வேல்விழியின் குளிர் நிலவோ ?? 31:
“என்ன சொல்றிங்க?” என்றான் அதிர்ச்சியாய் அர்ஜுன்.
“உண்மையை தான் சொல்றேன். வெளிய யாருக்கும் தெரியாது.” என்றாள் தீக்க்ஷிலா.
“உங்களுக்கு எப்படி தெரியும்? அவர் இப்ப எங்க இருக்கார்?” என்றான் அர்ஜுன்.
“நீங்க இருக்கிற அதே ஜமீன் பங்களால தான். நமக்கு தெரியாம அங்க நிறைய ரகசிய அறைகள் இருக்கு. ஒரு சில குறிப்பிட்டவங்களை தவிர யாருக்கும் அதுக்கான வழி தெரியாது.” என்றாள்.
“அதெப்படிங்க? ஒருத்தரால எவ்ளோ நாள் தான் வெளி உலகத்தை பார்க்காம இருக்க முடியும்? எதுக்காக அவர் அங்க இருக்கனும்?” என்றான் தொடர்ந்து.
“நீங்க நினைக்கிற மாதிரி ரகசிய அறைன்னவுடனே ஏதோ இருட்டு ரூம்ன்னு நினைக்காதிங்க. எல்லா வசதிகளோடயும் கூடிய லக்சரி ரூம். அவர் போலீஸ்க்கு மறைஞ்சு தான் அங்க இருக்குறதா கேள்விப்பட்டேன்.” என்றாள்.
“யாருக்கும் தெரியாதுன்னு சொல்றிங்க. அப்புறம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்றான் அர்ஜுன்.
“நான் அங்க வேலை செயறதால ஒரு தடவை அவங்க பேசிக்கிறத கேட்க நேர்ந்தது. அதோட நிலா அவங்கப்பாவை சாவடிச்சது அவர்தான்னு இங்க இருக்க இன்ஸ்பெக்டர் கண்டுபிடிச்சிட்டார்.
அதனால அவர் அரெஸ்ட் ஆகறதை தடுக்க இப்படி பண்ணிட்டாங்க. ஊர்காரங்க முன்னாடி அவர் கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டதா செட் பண்ணிட்டாங்க. இங்க எல்லா வசதியோடையும் உள்ள ஜாலியா இருக்காரு.” என்றாள் தீக்க்ஷிலா.
“இது என்ன முட்டாள்தனமா இருக்கு? செத்துட்டதா நடிச்சு உயிரோட இருந்தா திரும்பி வெளிய வரும்போது மறுபடியும் அரெஸ்ட் பண்ணமாட்டாங்களா?” என்றான் அர்ஜுன்.
“கண்டிப்பா அரெஸ்ட் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கு அந்த போலிஸ் காரரும் உயிரோட இருக்கனும் இல்ல?” என்றாள்
“என்ன சொல்றிங்க?” என்றான் மீண்டும் அதிர்ச்சியாய்.
“ஆமாம். இவர் இறந்துட்டதா நாடகம் போட்டுட்டு அந்த இன்ஸ்பெக்டரை கொன்னுட்டாங்க. கலெக்ட் பண்ண எவிடென்சையும் அழிச்சிட்டாங்க.” என்றாள் தீக்க்ஷிலா.
“அப்புறம் எப்படி இந்த வர்மதேவனை நல்லவன்னு சொல்றிங்க. இத்தனை கொலை பண்றானே?” என்றான் அர்ஜுன்.
“இதுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க இது வர்மதேவனுடைய அப்பாவோட வேலை. வேலன் தான் இந்த குடும்பத்து வாரிசுன்னு கண்டுபிடிச்சி அங்க வரைக்கும் ஆள் அனுப்பி கொல்ல திட்டம்போட்டதுவரை அவர் தான் செஞ்சாரு.” என்றாள் தீக்ஷிலா.
“எப்படி அவ்வளவு தெளிவா சொல்றிங்க?” என்றான் அர்ஜுன்.
“அவங்கப்பா என்ன சொன்னாலும் செய்வார். ஆனா, இந்த சொத்து விஷயமோ உங்க எல்லாரை பத்தியோ பேச்செடுத்தா அங்க இருக்க மாட்டாரு வர்மதேவன் அய்யா. அவருக்கு நம்பிக்கையான ஆளுங்களை வச்சி எல்லாத்தையும் முடிச்சிருவாரு அவங்கப்பா.” என்றாள்.
“அப்போ அவரு நம்மளுக்கு ஹெல்ப் பண்ணுவாரா?” என்றான் அர்ஜுன்.
“நிச்சியமா ஹெல்ப் பண்ணுவாரு. ஆனா, அதை வாங்கிக்கறதுக்கு நீங்க இருக்க மாட்டிங்க. ஐயாவுடைய ஆளுங்க உங்களை முடிச்சிருவாங்க. சின்னையாவை அவ்ளோ கண்காணிக்கிறாங்க” என்றாள்.
“அப்போ.. இப்போ என்னை விட அவருக்கு தான் பாதுகாப்பு தேவைப்படும் போல இருக்கு” என்று சிரித்தான் அர்ஜுன்.
கடைக்கு பேசியபடி சென்று துணி வாங்கி வந்துட்டாங்க.
சரியான தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.
ஏனென்றால், சொத்து பத்திரத்தை மட்டும் மீட்டு வருவதில்லை இப்பொழுது அவனுக்கு கொடுக்க பட்டிருக்கும் வேலை.
பிரதியின் தந்தையையும் காப்பாத்த வேண்டும். முதலில் அவர் எங்கு இருக்கிறாரென்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே வீட்டிக்கு வந்தபின். வேலனின் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவித்து கொண்டிருந்தனர் மூவரும்.
பிரதி எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் அவளின் அறையே கதியென கிடந்தாள்.
“டேய் வேலா நில்லு!” என்றார் அலுவலகத்தில் இருந்து வந்தவனை.
“என்னம்மா?” என்றான்.
“இங்க என்னதான்டா நடக்குது?” என்றார் வேதனையாய்.
“என்னம்மா?” என்றான் மெதுவாய்.
“நல்லா ஓடி திரிஞ்சிட்டு இருந்த பொண்ணை நான் தான் உன்னை பார்க்க அனுப்பினேன். அந்த புள்ள இப்படி நடக்க முடியாம அடுத்தவங்க உதவிய நாடி உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கா. அடுத்து உங்கப்பாவை கொன்னவ அந்த பிரதி. அவளை கூட்டிட்டு வந்து இந்த வீட்ல வெச்சிருக்க? இதுக்கெல்லாம் என்ன காரணம்னு எனக்கு தெரியனும்” என்றார்.
“அம்மா! “ என்று அவன் வாய் திறக்கும் முன் “மாமா” என்றாள் நிலா உள்ளே இருந்து.
“இதோ வரேன் நிலா” என்று அவரை பார்த்தபடி அவள் இருக்கும் அறை நோக்கி ஓடினான்.
“கூப்பிட்றா பாரு உன் பொண்டாட்டி ஓடு. ஒடுங்க ரெண்டு பேரும் எவ்ளோ நாளைக்கு தான் என்கிட்டே உண்மைய சொல்லாம ஓடுவிங்கன்னு பார்க்கறேன்” என்று தன்னறைக்கு சென்று புகுந்து கொண்டார்.
“நல்ல வேலை நிலா. நீ கூப்பிடலைன்னா நான் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருந்தேன்.” என்றான் வேலன்.
“எனக்கு கேட்டுச்சு மாமா. அதனால தான் கூப்பிட்டேன். நம்ம வேலை முடியற வரைக்கும் அத்தைகிட்ட இதை பத்தி சொல்லவேண்டாம். அவங்களையும் பாதுகாக்கணும் அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சுடுங்க. அவங்க பயபடுவாங்க.” என்றாள்.
“சரி” என்றான் வேலன்.
“ஆனா பிரதியை பத்தி கேட்டுட்டே இருக்காங்க. என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு.” என்றான் வேலன் யோசனையாய்.
“அதைபத்தின கவலைய விடுங்க நான் அத்தைகிட்ட பேசிக்கிறேன்.” என்றாள் நிலா.
“சரி. நீ சாப்பிட்டியா?” என்றான்.
“இல்லை. நீங்க இல்லாம நான் என்னைக்கு சாப்பிட்டிருக்கேன்” என்றவுடன் அவளின் அருகில் வந்தவன்.
“சாரி டா. நான் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நீ சாப்பிட்டுருப்பேன்னு நினைச்சேன். ஏன் அம்மா உனக்கு இவ்ளோ நேரம் சாப்பாடு தராம என்ன பண்றாங்க? அம்மா... அம்மா...” என்றான் சத்தமாக.
“ஐயோ மாமா. இப்போ எதுக்கு அத்தையை கூப்பிட்றிங்க?” என்றாள் நிலாதென்றல்.
“நீ சும்மா இரு” என்றவன் மீண்டும் “அம்மா ... அம்மா...” என்றான்.
“என்னடா எதுக்கு இப்படி அம்மா அம்மான்னு ஏலம் போடாத குறையா கத்திகிட்டு இருக்க?” என்று உள்ளே வந்தார்.
“அம்மா நான் வர லேட் ஆகிடுச்சு. நீங்க நிலாவுக்கு சாப்பாடு கொடுத்திருக்கலாம்ல? மாத்திரை போடறது இவ்ளோ நேரம் சாப்பிடாம இருந்தா என்ன ஆகும்?” என்றான் மெதுவாய்.
“ஆமா டா... நான் தான் உன் பொண்டாட்டியை சாப்பிட வேணாம்னு சொல்றேனாக்கும். நீ என்ன மாய மந்திரம் போட்டியோ?? எத்தனை தடவை சாப்பாட்டு தட்டை தூக்கிட்டு வரது. மாமா வந்தப்புறம் சாபிட்றேன்.. மாமா வந்தப்புறம் சாபிட்றேன்னு ஒரே புராணத்தையே தான் கடந்த ஒரு மணி நேரமா உன் பொண்டாட்டி பாடிட்டு இருக்கா. அங்க கேக்றதை விட்டுட்டு என்கிட்ட எகிர்ற? போடா வேலைய பார்த்துகிட்டு. என்ன பார்த்தா எப்படி இருக்கு ரெண்டு பேருக்கும்? நீங்க அடிக்கிற லூட்டி தாங்க முடியலைடா சாமி. எப்படியோ போய் தொலைங்க. நேரமாச்சு சாப்பாடு கொடுத்து விட்றேன் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று நிலாவை பார்த்து நமுட்டு சிரிப்பு விட்டு போனார்.
‘அத்தை.... மாட்டி விட்டுட்டியா? இப்போ உனக்கு சந்தோஷமா? உன் பையனுக்கு மேல இருக்க நீ. எனக்கு உடம்பு சரியாகட்டும் தனியா மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு’ என்று மனதிற்குள் சேட்டை செய்துவிட்டு போகும் தன் அத்தையை அர்ச்சித்தவள் அடுத்து வேலனிடம் திட்டு வாங்க ரெடியானாள்.
அம்மா கூறிவிட்டு சென்றதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் திரும்பி அவளை முறைத்தான்.
“என்னதிது? உடம்பு முடியலைன்னா கூட அடங்க மாட்டியா நீ? சேட்டை ரொம்ப ஓவரா பண்றடி நீ. அம்மா தான் சாப்பாடு கொடுத்தாங்கல்ல சாப்பிட வேண்டியது தானே?” என்றான் இடுப்பில் கை வைத்து முறைத்தபடி.
“இப்ப எதுக்கு இப்படி முறைக்கிறிங்க? இந்த கொஞ்ச நாளா உன் கூட சாப்பிட்டே பழகிடுச்சு. அதான் என் அத்தான் வந்தப்புறம் சாப்பிட்றேன்னு சொன்னேன். அதை போய் இந்த கஸ்தூரி இப்படி போட்டு கொடுத்திடுச்சு” என்றாள் கண்களில் சின்ன குழந்தையின் கெஞ்சல் கொண்டு.
சத்தமாக சிரித்த வேலன் சென்று தங்கள் அறையின் கதவை சாத்திவிட்டு வந்து அவளின் அருகில் அமர்ந்தான்.
“ஒன்னு என்னை கிட்டே சேர்க்க மாட்டேன்னு வேற ஊருக்கு இல்ல வெளிநாட்டுக்கே துரத்தி விட்டுட்ற? இல்லன்னா உன் அன்பை காட்றேன்ற பேர்ல உன் உயிரையும் கொடுத்து என்னை காப்பாத்துற... அதுவும் இல்லைன்னா நான் வந்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்க... ஏன் இதெல்லாம் பண்றேன்னு கேட்டா பப்பி பேஸ் வெச்சிகிட்டு இவ்ளோ கதை சொல்ற... இப்படில்லாம் பண்ணா எப்படி நான் சும்மா இருக்கிறது சொல்லு...” என்று மெதுவாய் அவளருகில் நெருங்கினான்.
“வேணாம் விழியா? எனக்கு இன்னும் முழுசா குணமாகல... தள்ளி போ... இல்லை அத்தைய கூப்பிடுவேன்” என்றாள் மெதுவாய் அவனை பார்க்காமல்.
“ஏய் கத்திரிக்காய்! முதல்ல என் கண்ணை பார்த்து பேசுடி. வெளிய தௌசன்ட் வாலா மாதிரி வெடிக்கிற. ஆனா, நான் கிட்ட வந்தாமட்டும் புஸ்வானம் மாதிரி புஸ்சுன்னு ஆகிடற?? ஆமா எதுக்கெடுத்தாலும் உங்க அத்தைய கூப்பிடுவேன்னு சொல்றியே?? உங்க அத்தை என்ன உன் பாடிகார்டா?? “ என்று புன்னகைத்தபடி கேட்டான்.
“நான் வந்தாதான் சாப்பிடுவேன்னு சொன்னேல்ல அதான் எனக்கு வேண்டியதை கொடுத்தா தானே நாம சாப்பிட முடியும்” என்று அவளின் இதழின் மேல் தன் விரலை மெதுவாய் படரவிட.
“டக் ...டக்..” என்று சத்தம் வந்தது வாசலில்.
“ஹ்ம்ம் நம்மளுக்குன்னே எங்க இருந்து தான் வந்து சேருதுங்களோ? அவன் இருந்தா தான் இப்படி தொல்லை செஞ்சு என் உயிரை வாங்கினான்னா... இங்கயுமா...??” என்று திட்டிக்கொண்டே சென்று கதவை திறந்தான்.