Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மந்தகாச மந்தாரகையே - Tamil Novel

Status
Not open for further replies.

anuchandran

New member
Vannangal Writer
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 9

வஞ்சங்கள்
தீர்த்திட
கடமைகள்
நிறைவேற்றிட
பொறுப்புகள்
தாங்கிட
காலம் தாழ்த்துவதில்
நன்மைகள்

மறுக்கப்படுகிறது.


நந்தவனத்திலிருந்து வெளியே வந்த நர்த்தகி நவநீதன் கூறிய மற்றைய இடத்தினை பார்க்கச்சென்றாள்.

அது ரத்ன மாளிகையின் பூஜையறை.

அவ்வறை மாளிகையின் மற்றைய இடங்களை விட சற்று பெரியது. அவ்விடத்தின் கட்டமைப்பே அங்கு வருபவர்களுக்கு மன அமைதியை கொடுத்திடும். அறையின் நடுவே எம்பெருமானின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க அச்சிலையை சுற்றி ஐம்பொன் விளக்குகளும் மணம் வீசும் மலர்மாலைகளும் சூழ்ந்திருந்தது.

ஒற்றைத்திரி தீபம், மூன்று திரி தீபம், ஐந்து திரி தீபம், ஒன்பது திரி தீபமென்று அனைத்து ரக தீபங்களும் அவ்வறையை அழகுபடுத்தியிருந்தன. மணம் பரப்பும் புஷ்பங்களும் வாசனைப்புகைகளும் அவ்விடத்தின் தெய்வீகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தியிருந்தது.

பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த எம்பெருமானை சுற்றி ஒரு செயற்கை தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ஆம்பல் மலர்கள் மிதந்தபடியிருக்க அது பார்ப்பவர்களுக்கு கண்ணுக்கினிய காட்சியாகியது. அத்தனை மலர்களிருந்த போதிலும் வில்வம் பச்சிலைகளுக்கே எம்பெருமானின் கழுத்தினினை அலங்கரிக்கும் வரம் கிட்டியிருந்தது.

பூஜையறையினுள் வந்த நர்த்தகி சாந்தமாய் வீற்றிருந்த எம்பெருமானின் திருவுருவத்தின் முன் கைகூப்பி நின்று அவரின் திருவுருவத்தை மனதினுள் நிறைத்துக்கொண்டாள்.

இந்த மாளிகையிலேயே அவள் மனம் அமைதியடையும் ஒரே இடம் இதுமட்டுமே.

முழுதாய் அமைதியை மட்டுமே தன்வசப்படுத்திய இவ்விடம் எத்தனை வேதனைகளையும் துளி கணத்தில் மறக்கடித்துவிட்டு மனதை தெளிவடையச்செய்யும்.

இன்றும் அவ்வமைதியை எதிர்பார்த்து கைகூப்பி நின்றவளின் மனதில் பல எண்ணங்கள்.

"ஆதிசங்கரரே யான் செய்யும் காரியங்கள் சரியா தவறாக என்ற குழப்பம் என் எண்ணங்களை உழற்றிக்கொண்டே இருக்கின்றது. மொத்த பிரபஞ்சத்தின் நன்மைக்காக என் உலகத்தாரை எதிர்க்கத்துணிந்துவிட்டேன். என்னை நம்பியவர்களுக்கு தீங்கு இழைத்திடும் துரோகச்செயலை செய்ய முன் வந்துவிட்டேன். இது சரியா தவறா என்ற குழப்பத்திற்கான பதிலை அறியாமல் என் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. என் குழப்பங்களுக்கு தம்மால் மட்டுமே விடைகொடுத்திட முடியும். சர்வ காலமும் அறிந்த தம்மால் மட்டுமே என் மனக்குழப்பத்தை நீக்கிட முடியும். என் வஞ்சத்தை தீர்க்கும் சந்தர்ப்பமாகவே இந்த செயலை செய்திட முன்வந்தேன். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை தம் உடன்பிறவா சகோதரியாக நடத்தும் தேவியும் எனது இந்த செயலால் பாதிக்கப்பட்டு விடுவாரோ என்ற பயம் என்னை ஆட்டிப்படைக்கிறது. அவரின் நலம் பற்றிய எண்ணம் என்னுள் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. உலக நலனா தேவியின் நலனா என்று யோசிக்கும் சந்தர்ப்பத்தில் என் மனம் குழம்பி தவிக்கிறது. இந்த பேதையின் மனக்குழப்பங்களை தெளிவியுங்கள் நேசனே. தம் ஒருவரால் மட்டுமே என் மனக்குழப்பங்களுக்கு தீர்வளிக்க முடியும். எனக்கு சரியாதனொரு வழியை காட்டி அருள் புரிந்திடுங்கள்." என்று மனதினுள் வேண்டிக்கொண்டவள் தட்டிலிருந்த புஷ்பங்களை இருகைகளிலும் ஏந்தி அதனை எம்பெருமான் மீது தூவி வழிபட்டாள்.

தன் சிறு வழிபாட்டை முடித்துக்கொண்டவள் அவ்வுருவச்சிலையை கடந்து அதன் பின்புறம் சென்றாள்.

அங்கொரு இயற்கை தடாகமிருக்க அதனுள் வண்ண வண்ண மீனினங்கள் அங்குமிங்கும் நீந்தித்திரிந்தபடியிருந்தது. இயற்கையாய் அமைந்த தடாகத்தினை இறைவனின் தீர்த்தநீராக மாற்ற எண்ணிய அனாகதய வம்சத்தவர்கள் அத்தடகத்திற்கருகே எம்பெருமானின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து அதனை பூஜையறையாக மாற்றியிருந்தனர்.
அது அறை என்றபோதிலும் அதன் கட்டமைப்பு திறந்தவெளி நந்தவனம் போலவே இருந்தது. இறைவனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடம் முழுதும் கூரை கொண்டு மூடப்பட்டிருக்க மீதியிடம் திறந்த வெளியாயிருந்தது.
திறந்தவெளியாயிருந்த காரணத்தினால் அந்த தடாகத்தின் மேற்பரப்பில் ஆதவனின் பொற்கிரகணங்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.

அவ்விடத்தின் நளினத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக அந்த தடாகத்தினை சுற்றி சற்று இடைவெளி விட்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த தடாகத்தினருகே செல்வதற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்கள் அந்த படிக்கட்டுக்களில் நின்றவாறு தான் பார்த்திட முடியும்.

அந்த தடாகத்தினை பார்த்தபடியே அதன் படிக்கட்டில் அமர்ந்த நர்த்தகி அந்த தடாகத்தின் ராஜகுமாரியாய் நடுவில் வீற்றிருந்த அந்த பெரிய ஆம்பல் மலரையும் அதனருகே மொட்டுவிடத்தொடங்கியிருந்த மற்றைய ஆம்பல் மொட்டுக்களையும் பார்த்தாள்.

சூரியனின் பொற்கிரணங்கள் அவற்றின் நளினத்தை ஓவியமாய் உணரச்செய்திட மிதந்தபடியே தண்ணீருடன் ஒன்றாது விலகி நிற்க நினைத்த அதன் இலைகளை பார்த்தவளுக்கு அவற்றின் இயல்பு விசித்திரமாக தான் இருந்தது.

முழுநேரமும் தண்ணீரின் மேற்பரப்பிலேயே மிதந்திருக்கும் ஆம்பல் இலையிற்கு தண்ணீரின் தீண்டலில் விருப்பமில்லை. ஆம்பலுடன் இருப்பதால் அதனால் தண்ணீரின் தீண்டலை தவிர்த்திட முடியவில்லை.

இதை யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விடயம் புரிந்தது. அவளுக்கும் மன்னர் அதுராதகனின் செயல்களில் உடன்பாடில்லை. ஆனால் தேவி மகதாயினிக்காக அவரின் நலன் பற்றி எண்ணுகிறாள். ஆனால் இதில் யாருக்கு பலன்? ஆம்பல் இலையின் பொறுமை ஆம்பல் மலர் இறைவனின் திருவடியை அடைய உதவுகிறது. ஆனால் நான் மன்னர் அதுராதகனின் நலன் பற்றி எண்ணுவது இந்த பிரபஞ்சத்திற்கு தீங்கினை மட்டுமே விளைவிக்கும். ஒருவரின் மகிழ்ச்சிக்காக மொத்த உலகினையும் துயரத்தில் ஆழ்த்திட வேண்டுமா?
"இல்லை... அது நான் என்னை சிருஷ்டித்தவருக்கு செய்யும் துரோகம். என் முடிவுகள் சரிதான். நான் நிகனியிற்கு உதவவேண்டும். மேற் பிரபஞ்சத்தை காத்திட என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்திட வேண்டும். இனி எந்த சந்தர்ப்பத்திலும் என் முடிவிலிருந்து பின்னடையக்கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் தேவி. அனைவரின் நன்மைக்காகவும் நான் இதை செய்துதான் ஆகவேண்டும். என்னை மன்னித்திடுங்கள் தேவி" என்று மனதினுள் நினைத்து கொண்டவள் அங்கிருந்து எழுந்து செல்ல நினைத்தாள்.

அப்போது நவநீதன் கூறியது நினைவு வர உடனேயே சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள்.
அங்கிருந்த ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தவளது கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.

அதனால் அவ்விடங்களை அணுகி ஆராய முடிவு செய்தாள். ஒவ்வொரு இடமாய் மிக கவனமாய் ஆராய்ந்தபடியே சுற்றி வந்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை.

அப்போது அவள் காலினை ஏதோ இடறிட அது என்னவென்று குனிந்து பார்த்தாள் நர்த்தகி. அது ஏதோ கல்லென்று நினைத்தவள் அதை பாதையிலிருந்து அகற்ற முயல அதுவோ அசைய மறுத்தது.

துணுக்குற்றவள் குனிந்து அது என்னவென்று ஆராய்ந்தாள். அது ஏதோ பொத்தான் போலிருக்க அதை அழுத்த முயன்ற அவளது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அவளால் அதனை எதுவும் செய்யமுடியாமலிருக்க அதன் அமைப்பை நன்றாக உற்று கவனித்தாள். ஆனால் அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை.

இதை பற்றி நவநீதனுக்கு தெரியப்படுத்துவதென்று முடிவெடுத்தவள் அங்கிருந்து விரைந்து கிளம்பினாள்.

நேராக தன் இல்லத்திற்கு வந்தவள் தாமதியாது கீழ் தளத்திற்கு சென்றாள்.

அவளை எதிர்பார்த்திருந்த நவநீதன் அவளிடம்
"ஏதாவது தெரிஞ்சிதுங்களா?" என்று கேட்க

"என்னவானது நர்த்தி ஏதாவது அறிந்துகொண்டாயா?" என்று நிகனிகா கேட்க அவளை தொடர்ந்து பவித்ராவும் அதையே கேட்டாள்.

"சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் பார்த்தவற்றை அவ்வாறே கூறுகிறேன். தங்களுக்கு அதில் உபயோகமானதை குறித்துக் கொள்ளுங்கள்." என்று கூறிய நர்த்தகி தான் பார்த்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.

அவள் கூறிய அனைத்தையும் கவனமாக கேட்டு நவநீதனும் பவித்ராவும் குறித்துக்கொண்டனர்.

"அந்த நந்தவனம்?" என்று பவித்ரா கேட்க

"இன்றிரவு யாருமறியாமல் அதை பற்றி அறிந்து வருகிறேன்."என்று நர்த்தகி உறுதியளிக்க அப்போது நவநீதன்

"எனக்கு அந்த தடாகம் பக்கத்தில் நீங்க பார்த்தாக சொன்னது எப்படி இருந்ததுனு அங்க அடையாளத்தோடு தெளிவாக சொல்லமுடியுமா?" என்று நவநீதன் கேட்க நர்த்தகியும் தான் பார்த்த அனைத்தையும் தெளிவாக கூறினாள்.

அவள் கூறிய அனைத்தையும் குறித்து கொண்ட நவநீதன்

"நானும் பவியும் இதை பத்தி ஏதும் கண்டுபிடிக்க முடியிதானு பார்க்கிறோம். நீங்க அந்த நந்தவனத்துல உள்ள அந்த தடுக்கப்பட்ட பகுதியில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க." என்று கூற அதை ஏற்றுக்கொண்டாள் நர்த்தகி.

பின் நிகனிகாவிடம்
"நிகனி நான் இன்று மாளிகையில் தங்கிட வேண்டும். நீ இவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொண்டு கவனமாக இரு. யாரும் கதவை தட்டினால் திறந்துவிடாதே. கவனமாயிரு." என்றுவிட்டு நர்த்தகி அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து மாளிகைக்கு கிளம்பினாள்.

நர்த்தகி சென்றதும் நிகனிகா நவநீதனிடம்
"இந்த ரகசியபாதை தெரிந்து கொள்வதில் தாம் இத்தனை தீவிரம் காட்டுவது மாளிகையை உலவு பார்ப்பதற்காக மட்டுமல்ல என்று எனக்கு தோன்றுகிறது." என்று நிகனிகா நவநீதனின் எண்ணங்களை தெரிந்துகொண்டது போல் கேட்க திடுக்கிட்ட நவநீதன் அவளையே கூர்ந்து பார்த்தான்.

தன் எண்ணங்களை அவள் படித்துவிட்டாளா என்று சந்தேகித்தவன்
"நீங்க என்ன சொல்றீங்க?"

"தமக்கு ஆரிமாவின் திட்டங்களில் அத்தனை பிடிமானமில்லையென எண்ணுகிறேன். அதனால் தாம் புதுத்திட்டம் வகுக்க முற்படுகின்றீர்களென யான் எண்ணுகிறேன்." என்று கூற இப்போது நிஜமாகவே அதிர்ந்து போனான் நவநீதன்.

பவித்ராவும் நிகனிகா இதை இத்தனை விரைவில் கண்டறிவாளென்று நினைக்கவில்லை.

"இல்ல.. நீங்க ஏதோ தப்பாக.." என்று நவநீதன் ஏதோ விளக்கிட முயல மெலிதாய் புன்னகைத்த நிகனிகா

"தாம் பதட்டமடையவேண்டிய அவசியமில்லை. யான் ஆரிமாவை நம்புமளவிற்கு தங்களையும் நம்புகிறேன். தம்மை பாதுகாக்கும் பொறுப்பு என் வசமுள்ளது. தம் திட்டங்களுக்கு நான் என்னாலான உதவிகள் அனைத்தையும் செய்திடுவேன். அதனால் அடுத்து என்ன செய்வதென்று கூறிடுங்கள்." என்று கூற நவநீதன் சற்று தயங்கியபடியே

"நான் சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லனும். ஆனா நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல. எனக்கு ஆரிமா சொன்ன எந்த விஷயத்துலயும் நம்பிக்கை வரல. ஏதோ தப்பு இருக்கிறதாக மனசுல உறுத்திட்டே இருக்கு. அதனால் அவங்க சொன்னபடி மாளிகைக்கு போகக்கூடாதுனு முடிவு பண்ணேன். அதுக்காக தான் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே தங்கலாம்னு சொன்னேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. புது திட்டத்தை வகுக்கிறதுக்கு முதல்ல மாளிகையை பத்தி தெரிஞ்சிக்கனும்னு நினைச்சேன். அதை பத்தி தெரிஞ்சிக்கிட்டா புது திட்டம் வகுக்க இலகுவாக இருக்கும்னு நினைச்சேன். மாளிகைக்குள்ள போனா அந்த கல்லோட இருப்பிடம் பற்றி தெரியவரும்னு சொன்னாங்க. ஆனா அது எவ்வளவு தூரத்துக்கு நடைமுறைக்கு சாத்தியம்னு தெரியலை. இப்படி ஆரிமா சொன்ன எந்த திட்டத்திலும் ஒரு தெளிவு இல்லை. அதனால் தான் நாங்க ஒரு புது திட்டம் போடனும்னு நினைச்சேன். ப்ரவீன் ஆகாஷிடம் கூட பார்த்து நிதானமாக நடந்துக்க சொன்னேன். அவங்க அந்த மாமுனிகளிடம் சீடர்களாக சேர்ந்தா மற்றைய கல்லோட இருப்பிடம் பற்றி தெரிஞ்சிக்கலாம்னு சொன்னாங்க. இத்தனை முக்கியமான இந்த இரண்டு கற்களை பற்றி ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிக்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரிமா நாங்க என்ன செய்யனும்னு சொன்னாங்களே தவிர முழு திட்டத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தல." என்று நவநீதன் நிதர்சனத்தை கூற நிகனிகாவிற்கும் அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்துதானிருந்தது.

