பாவலனோ மகளின் ஓவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் இருக்கும் சமூக அக்கறையை கண்டு வியந்து தான் போனார்..
நாட்கள் நகர அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயலடித்தது.. ஒரு நாள் திடீரென்று பாவலன் கடையில் மயங்கி விழுந்தார்..அவரை கடை ஊழியர்கள் அருகிலிருந்த மருத்துவ மனையில் அவசர பிரிவில் சேர்த்தனர்..
குடும்பமே பதறியடித்து சென்று பார்த்த பொழுது அவரது இருதய ரத்தக் குழாயில் சிறு அடைப்பு உள்ளதாகவும் அதற்கு ஸ்டென்ட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்த, உடனே அவருக்கு சிகிச்சை நடந்தது..
மகிழினியோ தந்தை மயங்கி விழுந்ததை கேள்விபட்டதிலிருந்து அழுது கொண்டே இருந்தாள்.. அவளுக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஒரு நாள் கூட அவர் உடல்நிலை குன்றி பார்த்ததில்லை.. தந்தையை இந்த நிலையில் பார்த்தவள் துடி துடித்துப் போனவள் ஓவ்வொரு விநாடியும் மனதிற்குள் கடவுளிடம் தந்தையை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள் …
நறுமுகைக்கோ கணவனை காண்பதா, இல்லை சதா கண்களில் நீர்வடிய தன்நிலை மறந்து அமர்ந்திருந்த மகளை காண்பதா என்று தவித்து போனார்..
பாவலனுக்கு சிகுச்சை முடிந்து அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விழித்தபிறகு மகிழினி அவரை விட்டு இம்மியளவும் நகராமல் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. மகள் என்பவள் தகப்பனுக்கு இன்னொரு தாய் என்று நிரூபித்தாள்..
அன்றிலிருந்து தந்தைக்கு இன்னொரு தாயானாள்.. அவருக்கு மாத்திரை ,மருந்து எடுத்து தருவது, அவருக்கு பக்குவமாக உணவு தருவது என்று அவள் நேரத்தை தந்தைக்காகவே ஓதுக்கினாள்..
பாவலனோ முதலிலேயே மகள் மேல் உயிராக இருப்பார்.. இப்பொழுது அவர் மூச்சே மகளானாள்..
அதுமட்டுமின்றி முதல் போல் தந்தையிடம் எதற்கும் வாதாடுவதோ, கோப்படுவதையோ அறவே நிறுத்திவிட்டாள்.. அவருக்கு மனது வருத்தமடைய கூடிய எந்த செயலையும் செய்யாமல் மிகுந்த கவனத்துடன் நடந்து கொண்டாள்.
நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் எதுவும் பேசாமல் அவரின் தோள்களில் சாய்ந்து கொள்வதே அவளுடை வேலையாக இருந்தது..
அந்த ,மாதிரி நேரங்களில் தந்தை, மகள் இருவரின் மனதிலும் எல்லையில்லா நிம்மதி கிடைத்தது.. பேசும் வார்த்தைகளை விட பேசா மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு. குடும்பமே இவர்களின் இந்த செயலை கண்டு ஒரு புறம் நிம்மதி அடைந்தாலும், ஒரு புறம் கவலை பட்டார்கள்..
மகிழினி திருமணம் புரிந்து சென்றுவிட்டாள் பாவலரின் நிலையையும், மகிழினியின் நிலையும் நினைத்து தான் கவலைபட்டார்கள்..எப்படி இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார்கள்..
மகிழினி தனது மேல்படிப்பை முடித்து விட்டு அடுத்து எம் .பில் (M.Phil) படிக்க வேண்டும் என்று விரும்பினாள்.. ஆனால் நறுமுகையும், செந்தாமரையும் அவளுக்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்..
பாவலனுக்கோ அப்பொழுது தான் நெற்றியில் அடித்தை போல் ஒரு உண்மை உறைத்தது .. அது மகள் திருமணம் முடிந்து அடுத்த வீட்டிற்கு சென்று விடுவாள் என்பது.. அவரால் எப்படி தன் மகளை பிரிந்து இருக்க முடியும், அதுவும் மகளின் அன்பை வேறொருவருடன் பங்கு கொள்ள முடியுமா என்று மனம் வலிக்க வருந்தியவர்..
அன்று இரவு தன் மனைவி நறுமுகை இடம் புலம்பி தவித்தார்..நறுமுகையோ தன் கணவனின் நிலையை உணர்ந்து அவருக்கு பக்குவமாக ஆறுதல் கூறினாள்..
பாவலனோ “நான் வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து என் பெண்னை என்னுடனே வைத்துக் கொள்வேன்..” என்று கூறியவரிடம்.
நறுமுகையோ “சரி அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது எதற்கு அந்த பேச்சு..” என்று அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேச்சை மாற்றினார்..
பாவலன் மகள் விரும்பிய படிப்பை படிக்கவைத்தார்.. தன் குடும்பத்தாரிடம் போராடி மகள் விருப்பத்தை நிறைவேற்றினார்.. அதில் ஒரு சுயநலமும் இருந்தது.. மகள் படிப்பு முடியும் வரை வீட்டில் யாரும் மகிழினிக்கு திருமண பேச்சை எடுக்க மாட்டார்கள்.. இன்னும் கொஞ்ச நாள் மகளுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்..
மகளும் படிப்பில் முழு கவனத்தையும் வைத்து நன்றாக படித்தாள்..நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர ஓரு நாள் அவரை தேடி முகில்வதனன் என்று ஓருவர் உங்களை காண வந்துள்ளார் என்று கடை ஊழியர் அலுவலக அறைக்கு வந்து சொன்னதை கேட்டு யாராக இருக்கும் என்று குழம்பிய படியே வரச்சொன்னார்..
பாவலன் யோசனையுடனே அமர்ந்து இருக்கும் பொழுது கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்த வாலிபனை பார்த்து மிகவும் குழம்பித்தான் போனார்..
முகில் வதனன் முகத்தில் குழப்பத்துடன் தன்னை பார்த்த பாவலனிடம் வணக்கம் சொன்னவன் தன்னை பற்றி அறிமுகப்டுத்திக் கொண்டான்..
“என் பெயர் முகில்வதனன்.நான் தமிழில் பி.எச்.டி முடித்து விட்டு செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரிகிறேன் . உங்கள் மகள் மகிழினியை எனக்கு கொஞ்ச நாட்களாக தெரியும். அவளை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மகிழினியை திருமணம் புரிய விரும்புகிறேன்.. இந்த விசயத்தை நான் முதலில் மகிழினியிடம் தான் கூறினேன். ஆனால் அவள் ஓத்துக் கொள்ளவில்லை.. என் அப்பா யாரை சொல்கிறாரோ அவரைத் தான் நான் திருமணம் புரிந்து கொள்வேன் .. என்னை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கிய அவருக்கு தெரியும் எனக்கு எப்படி பட்டவரை திருமணம் புரிந்து வைப்பது என்று அதனால் அவரின் விருப்பம் தான் என் விருப்பம். என்று கூறிவிட்டாள்.. அதனால் தான் நான் உங்களிடமே நேரடியாக கேட்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் நான் ஓரே பையன்.. அப்பா தொல்காப்பியன் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்,அம்மா அறிவுக்கொடி இல்லத்தரசி..” என்று தன்னை பற்றியும் , தன் குடும்பத்தை பற்றியும் , தான் வந்த காரணத்தையும் அழுத்தமாகவும், கம்பீரமாகவும் சொல்லி முடித்தான்..
பாவலனோ அவன் சொன்னதை எல்லாம் கேட்டு திகைத்தாலும், எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவனை அமரச் சொன்னவர்..அவனை தலை முதல் கால் வரை யோசனையாக பார்த்தார்..
தன் மகள் சொன்னதை கேட்டவருக்கு மகளை நினைத்து தந்தையாக கர்வம் கொண்டார்.. மகளை நினைத்து பெருமையும் அடைந்தார்..
முகில்வதனை வேண்டாம் என்று சொல்லும் அளவு எந்த காரணமும் அவருக்கு தெரியவில்லை.. கொஞ்சம் கூட பயமில்லாமல் ,கம்பீரமாக தன்னிடம் வந்து பெண்கேட்ட அவனை அவருக்கு பிடித்து தான் இருந்தது.. அதுவும் பார்ப்பதற்கும் அழகாக , வசீகரமாக. நிமிர்வுடன் இருந்தான்..
தன் மகள் மகிழினிக்கு ஏற்ற துணைவனாக இருப்பான் என்பதில் ஐயமில்லாமல் இருந்தது..ஜோடி பொருத்தமும் நன்றாக தான் இருக்கும் என்று மனதில் நினைத்தவர், இருந்தாலும் முகில்வதனனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் தீரவிசாரித்து விட்டே முடிவெடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர்..
முகில்வதனனிடம் ஒரு வாரம் அவகாசம் கேட்டார்.. அதன் பிறகு தன் முடிவை சொல்வதாக அவனுடைய அலைபேசி எண்களை வாங்கி வைத்து கொண்டு அனுப்பினார்.
அன்று இரவு தன் தோள்களில் சாய்ந்து அமர்ந்து இருந்த மகளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்..
“கண்ணம்மா உனக்கு முகில்வதன்னை தெரியுமா..?” என்று கேட்டவரிடம் சட்டென்று தலையை நிமிர்த்தி தந்தையை பார்த்தவள் “ஏன் அப்பா அவர் நான் ஆராய்ச்சி செய்யும் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.. படிப்பு விசயமாக அவரிடம் நான் சில சந்தேகங்களை கேட்க போவேன் அப்படித்தான் அவரை எனக்கு பழக்கம்..கொஞ்ச நாட்கள் முன் அவர் ஒரு முறை என்னிடம் என்னை திருமணம் புரிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.. நான் மறுத்துவிட்டேன் .என் அப்பா யாரை சொல்கிறாரோ அவரை தான் மணந்து கொள்வேன் என்று கூறிவிட்டேன் ..”என்றவளிடம்..
“ஏன் கண்ணம்மா அப்படி கூறினாய், உனக்கு விருப்பம் இருந்தால் அப்பா மறுக்கவா போகிறேன்..” என்ற பாவலனிடம்..
நீங்கள் மறுக்கமாட்டீர்கள், எப்பொழுதும் என் ஆசைக்கு தான் மதிப்பு கொடுப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும், ஆனால் என்னை நன்றாக வளர்த்த உங்களுக்குத் தான் எனக்கான துணையை தேர்ந்தெடுப்பதற்கான முதல் உரிமை இருக்கிறது.எனக்கு எல்லாம் நீங்கள் தான்.. உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்..” என்ற மகளை தோளோடு அணைத்துக் கொண்டவர் கண்களில் பெருமை பொங்க உச்சி முகர்ந்தார்..
அடுத்து வந்த நாட்களில் நண்பர் ஒருவரின் உதவியுடன் முகில்வதனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் தெளிவாக விசாரித்து அறிந்து கொண்டவருக்கு முழு திருப்தியாக இருந்தது..
மகிழினியிடம் தன் விருப்பத்தை சொன்னவர், அவளுக்கு முகில்வதனனை திருமணம் புரிய சம்மதமா என்று கேட்டார்..
மகிழினியோ “அப்பா எனக்கு திருமணம்மெல்லாம் வேண்டாம்ப்பா, நான் எப்பொழுதும் உங்களுடனே இருந்து கொள்கிறேன், உங்களை பிரிந்து என்னால் இருக்க முடியாது..” என்று கூறிய மகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்..
அன்று இரவு மனைவி நறுமுகை இடம் முகில்வதனனை பற்றி சொன்னவர் அத்துடன் தன் ஆசையையும் மனைவிடம் சொன்னார் , “முகில்வதனனை வீட்டு மாப்பிள்ளையாக இருக்க சொல்லப் போகிறேன்..” என்றவரிடம்..
நறுமுகையோ “எனக்கு அவர் வீட்டு மாப்பிள்ளையாக இருப்பதில் விருப்பமில்லை,அவர் வீட்டிலும் ஓரே பையன்..அவருடைய அம்மா , அப்பாவை பார்ப்பது அவர் கடமையல்லவா, நீங்கள் உங்கள் மகளை வளர்த்தது போல் தானே அவரையும் வளர்த்து இருப்பார்கள், அப்புறம் எந்த பெண்ணும் தன் கணவராக வருபவர் தன் காலில் தான் நிற்கனும், மாமனார் வீட்டில் வந்திருந்தால் அது அவளுக்கு பெருமை இல்லை என்று தான் நினைப்பாள்..” என்ற மனைவியை திகைத்துப் போய் பார்த்தவர்..
“ அப்படி என்றால் நான் என் மகளை பிரிந்து தான் ஆகனும்மென்று முடிவெடுத்து விட்டாயா..?” என்று ஆதங்கத்துடன் கேட்ட கணவரிடம்..
நறுமுகையோ “அய்யோ அது அப்படி இல்லைங்கோ, பெண் பிள்ளையை பெற்றால் என்றாவது ஒரு நாள் பெற்றவர்களை பிரிந்து தான் ஆகனும். அது நம் பெண்ணுக்கு மட்டும் விதிவிலக்கா? அது காலத்தின் கட்டாயம்.. அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி அந்த பிரிவை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் .. இப்பொழுது தொலைபேசி இருக்கிறது தினமும் பேசிக் கொள்ளலாம், நினைத்தால் சென்று பார்த்து வரலாம்..” என்று பலதையும் கூறி கணவரை ஆறுதல் படுத்தினாள் நறுமுகை..
பாவலனுக்கு மனைவி என்ன கூறினாலும் மனம் ஓப்பவில்லை.. மகளை பிரிவதை நினைத்தால் அவருக்கு உயிர் போகும் வலியாகயிருந்தது..
ஆனால் அதற்காக மகளை திருமணம் முடிக்காமல் வைத்துக் கொள்ள முடியுமா? என்று நினைத்தவர், மனதை கல்லாக்கிக் கொண்டு திருமண வேலையை ஆரம்பித்தார்.
முகில்வதனன் பெற்றோருக்கும் மகிழினியையும், அவர்கள் குடும்பத்தையும் மிகவும் பிடித்து விட்டது உடனே திருமணத்திற்கு நாள் பார்த்தார்கள்.. மகிழினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் என்று முடிவு செய்தனர்..
நாட்கள் நகர மகிழினியின் படிப்பு முடிந்த கையோடு குறித்த நாளில் ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை முடித்தார்.ஆனால் அவர் அதற்கு மகிழினியை சம்மதிக்க வைக்கத்தான் குடும்பமே படாத பாடு படவேண்டி இருந்தது..
திருமணத்தன்று பாவலன் முகத்திலும்,மகிழினி முகத்திலும் அத்தனை கவலைகள் அப்பி இருந்தது.. நறுமுகைக்கும், செந்தாமரைக்கும் இருவரையும் நினைத்து மனதில் பயப்பந்து உருண்டது..
மகழினி கணவன் வீடு செல்லும் பொழுது தந்தையையும், மகளையும் எப்படி சமாளிப்பது என்று தனசேகரன் உட்பட குடும்பமே அந்த நிகழ்வை நினைத்து கலங்கிய படியே இருந்தனர்..
மகிழினி புகுந்தவீடு செல்ல வேண்டிய நேரமும் வந்தது.. பாவலன் அந்த நேரத்தை எதிர்நோக்க முடியாமல் தவித்து போனார்.. உயிர் போகும் வலியை உணர்ந்தார்..கண்களில் நீர் கோர்க்க அவர் நின்ற நிலையை யாராலும் பார்க்க முடியவில்லை..
மகிழினிக்கோ தந்தையின் நிலையை பார்த்ததும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த துக்கம் பிறீட “அப்பா..” என்று கதறியபடி முகில்வதனனின் கைகளை உதறிவிட்டு ஓடிசென்று அவரின் நெஞ்சில் சாய்ந்து கதறித்துடித்தாள்..
அந்த காட்சி கல் நெஞ்சையும் கரைந்து உருகச் செய்தது.. பாவலனும் தன் மனஉறுதியை கைவிட்டவர் மகளின் அப்பா என்ற கதறலில் சர்வநாடியும் ஓடுங்க “கண்ணம்மா..” என்று துடித்தார்..
தந்தை, மகள் உறவு என்பது எல்லையில்லாத உறவல்லவா! தந்தை கருவில் வேண்டுமானால் சும்மாகமல் இருக்கலாம் ,ஆனால் மகளை ஒவ்வொரு நொடியும் நெஞ்சில் சுமந்தவர் அல்லவா!
பெண் பிள்ளையை பெற்ற தந்தைகளுக்குத் தான் தெரியும் அந்த மரணவலி.. தன் தோளிலும், நெஞ்சிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை ஒரே நாளில் வேறு ஓருவருக்கு சொந்தமாக்கி கொடுப்பது எத்தனை வேதனையென்று..
முகில்வதனனுக்கு அவர்களின் இந்த பாசம் பிரமிப்பாகயிருந்தது..மெல்ல அவர்களிடம் சென்று மகிழியின் தோள்களை பற்றி தன் புறம் திருப்பியவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு பாவலனிடம் “உங்கள் மகளை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்..” என்று உறுதியளித்தவன் அவளை தோளோடு அணைத்த படியே காரை நோக்கி சென்றான்..
மகிழினியோ திரும்பி.. திரும்பி தன் தந்தையை பார்த்தபடியே சென்றாள்.. பாவலனும் போகும் மகளையே விழி இமைக்காமல் பார்த்தார்.. இருவரின் கண்களிலும் அத்தனை வலி தெரிந்தது.. அங்கு வார்த்தைகள் ஊமையாகின, விழிகளோ ஆயிரம் மெளன மொழி பேசியது..
திருமண மண்டபத்தில் இருந்து வீடு வந்த பாவலன் யாரிடமும் ஓரு வார்த்தை பேசவில்லை, மனம் முழுவதும் மகளின் ஞாபங்களை சுமந்து கொண்டு மகளின் படத்தை எடுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டார்..
அவரின் மனவேதனைக்கு மகளின் படம் மட்டுமே மருந்தாக இருந்தது..அனைவரும் அவரின் வேதனையை கண்டு மனதில் வருந்தியபடி அமைதியாக இருந்தனர்..
நேரம் கடக்க அவரின் அலைபேசி அவரின் தவநிலையை கலைத்தது.. யாரோ என்று எரிச்சலுடன் பார்த்தவர், அழைத்தது மகள் என்று தெரிந்ததும் ஆசையாக அதை உயிர்பித்தவர் அவருடை அத்தனை பாசத்தையும், ஏக்கத்தையும் தேக்கி ஒற்றை வார்த்தையில் “கண்ணம்மா..” என்றழைத்தார்..
மகளோ அந்தபக்கம் “அப்பா..” என்றாள். உயிர் உருகும் ஓசையில், பாவலன் மகளின் அழைப்பில் தன்னை மறந்திருந்தவரை மகளின் வார்த்தை நடப்புக்கு கொண்டு வந்தது..
“அப்பா சாப்பிட்டீர்களா? சாப்பிட்டவுடன் சரியாக மாத்திரை போட்டு கொள்ள வேண்டும்.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் நான் இல்லை என்ற தைரியத்தில் அதிக நேரம் டீவி பார்க்க கூடாது,அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்..”என்றவளுக்கு குரல் கம்ம “அப்பா ஐ மிஸ் யூப்பா..” என்றவுடன்..
பாவலனும் தாங்கமுடியாமல் “கண்ணம்மா நானும் தானடா,நீ சாப்பிட்டீயா , உடம்பை பார்த்துக் கொள்ளடா, அடிக்கடி அப்பாவை பார்க்க வாடா..” என்றவருக்கு வார்த்தை தளுதளுத்தது..
மகிழினியோ “சரி நேரமாக தூங்குகள்.. நான் காலை அழைக்கிறேன்..” என்று அழைப்பை துண்டித்தாள்..
அன்றிலிருந்து தினமும் பத்துமுறையாவது தந்தைக்கு அழைத்து பேசுவாள்.. முகிழ்வதனனும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு பாவலனை பார்க்க வருவார்கள்..
நாட்கள் நகர மகிழினி தாய்மை அடைந்தாள்.. அதை கேட்டு பாவலன் உட்பட குடும்பமே மகிழ்ந்தது.. ஏழு மாதம் பிறந்ததும் மகிழினிக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர்.
அந்த மாதம் மகிழினி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் பொழுது பாவலனும் அவர்களுடன் சென்றார்.
மகிழினியை பாரிசோதித்த மருத்துவர் தாயும்,சேயும் நலம் என்றார்.. முகில்வதனனோ மருத்துவரிடம் “சுகபிரசவம் ஆகிவிடும் தானே..” என்று கேட்டான்..
மருத்துவரோ உடனே “நிச்சயமாக சுகபிரசவம் தான் ஆகும்..” என்று கூறுகையில் பாவலன் சட்டென்று “என் மகள் எப்படி வலி தாங்குவாள் நீங்கள் சீசேரியன் செய்து விடுங்கள்..” என்றார்..அவர் கண்முன்னே நறுமுகை பிரசவ வலியில் துடித்தது வந்துச் சென்றது..
பாவலர் கூறியதை கேட்டு மருத்துவர் உட்பட அனைவருமே திகைத்தனர்..மகிழினி தான் “அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்ப்பா..” என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
நாட்கள் நகர மகிழினிக்கு பிரசவ நேரம் நெருங்கி வலியும் வந்தது .. மகிழினியை விட பாவலன் தான் துடித்துப் போனார்.. மருத்துவரிடம் சீசேரியன் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தினார்..ஆனால் மருத்துவரோஅது தேவையில்லை என்று மறுத்துவிட்டார்..
செந்தாமரை பேத்திக்கு தைரியம் சொன்னார்..பாவலனை பார்க்கும் பொழுது எல்லாம் தன் வலியை பொறுத்துக் கொண்டு மகிழினி தந்தைக்கு ஆறுதல் சொன்னாள்.. “எனக்கு ஓன்றும் இல்லையப்பா நீங்கள் தைரியமாக இருங்கள்..” என்றாள்.
நறுமுகை கூட மகள் வலியை பொறுப்பதைப் பார்த்து பிரமித்தார்..ஒரு வழியாக தங்கள் இளவரசியை பெற்றெடுத்தாள் மகிழினி..
தங்க தாமரையாக மின்னிய குழந்தையை பார்த்து குடும்பமே பூரித்து போனது..அரை மயக்கத்தில் இருந்த மகளை பார்த்து பாவலன் உச்சிமுகர்ந்தார்..
முகில்வதனனோ கண்களில் காதல் பொங்க தன் மனைவியின் கைகளை பிடித்து தன் அன்பை பறிமாறியவன் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..
பாவலன் மருந்து வாங்க வெளியில் சென்ற சமயம் செந்தாமரை பேத்தியிடம் “எப்படி செல்லம்மா வலியை அப்படி பொறுத்துக் கொண்டாய்..” என்று கேட்டதற்கு “நான் அழுதால் அப்பா தாங்க மாட்டாரே பாட்டி,அது தான் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டேன்..” என்ற பேத்தியை அதிர்ந்து போய் பார்த்தார் செந்தாமரை..இது என்ன மாதிரி பாசம் என்று வியந்து தான் போனார்..
அதே நேரம் மாத்திரையை வாங்கிக் கொண்டு உள்ளே வந்த பாவலரும் மகள் சொன்னதைக் கேட்டு திகைத்து தான் போனார்.. மகள் தன் மீது வைத்து இருக்கும் இந்த பாசத்திற்கு ஈடு இணையே இல்லை என்று நினைத்தார்..
செந்தாமரையும், நறுமுகையும் மகிழினியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள்.. ஒரு மாதம் ஆன பிறகு குழந்தைக்கு “வளர்தமிழ் ..” என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்..
நாட்கள் வருடங்களாக உருண்டோட இப்போது பேத்திக்கு மூன்று வயதானது..மகளைப் போலவே பேத்தியும் பாவலனிடம் உயிராக இருந்தாள்..
மகிழினி கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வந்தாள்.. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தையை பார்க்க மகளுடன் ஓடி வந்துவிடுவாள்..
அப்படித்தான் அன்றும் வந்த மகளின் முகமே சரியில்லை.. மகளிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை..”வேலை அதிகம் அப்பா..” என்றாள்..
பாவலனோ “ஏன் கண்ணம்மா நீ வேலைக்கு போகனும் கம்பீரமாக நம் கடையில் வந்து முதலாளி வேலை பார்க்க வேண்டியது தானே..” என்று வாஞ்சையுடன் சொன்ன தந்தையிடம் “இந்த பணி எனக்கு மனசுக்கு மிக பிடித்து இருக்கிறது..” என்றவள்.
சலுகையாக தந்தையின் தோள்களில் சாய்ந்தபடியே “அப்பா நான் இல்லை என்றாலும் என் மகளை நீங்கள் தான் என்னை போலவே வளர்க்க வேண்டும்..” என்று கூறிய மகளை அதிர்ச்சியாக பார்த்த தந்தையிடம்..”நான் வெளியூர் சென்றால்..” என்று பேச்சை மாற்றினாள் மகிழினி..
பாவலனுக்கு மகள் சென்ற பின்னும் அவள் சொன்ன வார்த்தை மனதை பிசைந்து கொண்டே இருந்தது..
அன்று நள்ளிரவில் முகில்வதனனிடமிருந்து தொலைபேசியில் வந்த செய்தியை கேட்டு குடும்பமே துடித்துப் போய்விட்டது.. மகிழினியை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறது என்ற செய்திதான் ..
குடும்பமே விரைந்து மருத்துமனைக்கு சென்றது.. முகில்வதனனோ கண்களில் ஓளியெல்லாம் வற்றி ஓய்ந்து போய் குழந்தையுடன் நின்று இருந்தான்..
அவனிடம் விசாரித்த பொழுது தான் தெரிந்தது.. “மகிழினிக்கு தலையில் கட்டியென்றும் அதை உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றும் .. மகிழினிக்கு இது ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் .. தன்னிடம் கூட கூறாமல் மறைத்துவிட்டாள்.. இன்று இரவில் வலி தாங்காமல் மயங்கி சரிந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது.. இப்பொழுது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. நமக்கு தெரிந்தால் தாங்க மாட்டோம் என்று மறைத்து விட்டாள்..”என்று முகிழ்வதனன் சொன்னதை கேட்டு அனைவரும் துடிதுடித்துப் போனார்கள்..
பாவலனோ உறைந்து போய் நின்றார்..மகள் தன்னிடம் இன்று சொன்னதற்கு காரணம் புரிந்தது.. மகளுக்கு அறுவைசிகிச்சை நடந்து கொண்டு இருந்த பொழுது அவரோ உலகில் உள்ள அத்தனை தெய்வத்திடமும் மகளுக்காக மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தார்..
அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்தவர் மகிழினி கண்விழித்தால் தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டார்..
மகளோ தனக்காக இத்தனை பேர் துடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் இரண்டு நாட்களாக கண்களை திறக்காமல் இருந்தாள்..
மகளின் நிலையைவிட பாவலனின் நிலைதான் அனைவரையும் பயம் கொள்ளச் செய்தது..யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் பச்சை தண்ணீரும் அருந்தாமல் நடைபிணமாக இருந்தவரை பார்க்க முடியவில்லை..
பாவலன் மனமெல்லாம் உயிர் போகும் வலியில் தன் பழைய நினைவுகளில் கண்களில் நீர்வடிய விழிமூடி மூழ்கி இருந்தவரை “அப்பா அப்பா..” என்று மகளின் குரல் அழைப்பதை போல் இருக்கவும்.. தன் பழைய ஞாபங்களிலிருந்து திடுக்கிட்டு விழித்தவருக்கு மனதில் பயம் வந்தது.. என் மகளை என்னை விட்டு எங்கும் போக விடமாட்டேன் என்று நினைத்தவர் மகள் இருந்த அறைக்கு வேகமாக சென்றார்..
மகிழினி அருகில் நாற்காலியில் அமர்ந்து இருந்த முகில்வதனன் பாவலனை பார்த்ததும் எழுந்து அவருக்கு இருக்கையை தந்து விட்டு சுவரோரமாக சென்று நின்று கொண்டான்..
மாமனாரின் வேதனையை கண்கூட கண்டவனால் தன் வலியையும் தாங்க முடியவில்லை..
பாவலன் மகளின் அருகில் அமர்ந்து மெல்ல மகளின் கைகளை பிடித்து தன் கண்களில் ஓற்றிக் கொண்டவர் “கண்ணம்மா விழித்துக் கொள்ளடா.போதும் அப்பாவை சோதித்தது, எனக்கு நீ வேண்டுமடா, என்னை அதிகாரம் செய்ய, என்னுடன் விளையாட,என்னுடன் சண்டையிட நீ வேண்டுமடா எனக்கு.. என்னை மனிதனாக்கியவள் நீ தான் கண்ணம்மா , நீ என் தேவதை டா, என் உயிரே நீ தானடா, நீயில்லாமல் நான் எப்படி இருப்பேன், என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தவள் நீதானே, என் மூச்சே நீதானேம்மா ..நீயில்லை என்றால் நான் இல்லை ..நானும் உன்னுடனே வந்துவிடுவேன் ..”என்று கரைந்தவரின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் மகிழினியின் கைகளில் பட்டு தெரித்தது..
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற முகில்வதனனின் கருவிழிகள் அசையாமல் ஒருநொடி நின்றது..மகிழினியின் மூடிய விழிகளுக்குள் ஒரு நொடி கருமணிகள் ஆடியது..அடுத்த நொடி அது பொய்யோ என்பதை போல் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது..
மீண்டும் கருவிழிகள் அசைந்தது.. மகிழினி மெல்ல கண்களை திறந்தவள் தன் கைகளை பற்றி இருந்த தந்தையை பார்த்துபடியே வறண்டு போய் இருந்த இதழ்களை கஷ்டபட்டு பிரித்தவள் “ப்பா..அப்பா..” என்று அழைத்தாள்..
பாவலனோ தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தவர், மகள் விழித்து விட்டதை பார்த்து எல்லையில்லா மகிழ்வுடன் கண்களில் நீர் வடிய “கண்ணம்மா..” என்று எழுந்தவர் . மகளின் தலைமீது தலை சாய்த்து “கண்ணம்மா அப்பாகிட்ட திரும்பி வந்துட்டாயா .. அப்பாவை துடிக்கவைத்து நடைபிணமாக்கிவிட்டாயேடா..” என்று கூறியபடி நெகிழ்ந்தார்..
மகளோ “அப்பாவிடம் தாடி குத்துப்பா..” என்றாளே.. அதை கேட்டவர் பழைய நினைவில் கணக்ளில் நீர் வடிய சிரித்தார்..
முகில்வதனோ நம்ப முடியாத பிரமிப்பில் இருந்தான்.. இது என்ன வகையான பாசம்.. சினிமாவையே மிஞ்சிவிட்டதே, மருத்துவத்தால் முடியாததை பாசத்தால் முடித்துக் காட்டிவிட்டாரே.. தந்தை,மகள் பாசத்திற்கு ஈடு இணையும் இல்லை, எல்லையும் இல்லை என்று நினைத்தவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது..
தந்தை மகளுக்கு தனிமை கொடுத்து வெளியில் வந்தவன் மாமியாரிடம் விசயத்தை சொல்லிவிட்டு மாமியார் மடியில் தூங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அறைக்கு வந்தவனிடம் தனக்கும் மகள் இருக்கிறாள் என்ற கர்வம் அவன் முகத்தில் தெரிந்தது..
நறுமுகையும் மகளிடம் சென்று நலம் விசாரித்து உச்சி முகர்ந்தவளுக்கு மகளை விட கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நிம்மதியாகயிருந்தது..
முகில்வதனோ மனைவியிடம் வந்தவன் மகளை தோள்களில் போட்டுக் கொண்டே மனைவியை பார்த்து கண்களில் காதல் பொங்க கண்களாலேயே நலம் விசாரித்தவன் அவளின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டான்... அவர்களுக்கு அங்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை மெளனமே ஆயிரம் மொழி பேசியது..
தந்தை , மகள் பாசத்தை பார்த்தவனுக்கு தானும் மகளை பெற்றதுக்காக பெருமையாகவும் , மகிழ்ச்சியாகவும் உணர்ந்தான்.
மகளதிகாரம் முடிவது இல்லை.. அது ஒரு தொடர்கதை..
திருக்குறள்
(அதிகாரம் 7 குறள் 65)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
பொருள்
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும், அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
மகள்களை பெற்ற தந்தைகளுக்கு இந்த சிறுகதை சமர்ப்பணம்..
சுபம்…