Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 1
இரவுச் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி பயணப்பட ெதாடங்கியிருந்தான். பகல் முழுவதும் இரை தேடி பறந்து களைப்படைந்த பறவையினங்கள் தங்கள் கூடுகளில் உறங்க தொடங்கியிருந்தன. ஊரும் நாடும் உறங்கி கொண்டிருந்த அர்த்தஜாம வேளையில் சில வண்டுகளின் ரிங்காரம் பிண்ணனி இசையாக ஓ லித்து கொண்டிருந்த இரவு பொழுதில் மதுராபுரியின் அரண்மனையில் இரண்டு பேர் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மதுராபுரியின் ராஜகுருவும் தலைமை அமைச்சருமான பிரம்மராயர். இன்னொருவன் அவரது அந்தரங்க உதவியாள். அறையில் தீபத்தின் ஓளி மங்கலாக விழுந்து பரவிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில்ராயரின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திருப்பது அரைகுறையாக தெரிந்தது.
ராயர் தன் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார். "என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை" என்றார் ராயர்.
"இளவரசர் மன்னனாக பதவியேற்று ஒரு வாரம் கடந்து விட்டது.மன்னரை வேட்டைக்கு அழைத்து சென்று பிணமாக அழைத்து வந்திருக்கிறார் தளபதி நஞ்சுண்டன்.கானகத்தில் வழி தவறிய மன்னரை புலி தாக்கி கொன்றதாக தளபதி கூறுவதை நாடும் நம்பவில்லை.நாமும் நம்பவில்லை.அது அப்பட்டமான ஒரு கொலையென்றே மக்கள் கருதுகிறார்கள்.அதனால்தான் அவசர அவசரமாக இளவரசரை மன்னனாக்கினீர்கள்.முதல் வழக்காக மறைந்த மன்னரின் மரணத்தை எடுத்திருக்க வேண்டும். நஞ்சுண்டனை தண்டித்திருக்க வேண்டும்.மதியுக மந்திரியான நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.உங்கள் அமைதியின் பொருள் எனக்கு புரியவில்லை! "என்றான் ராயரின் உதவியாள் புகழேந்தி.!
பிரம்மராயரின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.
"புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்.மன்னரை வஞ்சகமாக கொன்றுவிட்டு இளவரசரை கைப்பாவையாக்கி மறைமுகமாக தன்னுடைய ஆட்சியை செலுத்த நினைக்கிறான் நஞ்சுண்டன்.அதனால்தான் இளவரசரை மன்னனாக்கி யாக வேள்வி என்ற பெயரில் நஞ்சுண்டன் அவரை நெருங்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அரசருக்கு உலகம் புரியாத பால்ய வயது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வயது .அவரைதீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது எளிது.மது, மாது என்று ஏராளமான விசயங்கள் அவர் மதியை கெடுக்க இருக்கின்றன.அரசரோடு இயற்கை காட்சிகளை ஓவியமாக தீட்ட நம் அரண்மனை ஓவியரும் உடன் சென்றிருக்கிறார்.மன்னரின் மரணத்தின் போது அருகே இருந்தவர் அவர்தான்.அது மனித தாக்குதலா இல்லை நிஜமான புலியின் தாக்குதலா என்பதை அவர் வரைந்த ஓவியம் உறுதி செய்யும்! "
"அவர் பிறவி ஊமையாயிற்றே? "
"ஆனால் அவரின் ஓவியம் உண்மையை பேசுமே? அவர் என் கண்களை நேருக்கு நேராக பார்க்க மறுக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. அதை சொல்லவிடாமல் அவரது பிறவிக் குறையையும் தாண்டி வேறு ஏதோ ஓன்று தடுக்கிறது."
"நஞ்சுண்டன் அவரை விலைக்கு வாங்கியிருந்தால் அல்லது அச்சுறுத்தியிருந்தால் அவர் பொய்யான விசயத்தைதானே வரைந்திருப்பார்? "
"அதற்கும் வாய்ப்பு இருக்கிறதுதான்.ஆனால் அதை கண்டு பிடிக்கவல்லவன் ஒருவன் இருக்கிறான். அவனால் மன்னரின் மர்ம மரணத்தை கண்டறிய இயலும்."
"யார் அந்த மதியூகி? உங்களை விடவும் வல்லவனா? "
"ஆம்.என்னை விடவும் வல்லவன்தான்.நீரில் மீன் சென்ற தடத்தையும் துல்லியமாக அறியும் ஆற்றல் பெற்றவன். நான் அவரது ஓவியங்களை பார்வையிட்டு விட்டேன். என் அறிவுக்கு எட்டியவரை அந்த சித்திரங்கள் மன்னரின் இறுதி நேரத்தை பிரதிபலிப்பதாகவே தோன்றுகின்றன. அவற்றுள் புதைந்திருக்கும் மர்மத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் ஒருவனால் அது முடியும். அவன் பல்துறை வல்லுநன் ."
"யார் அவன்? "
"அவனொரு கள்வன்! "
"என்ன கள்வனா? "
"பிறப்பால் கள்வன்.உள்ளத்தால்உயர்ந்த மனம் கொண்டவன்.அவனை தவிர வேறு யாராலும் இந்த முடிச்சை அவிழ்க்க முடியாது."
"ஒரு கள்வனை நீங்கள் புகழ்ந்து பேசுவது எனக்கு வியப்பை தருகிறது! "
"நான் அவனது திறமையை நேரிலேயே கண்டிருக்கிறேன்.நாளை அரசவையில் ஓவியர் வரைந்த மன்னரின் இறுதி காட்சிகள் அடங்கிய ஓவியம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அந்த ஓவியங்களை பார்வையிடும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து கொள்ளட்டும்.அதை பார்வையிடும் மக்களே நஞ்சுண்டனின் மீதான தீர்ப்பை எழுதட்டும்.நஞ்சுண்டன் மீது எந்த சந்தேகமும் மக்களுக்கு வரவில்லையென்றால் அவனே தளபதியாக தொடரட்டும்.அவனை அப்புறப்படுத்தும் வழியை பிறகு யோசிப்போம்.நஞ்சுண்டன் மீது குற்றமிருப்பதாக மக்கள் கருதினால் அவன் கதை முடிந்தது. மக்களோடு மக்களாக நம் கள்வர்புரத்து கள்வனும் இருப்பான்.அவனது பார்வையில் யாரும் தப்ப முடியாது.நஞ்சுண்டனை தகுந்த ஆதாரங்களோடு அவனே மடக்குவான்! "
"நஞ்சுண்டன் சாமார்த்தியமாக ஆதாரங்களை மறைத்திருந்தால்? "
"நம் கள்வன் நஞ்சுண்டனின் வாயிலிருந்தே ஆதாரங்களை கக்க வைத்து விடுவான்.குற்றவாளிகள் ஏதேனும் ஒரு தடயத்தை தாங்களே அறியாமல் விட்டு செல்வதுதானே வழக்கம்? அந்த தடயத்தை நம் கள்வன் எளிதில் கண்டு பிடித்து விடுவான்.! "
"பேச்சினூடே கள்வன் என்றே குறிப்பிடுகிறீர்களே? அவன் பெயர்தான் என்ன? "
"நான் கள்வன் என்று குறிப்பிடுவது பொருள்களை கொள்ளை கொண்டதால் அல்ல.மனங்களை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று அழைக்கிறேன். அவன் பெயர் ஆதித்தன்! "என்றார் ராயர்.
அதே நேரம் அறையின் கதவுக்கு வெளியே தொங்கிய திரைச்சீலையின் வெளிச்சம் ஒரு நிமிடம் தடைபட்டு தொடர்ந்தது.
ராயர் தன் உதட்டில் கையை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தார்.
கதவுக்கு பின்னால் நின்று உரையாடலை கேட்டு கொண்டிருந்த ஒற்றனொருவன் நஞ்சுண்டனின் மாளிகையை நோக்கி நகர்ந்தான்.
"நம் சம்பாசணையை கேட்டு கொண்டிருந்த ஓற்றன் கிளம்பி விட்டான்.இனி நஞ்சுண்டன் உசாராகி விடுவான்! "
"கவலை வேண்டாம்.இனி நம் கையில் எதுவுமில்லை.இனி நடக்க போவது ஆதித்தனுக்கும் நஞ்சுண்டனுக்குமான யுத்தம்.நாம் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்கள் மட்டுமே! "
"உங்கள் இல்லத்திற்குள்ளேயே ஒற்றனா?"
" அதிகாரம் தனக்கு கீழே உள்ளவர்களையும் தனக்கு சமமாக உள்ளவர்களையும் சந்தேகிக்கும் சக்தி படைத்தது.நாம் அடுத்தவர்களை கண்காணிக்கும் போது நம்மையும் யாராவது கண்காணிக்கத்தானே செய்வார்கள்?"
"நீங்கள் ஆண்டவனை சொல்லவில்லையே?"
"ஆண்டவர்கள் தான் சந்தேகிக்கிறார்கள். நாம் நம்மை நம் பதவியை காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டியதிருக்கிறது."
"பூடகமாக பேசுகிறீர்கள்"
"பு ரியாத வரை நல்லது. ஆதித்தன் நாளை வரப்போவதை அறிந்தவுடன் நஞ்சுண்டனின் தூக்கம் தொலைவது உறுதி " என்ற பிரம்மராயர் புன்னகைத்தார்.
நஞ்சுண்டனை தேடி இரு ஆபத்துகள் வெவ்வேறு வழிகளில் விரைந்து கொண்டிருந்தன.