Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

Status
Not open for further replies.

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -9

பகலவன் அவன் தன்
பணியை செவ்வனே முடித்துக் கொண்டு மலைமுகடுகளில் சென்று சற்று இளைப்பாறிய நேரம் வான்முகிலவள் தன் பணியை துவங்கியிருக்கும் ஏகாந்த வேளை அது.. விழிகள் யாவும் மெல்ல மெல்ல இருட்டுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள தொடங்கிய நேரம் வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருந்தாள் பௌர்ணமி பெண்ணவள்...


அதேநேரம் ஆந்தைகளும், கோட்டான்களும் அலறிட, நெஞ்சை அச்சத்தில் உருள வைக்கும் இருள் படர்ந்திருந்த அந்திஜாம நேரம்...
மிகிரனைச் சுற்றி போடப்பட்டிருந்த மரத்துண்டுகளின் மீது தீச்சுவாலையை ஏற்ற வைத்திட தயாராக நின்றிருந்தார் தலைவன் போன்ற தோரணையில் இருந்த ஒருவர்.. அவரைச் சுற்றிலும் நின்றிருந்த ஆண்கள் அனைவரும் இடுப்பிற்கு மேலே மேலாடைகள் இன்றி வெற்றுடலோடு நின்றிருக்க, இடுப்பிலிருந்து முட்டி வரை விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்திருந்தனர். திரும்பும் திசை எங்கும் பெண்கள் கூட்டத்தினரின் ஒரு தலையைக்கூட காணவில்லை. ஆனால் பிறந்து சில தினங்களே ஆனாலும் ஆண் பிள்ளை எனில் அவர்கள் நிச்சயம் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென்பது அவர்களது எழுதப்படாத விதியாகும் அதனால் பிறந்து 15 நாட்களே ஆன இளம் சிசு ஒன்றும் ஒரு ஓரமாக அதன் தந்தையின் மடியில் படுத்திருந்தது..


விசித்திரமான முறையில் கால் கைகளை மேலே தூக்கியும் கீழே இறக்கியும், உட்கார்ந்து எழுந்தும், தலைகீழாக நின்றும் மிகமிக வித்தியாசன முறையில் நடனமாடினார்கள் அவர்கள் அனைவரும்.‌

அனைவரும் ஒருசேர மிக ரசித்து, மஙிழ்வுடனே சீரான இடைவெளி விட்டு ஒரே போல் நடனம் ஆடிட.‌ தள்ளி நின்றின்ற தலைவன் போன்றவரும் தன் பங்கிற்கு ஆடி முடித்துக் களைத்தவராய்,
“போதும் ஆடுவதை நிறுத்துங்கள்! தக்க சமயம் வந்துவிட்டது என்பதை உச்சி வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருக்கும் நிலவு உணர்த்துகிறது, வழிவிட்டு நில்லுங்கள்” என்று சத்தமாகக் கூறிட.‌அனைவரும் வழிபட்டு நின்றார்கள்.

பின்பு அடிமேல் அடி வைத்து மிகிரன் இருந்த இடத்தை நெருங்கியவர் கண்கள் மூடிய நிலையில் தன் கையில் இருக்கும் தீப்பந்தத்தை கீழே விட அது அந்தரத்தில் அப்படியே நின்றது. கால்களிரண்டையும் சம்மணம் இடுவது போல் இட்டு தரையில் அமர்வது போல், அந்தரத்தில் அமர்ந்தார் அவர்.‌ இதழ் குவித்து ஏதோதோ உச்சாடனங்கள் செய்த மறுநிமிடம் அந்தரத்தில் மிதந்தவாறு மிகிரனை சுற்றி மும்முறை வலம் வந்தார். பின்பு கால்களை விரித்து கீழே இறங்கி நின்றவர் அந்தரத்தில் மிதந்த தீப்பந்தத்தைக் கையில் எடுத்து,
“எங்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!” என்று மொழிந்து விட்டு மரக்கட்டைகளின் மீது தீப்பந்தத்தை போட அடுத்த கணம் சடசடவென்று நெருப்பு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட அந்த நெருப்பு அந்தக் காட்டையே அழிப்பதற்கு போதுமானது. ஆனால் அவ்வளவு வேகமாக கொளுந்துவிட்டு நெருப்பு எரிந்தாலும் அதன் அருகிலே நின்றிருந்த எவருக்கும் அனல் என்பது தெரியவே இல்லை. ஏதோ அதை சுற்றி மாயவலை இருப்பதுபோல் அனைவரும் சர்வசாதாரணமாக கொழுந்து விட்டு எரியும் தீ ஜூவாலையையே விழி மூடாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்..

மரக்கட்டைகளும், இலை தழை சருகுகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி, நெருப்பு அணைந்து தீக்கங்குகளாக மாறி விட்ட போதும் மிகிரனை ஒரு பொட்டு தீ தீண்டவில்லை.. படுக்க வைக்கப்பட்ட நிலையிலேயே சலனமற்று, சுயநினைவற்றுக் கிடந்தான்...
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு, முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளைப் படர விட்டவாறு சந்தோஷ கூக்குரலிட்டனர்.‌ அந்த தலைவனாகப்பட்டவரும்,
“பார்த்தீர்களா? என் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது.‌ இவர் யாரென்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தரையில் சாதாரண மனிதனைப் போல் நடந்து சென்று கடல் நீரில் பாதம் பதிக்கையில் எவனொருவனின் விழிகள் நீல நிறத்தில் மாறுகின்றதோ? அவனைச் சுற்றி அவ்வேளையில் செங்கதிரோனின் செந்நிறக்கதிர்களைப் போல் ஒளி பிம்பம் தோன்றுகிறதோ? அவனொருவனால் தான் நமக்கு மோட்சமும் கிட்டும், நம் சந்ததியும் அழியாமல் இருக்கும் என்பதை அப்பொழுதே நம் முன்னோர்கள் செப்பேட்டில் குறித்து வைத்து விட்டு சென்றிருந்தனர். இப்பொழுது அத்தகவல் உண்மையென்பது உறுதியாகி விட்டது. இதோ அதன்படி ஒருவன் வந்து விட்டான், அவனை அடையாளம் காண்பதற்காக சோதனைகளையும் நிகழ்த்தி விட்டோம். அதில் அவன் பரிபூரணமாக வென்றும் விட்டான். இவனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும். நமக்கு உகந்தவனாய் எப்படி மாற்ற வேண்டும், இவனால் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பனவற்றை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எவரும் இதில் தலையிட வேண்டாம். ம்ம்ம்.. தூக்குங்கள் இவனை” என்று கட்டளையாய் சொல்லி விட்டு நெருப்புக் கங்குகளின் மீது தன் பாதங்கள் இரண்டையும் அழுந்த பதித்து விட்டு அவர் விலகி நிற்க சட்டென்று கங்குகள் அனைத்தும் குளிர்ந்து கரிக்கட்டைகளாக மாறிப்போயின..‌

அதைக் காண்போருக்கு உள்ளம் உறைந்து போகும் தான். ஆனால் மற்றவர்களோ ஆரவாரத்தோடு அவரை வாழ்த்தி வணங்கி விட்டு அவர் கூறியதை செயலாற்ற தொடங்கினார்கள். ஆறு பேர் தூக்கி மிகிரனை மீண்டும் சிவிகையில் கிடத்தி தூக்கிக்கொள்ள. அந்த தலைவனாகப்பட்டவர் காட்டுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்த சில கணங்களில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.‌ ஒரு குறிப்பிட்ட இடம் சென்றதும் மீண்டும் அவர் சங்கேத ஒலிகளை எழுப்ப புதர் போல் மண்டிக் கிடந்த ஒரு இடத்தில் இருந்து இருவர் வெளியே வந்து நின்றனர்.‌ தம் இனத்தவர்களை அடையாளம் கண்டு கொண்டவர்களாய் இலை தழைகளைக் கொண்டு திரைபோல் அமைக்கப்பட்டிருந்த பாதையை விலக்கிவிட, அனைவரும் உள்ளே நுழைந்தனர். அவர் உள்ளே சென்றது உறுதி செய்து கொண்டு மீண்டும் இலை தழைகளை மூடி அப்பாதையை மறைத்துவிட்டு அவர்களிருவரும் அந்த இடத்திலேயே காவலுக்கு நின்று கொண்டனர். உள்ளே ஒரு சிறு கிராமமே அழகுற வாழ்ந்து கொண்டிருந்தது. அத்தனை அழகாக அங்கு வசிப்போரின் குடில்கள் நேர்த்தியாக, வரிசையாக, அழகாக மரங்களின் மீது அமைக்கப்பட்டிருந்தன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் மீது இருந்த ஒரு குடிலில் மிகிரனை படுக்கவைத்து விட்டு வெளியே வந்தவர்கள்,
“இங்கே காவலுக்கு எவரேனும் நிற்க வேண்டுமா? தோன்றலே..” என்று கேட்டு விட்டு பதில் மொழிக்கு காத்திருந்தார்கள் அந்த அறுவரும்.

(பொதுவாக காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லைத்திணை வகைகளில் வரும். முல்லை திணை தலைவர்களை குறிப்பிட்ட சில பெயரிட்டு அழைப்பார்கள் அதில் தோன்றலும் ஒன்று..)

“தேவையில்லை. இங்க எவரும் காவலுக்கு நிற்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் அவரவர் பரணுக்குச் செல்லுங்கள்.. இவரை இங்கிருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு, ம்ம்ம் கிளம்புங்கள். அதே சமயம் இங்கு என்ன நிகழ்ந்தாலும் அது அனைத்தும் இறையருள் தான் என்பதை மறவாதீர்கள்” என்று மர்மமாகக் கூறிட. குழப்பமான நிலையிலேயே அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

அவர்களது தலை மறையும் வரை நின்று விட்டு மெல்ல பரணின் மீது ஏறிச் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த தொங்கல் படிக்கட்டுகளின் மீது ஏறி மிகிரனை படுக்க வைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் நுழைந்தார். அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவருக்கு திடீரென்று ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, அவரது முகபாவனைகள் மாற்றம் பெற்றன. முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் செந்நிறத்தில் தடுப்புகள் தோன்றிட, அவரது தேகமானது தணலைத் தாக்கியது போல் தகித்தெரிந்தது‌. சலனமற்றுக் கிடந்த மிகிரனை விழியகலாது ஓரிரு நாழிகைகள் குறுகுறுவென்று பார்த்தவர் பின்பு மெதுவாக அவன் அருகில் சென்று அவன் வயிற்றாப் பகுதியில் ஏறி அமர்ந்து தன் இரு கால்களையும் அவன் தலையின் பின்புறம் வளைத்த நிலையில் வைத்துக்கொண்டார். பின்பு தன் இடையில் செருகியிருந்த கற்களாலான கூரிய ஆயுதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தவர் எதை எதையோ முணுமுணுத்தவாறு முதலில் தன் நெஞ்சில் குத்திக்கொண்டார். அவர் உடலில் இருந்து குருதி கொப்பளித்து வெளி வந்த பிறகு மீண்டும் அவ்வாயிதத்தை உருவியெடுத்து, குருதியில் தோய்ந்திருந்த அதை சிவப்பேறிய விழிகளால் வெறித்திருந்து விட்டு மிகிரனில் இதயப் பகுதி இருந்த இடத்தில் ஆழமாக சொருகிட. அடுத்த நொடி சலனமற்றுக் கிடந்த மிகிரனின் உடல் தூக்கி வாரிப்போட்டது. அவர் குத்திய பகுதியிலிருந்து செங்குருதி வெளியேறி ஆறாக ஓடியது.. முதலில் செந்நிறக்குருதி வெளிவந்தது.‌ஓரிரு நாழிகை கடந்த பிறகு செந்நிறம் மெல்ல மங்கி சாம்பல் வண்ணமும், நீல வண்ணமும், பச்சை வண்ணமும் கலந்ததொரு வண்ணமும் ஓர் திரவம் வெளியேறிட.. அதை விழிகளால் கண்டு சென்னையை ஏந்தியவாறே அவன் மீதிருந்து சரிந்து விழுந்தார் தோன்றலென விளிக்கப்பட்ட அவர்.. தனக்கு என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் உணராமலேயே மெல்ல மெல்ல மிகிரனின் துடிப்பு அடங்கத் துவங்கியது.


இங்கே அதிசாந்திரனோ எப்படியோ தன்னிடம் இருக்கும் மிச்ச சொச்ச சக்திகளை வைத்து தட்டுத்தடுமாறி நீரின் மேற்பரப்பிற்கு வந்திருந்தான்.‌
நீரின் மேற்பரப்பில் இருந்து நிலப்பரப்பை நோட்டம் விட்டான் அங்கு எவராவது விழிகளுக்கு புலப்படுகிறார்களாவென்று.. அப்படி எவரும் தென்படவில்லை என்றதும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இவ்வளவு தூரம் தைரியத்துடன் தன் ஒட்டுமொத்த இனத்தையே எதிர்த்துக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. தயக்கத்தோடு தான் இதுவரை எடுத்துக்கொண்டிருந்த பயிற்சி எல்லாம் கை கொடுக்குமா? என்பதை பரிசோதிக்க முயன்றான். தட்டுத்தடுமாறி தடதடக்கும் இதயத்தோடு நிலப்பரப்பில் கால்களை எடுத்து வைத்தான். அடுத்த கணம் அவன் வால் போன்ற பாகம் மறைந்து பாதங்கள் இரண்டு வெளிவந்தன. பிறகு மணலில் கால் புதைய சிறிது தூரம் நடந்து சென்றான். நன்றாக ஆழ மூச்சிழுத்துப் பார்த்தான் அனைத்தும் சாதாரணமாகத்தான் இருந்தது, அவனால் நன்றாக சுவாசிக்கவும் முடிந்தது..

அதன் பிறகு அவனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. நெடுந்தூரம் ஓடியாடி அவளைத் தேடி களைத்தவன், அன்று தன் தங்கைக்காக குடில் அமைத்திருந்த அதே இடத்தில் வந்து பொத்தென்று அமைந்தான். அதே நேரம் அந்த கடற்கரையோர பகுதியை ஒட்டி ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிலை கண்டவனுக்கு ஒருவேளை அங்கே இருந்து எவரேனும் தன்னைப் பார்க்கக் கூடுமோ? என்ற எண்ணம் தோன்றியதும் வேகமாக அந்த குடிலை நோக்கி ஓடியவன் மேலே ஏறி உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தான். யாரோ அங்கு தங்கியதற்கான அடையாளமாக ஆங்காங்கே சில பொருட்கள் இருப்பதை கண்டவன் பொறுமையாக உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தான்...

அன்று ஆலோன் தன்னிடம் பெண்ணொருத்தியைக் கண்டேன் என சென்றதற்கு பிறகு இங்கே தான் வந்ததையும், இங்கு கண்ட காட்சிகளையும் நினைவடுக்குகளில் இருந்து தட்டி மீட்டு மீண்டும் நினைத்துப் நினைத்து பார்த்தான்.

அன்று நிலப்பகுதிக்கு வராமல் கடலில் சற்று தொலைவில் இருந்தவாறே இப்பகுதியை அதிசாந்திரன் கண்காணித்த வேளையில் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தது அவன் கண்ணில் தென்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே அவனால் தரையில் இருக்க முடியும் என்ற சூழ்நிலை..

ஆகையால் கடலுக்குள் நன்றாக மூழ்கி எழுந்து ஆழ மூச்செறிந்தவன் தடதடவென்று அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினான். அவர்கள் பேசுவதை கேட்கும் தொலைவில் மணலில் படுத்துக் கொண்டவனுக்கு அவர்கள் பேசுவதைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது.‌ அப்பெண் சொன்னவற்றை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது போலிருந்தது. அவர்களது முகங்கள் அவனுக்கு தெரியவில்லை. இருவருமே இவனுக்கு முதுகு காண்பித்தவாறு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர்.

அந்த ஆணின் தோளில் சாய்ந்திருந்த பெண்ணோ,
“என்ற ஒரு நாள் எவனோ ஒருவன் என் உயிரைக் காப்பாற்றியதற்காக அவனையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்று மற்றவர்கள் நினைப்பது போலவே தாங்களும் எண்ணாதீர்கள். உங்களது பாசமும்,அக்கறையும், அன்பும் எப்போதும் எனக்கு வேண்டும். எனக்கு மணமென்று நிகழ்ந்தால் அது உங்களோடு மட்டும்தான்.. இல்லையேல் என்னுயிரைத் துறந்திடவும் தயங்க மாட்டேன்” என்று சொன்னவாறு அவன் தோளில் சாய்ந்து கொள்ள.

அதைக்கேட்ட அதிசாந்திரனுக்கு ஏனோ இதயத்தை யாரோ கூர் வாள் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி வீசுவதுபோல இருந்தது. அதற்கு மேல் அவனாலும் அங்கு நின்று அவர்கள் பேசுவதை மேலும் கேட்க முடியவில்லை. சுவாசத்திற்கு ஏங்க ஆரம்பித்தவன் நொடியில் ஓடி வந்து கடலில் விழுந்திருந்தான்‌ அதே சோகமான மன நிலையோடு தான் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் அதன்பிறகு உண்ணாமல் உறங்காமல் எப்போதும் இதைப்பற்றியே சிந்தித்து அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான்..

பாவம் அவன் ஒன்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று ஆலோன் கண்டது அவனவளான அந்தரியைத் தான். ஆனால் மறுநாளே தன் தாயின் சந்தேக செய்கையால் அவள் வெளிப்புறத்திற்கு வருவதை நிறுத்தி விட்டாள். அதன் பிறகு ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தான் மிகிரனும் தங்கைக்காக இவனது வரவை எதிர்பார்த்து காத்திருந்த தொடங்கினான். கூடவே அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களில் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் தான் அங்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்றோ ஒருநாள் அப்பெண்ணுக்கு முறைப் பையனானவன் கொடிய விலங்குகளில் இருந்து அவளைக் காப்பாற்றியதால் அவனைத் தான் அப்பெண் மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவளது உற்றார் உறவினர் வற்புறுத்த. அதற்காகத்தான் அப்பெண் அந்த மண் நிகழ்வை மறுத்து தன் காதலனிடம் அதுபற்றி பற்றி உரையாடிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டுவிட்டு தான் அதிசாந்திரன் தவறாக புரிந்து கொண்டு தன்னையே வறுத்திக்கொண்டு அறைக்குள்ளேயே மறுகிக்கொண்டு கிடந்திருக்கிறான்.

இதோ அதையெல்லாம் நினைத்தவாறு கடற்கரை மணலில் தன் மீது ஆக்ரோஷத்துடன் வந்து மோதும் அலை நீரில் தன் தேகம் நனைவதைக் கூட பொருட்படுத்தாமல் மல்லாந்து படுத்துக் கிடக்கிறான்..

அதே சமயம் தன் தமயனைக் காணவில்லை என்றதும் அந்தரியால் அமைதியாக பொறுமையாக அங்கே இருக்க முடியவில்லை. எப்போதும் போல அனைவரும் உறங்கும் நேரம் வரை காத்திருக்க முடியாமல் சத்தமில்லாமல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மயக்கமூட்டும் மூலிகைகளை தன் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி காவல் காக்கும் ஆடவர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சுவாசிக்கும் வகையில் அந்த மூலிகைகளை எரித்து காற்றில் பரவ விட்டாள்.‌

மூலிகைகளை பறிக்கும் அவசரத்தில் நஞ்சு படந்திருக்கும் மூலிகைகளையும் தவறுதலாகப் பறித்திருந்தவள் தன்னையறியாமலேயே அதை அனைவரும் சுவாசிக்கும் படி செய்திருந்தாள். ஈதை சுவாசித்த அனைவரும் முதலில் மயங்கி பின்பு சிறிது நேரத்திலே உயிரைத் துறந்திருந்தனர். எவரேனும் விழித்திருந்தால் எங்கே தன்னை தடுக்கக் கூடுமோ?என்ற எண்ணத்தில் தான் அந்தரி இதை செய்தாள். ஆனால் அவளது கவனக்குறைவு ஒரு இனத்தையே அடியோடு அழித்திருந்தது. இதை எதையும் அறியாமல் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினாள் அந்தரி. எப்படி பாதாள லோகத்திலிருந்து வெளியுலகிற்கு செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததை நினைவில் கொண்டு அதன்படியே வெளியுலகிற்கு வந்து சேர்ந்தாள்.. அந்த காரிருளில் கடற்கரை மணலில் கால் புதைய நடந்தவாறே தன் தமயனை தேடிக்கொண்டிருந்த அந்தரியின் விழிகளில் கடற்கரை மணலில் வானைப் பார்த்து படுத்துக் கிடந்த ஒருவன் தென்பட்டான். இவன் யாரா இருக்கும்? என்ற சிந்தனையோடு, ஒருவேளை தன் தமயனாக இருக்குமோ! என்ற உற்சாக எண்ணமும் அவளுள் ஊற்று நீரைப் போல் பிரவாகமெடுக்க அவனை நோக்கி ஓடினாள்.

ஆழ்கடல் ராஜ்ஜியம்..
அதி சந்திரன் இங்கிருந்து தப்பிச்சென்றதோடு மட்டுமின்றி இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறானோ? என்ற அச்சமும், அவனது செயலால் வரவிருக்கும் போர் பற்றியும், அதில் பங்கெடுக்கும் வீரர்கள் பற்றியும் சிந்தித்தவாறே அமர்ந்திருந்த அரிச்சிகன் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே எதிரிகள் அனைவரும் அவர்களது ராஜ்ஜியத்தை சுற்றிவளைத்து விட்டனர். அவரோ தன்னிடம் இருக்கும் சொற்ப வீரர்களைத் தயார்படுத்தி போரிட துவங்கும் முன்பே அவர்கள் எய்த நஞ்சு தடவிய கூர் முனை கொண்ட ஆயுதங்கள் அனைவரது தேகத்தையும் துளைத்திருந்தது..‌இவரும் தன்னால் முயன்றவரை தாக்கினாலும், வயோதிகம் அவரை களைப்படையச் செய்தது. அதன் விளைவு, அவரது தேகமெங்கும் நஞ்சு கலக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவரது கோபம் அனைத்தும் தான் பெற்ற மைந்தனின் மீது திரும்பியது. சத்தமில்லாமல் தன்னிடம் இருந்த சக்தியைக் கொண்டு அங்கிருந்து மாயமானார். தன்னுடன் பிறந்தோனையும் அழைத்துக் கொண்டு நீரின் மேற்பரப்புக்கு தப்பித்துயோடி வந்தவரது விழிகள் தன் மைந்தனைத் தேடியது.

அவரது ராஜ்ஜியத்தில் சந்திரமதியின் உயிரானது இக்கணமோ? அக்கணமோவென்று ஊசலாடிக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை தடுக்க முயன்று தோற்றுப் போனாள் பாவை.. எதிர்வந்த சூழலை சமாளிக்க முடியாமல் தேகமெல்லாம் அடிபட்ட காயங்களோடு எதிர் படைகளால் சிதைக்கப்பட்டு உயிரற்ற நிலையில், அங்கு இருந்து மிதந்து, நகர்ந்து கரையோரம் ஒதுங்கி இருந்தாள் முளரிப்பாவை.‌

“தமயா அது நீங்கள் தானா?” என்று கூச்சலிட்டவாறே அதிசாந்திரன் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள் அந்தரி.

யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு படாரென்று எழுந்து அமர்ந்தவன் தூரத்தில் ஒரு பெண்ணொருத்தி தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு துணுக்குற்றவனாய், ஏதேனும் உதவி தேவைப்படுமோ? என்ற எண்ணுத்துடன் தானும் அவளை நோக்கி ஓடினான்.

கிட்டத்தட்ட அவளை நெருங்கிய ஏதோ பேச முற்பட்டான் அதிசாந்திரன். ஆனால் அதற்குள் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. உடன் பிறந்தோனுடன் நீரின் மேற்பரப்பை அடைந்திருந்த அரிச்சிகன் தன் தலை மகன் ஏதோ ஒரு பெண்ணொருத்தியிடம் உரையாடுவது போன்றதொரு காட்சி அமைப்பை விழிகளால் கண்டவர், ‘,இவளுக்காக தானே அனைத்தையும் துறந்துவிட்டு இப்பொழுது அனைவரது உயிரையும் எதிரி படைகளிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறான். இவர்கள் இருவரும் இனி உயிருடனே இருக்கக்கூடாது’ என்று நினைத்தவராய் தன்னுடைய செங்கோலை அவர்கள் இருவரையும் நோக்கி வீசினார்

சரியாக அவர்கள் இருவரும் நேர்கோட்டில் நின்றிருக்க! முதலில் அதிசாந்திரனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியேறிய அந்த செங்கோல், அவனை அடுத்து அவனுக்கு எதிரில் நின்ற அந்தரியின் தேகத்தையும் துளைத்துக் கொண்டு அவளது முதுகுபுறம் வந்து நின்றது.. அவர்கள் இருவர் நின்ற இடமும் செங்குருதியால் நிரம்பி வழிந்தோடியது. அவள் உடலில் இருந்து வெளியேறிய செங்குருதியானது சிறிது நேரத்தில் செந்நிறத்தில் இருந்து மாறி பச்சை நிறத்திற்கு மாறியது. அதேபோல் அதிசாந்திரனின் உடலிலும் பச்சை நிற திரவம் தான் வெளியேறியது..

சரியாக உயிர் துறப்பதற்கு சிறிது நொடிகளே மீதமிருந்த நேரத்தில் அவள் உடலில் இருந்து வெளியேறும் பச்சைத் திரவத்தைக் கண்டு கொண்ட அதிசாந்திரனின் இதழ்கள் புன்னகையைச் சூடிக்கொள்ள..
“நீ... நீ... நீ... நீதான் என் சரிபாதியாய் மாறிய உயிரானவளா?” என்று திக்கித் திணறி கூறிட.

அவன் உதிர்த்த வார்த்தைகளை வைத்து, அவளும் அப்போதுதான் அவன் யாரென்று புரிந்து கொண்டவளாய், “நீ... நீங்க..ள்...நீங்கள் தான் என் உயிரைக் காப்பாற்றி, தங்கள் சரிபாதி உயிரை எனக்கு தானம் கொடுத்த என் உயிரானவரா?” என்று கேட்டவளின் இதழ்கள் அதோடு வார்த்தைகளை உச்சரிப்பதை நிறுத்தியது. அவளது கயல் விழிகள் இரண்டும் அவன் முகத்திலே நிலைத்திருக்க, அவன் முகத்தைப் பார்த்தவாறே தன் இன்னுயிரை நீத்திருந்தாள் அந்தி. அவனும் அவள் வார்த்தைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டவனாய், “உயிர் பிரியும் வேளையில் தான்
என் உயிரானவளை சந்திக்க வேண்டுமென்பது விதியோ? உன் கரம் பற்றி பல்லாண்டு காலம் வாழ்ந்திட எண்ணியவனின் எண்ணத்தை அடியோடு புதைத்திட்டதேனோ இறைவா? இந்த ஜென்மத்தில் என்னவளின் கரம் பற்ற இயலாமல் போனது? ஆனால் மீண்டுமொரு ஜென்மம் எடுத்தேனும் என்னவளைச் சேர்வேன், இது நான் வணங்கும் தெய்வத்தின் மீதும், எந்தன் இனத்தின் மீதும் ஆணை....” என்று சங்கல்பமாய் உரைத்தவனின் கரங்கள் அந்தரியின் மென்தேகத்தை தன்னுடன் அணைத்துப் பிடித்திருக்க, அவனது வலிய கரங்கள் அவளது மென்கரத்தை அழுத்தமாகப் பிடித்திருந்தது.‌ அவன் விழிகள் அவளது மதி வதனத்தையே பார்த்திருக்க, அந்நிலையிலேயே இன்னுயிர் நீத்திருந்தான் அந்தரியின் நேசத்திற்கு பாத்திரமான அதிசாந்திரன்...

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அத்தனையிலும் என்னவளாய் நீ வேண்டுமடி..!

எத்தனை இன்னல்கள்
வந்தாலும் அத்தனையையும் கடந்து வர உறுதுணையாய்
நீ வேண்டுமடி.!!

எத்தனை சோதனைகள்
அலை அலையாய் சுழன்று வந்தாலும் அதிலிருந்து
மீண்டு வர வழித்துணையாய்
நீ வேண்டுமடி..!

- அற்புதமது பிறக்கும்..




 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -10



தனக்கு என்ன நடக்கிறது? என்ன நடந்தது? எதனால் தான் இங்கு அழைத்துவரப்பட்டாம்? எதனால் தன் உயிர் பரிதாபமாகத் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது? என்ற வினாவிற்கான விடையை அறிந்து கொள்ளாமலேயே தன் தங்கையின் காதலனை சேர்த்து வைக்க வேண்டும் என்ற கடமை இருப்பதையும் மறந்து, தன் உயிரை நீத்திருந்தான் மிகிரன்..

