Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உதாசீனம் - விஜி ரவி

Viji Ravi

New member
Messages
2
Reaction score
0
Points
1
ஜன்னல் வழியே தெரிந்த சிவப்பு ரோஜா காற்றில் ஆடும் அழகை ரசித்தபடி பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள் நித்யா. நான்கு நாட்களுக்கு முன்னர் தான் நர்சரியில் அந்த ரோஜாத் தொட்டியை வாங்கி வந்திருந்தாள். அதில் இரண்டு ரோஜாப் பூக்களும் மூன்று மொட்டுகளும் இருந்தன. இன்று மொட்டுகள் மூன்றும் மலர்ந்து இதழ்கள் விரிந்து அழகாக காட்சியளித்தன.



வீட்டின் பின் புறம் இருந்த சிறிய காலி இடத்தில் கீரைச் செடிகள், புதினா, மல்லி, தக்காளி மற்றும் கத்திரிச் செடிகள் போட்டிருந்தாள் நித்யா. பூச்செடி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத் தான் இந்த ரோஜாச்செடியை வாங்கினாள். ‘சிறிய தொட்டியில் இருக்கும் இந்த செடியை எடுத்து பின்புறம் இருக்கும் காலி இடத்தில் தரையில் நட்டு வைக்க வேண்டும். நாளைக் காலையில் முதல் வேலையாக இதை செய்ய வேண்டும் .அப்போது தான் நன்றாக வேர் பிடித்து செடி பெரிதாய் வளரும்’ என்று நினைத்தவாறு அடுப்பை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.



ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்த சுந்தரின் கைகளில் காபி டம்ளரையும் மகன் நகுலின் கைகளில் பால் டம்ளரையும் கொடுத்து விட்டு வெளியே வந்தாள். சிறிய பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் பிடித்து குவளையில் மொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சினாள். பின்பு வீட்டின் முன்புறம் வந்து ரோஜா செடிக்கும் தண்ணீர் ஊற்றினாள். ரோஜாப் பூவின் மணம் குப்பென சுகமாய் நாசியை வருடியது.



அப்போது பக்கவாட்டு மாடிப்படிகளில் ‘தட தட’வென செருப்பு சத்தத்துடன் இறங்கிக் கொண்டிருந்த கணேஷைப் பார்த்தாள். மாடி வீட்டில் குடியிருப்பவன். கையில் வைத்திருந்த செல்போனில் ‘’ இதோ கிளம்பிட்டேண்டா...பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன் ....’’ என்றபடி வேகமாக இவளைக் கடந்து, சற்றுத்தள்ளி நிறுத்தியிருந்த தனது காருக்குள் ஏறி அமர்ந்து கதவை அறைந்து சாத்தினான். அவனது வேகம் கண்டு மிரண்டு போய் சற்றே ஒதுங்கி நின்றாள் நித்யா.



காரை ஸ்டார்ட் செய்த கணேஷ் சரேலென்று கிளம்பி திறந்திருந்த கேட்டின் வழியே வண்டியை சீற விட்டான். காரின் வலது புற முன் சக்கரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறிய ரோஜாச்செடியை கீழே தள்ள, பின் சக்கரம் அதன் மீது ஏறி தொட்டியை இரண்டாக உடைத்தன. நசுக்கப்பட்ட பூக்களும் செடியும் நித்யாவின் காலடியில் விழுந்தன. ஒரே ஒரு நொடி பக்கவாட்டு கண்ணாடி வழியே அவளைப் பார்த்து விட்டு எதுவும் நடக்காதது போல் போயே போய் விட்டான்.



அதிர்ந்து போய் அப்படியே நின்றாள் அவள். ‘’ என்னாச்சு நித்தி..? என்னவோ கீழே விழுந்து உடையற சத்தம் கேட்டதே...? என்றவாறு வீட்டினுள்ளிருந்து வந்தான் சுந்தர்.



‘’ அடக் கடவுளே... புது ரோஜாத் தொட்டி உடைஞ்சு கிடக்கே..? எப்படி...? ஆமா.. மேல் வீட்டு கணேஷ் படு ஸ்பீடா காரை ஓட்டிட்டுப் போறானே...?



‘’ அந்தக் கடன்காரன் தான் தொட்டிய உடைச்சது. புயல் வேகத்துல பறந்துட்டுப் போறான்.. அப்படி என்ன தலை போற அவசரம்....? கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையே...! நின்னு ஒரு சாரி கூட சொல்லல.. ‘’



‘’ஆச்சரியமா இருக்கு. பொதுவாக கணேஷ் வர்றதும் தெரியாது. போறதும் தெரியாது. வீட்டில் இருக்கிறதும் தெரியாது. இன்னைக்கு ஏன் இந்த பையன் எப்படி நடந்துக்கிட்டான்..? ‘’



‘’ பையன்! ஸ்கூல் போற பையனா...? வயசு இருபத்தேழு இருக்கும். இன்ஜினியர் வேற...டீசண்டா நடந்துப்பானு தானே மேல குடி வச்சீங்க..?



‘’அதுல என்ன குறைச்சல்...? குடி வந்த மூணு மாசத்தில அனாவசியமா அவன் இதுவரை பிரச்சனை பண்ணுனது இல்லை. ஒரே ஒரு பெட்ரூம், கையகல பாத்ரூமுக்கு மாசம் ரெண்டாயிரம் தர்றான் வாய் பேசாம...?’’



‘’எல்லாரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. சனிக்கிழமை சாயந்தரம் ஏழு மணிக்கு அவசர அவசரமா அப்படி எங்க போறான்.?’’



‘’எத்தனையோ இருக்கும். நாளைக்கு லீவு நாள் தானே... பிரண்ட்ஸ் கூட சினிமாவோ.... பார்ட்டியோ....? யாரு கண்டா..?’’



‘’என்னவா வேணா இருந்துட்டு போகட்டும். எப்படியோ என் புது ரோஜாச் செடிய நாசம் பண்ணிட்டான். அதை நான் எவ்வளவு ஆசையா வாங்கிட்டு வந்தேன்னு உங்களுக்குத் தெரியும் தானே..?’’



‘’சரி... போனாப் போறது... விடு நித்யா! நாளைக்கே நர்சரிக்குப் போய் புது ரோஜா செடி வாங்கித் தரேன். சரியா.... ?’’ என்று சுந்தர் சமாதானம் சொன்னாலும் மனசு ஆறாமல் தான் உள்ளே சென்றாள் நித்யா .



அன்று இரவு கணேஷ் வீடு திரும்பவில்லை. மாறாக சுந்தருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். ‘இன்று வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலை. நாளை காலையில் வருகிறேன். வாசல் கேட்டைப் பூட்டிக் கொள்ளுங்கள்’ என்று



‘’பேச்சிலர்ஸ் பார்ட்டியோ என்னமோ.... ‘’என்று சுந்தர் கண்ணடித்து சிரித்ததும் ‘’கர்மம் கர்மம்’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் நித்யா.



மறுநாள் காலை பத்து மணி. வாஷிங் மெஷினில் இருந்து துவைத்த துணிகளை எடுத்து வாளியில் போட்டுக்கொண்டிருந்த நித்யாவிடம் வந்து ‘’அம்மா.... நம்ம வீட்டுக்கு புதுசா ரெண்டு ரோஜா செடி வந்திருக்குமா....’’ என்றான் நகுல்.



‘’நெஜமாவா... உங்க அப்பா அதுக்குள்ள நர்சரிக்குப் போயி செடி வாங்கிட்டு வந்துட்டாரா...? ஆவலுடன் வெளியே வந்து பார்த்தாள்.



அடர் சிவப்பு நிறத்தில் பூக்களும் மொட்டுக்களுமாய் ஒரு தொட்டியும், அருகிலேயே மஞ்சள் நிறத்தில் பூக்களுடன் மற்றொரு ரோஜா தொட்டியும் இருந்தன.



"எங்கிட்ட கூட சொல்லாமல் சர்ப்ரைஸா போய் வாங்கிட்டு வந்திருக்காரு போலயே..." ஆசையுடன் மிக மென்மையாக பூக்களை வருடினாள்.



‘’அட... ஏது நித்தி ரோஜா செடி...? ஆச்சரியத்துடன் கேட்டவாறு வீட்டின் பின்புறம் இருந்து வந்தான் சுந்தர்.



‘’அப்ப இதை நீங்க வாங்கிட்டு வரலையா...?வியப்புடன் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது



"எக்ஸ்கியூஸ் மீ...!"என்ற குரல் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்தனர்.


கேட் அருகே கணேஷ் நின்றிருந்தான். அவனுடைய கார் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது



‘’நேத்து நான் தானே தொட்டிய உடைச்சேன். அதற்கு பரிகாரமாகத் தான் இன்னைக்கு ரெண்டு செடி வாங்கிட்டு வந்தேன்...’’ என்றான் சிரித்தபடி.



நித்யாவின் பக்கம் திரும்பி ‘’ சிஸ்டர் . என் மேல செம கோவத்துல இருப்பீங்க...நேத்து நின்னு ஒரு ஸாரி கூட சொல்லாமல் போயிட்டேன். ஏன்னா நிலைமை அப்படி.... என்னோட பிரண்டோட அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஏகப்பட்ட பிளட் லாஸ். உடனடியா அவருக்கு ஒரு சர்ஜரி பண்ண வேண்டிய கட்டாயம். அதுக்கு பிளட் தேவைப்பட்டது. எனக்கும் அவரோட பிளட் க்ரூப் தான். என் ஃப்ரெண்ட் போன்ல அழுதுக்கிட்டே விஷயத்தைச் சொன்னதும் பதறிப் போய் நான் வண்டிய எடுத்துட்டு பறந்தேன். நைட் முழுக்க அவன் கூட ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். நேத்து பேச முடியல. இப்ப ஸாரி சொல்லிக்கிறேன் சிஸ்டர்...’’



‘’இவனைப் போயா தவறாக நினைத்தோம்’’ என நித்யாவுக்குள் குற்ற உணர்வு எழுந்தது.


‘’ விடுங்க ப்ரோ.. இதுக்குப்போய் பீல் பண்ணிக்கிட்டு..’’ என்றாள் மென் சிரிப்புடன்.
 
Top Bottom