Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உமா என்னும் மனுஷி - ஶ்ரீஜா வெங்கடேஷ்

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
உமா என்னும் மனுஷி...
இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆழ்வார்குறிச்சியில் கால் எடுத்து வைத்தாள் கலா. மனமும் உடலும் நடுங்கின. கண்கள் யாரையோ தேடித்தேடி அலைந்து ஏமாந்தவை போல கண்ணீரைக் தேக்கி இருந்தன. அவள் மனம் ஒரு நிலையில் இல்லை .யாரையோ பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் தாபமாக மாறி அவளைச் சுட்டது. அதே நேரம் அந்த நபர் இங்கு இருக்கக் கூடாது என்றும் அவனைப் பார்த்துவிடக் கூடாது என்ற அச்சமும் தோன்றி அலைக்கழித்தது. கடந்த 20 வருடங்களில் தான் அவள் மனதிலும் உடலிலும் எத்தனை மாற்றங்கள்?அவள் மனது மாறி விட்டது என்று தான் அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள் இத்தனை வருடம். ஆனால் எத்தனை காலம் ஆனாலும் அடி மனதில் ஆழப் பதிந்திருக்கும் சில எண்ணங்கள், சில நினைவுகள் மாறுவதில்லை. அவை அப்படியே வடுக்களாகவோ ஆறாத ரணமாகவோ தங்கி விடுகின்றன. என்பதை டேனியலின் நினைவு அலையாப் பொங்கி வரும் போது தான் தெரிந்தது..

ஊரைச் சுற்றிக் கண்ணை வீசினாள். எங்கும் பச்சைப் போர்வை. கொஞ்சமும் மாற்றமில்லை. கலா தன் தோழிகளோடு நீந்திக் களித்த குளம் நீர் ஆம்பல் மலர்கள் நிறைந்து யாரும் உபயோகப்படுத்தாமல் பாழாகக் கிடந்தது. அவள் கணவன் முன்னே பின்னே கிராமத்தைப் பார்த்தறியாதவன். 18 வயது மகனுக்கு எல்லாவற்றையும் ஆர்வமாகக் காட்டியபடி வந்தான். புதுதில்லியிலேயே பிறந்து வளர்ந்த அப்பாவும் மகனும் ஆளரவமற்ற சாலைகள், ஆங்காங்கே மேயும் கழுதைகள், குறுக்கே ஓடும் ஆடு மாடுகள் என அனைத்தையும் ரசித்தனர். வழக்கம் போல அமைதியாகவே இருந்தாள் கலா. குளத்தை ஒட்டிய தெருவைப் பார்க்கையில் தொண்டையை ஏதோ அடைத்துக் கொண்டது. அது தான் அவள் ஓடியாடிய தெரு. பௌர்ணமி நிலவொளியில் கண்ணாமூச்சி ஆடும்போது ராதையின் மேல் விழுந்து அவளது பற்களில் ஒன்றை உடைத்த தெரு, தீபாவளி அன்று வெடி போட்டு முடித்து நமுத்துப் போன வெடிகளின் மருந்தை சேகரித்து கொளுத்தி மகிழ்ந்த தெரு. எத்தனை மகிழ்ச்சியான குழந்தைப்பருவம் எனக்குக் கிடைத்தது? அதை என்னால் என் மகனுக்கு அளிக்க முடிந்ததா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.


கார் மேலும் நகர்ந்து சிவசைலம் ரோட்டுக்குப் பக்கத்தில் வந்தது. அங்கு ஒரு சிறு சந்தினுள் இருந்த ஒரு வீட்டைப் பார்க்கையில் கேவல் வெடித்துப் புறப்பட்டது. அது..அது டேனியல் வீடல்லவா? இப்போது அவன் எங்கே இருப்பான்? எப்படி இருப்பான்? ஒருவேளை ஆழ்வார்குறிச்சிலேயே தான் இருக்கிறானோ? சேசே அப்போதே சென்னையில் வேலை கிடைத்து விட்டதே அவனுக்கு? ஒருவேளை இப்போது விடுமுறைக்கு வந்திருப்பானோ? மீண்டும் கலவையான உணர்வுகள் மனதைப் பிசைந்தன. டேனியலின் முகம் அவள் அகக்கண்ணில் வந்து போனது. பருவம் வந்த நாள் முதல் மனதைக் கொள்ளை கொண்ட முகம். புத்திசாலித்தனம், அன்பு காதல் என எல்லாவற்றையும் தேக்கிய முகம். அவனை கடைசியாகப் பார்த்த அன்று அவன் அழுத அழுகையில் மனம் கரைந்தது. "நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல கலா! நீயா வந்து என் மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்படி விட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்?" என்று கதறினானே? நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

மகன் நிதின் ஏதோ ஒரு சிறுமி ஆடு மேய்ப்பதை விடியோ எடுக்க வேண்டும் என்று சொல்லியதால் டேனியலின் வீட்டருகில் கார் நிறுத்தப்பட்டது. மனதின் பாரம் எங்கே கேவலாக வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து மெல்ல காரிலிருந்து இறங்கினாள். தன்னை யாரேனும் அடையாளம் கண்டுகொள்ளாமலிருக்க வேண்டுமே என்று நினைத்தது அவள் உள்ளம். பக்கத்தில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தான் கலாவின் கணவன்.

"கலா! இங்க பக்கத்துல உமான்னு ஒருத்தங்க இருக்காங்களாம். நம்மை மாதிரி டூரிஸ்டுக்கு மதியம் சாப்பாடு சமைச்சுக் குடுக்கறாங்களாம். நாம அவங்க கிட்ட வாங்கிப்போமா?" என்றான்.


உமா என்ற பெயர் அவளை வானத்தில் தூக்கி அடித்தது. உமா! உமா!..ஒருவேளை எங்கள் காதலுக்குத் தூது போன உமாக்காவாக இருக்குமோ? அவள் எங்கே இங்கே குடியிருக்கப் போகிறாள். அவள் அக்கிரகாரத்தில் அல்லவா இருந்தாள்? இது வேறு யாரோவாக இருக்கும். ஊரை விட்டு ஒதுங்கியிருக்கும் காலனியில் அவள் குடியிருக்க வாய்ப்பில்லை. என்று நினைத்துக் கொண்டு மௌனமாகத் தலையசைத்தாள். அவளது மௌனத்தையும் சோகத்தையும் அப்பா அம்மா ஞாபகம் என்று புரிந்து கொண்டனர் குடும்பத்தார்.

"சார்! இதோ டேனியலு வரான் பாருங்க! அவங்கிட்ட எத்தனை பேருக்கு சாப்பாடுன்னு சொல்லிட்டீங்கன்னா உமா கிட்ட சொல்லிடுவான். நீங்க சிவசைலம், கடையம் கோயிலுக்குப் போயிட்டு வந்தா சாப்பாடு ரெடியா இருக்கும்." என்றார் அந்தக் கடைக்காரர்.

டேனியல் என்ற பெயரைக் கேட்டதும் துள்ளித்திரும்பினாள். மனம் ஸ்தம்பித்துப் போனது.

+2 படிக்கும் போது பார்த்த டேனியல் அதோ வந்து கொண்டிருக்கிறான். அப்படியானால் அப்படியானால் நானும் பள்ளிப் பருவத்துக்கு வந்து விட்டேனா? தாவணியும் ரெட்டை சடையும் தொங்க டேனியலைத் தேடி ஓடிய கலாவாக மீண்டும் மாறி விட்டேனா? அதோ அவன் சிரித்துக் கொண்டே என்னை நோக்கி வருகிறான். காலம் என்னும் பேராறு எங்களை மட்டும் பழைய இடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டது. இனி நானும் அவனும் இணைய என்ன தடை?

"என்ன கலா அப்படிப் பாக்குற? இந்தப் பையனை உனக்குத் தெரியுமா?" என்ற கணவனின் குரலில் சுயநினைவு வந்தது. தன்னைத்தானே ஒரு கணம் பார்த்துக் கொண்டவளுக்கு காலம் தன்னை அதே இடத்தில் தான் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது. ஆனால் டேனியல்? அவன் மட்டும் எப்படி? ஒருவேளை டேனியலின் மகனோ? நினைக்கும் போது நெஞ்சில் சுருக்கென்று தைத்தது.


"இவன் நம்ம நம்பி சாமி மகன்! நம்ம பள்ளிக்கூடத்துல தான் +2 படிக்கான். நல்லாப் படிப்பான். நிச்சயம் சென்னையில இருக்குற இன்சினீரிங்க் காலேஜ்ல இடம் கெடச்சிடும்னு பேசிக்கிடுதாங்க! பேசிக் கொண்டே போனான் அந்தக் கடைக்காரன்.

