Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மூச்சுகாத்து - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Thoshi

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
4
Points
3
அத்தியாயம் 1:


"காதல் ஒரு பள்ளிக்கூடம்
கண்கள் அதில் பாடமாகும்
கற்றால் அது வேதமாகும்
நீயும் காதல் செய்...
காதல் நம் சொந்த சுவாசம்
காதல் நம் ஆன்மதாகம்
காதல் நம் ரத்தஓட்டம்
நீயும் காதல் செய்...!"


-அந்த மாநில பேருந்தின் தொலைகாட்சியில் நடிகை மீனாட்சி
அழகாய் ஆடிக்கொண்டிருந்தார்.


காலை முதல் வேளை செய்த அலுப்பில் தன் பிள்ளைகள் கலைத்திருப்பார்களே என்ற பரிதவிப்புடன் ஆதவன் ,தன் புத்திரர்களை (கதிர்களை) ஓய்வெடுக்க சொல்லி செல்லமாய் அதட்டி கொண்டிருந்த மாலை வேளை.


அவர்கள் எங்கே அடங்கினார்கள், தங்களின் நண்பனான வானத்தை பிரியமனமில்லாமல் தயங்கிதயங்கி செல்ல , அதில் வானவன் பிண்டிபூவின் வண்ணத்தில் கொள்ளை அழகுடன் பார்ப்பவரை வசிகரித்தபடி இருந்ததில் காதில் விழும் பாடலின் வரிகளை முணுமுணுத்தபடியே , அதன் அழகையும் ரசித்தபடி வந்தான் அவன்.


அவன் விக்ரம்....ஆறடி உயரத்தில் பக்கா சாக்லேட்பாய் தோற்றத்தில் அழகாய் இருந்தான்.வடக்கிலே பிறந்து வளர்ந்திருந்ததால் அங்குள்ளவர்களுக்கே உரிய நிறத்தை பெற்றிருந்தவன் , சிறுபிள்ளையாய் இந்த பயணத்திற்க்கு கடந்த பல நாட்களுக்கு முன்பாகவே தயாராக தொடங்கிருந்தான்.


பிறந்தது முதலே காரிலே எங்கும் பயணித்திருந்தவன் , தனியாய் தானே கல்லூரிக்கு செல்லும்பொழுது கூட இருசக்கர வாகனத்தை தொட்டதில்லை . அப்படி இருக்க , இத்தனை பேருக்கு இடையில் அவனின் முதல் பயணம் .இதுவும் நீண்ட தூரபயணத்திற்கான சொகுசு பேருந்து என்றாலும் முதல்முறையாய் பயணிக்க போகும் இந்த பேருந்து பயணத்தை ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தவனுக்கு , சன்னோலர இருக்கை கிடைக்காமல் போனதில் வருத்தம் தான். இருந்தாலும் உற்சாகத்துடனே முடிந்தமட்டும் வெளியில் பார்த்தபடி வந்தவனுக்கு அந்த வானம், பேருந்து , பேருந்தில் ஓடும் தொலைகாட்சி , அதில் வரும் பாடல்கள் என எல்லாமே ரசனையானதாகவே இருந்தது.


"காதலாம் காதல் எல்லாம் சுத்த பயித்தியகாரதனம்...சும்மாகூட சுத்திட்டு, நம்பள நல்லா செலவு பண்ணவச்சிட்டு கடைசியா கலட்டிவிட்டு போவாங்க ..இதுக்கு பேர் காதல் " என அருகிலிருந்த இளைஞனின் எரிச்சல் குரல் காதில் விழுந்தது.


அதில் ,"ஹாஹா...பயபுள்ள யார்கிட்டையோ அடிவாங்கிருக்கான் போல அதான் இந்த பழம் புளிக்கும்ன்றாப்ல குமுறுறான் " என மனதில் நினைத்த விக்ரமிற்க்கு சிரிப்பு வந்தது.


சிரித்தபடி சற்று தள்ளி இருந்த தன் பக்கவாட்டு வரிசையில் அமர்ந்திருந்தவளை பார்க்க ,அவளோ அவனை கண்களாலே எரித்ததில் அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
அவள் தன் சின்ன கண்களை விரித்துமுறைத்தபடி அதை பெரியதாய் காட்ட முயல , அய்யோ பாவம் ...அவளின் பாவத்தில் அவன் சொக்கதான் செய்தானே தவிர சிரிப்பை விடவில்லை. கோவத்துடன் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாலும் அவளின் கவனம் என்னவோ இவனிடமே இருந்தது.


விக்ரமின் தோற்றத்திற்க்கு பேருந்தின் இருக்கை வாகாக இல்லாத போதும் , அவன் இதுவரை பேருந்தில் சென்றே இல்லாத போதும் பேருந்தில் ஏறிய நொடிமுதல் ஒருநொடி கூட முகத்தை சுருக்காமல் சாதாரணமாக அமர்ந்திருந்தவனை பார்க்க அவளிற்க்கே ஆச்சரியமாய் தான் இருந்தது.


ஆனாலும் வேண்டும் என்றே "ஆள பாரு!!! இங்க ஒருத்தி கோபமா வராளே அவளை சமாதானம் பண்ணுவோம் , பக்கத்துல இருக்கவங்ககிட்ட எதாவது பேசி சீட்டை மாத்தி பக்கத்து பக்கத்துல உட்காருவோம்னுலாம் எதாவது தோணுதா பாரேன் ....இத்தனை நேரம் வெளியவே பார்த்துட்டு வந்திட்டு இப்போ நான் முறைச்ச உடனே என்னைய பார்த்தாப்ல உட்காருரான் சரியான ப்ராடு " என அவனுக்கு புரியும்படி இதழசைத்தும் , சுழித்தும் வந்தாள்.


அவள் ஆதிஷா , பெயருக்கு ஏற்றபடி ராணியின் கம்பீரத்துடன் ,அப்பொழுது தான் பூத்த நந்தியாவட்டை பூவின் நிறத்தில் , பதுமையாய் சாந்தமாய் இருந்தவளின் முகம் மட்டும் கோப முலாம் பூசியிருந்தது. கோபத்தில் கெம்புமல்லிகையின் நிறத்தை கடன்வாங்கியபடி அமர்ந்திருந்தவளை, கன்னத்தில் கைவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தவனின் தலை பேருந்து ஓட்டுனர் அடித்த சடன் ப்ரேக்கில் கம்பியில் மோதி நங்கென்றது.


அதில்"ஹாஹாஹாஹா" என ஆதிஷா வாய்விட்டு சிரிக்க , இப்பொழுது முறைப்பது அவன் முறையாக , ஆதிஷாவுடன் இணைந்து பேருந்தில் இருந்த அனைவரும் நகைத்தனர்.


"என்னடா இது ??நம்ப முட்டிகிட்டத வண்டில இருக்க எல்லோருமேவா பார்த்துட்டாங்க " என்ற ஜெர்க்குடன் விக்ரம் நிமிர்ந்து பார்க்க , அனைவரும் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த காட்சியை பார்த்து சிரித்திருந்தனர்.


"அப்பாடி நம்ப மானம் நம்ப ஆளுகிட்ட மட்டும்தான் போயிருக்கு"என நினைத்தபடி அசட்டு சிரிப்புடன் ஆதிஷாவை பார்க்க ,அவள் பதிலுக்கு காரிதுப்பியதை 'ஈ'-யென வாங்கிக்கொண்டான்.


இப்படி இவர்கள் இருவரும் பேச்சில்லாமல் பார்வையாலும்,பாவனையாலும் கதைபேச , தமிழ்நாட்டின் எல்லையை தொட்டே தீர்வேன் என்ற ஆர்வத்துடன் வடநாட்டிலிருந்து கிளம்பிருந்த அந்த பேருந்தும் வேகமெடுத்தது.


மூச்சுகாத்து1:


"உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல்
உலகம் முழுவதும் உலவும் காதல்..
இருபது வயதில் இளமை காதல்
அறுபது வயதில் அனுபவ காதல்
எங்கும் காதல் எதிலும் காதல் "


-நரைதாடியிலும் இளமைதுள்ளலுடன் பாடிக்கொண்டிருந்த நடிகர்திலகத்திடம் ஆழ்ந்திருந்தவனுக்கு தன்னை அழைப்பது கேட்கவில்லை .


"ஜீவா...டேய் ஜீவா !!!இங்க பாருடா "இம்முறை அக்குரல் பலமாய் ஒலித்ததில் திரும்பி பார்த்தவனின் வயது இருபத்தி மூன்று.


ஆணழகன் என்றெல்லாம் இல்லாமல் இதழ்களில் சிரிப்புடன் , மாநிறத்தில் ஒல்லியான உடல்வாகுடன் ஐந்தரை அடி உயரத்தில் அன்றாடம் நாம் கடந்து செல்லும் பலரில் ஒருவன்தான் அவனும்.


கல்லூரியின் ஆண்களுக்கான விடுதியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை பார்த்தபடி நின்றிருந்தவன் தன்னை அழைத்தவரிடம்,
" மன்னிச்சுக்கோங்க சார்.. சொல்லுங்க சார் ??" என்று தன்னை அழைத்த ஆசிரியரிடம் மரியாதையாய் கேட்டான்.


"ஜீவா ...! உங்க எல்லோருக்கும் நாளைக்கு காலைல வண்டி கிளம்புது, போ..போய் எல்லோரையும் தயாராக சொல்லு .அதுக்கு தான் கூப்பிட்டேன் ...அங்க போய்ட்டு எல்லோரும் ஒழுங்கா இருக்கனும்...சரியா ??" என்றவரின் குரல் அதட்டலாய் ஒலித்தது.


சரிசரி என தலையாட்டிக்கொண்ட ஜீவா, "ம்ப்ச் !! இப்போ இந்த பயணம் ரொம்ப அவசியமா , இங்க நம்ப ஊர்ல இடமா இல்லை ...அவ்வளவு தொலைவுல ஈ,காக்கா கூட இல்லாத இடத்துக்கு கூட்டிபோறாங்க " என மனதிற்க்குள் புலம்பியபடி தன் வகுப்பு மாணவர்களை தேடிச் சென்றான்.


அங்கு அனைவரிடமும் நாளை காலை
கிளம்ப வேண்டுமென சொல்ல,அவன் நினைத்தது போலவே " அவ்வளவு தூரம் போய்தான் ஆகனுமாடா ?? "என ஒருவனும்,


மற்றொருவன்," டேய் கதிர் ....அவ்வளவு தூரம்கூட பிரச்சனை இல்லடா ஜாலியா தானட இருக்கும் ..ஆனா அந்தமாதிரி ஒரு ஊருக்கு தான் போனுமா??" என்க,


கதிர் என்றழைக்கபட்டவனும் " அதும் சரிதான். ஜீவா ...! நீதான் டீச்சர்ஸ் பெட் ஆச்சே வேற எதாவது ஊருக்கு கேளேன்டா " என்றான்.


"அட நீங்க வேற என்னைய கடுப்பாக்காதீங்கடா ....நான் முதல்ல அந்த ஊரை சொல்லும் பொழுதே வேணாம்னு தான் சொன்னேன் ,நம்ப தமிழ்நாட்டிலையே எதாவது ஊரை பார்க்கலாம்னு பேசி சரிகட்றதுகுள்ள எல்லாம் மாறிடிச்சி.அதான் நம்ப சொல்றதுக்கு மொத்தமா எதிரா செய்யவே அங்க ஒருத்தர் இருக்காரே " என்ற ஜீவா சலிப்புடனே தன் பைகளை மீண்டும் ஒருமுறை அனைத்தும் சரியாய் இருக்கிறதா என பார்த்தான் .


அவர் வேறுயாருமல்ல , இவர்களின் மூன்றாம் வருட வகுப்பு ஆசிரியர் தான்...எப்பொழுதும் மாணவர்களை அதட்டி உருட்டியபடி தன் பாடத்துடன், அவரின் தனிபட்ட வேலைகளையும் செய்ய வைக்க முதலில் அவரின் செயலை எதிர்த்தது ஜீவா தான். அவனை தொடர்ந்து அவனின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எதிர்த்து இறுதியில் கல்லூரியின் மேலிடம் வரை புகார் சென்றிருந்தது.


ஏதேதோ பேசி சமாளித்து வேலையை தக்க வைத்து கொண்டவர் வேறு வகுப்புக்கு மாற்றி சென்றிருந்தாலும் இவர்கள் அனைவரின் செயலிலும் எதாவது ஒரு வழியில் குறுக்கீடு செய்வார். இப்பொழுதும் அவர்களை வடக்கில் ஒரு மூலையில் சரியான வசதிகள் கூட அற்ற ஒரு ஊருக்கு செல்லும்படி செய்ததின் பின்னாலும் அவர்தான் உள்ளார்.


ஜீவாவின் பேச்சில் இனி தங்களின் பயணத்தை மாற்றமுடியாது என புரிந்துக்கொண்ட அனைவரும் கிளம்புவதற்கான ஏற்பாட்டை பார்க்க தயாராகினர்.


அவர்கள் அனைவரும் தொல்லியல்துறையை தங்கள் பட்டபடிப்பாய் தேர்வுசெய்து , வெற்றிகரமாய் நான்கு ஆண்டுகளை கடந்தவர்கள்.அவர்கள் என்றால் மொத்தமே இருபத்துஐந்து பேர் தான், அதிலும் பிஎஸ்சி , பிஏ என முதல் இரண்டு வருடம் இருபிரிவாய் இருந்தவர்கள் மூன்றாம் வருடத்தில் தான் ஒன்றாய் இணைந்தனர்.


முதல் இரண்டு வருடங்களில் , நம் சரித்திரத்தை கரைத்து குடித்து இருந்தவர்களுக்கு ,மூன்றாம் நான்காம் வருடத்தில் சிறுசிறு பணிகள், நிகழ்வுகள், செயல்முறை வகுப்புகள் ,களபணி பற்றிய தெளிவுரை வகுப்புகள் என அனைத்தையும் கற்று முடித்து இறுதி பரிட்ச்சையையும் வெற்றிகரமாய் முடித்திருந்தனர்.


அதன்பின் அவர்கள் கல்லூரியிலே மேல்படிப்புடன் இணைந்த ,செயல்முறையும் இருக்க பட்டம்பெற்ற பலர் அதில் இணையவே விரும்பினர்.


முதல் நான்கு ஆண்டுகளில் அறுபதாய் இருந்த அவர்களின் எண்ணிக்கை ,இந்த வருடத்தில் இருபத்தி ஐந்தாய் ஆகியுள்ளது. அத்துடன் இவ்வருடத்தில் இருந்து களப்பணியும் ஆரம்பமாகிறது.அதற்காய் அவர்கள் கல்லூரி இவ்வருடத்தின் முதல் இடமாய் தேர்வு செய்ததே வடநாட்டில் ஒன்றாய், வெகுதொலைவில் அமைய, அதில்தான் மாணவர்கள் கடுப்பாகி இருந்தனர்.


பின்னே நம் தஞ்சை மாநாகரத்தின் செழுமையில் புரண்டு வளர்ந்தவர்களை , பாலைவனத்தின் சுடும் மணலில் தோண்டி துருவவேண்டுமென சொன்னால் எவர் ரசிப்பர்.


அதிலும் ஜீவா ,சிறுவயது முதலே அவனின் தாத்தாவை போல் நம் முன்னோர்களுடன் இணைந்திருந்த இயற்கையின் வளத்தை நேசிப்பவன். அவர்களை பற்றியும் , நம் நாட்டின் அறிய பல விஷயங்களையும், முன்னோர்கள் நமக்காக யோசித்து செயல்படுத்தியவைகளையும் பலரிடம் கேட்டும் , தானே தேடி படித்தும் வளர்ந்தவன். இயல்பாய் இருந்த ஆர்வத்தாலே தொல்லியலை தன் துறையாய் உறுதியாய் முடிவுசெய்து தேர்ந்தெடுத்தவன்.


இந்த நான்கு வருட கல்லூரி வாழ்வில் நிகழ்ச்சிகள், போட்டிகள் என அனைத்திலும் பங்கேற்று ,கவனத்துடன் பாடத்தையும் படித்து , நல்மதிப்பெண்களுடன் ஆசிரியர்களிடம் நற்பெயருடன் கடந்திருந்தான்.


களபணியை முதலில் தாங்கள் இருக்கும் தஞ்சையிலே தொடங்குவர் அல்ல தமிழ்நாட்டின் எதோ ஒரு ஊர் என்ற எண்ணத்தில் ஆர்வத்துடன் இருந்த ஜீவாவிற்க்கு அவர்கள் சொல்லிய
மாநிலம் சற்று ஏமாற்றம் தான் . அப்படி என்ன நம்ஊரில் இல்லாதது அங்கு ?? முதல் இங்கே ஆரம்பிக்கலாமே என்ற விருப்பமின்மை அவனின் மனதில் முளையிட்டது.


இப்படி விருப்பமே இல்லாமல் பயணத்திற்க்கு தயாரான ஜீவா ,"இத்தனை நாளாய் தான் வாழ்ந்த வாழ்வை ஒன்றில்லாமல் செய்து புதிதாய் தன்னையே உணரசெய்யும் தன் ஜீவனவளையே அங்கு பார்ப்போம் என்றும் , அவளிற்காய் தன் மூச்சுகாத்தையும் தியாகம் செய்யலாம் என நினைப்போம் "என்றும் சற்றும் அறியவில்லை.



- காதல் அழகானது.....
 

Thoshi

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
4
Points
3
அத்தியாயம் 2 :


"தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது
எடையில்லா பொருளல்ல காதல்மனது
அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு"


தமிழ்நாட்டை நோக்கி வேகமாய் சென்றுகொண்டிருந்த அந்த மாநில பேருந்தில் ஓட்டுனர் அடிகடி ப்ரேக் அடிக்க , விக்ரமின் தலையும் கம்பியில் இடித்தபடியே வந்தது.


அவனிடம் தன் கண்களை வைத்தபடி வந்த ஆதிஷாவிற்க்கு அவன் மேலான கோபத்தையும் கடந்து பாவமாய் இருக்க , கம்பியை பிடித்து அமரும்படி சைகை செய்தாள்.


அவள் சொல்லி தந்தபடி கவனமாய் கம்பியை பிடித்துக்கொண்டவன் அடுத்தமுறை தலையை இடித்துக்கொள்ளாமல் இருக்க , எதோ அறிய சாதனை புரிந்ததை போல் ஆதிஷாவை பெருமையாய் பார்த்து வைத்தான்.


"பார்வைய பாரு பச்சபுள்ள மாதிரி " என தலையில் அடித்துக் கொண்ட ஆதிஷா பேருந்து நின்றதில் இறங்கினாள்.


"அடியே இருடி நானும் வரேன் ...விட்டுட்டு போயிடாத " என கத்திய விக்ரம் அவசரஅவசரமாய் தன் பைகளை எடுத்தான். அதன்பிறகே ஆதிஷா அவளின் பையை எடுக்காமல் சென்றதை பார்த்து,
அதையும் தூக்கமுடியாமல் தூக்கியபடி இறங்கியவன் , நிறைய பேர் பேருந்தில் இருந்து இறங்கியதால் அவர்களுடன் முண்டியடிக்க தெரியாமல் அவர்கள் இறங்கிய பின் பொறுமையாய் இறங்கினான்.


"அச்சோ ...! அவ அப்போவே இறங்குனாளே எங்க போனா தெரியலையே ...எப்பா எவ்வளவுபேர் இந்த சின்ன பஸ்ல இருக்காங்க "...என மனதில் புலம்பியபடியே அவளை தேடினான்.


விக்ரமின் கண்களில் அவள் அகபடாமல் போக," அட!!இவ எங்க போனா ??இது தான் இறங்கவேண்டிய ஊரானுகூட எனக்கு தெரியலை ...இந்த சுண்டெலி நம்பளை பலிவாங்கிட்டா போலையே " என சத்தமாய் புலம்பினான்.


அடுத்தநொடி அவனின் தலையில் இடிவிழுந்ததை போல் ஓர் வலி ,"ஆஆஆ...." என்றலறியவனின் பின் அவனை முறைத்தபடி நின்ற ஆதிஷா,"நானாடா உன்னைய பழிவாங்குறேன்...நானே தனியா போய்ப்பேன்னு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா என் பேச்சை ..இப்போ என்னனா பெட்டி எல்லாத்தையும் தூக்கிட்டு பாத்ரூம் முன்னாடி லூசு மாதிரி நின்னு புலம்பிட்டிருக்க " என்றவள் மீண்டும் கொட்டினாள்.


"ஆஆஆஆஆஆ..வலிக்குதுடி !!!!" என்றவனின் முகபாவனையில் அவளுக்கு பாவமாய் இருக்க ," சரிசரி !!! நீ போறதுனா சீக்கிரம் போய்ட்டுவா பஸ் கிளம்பிட போகுது " என்றாள்.


"ஏய் நான் எங்கடி போனும் ?? நான் அப்பவே உன் கூட தான் வருவேன்னு சொல்லிட்டேன்ல "


"ஸ்ஸ்ஸ்...இடியட் !!! அடிவாங்காம போய்ட்டுவா " என பல்லை கடித்தவளின் கண்கள் சற்று தள்ளிருந்த பொதுகழிவறையை காட்ட , "ஈஈஈ...சாரி செல்லா....!! மாமா இரண்டு நிமிஷத்துல வந்துடுவேன்" என்று சொல்லி சென்று வந்தவனின் முகம் ஒருமாதிரி ஒவ்வாத தன்மையுடன் இருந்தது.


ஆதிஷா தன் முகத்தை பார்ப்பதை பார்த்த விக்ரம் நொடியில் முகத்தை இயல்பாய் மாற்றி சிரித்தபடி வந்தான்.


அவன் அருகில் வந்தவுடனே,"இதுக்கு தான் உன்னை என்கூட வரவேணாம்னு சொன்னேன்.ஏசி காருலையே போய் வந்த உனக்கு இப்படி பஸ்ல வரனும்னு என்ன ???எத்தனை தடவை சொன்னேன் வராதனு??" என பொறிய,


"அட . இப்போ எதுக்கு டென்ஷன் ..இதுவரை பப்லிக் டாய்லெட் நான் யூஸ் பண்ணதில்ல அதனால ஒருமாதிரி இருந்துச்சி அவ்வளவுதான்..நீ வா நாம பஸ்ல ஏறுவோம்...நீ சொன்னமாதிரி பஸ் கிளம்ப போகுது பார்" என பேச்சை மாற்றினான்.


"என்ன அவ்வளவு தான் ??? நீ எதுக்கு இப்போ என் கூட வர?? நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு தனியா போக தெரியாதா??இத்தனை வருஷம் யாருமில்லாம தனியாதான இருந்தேன் இப்போ என்ன புதுசா நடந்துற போகுது"


இத்தனை நேரம் அவளிடம் சிரிப்பை மட்டுமே காட்டிய விக்ரமின் முகம் அப்படியே மாறி இறுகியது. "இத்தனை வருஷம் நான் உன் வாழ்க்கையில இல்லை தீஷா...ஆனா இனி நான் இல்லாம உன்வாழ்க்கையில ஒரு நிமிஷம் கூட கடக்காது
நீ தனியா தான் நடப்பேன் சொல்றியா போ நான் தடுக்கமாட்டேன்...அதேபோல உனக்கு பின்னாடியே நான் வருவதை உன்னால தடுக்கமுடியாது" என்றவனின் குரலில் இருந்த உறுதி இதுவரை அவள் பார்த்திராதது.


சட்டென்று தன் உணர்வுகளை மாற்றிய விக்ரம்,"செல்லா!!!பஸ் கிளம்புது ஏறு!!! " என்றபடி அவளை பஸ்ஸில் ஏறசொல்லியவன் தங்களின் பைகளுடன் அவளை பின்தொடர்ந்தான்.


அவரவர் இடத்தில் இருவரும் அமர, இறங்கிருந்த மற்ற அனைவரும்கூட ஏறிருந்ததில் மீண்டும் அந்த பேருந்து அதன் இலக்கை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது.


விக்ரமின் வார்த்தைகளில் ஆழ்ந்திருந்த ஆதிஷா , முதல்முதலில் அவனை சந்தித்த பொழுதிலிருந்தே அவன் தன்னை தனியாய் விட்டாலும் தன்னை பாதுகாப்பதை விடவில்லை என்பதை நினைத்து பார்த்தாள்.


அவர்கள் முதல்முதலில் சந்தித்தது கூட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான்.


மஜ்ஜுர் (08.05.2020) :


என்ன ஆகுமோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்தாலும் எப்படியேனும் செய்துதான் ஆகவேண்டும் என்ற உறுதியுடன் யாருமற்ற அந்த தெருவில் நட்சத்திரங்களை மட்டும் துணைகொண்டு நடந்துகொண்டிருந்தாள் ஆதிஷா.


அவளின் கைகள் எதையோ பாதுகாப்பாய் இறுக்கி அணைத்தபடி இருந்தது. அவள் செல்லும் பாதையில் யாரும் இல்லாவிட்டாலும் தன் பாத அடிகளை மெதுவாகவே எடுத்து வைத்தவள் எதிர்புறத்தில் இருந்து வந்த காலடி ஓசையிலும் , வெளிச்சத்திலும் நின்ற இடத்திலே பயத்தில் உறைந்தாள்.


"அவ்வளவுதான் இன்னும் இரு நிமிடங்களில் இவள்புறம் அந்த வெளிச்சம் வந்துவிடும்....இவ்வளவு கஷ்டபட்டு செஞ்ச எல்லாமே வீணா போகிடும் " என்ற எண்ணம் நெஞ்சோரம் துளிர்க்க , அவளின் கண்ணின் ஓரமும் கண்ணீர் துளிர்த்தது.


"இன்னும் ஒரு நிமிடம் ....நாற்பது வினாடிகள்....இருபது வினாடிகள் " என கண்ணீருடன் எண்ணிக்கொண்டிருந்தவளின் கைகளை அருகிலிருந்த சந்துக்குள் இருந்து ஓர் கரம் பற்றி இழுத்தது.


இருட்டில் அப்படி ஒரு குட்டி சந்து அங்கிருப்பதே அறியாமல் பயந்து நின்றிருந்தவள் திடுமென நடந்த செயலில் திகைத்து தன்னை பற்றிருந்த கரத்திற்க்கு உரியவரை பாரத்தாள்.


"ஓய் செல்லா ....!!நீ யாரு?? எதுக்காக இப்படி பண்ணுறனுலாம் கேக்கமாட்டேன் பட் நான் உன்கூட இருக்குறேன் பயப்புடாத " என்றவனின் கண்கள் அந்த இருட்டிலும் பளபளத்தது.


அதில் அவனைவிட்டு நகரபோனவளை தடுத்தவன்,"ஸ்ஸ்...அவங்க இன்னும் போல அமைதியா அப்படியே நில்லு" குரலை இறக்கி சொன்னான்.


அது தான் அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு...அப்பொழுது ஆதிஷாவிற்க்கு அவன் தான் விக்ரம் என தெரியாது ஏன் அவன் முகம் கூட சரியாய் தெரியவில்லை ...அவனின் உறுதியான குரலும், பளபளக்கும் கண்கள் மட்டுமே அந்த நொடி அவனின் அடையாளமாய் அவளின் மனதில் பதிந்தது.


மூச்சுகாத்து2:


"கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதிஇரவில் தூக்கத்தை கலைக்கும்
பூவே உந்தன் முகவரி என்ன "


"எப்போபாரு தூங்கிட்டே இருக்காதடா எருமை !!!" என்று அர்சனையுடன் தன் நண்பன் கதிரை பின்னாடி பட்டென்று அடித்து எழுப்பினான் ஜீவா.


"ஆஆ ...நான் இல்ல மாமா... அடிக்காதீங்க ..உங்க பொண்ணு தான் மாமா என்னைய காதலிக்கிறேன் சொன்னா.." என்ற அலறலுடன் எழுந்தமர்ந்த கதிர் , தான் வீட்டில் இல்லாமல் பேருந்தில் இருப்பதை பார்த்து ஆசுவாசமானான்.


"நல்லவேளை கனவு தான்...ஆனா எங்க மாமா அந்த உருண்ட வெங்காய தலையன் கனவுல கூட என்னைய விளாசுற மாதிரியே வரான்டா ஜீவா... " என்றவனிடம் ,


"உங்க மாமா விளாசுறது இருக்கட்டும் தங்கம் ....இப்போ அவர் பெத்த உன் மாமன் மவ உன்னைய வெளுக்க போறா பாரு" என மெதுவாய் முணுமுணுத்த ஜீவா, அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் கதிரை முறைத்தபடி அமர்ந்திருந்த அபிலஷ்யாவை காட்டினான்.


"அட எனக்கு மாமவை பார்த்துதான் பயமே தவிர இவளாம் ஜீஜீபி மாப்ள ..!!சரிசரி இந்த இடம் எனக்கு வாட்டமாய் இல்ல வா பின்னாடி சீட் போவோம் " என ஜீவாவை இழுத்தபடி அந்த வண்டியின் பின்இருக்கைக்கு சென்றான்.


" ஏன்டா கதிர் இப்படி பண்ணுற!!!அபி இந்த டிரிப் வருவதுக்கு காரணமே நீதான்னு எல்லோருக்கும் தெரியும்.நீ என்னனா அவளை கண்டுக்க கூட மாட்டுற...ஏன்டா ??பொண்ணு அவளே தைரியமா உன்னை காதலிக்குறதா சொல்லி வரா , நீ என்னனா உன் மாமாக்கு பயந்துகிட்டு இவளை கண்டுக்க மாட்டுற ??"


"அவ ஒருத்தி தான் உருப்படியா ராஜஸ்தானி பேசுவானு தான் எல்லாம் அடம்புடிச்சி கூட்டிவந்துட்டு எனக்காக வந்தானு அடிச்சு விடுறியா ...ப்ச் அட இப்போ எதுக்கு இதபத்தி பேசிகிட்டு விடு.....ஆமா நீ ஏன்டா ராத்திரி மூணு மணி வரைக்கும் முழிசிட்டு இருந்த ??எப்பவும் பத்து மணி ஆனா போர்வை போர்த்திட்டு கவுந்தடிக்குற ஆள் நீ , இந்த ஒரு வாரமா பேய்கே டப் கொடுத்து ராத்திரிலாம் முழிசிட்டு இருக்க என்ன விஷயம் ???"


"அது ...அது ஒன்னுமில்லடா " என இழுத்த ஜீவாவின் குரலிலே ஏதோ இருப்பதை அறிந்த கதிர்,"சரிசரி சீக்கிரம் அந்த பொண்ணை பத்தி சொல்லு.....பார்க்க எப்படி இருப்பா ? " எனக் கேட்டான்.


"டேய் கதிரே!!! உனக்கு எப்படிடா தெரியும்....??" என ஜீவா வியக்க,


"ஆமா இது பெரிய அரும்பெரும் கண்டுபிடிப்பு பாரு....!! எல்லாம் முச பிடிக்குற நாயை மூஞ்ச பார்த்து கண்டுபிடிக்குறது தான். எல்லாத்துலையும் சரியா இருக்குற மிஸ்டர்.பர்பெக்ட் திடீருனு இயல்புக்கு மாறி இருந்தா அதுக்கு காரணம் பொண்ணா தான இருக்க முடியும் ,சரி பொண்ணோட மூஞ்சியவாவது ஒழுங்கா பார்த்தியா ?


என கேட்டவனுக்கு வேகவேகமாய் " ஆமென" மண்டையை உருட்ட,


" பரவாயில்ல...! சரி சொல்லு பொண்ணு நம்ப ஊரா??" என கேட்டவனுக்கு "இல்லை" என தலையாட்டினான்.


"சரி உங்க அம்மா ஊரா ??? அதாவது சென்னை பொண்ணா ?"


அதற்க்கும் ஜீவா இல்லை என தலையசைக்க ,"இரண்டும் இல்லையா ?? நீ இந்த இரண்டு இடம் தவிர எங்கயும் போனதில்லையே ..ஒருவேளை நம்ப காலேஜ்ல கூட்டிபோன எதாவது ஒரு இடத்துல எந்த பொண்ணையாவது பார்த்து பிக்ஸ் ஆகிட்டியா ? " என ஜீவாவை சந்தேகமாய் பார்த்து வைத்தான்.


அதில் ஜீவா பட்டென அவனின் தலையில் தட்ட, "பின்ன என்னடா ?? பொண்ணு எந்த ஊருனு ஒரு கேள்விதான் கேட்டேன் அதுக்கு ஒழுங்கா ஒரு பதிலை சொல்றியா நீ " என தலையை தடவியபடி சலித்தான்.


"ப்ச் ....அதுஇல்ல கதிர் !!அவ எந்த ஊருனு எனக்கே தெரியலை, அப்பப்போ வருவா ...அப்படி வரும்போது அவளோட அந்த கண்கள் இரண்டும் என்கிட்ட எதையோ கேக்குற மாதிரியே பார்க்கும்டா , அடுத்து யாரோ ஒரு சின்ன பொண்ணு நல்லா அழகா மேக்கப் பண்ணிகிட்டு என்கிட்ட ஓடி வரும்.....ஆனா அடுத்தே அந்த சின்ன பொண்ணோட காணாம போய்ட்றா அப்போ இவ பார்வையாலையே என்னை தேட சொல்றா , என் கையை கெட்டியா பிடிச்சிகிட்டு உங்களால மட்டும் தான் எனக்கு உதவ முடியும்னு அழுவாடா ..திரும்ப திரும்ப எனக்கு வந்துட்டே இருக்க இதை வெறும் கனவுனு என்னால ஒதுக்கவே முடியலைடா..." என்றவன் இப்பொழுதும் அவள் கண்முன் இருப்பது போல எதிரே வெறித்தபடி நின்றான்.


ஜீவாவின் பேச்சை ஆர்வமாய் கவனிக்க ஆரம்பித்த கதிர் அவன் இறுதியில் சொன்னதை கேட்டு முழி வெளியில் பிதுங்குவதுபோல் முழித்தவன் ," அட பிரிட்டான்யா பிஸ்கெட் மண்டையா !!! இம்புட்டு நேரமா கனவுல பார்த்த பொண்ணை பத்தியா சொல்லிட்டிருந்த ...மவனே உன்னைய !!!???" என ஓடும் பேருந்து என்று கூட பார்க்காமல் , பேருந்தினுள் ஜீவாவை கீழே தள்ளி அவனின் மேல் அமர்ந்து அடிக்க தொடங்க...அவர்களின் விளையாட்டில் மற்ற மாணவர்களும் இணைந்துக் கொண்டனர்.


கதிரின் அடிகளை சிரித்தபடி வாங்கிக் கொண்ட ஜீவாவின் மனதிலோ , கனவில் தன் கைபற்றிய படி நின்றிருந்த பெண்ணே மீண்டும்மீண்டும் வளைய வந்தாள். ஜீவாவின் எண்ணங்கள் வடநாட்டு பயணத்தில் ஆழ்ந்திருந்ததாலோ என்னவோ, கனவில் வந்தவளும் இலையுடனான மனோரஞ்சித பூவின் வண்ணத்தில் ஆடை உடுத்திருந்த பாணி ராஜஸ்த்தானியர்களின் முறைபோல் இருந்தது.


அதுமட்டும் இன்றி கை முழுக்க விதவிதமான கண்ணாடி வளையள்கள் சப்திக்க அவனின் கரம் பற்றியவளின் கரத்தின் வெண்மையை மருதாணியின் கோலங்கள் அழகாய் அலங்கரித்திருந்தது.


அதை எல்லாம் நினைத்தபடியே நண்பர்களின் செல்ல அடிகளை வாங்கிக் கொண்டிருந்த ஜீவாவின் கண்களுக்குள் அவளின் மைதீட்டிய விழிகளும் , செந்சாந்து ஏந்திய பிறை நெற்றியும் நிரந்தரமாய் குடியேறியது.


-காதல் விசித்திரமானது ...
 

Thoshi

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
4
Points
3
அத்தியாயம் 3:


"காண்பவை எல்லாம் பிழை என்று
கொண்டால்
வாழமுடியாது பெண்ணே ...
கயிறுகள் எல்லாம் பாம்பெனக்
கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே "


யார் என்றே தெரியாத இளைஞனுடன் இருட்டில் , குறுகிய இடத்தில் ஒட்டிக் கொண்டு நிற்பது சங்கடமாய் இருந்தாலும் அவனின் கண்களில் தன்னை காப்பதற்கான யோசனையை தவிர வேறெதுவும் இல்லாததில் ஆசுவாசமானாள் ஆதிஷா.


சிறிதுநேரம் சென்ற பின் ,இத்தனை நேரமாய் அவளை தொடர்ந்த காலடி ஓசை கொஞ்சம்கொஞ்சமாய் குறைந்து நின்றுபோனது. அப்பொழுதும் உடனே அவளை செல்ல அனுமதிக்காத அவன் , தலையை மட்டும் சற்று வெளியே நீட்டி ஆராய்ந்தான்.


அந்த ஆள்அரவமற்ற சாலை இனி ஆபத்தில்லை என்பதை பறைசாற்ற , அவளின் புறம் திரும்பியவன் அவளை முன்னால் செல்லும்படி கைகாட்டினான்.
அவளும் இரண்டு அடிகளை பயமின்றியே எடுத்துவைக்க, ஏனோ இவன் இதழ்கள் புன்னகையை உடுத்திக் கொண்டது.


அவள் தன் கைகளில் இருந்ததை இன்னும் தன்னுடன் அணைத்தபடி முன்னால் நடக்க , சிறிது இடைவெளிவிட்டு இவனும் பின் தொடர்ந்தான்.


இவள் நின்று திரும்பி பார்த்து ,"உங்க உதவிக்கு நன்றி ...! இனி நான் தனியாகவே போயிடுவேன் ...நீங்க போகலாம் " என்றாள்.


அதில் அவன் புன்னகை மேலும் விரிய ,"யூ சி...இதுக்கு நான் இது பொதுவழி நான் போவேன் இல்லை இங்கயே பாய்போட்டு படுப்பேன்னு தலைவரோட வார்த்தையை சொல்லலாம் ஆனா உனக்கு தலைவரை தெரியுமானு தெரியலையே நீ பாட்டுக்கு காண்டாகி எதையாவது தூக்கி அடிசிட்டா???..இங்க பாரு நான் உன்னோட பாதையில குறுக்க கண்டிப்பா வரமாட்டேன் ...ஆனா இந்த நேரத்துல ஒரு பொண்ணை தனியா விடவும் என் மனசாட்சி ஒத்துகாது ...அதனால நீபாட்டுக்கு உன் வேலையை பாரு" என்றவனின் பேச்சில் அவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.


அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தவளுக்கு அவன் தன் செயலுக்கு எதிராய் எதுவும் செய்வதுபோல் தோன்றாததால் ,அவனை கண்டுகொள்ளாமல் தன் நடையை எட்டிப் போட்டாள்.


இத்தனை நாள் நிலவின் ஒளியை மட்டுமே துணையாய் எண்ணி நடந்தவளுக்கு ,இன்று தன் பின் வருபவனின் துணை ஏதோ ஒருவிதத்தில் நிறைவை தந்தது.


"ஆதி!!!என்ன இது ?? யார் என்னனே தெரியாதவன் கூட வருவதில் உனக்கு என்ன நிறைவு அப்படி ?? இது சரியில்லை ஆதி ...நீ எப்பவும் யாரையும் சாராமல் தனியாய் எல்லாத்தையும் போராடி வெல்லனும் " என மனதிற்க்குள் உருபோட்டபடியே நடையை துரிதபடுத்தியவளை அவனும் சிறு இடைவெளியுடன் பின்தொடர்ந்தான்.


கிட்டதட்ட அறைமணி நேரம் நடந்தவர்கள் , சத்திரம் போலான ஒன்றின் முன் நின்றனர்.


"இது என்ன சத்திரத்திற்க்கு எதற்க்கு இந்த பெண் வந்திருக்கிறாள் ??இங்கு அவர்கள் சுலபமாய் கண்டுபிடித்து விடுவார்களே " என்ற படபடப்பில் அதை அவளிடம் கேக்கவும் செய்தான்.


அவனை நிமிர்ந்து ஒற்றை பார்வை பார்த்தவள் , பதில் எதுவும் சொல்லாமல் சத்திரத்தின் பக்கவாட்டில் இருந்த கதவை மெதுவாய் மூன்று முறை தட்டினாள்.


சில நொடிகளில் அந்த கதவை திறந்து உள்ளிருந்து வந்த முக்காடு அணிந்த உருவம் அவளின் கையில் இத்தனை நேரம் பாதுகாப்பாய் இருந்ததை தன் கைகளில் வாங்கிக் கொண்டது. அடுத்த நொடியே உள்சென்று கதவையும் அடைத்துவிட சில நொடிகளில் நடந்துமுடிந்தவற்றை பார்த்தவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.


"என்ன நடக்கிறது ?? இங்க ...எப்படி ...அது....இல்லை ...மாட்டிக்கமாட்டியா ???" என அவன் கேள்விகளை அடுக்க ,


அவன் ஒருவன் அங்கு இல்லவேஇல்லை என்பதைபோல் அவள் அவனை கடந்து வேகவேகமாய் வந்த வழியே நடக்க , அவனும் அவளின் மௌனத்தை ஏற்று அவள் பின் சென்றான் அவள் தன் இருப்பிடத்தை பத்திரமாய் அடையும் வரை.


அவன் தொடர்வது தெரிந்தாலும் நின்று அவனிடம் பேச ஆதிஷா தாயாராய் இல்லை. முதலில் செல்கையில் சற்று பயந்ததாலும், அவன் அவளை அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றியதாலும் அவனுடன் அமைதியாய் சென்றாள். இப்பொழுது தன் கையில் இருந்ததை பத்திரமாய் ஒப்படைத்த பின்பே அவனை பத்திய சந்தேகம் எழுந்தது.


"யாரிவன் ?? இதுவரைக்கும் நாம் இவனை பார்த்ததில்லையே ...நம்ப ஊர்ல இல்லாத இந்த இரண்டு நாளில் வந்திருப்பாரோ ? அப்போ கூட என்னை மாதிரியே அவருக்கும் என்னைய தெரிஞ்சிருக்காதே அப்றம் எதுக்காக காப்பாத்தி கூடவே வந்தாரு ? நம்ப கையில் இருந்ததை பத்திகூட எதுவும் கேக்கலையே " என பல கேள்விகளுடன் தான் என்றாலும் ,அவளின் மனதை பார்த்த முதல் நாளே தன் நினைவால் ஆக்கிரமித்திருந்தான் அவன்.


மூச்சுகாத்து 3:


"ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர் காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது "


மீத்பூர் :


"வாவ் !!!! எவன்டா சொன்னது 'மீத்பூர்' பாலைவனம்னு ...ப்பாபாபா எவ்வளவு வண்ணங்கள் நம்ப முன்னாடி ....என்னோட இரண்டு கண்ணு பத்தாது போலையே இதெல்லாம் பார்க்க ...அடேய் அப்பரசென்டிங்களா !!! இங்க வரத்துக்காடா அப்படி அலுத்துகிட்டீங்க ??" என்ற கதிர் தானுமே அதில் ஒருவன்தான் என்பதை வசதியாய் மறந்துவிட்டான் போலும்.


"குரங்கு !! முதல்ல அந்த டேமை மூடுடா உன் ஜொல்லு வழியுது.....இது ஒன்னும் நம்ப ஊரு இல்லை... அதனால அந்த இடியட்டை ஒழுங்கா வாலை சுருட்டிட்டு இருக்க சொல்லு ஜீவா !!" என அபிலஷ்யா எரிச்சலுடன் குரல் கொடுக்க , ஜீவாவும் கதிரின் கையை இழுத்தபடி மற்றவர்களுடன் இணைந்தான்.


அவர்கள் அனைவரும் ஒருவழியாய் அவர்களுக்காய் கல்லூரி தேர்ந்தெடுத்திருந்த ராஜாஸ்தானில் இருக்கும் "மீத்பூர்"-க்கு வந்து சேர்ந்திருந்தனர்.


அவர்கள் இறங்கிய இடத்தை ஒட்டிய வீட்டில் திருமணம் நடக்கிறது போலும்.இவர்கள் இதுவரை தொலைகாட்சியில் மட்டுமே பார்த்திருந்த ராஜாஸ்தானிய உடைகளில் ஆண்களும், வண்ணவண்ண உடைகள் உடுத்தி விதவிதமான அணிகலன்களுடன் பெண்களும் அங்கும்இங்கும் ஆடிபாடியபடி இருந்தனர்.


அதை பார்த்தே கதிர் மேலே கூறியவை.அவன் மட்டுமின்றி மற்றவர்களும் கூட நடப்பவற்றை வேடிக்கை பார்த்தபடி நிற்க ஜீவா அவர்களுடன் வந்த ஒரேஒரு ஆசிரியரை பார்த்தான்.


" விடு ஜீவா....!! இதுவரைக்கும் நம்ப நேர்ல இப்படிலாம் பார்த்ததில்லைல அதான்..சரி நீ இங்க எல்லோரையும் பார்த்துக்கோ நான் போய் நம்ப தங்க ஏற்பாடு பண்ணுறேன் சொன்ன இந்த ஊர்காரரை கூட்டிட்டு வரேன்" என சொல்லி சென்றார்.


ஆசிரியரே அனுமதி அளித்தபின் அவர்களுக்கு தடை ஏது ?அவர்களில் பெண்கள் அங்கு ஆடிக் கொண்டிருக்கும் பெண்கள் அணிந்திருந்த பெரிய பெரிய ஆபரணங்களை பற்றி விவாதிக்க , ஆண்கள் அனைவரும் தங்களின் வேலையை தொடர்ந்தனர் (அதான்பா ஜொல்லு விட்றது ஹீஹீ ..)


அதை பார்த்த ஜீவா சிரித்தபடி திரும்ப , அவனின் கண்களில் சற்று தொலைவில் ஒரு பெண் மற்றொரு சிறுபெண்ணை தூக்கியபடி பதுங்கி பதுங்கி செல்வது பட்டது.


அது அவனின் கனவில் வந்த பெண்போலவே தோன்ற , அவளிடம் செல்ல போனவனின் கரம்பற்றிய கதிர் ," ஜீவா ....!!! அங்க பாருடா... கல்யாணம் நினைக்கிறேன் வா..சார் வர வரைக்கும் உள்ள போய் எப்படி நடக்குதுனு பார்ப்போம்" என இழுத்தான்.


அவனின் இழுப்பிற்க்கு சென்ற ஜீவா திரும்பி பார்க்க , அப்பெண்ணோ , சிறுமியோ அந்த இடத்தில் இல்லை.


"நான் பார்த்தது உண்மையா ?? பொய்யா ?? அவ...அந்த பொண்ணு இங்க வந்தாளா ?? இல்லை என் பிரம்மையா ??"


மாணவர்கள் அனைவரும் ஊர்மக்களிடம் அறிமுகமாகி அவர்களுடன் கலந்திருந்தனர்.இதுவரை இப்படி திருமணத்தை பார்த்ததில்லையாதலால் பார்க்க ஆவலாய் இருப்பதாய் சொல்ல, அவர்களும் இவர்களை மரியாதையாய் வரவேற்று அமரவைத்திருந்தனர்.


அப்பொழுது அனைவருக்கும் பழசாறு கொடுக்கபட , தட்டை ஏந்தியபடி வந்த பெண் இவர்களுக்கும் கொடுத்தாள்.தான் பார்த்த பெண்ணை பற்றியே நினைத்துக் கொண்டிருந்த ஜீவா,பழசாறு தட்டை தன்முன் நீட்டியபோதுகூட கலையவில்லை.


"டேய் ஜீவா !! ஜீஸ எடுடா ...அவங்க எவ்வளவு நேரம் நீட்டிட்டிருப்பாங்க " என்ற கதிரின் குரலில் கலைந்து ஜீஸை எடுக்க கை நீட்டியவனின் கண்கள் அந்த தட்டை ஏந்திருந்த கரங்களை பார்த்து திகைத்தது. அந்த கரம் கடந்த சிலநாட்களாய் அவனின் கனவில் அவனின் கரத்தை பற்றிருந்த கரம் அது.


திடுகிட்டு நிமிர்ந்து பார்த்தவனின் முன் சிலநிமிடங்கள் முன் ஒரு சிறுமியுடன் பதுங்கியபடி சென்ற பெண்ணான , அவனின் கனவு பெண் கனவில் வந்த அதே உடையில் அதே தோற்றத்தில் நிற்க ..இத்தனை நாளாய் கனவில் மட்டுமே கண்டு மனதில் பதிந்திருந்த அவளின் விழிகளை நேரில் கண்டவன் ," என்னை போல் நீயும் முன்பே என்னை கண்டாயா ???" என கேள்வி எழுப்பியது.


இவன் இன்னும் எடுக்காததில் இத்தனைநேரம் பதட்டம் மட்டுமே குடியிருந்த அவளின் முகத்தில் ,வில்லாய் வளைந்திருந்த புருவமிரண்டும் நெளிய குழப்பத்துடன் முதல்முறையாய் அவனை ஏறிட்டு பார்த்தாள்.


அவளின் பார்வை தீண்டும் நொடிக்காவே பல கேள்விகணைகளுடன் காத்திருந்தவனின் இதயத்தை அவளின் விழியின் வீச்சு முதல் பார்வையிலே சுக்குநூறாய் தாக்கிச் செல்ல , பேச்சற்ற நிலையில் மெல்லிய சேலை முக்காட்டில் தெரிந்த அவளின் வதனத்தை மட்டுமே பார்த்தபடி அமர்ந்திருந்தவனை பார்த்தவள் ஒருநிமிடம் தடுமாறி பின் அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள்.


"நோ....நில்லு !!!" என கத்தியபடி அவளின் பின்செல்ல போனவனை தடுத்த அபிலஷ்யா, "ஜீவா!!!! என்ன இது ?? அந்த பொண்ணு பின்னாடி எதுக்கு போற ?? நீதான் மத்தவனுங்களை ஒழுங்கா பார்த்துப்பனு நினைச்சா நீயே இப்படி பண்ணுற ? யார்னா பார்த்தா என்ன நினைப்பாங்க ??" என பேச,


அவர்களின் இடையில் வந்த கதிர்,"ப்ச்....இப்போ நீ எதுக்கு அவனுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்க ? அதுலாம் நாங்க எல்லாம் சரியா இருந்துப்போம் ..நீ இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் திரியாம ஒழுங்கா நம்ப பொண்ணுங்க கூடவே இரு போ "என அதட்டி அவளை அங்கிருந்து அனுப்பினான்.


அவள் வாய்க்குள் இவனை திட்டி முனங்கிகொண்டே செல்ல ஜீவாவின் புறம் திரும்பியவன்," டேய் !!ஜீஸை எடுனு சொன்னா பே-னு அந்த பொண்ணையே எதுக்குடா பார்த்த??என்ன இவதான் உன் கனவுல வந்த பொண்ணுனு சொல்ல போறியா ??" என விளையாட்டாய் கேட்க , அவனோ வேகமாய் "ஆம் " என தலையாட்டினான்.


"ஏதேது தமிழ்நாட்டுல தஞ்சையில பொறந்து வளர்ந்தவன் கனவுல , ராஜஸ்தான்ல ஒரு மூலையில இருக்க மீத்பூர் சேர்ந்த பொண்ணு வந்ததுமில்லாம அவளை நேரில வேற பார்த்துட்டியா.....என்னடா இது கதையில வரமாதிரி இருக்கு ?? நிஜமா இந்த பொண்ணை தான் பார்த்தியா ??"


"ஆமாடா !!! இதே பொண்ணுதான் அதும் இதே ட்ரெஸ்ல தான் பார்த்தேன் ...அவளை நான் முதல்லயே வெளிய பார்த்தேன்டா ஆனா அது என் பிரம்மையோனு நினைச்சி விட்டுட்டேன். ஆனா இப்போ அவளை நேருக்குநேரா பார்த்துட்டேன் எனக்கு தெரியும் இது அவளே தான் " என்றவனின் குரல் உறுதியாய் வெளிவந்தது.


இருவரும் ஒரு ஓரமாய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கூடத்தில் சலசலப்பு கேட்க, அனைவரும் எழுந்து நின்று வணங்குவதில் வருவது அவ்வூரின் பெரிய மனிதர்கள் என உணர்ந்து இவர்களும் அங்கு திரும்பி பார்த்தனர்.


பத்துபதினைந்து பேர் வரிசையாய் வர அதில் இறுதியாய் வந்தவளை பார்த்து ,"டேய் கதிர் !!! இவ தான்டா நான் சொன்ன பொண்ணு " என்றவனின் பேச்சு அவள் நடந்து வந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நின்றது.


-காதல் மர்மமானது ....
 

Thoshi

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
4
Points
3
அத்தியாயம் 4:


"ஆனவரை விழியால் பேசு
மௌனம் என்னும் மொழியால் பேசு
ஆகமொத்தம் அன்பே உனக்கு
நான்தான் நாயகனே "


மஜ்ஜூர் :


ராஜாஸ்தானின் பல கிராமங்களில் மஜ்ஜூரும் ஒன்று. இங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகை ஐந்நூற்றி இருபது, அதிலும் ஆண்களே அதிகமாய் இருந்தனர். கவனமாய் கணக்கெடுத்தபொழுது தான் 0 முதல் 8 வயது பிள்ளைகளில் முழுக்க முழுக்க ஆண்பிள்ளைகள் மட்டுமே இருப்பதை அரசாங்கம் கண்டுபிடித்தது.


பெண்குழந்தைகளை கருவிலே அழிப்பது , பிறந்த பெண்குழந்தைகளை கொல்வது என்பவற்றை இயல்பான ஒரு சடங்காய் பல தலைமுறைகளாய் தொடர்ந்து செய்துவரும் அவ்வூர் மக்களுக்கு முடிந்தவரை அரசாங்கம் புரிய வைக்க முயன்றது. ஆனால் அதற்க்கு எதிராய் எதையும் செயல்படுத்த முடியவில்லை. நிலைமை கையை மீறும் பொழுதும் தட்டிக்கேட்க முடியாமல் கையை கட்டியபடி வேடிக்க பார்க்கிறது.


காரணம் ராஜ்பவுத்முண்டேலா, மஜ்ஜூரின் தற்போதைய முடிசூடா அரச(க்க)ராய் வலம் வருபவர்.மஜ்ஜூரின் முக்கால் பாகம் பரம்பரைபரம்பரையாய் இவரின் குடும்பத்திற்க்கு சொந்தமானதே .இங்கு இவர்கள் குடும்பத்தினர் வைப்பதே சட்டமாகவும், சம்பிராதாயமாகவும் இருந்து வருகிறது.


இன்று முதல்முறையாய் "ராஜ்பவுத்முண்டேலா" -வின் ஆணையை நிறைவேற்ற முடியாமல் தவறிழைத்தவர்களாய் ஏற்படபோகும் விபரீதத்தை எதிர்கொள்ள பயந்தபடி நின்றிருந்தனர் மஜ்ஜூர் மக்கள்.


அந்த ஊரில் உள்ள அனைவரும் ஒரு சிறு வீட்டை சுற்றி கூட்டமாய் நின்றிருக்க , அவர்கள் அனைவரின் முகத்திலும் பயத்தின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது. அதை மேலும் அதிகரிப்பதை போல் உறுமலுடன் அங்கு வந்து நின்றது அந்த நான்கு சக்கர உயர்ரக கார் ஒன்று.


அந்த காரின் முன்னும்,பின்னும் இரண்டு ஜீப்களில் வந்திருந்த அடியாட்களை போன்றோர் வேகவேகமாய் அவ்வீட்டில் கூடியிருந்த கூட்டத்தை விலக்குவதற்க்குள் , அவர்களே இருபக்கமாய் விலகி வழிவிட்டு நின்றனர்.


காரின் கதவை ஒருவன் திறக்க , காதில் கடுக்கனுடன் , கையில் அணிந்திருந்த காப்பை ஏற்றிவிட்டபடி காரிலிருந்து இறங்கிய ராஜ்பவுத்முணடேலாவின் கால் தரையில் படும்முன்னே அதை இறுகபற்றியபடி கீழே விழுந்தான் அந்த சிறிய வீட்டின் உரிமையாளன் .


"எங்களை மன்னிச்சிடுங்க பைசாப் ...!!!நான் நீங்க சொன்னமாதிரியே எல்லாமே தயாரா தான் இருந்தேன்...எங்க குலம் மேல ஆணையா எப்படி காணாம போச்சினு எனக்கு எதுவும் தெரியாது பைசாப் ....!" என்றவரின் குரலோ பயத்தில் நடுங்கியது.


ராஜ்பவுத்முண்டேலா,"ச்சு...ச்சு....உனக்கு எதுவும் தெரியாதுல....ம்ம்ம் நீயும் என்ன பண்ணுவ உனக்கே தெரியாம தான இப்படி ஒன்னு நடந்திருக்கு ,ஆனா அது எப்படி பல்வீர்.. இதுவரை இந்த ஊர்ல யார் வீட்டிலும் நடக்காத ஒரு சம்பவம் முதல்முறையா உன் வீட்ல நடந்திருக்கு ?? அதுவும் உனக்கு தெரியாம ?? ச்சுச்சு " என்று குரலில் வருத்தத்தை காட்டியவர் ,கூடவே தன் ஆட்களுக்குக்கும் கண்காட்டினார்.


அடுத்த நிமிடம் பல்வீர் என்னும் அந்த வீட்டின் உரிமையாளனை சூழ்ந்த அவரின் ஆட்கள் , தங்களின் கைவண்ணத்தை காட்ட தொடங்க வலியில் அவரிடம் இருந்து வெளிபட்ட அலறல் அவ்வூர் முழுவதும் ஓலமாய் ஒலித்தது.


அதை பற்றிய கவலை சிறிதுமில்லாமல் அவர் மீண்டும் காரில் அமர, அந்த வாகனம் சீறிட்டு கிளம்பியது.


அங்கு அவர் வந்ததுமுதல் நடந்ததை பார்த்தபடி கைக்கட்டொ சுற்றி நின்ற மக்கள் எதையும் தட்டிக்கேட்க முடியாமல் பயத்துடன் நிற்க , பயம் மட்டுமின்றி எவ்வுணர்ச்சியும் அற்று வெற்று பார்வையுடன் நின்றிருந்தாள் ஆதிஷா.அவளின் அந்த முகபாவனையை சிறிதும் எதிர்பாரா இருவிழிகள் அவளையே தொடர்ந்து கவனித்தது.


வெற்றுபார்வையை பார்த்திருந்தவளின் விழிகள் திடிரென மின்னலடிக்க ,அவளின் இதழ்களின் ஓரம் சற்றே விரிந்ததில் ஆச்சரியமான அவ்விருவிழிகள் அவளின் பார்வையின் திசையை ஆராய , அங்கு வாங்கிய அடிகளால் ஆடைகள் கிழிந்தபடி ரத்தம் சொட்டசொட்ட விழுந்துகிடந்தான் பல்வீர்.


ராஜ்பவுத்தின் ஆட்கள் தங்கள் வேலை முடிந்ததென கிளம்பி செல்ல , கிழிந்த நாறாய் கிடந்தவனை தூக்கிவிட கூட எவரும் அவனின் அருகில் செல்லாமல் , மௌனமாய் கலைந்து சென்றனர். அவர்களில் ஒருவளாய் ஆதிஷாவும் கிளம்ப அவளின் முன்வந்து நின்றான் அந்த விழிகளின் சொந்தகாரன்,முந்தின இரவு அவளுக்கு உதவியவன்.


யார் என்றே தெரியாதவனின் உதவியுடன் தான் நினைத்ததை செய்து முடித்திருந்த ஆதிஷா அச்செயலை எவரும் அறியமாட்டார் என்ற நம்பிக்கையுடன் இருக்க , அதை குழைப்பது போல் தன்முன் நின்றிருந்தவனின் சந்தேக பார்வையில் தடுமாறினாள்.


"நீதான இதுக்கு காரணம் ..??" என பல்வீரை விழிகளால் சுட்டிகாட்டியவன் ,"ஆனால் காரணம் என்ன ? அதாவது இப்படி தான் பண்ணனும்னு என்ன வேண்டிஇருக்கு ??" எனக் கேட்டான்.


முதலில் தான் செய்த செயல் அனைவருக்கும் தெரிந்துவிடுமோ என பயந்தாலும் உள்ளுக்குள் மறைத்தபடி" அதை நான் ஏன் உன்கிட்ட சொல்லனும் ?? முதல்ல யார் நீ ???" எனக் கேட்டவளின் குரல் தடுமாற்றமின்றி தெளிவாய் வெளிவந்தது.


இப்பேச்சில் ஆதிஷாவின் முகமே இறுக்கமாய் மாறியிருக்க , அதை ரசிக்க இயலாதவன் குறும்பாய் ,"ம்ம்ம்... நான் உன் புருஷன் ம்க்கும்....புருஷன் ஆக போறவன் செல்லா ....உனக்கு ஓகே தானே " என அசால்ட்டாய் சொன்னவனின் பேச்சில் ஒருநொடி அவள் தான் பேச்சிழந்து போனாள்.


"ஹாஹாஹா....!!! ப்பாாா என்ன ஒரு பாவனை....நீ பேசவே வேணாம் மௌனமே போதும் ஏன்னா உன் முகம் உன் உணர்வுகளை அப்படியே அப்பட்டமாய் காட்டுது ...யூ நோ ...எனக்கு பிடிச்சதும் அதுதான் " என இடைவிடாமல் பேசியவனின் குரலில் நடப்பிற்க்கு வந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாய் அவனை கடந்தாள்.


"ஏய்...செல்லா...!!! நான் சொன்னதுக்கு எதுவும் சொல்லாம போற....சரி என் பெயரையாவது கேட்டுட்டு போ ....என் பெயர் விக்ரம் " என செல்பவளின் செவியில் கேட்கும்படி கத்தி சொன்னான்.


அவள் கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்து நின்றவன் அருகில் கேட்ட காலடி ஓசையில் சிறு அதிர்வுடனே திரும்பினான்.


"உப்ப் ....!!!!நீதான ...நான் பயந்தேபோய்ட்டேன் உங்க பைசாப் ஆள் தான் வந்துட்டாங்களோனு " என்ற விக்ரமிடம்,


"பைசாப் மேல இவ்வளவு பயம் எதற்க்கைய்யா ?? அப்படி நிஜமாவே பயம் இருந்தா இந்த அம்மாவை இனி தொடராம இருங்கய்யா...அதான் உங்க இருவருக்குமே நல்லது " என்ற அன்வித் , விக்ரமின் நண்பன் மற்றும் பாதுகாவலன்.


"ப்ச் !!! அதவிடு அன்வித்!! உன்னைய என் பெயரை சொல்லி கூப்பிடுனு எத்தனை தடவை சொல்றேன்.ஊர்ல இருக்கும்போது நான் சொல்ற விஷயங்களை ஒழுங்கா செஞ்ச நீ...மஜ்ஜூர் வந்ததுல இருந்தே அது செய்யாத இது செய்யாதனு என்னைய தான் அதட்டுற " என மிரட்டியவனின் குரலில் நிச்சயம் கோபம் என்பது துளி கூட இல்லை.


சிறுபிள்ளையாய் தன் நண்பனை வம்பிழுத்தபடி சிரித்த முகமாய் நிற்கும் விக்ரமை பார்க்க பார்க்க , அன்வித்தின் முகம் தீவிர யோசனைக்கு தாவியது.


"இவரால இங்க தாக்குபிடிக்க முடியுமா ?? இவருக்கு இங்க இருக்க பழக்கவழக்கம்லாம் தெரிஞ்சா என்ன மாதிரி முடிவெடுப்பாரு ..அப்பவும் இவரோட முகம் இதேபோல இருக்குமா " என வரிசையாய் கேள்விகள் அணிவகுக்க ,


"பகவான்!!! இவர் முகத்துல இருக்க இந்த சிரிப்பு மட்டும் எப்பவும் குறைஞ்சிடாம நீதான் இவருக்கு துணையாய் இருக்கனும் " என மனதற்க்குள் அவசரமாய் கடவுளிடம் வேண்டினான் அந்த நண்பன்.


மூச்சுகாத்து 4 :


"தாளத்தில் சேராத தனிபாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள்
பொய்யானது"


மீத்பூர் :


வடநாட்டிற்க்கு செல்ல போகிறோம் என்று முடிவான நாள் முதல் கனவில் பவனி வந்த பெண்ணவளை நேருக்கு நேர் பார்த்ததிலே உறைந்திருந்தான் ஜீவா . பார்த்த சில நொடிகளிலே பறந்துவிட்டவளை எட்டிபிடிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் தன் நண்பனிடம் உண்மையை உரைத்தவனின் கண்முன் மீண்டுமாய் வந்து நின்றவளின் கோலத்தில் அவனுக்கு ஏற்பட்ட அதிச்சியை தாண்டி," ஏன் இப்படி ??" என்ற கேள்வியே பிரதானமாய் எழுந்தது.


ஜீவா சுட்டிகாட்டிய பெண்ணை பார்த்த கதிரும் புருவ சுழிப்புடன், "என்னடா ஜீவா இது ?? இந்த பொண்ணு ஏன் இப்படி ??அப்போ ....??" என கேட்டபடி ஜீவாவின் பக்கம் திரும்பியவன் அவனின் முகத்தை பார்த்து தன் பேச்சை பாதியில் நிறுத்தினான்.


"நமஸ்தே பைசாப் !!!வாங்க !!! உங்க வருகைக்காக தான் நாங்க காத்திட்டிருக்கோம் " என மத்திய வயது ஆண் ஒருவர் , வந்தவர்களில் மூத்தவர் போல் இருந்தவரிடம் பவ்வியத்துடன் வாய் கொள்ளா சிரிப்புடன் வரவேற்றார்.


அதை ஆமோதிப்பாய் ஏற்றபடி பதிலுக்கு "ம்ம்ம்....!!! அப்போ சீக்கிரம் ஆரம்பிங்க, அடுத்த வேலையை பார்க்க போகனும்ல " என்ற அந்த மனிதரின் தோரணையும் , அவர் வந்தபிறகான மற்றவர்களின் பவ்யமும், அவரின் பேச்சிற்க்கு அங்கு மறுபேச்சே கிடையாது என்பதை தெளிவாய் உணர்த்தியது.


கண்ணை கூசும் வண்ணத்தில் அவர் அணிந்திருந்த ஆடையும், கைகளை பின்னால் கட்டியபடி நின்றிருந்த முறுக்கையும் பார்த்து ," ஆன்ட்டி !!யார் இவர்??" என அபிலஷ்யா தன் அருகே இருந்த பெண்மணியிடம் ராஜஷஸ்தானியில் கேட்டாள்.


அவரும் அங்கு வந்த ஒவ்வொருவரையும் பற்றி விரிவாய் சொல்ல , அபிலஷ்யா அதை தமிழில் தன் நண்பர்களுக்கு சொன்னாள்.


பெரியமனித தோரணையில் பயமுறுத்தும் பார்வையுடன் , கூர்மையாய் அனைவரையும் அளவிட்டபடி முன்னால் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர் "பகத்தூர் பட்டேலா " ,மீத்தூரின் ராஜாவாய் பிறந்தவர் இன்றுவரை தன் கட்டுபாட்டிலே அவ்வூர் மக்களை வைத்திருந்தார்.


அவரின் அருகில் மீசையை முறுக்கியபடி நாற்பது வயதிற்கான தோற்றத்தில் நிற்பவர் ,"பகத்தூர் பட்டேலாவின் சகோதரர் ராகதீப் பட்டேலா".


அவர்களின் பின் வாட்டசாட்டமாய் தடியன்கள் சிலர் நிற்க , சற்று இடைவெளிவிட்டு அவர்கள் பின் பட்டேலா வீட்டு மருமகள்கள் நின்றிருந்தனர்.


நால்வரில் மூத்தவராய் சாந்தமான முகத்துடன் பேரரளி வண்ண சேலையை தங்களின் முறைபடி கட்டி தலையில் முக்காடியிட்டு நின்றவர் ,"உதந்திகா " ,பகத்தூர் பட்டேலாவின் மனைவி .


இரண்டவதாய் அவரின் அருகே சிரித்த முகத்துடன் நின்றிருந்தவர்,"ராகவதி" , ராகதீப் பட்டேலாவின் முதல் மனைவி.


அவர்கள் இருவருக்கு பின் , கடுகடுத்த முகத்துடன் அடிக்கும் டிசம்பர் மலரின் வண்ண, ஜொலிஜொலிக்கும் சேலையில் அதித அலங்காரத்தில் முகத்தில் கர்வத்துடன் நின்றிருந்தவர் ,"மிளிரா" , ராகதீப் பட்டேலாவின் ஆசை மனைவி .


அனைத்திலும் ராமலக்ஷ்மனனாய் இருக்கும் பகத்தூர் மற்றும் ராகதீப்பட்டேலா இருவரும் முரண்பட்டு நின்றது மிளிராவின் விஷயத்தில் தான். அண்ணணை முதல் முறையாய் எதிர்த்து தான் மிளிராவை கைப்பிடித்தார் ராகதீப் பட்டேலா .


இவர்களின் மூவருக்கும் பின்னே முகத்தில் மகிழ்ச்சி என்பது துளியும் இன்றி அவளின் பிறை நெற்றியை போல் , முகமும் வெறுமையாய் உணர்வுகள் அற்று இருக்க , அவள் அணிந்திருந்த தூய ஆம்பல் வண்ண சேலையும் வெறுமையை தரித்திருந்தது. அவள் பெயர் "ஜும்னா" , பகத்தூர் -உதந்திகாவின் மருமகள் .


அபிலஷ்யா , அப்பெண்மணி தன்னிடம் சொன்னதுடன் தனக்கேற்றபடி இரண்டு மூன்று வார்த்தைகள் சேர்த்து அனைவருக்கும் விவரித்தாள். இறுதியாய் "ஜும்னா"-வை பற்றிய பேச்சில் உடல் இறுகிய ஜீவா கதிரின் கைகளை பற்றினான். என்னவென்றறியா இயலாமையில் அவனின் கண்கள் கலங்கியது.


கலங்கிய கண்களை சிமிட்டியபடி ஜும்னாவை பார்வையால் தொடர்ந்தபடி தனக்குள்ளே கேள்விகளை அடுக்கினான்.


" ஏன் பெண்ணே ??இதற்கா என்னை வரவைத்தாய்? இதை காணத் தானா??....கல்லும் மண்ணுமாய் காலங்களின் கோலங்களை மட்டுமே சிந்தித்து வெறுமையாய் கடந்துசெல்லும் கனவுகளில் சிலநாட்களிலே வண்ணம் தீட்டிய பட்டமாய் படபடத்து பறந்து என் நெஞ்சை தீண்டியவளே , எல்லை வகுக்காமல் எனக்குள் நானே அறியாமல் உன் வண்ணத்தை குழைத்து, மீண்டும்மீண்டுமாய் என்னுள் தோன்றி என் சுவசமானவளே ...இன்று மூர்ச்சையாகி நிற்கிறேனடி என் மூச்சுகாத்து எவரோ ஒருவரின் சுவாசகாற்றாய் , நூலறுந்த பட்டமாய் வண்ணமிழந்து நிற்பதை பார்த்து ..."


-காதல் வலியானது.
 

Thoshi

New member
Vannangal Writer
Messages
7
Reaction score
4
Points
3
அத்தியாயம் 5 :


"ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்னை பார்க்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில"


மஜ்ஜூர் :


"அன்வித் !!! எங்க இருக்க ?? சீக்கிரம் வா " என அவ்வீட்டின் நடுவில் நின்று கத்தி கொண்டிருந்தான் விக்ரம் .


அவனின் சத்தத்தில் அறையில் இருந்து வெளியில் வந்த மாதுரி அவனை தலை முதல் கால் வரை ஆசையாய் பார்த்தார். தானாய் அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவர் தன் அருகில் கேட்ட கனைப்பில் எடுத்துவைத்த பாதத்தை மீண்டும் பின்னால் இழுத்துக் கொண்டார்.


பயந்தபடியே அருகே திரும்பியவரை உருத்து விழித்தபடி அங்கு நின்றிருந்தார் ராஜ்பவுத்முண்டேலா . கையிலிருந்த காப்பை ஒருமுறை ஏற்றிவிட்டுக் கொண்டவர் மாதுரியை பார்த்த பார்வையில் இன்றைய இரவு தனக்கு கொடுமையாய் அமையும் என்பதை அவள் தெளிவாய் உணர்ந்ததில் பயத்தில் கைகள் ஜில்லிட்டது.


அதை குரோதமாய் பார்த்த ராஜ்பவுத் முண்டேலா அவரை மேலும் நடுங்க வைக்க அங்கிருந்தே "விக்ரம்" என அமர்த்தலாய் அழைத்தார்.


ஆனால் அவர் பக்கம் திரும்பியவனின் முகத்தில் அவர் எதிர்பார்த்த பயம் இல்லாமல் எப்பொழுதும் போல் உதட்டில் ஒட்டிய சிரிப்புடன் வந்த விக்ரமை பார்த்து நாஜ்பவுத்முண்டேலாவின் புருவம் சுருங்க , மாதுரியோ அவனின் சிரிப்பையே கண்கள் கலங்க பார்த்தார்.


விக்ரம் அருகில் வந்ததில் தன் முகத்தை சிரித்தபடி வைத்த ராஜ்பவுத்,"எங்க தயாராகுற விக்ரம் ??" எனக் கேட்டார்.


"கோவிலுக்கு தான் பைசாப்...!!! அதுவுமில்லாம நான் இன்னும் இந்த உரை முழுசா சுத்தி பார்க்கைலைல அதான் அன்வித் கூட முதல்ல கோவில் போய்ட்டு அப்படியே ஊரை சுத்தி பார்க்கலாம்னு பிளான்".


" கோவில் போய்ட்டு அப்படியே வேற எங்கையும் போக கூடாது கண்ணா !! நீ வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போ " என ராஜ்பவுத்தை மறந்து மாதுரி சட்டென சொல்லிவிட்டார்.


அவர் பக்கம் திரும்பிய விக்ரம் ,"ஓ!! சரிதான் மா ....நான் நீங்க சொன்னமாதிரியே வீட்டுக்கு வந்துட்டு அப்றம் போறேன் " என்று சிரிப்பு மாறாமல் சொல்லியவனின் தாடையை வாஞ்சையாய் பற்றிய மாதுரி அவனின் முகத்தையே ஆசையாய் பார்த்தார்.


"அறிவில்லையாடா உனக்கு " என்ற ராஜ்பவுத்தின் அதட்டலை தொடர்ந்த பட்டென்ற சத்தத்தில் கைகளை பின்இழுத்தபடி நடுங்கியவரின் விழி அங்கு தன்னையே பார்வையால் எரித்தபடி நின்றிருந்தவரை பார்த்தது.


ஆசையாய் முகத்தை தடவியவர் பயந்து பின்வாங்கியதில் , விக்ரம் ராஜ்பவுத்தின் புறம் திரும்ப அத்தனை நேரம் கோபத்தை கக்கிய அவரின் விழிகள் சாந்தத்துடன் அவனை பார்த்தது. அவரின் அருகில் வேலையாள் கன்னத்தில் கைவைத்தபடி நின்றிருந்தான்.


" ஒன்னுமில்ல விக்ரம்....!! அதுங்கதுங்க தன்னோட இடம் என்ன ?? எங்க இருக்கோம்னு புரியாம நடந்துக்குறாங்க ..அப்போஅப்போ இப்படி தட்டுனாதான் அதுங்களுக்கு புரியும் " என்றவரின் பேச்சு விக்ரமிற்க்கு வேலைகாரரை சொல்வது போல் தோன்றினாலும் அவர் நிஜத்தில் சொல்லியது மாதுரிக்கு தான் என்பது அங்கிருந்த மற்ற மூவருக்குமே தெரிந்திருந்தது.


" ஆனா பைசப் !!! அவங்களும் மனுஷங்க தான் அதனால பொறுமையா எடுத்து சொன்னாலே போதும்னு நினைக்கிறேன் " என விக்ரம் அவரின் செயல் பிடிக்கவில்லை என்பதை சிரிப்புடனே மறைமுகமாய் எடுத்துரைத்தான்.


"அச்சோ !!! ஏன் இப்படி பேசுற கண்ணா ??" என மனதிற்க்குள் பயந்த மாதுரி , ராஜ்பவுத் முகத்தை பார்க்க அவரோ விக்ரமிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே இருந்தான்.


"விக்ரம்மைய்யா நீங்க எதுக்காக பைசப் கிட்ட அப்படி பேசுனீங்க ?? இனி அப்படி பண்ணாதீங்க " என அன்வித் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி கோவில் வருவதற்க்குள் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிவிட்டான்.


" அட !!! என்ன அன்வித் நீ ....அவர் செஞ்சது தப்புதான?? அவர் யாரு மத்தவங்களை அடிக்கிறதுக்கு ??இத நான் அப்படியே கேக்க எவ்வளவு நேரம் ஆகும் ? ஆனா நான் எவ்வளவு பொறுமையா சொல்லிட்டு வந்திருக்கேன் அதுக்கே நீ அங்க இருந்து கிளம்புனதுல இருந்து ஏன் அப்படி சொன்னீங்கனு என் காது கிழிற அளவுக்கு பேசி தள்ளுற " என சிரித்தான்.


அவசரமாய் அவனின் வாயை பொத்திய அன்வித்," அச்சோ இனி நான் வாயை பிளாஸ்டர் போட்டாச்சி ஒட்டிக்கிறேன் நீங்க இந்த மாதிரி இனி சத்தமா அவரை பத்தி பேசி வைக்காதீங்க " என்றான்.


"இவங்க எல்லாம் ஏன் இப்படி பைசாப் கிட்ட பயபுட்றாங்க ?? பைசாப் என்னதான் என்கிட்ட சிரிச்சு பேசுனாலும் அதை ஏன் என்னால ஏத்துக்க முடியலை ?? அப்றம் அந்த அம்மா " என மாதுரியை நினைத்தவனின் இதழில் புன்னகை அழகாய் ஒட்டிக் கொண்டது.


அவரை பற்றி அன்வித்திடம் கேட்கலாம் என நினைத்தவனின் விழியில் தென்பட்டாள் அப்பொழுது தான் கோவிலுக்குள் நுழைந்த ஆதிஷா .


இவன் அவளிடம் செல்வதற்க்குள்ளாகவே அவளுடன் வந்த பெண்மணி அவளையும் இழுத்துக்கொண்டு இவனிடம் வந்தார்.


"விக்ரம் பையா !!! இது நம்ப ஆதிஷா , நம்ப ஊர்ல எதோ ஆராய்ச்சினு வந்திருக்காங்க.எங்க வீட்ல தான் தங்கிருக்காங்க " என வாயெல்லாம் பல்லாய் அவனிடம் அவளை பற்றி ஒப்பித்தவள் ," ஆதிமா !! இவர் தான் விக்ரம் பையா ...நம்ப பைசாப் வீட்டுல இருப்பாரு " என அவளுக்கும் அவனை அறிமுக படுத்தினாள்.


அவள் சொல்லியதில் உள்ளுக்குள் அதிர்ந்த ஆதிஷா ," பைசாப் வீட்டுலையா ??? இவர் அவரோட பையனா ??" எனக் கேட்டவள் அருகிலிருந்தவளின் பதிலுக்காய் தொண்டைகுழி ஏறியிறங்க காத்திருந்தாள்.


"இல்லை இல்லை ஆதி !!! இவர் அவரோட பிள்ளையா இருந்தா நம்ப இவர் பக்கத்துல கூட நின்னிருக்க முடியாதே , இவர் நம்ப அம்பரிஷ் ஐயாவோட பையன் சின்னதுல இருந்து அவரோட வளர்ந்தவரு எப்பவாவது தான் இங்க வருவாரு " என்றதில் ஆதிஷாவிற்க்கு அவளையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சு வந்தது.


அவர்கள் பேசுவதில் குறுக்கிடாமல் ஆதிஷாவையே பார்த்தபடி நின்றிருந்த விக்ரமிற்க்கு , தான் ராஜ்பவுத்தின் மகன் என்றால் இவள் ஏன் பயப்பட வேண்டும் ? இல்லை அம்பரிஷோட மகன்னு சொன்னதுக்கு ஏன் இவ முகம் இப்படி மாறனும் ??" என அவளின் முகபாவனைகளையே பார்த்தான்.


அப்பெண்மணி சொன்னதில் மகிழ்ந்த ஆதிஷா நிமிர்ந்து விக்ரமை பார்த்து அழகாய் புன்னகைக்க, அச்சிரிப்பில் இத்தனை நேரம் தனக்குள் ஓடிய சிந்தனைகளை எங்கையோ சிதறவிட்ட விக்ரம் அவளின் இதழ்களை பார்த்தபடியே தானும் புன்னகைத்தான்.


மூச்சுகாத்து 5 :


"தூதுவிட்ட அலை அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே
தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே
வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா"


மீத்பூர் :


அழகின் திருஉருவாய் உணர்வின்றி ஊமையாய் தலைகுனிந்தபடி சபையில் நின்றிருந்த ஜூம்னாவை, ஜீவாவின் வலி மிகுந்த கண்கள் கட்டி இழுத்தது.


நிமிர்ந்து பார்த்தவளின் முன் நின்றிருந்தவனின் விழிகள் இரண்டும் அவளிடம் கேட்ட ,"ஏன் இப்படி ??" என்ற கேள்வியில் அவளின் மனமும் அவளிடம் அதையே தான் கேட்டது. "ஏன் இப்படி ??"


அப்படி ஒரு வலியை அவனின் இருவிழிகள் வெளிபடுத்தியது.அவன் அவளை பார்த்து முழுதாய் ஐந்து நிமிடங்கள் இருக்குமா ?? அதற்க்குள் ஏன் அந்த வலி அவனின் கண்களில் ??


"யார் இவன் ?? இவனின் பார்வை ஏன் என்னை அசைக்கிறது?? சில நிமிடங்கள் முன் இவன் என்னை பார்த்த பார்வையில் எதிர்பாரா அதிர்ச்சியும் , பரவசமும் இருந்ததே அது ஏன் ? இப்பொழுது இவனின் விழிகள் கேட்கும் கேள்வி என் தற்போதைய கோலத்தினாலா..ஆனால் ஏன் ??"


-என ஜீவாவின் "ஏன் " என்ற ஒற்றை பார்வை , ஜூம்னாவின் மனதில் "ஏன் " என்று ஆயிரம்ஆயிரம் கேள்விகளை சரசரவென எழுப்பியது.


தன் நிலை மறந்து ஜீவாவிடம் பார்வையை பதித்திருந்தவளின் உடல் சிறிதாய் தூக்கிபோட்டது திடிரென கேட்ட பெரும் சத்தத்தில்.


என்ன நேர்ந்தது என்றே புரியாமல் நம் தஞ்சைமண்ணின் பிள்ளைகள் தரையில் தெரித்திருந்த ரத்தத்தில் பயந்து தானாய் பின்வாங்கி ஒன்றாய் நின்றனர். அவர்கள் மட்டுமே அப்படி நின்றனர் ,அங்கிருந்த மற்ற ஊரார் அனைவரும் எதுவும் நடக்காதபடி கைகட்டி தலைகுனிந்து நின்றனர்.


அங்கு இத்தனை நேரம் இருந்த கலகலப்பு , ஆராவாரம் அனைத்தும் கலைந்து பேரமைதி இடம்பெற்றிருந்தது
பகத்தூர் பட்டேலை முதலில் வரவேற்ற மனிதர் இப்பொழுது நட்டநடுவில் நடுநெற்றியில் தோட்டா பாய்ந்து இறந்துகிடக்க , அருகில் ஒரு பெண்மணி கழுத்தறுப்பட்டு கிடந்தார்.


ஜூம்னாவிடம் நிலைத்திருந்த ஜீவா , அருகே திரும்பி கதிரை பார்க்க , அவனின் பார்வையோ அங்கு ரௌத்திரத்துடன் நின்றிருந்த பகத்தூர்பட்டேலாவையும், ரதகவ்தீப்பையும் சுட்டியது.


"இவரா ?? ஆனால் எதற்காக ??" என்று ஜீவாவிற்க்குள் தோன்றிய கேள்வி அவனுள்ளே மறித்துபோக வைத்து , அதன் பதிலாய் அவனையே சுட்டியது ஜூம்னாவின் பார்வை.


"நீ தான் ...உன்னால் தான் அனைத்தும் " ஜூம்னாவின் ஈரவிழிகள் ,ஜீவாவின் மேல் பழி சுமத்தி பின் கீழே மடிந்து விழுந்திருந்தவர்களின் புறம் திரும்பியது.


இவர்களின் பார்வை பரிமாற்றம் எவரும் அறியாமல் நடக்க , ஜூம்னாவின் பழிசொல்லுக்கான காரணம் புரியாமல் ஜீவாவின் மனம் குழம்ப , பகத்தூர் பட்டேலா இவர்கள் பக்கம் திரும்பினார்.


"பைசாப் ....!! இவங்க கீழ இந்தியால இருந்து வந்திருக்காங்க, தமிழ்நாட்ல இருந்து எதோ ஆராய்ச்சி படிப்புனு சொல்லி வந்திருக்காங்க " அவரின் பார்வையை புரிந்த ஒருவர் பதிலளித்தார்.


நம் மாணவர்கள் அனைவரையும் தன் ஈட்டி கண்களால் அளவெடுத்தவர்," தமிழ்நாடு ...ம்ம்ம்ம் ...நம்பளை போலவே சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த அருமையான மாநிலம் தான் . இவங்களுக்கான எல்லா ஏற்பாடையும் நல்லபடியா கவனிக்க நம்ப உறையுள்ள (வீடு) இருந்து ஆள வரசொல்றேன் " என்றவர் , தன் ஆட்களுக்கு கண்காட்டி சென்றார்.


அங்கு ஒரு மரணம் நிகழ்ந்ததா என ஐயப்படுவது போல் அவர் இயல்பாய் நகர , அவரின் பின்னே வீட்டின் பெண்மணிகளும் நகர்ந்தனர்.


அவர்கள் அனைவரும் சென்றபின் ராகதீப் பட்டேலா ," யாருடா அங்க...??வந்து இந்த குப்பையை சுத்தம்பண்ணி விடு " என்றவரின் குரலில் திபுதிபுவென நாலைந்துபேர் வந்து இறந்துகிடந்தவர்களின் உடலை அப்புறபடுத்தி அவ்விடத்தை சுத்தபடுத்தினர்.


அமைதியாய் அதை மேற்பார்வையிட்டபடி சுற்றிலும் கவனித்த ராகதீப்பீன் பார்வையில் ஜீவா விழ ,அவனின் கவனம் வாயிற்புறம் இருந்ததில் அவரின் தடித்த புருவங்கள் இரண்டும் சுருங்கியது.


" தன்வீர் !!! "என்று ஒருவரை அழைத்தவர், " நீதான இங்க இவங்களுக்கு எல்லாம் தயார் பண்ணி குடுக்குறது அவங்ககிட்ட நம்ப ஊரை பத்தி சொல்லிவை " என சொன்னவர் , ஜீவாவை உறுத்து விழித்தபடி மாணவர்களின் அருகில் வந்தார்.


"எதோ ஆராய்ச்சி வேலைனு வந்திருக்கீங்க தான, அதை மட்டும் பார்க்கனும் அதை விட்டுட்டு வேற எதையாவது ஆராய்ச்சி பண்ணுறேன்னு ஆரம்பிச்சிங்க உங்க தலையில்லாத முண்டம் மட்டும் தான் தமிழ்நாடு போய்சேரும் ...ஜாக்கிரதை ...உம்ம் " என உறுமினார்.


"அடேய் அந்த பல்லுதேக்காத பால்டப்பாவை அந்தபக்கம் தள்ளிநிக்க சொல்லுடா , உறுமுறேன்ற பேர்ல ஊத்தவாய் எச்சியை எல்லாம் மேலே தெறிக்குறாரு " என்ற கதிரின் பேச்சில் விட்டால் அவனை கடித்து தின்றுவிடுவது போல் முறைத்தாள் அபிலஷ்யா.


அவளுக்கு ராகதீப் பட்டேலாவின் பார்வையில் சற்றுமுன் நடந்த ஜீவாவின் செயல் நியாபகம் வந்து மிரட்ட ,அதற்க்கு ஏதுவாய் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாய் சொல்லியதில் மிரண்டிருந்தவள் கதிரிடம் அதை கோபமாய் பார்வையில் கடத்தினாள்.


அவர்களிடம் உறுமிய ராகதீப்பட்டேலா கிளம்பியபின் அவர்களை உணவுண்ண அழைத்து சென்ற நேரத்தில் அபிலஷ்யா ," எருமமாடு !! அவர் என்ன சொன்னாருனு தெரியாம நீ பாட்டுக்கு லூசு மாதிரி பேசி வைக்குற " என கதிரை காய்ச்சினாள்.அதன் பின் அவர் மிரட்டியதை அனைவருக்கும் பொதுவாய் சொன்னாலும் அவள் பார்வை ஜீவாவை குற்றம் சாட்டியது.


அதில் ஜீவா தலையை குனிய, நண்பனின் அந்நிலை பொறுக்காத கதிர் ," ப்ச் ...!! அதவிடு...ஆமா எதுக்கு அந்த வெள்ளைதக்காளியை அந்த நெட்டைகொக்கு சுட்டு தள்ளுனான் ..அந்த வெள்ளை தக்காளி பாசமா தான அவரை வரவேற்றார் ?வந்தாங்க கொன்னாங்க கிளம்பிட்டாங்க அப்படி அவங்க என்ன பேசிகிட்டாங்க ?? அத முதல்ல சொல்லு ??" என பேச்சை மாற்றினான்.


"அதுலாம் எனக்கு சரியா தெரியலை அவங்க பேசுனதுல இருந்து யாரையோ காணூம்னு புரிஞ்சிது அது அந்த அவர்தான் காரணும்னு சுட்டுட்டதா பேசுனாங்க ஆனா யாரை காணும்னுலாம் எதுவும் சொல்லலை " என்றாள்.


அவளின் பேச்சில் கவனத்தை வைத்திருந்த ஜீவாவின் மனகண்ணில் , தன் முச்சுகாத்தவளின் மாறுபட்ட வேடங்களே மாறி மாறி தோன்றியது.


அவனுள் தினம் தோன்றி அவனை உயிரோடு சுகமாய் வதைத்த மைவிழிகளும் , செந்சாந்து நெற்றியும் இன்று வெறுமையாய் அவன் உயிர்தீண்ட , அதன் பொருள் தந்த வலியில் திணறியவன் சுவாசம் தடுமாறியதில் தன் மூச்சுகாத்திற்காய் ஏங்கினான்.


- காதல் வித்தியாசமானது...
 
Status
Not open for further replies.
Top Bottom