Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அரி(தாரம்) - Bharani Usha

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
கணவனின் குறிப்பறிந்து பெண்கள் நடக்கும் நம் சமுதாயத்தில், மனைவியின் தேவைகளை, புரிந்து கொண்டு எல்லா கணவர்களும் நடக்கிறார்களா? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதை தான் இந்த அரி(தாரம்).

நான்தான் வசந்தா. இது என்னை பற்றிய கதை.

ஓஒ! கதையல்ல என் வா(ழ்க்)கை.

மனதில் மகிழ்ச்சியும் வாய் முழுக்க பல்லாக ஓடி வந்தார் மணி. குழந்தைக்கு முன் மனைவியை பற்றிய கவலை தான் அவருக்கு. இருப்பினும் அம்மா திட்டுவாளோ என்ற பயம். தயங்கிய படியே அம்மா கல்யாணி எப்படி இருக்கா? என்று இழுத்தார்.

மொதல்ல குழந்தைய பாரு,குளிப்பாட்ட எடுத்துக்கிட்டு போய்டுவாங்க.

சரி,

குழந்தையை பார்த்து விட்டு மனைவியிடம் வந்தார்.

மயக்கத்தில் இருந்தாள் கல்யாணி. தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டார். மயக்கம் தெளிந்து பால் கொடுத்து வழக்கம் போல் பத்திய உணவு உண்டு என்பதோடு பெயர் வைத்தல் என்ற அனைத்து சடங்குகளும் முடிந்தது.

வசந்தா பிறந்ததும் மணிக்கு வரவேண்டிய சொத்துக்கள் அனைத்தும் கேஸ் முடிந்து அவருக்கே வந்தது. தன் வியாபாரத்தை பெரியதாக்கினார். அனைவரும் அவளை அதிர்ஷ்டக்காரி என்றே நம்பினர்.வீட்டில் எவ்வளவோ செல்லம் கொடுத்தாலும் நமது பண்பாடு மாறக் கூடாது என்பதில் மிகச் சரியாக நடந்து கொண்டனர் அவள் பெற்றோர். அவளும் ரொம்ப சமத்து. பெரியவர்கள் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாதவள். குழந்தையாக இருக்கும் போதும் சரி,பெரியவள் ஆன போதும் சரி. பெற்றவர்கள் நல்லது மட்டுமே செய்வார்கள் என்று நம்பினாள்.அதனால் தான் எத்தனையோ பேர் காதல் என்ற பெயரில் இவள் பின்னால் சுற்றினாலும் இவள் யாரையும் கண்ணால் கூட பார்க்கவில்லை. நாட்கள் ஓடின. வசந்தா சிறு வயது முதலே நடனம் கற்றுக் கொண்டாள். அதுவே அவளுக்கு வாழ்க்கை என்றானது. படிப்பு, நடனம் தவிர மகளுக்கு வேறு எந்த தேவை இல்லாத விஷயங்களிலும் நாட்டம் இல்லை.


அரங்கேற்றம் நடந்தது. அந்த புகைப்படம் பெரிய அலங்காரமாக ஹாலில் மாட்டப்பட்டது.

வசந்தா பெரியவள்(பேரழகி) ஆனாள். பார்ப்போரை சுண்டி இழுக்கும் காந்த கண்கள். களையான முகம். தேன் சொரியும் உதடுகள். மெல்லிடை. பார்க்கும்போதே இவள் நடனம் பயில்பவள் என்று கூறி விடலாம். அவள் வாய் பேசுவதற்கு முன் கண்கள் ஆயிரம் மொழி பேசிவிடும்.

வசந்தா யாரிடமும் இதுவரை மயங்கவில்லை . சரி, இனிமேலும் இப்படியே இருக்க முடியுமா?

இவள் பிறந்ததும் இவள் அப்பா வாழக்கையே மாறி விட்டது. இந்த பிறந்த நாளோ இவள் வாழ்க்கையை மாற்ற போகிறது.

