NITHYA MARIAPPAN
Saha Writer
- Messages
- 15
- Reaction score
- 13
- Points
- 1
இது என்னுடைய இரண்டாவது சிறுகதை. வழக்கம் போல கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நிஜவாழ்க்கை நிகழ்வுகளை கதை மாந்தர்களுடன் இணைந்து கூற முயற்சித்திருக்கிறேன்....
வி.எஸ்.செல்லம் சரஸ்வதி மஹால், மதுரை…
மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து ராயல் என்ஃபீல்ட் பைக்கை எடுத்தவன் வெளியே வந்து நின்றபடி “ டேய் அஸ்வின் அவளை பிக்கப் பண்ண நானே தான் போகணுமா?” என்றான் நூற்றியோராவது முறையாக.
அவனை முறைத்த அந்த அஸ்வின் “நீ தான் போகணும் ரகு! நாங்க எல்லாரும் கல்யாண வேலையில பிஸி“ என்று சொல்ல வாய்க்குள் முணுமுணுத்தபடி அவன் கிளம்ப அஸ்வின் உள்ளே இருந்து அவர்கள் இருவரையும் ரகசியமாக பார்த்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு கட்டைவிரலை உயர்த்தி காட்டினான்.
அதில் ஒருத்தி கல்யாணப்பெண் வேறு. அதிகநேரம் வெளியில் நிற்க முடியாததால் மணப்பெண் அறைக்கு சென்றனர் அனைவரும். அங்கே சென்றவர்கள் கதவை சாத்திவிட்டு “ஹேய்” என்று உற்சாக கூச்சலிட அவர்களில் ஒருத்தி வாயில் விரலை வைத்து “ உஷ்! கத்தாதிங்கடி! நீயும் தான்டா எருமை. மாப்பிள்ளையா லெட்சணமா இரு” என்று அவனது முதுகில் இரண்டு அடி வைத்தாள்.
அவள் தான் பூஜா. கல்யாணப்பெண் ஸ்ரீமதியின் தோழி. அவள் ஐ.டியில் பணியாற்றி ஆன்சைட் வேலைக்காக அமெரிக்கா சென்றவள் சென்ற மாதம் தான் இந்தியா திரும்பியிருந்தாள். திரும்பியவளின் காதில் விழுந்த எந்த செய்தியும் சுபசெய்தியாக இல்லை, அவளின் நண்பர்களான ஸ்ரீமதி மற்றும் ராகவின் திருமணத்தை தவிர.
இப்போது அவளின் கவனம் முழுவதும் ரகு திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்போகும் நபர் எந்த மாதிரி மனநிலையில் இருப்பார் என்பதில் தான் இருந்தது.
அந்த அறையில் மணமக்களை தவிர்த்து அவளின் மற்ற நண்பர்களான கோமதி, அஸ்வினும் இருக்க அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ரகுவை அனுப்பி வைத்தது. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் பூஜா.
அதே நேரம் பைக்கில் சென்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரகு என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட ரகுநந்தன் சலிப்புடன் கைக்கடிகாரத்தை நோட்டமிட்டான். அவனது மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓட சிந்தனைகளின் நாயகி திருநெல்வேலியிருந்து வந்த பேருந்திலிருந்து தன் உடைமைகளை கைகளில் தூக்கிக் கொண்டு இறங்கினாள். இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க அவளை அழைத்து செல்ல வந்தவனோ ஆறு மாதங்கள் கழித்து அவளை பார்த்த அந்த கணமே உறைந்தான் சிலையாக.
இடையளவு கூந்தல் காற்றில் அசைய கடல்நீல நிற சுடிதாரில் கையில் பேக்குடன் வந்தவளை கண்ட ரகுநந்தனின் இதயம் அவன் அடக்கியும் அடங்காமல் அவளை ரசிக்க அந்த ஜனத்திரளில் தன் உயரத்தால் தனித்து தெரிந்த அவனை கண்ட அவளின் நிலையும் அதுவே. சுதாரித்தவளாய் அவனை நோக்கி நடைபோட்டு வந்தவளை கண்ட அவனின் இதயம் அவன் அறியாமல் துள்ளி குதிக்க அதன் தலையில் இரண்டு அடி போட்டு அடக்கி வைத்தவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
அவள் மெதுவாக அவன் அருகில் வரவும் அவனது உதடுகள் அவன் அறியாமல் உச்சரித்த வார்த்தை “அம்மு”. அவனை நெருங்கிவிட்ட அவளின் காதுகளில் அந்த வார்த்தை விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாதவளாய் காதின் ஜிமிக்கி அசைய நின்றபடி “பஸ் கொஞ்சம் லேட்" என்று மட்டும் சொன்ன அந்த ஐந்தடி தேவதையை கண் இமைக்காமல் பார்த்தவனுக்கு பேச்சு வரவில்லை.
சிகையை கோதிக் கொண்டு பைக்கை காட்டிவிட்டு அவன் சென்று அதில் அமர அவளும் அமர்ந்து கொண்டாள். “நல்லா பிடிச்சுக்கோ அம்…” என்று சொல்ல வந்த வார்த்தையை பாதியிலேயே விழுங்கியவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அது சீறிப் பாயத் தொடங்கியது. அவன் நினைவுகளோ ஓராண்டு பின்னோக்கி நகர்ந்தது.
அது அவன் அமைதியற்று திரிந்த காலம். வாழ்க்கையில் இலக்கில்லாமல் வாழ்ந்தவனை நண்பர்கள் அஸ்வினும் ராகவும் தான் தைரியம் கொடுத்து வாழவைத்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த சமயத்தில் தான் அவன் வேலை செய்த அதே ஐ.டி கம்பெனியில் அவனது டீமில் சேர்ந்தாள் அவனது பைக்கில் இருக்கும் அந்த அம்மு.
அந்த காட்சி அவனது மனக்கண்ணில் விரிந்தது.
