Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆனந்த லெட்சுமியின் "ஊடலில் திளைத்தேன்; கூடலில் தொலைத்தேன்"

Anantha Lakshmi

Saha Writer
Messages
33
Reaction score
2
Points
8
வணக்கம் தோழமைகளே..

நான் உங்கள் ஆனந்த லெட்சுமி. இதோ என் போட்டி கதை உங்களுக்காக.

காதல் திருமணம் செய்துக்கொண்ட ஒரு இளம் தம்பதியினர் வாழ்வில் நடக்கும் 36 மணிநேரத்திற்கு உள்ளான பரபரப்பான நிகழ்வு தான் கதை. காதலால் கசிந்துருகி கொண்டாடிய தருணங்கள் எல்லாம் கடலில் கரைத்த காயமென காணாமல் போவதை இக்கதையில் காணலாம்.

நாயகன்: ரூபன் பிரகாஷ்

நாயகி: மாது

கதை: ஊடலில் திளைத்தேன்; கூடலில் தொலைத்தேன்.

வாருங்கள் கதைக்குள் போகலாம்..
 

Anantha Lakshmi

Saha Writer
Messages
33
Reaction score
2
Points
8
ஊடலில் திளைத்தேன்..! கூடலில் தொலைத்தேன்..!!

அந்த அழகியமாலைப் பொழுதினில், தூக்கத்தில் கலைந்திருக்கும் தன் சுதந்திர கார்க்கூந்தலை வருடியவாறு கண்விழித்தாள் மாது.

‘விடியலை மீட்டெடுக்கவா? இல்லையேல் இரவைப் பரிசளிக்கவா?’ என்ற யோசனையில் இருக்கும் அரைகுறை இருட்டு!


அதிகம் ஆர்ப்பரிக்காமல் அளவோடு சிந்தும் தூறல்!
ஏலக்காய் கமகமவென மணம் வீச இதமான சூட்டில் தேனீர்!

இயற்கையும், அவளும் இணைவதற்கென்றே அத்தனை நாடகங்களும் நடந்தேறியதாக, இருள் சூழ காத்துக் கொண்டிருக்கும் வெளிச்சத்தில், சிந்தும் தூறலை அனுபவித்தவாறு தேனீரை ருசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஊட்டியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையின் வேகம் சற்றுக் குறைந்து தூறல்களாய், மூன்றாம் நாளான அன்றும் தொடர்ந்து கொண்டிருந்தது.

“மாதும்மா… பால்கனியில என்ன செய்ற? உள்ளவா… மழை இன்னும் தூறல் விட்டுட்டு இருக்கு”

அவளை நெருங்கியபடி மொழிந்து கொண்டிருந்தான் ரூபன்பிரகாஷ்.

அவளுக்கோ அந்த லக்ஷரியஸ் மேன்ஷனின் இரண்டாம் தளத்தில் இருக்கும், அவர்களது அறையின் பால்கனியில் இருந்து மங்கும் வெளிச்சத்தில் இலைகளின் அளவான அசைவுகளையும், பறவைகளின் மெல்லிய குரல்களையும் கேட்க அலாதி இன்பமாய் இருந்தது.

தன்னை நோக்கி வரும் அவனது காலடிகளை உணர்ந்தவள் சற்றும் அசைந்துக் கொடுக்காது, மழைச்சாரலிடமே தன்னைக் குத்தகைக்குக் கொடுத்திருந்தாள்.
வானில் பூத்த அந்த புதுநீரும், மூக்கில் விரல் வைக்குமாம்! புதுப்பெண் அவளின் பரிசுத்தத்தை கண்டு!

தன் மனதின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கூட தன்னவனை மட்டுமே நிறைத்திருந்த காதல் தேவதை அவள். தன்னவனுக்காக இந்த உலகையே வீழ்த்தும் சக்தி கொண்டவளும் அவளே! விளையாட்டாயினும் தன்னவனை விட்டுத் தரும் சக்தியற்றவளும் அவளே!

அவனுக்கோ அவளது அந்த அழகியத் தெவிட்டாத அன்பைச் சீண்டிப் பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். ஆனால் அது அவளைத் தன்னிடம் இருந்து நிரந்தரமாய்ப் பிரித்துப் பகடையாடப் போகிறது என்று அறிந்திருந்தால், அதனை செய்யாதிருந்து இருப்பானோ என்னவோ? இறைவனுக்கே வெளிச்சம்.

அவனது அழைப்பு காதில் விழுந்தும் விழாதவளாய், சாரலின் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவளை, பின்னிருந்து இறுக அணைத்தான் ரூபன். வரிவரியாய்ச் சிந்தும் மழைத்துளி அவளது மேனியெங்கும் முத்தமிட்டுக் குளிர்ச்சியைப் பரப்பியிருக்க, அக்குளிர்ச்சி அனைத்தும் ஒற்றை நொடியில் தீ என வெதும்பிப் போனது, அவனது ஒட்டு மொத்த அரவணைப்பால்.

“என்னடி… சொல்லச் சொல்ல காதுல வாங்காம அப்படியே நின்னுட்டு இருக்க?” வாடைக் காற்றுக்கும் சிறிது வாய்ப்பளித்து தன் மெல்லிய குரலை அவளது செவிக்குள் இதமாய் அனுப்பினான் ரூபன்.


அவனது ஸ்பரிச தீண்டலில் சிலையென இறுகி நின்றிருந்தாள் மாது. அவளை உயிர்ப்பிக்கச் செய்வதென புறப்பட்ட அவனது மூச்சுக் காற்றால் அவள் தேகத்தின் மயிர்க் கால்கள் எல்லாம் உயிர்ப் பூத்து நின்றது. மெதுவாய் அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள், “நாம செஞ்சது தப்பில்லையா ரூபி?” என்றாள் தனது தேன் குரலில்.

அரவணைப்பின் வழியே அவளுக்கு அனுப்பிய தளிர்ச் சூடு தற்பொழுது மொத்தமாய் அவன் தலைக்கு ஏறியதோ என்னவோ! முகத்தில் அப்படியொருக் காட்டத்தை வெளிப்படுத்தினான், அவளது கேள்வியை எதிர் கொண்ட மறுகணம்.

“என்னாச்சு ரூபி? எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?” பேதையின் வார்த்தைகளில் ஆயிரம் வடுக்கள்.

“ஏன் மாது? திடீர்ன்னு ஏன் இப்படி ஒரு சந்தேகம் உனக்கு? என் மேல நம்பிக்கை இல்லையா?” வேதனையின் விளிம்பில் நின்றவனுக்குக் கேட்க வேறு கேள்விகள் இல்லை.

“ஐய்யோ... ரூபி..! என்ன இப்படி கேட்குறீங்க? நம்பிக்கை இல்லாமலா நீங்க கூப்பிட்ட உடனே உங்க கையை பிடிச்சிக்கிட்டு ஓடிவந்தேன்?” பதற்றம் குறையாமலேயே கேட்டாள் மாது.

“இருட்ட ஆரம்பிச்சிருச்சு… மழை வேற பெய்யுது! உள்ள போய் பேசலாம் வா!” என்றவனைப் பின் தொடர்ந்தவள் நடுக்கூடத்தில் இருக்கும் சோபாவில் அவனருகே அமர்ந்தாள்.

எதுவும் பேசாமல் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க, அவனது கரத்தைத் தன் கரத்தால் பற்றிக் கொண்டவள் “என்ன ரூபி?” என்றாள்.

“உனக்குத் தப்புனு தோணுச்சினா இப்பவே நாம ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்குக் கிளம்பிப் போய்டலாம்!” என்றான் ரத்தினச் சுருக்கமாக.

“ஹேய்... என்னடா? நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி பேசிட்டு இருக்குற நீ?” அதிர்ச்சித்தாள் மாது.

அவளை எங்கு, எப்பொழுது, எப்படி ஆட்டி வைக்க வேண்டும் என்று நன்கு அறிந்த ரூபன்,

“வேற எப்படிப் பேசச் சொல்லுற மாது? நேற்று வர நாம லவ்வர்ஸ் மட்டும்தான். இன்னைக்கு நீ என் வைஃப்! உன்னோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம். அது மட்டும் தான் முக்கியம். கல்யாணம் பண்ணி எட்டு மணிநேரம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி ஒரு கேள்வி கேட்டா?” என்றான்.


“ஓகாட்... அப்படி இல்லை ரூபி! நான் என்ன சொல்ல வந்தேன்னா...” அவள் முழுதாய் முடிக்கும் முன்னரே இடைவெட்டிய ரூபன்,

“உனக்கு அப்பா அம்மா தான் முக்கியம்னு நீ நினைச்சா தாராளமா போகலாம் மாது. உன்ன எப்படிக் கூட்டிட்டு வந்தனோ அப்படியே கொண்டு போய் உன் பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சிடுறேன்” என்று அவள் உள்ளம் அறிந்த தந்திரனாய் கூறினான்.

அவன் எய்த அம்பு சிறிதும் குறி தவறவில்லை. அந்த சொல்லைக் கேட்டுத் துடிதுடித்துப் போனாள் நங்கை அவள்.

“ரூபி..! தயவு செய்து நிறுத்து! ஐயம் சாரி! இனி இப்படிக் கேட்க மாட்டேன். எனக்கு நீ தான் முக்கியம். நீ மட்டும் போதும் எனக்கு! வேற யாரும் வேண்டாம்!!” என்றவள் கண்களில் கண்ணீர்ப் பூக்க அவனது மார்பில் புதைந்துக் கொண்டாள்.

காதலுக்குக் கண் இல்லையாம். இது ஆன்றோர் சொன்ன வாக்கு. ஆனால் ஆனந்தலெட்சுமி சொல்வதோ வேறு வாக்கு. ‘இவனது காதலுக்குக் கண் மட்டும் அல்ல, கண்ணியமும் இல்லை!’

தன்னவளை இழக்கக் கூடாது என்று அவன் எண்ணுவதில் தவறேதும் இல்லை. ஆனால் ஊடல் பொழுதுகளில் எல்லாம் காதல் மந்திரத்தைக் கையாள்வதை விடுத்துக், காதல் தந்திரத்தை கையாள்வது கண்ணியமானக் காதலனுக்கு அழகல்ல!

மார்பில் கிடந்தவளின் சிரசை வருடியவன், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது மாது… கடைசி வரை என்கூட இருப்பதானே?” என்றான் பச்சைக் குழந்தையின் பாஷையில்.

“என்னடா நீ! பைத்தியம் மாதிரிப் பேசிட்டு இருக்க? உன்ன விட்டு நான் எங்க போகப் போறேன்?” என்று அவனது வெற்று மார்பில் அடித்தவாறு எழுந்தவள்,

“சரி வா! கோத்தகிரி காலேஜ்ல ரெண்டு பேருக்கும் சீட் கிடைச்சிடுச்சுனு சொன்னியே! எங்கே காட்டு?” என்றாள்.

“இதோ! இந்த காலேஜ் தான்... ரெண்டு பேருக்குமே எம்.ஏ. இங்கிலிஷ் போட்டாச்சு” என்று ஒரு புக்லெட்டை நீட்டினான் ரூபன்.

“என்னடா? உனக்கும் இங்கிலீஷா? எனக்காக நீயும் இங்கிலீஷ் போட்டியா?” எனக் கேட்டாள் மாது.

அதற்கு மெல்லிய சிரிப்புடன் தலையாட்டியவனை கண்டு வியந்தவள் “டேய்! ஏன்டா? உன்ன ஒரே காலேஜ்ல தானே போடச் சொன்னேன்! எதுக்கு ஒரே டிப்பார்ட்மெண்ட்? உனக்கு பிடிச்ச காமர்ஸ் டிப்பார்ட்மெண்ட்லயே போட்டிருக்கலாம்ல?” என்றாள்.

“ஹேய்... வேறவேற டிப்பார்ட்மெண்ட்ல இருந்துட்டு எப்படி உன்ன பார்த்துக்கறது?” என்றான் ரூபன்.

“அடேங்கப்பா! யூ.ஜி. படிக்கிறப்ப ஒரு நாளைக்கு நூறு தடவை உன் டிப்பார்ட்மெண்ட்ல இருந்து, என் டிப்பார்ட்மெண்ட்க்கு நடராஜா சர்வீஸ்ல வந்து என்னை சைட் அடிப்பியே! அப்படித் தான் இப்பவும் வந்து பார்த்துக்கனும்!” என்றாள் குறும்போடு.

“அதுல்லாம் லவ் செட் ஆகுறதுக்கு முன்னாடி. இப்பத்தான் கல்யாணமே பண்ணிட்டனே! இனி எதுக்கு அதெல்லாம்?” என்றான் சலிப்பாக.

“அடப்பாவி?! கல்யாணம் பண்ணா எல்லாம் அவ்வளவு தானா? நம்மள விட்டுட்டு எங்கே போயிடப் போறா! அப்படீங்கற திமிரு... அப்படித்தானே?” என்றவளது முகத்தில் சற்றுமுன் இருந்த குறும்புப் புன்னகை எந்த தடமுமின்றி மறைந்திருந்தது.

“அஃப்கோர்ஸ்!” என்று அவன் கூற மேலும் வாடிப்போனது அவள் முகம்.

“ஏய் லூசு... சும்மா விளையாடினேன்டி! இதுக்கு போய் மூஞ்ச தூக்கி வச்சிக்கற?” என்று அவளைத் தோளோடு அணைத்தான் ரூபன்.

“இந்த மாதிரி என்கிட்ட விளையாடாதேனு பலமுறை சொல்லியிருக்கேன் பிரகாஷ்.! என்னால இத எல்லாம் தாங்கிக்கமுடியாது” என்று கண்களிலும் வார்த்தையிலும் அழுத்தம் நிரம்பக் கூறினாள் மாது.

ரூபன்–ல் இருந்து ரூ–வையும், பிரகாஷில் இருந்து பி-யையும் இணைத்து ரூபி என அவள் செல்லமாக அழைப்பது எல்லாம் கோபத்தில் காணாமல் போய் விடும். ஒவ்வொரு முறையும் அவள் திருத்தமாக அழைக்கும் பிரகாஷ் எனும் உச்சரிப்பின் அழுத்தத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், அவள் மனம் எவ்வளவு நொந்து போய் இருக்கிறது என்பதை.

தங்கள் மணவாழ்வின் முதல்நாளில், முதல்ஊடலாய் படர்ந்து வந்த இதே விஷயம், புல்லுருவியாய் மாறி தங்கள் சந்தோஷத்தை மொத்தமாக பிடுங்கிக் கொள்ளப் போகிறது என்பதை உணராமலேயே இருவருக்கும் அன்றையநாள் முடிந்தது.

மறுநாள் காலை ஆறுமணிக்கு அடித்த அலாரத்தை நிறுத்தியவாறு எழுந்தாள் மாது. அருகில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவன் ரூபன்பிராகாஷை பார்த்தவளுக்கு நேற்று தன் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டவுடன் அவன் கூறிய முதல் வார்த்தை தான் நினைவுக்கு வந்தது.

“நமக்கு இப்பவே குழந்தை எல்லாம் வேணாம் மாதுமா! ரெண்டு பேரும் ஹையர் ஸ்டடீஸ் முடிச்சு நல்ல வேலையில சேர்ந்த அப்புறமா புள்ள பெத்துக்கிட்டா போதும்” என்று கூறியிருந்தான்.

அவ்வாறு கூறியதோடு மட்டும் இன்றி அதனை கடைப்பிடிக்கும் தன் காதல் கணவனை எண்ணி சிறுபுன்னகையை அவளது உதடுகள் ஏந்திய மறுகணமே மனதில் தோன்றியது நேற்றைய வாக்குவாதம்.

‘ஏன் என் மனச புரிஞ்சிக்கவே மாட்டேங்கற ரூபி? லவ் பண்ணும் போதும் அப்படிதான். மத்த பொண்ணுகள காட்டி என்ன வெறுப்பேத்துவ... விளையாடுறதா சொல்லி என்னை அலட்சியப்படுத்திப் பேசிக் காயப்படுத்துவ... அது எல்லாம் என்னை எவ்வளவு ஹர்ட் பண்ணுதுனு தெரியுமா? நீ என்ன விட்டு சின்னதா விலகினாலும் அத என்னால தாங்கிக்க முடியாது ரூபி! லவ்யூ சோ மச்டா’ என்று அவன் முகம் பார்த்தவாறு தன் மனம் வழியே அவனுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தாள் மாது.

பிரதிபலன் எதிர்பார்க்காதது தான் உண்மையான காதல் என்று வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையே!

நேற்று அவள் சாதாரணமாய் ஒன்று கேட்க வந்து, அதை என்னவென்று கேட்கும் முன்னரே, அவன் துடிக்கிறான் என்று தெரிந்து கொண்டவள், அடுத்த கணம் மனம் பதறி மொத்தமாய் அவனிடம்ச ரணடைந்தாள் அல்லவே?

அந்த அளவு இல்லாவிடிலும் ஒரு செயல் தன்னை நோகடிக்கிறது என்று தானே வாய்விட்டுக் கூறிய பின்பும் தொடர்ந்து அதைச் செய்யத் துணிபவனை எண்ணிக் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை பெண்ணால்.

நியாயமான எதிர்பார்ப்புகள் எந்த உறவிலும் தவறாகாது என்பது நிதர்சனம். ரூபன் – மாது வாழ்விலும் அது பொருந்தும்.

அவளது பார்வையின் தீவிரம் கூடியதோ என்னவோ அவனிடம் தற்பொழுது சிறு அசைவு தென்பட்டது. விழிகளைக் கசக்கியவாறு எழுந்துக்கொண்டவன், “என்னடி... என்னையே பார்த்துட்டுஇருக்க? மாமா மேல அம்புட்டு ஆசையா?” என்றான் அவளைச் சீண்டும் பார்வையில்.

“போடா... ஊத்தபல்லு! உன்னப் பார்த்துட்டாலும்...” என்று நொடித்துக் கொண்டாள் மாது.

“ஓஓ... நான் ஊத்தபல்லா? அப்ப மேடம்?” என்றான் நக்கலாக.

‘காலையிலயே பல்ப் வாங்கினியா’ என்று எண்ணியவாறு தன் நாக்கை கடித்துக் கொண்டவள்

“சரிசரி... சீக்கிரம் எழுந்திரு! முதல் நாள் காலேஜ்க்கு லேட்டாப் போயிடக் கூடாது” என்றாள்.

“ஹீட்டர ஆன் பண்ணி வைடி! நான் பல் தேய்ச்சிட்டு வர்றேன்” என்றான் குடும்பத்தலைவன் பாணியில்.

“ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் மிஸ்டர்.ரூபன்பிரகாஷ்! நான் உங்க சர்வீஸ் வுமன் இல்ல! நானும் இப்ப தானே எழுந்தேன். நானும் பல் தேய்க்கணும், குளிக்கணும், காலேஜ் போகணும். சோ இங்க அவங்கவங்க வேலைய, அவங்க அவங்க தான் பார்த்துக்கணும். புருஷன்னு சொல்லி அதிகாரம் எல்லாம் செய்யக்கூடாது. வீட்டு வேலைய ஆளுக்குப் பாதியா பிரிச்சிக்கலாம். ஷிஃப்ட் போட்டு வேலைய மாத்திக்கலாம். காட்இட்?” என்று ஒரே மூச்சாக கூறி முடித்தாள் மாது.

அவளை பேயறைந்தாற் போல பார்த்துக் கொண்டிருந்த ரூபன் “ஒரு சுவிட்ச் போட சொன்னதுக்காடி! இவ்வளவு அக்கப்போரு?” என்றான்.

“சில விஷயங்கள ஆரம்பத்துலயே பேசிடுறது நல்லது ரூபிமாது” என்றாள் விறைப்பாக.

“என்னது ரூபிமாதுவா? இது என்னடி புதுசா?” என்றான் பொய் அதிர்ச்சியுடன்.

“என்னை மட்டும் மாதுரூபன்பிரகாஷ்னு சொல்லுறீங்க! ஏன் உங்கள நான் ரூபிமாதுன்னு சொல்லக்கூடாதா?” என்று பட்டாசாய் வெடித்தாள்.

“இல்லடீ... அதுவந்து...” தலையை சொறிந்துக் கொண்டே வார்த்தையை இழுத்தான் ரூபன்.

“அப்ப மிஸ்டர்.மாதுன்னு சொல்லட்டுமா? நான் மிஸஸ்.ரூபன்... நீ மிஸ்டர்.மாது... எப்படி?” என்று விழிகள் விரியக் கேட்டாள்.

இப்பொழுது நிஜமாகவே அதிர்ச்சி தொற்றிக் கொண்டது ரூபனுக்கு. “லூசு பிடிச்சிருச்சாடி?” என்றான்.

“சொல்லுடா!” என்று சிணுங்கினாள் மாது.

“உன்கிட்ட ஒண்ணுமே கேட்கமாட்டேன் தாயே! கிளம்பு காலேஜ்க்கு போகலாம்” என்று கை எடுத்து கும்பிட்டான் ரூபன்.

ஒரு வழியாக தயாராகி கல்லூரிக்கு சென்றவர்கள் தங்கள் வகுப்பறையை கண்டுபிடித்து ஆண்கள் வரிசையில் ரூபனும், பெண்கள் வரிசையில் மாதுவும் அமர்ந்து கொண்டனர்.

அப்போது தன் தொலைபேசியில் இருந்து தனது நண்பன் அரவிந்திற்க்கு அழைப்புக் கொடுத்த ரூபன்,

“டேய் மச்சான்! நான் மாதுவ கல்யாணம் செஞ்சிட்டேன்டா!” என்றான்.

“என்னடா சொல்லுற? அப்ப நந்தினி?” அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் அரவிந்த்.

“இல்லடா... ஒரு சின்ன சண்டைக்காக என்ன வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு போனா நந்தினி! அவள நினைச்சு நான் வருத்தப்படும் போது நல்ல தோழியா இருந்தா மாது! நாங்க லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் நான் நந்தினிய நினைச்சு ஃபீல் பண்ணப்ப எல்லாம், அவளோட வலியையும் மறைச்சிட்டு எனக்கு சப்போர்ட் பண்ணா... எந்த பொண்ணுக்குடா வலிக்காது? தன்னோட காதலன் வேற பொண்ண நினைச்சு நித்தமும் அழுறது?” நல்லவனாய் பேசினான் ரூபன்.

“பின்ன எதுக்குடா? நந்தினி கிட்ட போய் அப்படி கெஞ்சின?!” சரியான கேள்வியை கேட்டான் அரவிந்த்.

“தெரியலடா... என்னால நந்தினிய மறக்கமுடியல தான். ஆனால் இல்லாத நந்தினிக்காக இருக்கற மாதுவ இழக்க நான் தயாரா இல்லடா!” – ரூபன்.

“டேய்… நீ செய்யுறது ரொம்பத் தப்புடா! நந்தினிய வேணாம்னு முடிவு செஞ்ச அப்புறம் அப்படியே விட்டுருக்கனும். இதுல நீ மாதுவ லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் கூட நந்தினிக்கு கால்(call) பண்ணுறது, மெசேஜ் பண்ணுறது, அவள பேசச் சொல்லிக் கெஞ்சுறது, இத எல்லாத்தையும் மாதுகிட்ட இருந்து நீ மறைச்சது மட்டும் இல்லாம, உனக்காக நானும் மறைச்சேன்! சரி உனக்கும் நந்தினிக்கும் இடையில பிரச்சனை முடிஞ்சி, நீ மாது கூட சந்தோஷமா இருந்தா போதும்னு தான் நான் நினைச்சேன். நீ அவள முடிச்சி விடுறதா தெரியல எனக்கு. என்ன தைரியத்துல மாதுவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என்கிட்ட சொல்லுற நீ? என்கிட்ட இதபத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல நீ? உனக்கு தேவைப்படுற விஷயத்துல மட்டும் என்னை யூஸ் பண்ணியிருக்கனு தானே அர்த்தம்.” அரவிந்த் பேச்சில் காட்டம் தென்பட்டது.

“நான் நேரம் கிடைக்கறப்ப உண்மைய மாது கிட்ட சொல்லிடுவேன்டா” என்றான் ரூபன்.
“என்ன உண்மைய? என்னால நந்தினிய மறக்கமுடியாது, அவகிட்ட போஃன்ல குடும்பம் நடத்துறேன்... உன்கூட நேர்ல குடும்பம் நடத்துறேன்னா?” கேள்விகளை அம்பென எய்தான் அரவிந்த்!

“டேய் அரவிந்த்!” அலறினான் ரூபன்.

“பின்ன... நீ சொல்லுறதுக்கு என்னடா அர்த்தம்? பாவி! பாவி! உன்கூட சேர்த்து என்னையும் பாவி ஆக்கிட்டியேடா! நீ கஷ்டப்பட்ட காலத்துல உனக்கு ஆறுதலா இருந்து உனக்கு சப்போர்ட்டா நின்னவடா மாது! அவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய எப்படிடா முடியுது உன்னால?? சுயநலவாதி!! முதல்ல போஃன மாதுகிட்ட குடு!” என்றான் அரவிந்த்.

“எங்க ரெண்டு பேருக்கும் கோத்தகிரி ஆர்ட்ஸ் காலேஜ்ல எம்.ஏ. போட்டுருக்கேன்டா! இப்ப காலேஜ்ல தான் இருக்கோம். நான் வீட்டுக்குப் போய்ட்டு உன்கிட்ட பேசுறேன்” என்றவன் உடல் நடுங்கியவாறு அழைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து, “பசங்களா..! எல்லாரும் மீட்டிங்ஹால்க்கு போங்க... இங்க இருந்து நேரா போய் இடது பக்கம் திரும்பினா ரெண்டாவது ரூம்தான் மீட்டிங்ஹால்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

புது மாணவர்கள் அனைவரும் அங்கு சென்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமர்ந்துக கொண்டனர். வாசலுக்கு அருகே இவர்களுக்காவே போட்டு வைத்தாற் போல இரண்டு நாற்காலிகள் ஒரு சேரகாலியாக இருக்க, அதில் அமர்ந்து கொண்டனர் ரூபன்தம்பதியினர். அமர்ந்தமறுநொடி, “ஹேய்மாது….!” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தனர் இருவரும்.

“ரேகா!” அதிர்ந்து போனாள் மாது.

ரேகா மாதுவின் தோழி. பள்ளிப் பருவத்தில் இருந்து இளங்கலை படிப்பு வரை தொடர்ந்து கொண்டிருந்த இணைப்பிரியாநட்பு.

ரூபனை திருமணம் முடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து இருவருக்குள்ளான தொடர்பும் விட்டுப் போய் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்பு தன் உற்ற தோழியைக் கண்டதில் மகிழ்ச்சி அடையும் நிலையில் மாது இல்லை. காரணம் அவள் செய்திருந்த செயல் அப்படி.

“எப்படிடீ இருக்க? என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்க நீ?” என்று பற்களைக் கடித்தவாறு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசிய பொழுது தான், அவளது கழுத்தில் இருந்த ஈரம் காயாத மஞ்சள் கயிற்றினை பார்த்தாள் ரேகா.

“ஓ... கல்யாணத்தையும் முடிச்சாச்சா?! அவ்வளவு அவசரமாடி உனக்கு?” என்ற ரேகாவின் முகத்தைப் பார்க்க இயலாமல் தலைகுனிந்து மெளனமாய் அழுது கொண்டிருந்தாள் மாது.

“ரேகா..!” கொஞ்சம் காட்டமாகத் தான் கூறினான் ரூபன்.

“நான் உன்கிட்ட பேசல பிரகாஷ்! என் பிஃரண்ட் கிட்ட பேசிட்டு இருக்கேன்!” வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு எனும் பாணியில் கூறினாள் ரேகா.

அப்பொழுதும் தலைநிமிராமலே கலங்கிப் போய் அமர்ந்திருந்த மாதுவின் கையைப் பிடித்து, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் ரேகா. கோபத்துடன் எழுந்த ரூபன் அவர்களது பின்னே செல்ல எத்தனித்த தருணம், அவர்களது கல்லூரியின் மூத்த பேராசிரியர் உள்ளே வர, அந்த அறையின் கதவு மூடப்பட்டது.

வாசலில் நின்றிருந்த ஒருவரிடம் “சார்! கதவை கொஞ்சம் திறங்க சார்... நான் வெளியில போகணும்” என்றான் ரூபன்.

“தம்பி! மீட்டிங் ஆரம்பிக்கப் போகுது. இனி வெளியில அனுப்ப முடியாது. போய் உட்காருங்க” என்று அவர் கூறவும் வேறு வழியின்றி கோபக்கனலுடன் அந்த அறைக்குள் அடங்கியிருந்தான் ரூபன்.

மாதுவை இழுத்துக் கொண்டு வெளியே வந்த ரேகா, “என்னடி இதெல்லாம்? நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்பார்த்தேன் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரத்துல பண்ணுவனு நினைக்கலடி!” என்று அனல் தெறிக்கும் பார்வையுடன் கேட்டாள் ரேகா.

“இல்லரேகா...” அழுகுரலில் மாது பேசத் தொடங்க,

“ச்சீ... வாயமூடு! உன் அப்பா, அம்மாவ விட இவன் உனக்கு பெருசா போயிட்டானா? நான் உன்கிட்ட ஆரம்பத்துல இருந்தே சொன்னேன். இது சரிபட்டு வராது, வேணாம்... வேணாம்னு... இப்படி செஞ்சிட்டு வந்து நிக்குறியேடி! உன் அம்மா என்கிட்ட சொல்லி அழுதப்ப கூட, அவ உடனே திரும்பி வந்திடுவாம்மா! அவளால நீங்க இல்லாம இருக்க முடியாது! சீக்கிரமே உங்க பொண்ணாவே திரும்பி வந்திடுவானு சொன்னேன். இப்படி மண்ண அள்ளிப் போட்டுட்டியேடி!” என்று தன் ஆதங்கத்தை வார்த்தைகளால் வடித்துக் கொண்டிருந்தாள் ரேகா.

“இல்ல ரேகா! நாங்க இன்னும் எங்க வாழ்க்கைய ஆரம்பிக்கல. கல்யாணம் பண்ணிக்கிட்டா தான், அவன் நிம்மதியா இருப்பான்னு தான், கல்யாணம் செஞ்சோம். செட்டில் ஆன அப்புறமா தான் எல்லாம்னு ரூபியே சொன்னான்” என்று விம்மிக்கொண்டே கூறினாள் மாது.

“ஓ... அப்பகூட அப்பா அம்மாவ போய்ப் பார்க்கனும்ங்கற எண்ணம் இல்லை? அப்படித்தானே? என்ன சொன்ன? கல்யாணம் செஞ்சிக்கிட்டா தான் அவன் நிம்மதியா இருப்பானா? இப்ப உன் வீடே நிம்மதி இல்லாம இருக்கே! அதுக்கு என்ன பதில் சொல்லப்போற?” என்ற ரேகாவின் கேள்விகளுக்கு மாதுவிடம் பதில் இல்லை.

ரூபன் நல்லவன் என்று சொல்வதற்காக பேசத் தொடங்கி, அது வேறுவிதமாய் முடிந்துவிட்டதே என்று எண்ணி வாயடைத்து நின்றிருந்தாள் பெண் அவள்.

“உன் புத்தி ஏண்டி இப்படி போய்டுச்சு? அவனுக்கு லவ் ஃபைலியர் ஆன பிறகு உன்கிட்ட பழகியிருக்கான். எதனால அந்தப் பொண்ணு இவன வேண்டாம்னு சொன்னானு கொஞ்சம் கூட யோசிக்கமாட்டியா? அந்த பொண்ண உண்மையிலயே லவ் பண்ணியிருந்த அவளோட பிரேக்-அப் ஆன நேரத்துல உன்கிட்ட ஃப்லிர்ட் பண்ணியிருப்பானா? இத நான் பலமுறை உன்கிட்ட சொல்லிட்டேன். நம்ம ப்ரெண்ட்ஸ் அசோக், குணால் எல்லாரும் கூட பொண்ணுங்க கிட்ட அப்படி பேசுறாங்களே... அது எல்லாம் விளையாட்டுதானேனு அன்னைக்கு நீ என்கிட்ட கேட்ட! இன்னைக்கு அதுவே உனக்கு வினையாகி நிக்குது! அத கூட புரிஞ்சிக்க முடியாத அளவு காதல் உன் மூளைய மழுங்கடிச்சிடுச்சா?” -ரேகா.

அவளது கேள்விகளுக்குப் பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து நின்றுக் கொண்டிருந்த மாது, தன்னால் முடிந்த வரை தன் கணவனைக் காப்பாற்ற முயன்றாள்.

“இல்லடி ரேகா... நீ நினைக்கற மாதிரி இல்லை ரூபி, ஆரம்பத்துல நாங்க ப்ஃரண்ட்ஸா இருந்தப்ப அவன், அவனோட எக்ஸ்லவ்வர் நந்தினி பத்தி நிறைய சொல்லியிருக்கான். அவள நினைச்சு ஃபீல் பண்ணும் போது நான் மட்டும் தான் புரிஞ்சிக்கறேன்னு சொல்லுவான். அவன் வருத்தப்படும் போது என்னால பாக்க முடியல ரேகா! அவனுக்கும் ஆறுதல்னு ஒண்ணு அந்த சமயம் தேவைபட்டுச்சு. அது என்கிட்ட கிடைக்கிறதா அவன் உணர்ந்தான். எந்த இடத்துல அது காதலா மாறுச்சுனு எங்களுக்கே தெரியல ரேகா? ஆனால் அவன் இல்லாம என்னால வாழ முடியாது. அது மட்டும் நிஜம்” என்றாள் மாது.

“என்னடி வாழ முடியாது? என்ன வாழ முடியாது? எந்த இடத்துல காதலா மாறுச்சுனு உனக்கு தெரியாதுனு சொல்லு. அவனுக்கு எல்லாம் தெரியும். ஏன்னா எல்லாத்தையும் அவன் ப்ளான் பண்ணித்தான் செஞ்சிருக்கான். ஒண்ணு பிரேக்-அப் ஆன உடனேயே அவன் உன்கூட கமிட் ஆகிருக்கக் கூடாது. இல்லையா உன்கிட்ட கமிட் ஆன அப்புறம் அந்த நந்தினி கிட்ட மறுபடியும் போய் பேசியிருக்கக் கூடாது. நல்லா டபுள் சைடும் கோல் அடிச்சிட்டு இருக்கான் உன் கண்ணு முன்னாடியே. உனக்கு இது எல்லாம் புரியுதா இல்லையா?”- ரேகா.

“உண்மையா காதலிச்சுருக்கான் ரேகா. என்னால அவள மறக்க முடியல. அவ மேல உள்ள ஃபீலிங்க்ஸ் குறைய நாள் ஆகும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் சீக்கிரமே அவளை மறந்திடுவேன்னு சொன்னான் ரேகா” என்று அவள் கூறிய மறுநொடி அவளது கன்னத்தில் தன் விரல்களை பதிய வைத்திருந்தாள் ரேகா.

“என்ன பேசுறனு தெரிஞ்சி தான் பேசுறியா? இத எல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? இப்படி உன் தலையில நீயே மண்ண அள்ளிப் போட்டுருக்கியேடி?” என்று காளியாக மாறிய ரேகா, மாதுவின் கழுத்தில் இருந்த தாலியை ஒரே இழுப்பில் அறுத்து எடுத்திருந்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மாது கண்கள் சிவக்க “ரேகா!” என்று கத்தியபடி அவளை அடிக்க கையை ஓங்கினாள். அந்த நேரம் சரியாக ரூபனும், இவர்களுக்கு அருகே வந்திருந்தான்.

மாதுவின் வேகத்திற்கு சிறிதும் குறைச்சல் இல்லாமல் அவள் கையைப் பிடித்துத் தடுத்த ரேகா, “நான் காட்டுறத பார்த்த பிறகு என்னை அடிக்கணுமா இல்ல இதோ நிக்குறானே, உன் உத்தமபுருஷன் அவனை அடிக்கணுமானு நீயே தெரிஞ்சிப்ப!” என்றவள் தன் கைப்பேசியை எடுத்து அதில் இருந்த ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் சில ஆடியோ பதிவுகளை மாதுவின் வசம் கொடுத்தாள்.

அனைத்தும் ரூபனும், மாதுவும் காதலிக்கத் தொடங்கிய பின்னர் ரூபன், நந்தினியிடம் பேசியதற்கான சாட்சிகள். சிலவற்றை பார்த்துக் கண்களில் வெறியேறியது மாதுவிற்கு. சிலவைகளை அவளால் கண்கொண்டும் பார்க்க முடியவில்லை. அத்தனையையும் பார்த்து முடித்தவளுக்கு அப்பொழுதுதான் மூளை வேலை செய்யத் தொடங்கியது.

ரூபன் இளநிலை கல்லூரி காலங்களில் வேறு பெண்களின் பெயர்கள் சொல்லியும், மற்ற பெண்களுடன் அரட்டை அடித்தும் தன்னை வெறுப்பேற்றி மகிழ்ந்ததும் தான் அவன் மீது கொண்டுள்ள காதலின் ஆழத்தை சீண்டிப் பார்ப்பதற்கு அல்ல என்று அப்பொழுது அவளுக்குப் புலப்பட்டது. தன்னிடம் “நீ தான் எல்லாம்” என்று வசனம் பேசிய அதே நாட்களில் முன்னாள் காதலியிடம் கெஞ்சி நின்றிருக்கிறானே என்று எண்ணி அவளது மனம் சுக்குநூறாய் போனது. அவன் பேசிய அனைத்தையும் நம்பிக் கொண்டு இத்தனை நாட்கள் முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று தன் மீதே கோபம் வந்தது மாதுவுக்கு.

இவற்றை பிரம்மை பிடித்தாற் போலப் பார்த்துக் கொண்டிருந்த ரூபனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. அருகில் சூலாயுதம் இருந்தால் எடுத்து அவனை வதம் செய்யும் துர்கை போல நின்றிருந்தாள் மாது.

“இப்ப சொல்லு மாது! இவன் நல்லவன்னு” என்ற ரேகா, ரூபனிடம் திரும்பி “என்னபிரகாஷ்? அதிர்ச்சியா இருக்கா? இவளுக்கு எப்படிடா எல்லாம் தெரிஞ்சிதுனு அதிர்ச்சியா இருக்கா?” என்றாள்.

வாய் பேச முடியாமல் நின்றிருந்த ரூபனின் அருகில் சென்றவள் “என்ன பிரகாஷ் பார்க்கிற? எல்லாம் அரவிந்த் கிட்ட நீ எடுத்து கொடுத்திருந்த ஆதாரங்கள் தான். தவளை தவளை-னு ஒண்ணு உண்டு தெரியுமா? அது தன் வாயாலயே கெடும்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. நீ நல்லவனாட்டம் அரவிந்த்கிட்ட ஃபோன் பண்ணி பேசினியாமே... நேத்து தான் நான் இங்க சேரப் போற விஷயத்தை அவன்கிட்ட சொல்லியிருந்தேன்.. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் கால்(call) பண்ணி, அரவிந்த் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்... இனி ஒரு பொண்ண ஏமாத்தனும்னு கனவுல கூட நினைச்சிராத... பொண்ணோட மனசுன்னா அவ்வளவு விளையாட்டா இருக்கா உங்களுக்கு? உனக்கு வலிக்கிற மாதிரி ஒரு தடவயாவது அவ நடந்திருப்பாளா? ஒரு காதலனுக்கு, காதலி என்னென்ன செய்ய முடியாதோ, அத எல்லாம் அவ உனக்கு செஞ்சா அந்த நந்தினி விஷயத்துல! எல்லா வலியையும் தாங்கினா உனக்காக... நீ என்ன செஞ்ச அவளுக்கு? வெறுப்பேத்தி வெறுப்பேத்தி அவள அழ வைச்சு கிண்டல் பண்ணத் தெரியும்... வேற என்ன தெரியும் உனக்கு?” என்று ரூபனின் முன் ரேகா கேள்விகளின் உருவமாய் நின்றாள் தன் தோழிக்காக!

திடுமென ஓடிச் சென்று மாதுவின் கால்களில் விழுந்த ரூபன் கத்தினான், கதறினான். அந்த வளாகமே அவர்களைத் திரும்பிப் பார்த்தது.

“என்னை மன்னிச்சிடு மாது... ப்ளீஸ்மாது... ப்ளீஸ்... நான் உன்கிட்ட மறைக்கனும்னு நினைக்கலமா! நேரம் வரும் போது சொல்லலாம்னு தான் இருந்தேன்... சத்தியமா உன்ன ஏமாத்த நினைக்கல மாது! ப்ளீஸ்... என்ன விட்டுப் போயிடாத மாதுமா... ப்ளீஸ்... என்னநம்பு... எனக்கு நீ மட்டும் போதும்... வேற யாருமே வேணாம்மா! எங்கையாவது கண்காணாத இடத்துக்குப் போயிடலாம்... எனக்கு நீ! உனக்குநான்! போதும்... வேற யாரும் நமக்கு வேணாம் மாது... என்னநம்பு மாது... நம்பு ப்ளீஸ்...” என்று மாதுவின் காலைப் பிடித்துக் கதறினான் ரூபன்.

“நான், உன்ன நம்புறேன் ரூபன்பிரகாஷ்!” என்ற மாதுவின் குரலைக் கேட்டு அதிர்ந்து விட்ட ரேகா “மாது!!” என்று கத்தினாள்.

“பேசாத ரேகா! என் புருஷன் அப்படி பண்ணமாட்டான்” என்று மாது கூறியதும் ரூபனின் முகத்தில் அத்தனைப் பிரகாசம்! தொடர்ந்தாள் மாது,
“இவன் இப்படிப் பண்ணியிருக்கான்னா, இவன் என் புருஷன் இல்லை” என்றாள் சாட்டையடியாக!

“மாது….” ஓலமிட்டான் ரூபன்.

“ச்சீ... என் பேர சொல்லாத!” என்றாள் மாது.

“எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடு மாது... என்ன நம்ப மாட்டியாமா?” என்றான் பாவமாக.
“நம்புறேன்... ரூபன்பிரகாஷ்! நிஜமாவே நீ ஜென்டில்மேன் தான்! இப்பவே நமக்கு குழந்தை வேணாம்ன்னு நேத்து சொன்ன பாரு, இன்னும் கொஞ்சம் நாள் ஓடிருந்தா அந்தச் சாயமும் வெளுத்திருக்கும் போல! கடவுள் காப்பாத்திட்டார் என்ன!” என்றவள் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அவள் நினைத்திருந்தால் ஆயிரம் வார்த்தைகள் பேசித் திட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு கூட இவன் தகுதியற்றவன் என்று எண்ணியவள், தனது மெளனமும், பிரிவுமே அவனுக்குச் சரியான தண்டனை என நகர்ந்து விட்டாள்.

அவனின்றி தான் இல்லை என்று நினைத்திருந்த பெண்மை தான், இனி தன் வாழ்வில் அவனில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அன்பின் இருப்பிடம் தேடி, பொய்களின் பிறப்பிடம் வந்தால் வெற்றிடம் மட்டுமே மிஞ்சும் அல்லவா?
காதலில் ஊடல் என்பது உறவை உன்னதமாக்குவதும், உருக்குலைப்பதும் அவரவர் மனத்தூய்மையில் தான் உள்ளது. தனக்கென ஓர் துணையை எதிர்பார்க்கும் மானிடம், அத்துணைக்குத் தான் எல்லா வகையிலும் நேர்மையாய் இருக்க வேண்டுமெனவும் அறிதல்வேண்டும். ஒட்டு மொத்த காட்டை அழிப்பதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதாய் இருக்கிறது. அது போல ஓர் அழகிய உறவை மொத்தமாய் தரைமட்டமாக்க தேவையற்ற சிறுசெயல் போதுமானது.

ரூபன் அத்தனை நாட்கள் மெய்யாள், அவளது உணர்வுடன் விளையாடியதோடு மட்டுமின்றி, தேவையில்லா செயல்களில் ஈடுபட்டு அவளை முட்டாளாக்கியதின் விளைவு, அவன் விரும்பிய வாழ்வை விரும்பிய தருணம் அவனால் வாழமுடியவில்லை. சதா சர்வகாலமும் பெண்களுடன் குறும்பென பொய் உறவாய் நின்று ஊடலில் இன்பமாய் திளைத்துக் கொண்டிருந்தவன் தனக்கானவளுடனான கூடலின் போது வாழ்வை மொத்தமாய்த் தொலைத்து விட்டான்.

ரூபன்பிரகாஷ் ஊடலில் திளைத்தான்; கூடலில் தொலைத்தான்.

முற்றும்
 

Latest posts

New Threads

Top Bottom