அவள் மனதிலும் இந்த எண்ணங்களிருந்ததை அவளால் மறுக்கமுடியாது.

இத்தனை சிரமப்பட்டு நவநீதனையும் அவனது நட்புக்களையும் அழைத்து வந்த நிகனிகாவிடம் கூட ஆரிமா எதையும் விளக்கமாய் கூறிடவில்லை.

அவ்விரண்டு கற்களை தேடிக்கண்டுபிடித்தால் நெருப்புவளையத்தின் சக்தியை அதிகப்படுத்திலாமென்றும் அது மத்யுக உலகின் இரண்டு துருவங்களில் இருப்பதாகவும் அதை தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வளையத்தின் சக்தியை உடைப்பதற்காக நடாத்தப்படும் யாகதீயில் சமர்ப்பித்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமென்று மட்டுமே கூறியிருந்தார்.

அந்த கற்களின் இருப்பிடம் அவையே வெளிப்படுத்திட வேண்டும். அவற்றின் வரவினை தூண்டிடவேண்டுமாயின் அவற்றிற்கான தேடுதல் ஆரம்பித்திருக்க வேண்டும். இறை தூதர்களால் உருவாக்கப்பட்ட அந்த கற்களை இறைதூதர் வம்சாவளியினரால் மட்டுமே நெருங்கிட முடியும். அவர்களை அக்கற்கள் உணரும் பட்சத்தில் அவை வெளிப்பட்டு அவர்கள் வசமாகுமென்று கூறியிருந்தார்.

அவரின் யாக பலத்தின் உதவியால் ஒரு கல் மகாமுனி ஒருவரின் வழிகாட்டுதலினூடாக அடையப்படுமென்றும் மற்றொன்று மாளிகையில் வீற்றிருக்கும் எம்பெருமானின் ஆசியால் வெளிப்படுமென்றும் அறிந்துகொண்டதாக கூறினார்.

அதனாலேயே ஒரு குழுவை யாகம் நடைபெறும் இடத்திற்கும் மற்றைய குழுவை மாளிகைக்கும் செல்லுமாறு கூறினார்.

இதையெல்லாம் யோசித்து பார்த்த நிகனிகாவிற்கும் ஆரிமா எதையோ மறைக்கிறாறென்றே தோன்றியது.

ஆனால் இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் அவரே என்பதால் அவளால் அவரை சந்தேகிக்கமுடியவில்லை.

"தம் எண்ணங்கள் எனக்கு புரிகிறது. தங்களுக்கு எது உசிதமென்று படுகின்றதோ அதன் படியே செய்யலாம். யான் அறிந்தவற்றை பற்றி தங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆரிமாவிற்கு புதுத்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியவேண்டாம். ஆரிமாவை நான் சமாளித்துக்கொள்கிறேன். தாங்கள் அடுத்து என்ன செய்திட வேண்டுமென்பதை கூறிடுங்கள்."

"ரொம்ப நன்றிங்க. மாளிகையோட உள்ளமைப்பை பற்றி தெரிஞ்சிக்க தான் அதை பற்றிய குறிப்புகளை சேகரிச்சேன். இத்தனை நேரம் சேகரித்த விஷயங்களில் மாளிகையோட எல்லா இடங்களையும் தெரிஞ்சிக்கிட்டோம். இப்போ உள்ள நுழையனும். ஆனா அந்த கல் கைவசம் வந்ததும் நாம அங்கேயிருந்து ரகசிய பாதையினூடாக வெளியே வரனும். அந்த கல்லை பற்றி ஆரிமாவுக்கு தெரிஞ்சிருக்குனா நிச்சயம் அதை பற்றி அதுராதகனுக்கும் தெரிஞ்சிருக்கனும். இவ்வளவு பெரிய யாகத்தை நடத்தனும்னு முடிவு பண்ணவரு அதுக்கு வரக்கூடிய தடைகள் என்னனு நிச்சயம் தெரிஞ்சு வச்சிருப்பாரு. என்னோட யூகம் சரினா அவருக்கும் இது பற்றி தெரிஞ்சிருக்கனும். அதனால் அரண்மனையில் உள் பாதுகாப்பு ரொம்ப அதிகமா இருக்கனும்." என்று நவநீதன் கூற பவித்ராவும்

"ஆமாங்க நிச்சயம் உங்க மன்னருக்கு இது பற்றி தெரிஞ்சிருக்கும். அந்த கல் இருக்கும் வரைக்கும் அந்த யாகத்துக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கு. அதனால் அதை அவரு தேடுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். அதனால் நாம அரண்மனைக்குள்ள போய் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிற மாதிரி இருக்குனும். அதோடு இதில் வேறு ஏதோ மறைமுக திட்டம் இருக்குமோங்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கு. அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கனும்னு நினைக்கிறேன்."

"ம்ம்ம்.. யான் இத்தனை தூரத்திற்கு யோசித்திடவில்லை. மன்னர் அதுராதகனை எதிர்க்கவேண்டுமென திட்டத்தை தொடங்கியதே ஆரிமா தான். அவரின் வழிகாட்டுதலின் பெயரில் தான் யான் அனைத்தையும் செய்தோம். ஆனால் தாங்கள் கூறிய பின்பு தான் இதில் இத்தனை சிக்கல்கள் இருப்பது புரிகிறது. ஆரிமா அனைத்து காரியங்களையும் கூறத் தவறிவிட்டார். இனி கேட்பதில் அவருக்கு ஐயம் மட்டுமே எழும். அதனால் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேறு யாரையேனும் நாடிட வேண்டும். ஆனால் இவ்வுலகில் அதற்கான வழியேதுமில்லை." என்று நிகனிகா சற்று கலவையாய் கூற அப்போது பவித்ரா

"நாம் கொள்ளித்தாய் கிட்ட உதவி கேட்கலாமா?" என்று கேட்க அப்போது நிகனிகாவின் முகம் பிரகாசமானது.

"ஆம். அவரால் மட்டுமே இதற்கு தீர்வு வழங்கிட முடியும். நான் மேற்பிரபஞ்சம் சென்று அவரை சந்தித்துவிட்டு வருகிறேன்." என்றவள் தன் நீண்ட ஜடையை பிரித்து அதில் மறைந்திருந்த அந்த நிஷாகாந்தி மலரை கையிலெடுத்தாள்.

நிஷா காந்தி மலரினை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டவள் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாயில் முணுமுணுத்திட அப்போது அங்கொரு புகை தோன்றியது.

அதனுள் ஒரு வழி தென்பட நவநீதனிடம் மற்றும் விடைபெற்றுக்கொண்டு அதனுள்ளே நுழைந்தாள் நிகனிகா.

நிகனிகா உள்ளே சென்றதும் அந்த புகை மண்டலம் மறைந்தது.

அவள் சென்று சற்று நேரத்தில் திடீரென்று சிலர் வீட்டிற்குள் புகுந்து பவித்ராவையும் நவநீதனையும் கண்களையும் கைகளையும் கட்டி வெளியே இழுத்து சென்றனர்.
 

anuchandran

New member
Vannangal Writer
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 10

நினைப்பது
நடந்திட
இது கற்பனையல்ல
கற்பனையை மிஞ்சிடும்
நிகழ்காலம்

தம் வேலைகளை முடித்தாவிட்டு ரக்ஷிதாவும் தாத்மினியும் வெளியே வரும் போது வாசலில் மகாமுனிகளையும் மாந்திரீக மெய்வல்லுனர்களையும் அந்த யாகத்தை தலைமையேற்று நடாத்தும் ருத்ரசங்கர ரிஷி வரவேற்றுக்கொண்டிருந்தார்.

பணியாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே கலந்திருந்த ப்ரவீனும் ஆகாஷும் ரக்ஷிதாவும் நர்த்தகியும் வந்துவிட்டனரா என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

நர்த்தகி ரக்ஷிதாவுடன் வெளியே வந்ததை முதலில் பார்த்த ஆகாஷ் ப்ரவீனிடம் சைகை செய்ய அவனது பார்வையும் அவர்களின் புறம் திரும்பியது.

ரக்ஷிதாவும் தாத்மினியும் பெண் பணியாளர்கள் இருந்த இடத்தில் சென்று நின்றுக்கொண்டு வருபவர்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் ஆர்த்தி எடுக்கப்பட்டு பூ தூவி உள்ள அழைத்துவரப்பட்டனர். ஒவ்வொருவராய் உள்ளே சென்றுக்கொண்டிருக்க அப்போது திடீரென்று யாரோ பெருத்த குரலில்

"மகாமுனி அம்புஜவானர் வருகிறார்." என்று கூற அப்போது அனைவரது கவனமும் அவர் புறம் திரும்பியது.

தாத்மினியும் ப்ரவீனிற்கும் ஆகாஷிற்கும் கண்ஜாடை காண்பிக்க அவர்களும் அம்புஜவானரை அடையாளம் கண்டுகொண்டனர்.

சிவப்பு நிற காவியுடையணிந்து நெற்றி முழுதும் விபூதி படர்ந்து கிடக்க சிரசின் மீது அரையடிக்கு உயரமாக ஜடை முடியப்பட்டு நின்றவரை பார்க்கும் போது சிலருக்கு பயமும் சிலருக்கு பக்தியும் பெருகிடும். முகம் முழுதையும் வெள்ளை நிற தாடி கொள்வனவு செய்திருக்க முகத்திலிருந்த சில பாகங்களும் அதனுள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது. கரத்தினில் வீற்றிருந்த உருத்திராட்ச மாலையின் ஒவ்வொரு உருத்திராக்கமும் நிமிடத்திற்கொருமுறை உருட்டப்பட்டுக்கொண்டிருக்க அதன் தார்ப்பரியம் அறியாது பலர் கிலி கொண்டிருந்தனர்.

தன் முன் நின்று தன்னை வரவேற்றவர்களை ஒருமுறை பார்த்தவர் ஒரு நொடி விழி மூடி திறந்து சுற்றிலும் தன் பார்வையை மேய விட கடைசியாக அவரது பார்வை ப்ரவீன் மற்றும் ஆகாஷும் நின்றிருந்த திசையில் நிலைக்குத்தி நின்றது. அது சில கணங்களே என்ற போதிலும் மறைமுகமாக அவரது பார்வை எதனையோ உணர்த்துவதாகவே ஆகாஷும் ப்ரவீனும் நினைத்தனர்.

அவர் உள்ளே சென்றதும் அவரை தொடர்ந்து சிலர் உள்ளே செல்ல அடுத்ததாக தாந்திரீயர் அங்கு வந்தார்.

அவரும் அம்புஜவானரை போல் உடையணிந்திருந்த போதிலும் அவரின் உருவ அமைப்பு அவரை மிக இளமையானவராக காட்டியது.

முகம் முழுதும் கறுப்பு நிற தாடி அரணிட்டிருக்க நெற்றியில் விபூதி பட்டை படர்ந்திருக்க அவரின் கைகளிலும் உருத்திராட்ச மாலை வீற்றிருந்தது. அந்த மாலையும் உருட்டப்பட்டுக்கொண்டிருந்த போதிலும் அதிலொரு இலகுத்தன்மை தெரிந்தது. அதோடு அவர் வதனத்தில் வீற்றிருந்த அந்த மாறா புன்னகை பார்ப்பவரை குளிர்விக்கும் வகையில் அமைந்திருந்தது. அவரின் பெயரும் உரத்து கூறப்பட அவரையும் அடையாளம் காட்டினாள் தாத்மினி.

அவரின் பார்வை சுற்றி மேய்ந்த போதிலும் அது ஏனோ வித்தியாசமாகத்தெரிந்திடவில்லை.
அவரையும் மடத்திலுள்ளவர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

அவர் உள்ளே சென்றதும் தாத்மினி ஆண்கள் இருவருக்கும் கண்ஜாடை காண்பித்துவிட்டு ரக்ஷிதாவுடன் உள்ளே செல்ல ஆண்களிரும் அவர்களை தொடர்ந்து உள்ளே சென்றனர்.

உள்ளே அன்றிரவு பூஜைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்திருக்க வந்திருந்தவர்களை உரிய இடங்களில் அமரவைத்து அவர்களுக்கு வேண்டியவற்றை கவனித்துக்கொண்டிருந்தனர் சிலர்.

அனைவரும் வந்து சேர்ந்ததும் அன்றிரவு பூஜை ஆரம்பமானது. விடாமல் எரிந்துக்கொண்டிருந்த அந்த அக்னி ஜுவாலையின் மீது பூத்தூவி தூபம் காண்பித்து அன்றைய பூஜை ருத்ர சங்கரரால் ஆரம்பிக்கப்பட்டது.

அவரை தொடர்ந்து மற்றவர்களும் மந்திர உச்சாடனம் செய்ய நொடிக்கு நொடி பூஜையின் தீர்க்கம் அதிகமானது.
அப்போது அம்புஜவானர் மற்றும் தாந்திரீயரின் பூஜைக்கான தட்டுக்களை தாத்மினியும் ரக்ஷிதாவும் எடுத்துகொடுக்க மற்றைய பணியாளர்கள் அதை எடுத்து சென்று அவர்களின் புறம் வைத்தனர்.

அப்போது நடக்கப்போவது அறிந்து ப்ரவீனும் ஆகாஷும் தயாராக இருக்க அவர்கள் எதிர்பார்த்த அந்த சம்பவம் அங்கு நடந்தேறியது.

அம்புஜவானரும் தாந்திரீயரும் தம் தட்டுக்களிலிருந்து விபூதியை எடுத்து ஏதோ மந்திர உச்சாடனம் செய்தபடியே அதனை அக்னியில் சமர்ப்பிக்க அக்னியின் வீரியம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

அதை உணர்ந்த இருவரும் ஒருவரை மற்றவர் பார்த்துக்கொண்டனர். பின் மீண்டும் அந்த விபூதியை கையில் அள்ளி அக்னித்தீயில் சமர்ப்பிக்க அந்த யாகத்தின் வீரியம் முன்னதை விட இன்னும் சற்று குறைந்திருந்தது.

இப்போது அதனை மற்ற மகாமுனிகளும் மாந்திரீக மெய்வல்லுனர்களும் கவனிக்க அங்கொரு சலசலப்பு உருவானது.
நிலைமையை உணர்ந்து சட்டென்று எழுந்த ருத்ர சங்கரர்

"அம்புஜவானரே என்னவானது? திடீரென்று யாகத்தீயின் பலம் குறைவதற்கான காரணமென்ன? யாக பூஜையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டதா?" என்று சற்று பதட்டத்துடன் கேட்க அவரின் கேள்விக்கு தாந்திரீயர் பதிலளித்தார்.

"ருத்ரசங்கரரே யாகத்தீயின் வீரியம் குறைவது யாகத்தின் பூர்த்திக்கு அத்தனை நல்லதல்ல. இது தொடர்ந்தால் இத்தனை ஆண்டுகளாக நடந்தேறிய யாகத்தின் பலனை பாதியாக குறைந்துவிடும். உடனடியாக இதனை சரி செய்திட வேண்டும்." என்று கூற ருத்ர சங்கரர் மேலும் பதட்டமடைந்தார்.

சீக்கிரம் இப்பிரச்சினையை சரிசெய்யவில்லையென்றால் நிச்சயம் அவர் அதுராதகனின் கோபத்திற்கு பலியாகிட வேண்டும். இத்தனை மந்திரகட்டுக்களுடன் கூடிய பாதுகாப்பை மீறி இது எவ்வாறு நடந்தது என்ற ஐயம் அவருள் இருந்த போதிலும் அதை பற்றி ஆராய்வதற்கான நேரம் இதுவல்லவென்று உணர்ந்தவர் அடுத்து என்ன செய்வதென்று தீவிரமாக சிந்திக்கத்தொடங்கினார்.