அன்று அலுவலகத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தான் ரகு. வேகமாக லிஃப்டில் ஏறியவன் அதில் இருந்த கூட்டத்தை கண்டதும் “எல்லாரும் நம்மளை மாதிரி தான் போல” என்ற எண்ணிக் கொண்டவன் லிஃப்டின் கதவுகள் மூடும் வேளையில் அதன் குறுக்கே கை வைத்து தடுத்த வண்ணம் உள்ளே நுழைந்தவளை கண்டதும் “ஆல்ரெடி ஓவர் லோட். இதுல இன்னொரு டிக்கெட் வேறயா?” என்று சலித்து கொண்டான்.
அவன் நினைத்தபடியே ஓவர் லோட் என்று லிஃப்ட் நகராமல் போக அனைவரும் அந்த பெண்ணையே பார்க்க அவளோ முகத்தை சுருக்கிக் கொண்டு “ஹலோ என்னை ஏன் பாக்குறிங்க? நான் வெறும் 39 கேஜி தான். இதோ இந்த அரிசிமூட்டை, அந்த நெட்டைக்கொக்குல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே” என்று வார்த்தையாட அவள் தன்னை தான் நெட்டைக்கொக்கு என்று கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டான் ரகு.
கடுப்புடன் “ஹலோ மேடம்! உங்களுக்கு என்னை பாத்தா நெட்டைக்கொக்கு மாதிரியா தெரியுது?” என்று அவன் இயல்பை மீறி அவளை போலவே சிறுபிள்ளைத்தனமாய் சண்டை போட மொத்த லிஃப்டும் அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
இவர்களின் சண்டையில் ஒவ்வொருவராக வெளியேற இருவர் மட்டும் மேல்தளத்துக்கு வந்து சேர்ந்தனர். அவளோ ஹெச்.ஆரிடம் சென்று விட்டு தன்னுடைய டீமில் இருக்கும் மற்றவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டாள். அதில் ஒரு பெண் “ஹலோ ஐயாம் கோமதி ஃப்ரம் சங்கரன்கோயில்” என்று சொல்ல அவள் “ஹாய் ஐயாம்….” என்று ஆரம்பித்தவள் அந்த அறையினுள் நுழைந்தவனை கண்டதும் வாயடைத்து போனாள்.
ஏனென்றால் ஹெச்.ஆருடன் உள்ளே நுழைந்தவன் ரகுநந்தன். வந்தவனின் பார்வை அவளை கூறு போட அதை எதிர்கொள்ள முடியாமல் மனதிற்குள் “மாட்டுனியா? இவன் ஏன் இங்க வந்துருக்கானு தெரியலயே” என்று பேசிக்கொண்டாள்.
அதற்குள் ஹெச்.ஆர் அவர்கள் அனைவருக்கும் ஒரு புன்னகையை பரிசளித்துவிட்டு “மீட் மிஸ்டர் ரகுநந்தன். உங்களோட டீம்லீடர்” என்று சொன்னதும் புன்னகைத்தவனை கண்டு அவளுக்கு மயக்கம் வராத குறை தான். மனதிற்குள் “ஐயோ! இந்த நெட்டைக்கொக்கு டீம்லயா நான் ஜாயிண்ட் பண்ணனும்? பகவானே என்னை எப்பிடியாச்சும் காப்பாத்துப்பா” என்று வேண்டிக்கொண்டாள்.
அவன் அனைவரிடமும் அவர்களை பற்றி கேட்டுக்கொண்டிருக்க தனது முறை வந்ததும் எழுந்து நின்றவள் “ ஹலோ சார்! ஐயாம் தனுஜா “ என்று சொல்லவும் அவன் அவளை கூர்ந்து நோக்கியபடி “டோன்ட் கால் மீ சார். காம் மீ ரகு” என்று அவளது வார்த்தையை திருத்த தலையாட்டியபடி அமர்ந்தாள் அவள்.
அன்று அவனை பொறுத்தவரை அவள் குழந்தை மனம் மாறாத பெண்ணாக தான் தோன்றினாள். அதன் பின்னும் அவனுடன் சேர்ந்து பணிபுரியும் போதோ வேலைகளில் சந்தேகம் கேட்க வரும் போதோ மரியாதை குறைவாக ஒரு வார்த்தை பேசினாள் இல்லை. ஆனால் அந்த குறும்புத்தனம் அவளின் கூடவே பிறந்தது என்பதால் அவ்வபோது அவளது செய்கைகளை கண்டு அவனே சிரித்து விடுவான்.
அவனுக்கு அவளுடைய வேலை செய்யும் பாணி பிடித்துவிட சில மாதங்களிலேயே அவர்கள் “தனு, நந்து” என்று அழைக்கும் அளவுக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். தனுஜா ரகுவுக்கு மட்டுமன்றி அவனது நண்பர்களான அஸ்வின் மற்றும் ராகவுக்கும் அவள் நல்ல தோழியாகி விட்டாள்.
அலுவலகத்தில் கோமதியுடனும், இந்த மூவருடனும் மட்டுமே நெருக்கமாக பழகியவள் தன்னுடைய அக்காவுடன் அவளது ஃப்ளாட்டை பகிர்ந்து கொண்டாள். அதில் ஏற்கெனவே அக்காவுடைய தோழியும் இருக்க, ஒரு நாள் கோமதியையும் அவர்களுடனே தங்க வைத்து கொண்டனர் மூவரும். ஊர்ப்பாசத்தில் அவள் தனியே உட்கார்ந்து அழுவதால் தனுஜா தான் அவளின் அக்காவின் யோசனைபடி அவளை தங்களுடன் சேர்ந்து தங்கவைத்து கொண்டாள்.
இவ்வாறு நாட்கள் கடக்க தனுஜாவின் அருகாமை ரகுவை அவனது பழைய இயல்புக்கு திரும்ப கொண்டுவர அவனை அறியாமல் அவன் தனுஜாவை விரும்ப ஆரம்பித்திருந்தான். நண்பர்கள் அவளிடம் சொல்லிவிடுமாறு கூற அவனோ “அவ என்னை ஒரு நல்ல ஃப்ரெண்டா பாக்குறாடா! இப்போ போய் நான் லவ்னு சொன்னா என்னை பத்தி என்ன நெனைப்பா?” என்று அந்த யோசனையை புறம் தள்ளினான்.
ஆனால் அவனாலும் நீண்டநாட்களுக்கு பொறுமையாக இருக்க முடியாதபடி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவன் தான் தனுஜாவிடம் காதலை சொல்லப்போவதாக கூற அவனுக்கு திக்கென்று இருந்தது. அன்று மாலையே அவளிடம் பேச வேண்டும் என்று காபிஷாப்புக்கு அழைத்து சென்றவன் தன் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்திவிட்டு தனுஜாவின் பதிலுக்கு காத்திருக்க அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவளின் அமைதி அவனை ஏதோ செய்ய “தனுமா! நான் உன்னை வற்புறுத்தலடா! உனக்கு பிடிக்கலனா நாம இனிமே இத பத்தி பேசிக்க வேண்டாம். சொல்லாம இருந்தா மூச்சு முட்டுற மாதிரி ஒரு ஃபீலிங். அதான் உன் கிட்ட சொல்லிட்டேன்“ என்று அவளின் நலனை கருத்தில் கொண்டு பேசியவனை கண்டு எழுந்தாள் அவள்.
அவள் சட்டென்று எழவும் வேறு வழியின்றி அவனும் எழ அவன் அருகில் சென்றவள் அவன் உயரத்துக்கு எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட அவன் அவளின் அந்த செய்கையில் சிலையானான்.
பின்னர் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இதைசொல்லுறதுக்கு உனக்கு இவ்ளோ நாள் ஆச்சா நந்து? நீ சொல்லுவேனு நான் எவ்ளோ நாளா வெயிட் பண்ணுனேன் தெரியுமா? ஒவ்வொரு தடவை உன்னை பாக்குறப்போவும் என்னோட ஹார்ட் பீட் எகிறி எகிறி இறங்கும். உன் கிட்ட நின்னா உன்னோட அருகாமையில எத்தனை நாள் நான் என்னை மறந்து நின்னுருக்கேன் தெரியுமா?” என்று காதலுடன் சொல்ல
ரகு அவளின் கன்னத்தை கிள்ளியவன் “அடி கள்ளி! இத்தனை நாள் ஏன் என் கிட்ட சொல்லவே இல்ல அம்மு?” என்று சொல்லி அவளது கரத்தை கோர்க்க தனுஜா சிரித்தபடி “இப்போ சொல்லிட்டேன்ல! இனிமே நீ தனுவோட நந்து” என்று சொல்லிவிட்டு அவன் கரத்தை கோர்த்துக் கொண்டாள்.
ரகுவுக்கு அவளின் இந்த வார்த்தை வேறு ஒருவரை நினைவுபடுத்த தலையை உலுக்கி அந்த நினைவுகளிலிருந்து வெளியே வந்தான் அவன். அவனது இதயம் “பழசை மறந்துடு ரகு. உன் கண்ணு முன்னாடி நிக்கிறவ தான் உன்னோட உலகம், உன்னோட அழகான வருங்காலம். நீ அவளை எப்போவும் யாருக்காகவும் விட்டுக்குடுத்துடாத” என்று அவனிடம் தெளிவாக கூற அவன் அதையே கடைபிடிக்க ஆரம்பித்தான். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது, அந்த மோசமான நாள் வரும் வரை.
அந்த நாளில் என்ன நடந்தது என்று அவன் சிந்திக்கும் போதே மண்டபம் வந்துவிட இறங்கினாள் அவள். இறங்கியவள் முகம் கொடுத்து பேசாமல் மண்டபத்தினுள் செல்லும் பாதையில் நடக்க தொடங்க அதற்குள் மண்டபத்தினுள்ளே இருந்து வெளியே வந்த பூஜா “தனுக்குட்டி” என்ற கூவலுடன் அவளை அணைத்துக் கொண்டாள்.
தனுஜாவும் “புஜ்ஜிக்கா!“ என்றபடி அவளை கட்டிக்கொள்ள பூஜாவின் பார்வை ரகுவிடம் “காயா பழமா” என்று கேட்டு வைக்க அவன் தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்.
அவன் சென்றதும் தனுஜா பூஜாவிடம் “எதுக்கு என்னை பிக்கப் பண்ண அவனை அனுப்பி வச்ச நீ? எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே அதை பத்தி நெனைச்சு பாக்க நான் விரும்பல” என்றபடி உள்ளே செல்ல ஆரம்பித்தாள்.
அதன் பின் பூஜாவும் அவளிடம் தோண்டி துருவவில்லை. ஆனால் திருமணத்தின் நிகழ்வுகள் அனைத்திலும் ரகுவை தன் தங்கை தவிர்ப்பதை அவள் பார்த்து கொண்டு தான் இருந்தாள். ரகுவாலும் அவளிடம் தெளிவாக மனதை விளக்க முடியா சூழ்நிலை. மறுநாள் திருமணம் என்பதால் அனைவரும் சீக்கிரமே உறங்க செல்ல மணப்பெண் அறையில் நான்கு பெண்கள் மட்டுமே விழித்திருந்தனர்.
பூஜா தனுஜாவை வார்த்தைகளால் விலாசிக் கொண்டிருந்தாள்.
“உன் கிட்ட இதை நான் எதிர்ப்பாக்கல தனு! இப்பிடி பிரியறதுக்கு நீங்க எதுக்கு ஒரு வருஷமா லவ் பண்ணனும்? காதல்னா உனக்கு விளையாட்டா போயிடுச்சா? ரகு பாவம்டி. உன்னை லவ் பண்ணுனதை விட அவன் பெருசா என்ன தப்பு பண்ணிட்டான்?” என்று ஆதங்கத்துடன் கேட்க தனுஜா கண்ணில் தீயுடன் அவளை உறுத்து பார்த்தாள்.
பின்னர் தெளிவான குரலில் “காதல்கிற வார்த்தையை பயன்படுத்தி உன்னை கஷ்டப்படுத்திருக்கான். அதை நீ மறக்கலாம், நான் மறக்க மாட்டேன் புஜ்ஜிக்கா! நீ அடிக்கடி சொல்லுவியே “பூஜாவோட ரகு”னு, அதை சொல்லுறப்போ உன்னோட குரல்ல காதல் கொட்டிக் கெடக்கும். ஆனா அப்போ எனக்கு தெரியல பூஜாவோட ரகு தான் தனுவோட நந்துனு. அவன் உன்னை பிரேக் அப் பண்ணிட்டு உன் மனசை கஷ்டப்படுத்துவான். நான் அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட வாழணுமா? நெவர்” என்று உரைத்தவளின் மனதை மாற்றும் வழியறியாமல் விழித்தாள் பூஜா.
அவளின் நினைவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னே சென்றது. அது பூஜா கேம்பஸில் தேர்வாகி அந்த நிறுவனத்தில் சேர்ந்த புதிது. அப்போது அவர்களின் டீமில் பேச்சுத்துணைக்கு ஆளின்றி தவித்தவளுக்கு ஒரு இனிய வரமாக வந்தவன் தான் ரகுநந்தன். சிரித்தமுகத்துடன், எப்போதும் கண்ணில் குறும்புடன் வலம்வருபவனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கூடிய விரைவில் இருவரும் நல்ல நண்பர்களாயினர்.
அப்போது எல்லாம் கல்லூரியில் படித்து கொண்டிருந்த சித்தப்பா மகள் தனுஜாவிடம் தினமும் போனில் பேசும் பூஜா ஒரு முறைக்கு ஆயிரம் முறை ரகுவின் புராணத்தை பாட தனுஜாவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையே எதுவோ ஓடுகிறது என்ற சந்தேகம் வர அதை கேட்ட போது பூஜா தனக்கு அவனை மிகவும் பிடித்திருப்பதாக கூறியவள் மறுநாள் அவனிடம் தன்னுடைய காதலை சொல்லப் போவதாக கூற அக்காவுக்கு வாழ்த்து தெரிவித்தது தான் தனுஜா அவளிடம் பேசிய கடைசி வார்த்தை.
அதற்கு பின் அவளிடம் இருந்து போன் கால் எதுவும் வராததால் அவள் வேலையிலும் காதல் வாழ்விலும் பிஸியாகி இருப்பாள் என்று நினைத்து கொண்டாள் தனுஜா. அவளுக்கு பூஜாவுடைய ரகுவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். ஆனால் பூஜாவிடம் அவனுடைய போட்டோவை கேட்கவும் தயக்கமாக இருக்கவே அவளும் கல்லூரி வாழ்வின் நிகழ்வுகளில் அக்காவின் அந்த காதலனை பற்றி சுத்தமாக மறந்து போனாள்.
அதே நேரம் பூஜா அவளுடைய காதலை சொன்னதற்கு ரகுநந்தன் தனக்கு யோசிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கும்படி கேட்க அவளும் அதற்கு சம்மதித்தாள். ஆனால் காலப்போக்கில் அவளின் காதல் கொண்ட மனம் அவனிடம் இருந்து அந்த பதிலை சீக்கிரமாக பெற வேண்டும் என்று அவளை அவசரப்படுத்த பூஜா அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத கோபத்தை ரகுநந்தனிடம் காண்பிக்க ஆரம்பித்தாள். ரகுவும் தோழியாயிற்றே என்று பொறுத்து பார்த்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் “எனக்கு உன் மேல இன்னும் லவ் மாதிரி ஃபீலிங் வரல பூஜா. நீ சொல்லுற மாதிரி உன் கிட்ட கேர் எடுத்துக்க, உன் கை பிடிச்சு நடக்க, நீ தவறி விழுந்தா உனக்கு கை குடுக்க ஒரு நண்பனா என்னைக்கும் நான் வருவேன். ஆனா காதல் அது என்னைக்குமே உனக்கும் எனக்கும் இடையிலே வராது” என்று அவளுக்கு சிறுபிள்ளைக்கு புரியவைக்கும் விதமாக எடுத்துச் சொல்ல ஆனால் அவளோ இதை எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை.
அன்று அழுது கொண்டே ஓடியவளின் நினைவில் இரவு முழுவதும் உறங்காமல் அலுவலகம் வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூஜா வேலையிலிருந்து நிற்க போவதாக நோட்டிஸ் கொடுத்த தகவலை அறிந்தவன் அவளிடம் சென்று விசாரிக்க அவள் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் அவனை பார்த்தவள் எதுவும் பேசாமல் கடந்து சென்றாள். அவளின் அந்த நிலை ஒரு நண்பனாக அவனை உறுத்த தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணின் மனக்கலக்கத்துக்கு காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியே அவனை கொன்றது.
அதன் பின் சில மாதங்களில் அவள் அந்த அலுவலகத்தை விட்டு சென்றுவிட்டாள். ஆனால் அவளின் கண்ணீர் நிரம்பிய விழிகள் அவனை இம்சிக்க அவன் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டான். யாரிடமும் கலகலப்பாக பழகவே தயங்கினான். மீண்டும் ஒரு பெண்ணின் மனதை தன்னுடைய செய்கை பாதித்து விடக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தவனின் மனதை அசைத்து பார்த்தவள் தான் தனுஜா.
அவளது குழந்தைத்தனத்தில் தன்னை பறிகொடுத்தவன் சிறிய தலைவலிக்கு அவன் தலையை பிடித்தாலும் ஹேண்ட்பேகிலிருந்து விக்ஸை எடுத்து நீட்டும் அவளின் அக்கறைக்கு அடிமையாகி விட்டான். இந்த உணர்வு காதலாக பரிணாமிக்க அவளும் அந்த காதலை பிரதிபலித்ததில் மனம் மகிழ்ந்தவன் ஒரு நாள் தனுஜா தன்னுடைய அக்கா ஆன்சைட்டுக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் தகவலை சொன்னவள் அவளை ஏர்ப்போர்ட்டில் சென்று வழியனுப்பிவிட்டு வர ரகுவையும் அழைத்து சென்றாள்.
ஏர்ப்போர்ட்டில் அவன் கையை கோர்த்தபடி பூஜாவின் முன் நின்றவள் “புஜ்ஜிக்கா! இது தான் என்னோட நந்து” என்று சொல்ல பூஜாவின் கண்ணில் அவள் அறியாமல் கண்ணீர் நிரம்பியது. அவளின் உதடுகள் “ரகு” என்று மெதுவாக அவன் பெயரை உச்சரிக்க ரகுநந்தன் வழிய வரவழைத்த புன்னகையுடன் “ ஹாய் பூஜா! ஹேவ் அ ஹாப்பி ஜர்னி” என்று சொல்ல அவள் கண்ணீரை விழுங்கியபடி புன்னகைத்தாள்.
அதற்குள் அவளுக்கு விமானத்துக்கான அழைப்பு வர இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் கவனிக்க தவறிய விஷயம் அவள் ரகு என்று அழைத்த கணம் மாறிய தங்கையின் முகம் தான்.
தனுஜா பூஜாவுக்கு டாட்டா காட்டியவள் ரகுநந்தனிடம் “நந்து உனக்கு பூஜா அக்காவ தெரியுமா?” என்று அவன் நெஞ்சை குத்திக் கிழிக்கும் பார்வையுடன் கேட்க அவளின் அந்த பார்வை தந்த காயங்களை அமைதியாக ஏற்றுக் கொண்டவன் “ தெரியும் “ என்றான் மெதுவாக. இனி அவளிடம் மறைத்து எதுவும் ஆகப் போவதில்லை என்று நடந்த விஷயங்களை அவளிடம் விளக்க முன் வந்தான் அவன்.
தனுஜா நம்ப முடியாமல் “ பூஜா அக்காவோட ரகு…..” என்று இழுக்க இடை மறித்தவன் “அது நான் தான்” என்றான் சட்டென்று.
அந்த வார்த்தையை கேட்ட அக்கணமே தலையில் இடிவிழுந்தது போல இருந்தது தனுஜாவுக்கு. காதல் போன விரக்தியில் அழுது அரற்றிய பூஜாவின் குரல் காதில் ஒலிக்க அதனுடன் ரகுநந்தனின் குரலும் சேர்ந்து ஒலித்தது.
இதயத்தின் வலி கண்ணில் நீரை வரவழைக்க அவனை ஏறிட்டவள் “ஏன் நந்து இப்பிடி பண்ணுன? ஏன் என்னோட அக்காவை காதல்கிற பேருல கஷ்டப்படுத்துன?” என்று அவனது சட்டையை பிடிக்க ரகுவால் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை.
அவனிடம் இருந்து கையை விலக்கியவள் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவளின் முகம் சரியில்லாததால் விசாரித்த ஸ்ரீமதி மற்றும் கோமதியை கண்டவள் பொறுக்க மாட்டாமல் அழுதுவிட இருவரும் அவளுக்கு என்னவோ ஏதோ என்று பதறியபடி அவளை தேற்ற ஆரம்பித்தனர். கொஞ்சம் தெளிவானவள் விஷயத்தை சொல்ல இருவருக்கும் என்ன சொல்லவென்று தெரியவில்லை.
ஸ்ரீமதி ராகவுடைய காதலி என்பதால் ராகவிடம் ரகுவின் மனநிலையை விசாரிக்க அவனோ ரகுவும் உடைந்த மனநிலையில் தான் உள்ளான் என்று சொல்ல அவளால் அவனுக்காக வருத்தப்பட மட்டும் தான் முடிந்தது. தனுஜா அன்றோடு ரகுநந்தனுடனான தன்னுடைய காதலை முறித்து கொண்டாள். அவளால் தன்னுடைய அக்காவை கஷ்டப் படுத்தியவனை தன்னுடைய காதலனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுடைய இந்த முடிவால் ரகுநந்தன் தான் மனமுடைந்து போனான்.
அதன் பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருநெல்வேலிக்கு சென்றவளின் நினைவில் அவளின் நந்து வந்து சென்ற போதெல்லாம் கண்ணீரால் அந்த நினைவுகளை அழிக்க முயன்று தோற்பாள் தனுஜா.
அதே நேரம் ரகுநந்தனுக்கு அவள் இப்படி நடந்து கொள்ள காரணம் பூஜாவின் மீதுள்ள அன்பு தான் என்று புரிந்தாலும் தன்னுடைய காதலை அவள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் அவனை கொன்றது. நண்பர்கள் என்ன தான் ஆறுதல் கூறினாலும் அவனால் அவனுடைய அம்முவின் இந்த செய்கையை மறக்க முடியவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் அவள் தன்னை புரிந்து கொண்டு தன்னிடம் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் தான் அவன் நாட்களை கடத்தினான்.
எல்லாம் முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் ஸ்ரீமதியின் திருமணத்துக்கு அழைப்பு வர அங்கே அவனும் வருவான் என்ற காரணத்தாலே போகத் தயங்கினாள் தனுஜா. பின்னர் ஸ்ரீமதிக்காகவும் ராகவுக்காகவும் செல்லலாம் என்று முடிவெடுத்தவள் விவரத்தை அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த பூஜாவிடம் சொல்ல அவள் நண்பர்கள் மூலமாக ரகு மற்றும் தனுவின் காதலை பற்றி அறிந்தவள் தன்னுடைய சிறுபிள்ளைத்தனமான செய்கையின் விளைவால் தான் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு பக்கம் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவள் தங்கையையும் ரகுவையும் சேர்த்து வைக்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினாள்.
அந்த திட்டத்தின் முதல்படி தான் ரகு தனுஜாவை பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வந்தது. இருவரும் தனித்து வரும் போது மனம் விட்டுப் பேசி பிரச்சனையை சரி செய்வார்கள் என்று எண்ணியவளுக்கு இது தோல்வியே. ஆனாலும் மனம் தளராமல் தங்கையிடம் ரகுவை பற்றி கேட்க அவளோ உன்னை காதலித்தவனை என்னால் காதலிக்க இயலாது என்று தெளிவாக உரைத்துவிட பூஜா கல்லாய் சமைந்தாள்.
தனுஜாவிடம் அமர்ந்து அவளின் கன்னத்தை வருடி கொடுத்தவள் “தனும்மா! நீ புரிஞ்சிக்காத நெறைய விஷயங்கள் இருக்கு. அன்னைக்கு நான் இருந்த மனநிலையில நான் நெறைய பேசிருப்பேன். ஆனா அது எல்லாமே என்னோட ஒன்சைட் லவ்வோட பாதிப்பு தான்” என்று சொல்லவும் தனுஜாவுக்கு திக்கென்றது.
அவளை நிமிர்ந்து பார்த்து “ஒன்சைட் லவ்வா? எனக்கு புரியல புஜ்ஜிக்கா” என்றாள் குழப்பத்துடன்.
பூஜா அவளை தெளிந்த முகத்துடன் பார்த்தவள் “நான் மட்டும் தான் ரகுவை லவ் பண்ணுனேன். அவன் என்னை ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் நெனைச்சான். என்னோட அவசரத்துக்கு அவனுக்கும் என் மேல காதல் வரணும்னு நான் சின்னப்பிள்ளைதனமா பிடிவாதம் பிடிச்சதால அவன் எனக்கு என்னைக்கும் ஒரு நல்ல ஃப்ரெண்டா இருப்பேன், ஆனா காதல் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில வரவே வராதுனு தீர்மானமா சொல்லிட்டான். அப்போ நான் இருந்த மனநிலையில என்னால அதை புரிஞ்சிக்க முடியல. ஆனா இப்போ நெனைச்சு பாத்தா அதுல்லாம் குழந்தைத்தனமா இருக்கு. ரகு என்னைக்கும் எனக்கு ஒரு நல்ல நண்பன். இப்போவும் அவன் தனுவோட நந்துவா அவளுக்காக தான் காத்திருக்கான். தெரியுமா?” என்று சொல்ல தனுஜா விழிவிரித்து இதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவளை தெளிவாக்கிவிட்டு பூஜா மனநிறைவுடன் படுக்கைக்கு சென்றாள். இப்போது உண்மையை தெரிந்து கொண்ட தனுஜாவின் மனமோ தன்னவனின் அம்மு என்ற அழைப்புக்காக ஏங்கத் தொடங்கியது. அதே நேரம் அவளின் மனம் செய்யாத தவறுக்காக தன்னவனை அளவுக்கதிகமாக கஷ்டப்படுத்திவிட்டோம் என்றும் பரிதவிக்க தனுஜாவுக்கு நந்து தன் மேல் கோபமாக இருப்பானோ என்ற சந்தேகம் வேறு. பேருந்து நிலையத்தில் அம்மு என்று அழைக்க வந்தவன் அந்த வார்த்தையை விழுங்கியது வேறு மனக்கண்ணில் ஓட இப்போது என்ன செய்ய என்று தெரியாமல் குழம்பிப் போனாள் தனுஜா.
அவனிடமே கேட்டுவிடலாம் போனை எடுத்தவள் இப்போது போன் செய்தால் அவன் எடுப்பானா இல்லை அவனுடைய வாட்சப்புக்கு செய்தி அனுப்பலாமா என்று யோசிக்க அவளின் மனசாட்சி “அடியே நடுராத்திரி 12 மணிக்கா அவனுக்கு மெசேஜ் அனுப்ப போற?” என்று அவளை கலாய்க்க காலையில் பேசிக் கொள்ளலாம் என்று போனை வைத்தவள் படுக்கையில் விழுந்து உறங்கிப் போனாள்.
மறுநாள் காலை முகூர்த்த்த்துக்கான இனிய பரபரப்பு ஆரம்பிக்க மணப்பெண்ணுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. தனுஜா இளஞ்சிவப்புநிற பட்டுப்புடவையில் தயாரானவள் சர்வலங்காரத்துடன் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்து ரசிக்க அந்நேரம் நீலநிறப்பட்டுபுடவையில் அன்னம் போல நடந்து வந்த கோமதி “ஏய் கல்யாண பொண்ணு அவங்களா இல்ல நீயாடி? போதும் கண்ணாடி பாத்தது. மாப்பிள்ளை ரூம்ல காபி கேட்டாங்களாம். வா போயி குடுத்துட்டு வருவோம்” என்று சொல்ல உற்சாகத்துடன் அவளுடன் கிளம்பினாள்.
அவளை பார்த்து நகைத்த பூஜா ஸ்ரீமதியிடம் “ரகு அங்க தானே இருக்கான். அதான் பயபுள்ள ஆர்வமா போகுது” என்று கிண்டலடிக்க அவள் கலகலவென்று நகைத்தாள்.
கோமதியும் தனுஜாவும் டிரேயில் காபி கப்புகளுடன் நடந்து வரும் பொழுதே தனுஜா “ஏய் கோம்ஸ்! நான் நல்லா இருக்கேன்ல? நந்து என்னை ஃபர்ஸ்ட் டைம் சாரில பாக்க போறான்டி! எனக்கு வெக்க வெக்கமா வருது” என்று வளவளக்க கோமதி கடுப்புடன் “அடியே ஒன்னு அவரை போட்டு பாடா படுத்துற, இல்லனா இந்த மாதிரி ஓவரா லவ்வ பொழிஞ்சு சாகடிக்குற. நீயெல்லாம் என்ன மாதிரி கிரியேசர்னு தெரியலடி” என்று தலையிலடித்தபடியே மாப்பிள்ளை அறையை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
கதவை தட்டியவர்கள் டிரேயுடன் உள்ளே செல்ல முதலில் நீலவண்ண மயிலாக நுழைந்த கோமதியை கண்ட அஸ்வினின் பார்வை அங்கே இங்கே நகரவில்லை. ஆளைத் தின்பது போன்ற அவனது பார்வையில் முகம் சிவந்தவள் காபி கப்பை கண்ணால் காட்ட அவன் எடுத்து கொண்டான்.
அடுத்து இளஞ்சிவப்பு நிறப்பட்டில் தாமரை போல நின்ற தனுஜாவை ரகுநந்தனின் நயனங்கள் ரசனையுடன் நோக்க அவள் அவன் அருகில் வந்தவள் காபி டிரேயை பக்கத்திலிருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு அவனை விழியெடுக்காமல் நோக்க நண்பர்கள் அங்கே ஒரு காதல் காட்சியை எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
ரகுநந்தனின் அருகில் நின்றவள் அவன் எதிர்பாராவிதமாக அவன் கன்னத்தில் பளாரென்று அறைய அந்த அறை முழுவதும் அமைதி நிலவியது.
“இது எதுக்கு தெரியுமா? நான் உன்னை பத்தி தப்பா நெனைச்சு திட்டுனப்போ அமைதியா இருந்தல்ல அதுக்கு. ஏன்டா ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா பூஜா என்னோட ஃப்ரெண்ட் தான்னு. எதையும் சொல்லாம கல்லுளிமங்கனாட்டம் ஆறுமாசம் சுத்திட்டு என்னையும் அழ வச்சு வேடிக்கை பாத்தல்ல” என்று சொன்னவள் அதற்கு மேல் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மார்பில் சாய்ந்து கதற தொடங்கினாள்.
ரகுநந்தன் அவளது இந்த அதிரடியை எதிர்ப்பார்க்காதது போலவே இந்த அழுகையையும் எதிர்ப்பார்க்கவில்லை. அவன் கைகள் தானாகவே அழுகையில் கரையும் தனுஜாவின் கூந்தலை தடவிக்கொடுக்க “எனக்கு தெரியும் தனு! நீ என்னை புரிஞ்சுப்பனு” என்றான் ஆழ்ந்த குரலில். ஆனால் அந்த சமாதானத்துக்கும் அவள் அழுகை நிற்காமல் போக அவன் மெதுவாக சிரிக்க ஆரம்பித்தான். பின்னர் சிரிப்பு சத்தம் பலமாக அவனது சிரிப்பு அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்த நிமிர்ந்தாள் அவள்.
முகத்தை சுருக்கியவள் “டேய் இப்போ எதுக்குடா சிரிக்கிற?” என்று கேட்க அவன் சிரிப்பை அடக்கியவண்ணம் “லவ் பண்ணுறப்போ ஒரு தடவையாச்சும் இப்பிடி அன்பா ஹக் பண்ணிருப்பியா இல்ல என்னையாச்சும் பண்ண தான் விட்டுருப்பியா? ஆறுமாச சண்டை கொஞ்சம் மனசுக்கு கஷ்டத்தை குடுத்தாலும் அதுக்கு மருந்து போடுற மாதிரி இப்போ ஹக் பண்ணுனியே! இது போதும்டி அம்மு. இனிமே நான் உன் கூட அடிக்கடி சண்டை போடுவேன் சரியா?” என்று தீவிரமான குரலில் சொல்ல தனுஜா குழம்பி போனாள்.
“எதுக்குடா சண்டை போடுவ?” என்று கேட்டவளை பார்த்த அஸ்வின் “அவன் ரொமாண்டிக் மூடுக்கு போயிட்டான். இந்த சின்னபாப்பா இன்னும் எல்.கே.ஜிய தாண்டல. எல்லாம் கஷ்டகாலம்டா ரகு” என்று கேலி செய்ய தனுஜா அவனுடைய முதுகில் இரண்டு அடிகள் போட அவன் முதுகை தடவிக்கொண்டான்.
ரகுநந்தன் அவனது அம்முவின் முகபாவத்தை ஆவலுடன் நோக்கியவன் தன்னை நோக்கி அவளை திருப்பிக்கொண்டு “உன் கூட அடிக்கடி சண்டை போட்டா நீ நல்லபுள்ளையா இப்பிடி அடிக்கடி என்னை ஹக் பண்ணுவல்ல அம்மு! அதான் அப்பிடி சொன்னேன்” என்று சொல்லி கண்ணை சிமிட்டினான் ரகுநந்தன். மாப்பிள்ளை ராகவ் “தனும்மா! நான் தான் ஆல்ரெடி உனக்கு சொன்னேன்ல! இவன் சரியான கேடினு” என்று சொல்லி நண்பனின் காலை வாரிவிட அந்த அறையில் சிரிப்பலை.
தனுஜா சிரிப்பை நிறுத்திவிட்டு “நந்து உண்மையாவே உனக்கு என் மேல கோவமே இல்லையா? நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் நந்து. கொஞ்சம் கூட பொறுமையில்லாம நான் நடந்துகிட்ட முறையால தான் நம்ம ரெண்டு பேருக்கும் கஷ்டம் நந்து” என்று பேசிக்கொண்டே செல்ல ரகுநந்தன் அவன் உதட்டில் விரலை வைக்க அவள் அமைதியானாள்.
“அம்மு! தப்பு என் மேலயும் தான் இருக்கு. என்னோட கடந்த காலத்துல நடந்த நிகழ்வுகளை உன் கிட்ட சொல்லிருக்கணும் நான். அதை மறைச்சது தான் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம்” என்று சொல்லிவிட்டு அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
ராகவும், அஸ்வினும் அவன் தோளை தட்டி “டேய்! போதும்டா. ஆறுமாசத்துக்கும் சேர்த்து இன்னைக்கே லவ் பண்ணுவிங்க போல” என்று கேலி செய்ய கோமதி அதை கண்டு சிரிக்க இருவரும் புன்னகையுடன் விலகிக்கொண்டனர்.
“முகூர்த்தத்துக்கு நாழியாயிடுச்சு” என்ற சத்தம் மணமேடையிலிருந்து வர அனைவரும் பழைய பரபரப்புக்கு திரும்பினர்.
மாப்பிள்ளை சென்று மணமேடையில் அமர்ந்து மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்க அந்நேரம் பொண்ணையும் அழைத்து வருமாறு ஐயர் சொன்னதும் மணமகள் அறையிலிருந்து தோழியர் புடைசூழ சிவப்புநிறபட்டில் அணிகலன்கள் ஜொலிக்க வெட்கத்துடன் நடந்து வந்த ஸ்ரீமதி ராகவின் அருகில் அமர அவனோ தன்னவளின் அழகில் மெய்மறந்தவனாய் கனவுலகில் சஞ்சரிப்பவனை போல ஐயர் சொன்ன மந்திரத்தை சொல்ல தொடங்கினான்.
அந்நேரம் வேஷ்டி சட்டையில் ஒரு உயரமான வாட்ட சாட்டமான வாலிபன் மண்டபத்தில் நுழைந்தான். அவன் நேரே மணமேடையை நோக்கி நடைபோட அருகில் வந்ததும் தங்கையின் காதில் ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்த பூஜாவின் முகத்தில் அவன் பார்வை நிலைத்தது. தனுஜா பூஜாவை கையால் இடித்தவள் கண்ணால் அவனை காட்ட பூஜா முகம் மலர “மது” என்றபடி மணமேடையை விட்டு இறங்கியவள் அவனுடன் பேசியவாறு நிற்க ரகு தனுஜாவின் காதில் “அம்மு யாருடி இவன்?” என்று கேட்க அவள் உதடு பிதுக்கி தனக்கு தெரியாதென்று பாவனை செய்தாள்.
அட்சதை தட்டுடன் கீழே இறங்கிய கோமதி பூஜாவை பார்த்து கண் சிமிட்டியபடி அந்த மதுவிடம் “அட்சதை எடுத்துக்கோங்க மாமா” என்று சொல்ல அவன் ஆச்சரியமாக “ மாமாவா??” என்று கேட்டான்.
கோமதி “ ஆமா! இவங்க என்னோட அக்கா! அப்போ நீங்க எனக்கு மாமா தானே” என்று சொல்லி கண் சிமிட்டி விட்டு ஓட பூஜா மதுவுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
அதற்குள் ஐயர் தாலியை எடுத்து கொடுக்க ராகவ் காதல் கைகூடிய சந்தோசத்தில் தன்னுடைய காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.
திருமண களேபரம் முடிந்து மணமக்களுக்கு தேங்காய் உருட்டும் விளையாட்டு நடைபெற நண்பர்களிடம் வந்த பூஜா தன்னுடன் நின்றவனை “இது மதுசூதனன். என்னோட கொலீக். நாங்க ரெண்டு பேரும் நாலு மாசமா லவ் பண்ணுறோம்” என்று சொல்ல மது அவளை தோளுடன் சேர்த்து அணைத்தபடி “சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலானு கூட முடிவு பண்ணிட்டோம். மேடமோட தங்கச்சி லவ் சேர தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” என்று சொல்லிமுடிக்க ஆள் மாற்றி ஆள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி உலுக்கியெடுத்துவிட்டனர்.
கோமதி ஆர்வத்துடன் “அப்போ அடுத்து திருநெல்வேலியில ரெண்டு கல்யாணம் நடக்கப் போகுது அச்சு! ரெடியா இருடா” என்று அஸ்வினை தோளால் இடிக்க அவனோ “கண்டிப்பா செல்லம்” என்று சொல்லி கண் சிமிட்ட அந்த தருணம் அங்கிருந்தவர்களின் இதயத்தில் சந்தோசம் மட்டுமே நிறைந்திருந்தது.
ரகுநந்தன் தனுஜாவை தனியே அழைத்து சென்றவன் “ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் அம்மு?” என்று கேட்க அவள் அவன் தோளில் இரு கைகளையும் மாலையாய் கோர்த்தவள் யோசித்தபடி “எதுக்கு நம்ம வெயிட் பண்ணனும்? பேசாம இன்னைக்கே பண்ணிக்கலாமா?” என்று ஆர்வமாய் அவனிடம் பதிலுக்கு கேட்டாள்.
அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டவாறே “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! நீ தான் டாடி டாடினு உருகுவ! அவர் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாவா இருக்கும்?” என்று சொல்ல தனுஜா “அஹான்! அவருக்கு உன்னை பிடிக்கலனா என்ன பண்ணுறது?” என்று குண்டை தூக்கி போட்டுவிட்டு பரிதாபமாக அவனை பார்த்தாள்.
“என்னை கண்டிப்பா அவருக்குப் பிடிக்கும். நான் அவருக்கு என்னோட காதலை பேசி புரியவைப்பேன் அம்மு. இத்தனை நாள் நான் காத்திருந்தது உன்னோட சம்மதத்துக்கு மட்டும் தான். இனிமே உன்னை பெத்தவங்க சம்மதத்தோட உன் கைவிரலை உரிமையோட பிடிக்கப்போற அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்“ என்று கூறி அவனது அம்முவை அணைத்துக் கொண்டான் தனுவின் நந்தன்.
இனி அவர்கள் வாழ்வில் இனிமை மட்டுமே!!!