அதேபோல் கடற்கரையோரத்தில் ஒதுங்கிய முளரிப்பாவையின் உயிரானது எதற்காகவோ தன் உயிரை விடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு காத்திருந்தது. சரியாகச் சூரியன் உதயமாகும் இளங்காலைப் பொழுதில் சூரியனின் கதிர்கள் அவள் தேகத்தைத் தொட்ட மறுகணம் அவள் உயிர் பிரிந்தது..

இது நாள் வரை தான் திட்டமிருந்த நோக்கங்களும், எண்ணங்களும் சிறிதும் நிறைவேறவில்லை. தான் நேசித்த பெண்ணைப் பார்த்து, அவளுடன் தான் மீதி வாழ்வை அமைதியுடன் கழிக்க வேண்டுமென்று எண்ணியிருந்த அதிசாந்திரனின் எண்ணமும் நிறைவேறவில்லை.‌ தன்னை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டு, தன் இன்னுயிரைத் தனக்குப் பங்கிட்டு கொடுத்தவனை நெஞ்சில் நினைத்துக் கொண்டு அவனுக்காகவே இவ்வளவு காலம் காத்திருந்த அந்தரியின் நேசமும், அவள் நேசித்தவனின் வசம் சேரவில்லை.

தங்கையின் வாழ்விற்காகவும், தமயனின் நேசத்திற்காகவும் போராடிய மிகிரன், முளரிப்பாவை இருவரது எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறவில்லை. இவர்கள் இருவரது வாழ்விலும் எந்த ஒரு மகிழ்வும் இதுவரை நிகழ்ந்ததில்லை. இவர்கள் நால்வரும் உயிரும் பலரின் பேராசையாலும், முன்கோபத்தாலும், தேவையற்ற சில மூடத்தனமான நம்பிக்கையாலும், தான் என்ற அகங்கார எண்ணத்தாலுமே பிரிந்திருந்தது.‌ இவர்கள் தங்களது நிறைவேறாத எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மீண்டும் பிறப்பார்களா? அவ்வாறு பிறந்தார்களேயானால் மீண்டும் இவர்கள் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு அமையுமா? அவ்வாறு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் தங்களது நேசத்தைப் பரிமாறி..! முடிந்ததென முற்றுப்புள்ளி வைத்த இரு உலகின் சுவடிகளைத் தூசு தட்டி மீட்டெடுப்பார்களா? மணம் புரிந்து மகிழ்வானதொரு வாழ்வினை வாழ்ந்திடுவார்களா? இவற்றிற்கான விடைகளை அறிந்து கொள்ளக் காலதேவனுடன் நாமும் பயணிக்கலாம்...

சரியாக இந்நிகழ்வு நடந்து பல வருடங்கள் உருண்டோடி சென்றிருந்தன.

வருடம் 2020...
நேரம் இரவு - 11 மணி..
இடம் - ப்ரீஸி பீச்..

சென்னையில் திருவான்மியூர் பக்கத்தில் வால்மீகி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள சிறிய அளவிலான கடற்கரை, ப்ரீஸி பீச். சிட்டி சென்டரிலிருந்து 9 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. இது பெரிய அளவில் பிரபலமானது இல்லை என்றாலும் உள்ளூர்வாசிகள் பலர் பொழுது போக்க இந்தக் கடற்கரைக்குத் தான் வருகிறார்கள்.

மேலே எழுந்து பின்பு உள்ளடங்கி, தன்னுள் இருக்கும் நீரை அதிவேகத்தில் அள்ளிக் கொண்டு வந்து கடற்கரையோரம் கொட்டிக் கிடக்கும் மணலுடன் மோத விட்டு ஈர சுவடுகளை உருவாக்கி விட்டு மீண்டும் நீரை உள்ளிழுத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது கடலலைகள். காணும் இடம் எங்கும் கருமையே நிறைந்திருக்க, விழிகள் காணும் தொலைவு வரை நீரே பரவலாய்க் காணப்பட்டது.

அந்தக் கடற்கரையில் நீரலைகள் கால்களை நனைத்திடும் அளவிற்கு நெருங்கி அமர்ந்திருந்தாள் அவள். பார்வை என்னவோ கடலையை வெறித்திருந்தாலும், செவிகளோ தன்னருகில் அமர்ந்து வாய் ஓயாது பேசிக் கொண்டிருப்பவனின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது.‌ ஆனால் பதில் பேசாது இலக்கற்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்‌. எவ்வளவு நேரம் அவள் அப்படியே அமர்ந்திருந்தாளோ! அது அவளுக்கே தெரியாது.

கத்தி கத்தி தன் தொண்டையில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வத்தி விட்டது போல் உணர்ந்த அவன் கோபத்தோடு எழுந்து நின்றவாறு, “நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ எனக்கு என்ன வந்துச்சுன்னு இப்படிக் கடலையே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம் யாழினி? இப்ப நான் கேட்டதுக்குப் பதில் சொல்ல போறியா இல்லையா?” என்று கோபத்தில் சத்தமாகக் கத்த.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு எழுந்து நின்றவள் தன் வலது கை சுண்டு விரல் கொண்டு காது குடைவது போல் செய்து அவன் சொன்னது தன் செவியில் விழவே இல்லை என்பது போல் காட்டி கொண்டவளாய்,“இப்ப எதுக்கு இப்படி நீ கத்திக்கிட்டு இருக்க. நீ என்னதான் கத்துனாலும் சரி, கெஞ்சி கேட்டாலும் சரி, ஏன் நீ அழுதாலும் சரி நீ சொல்றதுக்கு நான் ஒத்துக்க முடியாது”

“ப்ச்ச்... ஏன்டி இப்படி என்னை இம்சை பண்ற. உனக்கு ஏன் யாழினி நான் சொல்றது புரிய மாட்டிங்குது.‌உன்னோட சம்மதம் இல்லாம அங்க போய் என்னால நிம்மதியாக வொர்க் பண்ணவும் முடியாது. ஏன்டி இப்படி இம்சை பண்ணி தொலையிற. உன் கூடப்பிறந்த பாவத்துக்கு நான் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கணும்னு தெரியலையே?” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தான் அவளது அண்ணன் விபாகரத் தீபன்..

அவன் சொன்னதைக் கேட்டு பொங்கி எழுந்தவள், “இங்க பாருடா என்கிட்ட இந்த மாதிரி பேசுற வேலை வச்சுக்காத. எங்கிட்ட வந்து நீ அனுமதி கேக்கணும்னு நான் சொன்னனா? அப்பா அம்மா தானே எங்கிட்ட கேட்டுட்டு வரச்சொன்னாங்க.. இது தான் என்னோட முடிவு.. போ போய் எதைச் சொல்றதா இருந்தாலும் தைரியமா அவங்க கிட்ட போய்ச் சொல்லு.

எதுக்குத் தேவையில்லாம என்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்க. நீ எங்க வேலைக்குப் போனா எனக்கென்ன? எப்படியோ நாசமா போனா தான் எனக்கு என்னடா, எங்கையோ போய்த் தொலை. நானும் இப்பதான் வேலைக்குப் போயிட்டு வந்து கொஞ்சம் டென்ஷன் இல்லாம உட்காந்து இருக்கேன் இப்ப வந்து என்னை டார்ச்சர் பண்ற?” என்று இவளும் சற்றுக் கோபத்திலேயே திட்டி விட்டாள்.

அவன் பண்ணுன டார்ச்சரில் கோபப்பட்டுத் திட்டி விட்டவள் நொடி நேர நிதானத்திற்குப் பிறகு சட்டென்று, முகம் வாடிய நிலையில் நின்றிருந்த தன் அண்ணனை நெருங்கி அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் யாழினி.

அதன் பிறகு தான் அவனது முகமும் பட்டென்று மலர்ந்தது. அதே முகப் பாவனையோடு தன் தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவன், “சொல்லுடி நான் போகட்டுமா? நான் லண்டன்ல ஒர்க் பண்ண ஆபீஸ்ல ஆஃபர் குடுத்துருக்காங்கடி, இதை அம்மா கிட்ட சொன்னா அவங்க உங்கிட்ட கேட்டுட்டு வர சொல்றாங்க. நீ என்ன சொல்ற?” என்றான் கெஞ்சலாய்.

சில நொடி நேரம் தன் அண்ணனையே‌ பார்த்திருந்தவள்,“உனக்கு அங்க போய் வொர்க் பண்றது தான் சந்தோஷம்னா நீ லண்டன் போ அண்ணா. ஆனா நீ இல்லாம நாங்க இங்க ரொம்பக் கஷ்டப்படுவோம், முக்கியமா நான். தினமும் உன்னைத் திட்டாம, உங்கூடச் சண்டை போடாம என்னால இருக்க முடியும்னு தோணலடா அண்ணா. இதுக்கு மேல உன்னோட விருப்பம்” என்று சொல்லிவிட்டு பொங்கி வரும் கடல் அலைகளில் கால் நனைப்பதற்காகக் கடலுக்குள் இறங்கி சிறிது உள்ளே சென்றாள். வேகமாக மேலெழும்பி வரும் அலை ஒன்றில் கால்களைப் பதித்தவள் நீரின் சில்லென்ற சுகத்தைக் கண் மூடி அனுபவித்துக் கொண்டிருக்க. அவள் பாதத்தைத் தழுவி சென்ற கடலலைகள் மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றன.

சிறிது தூரம் சென்றதும் மேலெழுந்த அந்த அலைகள் ஒரு ஆளின் பிம்பத்தைப் பிரதிபலிப்பது போல், ஒரு உருவம் பெற்று நின்றது. அவ்வுருவத்தின் விழிகள் இரண்டும் செவ்வறியோடியது போல் இரத்த நிறத்தில் காட்சியளிக்க, விழிகளைத் தவிர மத்த உடற்பாகங்கள் யாவும் நீரினைப் போலவே அலைபாய்ந்தன. சிவப்பேறிய விழிகள் இரண்டும் அவளையே வெறித்துப் பார்த்தவாறே நின்றது..

தங்கை சொன்னது அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் ஒரு வருடமாவது இலண்டன் மாநகரில் சென்று அதன் அழகை விழிகள் கொண்டு ரசித்துப் பார்த்து, அங்கு வாழ்ந்து அனுபவித்து விட வேண்டும் என்பது அவனது எண்ணம். இவர்கள் வாழ்வது மிடில் கிளாஸ் வாழ்க்கை என்றாலும் கஷ்டம் தெரியாமல் தான் அவர்களது பெற்றோர்கள் வளர்த்தார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது உடன்பயின்றோர் சற்று வசதி வாய்க்கப் பெற்றவர்களாய் இருந்தனர்.ஏனோ அப்போது பழக்கமாகிய அவனது நண்பர்களும், இப்போது பணிபுரியும் அலுவலகத்தில் இருப்பவர்களும் சற்று வசதியுடன் கெத்தாக இருப்பதைக் கண்டவனுக்குத் தானும் லண்டனில் இதுபோல் ஒரு வருடமாவது வேலை பார்த்து, அவர்கள் தரும் கெஸ்ட் ஹவுஸில் தங்கி, அந்த ஊரின் அழகையும், அங்கு இருக்கும் சூழலையும் அனுபவித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தீபனின் நெடுங்கால ஆசையென்றே சொல்லலாம்..

பெருமூச்சொன்றை வெளியிட்ட தீபன்,“நீ சொல்றது எனக்குப் புரியாம இல்லை யாழினி. ஆனா என்னோட ஆசைன்னு ஒன்னு இருக்கு இல்லையா! ரொம்ப நாளெல்லாம் அங்க இருக்கமாட்டேன்டி. ஜஸ்ட் ஒன் இயர் தான்.‌ஒரே ஒரு வருடம் அங்க இருந்துட்டு நான் மறுபடியும் இங்கையே திரும்பி வந்துருவேன். நீயும் இப்பதானே டியூட்டில ஜாயின் பண்ணி இருக்க, நீ வேலையில பர்மனென்ட் ஆகுறதுக்குள்ள நான் திரும்பி வந்துருவேன். எனக்காக இந்த ஒரு தடவை உதவி செய்ய மாட்டியாடி. ப்ளீஸ் எப்படியாவது அப்பா அம்மாவை சம்மதிக்க வைக்கணும், நீ ஓகே சொன்னா தான் அவங்களும் ஓகே சொல்லுவாங்க..” என்றவன் கெஞ்ச.

குனிந்து கடலலைகளைப் பார்த்திருந்தவள் நின்ற இடத்திலேயே அவன் புறம் திரும்பி அவனை நேராகப் பார்த்து, “நீ சொல்றது எனக்குப் புரியுதுடா தீபா. ஆனா அம்மா சம்மதிச்சாலும் அப்பா சம்மதிக்க மாட்டாங்களே நான் என்ன பண்ணட்டும்” என்று மறைமுகமாகத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அந்தப் பாசக்கார தங்கை.

தங்கை சம்மதித்ததைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடினான் தீபன்.
“தேங்க்யூ சோ மச் எலிக்குட்டி சாரி சாரி யாழிக்குட்டி” என்று சொன்னவாறு ஓடிச்சென்று தன் தங்கை அணைத்துக் கொண்டான்.

அதே நேரம் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அந்த ஆளுயர கடல் அலையின் பின்பமானது அவளை நோக்கி நகர்ந்தது. ஆனால் தீபன் தன் தங்கையின் அருகில் நெருங்கியதும் அதே இடத்தில் நின்ற அவ்வுருவம் கைகளை மட்டும் நீட்டி அவளைத் தொட முயன்றது..

அதற்குள் யாழினியோ தன்னோடு தன் அண்ணனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு கடல் அலையிலிருந்து வெளியேறி தங்கள் வண்டி நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.. கூடவே, “எனக்கு என்னவோ நீ அங்க போறது சரியா படலைடா. ஆனாலும் உனக்குன்னு ஆசை இருக்குன்னு சொன்ன பத்தியா! அதுக்காகத் தான் நீ லண்டன் போறதுக்கு நான் ஒத்துக்குறேன். நான் அம்மாக்கிட்ட பேசுறேன், அம்மாவ‌ சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு. இவ்வளவுதான் என்னால ஹெல் பண்ண முடியும்” என்று சொல்ல.

அதைக் கேட்டு இன்னும் இன்னும் சந்தோசத்தில் குதித்தாடியவன், “தேங்க்ஸ்டி பிசாசே. அப்படியே இன்னொரு உதவியும் செஞ்சுடு.‌ நீ எப்படிச் சொல்லித்தர்றியோ அப்படியே அப்பாக்கிட்ட பேசி அவங்களை ஓகே சொல்ல வைக்கிறேன் சரியா! இதுக்கு மட்டும் உதவி பண்ணுடி ப்ளீஸ்டி. அதே மாதிரி நான் இந்த ஒன் இயரை முடிச்சுட்டு இங்க வர்றதுக்குள்ள பெஸ்ட் டாக்டர்னு பேர் வாங்கியிருக்கணும் சரியா! உனக்குப் பிடிச்ச மாதிரி படிச்ச,ஆசைப்பட்ட கரியரை கையிலெடுத்த, அப்பா ரொம்பச் சிரமப்பட்டுதான் உன்னைப் படிக்க வச்சுருக்காரு அதனால நல்லா படிச்சு டிரைனிங்கை முடி..”

“நான் எப்படின்னா நல்லா படிக்காம போவேன். நான் மெடிக்கல் படிக்கணும்னு தான் நீ ஆசைப்பட்ட குரூப்ப எடுத்து படிக்கல. சாதாரணக் குரூப் எடுத்து படிச்சிட்டு ஐடி ஃபீல்டுக்கு போன. அப்படி இருக்கும் போது நான் எப்படிடா இதுல கோட்டை விடுவேன். இப்ப எனக்கு ட்ரைனிங் தான் போகுது, இந்த ட்ரெயினிங்ல கண்டிப்பா நல்ல பேர் எடுத்து, நான் டாக்டரா ப்ரொமோட் ஆவேன் நீ கவலைப் படாதே சரியா!” என்று சொன்னவாறு தன் ஸ்கூட்டியை எடுத்த அதே நேரம் அவனும் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்..
இருவரும் அந்தக் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த வால்மீகி நகருக்குள் நுழைந்திட. அவர்கள் செல்வதைச் சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்திருந்த அந்தக் கடல் அலை உருவம் நொடியில் கடலுக்குள் விழுந்து அமிழ்ந்து போனது..

வால்மீகி நகரில் இருக்கும் மூன்று படுக்கையறைகள் கொண்ட தனி வீடு தான். தீபன் மட்டும் யாழினியின் வீடு. சொந்த வீடு தான் ஆனால் தற்போது பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக அந்த வீட்டின் பேரில் கடன் வாங்கியிருக்கிறார் அவர்களின் தந்தை‌.

அன்புச்செல்வன் - அருளரசி தம்பதியரின் இரு பிள்ளைகள் தான் விபாகரத் தீபன் மற்றும் அகர யாழினி.. அன்புச்செல்வன் அவரது தந்தையின் சொற்படி கேட்டு வளர்ந்தவர்.. அன்புச்செல்வனின் தந்தை இளம்பரிதி மாறன் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர், அவர் தன் பிள்ளைகளுக்கும் தமிழை ஊட்டி ஊட்டி வளர்த்தார். செல்வனின் தமிழ் உணர்வு பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் அவரைக் கல்லூரியில் பிஏ தமிழ் எடுத்துப் படிக்கத் தூண்டியது. அதன் பின்பு தொடர்ச்சியாகத் தமிழை உயிர்மூச்சாய் நேசித்துப் படிக்க ஆரம்பித்தார். திருமணத்திற்குப் பிறகும் சரி, அதற்கு முன்பும் சரி எங்குச் சென்றாலும் தமிழிலேயே உரையாடும் அளவுக்கு அவருக்குத் தமிழ் மிகவும் பிடித்திருந்தது..

படித்து முடித்துக் கல்லூரியில் உதவி பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கியவர். தொலை தூரக்கல்வியில் படித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார்.. பெரியவர்களாகப் பார்த்து அருளரசியைத் திருமணம் செய்து வைத்திட, மன்னவனின் மனம் கோணாத மனைவியாகத் தான் அவரும் நடந்து கொண்டார்.. பிறகு அவருக்குச் சென்னைக்கு மாற்றல் கிடைத்திடத் தனது சொந்த ஊரான தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து தன் மனைவியுடன் சென்னைக்குப் பயணமானார் தமிழ்ச்செல்வன் இங்கு வந்ததற்குப் பிறகு ஆரம்பக் காலத்தில் வாடகை வீட்டிலிருந்தவர் சிறிது சிறிதாகப் பணத்தைச் சேர்த்து வைத்து முதலில் வில்லா வாங்கினார்.

பின்பு தீபன் பிறந்து, அவனுக்கு இரண்டு வயது இருக்கும் போது புதிதாக வீடு கட்ட தொடங்கினார். கடன் வாங்கி வீடு கட்டி முடிக்கையில் தீபனுக்கு நான்கு வயது நிறைவடைந்து இருந்தது. அந்த இடைவெளியில் யாழினி வேறு பிறந்திருக்க அவர்களது குடும்பம் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.‌ அதிலும் தன் பிள்ளைகளுக்கு வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார் அன்புச்செல்வன். அனைவருக்கும் முதலில் சற்று வித்தியாசமாக இருந்தாலும் போகப்போக இவரது தமிழ்ப்பற்றும் அவரின் சொல்லாடல் திறமையையும் கண்டு வியந்துதான் போனார்கள்..

பிள்ளைகள் இருவரும் அவரவர் விருப்பப்படி தங்களது மேற்படிப்பைப் படித்தாலும், வீட்டில் தமிழில் தான் பேச வேண்டும். அதிலும் சுத்த தமிழில் தான் பேச வேண்டும் என்பது தமிழ்ச்செல்வனின் கட்டளை. ஆனால் காலப்போக்கில் அது சாத்தியமில்லாத ஒன்று. நாம் பேசும் வார்த்தைகளில் பெரும்பாலான வார்த்தைகள் வடமொழிச் சொற்களும், ஆங்கிலமும் கலந்தது தான். ஆகையால் முழுதாக இங்கு எவரையும் திருத்த முடியாது என்ற நிதர்சனத்தை அவர் புரிந்து கொண்டாலும், தன் முன்னிலையில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் உரையாடி விட்டால் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் என்று கூடப் பார்க்காமல் விளாசு விளாசு விளாசி விடுவார் அன்புச்செல்வன்.

அதனாலையே அவரது பிள்ளைகள் இருவரும் சற்றுக் கவனமாகத் தான் உரையாடுவார்கள். யாழினி மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் வீட்டின் மேல் கடன் வாங்கிப் படிக்க வைத்தார். அதே போல் யாழினியும் நன்றாகப் படித்தாள். இதோ சென்னையில் பிரபலமான ஒரு மருத்துவமனையில் படிப்பை முடித்து ஒரு வருட ட்ரெய்னிங்கில் இருக்கிறாள் யாழினி.

தீபினுக்கு இங்கிருந்து லண்டன் செல்லவே பிடித்திருந்தது.‌ தன் தந்தையின் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்துச் செல்வது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் வெளியில் சென்று சற்றுச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கு இருந்தால் தந்தை சொற்படி கேட்டு நடக்கவேண்டும், தந்தை சொற்களை மீறக்கூடாது, தந்தை சொல் கேட்டு நடக்க வேண்டும் என்று தினமும் தாய் சொல்லும் அறிவுரையிலிருந்து தப்பிக்க வேண்டும். தந்தை கிழித்த கோட்டைத் தாண்டிடாத தர்ம பத்தினியான தன் தாயின் அறிவுரைகள், வெளியில் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கூடாதென்று கண்டிப்பு காட்டும் தந்தை. இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழு மணி ஆனால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும், அதன்பிறகு வெளிய செல்லக் கூடாது என்று கட்டளை விடுத்திருந்தார் செல்வன்.

இதில் தன் தந்தையின் மீது சற்றுக் கோபம் கூட வந்தது தீபனுக்கு. ஆனால் நாளடைவில் பழகிப் போனாலும் வகுப்புத் தோழர்கள் முதற்கொண்டு தற்போது உடன் வேலை புரிபவர்கள் வரை அவனை வெளியே அழைக்கையில் எல்லாம் அவனுக்குக் கஷ்டமாக இருக்கும். உடன் பணி புரிவோர் இரவில் 'எங்காவது போகலாம், கடற்கரைக்குச் சென்று சுற்றிவிட்டு வரலாம், காலார நடந்து விட்ட வரலாம்' என்று கூப்பிடும் போதெல்லாம் தந்தை திட்டுவார் என்று சொல்வதற்கு வளர்ந்த ஆண்மகனான அவனுக்குச் சற்று அசிங்கமாகத்தான் இருந்தது.. ஆனால் தற்போது இதற்கு மட்டும் தடையில்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் பணிபுரியும் கால நேர மாற்றம் தான் அதற்குக் காரணம். அதனாலேயே தற்போது லண்டன் செல்லும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதும் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பது தீபனின் எண்ணம். பார்ப்போம் அவன் எண்ணம் நிறைவேறுமா? அவன் தந்தை இதற்குச் சம்மதிப்பாரா என்பதை?

எண்ணிய எண்ணமெல்லாம்
ஈடேற இன்னும் எத்தனை
இடர்ப்பாடுகளை இவன்
கடந்திட வேண்டுமோ?

தந்தையை விட்டுச் செல்ல நினைப்பவனின் எண்ணம் நிறைவேறினால்...

பெற்றவரின் இறுதி
யாத்திரைக்கு வரக்கூடாது
முடியாதென்பதை
எவர் சென்று அவனிடம் உரைப்பதோ?

  • அற்புதமது பிறக்கும்...


zxWvR4C7vunr08NkJwhD80I3t2lm7lYQUe7RPCRj_ahFXoIwzEYRI7z1RuQQN_21k71a4Hh2RUGdn2n7fhKhMP2iLk9c41ytwGdqdUtndWTXo9eLghLJoQ1WktIjfQ8UYLTkj5Q


https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -11



யாழினி, தீபன் இருவரும் தங்கள் வீட்டின் அருகில் வந்து ஹாரனை மெலிதாக ஒலிர விட, அவ்வளவு நேரம் அவர்களுக்காக உறங்காமல் காத்திருந்த அருளரசி ஓடிவந்து மெயின்கேட்டை திறந்து விட்டார். அவர்கள் இருவரும் உள்ளே வந்து ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்துவதற்குப் போடப்பட்டிருந்த செட்டில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் சிரித்தவாறு வாசல் படியில் கால் வைத்த அதே நேரம், “வேலை முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது, ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் எங்க சுத்திட்டு வர்ரீங்க?” என்று தன் கணீர் குரலில் கேட்டவாறு அவர்கள் இருவரும் உள்ளே வருவதற்குத் தடை விதிப்பது போல் குரல் கொடுத்தார் அன்புச்செல்வன்.

அதைக் கேட்டு விட்டு அவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்தபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள. அதேநேரம் தன் பிள்ளைகளைக் காப்பதற்காக ஓடிவந்த அருளரசி கணவனின் கண்டிப்பு பார்வையில் மிரண்டவராய் ஒரு அடி தள்ளியே நின்றுகொண்டார்..

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அண்ணன் தங்கை இருவரும் விழித்தனர்.‌ அதிலும் முதல்லையே இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தால்,எப்படி சமாளிக்க வேண்டுமென்று யோசிக்காமல் வந்த தங்களது மடத் தனத்தை எண்ணி தங்கள் தலையில் தாங்களே மானசீகமாகக் கொட்டிக் கொண்டவர்கள் தங்களது தந்தையை எப்படிச் சமாளிப்பது? என்று தெரியாமல் தயங்கிவாறு படபடப்புடன் நிற்க.

நொடியில் எதையோ யோசித்த யாழினி, “அப்பா அண்ணா என்னைக் கூட்டிட்டு வர்றதுக்கு எப்பவுமே வருவான்னு உங்களுக்கே தெரியும்லப்பா. இன்னைக்குக் கிளம்பறப்ப ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துருச்சுப்பா டாக்டர் இன்னும் கொஞ்ச நேரம் இருன்னு சொல்லிட்டாங்க அதனால தான் லேட்டாயிடுச்சுப்பா.‌ அதுமட்டுமில்லாம மோஸ்ட்லி எல்லா ஸ்டூடண்ட்ஸூம் அங்கையே ஹாஸ்டல்ல தங்கி வொர்க் பண்றாங்க, நமக்கு வீடு பக்கமா இருக்கவும் தான் நான் போயிட்டு போயிட்டு வர்றேன். அப்படி இருக்கும் போது டாக்டர் இருன்னு சொல்லும்‌போது நான் இருந்து தானேப்பா ஆகணும். இல்லன்னா எப்படிப்பா எனக்கு சர்டிபிகேட்ஸ் கெடைக்கும். அதனால்தான் வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சு.‌ இதுதான் நடந்துச்சு, நீங்க வேணா டாக்டர்கிட்ட பேசுறீங்களா? நான் கால் பண்ணி தரட்டுமா?” என்றாள் அசராமல்.

ஆரம்பத்தில், அவள் பேச ஆரம்பித்த போது கண்டிப்பாக இதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவாளென்று நினைத்துக் கொண்டிருந்தான் தீபன். ஆனால் கடைசியில் 'டாக்டருக்கு போன் பண்ணி தர்றேன் பேசுறீங்களா?’ என்று கேட்டதும் அதிர்ந்து,‌தந்தை இருப்பதையும் மறந்து சடாரென்று அவள்புறம் திரும்பி அவள் முகத்தைப் பார்த்து ஏதோ பேச முற்பட்டான். அதை உணர்ந்த யாழினியோ சட்டென்று அவன் கையை எட்டி பிடித்து அதில் அழுத்தம் கொடுத்திட, சுதாரித்த தீபன் தன் தங்கையின் முகத்தைப் பார்க்காது, எதிரில் இருந்த தன் தந்தையின் முகத்தைப் பாவமாகப் பார்த்து வைத்தான்.‌

இருவரது முகத்தையும் கூர்ந்து பார்த்த அன்புச் செல்வன், ‘ம்ம்.. இவங்க முகத்தைப் பார்த்தா பொய் சொல்ற மாதிரி தெரியல’ என்று மனதில் நினைத்தவராய்,

“வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் வருது.. ஆங்க்க்..உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் இப்படிக் கேள்வி கேட்கலம்மா. காலம் கெட்டுக் கிடக்குது, வயசு பசங்க இப்படி நள்ளிரவு வரைக்கும் வெளியில இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லுங்க பார்க்கலாம். நீங்க வர்ற வரைக்கும் என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்களும் பயந்துட்டு இருக்கணும் இல்லையா! அதனால தான் இப்படிக் கேட்டேன். ஒரு விடயத்தை மட்டும் நீங்க புரிஞ்சுக்கங்க, பெத்தவங்க உங்களைக் கண்டிச்சு வளர்க்குறதுக்குக் காரணம் நீங்க நல்ல பசங்களா வளரணும்னு தான். அதே போல உங்களுக்கு இது மாதிரி நிபந்தனைகள் போட்டு நடந்துக்க சொல்றதும் உங்க மேல நம்பிக்கை இல்லாம கிடையாது.நம்ம பிள்ளைங்க பாதுகாப்பா வளரணும், எந்த ஆபத்துலையும் சிக்கிக்கக் கூடாதுங்குறதுக்காகத் தான்.. அதை மொதல்ல புரிஞ்சுக்கோங்க.‌ என்னமோ பெத்தவங்களை எதிரி மாறி பார்க்காதீங்க சரியா! போங்க எப்படியும் ரெண்டு பேரும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க போய்ச் சாப்பிடுங்க.‌ அரசி பிள்ளைகளுக்குச் சாப்பாடு வச்சிட்டு வந்து படு, காலையில எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு நான் சீக்கிரமே கல்லூரிக்கு போகணும்” என்று சொன்னவாறு அவர் தங்களது அறைக்குள் நுழைய.

அண்ணன் தங்கை இருவரும் 'அப்பாடா" என்று பெருமூச்சு விட்டவாறு இருவரும் தங்களது அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு, கைகால் முகம் கழுவி கொண்டு சாப்பிட வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறியவாறே,

“அண்ணனும், தங்கச்சியும் எங்க போயிட்டு வந்தீங்கன்னு உங்க அப்பாவால கண்டுபிடிக்க முடியாது. ஆனா நான் கண்டுபிடிச்சிட்டனே‌. உங்க காலணிகள் எல்லாம் மணலா இருக்கு, அதைப் பார்த்தாலே புரியுது நீங்க எங்க போயிட்டு வந்தீங்கன்னு. சாப்பிட்டுட்டு யாராவது ஒருத்தர் போய் உங்க காலணி எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சிட்டு வந்து படுங்க.‌ இல்லைன்னா காலைல உங்க அப்பா அதைப் பார்த்தாரு அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேத்துக்கும் காதுல இருந்து ரத்தம் வர்ற அளவுக்கு அறிவுரை கிடைக்கும் ஆமா சொல்லிட்டேன். சாப்டுட்டு இதெல்லாத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்தே எடுத்து வச்சிட்டுப் போய்ப் படுங்க” என்று சொல்லி விட்டு அருளரசி உள்ளே செல்ல திரும்பிய வேளையில் அவரைத் தடுத்து நிறுத்தினாள் யாழினி.

“அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நில்லு” என்றவாறு அவசர அவசரமாகத் தட்டில் இருந்த இரண்டு தோசைகளையும் வாய்க்குள் திணித்த யாழினி தன் அண்ணனைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி, “சாப்டுட்டு இது எல்லாத்தையும் எடுத்து வச்சுடு அண்ணா நான் அம்மாட்ட உன் விடயமா பேசுறேன்” என்று சொன்னவாறு தன் அம்மாவை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

யாழினியோ தங்கள் இருவரது காலணிகளையும் சுத்தம் செய்தவாறு, “அம்மா உன்கிட்ட இதை நான் எப்படிச் சொல்றதுன்னு தெரியல. இது ஏற்கனவே உனக்குத் தெரிஞ்ச விடயம் தான். அண்ணனுக்கு லண்டன்ல போய் ஒர்க் பண்றதுக்கு ஆஃபர் வந்திருக்குறதைப் பத்தி நீ என்ன நினைக்கிற? அவனை நாம அனுப்பலாமா வேணாமா ம்மா?”

“இதுல நான் நினைக்க என்னடி இருக்குது.‌ உங்க அப்பா அனுமதி கொடுத்தா அவன் போகட்டும் நான் வேணாம்னு சொல்லல. ஆனா ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம பிள்ளைங்க நம்ம கண்ணு முன்னாடி வளர்றது வேற, எங்கேயோ கண்காணாத இடத்துல இருக்குறது வேற இல்லையா! அங்க அவன் சாப்பிட்டானா இல்லையா? என்ன எதுன்னு தெரியாம இங்க நாம பயந்துகிட்டு கெடக்க வேண்டியதா இருக்கும். அதனால தான் வேணாம்னு சொன்னேன். ஆமா உங்கிட்ட சம்மதம் வாங்கிட்டு வர சொல்லிருந்தனே, அப்ப நீ உங்க அண்ணனை லண்டன் போகச் சொல்லிட்டியா?”

“அம்மா உங்களுக்கே தெரியும் அண்ணா மேல நான் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு. அப்படி இருக்கும் போது அவன் அவ்வளவு ஆசையா கேட்டாம்மா அப்புறம் எப்படி என்னால இல்லன்னு சொல்ல முடியும். ஆனா அவன் இங்க இல்லாதது நமக்குக் கஷ்டமா இருந்தாலும் அவனோட ஆசையை நிறைவேத்துறது நம்ம கடமை இல்லையா? அவன் போயிட்டு வரட்டும்மா. ஒன் இயர் தானே கேட்கிறான், போயிட்டு வரட்டுமே”

“நீ போயிட்டு வரட்டும்னு சொல்ற. ஆனா உங்க அப்பாவும் இதையே சொல்லணுமே, எனக்குத் தெரிஞ்சு அவர் அவனை லண்டன் போக விடமாட்டாருன்னு தான் தோணுது”

“புரியுதும்மா. அப்பா கண்டிப்பா விட மாட்டாங்க தான். ஆனா நீங்க அப்பா கிட்ட பேசுங்க, இல்ல வேணாம் நீங்க சொன்னாலும் அவரு கேட்கமாட்டாரு. அதனால நான் ஒரு பிளான் சொல்றேன் அதுபடி செஞ்சா கண்டிப்பா அப்பா சம்மதிப்பாரு.அவன் லண்டன் போயிட்டு வரட்டும்மா. அவனாவது அங்க போயி ஹேப்பியா இருந்துட்டு வரட்டுமே மா. அப்பா நல்லவர் தான் நான் இல்லைன்னு சொல்லலை, ஆனா பிள்ளைங்க வளர்ந்ததுக்கு அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல ரொம்பக் கட்டுப்பாடு போட்டா, பசங்க அவங்களோட அப்பா அம்மாவை கொஞ்ச கொஞ்சமா வெறுத்து, ஒரு சூழ்நிலையில மொத்தமா அவங்கக்கிட்ட இருந்து பிரிஞ்சிடுவாங்கமா. அப்பா இதைச் சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும். சரிமா வாங்க போலாம்”

“இன்ன வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு முன்னால கதவத்தை ( வெளி வாயிற் கதவு) திறந்தே வெச்சுருந்தேன். அதனால ஒழுங்கா போயி அதைப் பூட்டிட்டு வா, நான் உள்ள போறேன்.‌ மறக்காம வெளிக்கதவை பூட்டிட்டு, வாசற் கதவையும் தாழ் போட்டுட்டுப் போய்ப் படு.‌ அப்புறம் உன் அறையில ரொம்ப நேரம் விளக்கு எரிஞ்சுதுன்னா அப்பா திட்டுவாங்க. அதே மாதிரி அதிகமா அலைபேசியை நோண்டக்கூடாது. யார் கிட்டையும் குறுஞ்செய்தியில பேசிக்கிட்டு இருக்கக்கூடாது. முக்கியமா அந்தச் சோடாபுட்டி சௌமியாவுக்கு மட்டும் நீ செய்தி அனுப்பவே கூடாது. பேச ஆரம்பிச்சிட்டா நீங்க விடிய விடிய கூடப்பேசுவீங்க. ஒன்னா தானே வேலை பாக்குறீங்க, அங்க பேசாததையா இங்க வந்து பேசிடப் போறீங்க. எப்ப பார்த்தாலும் அந்த அலைபேசியவே கட்டிக்கிட்டு கெடக்க வேண்டியது போ போ போய்த் தூங்குற வழிய பாரு. அப்புறம் காலைல தாமதமாகிடுச்சுன்னு குதிப்ப” என்று சொன்னவாறு அரசி உள்ளே செல்ல.

“அதைப்பத்தி எல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகுது. நாங்க நியூ ஜன்ரேஷன் அப்படித்தான் இருப்போம் போங்க போங்க ஒல்டு பீப்புள்ஸ்” என்று சொன்னவாறு காலணிகளை ஓரமாக வைத்துவிட்டு மெயின்கேட்டை பூட்டுவதற்காகச் சென்றாள். வராண்டாவில் நடந்து செல்லும் போது கடலில் கிடைக்கும் கிளிஞ்சல் ஒன்று அவள் காலைப் பதம் பார்த்தது. கீழே குனிந்து அவள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் நின்றிருந்த அந்தக் கேட்டின் முன்பு ஆள் உயரத்திற்குச் சற்று மேலே அந்தரத்தில் மேலெழும்பியது அலைகளின் தொகுப்பொன்று. அது அவளை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு அவளை நெருங்கிய வேளையில் தன் காலில் குத்தியிருந்த கிளிஞ்சல் சிற்பியை எடுத்து ஓரமாகப் போட்டவள், ‘இது எப்படி இங்க வந்துருக்கும்’ என்ற யோசனையோடு சட்டென்று நிமிர்ந்திட நொடியில் அந்தரத்தில் மிதந்த அந்த அலை மறைந்து போனது..

அந்தக் கிளிஞ்சல் குத்திய இடத்தில் இருந்து மெல்ல ரத்தம் கசிந்தது யாழினிக்கு. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கேட்டை பூட்டி விட்டு நொண்டி நொண்டி நடந்தவாறு வீட்டுக்குள்ளே செல்ல திரும்பி நடந்தாள். அவளது ரத்தம் பட்ட இடத்தில் எல்லாம் ஏதோ மினுமினுப்பாய் தோன்றி மறைய, அந்த ரத்த சுவடுகளுக்கு அருகில் நீரலையாய் பாதங்கள் இரண்டு தோன்றி, அந்த இடத்தில் அச்சாய் பதிந்து மறைந்து போனது..

அதை அறியாதவளோ வாசல்படியில் இருந்த மிதியடியில் கால்களை நன்றாகத் துடைத்துவிட்டு கதவைப் பூட்டி விட்டு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தன் அறைக்குச் சென்றாள்..

அவளது தாய் அருளரசி சொன்னது போல் தன்னறைக்கு வந்து கட்டிலில் விழுந்ததும், அலைபேசியைக் கையிலெடுத்து புலனத்துக்குள் நுழைந்து தன் தோழி சௌமிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தாள். சௌமியும் பதிலுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிட, இரவு பன்னிரண்டு முப்பது ஆனது கூடத் தெரியாமல் இருவரும் குறுஞ்செய்தி வாயிலாகப் பேசிக்கொண்டிருந்தனர்.‌

கடைசியில, “நாளைக்கு ஒரு சர்ஜரி இருக்குன்னு டாக்டர் சொன்னாருடி. கண்டிப்பா அதை நாம நோட்ஸ் எடுத்தாகணும் அதனால இப்ப தூங்கலாம். மிச்சத்தைக் காலையில பேசிக்கலாம், நீயும் தூங்கு குட் நைட்” என்று அனுப்பி வைத்த யாழினி அலைபேசியைத் துண்டித்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு எழுந்து சென்று தன்னறையில் எரியும் விளக்கை அணைத்துவிட்டு வந்து அந்தப் பஞ்சு மெத்தையில் விழுந்தாள். களைப்பின் காரணமாகவும் வெகுநேரம் கண் விழித்திருந்தாலும் கண்ணில் எரிச்சல் ஏற்பட, சிறிது நேரத்திலேயே தன்னை மறந்து அயர்ந்து உறங்கி விட்டாள் யாழினி.

நல்ல உறக்கத்தில் இருந்த அவளுக்குத் திடீரென்று ஏதேதோ தோன்றியது. கடல் அலையின் மீது ஓடம் ஒன்று செல்வது போலவும், அந்த ஓடத்தில் இவள் ஒருவள் மட்டுமே தனித்து அமர்ந்திருப்பது போலவும் தோன்றியது. சிறிது நேரத்தில் ஓடம் தலைகீழாகக் கடலலையில் குப்புறக் கவிழ்ந்து விட, அதன் மீது அவள் நின்று கொண்டு 'காப்பாத்துங்க காப்பாத்துங்க' என்று கத்துவது போலவும் தெரிந்தது.

தொலைவில் யாரோ ஒருவன் கடல் அலையில் பாய்ந்து நீந்தி வந்து அவள் கரத்தை பிடித்துக் காப்பாற்றுவது போலவும் தோன்றியது. இவள் அவனைப் பற்றிகோலாகப் பற்றிக்கொண்டு மயங்கி அவன் மீதே சரிவது போலவும் தோன்றியது. பின்பு அவன் தன் இதழ் வழியே தன்னுயிர் மூச்சை இவளது இதழ் வழி அனுப்பிய மறுநிமிடம் இவளும் உயிர்த்தெழுந்தாள். அவள் ஏதோ பேசிட முனைவதற்குள் அவளைக் காப்பாற்றியவனே கூரிய ஆயுதம் கொண்டு அவள் கழுத்தை அறுப்பது போலவும், கழுத்திலிருந்து குபுகுபுவென்று ரத்தம் கொட்டுது போலவும், அவள் அப்படியே உயிர் துறந்து நீரலையில் மிதப்பது போலவும் தெரிய அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்..

முகமெங்கும் முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வை துளிகள் அவள் பயத்தின் அளவை தெரிவித்திட சுற்றி முற்றிலும் பார்த்தவாறு தான் எங்கிருக்கிறோம் என்பதை உறுதி செய்தவளுக்கு அப்போது தான் கண்டது கனவு என்பதே புரிந்தது. படபடத்து துடிக்கும் நெஞ்சை சமன்படுத்த வழியறியாது ஆழப் பெருமூச்செறிந்தவாறு தன்னைச் சமன்படுத்த முயன்றாள். அப்போதும் முடியாததால் எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்தாள்.‌ கண்களை மூடினாலே அக்காட்சிகள் தான் அவளுக்கு நினைவுக்கு வந்து கண் முன்னே நின்றது..

சிறிது நேரத்தில் கொஞ்சம் மனமானது சமன்பட மணியைப் பார்த்தாள். மணி 4 என்று காட்டியது. இதற்கு மேல் எங்கே தூங்குவது, போர்வையை எடுத்து தலையோடு போர்த்தி முக்காடு போட்டுக் கொண்டவாறு கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பின்பு அவளையறியாமல் உறங்கி விட, மீண்டும் அவள் தூங்கியெழுந்து குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பி செல்லும் போது மணி 8 ஆகியிருந்தது. இதற்கு மேல் தன் தாயிடம் சென்று டீ கேட்டால் அடி விழுந்தாலும் விழும் என்று நினைத்தவாறு சாப்பிடுவதற்காக உணவு மேசையில் சென்று அமர்ந்தாள். ஒரு கையில் ஸ்டெதஸ்கோப் வீற்றிருக்க,தோள் பட்டையில் அலங்காரமாய் வெள்ளை கோட்டினை மாட்டியிருந்தாள். மற்றொரு கையில் உபகரணங்கள் அடங்கிய கையோடு வந்து அமர்ந்த தன் மகளை ஓர விழியால் கவனித்தவாறு கல்லூரி செல்வதற்குத் தயாராகி விட்டு உணவுண்டு கொண்டிருந்தார் அன்புச் செல்வன்.

இரவெல்லாம், லண்டன் செல்லப் போகிறோம்! அங்கு எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் அந்தச் சூழ்நிலையை அனுபவித்து வாழவேண்டும் என்று ஏகப்பட்ட கனவுகளோடு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த தீபன் அதிகாலையில் தான் உறங்கினான். அதனால் தாமதமாகத் தான் எழுந்து கிளம்பி வந்தான்.‌

தன் தந்தை வழக்கத்திற்கு மாறாகத் தனக்கு முன் உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டு உள்ளுக்குள் திக்கென்றது தீபனுக்கு. இருந்தும் அதை மறைத்துக்கொண்டு சத்தமில்லாமல் ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தான். அவனது தாய் அருளரசியோ அவனுக்கு ஏதோ சைகை காண்பிக்க, என்னவென்று புரியாமல் தன் தங்கையைப் பார்த்தான் தீபன். அப்போது தான் இரவு அவள் ஏதோ திட்டத்தை அரைகுறையாகச் சொன்னது நினைவு வர தன் தங்கையின் காலை சுரண்டி, “என்னடி பிளான்?” என்று கேட்டான் வாய் அசைவில்.

அவளோ எதுவும் பேசாதே என்பதுபோல் சைகை செய்தவாறு, “அப்பா உங்கக்கிட்ட ஒரு விடயம் கேக்கணும்?” என்று பூடமாக ஆரம்பித்தாள்.



“சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாதுன்னு தெரியாதா? தெரிஞ்சும் பேசணுங்குறீன்னா என்னன்னு தெரியலையே. சொல்லு கேட்கலாம், என்ன முக்கியமான விடயத்தைப் பத்தி பேச போற? சீக்கிரம் சொல்லு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் அவசரமா போயாகணும்” என்று சொன்னவாறு அவசர அவசரமாக இட்லியை வாய்க்குள் தள்ளினார் அன்புச் செல்வன்.

பயத்தில் ஒருமுறை எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள் தட்டு தடுமாறி, “அது வந்துப்பா அண்ணனுக்கு லண்டன் போக ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. உங்களுக்குங்கூடத் தெரிஞ்சுருக்குமேப்பா. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்க, லண்டன் போயிட்டு வான்னு சொல்றோம், அண்ணா போகமாட்டேங்குறான் ப்பா. அங்க போனா நல்ல எதிர்காலம் இருக்குது, கூடவே ஒரு வருஷ அனுபவ அறிவும் கிடைக்கும். அந்த அனுபவ அறிவு இருந்தா இங்க அவனுக்கு வேலையில முன்னேற்றமும், ஊதிய உயர்வும் வரும் ப்பா. இதனால அவனோட எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றோம், அப்பவும் போக முடியாதுன்னு அடம் பண்றான்பா”

“எங்கிட்டையும் கூட உங்க அம்மா இதைப்பத்தி சொன்னா தான். இது மாதிரி லண்டன்ல வேலை செய்ய வாய்ப்பு வந்திருக்குன்னு. அதுவும் லண்டன் மாதிரி பெரிய நகரத்துல இருந்து வந்துருக்குறது பரவாயில்லை தான். ஆனா இங்க இருந்து அவன் அவ்வளவு தூரம் போறது எனக்கென்னவோ நல்லதா படல” என்று அவர் யோசனையுடன் சொல்லவும், சட்டென்று தன் அண்ணனின் காலை மிதித்து, ‘ஜால்ரா போடுடா எரும’ என்று சைகையால் சொல்ல.

“நீங்க சொல்ற மாதிரிதான் எனக்கும் தோணுச்சுப்பா. என்னதான் பெரிய வாய்ப்பா இருந்தாலும் இங்க இருந்து. அங்க போறது எனக்கு சரியா படலப்பா. இங்க கிடைக்கிற சௌகரியம் எதுவும் அங்க கிடைக்காது. அது மட்டும் இல்லாம நானே சமைச்சு, நானே என்னோட வேலையெல்லாம் செய்யறது ரொம்பப் பெரிய தொல்லைப்பா. அதனால தான் நான் அங்க போக வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கே போய் நான் லண்டன் போகலன்னு சொல்லிடுவேன்பா” என்று சரியாகக் காய் நகர்த்தினான் தீபன்.

சில நொடிகள் அவன் சொன்னதை யோசித்தவர் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவியவர் கைகளைப் பூந்துவாலையால் துடைத்தவாறே எழுந்து நின்று அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர், “இல்ல நீயா உன்னோட தேவைகளைப் பூர்த்திச் செய்யப் பழகிக்கணும் அதுதான் உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது. நீ இங்க இல்லைன்னா நாங்க ஒன்னும் சாப்பிடாம இருக்க மாட்டோம், செத்துப் போயிடவும் மாட்டோம் உயிரோட தான் இருப்போம். அதனால நீ லண்டன் போற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிற. முடியாதுன்னு சொல்லக்கூடாது, இதுதான் என்னோட முடிவு, நல்லா கேட்டுக்க இதுதான் என்னோட கடைசி முடிவும் கூட. இனிமே இதைப்பத்தி யாரும் பேசக்கூடாது சரியா! போங்க போய் வேலையைப் பாருங்க” என்று யாரு மேலையோ இருக்கும் கோவத்தை இவர்கள் மீது காட்டி விட்டு கல்லூரிக்கு கிளம்பினார் அன்புச் செல்வன்..

அவர் தலை வீட்டில் இருந்து மறைந்ததும் குதூகலத்தோடு குதித்தெழுந்து ஒரு குத்தாட்டமே போட்ட தீபன்,“ சும்மா சொல்லக்கூடாதுடி தங்கச்சின்னா உன்ன மாதிரி இருக்கணும். போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன் போல அதான் உன்னை மாதிரி எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிருக்கா.. லவ் யூடி பிசாசே” என்று சொன்னவாறு ஓடிச்சென்று தன் தங்கையை அணைத்து உச்சி முகர்ந்தவன், “தேங்க்ஸ்டி பிசாசு. இப்ப நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்று சொன்னவாறு அலுவலகம் செல்ல கிளம்பினான். சந்தோஷத்தில் அவன் உரைத்தவை நிஜம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவர்கள் குடும்பத்தினரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அனைவரும் அறிந்து கொள்ள வரும் போது எந்த உயிர் பிழைத்திருக்கும், எந்த உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்து இருக்கும் என்று எவருக்கும் தெரியாது..



ஜென்ம ஜென்மமாய்
தொடரும் பந்தமென்பது காதலர்களின் நேசத்திற்கு
மட்டும் உகந்ததல்ல..

தொப்புள் கொடி உறவாடிய
உடன் பிறப்புகளுக்கும் பொருந்தும்..

- அற்புதமது பிறக்கும்..





 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -12

தன் அண்ணனும் வேலைக்குக் கிளம்பி சென்றதற்குப் பிறகு தன் தாயைத் தேடி சென்ற யாழினி,
“அம்மா உங்ககிட்ட ஒன்னு கேக்கணும், கேட்கவா?” என்றிட.

“என்ன கேட்கணும் கேளு யாழினி” என்றவாறு பாத்திரங்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தவர் அப்போதுதான் நினைவு வந்தவராக, “ஏய்! மணி 9 ஆகப் போகுது நீ இன்னும் வேலைக்குக் கிளம்பலையா?” என்று கேட்க.

“அதெல்லாம் நான் போயிக்குவேன். நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு? அப்பா எதையாவது நம்மக்கிட்ட இருந்த மறைக்கிறாரா?”

“உனக்கு எதுக்குடி இப்படி ஒரு டவுட் வந்துச்சு? அப்படி எதுவும் அவர் மறைக்கிற மாதிரி தெரியலையே? பொதுவாவே உங்க அப்பா மனசுல இருக்குறத வெளில சொல்ல மாட்டாரு தான். ஆனா நம்மக்கிட்ட சொல்ல வேண்டிய விடயமா இருந்தா? நாம அதைத் தெரிஞ்சுக்கணும்னு அவர் நெனச்சா மோஸ்ட்லி அந்த மாதிரியான எல்லா விடயத்தையும் நம்ம கிட்ட சொல்லிடுவாறே!”

“இல்லம்மா அப்பா எதையோ மறைக்கிறாரு. நைட்டே இதைப் பத்தி உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், ஆனா பேச முடியாம போயிருச்சு.ஒரு வாரத்துக்கு முன்னாடி அப்பா ஏதோ மேப், பொக்கிஷம். புதையல்னு எல்லாம் போன்ல பேசிக்கிட்டு இருந்தாரும்மா. நான் அந்தப் பக்கம் போகவும் டக்குனு அப்படியே பேசறதை ஸ்டாப் பண்ணிட்டாரு. எனக்கு என்னமோ அப்பா ஏதோ தேவையில்லாத விடயத்துல தலையிட்டு, பிரச்சனையைக் கொண்டு வரப்போறாருன்னு தோணுது.‌ ஒத்துக்குறேன் அப்பாவுக்குத் தமிழ் மேல ஆர்வம் அதிகம் தான், அதுல இருந்து தெனமும் எதையாவது கத்துக்க நினைக்கிறாரு தான் இல்லைங்கலை. அதே போல அவருக்குப் பழங்காலப் பொருட்களைக் கலெக்ட் பண்ணி வெக்கிறதும் புடிக்கும்னு தெரியும். ஆனா அதுக்காக யாராரோடவோ சேர்ந்துகிட்டுப் பழங்காலப் பொருட்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறேன், பொக்கிஷத்தைக் கண்டு பிடிக்கப் போறேன்னு சொல்றதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்..”

“ஏய் என்னடி விட்டா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற. அப்படி எல்லாம் எதுவும் இல்லை, அப்படி ஏதாவது இருந்திருந்தா உங்க அப்பா நம்ம கிட்ட சொல்லி இருப்பாருடி. இது மாதிரி தேவையில்லாம பேசறதை விட்டுட்டு நீ மொதல்ல ஹாஸ்பிடலுக்குக் கிளம்பு. எப்ப பார்த்தாலும் எம்புருஷனை குறை சொல்றதலயே பொலப்பா வச்சுருக்கா!” என்று சொல்லி அவளைக் கிட்டத்தட்ட மிரட்டி வேலைக்கு அனுப்பி வைத்த அரசிக்கும் ஏதோ தவறாக நடக்கப் போவது போலவே உள்ளுணர்வு உணர்த்த பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அதன் பிறகு தான் சாப்பிட அமர்ந்தார்.

வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் கிளம்பிய யாழினியை உருவமற்ற பிம்பம் ஒன்று பின்தொடர்ந்தது.‌ தந்தையைப் பற்றிச் சிந்தித்தவாறே மருத்துவமனை இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கான சாலையில் வண்டியை திருப்பியவள் எதிரே வந்த மிதிவண்டியைக் கவனிக்காமல் இடித்து விட, அந்த மிதிவண்டியை ஓட்டி வந்த சிறிய பெண்ணும், இவளும் கீழே விழுந்து வாரினார்கள்.
ஆனாலும் நொடியில் சுதாரித்து எழுந்தவள் ஓடிச்சென்று அச்சிறுமியை தூங்கி நிறுத்தி, ஏதேனும் அடிபட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.
எந்தக் காயமுமில்லை என்ற பிறகு தான் அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.‌
முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, “சாரி பாப்பா நீ வந்ததைக் கவனிக்கலை. அதான் இடிச்சுட்டேன் சாரி.. இந்த அக்காவை மன்னிச்சுடுடா ” என்று கொஞ்சும் குரலில் சொல்ல.

அந்தச் சிறுமியோ,“பரவாயில்ல அக்கா எனக்குப் பெருசா எந்தக் காயமும் படலை. ஆனா உங்க கையில தான் ரத்தம் வருது” என்றிட.

“பரவாயில்ல பாப்பா நான் பார்த்துக்கிறேன். இனிமே நீ இப்படித் தனியா சைக்கிள் ஓட்டாத.அதே மாதிரி ஓரமா ஓட்டணும், கவனமாவும் ஓட்டணும் சரியா! கியூட் கேர்ள். அழகா இருக்க, அப்படியே பொம்மை மாதிரி” என்றவள் குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து விட்டு சென்றாள்...

அங்கு நடப்பவற்றைப் பார்த்திருந்த ஒரு ஜோடி விழிகளோ, அவளை ரசனையாக வருடிச்சென்றன. கூடவே இதழ்களோ, “அந்தப் பாப்பா மட்டும் இல்ல நீயும் அழகா‌ கியூட்டா பொம்மை மாதிரி தான் இருக்க” என்று உச்சரித்தன...அவள் அங்கிருந்து சென்றதும் தான் அவ்விழிகளுக்குச் சொந்தக்காரரான அந்த நபரும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்..

தான் டிரைனியாகப் பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்தவள் பார்க்கிங் ஏரியாவில் ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு சௌமியாவுக்காகக் காத்திருந்தாள். அவ்வபோது தனது தோள்பட்டையில் ஏதோ அழுத்துவது போல் உணர்ந்தவள் , அவ்வபோது தோளை அழுத்தி விட்டுக்கொண்டாள். அவள் தோளின் மீது அமர்ந்திருந்த உருவமோ! நொடிக்கொருதரம் அவள் கையிலிருந்து வழியும் ரத்தத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தது.

10 நிமிடங்களுக்கு மேலாகப் பொருத்து பார்த்தவள் சௌமி வரவில்லை என்றதும் அவளுக்கு அலைபேசியில் அழைத்திட, காலை அட்டெண்ட் செய்த சௌமி, “பிசாசே நான் ஹாஸ்பிடல்ல தான்டி இருக்கேன் உள்ள வாடி. சர்ஜரி ஸ்டார்ட் ஆகப் போகுது சீக்கிரம் வந்து தொலை” என்ற சொன்னவாறு அழைப்பைத் துண்டிக்க.

“ச்சைக் இவளோட இம்சையா இருக்குது. இவளுக்காக நான் இங்க வெயிட் பண்ணுனா? அவ எனக்கு முன்னாலையே உள்ள போயிருக்கா கிறுக்கி இரு பிரேக் டைம்ல வெச்சு மொத்துறேன்”
என்று சௌமியைத் திட்டிக் கொண்டே தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியையும் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வேக வேகமாக உள்ளே ஓடினாள்..

ரிசப்சனில் இருந்த பெண்ணோ இவளைப் பார்த்துச் சினேகமாய்ப் புன்னகைத்தவாறு, “என்ன இன்னைக்கும் லேட்டா? சீக்கிரம் உள்ள ஓடு யாழி சீப் டாக்டர்ஸ், டீன் எல்லாம் வந்துட்டாங்க. நல்லவேளை நேம் லிஸ்ட் இன்னும் செக் பண்ணியிருக்க மாட்டாங்க சீக்கிரம் ஓடு ஓடு”என்று சொல்ல.

அவளிடம் மிதமான புன்னகையை வாரி வழங்கி விட்டு வேக வேகமாக நடந்தாள். மின் தூக்கியில் செல்வதற்குக் கூட நேரமில்லாமல் மூன்றாம் தளத்தினைப் படிக்கட்டில் ஏறியே அடைந்தவள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் உடமைகளை வைத்துவிட்டு, வேகமாக ஓடி சென்று ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டு விட்டு, மருத்துவமனை உடையை அணிந்து கொண்டு அறுவைசிகிச்சை அறைக்கு முன்னால் வந்து நின்று ஆஸ் புஸ் என்று மூச்சு வாங்குவதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முழுவதுமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட ஒருவன் அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே நுழையுமுன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து, “கெட் இன்” என்று சொல்லிவிட்டு செல்வதைக் கண்ட அனைவரும் ஒரு நிமிடம் பேயறைந்தது போல் அதிர்ந்து, பின் மறு நிமிடமே முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டவர்கள் குசுகுசுவென்று பேசியவாறு உள்ளே நுழைய அதைக் கவனிக்கும் நிலையில் கூட யாழினி ‌இல்லை.

சௌமியோ யாழினியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றவள் அவளின் காதில், “அடியேய் இது நம்ம தகரடப்பா டீன்வாய்ஸ் மாதிரி இல்லடி. வேற ஒருத்தரோட வாய்ஸ் மாதிரி இருக்குடி. தூங்கி விழுந்து மானத்தை வாங்கிடாத. அப்புறம் செமயா டோஸ் வாங்குவ! கவனமா எல்லாத்தையும் எழுதுடி அப்பத்தான் நான் நோட்ஸ் எடுக்க முடியும். ஏன்னா எனக்குச் சொல்ல சொல்ல எழுத வராதுடி. நம்ம டீனுன்னாவே எனக்குக் கைகால் உதறும் இதுல வேற ஒருத்தன் வந்துருக்கான், சுத்தமா என்னால முடியாதுடி. அதனால கவனமா எழுது, இல்லன்னா அப்புறம் நாம தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்..” என்று சொல்ல.

“கிரகம் புடிச்சவளே! உன்னால தான்டி நான் லேட்டா வந்தேன்.‌ உனக்காக வெளிய பத்து நிமிஷம் வெயிட் பண்ணாம இருந்திருந்தா நான் எப்பவோ உள்ள வந்துருப்பேன்.‌இதுக்கு மேல ஏதாவது பேசுன வாயை அடிச்சே உடைச்சிடுவேன், மூடிட்டு நில்லு போந்தா கோழி” என்று கடுப்புடன் யாழினி சொல்லி முடித்தபோது, “நான்சென்ஸ். அங்க யாரு பேசிக்கிட்டு இருக்குறது? பீ சைலன்ட். திஸ் இஸ் நாட் யுவர் பிரேக் டைம், அன்ட் ரெஸ்ட் ரூம் திஸ் இஸ் ஆபரேஷன் தியேட்டர். புரியிதா? இல்லையா? இங்கையும் வந்து நான்சென்ஸ் மாதிரி பேசிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க கிளாஸ் அட்டர்ன் பண்ணுற லட்சணமா? இதுக்கு மேல யாராவது ஏதாவது பேசினீங்க அவ்வளவு தான். ஒழுங்கா இங்க நின்னு நோட்ஸ் எடுக்குறதுன்னா எடுங்க, இல்லன்னா தயவு செஞ்சு வெளியே போயிடுங்க” என்று காட்டுக் கத்தலா கத்தினான் அவன்..

அதோடு நிறுத்தாமல் மேலும் தனக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளைச் அவன் சொல்லி திட்டிட அனைவரும் கப்சிப்பென்று அமைதியாக அவன் செய்வதையே பார்த்தனர்.‌ ஆனால் யாழினியோ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “ஆமா இவரு பெரிய இவரு? இவரு சொன்னா நாங்க கேட்கணுமோ? பெரிய இங்லீகிஸ் தொரை திட்டும் போது கூட இங்கிலீஸ்ல தான் திட்டுவாரு. ஆளையும், மூஞ்சியையும் பாரு. மொச புடிக்க வந்தவன் மாதிரி மூஞ்சியெல்லாத்தையும் மூடிக்கிட்டு வந்து நிக்கிறதை” என்று வாயிக்குள்ளேயே முணுமுணுத்தவள், மேலும் அவனை அர்ச்சனை செய்தவாறு தான் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்..

அவனது கரங்களோ மிகக் கவனமாக நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க, இதழ்களோ நிறுத்தாமல் சீரான இடைவெளியில் அவர்களுக்குக் குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தது.‌ மற்றவர்கள் அனைவரும் அதைக் கவனமுடன் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். ஏன் யாழினியும் நன்றாகத்தான் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் நோயாளியின் உடலில் இருந்து ரத்தம் குபுக்கென்று வருவதைப் பார்த்த ஒரு பெண் சற்று முன்பு அனைவரையும் திட்டிய அந்த மருத்துவரின் அருகில் இருந்து சற்று நகர்ந்து யாழினியின் அருகில் வந்தவள், “யாழி ரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் இங்க நின்னுக்குறேன், நீ அங்க போறியா?” என்றிட.

அவளை ஒரு முறை திரும்பி பார்த்து தீயாய் முறைத்தவள், “ஏற்கனவே அவன் காச்சி எடுக்குறான்,என்னை அங்க போய் நிற்க சொல்றியேடி. எனக்குன்னே டிசைன் டிசைன்னா பொறந்து வருவீங்களாடி?” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பி விட்டுச் சத்தமில்லாமல் மெதுவாக நகர்ந்து அவன் அருகில் சென்று நின்றாள்..

சிறிது நேரம் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அவன் குறிப்பு சொல்ல சொல்ல மற்றவர்கள் எழுதினாலும், கவனமுடன் அங்கு நடப்பதையும் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் திடீரென்று யாரோ ஒருத்தர் தன் பின்னந்தலையில் அடிப்பதுபோல் உணர்ந்த யாழினி சட்டென்று தலை கிறுகிறுக்கக் கீழே விழச் சென்றவள் பிடிமானத்திற்காக அருகில் நின்ற அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே விழ. அதை எதிர்பார்த்திராத அவனும் தன் கையில் இருந்த கத்தியை சடாரென்று திரும்பியதில் அந்தக் கத்தி சரியாக யாழினியின் வலது தோள்பட்டைக்குச் சற்று மேலே கழுத்தின் ஒரு ஓரத்தில் இறங்கியது..

அதை அவன் மட்டுமல்ல அங்கிருந்த மற்ற யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. நிலமையின் வீரியத்தை அறிந்தவன், “வழி விடுங்க” என்று சொல்லி அனைவரையும் விலக்கி விட்டவன் வேகமாக யாழினியைத் தூக்கி அருகில் இருந்த ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தவன், “நர்ஸ் சீக்கிரம் வாங்க, பிளீடிங் நிக்கிறதுக்கு ஏதாவது பண்ணுங்க ஜஸ்ட் 2 மினிட்ஸ் வந்துடுறேன். டாக்டர் பிரவீன் இங்க வாங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. ஸ்டூடன்ட்ஸ் கொஞ்சம் தள்ளி நின்னுங்க” என்று சொல்லி விட்டு ஏற்கனவே அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த நோயாளிக்கு பிரவீனின் உதவியோடு வேகமாகச் சிகிச்சையளித்து முடித்தவன் அதே கையோடு வேகமாக யாழினியை நெருங்கினான்.

அவளது கழுத்துப் பகுதியில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. கண்டிப்பாகத் தையல் போட்டால் தான் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன் வேக வேகமாகத் துரிதகதியில் செயல் பட்டான்..வெண் பஞ்சினை வைத்துக் காயத்தைச் சுத்தம் செய்தவன், காயத்தை ஆராய்ந்தான். நல்லவேளையாக நரம்புகள் எதுவும் அறுபடாமல் இருந்ததால் பெரிதாக உயிருக்கு ஆபத்தில்லை நிச்சியம் காப்பாற்றி விடலாம் என்றவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ ஒன்று அவனையும் அவளைப் புறம் சேர்த்து அழுத்துவது போல் இருக்க, அவள் மீது விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முயன்று தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு அவன் நிமிர முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் முடியாமல் அவளை நோக்கி குனிய ஆரம்பித்தான் அவன்.

அங்கு நடப்பவற்றை அனைவரும் ஒரு வித திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யாழினியின் இதழில் மென்மையாக இதழ் பதித்து முத்தமிட்டிருந்தான் அவன். அனைவரும் அதை அதிர்வோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் நிமிர்ந்து நின்றவன் என்ன நடந்தது? என்று உணராமலேயே கை போன போக்கில் அவளது காயங்களைச் சுத்தப்படுத்திவிட்டு தையலிட்டு முடித்தவன், தன் முகக் கவசம் கையுறைகள் அனைத்தையும் கழட்டி வீசிவிட்டு, மறக்காமல் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் யாழினியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு நோயாளிகள் இருக்கும் வார்டுக்கு வந்தான்.

அவளை ஒரு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு யார் இருக்கிறார்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு நிமிர்ந்திட. அப்போது தான் அவனுக்குச் சுய நினைவே வந்தது போல் இருந்தது. என்ன நடந்தது? தான் என்ன செய்தோம்? என்பதைக் கூட உணராமல் ஒரு நிமிடம் பித்துபிடித்தவன் போல நின்றிருந்தவன் யாரோ தன் தோள் பட்டையில் கை வைத்து அழுத்தியதற்குப் பிறகே சுயநினைவு பெற்றவனாய் சடாரென்று பின்னால் திரும்பிப் பார்க்க அந்த மருத்துவமனையின் டீனும்‍, அவனது தந்தையுமான சுமேந்திரன் நின்றிருந்தார்..

தந்தையைக் கண்டு விட்டு அதிர்ந்தாலும் ஆழமூச்செறிந்து முதலில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “அப்பா..‌” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தடுத்து நிறுத்திய சுமேந்திரன்,“இப்போ எதையும் பேச வேணாம் உன்னோட ரூமுக்கு போ” என்றார்.

அவனோ, “இல்லப்பா இதுல என்னோட தப்பு எதுவும் இல்ல அந்தப் பொண்ணு தான்” என்று சொல்ல அவன் வந்ததைச் சொல்ல விடாமல் பாதியிலேயே தடுத்து நிறுத்தியவர், “ரூமுக்கு போன்னு சொன்னேன் உதய்.. மொதல்ல நீ உன்னோட ரூம்க்கு போ எதுவா இருந்தாலும் அங்க பேசிக்கலாம் நீ கிளம்பு”என்று சொன்னவரது குரலில் அத்தனை கோபம் மிகுந்திருந்தது.

தன்னையுமறியாமல் மீண்டும் ஒருமுறை விழிகளால் யாழினியைத் தழுவிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் அவன். அந்தக் கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய அந்த டேபிளின் மீது இருந்த பெயர்ப்பலகை அவனை இன்முகத்தோடு வரவேற்றது. வெளியே, டாக்டர் உதய் கிருஷ்ணா அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பொன் எழுத்துக்களைத் தன்னுள் உள்வாங்கி இருந்தது அந்த வலது பக்க சுவர் ஓரத்தில் இருந்த நேம் போர்டு.

தன் அறைக்குள் நுழைந்தவன் முதலில் கழிவறை சென்று முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு, பிறகு கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து விட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.‌ சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் யாவும் கண் முன்னே காட்சிகளாய் விரிய. வேகவேகமாக லேப்டாப்பை எடுத்து அதில் பொருத்தப்பட்டிருக்கும் சாஃப்ட் வேரின் துணையோடு சிசிடிவி கேமரா மூலம் அறுவை சிகிச்சை அரங்கத்தில் நடந்ததை ஓட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.

எங்கே தன் மீது ஏதேனும் தவறு இருக்குமோ? அதனால் தன் தந்தைக்குத் தான் பதில் சொல்ல வேண்டி இருக்குமோ? என்ற பரபரப்பில் திரையின் முன் ஓடும் காட்சிகளைப் பதற்றத்துடன் ஆராய்ந்தான். ஆனால் அங்கே அவன் கண்ட காட்சிகள் யாவும் அவனை நிலைகுலைய வைத்தன.

“என்னது நான் ஒரு பொண்ணுக்குக் கிஸ் பண்ணி இருக்கனா? அதுவும அத்தனை பேர் முன்னாடி. ஆனா எனக்கு அப்படிப் பண்ணுன மாதிரி தோணலை‌யே? ஆனா கேமராவுல பதிவாகி இருக்கு. கடவுளே ஒன்னும் புரியலையே? நான் ஏதும் கனவு காணுறனா?” என்று வாய் விட்டே சொன்னவாறு குழம்பிய மனநிலையில் தலையை அழுந்த கோதிக் கொண்டு மீண்டும் மீண்டும் அக்காட்சிகளையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் சுமேந்திரன்.

கதவு தட்டப்பட்ட சத்தத்தில் நிமிர்ந்தவன் தந்தையைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க. வந்த வேகத்தில் தன் மகனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தவர்,
“அப்படி என்ன கேர்லஸ் உதய்? கொஞ்ச அசந்துருந்தாலும் அந்தப் பொண்ணு இறந்து போயிருக்கும். ரெண்டு பேரோட உயிருல என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு உனக்கு? ஆமா அந்தப் பொண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று காட்டமாகக் கேட்டிட.

“உங்களுக்கே தெரியுமேப்பா நான் இங்க வந்து ரெண்டு நாள்தான் ஆகுதுன்னு. சொல்லப்போனா இந்த ஹாஸ்பிடலுக்கே இன்னைக்குத் தான் வந்தேன். நீங்க தான் இந்தச் சர்ஜரிக்கல் கிளாஸ் எடுக்கச் சொன்னீங்க அதனால தான் அட்டர்ன் பண்ணுனேன். அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி அந்தப் பொண்ணைத் தெரியும்?” என்றான் எரிச்சலான குரலில்.
இதுவரை அடித்திடாத தந்தை முதல் முறை தன்னை அடித்து விட்டாரே என்ற கடுப்பில் உதயும் சிடுசிடுவென்றே பேசினான்.

“யாருன்னே தெரியாத பொண்ணுக்குத்தான் 10 பேர் முன்னாடி கிஸ் பண்ணுனியா உதய்? உன்னால அந்தப் பொண்ணுக்கு கெட்ட பேரு. எல்லாரும் என்னென்ன பேசிக்கிறாங்க தெரியுமா? ஏன்டா இப்படிப் பண்ணுன? நீ வளர்ந்த கல்ச்சர் அப்படி இருக்கலாம், நீ அமெரிக்காவில் படிச்சுருக்கலாம், வளர்ந்திருக்கலாம்! அங்க என்னென்ன கண்றாவியை வேணாலும் கத்துக்கிட்டு வந்துருக்கலாம்‌. ஆனா இந்த ஊர் அப்படிக் கிடையாது உதய். அங்க அன்பை வெளிப்படுத்துற விதமா இந்த மாதிரி பத்து பேர் முன்னால கிஸ் பண்றதெல்லாம் சகஜம். ஆனா இங்கு அப்படிக் கிடையாது? அது தெரிஞ்சும் நீ இப்படி நடந்துக்கலாமா?”

‘ப்ச்ச்.. இவர் வேற நேரம் காலம் தெரியாம கண்டதையும் உளறிக்கிட்டு இருக்காரு’ என்று மனதில் நினைத்தவன் வெளியே, “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லப்பா. திடீர்னு எனக்கு ஏதோ ஸ்ட்ரைக் ஆயிருச்சு, என்ன நடந்துச்சுன்னு எனக்கே தெரியல. நீங்க சொன்னா நம்புவீங்களா என்னமோ? ஆனா நீங்க நம்பாட்டியும் இதுதான் உண்மை. அந்தப் பொண்ணை எப்படிக் கிஸ் பண்ணுனேன்னு எனக்கே தெரியாதுப்பா. இன்னும் சொல்லப் போனா அந்தப் பொண்ணுக்கு எப்படித் தையல் போட்டு, எப்படி இங்க தூக்கிட்டு வந்தேன்னு எனக்கே தெரியல டேட். எனக்கு என்ன ஆச்சுன்னு எதுவுமே எனக்குப் புரியல. அந்த நார்மல் வார்டுல நீங்க என்னை டச் பண்ணுனீங்க பாத்திங்களா அப்பதான் எனக்கு எல்லாமே ஞாபகம் வந்துச்சு. சொல்லப்போனா அப்ப தான் மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிச்ச மாதிரி இருந்துச்சு. நான் என்ன பண்ணுனேன்? எப்படி நடந்துகிட்டேன்? என்ன ஆச்சு? எதுவுமே எனக்குத் தெரியல போதுமா?” என்று உச்சகட்ட கோபத்தோடு சொல்லி முடித்தவன் சிறிது நேரம் அமைதி காத்தான்.

அவருக்குமே தன் மகன் எதுக்கும் பொய் சொல்ல மாட்டான். எந்த ஒரு விடயத்தையும் மறைக்க மாட்டான் என்பது தெரியும். ஏற்கனவே இதுபோலொரு பிரச்சனையில் அவன் உண்மையை எத்தனை பேர் முன்பு தைரியமாக ஒப்புக் கொண்ட நிகழ்வு அவர் கண்முன் வந்து சென்றது. இருந்தும் இப்போது இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அவர் சற்று திணறலுடன் நிற்க.

நொடியில் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்,
“இதை நானே டீல் பண்ணிக்கிறேன் அப்பா. நீங்க யார் கேட்டாலும் இது மெடிக்கல் ட்ரீட்மெண்ட்னு மட்டும் சொல்லுங்க, மத்ததையெல்லாம் நான் பாத்துக்குறேன்” என்று சொன்னவன் அவருக்கு முதுகு காண்பித்து நின்று கொள்ள. சுமேந்திரனோ, “என்னமோ எல்லாத்தையும் சரி பண்ணுனா சரி தான்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்...

பிழையென்றே என்
வாழ்வில் நுழைந்தவளே..!
உன் பிழையால் தானடி பிழைத்திருக்கிறேன்..!
மாபெரும் மெய்யையும்
மறைத்திருக்கிறேன்..

மனதளவில் மனையாளாய்
உனை ஏற்றதினால் தானடி..;
உனையே உயிராய்
நினைத்து நிகழ்வாழ்வை
நிம்மதியாய் கடந்திடுகிறேன்..!

- அற்புதமது பிறக்கும்…




/
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -13.1

தன் தந்தை தன் அறையை விட்டு சென்றதை உறுதி செய்து கொண்ட உதய் அயர்வாக இருக்கையில் அமர்ந்தான். அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தந்தையிடம், நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான் தான். ஆனால் அதை எவ்வாறு செய்யப்போகிறானென்று அவனுக்கே விளங்கவில்லை.‌ சிறிதுநேரம் எதை எதையோ நினைத்திருந்தவன் தன்னையுமறியாமல் அமர்ந்த நிலையிலேயே உறங்கி விட்டான்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில் வேகவேகமாக அவனது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் செவிலிப் பெண்ணொருத்தி.‌ அப்போது தான் உறங்கி எழுந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவன், செவிலிப்பெண்ணின் இச்செயலில் கோபம் கொண்டு, “டாக்டரோட ரூம்குள்ள வரும் போது கதவை நாக் பண்ணிட்டு வரணும்னு தெரியாதா?” என்று அப்பெண்ணின் மீது தன் ஆத்திரத்தை இறக்கிவைக்க.‌

“சாரி டாக்டர் அங்க ஒரு பிரச்சினை. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அவசரத்துல நாக் பண்ணாம உள்ள வந்துட்டேன். நம்மளோட டிரைனி டாக்டருக்கு நீங்க சர்ஜரி பண்ணையில காயமாகி தையல் போட்டீங்கல்ல அவங்க கண்ணு முழிச்சுட்டாங்க.‌ அது மட்டும் இல்ல எல்லாரும் அவங்களை ஒரு மாதிரி பேசவும் டென்ஷன்ல நான் இப்பவே வீட்டுக்கு போறேன் அப்படின்னு சத்தம் போட்டுட்டு இருக்காங்க டாக்டர்” என்றதும் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்தவன்,
“அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்துருக்காங்களா? ஆமா அவங்க வீட்டுக்கு முதல்ல இன்ஃபார்ம் பண்ணுனீங்களா?” என்று கேட்டவனின் குரலில் என்ன மாதிரியான உணர்வு இருந்ததென்று அவனுடன் நடந்து வந்த செவிலிப் பெண்ணுக்கு தெரியவில்லை.‌ ஏன் தான் இவ்வாறு கேட்டோம் என்று அவனுக்கே தெரியாத போது மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

“இல்ல டாக்டர் நாங்க யாரும் இன்பாஃர்ம் பண்ணல” என்றதோடு அப்பெண் பேச்சை முடித்துக்கொண்டு முன்னால் சென்றாள்.

யாழினி இருந்த வார்டை நோக்கி நடந்தவனுக்குச் சற்றுப் படபடப்பாகத்தான் இருந்தது.‌ எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அவள் எந்த மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குவாளோ? என்ற பயமும் அவனுக்கு இருக்கத்தான் செய்தது..

யாழினி இருந்த வார்டை நெருங்கிய போதே கூச்சலும் சத்தமுமாக இருக்க, இவனோ படபடக்கும் இதயத்துடன் அந்த வார்டுக்குள் நுழைந்தான். உதய் அந்த வார்டுக்குள் நுழைந்ததும் அனைவரும் கப்சிப் என்று அமைதியாகிட.

யாழினியோ எழுந்து அமர்ந்தவாறு தையல் போட்டிருந்த இடத்தைக் கைகளால் பிடித்துக் கொண்டவாறு காச்சு மூச்சென்று அங்கிருந்தவர்களிடம் கத்திக்கொண்டு இருந்தாள். அவர்களெல்லாம் சற்று மிரட்சியுடன் அவளைப் பார்த்தாலும் தங்களால் முயன்றவரை அவளைச் சமாதான படுத்த முயன்றனர்.‌

ஆனாலும் அவள் சமாதானமாகாமல் முரண்டு பண்ண, செய்வதறியாது மற்றவர்கள் திணறிக் கொண்டிருந்தனர். அவளது தோழி சௌமியோ,
“அடியேய் அமைதியா இருந்து தொலையேன்டி. இப்ப நீயும் பேசன்ட்டுங்குறதை மறந்துறாத. என்னாச்சு ஏதாச்சுன்னு எங்களுக்கே முழுசா தெரியல,‌ இதுல நீ பாட்டுக்கு இப்படிக் கத்துனா என்னடி அர்த்தம்? நீயே ஒரு ட்ரைனிங் டாக்டர் அப்படி இருக்கும்போது உனக்குத் தெரியாதது இல்லை ஸ்டிட்ச்சஸ் போட்டிருக்காங்கடி நீ பாட்டுக்கு ஏதாவது ஓவரா ரியட் பண்ணுனா தையல் பிரிஞ்சுடும். அதுவும் கழுத்துல தையல் போட்ருக்காங்க கொஞ்ச நேரம் அமைதியாய் இரேன் யாழி.. எதா இருந்தாலும் அமைதியா பேசி தீர்த்துக்கலாம்” என்றிட..

தையல் போடப்பட்டிருந்த இடத்தைக் கைகளால் மெலிதாகப் பிடித்துக்கொண்டே அவள் புறம் திரும்பிய யாழினி, “என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாது. நீயும் தானடி இங்க நடந்ததை எல்லாம் பார்த்துகிட்டு இருந்த, அப்படி இருந்தும் நீயே இப்படிப் பேசினா என்ன அர்த்தம்? எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் யாருன்னு எனக்குத் தெரியாது, அப்படி இருக்கும் போது ஏதோ அங்க நடந்துச்சுன்னு இவங்க பாட்டுக்கு என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசறாங்க. இன்னைக்கு நேத்தா இவங்க என்ன பாக்குறாங்க? கிட்டத்தட்ட நாலு மாசமா என்னோட பழகுறவங்களுக்கு என்ன பத்தி தெரியாதாமா?

இதோ இங்க நிக்குதே குண்டு மம்மி, இதை எவ்வளவு அழகா நான் மம்மி மம்மி கூப்பிடுவேன். பிசாசு அதுக்கு எத்தனை நாள் கேன்டீன்ல டீ வாங்கித் தந்துருப்பேன். எத்தனை நாள் எங்க அம்மா செஞ்சு குடுத்த பாலகாரத்தைக் குடுத்துருப்பேன். அத்தனையையும் வாங்கி முழுங்கிட்டு, எப்படிக் கல்லு மாதிரி நிக்கிது பாரு. அது என்ன தெரியுமா சொல்லுது, எப்படிடி டீன்னோட மகன் இங்க வந்த மறுநாளே அவனைக் கைக்குள்ள போட்டுக்குட்டன்னு கேட்குதுடி. அதைக்கேட்டா எனக்குக் கோவம் வருமா வராதா? அவனோட மூஞ்சி கூட எனக்கு ஞாபகம் இல்லை அப்படி இருக்கும்போது இப்படிச் சொன்னா எனக்குக் கோவம் வராதா சொல்லுடி கோவம் வருமா வராதா? பத்தா குறைக்கு அந்த மாலா அக்கா, இந்த சியாமளா, இதோ இங்க நிக்கிற ஜோதிகா, அப்புறம் நம்ம டிரைனிங் புள்ளைங்கன்னு எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்கடி.. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவாறு அங்கு ஓரமாகப் பயத்துடன் நின்றிருந்த பூர்ணிமாவை, அதாவது அவள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் குண்டு மம்மி நர்சை கொலை வெறியோடு பார்த்தாள் யாழினி.‌

ஆனால் அந்தக் குண்டு மம்மியின் பார்வையோ மிரட்சியுடனும், கலக்கத்துடனும் எதிர்ப்புறம் திரும்புவதைக் கண்டு தானும் அங்கே திரும்பி பார்த்தாள். அங்கே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி கொண்டு அழுத்தமான பார்வையுடன் அவள் இருந்த வார்டின் நுழைவாயிலில் நின்று இருந்தான் அவன்.‌ அவனைக் கண்டதும் அவளது விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விழுந்து விடுவது போல் கண்களை அகலமாய் விரித்த யாழினி அதிர்ச்சியில் எழுந்து நின்றவள் பேச்சு வராமல் திக்கு முக்காடிபோனாள்.‌ ஒருபுறம் இருதயம் பந்தயக் குதிரை போல அதிவேகத்தில் ஓடித்துடித்திட, மறுபுறமோ, ‘ஆத்தி என்ன கனவுல பார்த்தவன் நேர்ல வந்து நிற்கிறான். அப்படீன்னா கனவுல பாத்த மத்ததும் நடக்குமா?’ என்று எண்ணியவளுக்குக் கிறுகிறுவென்று தலைசுற்றுவது போலும் இருந்தது..


அவள் சொன்ன அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவனுக்குத் தன்னையும் மீறி புன்னகை அரும்பியது. அதுவும் அவள் குண்டு மம்மி என்று விளித்ததைக் கேட்டு பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு இதழுக்குள் அடைத்தவன் முயன்று வரவழைத்த கோபத்தோடு,
“இது ஹாஸ்பிடலுன்னு நினைச்சீங்களா? இல்ல உங்க வீடுன்னு நெனைச்சீங்களா? ஆளாளுக்கு இப்படிச் சத்தம் போட்டா என்ன அர்த்தம்.‌ இங்க கொஞ்சங்கூட டிசிப்ளினே கிடையாது.‌ டாக்டருக்கு தானே படிக்கிறீங்க, கொஞ்சமாவது மெச்சூரிட்டி வேணாமா? மத்தவங்க தான் கேர்லஸ்ஸா, அஜாக்கிரதையா, அக்கறை இல்லாம இருக்காங்கன்னா நீங்களும் இப்படி இருந்தா என்ன அர்த்தம்? இன்னும் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் போச்சுன்னா டிரைனிங்ல இருக்க நீங்கல்லாம் டாக்டர்ஸ்.‌ அப்படி இருக்கும் போது நீங்களே ஏன் இவ்வளவு கேர்லஸ்ஸா, என்ன சொல்றது கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டவன் அடி மேல் அடி வைத்து யாழினி இருந்த கட்டிலை நெருங்கிட.

யாழினியோ கல்லை முழுங்கியவள் போல் திருதிருவென்று விழித்தாள்.‌ அவனது பார்வை கூர்மையாகத் தன்னைத் துளைப்பதை உணர்ந்தவன், பதில் பேச முடியாமல் எச்சிலை கூட்டி விழுக்கிக் கொண்டு மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.‌ மறுபுறம் திரும்பிக் கொண்டவள் தன்னைச் சமன்படுத்த முயன்றாள் தான்.‌ ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் கனவும், தற்போது கனவில் கண்டவனே தன் எதிரில் உருவமாக நிஜத்தில் நிற்பதையும் கண்டு இன்னதென்று சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்தவள் எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்று படுக்கையில் படுத்து விட அதைக்கண்டவனுக்குத் தன்னையுமறியாமல் புன்னகை அரும்பியது.

‘என்ன இன்ன வரைக்கும் பட்டாசு மாதிரி பொறிஞ்ச பொண்ணு, நம்மளைப் பார்த்ததும் சைலண்ட் ஆயிருச்சு. என்னன்னு தெரியலையே?’ என்று சிந்தித்தவாறு அவளை நெருங்கியவனுக்கு, அப்போது தான் மற்றவர்கள் அவனைப் பார்ப்பது புரிய, அழுத்தமான பார்வையோடு அனைவரையும் எதிர்கொண்டவன், “இங்க என்ன வேடிக்கையா காட்டிட்டு இருக்காங்க அசையாம நின்று பார்த்துக்கிட்டு இருக்கீங்க. போங்க போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்தான்.

அங்கிருந்து அனைவரும் நகர்ந்து சென்றாலும் ஒரு கண்ணை இவர்களின் மேல் வைத்திருந்தார்கள் தான். இங்கே என்ன நடக்குமோ? அடுத்து என்ன செய்தி தங்களுக்குச் சுவாரசியமாகக் கிடைக்குமோ? என்ற நோக்கத்தோடு..‌

அனைவரும் சென்ற பிறகும் சௌமி அங்கிருந்து செல்லாமல் நின்றிருப்பதைப் பார்த்தவன்,
“ஏன் நீங்களா இங்கிருந்து போக மாட்டீங்களா? உங்களுக்குத் தனியா சொன்னாதான் போவீங்களா?” என்றதும் வெடுக்கென்று அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு மீண்டும் அவன் பார்ப்பதற்குள் திரும்பிக்கொண்டாள் யாழினி.

சௌமியோ என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்தபடி,
“நான் இவளோட பிரண்ட் டாக்டர்.‌ நான் எப்படி அவளைத் தனியா விட்டுட்டு போக முடியும். அது மட்டுமில்லாம நீங்க..” என்று ஏதோ சொல்ல வந்து தயங்கியவள், பின்பு சற்று வரவழைத்த தைரியத்துடன்,
“ஆபரேஷன் தியேட்டர்ல நடந்ததைக் கேள்வி பட்டதுல இருந்து எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்க டாக்டர். அதனால நானே அவக்கூட இருக்கேன் நீங்க வேணா இங்கிருந்து போங்க டாக்டர்” என்றாள். எவ்வளவு முயன்றும் அவளது குரலில் நடுக்கம் வந்து விட்டது.

அவனும் வரவழைத்த பொறுமையுடன்,“உங்க பிரண்டை நான் ஒன்னும் பண்ணலைங்க. ஒரு டாக்டரா அவங்களைச் செக் பண்ண தான் வந்தேன் வேற எதுவும் கிடையாது. அது மட்டுமில்லாம அது ஏதோ எதிர்பாராதவிதமா நடந்த விடயம். அவங்களுக்கு மூச்சு இல்ல, அதனால தான் ஆபத்துக்குப் பாவம் இல்லைன்னு என்னோட மூச்சு காத்தைக் கொடுத்தேன். இதுவும் நம்மளோட ப்ரொபஷனல்ல ஒரு பகுதி தான்.‌ நல்லா ஞாபகம் வச்சுக்கங்க இது ஒரு ட்ரக்மெண்ட் மட்டும் தான் மத்தபடி இதுல எந்தத் தப்பும் இல்லை. இனிமே இதைப்பத்தி யாரும் இங்க பேச மாட்டாங்க, தாராளமா என்னை நம்பலாம். நீங்க இப்ப இங்கிருந்து போங்க..” என்று முடிந்தவரை பொறுமையாகவே சொன்னான்..

“எது? யாரும் இதுபத்தி பேச மாட்டாங்களா? சரி தான் நல்லவனாட்டும் பேச மட்டும் தெரியுது. ஆபரேஷன் தியேட்டர்ல தான் உயிரைக் காப்பாத்துறதுக்காக உயிர்மூச்சு கொடுத்தாருன்னு சொல்லலாம். ஆனா இந்த வார்டுல கொண்டு வந்து படுக்க வைக்கும் போதும் அதையே தானே பண்ணுனாரு அதுக்கு மட்டும் என்ன அர்த்தமாம்?” என்று வாய்க்குள்ளேயே முனகி விட்டு அங்கிருந்து நகர்ந்த சௌமி யாழினியை பாவமாகப் பார்த்துக் கொண்டு செல்ல.

அதை ஓர விழியால் கண்டவன்,
“போங்க உங்க பிரண்டை நான் ஒன்னும் பண்ணிட மாட்டேன். இன்னும் ஏன் இப்படிப் பயப்படுறீங்க? நானும் டாக்டர் தான் சோ எனக்கும் நோயாளிங்கக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியும்.‌ மொதல்ல வாசலைப் பார்த்து நடந்து போங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -13.2

அது தனி வார்டு என்பதால் அப்போது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை தைரியத்துடன் அவள் அருகில் நெருங்கியவன் தனக்கு முதுகு காண்பித்துப் படுத்துக் கொண்டிருந்த அவளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தவனாய், “ஹாய்! மிஸ், ஐ அம் உதய் கிருஷ்ணா... உங்க பேர் என்ன?” என்றிட.

வெடுக்கென்று எழுந்து அமர்ந்தவள் அவன் தன் அருகில் அவ்வளவு நெருக்கமாக நின்றிருப்பான் என்பதை எதிர்பார்த்திராதவளாய் அச்சத்தில் ஈரடி பின்னே நகர்ந்து அமர்ந்தவாறு, “என்னோட பெயர் உங்களுக்கு எதுக்குச் சார். தேவையில்லாம கண்டவங்கக்கிட்டையும் என் பேரை சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று வெடுக்கென்று சொல்லி விட்டு கழுத்தை திருப்பியதில், அவள் கழுத்தில் சுரீரென்று வலி ஏற்படவும் வலது கையைக் கழுத்தில் வைத்தவாறு, இயலாமையுடன் “இங்க என்ன தான் சார் நடக்குது? திடீர்னு எனக்கு மயக்கம் வர மாதிரி ஆச்சு அதனால நான் கீழே விழப் போனேன். சாரி தப்பு என் மேலதான், என்னையறியாம உங்களை நான் புடிச்சதால தான் நீங்களும் சடனா பேலன்ஸ் இல்லாம எம்மேல விழுந்து உங்க கையில இருந்த கத்தி என்னைக் குத்திடுச்சு.நல்லவேளையா எனக்கு எதுவும் ஆகல.‌ இதுல என் மேல தான் முழுத் தப்பும். அதனால நான் உங்க மேல குறை சொல்ல விரும்பல,அதே மாதிரி எந்தக் கம்ப்ளைன்ட்டும் கொடுக்க விரும்பலை. ஆனா அதுக்கப்புறம் என்ன சார் ஆச்சு எல்லோரும் என்னென்னமோ சொல்றாங்க? யாரும் முழுசா எதையுமே சொல்ல மாட்டேங்குறாங்க?” என்று குழப்பமாகக் கேட்டிட.

அவளிடம் ஏதோ பேச முயன்றவனுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. கண்ணைக் கசக்கி தன்னைச் சமன் செய்தவனது இதயம் துடிக்கும் வேகம் குறைந்தது. திடீரென்று அவனது சுவாசம் தடைபட, ஒரு முறைக்கு இரு முறை ஆழமாக மூச்சை இழுத்து வெளியிட்டுத் தன்னை நிதானித்தவன் அவளை நிறுத்தி நிதானமாகப் பார்த்து,
“நான் கூறுவதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வீர்களென்று எனக்குத் தெரியாது. அதேபோல் நானுரைப்பவை யாவும் சத்திய வார்த்தைகள். மெய்மைக்குப் புறம்பாய் நான் எதையும் கூறப்போவதில்லை. திடீரென்று உங்களுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்த அறையில் எனக்கு என்னவானதென்றே தெரியவில்லை.‌ தங்களது குருதி கண்டு என்னுள்ளம் பதறித் துடித்தது. உங்களது காயங்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளித்தேனென்று நானறியேன்.‌ அத்தோடு நில்லாமல் தங்களின் அருகில் தன் வசம் இழந்த நான் என்னையறியாமல் தங்களது மலரிதழில் இதழ் பதித்து விட்டேன்.‌ அதைக் கண்டதால் தான் அனைவரும் தங்களை விநோதமாகப் பார்க்கிறார்களென்றே எனக்குத் தோன்றுகிறது” என்று கூறிட..

அவன் பேச ஆரம்பித்த போதே குழம்பியவள், மெல்ல மெல்ல அவனது வார்த்தைகளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.. அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும்
அதிர்ச்சியில் உறைந்த யாழினி,
“என்னது மலரிதழில் இதழ் பதிச்சியா? யூ மீன் அது கிஸ்ஸா?” என்று வாய் விட்டே கேட்டவள், ஒரு நிமிடம் அவனை விநோதமாகத் தான் பார்த்து வைத்தாள். அவன் உடைக்கும், மேனரிஸத்துக்கும், படிப்புக்கும் சிறிதும் பொருத்தமில்லாமல் இருந்தது அவன் பேசிய வார்த்தைகள் யாவும்..

அவளது கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக,‌“ஆமாம்.. அதன் பொருள் அதுதான்” என்க.

யாழினிக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.‌ ‘அடப்பாவி! இதனால தான் எல்லாரும் என்னை ஒருமாதிரி பேசுனாங்களா? அந்தக் குண்டு மம்மி, இங்க வந்த ரெண்டே நாளுல டீனோட பைய்யனை வளைச்சு போட்டுட்டேன்னு சொன்னதுக்கு இதுதான் அர்த்தமா? கடவுளே என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிற?’ என்று மனதினுள் புலம்பியவள் வெளியே, “ஏன் சார் நீங்க நார்மலாவே பேசமாட்டீங்களா?ஆமா எதுக்கு அப்படிப் பண்ணுனீங்க? உங்களுக்கு யாரு இதுக்கெல்லாம் பர்மிஷன் தந்தது.‌ ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம நீங்க இப்படி நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு” என்று ஆதங்கத்துடனும், கோபத்துடனும் அவள் கேட்க.

அவனோ இன்னும் அவளை நெருங்கி மெதுவாக அவள் கழுத்தில் இருந்த தையலை வருடியவாறு,
“நான் இவ்வாறு பேசுவதைத் தங்களால் புரிந்து கொள்ள முடிகிறதென்றால் நமக்குள் ஏதேனும் பூர்வ ஜென்ம பந்தமிருக்குமோ?” என்று ஒரு விதமான பார்வையுடன் அவன் சொல்ல.

“ம்ம்.. தமிழ் தான் உயிர் மூச்சு.. தமிழ் தான் எல்லாமே! அதனால தமிழ்ல மட்டும் பேசுங்கன்னு சொல்லி சொல்லியே யார் எப்படி? எந்த மாதிரி தமிழ் பேசுனாலும் புரியிற அளவுக்குப் பண்ணிட்டாரு என்னைப் பெத்தவரு. இது தெரியாத இந்த லூசு வேற பூர்வ ஜென்ம பந்தம்னு உளறுது.. ” என்று வாய்க்குள்ளேயே முனகினாள்.

ஆனாலும் அவள் சொன்னவை அவனது செவியில் விழுந்து விட, மெல்லிய கீற்றாய் முன் வரிசைப்பற்களில் இரு பற்கள் மட்டும் தெரியும் அளவிற்கு அழகாய் புன்னகைத்தவன், “உங்களது இந்தச் சொல்லாடலும், பிறரை பரிகாசப்படுத்தும் குணமும் அச்சுப்பிசகாமல் மீண்டும் தங்களுடனே பிறந்திருக்கிறது போலவே!” என்று கூறி அவன் இன்னும் அழகாகச் சிரித்து வைத்திட. ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் அவனது அந்தத் தோரணையான புன்னகை முகத்தைக் கண்டு தன்னை மறந்தாள் யாழினி.

இமைக்குடைகளைச் சிறிதும் அசைக்காமல் அவள் அவனை அப்பட்டமாக ரசித்திருக்க, அதைக்கண்டவனுக்கு உள்ளூர ஏதோவொரு உணர்வலைகள் ஊற்றெடுக்க. மீண்டும் ஒருமுறை அவள் காயத்தை மென்மையாய் வருடி,“முதலில் கேட்டீர்களே எந்த உரிமையில் என்னைத் தீண்டினாய் என்று? அதற்கு எனது பதில் மொழியென்ன தெரியுமா?

உள்ளத்தில் உனை உடையவளாய் உருவேற்றி..!
மனையாளாய் இணைசேர்ந்து.! இவ்வுலகையே வென்று விட்ட
உவகையில் பூரித்திருந்தவனின் வாழ்வினை புயலொன்று
புரட்டி போட்டாலும்..!
சற்றும் பயமின்றிக் கடந்திட துணிந்தேனடி..!

ஆனால் உள்ளமது உயிராய் நேசித்த உடையவளின்
நிஜம் அழிந்து நிழலாய்
மாறிவிட்ட நிலையில் உனைக் காக்க முடியாத பாவத்திற்கு உபகார பலனாய்..!
என்னவளின் நினைவெனும் அழியாத நிழல் கொண்டு,
மழுங்காத அன்பு கொண்டு
தனியாளாய் ஓர் யுகமே
வாழ்ந்து மடிந்து விட்டேனடி.!

மீண்டும் ஒருமுறை
பிறப்பெடுத்தவளைக் காண்கையில் காட்டாற்று
வெள்ளம் போல் கரைபுரண்டோடும்
நேச நதியை தடுத்து
நிறுத்திட வழியறியாது
அவள் இதழ் மலருக்குள் விரும்பியே மடிந்து
மரித்துப் போனேனடி..!
சுகமாக..!

ம்ம்.. இப்பொழுதாவது புரிகின்றதா? உரிமை பட்டவனுக்கு இல்லாத உரிமையா? உங்களிடம், ம்ஹூம் இனிமேலெதற்கு மரியாதை? உன்னிடம் எனக்கு எந்தளவிற்கு உரிமை உள்ளதென்பதை விரைவில் அறிந்து கொள்வாய்!” என்று கூறி கண் சிமிட்டினான்.

அவனது சொல்லாடலைக் கேட்டதும் தன் விழிகளை அகலமாக விரித்து அதிர்வுடன் அவனைப் பார்த்த யாழினிக்கு மூச்சடைத்தது போலிருந்தது. அந்தக் கவிதை வரிகள் அவளை ரொம்பவே அசைத்துப் பார்த்தது. ஆனாலும் அவனது உரிமையானவள் என்ற வார்த்தை அவளைக் கோபப்படுத்தியது‌.

அவ்வளவு நேரம் ஏதோ மாய வலையில் சிக்கிக்கொண்டு கிடப்பது போல் தன்னை மறந்து அவனைப் பார்த்திருந்தாள். ஆனால் இப்போதோ சட்டென்று சுய அறிவு பெற்றவளாய் அவனைப் பார்த்து முறைத்தவாறே, “வார்த்தையை அளந்து பேசுனா நல்லாருக்கும் மிஸ்டர்? உரிமைப்பட்டவ, அது இதுன்னு பேசுற வேலை வச்சுக்கிட்டீங்க அவ்வளவு தான் அசிங்க அசிங்கமா திட்டிடுவேன். பார்த்த முதல் நாளே, முதல் பார்வையிலேயே எப்படி ஒரு பொண்ணுக்கிட்ட உங்களால இப்படிப் பேச முடியுது?” என்று கடுப்பாகக் கேட்க.

அவனோ அவள் முகத்தையே பார்த்திருந்தவன் சட்டென்று அவளை நோக்கி குனிந்து,
“யார் சொன்னது உன்னை நான் இப்பொழு தான் முதல் முறை பார்த்தேனென்று..? நீ பிறந்த கணத்திலிருந்து” என்று அவன் முழுதாகப் பேசி முடிக்கும் முன்பே கையை நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தியவள்,

“முதல்ல நீ நார்மலா பேசு? இப்படிப் பேசுனா எனக்கு டென்ஷன் ஆகுது, வீட்ல தான் இந்தத் தொல்லைன்னா இங்கையும் அதையே பிடிச்சுக்கிட்டு தொங்குனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.” என்றிட.

‘நீ சாதாரண மனுஷியென்று யார் கூறியது? நீ இளவரசி.. ஆழ்கடல் ராஜ்ஜியத்தின் இளவரசி’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவனாய் வெளியே,
“சரி சரி.. உன்னைப் போலவே பேசுறேன். யார் சொன்னது இப்ப தான் உன்னை முதல் தடவையா பார்த்தேன்னு. காலையில ஹாஸ்பிடல் வரும்போது தான் உன்னை முதல் தடவை பார்த்தேன். ஒரு குட்டி பொண்ணை இடிச்சுட்டு, சமாதானப்படுத்திக் கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருந்த.‌ நீ அந்தப் பாப்பாக்கிட்ட சொன்னல்ல, கியூட் கேர்ள், அழகா இருக்க, அப்படியே பொம்மை மாதிரின்னு. அப்ப நீயும் ரொம்பக் கியூட்டா இருந்த தெரியுமா! அந்தப் பாப்பா மட்டும் இல்ல நீயும் பொம்மை மாதிரி அழகா இருந்தன்னு சொல்லலாம்னு நெனச்சேன்.‌ ஆனா அதுக்குள்ள நீ அங்கிருந்து போயிட்ட. இங்க ஹாஸ்பிடல்ல மறுபடியும் உன்னைச் சந்திக்கிற வாய்ப்பு கெடைச்சுது அது தான் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி கிஸ் பண்ணிட்டேன். ஏன்னா காலையில கொஞ்சி கொஞ்சி அந்தக் குழந்தைக்கிட்ட நீ பேசிக்கிட்டு இருக்கும் போது உன் லிப்ஸ் ரொம்ப அழகா இருந்துச்சு அதனால தான் லைட்டா டச் பண்ணி பார்த்தேன் வேற ஒன்னும் இல்ல!” என்று இலகுவாய் சொன்னவன் மீண்டும் அவள் முகத்தை ஒரு சில நிமிடம் கூர்ந்து பார்த்துவிட்டு,

“ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்றேன். சீக்கிரமே நீ எனக்குப் பொண்டாட்டி ஆயிடுவ! யார் நெனச்சாலும் அதைத் தடுக்க முடியாது . ஏன்னா உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு சிறிது தூரம் சென்ற பின்பு மீண்டும் திரும்பி வந்து, “என்னடா இவன் இப்படி பேசிட்டு போறானே? நாளையில இருந்து ஹாஸ்பிடல் வரவேண்டாம், வேலையை விட்டுடலாம் அப்படி இப்படின்னு ஏதாவது நெனச்சீன்னா அதை அடியோட மறந்துடு. உன் முகம் போற போக்கை பார்த்தா அப்படித் தான் நெனைச்சுருக்கப் போல.‌ அதை அடியோட மறந்துடு, நீ நெனச்சது எதுவும் என்னைக்குமே நடக்காது.‌ நீ எங்க போனாலும், எந்த மூலைக்குப் போனாலும் உன்னைத் தேடி வந்துடுவேன். ஏன்னா மறுபடியும் கெடச்சுருக்க வாய்ப்பை நான் இழக்க மாட்டேன். புருஞ்சுதா!” என்று சொல்லி அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து விட்டு தனது அறைக்கு வந்தவனுக்குத் தன்னை நினைத்து சிரிப்பாக இருந்தது. திடீரென்று ஏதோ ஒன்று அவனை விட்டு விலகி செல்வது போலிருக்க, அவன் தேகம் கனமாக மாறியது.

அவன் எடையை அவனாலையே தாங்க முடியவில்லை தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான். அவ்வளவு நேரம் அவனுள் இருந்து அவனை இவ்வாறெல்லாம் பேச வைத்த ஏதோ ஒரு உந்து சக்தி சட்டென்று அவன் உடலிலிருந்து வெளியேறியதும், மீண்டும் என்ன ஆனது? தான் எங்குச் சென்றோம்? என்ன பேசினோம்? என்ன நடந்தது? என்று புரியாமல் திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தான் உதய்...

அதேநேரம் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதி மயான அமைதியை கொண்டிருந்தது. அலைகளின் ஓசை மேற்புறம் பெரும் இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருக்கக் கீழேயோ எந்தச் சத்தமும் இன்றி அத்தனை அமைதியாக இருந்தது...

அதற்கு நேர் மேலே அதே தீவு..! அதே வனம்..! பல வருடங்களுக்கு முன்பு இரு குலமே அழிவதை கண்ட அதே வனம்.!! மரங்களைத் தன்னுள் பசுமையாகக் கொண்டிருக்கும் தீவானது பார்க்கும் இடம் யாவும் பச்சை பசேலென்ற மரங்களை மட்டுமே தன்னுள் உள்வாங்கி இருந்தது‌. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித தலைகள் ஏதேனும் தென்படுமா என்று நாம் எவ்வளவு தான் தேடினாலும் இறுதியில் களைத்துப் போக வேண்டிய நிலை தான். அந்த அளவிற்கு மரங்கள் மட்டுமே தன் ஆட்சியை அங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்தன. அவ்வனத்தினை ஒட்டியிருந்த கடற்கரையோரம், பொங்கி ஆர்ப்பரித்து ஓடி வரும் அலைகளைப் பார்த்தவாறு வந்து அமர்ந்தாள் அவள்‌..

மனம் ஏனோ தேவையற்ற எண்ணங்களை நினைத்து நினைத்து அவளுக்கு அதிகமான கவலையைக் கொடுக்க, விழி மூடி அமர்ந்து விட்டாள்‌.. தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் என்ற போதும் அவளுள் ஏதோ ஒரு தயக்கம் ஏற்படப் பட்டென்று விழிகளைத் திறந்து நாலாபுறமும் விழிகளைத் தேடலாய் சுழல விட்டாள்.‌

எவரும் தென்படவில்லை, தன்னைக் காணவில்லை என்றபோதும் எவரோ தன்னை ஊடுருவி பார்ப்பது போன்றதொரு பிரம்மை ஏற்பட மீண்டும் விழிகளைச் சுழல விட்டவாறு அமர்ந்திருந்தவள், தன் மீது ஏதோ படுவதுபோல் இருக்கப் பதறி துள்ளிக் குதித்து எழுந்து நின்றாள்.‌

அவ்வளவு நேரமும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் அரூபமாய் நின்றிருந்தவளின் தேகம் எதிரில் நிற்பவனின் விழிகளுக்கு நன்றாகப் புலப்பட்டது. தன் எதிரில் நிற்பதோடு மட்டுமின்றித் தன்னை முறைத்துக் கொண்டும் நிற்பவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தாறு பாவமாய் ஏறிட்டுப் பார்த்தவளை அடங்காத சினத்தோடு எதிர் கொண்டவன்,
“நீ செய்து கொண்டிருப்பவை நல்லதென்று எண்ணுகிறாயா சங்கெழிலி...?” என்று மிகுந்த சினத்தோடு கேட்க.

“நான் செய்வது நன்மைக்கா? தீமைக்கா? என்பதை நான் அறிவேன் தமயனே? ஆனால் தாங்கள் செய்து விட்டு வந்திருப்பதை அறிந்து தான் செய்தீர்களா?”

“நான் எதையும் அறிந்து, தெரிந்து, புரிந்து தான் செய்கின்றேன். ஆனால் நீ செய்வதன் அர்த்தம் தான் சரியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது.”

“ஆஹா... ஜென்மங்கள் கடந்த போதும் மாறாதிருக்கும் தங்களது நேசம் உண்மையானது! ஆனால் என் நேசம் பொய்யாய் தெரிகின்றதோ?”

“உன் நேசம் பொய்யென்று நான் கூறவில்லை.‌ ஆனால் வேறொருத்தியை உள்ளத்தில் மனையாளாய் உருவேற்றி, தீராத நேசத்தில் மரித்து, மீண்டும் அந்நேசத்தைப் பெற பிறப்பெடுத்திருப்பவரை அடைய நினைப்பது எவ்விதத்தில் ஞாயமென்கிறாய்?”

“நான் செய்வது தவறென்றால்? நீங்கள் செய்வது என்ன தமயனே? என் நேசத்திற்குப் பாதகம் விளைவிக்கக்கூடிய ஆற்றலை அவள் கொண்டிருப்பதால் தான், அவளைக் கொன்றிட முயற்சித்தேன். ஆனால் தாங்களோ உங்களது ஆசைக்காதலியை காப்பாற்றியதோடு மட்டுமின்றி, இன்னொருவனின் தேகம் புகுந்து அவளிடம் காதல் வசனத்தை வேற கூறிவிட்டு வந்திருக்கிறீர்கள்? இது எந்த விதத்தில் சரியென்கிறீர்கள்?” என்று கோபமாய்க் கேட்டவளுக்குப் பதிலுரைத்திட தோன்றாது, ஆழ்கடலுக்குள் புகுந்திட்டான் அவளது ஆரூயிர் தமயனும், முன்ஜென்மத்தில் முளரிப்பாவையை ஒரு தலையாக நேசித்தவனுமான யாமீரன்..

தன் மீது அதிகளவு பாசம் வைத்திருக்கும் தன் தமயன் இவ்வாறு தன்னை ஒதுக்கி வைத்து விட்டு சென்று விட்டானே என்ற வருத்தம் உள்ளூர இருந்த போதும்.. தன் உறுதியில் இருந்து மாறாமல் நினைத்ததை அடைந்தே தீருவேனென்ற எண்ணத்தை ஆழமாக நெஞ்சில் வளர்த்தவளோ!

“எவர் தடுத்தாலும் சரி தங்களை அடையாமல் என் ஆத்மாவிற்குச் சாந்தி கிடையாது அதிசாந்திரரே! தாங்கள் எங்கேயோ பிறப்பெடுத்து விட்டீர்களென்பதை அறிந்த கணம் அத்துனை அக மகிழ்வாய் உணர்ந்தேன். தங்களைக் காண விரைந்தோடி வந்தவளை கட்டுப்பாடுகளும், சாபத்தின் சூழ்ச்சிகளும் தடுத்து விட்டன. மேலும் தேகமின்றி அரூபமாகவேணும் தங்களைக் காண பேராவல் கொண்டு தேகத்தைத் துறந்தேன். உயிராத்மாவை அண்ட வெளியில் நடமாட செய்திட, பெற்ற தந்தையையே கொன்று அவர் சக்திகளைத் தட்டிப்பறித்தேன். ஆனால் இத்தனை செய்தும் தங்களை என்னால் நெருங்க முடியவில்லை. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நான் உங்களை நெருங்கிட தடைக்கல்லாக இருப்பது உங்களுடன் பிறந்தோள் தான்.. அவளிருக்கும் வரை என்னால் எண்ணியவற்றை அடைய இயலாது. பொறுத்திருங்கள் அதிசாந்திரரே! தாங்கள் முன்ஜென்ம நினைவுகளை அடையும் முன்னரே உங்களை என் கைப்பாவையாக்கிக் கொள்கிறேன். அப்பொழுது உங்களது இதயத்தில் வாசம் செய்தவளும் மறுபிறப்பினை பெற்றிருப்பாள்? உங்களிடம் என் அறிமுகம் துவங்கிய பின்னர் அவளையும் அழித்தொழிட்டால் மட்டுமே நீங்கள் எப்பொழுதும் என்னுடனே! என் வசமே! என் அன்பனாக, மன்னவனாக இணைந்திருப்பீர்கள்!” என்று கட்டியமிட்டு கூறியவளாய் கணநேரம் கூடத் தாமதிக்காமல் தன் தமயனைப் பின்பற்றித் தானும் கடலுக்குள் நுழைந்தாள்..


கூறப்படாத நேசம் ஒருபுறம்!
நேசத்தைக் கூறிய பின் உயிர்
நீத்த இரு உயிர்களின் நேச
தாகம் ஒருபுறம்!

தமயனின் வாழ்வை
காத்திட தங்கைறியாமல் செய்த பிழையொன்றின் விளைவால் நிகழ்ந்திட்ட ஓருயிரின் நேசப்புறக்கணிப்பு ஒருபுறம்..!

புறக்கணிக்கப்பட்ட நேசத்தின்
தீராத ஆசை ஒரு புறம்..!
தீராத கோபவெறி ஒருபுறம்.!
தீராத துவேஷம் ஒருபுறம்.!
தீராத பலிவாங்கும் படலம் ஒருபுறம் சூழ்ச்சியாய்ச் சூழ்ந்திருக்க.. !

அந்தச் சூழ்ச்சியின் பிடியில்
சிக்கி தவிக்கும் நேசங்கொண்ட நெஞ்சங்கள் இரண்டும்
எவ்வாறு அதிலிருந்து
மீளுமோ?

- அற்புதமது பிறக்கும்..


 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -14

அவன் தன்னிடம் என்னவெல்லாம் பேசினான் என்பதை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்த யாழினிக்கு தலையை சுற்றிக் கொண்டு கிறுகிறுவென்று வருவது போலிருந்தது. 'ஏற்கனவே வலி உயிர் போகுது. இதுல இவன் வேற லூசு மாதிரி உளறிட்டுப் போறான். காலைல பார்த்தேன் புடிச்சிருந்துச்சு அதான் இப்படிப் பண்ணுனேன், அப்படி இப்படின்னு உளறிட்டுப் போறான். கடவுளே எனக்குன்னே எங்கிருந்து தான் இப்படித் தேடி தேடி வர்றாங்கன்னு தெரியலையே?’ என்று அவள் சிந்தித்தவாறே தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க.

‌ உதய் அந்த வார்டை விட்டு போகும் வரை அருகிலிருந்த வார்டுக்குள் நுழைந்திருந்த சௌமி‌ அவன் சென்றதும் வேகவேகமாக யாழினியைத் தேடி ஓடிவந்தாள்.

அங்கே தன் தோழி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு பதறியவளாய் வேகமாக யாழினியிடம் வந்து, “என்னாச்சுடி? அந்த டாக்டர் என்ன சொல்லிட்டு போனாரு?” என்று கேட்க.

திரும்பி தன் தோழியை முறைத்தவள், “ஏன்டி அவன் போன்னு சொன்னா போயிடுவியா? நீ பாட்டுக்கு என்ன விட்டுட்டு போயிட்ட. அவன் பாட்டுக்கு அவன் இஷ்டத்துக்குப் பேசுறான். இங்க என்னடி நடக்குது? ஏன்டி டாக்டருக்கு படிக்கணும்னு நினைச்சது ஒரு குத்தமா சொல்லு? வளைச்சு வளைச்சு சோதனைய குடுக்குறாங்க. கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிய மாட்டேங்குதே!” என்று புலம்பித் தள்ளினாள்.

யாழினி எதைச் சொல்கிறாள்? எதுக்கு இப்படிப் புலம்புகிறாளென்று தெரியாமல் குழம்பிய சௌமி, “அடியே லூசு ஏதாவது சொன்னா முழுசா சொல்றியா? நீ பாட்டுக்கு உளர்ற? என்ன தான்டி நடந்துச்சு, அவர் என்ன தான்டி சொன்னாரு” என்று கேட்க.

“ஆங்க்க்க்... சொரரக்காய்கு உப்பில்லன்னு சொன்னாங்க.. ஏன்டி நீ வேற எரியுற நெருப்புல எண்ணெய ஊத்துற மாதிரி பேசுற.‌ நான் என்னத்த சொல்றது? அப்படியே உங்கிட்ட அதைச் சொல்லி, அது உனக்குப் புரிஞ்சுட்டாலும். நீயே ஒரு அறைவேக்காடு!” என்று சொல்லிவிட்டு களைப்பாகக் கண்மூடி படுத்து விட்டாள்.
கண்களை மூடினாலும் அவன் சொன்ன வார்த்தைகளும், அவன் காட்டிய முகபாவனைகளுமே வந்து வந்து இம்சை செய்ய! பட்டென்று விழிகளைத் திறந்தவள், 'அய்யோ இம்சை பண்றானே?' என்று நினைத்தவளாய் தன்னைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் தன் தோழியிடம்,“சத்தியமா இதுக்கு மேல எங்கிட்ட எதுவும் கேட்காத. எதையும் சொல்ற நிலைமையில நான் இல்லை. எனக்குத் தூக்கம் வேற வர மாட்டேங்குதுடி மரியாதையைத் தூங்குறதுக்கு ஒரு இன்ஜக்ஷன் போட்டுட்டு போ” என்று சொல்ல..

மீண்டும் குழப்பமாய் யாழினியை பார்த்துவிட்டு அவள் சொன்னது போலவே,‌அவள் உறங்குவதற்கு இன்ஜக்ஷனையும் போட்டு விட்டு தன் வேலையைப் பார்க்க சென்றாள் சௌமி.

தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த உதய்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. 'ஒவ்வொரு தடவையும் திடீர் திடீர்னு எனக்கு என்னமோ ஆகுது! நான் என்ன பண்றேன்,‌ மத்தவங்கக்கிட்ட எப்படி நடந்துக்குறேன்னே தெரிய மாட்டேங்குது' என்று யோசித்தவாறே கால் வலிக்க நடந்து கொண்டிருக்க..‌ இன்டர்காமில் அவனை அழைத்த அவனது தந்தை,‌“ரூமுக்கு வந்துட்டு போ" என்று சொல்ல.

' போச்சு இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியலையே?'
என்று நினைத்தவாறு தான் அவரது அறைக்குச் சென்றான்.‌ கதவை தட்டிவிட்டு அவன் உள்ளே நுழைய, சுமேந்திரனோ கோப்பு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அவனைக் கண்டதும் மூடிவைத்துவிட்டு,
“சொல்லு உதய் இந்தப் பிரச்சினையை எப்படி சால்வ் பண்ண போற?” என்று கேட்க.

“இது பெரிய பிரச்சினையா எனக்கு ஒன்னும் தெரியல.‌ இதுவும் ட்ரீட்மெண்ட் தான்னு நான் ஆல்ரெடி எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். இதுக்கு மேல யாரும் இதைப் பத்தி கேட்க மாட்டாங்க? அப்படிக் கேட்டா அவங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன் போதுமா! இனிமே நீங்க இதைப் பத்தி என்கிட்ட கேட்காதீங்க” என்று வெடுக்கென்று சொல்ல.

ஒரு சில நிமிடங்கள் அவனையே கூர்ந்து பார்த்தவர்,‌“என்ன ப்பா, அப்பா அடிச்சுட்டன்னேன்னு கோபமா?” என்று கனிவுடன் கேட்டார்.

அவனோ முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு,“நீங்க என்னை அடிச்சதுக்காக நான் கவலப்படல,‌ கவலப்படவும் மாட்டேன் ஏன்னா நீங்க என்னோட அப்பா. ஆனா என்ன நடந்துச்சுன்னு கேட்காம அடிச்சீங்க பாத்திங்களா அதுக்காகத் தான் இந்தக் கோபம். இதுக்குக் கண்டிப்பா உங்களுக்குப் பனிஷ்மென்ட் உண்டு” என்று சொல்லி விட்டு அவரை முறைத்தவன், “வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு” என்று மிரட்டுவது போல் சொல்லிவிட்டு தனது அறைக்கு வந்து சேர்ந்தான்.

அவன் சென்ற பிறகும் சிரித்தவாறே தன் வேலையைத் தொடர்ந்தவர், ‘வீட்ல எப்படியும் ஒரு பெரிய பிரச்சனையே பண்ண போறான்னு தோணுது. இப்ப இருந்தே அதுக்குப் பிரிப்பேர் ஆகிக்கிறது தான் நல்லது” என்று நினைத்தவர் , தன் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றார்...

சென்னையின் மத்தியில் இருக்கும் பிரபலமான அறிவியல் மற்றும் கலை கல்லூரி அது. அந்தக் காலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வானுயர வளர்ந்து, உயர்ந்து நின்றிருக்கும் கட்டிடங்களில் உள்ள மாணவ, மாணவியரின் சத்தம் சற்று அதிகமாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் தாண்டி அந்தக் கல்லூரியின் மத்தியில் இருக்கும் தாளாளர் அறையில் ஒருவரின் குரல் மட்டும் உயர்வாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது..

உச்சகட்ட கோபத்தோடு தாளாளர் கத்திக் கொண்டிருக்க அவரைச் சுற்றி நின்றிருந்த பேராசிரியர்கள் அனைவரும் தலையைக் குனிந்தவாறு நின்று இருந்தனர். அவர்களின் அந்த நிலையைக் கண்டு இன்னும் தாளாளருக்குக் கோபம் வர,
“எதுக்கு எல்லாரும் இப்படித் தலை குனிஞ்சு நிக்கிறீங்க? உங்ககிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்சதுக்கு நான் தலை குனிஞ்சு நிக்கணும். இப்ப பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வருவாங்க அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது? நமக்கு ஒரு விஷயம் கெடைச்சது, அதை உரியவங்கக்கிட்ட ஒப்படைக்கிறதுக்காகத் தானே, நான் இதை மேலிடத்துக்கு இன்ஃபார்ம் பண்ணுனேன். அப்படி இருக்கும் போது அதை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லிக்கிட்டு நீங்க என்கிட்ட இப்படி நிக்கிறது நல்லாவா இருக்கு? நீங்கல்லாம் பொறுப்பான பேராசிரியரா இருக்கீங்க அப்படி இருக்கும் போது எப்படி அந்த மேப் மிஸ் ஆச்சு?” என்று கோபத்தோடு கேட்டார்.

அங்கிருந்த பேராசிரியர்கள் அனைவரும் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றிருக்க,‌ அன்புச்செல்வனுக்கோ பயத்தில் வெடவெடவென்று கை, காலெல்லாம் நடுங்கியது. இருந்தும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தார்.

ஒரு மூச்சு மீண்டும் அனைவரையும் திட்டி முடித்த தாளாளர், “போங்க அந்த மேப் எங்க மிஸ் ஆச்சுன்னு தெரியலை? லைப்ரரியில இருக்கப் புக்ஸ் எல்லாத்தையும் மறுபடியும் ஒரு தடவ செக் பண்ணுங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அவ்வளவு நேரம் அலைப்பேசியின் தொடர்பில் இருந்த நபரிடம் பேச ஆரம்பித்தார்.

“கேட்டீங்களா? சார். உங்க முன்னாடி தானே சார் கேள்வி கேட்டேன். அந்தப் பொக்கிஷம் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க ஆதாரமா இருந்த மேப் எப்படியோ மிஸ் ஆயிடுச்சு சார்‌. இல்லன்னா அதை உங்கக்கிட்ட நான் கொடுத்திருப்பேன். நான் மறுபடியும் தேடி பார்க்க சொல்லி இருக்கேன் கண்டிப்பா கெடைச்சுடும் சார் நீங்க கவலை படாதீங்க. கெடைச்சதும் நான் கொண்டு வந்து கொடுக்குறேன் சார்” என்று சொல்ல.

எதிர்பக்கம் இருந்த நபர் என்ன சொன்னாரோ? தாளாளர் இன்னும் பணிவாகக் குழைந்து, கனிந்தக் குரலில்,‌“கண்டிப்பா சார். அது ஏதோ ஒரு வரலாற்றுப் புத்தகத்துல இருந்து கிடைச்சுதாம்‌. கண்டிப்பா அது திரும்பக் கிடைச்சுடும் நீங்க கவலைப்படாதீங்க,‌அதை கொண்டு வந்து கொடுக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவர், மீண்டும் நேற்று வரை இருந்த அந்த வரைபடம் திடீரென்று எப்படிக் காணாமல் போயிருக்கும் என்பது பற்றிச் சிந்திக்கலானார்...


மீண்டும் ஒருமுறை பேராசிரியர்கள் அனைவரும் வகுப்பிற்குச் செல்லாமல், வகுப்புத் தலைமை மாணாக்கர்களிடம் வகுப்பை கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு நூலகத்தையே சல்லடை போட்டுத் தேடினார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு, நூலகத்தில் இருந்த பழமையான வரலாற்றுப் புத்தகம் ஒன்றில் இருந்து அந்த வரைபடம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு மாணவன் அதைப் பார்த்துவிட்டு வந்து வரலாற்று ஆசிரியரிடம் சொல்ல‌.‌ வரலாற்று ஆசிரியரும் அதைப் பேச்சுவாக்கில் அன்புச்செல்வனிடம் சொல்லியிருந்தார். பழங்காலப் பொருட்களையும், புதையல் பற்றி ஆராய்வதிலும் அவருக்கு இருந்த ஈடுபாடு இந்த விஷயம் கிடைத்தவுடன் அதிகரித்தது. அதன் விளைவாக அந்த மேப்பை வாங்கிப் பார்த்தவர் கண்டிப்பாக இங்கே பழங்காலப் பொருட்களும், சிலைகளும் இருக்கும் என்பதை உணர்ந்தவராய் அங்குச் செல்ல முடிவெடுத்தார்.

ஆனால் இந்தத் தகவல் எப்படியோ தாளாளர் காதுக்குச் செல்ல தாளாளரோ அந்த வரைபடத்தை மிகப்பெரிய பெரும்புள்ளி ஒருவருக்குக் கொடுக்க முன்வந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்புசெல்வன் கண்டிப்பாக அது தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் எவருக்கும் தெரியாமல் அதை அங்கிருந்து எடுத்து தன் வீட்டில் பத்திரப்படுத்தி விட்டார்.‌ நேற்று இரவும் கூட அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் எவருக்கும் தெரியாமல் அதை ரகசியமாக வைத்திருக்க! அவரே அறியாத ஒன்று அவரது மகளுக்கு அவர் மீது சந்தேகம் வந்து விட்டது என்பதைத் தான்.

இப்போது அந்த மேப் காணாமல் போய்விட்டதை அறிந்து பேராசிரியர்கள் அனைவரையும் காச்சி எடுத்து விட்டார் தாளாளர். கூடவே அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகப் பேராசிரியர்களைத் திட்டி தீர்த்து ‌ கட்டளையிட்டு மீண்டும் ஒருமுறை அனைத்து இடங்களிலும் தேட சொன்னார்.‌ அந்த நூலகத்தைச் சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த பிறகும் கூட அந்த மேப் எவருக்கும் கிடைக்கவில்லை.‌

வரைபடம் கிடைக்காததால், மேப் கிடைக்கலை என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட, தாளாளருக்கு தான் தலைவலி கூடியது..

அன்பு செல்வனுக்குத் தன் இருக்கையில் வந்து அமர்ந்த பின்பும் படபடப்பு குறைந்தபாடில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் பயத்துடனே அமர்ந்திருந்தவர் பின்பு வரவழைத்த நிதானத்துடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு விட்டு தன்னுடைய தமிழ் வகுப்பிற்கான குறிப்புகளை எழுத ஆரம்பித்தார்..


மருத்துவமனை....
இங்கு யாழினி வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் நெருங்கியது. ஆனால் எப்படி வீட்டுக்கு செல்வது என்று தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க. மீண்டும் ஒரு முறை அவளைப் பரிசோதிப்பதற்காக வந்த உதய் அவளைக் கண்டும் காணாதவனாய் சாதாரண நோயாளியை பரிசோதிப்பது போல் பரிசோதித்து விட்டு,
“அவ்வளவு பெரிய காயம் ஒன்னும் இல்ல. நீங்க தாராளமா வீட்டுக்குப் போகலாம். அதே மாதிரி இது என்னோட கேர்லஸ்னால ஆக்சிடன்டிக்கலா நடந்தது. அதனால டூ டேஸ் வேணும்னா லீவு எடுத்துக்கோங்க, நான் லீவோட சேலரியும் தர சொல்லிடுறேன்” என்று சொல்லி விட்டு செல்ல.

வாயில் வரை சென்று விட்டவனைச் சொடக்கிட்டு அழைத்தவளோ,‌“என்ன மிஸ்டர் காலையில அந்த மாதிரி ரோட் சைடு ரோமியோ ரேஞ்சுக்கு பேசினீங்க. இப்ப அப்படியே ரொம்ப நல்லவன் மாதிரி மாத்தி பேசிட்டு போறீங்க? என்ன நடிக்கிறீங்களா? இப்படி நடிச்சு சீன் போட்டா நீங்க நல்லவன் வல்லவன்னு நம்பி நீங்க சொன்னதுக்கு ஓகே சொல்லிடுவேன்னு நெனைச்சீங்களா?” என்று எள்ளலாக எகத்தளத்துடன் கேட்டாள்.

அவள் சொல்லுவது புரியாமல் குழம்பிய உதய் தனக்கு வந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டவனாய் அவளைப் பார்த்து, “இங்க பாரு காலையில நான் உன்கிட்ட எதுவும் சொல்லலை. அதே மாதிரி எனக்கு யாருக்கிட்டையும் நல்லவனா நடிக்கணும்னோ? இம்பிரஸ் பண்ணனும்னோ? அவசியம் கிடையாது புரியுதா?” என்று எண்ணையில் போட்ட கடுகு கணக்காய் அவன் வெடித்துச் சிதற.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “நீ என்னதான் நடிச்சாலும், நீ நெனச்சது நடக்காது. உன்னை விட அழகான பசங்க எத்தனையோ பேரை பார்த்து கடந்து தான் வந்துருக்கேன். நீ எல்லாம் அவங்க கால் தூசுக்கு கூட வர மாட்ட சரியா! வீணா ட்ரை பண்ணி தோத்துப் போகாத. அப்புறம் தேவையில்லாம என்னைத் தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க.” என்றவள் இதழைச் சுழித்து அவனுக்குக் கேலியான புன்னகையைக் கொடுத்து விட்டு அவனுக்கு முன்பு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.‌

அதேநேரம் சௌமியும் வேலையை முடித்துக் கொண்டு அவளைத் தேடி வந்தாள்..
யிழினியைக் கண்டதும் அவள் அருகில் வந்த சௌமி, “இப்ப எப்படி இருக்கு டி? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்க.

“இது அவ்வளவு பெரிய காயம் இல்லடி. அதனால தாராளமா வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க. ஏன்டி நாமளும் டாக்டர் தானே, நமக்குத் தெரியாதா எந்தக் கன்டிஷன்ல நம்மளோட உடம்பு இருக்குன்னு. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு போலாம்டி.
எப்படியும் என்னால ஸ்கூட்டியை ஓட்டிட்டு போக முடியாது. அதனால நீ என்னை ட்ராப் பண்ணிடு”

“அப்ப உன்னோட ஸ்கூட்டி?”

“அது இங்கையே நிக்கட்டும். வாட்ச்மேன் தாத்தாட்ட சொல்லிட்டு போவோம். இப்படியே என்னால ஸ்கூட்டிய ஹேண்டில் பண்ண முடியும்னு தோணலடி” என்று யாழி சொல்ல.

“சரி வா” என்று சொன்னவாறே அவர்கள் இருவரும் அந்த மருத்துவமனையில் இருந்த வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு நகர்ந்தனர்.‌ அதேநேரம் சந்தன நிற வட்ட வடிவிலான டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாய் கண்களில் கூலரோடு தன் காரை நோக்கி வந்தான் உதய். ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “இடியட். என்னமோ தெரியல இவளைப் பார்த்தாலே கடுப்பாகுது” என்று முனகி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றான்.

அதேநேரம் யாழினியும், “அப்படியே பெரிய அழகன்னு நினைப்பு. திமிருபிடிச்சவன், காலைல ஒரு மாதிரி பேசுனான். இப்ப ஒரு மாதிரி பேசறான். சரியான சாடிஸ்ட்”என்றவனைத் திட்டியவளாய் சௌமியின் ஸ்கூட்டி இருந்த இடத்திற்குச் சென்றாள்.‌ வாட்ச்மேன் தாத்தாவிடம் சொல்லி விட்டு சௌமி ஸ்கூட்டியை இயக்கவும் பின்னாடி ஏறி அமர்ந்தாள் யாழினி.

ஒரே நேரத்தில் சௌமியின் ஸ்கூட்டியும், உதயின் காரும் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி எதிர் எதிர் திசையில் பயணித்தது. ஆனால் விதியோ இருவரது வாழ்வையும் ஒன்றாக முடியிடுவதற்குக் காத்திருந்தது.


வீடு சென்று சேரும் வரைக்குமே தன்னால் முடிந்த அளவு யாழினியைத் திட்டி கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் உதய். ஏனென்று தெரியாமல் அவள் மீது அவனுக்குக் கோபமாக வந்ததே தவிர, வேறு எந்த உணர்வுகளும் தோன்றவில்லை. தங்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றவன் ஹாரனை அழுத்தமாக அடிக்க வாட்ச்மேன் ஓடி வந்து கதவை திறந்தார்.

“தேங்க்ஸ் சுப்பு அண்ணா” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து போர்ட்டிக் கோவின் முன்பு காரை நிறுத்தியவன் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

நுழையும்போதே, “அம்மா எங்க இருக்கீங்க?” என்று கத்திக் கொண்டே வந்தான். சமையலறையில் மாலை சிற்றுண்டியை செய்து முடித்து விட்டு இரவு உணவிற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அவனது தாய் சுவர்ணலதா
அவனது சத்தத்தைக் கேட்டு வேகமாகச் சமயலறையில் இருந்து வந்தவர், தன் அறைக்குக் கூட சொல்லாமல் இறுக்கமான முகபாவனைகளோடு அமர்ந்திருந்த தன் மகனை கண்டு குழம்பினார்.

“என்னாச்சு கிருஷ்ணா ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததும் வராததுமா இவ்வளவு டென்ஷனோட இருக்க?” என்று கேட்க.

நிமிர்ந்து தன் தாய் முறைத்தவன், “இல்ல உங்க மனசுல நீங்கல்லாம் என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? நான் பாட்டுக்கு அமெரிக்காவுல படிச்சு, அங்கேயே செட்டிலாகி இருந்துருப்பேன். ஆனா நீங்க தான் எனக்கு உடம்பு சரியில்ல வா வந்து ஒருதடவை பார்த்துட்டு போ, அது இதுன்னு சொல்லி வரவெச்சீங்க. ஆனா இங்க வந்து பார்த்தா? எல்லாமே தலைகீழா இருக்குது. பேருக்கு தான் சொந்த ஹாஸ்பிடல், ஆனா அங்க எனக்குக் கொஞ்சங்கூட மரியாதையே இல்ல.‌ இதுல உங்க புருஷன் என்னைக் கைய நீட்டி வேற அடிக்கிறாரு. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்மா. இதுக்கு மேல இது மாதிரி நடக்காம இருக்கணும் இல்லன்னா மறுபடியும் நான் அமெரிக்காவுக்கே போயிடுவேன், அதுக்கப்புறம் என்னைக்குமே திரும்பி வரமாட்டேன் ஞாபகம் வச்சுக்கங்க.‌ நீங்களும் உங்க வீட்டுக்காரர்கிட்ட ஏன் இப்படிப் பண்ணுனாருன்னு கேளுங்க” என்று சொல்லி விட்டு வேக வேகமாகத் தன் அறைக்குச் சென்றவன், அலுப்புத் தீர குளித்து முடித்துவிட்டுக் கட்டிலில் விழுந்தான்..
விழுந்தவனது நினைவுகள் தானாகவே யாழினின் மதிமுகத்தைத் தழுவி நின்றது.

யாழினியின் வீடு...
யாழினியின் வீட்டு முன்னால் அவளை இறக்கிவிட்ட சௌமி,
“வீட்டுல கேட்டா என்ன பதில் சொல்லப் போறா” என்று கேட்க.

“என்ன சொல்றதுன்னு தெரியலடி. அப்பா அதிகமா ரியாக்ட் பண்ண மாட்டாரு. ஆனா அம்மா தான் என்ன சொல்லுவாங்களோன்னு தெரியல. சரி விடு அதை நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். ஆப்ரேஷன் பண்ணும்போது ஜஸ்ட் கத்தி ஸ்லிப்பாகி கழுத்துல பட்டுருச்சுன்னு நான் சொல்லிக்கிறேன். நீயா எதையும் சொல்லி வைக்காத. அம்மா நான் சொன்னதை நம்பாம உனக்குக் கால் பண்ணி கேட்டாலும் கேட்பாங்க, மறந்துடாத இதையே சொல்லு சரியா!” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் நுழைந்த யாழினியை இன்முகத்தோடு வரவேற்று அருளரசி அவள் கழுத்திலிருந்த காயத்தைப் பார்த்துவிட்டு பதறியவராய், அழுகையுடனே “என்ன ஆச்சுடி? இதென்ன காயம்?” என்று கேட்க.

சௌமியிடம் சொன்னதையே தாயிடம் ஒப்பித்தாள் யாழி.
“ஒன்னும் இல்லம்மா டாக்டர் ஆபரேஷன் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நாங்க நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தோம். சடனா டாக்டர் கையில இருந்த கத்தி ஸ்லிப்பாகி பக்கத்துல இருந்த எம்மேல பட்ருச்சு போதுமா! வேற ஒன்னும் பெருசா இல்லம்மா. ஆமா அப்பா வந்துட்டாரா?”

“வந்தாரு வந்தாரு.. வந்ததும் வராததுமா துணிமணிகளைப் பேக் பண்ணி வச்சுக்கிட்டு இருக்காரு. எங்கையோ கிளம்புறாரு போல. எங்க போறீங்கன்னு கேட்டேன், அதுக்குச் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுறாரு, என்னன்னு தெரியலையே?” என்றிட.

“என்னவா இருந்தா என்னம்மா.‌ எப்படியும் சொல்ல வேண்டிய விஷயமா இருந்தா அவரே சொல்லுவாரு தானே பார்த்துக்கலாம் விடுங்க. ஆமா அண்ணே வந்துட்டானா?”

“இன்னைக்குக் கொஞ்சம் லேட் ஆகும்னு போன் பண்ணி சொன்னான். லண்டன் போறதால அது சம்பந்தமா ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான். எப்படியும் வர்றதுக்குப் பத்து மணி ஆகிடுமாம். நீ உன்னோட ரூமுக்கு போ, நான் ஏதாவது குடிக்கக் கொண்டு வர்றேன்.‌ வேலை பார்க்கும் போது கவனக் குறைவா தான் இருப்பியா? என்ன பொண்ணோ நீ நல்லவேளையாகப் போச்சு, கொஞ்சம் ஆழமா பட்ருந்தா என்னாகுறது. என்னமோ கொஞ்ச நாளா எல்லாம் தப்பு தப்பாவே நடக்குது ”என்று சொல்லி புலம்பி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார் அருளரசி.

எப்படியோ அம்மா நாம சொன்னதை நம்பிட்டாங்க என்று நினைத்தவாறே தனது அறைக்குள் நுழைந்தவள் கைகால்களைக் கழுவிக்கொண்டு மெத்தையில் வந்து அமர்ந்த மறுநிமிடம் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் படுக்கை விரிப்பு விரிக்கப்பட்டிருந்த பஞ்சு மெத்தை நொடியில் கடல்நீராய் மாறிப்போக, ஏதோ ஒன்று அவளை உள்ளிழுத்தது.
நீரினுள் சுவாசிக்க முடியாமல் திணறி, நொடியில் நினைவிழந்து கடல் நீருக்குள் மூழ்கினாள் யாழினி..

ஆசையென்ற ஒன்று
அதீத வேதனையை
கொடுத்திடுமென்று அறிந்திருந்தால் அந்த
அற்ப ஆசையைச்
சிந்தையிலும்
நினைத்திடாமல்
இருந்திருப்பேன்..!

- அற்புதமது பிறக்கும்..





 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -15

தண்ணீரினுள் மூழ்கி மூழ்கி மூச்சு விட முடியாமல் திணறியவாறு சிறிது சிறிதாக மயங்கும் நிலைக்குச் சென்றாள் யாழினி. அதே நேரத்தில் அவளது அறை கதவு படாரென்று திறக்கப்பட, நொடியில் நீர் மறைந்து அவ்விடம் வெறுமையாகக் காட்சியளிக்க மீண்டும் மெத்தை மீது படுத்த நிலையில் கிடந்தாள் யாழினி..

அவளுக்குச் சூடாகக் காஃபி கொண்டு வந்த அருளரசி அவளது நிலையைப் பார்த்து பதறியவராய் காபியை டேபிளில் மீது வைத்துவிட்டு வேகமாக அவளின் அருகே வந்தவர்‌, “என்ன பண்ணுது யாழி வலிக்குதா? எதுக்கு இப்படி விட்டத்துல எதையோ வெறிச்சுப் பார்த்துக்கிட்டு படுத்து கிடக்குற?” என்று கேட்க.

இவ்வளவு நேரம் தான் தண்ணீரிலிருந்தது உண்மையா? அப்படி அது உண்மையெனில் யாரோ தன்னைத் தண்ணீருக்குள் பிடித்து அழுத்தியது போல் இருந்ததே? அது யார்? இது நிஜமெனில் என்னை மூழ்கடித்த அந்த நீர் நொடியில் எங்கே மறைந்து சென்றிருக்கும்? எப்படி மீண்டும் தன் அறைக்குள், தன் மெத்தையின் மீது நான் வந்தேன்? இப்போது நான் கண்டது நிஜமா? கனவா?’ என்று எதை எதையோ நினைத்து குழம்பியவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்து கிடந்தாள்.‌

தன் தாயின் குரலில் எழுந்து அமர்ந்தவாறு, “காயம் லைட்டா வலிக்குதும்மா‌ வேற ஒன்னும் இல்லை” என்று சொல்லிவிட்டு காபிக்காகக் கையை நீட்டினாள்.

மீண்டும் காபியை எடுத்து அவள் கையில் கொடுத்த அருளரசி,
“உங்க அப்பா கிளம்பிட்டாரு போல, ஹால்ல உட்காந்துருக்காரு நீயும் வெளியே வந்து உட்காரு” என்று சொல்ல.
ஏன்? என்ற கேள்வியோடு நிமிர்ந்து தன் தாயை ஒரு பார்வை பார்த்தாள் யாழி.

“இல்ல உனக்கு அடிபட்டுருக்குறது அவருக்குத் தெரியணும் அப்பதான் அவர் எதுவும் சொல்ல மாட்டாரு. இல்லைன்னா திரும்பி வரும்போது என்னாச்சு?ஏதாச்சு? இதைக் கூட எங்கிட்ட சொல்ல மாட்டீங்களான்னு நம்மளை திட்டுவாரு” என்று சொன்னதற்கு. யாழினியோ சரி என்று தலையை உருட்டியவள் காபியைக் குடித்துத் தன் அன்னையுடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.‌

அவள் அந்த அறையிலிருந்து வெளியேறிய மறுகணம் ஆழிப்பேரலை போல் உயரே எழுந்த அலைக்கற்றைகளில் இருந்து ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்டாள் சங்கெழிலி.
ஒவ்வொரு முறையும் தன் எண்ணம் ஈடேறாததை எண்ணி ஆக்ரோஷத்துடனும், அடங்காத துவேசத்துடனும் அலைகளூடே அங்கும் இங்கும் பாய்ந்தோடியவள், “மீண்டும் ஒரு முறை உன்னைக் கொன்று விடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் நிச்சயம் அதை வீணாக்க மாட்டேன். உன் நாட்களை எண்ணிக் கொள்ளடி விரைவில் உனது மரணம் என் கரங்களில் நிகழும்! நிகழ்ந்தே தீரும்.. !” என்று அடங்கா சினத்துடன் உரைத்து விட்டு அங்கிருந்து நொடியில் சுழன்று மறைந்தும் போனாள்...

இதை எதையும் அறியாத யாழினியோ கோப்பையில் இருக்கும் காபியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே தன் தந்தைக்கு எதிரில் இருக்கும் சோபாவில் வந்து அமர்ந்தாள்.‌ தனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டவர் இத்தனை நாள் தான் தன் மனைவிக்குத் தெரியாமல் மறைவாகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து, தான் வர சொல்லியிருந்த கேப்பிற்காகக் காத்திருந்தார். தன் எதிரில் மகள் அமர்ந்ததும் நிமிர்ந்து பார்த்தவர் அவள் கழுத்தில் இருந்த பேண்டேஜை கண்டு ஒரு நிமிடம் பதறி நொடியில் தன் முகப் பாவனைகளை மாற்றிக் கொண்டவராய், “அதென்ன கழுத்துல காயம்?” என்று கேட்டார்.

“காலையில அறுவைசிகிச்சை பண்ணிட்டு இருக்கும் போது மருத்துவரோட கையிலிருந்த கத்தி கொஞ்சம் நழுவி என்னோட கழுத்துல பட்ருச்சு அதனால சின்னதா தையல் போட்ருக்காங்க வேற ஒன்னும் இல்லப்பா”

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குக் கொஞ்சங்கூடப் பொறுப்புங்குறதே இல்லை. பொறுப்பான பதவியில இருக்கையில எவ்வளவு கவனமா இருக்கணும்? என்னமோ நல்ல வேலையா போச்சு ஏதாவது ஆகியிருந்தா என்ன ஆகுறது? எந்த மருத்துவர்னு சொல்லு, நம்ம வேணா காவல் நிலையத்துல புகார் பண்ணலாம்”

“அச்சச்சோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே பாத்துக்குறேன். கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, இது மாதிரி நான் உங்கக்கிட்ட கேட்டதில்ல தான் இருந்தாலும் கேட்குறேன் எங்கையாவது கிளம்பிட்டீங்களாப்பா? முக்கியமான வேலை விடயமா போறீங்களா?” என்று கேட்டதும் சட்டென்று அதிர்ந்த அன்புச் செல்வன் சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

“நான் எங்க போன உங்களுக்கு என்ன? எங்க போறதா இருந்தாலும் உங்கக்கிட்ட சொல்லிட்டு தான் போகணுமா? சாகப் போறேன் போதுமா! ஆமா எதுக்கு இதைக் கேட்ட, எங்கூட வரப் போறீங்களா?” என்று தன்னை அறியாமல் வார்த்தையை விட்டார் அன்புச்செல்வன்.

அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அம்மா, மகள் இருவரும் திகைத்துப் போனார்கள். பதறி எழுந்து நின்ற யாழி,“எதுக்குப்பா இப்படிப் பேசுறீங்க? நான் சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன். போகும் போது இப்படிச் சொல்லலாமா?” என்று ஆதங்கத்துடன் கேட்க.

அருளரசியோ, “நீங்க எங்க வேணா போயிட்டு வாங்க நாங்க எதுவும் கேட்க மாட்டோம். தயவு செஞ்சு இப்படி அபசகுணமா எதுவும் பேசாதீங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகப் பூஜை அறைக்குள் நுழைந்து கடவுளை கும்பிட்டு திருநீறு எடுத்துக் கொண்டு வந்து தன் கணவனின் நெற்றியில் இட்டார்.
“பாத்துப் பத்திரமா போயிட்டு வாங்க நாங்க எதுவும் கேட்க மாட்டோம் நீங்க கிளம்புங்க” என்று சொன்ன போது வெளியில் கேப் வந்து நின்ற சத்தமும் கேட்டது.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு எழுந்து நின்றவர், “நான் எங்க போறேன், எதுக்குப் போறேங்குற விடயம் உங்களுக்குத் தேவை இல்லாதது. அதை உங்கக்கிட்ட சொல்லவும் எனக்கு விருப்பமில்லை.‌ ஆனா நான் போயிட்டு வர்ற வரைக்கும் பத்திரமா இருங்க. இங்க பாரு யாழினி நீ ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது தொட்டதுக்கெல்லாம் அடம் புடிக்கிறதுக்கு. வளர்ந்துட்ட இன்னும் கொஞ்ச நாளுல ஒரு மருத்துவராகப் போற அதனால எடுத்ததுக்கெல்லாம் கோபப்பட்டுச் சின்னப் புள்ளை மாதிரி அண்ணங்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கூடாது சரியா! நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போய் வாழ போற பொண்ணு அதனால கொஞ்சம் அமைதியா, அடக்க ஒடுக்கமா இருக்கக் கத்துக்கோ. அண்ணனை வாடா போடான்னு பேசக்கூடாது மரியாதை குடுத்து பேச பழகிக்க. எல்லாரும் பத்திரமா இருங்க . தம்பி வர வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது தீபன் வந்ததும் எல்லாத்தையும் சொல்லிடுங்க. அவனை லண்டன் கிளம்பி போகச் சொல்லு அரசி.‌ நல்லபடியா அவனோட வேலையைப் பார்க்க சொல்லு, பத்திரமா இருங்க சரியா! நான் போறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவரை தடுத்து நிறுத்தி,
குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, குடிக்க வைத்தார் அருளரசி.

“போகும்போது போறேன்னு சொல்லக்கூடாதுங்க, போயிட்டு வரேன்ன்னு சொல்லுங்க” என்று சொல்ல.

“சரி. நான் போயிட்டு வரேன் பத்திரமா இருங்க” என்று சொல்லிவிட்டுத் தனக்காகக் காத்திருந்த காரில் ஏறி அமர்ந்த மறுநிமிடம் கார் அங்கிருந்து புறப்பட்டது. தாய் மகள் இருவரும் கை அசைத்து விடை கொடுத்தனர். அவர்கள் இருவரும் கார் மறையும் வரை நின்று விட்டு உள்ளே செல்ல. அருளரசிக்கு ஏதோ தவறாக நடக்கப் போவது போலவே நெஞ்சம் உறுத்தியது..


இங்கு அலுவலகம் முடிந்ததும் லண்டன் செல்ல வேண்டிய மீட்டிங்கை அட்டென்ட் செய்துவிட்டு தீபன் வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை ஆகியிருந்தது. வீட்டு வாசலில் இறங்கி கேட்டை திறந்து கொண்டு தன் இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக் கொண்டு வந்தவன் அதன் இடத்தில் அதை நிறுத்தி விட்டு கதவை பூட்ட போன வேளையில், எங்கோ அமர்ந்திருந்த குருவி ஒன்று சட்டென்று அவன் மீது வந்து மோதி கீழே விழுந்து அவன் பாதத்தில் உயிரை விட்டிருந்தது..

அதைப் பார்த்ததும் அவன் கண்கள் சட்டென்று கலங்கியது. ஏனென்று தெரியாமல் நெஞ்சில் பாரம் குடியேறியது போல் உணர்ந்தவன் அதைப் பூப்போல் கைகளில் ஏந்தி தடவிக் கொடுத்தான். “பாவம் ஒரு சின்னக் குருவியோட உயிர் போயிடுச்சு. இது செத்துப்போகாம இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்” என்று அதனுடன் பேசிக் கொண்டே தன்னை அறியாமல் அதற்கு முத்தம் கொடுத்து விட்டு நிமிர்ந்தவனின் விழி நீர் குருவின் மீது பட்டதும், மறுகணம் உயிர்த்தெழுந்து வானில் சிறகடித்துப் பறந்தது அக்குருவி.

பெரும்பாலும் இரவு நேரங்களில் பறவைகள் வானில் பறப்பதை நாம் கண்டிருக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படியிருக்கும் போது இந்தப் பறவை எங்கிருந்து வந்தது? எதனால் தன் முன்னே விழுந்து உணர்வற்றுக் கிடந்தது? இப்போது எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்து வானில் சிறகடித்துப் பறக்கிறது? என்று தெரியாமல், எதுவும் புரியாமல் அது சென்ற திசையையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் மீது அளப்பரிய நேசத்தையும், தீராத ஆசையும் கொண்டிருந்த சங்கெழிலி தன்னிலை மறந்தவளாய் அவன் தேகத்தினுள் தன் ஆன்மாவை புகுத்த முயன்று அவனை நெருங்கிய வேளையில் சட்டென்று அங்கிருந்து வெகு தூரம் தூக்கி எறியப்பட்டாள்..


தீபனும் ஏதோ ஒரு காந்த அலை தன்னைச் சுற்றி இருப்பது போல் உணர்ந்தவன் அந்த அலையில் தன் மதிமயங்கி தனக்கு மயக்கம் வருவது போல் இருப்பதை உணர்ந்தவன் சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டு,
'அந்தக் குருவி எங்க இருந்தாலும் சரி நல்லா இருக்கணும்’ என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான்..

வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் அவனை வரவேற்றது சோபாவில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த யாழினி தான்.‌ தன் தந்தை சென்றதற்குப் பிறகு உள்ளே வந்தவள் தன் அறைக்குச் செல்ல பயந்தவளாய் சோபாவிலேயே அமர்ந்து விட்டாள். சற்று நேரத்துக்கு முன்பு தனக்கு நடந்தது கனவா? நினைவா? என்று குழம்பியவள் வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு அது கனவாகத்தான் இருக்கும் என்று தனக்குள்ளேயே உறுதி செய்து கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.
ஏனோ மீண்டும் உள்ளே சென்றால் அது போல்தான் தோன்றுமோ? மீண்டும் மூச்சடைக்க, வியர்க்க விறுவிறுக்க அதே போல் கனவு ஏதேனும் தோன்றி விடுமோ? என்ற பயத்தில் இங்கேயே அமர்ந்து விட்டாள். அமர்ந்தவள் அயர்வின் காரணமாகத் தன்னையறியாமல் அப்படியே உறங்கியும் விட்டாள்..

சமைத்து முடித்த அருளரசி வெளியில் வரும் போது தன் மகள் உறங்கியிருப்பதைப் பார்த்து விட்டு தன் தலைவலி காரணமாகத் தன் அறைக்குச் சென்று விட்டார்.

உள்ளே நுழைந்தவன் தங்கையின் கழுத்திலிருந்த பேன்டேஜை பார்த்துவிட்டு அதிர்ந்தவன் வேகமாக அவளை உலுக்கி எழுப்பி, “உனக்கு என்ன ஆச்சு யாழி. ஏய் முழிக்காத பதில் சொல்லு என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்க.

அவனது செயலில் தூக்கம் களையாமலேயே தன் தந்தையிடம் சொல்லிய அதே பல்லவியைப் பாடியவள்,
“என்ன ஆச்சு, லண்டன் போக எல்லாம் ஓகே ஆயிடுச்சா?” என்றதற்கு.

வாயெல்லாம் பல்லாக இளித்து வைத்தவன், “ஆமா எல்லாமே ஓகே ஆகிடுச்சு. எனக்கு அவ்ளோ ஹேப்பியா இருக்குடி.‌ இப்பவே லண்டன் போன மாதிரி ஃபீல் ஆகுது. ஆமா இங்கையே இவ்வளவு சத்தமா பேசுற அப்பா தூங்குறாரா?” என்றிட.

முழுதாகத் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தவள், “அப்பா ஏதோ வேலை விஷயமா வெளிய போயிருக்காரு. முக்கியமான வேலை போல அவசர அவசரமா கிளம்பி போயிட்டாரு. உன்கிட்ட சொல்லிட்டுப் போகக் கூட டைம் இல்லன்னு சொன்னாரு. நம்மளை பாத்து பத்திரமா இருக்கச் சொன்னாரு, என்னை நல்ல பிள்ளையா இருக்கச் சொன்னாரு. சரி நீ போய் பிரஸ் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்று சொன்னதும் தனது அறைக்குள் நுழைந்து ஒரு குளியலையே போட்டுவிட்டு வந்தான் தீபன்.

பிள்ளைகள் இருவருக்கும் பரிமாறி விட்டு தானும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் அருளரசி. அவருக்குத் தன் கணவன் இல்லாமல் தொண்டைக் குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.

‘ இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ?’ என்று எண்ணியவாறு தட்டில் இருந்த உணவை மட்டும் உண்டு விட்டு எழுந்து சென்றுவிட்டார். பிள்ளைகள் இருவரும் சாப்பாட்டை அளந்து கொண்டு சாப்பிட்டனர்.

‘லண்டன் செல்ல போகிறோம். தன் கனவு நனவாகப் போகிறது' என்ற மகிழ்வில் தீபனுக்கு உணவு உள்ளே இறங்காமல் இருக்க.

தான் கண்ட கனவின் நினைவாகவே இருந்ததால் யாழினிக்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது. இருவருமே தட்டில் இருந்ததை மட்டும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யக் கொண்டு போய் போட்டு விட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.‌ மறக்காமல் அவற்றை எல்லாம் சுத்தம் செய்து விட்டு அவர்கள் இருவருக்கும் பாலை கொடுத்து விட்டு தன் அறைக்குள் வந்து படுத்தார் அருளரசி.


வீட்டிலிருந்து கிளம்பிய அன்புச்செல்வன் ஏற்கனவே பேசி வைத்தது போல் அனைத்து ஏற்பாடுகளையும் அலைபேசி வாயிலாகச் செய்து முடித்தவர் தனியாளாக, ஒற்றையாக ஹார்பர் வரைக்கும் வந்து சேர்ந்தார். பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் தனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருந்த நபருக்கு அழைப்பு விடுத்து விட்டுக் காத்திருக்க. சற்று நேரத்திலெல்லாம் அவரைப் பத்து பதினைந்து பேர் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.‌ அவர்களைக் கண்டு அவர் மிரள அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்றார் ஒருவர்.

பார்ப்பதற்கு 50 வயதைத் தொட்டிருப்பவர் போலிருந்தார். அவரது முடிகளின் வெள்ளைத் தன்மையே சொன்னது அவர் பழுத்த பழமென்று.‌ எப்படியும் தன்னை விட வயது அதிகமாகத் தான் இருக்கும் என்று அன்புச் செல்வன் நினைத்த போதே, அடங்காத சினத்துடன் அன்புச்செல்வனை நெருங்கிய அவர் எதையும் கேட்காமல், எதையும் பேசாமல் வந்த வேகத்திலேயே அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து,“இவனை இழுத்துட்டுப் போய்க் கட்டிப்போடுங்கடா.‌ அவங்கிட்ட இருக்குற எல்லாப் பொருளையும் செக் பண்ணி பார்த்திங்களா, அந்த மேப் கிடைச்சதா?” என்று கேட்க.

“எல்லாத்தையும் தரவா செக் பண்ணி பார்த்துட்டேன் சார் அந்த மேப்பை மட்டும் காணோம்” என்று அவரின் ஆட்களில் ஒருவன் சொல்ல மீண்டும் அடி விழுந்தது அன்பு செல்வனுக்கு.

அடியினூடே, “எங்கடா அந்த மேப்? அந்த மேப்பை எங்க வச்சிருக்க? காலேஜ்ல புரபஸரா வேலை பாக்க சொன்னா திருட்டுத்தனமா பண்ற. போங்கடா இவனை இழுத்துட்டுப் போய் நம்ம இடத்துல கட்டி வையுங்கடா. அந்த மேப் எங்க இருக்குன்னு இவன் சொல்ற வரைக்கும் சும்மா விடாதீங்க, டார்ச்சர் பண்ணுங்க” என்று சொன்னவாறு தன்னுடைய உயர்ந்த ரகக் காரில் ஏறி அமர்ந்தவர் அடுத்த நிமிடம் அன்புச்செல்வன் பணிபுரியும் கல்லூரி தாளாளருக்கு அழைப்பு விடுத்தார்.


தாளாளர் பவ்வியமுடன் அழைப்பை ஏற்ற மறுகணம்,
“இனிமே அந்த மேப்பைப் பத்தி யாரு கிட்டையும் நீ பேச வேணாம். யாரும் எதுவும் பண்ண வேணாம் இனிமே அதை நானே பார்த்துக்குறேன் நீங்க உங்க வேலையைப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவர், ‘சீக்கிரமாக அந்த மேப் தன் கைக்கு வந்துவிடும். அந்தப் பொக்கிஷத்தை நாம அடைந்துவிடலாம். இந்த உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும், பணக்காரனாகவும் தான் மட்டுமே இருக்கப் போகிறோம்’ என்று கண்களில் கனவு மின்ன நினைத்தவர் கண்கள் மூடி அதையே கனவாகவும் காண ஆரம்பித்தார் அவர்..
அவர் தான் ஆளுங்கட்சி எம்.ஏ. சகாதேவன்..

சகாதேவனின் ஆட்களிடம் பிடி பட்டு அடைக்கப்பட்டிருந்த அன்புச்செல்வனுக்குக் குழப்பமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் தான் எடுத்துக் கொண்டு வந்திருந்த மேப் பற்றிய விஷயம் இப்படி இவருக்குத் தெரியும்? இவர் யார்? எதுக்குத் தேவையில்லாம என்னை அடைச்சு வெச்சுருக்காரு? என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து, தன் கையிலிருந்த மேப் எப்படி நழுவி சென்றது? என்றும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்...
அவரை அறியாமல் அவர் வசமிருந்த மேப் சேரவேண்டியவனின் கையில் சேரப் போகிறது என்பதை விதியைத் தவிர எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


சிறிது நேரத்திற்கு முன்பு..

அன்புச் செல்வன் தான் புக் செய்திருந்த கேப்பில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று, பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக வந்த காரொன்று இவர்களது வாகனத்தை இடித்தது. அந்தச் சத்தத்தில் கண்மூடி தன் யோசனையில் இருந்தவர் விழிகளைத் திறந்து பார்த்தார். கேபின் டிரைவரோ கீழே இறங்கி தன்னை இடித்த கார் காரரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

அன்புச்செல்வனும் கூடக் கீழே இறங்கி நின்று என்ன நிலவரம் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே உதயின் தந்தை சுமேந்திரனோ அந்தக் கேபின் மீது தெரியாமல் காரை கொண்டு வந்து இடித்துவிட்டு திட்டு வாங்கிக் கொண்டு, சாரி கேட்டுக் கொண்டிருந்தார்..

டிரைவரோ, “இங்க பாருங்க சார் கூட்டம் கூடுது. டிராபிக் வேற ஆகுது. வண்டியை சரிபண்றதுக்கு மட்டும் பணம் குடுங்க சார் பிரச்சினைய முடிச்சுக்கலாம்” என்று தன்மையாகக் கேட்டதும் முகம் மலர்ந்தார் சுமேந்திரன்.

வேகமாகத் தன்னிடமிருந்த 2000 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த அந்த டிரைவர், “இந்தக் காசு பத்தாது சார் குறைஞ்சது அஞ்சாயிரத்து ஐநூறு ஆகும்” என்றிட.

மேலும் 2, இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த டிரைவர், தன் வண்டிக்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் புரிந்து கொண்டு தன்னிடம் இருந்த பணத்தில் சில்லறை தேட சில்லரை கம்மியாக இருந்தது. வேகமாகத் தன் வாடிக்கையாளரான அன்புச்செல்வனிடம் திரும்பி,
“சார் நீங்க எனக்குப் பணம் தருவீங்கல்ல அதுல ஒரு 500 ரூபாயை இப்பவே குடுங்க சார்” என்றதும் வேகமாகத் தன் பர்சை எடுக்கிறேன் என்று பையில் கைவிட்டு எடுக்கும் போது அதன் அருகில் வைத்திருந்த அந்த மேப்பும் சட்டென்று கையோடு மேல வந்து பாதியில் நின்றதை அவர் கவனிக்கவில்லை..

அந்தப் பணத்தை டிரைவரிடம் அவர் கொடுக்க, டிரைவர், அந்த 500 ரூபாயை சுமேந்திரனிடம் கொடுத்து, “இவ்வளவு தான் சார் செலவாகும் மிச்சத்தை நீங்களே வச்சுக்குங்க” என்று சொல்லி கொடுத்து விட்டுப் போய் காரில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய.

“எதுவா இருந்தாலும் நியாயமா பேசுற தம்பி. நீ ரொம்ப நல்லவன்“ என்று சொல்லி புன்னகைத்தவாறு சுமேந்திரனும் தன் காரில் ஏறி அமர்ந்தார்.‌

அதேநேரம் தானும் உள்ளே ஏறுவதற்காகப் பின்பக்க கதவை திறந்தார் அன்புச்செல்வன். அடித்த காற்றில் தூசித்துகள்கள் அவர் கண்களில் பட்டு உறுத்திட கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டார்.‌ கார் கதவை திறந்த நிலையிலேயே வைத்து விட்டுக் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்ட அன்புச்செல்வன் கைக்குட்டையை எடுத்து முகத்தை நன்றாகத் துடைத்து விட்டு உள்ளே அமர.‌ அந்த இடைவெளியில் காற்றில் பறந்த அந்த மேப்பானது சத்தமின்றிச் சுமேந்திரனின் காருக்குள் நுழைந்திருந்தது..

நுழைந்ததோடு மட்டுமின்றி வீட்டிற்குக் கோப்புகளைக் கொண்டு வந்தவரின் கோப்புகளின் மேல் விழுந்து விட, அதை அறியாமலேயே அங்கிருந்து சுமேந்திரனின் கார் புறப்பட்டது. அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அன்புச்செல்வன் இருந்த கேபும் அங்கிருந்து நகர்ந்து சென்று இருந்தது..


கொண்டவனின் கரம்
சேர துடியாய் துடிக்கும் ஓர் இதயத்தின் பிம்பமாய் வந்து சென்றது ஐந்தறிவு ஜீவி...

கொடையாகக் கிடைத்திட்டாலும்
பிறர் அறியாமல் பறித்திட்டாலும்
உயிர் கொண்ட உறைவிடம் மறந்திடுமா?

- அற்புதமது பிறக்கும்....





 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -16.1

இலண்டன், ஐக்கிய இராச்சியம் மற்றும் இங்கிலாந்தின் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன். மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்டது இலண்டன் ஆகும்.

இலண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் மீது அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தையே சலனமின்றிப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அவள். எவ்வளவு நேரம் அதையே பார்த்திருந்தாளோ சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை உணர்ந்து மெல்ல கைகளைத் தேய்த்துக் கொண்டாளே தவிர அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. இலண்டனில் அப்போது மணி 12. 30. இந்திய நேரத்திற்குக் காலை 8 மணி..

எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று அவள் தோள் பட்டையில் பாந்தமாய் அமர்ந்த மறுகணம் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் சட்டென்று அக்குருவியைக் கையில் ஏந்தியவள் விழியகலாது அதையே பார்த்திருந்தாள். அச்சிறு குருவியோ தன் சிறிய அலகால் அவள் கைகளில் இடவலமாகத் தேய்த்து விட்டு அவள் கையைக் கொத்த ஆரம்பித்தது..

குருவி இடவலமாகக் தேய்க்க ஆரம்பித்ததும் கூச்சத்தில் நெளிந்தவள் அது கொத்த ஆரம்பித்ததும் மெலிதான வலியில் கையை உதறினாள். அக்குருவியோ பசை போட்டு ஒட்டி கொண்டது போல் அவள் கைகளை விட்டு அகல மறுத்து, இன்னும் அதிவேகமாக அவள் உள்ளங்கைகளைக் கொத்த ஆரம்பித்தது.‌ அதன் விளைவு அவள் கையில் சிறு காயம் ஏற்பட்டு அதிலிருந்து இரு துளி ரத்தமும் கசிந்திருந்தது..

காயம் ஏற்பட்டு ரத்தம் வந்த போதும் கொத்துவதை நிறுத்தாமல் கொத்திக் கொண்டிருந்த அப்பறவை, தன் அலகிலிருந்து வழிந்த ரத்தத்தையும் மீறி தன் உமிழ் நீரை காயத்தின் மீது உமிழ்ந்து விட்டு விருட்டென்று அங்கிருந்து பறந்து சென்றிருந்தது.‌ நொடியில் என்ன நடந்தது என்று உணர முடியாமல் பறந்து சென்ற குருவியையே பார்த்துக் இருந்தவள் வலி தாங்க முடியாமல் கைகளைத் தண்ணீரில் வைக்க முயன்ற போது ஒரு கரம் அவள் கையைப் பிடித்து இழுத்தது. அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்தவளின் முன்பு அடங்காத சினத்துடன் நின்றிருந்தான் ஒருவன்..

அவன் முகத்தில் இருந்த கோவத்தைக் கண்டு சற்றே உள்ளுக்குள் மிரண்டவள், “என்ன ஆச்சு அண்ணா?” என்றாள் திக்கித் திணறி.

அவனோ அவளை முறைத்துப் பார்த்தான். “அண்ணான்னு சும்மா நீ வாய் வார்த்தையா தான் கூப்பிடுற? மனசாற நீ என்னை அண்ணனா நினைக்கல தானே! அப்படி நினைச்சிருந்தா நடந்த பிரச்சனையை நீ என்கிட்ட சொல்லிருப்ப. ஏன், அன்பு இப்படி இருக்க? நீ ஒவ்வொரு தடவை அவங்களால காயப்படும் போதும் எனக்குத் தான் ரொம்ப வலிக்குது. உன்னோட சொந்த ஊர் பேரை சொல்லுடா நான் உன்னை அங்க அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாலும் அமைதியாகவே இருக்குற. ப்ளீஸ்மா இப்பவாவது என்கிட்ட சொல்லு உன்னை எந்த ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்தாங்க, அங்கேயே உன்னைப் பத்திரமா அனுப்பி வைக்கிறேன். சொல்லுமா நீ எந்த ஊர்ல இருந்து வந்துருக்க?” என்று எப்போதும் அவளிடம் கேட்கும் அதே கேள்வியைக் கேட்க.

அவளோ பதிலின்றி மவுனமாகத் தலை குனிந்தாள். ஏனோ அவள் மனதிற்கு வலித்தது. 'தன்மீது அன்பு வைத்திருக்கும் ஒரே ஒரு ஜீவன் இவர் தான். இந்த ஊரில் தனக்கென்று இருக்கும் ஒரே ஒரு நண்பன், அண்ணா மட்டுமின்றி எல்லா உறவுமே இவர் தான். அப்படி இருக்கும் போது இவரிடம் இருந்து உண்மையை மறைக்கிறேனே?' என்று எண்ணி ஒவ்வொரு நாளும் அவள் வருந்திக் கொண்டு தான் இருக்கிறாள்.‌ ஆனால் தன் நிலையை அவனிடம் சொல்ல அவளுக்குத் தயக்கமும், அதே நேரம் தன் தாயைப் போலிருப்பவருக்குத் தான் செய்து கொடுத்த சத்தியமும் தடுக்க.
எப்போதும் போல் மௌனத்தையே பதிலாய் தந்து விட்டு தலை குனிந்து கொண்டாள்.‌

தான் கேள்வி கேட்டால் பதில் என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தவனுக்கு அவளது மௌனம் வருத்தத்தைத் தான் கொடுத்தது. “இனி எத்தனை வருஷத்துக்குத் தான் என்கிட்ட இருந்து இதை மறைக்கிறன்னு நானும் பார்க்குறேன். கேட்க வேண்டியவங்கக்கிட்ட கேட்டா எனக்குப் பதில் கெடைச்சுடும். ஆனா நீதான் என்னோட கைய கட்டி போட்டுருக்கியே. கூடப் பொறக்காட்டிட்டியும் உன்னைத் தங்கச்சியா நினைச்சுட்டேன் அப்படி இருக்கும்போது எப்படி உன் பேச்சை மீறி, உன்னைப் பத்தின தகவலைக் கேட்குறது. உன் நல்லதுக்காகத் தான்னு சொல்றேன். ஆனா நீயோ, அதைப் பத்தி எதுவும் கேட்காதீங்கண்ணா நான் இப்படியே இருந்துட்டு போறேங்குற. அவங்க உன்னைப் பாசமா நடத்துனா பரவாயில்லை, அடிமை மாதிரி நடத்தறாங்களேடா. அதைப் பாத்துக்கிட்டு எப்படி என்னால அமைதியா இருக்க முடியும்” என்று கவலையும், ஆதங்கமும் போட்டி போட கேட்டவனைக் கலங்கிய விழிகளோடு ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.‌

“பரவால்ல அண்ணா, அவங்க என்னைக் கஷ்டப்படுத்துனாலும் நீங்க என் மேல பாசமா இருக்கீங்களே அதுவே எனக்குப் போதும். அவங்க என்னை இங்க கூட்டிட்டு வரலன்னா, அண்ணங்குற உங்க உறவு எனக்குக் கிடைச்சிருக்காது” என்று விம்மி வெடித்து அழுதவாறு சொன்னாள்.

ஆதரவாக அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “என்னமோ எப்பவும் போல என்னோட வாயை அடைக்கிறதுக்குன்னே இதே வார்த்தையைச் சொல்ற. என்னைக்குக் கோவத்துல அடிக்கப் போறேன்னு தெரியல சரி வா வீட்டுக்குப் போலாம். மதியம் ஆகுது இன்னும் நீ சாப்பிடல தானே!”

“இல்லண்ணா கவி அக்கா சாப்பாடு போட்டு கொடுத்தாங்க தான் ஆனா எனக்குதான் சாப்பிடத் தோணலை. அதனால தான் இங்க வந்து உக்காந்துட்டேன், ஆமா நான் இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நீ இலண்டனுக்கு வந்து நாலு வருஷம் ஆகுது. இந்த நாலு வருஷத்துல நீ அதிகமா இருந்த இடம் இது மட்டும் தான். ஏன்னு கேட்டா நீ சொல்ற ஒரே பதில்,
' இங்க இருக்குற அமைதி வேற எங்கையும் எனக்குக் கிடைக்கலை‌. இந்தத் தண்ணீரை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. இதுக்கும் எனக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கும் போலருக்கு அண்ணா' ன்னு தான் சொல்லுவ. அதனால தான் எப்படியும் நீ இங்க தான் இருப்பேன்னு வந்தேன். ஆமா எப்பவும் இந்த நேரத்துக்கு உன்னை இங்க விட மாட்டாங்களே கடையில போய் மாடா உழைன்னு சொல்லுவாங்களே இங்க எப்படி வந்த? ”என்று அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.

எச்சிலை அழுந்த கூட்டி விழுங்கி கொண்டு, “இல்லண்ணா கவி அக்காவோட அம்மா என்ன அடிச்சுட்டாங்க.‌ அதனால எனக்கு அவங்க வேலை எதுவும் சொல்லலை. ஏன்னா கன்னத்துல கை விரல் தடம் அப்படியே பதிஞ்சுருந்துச்சு. அதைப் பார்த்த வெளியில இருக்கவங்க அவங்களை ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் அவங்க என்கிட்ட எந்த வேலையும் சொல்லல. அவங்களே கவி அக்காவை கூட்டிக்கிட்டு கடைக்குப் போயிட்டாங்க” என்று சொன்னவாறு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றவன் அவள் கன்னத்தை அழுந்த பற்றி நிமிர்த்தினான். அவளது கன்னத்தில் பதிந்திருந்த கை விரல்களின் தடத்தைக் கண்டு அவனுக்குக் கோபம் கட்டுக்கடங்கமல் வந்தது‌. ஆனால் அவர்களைத் தட்டி கேட்கும் இடத்திலும் தான் இல்லை, தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணர்ந்த அவனது இதயத்தில் மலையளவு வலி உண்டானது..
முயன்று தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், “சரி வா வீட்டுக்குப் போலாம்” என்றதும்.

“இல்லண்ணா நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வர்றேன்.”

“இன்னும் கொஞ்ச நேரம் நீ இருந்துட்டு வருவ தான் ஆனா வெயில் உன்னைப் போட்டு வாட்டி வதைக்குமே பரவாயில்லையா. மரியாதையை எங்கூட வா” என்று சொல்லி அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான் தமிழ்நேயன்.

எப்போதும் போல அவனது தன்னலமற்ற அன்பில் நெகிழ்ந்தவள் தன் கன்னம் தாண்டி வழியும் கண்ணீர் சிதறல்களைத் துடைத்துக் கொண்டு அவனுடன் சென்றாள் அன்புமலர்..


மேற்கில் இருக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் வசித்த வெள்ளையப்பன் - கருத்தம்மாள் தம்பதிகளின் மகள்தான் அன்புமலர். காட்டுவாசிகளுக்குப் பெரும்பாலும் காட்டில் இருக்கும் விலங்குகளை வேட்டையாடுவது, அங்கேயே கிடைக்கும் பழங்களை, விலங்குகளின் மாமிசங்களை உணவாக உட்கொள்வது, தங்கள் இன மக்களுடன் வித்யாசமான முறையில் பொழுதைக் கழிப்பது இதுதான் வாழ்க்கை நடைமுறையாக இருந்தது. வெளியுலகத்திற்குப் பெரும்பாலும் வருவது கிடையாது. தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு, வரைமுறைகளை வைத்துக் கொண்டு வாழ்வார்கள். வெள்ளையப்பனும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு முதலில் பிறந்தது ஆண் பிள்ளை. ஆண் மகன் பிறந்து பத்துத் தினங்களே கடந்த நிலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது அவர்கள் வசித்த காட்டில். அதற்குக் காரணம் வெள்ளையப்பனின் மகன் பிறந்ததால் தான் என்று சொல்லி சிறு குழந்தையெனப் பரிதாபம் காட்டாமல், பச்சிளங் குழந்தையெனப் பாவம் பார்க்காமல் ஓடும் நதிக்குள் தூக்கி எறிந்து விட்டார்கள், அவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அதைக் கண்ட வெள்ளையப்பன் நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதார். முதல் பிள்ளை, அதுவும் ஆண் பிள்ளை. தன் குலத்தைத் தழைக்க வைக்கப் பிறந்தவனின் உயிரை காவு வாங்கிய தன் இனத்தை அடியோடு வெறுத்தார். இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கு இருக்கக் கூடாது என்று நினைத்தவர் இரவோடு இரவாகத் தன் மனைவியை அழைத்துக் கொண்டு முதல்முறையாகத் தான் வாழ்ந்த காட்டைத் தாண்டி அந்த ஊரையே தாண்டி வந்து விட்டார்.

அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து விட்டாரே தவிரச் சுற்றிலும் வியாபித்திருக்கும் கடல் நீரைக் கடந்து எப்படி அடுத்தப் பகுதிக்கு செல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்கள் வசித்த இருப்பிடம் மலை முகடுகளை உள்ளடக்கிய காடுகளைச் சார்ந்ததாக இருந்தாலும் ஒருபுறம் நீரினால் சூழப்பட்டிருந்தது. தெப்பம் போல் ஏதேனும் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிச் செல்ல இயலும் என்பது அவருக்குத் தெரியும்.‌ ஏனெனில் தான் மட்டும் என்றால் குறிப்பிட்ட தூரம் வரை நீந்தி செல்ல முடியும்.‌ ஆனால் இப்போது தன்னுடன் பிள்ளை பெற்ற பச்சை உடம்புக்காரியான தன் மனைவியையும் வைத்துக் கொண்டு நீந்துவதென்பது முடியாத காரியமாகும்.‌ அதேபோல் மீண்டும் அந்தக் காட்டிற்குள் அவர்களால் திரும்பி செல்லவும் முடியாது. அவ்வாறு சென்றால் கட்டுப்பாடுகளைத் தகர்த்துக் கொண்டு செல்ல முயன்றவர், கோட்பாடுகளை அழிக்க முயன்றவர், வரைமுறைகளை மீறியவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு அதற்குண்டான தண்டனைகளும் கொடுக்கப்படும்.. கடுமையான தண்டனைகளுள் மரணத் தண்டனையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுத் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் அளவிற்குச் சற்று வித்தியாசமான தண்டனைகளும் அங்குக் கொடுக்கப்படுவது நடைமுறையில் இருந்தது..
அதனாலேயே என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் நின்றிருந்தார். நாழிகை தான் சென்று கொண்டே இருந்தது. இன்னும் சில மணித்துளிகளில் விடிந்து விடும் அளவிற்கு வானம் மெல்ல மெல்ல தன் மீதிருந்த இருளை நீக்கிக் கொண்டிருந்தது.

பிள்ளை இறந்த சோகத்தில் அழுது அழுது ஓய்ந்து போயிருந்த தன் மனைவி கருத்தம்மாளை தோளோடு சேர்த்து அணைத்தவாறு நின்று இருந்தவர், தங்களைக் கடந்து சென்ற விசைப்படகு ஒன்றைக் கண்டு விட்டு உற்சாகம் பீறிட்டோட “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்” என்று கத்தி அழைத்தார். இவர்களும் தமிழ் பேசுபவர்கள் என்றாலும் மற்ற மனிதர்களைப் போல் சாதாரணமாகப் பேசாமல் கொச்சைத் தமிழில் பேசுவார்கள்.

கப்பலில் தன் மனைவி மகளுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வின்சென்ட், இவரது குரல் கேட்டதும் விசைப்படகை அவர்களின் புறம் திருப்பினார். என்னவென்று கேட்டவர்களிடம் வழிதவறி வந்து இங்கே மாட்டிக் கொண்டதாகவும் தாங்கள் வசித்த காட்டுப்பகுதி தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்ல. தங்களுடன் வருமாறு அழைத்தார் வின்சென்ட். அவர் முகத்தில் இருந்த கனிவும், கள்ளங்கபடமற்ற பேச்சும் வெள்ளையப்பனை நம்ப வைத்திட, மறுபேச்சின்றித் தன் மனைவியோடு அவருடன் அந்த விசைப்படகில் ஏறி பயணித்தார்...
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் - 16.2


வின்சன்ட் சென்னையைச் சேர்ந்தவர். அவருக்கு மெர்லின் என்ற ஒரு பெண் பிள்ளை உள்ளது. வின்சென்ட்டை போலவே அவரது மனைவி மரியாவும் அன்பால் அவர்களை அணைத்துக் கொள்ள, ஐவரும் மேலும் இரண்டு நாட்கள் அங்கிருந்து ஊர்களை எல்லாம் சுற்றி பார்த்தனர் ‌. பின்னர் சுற்றுலாவை முடித்துக்கொண்டு சென்னை வந்தார்கள். வெள்ளையப்பனை பற்றி முழுதாக எதுவும் தெரிய விடிலும் அந்த நிமிடத்தில் இருந்து அவரை உடன்பிறவா சகோதரன் போலவே நடத்த ஆரம்பித்தார் வின்சென்ட். வீட்டு வேலைகளையோ? விருப்பப்பட்ட வேலையையோ செய்து கொண்டு அவர்களை இங்கேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்.
வெள்ளையப்பனும் தன் மனைவியோடு இங்கேயே தங்கி விட்டார்.

வியாபார நோக்கத்தோடு வின்சென்ட், மரவள்ளி கிழங்குகளை வாங்கிப் பதப்படுத்தி மாவாக அரைத்து வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.‌ பெரும்பாலும் இவற்றில் லாபம் என்பது அதிகமாகத் தான் இருக்கும், செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும். அதனால் தான் வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா போல் தன் குடும்பத்துடன் சென்று விட்டு வருவார். இம்முறை அப்படிச் சென்று விட்டு வருகையில் தான் வெள்ளையப்பன் தம்பதியரை அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.‌ அவர்கள் இங்கு வந்ததற்குப் பிறகு வீட்டில் தனிமையில் இருக்கும் தன் மனைவிக்குப் பெரும் துணையாய் அவர்கள் இருப்பார்கள் என்று அவர் பெரிதும் நம்பினார்.

ஏனெனில் சமீபத்தில் தான் வின்சென்ட்டுக்கு இருந்த ஒரே உறவான அவரது தாயாரும் வயோதிகத்தால் இறந்து போனார். இவரது தொழிலும் நல்ல முறையில் லாபகரமாகத் தான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் அவரது வியாபாரம் மெல்ல மெல்ல சரியத் துவங்கியது. அதை ஈடு செய்யும் விதமாகக் கடன் வாங்கி அவர் தன் தொழிலை மேம்படுத்த நினைக்க அதுவோ லாபத்தை ஈட்டித் தராமல் நஷ்டத்தையே கொண்டு வந்து கொடுத்ததால், வின்சென்ட்டுக்கு ஏகப்பட்ட கடன் ஆகிப்போனது.

இந்த நேரத்தில் தான் அன்புமலர் வெள்ளையப்பன் மற்றும் கருத்தம்மாள் தம்பதிகளுக்கு மகளாக வந்து பிறந்திருந்தாள். அவள் பிறந்ததிலிருந்து அந்த வீட்டின் செல்ல இளவரசி அவள் தான். கஷ்டமென்றால் என்னவென்று தெரியாத அளவிற்கு அன்புவை நன்றாகவே வளர்த்தார்கள்.

சரியாக அன்பு பிறந்து நான்கு வயது குழந்தையாக இருந்த போது இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யலாம் என்று நினைத்த வின்சென்ட் ஏற்கனவே தொழில்முறை தொடர்பில் தனக்குப் பழக்கமாக இருந்த லண்டனைச் சேர்ந்த சம்பத் வேல் என்பவருடன் இணைந்து கூட்டு முயற்சியாகக் கட்டுமான தொழிலை கையில் எடுத்தார். அவர் நேரமோ என்னமோ எடுத்ததெல்லாம் அவருக்கு நஷ்டத்தையே கொண்டு வந்து சேர்த்தது. அதன் விளைவு அதிக அளவு மன அழுத்தமும் தீராத கவலையும் ஒன்று சேர்ந்து அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விட்டன..

அதற்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரு கிட்னியும் பழுதான நிலையில் உள்ளதை கண்டறிந்து, மாற்று அறுவை சிகிச்சை செய்து கண்டிப்பாக அவரது சிறுநீரகம் மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் மூலம் உயிர் வாழ ஆரம்பித்தார்.

எங்குத் தேடியும் கிட்னி டோனர் கிடைக்காததால் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்க முன்வர அனைவரது ரத்தமும் பரிசோதிக்கப்பட்டது. வெள்ளையப்பன் ரத்தமும், மரியாவின் ரத்தமும் அவருக்கு ஒத்துப் போனதால் இருவரும் ஆளுக்கு ஒரு கிட்னியைத் தர முடிவு செய்து அனைத்து பரிசோதனைகளும் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டது. இருவரது கிட்னியும் வின்சென்ட்டுக்கு பொருந்தவும், அன்புக்கு ஏழு வயதான போது வின்சன்ட்டுக்கு மாற்று அறுவை சிகிச்சை முறையில் கிட்னி பொருத்தப்பட்டது.. அப்போது மெர்லினுக்கு 10 வயது.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் மட்டுமே வின்சென்ட் உயிரோடு இருந்தார். பின்பு அவரும் தவறிவிட அனைத்து பொறுப்பும் மரியாவின் கையில் வந்தது. அதன் பிறகு கணவர் நிர்வகித்து வந்த தொழிலை மரியா கையிலெடுத்தார். வீட்டில் இருக்கும் பிள்ளைகள் இருவரையும் கருத்தம்மாள் பார்த்துக் கொள்ள. வெள்ளையப்பனோ மரியாவுக்கு ஓட்டுநராக மாறிப்போனார். தினமும் மரியாவை அலுவலகம் அழைத்துச் சென்றுவிட்டு, அழைத்து வருவது அவர் வேலையாகிப் போனது. சில சமயங்களில் கலந்தாய்வுக்காக வெளியூர் செல்கையில் வெள்ளையப்பனும் உடன் செல்வார். நாட்களும் மாதங்களாக மாதங்களும் வருடங்கள் ஆனது. மெர்லின், அன்பு இருவரும் ஒன்றாகத்தான் பள்ளி செல்வார்கள், அதே போல் தான் கல்லூரி வரையும் படித்து முடித்தார்கள்.

மேற்படிப்பு படித்து முடித்த கையோடு கல்லூரியில் ராபர்ட் என்பவரை தான் விரும்புவதாக மெர்லின் சொல்ல எந்தப் பாரபட்சமும் பார்க்காமல், மறுப்பும் தெரிவிக்காமல் நல்ல முறையில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார் மரியா.

சரியாக மெர்லின் திருமணம் முடிந்து இரு மாதங்கள் கடந்திருந்த நிலையில் திடீரென்று ஒருநாள் வெள்ளையப்பன், கருத்தம்மாள் தம்பதியர் காணாமல் போய்விட்டனர்.‌ இரவில் உறங்கச் சென்றவர்கள் விடிந்ததும் காணவில்லை.

அவர்களைக் காணாமல் அதிர்ந்தது மரியா மட்டுமல்ல அன்புவும் தான். அன்புமலர் கல்லூரிப்படிப்பை முடித்து மூன்று மாதங்களே ஆன நிலையில் தற்போது தான் ஏதாவது வேலை தேடலாம், வேலைக்குப் போகலாம் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது திடீரென்று தாய், தந்தைக் காணாமல் போகவும் மிகவும் தடுமாறிப் போனாள். காவல் நிலையத்தில் புகார் கூடக் கொடுத்து விட்டு வந்தார் மரியா.
எவ்வளவு முயன்றும் அவர்கள் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது அழுது ஓய்ந்து போனவளாய் எந்நேரமும் விட்டத்தைப் பார்த்தவாறே அவள் அமர்ந்திருந்தாள்.‌. ஒரு மாறுதலுக்காக அவளைச் சுற்றுலா ஏதேனும் சென்று விட்டு வரச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன் அவளிடம் பேச்சு கொடுத்தார் மரியா.

“பாப்பா டூர் மாதிரி எங்காவது போயிட்டு வர்றியாடா? கொஞ்சம் மனநிம்மதியா இருக்கும்ல”

“நான் தனியா எங்கையும் போகலம்மா. வேணும்னா நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்றாள் அன்பு. அவள் என்னைக்கும் கருத்தம்மாளுக்கும், மரியாவுக்கும் இடையே வேறுபாடு பார்த்தது கிடையாது. இருவரையும் அம்மா என்று தான் அழைப்பாள்..

சரியென்று அவளது மனமாற்றத்திற்காகத் தானும் உடன் செல்ல சம்மதித்தார் மரியா.‌ அவர்களது நேரமோ என்னவோ மகிழ்வுடன் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வருகையில் எதிர்பாராத விதமாக அவர்களது கார் பெரும் விபத்துக்கு உள்ளாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டார்கள். பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில் சம்பத் வேல் லண்டனிலிருந்து இவர்களைப் பார்க்க வந்தார். மரியாவிற்கு ஏற்பட்ட காயங்களின் அளவு அதிகமாக இருந்ததால் இப்பவோ, அப்பவோ என்று அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

தன்னைக் காணவந்த சம்பத் வேலின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டவர் தழுதழுத்த குரலில், “அண்ணா என் பொண்ணை எப்படியோ கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆனா அன்பு பாவம்ணா. எங்களை விட்டா அவளுக்கு யாரும் இல்ல. அவங்க அப்பா, அம்மாவும் எங்க போனாங்கன்னு தெரியல. எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கண்ணா, அவளையும் உங்களோடவே கூட்டிட்டு போயிருங்க. கண்டிப்பா நான் பிழைக்க மாட்டேன். எங்களோட சொத்துல பாதி மெர்லினுக்கும், பாதிய அன்புவுக்குத் தான் எழுதி வெச்சுருக்கோம். அவளுக்கு இன்னும் இதெல்லாம் எப்படிச் செய்யணும், எப்படி நடந்துக்கணும், எப்படித் தொழில் செய்யணும்னு எதுவுமே தெரியாது அண்ணா. கொஞ்சம் கொஞ்சமாகக் கத்துக் குடுத்து, அவ எல்லாத்தையும் கத்துக்கிட்டதுக்கு அப்புறம் கன்ஸ்டரக்க்ஷன் கம்பெனியோட பொறுப்பை ஒப்படைச்சுடுங்க. மெர்லினுக்கு உண்டானதை அவளுக்குப் பிரிச்சுக் குடுத்துடுங்க, இந்த ஒரு உதவியை மட்டும் எனக்குச் செய்யுங்க அண்ணா ப்ளீஸ்” என்று கேட்டவாறே கண்களை மூடினார் மரியா.‌ இதை சொல்லி முடிப்பதற்குள்ளேயே பலமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டது மரியாவுக்கு. அன்புக்கு காலில் மட்டுமே காயம் அதிகமா இருந்தது. மத்தபடி அவளுக்கு அதிக காயமில்லை..


சம்பத் வேலும் நல்லவர்தான். ஆனால் அவரது மனைவி ரேணுகாவோ கொஞ்சம் கறார்,அதிலும் சிடுசிடு பேர்வழி. அவளிடம் எப்படி இந்தச் சிறு பெண்ணை அழைத்துப் போவது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மரியா உயிர் நீத்து இருந்ததால் வேறு வழியின்றி மரியாவுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்தவர் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த மெர்லினிடம் அவளுக்கு உண்டான பங்கை வழக்கறிஞர் மூலம் பிரித்துக் கொடுத்து விட்டு இங்கிருந்த அன்புவின் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு அவளையும் லண்டன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.

இதோ அவள் லண்டன் வந்து நான்கு ஆண்டுகள் கடந்து சென்று விட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நாள் கூட அன்பு அழாமல் உறங்கியது கிடையாது. சம்பத்துக்குக் கவினயா என்ற மகள் இருக்கிறாள். அவரது வீடு மிகப் பெரிய வீடுதான் என்றாலும் ஸ்டோர் ரூமில் தான் ரேணுகா அன்புவை தூங்கச் சொல்வாள். தினமும் சம்பத் தன் அலுவலகம் சென்று விடுவார். ரேணுகாவும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நகரின் மத்தியில் ஒரு அலங்காரப் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளதால் அங்குச் சென்று விடுவார். இங்கு வந்த நான்கு வருடங்களில் தீயாய் உழைப்பது அன்புவின் வேலை. அதைத் தவிர அவளுக்கு அங்கு அன்பு கூட கிடைக்கவில்லை. உணவு கூட கால்வாசிதான் அதுவும் அவளுக்குப் பிடிக்காத வகையில் தான் இருக்கும்.

தமிழ்நேயன் லண்டன் வாழ் தமிழன். பெரும்பாலும் தமிழர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவனது தந்தை அன்புமணி தமிழகத்தைச் சேர்ந்தவர், வேலை விஷயமாக இங்கு வந்தவர் இங்குப் பணிபுரிந்த அவனது தாய் தீப்சாந்தினியை காதலித்தார்.

தீப்சாந்தினியும் அவரைக் காதலிக்க, இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு இலண்டனிலேயே செட்டிலாகி விட்டனர்.‌ ஒருநாள் அங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாகக் கட்டிட இடுபாடுகளில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற சென்ற அன்புமணி தானும் அதற்குள் மாட்டி இறந்துவிட்டார் அப்போது நேயனுக்கு நான்கு வயது. தற்போது நேயன் தாயுடன் வசித்து வருகிறான்.

ரேணுகா வைத்திருக்கும் அலங்காரப் பொருள் கடைக்கு அருகில் உணவு கடை நடத்தி வருகிறான் நேயன். இவர்கள் வீடும் கூட ரேணுகாவின் வீட்டை விட்டு சற்று தள்ளி இரண்டு வீடு தள்ளி தான் இருக்கிறது. இங்கு வந்த புதிதில் அன்புவை எதேச்சையாகக் கவனிக்க ஆரம்பித்தான் நேயன். அவளது வாடிய முகமும், எப்போதும் வேலை வேலையென்றே ஓடிக்கொண்டே இருப்பவளை பார்த்து கவலைப் படுவான்.‌ ஆனால் ரேணுகா இல்லாத போது எப்போதாவது அவள் தன் தாயிடம் பேசுகையில் அவளது கள்ளம் கபடமற்ற மனதை புரிந்து கொண்டவன், அவளை உடன்பிறவா தங்கையாகவே ஏற்றுக்கொண்டான்.

எப்படி இங்கு வந்தாய்? எங்கிருந்து வந்தாய்? என்று அவன் எத்தனை முறை கேட்டும் இதுவரை ஒரு தடவை கூட வாய் திறந்து தான் எப்படி வந்தோம், தான் எங்கிருந்து வந்தோம் என்பதை அன்பு சொன்னது கிடையாது. அதேபோல் கவினயா ஒருதலையாகத் தமிழை நேசித்து வருகிறாள். அவளது பார்வை மாற்றத்தை வைத்து அவனுக்குமே அது புரிந்தாலும் கண்டு கொள்ளாதவாறே கடந்து செல்கிறான். காரணம் ரேணுகாவின் குணத்தை அறிந்ததால்.

ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை விதியைத் தவிர வேற எவரும் அறிந்திட முடியாது.

உந்தன் பூவிரல் தொடும் புண்ணியத்தை எதிர்பார்த்து
பூவெல்லாம் காத்திருக்க...
உந்தன் செங்குருதியை
சுமந்து கொண்டு பறந்து செல்கிறது பறவையொன்று..!

உயிர்மீட்டவனின் உயிரில் பாதியைக் கண்டு விட்ட
களிப்பில்‌ அவள் கரத்தை காயமாக்கி கடனாய் பெற்ற
குருதி துளிகளோடு அவன்
கரம் சேர கடல் கடந்து பயணிக்கிறது..!
பாதையின் நடுவில்
காத்திருக்கும் பாதகத்தை
அறியாத ஐந்தறிவு ஜீவி
ஒன்று..!

- அற்புதமது பிறக்கும்..





 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom