபாயகரமான மூளை இவ்வாறு சிந்திக்கும், 'எப்படி இப்படி சலிக்காமல் தினமொரு அத்தியாயம் எழுத முடிகிறது சிலரால்?' என்று. நமக்கு மட்டும் காலையில் எழுதியதை மதியம் பார்த்தால் இது இப்படி வரவேண்டுமென்று தோன்றுகிறது. மதியம் மாற்றியதை மாலையில் பார்த்தால், ச்சே! ச்சே! என்று மீண்டுமொருமுறை மாற்றத்தூண்டுகிறது. மறுநாள் காலையில் பார்த்தாலும் இதே தான். ஒரேமுறையில் பிழையின்றி எழுதுதல் என்பது வள்ளுவருக்கே வாய்க்காத ஒன்றாக இருந்திருக்கும்.


நான் நினைக்கிறேன், இந்த அதிவேக எழுத்தாளர்கள் எல்லாம் தாங்கள் எழுதியதை இருமுறையேனும் வாசிப்புக்கு உட்படுத்தாமல் யாரேனும் ஒரு அப்பாவி பிழைத்திருத்திக்கு அனுப்புவார்கள் என்று. இது எப்படியிருக்கும்? குயில் தன் முட்டையை விவரமாக காக்கா கூட்டில் கொண்டுபோய் போட்டதுபோல் இருக்கும்.


இதுக்கூட பரவாயில்லை. சிலநேரம் தனது சொந்த பந்தங்களை எழுத வைத்து, தான் எழுதியது போல் பதிவிடுகிறார்களோ? என்றெல்லாம் தோன்றும். ஆனால், அது தனது எழுத்துக்கு தானே செய்யும் துரோகம் என்பதால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.


இதில் இன்னொரு சம்பவம் ஒன்றும் இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. நான் 'சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா'வின் பதினைந்தாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தபோது எனது இரண்டாவது கதைக்கான கருவை மாதாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் தொலைநோக்கு பார்வையுடன் பேசிக் கொண்டிருந்தார்.


"ம்ம் சூப்பரா இருக்கு ஷிவானி. 'சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா' முடிச்ச மறுநாளே இதை ஸ்டார்ட் பண்ணிடலாம். தலைப்பு 'மமதையுடன் மன்மதன்' ம்ம்? வேணாம், 'என் கள்ளக்காமம் நீ' இல்ல, 'ஹையோ! பத்திக்கிச்சு' வச்சுக்கலாம்"


'ஷிவானி, இந்தமுறை தலைப்பு என்னோடதுன்னு சொல்லு' என்று எனக்குள் ஒரு குரல் அலறியது. ஆனால், என் கை வேறொன்றை தட்டச்சு செய்தது.


"மறுநாளேவா? எப்படி மேம்?"


"அதெல்லாம் முடியும் ஷிவானிம்மா, எழுதுங்க. நீங்களாவது பரவாயில்ல. ரெண்டாவது கதைக்கு ப்லாட் ரெடி பண்ணி வச்சிருக்கீங்க. ஆனா, ரைட்டர் லயாக்கு எல்லாம் நான் தான் எடுத்துக்குடுத்தேன். இடைவெளி விடாம எழுதுங்க. எல்லாத்தையும் நான் புக் போடுறேன்"


அப்போது, 'எழுதும் முன்னமே புத்தகம் போடுகிறேன் என்று எப்படி இவரால் வாக்களிக்க முடிகிறது? நான் எழுதுவது என்ன வாய்ப்பாட்டு புத்தகமா? யார் வேண்டுமானாலும் ப்ரூஃப் ரீடிங்கில் திருத்திக்கொள்ளலாம் என்பதற்கு? இல்லை, ஒரு வருட காலக்கெடுவுக்குள் நீ நூறு புத்தகம் பதிப்பிக்க வேண்டும்; அப்போது தான் எனது சொத்து முழுவதும் உன்னை வந்தடையும் என்று அவர் அப்பா யாராவது உயில் எழுதி வைத்திருக்கிறாரா?' என்று ஏகப்பட்ட சிந்தனை எனக்குள்.


ஆனால், இப்போது எனது இரண்டாவது நாவலை முடித்தவுடனே எங்கு புத்தகம் போடலாம் என்று சிந்திக்கிறேன்.


'புத்தகம்! புத்தகம்!' என்றே யோசித்தபோது தான் இன்னொரு நல்ல விஷயமும் நடந்தது.


அதை ஞானயோதயம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. வேண்டுமானால் கண்வலி உதயம் என்று சொல்லலாம். வெறும் பிடிஎஃப் வழியாக மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் எங்கள் கல்லூரியின் நூலகத்தையும் நாடுகிறேன். உள்ளே நுழைந்ததும் எனது துறையான இயற்பியலின் பக்கம் செல்லமாட்டேன். கண்மூடிக்கொண்டே நேரே தமிழ்த்துறை தான். எந்தப்பக்கம் குண்டு குண்டு வரலாற்று நாவல்கள் இருக்கும்? எந்தப்பக்கம் சுஜாதாவின் துப்பறிவாளர்கள் நின்றிருப்பார்கள்? எந்த வரிசை குடும்ப நாவல்களுக்குரியது? என்று அனைத்தும் அத்துப்படி எனக்கு.


ஒருமுறை சாண்டில்யனின் கடல்புறா நூலை எனது பைக்குள் பார்த்துவிட்டு தோழியொரு கதை சொன்னாள்.


"சாண்டில்யன் நாவலா? இவரோடது எல்லாம் செம ரொமான்டிக்கா இருக்கும். கேள்விப்பட்டது ஒன்னு சொல்றேன். ஒருமுறை சாண்டில்யனோட வாசகிகள் ரெண்டுபேர் அவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போனாங்களாம். ஆனா, அவரை நேர்ல பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்களாம்."


நான் ஆர்வம் தாங்காமல் "ஏன்?" என்றேன்.


"அவங்க ஒரு முப்பது வயசு வாலிபனைத் தேடிப் போயிருக்காங்க. அங்க இருந்ததோ எழுபது வயசு கிழவர். ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா" என்று குலுங்கிகுலுங்கி சிரித்தாள். நானும் கூட சேர்ந்து நகைத்தேன், வேறுவழியின்றி.


சாண்டில்யனின் நாவல்களில் எனக்கு பிடித்ததென்று இப்போதும் சொல்ல விரும்புவது 'ராஜமுத்திரை'. எழுத ஆரம்பித்த இந்த ஆறு மாதத்தில் பெண்கள் எழுதும் டாட் காம்களை கடந்து சுஜாதா, வைரமுத்து, பிகேபி, எண்டமூரி வீரேந்திரநாத், வாஸந்தி என்று பயணித்து வந்திருக்கும் நான் 'கடல்புறா'வுடன் ஒன்ற முடியாமல் தவிக்கிறேன்.


சாண்டியல்யன் ஒவ்வொரு வரலாற்று நாவல் எழுதுவதற்கு முன்பும், அதற்கு தொடர்புடைய - ஆதாரத்திற்காக - தான் வாசித்த புத்தகங்களின் பெயர்களை இரண்டு பக்கத்திற்கு பட்டியலிடுவார். அதைப் பார்க்கும் மனிதன் அசந்துவிடுவான். எதன்பொருட்டும் அவர் ஒரு பழுத்த வாசிப்பாளன் என்பதை மறுப்பதற்கில்லை.


ஆனால், கடல்புறாவை ஏதோ வாரப்பத்திரிகை ஒன்றிற்கு எழுதியிருப்பாரென்று நினைக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு முடிச்சுடன் முடிக்க வேண்டிய கட்டாயம் தெரிகிறது. மேலும், ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாயத்தின் முடிவை ஞாபகப்படுத்த வேண்டி இரண்டு பக்க விவரணைகளுடன் தொடங்குகின்றன. இது வாசகராக ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பையே தந்தன. ஞாபகமில்லை, சாண்டில்யனின் இதற்கு முன்பு நான் வாசித்த நாவல்களும் அப்படித்தானோயென்று.


இதை நான் பொதுவெளியில் பதிவாகப் போட்டால் சாண்டில்யனையே விமரிசிக்கும் அளவிற்கு நீ பெரிய ஆளா? என்பார்கள். நான் சொன்ன விஷயம் பேசுபொருளாகாது. சொன்ன நான் தான் பேசுபொருளாவேன். தேவையா? கம்மென்று இருந்துவிடுவோம்.


-----------------------

உங்களது விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

உங்கள் பெயரைச்சொல்லியும் ஒருப் பூ பூக்க வேண்டுமா? கீழே உள்ள நந்தவனத்திற்குள் செல்லவும்.

கருத்துத்திரி,
நந்தவனம்
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 8



மகளிர் டாட் காமில் கதை போடுவது மாதிரி எனக்கு கனவு வருவது கூட இனி அபூர்வம் என்பதால் வண்டியை ஸ்த்ரீ டாட் காம் பக்கம் திருப்பினேன். ஆனால், அனுபவப்பாடம் தளஉரிமையாளரை முதலில் பின்தொடரச் சொல்லியது.


ஃபேஸ்புக்கில் அவருக்கு நட்பழைப்பு விடுத்ததும் உடனடியாக ஏற்றுக்கொண்டார். எனக்கு அவரிடம் எந்த முகாந்திரமும் இல்லாமல் எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் காத்திருந்தேன். அவரே அதற்கு ஒரு வழியை உண்டாக்கினார். தனது நாற்பதாவது நாவலின் தலைப்பை அறிவித்தார்.


அந்த தலைப்பை எனக்கு வேறெங்கோ பார்த்த ஞாபகம். அது பாரதியாரின் கவிதை வரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதே தலைப்பை வேறொரு அட்டைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எதற்கு அந்த ஆயிரத்து இருநூறுகிராமை போட்டுக் குழப்பிக்கொண்டு என்று கூகுள் ஆண்டவனிடம் சென்றேன். அவன் வதவதவென்று அதே தலைப்புக்கொண்ட மூன்று அட்டைப்படங்களை காண்பித்தான்.


'சுத்தம்! ஒருமுறை நாவலின் தலைப்பை கூகுளில் போட்டு தேடிப்பார்க்க இவருக்கென்ன அப்படியொரு சோம்பேறித்தனம்?' என்று எகிறிய என் மனதின் குரலை பிரயத்தனப்பட்டு அடக்கிவிட்டு, உள்பெட்டி பக்கம் சென்றேன்.


திடீரென ஒரு இனம்புரியாத கலவரம் எனக்குள். இது நிச்சயம் அதிகப்பிரசங்கித்தனம் இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு, "வணக்கம் மேம், உங்க புதுத்தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு மேம். ஆனா, அந்தத் தலைப்புல ஏற்கனவே மூனு புக்ஸ் வந்திருக்கு மேம்" என்றேன். கூடவே ஆதாரத்திற்கு அந்த மூன்று புத்தகங்களின் அட்டைப்படங்களையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தேன்.


நான் காலையில் போட்ட மெசேஜிற்கு அவர் மாலையில் பதிலளித்திருந்தார். "ரொம்ப நன்றிமா. ஆமா, அது எனக்கேத் தெரியும். அவர்களில் நானும் நான்காவது ஆளாக இருந்துவிட்டுப் போகிறேனே" என்றார். இதில் என்ன பெருமை இருக்கிறதென்று எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.


முந்தைய நாள் தான் அதே ஸ்த்ரீ டாட் காம்மைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் மிக உக்கிரமாக ஒரு பதிவிட்டிருந்தார். அதாவது, அவர் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு முன்னோட்டம் போட்டு ஒரு கதைத்தலைப்பை முன்பதிவு செய்திருந்தாராம். இப்போது வேறொரு எழுத்தாளர் அந்தத் தலைப்பில் ஏழு அத்தியாயங்கள் வரையிலும் பதிவிட்டிருக்கிறாராம். "அறிவில்ல, மூளைய ஒருமுறைக்கூட யூஸ் பண்ணமாட்டேன்னா எப்படி?" என்று ஏகவசனத்தில் திட்டியிருந்தார்.


இதே தள உரிமையாளர் அந்தப் பதிவில் வந்து, "சில பேர் இப்படித்தான். நீங்க அவங்களுக்கு முன்னாடி சீக்கிரமா உங்கக் கதையை முடிச்சு, அவங்க முகத்துல கரியைப் பூசுங்க" என்றிருந்தார்.

ஹெஹெ! தான் உடைத்தால் மண் குடம்; அடுத்தவர் உடைத்தால் பொன் குடம். அதிலொரு நகைச்சுவை என்னவென்றால் அந்தத் தலைப்பு ஒரு சினிமா பாடலின் வரி.


நான் அவரின் பதிலைப் பார்த்ததும், கூகுளை இம்சித்தேன். அவன் புத்தகத் தலைப்பு எல்லாம் அறிவுத்திருட்டில் சேராது என்றான்.


ஆனால், இந்தத் தலைப்புக்காக அடித்துக்கொள்ளும் அக்கப்போர் மட்டும் ஃபேஸ்புக்கில் ஒழியவே செய்யாது என்று வெறுப்பாக இருந்தது எனக்கு.


*******


தேடலுடன் அதிக நூல்களை வாசிப்பதாலோ என்னவோ என் எழுத்துப் பயணத்தில் சற்று நிதானிக்கிறேன்.


அந்த வாசகர் யாரென்று தெரியாது. நான் வேள்பாரி நாவலுக்காக எழுதிய ஆறு பக்க விமரிசனத்தை பார்த்துவிட்டு தான் என் உள்பெட்டிக்கு வந்தார். நீண்டநேரம் என்னிடம் வேள்பாரி பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எனது நாவலை வாசிக்காத ஒருவரிடம் நான் உள்பெட்டியில் பேசுவதென்பது இதுவே முதல்முறை.


எனது நூல்களை வாசிப்பவராக இருந்தாலும் நான் பேச்சில் இவ்வளவு இணக்கம் காட்டியிருப்பேனா தெரியாது. அதற்கும் எனது அனுபவமொன்றே காரணம். நான் எனது இரண்டாவது நாவலை முடித்த சமயம் வாசகர் ஒருவர் என் உள்பெட்டிக்கு வந்தார். அது என்னைப் பொறுத்தவரை எனது நாவலை வாசித்தேன் என்போரெல்லாம் தேவத்தூதர்களாக தெரிந்த கணம். அந்த வாசகர் பின்பு எழுத்தாளரானாலும், எழுத்தாளருக்கும் வாசகருக்கும் எப்போதும் ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவர் அவர்.


முதலில் எனது நாவலை வாசித்தேன் என்றவர், எனது நாவலில் மிகுந்த எழுத்துப்பிழையும், தர்க்கப்பிழையும் இருப்பதாகக் கூறினார். எழுத்துப்பிழைகளை முன்பிற்கு இப்போது எவ்வளவோ குறைத்துவிட்டதாக நினைத்த எனக்கு, மாபெரும் துன்பியல் சம்பவம் அது.


வாசகர் என்பதால் அவர் புரிந்துகொள்ளும்படி, கைப்பேசியில் தட்டச்சு செய்வதில் உள்ள உபத்திரவத்தை எடுத்துரைத்தேன்.


அதை அவர் லட்சியம் செய்யாமல், தர்க்கப்பிழை பற்றி விவரிக்கத் தொடங்கிவிட்டார். 'ராஜாதி ராஜா' படத்தில் நடித்த ரஜினியையும், 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்த சமந்தாவையும் அவர் ஆள்மாறாட்ட தர்க்கப்பிழைக்காக நிற்க வைத்து கேள்வி கேட்க முடியாததால், கைக்ககப்பட்ட என்னை வைத்து பழிதீர்த்துக்கொண்டார்.


சிறிதுநேரத்திலேயே அவர் பேச்சின் தொனி மாறியது. "ரமணிச்சந்திரன் மேம் எல்லாம் எப்படி எழுதுவாங்க தெரியுமா? ஒரு நாவல் எழுதுறதுக்கு முன்னாடி தேடித்தேடி தகவல் சேகரிப்பாங்க." என்றார்.


நான் சும்மாயிருந்தாலும் என் கிரகபலன் என்னை சும்மாயிருக்கவிடவில்லை.

"நீங்க அவருக்கு பக்கத்து வீடா?" இவ்வளவுதான் கேட்டேன், இதுவரை எழுத்தாளர்களால் மட்டுமே பிளாக் செய்யப்பட்ட நான், முதல்முறை வாசகரால் பிளாக் செய்யப்பட்டேன்.


அதன் வடு, வேள்பாரி விஷயத்திலும் என்னை கொஞ்சம் விழிப்புணர்வுடனே நடந்துகொள்ள வைத்தது. ஆனால், ஒரே மாதிரியான வாசிப்பு ரசனை கொண்ட எங்களின் பழக்கம் வாட்ஸப் எண்களை பரிமாற்றிக் கொள்வது வரை சென்றது.


போலி அடையாளங்களை கொண்ட நபர்களாலே சீரழிந்துக் கொண்டிருக்கும் ஒரு ஃபேஸ்புக்கில், நான் நம்பி ஆண்மகன் ஒருவனுக்கு வாட்ஸப் எண் கொடுத்தது தெரிந்தால் என் பெற்றோருக்கு மாரடைப்பே வரக்கூடும். ஆனால், அவனுடன் பேசும்போது என் மனம் ஆர்ப்பரித்தது. எனக்குள்ளிருக்கும் அனைத்தையும் மிச்சமில்லாமல் அவனிடம் கொட்டினேன். உண்மை! எழுத்துலகில் இருக்கும் யாரைப்பற்றியும் அவனிடம் பேச முடிந்தது. அவனுக்கு என்னைவிட இரண்டு வயது குறைவு. இப்போதுவரை அவன் என்னை அக்காவென்று அழைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் அந்த அனர்த்தம் நிகழலாம். என் வேண்டுதல், கடவுளின் தீயக்குணம் இப்போதைக்கு வெளிப்படாமல் இருக்கட்டும்!


இந்த உறவு இனிமையாக நீடித்ததற்கு எங்கள் மானசீகமான ஒரு ஒப்பந்தமும் காரணம். நான் இதுவரை ஒருமுறைக்கூட அவனிடம் 'எனது நாவலை வாசி க்ரிஷ்' என்று சொல்லவில்லை. அவனும் உங்கள் நாவலை வாசிக்கிறேன் என்று வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை.


ஆனாலும், அமேசான் கிண்டில் சப்ஸ்க்ரிப்ஷன் பிளானை உபயோகிக்கும் அவன், எனது நாவல்களை வாசிக்காமலே ஐந்து நட்சத்திரங்களை வழங்கி, நட்பிற்கு இலக்கணமாகத் திகழலாம். எங்கே! அந்த அனுதாபம் மட்டும் அந்த கிறுக்கனுக்கு என் மேல் எழவே எழாது.


**********


சில நேரம் வாட்ஸப்பிலும் உள்பெட்டியிலும் வந்து திருட்டுத்தனமாக என் நாவலுக்கு விமரிசனம் எழுதுவோரை 'ஃபேஸ்புக்கில் பப்ளிக் போஸ்ட்டாக இதைப் போட்டால் தான் என்ன?' என்று என் மனம் ஆற்றாமையில் கெஞ்சிக் கேட்கும்.


ஒருமுறை பொறுத்துப் பொறுத்து பார்த்து வாய்விட்டே கேட்டுவிட்டேன். அவர் ஒரு பிரபல விமரிசகர். "நீங்க இதை பப்ளிக் போஸ்ட்டா போட முடியுமா?" என்றேன்.


அதற்கு அவரின் பதில், நான் சுவற்றில் முட்டிக்கொள்வது போல் இருந்தது.


"சாரிங்க, முடியாது. என் விருப்ப எழுத்தாளருக்கு உங்களைப் பிடிக்காது."


"ஓஹ், உங்க போஸ்ட் எல்லாம் பார்த்திருக்கேன். உங்களுக்கு நடிகர் விஜய் பிடிக்கும் போலத் தெரியுதே?"


"ஆமாங்க, ரொம்பப் பிடிக்கும்."



"ஆனா, உங்க விருப்ப எழுத்தாளருக்கு அஜித் தான் பிடிக்கும்ங்க. இனிமே நீங்க விஜய் பத்தி போஸ்ட் போடாதீங்க"


"அதனால என்னங்க? அது அவங்க ரசனை, இது என் ரசனை"


"ஆஹா, இந்தத்தெளிவு இருக்கிறவரை உங்களை யாரும் அசைச்சிக்க முடியாதுங்க"


"தேங்க்ஸ்ங்க"


கடவுளுக்கு நன்றி. கடைசிவரை நான் சொல்ல வருவது அவருக்குப் புரியவேயில்லை.


**************


எனக்கு எப்படி மீண்டும் ஸ்த்ரீ டாட் காம் உரிமையாளரை அணுகுவதென்றே புரியவில்லை. வாசிக்கவில்லையானாலும் தினம் அவர் போடும் அத்தியாய அறிவிப்புப் பதிவுகளில் எல்லாம் லைக் போட்டுக்கொண்டே வந்தேன். கடவுள் எனக்கு உதவும் உத்தேசத்தில் இருந்தார்போலும், மீண்டும் ஸ்த்ரீ டாட் காம் உரிமையாளர் மூலமாகவே எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார்.


"மாபெரும் நாவல் போட்டி நண்பர்களே! ஐம்பது நாட்களில் இருபத்தைந்து அத்தியாயம் எழுதத் தயாரா?"


அட! ஒரு நாளைக்கு ஐந்நூறு வார்த்தை எழுதினால் தானே இது சாத்தியம்?


"மொத்த வார்த்தை அளவு முப்பதாயிரம். படைப்பு இதற்கு முன்பு எந்த வடிவிலும் எங்கும் வெளிவந்ததாக இருக்கக்கூடாது. போட்டி மூன்று வாரம் கழித்து ஜனவரி ஒன்றன்று துவங்கவிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் முதல் பத்துபேரின் கதையை எங்கள் பதிப்பகமே புத்தகம் போட்டுக்கொடுக்கும்."


'சரி, பரிசு?'


"புது எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு. ஏற்கனவே புத்தகம் போட்டிருக்கும் எழுத்தாளர்கள் இளம்எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை ஊக்குவிக்கவும்."


'சரி, பரிசு?'


"போட்டியில் சேர விருப்பமுள்ளவர்கள் *** என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்"


'சரி, பரிசு?'


"நன்றி"


நான் எதையாவது வாசிக்காமல் விட்டுவிட்டேனோ? என்று மீண்டும் முதலிலிருந்து அந்தப் பதிவை வாசித்துப் பார்த்தேன். புத்தகம் போடுதல் தான் பரிசு என்பது உறுதியானது. ஒரு நிமிடம், புத்தகம் போடுதல் என்ன அரசாங்க வேலைக்கு ஒப்பானதா? போட்டித்தேர்வு போல் எழுத்தாளர்கள் அனைவரும் இதில் வந்து குவிய? இல்லை, வணிகரீதியாக ஸ்த்ரீ டாட் காம் பதிப்பகம் அவ்வளவு பெயர் பெற்றதா? இதுவரை அவர்கள் பதிப்பகத்தில் வெளியான ஒரு நூல் கூட இரண்டாம் பதிப்பு கண்ட வரலாறில்லை. இந்த சூழ்நிலையில் பரிசு புத்தகம் பதிப்பித்தல் என்றால், இது எதற்கான புரொமோஷன்? ஸ்த்ரீ டாட் காமிற்கானதா? இல்லை, ஸ்த்ரீ டாட் காம் பதிப்பகத்திற்கானதா? இல்லை, தளஉரிமையாளருக்கானதா?


போட்டி அறிவித்த ஒருமணி நேரத்தில் அடுத்த பதிவொன்று வந்தது. "ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்" என்று தொடங்கிய அப்பதிவைப் பார்த்ததுமே, அவசரப்பட்டுவிட்டோமோ? என்று ஒருநொடி திடுக்கிட்டேன் நான். மெதுவாக வாசிக்கவும் தொடங்கினேன்.


"ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். போட்டியில் சேருவோர் 'போட்டியின் முடிவு எதுவாகயிருந்தாலும் ஏற்பேன்' என்ற உறுதிமொழியை உங்கள் பெயருடன் மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள். இதற்கு முன்பு போட்டி வைத்து துரோகிகள் சிலரிடம் நான் பெற்ற பாடமே இதற்குக் காரணம்"


இங்கும் துரோகிகளா? போட்டியின் முடிவு எதுவாகயிருந்தாலும் ஏற்பேன் என்றால் என்ன அர்த்தம்? தீர்ப்பு ஒருதலைபட்சமாகவும், நியாயமற்றதாகவும் இருந்தாலும் ஏற்பேன் என்று தானே அர்த்தம்? இப்படியெல்லாம் கையொப்பமிட்டு அனுப்பச்சொன்னால் யார் போட்டியில் சேருவார்? இது போட்டியில் பங்குபெறும் முன்பே வெற்றியை வேறொருவருக்கு தாரை வார்ப்பதுபோல் ஆகாதா? பாவ்லோ கொய்லோ ரசவாதி நூலில் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'கிடைப்பதற்கு முன்கூட்டியே ஒரு பொருளை கொடுப்பதாக உறுதியளிக்க ஆரம்பித்தாயானால், அதை அடைவதற்கான வேலையைச் செய்வதில் ஆர்வம் போய்விடும்.'


ரசவாதி நூலிலுள்ள இந்த வரி என்னைத் தவிர வேறு யாருக்குமே ஞாபகம் வரவில்லை என்பது, அடுத்தப் பதிவில், "போட்டியில் இதுவரை நாற்பத்திரண்டு பேர் கலந்திருக்கிறார்கள்" என்றவர் அறிவித்தபோது தான் புரிந்தது.

---------------------​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 9



தொடர்ந்து என் நாவலுக்கு பின்னூட்டமிட்ட ஒருவர் திடீரென உள்பெட்டியில் வந்ததும், 'ஏதும் தவறாக எழுதி விட்டோமோ?' என்று துணுக்குற்றேன்.


அவரோ படபடவென பொரிந்தார். "மேம், நான் உங்க நாவலையெல்லாம் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்க, பல்லவி மனோ சார், லயா மேடம் எழுதுறதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"


நல்லவேளை! தவறாக எதுவுமில்லை.


"இடையில குவார்ட்டர்லி எக்ஸாம் வந்ததால உங்க நாவலை வாசிக்க முடியல மேம். இன்னைக்கு போட்டவரைக்கும் கடகடன்னு வாசிச்சு முடிச்சிட்டேன். செமயா இருந்தது. அதை சொல்ல தான் இன்பாக்ஸ் வந்தேன் மேம்"


'குவார்ட்டர்லி எக்ஸாமா?' நான் எனது திடுக்கிடலை மறைத்துக்கொண்டு, "நீங்க என்ன படிக்கிறீங்க?" என்றேன்.


பதில் வேகமாக வந்தது.


"லெவன்த் மேம். இது எங்கப்பாவோட எஃபி ஐடி மேம்"


இது ஆணா பெண்ணா என்று எப்படி கண்டுபிடிப்பது?


"உங்கப் பேர் என்னடா?" என்றேன்.


இதற்கும் வேகமாக பதில் வந்தது. "நளினி நாகராஜன் மேம்"


அடக்கடவுளே! இந்தக் குட்டிச்சாத்தான் ஏன் என் நாவலை வாசித்தேன் என்று என்னை குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது? இதன் கையில் போனை கொடுத்துவிட்டு இதன் பெற்றோர்கள் எங்கேப்போய் ஒழிந்தார்கள்? இப்போதைக்கு அதற்கு நான் ஒரு நன்மை செய்யலாம். ஏடாகூடமாகப்பேசி என் ஒவ்வொரு அணுவையும் அது வெறுக்கும்படி செய்யலாம்.


ஆனால், இதே மாதிரி அதுப்போய் பல்லவி மனோவிடம் பேசி வைத்தால்? பல்லவி மனோ இந்த விஷயத்தில் எப்படி என்று தெரியாது. அவர் இதன் அப்பாவித்தனத்தை சாதகமாக்கிக் கொள்ளவே வாய்ப்பதிகம். அது சரி, அப்பாவியா இது? ஆமாம் இது ஏன் என்னை தர்ம சங்கடத்தில் தள்ள யாரோ செய்த சதியாக இருக்கக்கூடாது? என் மூளை என்ன மாதாஜி மாதிரி சிந்திக்கிறது? நாவலின் தலைப்பிலும், ஏன் எதிலும் 18+ குறிப்பிடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் ஸ்க்ரீன்ஷாட் புகழ் மாதாஜிக்கு இதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் எப்படியிருக்கும்?


ச்சே! இனி உள்பெட்டியில் வரும் யாரிடமும் பேசக்கூடாது. வீணான மன உளைச்சல்.


இப்படி நான் அடிக்கடி உறுதி எடுத்துக் கொண்டாலும் அதை உடைப்பதற்கென்றே யாராவது வந்துவிடுகிறார்கள். அவர், 'நேசன் பப்ளிஷ்' பதிப்பகத்தைச் சேர்ந்தவராம். திடீரென என் உள்பெட்டியைத் தட்டி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கையோடு, அமேசான் கிண்டிலில் உள்ள எனது 'சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா' நாவலை அவர்களது பதிப்பகக் குழு வாசித்ததாகச் சொன்னார்.

மேலும், அந்நாவலை இலவச அச்சுப்புத்தகமாக பதிப்பித்துத் தர அவர்கள் தயாராக இருப்பதாகவும், பெரிய பெரிய எழுத்தாளர்களும் கைக்கோர்த்திருக்கும் அவர்களது பதிப்பகத்தில் எனது நாவலை வெளியிட்டால் அது உலகம் முழுவதிலுமுள்ள எனது வாசகர்களை எளிதாக சென்றடையும் என்றும் கூறினார்.


ஸ்த்ரீ டாட் காம் தொடக்கத்திலேயே என்னை மிரள வைத்து விட்டதால், நான் இங்கு முயன்றுப் பார்த்தால் என்னவென்று யோசித்தேன்.


அதற்காக இதற்கு முன்பு என் நட்புப் பட்டியலிலுள்ள எந்த எழுத்தாளர் 'நேசன் பப்ளிஷ்' பதிப்பகத்தில் புத்தகம் பதிப்பித்திருக்கிறார் என்றும் அவரைத்தேடி கண்டுபிடித்தேன். பின், என் தயக்கம் விட்டு எனது சந்தேகங்கள் அனைத்தையும் அவரிடம் கேட்டேன்.


அவர், எந்தவொரு செலவுமின்றி, யாருடைய பரிந்துரையுமின்றி, யார் வேண்டுமானாலும் எளிமையாக நேசன் பப்ளிஷில் புத்தகம் பதிப்பிக்கலாம் என்றார்.


'இதைத்தானே தெய்வமே இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்தேன்!' என்ற என் உற்சாகத்தை பேச்சில் காட்டிக்கொள்ளாமல், "கொஞ்சம் விவரமா நேசன் பப்ளிஷ் பத்தி சொல்றீங்களா?" என்றேன்.


அவர் சில அமுக்குனி எழுத்தாளர்களை போலல்லாமல் விளக்கமாக எடுத்துரைத்தார்.


"நேசன் பப்ளிஷ்ல செல்ஃப் பப்ளிஷிங், பே சர்வீஸ்னு ரெண்டு கேட்டகிரி இருக்கு. நான் எப்பவுமே செல்ஃப் பப்ளிஷிங் தான் யூஸ் பண்ணுவேன். என் அறுபது பக்கமுள்ள கன்டென்ட்ட நூறு ரூபாய்க்கு புக் போட்டிருக்கேன்"


"ராயல்டி எல்லாம் சரியா தந்திருவாங்களா சிஸ்?"


"ம்ம், நம்ம புக் விக்கிறதைப் பொறுத்துத் தருவாங்க. என் புத்தகத்தோட விலை நூறு ரூபான்னு சொன்னேன்ல? ரீடர்ஸ் அமேசான், ஃப்ளிப்கார்ட் வழியா அதை வாங்கினா ஒரு புக்குக்கு பதினொரு ரூபா கிடைக்கும். அதேயிது நேசன் பப்ளிஷோட சொந்த புக் ஸ்டோர் வழியாப்போய் வாங்கினா ஒரு புக்குக்கு இருபத்தியொரு ரூபா கிடைக்கும். என்ன எப்போ வேணும்னாலும் நேசன் பப்ளிஷ்க்கு நம்ம கொடுத்த ப்ரிண்டிங் ரைட்ஸ கேன்சல் பண்ணிடலாம். ரொம்ப முக்கியமானது, நம்மளோட அச்சுப்புத்தக உரிமை மட்டும் தான் அவங்கக்கிட்ட இருக்கும். இ-புக், ஆடியோ நாவல்ஸ் உரிமை எல்லாம் நம்மக்கிட்ட தான். வெளிய உள்ள பதிப்பகத்துல எல்லாம் அமேசான் கிண்டில்ல நம்ம நாவல் இருந்தா, அதை புக் போடமாட்டோம்னு சொல்வாங்க. பட், இங்க அப்படியில்ல."


"வெளிய எல்லாம் ரைட்டருக்கு ராயல்டி அமௌண்ட் ப்ளஸ் புக் காப்பீஸ் மூனு ஃப்ரீயா அனுப்புறாங்களே. இவங்களும் ரைட்டருக்கு அப்படி அனுப்புவாங்களா சிஸ்?"


"ம்ஹூம். பட், ஆத்தர் காப்பி ஆப்ஷன்ல போய் குறைஞ்ச விலைக்கு, அதாவது நூறு ரூபா புக்க, அதோட ஆத்தரா நீங்க அறுபத்தினாலு ரூபாய்க்கு வாங்கிக்கிடலாம். பட், குறைஞ்சபட்சம் பத்து புத்தகமாவது நீங்க வாங்கினா தான் இந்தத் தள்ளுபடி. அப்புறம் தீபாவளி, பொங்கல் மாதிரியான ஃபெஸ்டிவல் டைம்ல புக்குக்கு 25% விலைத் தள்ளுபடி தருவாங்க. நார்மல் டேஸ்ல புக்கோட ஆத்தரா நீங்க ஐம்பது புக்ஸ் ஆர்டர் பண்ணினா, உங்களுக்கு 25% விலைத் தள்ளுபடி. நூறு புக்ஸ் ஆர்டர் பண்ணினா, உங்களுக்கு 50% விலைத் தள்ளுபடி, இந்த மாதிரி போகும்"


"அவ்வளவு புக்ஸ் வாங்கி வச்சி நான் என்ன பண்றது சிஸ், புரியலையே?"


"நீங்க குறைஞ்ச விலைக்கு வாங்கி, ரேட் கொஞ்சம் அதிகமா வச்சு வெளிய விக்கலாம்"


"ஓஹ்! ஏன் சிஸ், இதெல்லாம் ஆன்லைன்ல பர்சேஸ் செய்யுற வாசகர்களுக்குத்தானே சரிபடும்? நேசன் பப்ளிஷ்ல ஸ்டால் போட்டுலாம் நம்ம புக்கை விக்க மாட்டாங்களா? அப்புறம் இந்த புக்ஃபேர் சமயத்துலலாம் நம்ம புக் இத்தனையாவது நம்பர் ஸ்டால்ல இருக்குன்னு சொல்லி பெருமையடிச்சிக்க முடியாதா?"


"ஹாஹாஹா, நீங்க வேற! ரீடர்ஸ் காசு கொடுத்து ஆர்டர் பண்ணினா தான் உங்க புக்கை அவன் பிரின்ட் போடவே செய்வான்"


"அப்போ நான் புரொமோஷன் பண்ணிக்கிட்டே இருக்கணுமா சிஸ்?"


"ம்ம், உங்க புக் அதிகமா விக்க இன்னொரு ஐடியா இருக்கு. இதுக்கு முன்னாடி நான் சொன்னதுலாம் செல்ஃப் பப்ளிஷிங். அதுல உங்க நாவலுக்கு ப்ரூஃப் ரீடிங், அட்டைப்படம்னு எல்லாம் நீங்க தான். பட், பே சர்வீஸ் ஆப்ஷன் போய் நீங்க முப்பத்தஞ்சாயிரம் கட்டிட்டா ப்ரூஃப் ரீடிங், புக் டிசைனிங், கவர் டிசைனிங், புக் புரொமோஷன்னு உங்க திருப்திக்கேற்ப அவனே எல்லாம் பார்த்துப்பான். அதுல உங்களுக்கு ஃபுல் ராயல்டி கிடைக்கும். செல்ஃப் பப்ளிஷிங் ஆப்ஷன்ல உங்களுக்கு 70% தான் ராயல்டி. அதான் சொன்னேனே, நூறு ரூபா புக்குக்கு இருபத்தொரு ரூபா கிடைச்சதுன்னு"


ம்க்கும்! லேப்டாப்பை சரி பாருங்கள் என்றாலே, வீட்டில் மேலும் கீழும் பார்க்கிறார்கள். இதில் முப்பத்தைந்தாயிரம் என்றால் அவ்வளவு தான்! என் போனைப் பிடுங்கி உடைத்துவிட்டு, 'நிம்மதியாக இரு மகளே!' என்று விடுவார்கள்.


"அவனுங்களா உங்க புக் வித்ததுன்னு ஏதோ பார்த்துக் கொடுத்தா தான் உண்டுல்ல சிஸ்?"


"ம்ம், எல்லா இடத்துலயும் அப்படித்தானே? முதல் பதிப்பு புக்ஸ் வித்திடுச்சின்னு சொன்னா மறுபதிப்புக்கு ராயல்டி கொடுக்கணும்னே பெரும்பாலான பதிப்பகங்கள் எழுத்தாளர்கிட்ட உண்மையை சொல்றதில்ல."


"ச்சே! இன்னும் எங்க புக் போடுறதுன்னு குழப்பமாவே இருக்குது சிஸ்"


"ஹாஹாஹா, நான் குளிக்கப்போறேன்பா. உங்களுக்கு நேசன் பப்ளிஷ்ல ஏதாவது டவுட்னா கேளுங்க. நான் அப்புறமா வந்து பதில் சொல்றேன்"


"ஓகே சிஸ். தான்க்யூ சிஸ்"


ஊப்ஸ்! மீண்டும் நான் டாட் காம்களையே நாட வேண்டுமா?


************


பாவம்! யார் அந்த தள உரிமையாளர் என்று தெரியவில்லை. சொல்லி வைத்தாற்போல் என்னுடன் நட்பிலிருக்கும் மகளிர் டாட் காம்மைச் சேர்ந்த அனைத்து எழுத்தாளர்களுமே, "நாங்கள் மகளிர் டாட் காமில் வசதியாகத்தான் இருக்கிறோம்." என்ற ஆரம்ப வரியுடன் ஒரு நான்கு பத்தி பதிவை பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள்.


நிச்சயம் மாதாஜியின் மூளைக்கும் இதில் சம்பந்தமில்லாமல் இருக்காது.


வாசித்தவரை ஏதோ ஒரு டாட் காம் உரிமையாளர் அவர்கள் அனைவருக்கும், "எங்கள் தளத்திலும் வந்து எழுதுங்கள்" என்று அழைப்பு விடுத்திருப்பது புரிந்தது.


ஹே! இப்போது தான் ஞாபகத்திற்கு வருகிறது. நேற்று எனக்குக்கூட உள்பெட்டியில் ஒரு அழைப்பு வந்ததே? ம்ம்? அம்மணி டாட் காம்! பயோவில் 'எழுத்தாளர்' என்று போட்டிருப்பவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி அழைத்திருப்பார் போலிருக்கிறது.


மாதாஜி கொதிப்பதும் நியாயம் தான். உங்கள் நாவல் அருமையாக இருக்கிறதென்ற ஒற்றைவரியைப் பிழையின்றி எழுதத் தெரிந்தவர்களையெல்லாம் 'நாவல் எழுதுங்கள்' என்று ஊக்குவித்து எழுத்தாளராக்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் வந்து அவர்களையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொள்ளப் பார்த்தால், ரத்தம் கொதிக்கத்தானே செய்யும்?


முதலில் இந்த எழுத்தாளர்களை சொல்ல வேண்டும். "மாதாஜி, நாங்கள் உங்களுக்கு மட்டுமே பாத்திரமானவர்கள்; வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத எங்களை அந்த தளத்தில் எழுதச்சொல்லி வம்படியாக கையைப் பிடித்து இழுக்கிறார்கள்" என்றால், பாவம்! அவரும் தான் என்ன செய்வார்?


எப்படி? எப்படி? நாங்கள் மகளிர் டாட் காமில் வசதியாகத்தான் இருக்கிறோமா? ஹெஹெ! கூவத்தூர் சொகுசு விடுதி எம்எல்ஏக்கள் தோற்றுவிடுவார்கள் உங்களிடம்.


இது தான் அவர்கள் அனைவரையும் அன்ஃபிரண்ட் செய்ய சரியான தருணமென வேகமாக எனது கைகள் செயல்பட்டன. போயிட்டு வாங்க! டாட்டா!


ஆனால், இன்றும் தோழமையுடன் பேசும் பத்ராக்காவை மட்டும் என்னால் அன்ஃபிரண்ட் செய்ய இயலவில்லை.


**************


ஃபேஸ்புக்கில் எங்குப் பார்த்தாலும் இப்போது பங்கரி சாலாவைப் பற்றி தான் பதிவுகள்.


பிரபலமடையும் நோக்கில் பிறர் கருத்தை கவர்வதற்காக, 'ஆண்கள் என்றாலே யோக்கியர்கள் தான்' என்று புகழ்ந்துக் கொண்டிருந்தவரை சில டாட் காம்மைச் சேர்ந்தோர்கள், எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.


பொதுவாக எழுத்தாளராக மாறிவிட்ட பெண்கள் யாருக்குமே தன்னை ஒரு பெண்ணியவாதியாக நிறுவிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெரிய நிறுவனம் நடத்தும் 'நாவல் போட்டி'யொன்றில் முதல் பத்து இடங்களில், எட்டில் பெண்களே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தாலும், சுயநலமாக பத்து இடங்களையுமே பெண்கள் கைப்பற்றவில்லையே என்ற ஏக்கப்பெருமூச்சு தான் எழுகிறது அவர்களிடம்.


இதிலெங்கே பாலின சமத்துவம் இருக்கிறது? சக பாலினத்திற்கு எங்கே மதிப்பு கொடுக்கிறார்கள்? நிற்க, இப்படி வெளியே முரட்டு பெண்ணியவாதியாக காட்டிக்கொள்ளும் எழுத்தாளரின் கதைகளை உற்றுநோக்கினால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவனையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் பெண் இருப்பாள். ஒன்று இவர்களுக்கு புரிவதேயில்லை, ஆன்டிஹீரோ கதையெழுதும் போது இவர்கள் ஒவ்வொருவருமே பங்கரிசாலா தான்!
----------------------------

கருத்துப் பதிவிடுவது உங்களது ஜனநாயக கடமை! எதற்காகவும் உங்களது கடமையை விட்டுக்கொடுக்காதீர்கள் பட்டூஸ்🙂

கருத்துத்திரி,
கருத்துச்சாவடி
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 10



உங்கள் கதை பிடிக்கவில்லை. இவ்வாறு நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நேரடியாக சொல்வதற்கென்ன? சொல்ல மாட்டார்கள். அதற்கு தைரியம் கிடையாது. இப்போதுக்கூட இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. "நேற்று ஒரு கதை படித்தேன். அந்த நாயகன் அந்த நாயகியை நாயினும் கொடுமையாக நடத்தினான். ஆனால், அந்தக்கதைக்கு தான் கிண்டில் ஸ்டார் ரேட்டிங்ஸ் அதிகம். என்னய்யா உங்க ரசனை?"


சந்தேகமேயில்லை. இது என் கதை தான். சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தாவே தான்.


பாவம்! யாரோ புது எழுத்தாளர் போலிருக்கிறது. இது என் கதைக்கு வந்த வசவென்று தெரியாமல் அவர் கதைக்கு வந்ததாக நினைத்து, "என் கதையையா சிஸ் சொல்றீங்க?" என்றிருக்கிறார். பதிலேதும் சொல்லாமல் சிரித்து வைத்திருக்கிறது அந்த நல்ல உள்ளம். ச்சே! என்னை மட்டுமல்லாது சமீபத்தில் கதை முடித்த அனைவரையுமே பழிவாங்க இதுவொரு வழி. 'என் கதையோ? என் கதையோ?' என்று பதைபதைக்க வைக்க ஒரு அற்ப ஆசை.


தைரியமிருந்தால் கதையின் தலைப்பு, எழுத்தாளரின் பெயர், நான் எதனால் அந்தக்கதையை எதிர்க்கிறேன்? அது கொண்ட என்ன கருப்பொருளில் எனக்கு உடன்பாடில்லை என்று விரிவாக, தெளிவாக பேசட்டுமே. ம்ஹூம், முடியாது, இரண்டு பேர் எதிர்த்து வந்தால், தன் தரப்பில் நிலையாக நின்று பேசத் திறமை இராது.


ஆனால், வாரத்திற்கொருமுறை, "அய்யோ! கதையின் தலைப்பை பார்க்காமல் வாசித்துவிட்டேனே, சுத்த திராபை!" என்று மட்டும் ஒப்பாரி வைப்பார்கள். இதில் கதையின் தலைப்பையோ எழுத்தாளரின் பெயரையோ போட்டு, அதுவே ஒரு புரொமோஷன் ஆகிவிடக்கூடாதென்கிற சூதானம் மட்டும் அதிகமாக இருக்கும்.


இது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் எதற்கு எனக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொட்டைக் கடிதாசி பதிவில் சென்று கருத்துப் பதிவிட்டேன்? என் நட்புப் பட்டியலில் இருக்கிறோமென்ற ஒரே காரணத்திற்காக, முன் பின் பேசியிராத என்னை ஏன் அந்த அம்மா முதலில் டேக் செய்து பதிவிட்டார் என்பது சுத்தமாகப் புரியவில்லை.


ஆனால், "எப்படி பதினைந்து வயது பெண்ணையும் முப்பது வயது ஆணையும் நாயகன் நாயகி பிம்பத்தோடு வர்ணித்து ஆன்டிஹீரோ ஸ்டோரி எழுத முடிகிறது? முதலில் ஆன்டிஹீரோ ஸ்டோரி என்றால் தான் என்ன?" எனப் பொருமியிருந்த போது, நான் யாருக்கு வந்த விருந்தோயென்று சென்றிருக்கலாம். விதி யாரை விட்டது?


நான் ஒவ்வொருமுறை அத்தியாயம் பதிவிடும்போதும் பின்குறிப்பில் 'இது ஆன்டிஹீரோ ஸ்டோரி, விருப்பமில்லாதவர்கள் கடந்து விடுங்கள்' என்று சொல்வதுண்டு. உண்மையில் அப்படி போடுவது ஆன்டிஹீரோ கதை பிடிக்காதவர்கள் கடந்துபோக வேண்டும் என்பதற்காக அல்ல. ஆன்டிஹீரோ கதைப் பிடித்தவர்கள் எங்கிருந்தாலும் ஓடிவாருங்கள் என்பதற்காக. பின்னே! கதையின் துவக்கத்தில் ஒரு வரியில் போடவேண்டியதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஃபேஸ்புக்கில் பதிவிட எனக்கென்ன பைத்தியமா?


அந்தப் பொருமல் பெண்மணி அப்படி முன்பே எச்சரிக்கை வாசகம் இல்லாததொரு கதையைத்தான் வாசித்திருப்பார் போலிருக்கிறது.


நான் 'ஒருவர் என்னை டேக் செய்து கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறேன், அவ்வளவு தான்!' எனும் வகையில், "குடும்ப நாவல்களைப் பொறுத்தவரை ஒரு பெண்ணை உடலளவிலோ, அல்லது மனதளவிலோ காயப்படுத்தும் ஹீரோவே ஆன்டிஹீரோ என்று சில எழுத்தாளர்கள் கட்டமைத்திருக்கிறார்கள்." என்றுவிட்டேன்.


ஆனால், அதில் கருத்துப் பதிவிட்ட ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய சிக்கலில் சென்று மாட்டிக்கொள்வேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி, மங்கை டாட் காம் உரிமையாளர் வைத்தப் பொங்கல்.


'பொங்கல்' எவ்வளவு இனிப்பான வார்த்தை. கேட்டவுடனே நெய், வெல்லம், முந்திரிப்பருப்பு என்று கற்பனை பறக்குமானால், அவருக்கு பெண்கள் எழுதும் டாட் காம்களைப் பற்றி தெரியவில்லையென்று அர்த்தம்.


பொங்கல்! ச்சைக்! அதுவொரு கெட்ட வார்த்தை; மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் தான் அவ்வார்த்தையை தன் ஃபேஸ்புக் பதிவில் உபயோகிப்பார் என்று எண்ணுமளவிற்கு அவ்வார்த்தையை வைத்து செய்துவிட்டார்கள் சில அம்மணிகள்.


"இது பொங்கல் அல்ல" என்று ஆரம்பிக்கும் அனைத்துப் பதிவுமே பொங்கல் பதிவு தான் என்பது எழுத்தப்படாத விதி.


"போரடிக்கிறது, எங்காவது பொங்கல் போட்டால் லிங்க் அனுப்புங்கள்." என்று கேட்கும் அளவிற்கு ஒரு அரைவேக்காட்டுச் சமூகம் முன்னேறிவிட்டது.


எனக்கு பொங்கல் வரும்வரை நானும் அந்த அரைவேக்காட்டுச் சமூகத்தில் ஒருத்தி தான். அதன் தீவிரம் எனக்கு தெரியவேயில்லை. ஒரு பொங்கல் பதிவு நம்மை உண்ண விடாமல் செய்யும்; உறங்க விடாமல் செய்யும்; நிம்மதியை உருக்குலைக்கும் என்று பின்பு தான் புரிந்தது.


'மங்கை டாட் காம்' உரிமையாளர், ச்சே! ஸ்த்ரீ டாட் காமிற்கு பிறகு அவரைத்தான் நான் பின் தொடர வேண்டுமென்று நினைத்திருந்தேன். நாசம்! என் திட்டம் அனைத்திலும் சர்வ நாசம். ஏய்! என்னை டேக் செய்த நல்லுள்ளமே, அடுத்த ஜென்மத்தில் நீ மத்தளமாவாய்!


மங்கை டாட் காம் உரிமையாளர் நியாயப்படி அந்த சர்ச்சை கதைக்கான விளக்கத்தை தான் கொடுத்திருக்க வேண்டும். பிரச்சினை எதுவோ அதைப்பற்றி பேசினால் தானே முடிவிற்கு வரமுடியும்? பதிலாக அவர் அனுதாப வாக்குகள் சேகரிக்க முயன்றார்.


"இதற்கு முன்பு நான் எழுதிய கதைகளை வாசித்தவர்களுக்கு தெரியும் என் கதை எப்படியென்று, என் எழுத்து எப்படியென்று. வம்பிழுக்க நினைப்பவர்கள் அதற்கென்று உள்ள ஆட்களிடம் சென்று வம்பிழுங்கள். அப்புறம் ஆன்டிஹீரோவுக்கு விளக்கம் கொடுத்த அந்த எழுத்தாளர், என் கதைகளில் ஒன்றையாவது நீங்கள் வாசித்ததுண்டாம்மா? பிறகு, என்ன தைரியத்தில் கருத்துப் பதிவிடுகிறீர்கள்? அமைதியாக இருப்பதால் சீண்டிப்பார்க்கிறீர்களா? உங்களுக்கு வேண்டுமானால் இதற்கெல்லாம் நேரமிருக்கலாம். எனக்கில்லையம்மா"


அடப்பாவிகளா! இது பதிவிடப்பட்ட ஒருமணி நேரத்தில் முந்நூற்றியாறு லைக்குகள், நூற்றியிருபது கருத்துப் பகிர்வுகள்.


முன்னெச்சரிக்கையின்றி அந்த கருத்துகள் அனைத்தையும் பார்வையிட்டு வந்தது தான் இப்போது தூக்கம் கூட வரமாட்டேங்கிறது. அதில் ஒரு ஐம்பது பேரைத்தான் எனக்குத் தெரியும். மீதம் உள்ளவர்களெல்லாம் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களோ?


ஆனால், என் அனுபவத்தில் ஒன்று மட்டும் சொல்கிறேன். இதுபோல் ஒரு இரண்டு தரமான பொங்கல் வாங்கினால் போதும். கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவு எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்று கண்டுகொள்ளலாம்.


இவைகளால் கூட நான் என் மனதின் சமநிலை இழக்கவில்லை. அந்த இரண்டு நபர்களின் பதிவுகள் இருக்கிறதே. ஒருவர் பாவை டாட் காம் உரிமையாளர். இன்னொருவர் அவர் ஆதர்ச விமரிசகர். இருவரும் ஏதோ ஒரு வகையில் என்னால் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது.


"ரொம்ப நாளா இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டிருந்த ஒரு மீனு, இன்னைக்கு வசமா வலையில சிக்கியிருக்கு" என்று எக்காளமிட்டு, மங்கை டாட் காம் உரிமையாளர் கொளுத்திய தீயில் குளிர் காய்ந்திருந்தார்கள். சிங்கம் மானை வீழ்த்தியதும் வரும் பிணந்தின்னி கழுகுகள் போல் தான் அவர்களது கும்மாளம் எனக்குத் தெரிந்தது. ஆனால், நான் இன்னும் வீழவே இல்லையேய்யா!


விறுவிறுவென்று கைப்பேசியில் தட்டச்சு செய்தேன்.


"அது உங்கள் கதையென்று தெரியாது மேம். தெரிந்தாலும் ஆன்டிஹீரோ கதைக்கான எனது புரிதல் இதுவே." இதை நான் அவரை டேக் செய்து சொன்னேன். அவர் டேக்கை நீக்கிவிட்டு என்னை அன்ஃபிரெண்ட் செய்தார். உண்மையை புரியாதவர்களுக்கு விளக்கலாம். தான் நம்புவது தான் உண்மை என்பவர்களுக்கு?


****************


அந்தப் பொங்கல் வாங்கி முழுதாக இரண்டு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு பொங்கல்.


கற்பனையாக ஒரு புதிய எழுத்தாளர் என்னிடம் வந்து, என் நாவலை விளம்பரப்படுத்த ஒரு வழி சொல்லுங்கள் ஷிவானி என்று கேட்பாராயின், முதலில் அத்தியாயத்திற்கு அத்தியாயம் வகைவகையாய் அட்டைப்படம் தயார் செய்யப் பழகுங்கள் என்பேன். பிறகு, உங்கள் நாவலுக்கான லிங்கை அதிக வாசகர்கள் கொண்ட ஃபேஸ்புக் குழுவில் பகிருங்கள் என்பேன்.


அதிக வாசகர்கள் கொண்ட குழு என்றால் முதலிடத்தில் இருப்பது 'ரமணிச்சந்திரன் நாவல்ஸ்' குழு. ஆரம்பத்தில் நானும் ரமணிச்சந்திரன் ரசிகையே. எனது வாசிப்பின் ஆழமும் தேடலும் அதிகரிக்க அதிகரிக்க எதிர்பார்ப்பும் பரிணாம வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் ஏன் ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி மற்றும் அம்பை போன்றோருக்கு ஃபேஸ்புக்கில் வாசகர் வட்டம் இல்லையென்ற ஆதங்கமும் உண்டானது.


என்னால் உருவாக்க முடியுமென்றாலும், என் வாசிப்புத்தேடல் நாளை வேறொரு பரிணாமத்தைத்தொட வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், எண்ணிப் பார்க்கிறேன்! 'ரமணிச்சந்திரன் நாவல்ஸ்' குழுவில் அவரை தனது முன்மாதிரி என்று சொல்லிக்கொண்டு அவரைப்போலவே சிலர் எழுதுவது போல், அம்பையையும், அருந்ததி ராயையும் முன்மாதிரியாக்கி எழுதினால் எப்படியிருக்கும்? எழுத்துலகம் ஸ்தம்பித்துப் போகும். பெண்ணெழுத்து என்று மட்டம் தட்டுவோர் தலையை தொங்கப்போட்டுக் கொள்வர்.


ஆனால், அது சுலபமன்று. ஏற்கனவே உள்ள பாலகுமாரன், சுஜாதா வாசகர் வட்டத்தினாலேயே எட்ட முடியாத உயரமது.


நான் எனது இரண்டாவது பொங்கலை வாங்கியது, 'ரமணிச்சந்திரன் நாவல்ஸ்' குழுவில் தான். அங்கு எழுத்தாளர் வாசகர் பாகுபாடின்றி ஞாபகமறதிக்காரர்கள் அதிகம். மூன்று மாதத்திற்கு முன்பு வாசித்த கதையென்றாலும் பரவாயில்லை. முந்தைய நாள் வாசித்த கதையின் பெயரையே மறந்துவிடுவார்கள். இதிலும் ஒரு கதை விளம்பர நுட்பம் இருக்கிறது.


நேற்றும் ஒரு பெண்மணி அப்படியொரு பதிவை தான் போட்டிருந்தார்.


"நேத்து ஒரு கதை படிச்சேன் ப்ரெண்ட்ஸ். நாயகன் ராம்; நாயகி நிலா; பேரண்ட்ஸ் உடைய கட்டாயத்தினால அவங்களுக்கு கல்யாணம் நடக்குது. நாயகன் நாயகிக்கு சின்ன வயசுலயே ஒருத்தரை ஒருத்தர் தெரியும்னால இந்த உறவை ஏத்துக்க முடியாது. நாயகனுக்கு ஒரு க்ரஷ் இருக்கா, நாயகிக்கும் ஒரு க்ரஷ் இருக்கான். அதை ரெண்டுபேருமே வெளிப்படுத்தும் போது பொறாமையினால அவங்களை அறியாமலேயே அவங்களுக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆகிடுது. ப்ளீஸ் ப்ரெண்ட்ஸ் கதை முடிவு தெரியாம தலையே வெடிச்சிரும் போலயிருக்கு. ஸ்டோரி நேம் சொல்லுங்க."


இதே கதைக்கருவில் எனக்கு நான்கு நாவல்கள் தெரியும். தெரியாமல் எத்தனையோ? ஆனால், ஒரு நகைச்சுவைக்காக, 'ஓ மை கடவுளே! அருமையான படம், பாருங்கள்' என்றேன்.


அந்த நான்கு கதைகளுக்கான எழுத்தாளர்களுடன் இன்னும் மூன்று எழுத்தாளர்களும் இணைந்துகொண்டு, 'நீங்கள் கூறும் அந்த படம் வருவதற்கு முன்பாகவே நாங்கள் அந்த கதைக்கருவில் எங்கள் நாவல்களை எழுதிவிட்டோம்' என்றார்கள். அனைவருமே ஒவ்வொரு டாட் காம்மைச் சேர்ந்தவர்கள்.


இப்போது நானும் அதை மறுக்கவில்லையே என்றேன்.


அவர்களுக்கு திருப்தியளித்தாலும் அவர்களின் பரம விசிறிகளுக்குப் பொறுக்கவில்லை. குரலை உயர்த்தினார்கள். "இவங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலையே இது தான். வெட்டி போல! இன்னைக்கு உங்களையெல்லாம் வம்புக்கு இழுக்குறாங்க"


'யார் யாரை வம்பிழுக்கிறது? வெட்டியா? இந்தம்மா என்ன என் பிஏவா?' என்று என் ரத்த நாளங்கள் வெடித்தன.


ஒரு நகைச்சுவைக்குக்கூட சிரிக்க முடியாத இவர்களின் ரசனையை என்ன சொல்வது?


சமீபத்தில் க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் 'அசுரன்' படத்தை 'பாட்ஷா' படத்துடன் ஒப்பிட்டார். அமைதியான அண்ணனுக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்தால் பாட்ஷா. அமைதியான அப்பாவுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருந்தால் அசுரன் என்றார்.


ஆனால், அசுரன் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலின் தழுவல் என்பது அதிகாரப்பூர்வ தகவல்.


இங்கு இவர்களென்னவென்றால் பற்றவைக்கும் முன்னமே வெடித்துச் சிதறி விடுவார்கள் போலிருக்கிறது.


ஒரு எழுத்தாளர் 'எனக்கு இலவசமாக புத்தகம் அனுப்பியிருக்கிறார்' என்பதற்காக ஒரு வாசகரும், அந்த வாசகர் 'என் நாவலை வாசித்து விமர்சனம் எழுதிவிட்டார்' என்பதற்காக ஒரு எழுத்தாளரும், இந்த மாதிரி விஷயத்தில் காட்டும் கண்மூடித்தனமான நன்றியுணர்வை நான் அடியோடு வெறுக்கிறேன்.


எனக்கு வருத்தமெல்லாம் இந்த பொங்கல்வாதிகளுக்கு உளரக்காரணம் கொடுத்துவிட்டேனே என்பது தான்.


எவ்வளவு நேரம் தான் நானும் கண்டுகொள்ளாதது போலவே நடிப்பது. கோபத்தில், "எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது, எலிப்புழுக்கைகளும் ஏன்யா சேர்ந்து காயுது?" என்று விட்டேன்.


அவர்களும் என் பெயரைப் போடாமல் தான் மீம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பதிவுகளிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு மட்டும் பட்டைப்பெயர் 'ஜாடை போஸ்ட்டர்'.


எனக்கு இந்த 'ஜாடை போஸ்ட்டர்' பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா? எனது முதல் பொங்கலின் போது, "ரொம்ப நாளா இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டிருந்த மீனு ஒன்னு, இன்னைக்கு வசமா வலையில சிக்கியிருக்கு" என்று ஜாடை போஸ்ட் போட்டு குதூகலித்தாரே, அந்த மதிப்பிற்குரிய 'டேரெக்ட் போஸ்ட்' எழுத்தாளர் தான்.

*************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
தொட்டுத் தொட்டு பேசு சுல்தானா🎶
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

அத்தியாயம் 11



ஒன்றிலிருந்து நாம் விலகுகிறோம் என்றால் வேறொன்றை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.


நான் க்ரிஷுடன் பேசத் தொடங்கியபோதே பெண்கள் எழுதும் டாட் காம்களிடமிருந்து மெதுமெதுவாக விலகத் தொடங்கிவிட்டேன். வேள்பாரியில் துவங்கிய எங்கள் நட்பு இன்று ஜீரோ டிகிரியில் வந்து நிற்கிறது.


அவனும் சாருநிவேதிதாவை வாசியுங்கள்! வாசியுங்கள்! என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான். நான் தான் இன்னும் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறேன்.


இதேபோல் தான் அவன் எஸ்.ராமகிருஷ்ணனின் 'இடக்கை'யையும் வாசியுங்கள்! வாசியுங்கள்! என்றான். நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டேன். என்னால் அந்தப் புத்தகத்தில் இரண்டு பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லையென்றேன்.


அவன் மிகுந்த எதிர்பார்ப்போடு அந்த நூலைப் பற்றி என்னுடன் விவாதிக்க காத்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. இருப்பினும், தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சு.வெங்கடேசனின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற காவல் கோட்டம் வாசியுங்கள் என்றான். என்னால் அதை ஐந்து அத்தியாயங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. அப்போது தான் அவனுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன நீங்க இப்படி இருக்குறீங்க? உங்களை ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிறீங்க. ஆனா, முக்கியமான புக்ஸ் எதை வாசிக்க சொன்னாலும் என்னால முடியலைனு பின்வாங்கிடுறீங்க." என்றான்.


நான், அவையெல்லாம் நான் செல்ல விரும்பாத ஊருக்கு இட்டுச்செல்லும் பாதைகள் என்று வெடித்தேன்.


அவன் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தையும் ஞாபகம் வைத்து இப்போது சண்டையிட்டான். பொதுவாக இது பெண்களின் யுக்தி என்று சொல்வதுண்டு. இங்கோ தலைகீழாய் நடந்துக்கொண்டிருந்தது. "சரி, பரவாயில்ல. புக் தான் உங்களால வாசிக்க முடியல. அட்லீஸ்ட் அவங்கல்லாம் யாருன்னு கூட தெரிஞ்சு வச்சிக்கக்கூடாதா? அப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்னாடி லா.ச.ரா? யாரது? கேட்டப்பேரு மாதிரி இருக்கேன்னு சொல்றீங்க. உலகம் தெரியாத கிணத்துத்தவளை மாதிரி இருந்துட்டு உங்களை நீங்களே எழுத்தாளர்னு சொல்லிக்கிறாதீங்க, ப்ளீஸ்! எழுத்துத்துறைக்கே கேவலம்"


அந்த நிமிடம் க்ரிஷ் மீதான என் நேசம் முழுவதும் தூரதேசம் சென்றுவிட்டது. வெறிப்பிடித்தவள் போல் அவனிடம் அலறினேன். "போதும் நிறுத்துடா! உனக்கு நான் ரொம்ப இடம் குடுத்துட்டேன். அதான் இப்படியெல்லாம் பேசுற. உனக்கு அவங்க எழுத்துப் பிடிச்சா எனக்கும் பிடிக்கணும்னு ஏதாவது இருக்கா?"


அவன் கூறியது நினைத்து எனக்கு அழுகையாக வந்தது. அது ஒரு குற்றவுணர்வு. குரல் பிசிறு தட்டியதை அவனும் உணர்ந்திருக்கலாம். "சாரி அக்கா" என்றதோடு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.


'அக்கா' என்று கூப்பிட்டால் அது என்னை காயப்படுத்தும் என்றெண்ணி தானே ராஸ்கல்! இந்த வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறான். ச்சை! இவனுக்கு என் போன் நம்பரை கொடுத்திருக்கவேக் கூடாது.


முன்பு அவன் இப்படியெல்லாம் கிடையாது. எல்லாம் நான் இழுத்துக்கொண்டது தான். அவனிடம், 'க்ரிஷ், நான் எழுதுகிறேன் இல்லையா? அப்படி எழுத எனக்கே இப்போதெல்லாம் பிடிக்கவில்லை. ஷானின் வெட்டாட்டம் மாதிரி, அறிவியல் நம்பியின் கனவு கிராமம் மாதிரி, இன்னும் எப்படி எப்படியோ எழுத வேண்டும் எனக்கு. ஆனால், என்னால் இப்படி தான் எழுத முடிகிறது. எனக்கு இப்படித்தான் எழுத வருகிறது." என்றேன் ஆதங்கமாக.


அப்போதிருந்து தான் என் எழுத்தை செம்மைப்படுத்த பிடிவாதமாய் அதை வாசியுங்கள், இதை வாசியுங்கள் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.


எந்தப் புத்தகம் வாசித்தாலும் எனக்குத் தேவையான வார்த்தைகளை நாட்குறிப்பில் குறித்து வைப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். 'அவள் அதிர்ச்சியடைந்தாள்' என்பதை சொல்லத்தான் எவ்வளவு பதங்கள்! திடுக்கிட்டாள், திகைத்தாள், ஊகா முள்ளை மிதித்தாற் போலானாள், மின்சாரக் கம்பியை தொட்டாற்போலானாள், விதிர்த்துப் போனாள், விக்கித்துப் போனாள், ஸ்தம்பித்துப் போனாள்; ஒருவேளை 'அவள் அழுதாள்' என்றால், கண்கள் ததும்பின, கண்கள் பனித்தன, கண்களில் நீர்ப்படலமிட்டாள், தேம்பினாள், விசும்பினாள், விம்மினாள், கண்களில் கண்ணீர் கப்பியது, விழியிரண்டும் அருவியாகியன, நயனமிரண்டும் அடைமழை பொழிந்தன, கசிந்து மதகுடையும் அணையாய் அஞ்சனங்கள், இவ்வாறு எவ்வளவோ சொற்றொடர்கள். ஆனால், அனைத்துமே மூன்று நாவல்களுக்கு மேல் எனக்கே சலித்துவிட்டன.


இன்னும் இன்னும் புதிதாக இருக்க வேண்டும் என்று யோசித்து, 'அவள் விழியில் பூத்த கண்ணீர்ப்பூக்களை அவன் விரலால் கொய்தான்' என்று எழுதினாலும், அடுத்தமுறை இன்னும் புதிதாய் வேறொன்று யோசிக்கத் தோன்றுகிறது.


க்ரிஷிடம் எனது இந்த இக்கட்டைத் தெரிவித்தபோது வாலியின் பாண்டவர்பூமியை வாசிக்கச் சொன்னான். அதில் எதுகை மோனை என்று விளையாடியிருந்தார் வாலிபக் கவிஞர். மேலும், க்ரியா தமிழ் அகராதி ஒன்றையும் ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பி வைத்தான் க்ரிஷ். அக்கணம் என் மீதான அவன் ப்ரியம் குறித்து நெகிழ்ந்துவிட்டேன் நான்.


க்ரிஷ் கூறிய பழைய புத்தகங்களை வாசிக்கும் போதெல்லாம் எனது டைரிகளின் பக்கங்கள் நிரம்பிக்கொண்டே வந்தன. அவைகளின் மூலம் என் எழுத்துநடையும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டன.


க்ரிஷ் சமீபத்தில் வெளியான, ஏதாவது தான் வாசித்த புத்தகத்தைப் பற்றி பேசும்போது, 'இப்போதும் அனைவரும் கொல்லென்றே சிரிக்கிறார்கள்; 'ஙே' என்றே விழிக்கிறார்கள். இப்படி எழுத பெரிதாக மூளையை கசக்கவேண்டாமல்லவா?' என்று பகடி செய்வான். அப்போது தான் அந்த விஷயம் இன்னும் எனக்குள் உறுதிப்பட்டுக்கொண்டே வரும். இந்த சண்டாளனின் கையில் மட்டும் என் புத்தகம் சிக்கிவிடவேக்கூடாது.


க்ரிஷ் முதலில் ஜானகிராமனின் அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம் என வாசிக்கச் சொன்னபோது நன்றாகத்தான் இருந்தது. 'அம்மா வந்தாள்' வாசித்த ஒரு வாரமும் பிச்சி போலவே அலைந்தேன். ஜெயமோகனின் ஏழாம் உலகம் கூட அவன் கதை சொன்ன பிறகு வாசித்ததால் புரிந்தது. இத்தனைக்கும் இந்நாவலின் பேச்சுவழக்கைப் பாருங்கள் என்றே வாசிக்கப் பரிந்துரைத்தான். பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்', இமையத்தின் 'எங் கதெ' கூட இதே வகைப் பரிந்துரை தான்.


நானும் பதிலுக்கு சு.சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா, இந்திரா சௌந்தர்ராஜனின் சிவம், சிவசங்கரியின் அப்பா, எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம், வைரமுத்துவின் இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்று பரிந்துரைப்பேன். சொன்ன இரண்டு நாட்களிலே வாசித்துவிட்டேன் என்று வந்து நிற்பான். நீண்ட நேரத்திற்கு அவை குறித்து உரையாடுவான். எனக்கே அவர்களின் எழுத்திலுள்ள சில நுட்பங்களும், அபத்தங்களும் அப்போது தான் விளங்கும்.


யோசித்துப் பார்த்தால் க்ரிஷின் என் மீதான புகார்கள் தான் அதிகம். கிறுக்கன்! அவன் ஒரு வாசிப்புத் துணை தேடுகிறான். நான் அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். இடையில் ஜனரஞ்சகம், இலக்கியம் என்று வேறு புத்தகங்களை தரம் பிரிக்கிறான். நான் கொஞ்சம் மந்தம் என்று விளங்கியதாலோ என்னவோ பிறநாட்டு இலக்கியங்களைப் பற்றி பேசமாட்டான். இல்லையென்றால் எப்போதோ லியோ டால்ஸ்டாய், ஃபியோத்தர் தஸ்தாயெவ்ஸ்கி என்று தத்து பித்திருப்பான்.


சரி அவரை 'வாசி வாசி' என்கிறானே என்று எழுத்தாளர் சாருநிவேதிதாவை கடந்த இரண்டு வாரங்களாக தான் ஃபேஸ்புக்கில் பின் தொடருகிறேன். அவரும் ஒரு டாட் காம் வைத்திருக்கிறார். அதில் அவர் மட்டுமே எழுதுகிறார். நாம் ஃபேஸ்புக்கில் பதிவுகளாக போடுவதையெல்லாம் தனது டாட் காமில் போட்டுக்கொண்டு விரும்பினால் நிதி வழங்கச்சொல்லி இறுதியில் தனது வங்கிக்கணக்கு தகவல்களையும் இணைக்கிறார். அவைகளில் எவை கட்டுரை? எவை சிறுகதை? என்று கேட்பேன். க்ரிஷுக்கே அது புரியாத மர்மமாக இருக்கும்.


சாரு நிவேதிதா க்ரிஷுக்கு அண்ணன்; இல்லை, பெரியப்பா போல் நான் விரும்பி வாசித்த எழுத்தாளர்களான பிகேபியையும், வைரமுத்துவையும் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்கிறார். அவருக்கு ராஜேஷ்குமாரையும் ரமணிச்சந்திரனையும் வணிக எழுத்துகளின் முடிசூடா மன்னர், மகாராணி என்று விளிப்பதில் ஒரு அலாதி இன்பம்.


அது மட்டுமா? கி.ரா. என்ற எழுத்தாளரின் மறைவிற்கு அரசு மரியாதை செய்ததை வண்ணநிலவன் என்ற எழுத்தாளர் விமரிசித்திருப்பார் போலிருக்கிறது.


அதற்கு இந்த சாரு, "இப்போது வண்ணநிலவன் செய்திருப்பது பச்சை அயோக்கியத்தனம். ஏன் ஐயா, சினிமா நடிகர்களின் மரணத்தின் போது அரசு மரியாதை செய்ததே, அப்போதெல்லாம் உம் பின்பக்கத்தை மூடிக் கொண்டிருந்தீரே ஏன்? அப்போது ஏன் உம்முடைய தார்மீகக் கோபம் பொங்கி எழவில்லை?" என்று கடுமையாக சாடுகிறார்.


ஆழ யோசித்தால் சாருவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமும் இதுவாகத்தான் இருக்கிறது. மனிதர் ஒருவரை பெயரைச் சொல்லி புகழவும் தயங்க மாட்டேங்கிறார்; பெயரைச் சொல்லி இகழவும் தயங்க மாட்டேங்கிறார். தனக்கு சரி தவறென்று படுவதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். க்ரிஷும் அவரின் இந்த வெளிப்படைத்தன்மையாலே ரொம்ப ஈர்க்கப்பட்டான். அவன் பிடிவாதம் எப்பேர்ப்பட்டதென்று எனக்குத் தெரியாது. ஆனால், எப்படியும் முதல் அடியை நான் எடுத்து வைக்கமாட்டேன். இது உறுதி.


இது எங்களின் முதல் பிரிவு என்பதால், அந்த வெறுமை என்னை ரொம்பவே பாதித்தது. மனதை வேறுதிசையில் செலுத்தினால் ஒழிய இதிலிருந்து மீள வழியில்லையென்று ஃபேஸ்புக் புறமே மீண்டும் சென்றேன்.


பொதுவாகவே எனக்கொரு விஷயம் தெரிந்தால் அதை மற்றவர்களுக்கு சொல்லித் தருவதில் ஆர்வம் அதிகம். தொடர்ந்து தளங்கள், அமேசான் கிண்டில், நேஷன் பப்ளிஷ் என்று எனக்கு தெரிந்தவற்றைப் பற்றியெல்லாம் பதிவுகளாயிட்டு வந்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு மேலே அவை நல்லதொரு வரவேற்பை பெற்றன. லைக்குகளும் நூற்றைக் கடந்தன. எனக்கு அவையெல்லாம் பெரிதாகப்படவில்லை. இந்தப் பதிவுகளை க்ரிஷ் பார்ப்பான்; அவனது பிரிவு என்னை அவ்வளவொன்றும் மோசமாக்கிடவில்லை என்பதை உணர்வான் என்பது மட்டும் தான் எனது குறிக்கோளாக இருந்தது.


ஆனால், எனது தளங்கள் தொடர்பான பதிவு நற்பெயருடனே அவப்பெயரையும் எனக்கு ஒருசேரப் பெற்றுத் தந்தது. தளங்கள் போட்டி நடத்துவதன் மூலம் லட்ச லட்சமாக சம்பாதிக்கின்றன என்று நான் கூறவில்லை. ஏனென்றால், அது நான் அறிந்திராதப் பக்கம். தளங்களில் எழுதும் எழுத்தாளருக்கு தள உரிமையாளர் நிச்சயம் சம்பளம் தரவேண்டுமென்பதும் என் கோரிக்கையல்ல. ஆனால், புத்தகம் போடுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தாளரின் உரிமையையும், சுதந்திரத்தையும் தளங்கள் பறிப்பதை தான் நான் வன்மையாக கண்டித்தேன். தனது கதை எந்தத் தளத்தில், எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பம்; உரிமை; இதைத்தான் நான் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.


ஆனால், அப்சரஸ் டாட் காம் உரிமையாளரோ, போட்டி நடத்துவதன் மூலம் நாங்கள் லட்ச லட்சமாக சம்பாதிக்கிறோம் என்றால், நீங்களும் சொந்த தளம் உருவாக்கி நடத்த வேண்டியது தானே? என்று சவால் விட்டார்.


எனக்கு அவருடன் மல்லுக்கட்ட தெம்பில்லை. ஏற்கனவே க்ரிஷுடனான பூசலால் மிகவும் சோர்ந்து போயிருந்தேன் நான். இருப்பினும் மரியாதை கிடைக்குமோ இல்லையோ என்ற அக்கறையின்றி நேரே உள்பெட்டி சென்று என் தரப்பு வாதத்தை முன்வைத்தேன்.


"மேம், தள உரிமையாளர்கள் லட்சம் லட்சமாய் சம்பாதிப்பதாக எந்த இடத்திலும் நான் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்கலாம் என்றேன். இதில் தவறு என்ன உள்ளது? நான் என் பதிவில் தள உரிமையாளர் ஆட்சென்ஸ் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றதும், யாருடைய மூளையாவது ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகளை நோக்கி சுழன்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது, மேம்"


"ஷிவானி, உங்கப் பதிவுல தள உரிமையாளர் ஆட்சென்ஸ் மூலமா வருமானம் ஈட்டமுடியும்னு ரெண்டு இடத்துல அழுத்திச் சொல்லியிருக்கீங்க. அப்போ பார்க்கிறவங்க என்னப்பா நினைப்பாங்க? இவ நல்லா சம்பாதிக்கிறா; ஆனா, எழுதுற நமக்கு தான் ஒன்னும் தரமாட்டேன்கிறான்னு தானே?"


எனக்கு இதற்கு என்ன பதில் கொடுப்பதென்று தெரியவில்லை.


"ஒரு விஷயம் தெரிஞ்சிக்கங்க ஷிவானி. ஒரு தளம் அமைக்கணும்னா குறைஞ்சது இருபதனாயிரமாவது ஆகும். மேக்சிமம் எவ்ளோ ஆகும்னே சொல்ல முடியாது. அதுல நாம வைக்கிற வசதிகளைப் பொறுத்து செலவு இழுத்துக்கிட்டேப் போகும். எந்த தள உரிமையாளரும் தளத்துல வேலையே செய்யாம எல்லாம் காசைக் கண்ல பார்க்க முடியாதுப்பா. இது தவிர தளத்துல நாம கேட்கிற பல டெக்னிக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்ல, வெப் டிசைனர்ஸூம் தேவை. சில இடங்கள்ல அதுக்கு மாச சம்பளத்துல ஆள் வைக்கிறதும் உண்டு. நிறைய கதைகள் வரும் போது தளஉரிமையாளர் இப்படியொரு ஏற்பாடு செஞ்சு தான் ஆகனும். புரியுதா?"


எப்படி இவ்வளவு வேகமாக டைப் செய்ய முடிகிறது இவரால்?


"வருஷத்துக்கு இருபதாயிரம் செலவு செய்றவங்களுக்கு நாலாயிரம் தொடங்கி இருபத்தினாலாயிரம் வரை வருமானம் வரலாம். அதாவது, பதினாறாயிரம் நஷ்டமும் ஆகலாம். நாலாயிரம் லாபமும் கிடைக்கலாம். ஒரு தளம் அது செய்ற செலவு போக மாசம் அஞ்சாயிரம் வாங்கிட்டாலே பெரிய விஷயம் தான். அவ்வளவு முதலீடு, உழைப்பு போட்டு வாங்குற காசுல யாருக்கு என்ன பங்கு கொடுக்க முடியும் சொல்லுங்க?"


"நான் விசாரிச்ச வரைக்கும் சொந்தமா தளம் வச்சிருக்கிற எந்த எழுத்தாளர்கிட்டயுமே வெற்றிக்கதை இல்ல, மேம். எல்லாம் பஞ்சப்பாட்டு தான் பாடுறீங்க. ஆனா, இவ்வளவு சறுக்கல்லயும் போட்டி வச்சு பரிசு கொடுக்குறதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் மேம்"


"இப்பவும் தப்பா தான் புரிஞ்சிக்கிறீங்க. எல்லாருமே லாப நஷ்ட கணக்கைப் பார்க்கிறதில்லை."


இந்தியர்கள் இவ்வளவு நல்லவர்களாக இருப்பதற்காகவாவது இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொள்ளலாம்.


"நான் தளம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு தளத்துல எழுதினேன். அங்க எனக்கு ஒரு கதைக்கு ஆயிர ரூபா தந்தாங்க. நான் தளம் ஆரம்பிச்ச பின்னாடியும் கடந்த நாலு வருசமா என் கதைய ரிமூவ் பண்ணுங்க; கிண்டில்ல போடணும்; புக் போடணும்னு சொல்லிட்டே இருக்கேன். பட், நோ ரெஸ்பான்ஸ். இந்த மாதிரி எந்த விதமான அவஸ்தைக்கும் ஆளாகக்கூடாதுன்னு தான் ரைட்டர்ஸ் தளம் ஆரம்பிக்கிறது."


'இறைவா! நான் இப்ப தளம் ஆரம்பிக்கிறதை தப்புன்னு சொல்லவே இல்லையே!'


"தளங்கள் மூலமாத்தான் எழுத்தாளர்-வாசகருக்கிடையில ஒரு நல்ல நட்புறவு உண்டாகுது. எழுத்தாளரும் ஃபேமஸ் ஆகுறாங்க. தள உரிமையாளர் பதிப்பகம் வச்சிருந்தா தன் தளத்துல எழுதுற எழுத்தாளருக்கு அவங்களேவும் புத்தகம் போட உதவுறாங்க. இப்போ நீங்க போட்டிருக்க பதிவுனால தளங்கள் மேல அவங்களுக்கு ஒரு அவ நம்பிக்கை உண்டாகும் தெரியுமா?"


அவ நம்பிக்கை உண்டாகுமா?


"மேம், நான் நடக்காத விஷயத்தை ஒன்னும் இட்டுக்கட்டி சொல்லல. நடக்கிற விஷயத்தை தான் சொல்றேன். ஒருவேளை உங்க தளத்துல வேணா அது நடக்காம இருக்கலாம். மத்ததெல்லாம் விடுங்க மேம்; 'என் தளத்துல எழுதினா வேறு தளத்துல நீ எழுதக்கூடாது; தெரிஞ்சா தளத்தைவிட்டு தூக்கிருவேன்'னு சொல்றதெல்லாம் என்ன மாதிரியான சர்வாதிகாரம் மேம்? நீங்களே உங்க ஆசைக்கு தான் தளம் வச்சிருக்கீங்கன்னா, மத்த எழுத்தாளர்கள் யார் வந்தாலும் பரந்த மனசோட ஏத்துக்கிறது தானே மேம் தர்மம்? அவங்கக்கிட்ட ஏன் மேம் விசுவாசத்தை எதிர்பார்க்குறீங்க?"


இந்தக் கேள்விக்கு தலைப்புப்பட்டையில் நீண்டநேரம் 'டைப்பிங்' என்று வந்தது. நான் பொறுத்தாலும் என் போனிற்கு பொறுக்கவில்லை. சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆனது, தானாகவே.


________________

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

தளத்தில் லாகின் செய்து உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்🙂

கருத்துத்திரி,
https://www.sahaptham.com/community/threads/comment-thread-for-shivanis-novels.356/
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 12



காலையில் விழித்தவுடனே அப்சரஸ் டாட் காம் உரிமையாளர் எனக்காக எழுதியிருந்த கட்டுரையை நோக்கி எனது கண்கள் அலை பாய்ந்தன. அவர் மீண்டும் மீண்டும் தளங்களில் எழுதுவதிலுள்ள நன்மைகளையே பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். நான் கேட்ட விசுவாசத்தைப் பற்றி மறந்துவிட்டார். எனக்கு தான் அவற்றை வாசிக்க வலிமை ரொம்ப வேண்டியதாகியிருந்தது.


அவற்றில் என் விழியை விரியச் செய்த விஷயம் இது தான். "அமேசான் கிண்டிலில் ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் வருமானம் பார்க்கும் எழுத்தாளர்கள், தங்கள் கதைகளை ஏன் வாசகர்களுக்கு இலவச பிடிஎஃப்பாக கொடுக்கக்கூடாது?" என்று யாரோ ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டிருந்ததாம். அந்தக் கூட்டத்தைப் போலவே நானும் அமேசான் கிண்டில் பற்றி பொய் பிரச்சாரம் பண்ணுகிறேனாம்.


உளறிய கூட்டம் எதுவென்று யூகிக்க முடிந்தாலும், கிண்டிலில் மாதம் பத்தாயிரம் வருமானம் என்பதெல்லாம் எல்லா எழுத்தாளர்களுக்கும் சாத்தியம் கிடையாது. அமேசான் கிண்டிலில் 'KENP Reads' ஒரு லட்சத்தை தொட்டால் ஒழிய இப்படி மாதம் பத்தாயிரம் பெறுவதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அதுபோக, கிண்டில்காரனும் வில்லாதி வில்லன்.


எனது மூன்றாவது கதையை அமேசான் கிண்டிலில் பதிவேற்றிய சமயம், அது வாசிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையானது திடீரென லட்சத்தைக் கடந்தது. நானும் பத்தாயிரத்துக்கு மேலே என் வங்கிக்கணக்கில் ஏறும் என்ற இறுமாப்பில் இருந்தேன். ஆனால், மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தான் அந்த அக்கிரமம் நிகழ்ந்தது. எனது பிப்ரவரி மாதத்திற்கான 'KENP Reads' லட்சத்திலிருந்து ஐம்பதாயிரமாக குறைக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவத்தால், வெறும் ஐயாயிரம் மட்டுமே என் வங்கிக்கணக்கில் ஏறியது.


என்னால் என்ன பிரச்சனை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஃபேஸ்புக்கில் எனது எழுத்தாள நண்பர்களிடம் காரணம் கேட்டேன். அதையும் கவன ஈர்ப்பு போராட்டமாகக் கருதினார்கள் சிலர்.


முக்கியமானது, பலரும் தங்களுக்கும் இப்படி ஆகியிருக்கிறது என்று புகார் தெரிவித்தது தான். குறிப்பாக, வாசிப்பு பக்கங்களின் எண்ணிக்கை லட்சத்தை நெருங்கும், அல்லது கடக்கும் மாதங்களில் மட்டுமே இவ்வாறு பாதியாகக் குறைகிறது என்றார்கள். நான் மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது அமேசான் கிண்டில் நிறுவனத்தார், "ஒரு சிறு குளறுபடி ஏற்பட்டது. இப்போது எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது" என்றார்கள்.



'அப்படியானால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன என்று அமேசான் கிண்டில் நிறுவனத்தால் 'Report' பக்கத்தில் காட்டுப்படுபவை எல்லாம் உண்மை அறிக்கை இல்லையா? ஒரு எழுத்தாளர் எப்போதும் தனது புத்தகத்தின் வாசிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை அதிகமானால் சந்தோசம் தான் படுவார். ஆனால், அமேசான் கிண்டிலில் மட்டும் அவன் எப்போது அதை பாதியாக குறைப்பானோ என்று பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? அச்சுப்புத்தகம் போட முடியவில்லையானாலும், இவ்வளவு நாளாக அந்த அமேசான் கிண்டில் தான் ராயல்டி விஷயத்தில் நம்பகமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இப்படியொரு இடியா?' என்று ஏகப்பட்ட திடுக்கிடல்கள் எனக்குள்.


ஒரேயொரு நிம்மதி, பாரபட்சமின்றி அனைத்து டாட் காம்களை சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.

ஆனால், யார் சென்று எங்கள் தரப்பில் கிண்டில்காரனிடம் பேசுவது என்று தான் தெரியவில்லை.


ஒருமுறை இது பெரிய பிரச்சனையாக தலைதூக்கியபோது 'வசீகரி டாட் காம்' உரிமையாளர், 'யாருக்கெல்லாம் அமேசான் கிண்டிலில் ராயல்டி குறைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களெல்லாம் நான் அனுப்பும் இந்த படிவத்தை நிரப்பித் தாருங்கள்; உங்கள் சார்பில் நான் அமேசான் கிண்டில் நிறுவனத்தாரிடம் சமர்ப்பிக்கிறேன்' என்றார்.


அவர் சமர்ப்பிப்பதால் நியாயம் கிடைக்கப்போகிறதோ? இல்லையோ? தள வேறுபாடின்றி அனைத்து எழுத்தாளர்களையும் இவ்விஷயத்தில் ஒன்றிணைக்கும் அவரின் முயற்சியை பாராட்டலாம் தானே! ம்க்கும், இதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வேலைக்காகாது என்றார்கள். எனக்கு விசனமெல்லாம், குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும் என்று இவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவது தான்.


****************


சக்கரவியூகத்தில் அபிமன்யூ மாட்டிக்கொண்டது போல், என்னைச் சுற்றி ஆயிரம் பிரச்சனைகளுக்கிடையே நான் மாட்டிக்கொண்டிருந்தாலும், புத்தகம் போடவேண்டும் என்ற என் ஆசையை மட்டும் கைவிடவில்லை.


கூகுளில் தமிழில் பிரபலமான பதிப்பகங்களின் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம் தேடித்தேடி சேகரித்தேன்.


பின், அவை ஒவ்வொன்றிற்குமாய் கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்து எனது நாவலின் மின்னூல் பிரதியையும் உடன் இணைத்து அனுப்பி வைத்தேன்.


" ***** பதிப்பகத்தாருக்கு வணக்கம். என் பெயர் ஷிவானி. நான் ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளர். நான் இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறேன். மூன்றுமே குடும்ப நாவல்கள். எனது நாவல்களை புத்தகமாக பதிப்பிக்க உங்களால் உதவ முடிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். இத்தோடு எனது நாவல்களையும் Word file-ஆக இணைத்திருக்கிறேன். நன்றி"


எனது இந்த மின்னஞ்சலுக்கு சொல்லிவைத்தாற்போல் எட்டு பதிப்பகங்களுமே மௌனத்தையே கடைபிடித்தன.


புண்ணியமாக மூன்று பதிப்பகங்களின் தொலைபேசி எண்கள் கிடைத்ததால், அவற்றிற்கு முயன்று பார்த்தேன்.


ஒரு பதிப்பகமோ, "நாங்கள் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை பதிப்பிப்பதில்லை" என்றார்கள்.


இன்னொருவரோ, "ஒருவேளை பத்தாயிரம் கொடுத்து நீங்களே உங்கள் புத்தகத்திற்கு முதலீட்டாளரானால் நாங்கள் பதிப்பிக்கிறோம்" என்றார்கள்.


இவற்றில் நான் கவனிக்கத் தவறிய ஒன்றை மூன்றாம் பதிப்பகம் சொன்னது. "நாங்கள் குடும்ப நாவல்கள் எல்லாம் பதிப்பிப்பதில்லை. வரலாற்று நாவல்களுக்கு மட்டுமே எங்களிடம் முன்னுரிமை. நீங்கள் குடும்ப நாவல்கள் பதிப்பிக்கும் பதிப்பகங்களை அணுகுங்கள்" என்றார்கள்.


'அட! புத்தகம் பதிப்பித்தலிலேயே எப்படியான புத்தகங்களை மட்டும் பதிப்பிப்போம் என்றும் பதிப்பகங்கள் கொள்கை கடைபிடிக்கிறார்களா?' என்று ஏகப்பட்ட வியப்பு எனக்கு.


டாட் காம் வைத்துள்ள சில பதிப்பகங்களும் இதுபோல் கொள்கை கடைபிடிப்பதை நான் அறிவேன். ஆனால், குடும்ப நாவல்களையே பதிப்பித்தாலும் அவை வேறு மாதிரி இருக்கும். நாவல் இவ்வளவு வார்த்தைகளுக்குள் தான் இருக்க வேண்டும்; முடிவு சுபமானதாகத்தான் இருக்க வேண்டும்; நாவலில் காதல்காட்சிகளை விரசமில்லாமல் எழுத வேண்டும்; போதைவஸ்துகள் பயன்படுத்தலையும், பாலியல் வன்கொடுமைகளையும் நியாயமென்று கற்பிக்கக்கூடாது; பேச்சு வழக்கானாலும் கதாபாத்திரம் கெட்ட வார்த்தை பேசக்கூடாது; அச்சிடவிருக்கும் அந்தக்கதை அமேசான் கிண்டிலில் இருக்கக்கூடாது; இன்னும் இத்யாதி இத்யாதி என்று அது நீளும்.


ஒன்றிரண்டிற்கு உடன்பட்டாலும், ஒரு எழுத்தாளரை கூண்டிற்குள் அடைத்து வைப்பதான விதிமுறைகள் தான் இவை. தன் சமகாலத்தை, உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்ய இது மாபெரும் தடைவிதிக்கிறது. இருப்பினும், தனது ஒன்று விட்ட பெரியப்பா பிரிண்டிங் ப்ரெஸ்ஸில் வேலை செய்யாத அனைவரும் இப்படி சில விதிமுறைகளுக்குள் சிக்கித் தவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.


****************


நான் எழுத வந்து எட்டு மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் என் பேராசிரியரிடமிருந்து ஒரு அழைப்பு. அவர் நான் உள்ளே வந்த பின்பும், தான் திருத்த வேண்டிய தேர்வுத்தாள்களையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது மேசையிலிருந்த பெயர்ப்பலகையை பார்த்துக் கொண்டிருந்தேன். 'இ.ராஜாகுமார், எம்எஸ்சி (பிசிக்ஸ்), பிஹெச்டி, பிஜிடிசிஏ, நெட்'


"அடுத்த வருஷம் உங்க ப்ராஜெக்ட் கைடு நான் தான்! மினி மேடம் சொல்லியிருப்பாங்களே? உங்கக்கிட்ட லேப்டாப் இல்லைன்னு கேள்விப்பட்டேன். தீஸிஸ் எல்லாம் எதுல டைப் பண்ணுவீங்க?"


'நான் என்ன அந்த பேப்பருக்குள்ளயா இருக்கேன்? உங்களுக்கு எதிர்ல தான் நிக்கிறேன் சார். என் முகத்தைப் பார்த்து பேசுங்க.'


"ம்ம்.. என்ன பண்ணப் போறீங்க?"


"என் ப்ராஜெக்ட்மேட் இலக்கியா, அவங்கக்கிட்ட ரெண்டு லேப்டாப் இருக்குன்னு எனக்கொன்னு தர்றதா சொன்னாங்க சார்."


"ஓஹ், நான் எங்க போன்ல கதை டைப் பண்ற மாதிரி, இதையும் போன்லயே பண்ணப்போறீங்களோன்னு பயந்துட்டேன்."


'நீங்க முன்னாடி மாதிரி நிமிர்ந்து பார்க்காமலே பேசுங்க சார். எனக்கு ஒரு மாதிரி இருக்கு'


"ஷிவானி, உங்களுக்கு கண்ணாடி பார்க்கிற பழக்கம் இருக்கா?"


"சார்?"


"இல்ல, நீங்க இங்க ஜாயின் பண்ண வந்தப்போ எப்படியிருந்தீங்க, இப்போ எப்படி இருக்கீங்கன்னு போன்ல செல்ஃபி ஏதும் இருந்தா கம்ப்பேர் பண்ணிப் பாருங்க. நீங்க ரொம்ப மெலிஞ்சிட்டீங்க ஷிவானி. உங்கக் கண்ணைச் சுத்தி கருவளையம் வந்திருக்கு. ஃபேஸ்புக்ல பாத்தேன், எழுத்தாளரா உங்கப்பேரை தக்க வச்சிக்க ரொம்பப் போராடுறீங்கல்ல? முழுசா அதுக்குள்ளயே கிடக்குறீங்கல்ல? இது நல்லதில்ல ஷிவானி. இதையே நீங்க முழு நேர வேலையா செய்ய முடியாது. சோஷியல் மீடியா ஒரு விர்ச்சுவல் வேர்ல்ட். நீங்க உங்க ரியாலிட்டிக்கு வாங்க. எழுத்தாளர் சுஜாதா தெரியுமா?"


"தெரியும் சார். அவங்களும் யூஜில பிசிக்ஸ் தான் பண்ணியிருக்காங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் அவரும் கிளாஸ்மேட்ஸ்"


"ம்ம், அவர் எம்சிஏ படிச்சிட்டு எழுத்துத்துறைக்கு வந்த ஒரு இளம் எழுத்தாளர்க்கு சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா? 'முதல்ல நல்லவேலைக்குப் போங்க, உங்களுக்குன்னு மாசாமாசம் நிலையான சம்பளம் வர்ற மாதிரி ஒரு வேலையைத் தேடிக்கங்க. எழுதறது முழுநேரத்தொழிலா இருந்தா எல்லாம் பிழைக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காரு. சொன்னப்போ அவர் யாரு? எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். அவருக்கே இது தான் நிலைமை. அப்புறம் முழுநேரமா எழுதும்போது நமக்கு பல துறை சார்ந்த அனுபவம் கிடைக்காதாம். ஒரு கட்டத்துல நமக்கே எழுத்து மேல வெறுப்போ, கோபமோக்கூட வந்திடுமாம். நான் நீங்க இப்போ அழுற அளவுக்கு எதுவும் சொல்லலையே? இதெல்லாம் உங்க ஓய்வு நேரத்துல பண்ணுங்கன்னு தான் சொல்றேன். உங்களையே நீங்க ஸ்பாயில் பண்ணிக்கக் கூடாது. இப்ப நம்ம ப்ராஜெக்ட் பத்தி பாக்கலாமா?"


"யெஸ் சார்"


"இல்ல நம்ம நாளைலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம். க்ளாஸுக்கு போகும்போது முகத்தை கழுவிட்டுப் போங்க."


"ஓகே சார்"


அவர் கூறுவதில் தவறேயில்லை. நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன். எனது கண்களை கொஞ்ச கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறேன். ஃபேஸ்புக்கில் பொங்கல் வாங்கிய சமயமெல்லாம் என் பெற்றோரிடமும், நண்பர்களிடமும் காரணமேயில்லாமல் எரிந்து விழுந்திருக்கிறேன். நான் இதிலிருந்து வெளிவந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் ஒருநாள் நானே என் உயிரை பறிக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவேன்.


முகத்தை அரசமரத்தடியில் இருக்கும் குழாய் நீரில் அடித்துக்கழுவியப் பின், வகுப்பறைக்குச் செல்ல மனமில்லாமல், அங்கிருந்த கல்மேடையில் ஏறி அமர்ந்தேன்.


காற்று வெம்மை பூசியிருந்தாலும் அப்போதைக்கு எனக்கு தேவையாயிருந்தது. மடியில் கிடந்த பர்ஸைத் திறந்து கைப்பேசியை எடுத்தேன். மிகவும் கனத்தது அது.

ஊப்ப்! என் ஓய்வுநேரத்தை நான் என் எழுத்துக்காக செலவழிக்கப்போகிறேன். அதில் என் கவனத்தை திசைதிருப்பும் விதமாய் செயல்படும் யாரும் எனக்கு தேவையில்லை.


முதலில் ரமணிச்சந்திரன் நாவல்ஸ் குழு உள்ளிட்ட சில நாவல் குழுக்களை அன்ஃபாலோவில் போட்டேன். பின், தொடர் போராட்டக்காரர்கள், என் மீது அபிப்ராயமேதுமின்றி போலியாக நண்பர்கள் போர்வையில் ஒளிந்திருப்பவர்கள், தகுதியே இல்லாதவர்கள் என்று நான் நினைப்பவர்களை கொண்டாடுபவர்கள், விமர்சகர்கள் பெயரில் கூஜாக்கள், சோற்றில் ஒருபிடி மண்ணை அள்ளிப்போட்டாலும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உண்ணும் சில அமைதிப்படை எழுத்தாளர்கள் என்று சரமாரியாக அனைவரையும் அன்ஃபிரெண்ட் செய்தேன்.


அப்போது 'யார் யாரை கொண்டாடினால் உனக்கென்ன ஷிவானி? அவர்கள் ரசனை உன் ரசனையோடு ஒத்துப்போக வேண்டுமா? உன் கருத்துகளை அவர்கள் ஆமோதிக்க வேண்டுமா?' என்று தோன்றத் தான் செய்தது.

இருப்பினும், 'அன்ஃபிரெண்ட் செய்தது அன்ஃபிரெண்ட் செய்ததாகவே இருக்கட்டும்! எனக்குத் தேவை நிம்மதி' என்று வைராக்கியமாக ஜென்நிலைக்கு சென்றேன் நான்.

******************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

அகைன் ப்ளீஸ் கிவ் ஹார்ட் டச்சிங் கமெண்ட்ஸ்யா😉

கருத்துத்திரி,
❤️💙💚💛💜🖤
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம் 12



காலையில் விழித்தவுடனே அப்சரஸ் டாட் காம் உரிமையாளர் எனக்காக எழுதியிருந்த கட்டுரையை நோக்கி எனது கண்கள் அலை பாய்ந்தன. அவர் மீண்டும் மீண்டும் தளங்களில் எழுதுவதிலுள்ள நன்மைகளையே பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். நான் கேட்ட விசுவாசத்தைப் பற்றி மறந்துவிட்டார். எனக்கு தான் அவற்றை வாசிக்க வலிமை ரொம்ப வேண்டியதாகியிருந்தது.


அவற்றில் என் விழியை விரியச் செய்த விஷயம் இது தான். "அமேசான் கிண்டிலில் ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் வருமானம் பார்க்கும் எழுத்தாளர்கள், தங்கள் கதைகளை ஏன் வாசகர்களுக்கு இலவச பிடிஎஃப்பாக கொடுக்கக்கூடாது?" என்று யாரோ ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டிருந்ததாம். அந்தக் கூட்டத்தைப் போலவே நானும் அமேசான் கிண்டில் பற்றி பொய் பிரச்சாரம் பண்ணுகிறேனாம்.


உளறிய கூட்டம் எதுவென்று யூகிக்க முடிந்தாலும், கிண்டிலில் மாதம் பத்தாயிரம் வருமானம் என்பதெல்லாம் எல்லா எழுத்தாளர்களுக்கும் சாத்தியம் கிடையாது. அமேசான் கிண்டிலில் 'KENP Reads' ஒரு லட்சத்தை தொட்டால் ஒழிய இப்படி மாதம் பத்தாயிரம் பெறுவதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அதுபோக, கிண்டில்காரனும் வில்லாதி வில்லன்.


எனது மூன்றாவது கதையை அமேசான் கிண்டிலில் பதிவேற்றிய சமயம், அது வாசிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையானது திடீரென லட்சத்தைக் கடந்தது. நானும் பத்தாயிரத்துக்கு மேலே என் வங்கிக்கணக்கில் ஏறும் என்ற இறுமாப்பில் இருந்தேன். ஆனால், மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தான் அந்த அக்கிரமம் நிகழ்ந்தது. எனது பிப்ரவரி மாதத்திற்கான 'KENP Reads' லட்சத்திலிருந்து ஐம்பதாயிரமாக குறைக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவத்தால், வெறும் ஐயாயிரம் மட்டுமே என் வங்கிக்கணக்கில் ஏறியது.


என்னால் என்ன பிரச்சனை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஃபேஸ்புக்கில் எனது எழுத்தாள நண்பர்களிடம் காரணம் கேட்டேன். அதையும் கவன ஈர்ப்பு போராட்டமாகக் கருதினார்கள் சிலர்.


முக்கியமானது, பலரும் தங்களுக்கும் இப்படி ஆகியிருக்கிறது என்று புகார் தெரிவித்தது தான். குறிப்பாக, வாசிப்பு பக்கங்களின் எண்ணிக்கை லட்சத்தை நெருங்கும், அல்லது கடக்கும் மாதங்களில் மட்டுமே இவ்வாறு பாதியாகக் குறைகிறது என்றார்கள். நான் மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது அமேசான் கிண்டில் நிறுவனத்தார், "ஒரு சிறு குளறுபடி ஏற்பட்டது. இப்போது எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது" என்றார்கள்.



'அப்படியானால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன என்று அமேசான் கிண்டில் நிறுவனத்தால் 'Report' பக்கத்தில் காட்டுப்படுபவை எல்லாம் உண்மை அறிக்கை இல்லையா? ஒரு எழுத்தாளர் எப்போதும் தனது புத்தகத்தின் வாசிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை அதிகமானால் சந்தோசம் தான் படுவார். ஆனால், அமேசான் கிண்டிலில் மட்டும் அவன் எப்போது அதை பாதியாக குறைப்பானோ என்று பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? அச்சுப்புத்தகம் போட முடியவில்லையானாலும், இவ்வளவு நாளாக அந்த அமேசான் கிண்டில் தான் ராயல்டி விஷயத்தில் நம்பகமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இப்படியொரு இடியா?' என்று ஏகப்பட்ட திடுக்கிடல்கள் எனக்குள்.


ஒரேயொரு நிம்மதி, பாரபட்சமின்றி அனைத்து டாட் காம்களை சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.

ஆனால், யார் சென்று எங்கள் தரப்பில் கிண்டில்காரனிடம் பேசுவது என்று தான் தெரியவில்லை.


ஒருமுறை இது பெரிய பிரச்சனையாக தலைதூக்கியபோது 'வசீகரி டாட் காம்' உரிமையாளர், 'யாருக்கெல்லாம் அமேசான் கிண்டிலில் ராயல்டி குறைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களெல்லாம் நான் அனுப்பும் இந்த படிவத்தை நிரப்பித் தாருங்கள்; உங்கள் சார்பில் நான் அமேசான் கிண்டில் நிறுவனத்தாரிடம் சமர்ப்பிக்கிறேன்' என்றார்.


அவர் சமர்ப்பிப்பதால் நியாயம் கிடைக்கப்போகிறதோ? இல்லையோ? தள வேறுபாடின்றி அனைத்து எழுத்தாளர்களையும் இவ்விஷயத்தில் ஒன்றிணைக்கும் அவரின் முயற்சியை பாராட்டலாம் தானே! ம்க்கும், இதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வேலைக்காகாது என்றார்கள். எனக்கு விசனமெல்லாம், குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும் என்று இவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவது தான்.


****************


சக்கரவியூகத்தில் அபிமன்யூ மாட்டிக்கொண்டது போல், என்னைச் சுற்றி ஆயிரம் பிரச்சனைகளுக்கிடையே நான் மாட்டிக்கொண்டிருந்தாலும், புத்தகம் போடவேண்டும் என்ற என் ஆசையை மட்டும் கைவிடவில்லை.


கூகுளில் தமிழில் பிரபலமான பதிப்பகங்களின் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம் தேடித்தேடி சேகரித்தேன்.


பின், அவை ஒவ்வொன்றிற்குமாய் கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்து எனது நாவலின் மின்னூல் பிரதியையும் உடன் இணைத்து அனுப்பி வைத்தேன்.


" ***** பதிப்பகத்தாருக்கு வணக்கம். என் பெயர் ஷிவானி. நான் ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளர். நான் இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறேன். மூன்றுமே குடும்ப நாவல்கள். எனது நாவல்களை புத்தகமாக பதிப்பிக்க உங்களால் உதவ முடிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். இத்தோடு எனது நாவல்களையும் Word file-ஆக இணைத்திருக்கிறேன். நன்றி"


எனது இந்த மின்னஞ்சலுக்கு சொல்லிவைத்தாற்போல் எட்டு பதிப்பகங்களுமே மௌனத்தையே கடைபிடித்தன.


புண்ணியமாக மூன்று பதிப்பகங்களின் தொலைபேசி எண்கள் கிடைத்ததால், அவற்றிற்கு முயன்று பார்த்தேன்.


ஒரு பதிப்பகமோ, "நாங்கள் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை பதிப்பிப்பதில்லை" என்றார்கள்.


இன்னொருவரோ, "ஒருவேளை பத்தாயிரம் கொடுத்து நீங்களே உங்கள் புத்தகத்திற்கு முதலீட்டாளரானால் நாங்கள் பதிப்பிக்கிறோம்" என்றார்கள்.


இவற்றில் நான் கவனிக்கத் தவறிய ஒன்றை மூன்றாம் பதிப்பகம் சொன்னது. "நாங்கள் குடும்ப நாவல்கள் எல்லாம் பதிப்பிப்பதில்லை. வரலாற்று நாவல்களுக்கு மட்டுமே எங்களிடம் முன்னுரிமை. நீங்கள் குடும்ப நாவல்கள் பதிப்பிக்கும் பதிப்பகங்களை அணுகுங்கள்" என்றார்கள்.


'அட! புத்தகம் பதிப்பித்தலிலேயே எப்படியான புத்தகங்களை மட்டும் பதிப்பிப்போம் என்றும் பதிப்பகங்கள் கொள்கை கடைபிடிக்கிறார்களா?' என்று ஏகப்பட்ட வியப்பு எனக்கு.


டாட் காம் வைத்துள்ள சில பதிப்பகங்களும் இதுபோல் கொள்கை கடைபிடிப்பதை நான் அறிவேன். ஆனால், குடும்ப நாவல்களையே பதிப்பித்தாலும் அவை வேறு மாதிரி இருக்கும். நாவல் இவ்வளவு வார்த்தைகளுக்குள் தான் இருக்க வேண்டும்; முடிவு சுபமானதாகத்தான் இருக்க வேண்டும்; நாவலில் காதல்காட்சிகளை விரசமில்லாமல் எழுத வேண்டும்; போதைவஸ்துகள் பயன்படுத்தலையும், பாலியல் வன்கொடுமைகளையும் நியாயமென்று கற்பிக்கக்கூடாது; பேச்சு வழக்கானாலும் கதாபாத்திரம் கெட்ட வார்த்தை பேசக்கூடாது; அச்சிடவிருக்கும் அந்தக்கதை அமேசான் கிண்டிலில் இருக்கக்கூடாது; இன்னும் இத்யாதி இத்யாதி என்று அது நீளும்.


ஒன்றிரண்டிற்கு உடன்பட்டாலும், ஒரு எழுத்தாளரை கூண்டிற்குள் அடைத்து வைப்பதான விதிமுறைகள் தான் இவை. தன் சமகாலத்தை, உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்ய இது மாபெரும் தடைவிதிக்கிறது. இருப்பினும், தனது ஒன்று விட்ட பெரியப்பா பிரிண்டிங் ப்ரெஸ்ஸில் வேலை செய்யாத அனைவரும் இப்படி சில விதிமுறைகளுக்குள் சிக்கித் தவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.


****************


நான் எழுத வந்து எட்டு மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் என் பேராசிரியரிடமிருந்து ஒரு அழைப்பு. அவர் நான் உள்ளே வந்த பின்பும், தான் திருத்த வேண்டிய தேர்வுத்தாள்களையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது மேசையிலிருந்த பெயர்ப்பலகையை பார்த்துக் கொண்டிருந்தேன். 'இ.ராஜாகுமார், எம்எஸ்சி (பிசிக்ஸ்), பிஹெச்டி, பிஜிடிசிஏ, நெட்'


"அடுத்த வருஷம் உங்க ப்ராஜெக்ட் கைடு நான் தான்! மினி மேடம் சொல்லியிருப்பாங்களே? உங்கக்கிட்ட லேப்டாப் இல்லைன்னு கேள்விப்பட்டேன். தீஸிஸ் எல்லாம் எதுல டைப் பண்ணுவீங்க?"


'நான் என்ன அந்த பேப்பருக்குள்ளயா இருக்கேன்? உங்களுக்கு எதிர்ல தான் நிக்கிறேன் சார். என் முகத்தைப் பார்த்து பேசுங்க.'


"ம்ம்.. என்ன பண்ணப் போறீங்க?"


"என் ப்ராஜெக்ட்மேட் இலக்கியா, அவங்கக்கிட்ட ரெண்டு லேப்டாப் இருக்குன்னு எனக்கொன்னு தர்றதா சொன்னாங்க சார்."


"ஓஹ், நான் எங்க போன்ல கதை டைப் பண்ற மாதிரி, இதையும் போன்லயே பண்ணப்போறீங்களோன்னு பயந்துட்டேன்."


'நீங்க முன்னாடி மாதிரி நிமிர்ந்து பார்க்காமலே பேசுங்க சார். எனக்கு ஒரு மாதிரி இருக்கு'


"ஷிவானி, உங்களுக்கு கண்ணாடி பார்க்கிற பழக்கம் இருக்கா?"


"சார்?"


"இல்ல, நீங்க இங்க ஜாயின் பண்ண வந்தப்போ எப்படியிருந்தீங்க, இப்போ எப்படி இருக்கீங்கன்னு போன்ல செல்ஃபி ஏதும் இருந்தா கம்ப்பேர் பண்ணிப் பாருங்க. நீங்க ரொம்ப மெலிஞ்சிட்டீங்க ஷிவானி. உங்கக் கண்ணைச் சுத்தி கருவளையம் வந்திருக்கு. ஃபேஸ்புக்ல பாத்தேன், எழுத்தாளரா உங்கப்பேரை தக்க வச்சிக்க ரொம்பப் போராடுறீங்கல்ல? முழுசா அதுக்குள்ளயே கிடக்குறீங்கல்ல? இது நல்லதில்ல ஷிவானி. இதையே நீங்க முழு நேர வேலையா செய்ய முடியாது. சோஷியல் மீடியா ஒரு விர்ச்சுவல் வேர்ல்ட். நீங்க உங்க ரியாலிட்டிக்கு வாங்க. எழுத்தாளர் சுஜாதா தெரியுமா?"


"தெரியும் சார். அவங்களும் யூஜில பிசிக்ஸ் தான் பண்ணியிருக்காங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் அவரும் கிளாஸ்மேட்ஸ்"


"ம்ம், அவர் எம்சிஏ படிச்சிட்டு எழுத்துத்துறைக்கு வந்த ஒரு இளம் எழுத்தாளர்க்கு சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா? 'முதல்ல நல்லவேலைக்குப் போங்க, உங்களுக்குன்னு மாசாமாசம் நிலையான சம்பளம் வர்ற மாதிரி ஒரு வேலையைத் தேடிக்கங்க. எழுதறது முழுநேரத்தொழிலா இருந்தா எல்லாம் பிழைக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காரு. சொன்னப்போ அவர் யாரு? எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். அவருக்கே இது தான் நிலைமை. அப்புறம் முழுநேரமா எழுதும்போது நமக்கு பல துறை சார்ந்த அனுபவம் கிடைக்காதாம். ஒரு கட்டத்துல நமக்கே எழுத்து மேல வெறுப்போ, கோபமோக்கூட வந்திடுமாம். நான் நீங்க இப்போ அழுற அளவுக்கு எதுவும் சொல்லலையே? இதெல்லாம் உங்க ஓய்வு நேரத்துல பண்ணுங்கன்னு தான் சொல்றேன். உங்களையே நீங்க ஸ்பாயில் பண்ணிக்கக் கூடாது. இப்ப நம்ம ப்ராஜெக்ட் பத்தி பாக்கலாமா?"


"யெஸ் சார்"


"இல்ல நம்ம நாளைலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம். க்ளாஸுக்கு போகும்போது முகத்தை கழுவிட்டுப் போங்க."


"ஓகே சார்"


அவர் கூறுவதில் தவறேயில்லை. நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன். எனது கண்களை கொஞ்ச கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறேன். ஃபேஸ்புக்கில் பொங்கல் வாங்கிய சமயமெல்லாம் என் பெற்றோரிடமும், நண்பர்களிடமும் காரணமேயில்லாமல் எரிந்து விழுந்திருக்கிறேன். நான் இதிலிருந்து வெளிவந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் ஒருநாள் நானே என் உயிரை பறிக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவேன்.


முகத்தை அரசமரத்தடியில் இருக்கும் குழாய் நீரில் அடித்துக்கழுவியப் பின், வகுப்பறைக்குச் செல்ல மனமில்லாமல், அங்கிருந்த கல்மேடையில் ஏறி அமர்ந்தேன்.


காற்று வெம்மை பூசியிருந்தாலும் அப்போதைக்கு எனக்கு தேவையாயிருந்தது. மடியில் கிடந்த பர்ஸைத் திறந்து கைப்பேசியை எடுத்தேன். மிகவும் கனத்தது அது.

ஊப்ப்! என் ஓய்வுநேரத்தை நான் என் எழுத்துக்காக செலவழிக்கப்போகிறேன். அதில் என் கவனத்தை திசைதிருப்பும் விதமாய் செயல்படும் யாரும் எனக்கு தேவையில்லை.


முதலில் ரமணிச்சந்திரன் நாவல்ஸ் குழு உள்ளிட்ட சில நாவல் குழுக்களை அன்ஃபாலோவில் போட்டேன். பின், தொடர் போராட்டக்காரர்கள், என் மீது அபிப்ராயமேதுமின்றி போலியாக நண்பர்கள் போர்வையில் ஒளிந்திருப்பவர்கள், தகுதியே இல்லாதவர்கள் என்று நான் நினைப்பவர்களை கொண்டாடுபவர்கள், விமர்சகர்கள் பெயரில் கூஜாக்கள், சோற்றில் ஒருபிடி மண்ணை அள்ளிப்போட்டாலும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உண்ணும் சில அமைதிப்படை எழுத்தாளர்கள் என்று சரமாரியாக அனைவரையும் அன்ஃபிரெண்ட் செய்தேன்.


அப்போது 'யார் யாரை கொண்டாடினால் உனக்கென்ன ஷிவானி? அவர்கள் ரசனை உன் ரசனையோடு ஒத்துப்போக வேண்டுமா? உன் கருத்துகளை அவர்கள் ஆமோதிக்க வேண்டுமா?' என்று தோன்றத் தான் செய்தது.

இருப்பினும், 'அன்ஃபிரெண்ட் செய்தது அன்ஃபிரெண்ட் செய்ததாகவே இருக்கட்டும்! எனக்குத் தேவை நிம்மதி' என்று வைராக்கியமாக ஜென்நிலைக்கு சென்றேன் நான்.

******************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

அகைன் ப்ளீஸ் கிவ் ஹார்ட் டச்சிங் கமெண்ட்ஸ்யா😉

கருத்துத்திரி,
❤️💙💚💛💜🖤
பல போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு வெற்றி கிடைக்கும்...❤❤
 

Sspriya

Member
Messages
39
Reaction score
37
Points
18
எழுத்தாளர் ஆக இவ்ளோ மெண்டல் டார்ச்சர் இருக்கா 🙄🙄🙄... யப்பா 😳😳😳😳...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 13



எனது குறிக்கோள் எது என்பதில் நாசாவை விட மிகத்தெளிவாக இருக்கிறேன். ராஜாகுமார் சார், ஒரு நல்ல வழிகாட்டி. அவருக்கும் புத்தகங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. ப்ராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி பேசத்தொடங்கி விடுகிறார். எனக்குத் தெரியும், எனது நடவடிக்கைகளில், தோற்றத்தில் அவர் கவனித்த சிறு சிறு மாற்றங்களே அதற்கு காரணம் என்று.


என்னாலும் அந்த மாற்றத்தை உணர முடிகிறது. நான் சாப்பிடும் இட்லிகளின் எண்ணிக்கையில் இரண்டு கூடியிருக்கிறது. அம்மாவிடம் வெளியே எங்கேயாவது ஒரு வாரத்திற்கு சுற்றுலா செல்லலாமென்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறேன், சிறுகுழந்தை போல்.


ராஜாகுமார் சார், க்ரைம் நாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் எதையும் துப்பறியும் வகையிலே தான் அணுகுவதை உணர்ந்து, அதைத் தான் வாசிப்பதையே நிறுத்தி விட்டதாகச் சொன்னார். அது பொய்யாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும்; ஒரு கதையை கதையாகப் பார்க்கலாம்; அதற்கு நம் உணர்வுகளோடு கலக்கும் சக்தி இல்லாத போது!


அவரே தான் மெனக்கெட்டு என்னை தமிழ்த்துறை பேராசிரியரிடம் அழைத்துச் சென்று, முன்பு எங்கள் கல்லூரிக்கு கலந்துரையாட வந்த எழுத்தாளர் சரவணனின் எண்ணைப் பெற்று என்னைப் பேசச்சொன்னார்.


என்ன பேச? என்னிடம் இருந்ததோ 'எங்கு புத்தகம் போடலாம்?' என்ற ஒரே கேள்வி தான். அதையே அவரிடமும் கேட்டேன்.


அவர், நீங்கள் என்ன மாதிரி புத்தகங்கள் எழுதுகிறீர்கள்? நான் பதிப்பிடும் என்ஜே பதிப்பகத்திலேயே நீங்களும் புத்தகம் பதிப்பிக்கலாம். ஆனால், உங்கள் நாவலை வாசித்துப் பார்த்து தான் அவர்கள் தேர்வு செய்வார்கள் என்றார்.


'என்ஜே பதிப்பகம்'- இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டிராத பெயர். அங்கு புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் நம் புத்தகத்தை கொண்டு செல்வார்களா? என்றேன்.


போனால் ஒழிய கண்டிப்பாக இங்கு புத்தகம் போடக்கூடாது என்று எனக்குள் ஒரு சங்கல்பம். அவருக்கு என்னிடம் சரளமாகப் பேசுவதில் சங்கடம் ஏதும் இருக்கவில்லை. தொடர்ந்து பேசினார்.


"ம்ம், புக்ஃபேர் எங்க நடந்தாலும் கொண்டு போவாங்க. எழுத்தாளரா நம்மப் பேரை விளம்பரப் படுத்திக்கிட்டே இருப்பாங்க."


"ராயல்டி எல்லாம் எந்த மெத்தட்ல சார் கொடுப்பாங்க?"


"நான் இதுவரை பதினஞ்சு புத்தகங்கள் எழுதியிருக்கேங்க."


"தெரியும் சார். நீங்க செமினாருக்கு வந்தப்போ கூகுள்ல உங்க புக்ஸ் பத்தி சேர்ச் பண்ணிப் பாத்தேன்."


"ம்ம், எனக்கே ராயல்டியா என் அச்சிட்ட அஞ்சு புத்தகங்கள் தான் கொடுப்பாங்க."


'அடக்கடவுளே!'


"சார், இங்க பெண்கள் எழுதுற டாட் காம்ல எல்லாம் ஃபோரம் கான்செப்ட்ல ராயல்டி தர்றாங்களே? கூட நீங்க சொல்ற மாதிரி நம்ம மூனு புக்ஸும் தர்றாங்களே."


"அப்படியா? சில பப்ளிகேஷன்ஸ் எழுத்தாளர்களுக்கு அவங்க புத்தகத்தோட மொத்த விற்பனையில இத்தனை சதவீதம் கமிஷன்னு ராயல்டி தொகை கொடுக்கிறதை கேள்விப்பட்டிருக்கேன். ஆமா அது என்ன ஃபோரம் கான்செப்ட்?"


"ஒரு எழுத்தாளர் ஃபோரம் கான்செப்ட் படி, தன் கதையை பப்ளிகேஷன் கிட்ட கொடுக்கும் போது, அந்த பப்ளிகேஷன் அந்தக் கதையை அஞ்சு வருசத்துக்கு மட்டும் தான் சார் புத்தகமா பதிப்பிக்கிற உரிமையைப் பெறுறாங்க. அதாவது அச்சுப்புத்தக உரிமை மட்டும் தான் அவங்கக்கிட்ட இருக்கும். அப்போ அதிகபட்சமா ஆயிரம் புத்தகங்கள் வரை அவங்க அச்சிடலாம். அப்படி பதிப்பிக்கிற புத்தகத்தோட முதலிரண்டு பக்கத்துல கட்டாயம், 'உரிமை ஆசிரியருக்கே'னு பிரிண்ட் பண்ணியிருக்கணும்."


"இதெல்லாம் எனக்கும் தெரியும்ங்க"


"ஓ! ஓகே சார். ஃபோரம் கான்செப்ட் படி, ஒரு எழுத்தாளர் தன் கதையை ஒரு பப்ளிகேஷன்க்கு கொடுத்திருந்தாலும், எழுத்தாளர் சொந்தமா ஒரு பப்ளிகேஷன் ஆரம்பிக்கிற பட்சத்துல அவரோட சொந்த பப்ளிகேஷன்லயேவும் அந்தக் கதையை புத்தகமா பதிப்பிக்கிற உரிமை அவருக்கு இருக்குது சார்."


"அதாவது, பப்ளிஷர் சோத்துல மண்ணள்ளிப் போடலாம்"


"ஹாஹாஹா, அது தெரியல சார்."


"மேல சொல்லுங்க?"


"பொதுவா ஒரு புத்தகத்தோட பதினாறு பக்கங்களை தான் சார் ஒரு ஃபோரம்னு சொல்றோம். உதாரணத்துக்கு, உங்கக் கதையை புத்தகமா அச்சிடறப்போ அது நூத்தியறுபது பக்கங்கள் வந்துச்சினா, அது பத்து ஃபோரம்னு கணக்கு சார். பப்ளிகேஷன்ல உங்களுக்கு மக்கள் கிட்ட இருக்க பிரபலத்தைப் பொறுத்தும், கதையோட தரத்தைப் பொறுத்தும், ஒரு ஃபோரத்துக்கு இவ்வளவு ரூபாய்னு ஒப்பந்தம் பேசி கதையை வாங்கிக்குவாங்க சார்."


"ஓ! ஒரு பப்ளிகேஷன் ஒரு புது எழுத்தாளர்க்கு ஒரு ஃபோரத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்க?"


"ம்ம்? நூத்தியம்பது ரூபா தருவாங்கன்னு சொன்னதா ஞாபகம் சார்"


"டென் ஃபோரம்ஸ் இண்ட்டு ஒன் ஃபிப்ட்டி ருப்பீஸ் இஸ் ஈக்குவல் டூ தவுன்சன்ட் ஃபைவ் ஹண்ட்ரட் ருப்பீஸ். வெறும் ஆயிரத்தைந்நூறு ரூபா கொடுத்திட்டு அவங்க ஆயிரம் பிரதி வரை அச்சிடலாம் இல்ல?"


'உங்க பப்ளிகேஷன்ல அந்த தவுன்சன்ட் ஃபைவ் ஹண்ட்ரடும் இல்லையே சார்'

மனதில் உற்பத்தியான வார்த்தைகளை நாவுவரை கொண்டுவர முடியவில்லை.


"உங்களுக்குத் தெரியாததா சார்? இப்போலாம் நூறு பிரதி விக்கிறதே இமாலய சாதனை. நூறு பிரதி வித்தவுடனே, அடுத்த நூறு பிரதியை மறுபதிப்புன்னு சொல்லி விக்கிற பதிப்பகமும் இருக்கு."


"ம்ம், நீங்க அந்த பெண்கள் எழுதுற டாட் காம்க லிங்க்ஸ மறக்காம எனக்கு வாட்ஸப்ல ஷேர் பண்ணிருங்க"


'என் நிலைமையை விட இவர் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும் போலயே?'

"ஓகே சார். பட், டாட் காம்கள்ல சுய முன்னேற்ற புத்தகத்தையோ, சிறுகதை தொகுப்பையோ இதுவரை பதிப்பிச்சு நான் பார்த்ததில்ல. வெறும் குடும்ப நாவல்கள் மட்டும் தான் அங்க பப்ளிஷ் பண்ணுவாங்க சார்"


"அய்யயோ!"


"பரவாயில்ல சார், உங்க என்ஜே பதிப்பகத்துல எல்லா வகையான புத்தகங்களும் பப்ளிஷ் பண்றாங்களே!"


"இல்ல ஷிவானி, ஒப்பிட்டா பொருளாதார ரீதியா நீங்க சொல்ற இடத்துல தான் எழுத்தாளருக்கு பெனிஃபிட்ஸ் அதிகம். நீங்க ஃபோரம் கான்செப்ட்லயே புத்தகம் போடுங்க. அப்புறம், புத்தகத்துக்கு புத்தகம் பதிப்பகம் மாறாதீங்க?"


"ஏன் சார்?"


"இல்ல ஷிவானி, எப்பவும் உங்கப் புத்தகம் பத்துல தான் ரீடர்ஸ் எதை எடுக்குறதுன்னு கன்ஃபியூஸ் ஆகனும். பத்துப்பேர் புத்தகத்துல உங்கதை எடுக்கலாமா? வேணாமா?ன்னு கன்ஃபியூஸ் ஆகக்கூடாது. இது ஒரே பதிப்பகத்துல நீங்க புக் போடும்போது தான் சாத்தியம். உங்க கலெக்சனுக்குன்னே தனி வரிசை ஒதுக்குவாங்க. புக் ஃபேர் சமயலத்துலயும் சரி; மத்த சமயலத்துலயும் சரி; உங்க புத்தகங்களை ரீடர்ஸ் ஸ்டால் ஸ்டால்லா போய் தேடி அலைஞ்சு வாங்குற மாதிரி வச்சிக்காதீங்க."


"ஓகே சார், தான்க்யூ ஃபார் யுவர் கைடன்ஸ் சார்"


"அட! நான் தான் உங்களுக்கு தான்க்யூ சொல்லனும். இன்னைக்கு எனக்கு ஒரு புது விஷயம் சொல்லிக் குடுத்திருக்கீங்கல்ல?"


"உங்கக்கூட பேசுனதுல ரொம்ப சந்தோசம் சார்"


"எனக்கும் தாம்ப்பா. ஒருநாள் நேர்ல மீட் பண்ணலாம்."


"ஓகே சார், பை சார்"


இறைவா! இன்னும் நான் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டும்?


*****************


ஒரு நல்ல வாசகரால் தான் நல்ல எழுத்தாளராக முடியும்! இதை எதன் முதற்கொண்டும் மறுப்பதற்கில்லை. வீடெங்கிலும் எழுத்தாளர்கள் உருவானால், காகிதத் தட்டுப்பாடு உண்டாகிவிடும் என்கிற சில அறிவாளிகளின் ஆய்வு முடிவுகளையும் நான் அருவருப்புடனே எதிர்கொள்கிறேன்.


க்ரிஷ் என்னிடம் அடிக்கடி சொல்வான், குறைந்தபட்சம் எழுத்தைக் கொண்டாடவாவது, வாசகர்கள் எழுத்தாளர்களாக மாறவேண்டும் என்று.


ஓ க்ரிஷ்! அவனால் இரண்டு வாரத்திற்குக் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அழைப்பு விடுத்துப்பேச வெட்கப்பட்டு, வாட்ஸப்பில் வாய்ஸ் மெசேஜில் வந்தான். என் உதட்டில் புன்னகை தவழ்ந்தாலும் வீரப்பாகவே நடந்துகொண்டேன்.


"ஹாய்"


"ம்ம்"


"நீங்க நயாகரா நடத்துற பேப்பர்-டூ-பப்ளிஷ் போட்டியில கலந்துக்கப் போறீங்களா?"


ஓஹோ! என்னிடம் பேசுவதற்கு இப்படி ஒரு காரணமா?


"ம்ஹீம்"


"ஏன்?"


"எழுத்துத்துறைக்கே கேவலமா இருக்கிற என்னால எப்படி போட்டியில எல்லாம் கலந்துக்க முடியும்?"


ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது அவனிடம்.


"அன்னைக்கு அப்படி தெரியாம பேசிட்டேன், சாரி"


ஜெர்மனி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதைவிட மோசமான செயல், அவன் என்னை அன்றைக்கு அக்காவென்று அழைத்தது.


"இல்லத் தம்பி நீங்க சரியாத்தான் பேசுனீங்க"


"அய்யோ! நான் தான் தெரியாம பேசிட்டேன்னு சொல்றேனே. ப்ளீஸ்! என்னை தம்பின்னு எல்லாம் கூப்பிடாதீங்க, சகிக்கலை"


"நான் உங்களுக்கு அக்கான்னா, நீங்க எனக்கு தம்பி தானே தம்பி?"


"அய்யோ! அன்னைக்கு நான் பேசினதெல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறேன், போதுமா? நீங்க என்கிட்ட நார்மலாப் பேசுங்க"


அதன்பின், நான் அவனுக்கு அனுப்பிய ஸ்மைலிகளின் எண்ணிக்கை நிச்சயம் கால்நூற்றையாவது தொட்டிருக்கும்.


"உண்மைய சொல்லுங்க, ஏன் போட்டியில சேர மாட்டிக்கிறீங்க?"


"நானும் தீவிரமா இதுக்கு முன்னாடி எப்படியான கதைகள்லாம் ஃபைனலிஸ்ட் குள்ள வந்திருக்குன்னு சேர்ச் பண்ணிப் பாத்தேன் க்ரிஷ். எனக்கு சேருற ஆர்வமே போயிருச்சி"


"ஏன்?"


"இங்க அரசியல் பின்புலம் உள்ளவங்களுக்கோ; பார்ன் ஸ்டோரி எழுதுறவங்களுக்கோ; இல்ல, ஆன்டிஹீரோ ஸ்டோரி எழுதுறவங்களுக்கோ தான் வாசகர் வட்டம் அதிகம். மேக்சிமம், அப்படியானவங்க கதைகள் தான் ஃபைனலிஸ்ட்குள்ள போகவும் செய்யுது. ஜட்ஜஸும், அஞ்சு விரலைக் காட்டி மூனைத்தொடுன்னு சொன்னா என்ன செய்வாங்க சொல்லு?"


"கதைங்க பல்லைக் கடிக்க வச்சாலும், அஞ்சு விரலைக் காட்டி மூனைத்தொடுன்னு சொன்னா, அதுல தன் சிஷ்யர் சிகாமணி யாரோ அவங்களுக்கு ப்ரைஸ் கொடுத்திடுறாங்க."


எமகாதகன்! எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டே என்னை போட்டு வாங்குவான்.


"இவங்க வோட்டிங் மாதிரி வச்சு ஃபைனலிஸ்ட் செலக்ட் பண்ணினா நல்லாயிருக்கும் இல்ல?"


'இவன் மூளைக்குள்ள மூட்டைப்பூச்சி புகுற'


"க்ரிஷ், நாவல் போட்டிகள்ல வோட்டிங்ஸ் மாதிரி முறைகேடு வேற எதுவும் இல்ல. என்னோட வாசகர் அகல்யா தெரியும்ல உனக்கு?"


"ஆமா சொல்லியிருக்கீங்க. சமீபத்துல அவங்க முதல் கதையை வாசிச்சு ரிவீவ் கூடப் போட்டீங்களே? நான் கூட உங்களை நிறை குறை ரெண்டுமிருந்தா தான் விமர்சனம்; நிறை மட்டுமிருந்தா அதுக்குப் பேரு புகழுரைன்னு கலாய்ச்சேனே?"


"ம்ம் அவங்க தான். தன் முதல் கதையை அவங்க ஸ்திரீ டாட் காம் போட்டிக்காகத்தான் எழுதினாங்க. ஆனா, வீவ்ஸ், கமெண்ட்ஸ், வோட்டிங்ஸ்னு எல்லாம் இருந்தும் அவங்கக் கதை ஜெயிக்கலை."


"ஏன்? கதை நல்லாயில்லையா? ஜட்ஜஸுக்குப் பிடிக்கலையா?"


"அதெல்லாம் இல்ல. நீ சொன்னியே வோட்டிங்ஸ்னு, அது தான் அவங்களை கவுத்து விட்ருச்சி. பேர் சொல்லாம எழுதுற அந்தப் போட்டியில அவங்க தன் கதை ஜெயிக்கணும்னு தன் ப்ரெண்ட்ஸ்ங்கக் கிட்டயெல்லாம் வோட்டிங் லிங்க் அனுப்பி ஓட்டுப்போட சொல்லியிருக்காங்க. அதாவது பொதுவெளியில இல்லாம இன்பாக்ஸ், வாட்சப் சாட்னு சொல்லியிருக்காங்க. அதுலயும் ஒரு வாசகர் பத்து கதை செலக்ட் பண்ற சான்ஸ் இருந்ததால, பரிதாபப்பட்டு தன் ஃப்ரெண்ட்ஸ் மூனு பேருக்கதைக்கும் ஓட்டுப்போடச் சொல்லிக் கேட்டிருக்காங்க. இதுல என்னாச்சி, யாரோ ஒரு நல்ல உள்ளம் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெப்சைட் ஓவ்னர்க்கு அனுப்பிருச்சி. அவங்க இவங்களை கமுக்கமா டிஸ்குவாலிஃபைடு பண்ணிட்டாங்க."


"அடப்பாவமே! இது ஹியூமன் நேச்சர் தானே? போட்டியில கலந்துக்கிட்ட எல்லாருமேவா இப்படி ரகசியம் காப்பாத்தியிருப்பாங்க? அதுவும் பொண்ணுங்களுக்கும் ரகசியத்துக்கும் ரொம்ப தூரமாச்சே?"


"க்ரிஷ்…"


"சரி, சரி, அப்புறம் என்னாச்சின்னு சொல்லுங்க?"


"அப்புறம் என்ன, அகல்யா கிட்ட பரிதாபமா தனக்கு ஓட்டுபோடச் சொல்லி கேட்டுக்கிட்ட எழுத்தாளர்கள் எல்லாம் போட்டியில ஃபைனலிஸ்ட்க்கு செலக்ட் ஆகிட்டாங்க. இவங்க மட்டும் கண்ணீரோட ஓரமா நின்னு அவங்களை வேடிக்கைப் பார்த்தாங்க."


"ஆமா அகல்யாவை போட்டுக் கொடுத்த அந்த நம்பிக்கைத்துரோகி எழுத்தாளர் யாராம்?"


"அது அகல்யாவுக்கே தெரியலையாம். நானும் உங்களுக்கு நடந்திருக்கிறது அநியாயம். அவங்கக்கிட்ட நியாயம் கேளுங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க 'முடியாது. என் கதை மேல இருந்த நம்பிக்கையில தான் என் கதை ஏன் செலக்ட்டாகலைனே காரணம் கேட்டேன். முன்னாடி போட்டியோட முடிவு எதுவாயிருந்தாலும் ஏத்துக்கிருவேன்னு சொல்லிட்டு இப்போ எதிர்த்தா என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா?'ன்னு அமைதியாகிட்டாங்க. பாவம்! அவங்களே நாலு மெயில் ஐடிக்கூட புதுசா கிரியேட் பண்ணி ஓட்டுப் போட்டிருக்காங்க. எல்லாம் வேஸ்ட்."


"ஹாஹாஹா"


"சிரிக்காத க்ரிஷ், அவங்க சொல்லும்போது எனக்கு பாவமா இருந்தது. ஆனா, எனக்கொரு டவுட் இருக்கு க்ரிஷ்."


"என்ன டவுட்?"


"நான் தளங்கள் தொடர்பா சமீபத்துல போஸ்ட் போட்டேன் இல்லையா? அதுலயிருந்தே ஸ்த்ரீ டாட் காம் ஓவ்னருக்கும் எனக்கும் ஆகாது. அகல்யா வேற என் எழுத்துக்கு தீவிர வாசகி. நான் வேற பேர் சொல்லாம எழுதுற அவங்க போட்டிக் கதைக்கு ரிவீவ் எல்லாம் போட்டிருக்கேன். கூட்டிக் கழிச்சிப் பாரு, அவங்க ஏன் என்னைப் பழிவாங்க அகல்யாகிட்ட ஸ்க்ரீன்ஷாட் அதுஇதுன்னு பொய்சொல்லி டிஸ்குவாலிஃபைடு பண்ணியிருக்கக்கூடாது?"


"இதை நீங்க அகல்கிட்ட சொன்னீங்களா?"


'அகலா? அகல்யாவுக்கு கல்யாணமாகி, கொழுக்மொழுக்னு மூனு பசங்க இருக்க விஷயத்தை இவன்கிட்ட சொல்லிருவோமா? இப்ப வேணாம். பயபுள்ள பொறாமையில பேசுறோம்னு நினைச்சிருவான்'


"சொன்னேன், அவங்க வேற ஒன்னு சொன்னாங்க. போட்டி நடந்துக்கிட்டு இருந்தப்போ, போட்டிக்கதை ஒன்னுக்கு நெகட்டிவ் ரிவீவ் வந்ததாம். இவங்க போஸ்ட் போட்டவங்க கருத்தை ஆதரிச்சாங்களாம். அதை வன்மமா மனசுல வச்சிக்கிட்டு தான் வெப்சைட் ஓவ்னர் ஸ்க்ரீன்ஷாட் வந்ததா பொய் சொல்லி டிஸ்குவாலிஃபைடு பண்ணிட்டதா சொல்றாங்க."


"ஒன்னு சொல்லவா? நீங்கல்லாம் பண்ற அரசியல் இருக்கே! நிஜ அரசியல்வாதிங்கல்லாம் பிச்சை தான் எடுக்கணும்"


"உன்கிட்ட போய் சொன்னேன் பாரு"


"சரி விடுங்க. வேற ஏதாவது நல்ல போட்டி வந்தா சொல்றேன்."


"சரிங்க தம்பி"


"மறுபடியும் மொதலயிருந்தா…?"


"ஹாஹாஹா, பொழைச்சிப்போ போ!"


க்ரிஷ்ஷை விட என் மனதை வேறு எவராலும் இலகுவாக்க முடியாது. அவன் குரலில், பேச்சில் ஏதோ மாயம் இருக்கிறது. தொடர்ந்து செவிமடுக்க ஏக்கம் பிறக்கிறது. நிதர்சனம், எனக்கு அவன் தேவை! இல்லையெனில் என் எழுத்துக்கு.


*******************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

நீங்கள் கருத்துக் குண்டுகளை சோதனை செய்து பார்க்க, பாதுகாப்பான ஒரே இடம் கருத்துப்பாலைவனம்😊

கருத்துத்திரி,

கருத்துப் பாலைவனம்
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
இறுதி அத்தியாயம்



புத்தகம் எங்கு போடுவது? எப்படி போடுவது? என்ற என் சிந்துபாத் பயணம், எப்போதும் இறுதியில் ஏதோ ஒன்றை அறிவதில் தான் போய் முடிகிறது.


எதார்த்தமாகத்தான் ராஜாகுமார் சார், ஒரு புத்தகத்திற்கு ஐஎஸ்பிஎன் (ISBN) மிக முக்கியம் என்றார். நான் அதை வேதவாக்காகக் கொண்டு என் நியூஸ்ஃபீடில் வலம் வந்த அட்டைப்படங்களை எல்லாம் ஆராய்ந்தேன். பெரும்பாலான அட்டைப்படங்கள் ஐஎஸ்பிஎன் இன்றியே காணப்பட்டன. இப்போது புத்தகத்திற்கு ஐஎஸ்பிஎன் வாங்குகிற பதிப்பகத்தை வேறு தேட வேண்டுமா? என்று வேம்பு கசப்பு எனக்கு.


ஆனால், ஐஎஸ்பிஎன் ஒரு படைப்பிற்கு காப்புரிமை அளிப்பதில்லை; உலகளாவிய புத்தகச் சந்தையில், ஒரு படைப்பின் இருப்பை அறிய மட்டுமே அது பயன்படுகிறதென்று பின்பு தான் தெரிய வந்தது. மேலும், மின்னூல், ஆடியோ பதிப்பு, அச்சுப்பதிப்பு என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வேறு ஐஎஸ்பிஎன் வாங்க வேண்டுமாம்.


ஒரு பதிப்பாளர் 'ஐஎஸ்பிஎன் டாட் ஜிஓவி டாட் இன்' எனும் அரசு இணையதளத்திற்குள் சென்று இலவசமாகவே ஐஎஸ்பிஎன்-ஐ பெறலாம் எனினும், மக்களிடம் நேரடி விற்பனையில் ஈடுபடும் பதிப்பகம் அதை வாங்கத் தேவையில்லை என்பது என்னளவில் உவப்பான செய்தி. தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். இனி ஐஎஸ்பிஎன்-ஐ முன்னிட்டு பதிப்பகங்களை வடிகட்ட வேண்டாமல்லவா!


*****************


'நீங்கள் இப்போதெல்லாம் முன்பு மாதிரி எழுதுவதில்லை ஷிவானி"


எனது ஐந்தாவது நாவலை எழுதத் துவங்கியதிலிருந்தே அடிக்கடி இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறேன்.


சிலசமயம் இவற்றை கேட்க சலிப்பாக இருந்தாலும், சிலசமயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னளவில் நான் என் எழுத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். சிறகுவிரிக்கத் துவங்கியிருக்கும் சிறு பறவை போல் மெதுமெதுவாக உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். இதில் எல்லோராலும் என்னுடன் பயணிக்க முடியுமா தெரியாது? ஏன் என்னாலே முடியவில்லையே. சில சமயம், வந்தப்பாதைக்கே திரும்பி விடுவோமா? என்றுகூடத் தோன்றுகிறது.


வாசகர்கள் 'நீங்கள் இப்போதெல்லாம் முன்பு மாதிரி எழுதுவதில்லை ஷிவானி' என்பதற்கு, சென்ற கதையின் முடிவு சுபமாக இல்லாததும், நுண்ணிய விவரணைகளையும், நாடகத்தனமான உணர்ச்சித் ததும்பல்களையும் நான் தவறவிடுவதுமே காரணமாக இருக்கலாம்.


மேலும், யாரை சென்றடையப் போகிறதென்ற விழிப்புணர்வும் கெட்டக்கனவு போல் அடிக்கடித் தோன்றி பயமுறுத்துகிறது. இது ஒரு அவஸ்தை! நிச்சயம் ஒரு எழுத்தாளரின் வேலை தன் வாசகர்களையோ, குடும்பத்தினரையோ திருப்திப்படுத்துவதில்லை தான். எனினும், என்னுள் ஒரு நிலையற்றத்தன்மை நிலவிக்கொண்டே இருக்கிறது. உண்மையில், என் மனம் ஒரு பச்சோந்தி. ஒரு சமயம் காமத்தை கலைநயத்தோடு அணுகுகிறது. மறுசமயம் ஆபாசமென்று திளைக்க மறுக்கிறது.


சென்றவாரம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது எழுத்தாளர் ஜெயமோகன், "என்னை நான் இப்படித்தான் எழுதுவேன்; இதைத்தான் எழுதுவேன் என்று நீங்களே வரையறை செய்யாதீர்கள். எந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் ஆட்படக்கூடாதென்பது எனக்கு நானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளுள் ஒன்று. திடீரென ஒரு பாலியல் கதையை எழுதுவேன். அதற்கு அடுத்த படைப்பே ஆன்மீகத்தைப் பற்றி எழுதி மலைக்க வைப்பேன்." என்கிறார்.


மிகத்துணிச்சலான பேச்சு அது! அடுத்து கொஞ்சம் அரசியல் பற்றியும் பேசினார். பெரும்பாலும் பெண் எழுத்தாளர்கள் யாரும் அரசியல் பேசி நான் கண்டதில்லை. க்ரிஷிடம் சொன்னால், செய்வது பத்தாதென்று அதைப் பற்றி தனியாக பேச வேறு செய்ய வேண்டுமா? என்பான், தடியன்.


அரசியல் பதிவுகளை ஆர்வமாகத் தேடித்தேடி வாசித்தாலும் நானும் ஆழமாக அரசியல் பேச முற்பட்டதில்லை. வீண் பிரச்சினை எதற்கென்றாலும், என் மேல் எந்தச் சாயமும் பூசப்பட்டுவிடக் கூடாதென்கிற ஜாக்கிரதையே காரணம். ஒருவேளை அது கோழைத்தனம் என்றால், அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை.


சொல்ல மறந்துவிட்டேனே, ஜெ.மோவின் அந்த புத்தக வெளியீட்டுவிழா போலவே பெரும்பாலான புத்தக வெளியீட்டுவிழாக்கள் மிக ரகசியமாக ஆண்கள் மாநாடு போலத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.


தங்களை இலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அனைவரும் தங்கள் ஒவ்வொரு புத்தக வெளியீட்டையும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் சொற்பொழிவும், நேர்காணலும் ஊடகங்களில் தொடர்ந்து வந்தமயமாக இருக்கின்றன. புத்தகக் கண்காட்சி தருணங்களில் கூட இவர்கள் புத்தகங்களின் அட்டைப்படங்கள் தான் பத்திரிகைகளை அலங்கரிக்கின்றன. இவற்றைப் பார்த்து நான் பொறாமைப்படவில்லை என்பது, என் வாழ்நாளில் நான் சொன்ன மிகப்பெரிய பத்து பொய்களில் ஒன்றாகிவிடும்.


எனக்கு இலக்கியவாதியாகவெல்லாம் ஆசையில்லை, சத்தியமாக. அதே சமயம், என் இறப்பு துண்டுசெய்தியாகக்கூட பத்திரிகைகளில் வரவில்லை என்றால், என்னத்தை நான் எழுதிக் கிழித்துக்கொண்டு இருக்கிறேன்?


என் எழுத்து சுமார் ரகம் தான் என்றாலும் எழுதத் துவங்கும் போது இரண்டு விஷயங்கள் தான் என் நினைவில் நிற்கும். ஒன்று, இங்கு யாரும் சொல்லாத கதையென்று ஒன்று இல்லவே இல்லை; உன் கதை சொல்லல் மற்றவர்களிடமிருந்து எப்படி மாறுபடுகிறது என்பது தான் முக்கியம். இரண்டு, வாசகர்களை ஒருபோதும் முட்டாள்கள் என்று நினைக்கக்கூடாது. எல்லாவற்றையும் எழுத்தாளரே சொல்லிவிட்டால், அங்கு வாசகருக்கு என்ன வேலை?


இலக்கியம் எனும்போது மீண்டும் ஜெயமோகனை இழுக்க வேண்டியதாகிறது. இலக்கியத்திற்கு அறம் ஒரு அளவுகோலோ, மதிப்பீடோ கிடையாது என்கிறார் மனிதர். அதாவது, ஒரு கெட்டவன் நல்லவனாக மாறித்தான் ஆகவேண்டும் என்பதில்லையாம். உன்னதமானவன் அன்றி பாவங்களால் நிரம்பியவனின் வாழ்க்கையும் இலக்கியத்திற்குள் அடங்குமாம். கேட்க நன்றாக இருக்கிறதில்லையா?


***************


கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்ராக்காவிடம் பேசுகிறேன். அவர் என்னிடம் 'என்னை ஏன் அன்ஃபிரெண்ட் செய்தாய் ஷிவானி?' என்றபோது எனக்கு என்ன பதில் கொடுப்பதென்றே தெரியவில்லை. அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தாலே நான் பதில் தேடி சொல்லியிருப்பது கடினம். இப்போது கேட்டால்?


தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால், விலகி இருப்பதே உத்தமம் என்று அப்போது தோன்றியது.


நான், "இல்லக்கா, நான் ரொம்ப மன அழுத்தத்துல இருந்த சமயம்.." என்று ஜாங்கிரி சுற்ற ஆரம்பிக்க, அவர் இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு லாவகமாகப் பேச்சை திசை திருப்பினார். எனது பதிப்பகங்கள், ராயல்டி தொடர்பான பதிவுகள் எல்லாம் உபயோகமானதாக இருந்ததாகச் சொன்னார். இதுவரை அவரது எட்டுக் கதைகள் அச்சிலேறி இருக்கின்றன. அவர் என் பதிவுகளிலிருந்து தெரிந்துகொள்ள விஷயம் இருக்கிறதென்றால், என்னால் நம்பவே முடியவில்லை.


இன்னொரு பக்கம் நான் சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் சிறு ஆசுவாசம் உண்டானது. என்னால் அவருக்காகப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால், நாகரீகம் கருதி அதை அவரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை.


நெடுநேரம் நீடித்த எங்கள் உரையாடலினிடையே அவர் சொல்லிய செய்தி ஒன்று என்னை கலவரப்படுத்தியது. விஷயம் அமேசான் கிண்டில் பற்றியது என்பது தான் கூடுதல் கனம்.

உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அமேசான் கிண்டிலில் திருட்டு நடக்கிறதாம். அங்கு பதிவேற்றப்படும் புத்தகங்கள் அனைத்தும், அதன் இரட்டைச்சகோதரனான 'Honey books' ஆப்பில் இலவசமாகக் கிடைக்கிறதாம். பெரிய நிறுவனமொன்றிலிருந்தே இப்படி படைப்புகளைத் திருட முடிகிறதென்றால் சிறிய நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்?


தவிர, எழுத்தாளர்களால் இலவசத் தரவிறக்கமாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் தான் பெரும்பாலும் அங்கு காணக்கிடைக்கின்றனவாம். நான் ஒரேயொருமுறை அதைச் செய்திருந்தேன். அச்சமயம் ஐந்நூறு பேர் வரை என் புத்தகத்தை தரவிறக்கியிருந்தார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் வாசித்திருந்தால் என்றோ என் உழைப்பிற்கான சன்மானம் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கில் என்னை டேக் செய்து என் புத்தகத்தைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லியிருந்தாலாவது என் ஆன்மா சமாதானமடைந்திருக்கும். கரும சண்டாளம், ஒன்றும் நடக்கவில்லை.


அப்போது தான் ஒரு தீர்மானம் எடுத்தேன். இனி அமேசான் கிண்டிலில் விலைத்தள்ளுபடி வேண்டுமானால் கொடுக்கலாமேயொழிய, இலவசத் தரவிறக்கம் மட்டும் கொடுக்கவேக்கூடாது என்று.


இலவசமாகத் தரவிறக்கிக் கொள்பவர்கள் அதைத் தங்கள் கிண்டில் நூலகத்தில் வாழ்நாள் முழுமைக்கும் வைத்து வாசிக்கலாம் என்பதால், வாசகர்களிடத்தில் ஒரு அலட்சியப்போக்கு உண்டாகிவிடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தங்கள் கிண்டில் நூலகத்தில் வாசிக்கப்படாமல் கிடந்தாலும், நூற்றியொன்றாவதாக ஒரு புத்தகத்தை இலவசத் தரவிறக்கம் செய்வதில் தான் அவர்கள் கவனம் முழுவதும் இருக்கிறது, பேராசைக்காரர்கள்!


கிண்டில்காரன் எழுத்தாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தால் நன்றாகயிருக்கும். வேண்டாம்! முதலில் அவன் என் 'KENP Reads' எண்ணிக்கையை குறைக்காமல் இருக்கட்டும்.


சரி, அமேசான் கிண்டிலில் போட்டால் தானே இப்படி? நம் படைப்பை எந்த இணைய ஊடகத்திலும் வெளியிடாமல் நேரடி அச்சுப்புத்தகமாகப் பதிப்பித்து, இவ்வகை உழைப்பு சுரண்டலைத் தடுக்கலாம் என்றாலும், அச்சுப்புத்தகங்களை புகைப்படமெடுத்து பிடிஎஃப்பாக உலாவ விடுகிறது, ஒரு துஷ்டர் கூட்டம்.


ஒரு எழுத்தாளராக இந்தப் பிடிஎஃப் பிரச்சினையை நான் இரு வகைகளில் அணுகுகிறேன். ஒன்று, சரி இப்படியாவது வாசகர்கள் நம் புத்தகத்தை வாசிக்கிறார்களே என்று. இரண்டு, முடிந்தவரை கண்ணுக்குத் தெரிந்த களைகளையெல்லாம் அறுத்தெறிவது.


பேச்சுவாக்கில் பத்ராக்கா என்னிடம், 'இவ்வளவு தகவல்கள் சேகரித்திருக்கிறாயே; எங்கு புத்தகம் போடலாமென்று நினைத்திருக்கிறாய்?' என்று எதார்த்தமாகவே கேட்டிருக்கலாம். ஆனால், எதார்த்தம் என்னை எள்ளி நகையாடுவது போல் இருந்தது. கடலுக்கு வெளியே நின்றுகொண்டு அதன் செல்வங்களை கணக்கிடும் மடத்தனத்தை நான் செய்வதுபோல் ஒரு பிரமை.


மானக்கேடாக இருந்தாலும் உண்மையைச் சொன்னேன். 'பதிப்பகத்தைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன், அக்கா'


அதற்கு அவர் பதில்: "நீ ஏன் சிநேகிதி டாட் காம்மை முயற்சி செஞ்சுப் பார்க்கக்கூடாது?"


அதானே ஏன் பார்க்கக்கூடாது? புத்தகம் போடவேண்டும் என்பதைத்தாண்டி மீண்டும் டாட் காம்களை நாட என்னிடம் காரணமிருக்கிறதா என்றால்? இருக்கிறது! இப்போதுவரை பிளாக் (blog) என் பிராணனை வாங்கிக்கொண்டு தான் இருக்கிறது. என்னால் அதன் லிங்கை அதிக குழுக்களுக்குப் பகிர முடிவதில்லை. பகிர்ந்தாலும், நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியது போல் 'இது எங்கள் ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானது' என்று பதிவை ஓரங்கட்டிவிடுகிறான், மார்க். சரியென்று புது பிளாக் உருவாக்கினாலும், அதில் காப்பி பேஸ்ட் ஆப்ஷனை ஒழித்துக்கட்டவே ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.


இதில், சில ஃபேஸ்புக் குழுக்களின் செயல்பாடுகளில் எனக்கு தனிப்பட்ட உடன்பாடு இல்லையெனினும், காட்டமான விமர்சனத்துடனே என் தேவைகளுக்கு அவற்றை உபயோகித்துக் கொள்கிறேன். நியாயவிலைக்கடையில் மலிவான தரத்திலேயே பொருட்கள் கிடைத்தாலும், செல்லத் தேவை இருப்பதுபோலவே என் நிலைமையும்.


புத்தகம் போடுதல் எனக்கு இரண்டாம் பட்சமானதற்கு 'என் கதைகளுக்கு அச்சிலேறும் அதிருஷ்டம் இருந்தால் ஏறட்டும்' என்ற என் விரக்தியும் காரணமாகயிருக்கலாம். ஆனால், இன்றும் புத்தகம் போடுகிறேன் பேர்வழி என்று எந்த சிறைக்குள்ளும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று மட்டும் கவனமாக இருக்கிறேன்.


பத்ராக்காவின் திடீர் யோசனையில் சிநேகிதி டாட் காம் சென்றால், அதன் உரிமையாளரை கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருந்தது. ஃபேஸ்புக்கில் அவரின் செயல்பாடுகள் எதுவும் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. அதனால் ஒரு குரூர திருப்தி ஏற்பட்டதென்னவோ உண்மை.

ஆம், நலன்விரும்பி என்கிற பெயரில் நிழல் போல் அநியாயத்திற்கு பின்தொடர்ந்துக்கொண்டு, நகைச்சுவை பதிவிலிருந்து விமர்சனப்பதிவு வரை, "இதை இப்படி எழுது; அதை அப்படி எழுது; இதைப் பற்றி பதிவு போடு; இவரைப் பற்றி பேசு" என்கிற பின்புற குச்சிக் குத்தலையெல்லாம் ஏற்க நான் தயாராகயில்லை. அதுவொரு சாபக்கேடு.


தளம் எப்படி? எப்படியான புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன? என்று ஆராய்ந்து, ஒருமுறைக்கு பத்துமுறையாக யோசித்தப்பின் தான் அந்த மின்னஞ்சலை அவருக்கு அனுப்பினேன். "வணக்கம் மேடம். நான் ஷிவானி. நான் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர். நான் இதுவரை ஆன்லைனில் நான்கு நாவல்கள் எழுதியிருக்கிறேன். தற்போது எனது நாவல்களை புத்தகங்களாக வெளியிடவே உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். ஒருவேளை தங்களால் இதற்கு உதவ முடியவில்லை எனினும், என்னுடைய ஐந்தாவது நாவலை தங்கள் தளத்தில் எழுதலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு விருப்பமென்றால் சொல்லுங்கள் மேடம். வாட்ஸப் எண் தருகிறேன், பேசலாம்." என்றேன்.


அவர், நான் இவ்வாறு அனுப்பிய ஒருமணி நேரத்திலேயே, "ஹாய் ஷிவானி, உங்க வாட்ஸப் எண் அனுப்புங்க" என்றார்.


அனுப்பியதும், "அழைப்பு விடுக்கவா?" என்பதே முதல் கேள்வியாக இருந்தது.


"ஓகே மேம்" என்ற வார்த்தைகளை தட்டச்சு செய்து அனுப்பும் போது அபசகுனமாய் மீண்டும் மாதாஜியின் ஞாபகம். நான் முதன்முதலில் எழுத கதைத்திரி அமைத்துத் தரச்சொல்லி கேட்டபோது எவ்வளவு இனிக்க இனிக்கப் பேசினார் அவர்?


மேற்கொண்டு மாதாஜியைப் பற்றி சிந்திக்கவிடாமல் அழைப்பு குறுக்கேப் புகுந்து தடுத்தது. ஒன்பதில் துவங்காத அலைபேசி எண்ணை மூன்று விநாடித்துளிகள் பார்த்துவிட்டு ஏற்றுப்பேசினேன்.


பரவாயில்லை, அவரது புத்தகங்களை நான் வாசித்திருக்கவில்லையே என்கிற சங்கடத்திற்கு ஒரு கணமும் ஆளாக விடாத அளவிற்கு தளம், புத்தகம், பதிப்பித்தல் என்றே தீவிரமாகப் பேசினார். அவர்கள் சமீபத்தில் தான் ஒரு தொகுப்புப் புத்தகங்கள் வெளியிட்டார்களாம். அடுத்த வெளியீட்டின் போது எனது நாவல்களையும் கருத்தில் கொள்வதாக பட்டும் படாமல் தான் பேசினார். இதுவும் நல்லது தான் என்று தோன்றியது. ஒரு நாவல், புத்தகம் போடத் தகுதியானது தானா? வாசகர்கள் மத்தியில் அதற்கு என்ன மாதிரியான வரவேற்பிருக்கும்? என்கிற சந்தேகம் நிச்சயம் ஒரு பதிப்பாளருக்கு இருக்க வேண்டியதே. இறுதியில் மறுவாரத்திலிருந்தே அவரது சிநேகிதி டாட் காமில் நான் கதை பதிவிடுவதாக முடிவானது.


பேசி முடித்து ஒரு பதினைந்து நிமிடங்கள் கூடக் கடந்திருக்காது. மீண்டும் ஒரு அழைத்து வந்தது அவரிடமிருந்து. குழப்பமாகவே ஏற்று செவிகூர்ந்தேன்.


"ஷிவானி, கேட்க மறந்துட்டேன். உங்களை சிநேகிதி டாட் காம் வாட்சப் க்ரூப்ல சேர்க்கவா?"


"இல்ல, வேண்டாம் மேம்"


"நம்ம தளம், பதிப்பகம் பத்தி மட்டும் தான் பேசுவோம்"


"அதுவந்து… இப்போதைக்கு வேண்டாமே மேம்"


"இல்லப்பா, அங்க ரைட்டர்ஸ் மட்டும் தான் இருப்பாங்க"


"அய்யோ! வேண்டாவே வேண்டாம் மேம்"


"சரி, சரி, சேர்க்கலை. வச்சிடட்டுமா?"

ச்சே! நான் அலறியதைப் பார்த்து அவர் என்ன நினைத்திருப்பார்?


சரி, என் மறுஜென்மமான நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?


**************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்🙂

கல்யாணத்துக்கு வந்துட்டு கை நனைக்கலைன்னா எப்படி?

கருத்துத்திரி,
பந்தி நடக்குமிடம்

*****

சிறு முடிவுரை அடுத்தப் பக்கத்தில்....​
 
Last edited:
Top Bottom