அப்போது சுற்றி ஒருமுறை பார்த்தவர் பின்

"அம்புஜவானரே தவறு எங்கு நடந்தது என்று என்னால் அறியமுடியவில்லை. இதனை அதிவிரைவாக சரிசெய்தாக வேண்டும். தாமே இதற்கொரு நல்தீர்வினை எடுத்துரைக்க வேண்டும்." என்று கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்ள தன்னிடத்தில் அமர்ந்த படியே கண்களை ஒரு நொடி மூடித்திறந்த அம்புஜவானர்

"யாகத்தீயில் மருத்துவ மகத்துவம் பெற்ற அரிதாய் கிடைத்திடக்கூடிய சூர்ய பகவானின் உஷ்ணக்கதிர்களுக்கு பூத்துக் குலுங்கி சந்திர தேவரின் ஸ்பரிசத்தில் முழுப்பலம் பெற்று வண்டுகளின் வட்டமிடலுக்கு அனுமதிக்காத தெய்வாம்சம் பொருந்திய காற்றின் சக்திக்கு எதிராய் செயற்படக்கூடிய பரவிர்த்தி மரத்தின் அடி வேரின் கனுப்பகுதியை அக்னி தேவருக்கு சமர்ப்பித்தாலேயே இப்பிரச்சினையிலிருந்து மீள முடியும்." என்று கூற அங்கிருந்த மகாமுனிகள் அனைவரும் அதிர்ந்தனர்.

அவர் கூறிய அந்த பரவிர்த்தி மரத்தனை கண்டறிவது அத்தனை சுலபமல்ல. அவ்வாறு கண்டறிந்தாலும் அதை அனைவராலும் அணுகிட முடியாது.

அதை குறிப்பிட்ட சில குணாம்சங்களை கொண்டவர்களாலேயே அணுகிட முடியும். மற்றவர்களை அதிலிருந்து வெளிவரும் நறுமணமே மூர்ச்சையடையச்செய்திடும்.

அனைவரும் ஒருவருக்கொருவர் என்னசெய்வதென்று அறியாது பார்த்துக்கொண்டிருக்க அப்போது முன் வந்த தாத்மினி

"குறுக்கே பேசுவதற்கு மகாமுனிகளும் மெய்வல்லுனர்களும் இந்த பணிப்பெண்ணை மன்னித்தருள வேண்டும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு என் வசம் ஒரு உபாயமுள்ளது. தாமனைவரும் அனுமதித்தால் அதை பற்றி எடுத்தியம்புகிறேன்." என்று கூற ருத்ர சங்கரர் அம்புஜவானரையும், தாத்ரீயரையும் பார்க்க இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

"சொல் பெண்ணே. உன் வசம் என்ன உபாயமுள்ளது?" என்று ருத்ரசங்கரர் கேட்க

"ஸ்வாமி பரவிர்த்தியின் அற்புதத்தையும் சிறப்பையும் அனைவரும் அறிவோம். ஆனால் அதை போன்ற மிக சுலபமாய் கிடைக்கக்கூடிய மர்மதீது பற்றி இங்கு பலருக்கு தெரியாத போதிலும் தங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்." என்று கூற ருத்ரசங்கரரோ

"மர்மதீதா??? ஆனால் அது...." என்றவரை தடுத்தது தாந்திரீயரின் வார்த்தைகள்.

"ஆம் அப்பெண் கூறியது சரியே. மர்மதீதும் பரவிர்த்தியை ஒத்த குணாதிசயங்களை கொண்ட விருட்ச வகையை சார்ந்தது தான். நம் முன்னோர்கள் பரவிர்த்தியை உபயோகிக்க முடியாத சந்தர்ப்பங்களில் மர்மதீதுவை பயன்படுத்தியிருப்பதாக அவர்களது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மர்மதீது அடர்ந்த காடுகளில் மட்டும வளரக்கூடியது. அதை இவ்வேளையில் இங்கே வரவைக்க முடியுமா?" என்று கேட்க மற்றவர்கள் மனதிலும் அதே கேள்வியே இருந்தது.

அந்த கேள்வி அவளை மேலும் உற்சாகப்படுத்த அதே பணிவுடன்

"முடியும் ஸ்வாமி. அது இப்போது நான் அழைத்து வந்தவர்களின் கைவசமுள்ளது." என்று கூறிவிட்டு தாத்மினி ப்ரவீனையும் ஆகாஷையும் முன்னே வரச்சொல்ல அவர்களும் முன்னே வந்தனர்.

அவர்களை சந்தேகமாய் பார்த்த ருத்ரசங்கரிடம் தாத்மினி

"அவர்கள் இருவராலும் வாய் வழியாக உரைத்திட முடியாது ஸ்வாமி. அந்த வரத்தினை எம்பெருமான் அவர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டார்." என்று தாத்மினி கூற சந்தேகம் தீராதவராய்

"இவர்களை எங்கிருந்து அழைத்து வந்தாய்?" என்று கேட்க

"அதிகாலை கொள்ளி சேகரிக்கச்சென்றபோது காட்டில் இவர்களிருவரும் அடிப்பட்டு மயங்கிடந்ததை கண்டு நானும் எனது மற்றைய தோழியும் இவர்களை வைத்தியரிடம் அழைத்து சென்றோம். வைத்தியர் இவர்கள் தின்னரது மலரினை முகர்ந்திருப்பதாகவும் அதனால் இவர்களிருவரும் பழைய நினைவுகளை இழந்துவிட்டதாக கூறினார். தாங்கள் யாரென்று தெரியாதிருப்பவர்களை தனித்துவிட மனம் ஒப்பவில்லை. அதனாலேயே மடத்தின் வேலைகளில் உதவட்டுமென்று அவர்களை இங்கு அழைத்து வந்தேன்."

"ம்ம்... அவர்கள் வசம் மர்மதீது இருப்பதை நீ எவ்வாறு அறிந்துகொண்டாய்?"

"அவர்களை வைத்தியர் சோதிக்கும் போது அவர்கள் வசம் இந்த மர்மதீது இருப்பதை கண்டேன். அதை கேட்டபோது அப்போது இருவரும் ஒரு சேர மறுத்துவிட்டனர். இப்படியொரு சந்தர்ப்பத்திற்கு உதவிடுமென்று எண்ணியே அவர்கள் என் வசம் ஒப்படைத்திட மறுத்திருக்கலாம்." என்று கூற அப்போது அம்புஜவானர் ப்ரவீனையும் ஆகாஷையும் தன் அருகே வரச்சொன்னார்.

அவர்களிருவரும் நர்த்தகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரருகே சென்றனர்.

அவர்களிருவரையும் ஒரு பார்வை பார்த்தவர் தாந்திரீயரின் புறம் ஒரு அர்த்தப்பார்வையை வீசினார்.

அவர் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்ட தாந்திரீயர் அவரருகே வந்தார்.

அப்போது அம்புஜவானர் ப்ரவீனை பார்த்து

"யான் கூறும் மந்திரத்தினை மனதினுள் ஜெபித்தபடியே உன் கரங்களால் உன் வசமிருக்கும் மர்மதீதுவினை அக்னியில் சமர்ப்பித்து விடு." என்று கூற தாந்திரீயரும் ஆகாஷிடம் இதையே கூறினார்.

இருவரும் தம் இடைச்செருகில் வைத்திருந்த தாத்மினி கொடுத்த பையினை வெளியே எடுத்து அதிலிருந்த அந்த மர்மதீதுவை கையில் எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் கூறிய மந்திரத்தினை மனதினுள் ஜபித்தபடியே தம் கைகளில் இருந்த மர்மதீதுவை அக்னியில் சமர்ப்பித்தனர் இருவரும்.

அவர்கள் சமர்பித்த சில விநாடிகளில் அக்னி பழைய நிலையை அடைந்திட அப்போது தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

நின்றிருந்த பூஜையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அம்புஜவானர் கூற மற்றைய மாமுனிகள் தத்தம் இடங்களில் அமர்ந்தபடியே பூஜையை தொடங்கினர்.

தொடங்கிய சிறப்பு பூஜை சில மணித்தியாலங்களில் முடிவடைந்ததும் அனைவரையும் உரிய முறையில் அனுப்பி வைத்தார் ருத்ரசங்கரன்.

அம்புஜவானரை வழியனுப்பும் போது அவருக்குரிய மரியாதையை செய்ய முற்பட்ட ருத்ரசங்கரரை தடுத்தவர்

"ருத்ரசங்கரரே எமக்கு இந்த மரியாதைக்கு பதில் இன்று நடந்தேறிய பிரச்சினையை சுமூகமாய் தீர்த்திட உதவிய அவ்விருவரில் ஒருவரை எம்முடன் அனுப்பிவைக்க வேண்டும்." என்று கேட்க ருத்ரசங்கரருக்கோ சற்று ஆச்சரியமாக தான் இருந்தது.

அம்புஜவானர் என்றுமே யாருடைய பரிசுகளையும் ஏற்பதில்லை. அதிலும் அவர் இவ்வாறு கேட்டுப்பெறுவது இதுவரை நடந்திடாத சம்பவம்.

அப்படிப்பட்டவர் இன்று இவ்வாறு கேட்க உடனடியே சம்மதித்து விட்டார் ருத்ர சங்கரர்.

ப்ரவீனை அழைத்து அம்புஜவானர் உடன் போகச்சொன்ன ருத்ரசங்கரரை பார்த்த ப்ரவீன் ஆகாஷை திரும்பி பார்க்க அவனது பார்வையை புரிந்து கொண்டது போல் அவர்கள் அருகே வந்த தாந்திரீயர்

"அவ்விருவரில் மற்றவரை என்னுடன் அழைத்து செல்ல விரும்புகிறேன்." என்று கூற இப்போது ப்ரவீன் மற்றும் ஆகாஷின் பார்வை மாறியது.
அவர்கள் எதிர்பார்த்ததும் இதுவே. அவர்களிருவருடன் செல்வதற்கே இத்தனை திட்டங்களும் நடந்தேறியது.
ஆனால் தம் உணர்வுகளை வெளியே காண்பிக்காது அமைதியாக நின்றிருந்தனர் இருவரும்.
தாந்திரீயரின் பேச்சை மறுக்கமுடியாது ருத்ர சங்கரர் சம்மதிக்க ஆகாஷ் தாந்திரியருடனும் ப்ரவீன் அம்புஜவானருடனும் கிளம்பினர்.

கிளம்புவதற்கு முன் இரு ஆண்களும் ரக்ஷிதாவை நினைத்து சற்று கவலை கொண்ட போதும் எதனையும் சமாளிக்கும் அவளின் குணம் அவளுக்கு உதவிடும் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் கிளம்பியதும் மீதமிருந்தவர்களை வழியனுப்பி வைத்தார் ருத்ர சங்கரர்.

மத்யுக உலகத்திலிருந்து மேற்பிரபஞ்சத்திற்கு வந்த நிகனிகா கொள்ளித்தாய் கிழவியை சந்திப்பதற்காக ஆருட மலை அடிவாரத்தில் காத்திருந்தாள்.

பல மணிநேரங்கள் கடந்திருக்க அப்போது தன் குருவை சந்தித்துவிட்டு மலையின் அடிவாரத்தை அடைந்த கொள்ளித்தாய் கிழவி நிகனிகாவை கண்டு அர்த்தமாய் புன்னகைத்தார்.

அவரை கண்டு அருகில் வந்த நிகனிகா
"கொள்ளித்தாய் தம்மை காணவே இத்தனை நேரம் இங்கு காத்திருந்தோம்."

"நீ வருவனு எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை சீக்கிரத்தில் அது நடக்கும்னு எதிர்பார்க்கலை." என்று அதே அர்த்தமுள்ள புன்னகையுடன் கொள்ளித்தாய் கூற துணுக்குற்றாள் நிகனிகா.

"யான் வருவேனென்று தாங்கள் முன்னரே அறிவீரா?" என்று நிகனிகா கேட்க இப்போது வாய்விட்டே சிரித்தார் கொள்ளித்தாய்.

"காரண காரியம் அறியாமல் எதையும் ஆதரித்தோ எதிர்த்தோ எனக்கு பழக்கமில்லை." என்று பூடகமாய் ஒரு பதிலை சொன்னவரை சற்று கலக்கத்துடன் பார்த்த நிகனிகாவிற்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

கண்களில் சற்று கலக்கத்துடன்
"அவர்களை ஆபத்து நெருங்குகின்றதா?" என்று கேட்க மீண்டும் சிரித்த கொள்ளித்தாய்

"ஆபத்துனு தெரிந்து தானே போயிருக்காங்க. அப்படினா அதை எப்படி சமாளிக்கனும்னு அவங்க தான் யோசிக்கனும்." என்றவரை அதே கலக்கத்துடன் பார்த்தவள்

"தாங்கள் நடந்த நடக்கின்ற நடந்திடும் அனைத்தையும் அறிவீர்கள். . ஆரிமாவின் திட்டங்களில் ஏதோ சந்தேகமிருப்பதாய் நவநீதன் கூறுகின்றார். எனக்குமே அச்சந்தேகம் உள்ளது. தாமே உண்மை நிலையை விளக்கிட வேண்டும்.தயவு கூர்ந்து எனக்கு உண்மையை விளக்கிடுங்கள்." என்று கேட்டவளை பரிதாபமாய் பார்த்தவர்

"சில மறைக்கப்பட்ட உண்மைகள் அதுவா வெளியில் வருவது தான் எல்லாருக்கும் நல்லது. அதுக்குரிய காலம் கனிந்து வரும் போது நிச்சயம் எல்லாமே தெரிய வரும். அதுவரைக்கும் அமைதியாக இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது. இப்போ உனக்கான முக்கிய கடமை ஒன்னு மட்டும் இருக்கு. உன்னோட பாதுகாப்புல இருந்த அந்த இரண்டு பேரும் இன்னொருத்தரோட கண்காணிப்பு வட்டதுல சிக்கியிருக்காங்க. அவங்களை அதிலிருந்து மீட்டுட்டு வா. அது அத்தனை சுலபமில்லை. ஆனா அதை நீ தான் செய்தாகனும். சீக்கிரம் போய் அவங்களை மீட்டெடு. இந்த மூலிகையை அவங்களுக்கு கொடு." என்று கூறி அவள் கையில் ஐந்து வித்துக்களை கொடுத்தவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதை பார்த்தபடியிருந்தவளுக்கு கொள்ளித்தாயின் வார்த்தைகள் புரிய சில கணங்களானது.

அது புரிந்ததும் அந்த வித்துக்களை பத்திரப்படுத்திக் கொண்டவள் நிஷாகாந்தி மலரின் உதவியோடு அங்கிருந்து விரைந்து மத்யுக உலகம் சென்றாள்.

கைகளும் கண்களும் கட்டப்பட்டு தரையில் மயங்கிக்கிடந்திருந்த பவித்ராவையும் நவநீதனையும் ஒரு குழு வட்டமிட்டிருந்தது.

அந்த குழுவின் தலைவன் போல் நின்றிருந்தவன் குரலில் குறையாத ஆங்காரத்துடன்

"அனைத்தும் சரியாய் நடந்தேறுவதாய் எண்ணியிருக்க அனைத்தையும் குழறுபடியாக்கிடவென இவர்களிருவரும் செயல்பட்டது தெரிந்தால் நிச்சயம் நம் அனைவரின் ஜீவனும் பறிக்கப்பட்டு விடும்." என்று கூற அதை கேட்டிருந்த மற்றவர்களுக்கு தங்கள் தலைவன் கூறுவது சரியென்றே தோன்றியது.

"நாம் இவர்களை குறைவாய் எடையிட்டது தவறாகிவிட்டது. இனியும் இவர்களுக்கு கருணை காண்பிப்பது சுத்த முட்டாள் தனம்." என்று அத்தலைவன் தொடர் அப்போது பின்னாலிருந்து யாரோ வரும் அரவம் கேட்க அனைவரும் அரவம் வந்த திசை நோக்கி திரும்பினர்.

அங்கே புயலென ஒருவன் வந்துக்கொண்டிருக்க அவனிடமிருந்து சற்று பின்னே விலகி இருவர் வந்துக்கொண்டிருந்தனர்.

அவனது வரவு அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்தது தான் என்ற போதிலும் அது அவர்களுள் நடுக்கத்தை ஏற்படுத்தியதென்பதை அவர்களால் மறுக்கமுடியவில்லை.

உள்ளே வந்தவனின் உஷ்ணப்பார்வை அங்கிருந்தவர்களை மேலும் பயமுறுத்த அனைவருக்கும் உடல் வெடவெடத்துப்போனது.

அனைவரையும் ஒருமுறை பார்த்தவனது பார்வை கடைசியாய் தரையில் கிடந்தவர்களின் மீது நின்றது.

பின் தலை நிமிர்த்தி அந்த குழுவின் தலைவனை பார்த்தவன்
"இதற்கு உன் பதில் என்ன?" என்று அதே உஷ்ணத்துடன் கேட்க என்ன பதில் கூறவதென்று அறியாமல் அவன் முன் மண்டியிட்டு தலை குனிந்து கொண்டான்.

அந்த குழு தலைவனை தொடர்ந்து மற்றவர்களும் மண்டியிட்டு தலைகுனிய
"இதை உடனடியாக சரிப்படுத்தியாக வேண்டும். " என்றுவிட்டு அவன் அதே வேகத்துடன் அங்கிருந்து சென்றிட அப்போது தான் அங்கிருந்தவர்களுக்கு உயிர் மீண்டெழுந்த உணர்வு.

விரைந்து எழுந்த அக்குழு தலைவன் கட்டளையிடும் தொனியில்
"பீர்மத்ரு உடனடியாக இங்கு வந்தாக வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் உடனடியாக நடந்தேறட்டும்." என்று கூற அந்த குழுவினர் அதற்கான வேலையில் விரைவாய் இறங்கினர்.
 

anuchandran

New member
Vannangal Writer
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 11

நிறைந்திருந்த
மர்மங்கள்
நீடித்திருந்த
சிக்கல்கள்
புதைந்திருந்த
புதையலுக்கான
ரகசியத்தினை
அறிந்திடும்
சுவாரஸ்யத்தினை
அதிகரித்திடுமா

மேற்பிரபஞ்சத்திலிருந்து மத்யுக உலகிற்கு வந்த நிகனிகா நேராக நர்த்தகியின் வீட்டின் அடித்தளத்திற்கு சென்றாள். அங்கு நவநீதனும் பவித்ராவும் இல்லாததை கண்டு அதிர்ந்து போனாள் நிகனிகா. கொள்ளித்தாய் கூறிய போது கூட அவள் முழுதாய் நம்பிடவில்லை. ஆனால் இப்போது அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை‌. இருப்பினும் வீடு முழுதும் அவர்களை தேடினாள். அப்போது தான் கொள்ளித்தாயின் வார்த்தைகளின் உண்மை அவளுக்கு புரிந்தது. உடனடியாக அனைத்து இடங்களையும் ஆராய்ந்தவள் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று ஆராயத்தொடங்கினாள்.

அப்போது அவள் கண்கள் எதையோ கண்டுகொண்டு அதை உற்று கவனிக்கத்தொடங்கியது.
அதை கண்டவளது கண்கள் தொடர்ந்து அது சென்ற பாதையினை தொடர்ந்தது.
நர்த்தகியின் வீடு மண்வீடு என்பதால் அங்கு சில பாதச்சுவடுகள் அழுத்தமாக பதிக்கப்பட்டிருந்தது. முதலில் அதை பெரிதாக கண்டுக்கொள்ளாதவள் பின் அதே போன்ற பாதச்சுவடுகள் மேலும் சில இடங்களில் இருப்பதை கண்டு அதை கூர்ந்து கவனிக்கத்தொடங்கினாள்.

அப்போது தான் சில இடங்களில் பாதச்சுவடுகள் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டிருப்பது புரிய அதை பின்தொடர்வதென்று முடிவு செய்து அதன் வழியே சென்றாள்.

அவள் பின் தொடர்ந்த பாதை முடிவடைந்த இடத்திலிருந்து மூன்று பாதைகள் சென்றது. அதில் எது சரியான பாதையென்று தெரியாது மூன்று பாதைகளிலும் பாதி தூரம் சென்று திரும்பி வந்தாள்.

மூன்று பாதைகளிலும் அந்த பாதச்சுவடுகள் இல்லாமலிருக்க அடுத்து என்ன செய்வதென்று புரியாது அங்கே நின்றிருந்தவளை தூரத்திலிருந்து ஒரு கூட்டம் கண்காணித்தப்படியிருந்தது.

தூரத்திலிருந்து நால்வர் கொண்ட குழுவொன்று அவளை கண்காணித்தபடியே ஏதோ பேசிக்கொண்டிருந்தது.

அதிலிருந்த ஒருவன்
"அந்த பெண்ணால் இனியும் அவர்களிருந்திடும் இடத்தினை கண்டறிந்திட முடியுமா?" என்று கேட்க

"நம் சூழ்ச்சி திட்டத்தினை அப் பெண் அறிந்திடாதவரையில் அவளால் அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்திடமுடியாது." என்று கூற மற்றவர்களும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டினர்.

அடுத்து என்ன செய்வதென்று அறியாது நின்றிருந்த நிகனிகாவிற்கு திடீரென ஏதோ நினைவு வர உடனடியாக அங்கிருந்து சென்றாள்.

மாளிகைக்கு வந்த நர்த்தகி நேரே மாளிகையின் சமையலறைக்கு சென்றாள்.
அங்கு இரவு உணவுக்கான ஏற்பாடுகள் நடந்தபடியிருந்தன.

மாளிகையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான உணவுகள் அதாவது அரச குடும்பத்தினருக்கென்று தனியானதொரு உணவு, உயர்நிலை ஊழியர்களுக்கென தனியுணவு, உட்பணியாளர்களுக்கென்றொரு உணவு, வெளிப்பணியாளர்களுக்கென்றொரு வகை உணவு, உட்புற காவலாளிகளுக்கென்றொரு உணவு, வெளிப்புறக்காவலாளிக்கென்றொரு உணவு என்று பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுவதால் அங்கு பல பணியாளர்கள் இருந்தனர். அனைத்தையும் பார்வையிட்டபடியே சமையலறையை வலம் வந்தவள் கடைசியாக அங்கிருந்த வயதில் மூத்த பணியாளரிடம் வந்தார்.

அவர் அலுப்புடன் ஏதோவொரு உணவுவகைகளை தயாரித்துக்கொண்டிருக்க அவரருகே சென்றவள்
"என்ன பெரியவரோ தம் சமையலில் ஏதோ குறைவது போல் தெரிகிறதே." என்று அவரிடம் பேச்சைத்தொடங்க

"என்று என்னுடைய சமையல் பூர்த்தியடைந்துள்ளது இன்று குறைவதற்கு?" என்று அலுப்புடன் மறுகேள்வி கேட்டவரை குழப்பத்துடன் பார்த்தவள்

"என்னானது பெரியவரே? தங்கள் பேச்சில் இத்தனை சலிப்பு பரந்துகிடப்பதற்கான காரணம் என்னவோ?" என்று கேட்டவளிடம் மாறா சலிப்புடன்

"இங்குள்ளவர்களின் வேறுபட்ட கெடுபிடியினால் என்னுடைய நளபாக வித்தையை மறக்கநேரிடுமோ என்று அச்சமா உள்ளது."

"தமக்கு நளபாகம் மறந்திடுமா? இதை கேட்பதற்கே சற்று சங்கடமாயுள்ளது. தங்கள் தொழிலில் சலிப்பு தட்டும் அளவிற்கு இங்கு என்ன நடந்தது?" என்று நர்த்தகி விசாரிக்க

"உப்பில்லாத, காரம் அதிகளவான, வயிற்றின் கனத்தினை அதிகரித்திடாத, பசியை ஆற்றக்கூடிய உணவினை மட்டுமே சமைத்திடவேண்டுமென்பது மேலிடத்து உத்தரவு. அதை மீறினால் வேலையோடு உயிரும் சேர்ந்து விலகிடுமென்பது யான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு விடப்பட்ட எச்சரிக்கை. " என்று அவர் கூற

"சமைப்பதில் இத்தனை கட்டுப்பாடுகளா?" என்று நர்த்தகி கேட்க

"ஆம். தொடர்ந்து இதையே செய்ததில் நிஜமான நளபாகத்தை என் அறிவு மறந்துவிட்டது." என்று அந்த பெரியவர் அதே சலிப்புடன் கூற

"தம் பிரச்சினை இது தானா?"

"இது மட்டுமல்ல. இன்னும் பல பிரச்சினைகள் வரிசையிலுள்ளது. ஆனால் அவற்றை விளக்கிட ஒரு யுகமே தேவைப்படும்."என்றவரை கேலி செய்யும் நோக்குடன்

"அதுவரை பொறுமையை கடைப்பிடிக்கும் மனதைரியம் என்னிடமில்லை. சுருக்கமாக ஏதேனும் ஒன்றையோ இரண்டையோ கூறிடுங்க." என்றவளை பார்த்து முறைத்தவர்

"என் புலம்பல் உனக்கு கேலியாக உள்ளதா?"

"ஐயகோ நான் அவ்வாறெதுவும் உரைக்கவில்லை. தம் இப்போதைய பிரச்சினையை கூறுங்கள்.என்னால் ஏதேனும் உதவமுடியுமா என்று ஆராய்கிறேன்." என்றவளை திரும்பியொரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தார் அந்த பெரியவர்.

அவர் வெறுப்பின் உச்சியிலிருப்பதை புரிந்துக்கொண்ட நர்த்தகி
"தம் பணியில் யான் ஏதேனும் உதவிடமுடியுமா?" என்று கேட்க

"இன்று முன்னிரவு நேரத்திற்கான காவலாளிகள் எத்தனை பேரென்று கணக்கெடுத்துவா." என்று அந்த பெரியவர் கூற

"அப்போது பின்னிரவு காவலாளிகள்?" என்று கேட்க

"அவர்களின் உணவிற்கு மாளிகை பொறுப்பல்ல." என்று பெரியவர் கூற எதையோ மனதில் குறித்துக் கொண்டாள் நர்த்தகி.

"ஓ..அப்போது இரவு நேர வெளிக்காவலாளிகள் அனைவருக்கும் தங்களது நளபாகமா?"

"நந்தவனம், கோட்டைச்சுவர் மற்றும் கொட்டிகை காவலாளிகளுக்கு மட்டும் உணவு தயாரிப்பதே எந்தன் பணி." என்று கூற ஏதோவொரு திட்டத்தை மனதினுள் தொகுத்துக் கொண்டாள் நர்த்தகி. பின் அந்த பெரியவரிடம் சொல்லிக்கொண்டு நந்தவனத்துக்கு வந்தாள் நர்த்தகி.

எப்போதும் போல் வாயில் ஏதோ முணுமுணுத்தபடி நந்தவனத்தை வலம் வரத்தொடங்கியவளை ஒரு காவலாளி வழிமறித்தான்.

திடீரென யாரோ தன் பாதையை மறைத்ததும் முதலில் அதிர்ந்த நர்த்தகி பின் தன்னை நிதானித்துக்கொண்டு அந்த காவலாளியை மேலும் கீழும் பார்த்தாள்.

அவனை முறைத்துக் கொண்டே

"எதற்காக என்னை வழி மறைக்கிறாய்?" என்று கேட்க அந்த காவலாளியோ அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு பின்னே திரும்பி பார்த்தான்.

நர்த்தகியும் அவன் பார்வை சென்ற திசையை பார்க்க அங்கு அதுராதகனின் பிரதம காவலாளியான அதுரனும் இன்னும் இரு காவலாளிகளும் நின்றிருந்தனர்.
அதுரனை பார்த்ததும் உள்ளுக்குள் எச்சரிக்கை மணியடிக்க அந்த காவலாளி பின்தொடர அவரருகே சென்றாள் நர்த்தகி.

அவர் முன் தலைகுனிந்து தன் வணக்கத்தை தெரிவித்தவள்

"அதுரர் இப்பணிப்பெண்ணை தேடி வந்ததின் காரணத்தினை யான் அறிந்து கொள்ளலாமா?" என்று குரலில் பணிவுடன் கேட்டவளை கடுமையாய் ஒரு பார்வை பார்த்தவர் அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தாது

"மாமன்னர் உன்னை உடனடியாக அழைத்து வரும்படி கட்டளையிட்டுள்ளார்." என்று கூறியவன் மறுபேச்சில்லாமல் பின்னால் திரும்பி நடக்க மற்றைய காவலாளிகள் அங்கேயே நின்று அவளை பார்த்தபடி நின்றிருந்தனர்.

ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதை உணர்ந்தவளுக்கு அடுத்து என்ன நடந்திடுமென்று பயம் மனதை ஆட்டிப்படைக்க அதை வெளியில் காண்பிக்காது அந்த காவலாளிகளோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

நர்த்தகி ரத்னமாளிகையின் பின்புறமிருந்த ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

அவ்வறையினுள் ஒரு உருவம் பின்னால் திரும்பி நின்று கைகளை கட்டிக்கொண்டு நிற்க அதனருகே இன்னும் இரு உருவங்கள் நின்றிருந்தன.

ஒரு தீப்பந்தம் மட்டுமே தன்னிடமிருந்த ஒளியை கசிந்து அவ்விடத்தில் முழுதாய் பரவியிருந்த இருளின் மிரட்டலை குறைத்தபடியிருந்தது.
உள்ளூர எழுந்த நடுக்கத்தை மறைத்தபடியே நர்த்தகி உள்ளே வர அவளை பின்தொடர்ந்து வந்த காவலாளிகள் வாயிலிலேயே நின்றுவிட்டனர்.

உள்ளே வந்த நர்த்தகி தன் எதிரே புறமுதுகை காட்டியபடி நின்றிருந்த அதுராதகனின் முன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

அதுராதகனின் பிரதம காவலாளியான அதுரன் மாமன்னரின் அருகே சென்று ஏதோ கூற தலை திருப்பி பார்த்தான் அதுராதகன்.

அந்த இருளில் கூட அவனின் பார்வையிலிருந்த கடுமை அவளை உள்ளூர நடுங்கச் செய்தது.

அந்த கடுமையே ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதை நர்த்தகிக்கு உணர்த்தியது. ஆனால் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்கமுயன்றபடி தலைகுனிந்து நின்றிருந்தாள் நர்த்தகி.
அதே கடுமையுடன் நர்த்தகி புறம் திரும்பியவன் உதடுகளை ஏளனமாய் வளைத்தபடி

"தேவி மகதாயினியின் விருப்பத்திற்குரிய பணிப்பெண் தோழி சிலகாலங்களாக ஏதோவொரு முக்கிய பணியில் ஈடுபட்டிருப்பதாக அறிந்தேன்." என்றவனின் குரலிலில் கோபமும் வெறுப்பும் முற்றாய் கலந்திருந்ததை நர்த்தகி உணர்ந்து கொண்டாள்.
அவள் தன் தலையுயர்த்தாது மௌனமாய் இருப்பதை கண்டு அதுரர் முன்னே வந்து தன் இடைமறைவில் வைத்திருந்த வாளினை பற்றியபடி

"மாமன்னரே தாம் ஆணையிட்டால் இக்கணமே இத்துரோகியை சிரச்சேதம் செய்கிறேன்." என்று கூற

"பொறு அதுரா. குற்றவாளியை தீர விசாரிக்காமல் தண்டனை வழங்குவது மத்யுக உலகின் வழமையல்ல. அதுவும் பெண்ணெனும் சந்தர்ப்பத்தில் நம் சட்டத்திட்டங்களை சற்று தளர்த்தியாக வேண்டும்." என்று கூறிய அதுராதகன் கைகளை கட்டியபடியே முன்னே நடந்தான்.

அவன் அசைவை உணர்ந்த நர்த்தகி துணிந்து தலையை உயர்த்தி

"மாமன்னரே தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள இல் அடியவள் தயாராயுள்ளாள்."என்று கூற அதுராதகனின் நடை தடைப்பட்டது.
இத்தனை சுலபத்தில் அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வாளென்று அவன் எண்ணிடவில்லை. அவளை சந்தேகமாய் பார்த்தபடியே

"இத்தனை விரைவாய் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான காரணம்?" என்று கேட்க மீண்டும் தலையை குனிந்து கொண்டவள்

"தாம் விவரமறியாமல் என்னை இங்கு அழைத்திருக்க வாய்ப்பில்லை. தாம் அனைத்தும் அறிந்ததன் பின் இல்லையென்று பொய்கூறி சமாளிப்பது முட்டாள்தனமென்று தோன்றியது." என்று கூற

"ம்ம். அவ்வாறெனின் நீ குற்றத்தை ஒப்புக்கொள்கிறாய்?" என்று அதுராதகன் கேட்க அமைதியானாள் நர்த்தகி.

அவள் அமைதியே ஆமென்ற பதிலை கூறிட அப்போது அதுரன்

"மாமன்னரே இந்த துரோகியை சிரச்சேதம் செய்திட உத்தரவிடுங்கள்." என்று வெளிப்பாய தயாராயிருந்த தன் கடுங்கோபத்தை கட்டுக்குள் வைத்தபடி அதுரன் கேட்க

"பொறு அதுரா. இவளை சிரச்சேதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை. தேவி மகதாயினியின் பிரியத்திற்குரிய பணிப்பெண் இவள். அவளின் இத்துரோக செயல் மகதாயினிக்கு தெரிய நேர்ந்தால் நிச்சயம் வருத்தப்படுவாள். என் தர்மபத்தினியின் மனம் நோகும் எச்செயலையும் உனது மாமன்னர் செய்திட மாட்டார். தற்சமயம் இவளுக்கு மன்னிப்பு வழங்கி முடிவு செய்துள்ளேன்." என்று அதுராதகன் கூற

"ஆனால் மாமன்னரே..." என்று அதுரன் ஏதோ கூற வர

"தற்சமயம் இவளை ரத்னமாளிகையை விட்டு வெளியேறவிடாது பார்த்துக்கொள். குறிப்பாக இவள் அந்தபுரத்தை தவிர வேறு எவ்விடமும் செல்ல அனுமதிக்ககூடாது. இது பற்றி மகதாயினி அறிந்திடாமல் பார்த்துக்கொள். நம் வீரர்கள் சிலரை இவளை கண்காணிக்க நியமித்திடு. நம் திட்டங்கள் அனைத்தும் நிறைவடையும் வரை இது தொடர்ந்திட வேண்டும்." என்று அதுராதகன் கூற அதற்கு மேல் அதுரனால் வேறு ஏதும் மறுத்துபேச முடியவில்லை.

நர்த்தகியை பார்த்த அதுராதகன்

"என் கட்டளையை மீறாத வரை உன் ஜீவனிற்கு என்னால் பொறுப்பு கூற முடியும். உன் செயலுக்கு உரிய முறையில் தண்டிக்காமல் உன்னை விட்டு வைத்திருப்பதற்கு காரணம் உன் தேவியார் மட்டுமே. உன்னை அவள் தன் உடன்பிறவா தமக்கையாக எண்ணுகிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே உனக்கிந்த மன்னிப்பு. அதை நினைவில் கொண்டு நடந்து கொள்." என்று அதுராதகன் நர்த்தகியை எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும் பெருமூச்சொன்றை வெளியேற்றியவளுக்கு இதுவரை நடந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை.

ஒரு நொடி இது மாமன்னர் அதுராதகன் தானா என்ற சந்தேகம் கூட அவளுள் எழுந்தது. எந்தவொரு தவறையும் கடுமையாய் தண்டிக்கும் மன்னன் அதுராதகனின் இந்த மன்னிப்பு அவள் எதிர்பாராதது. ஆனால் இதன் பின்னணியில் வேறு ஏதோவொரு முக்கிய காரணம் இருக்கிறதென்பது மட்டும் அவளுக்கு உறுதியானது. இவ்வாறு பல எண்ணங்களில் மூழ்கியிருந்தவளை காவலாளிகள் அந்தப்புரத்திற்கு அழைத்து சென்றனர்.

தன்னுடன் அழைத்துவந்த ப்ரவீனை வழியில் இருந்த ஒரு குகைக்குள் அழைத்து சென்றார் அம்புஜவானர்.

அவருடன் உள்ளே சென்றபோது அங்கு தாந்திரீயருடன் ஆகாஷ் நின்றிருந்தான்.
அவர்களை அங்கு எதிர்ப்பார்க்காத ப்ரவீன் அங்கிருந்த அனைவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

அப்போது
"தாந்திரீயரே தாங்கள் இங்கு வந்து பல நாளிகையாகிவிட்டதா?" என்று அம்புஜவானர் கேட்க தாந்திரீயர்

"சில வினாடிகளுக்கு முன்பே யாம் இங்கு வந்தோம். வரும் வழியில் ஏதேனும் தடங்கல் நேர்ந்ததா?"

"ஆம். சில தூரம் வரை யாரோ பின்தொடர்ந்ததை உணர்ந்தேன். அதனால் சுற்று பாதையை உபயோகிக்க வேண்டி நேர்ந்தது." என்று அம்புஜவானர் கூற இப்போது ப்ரவீனும் ஆகாஷூம் குழப்பத்துடன் அவரை பார்த்தனர்.

அப்போது தாந்திரீயர்
"அம்புஜவானரே இவ்விடத்திற்கு தாம் வரச்சொன்னதன் காரணம்?"

"இக்குகை யாதுவர்மியின் மந்திரக்குகை. யாதுவர்மியின் அனுமதியில்லாமல் இக்குகையினுள் யாரும் நுழைந்திடமுடியாது. நம் திட்டத்திற்காக யாதுவர்மியிடம் அனுமதி பெற்றிருக்கிறேன்." என்று அம்புஜவானர் கூற ப்ரவீனும் ஆகாஷூம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுகொண்ட அம்புஜவானரும் தாந்திரீயரும் அர்த்தமான பார்வையொன்றை பரிமாறிக்கொண்டனர்.

பின் தாந்திரீயர் அவர்கள் புறம் திரும்பி

"தங்கள் இருவரையும் நாம் எம்முடன் அழைத்து வந்ததன் உண்மை காரணத்தை அறிவீர்களா?" என்று கேட்க ப்ரவீனும் ஆகாஷூம் ஒருவரை மற்றவர் பார்த்துக்கொண்டனரே தவிர ஏதும் பதில் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் இதுவரை தம்மை ஊமைகளென்றே அறிமுகப்படுத்தியிருந்தனர்.

அவர்களது நிலையை புரிந்துகொண்டவர் போல் தாந்திரீயரருகே வந்த அம்புஜவானர்

"தாமிருவரும் மேற் பிரபஞ்சத்தை சேர்ந்தவர்களென்று யாம் அறிவோம்." என்று அவர் கூறிய கணத்தில் ப்ரவீனும் ஆகாஷூம் அதிர்ந்து போயினர்.

ஆனாலும் முழு உண்மையை அறியாது எதையும் தெரியப்படுத்தவேண்டாமென எண்ணிய ப்ரவீன் அமைதியாய் ஆகாஷை பார்க்க அவனும் அப்போது ப்ரவீனை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரின் தயக்கத்தினையும் பார்த்த அம்புஜவானர் கண்மூடி ஏதோ ஜெபிக்க அப்போது அவ்விடத்தில் ஒரு புகைமூட்டம் உருவானது. அதில் பல காட்சிகள் படம் போல் ஓட அதனை பார்த்திருந்த ப்ரவீன் மற்றும் ஆகாஷுன் விழிகள் நொடிக்கு நொடி அதிர்ச்சியில் விரிந்தபடியிருந்தது.

அதில் அவர்கள் மத்யுக உலகிற்கு வந்ததிலிருந்து நடந்த அனைத்தும் படமாய் ஓடிக்கொண்டிருந்தது.

இதை பார்த்த பின் இனி எதையும் மறைப்பது வீணென்று உணர்ந்த ப்ரவீன்

"ஆமா நாங்க மேற்பிரபஞ்சத்தை சேர்ந்தவங்க தான். எங்களை கொள்ளித்தாய் தான் அனுப்பி வச்சாங்க. நாங்க அந்த ஆயுட்கற்களை எடுத்து நெருப்பு வளையத்தோட சக்தியை அதிகப்படுத்த தான் இங்க வந்தோம்‌." என்று ப்ரவீன் கூற ஆகாஷூம் அதை வழிமொழிந்தான்.

அதை கேட்டு பெரிதாக சிரித்த தாந்திரீயர்
"நெருப்பு வளையம் அதன் பலமிழந்து பலநாட்களாகிவிட்டது." என்று ஒரு புது செய்தியை கூற ப்ரவீனும் ஆகாஷூம் குழப்பத்துடன் அவரை பார்த்தனர்.
அவர்கள் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த அம்புஜவானர்

"ஆம் நெருப்பு வளையத்தின் சக்தி அனைத்தும் பலநாட்கள் முன்பாகவே அழிக்கப்பட்டுவிட்டது." என்று அவரும் அதையே கூற ப்ரவீன்

"நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலை‌. அப்படி நெருப்புவளையத்தோட சக்தி முழுதாக அழிக்கப்பட்டிருந்தா எதுக்காக மத்யுக உலக மன்னன் இன்னும் மேற்பிரபஞ்சத்தை தாக்காம இருக்காரு? எதுக்காக எங்களை அந்த கற்களை தேடி கண்டுபிடிக்கச்சொன்னாங்க?"

"மேற்பிரபஞ்சத்தோடு அண்டசராசங்கள் முழுவதையும் ஒருங்கே கைப்பற்றிடும் வல்லமையை பெறுவதற்கே நீங்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளீர்கள்‌. அந்த ஆறு கற்களும் யாகத்தீயில் சமர்ப்பிக்கப்படும் போது அண்டசராசரங்களை ஆளும் வல்லமை அதுராதகனின் வசப்படும்." என்று அம்புஜவானர் புதிதாய் ஒரு தகவலை கூற அதை கேட்டிருந்த ப்ரவீனும் ஆகாஷூம் ஒருவரை மற்றொருவரை குழப்பமாய் பார்த்துக்கொண்டனர்.

அவர்களது குழப்பத்தை உணர்ந்தது போல் தாந்திரீயர்

"இது பல மர்மங்கள் நிறைந்த முயற்சி. காலத்தின் போக்கில் தங்களுக்கு இது பற்றி முழுதாய் தெரியவரும்‌. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிப்பதே தற்சமயம் மிக அவசியம்." என்று கூற அப்போது ஆகாஷூம் ப்ரவீனும் ஆரிமா அவர்களுக்கு கூறியதை எண்ணிப் பார்த்தனர்.

ஆரிமா வீட்டில் இருந்தபோது அவர்

"மொத்தமாய் இரண்டு கற்களை தேடிக்கண்டுப்பிடித்திட வேண்டும். உரியவர் வந்து தேடும் வரை தம்மை வெளிப்படுத்திடக்கூடாதென்பது அவ் ஆயுட்கற்களுக்கான படைப்பு நியதி. மேற் பிரபஞ்சத்தை சேர்ந்த தாம் ஐவரால் மட்டுமே தங்களது தேடுதலின் மூலம் அக்கற்களை வெளிப்படுத்த முடியும். எம் முன்னோரின் கணிப்பு படி அக்கற்கள் வடதுருவமான ரத்ன மாளிகையிலும் மற்றொன்றொன்று தாந்திரீயர் மற்றும் அம்புஜவானரின் உதவியுடனும் கண்டறியப்பட வேண்டும். அவற்றின் இருப்பிடத்தினை உரியவர்களால் மட்டுமே கண்டறிய முடியும். ஆகையால் தாம் ஐவரும் இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழு மாளிகைக்கும் மற்றைய குழு யாகம் நடைபெறும் இடத்திற்கும் செல்ல வேண்டும். இன்றிரவு தாந்திரீயரும் அம்புஜவானரும் இரவுபூஜைக்கு வருகின்றனர். ஆண்கள் இருவரும் அவர்களோடு அவர்களின் இருப்பிடம் செல்லவேண்டும்‌. அதற்கான திட்டத்தை தாத்மினி செயற்படுத்துவாள். ஆண்கள் இருவரும் அங்கு சென்றதும் அக்கல்லை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தம் வருகையும் முயற்சியும் அக்கற்களை அடையும் போது அவை தம்மை கண்டுபிடிப்பதற்கான துருப்புச்சீட்டுக்களை தமக்கு வெளிப்படுத்தும்‌. அதன் மூலம் உங்களால் அக்கற்களை கண்டறிய முடியும்." என்ற கூறியவர் ஐவரின் மனதிலெழுந்த சந்தேகங்களை கேட்பதற்கு கூட இடமளியாது அவர்களை அங்கிருந்து கிளப்பியிருந்தார்.

இவற்றை நினைத்து பார்த்த ப்ரவீனும் ஆகாஷூம் அந்நேரத்தில் தம் மனதிலெழுந்த சந்தேகங்களை இப்போது கேட்டிட நினைத்தனர்.

"ஆரிமா இரண்டு கற்கள்னு தானே சொன்னாங்க. ஆனா நீங்க ஆறு கற்கள்னு சொல்லுறீங்க?" என்று ஆகாஷ் கேட்க மெலிதாய் சிரித்த அம்புஜவானர்

"இது மாமன்னர் அதுராதகனின் திட்டம். " என்று அவர் கூற ப்ரவீனும் ஆகாஷூம் அதிர்ந்துபோயினர்.

"நீங்க... நீங்க.. சொல்றது?" என்று ப்ரவீன் தட்டுத்தடுமாறி கேட்க அதற்கு தாந்திரீயர்

"மாமன்னர் அதுராதகன் அறியாது இவ்வுலகத்திற்குள் யாரும் நுழைந்திட முடியாது.அவ்வாறிருக்கையில் தம் ஐவரின் வருகையை அதுராதகன் அறியாதிருக்க முடியுமா?" என்று கூற ப்ரவீனிற்கும் ஆகாஷிற்கும் தாம் கேட்க நினைத்த அனைத்தும் மறந்து போனது.

"அப்போ ஆரிமா?" என்று ஆகாஷ் கேட்க

"அவள் இப்போது அதுராதகனின் பிடியிலுள்ளாள். தம் ஐவரிடம் பேசியது அதுராதகன் உருவாக்கிய மாயவிம்பம்." என்று கூற ப்ரவீனிற்கும் ஆகாஷிற்கும் ஒருநொடி தலைசுற்றிவிட்டது.

பல கதைகளில் மாயை, மாய விம்பமென்று கேள்விப்பட்டவர்கள் அதை நேரில் காண்போமென்று கனவில் கூட நினைத்ததில்லை. நடந்ததை நினைத்து பார்த்தவர்களுக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.

அதை புரிந்து கொண்டது போல் அம்புஜவானர்
"கலக்கம் கொள்வதில் எவ்வித பயனுமில்லை. அந்த ஆறு கற்களையும் கண்டுபிடித்து அழித்திட வேண்டும். அவை அதுராதகனின் வசப்பட்டால் நிச்சயம் அதனால் இவ் அண்டசராசரமே பாரிய அளவினை எதிர்கொள்ளும். " என்று கூறிவிட்டு அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதை விவரிக்கத்தொடங்கினார் அம்புஜவானர்
 

anuchandran

New member
Vannangal Writer
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 12

தொடராய் முடிச்சுக்கள்
பின்தொடர
சவால்களும்
சங்கிலியாய்
தொடர்ந்திட
முதலில்
விடுவிக்கப்படும்
முடிச்சின்
சுவாரஸ்யம்
அறிவது
சுலபம் தானா?

அம்புஜவானர் ஒவ்வொன்றாய் விளக்கத்தொடங்கினார்.

"தாங்கள் இருவரும் முதல் இரு கற்களையும் கண்டறியவேண்டும். அவ்விரு கற்களின் இருப்பிடம் பற்றி இரு புதிர்கள் உள்ளன. அவற்றிற்கான விடையை தாமிருவரும் கண்டறியும் போது அக்கற்களின் இருப்பிடம் பற்றி தாம் அறிந்துகொள்ள முடியும்‌." என்று அவர் கூற

"அந்த கற்கள் பத்தின புதிர்கள் என்ன? அதை எப்படி நாங்க தெரிஞ்சிக்கிறது?" என்று ப்ரவீன் கேட்க அதற்கு அம்புஜவானர்

"அவ்விரு புதிர்களும் பல பாகங்களாய் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் மறைந்துள்ளன. தாமிரும் அந்த புதிர் சங்கிலியின் முதல் புதிரை அறியும் போது மீதமுள்ள புதிர்கள் இருக்குமிடம் பற்றிய குறிப்புகள் தம் வசமடையும். அம்முதல் புதிரை அறிவதற்கு தாந்திரீயர் தங்கள் இருவருக்கும் உதவுவார்." என்று அவர் கூற ப்ரவீன் மற்றும் ஆகாஷின் பார்வை தாந்திரீயர் புறம் திரும்பியது.