வசந்தா பிறந்து இன்றுடன் 23 வருடமாகிறது .ஆம் இன்று அவளுக்கு பிறந்த நாள். அடுத்த வருடம் அவள் கட்டாயம் வேறு ஒருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். அதனால் அவள் பிறந்த நாளை கட்டாயம் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அவள் பெற்றோர் தீர்மானித்திருந்தனர். அதன்படியே பார்ட்டி ஏற்பாடாகியிருந்தது. அதற்கு இவள் தோழிகள் அப்பாவின் நண்பர்கள்,அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், வீட்டின் அருகில் உள்ளவர்கள்,என்று வீடு களை கட்டியது.பார்ட்டியில் பரிசு மழை கொட்டியது. நிறைய பேர் கை குலுக்கி வாழ்த்தி இருந்தாலும் ஒருவரின் கைகுலுக்கல் மட்டும் அவள் கையை விட்டு போகவே இல்லை.


எப்படி போகும்?கை வழியாக மனதில் நுழைந்தவன் கணேஷ்.கணேஷ் மணியின் அலுவகத்தில் வேலை செய்யும் ஜி.எம் நடராஜனின் மகன். இப்போது தான் பெரிய கல்லூரியில் எம்.பி.ஏ முடித்து விட்டு வந்திருக்கிறான். அடுத்த வாரம் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர வேண்டும் .

படிப்புதான் முடிச்சாச்சே, இன்னும் என்ன? சீக்கிரம் ஒரு கல்யாணத்த முடிச்சுட்டா நாங்க பிரீ, இது அப்பா.

ரெண்டு பேர குழந்தைய குடுத்திட்டு நீயும் உன் பொண்டாட்டியும் வேலைக்கு போங்க. நான் பார்த்துக்கறேன் இது அம்மா.

உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? இப்பிடி கல்யாணம் கல்யாணமின்னு புடிங்கி எடுத்தீங்க அப்புறம் நான் வீட்டுக்கே வர மாட்டேன். அதோட இன்னொன்று நல்லா புரிஞ்சுக்க. என் பொண்டாட்டி எனக்கு பொண்டாட்டியா வீட்டுல இருந்தா போதும். இன்னோருத்தன்கிட்ட வேலை செஞ்சு திட்டு வாங்கி அதெல்லாம் வேண்டாம்.

ஏன்டா! இதெல்லாம் இந்த காலத்துல நடக்குற காரியமா? ஏன் வெளில மட்டும் தான் திட்டுவாங்களா? நீ திட்ட மாட்ட?

அதுக்கு? நான் திட்டறதும் அவளை மத்தவங்க திட்டறதும் ஒண்ணா? நா, அவளை திட்டுவேன். அவ என்ன திட்டினா வாங்கிப்பேன். இதெல்லாம் குடும்பத்துல சகஜம். வேலைக்கு போறதுன்னா அப்பிடியா?

சரிடா மகனே, கல்யாணத்துக்கு அப்புறம் திட்டு வாங்க மட்டும் தான் ரெடியா இருக்கியா, இல்ல.. அடிக்கும் ரெடியா?

கொஞ்சம் வெய்ட் பண்ணு , அப்பா கல்யாணத்துக்கு எப்பிடி ரெடியானருன்னு கேட்டு சொல்லறேன்.


அப்பா என்ன சொல்லறது?நானே சொல்லறேன் என்று செல்லமாய் காதை பிடித்து திருகினாள் அன்னை.

இது போன வாரம் பேசிய கணேஷ்.

பார்ட்டிக்கு அடுத்த நாள், அம்மா, என்னம்மா இது பொறுப்பில்லாம இப்படி கீரைய வச்சுட்டு உட்கார்ந்திருக்க?

என்னடா இது கீரை சமைக்கறதுக்குத் தான உட்கார்ந்திருக்கேன். நான் எங்கடா பொறுப்பில்லாம இருக்கேன்?

அம்மா,எல்லாரும் என்ன கொல்லறீங்க? கண்ணை மூடிக் கொண்டு சொன்ன மகனை கண்டு வியப்பாக இருந்தது.

என்னடா சொல்லற.உன்ன யாரு இங்க கொல்லறது? கையில கத்தி கூட இல்லையேடா?

நேற்று பார்ட்டிக்கு அப்புறமாய் தன் மகன் புன்னகையுடனே வந்ததிலிருந்து மகனை யாரோ மயக்கி விட்டாள் என்று சந்திராவிற்கு தெரிந்து விட்டது. (உன் மகன் மயங்கினது தெரியலையா ஆத்தா) இப்போது ஒன்றும் தெரியாதது போல நடந்து கொண்டாள்.

ஏங்க! எனக்கு என்னமோ வசந்தாவா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்.காலையில் கணவனுக்கு கோர்ட்டை மாட்டியபடியே நடந்த கலந்துரையாடல்.

நீ எதையாவது கேட்டு வைக்காதடி. அப்புறம் வேதாளம் முருங்கை மரம் ஏறிட போகுது.

எதுவா இருந்தாலும் அவனே வாய திறக்கட்டும்.

கணேஷுக்கும் சரி,வசந்தாவுக்கும் சரி நிலை கொள்ளவில்லை.

காதல் என்ற பெயரில் கல்லூரியில் நடக்கும் பல விஷயங்களை பார்த்து கணேசனுக்கு பயமே வந்து விட்டது.


வசந்தாவுக்கு., திருமணம் நிச்சயம் செய்த பின், நடுவில் உள்ள நாட்களில் பேசி பழக வேண்டும்.ஆனால் காதல் என்பது நிச்சயம் திருமணத்திற்கு பின்தான்.

இவர்களின் நிலையை விட இரண்டு அம்மாக்களும் தவித்த தவிப்பு. வார்த்தைகளால் சொல்ல முடியாது.

வசந்தா காலை எழுந்தவுடன் படுக்கையில் இருந்த பொக்கேவை பார்த்து விட்டாள் கல்யாணி.யார் இந்த கணேஷ்? மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. காலை சிற்றுண்டி உண்ணும்போதும் சிரித்த முகமாகவே இருந்தாள் வசந்தா. எதுவும் பேசவே இல்லை. நேற்று பார்ட்டியில் களைத்திருப்பதால் இன்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

அது அலுவலகம் அல்ல.ஒரு சங்கீத இசை கூடம். இவள் தோழி நடத்துவது. அங்கு இவள் அலுவலக மேற் பார்வை பார்த்து கொண்டு நடனம் சொல்லி கொடுத்தாள் . தோழிக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் அவளால் சட்டென்று வர முடியவில்லை. எல்லா பொறுப்புகளையும் இவளே பார்க்கும்படி ஆயிற்று. இது அவளுக்கு பிடித்த வேலை என்பதால் ஆர்வத்துடனே செய்து வந்தாள். உதவிக்கு என்று வேறு ஒரு பெண்ணும் இருந்தாள். அவளிடம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று முன்தினமே சொல்லி இருந்ததால் இன்று முழுவதும் கணேசனை பற்றிய கனவிலே மிதக்கலாம்.

ஏம்மா வசந்தா உன்னோட கட்டில்ல இது பார்த்தேன். யாரும்மா இது? உன்னோட காலேஜு பிரண்டா?

அம்மா, இப்படி சட்டுன்னு கேட்டா என்ன சொல்லறது? மனதில் நினைத்துக் கொண்டாள்.

தலையை கோதியபடியே யாருடா கண்ணு அது? உனக்கு புடிச்சிருக்கா? அப்பா கிட்ட விசாரிக்க சொல்லவா?

ம், சரி .தலையை குனிந்து வெட்கத்துடன் சொன்னாள்.அதற்குள் இங்கு நடராஜன் வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணனும் தெரியுமா உனக்கு?

ம்,அது சரி.பொண்ணு யாரு? அம்மா உனக்கு எப்பிடிம்மா தெரியும்?

பின்ன நேத்து பார்ட்டில இருந்து வரும்போது சிரிக்க ஆரம்பிச்சவன், எங்க நிறுத்தின?

எலி என்ன கோமனதோட சுத்துதேன்னு பார்த்தேன்.

நாங்களும் இதல்லாம் கடந்து தான் வந்திருக்கோம்.

அம்மா இப்படி அசிங்கமா பேசாதேன்னு எத்தனை தடவ சொல்லுறது?

சரி சரி, விஷயத்துக்கு வா. அன்று மாலையே மணியும் நடராஜனும் பேசி முடிவெடுத்து விட்டனர். அந்த மாதமே நிச்சயம் அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் விமரிசையாக நடந்தது. இவள் பெங்களூரு செல்வதால் அவள் தோழியே பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாள்.

அன்று இரவு, முதல் இரவு..........

இவளுக்கு சற்று பயம்தான். அம்மாவும் அத்தையும் அலங்காரம் செய்யும்போது நிறைய விஷயங்கள் சொன்னார்கள். அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்களோ, பாவம் அம்மா இனி தான் இல்லாமல் எப்படி தனியாக இருப்பாளோ?என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் கணேசன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். முதலிரவு தன் வீட்டில் தான் என்றுவிட்டான் கணேசன் . அவனுக்கு சில அலுவல் வேலைகள் இருந்ததால் அவனுக்காக இவள் காத்திருந்தாள். அவளை தன்னவளாக சிறு அலங்காரத்தில் பார்த்தவன் அவள் அழகில் மயங்கினான்.

ஏய்! நீ எப்பிடி இருக்க தெரியுமா,சக்கர கட்டி என்று கன்னத்தை கடித்தான். இவள் சட்டென்று பயந்து விட்டாள். என்னதான் முன்னரே எல்லோரும் கிண்டல் செய்தும் அறிவுரைகள் கூறி இருந்தாலும் சட்டென்ற தாக்குதலில் நிலை குலைந்தாள். அவனோ அதை ரொம்ப ரசித்தான்.


அவன் வேலை செய்யும் இடங்களில் உள்ள பெண்கள் வேறு விதம். வெட்கம் என்றால் கூட பலருக்கு தெரியாது. இவளோ இதற்கே பயந்து விட்டாள். அழுது விடுவாளோ என்று மிகவும் மென்மையாக அணுகினான் . அவள் தன்னை மறந்தாள். விடுமுறை நாட்களிலும் அவளை விடவே இல்லை.தேனிலவுக்கு வெளி நாட்டிற்கு சென்று வந்தனர். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்றது.

ஏய்! சக்கர கட்டி நீ எவ்வளவு அழகா இருக்க, புருசன் எனக்கே தாங்கல. அன்னைக்கி கல்யாணம் விசாரிக்க வந்தானே ரமேஷ் அவன் உன்ன எப்பிடி பார்த்தான் தெரியுமா, இதுவே என்னால் தாங்க முடிலையே,நீ மட்டும் வெளில போய் ஆடினா என்ன ஆகிறது? கன்னத்தில் முத்தங்கள் கொடுத்து உதட்டில் முடிக்கும்போது அவன் கூறுவது சரி என்றே தோன்றியது.

என்னோட ஆபீஸ் பையன் உன்னோட போட்டோவை எப்பிடி பார்த்தான் தெரியுமா? அதனால அந்த டான்ஸ் போட்டோவை நம்ம ரூமுக்குள்ள மாத்திரலாம். உலகம் ரொம்ப கேட்டு போய்யிருக்குமா, நம்ம தான் பாத்து இருக்கணும் கழுத்தின் வளைவில் தடிவியபடி கூறியதும் சரியாகத்தான் இருந்தது.

பின் வந்த நாட்களில் ,அவனுக்கும் அடுத்து அடுத்து அலுவல்கள் வந்து கொண்டே இருந்தது. இவளுக்கும் வீட்டு வேலைகளே சரியாக இருந்தது.

மாமனாரின் ரிட்டையர்மென்டுக்கு அப்புறமாய் இவர்களுடன் வந்து தங்குவதாக அவர்கள் கூறி விட்டார்கள். இருவர்தான் என்றாலும், இவளுக்கு இந்த வேலைகள் எல்லாம் பழகாததால் எல்லா வேலைகளும் மெதுவாகத்தான் முடிந்தது.

எல்லா வேலைகளையும் நீ கத்துக்கோ. எல்லாத்துலையும் நீ பெஸ்ட்டா இருக்கணும். உனக்கு தெரியாததை எங்க அம்மா இல்ல உங்க அம்மாகிட்ட போன் பண்ணி கேளு. நானும் எங்க அம்மாகிட்ட சொல்லி வெக்கறேன். எங்க அம்மா ரொம்ப பிரண்ட்லி . உனக்கு ஒன்னும் பிரச்னையே இருக்காது. நீ எப்பவுமே,எதுவுமே தெரியலன்னு இருக்க கூடாது. அப்புறமாய் கொஞ்ச நாள் கழித்து வேலைக்கு ஆள் போட்டுக்கலாம். இவளுக்கு அவன் சொல்வது எல்லாமே சரியாகவே பட்டது. இதனால் தான் அப்பா மறு பேச்சு பேசாமல் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாரோ? என்றும் யோசனை தோன்றியது. இன்னிக்கு அத்தைக்கு கால் பண்ணி பேசணும் என்று நினைத்து கொண்டிருக்கும்போதே சந்திராவே போன் பண்ணினார்.

என்னம்மா, எப்படி இருக்க? என் பையன் எங்க?

அவரு அப்பவே ஆபிசுக்கு போய்ட்டாரு அத்தை . அடப்பாவி, புதுசா கல்யாணம் ஆகி இருக்கு, இப்பவே இப்படி பண்ணறானே? ராத்திரி எப்ப வர்ரான் ? உன்ன நல்ல பாத்துக்கறானா?

ம் நல்ல பாத்துக்கறாரு அத்தை .

பூவெல்லாம் வாங்கி குடுக்கரானா?

இல்ல அத்தை.

சரிம்மா, உடம்ப பார்த்துக்கோ. இன்னிக்கி என்ன சமையல் பண்ண? இப்படியே தினமும் காலை 10 மணிக்கு பேச ஆரம்பித்தால் குறைந்தது 1 மணி நேரமாவது பேசி விடுவார் .அவரின் தனிமை அவளுக்கு புரிந்தது. யாரும் பேச ஆள் இல்லை. மகன் இங்கே. மாமனார் காலையில் சென்றால் இரவுதான் வருவார். இவள் அன்னைக்கும் அதே பிரச்னை இருந்தது. ஆனால் அவர் இயல்பிலேயே யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். அதனால் அவருக்கு இது பெரியதாய் தெரியவில்லை. மாமியார் அப்படி அல்ல. கலகலப்பாக பழகுபவர். அதனால் தான் தனிமை வாட்டியது.

ஏன் அத்தை நீங்க எப்படி அங்க கஷ்ட படறதுக்கு இங்கேயே வந்துரலாமில்ல.


அது சரிதான். உங்க அப்பா தான் உங்க மாமாவை விட மாட்டேங்கறாரே.

நான் வேணா அப்பாகிட்ட பேசவா அத்தை?

அதெல்லாம் வேண்டாம். நீ ஒரு நல்ல செய்தி சொல்லு. உங்க மாமாவை நான் எப்படி வர வைக்கிறேன் பாரு!

சரிங்க அத்தை. மதியத்துக்கு அவங்க சாப்பிட வரேன்னு சொன்னாங்க. நான் அதை போய் பாக்கிறேன். இல்லன்னா வந்ததும் வைவாங்க .வெட்கத்தில் வார்த்தை ஒட்டிக் கொண்டது. அன்று மதியம் கணேஷ் சாக்லேட் வாங்கி வந்தான். என்ன இது?

ம், தெரியல சாக்லேட்?

எதுக்கு?

ம், அல்வா காலமெல்லாம் மாறி போச்சாம். உங்க அத்தை ரெகமண்டஷன். அத்தை சிபாரிஸு நன்றாகவே வேலை செய்தது.அடுத்த சில மாதங்களில் இவள் தாயாக போகிறாள் என்ற செய்தி வந்தது. அதுவும் இரட்டை குழந்தைகள் என்றதும் யாருக்கும் தலை கால் புரியவில்லை.

அன்னைக்கு மட்டும் சிறிது பயமாக இருந்தது. ரெண்டுன்னா, இவ தாங்குவாளா....

துணைக்கு வேற யாரும் இல்ல. எப்படி சமாளிப்பாளோ?

மணி, செய்தி வந்ததுதான் தாமதம் அனைவருக்கும் பரிசு மழை பொழிந்து விட்டார். என்னங்க கண்ணு பட்டுட போகுது. முதல்ல குழந்தைங்க பிறந்து நம்ம பொண்ணு பத்திரமா வீடு வந்து சேரனும்.அதுக்குள்ள இப்படி ஆர்ப்பாட்டம் பண்றீங்க?

இங்க பாரு கல்யாணி. என் பொண்ணு பொறந்ததுக்கு அப்புறம் தான் இந்த பிசினெஸ் இப்படி பெரிசாச்சு. அவ எப்பேற்பட்ட அதிர்ஷ்டகாரி?

எம் பொண்ணு இன்னிக்கி ரெட்டை பிள்ளைங்கள தர போறான்னா சும்மாவா? எல்லாத்தையும் கடவுள் நல்லதாவே நடத்துவார். நீ ஏன் கவலை படற.... ஒரு நல்ல நாள் பார்த்து வை. குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நட போயிட்டு வந்துருவோம். மறக்காம சம்மந்திக்கிட்ட சொல்லிரு.

வளைகாப்பு,சீமந்தம் எல்லாம் நல்ல படியாகவே நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். பார்க்க வந்த கணேசனின் கையில் ஒரு பூங்கொத்து. மனைவிக்கு முத்தம் கொடுத்து பூங்கொத்தை தந்தான். பூக்களை விட மென்மையாய் பூவையிடம்,

புதியதாய் பிறந்திருக்கும் புதிய தாய்க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். குழைந்தை பிறப்பில் சோர்ந்திருந்தவளுக்கோ காதில் விழுந்த வார்த்தைகள் புரிந்த அளவுக்கு அவனின் காதல் புரியவில்லை.

அபிநவ், அபிநயா என்று பெயர் வைத்தனர்.கணவனின் பிரிவு இவளுக்கு கொஞ்சமல்ல அதிகமாகவே கஷ்டமாக இருந்தாலும், குழந்தைகள் பிறந்த பின் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் போயிற்று. இவளை பார்த்து கொள்ளவே தனியாக ஆள் வசதி செய்தார் மணி. ஆனாலும் இவள் உடல் நிலை சக்கை போல ஆயிற்று.. கணவனின் பிரிவோ மனதை வலுவிழக்க செய்தது.

ரெட்டை பிள்ளைய தாங்கின உடம்பு இப்படித்தான் இருக்கும்.. எல்லா வேலைகளையும் நானும் பொன்னமாவும் பார்த்துக்கறோம். நீ நல்லா சாப்பிடு..,தூங்கு, குழந்தைகளுக்கு..,பாலக்குடு... இனிமே இதுதான் உன் வேலை.

அநேக நேரங்களில் கணேசனின் நினைவு பாடாய் படுத்தும். அப்போதெல்லாம் அவள் போன் செய்வாள்.

எப்பிடி இருக்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? அவ்வளவுதான். நான் இப்ப பிசியாக இருக்கிறேன். நைட் போயிட்டு கால் பண்ணுறேன். இவளோ கணவனுக்காக ஏங்கிக் கொண்டிருக்க அவனுக்கோ அலுவலக வேலைகள் மூச்சிரைக்க வைத்தது. இவளின் ஏக்கங்களை புரிந்து கொள்ள அவனுக்கு அவகாசமே கிடைக்கவே இல்லை. இப்படியே நாட்கள் உருண்டோடின.

குழந்தை பிறந்ததும் இவருக்கு என்னை பிடிக்கவில்லையோ?என்று மருக ஆரம்பித்தாள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

என்னை எப்படி புடிக்கும்? நாந்தான் அசிங்கமா குண்டாயிட்டேனே. கிட்ட வந்தாலே குழந்தைகள் மூத்திர வாசனையும், பால் வாசனையும் தான் வர்றது. அதெல்லாம் அவங்களுக்கு பிடிக்குமா?

குழந்தைகளை பார்க்க சில சமயங்களில் வந்தான். அவன் அம்மா அப்பா பெங்களுருவில் அவனுடன் இருந்தனர். அப்பப்ப குழந்தைகளை பார்க்கவாவது வரக் கூடாதா ?

நான் ரொம்ப ஏங்கி போயிருக்கண்டி. என்னால உன்ன பார்த்தா தாங்க முடியாது. அதுனாலதான் உன்ன பார்க்க வரல. இந்த சம்பவம் அவர்களுக்குள் இருப்பது காதலா என்ற சந்தேகம் அவளுக்கு வந்து விட்டது. குழந்தைகள் பிறந்த பின் பெண்களுக்கு வரும் இயல்பான மனச் சோர்வுதானே? (அதை அவள் போக போக புரிந்து கொள்வாள்)

நடராஜன் பேரக் குழந்தைக்களுடன் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக வேலையை ராஜினாமா செய்தார். மாமனார் மாமியார் உதவியுடன் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடிந்தது. அவ்வபோது இவள் பெற்றோரும் வந்திருந்தனர்.

குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது மணிக்கு மூலையில் ரத்த ஓட்டம் குறைய தொடங்கி விட்டதால் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கணேசனே இவர் அலுவல் வேலைகளை பார்த்து கொள்ளும்படி ஆயிற்று. நடராஜனும் மணியும் இவனுக்கு எல்லா பயிற்சியும் தந்தனர். இருப்பினும் வெளியூர் செல்ல வேண்டிய இடங்களுக்கு எல்லாம் இவனே செல்லும்படி இருந்தது. இதற்குள் மாமியாருக்கு உடல் சரியில்லாமல் போயிற்று. குடல் பாதிப்பு என்பதால் டயட் பார்த்து பார்த்து கொடுக்கும்படி ஆனது. வீட்டு வேலைகளுக்கு ஆள் போட்டுக் கொண்டாள். ஆனால் மாமியார் மாமனார் , குழந்தைகள், பெற்றோர் என்று இவள் வாழ்க்கையில் மூச்சு விட கூட நேரம் இல்லாமல் போனது.இவள் அம்மா இவளுக்கு எவ்வளோவோ உதவிகரமாக இருந்தாலும் பல வேலைகளை இவளே செய்ய வேண்டி இருந்தது.

அபி, ஏம்மா சோசியல் சைன்சுல இவ்வளோ கம்மியா மார்க் வாங்கியிருக்க? கவலைப்படாத, அம்மா சொல்லி தரேன்.

ஏன்டா! கணக்கு உனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட். அதுல ஏன்டா மார்க் குறைய ஆரம்பிக்குது? அம்மா, சாரு வெறும் எக்ஸாம்பிள் சம்ஸ் மட்டும்தான் போடுறாரு. எனக்கு மத்ததுல சந்தேகம் வந்தா டியூஷனுக்கு போக சொல்லறார். டியூஷன் போகற பசங்க ஏதாவது சந்தேகம் கேட்டா சொல்லி குடுக்க மாட்டேங்கறாங்க. இருவரும் கோரஸ்ஸாக சொல்ல ஆரம்பித்தனர். குழந்தைகளை சிறு வயதிலேயே டியூஷனுக்கு அனுப்பவதில் இவளுக்கு விருப்பம் இல்லை.கணேஷ் வீட்டில் இருக்கும்போது இவளுக்கு சந்தேகங்களை தீர்த்து வைப்பான்.அதை இவள் சொல்லி கொடுப்பாள். ஆனால் அதுவும் எல்லா சமயங்களிலும் சாத்தியம் இல்லாது போயிற்று. இவளுக்கு ஒரு டியூஷன் , அவளுக்கு ஒன்று, இவள் வயலின் கிளாஸ் அவன் மிருதங்கம் இப்படி இவள் முழு நேர டிரைவராகிப் போனாள். உனக்கு வேணுமின்னா ஒரு டிரைவர போட்டுக்கோ. இப்படி கஷ்டபடாதே. இருப்பினும் எல்லா இடங்களுக்கும் இவளே சென்று வந்தாள். இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது. குழந்தைகளை தனியா அனுப்ப கூடாது. வீட்டில் அனைவரும் சேர்ந்து இவளுக்கு வழங்கிய பெரிய அறிவுரை. குழந்தைகளை தனியாக அனுப்புவதில் இவளுக்கும் உடன்பாடு இல்லை.

பிள்ளைகள் வளர ஆரம்பித்து விட்டனர். நண்பர்கள் கூட்டம் அதிகமானது. அன்னையின் தேவை பெரியதாக தேவை படவில்லை. இதற்குள் வயதானவர்களும் ஒவ்வொருவராக இறைவனிடம் சென்று கொண்டிருந்தனர்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன, அப்போது ஒருநாள் இவள் ஒரு கவிதை வாசித்தாள்.

நான் யார்?....

என்னையே நான் தொலைத்தேன்,

நான் யார்? என்று மற்றவரிடம் கேட்டேன்.

பதிலே இல்லை.

விடை தெரியாத வினாவா?

என்னையே கேட்டேன்

நான் யார்?

கிடைத்தது பதில்.

என்ன..........

நான் என்பது நான் தான்.

இந்த கவிதை அவளை மிகவும் யோசிக்க செய்தது. கண்ணாடியை பார்த்தாள். கண்ணாடியில் அவளின் பழைய தோற்றம் தெரியவில்லை.

நான் யார்? காலம் அவளின் பழைய தோற்றத்தையும் மிச்சம் வைக்கவில்லை. இதுவா என்னுடைய அடையாளம்?

அதன் பின் மிகத் தீவிரமாக யோசித்தாள். நான் யார்?

கணேசனின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய்.

இவை தான் என்னுடைய அடையாளமா? மீண்டும் மீண்டும் யோசித்தாள்.

விடை தெரியவில்லை!

கணேசன் அடுத்த நாள் மாலை ஒரு பரிசுடன் வந்தான். என்ன அது. சலங்கை. இவளுக்கு கண்ணீர் மல்கியது.

என்ன இது?

நேத்து நீ கேட்ட இல்ல? நீ யாருன்னு? என்னோட சக்கர கட்டி ஒரு டான்சர். இத்தனை நாள் நீ எனக்கு தாரமா இருந்த. இனிமே என்னுடைய தாரம் அரிதாரமும் பூசிக்கலாம். நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான் அவள் காதல் கணவன்.

மகனும்- மகளும் வந்தனர். அம்மா இனிமே உங்களுக்கு வீட்டு வேலையில நாங்களும் உதவி செய்வோம். அம்மாவை கட்டிக் கொண்டு கூறினர். ஆமா, இன்னிக்கு என்ன புதுசா இதெல்லாம்?

ஏ! மக்கு அம்மா இன்னிக்கு உன்னோட பிறந்த நாள். ஹாப்பி பர்த்டே,

வி லவ் யூ மாம்.

இதைவிட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன பரிசு வேண்டும்.

நடன மங்கையாக மீண்டும் பிறப்பெடுக்கும் வசந்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!





தோழமைகளுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
Top Bottom