கலாவின் மனதில் பலப்பலக் கேள்விகள். இவனுக்கும் உமாக்காவுக்கும் என்ன சம்பந்தம்? நம்பியின் மகன் டேனியலா? யார் நம்பி? என் டேனியலுக்கும் இந்த சின்னவனுக்கும் என்ன சம்பந்தம்? என் டேனியல் எங்கே?" கேட்க முடியாத கேள்விகள் ஒரு மலை போலக் குவிந்தன. ஏனோ மனம் பழைய நினைவுகளில் ஊஞ்சலாட விரும்பியது. சில நிமிஷங்கள் போதும் நினைவின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க. அதற்கு அவளுக்கு இத்தனை வருடங்கள் நேரமிருக்கவில்லை. நேரமில்லை என்று சொல்வதை நினைத்துப்பார்க்க பயம் என்றே சொல்லலாம். திருமணம், புதிய ஊர் புதிய உறவுகள், குழந்தை அதன் படிப்பு வீட்டில் சண்டை சமாதானம் அன்பு வலி என காலம் பறந்து விட்டது. மனதின் ஓரத்தில் பூட்டி வைத்த பழைய நினைவுகள் புதைந்து அழிந்து விட்டன என அவள் நினைத்தது பொய். புத்தம் புதிதாக அவை பீறிட்டுக் கிளர்ந்தன. நெஞ்சைப் ஒய்சைந்தது. அடி வயிற்றிலும் சங்கடம். . கண்கள் லேசாக இருட்டின.

"நிதின் உங்கம்மா வழக்கம் போல திரு திருன்னு முழிக்க ஆரம்பிச்சுட்டா." என்று சொல்லிச் சிரித்தான் கணவன்.

"நான் பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோயில்ல உக்காந்துக்கறேன். நீங்க ஊரைச் சுத்திப் பார்த்துட்டு மெதுவா வாங்க" என்று சொல்லிவிட்டு வெயிலுகந்த விநாயகர் கோயிலில் போய்ப் பேசாமல் அமர்ந்து கொண்டாள். மனம் ஆசை ஆசையாய்ப் பின்னோக்கிப் பாய்ந்தது.

அப்போது தான் கலா வயதுக்கு வந்திருந்தாள். டேனியல் என்ற பெயரைக் கேட்டாலே மனதும் உடம்பும் சிலிர்க்கும். இவளை விட ஒரு வகுப்பு மேலே படித்தான். அவன் தந்தை ஏசுவடியான் ஊரின் துப்புறவுத் தொழிலாளி. அதனால் பள்ளியில் நிறையப் பேர் டேனியலோடும் அவன் தங்கை மேரியோடும் பேசுவதையும் விளையாடுவதையும் தவிர்ப்பார்கள். சிவ சைலம் அவ்வை ஆசிரமத்திலிருந்து வரும் பிள்ளைகள் தான் அவர்கள் நண்பர்கள். ஆனால் ஏனோ கலாவுக்கு டேனியலின் மேல் ஈர்ப்பு. அதை காதல் என்று சொல்வதா? இல்லை ஆசை என்று சொல்வதா என்று அவளுக்கே தெரியவில்லை. கலாவின் பார்வைகளுக்கும் புன்னகைகளுக்கும் அவன் பதில் ஏதும் தந்ததில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை அவள். டேனியல் +2வில் நிறைய மதிப்பெண் வாங்கி அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் இடம் கிடைத்து. நாளை மாலை அவன் சென்னைக்குக் கிளம்பப் போகிறான் என்று தெரிந்ததும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குளக்கரையில் அவனிடம் தன் மனதை அப்படியே கொட்டி விட்டாள்.

முதலில் திடுக்கிட்ட அவன் பிறகு மெல்லத் தெளிந்தான்.

"கலா! நீங்க உசந்த ஜாதி, இப்ப உனக்கு வந்திருக்குறது உண்மையிலயே காதலான்னு கூட உனக்குத் தெரியாது. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும். அப்பவும் நீ இப்படியே ஃபீல் செஞ்சீன்னா பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஆனால் கலாவின் காதல் வளர்ந்ததே தவிரக் குறையவில்லை. இப்போது டேனியல் பொறியியல் நான்காம் வருடம். கலா கல்லூரி மூன்றாம் வருடம். லீவுக்கு ஊருக்கு வந்தவனைக்க் கண்டு பேசி தன் காதலை நிலை நாட்டிவிட்டாள். அன்று டேனியலுக்குத்தான் எத்தனை சந்தோஷம்? கைகளைப் பிடித்துக் கொண்டு முத்தமிட்டான். மேனி சிலிர்க்க மயங்கினாள் அவள். தினமும் குளக்கரையே அவர்களது சந்திப்புகளுக்கு இடமானது. ஒரு நாள் அவர்களை உமாக்கா பார்த்து விட்டாள். அவள் பிள்ளையார் கோயில் குருக்களின் மூத்த மகள். ஒரு மாதிரியான சுபாவம் அவளுடையது. அக்கிரகாரத்தில் வாழ்ந்தாலும் அனைத்து வீடுகளுக்கும் சென்று மாவு அரைத்துக் கொடுப்பது, சமையலுக்கு உதவுவது என்று பணம் சம்பாதிப்பாள். ஏன் இப்படி என்று கேட்டால்..

"எங்கப்பா வருமானத்துல 6 ஜீவன் சாப்பிடவே கஷ்டமாயிருக்கு. நான் சுப்பிரமணியையும், நம்பியையும் படிக்க வைக்கணும், அதுக்காகத்தான் இப்படி சம்பாதிக்குறேன்" என்பாள். கலாவின் அம்மா பண்டம் பலகாரம் செய்ய, இட்லிக்கு மாவு அரைக்க என்று உமாக்காவைக் கூப்பிடுவாள்,. வீட்டில் போய்ச் சொல்லிவிடுவாளோ என்று பயந்தாள். சொல்லவில்லை. மாறாக கலாவைத் தனியாக மடக்கினாள்.


"இதப்பாருடி கலா! நீ உண்மையிலேயே அந்தப் பையனைக் காதலிக்குறியா? ஆசை காட்டி ஏமாத்தக் கூடாது. ஏன்னா அவனை நம்பித்தான் அவங்க வீடே இருக்கு. தெரிஞ்சதா?" என்றாள். கலா அவனை உயிருக்குயிராய்க் காதலிப்பதாய்ச் சொல்லியதும் தான் விட்டாள். ஆனால் இவர்கள் விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து போனது. அப்பா அடிப்பார் உதைப்பார் என்று நினைத்ததற்கு மாறாக ஒன்றுமே பேசாமல் அமர்ந்து விட்டார். அவளை அருகே அழைத்தார்.

"கலா! நீ சின்னக் குழந்தைன்னு நெனச்சேனேம்மா? இப்படிப் பண்ணிட்டியே?" என்றார் கலங்கிய குரலில். மனம் இளகியது கலாவுக்கு. பெரிதாகக் கத்த வந்த அம்மாவை அடக்கி விட்டார் அப்பா.

"கலா! நல்லா யோசிச்சுப் பாரும்மா! டேனியல் நல்லாப் படிச்சிருக்கான். ரொம்ப நல்ல பையன் எல்லாமே சரிதான். ஆனா அவன் சாதி வேறம்மா. அவங்கப்பா ஏசுவடியான் என்ன வேலை செய்யுறான்னு தெரிஞ்சும் நீ இப்படிப் பண்ணலாமா?"

"அப்பா! நான் டேனியலைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்"

"ரொம்ப நல்லதும்மா! நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பேன்னு நினைக்கிறேன். ஏன்னா கல்யாணம்னா வெறும் ரெண்டு பேரு ஒண்ணா வாழுறது இல்ல! ரெண்டு குடும்பம் ஒண்ணாச் சேருறது. டேனியல் குடும்பத்து சொந்தக்காரங்க உன் வீட்டுக்கு வரப் போக இருப்பாங்க. அவங்களையும் நீ ஏத்துப்பியாம்மா? அப்படியே ஏத்துக்கிட்டாலும் அந்த வீட்டுக்கு நானும் உங்கம்மாவும் வருவோம்னு நீ நினைக்கறியா?" என்றார்.

மௌனமாகத் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் கலா.

"இன்னைக்கு இருக்குற இளமையும் துடிப்பும் இன்னும் 20 வருஷத்துக்கு அப்புறம் காணாமப் போயிடும்மா! அப்ப அவங்க கக்கூஸ் கழுவுறவங்கன்னு உனக்கு நெனப்பு வந்திருச்சுன்னா வாழ்க்கையே நரகமாயிடும்.நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா" என்றார்.

யோசிக்க ஆரம்பித்தாள்.

"இந்த சமூகம், உறவினர்கள் என எல்லாவற்றையும் தாண்டி அப்படியாவது டேனியலைக் கல்யாணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா? " என்று ஆரம்பித்து வாழ்க்கையை சீர்த்தூக்கிப்பார்க்கையில் அப்பா கொண்டு வந்த வரனின் தட்டு எடை அதிகமாக ஆகிக் கீழே வந்தது. ஏதோ பருவக் கோளாறில் காதலித்தோம். ஆனால் வாழ்க்கை அத்தனை எளிதல்ல. ஒட்டுமொத்த சமூகத்தைப் பகைத்துக் கொண்டு அம்மா அப்பாவைப் பகைத்துக் கொண்டு வாழ முடியாது. எடுத்துச் சொன்னால் டேனியல் புரிந்து கொள்வான். என்று தீர்மானித்து உமாக்கா மூலம் அவனைக் கூப்பிட்டனுப்பினாள். அவளது தீர்மானத்தைக் கேட்டதும் சுக்கல் சுக்கலாக உடைந்து போனான் டேனியல். "ஆசையை ஊட்டி ஏமாற்றி விட்டாய்" என்பதையே திரும்பத்திரும்ப சொன்னான்.

"எனக்கு சென்னையில நல்ல வேலை கெடச்சிருக்கு கலா! இன்னைக்கே நீ கட்டுன புடவையோட வா! நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழலாம். நம்ம காதலுக்கு எங்க வீட்டுல எந்த எதிர்ப்பும் இல்ல. எங்கப்பாவும் தங்கச்சி மேரியும் நம்ம கூடவே வருவாங்க" என்று கெஞ்சினான். ஆனால் கலா தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டாள். அன்று தான் அவனை இறுதியாகப்பார்த்தது. அந்தக் கண்ணீர் வழியும் முகம் பல நாட்கள் இவளது தூக்கத்தைத் துரத்தியிருக்கிறது.


பழைய நினைவுகளிலிருந்து மெல்ல மீண்டாள். மனதுக்குள் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. கடையில் பார்த்த டேனியல் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக இருக்கலாம் என்று தோன்ற மெல்ல எழுந்து நடந்தாள். மீண்டும் அந்தப் பெட்டிக்கடை.

"உங்க வீட்டுக்காரரும், மகனும் வயக்காட்டுல அறுப்பு அறுக்காகல்லா? அதைப்பாக்க போயிருக்காக. நீங்க வேணும்னா போயி நம்ம உமாம்மா வீட்டுல இருக்கீயளா? அன்னா அவாளே வந்திட்டாகளே?" அவன் சொல்லவும் சற்றே ஒல்லியான ஒரு உருவம் கடையை நோக்கி வந்தது. உமாக்கா தான் அது என்பதை கண்கள் மட்டுமே காட்டின. மற்றபடி கறுத்து உருமாறிப் போயிருந்தாள்.

"செல்வா! யாரோ பட்டணத்துக்காரா சாப்பாடு வேணும்னாளாமே? டேனியலு வந்து சொன்னான். எத்தனை பேருக்கு என்ன செய்யணும்னு எதுவும் சொல்லலையேப்பா. அதான் கேக்க வந்தேன்"

உமாக்கா பேசியதென்னவோ கடைக்காரனோடு தான் . ஆனால் கண்கள் கலாவை அளந்தன. சட்டென மின்னல் தெறித்தது கண்களில். ஆனால் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். செல்வம் கை காட்ட இவளிடம் திரும்பினாள்.

"இதப்பருங்கோ மேடம்! எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு. வந்து ஃபேனடியில கொஞ்சம் உக்காருங்கோ" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விடு விடுவென நடக்கத்துவங்கினாள். ஏதோ ஒரு மாயக்கயிற்றால் இழுக்கப்படுவது போல பின்னாலேயே சென்றாள் கலா. சிறிய வீடு. ஆனால் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.

"மேரி! கடைக்குப் போய்க் கொஞ்சம் டீயோ காப்பியோ வாங்கிண்டு வரியா! வர வழியில நம்பியை மதியம் சாப்பிட வரச் சொல்லு" என்று சொல்லி அவளை அனுப்பினாள். வேறு யாரும் வீட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. மேரி என்றால் டேனியலின் தங்கை அல்லவா? இவள் எங்கே உமாக்காவோடு? நம்பிக்கு ஏன் அவளிடம் செய்தி சொல்லி அனுப்ப வண்டும்? பலவாறு யோசித்து ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"நீ ஆர் ஐ மக கலா தானே?"

"உம்! ஆனா நீங்க எப்படி இங்க? இது டேனியல் வீடு இல்ல?"

"ஆமா! இது எப்பவும் அவனோட வீடு தான். இப்பவும் அவன் இங்க தான் இருக்கான்."

சுற்றுமுற்றும் பார்த்தாள்.

"என்ன பார்க்குற? நீ கல்யாணமாகிப் போனப்புறம் என்னென்ன நடந்தது தெரியுமா இந்த ஊர்ல? காதலிச்ச பொண்ணு விட்டுட்டுப் போயிட்ட சோகத்தை டேனியலால தாங்கவே முடியல்ல! ரெண்டு நாள் பித்துப் பிடிச்சவன் மாதிரி நம்ம தெருவுல சுத்தினான். மூணாம் நாள் குளக்கரையில செத்துக் கிடந்தான். கையில பாலிடாயில் பாட்டில். என்ன நடந்ததோ அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்"

ஹக் என்ற சப்தம் மட்டுமே எழுப்ப முடிந்தது கலாவால்.

"வீட்டைக் காப்பாத்துவான் அவனால நமக்கு நல்ல காலம் பொறக்கும்னு காத்திண்டு இருந்த ஏசுவடியானால பிள்ளை செத்துப் போனதைத் தாங்க முடியல்ல! பக்க வாதம் வந்து படுத்த படுக்கையா ஆயிட்டான். பாவம் மேரி. அனாதையா நின்னா. எனக்கு மனசாட்சி உறுத்திண்டே இருந்தது. நானும் தானே உன்னைப் பத்திப் பேசி அவன் மனசுல ஆசையை வளர்த்து விட்டேன். இப்படி ஒரு பொண்ணு தனியாக தவிக்க நானும் காரணமாயிட்டேனேன்னு மனசு அழுதுது. மேரியை யாருமே ஏன்னு கேக்கல்ல. சில குடிகாரா வந்து கல்யாணம் பண்ணிக்கறேன்னா. ஆனா அவ அப்படி ஒரு வாழ்க்கையே வேண்டாம்னு தீர்மானமா சொல்லிட்டா. அதனால அவ ஜாதிக்காராளுக்கு அவ மேல கோபம். திக்குதிசை தெரியாம அவளும் டேனியல் வழியைத் தேடிக்கப் பார்த்தா. அப்பத்தான் என் மனசுல ஒரு எண்ணம் வந்தது. ஜாதி பாக்கக் கூடாது, மதம் பாக்கக் கூடாதுன்னு நான் சொல்லித்தானே உங்க காதலை வளர்த்தேன். ஆனா நானே ஏன் ஜாதியை மதிக்கறேன்னு தோணித்து. என் தம்பி சுப்பிரமணியை கேட்டேன். அவன் என்னை வீட்டை விட்டுப் போன்னு சொல்லிட்டான். ஆனா நம்பி நான் கல்யாணம் பண்ணிக்கறேன் மேரியைன்னு முன் வந்தான். உடனே அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். அக்கிரகாரத்துக்கு மேரியைக் கூட்டிண்டு வந்தா அவளை வார்த்தையால குதறிடுவாளோன்னு பயந்தேன். டேனியல் வீடு சும்மாதானே இருக்கு அங்கேயே இருக்கலாம்னு வந்துட்டோம். நம்பி ஏதோ கெடச்ச வேலையைச் செஞ்சிண்டு இருக்கான். மேரிக்கு ஒரு பொண் இருக்கு. பேரு உமா. என் பேரைத்தான் வெச்சிருக்கா. அவ இப்ப சென்னையில டாக்டருக்குப் படிக்கிறா. அவளுக்காகத்தான் நான் சமைச்சுப் போட்டு சம்பாதிக்கறேன். அப்புறம் டேனியலை பார்த்திருப்பியே? அப்படியே நம்ம டேனியலே தான். எனக்கென்னவோ அவனே திரும்ப பொறந்து வந்துட்டானோன்னு தோண்றது" என்று சொல்லிக்கொண்டே போனாள்.

கலாவின் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. உமாவின் காலடியில் விழுந்து வணங்க நினைத்த போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. டேனியலின் படத்திலிருந்து ஒரு ரோஜாப்பூ மெல்ல உதிர்வதைப் பார்த்தபடி இருந்தாள் கலா.​
 
Top Bottom