அவர்கள் இருவரையும் பார்த்த தாந்திரீயர்

"முதல் புதிரை அறிவதற்கு முன் தாமிருவரும் தம் கழுத்திலணிந்துள்ள அம்மாலைகளை கழற்றிட வேண்டும்." என்று அவர் கூற ஆகாஷும் ப்ரவீனும் ஒருவரை மற்றவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர்.

"அதை கழட்டிட்டா நாங்க பேசுறது உங்களுக்கும் நீங்க பேசுறது எங்களுக்கும் புரியாதே." என்று ஆகாஷ் கேட்க அம்புஜவானரோ

"இவை தங்கள் ஐவரையும் உளவு பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆரங்கள்." என்று கூற அவரை நம்பாத பார்வை பார்த்தனர் ஆகாஷும் ப்ரவீனும்.

அவர்கள் தான் கூறியதை நம்பவில்லையென புரிந்துகொண்ட அம்புஜவானர்

"அவ்விரு ஆரங்களை கொண்டே எம்மால் அதனை நிரூபித்திட முடியும்." என்று கூற ப்ரவீன் தன்னுடைய மாலையை மட்டும் கழற்றி கொடுத்து

"இதை வைத்து நீங்க நிரூபிச்சா நாங்க நீங்க சொன்னதை நம்புறோம்." என்று கூற அவரும் அதே மாறா புன்னகையுடன் ப்ரவீனின் ஆரத்தை வாங்கிக் கொண்டார்.

அவ் ஆரத்தை தரையில் போட்டவர் கண்மூடி ஏதோ முணுமுணுக்க அப்போது அவ்வாரத்திலிருந்து ஒரு பச்சை நிற புகை மேலெழுந்தது.
அதில் ப்ரவீன் ரகசிய கமெரா மூலம் உளவு பார்த்தது போல் அவனை தவிர மற்றவர் அனைவரும் அதில் இருக்க அவனது குரல் மட்டும் இடையிடையே கேட்டு கொண்டிருந்தது.

அதில் அவர்கள் இரு குழுக்களாக பிரியும் போது அந்த மாலையை கழற்றி விட்டு பேசியது கூட இருந்தது.

இதை பார்த்திருந்த இருவருக்கும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது.
இதை ப்ரவீனும் ஆகாஷும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவர்களது அதிர்ச்சியை உணர்ந்து கொண்டது போல் அவர்களை அர்த்தமாய் அம்புஜவானரும் , தாந்திரியரும் ஒரு பார்வை பார்த்தனர்.

பின்
"இப்போது உங்களிருவரின் ஐயமும் தீர்ந்ததா?" என்று தாந்திரீயர் கேட்க அதை ஆகாஷ் ப்ரவீனிற்கு மொழி பெயர்க்க இருவருக்கும் அதை நம்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

ப்ரவீன் ஆகாஷை பார்க்க அவனும் தன் கழுத்திலிருந்த அந்த மாலையை கழற்றி கொடுத்தான்.

அதை வாங்கிய அம்புஜவானர் அதையும் தரையில் வீசி ஏதோ முணுமுணுக்க அவ்விரு ஆரமும் கொழுந்து விட்டு எரிந்து அவ்விடத்திலிருந்து மறைந்து போனது.

இதையெல்லாம் எப்போதும் போல் மாறா வியப்புடன் பார்த்திருந்த ப்ரவீனையும் ஆகாஷையும் கேலியாய் பார்த்து சிரித்த தாந்திரீயர்
"இன்னும் இருவருக்கும் இவ்வுலகில் நடைபெறும் அதிசயங்களை ஜீரணிக்கும் திறன் வசப்படாதது போல் தெரிகிறது.'' என்று கூறிக் கொண்டே இரு ஆரங்களை அவர்கள் முன் நீட்டினார்.

இருவருக்கும் அவர் ஏதோ பேசுகிறார் என்று புரிந்த போதிலும் அவரின் வார்த்தைகளின் அர்த்தம் புரியாதபடியே அவர் நீட்டிய ஆரத்தை இருவரும் வாங்கிக் கொண்டனர்.

அதை அணிந்ததும் இருவரும் தாந்திரீயரை பார்க்க அவர்
"கிளம்பலாமா?" என்று கேட்க ப்ரவீன் அவரிடம்

"இங்க நடந்த விஷயமும் மன்னருக்கு தெரிஞ்சிருக்குமே?" என்று தன் சந்தேகத்தை கேட்க

"அதற்கு வாய்ப்பளிக்ககூடாது என்பதற்காகவே தாங்கள் இருவரையும் இக்குகைக்கு அழைத்து வந்தோம்." என்று அம்புஜவானர் கூற ப்ரவீனிற்கும் ஆகாஷிற்கும் அவரின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்திடவில்லை.

இருவரின் குழப்பமான பார்வையை உணர்ந்து கொண்ட அம்புஜவானர்
"இது மடு தேவதையான யதுவர்மியின் மந்திரக் குகை. இங்கு அவளது அனுமதி இன்றி வேறு எந்தவொரு மந்திர சக்தியும் செயற்பட முடியாது. அவளின் அனுமதி பெற்ற பின்பே யான் அனைவரையும் இங்கு அழைத்து வந்தோம். அதனால் இங்கு நடந்ததெதையும் மாமன்னரால் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை." என்று கூற ஆகாஷோ

"நாங்க அந்த மாலையை கழட்டின விஷயம் இன்னேரம் மன்னருக்கு தெரிஞ்சிருக்குமே?" என்று தன் சந்தேகத்தை கேட்க அதற்கு சிரித்த தாந்திரீயர்

"எமக்கும் மாய விம்பம் உருவாக்கி கண்கட்டி வித்தை காண்பித்திடும் வல்லமையுண்டு." என்று கூற ஆகாஷிற்கும் ப்ரவீனிற்கும் எழுந்த சந்தேகம் தீர்ந்தது.

"அடுத்து நாங்க என்ன பண்ணனும்?" என்று ப்ரவீன் கேட்க

"நாம் இப்போது இங்கிருந்து கிளம்பி இவ்வுலகின் எல்லையை அடைந்திட வேண்டும். அவ்விடம் எழுந்தருளி இருக்கும் பூத கணத் தளபதியான நந்தியெம்பெருமாளின் வசமே முதல் புதிருக்கான முதல் பகுதியுள்ளது. " என்று கூற ப்ரவீனும், ஆகாஷும் தாந்திரீயருடன் கிளம்ப தயாராகினர்.

அப்போது அம்புஜவானர்
"போகும் வழியில் கவனம் தேவை. பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டுள்ள போதிலும் ஆபத்து ஏற்படாது என்று உறுதியாய் கூறிட முடியாது. ஆகையால் கவனம் தேவை. நீங்கள் செல்லும் காரியம் சித்தியடைய எம்பெருமான் அருள் புரிவாராக." என்று ப்ரவீனுக்கும் ஆகாஷிற்கும் ஆசி வழங்கினார் அம்புஜவானர்.

அவரிடம் ஆசி பெற்ற இருவரும் தாந்திரியருடன் அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் அம்புஜவானரும் அங்கிருந்து வெளியேறினார்.
ஆரிமாவை தேடி அவரின் வீட்டுக்கு வந்தாள் நிகனிகா.

உள்ளே வந்தவள் ஆரிமாவை தேட அவரோ அங்கிருக்கவில்லை.

அவரை வீடு முழுதும் தேடியவள் கடைசியாய் அவரது பூஜை அறைக்கு வந்தாள். அங்கு கண்மூடி ஆரிமா அமர்ந்திருக்க அவரை அழைத்தபடியே அவரருகே சென்றாள் நிகனிகா.

ஆனால் அவரிடம் எவ்வித அசைவுமில்லாமலிருக்க அப்போது வெளியே யாரோ அவளை அழைக்கும் சத்தம் கேட்க அவ்வறையிலிருந்து வெளியே வந்தாள் நிகனிகா.

வெளியே வாசலில் சில ஆடவர்களின் நடமாட்டம் தெரிய ஏதோ ஆபத்தென்று உடனே புரிந்து கொண்டவள் உடனடியாக அங்கிருந்த ஓரிடத்தில் தன்னை மறைத்துக்கொண்டு அங்கு நடப்பவற்றை கவனிக்கத் தொடங்கினாள்.

வெளியே இருந்து உள்ளே வந்த சில ஆடவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஆரிமாவின் அறைக்கு சென்றனர்.

உள்ளே சென்றவர்கள் உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்து அவ்வீட்டின் எல்லா இடங்களையும் அலசத் தொடங்கினர்.

அவர்கள் உள்ளே சென்றதுமே ஓசையெழுப்பாமல் வீட்டின் பின்புறம் சென்று ஒழிந்து கொண்டாள் நிகனிகா.
வீடு முழுவதும் தேடியவர்கள் பின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர்.
அவர்களது உருவம் மறையும் வரை பார்த்திருந்தவள் மீண்டும் ஆரிமாவை தேடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஆரிமா இப்போதும் அதே நிலையிலேயே இருக்க அது நிகனிகாவிடம் ஏதோவொரு சந்தேகத்தை உருவாக்கியது.

சற்று யோசித்தவளுக்கு ஏதோ தோன்ற தன் கையிரண்டையும் கூப்பி கண்மூடி ஏதோ வேண்டினாள்.

சற்று நேரத்தில் கண் திறந்தவள் எதிரேயிருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து ஒரு அடி பின்னே நகர்ந்துவிட்டாள்.

அவள் அதிர்ச்சிக்கு காரணம் ஆரிமா அமர்ந்திருந்த இடத்தில் இப்போது ஓர் கருப்பு உருவம் இருந்தது.

அதை பார்த்ததுமே அதுவொரு மாய விம்பமென நிகனிகாவிற்கு புரிந்து போனது.

தாமதியாது அங்கிருந்து வெளியே வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. யாரிடம் உதவி பெறுவது யாரிடம் விசாரிப்பதென்று புரியாது நின்றவளை நெருங்கியது ஒரு உருவம்.
அவ்வுருவம் தன்னை முழுதாய் கருப்பு போர்வை கொண்டு மறைத்திருக்க அது நிகனிகாவின் கையை பிடித்து அவள் சுதாகரிக்கும் முன்னேயே அவளை இழுத்துக்கொண்டு ஓடியது.

திடீரென தன்னை யாரோ இழுக்கவும் பயந்த நிகனிகாவிற்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அவளை இழுத்துக் கொண்டு ஓடியவனின் வேகம் அவளை நிலை தடுமாறச் செய்ய கால் இடறி கீழே விழுந்தாள் நிகனிகா.

அவள் கீழே விழுந்ததும் அந்த கருப்பு நிற போர்வையில் தன்னை முழுதாய் மறைத்துக் கொண்டிருந்த உருவம் தன் ஓட்டத்தை நிறுத்தியிருந்தது.

கீழே விழுந்தவள் மெதுவாய் தன்னை சமாளித்துக் கொண்டு மேலே எழ முயல அப்போது அவள் முன்னே ஒரு கரம் நீண்டது. மெதுவாய் தன் தலை உயர்த்தி பார்த்த நிகனிகா எதிரே நின்றிருந்த அந்த உருவத்தை பார்த்தபடியே எழுந்து நின்றாள்.

அவள் எழுந்ததும் அவ்வுருவம் தான் நீட்டிய கையை பின்னே இழுத்துக் கொண்டு அவளை பார்த்தபடி அமைதியாய் நின்றிருந்தது.

எழுந்து நின்று தன்னை நிதானித்துக்கொண்ட நிகனிகா முகத்தில் கடுமையை அதிகரித்தபடியே எதிரிலிருந்த உருவத்திடம்

"யார் நீ? எதற்காக என்னை இழுத்துக் கொண்டு வந்தாய்? யாருடைய அடியாள் நீ?" என்று நிகனிகா கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல அந்த உருவமோ எதற்கும் அசைந்தபாடில்லை.

அவள் எதிர்பாரா நேரத்தில் மீண்டும் அவளை இழுத்துக் கொண்டு அவ்வுருவம் ஓடத் தொடங்கியது.

நிகனிகா பிடியை தளர்த்த எவ்வளவோ முயன்ற போதிலும் அவளது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

முயன்று தோற்றவள் இறுதியாக அவ்வுருவத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கத் தொடங்கினாள்.

சில நிமிட நேரத்திற்கு பின் அவ்வுருவத்தின் ஓட்டம் ஒரு இடத்தில் நின்றது. ஓட்டம் நின்றதும் வெடுக்கென தன் கையை உருவிக் கொண்டாள் நிகனிகா.

ஆனால் அவளின் செயல் எதுவும் அந்த உருவத்தை பாதித்ததாக தெரியவில்லை.

நிகனிகா ஏதோ பேச வாயெடுக்க அப்போது அந்த உருவம்
"உள்ளே செல்." என்று கூற அப்போது தான் அவள் நின்றிருந்த இடத்தை கவனித்தாள் நிகனிகா.

அது ஆரிமாவின் ஒன்று விட்ட தங்கை பர்தனியின் இடம். அவரும் ஆரிமாவை போன்றே மந்திர தந்திர சித்திகளில் கைதேர்ந்தவர். இச்சமயம் ஆரிமாவிற்கும் அவரிற்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்க இருவரின் உறவிலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதை எண்ணி பார்த்தவள் அவளை இழுத்து வந்த உருவத்தினை பார்க்க இப்போது அவன் தன் மீதிருந்த போர்வையை விலக்கி தன் நிஜ உருவத்தை வெளிப்படுத்தியிருந்தான்.

அந்த ஆடவனை பார்த்த நிகனிகாவின் விழிகள் அவனை ஒரு விநாடிக்குள் மொத்தமாய் அளந்திருந்தது.
ஆறடிக்கு குறையாத கட்டுமஸ்தான உடல் தேகத்துடன் வேட்டைக்கு கிளம்பும் சிங்கத்தின் கர்வத்துடன் நின்றிருந்தான் அந்த மனிதன்.

இத்தனை நேரம் ஓடிவந்ததின் களைப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரியாத போதிலும் அங்காங்கே வடிந்துகிடந்த வியர்வைத் துளிகள் அவன் வேகத்தை பார்ப்பவருக்கு எடுத்துக்காட்டிடும் படியாக இருந்தது.

வழமையான ஆடவனை போல் அனைத்து அங்க லட்சணங்களும் உடைய சாதாரண மானிடனாய் தோற்றமளித்தவனின் விழிகள் மட்டுமே மற்றவரிடமிருந்து அவனை தனித்து காட்டியது. பச்சை நிற கண்மணிகள் அவன் விழிகளுள் ஒய்யாரமாய் வீற்றிருக்க பார்ப்பவர்களுக்கு அது சற்று அச்சத்தையும் வியப்பையும் கொடுக்குமென்பதை மறுக்கமுடியாது‌.

இதுவரை நேரம் அவன் போர்த்தியிருந்த அந்த கருப்பு நிற போர்வையால் நிகனிகாவால் இது எதையும் சரிவர பார்த்திட முடியவில்லை. இப்போது அனைத்தையும் நிதானமாய் கவனித்தவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

இதற்கு மேல் தாமதியாது அவன் கூறியது போல் உள்ளே செல்ல முடிவெடுத்தாள் நிகனிகா.

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு மரத்தினுள் அமைந்திருந்த அந்த வீட்டினுள் சென்றாள் நிகனிகா. அவளை தொடர்ந்து அந்த ஆடவனும் வீட்டினுள் நுழைந்தான்.

இருவரும் உள்ளே சென்றதும் நிகனிகாவை அங்கிருந்த ஒரு அறைக்குள் அழைத்து சென்றான் அந்த ஆடவன்.

உள்ளே அறையில் பர்தினி பூஜையில் அமர்ந்திருக்க இருவரும் அவரின் பூஜை முடியும் வரை அமைதியாக இருந்தனர்.
தன் பூஜை முடித்ததும் கண் திறந்து தலையுயர்த்தி பார்த்த பர்தினியை கைகூப்பி தலைகுனிந்து வணங்கினாள் நிகனிகா.

அவளது வணக்கத்தை தலையசைத்து ஏற்றவர்

"அதீரா யாரும் உன்னை அடையாளம் கண்டிடவில்லையே?" என்று அந்த ஆடவனிடம் கேட்க அவனோ முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காண்பிக்காது

"நான் அதற்கு வாய்ப்பளிகாவில்லை அன்னையே." என்று அதீரா என்று அழைக்கப்பட்ட அதீராந்தகன் கூற இப்போது பர்தினியின் பார்வை நிகனிகாவின் புறம் திரும்பியது.

"பெண்ணே தற்சமயம் ஆரிமா மாமன்னரின் மந்திரக்கட்டுக்குள் சிக்கியுள்ளார். ஆதலால் இதுவரை நடந்த அனைத்துமே மாமன்னரின் திட்டப்படியே நடந்தேறியது. ஆனால் இதுவே தொடர்ந்தால் பெரும் அழிவென்பது நிச்சயம்." என்று அவர் கூற

"நானும் ஆரிமாவின் நிலையை சற்று நேரத்திற்கு முன்பே அறிந்து கொண்டேன். அவரை மீட்பதற்கு ஏதேனும் உபாயமுள்ளதா?" என்று நிகனிகா கேட்டாள்.

"தற்சமயம் அவரை மீட்பதை காட்டிலும் சில முக்கியமான பணிகளை நிறைவேற்றிட வேண்டும். மேற் பிரபஞ்சத்தை சேர்ந்த இருவர் இப்போது வசியப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விரைவாக மீட்டிங் வேண்டும்." என்று பர்தினி கூற அப்போதுதான் நிகனிகாவிற்கு நவநீதன் மற்றும் பவித்ராவின் நினைவு வந்தது.

"அவர்கள் இருப்பிடம் பற்றி தாம் அறிவீரா?" என்று நிகனிகா ஓர் எதிர்பார்ப்புடன் கேட்க அப்போது அதீராந்தகன்

" அவ்விடத்தை யாம் அறிவதால் தாம் அதுபற்றி கவலை கொள்ளாமல் அடுத்து செய்ய வேண்டியவற்றை பற்றி திட்டமிடுங்கள்." என்று கேலியாய் கூற நிகளிகாவிற்கு உள்ளே கோபத்தீ கட்டுக்கடங்காமல் எழுந்த போதிலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு அவனை பார்ப்பதை தவிர்ந்து பர்தினியை பார்த்தாள்.

"அதீரா உன்னை அவ்விடம் அழைத்து செல்வான். நீ அவர்களை உன்னிடமுள்ள மூலிகை விதைகளை கொண்டு சரிப்படுத்தி முடிந்தளவு விரைவில் அனைவரும் இவ்விடம் வந்து சேர வேண்டும்." என்று கூறியவர் அதற்கு மேல் அவளை ஏதும் பேச வாய்ப்பளிக்காது அங்கிருந்து கிளம்பச் சொன்னார்.

நிகனிகாவும் பவித்ரா மற்றும் நவநீதனை பற்றிய கவலையில் வேறு ஏதும் கேட்காது அதீராவுடன் கிளம்பினாள்.

இருட்டறையில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் தரையில் கிடந்த நவநீதனது கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டிருப்பதை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

இருவரும் இத்தனை நேரம் மயக்கத்தில் இருக்க அங்கு வந்த இருவர் அவர்களது மயக்கத்தை தெளிவித்திருந்தனர்.
மயக்கம் தெளிந்து விழித்து பார்த்த பவித்ராவும் நவநீதனும் தமக்கு உதவிய இருவரையும் பார்க்க அவர்களோ முகத்தை மறைத்திருந்தனர்.

அவர்களது ஆடை அவர்கள் ஆண்களா பெண்களா என்று கண்டறிவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்க அவர்களிருவரையும் நவநீதனும் பவித்ராவும் உறுத்து விழித்துக்கொண்டிருந்தனர்.

இருவரது மயக்கமும் தெளிந்துவிட்டதென்று உணர்ந்த அவ்விருவரில் ஒருவர்
"சீக்கிரம் இங்கிருந்து சென்றாக வேண்டும். தம் கட்டுகளை காட்டுங்கள்." என்று கூறி முதலில் பவித்ராவின் கட்டுகளை அவிழ்க்கப்பட பின் நவநீதனின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டது.

நவநீதன் மற்றும் பவித்ராவின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதும் அவர்களிருவரையும் அழைத்துக்கொண்டு அந்த அடையாளம் தெரியாத இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வெளியே காவலுக்கு இருந்த அனைவரும் மயங்கித்தரையில் கிடக்க அவர்களை மெதுவாய் கடந்து அவ்விடத்தின் பின்புறத்தை அடைந்தனர் நால்வரும்.

வெளியே வந்ததும் அந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர்

"தாங்கள் அணிந்திருக்கும் கற்கள் பதித்த அவ்வாரங்களை கழற்றி தூர எறியுங்கள்." என்று கூற இப்போது பவித்ராவும் நவநீதனும் தயங்கி நின்றனர்.

அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டால் அவர்களால் இவ்வுலகில் யார் பேசுவதையும் புரிந்துகொள்ள முடியாதென்று தெரிந்திருந்ததால் அவர்கள் அதை கழற்றிட முன் வரவில்லை.

அப்போது அவ்விருவரில் ஒருவர்
"தாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. யாமிருவரும் தங்கள் மொழி அறிவோம். இதை இக்கணமே கழற்றி எறிந்திடுங்கள். " என்று கூற நவநீதனும் பவித்ராவும் தங்களது மாலைகளை கழற்றி எறிந்தனர்.

அதன் பின் அவ்விருவரில் ஒருவர்
"எம் மீது தாம் கொண்ட நம்பிக்கைக்கைக்கு மிக்க நன்றி. தாமிருவரும் விரைந்து இங்கிருந்து சென்றாக வேண்டும். இங்கு ஆபத்துக்கள் பல வடிவில் வட்டமிட்டபடியிருக்கின்றன. தம்மை வசியப்படுத்துவதற்காக பீர்மத்ருவை அழைத்திருக்கிறார்கள். அவரின் வசியம் தம்மேல் புகுத்தப்படுவதற்கு முன் தாம் இங்கிருந்து தப்புவதற்கு உதவிட வேண்டுமென்பது எமக்கு இடப்பட்ட கட்டளை. எமக்கிடப்பட்ட கட்டளையை யாமிருவரும் சரிவர செய்துவிட்டோம். இனி அனைத்தையும் தாமே செய்திட வேண்டும்." என்றுவிட்டு அவ்விருவரும் சுற்றும் முற்றும் பார்த்தபடியே அங்கிருந்து செல்ல நலநீதனும் எதை பற்றியும் யோசியாது பவித்ராவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடத்தொடங்கினான்.
 

anuchandran

New member
Vannangal Writer
Messages
17
Reaction score
18
Points
3
ஓட்டத்தின்
வேகத்திற்கு
இயற்கையும்
ஈடுகொடுத்து
வரமா..
சாபமா....

அதீராவுடன் கிளம்பிய நிகனிகா
"நாம் செல்லப்போகும் இடமெது?" என்று கேட்க அதற்கு அதீராவோ

" அங்கு சென்றதும் அறிந்திட முடியும்." என்று கூற நிகனிகாவிற்கோ அவனை கொன்றிடும் வெறியே வந்தது.

எதை கேட்டாலும் ஏறுக்கு மாறாய் பதில் சொல்பவனின் பதிலில் அவள் பொறுமை எல்லை கடந்திருந்தது.

"நீ உன்னை உன் மனதில் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்? எதை கேட்பினும் அதற்குரிய பதிலை கூறாது உனக்கு தோன்றிய பதிலை உரைத்து என் கேள்விகளை அலட்சியப்படுத்துகிறாய்." என்று நிகனிகா தன் கோபத்தை வெளிப்படுத்த அப்போதும் கூட அவள் மீது அலட்சிய பார்வையை மட்டுமே வீசினான் அதீரா.

அதை கண்டு மீண்டும் ஏதோ பேச வாயெடுத்தவளை இடைமறித்தான் அதீரா.

" கேள்வி கேட்கும் உரிமை உனக்கிருப்பதை போல் என்ன பதில் கூறவேண்டுமென்பதை முடிவு செய்திடும் உரிமை எனக்குள்ளது. " என்றவனிடம் இனி பேசி பயனில்லையென உணர்ந்து அமைதியாய் அவனை பின்தொடர்ந்தாள் நிகனிகா.

சில மணி நேர பயணத்தின் பின் இருவரும் ஒரு பழைய கட்டிடத்தை வந்தடைந்தனர்.

அந்த கட்டிடத்திலிருந்து சற்று தொலைவிலேயே நிகனிகாவோடு நின்று விட்ட அதீரா அங்கிருந்தே அவ்விடத்தை நோட்டம் விட்டான்.

அவ்விடம் எங்கிலும் யாருமில்லாதது போல் தெரிந்தபோதிலும் அங்கு ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்தான் அதீரா.

நிகனிகா எதிர்பாரா வேளையில் அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்த மரமொன்றின் பின் மறைந்து கொண்டான் அதீரா.

அவனது இந்த திடீர் செயல் நிகனிகாவை எப்போதும் போல் கோபப்படுத்தியதோடு அதை வெளிக்காட்ட முயன்றவளை தடுத்தது அவனது குரல்.

"அக்கட்டிடத்திலிருந்து யாரோ ஒளிந்து மறைந்து வருவது போல் தெரிகிறது."என்று கூற நிகனிகாவும் அதை கவனிக்கத்தொடங்கினாள்.

அங்கு பவித்ராவும் நவநீதனும் அக்கட்டிடத்திலிருந்து வெளியே வருவதை பார்த்தவளுக்கு அப்போது தான் மனம் நிம்மதி அடைந்தது.

அவர்களை பார்த்தவள் அவர்களது பெயரை உச்சரிக்க அவளை திரும்பி பார்த்தான் அதீரா.

அவனது பார்வையை உணர்ந்தவளாய்
"அவர்களே மேற்பிரபஞ்சத்தை சேர்ந்தவர்கள். நாம் அழைத்து செல்லவேண்டியவர்கள் அவர்களே." என்று கூறியவளை மீண்டுமொருமொரு வெற்றுப் பார்வை பார்த்தவன் திரும்பி அவர்கள் செல்லும் திசையை பார்த்திருந்தான்.

கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் ஓடத்தொடங்கியிருந்த பவித்ராவையும் நவநீதனையும் கணநேரத்தில் துரத்திப்பிடித்திருந்தான் அதீரா.

தங்களை வழிமறித்த அந்த இளைஞனை பார்த்த பவித்ராவும் நவநீதனும் அங்கிருந்து தப்பிக்க முயல அவனோ அவர்களது பாதையை விட்டு விலகிட வழிவிடவில்லை.

இதற்கிடையில் நிகனிகா அங்கே வந்திட அவளை கண்டதும் நவநீதன்
"நிகனிகா நீங்க?" என்று கேட்க அவளுக்கோ அவன் பேசுவது புரியவில்லை.

அவளது புரியாத பார்வையை கண்ட நவநீதனுக்கு அப்போது தான் அந்த மாலையின் நினைவு வந்தது.

நவநீதன் பவித்ராவை பார்த்து

"பவி அந்த மாலை இல்லாமல் எப்படி நம்ம பேசுறதை அவங்களுக்கு புரியவைக்கிறது?" என்று கேட்க

"ஏதாவது சைகை பண்ணி நம்மகிட்ட அந்த மாலை இல்லைனு சொல்லுவோம். பிறகு காரணத்தை சொல்லிக்கலாம்." என்று கூறிவிட்டு அவளே அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.

ஒருவாறு தங்களிடம் மாலை இல்லையென்பதை பவித்ரா புரியவைத்திட நிகனிகாவும் அதீராவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதோடு
"முதலில் இவர்களை பர்தினியின் இல்லத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்." என்று நிகனிகா கூற அதீராவோ

"அதற்கு அவசியமில்லை. என்வசம் வேறொரு உபாயமுள்ளது." என்று கூறி தன் இடைச்செருகிலிருந்து ஒரு பையை எடுத்து நிகனிகாவிடம் கொடுத்து திறந்து பார்க்கச்சொன்னான்.

அவன் கூறியபடியே அவளும் திறந்து பார்க்க உள்ளே இரண்டு மாலைகள் இருந்தது.

அதை பார்த்தவள் கேள்வியாய் அதீராவை பார்க்க
"ஏற்கனவே இவற்றை அன்னை என் வசம் ஒப்படைத்து விட்டார்." என்றுகூற அம்மாலை இரண்டையும் நவநீதனுக்கும் பவித்ராவிற்கும் கொடுத்து அணிந்துக்கொள்ளச்சொன்னாள்.

அப்போது தூரத்தில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு நால்வரும் திரும்பி பார்க்க அங்கு சில காவலாளிகள் அவர்களை நோக்கி ஓடிவருவது புரிந்தது.

உடனே சுதாரித்த அதீரா சற்று முன் வந்து அவர்கள் நின்றிருந்த இடத்தை சுற்றி வட்டமாய் ஓடத்தொடங்கினான்.
அவன் வேகம் அதிகரிக்கும் கதிக்கு ஏற்ப புழுதி பறக்கத்தொடங்க அவ்விடமே புழுதிமயமாகியதோடு அப்புழுதி சூறாவளியை போல் சுழன்றுக்கொண்டிருந்தது.

அந்த புழுதிச்சூறாவளி எதிர்புறமிருந்தவர்களை தூக்கி தூரவீச அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நவநீதன், பவித்ரா மற்றும் நிகனிகாவை அழைத்துக்கொண்டு அதீரா அங்கிருந்து ஓடினான்.

குறிப்பிட்ட தூரம் ஓடியவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்தடைந்து விட்டனர் என்று உறுதி செய்துகொண்டு அங்கே அமர்ந்து கொண்டனர்.

சற்று நேரம் மூச்சு வாங்க அமர்ந்திருந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.

நிகனிகா நவநீதனிடம் இதுவரை நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாய் விளக்க அதை கேட்டிருந்த பவித்ராவுக்கும் நவநீதனுக்கும் அது அதிர்ச்சியை கொடுக்கவில்லை.

அவர்கள் இப்படி தான் ஏதேனும் நடந்திருக்குமென்று ஏற்கனவே யூகித்திருந்தனர். அதனால் அவள் கூறுயவை அவர்களுக்கு பெரிதாய் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக அடுத்து என்ன என்ற கேள்வியே அவர்களுக்குள் இருந்தது.

நவநீதன் நிகனிகாவிடம்
"இப்போ ப்ரவீன், ரக்ஷிதா , ஆகாஷ் எங்க இருக்காங்க? அவங்களும் ஆபத்தான இடத்துல தான் இருக்காங்களா? " என்று தன் நட்புக்களை பற்றிய கவலையில் நவநீதன் கேட்க

"இக்கணம் ஆண்கள் இருவரும் தாந்திரீயர் மற்றும் அம்புஜவானரின் இடங்களை அடைந்திருப்பர். ரக்ஷிதா தாத்மினியின் துணையோடு அம்மடத்தில் இருக்கவேண்டும்." என்று கூற அப்போது தான் நிகனிகாவிற்கு மனதில் ஏதோ உரைத்தது‌.

"தாத்மினி‌‌... ஐயகோ தவறு நிகழ்ந்துவிட்டது. " என்று நிகனிகா கூற அப்போது பவித்ரா

"அப்போ தாத்மினியும் எதிராளி கூட்டத்தை சேர்ந்தவர்களா?" என்று கேட்க அதற்கு நிகனிகா

"அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. ஆரிமாவுடன் அதிகமாக உறவாடியது தாத்மினியே." என்று கூற அப்போது அதீரா

"உடனடியாக அப்பெண்ணை அவ்விடத்திலிருந்து அழைத்து வரவேண்டும்." என்று அதீரா கூற நிகனிகாவிற்கும் அதுவே சரியென்று பட்டது.

"ஆம் உடனடியாக ரக்ஷிதாவை அவ்விடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். ஆனால் நாம் அங்கு சென்றால் நம் பற்றி தகவல்களை அவர்கள் அறிந்திட வாய்ப்புள்ளது." என்று நிகனிகா கூற அதற்கு அதீரா

"நான் சென்று அப்பெண்ணை அழைத்து வருகிறேன். என்னுடன் தாமும் வரவேண்டும்." என்று அவன் நவநீதனை கைகாட்டிட அவனும் ஒப்புக்கொண்டு இருவரும் உடனடியாக கிளம்பினர்.

பெண்கள் இருவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுவிட்டு ஆண்கள் இருவரும் மடத்திற்கு கிளம்பினர்.

