Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அழகழகா ஆயிரம் வருஷம்

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
தன் விரல் பிடித்துக்கொண்டு வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ண முயற்சி செய்தபடி நடக்கும் பேத்தியை பார்த்து நகைத்தபடி நடந்தார் பார்வதி.

"பாட்டி வானத்துல எவ்ளோ ஸ்டார்ஸ் இருக்குன்னு எண்ணவே முடியலையே?" என்றாள் பானு.


"எவ்ளோ ஸ்டார்ஸ் இருக்குன்னு இன்னும் யாரலயும் முழுசா எண்ண முடியலைம்மா." என்றார் பார்வதி.

"ஆனா அமெரிக்கா நாடுல்லாம் நம்ம நாட்டை விட ரொம்ப முன்னேறிடுச்சாமே? அப்போ நம்ம இந்தியால யாரும் அறிவாளிங்களே இல்லையா?" என்று கேட்டாள் பானு.

"அப்படின்னு யாரு சொன்னா? நம்மஇந்தியாவுள நிறைய பேர் இருக்காங்க. அதுவும் தமிழ் இனத்துல நிறைய பேர் இருக்காங்க அறிவாளிங்க." என்றார் பார்வதி.

"அப்படியா பாட்டி?" என்றாள் பானு.

"ஆமாடா. அதுவும் இப்போ இல்ல... ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம ராஜராஜசோழர் கட்டிய பெரிய கோவிலை எப்படி கட்டிருக்காங்கன்னு இன்னைக்கு வரைக்கும் கண்டு பிடிக்க முடியலை. தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீசுவரர் கோயில், தஞ்சை பெரிய கோயில்ன்னு நிறைய பேர் இந்த கோவிலுக்கு இருக்கு. இந்த கோவில் தமிழரின் பாரம்பரியச் சின்னம் மட்டுமில்லாம 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது." என்றார் பார்வதி.

"பாட்டி! எனக்கு அந்த ராஜா பத்தியும் அந்த கோவிலை பத்தியும் இன்னும் நிறைய சொல்லுங்க" என்றாள் பானு.


"சரி வா. சொல்றேன்" என்று அங்கே இருந்த மணற் பரப்பில் அமர்ந்தார் பார்வதி.

அவரின் அருகில் அமர்ந்த பானு. "உண்மையாவே நம்ம தாத்தா பாட்டிங்க முன்னோர்கள் அவ்ளோ பெரிய அறிவாளிங்களா பாட்டி?" என்றாள் பானு ஆர்வமாய்.

"உண்மை தான்டா" என்று சிரித்தார் பார்வதி.

"அந்த ராஜா எவ்ளோ பெரிய கோவிலை கட்டினார்?" என்றாள் பானு.

"10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் பேர் அருள்மொழி வர்மன் ... ராஜ ராஜ சோழனும் அவர் தான்" என்றார் பார்வதி.

"ராஜ ராஜ சோழனா அவர் பேரு? அவர் அப்படி என்ன தான் செய்தார்?" என்றாள் ஆர்வமாய் பானு.


"ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தென் இந்தியா முழுவதையும் ஒரே குடை கீழ மிக பெரிய சாம்ராஜியமா ஆட்சி செய்திருக்கார் ராஜராஜசோழன்.

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமில்லாம, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள்ன்னு பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். ஆனா, அவர் வட இந்தியாவை நோக்கி போர் புரிய போகலை." என்று நிறுத்தினார்.

"ஏன் பாட்டி! அவர் தான் இங்க எல்லா இடத்தையும் தோற்கடிச்சு ஆட்சி செய்தாரே.. அப்புறம் ஏன் வட இந்தியாகூட போர் புரியலை" என்று கேட்டாள் பானு.

"நம்ம சோழர் மிக பெரிய சிவ பக்தர். 985 முதல் 1014 வரைக்கும் ஆட்சி செய்திருக்கார். அந்த காலம் தான் நம்ம தமிழர்களோட பொற்க்காலமா சொல்றாங்க." என்று கூறியவர்.

"உண்மையாவா?" என்றாள் நம்பாமல் பானு.

"இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.

இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே. பொருளாதாரம், கட்டிட கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உறவுமுறை மற்றும் போற்படைன்னு எல்லா துறைலயும் சோழ தேசம் மத்த தேசங்களை விட பல மடங்கு முன்னேறி இருந்திருக்கு." என்றார் பார்வதி.


"ஹப்பா! எப்படி இவ்ளோ டிபார்ட்மெண்ட்லயும் இவ்ளோ முன்னேறி இருந்துருக்கு?" என்றாள் பானு ஆச்சர்யமாக.

"சொல்றேன் கேளு. பாதி இந்தியாவை ஆண்ட சோழனுக்கு அவர் காலத்துல இருந்த நாட்டோட வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்யனும்னு ஒரு ஆசை இருந்துச்சாம். அதனால உருவானது தான் இன்னைக்கு உலகமே வியந்து பார்த்துட்டு இருக்க, முழுக்க கிரானைட் கல்லால மட்டும் கட்டின நம்ம தஞ்சை பெரிய கோவில். 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது" என்று சிரித்தார்.

"கேக்க கேக்க ரொம்ப இன்ரஸ்ட்டிங்கா இருக்கு பாட்டி" என்றாள் பானு.

"இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை" என்றார் பார்வதி.

"அப்போ இன்னும் சொல்லுங்க பாட்டி" என்றாள் பானு.

"இன்னொரு விஷயம் தெரியுமா? அந்த காலகட்டத்தில இந்தியால இருந்த மற்ற கோவில்களை விட தஞ்சாவூர் கோவில் நாற்பது மடங்கு பெருசாம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில், இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது" என்று சிரித்தார்.

"அப்படியா?" என்றாள் பானு ஆச்சர்யமாக.

"முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. உலகம் வியக்கும் உன்னதமான கோவில்." என்றார் பார்வதி.

"நாற்பது மடங்கா?" என்று வியந்து கேட்டாள்.

"இந்த கோவிலை கட்டுவதற்க்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரிய கோவில் இருக்குல்ல அந்த கோவில் கட்டுமானத்தில மரமில்லை, சுடுசெங்கல் கிடையாது, மொத்தமும் கிரானைட் கற்கள் மட்டுமே. சிற்பங்கள் மற்றும் நுண்ணிய வேலைபாடுகள் அனைத்திலும் கிரானைட் கற்கள் தான். ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் எடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்பனும்னா கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமா இருக்கணும். அதேபோல கற்பகிறத்தோட மேல் இருநூத்தி பதினாறு அடி கூர்நுனி பெற்ற விமானம். விமானத்தோட உச்சில எண்பது டன் எடையுள்ள கலசத்தை ஏற்றணும். அதில்லாம விமானத்தின் மேல எட்டு நந்தி சிலை உண்டு. கட்டிட கலையோட உச்சபட்ச அறிவு இருந்தால் மட்டும் தான் இது சாத்தியமாகிருக்க முடியும்.

இந்த கோபுத்தத்தின் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.


உலகின் பல நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோவிலாகும்." என்று நிறுத்தினார்.

"எண்பது டன் வெய்ட்டா எம்மாடி எப்படி ஏத்திறுப்பாங்க மேல?" என்றாள் பானு.

"அந்த விமானம் முழுசும் சிற்பங்கள் செதுக்கனும், மிக பெரிய கலசத்தை மேல எத்தனும்னா சாரத்தை கோவில் முழுசா கட்டணும். அப்படி கட்ட கட்டட கலை நிபுணர்கள் எவ்ளோ துல்லியமாக ஆராய்ந்திருப்பாங்க? அதுமட்டுமில்ல, எவ்ளோ கயிறு, மரக்கட்டைகள் வேணும்னு தீர்மானிக்கணும் இது எல்லாத்துக்கும் சிறந்த கணித அறிவு நிச்சயமா தேவை பட்ருக்கும்". என்று நிறுத்தினார்.

"ஹப்பா! அவ்ளோ பெரிய கோவிலை சுத்தி சாரம் கட்ட ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எவ்ளோ துல்லியமா யோசிச்சிருக்காங்கள்ல?" என்றாள் ஆச்சரியமாய்.

"லிங்கத்தின் உயரம் 12 அடியாக - உயிர்எழுத்தாக இருக்கிறது. பெருவுடையாரின் மெய்க் காப்பாளர்களாக இருபக்கமும் நிற்கும் துவாரபாலகர்கள் 18 அடியாக - மெய்யெழுத்தாக இருக்கிறார்கள். பெருவுடையாரும் அவரின் மெய்காப்பாளர்களும் தனித்தனியாக ஒரே கல்லில் வடிக்கப்பெற்று இருக்கிறார்கள். அக்கோயிலின் உயரம் 216 அடியாக - உயிர்மெய் எழுத்தாக கலையின் உச்சத்தை பெற்று நிற்கிறது. இத்திருக்கோயிலுள் அமையப்பெற்று இருக்கும் தென்னாடுகொண்ட சிவபெருமான் ஒருவனே ஆயுத எழுத்தாக அமையப்பெற்று இருக்க வேண்டும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, 247 தமிழின் மொத்த எழுத்துக்களை உள்ளடக்கியே அக்கோயில் அமையப்பெற்று இருக்கிறது. ..கோயிலின் வெளித் திருசுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது.

கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளதாம். அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல்லிலாலானது.

இங்கிருந்து 7 கி.மீ தூரத்திற்கு, அருகில் உள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரேயொரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனர். அகோவிலை மட்டும் கட்ட .ஏழு வருஷம் ஆகிருக்கு.

கோவிலை கட்ட ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட கைதிங்களும் மக்களோட உதவியோடவும் கட்டியிருக்காங்க. " என்றார் பார்வதி.

"கைதிங்களா?" என்று முகம் சுளித்தாள் பானு.

"கைதிங்க தானேன்னு ஏளனமா பார்க்காத, யோசிச்சு பாரு.. இன்னைக்கு நிலைமைக்கு தலைநகர் டெல்லில ஒரு லட்சம் கைதிங்களா வச்சி ஒரு கட்டிட. கட்டணும்னா மிலிட்டரி எவ்ளோ கட்டுக்கோப்பா வச்சிருக்கணும்? எவ்ளோ பாதுகாப்பா நேர்த்தியா இருக்கணும்? ஒரு நிமிஷம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாம போயிடும். எந்த நேரம் வேணா கைதிங்க கலவரத்தில் ஈடுபடுவாங்க...

எந்த அளவுக்கு சோழர் காவல்படை செயல்பட்டிருந்தா ஏழு வருஷம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரம எதிரிநாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரத்துல வேலை வாங்கிருப்பாங்க? ஏழு வருஷம் கைதிங்கள அடக்கி ஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியமேயில்ல...


அதே மாதிரி மற்ற கட்டிட கலைவல்லுனர்களும் மனம் நிம்மதியா வேலை செய்யணும். பொது மக்கள்கிட்ட இருந்து எதிர்ப்பு வரமா பார்த்துக்கனும்னா மனிதவள வேளாண்மை மிக நேர்த்தியா நடைமுறை படுத்திருப்பாங்கன்றதுக்கு தஞ்சை பெரியகோவில் தான் சாட்சி." என்றார் பார்வதி.

"ஆமால்ல.. ஒரு லட்சம் கைதிங்கள வச்சி எப்படி சம்மாளிச்சிருப்பாங்க? அங்க இருந்த போலீஸ் எவ்ளோ சூப்பரா இருந்திருப்பாங்கள்ல?" என்று வியந்தாள் பானு.

"ஹ்ம்ம்.. ஒரு லட்சம் கைதிங்க மட்டும் தானா? ஒரு லட்சம் கைதிங்க, ஆயிரமாயிரம் யானைகள், குதிரைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொள்ளர்கள், நடன கலைஞ்ர்கள், சமையல் வல்லுநர்கள், வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள்ன்னு ஒரு மாபெரும் படைக்கும் ஏழு வருஷம் சாப்பாடு போடனும்னா தொடர்ச்சியா சோழ மண்டலத்தில் விவாசயம் மற்றும் பொருளாதாரம் செழிச்சு தங்கு தடையில்லாம இருந்திருக்கனும்... இவ்ளோ பேர் இவ்ளோ வருஷம் வேலை செய்யும்போது யாருக்காவது உடம்பு சரியில்லன்னா பார்க்க தேவையான மருத்துவ வசதியும் அந்த காலத்துலயே சிறப்பா இருந்திருக்கனும்." என்றார் பார்வதி.

"ஆமா பாட்டி. கோவில் வேலை செய்ற இவ்ளோ பேருக்கும் எல்லாம் செய்யணும் நாட்டு மக்களையும் பார்த்துக்கனும் கஜானாவும் நிரம்பி வழியனும் எப்படி சாத்தி யப்பட்டுச்சுன்னு யோசிச்சு பார்க்கவே பிரமிப்பா இருக்கு" என்றாள் பானு.

"ஆமா.. ஏழு வருஷம் கோவில் கட்ட தேவையான பொருட்செலவு ஈடுகட்ட தொடர்ச்சியா போர்கள் நிறைய நடந்திருக்கனும். அதுல ஜெய்ச்சிருக்கனும்... மற்ற எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்திருக்காங்க." என்றார் பார்வதி.

"அது மட்டுமா? ஒருவேளை இந்த ஏழு வருஷத்துக்குள்ள ராஜராஜசோழனோ? மற்ற மூத்த கட்டிடக்கலை நிபுணர்களோ இறந்துட்டா கோவில் கட்ற வேலை நிற்காம நடக்க சுமார் ஆயிரம் வரைபடங்களை தயார் செஞ்சுருக்காங்க. அதோட கிரானைட் கற்களை செதுக்க என்ன மாதிரியான உளி இரும்பு பயன்படுத்தனும்னு முன்னாடியே ஆராய்ச்சி செய்திருக்காங்க. கற்களை நெம்பி தூக்கும் கருவிகளை நிறைய தயார் செய்யனும்னா பழுக்க காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிஞ்சுருக்கனும்" என்றார் பார்வதி.

"இவ்ளோவும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சிறந்து விளங்கிருக்காங்க" என்றாள் பானு.


"இன்னொரு விஷயம் கேட்டா ஆச்சர்யப்படுவ. தஞ்சையை சுற்றி சுமார் 50கிலோமீட்டர் கிரானைட் கற்கள் கிடையாது. கோவில்கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு தெற்கே 50கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்த்தமலைல இருந்து கொண்டுவரனும்னா சோழ தேசத்தோட சாலைகளும் போக்குவரத்தும் தரமாகவும் சீரானதாக இருந்திருக்கணும்னு யோசிச்சு பாரு." என்றார் பார்வதி.

"லேடீஸ்கூட இதுக்கு ஹெல்ப் பண்ணாங்களா பாட்டி?" என்றாள் பானு.

"சோழ அரசியலில் பெண்களின் பங்கு முக்கியமானது. ஆண்கள் கோவில் பணில இருந்தப்ப பெண்கள் அரசு எந்திரத்தை திறமா நிர்வாகம் செஞ்சுருக்காங்கன்னு வரலாற்றில் சொல்லிருக்காங்க." என்றார் பார்வதி.

"பாட்டி அப்போ அந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பத்தி சொல்லுங்க?" என்றாள் பானு.

"அதுவா.. தலையாட்டி பொம்மை என்பது 'ராஜா' மற்றும் 'ராணி' இரண்டு பொம்மைகளையும் குறிக்கும். இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன.ராஜா ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் ஆகியவை தற்காலத்தில் உருவாக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் புதைந்திருக்கும் அறிவியல் பூர்வமான வரலாறு.. .

"எதற்கெடுத்தாலும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்டிக்கிட்டு இருக்கியே" என்று, பேச்சு வழக்கில், பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பலர் இந்தப் பொம்மைகளைப் பார்த்திருக்கவும் வாய்ப்புண்டு. கீழே வட்டமாகவும், மேலே கூர்மையாகவம் உள்ள இந்த பொம்மையை, எந்தப் பக்கம் சாய்த்தாலும், உடனே, அது அசைந்தாடி விட்டு, நேராகத் தான் நிற்கும்.

தேங்காய் சிரட்டையின் பாதியில், களி மண்ணை நிரப்பி, அதற்கு மேல், இந்தப் பொம்மைகளை உருவாக்குகிறார்கள். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாமல், இங்கு மட்டும் இந்தப் பொம்மை செய்வதற்கான காரணம் என்ன? என்று ஆராய்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் தானாகவே அமைந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, தண்ணீர் வேண்டி, தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்தினுள் ஆழ் குழாய் கிணறு அமைக்க, போர் போட்டார்கள். அப்போது, வழக்கமாக வரும் களிமண் ஏதும் வரவில்லை. மாறாக காட்டாற்று மணல் தான் வந்தது.

இந்தக் காட்டாற்று மணலில், பாறைத் துகற்கள் அதிகம் இருக்கும். மேலும் இது சாதாரண மண்ணைக் காட்டிலும் கடினமானது. இந்தக் கோயில், இந்தப் பூமி உள்ள வரை நிலைத்திருக்க வேண்டும், என்றெண்ணிய ராஜராஜன், அப்போதிருந்தவர்கள் ஆலோசனையைக் கேட்டு, கோயில் கட்டுவதற்கு முன்பாக, காட்டாற்று மணலை நிரப்பி, அதன் மேல் தான் அஸ்திவாரம் போட்டிருக்கிறான்.

இடி, மின்னல், புயல் போன்ற எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் தாங்கிக் கொண்டு, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், ஆடாமல் அசையாமல், இந்தக் கற் கோயில் இருப்பதற்கான, காரணத்ததைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், ஆச்சர்யம் அடைந்தனர்.

இன்று, கை தேர்ந்த எந்தப் பொறியாளரும், நினைத்துக் கூடப் பார்க்க முடியாததை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, வெறும் அனுபவ பாடத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, இந்த அதிசயத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள்.

இந்த பாணியில் தான் தஞ்சாவூர் பொம்மை செய்யும் போது, களி மண்ணுடன், காட்டாற்று மணலையும், சேர்ந்து சிரட்டையில் நிரப்புகிறார்கள். அதனால் தான், அதற்கு தனி விசை வந்து, ஆடி முடிந்து நேராக நின்று விடுகிறது." என்றார் பார்வதி.

"அப்போ எர்த்குவேக் வந்தா கோவிலுக்கு ஒண்ணும் ஆகாதா?" என்றாள் பானு.

"ஆயிரம் வருஷத்துல ஆறு நிலநடுக்கம் வந்தும் அசராமல் தஞ்சை பெரிய கோவில் வெறும் கற் கோவில் இல்ல. மருத்துவம், பொருளாதாரம், கணிதம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவுமுறை, போர்ப்படைன்னு அனைத்திலயும் மிக மிக சிறந்த விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு." என்றார் பார்வதி.​
 
Top Bottom