மடத்தின் வாசலிற்கு வந்த ஆண்கள் இருவரும் உள்ளே செல்ல ஏதேனும் வழி தென்படுகிறதா என்று ஆராய அப்போது யாரோ அம்மடத்தின் சுவரிலிருந்து தாவி குதித்து இறங்குவதை கண்டனர்.

அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்தபடியே பதுங்கி மறைந்து நடந்து செல்ல அதை பார்த்திருந்த ஆண்கள் இருவருக்கும் சந்தேகம் எழ அதீரா நவநீநனை பார்த்தான்.

நவநீதன் அதீராவின் பார்வையை உணர்ந்து கொண்டது போல்
"நீங்க அவரை கவனிங்க. நான் உள்ள போய் ரக்ஷிவை அழைச்சிட்டு வரேன்." என்று கூற அதீராவும் அந்த அடையாளம் தெரியாத நபரை பின்தொடர நவநீதன் அம்மடத்தினுள் செல்ல பாதையெதும் தென்படுகிறதா என்று ஆராயத்தொடங்கினான்.

உள்ளே மடத்தில் தாத்மினி ரக்ஷிதாவை அங்கிருந்து இடம்மாற்றுவதற்கான வேலைகளை மேற்கொண்டிருந்தாள்.

அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவளின் நாசியின் அருகில் ஏதொவொரு இலையை கொண்டு செல்ல அதன் மணம் ரக்ஷிதாவை சுயநினைவை இழக்கச்செய்திருந்தது.

ரக்ஷிதா நினைவிழந்துவிட்டதை உறுதி செய்த தாத்மினி அவள் நாசியினருகே இன்னொரு இலையை கொண்டு செல்ல அதன் மணத்தை உணர்ந்தவள் சட்டென்று கண்களை திறந்து தன்னெதிரே நின்றிருந்த தாத்மினியை விழி விரித்து பார்த்தாள்.

ரக்ஷிதாவை பார்த்த தாத்மினி மர்மமாய் புன்னகைத்துவிட்டு
"தாமதியாதி இவ்விடத்தை விட்டு புறப்படவேண்டும்." என்று கூற அவள் முன் தன் தலை குனிந்த ரக்ஷிதா

"அப்படியே ஆகட்டும்." என்றுவிட்டு தன் ஆடையை சரிப்படுத்திவிட்டு அங்கிருந்த கருப்பு போர்வையால் தன்னை முழுதாய் மறைத்துக் கொண்டாள் ரக்ஷிதா.

அந்த மடத்தில் அனைவரும் உறக்கத்தில் இருக்க அக்னி குண்டம் இருந்த யாகசாலையில் மட்டும் பூஜைகள் விடாது நடந்துக் கொண்டிருந்தது.

ரக்ஷிதாவும் தாத்மினியும் அங்கிருந்து வெளியேறும் போது அவர்கள் முன்னே வந்து நின்றான் நவநீதன்.

அவனை பார்த்ததும் தாத்மினி முகத்தில் அதிர்ச்சி தோன்ற ரக்ஷிதாவே அவனை வேற்றுமை பார்வையொன்று பார்த்தாள்.

நவநீதன் ரக்ஷிதாவின் பார்வையிலிருந்த வேற்றுமையை புரிந்து கொள்ளாது அவள் கை பற்றி
"ரச்சு.. நாம இங்க இருந்து உடனடியாக கிளம்பியாகனும். இவ.. நாம நினைச்ச மாதிரி நமக்கு உதவி செய்யலை. " என்று அவன் நடந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாய் கூற முயல அவன் எதிர்பாரா நேரத்தில் அவள் பிடியை விலக்கி அவனை தள்ளிவிட்டாள் ரக்ஷிதா.

அவனை ஆக்ரோஷமாய் ஒரு பார்வை பார்த்தவள் தாத்மினியின் புறம் திரும்பி
"நாம் செல்லலாம்." என்று கூற நவநீதனை பார்த்து ஏளனமாய் சிரித்துவிட்டு ரக்ஷிதாவோடு அங்கிருந்து சென்றாள் தாத்மினி.

ரக்ஷிதாவின் இந்த விநோத செயலை கண்டு திகைப்புற்றவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.
அவளை எவ்வாறேனும் தடுத்திட வேண்டுமென்ற எண்ணத்தில் எழுந்து சென்று மீண்டும் அவர்களின் பாதையில் குறுக்கிட்டான்.

இப்போது அவனை பலமாய் தாக்கி தரையில் வீழ்த்தினாள் ரக்ஷிதா.

தரையில் விழுந்தவனுக்கு வலி உயிரை எடுத்தது. ஆனால் எவ்வாறேனும் அவர்களை தடுத்திட வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற அவர்களை தடுக்க வேறேதும் வழியுண்டாவென யோசிக்கத் தொடங்கினான் நவநீதன்.

அப்போது அவனுக்கு கொள்ளித்தாய் கொடுத்த அந்த பொடி நினைவில் வரை தன் இடையினை தடவி பார்த்தான் நவநீதன்.

அதில் அவன் எதிர்ப்பார்த்த பை இருக்க அதை கைக்கு எடுத்தவன் அதிலிருந்து அந்த பொடியை தன் கையில் நிரப்பிக்கொண்டான்.

மெதுவாக தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றவன் மீண்டும் அவர்களை வழிமறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.

பெண்களிருவரையும் வழிமறித்தவன் அவர்கள் ஏதும் செய்வதற்கு முன் தன் கையிலிருந்த அந்த பொடியை அவர்களின் முகத்தெதிரே தூவினான்.

அந்த பொடி இருவரின் முகத்தில் பட்ட மறுநொடி இருவரும் மயங்கிச் சரிந்தனர்.

சற்று நேரம் அவர்களை தூர நின்று கவனித்த நவநீதன் அவர்கள் மயங்கிவிட்டனர் என்று உறுதி செய்துகொண்டு ரக்ஷிதா அருகே சென்றான்.

அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாலையை கழற்றி தூர எறிந்துவிட்டு அவளை தூக்கி தன் முதுகில் போட்டுக்கொண்டவன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே அங்கிருந்து சென்றான்.

மடத்திலிருந்து மறைந்து பதுங்கி சென்ற அந்த மர்ம நபரை பின்தொடர்ந்தான் அதீரா.

அவன் பாதையை சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஓடிச் சென்றதால் அதீராவால் அவனை பெரிய இடைவெளியோடே பின்தொடர முடிந்தது.

அவனின் பயணம் நீண்டுக்கொண்டே போக இதற்கு மேல் அவனை பின்தொடர்வது நேர விரயமென்று உணர்ந்த அதீரா அந்த நபரை மடக்கி பிடிப்பதென்று முடிவு செய்தான்.

இதுவரை நேரம் சற்று இடைவெளியோடு அந்த நபரை பின்தொடர்ந்தவன் இப்போது முழுதாய் அந்த இடைவெளியை குறைத்திருந்தான்.

திடீரென தன் பின்னே ஒருவன் வருவதை உணர்ந்த அந்த நபர் தன் வேகத்தை அதிகரிக்க அதீராவோ அதற்குள் அவனை வழிமறித்திருந்தான்.

அந்த நபரோ அங்கிருந்து ஓடிட முயலோ அதீராவோ அவன் கையிரண்டையும் சிறைசெய்து தன் பிடிக்குள் கொண்டு வந்தான்.

அதீராவின் பிடியிலிருந்து விடுபடமுயன்ற அந்த நபரின் முயற்சிகளனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

அந்த நபர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான் என்று புரிந்துகொண்ட அதீரா
"யார் நீ? எதற்காக என்னை கண்டு ஓட முயல்கிறாய்?" என்று கேட்க அந்த நபரோ

"நீ யார்? எதற்காக என்னை பின்தொடர்கிறாய்?" என்று எதிர்கேள்வி கேட்க அதீராவோ மெலிதாய் சிரித்தபடியே அவன் முகத்தை திருப்பி அவனின் கண்களை உற்று நோக்கியவன்

"எதிர்கேள்வி கேட்பதால் உன் செயலிற்கான காரணம் மறைந்திடாது. நீயாக உரைக்காவிடுனும் நோக்கி வர்மத்தின் மூலம் உன் செயலிற்கான காரணத்தை அறிந்திட என்னால் முடியும்." என்று கூற
நோக்கு வர்மம் என்ற வார்த்தையை கேட்டதும் விக்கித்து நின்றான் அந்த மனிதன்.

மத்யுக உலகில் நோக்கு வர்மம் அறிந்தவர்கள் ஒரு சிலரே. அதில் பயிற்சி பெற சில குணாதிசயங்கள் வேண்டும்‌. குறிப்பாக பச்சை நிற கருவிழி, கரும்புள்ளிகள் கொண்ட நா, இடக்கையில் ஆறாம் விரல், இரட்டை நாடி, பின்முதுகில் இடப்புறம் பச்சை நிற மச்சம் என்று அனைத்தும் இருக்கும் ஒருவரால் மட்டுமே அதனை கற்கமுடியும். அப்படி கற்பவர்கள் அசகாய சூரர்களாய் இருப்பர்.

இதனை அறிந்த அதுராதகன் நோக்கு வர்மம் கற்பதற்கான அனுமதியை தடைசெய்திருந்தான். ஏற்கனவே அது பற்றி அறிந்தவர்களை ரத்னமாளிகையில் குடியேற்றி அவர்களை மாளிகையை விட்டு வெளியேறாத வகையில் பார்த்துக்கொண்டான்.

நோக்கு வர்மம் தெரிந்தவர்களுக்கு இத்தனை கெடுபிடிகள் இருக்க தன் முன் உள்ளவனோ அதை சாதாரணமாய் சொல்ல அவனை மாறா அதிர்ச்சியுடன் மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தான்.

ஆனால் அவன் கண்களை தவிர வேறு எந்த பாகத்தையும் அவனால் பார்க்கமுடியவில்லை. வேண்டுமென்றே அனைத்தையும் உரிய ஆடைகள் கொண்டு மறைந்திருந்தது புரிந்தது. விழிகளை கூட நின்று உற்று கவனித்தாலொழிய புலப்படாது.

அவனது ஆராய்ச்சியை பார்த்து ஏளனமாய் சிரித்த அதீரா அவன் பிடியை இறுக்கி
"யார் நீ? எவ்விடத்தை சேர்ந்தவன் நீ? எதற்காக என்னைக் கண்டதும் ஓடி மறைய முயன்றாய்?" என்று கேட்க அந்த நபருக்கோ தான் கூறாவிடினும் அதீரா நோக்கு வர்மத்தின் மூலம் அனைத்தையும் அறிந்து கொள்வானென்று உணர்ந்தவன் தான் யாரென்ற உண்மையை கூறத்தொடங்கினான்.

"யான் விமலேந்திர விகாசன். யான் யாகத்தீயிற்கு இடையூறு விளைவிக்கவே அம்மடத்தினுள் நுழைந்தோம்." என்று அவன் கூற அவனின் பிடியை விடுவித்த அதீரா

"காரணம்?"

"பழியுணர்ச்சி." என்று கூற அவனை வேடிக்கையாக பார்த்த அதீரா

"யாரின் மீதான பழியுணர்ச்சி?"

" என் தந்தைக்கு மரணதண்டனை பெற்றுக்கொடுத்து என் குடும்பத்தின் மகிழ்ச்சியை குழைத்த அம்மடாதிபதி ருத்ர சங்கரரை பழிவாங்கிடவே இச்செயலை செய்திட முன்வந்தேன்." என்று விமலேந்திர விகாசன் கூற மறுநொடியே அதீரா கேலியாக சிரிக்கத்தொடங்கினான்.

அவனை புரியாமல் பார்த்த விமலேந்திர விகாசன்
"இதில் தாங்கள் நகைக்குமளவிற்கு என்ன உள்ளது?" என்று கேட்க

"இருப்பதாலேயே நகைக்கிறேன். அதற்கு முன் உன் தந்தைக்கு எதனால் மரணதண்டனை கிடைத்தது என்று உரைத்திடு." என்று அதீரா கேட்க விமலேந்திர விகாசனோ

"என் தந்தை அம்மடத்தின் பணியாளராய் இருந்தார். பூஜைக்கு ருத்ர சங்கரர் கூறிய பொருளையே எடுத்து வைத்துள்ளார். ஆனால் எப்படியோ அப்பொருள் மாறிபட்டு வேறொரு பொருளை யாகத்தீயில் சமர்ப்பிக்க நேர்ந்துவிட்டது. இதனால் அந்த யாக பூஜையில் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. ஆனால் அதனை பரிகார பூஜை செய்து சரிசெய்து விட்டனர். அப்பூஜை பொருளை எனது தந்தையே மாற்றிவைத்து பூஜைக்கு இடையூறு நிகழ்த்திவிட்டாரென குற்றம் சுமத்தி அவருக்கு மரணதண்டனையை பரிசளித்துவிட்டனர்." என்று கூற அதீராவுக்கு என்ன நடந்திருக்குமென்று புரிந்தது.

மாமன்னர் அதுராதகன் மற்றைய விஷயங்களுக்கு மன்னிப்பு வழங்கினாலும் யாகத்தோடு தொடர்புடைய தவறுகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அந்த தவறு சிறியதா பெரியதா என்று எவ்வித ஆராய்ச்சியும் இல்லாது உடனே மரண தண்டனை விதித்துவிடுவார். இதுவே விமலேந்திர விகாசனின் தந்தைக்கும் நிகழ்ந்திருக்குமென்று உணர்ந்து கொண்டான் அதீரா.

"உன் முயற்சி பயனளித்ததா?" என்று அதீரா கேட்க

"இல்லை. என்னால் அந்த யாகசாலையை கூட நெருங்கமுடியவில்லை." என்று ஏமாற்றத்துடன் கூறியவனை பாவமாய் பார்த்த அதீரா

"அதனை நெருங்குவதற்கு அம்மடாதிபதிகளின் அனுமதி வேண்டும். அவர்களது அனுமதியின்றி அவர்கள் உருவாக்கியிருக்கும் மந்திரகட்டினுள் கூட நுழையமுடியாது. அதுவும் அந்த யாகத்தீயை அணைத்திடும் நோக்கோடு அதனை நெருங்குபவர்களை அம்மந்திரகட்டு உள்ளே அனுமதிக்காது." என்று கூற விமலேந்திர விகாசனோ குழப்பத்தோடு பார்த்திருந்தான்.

மீண்டும் அதீராவே
"உன்னுடைய எண்ணம் எனக்கு புரிகிறது. நீ செய்ய நினைத்த காரியம் அத்தனை சுலபமானதல்ல. ஆனால் உன்னால் எமக்கு உதவுவதன் மூலம் அக்காரியத்தினை செய்திட முடியும்." என்று கூற அதீராவை மீண்டும் குழப்பத்தோடு பார்த்தான் விமலேந்திர விகாசன்.

"என் குழுவினரும் அந்த யாகத்தினை நிறுத்திடவே முயற்சித்தும் கொண்டிருக்கின்றனர். இதில் உன்னுடைய பங்கும் இருக்கவேண்டுமென நீ எண்ணினால் நீயும் எங்களும் இணைந்து கொள்ளலாம்." என்று அதீரா கூற சற்று நேரம் யோசித்தான் விமலேந்திர விகாசன்.

அவன் தந்தைக்கு அநீதி இழைத்தவர்களை பழிவாங்கிட எதையும் செய்திடும் உத்வேகத்துடன் இருந்தவன் வேறு எதைபற்றியும் யோசியாது தன் சம்மதத்தை தெரிவித்தான்.

அவனோடு பேசும் போதே நோக்கு வர்மத்தின் மூலம் அவன் எண்ணங்களை புரிந்து கொண்ட அதீரா அவனை தன்னுடன் அழைத்துக்கொண்டு பவித்ரா மற்றும் நிகனிகா இருந்த இடம் நோக்கி சென்றான்.

அங்கு ஏற்கனவே நவநீதனும் ரக்ஷிதாவும் வந்திருந்தனர். ரக்ஷிதா வசியத்தின் பிடியில் இருந்ததால் அவளை கொள்ளித்தாய் கொடுத்த விந்தின் உதவியோடு அவளை வசியத்திலிருந்து விடுவித்திருந்தாள் நிகனிகா.

அப்போது அதீராவும் விமலேந்திர விகாசனுடன் வர அவனை பற்றி தெரிந்து கொண்டு அவனையும் தம் குழுவில் இணைத்துக்கொண்டனர்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom