- Messages
- 413
- Reaction score
- 659
- Points
- 93
உயிராதுடிப்பாய் நீ !
அத்தியாயம் 22
திகழொளி கணவனின் செயலில் உறைந்து போய் நின்றாள். அவளின் நிலையைக் கண்டு மிகனோ அவளின் தோள்களைப் பற்றி "திகழி.. திகழி.. ஆர் யூ ஓகே.." என்று கேட்டான்.
மனதிற்குள் ரொம்ப நாளாக இருந்த ஆசையை குழந்தை கேட்டதும், இது தான் சமயம் ! என்று மிகன் திகழொளியின் கன்னத்தில் முதன் முதலாக தன் இதழ் பதித்தான்.
ஆனால் ,திகழொளி அதிர்ந்த நின்றதை கண்டவனுக்கு தன் செயல் அவளுக்கு பிடிக்கவில்லையோ? என்ற பயம் லேசாக தொற்றிக் கொண்டது.
திகழொளி மீது என்ன தான் கோவம் இருந்தாலும், அவள் அவனின் உயிர்! பல முறை அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், அவளுக்கும் சேர்த்து அவன் மனதிற்குள் அழுது இருக்கிறான்.
அவளின் துரோகத்தைத் தான் அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்த நான்கு வருடங்களில் 'ஏன் டீ இப்படி செய்தே..? என்று அவன் மனதிற்குள் கேட்காத நாளில்லை..
அவனின் நேசம் என்றாவது அவளைத் தன்னுடன் சேர்த்து வைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் தவித்து இருக்கிறான்.
அப்படி உயிரையே வைத்திருந்தவளை அருகில் வைத்துக் கொண்டு, தள்ளி இருப்பது அவனுக்கு அனுதினமும் நரக வேதனையைத் தான் கொடுத்தது.
அவளை ஏற்கவும் முடியாமல் ! விலக்கவும் முடியாமல் ! நெருப்பின் மீது நிற்பது போல் ஒவ்வொரு நொடியும் துடிக்கிறான்.
அவள் என்ன தான் சொன்னாலும் அவளை நம்பவும் முடியாமல் ! நம்பாமல் இருக்கவும் முடியாமல் ! தவித்தான்.
காதல் கொண்ட மனம் நம்பத் தான் துடித்தது. ஆனால் ,சாட்சியும் ! சூழ்நிலையும் ! அவளுக்கு எதிராக அவனை நினைக்க வைத்தது.
யாருக்கும் தன் நிலைமை வரக்கூடாது ! என்று ஒவ்வொரு நாளும் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தவனின் நேசம் ! அவனையும் அறியாமல் இன்று கிடைத்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளச் செய்தது.
ஆனால், மனைவி நின்ற கோலம் கொஞ்சம் அவனுக்குள் பயத்தையும் வரவழைத்தது.
அவள் முன்னே தன் மனதை காட்டிக் கொள்ள விரும்பாமல், தன்னை நிமிர்ந்து பார்த்தவளிடம் " முத்தம் குழந்தைக்காகத் தான்..!" என்றவன் சட்டென்று அறையை விட்டு வெளியே சென்றான்.
ஆனால், அவன் சொன்ன வார்த்தையே அவள் மனைவியைக் காயப்படுத்த போதுமானதாக இருந்தது.
தன் கையிலிருந்த குழந்தையைக் கூட மறந்தவள் கணவன் இதழ் பதித்த இடத்தை மென்மையாக வருடினாள்.
முதல் காதல் ! முதல் முத்தம் ! வாழ்க்கையில் எல்லோருக்கும் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு . ஆனால், அதை கணவன் விரும்பி கொடுக்காமல் குழந்தைக்காக என்று சொன்னது அவள் ஆசை கொண்ட மனதை வாள் கொண்டு அறுத்தது.
அதன் வலி தாங்காமல் சுற்றுப் புறம் மறந்து அவளையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தது.
குழந்தையோ, தாய் அழுவதைக் கண்டு பயந்துவிட்டது. "அம்மா ..அழாதே !அழாதே ..!"என்று கண்களை துடைத்து விட்டது.
சரியாக அந்த சமயம் உள்ளே வந்த மிகனின் கண்களில் அந்த காட்சிப் பட்டு தொலைத்தது.
ஏற்கனவே குழம்பி இருந்தவனுக்கு, திகழொளி அதே இடத்தில் நின்று அழுதது ! தான் முத்தம் கொடுத்தது பிடிக்காமல் தான் அழுகிறாள் என்று எப்போதும் போல் தவறாகவே நினைத்தான்.
திகழொளியின் அருகில் வந்து, சட்டென்று அவள் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கியவன், எதுவும் சொல்லாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியில் சென்றான்.
மகிழினியை மணியரசியிடம் கொடுத்து விட்டு, "நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரேன் அத்தே .."என்று கூறிவிட்டு, தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான். அவனுக்கு வீட்டுக்குள் இருப்பது மூச்சடைப்பது போல் இருந்தது.
மிகன் குழந்தையைப் பிடிங்கியதும் தான் திகழொளி நிகழ்வுக்கே வந்தாள். அவன் சென்றதும் அப்படியே படுக்கையில் படுத்து தேற்றுவாறற்று அழுது கரைந்தாள்.
தன் கணவனுக்கு சுத்தமாக தன்னை பிடிக்கவில்லையோ? என்று அவளும் தன் பங்குக்கு தவறாகவே நினைத்தாள்.
இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் இருவருக்கும் தெளிவு கிடைத்து இருக்கும். பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வந்து இருக்கும்.ஆனால், இருவருமே அதற்கு முயலவில்லை..
காரணமே இல்லாமல் ஒருவரை ஒருவரை காயப்படுத்திக் கொண்டார்கள்.
திகழொளி அழுதபடியே படுத்து இருந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.
இரவு உணவுக்கான நேரம் ஆனதும், திகழொளி சாப்பிட கீழே வராமல் இருக்கவும், அவளைச் சாப்பிட அழைக்க சென்ற மணியரசி உறங்கிக் கொண்டு இருந்தவளை மெல்ல தட்டி எழுப்பினார்.
அவளோ, மணியரசி எழுப்பியதும் தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
மணியரசியோ, அவளின் அருகில் அமர்ந்து " என்னாச்சும்மா இந்த நேரத்தில் தூங்கிறே..? டைமாச்சு சாப்பிட வாம்மா..!" என்றார்.
"எனக்கு சாப்பாடு வேண்டாம் மணியம்மா .. எனக்கு பசிக்கலே ! ரொம்ப தலைவலிக்குது.."என்றாள்.
"கொஞ்சமாவது சாப்பிட்டுப் படும்மா ! நைட் வெறும் வயிற்றோடு படுத்தால் சரியா தூக்கமும் வராது.தலைவலியும் போகாது.." என்று அவளை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.
புண்பட்ட மனதுக்கு அவரின் அன்பான பேச்சு ஆறுதலாக இருந்தது. அவரின் செயல் அவளுக்கு அவளின் தாயை ஞாபகப்படுத்தியது.உடனே அவளின் கண்கள் கலங்கியது.
மணியரசியோ, அவள் கண் கலங்குவதைப் பார்த்து "அச்சோ ! என்னாச்சுமா..?" என்று பதறியபடி கேட்டார்.
அவளோ, "ஒண்ணுமில்லமா ! அம்மா ஞாபகம் வந்துடுச்சு.." என்றவளிடம்..
"ஓ.. நாளைக்கு போய் பார்த்ததுட்டு வா.. குழந்தையாட்டா அதுக்கா கண்ணு கலங்குவாங்க ? "என்றபடி அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.
அவளோ, மென்புன்னகையுடன் "பாப்பா எங்கே மா..அவ சாப்பிட்டாளா..?"என்று கேட்டவளிடம்..
"இன்னைக்கு நேரமாவே சாப்பிட்டு தூங்கிட்டா மா.."
"ஓ ! அவர் சாப்பிட்டாரா மா..?"என்று கணவனைப் பற்றி அப்போதும் அக்கறையாக கேட்டாள்.
மணியரசியோ, அவளின் கேள்விக்கு , "மிகன் சாயங்கலாம் வெளியில் போனவன் இன்னும் வரலேம்மா.." என்றார்.
ஓ... ! அம்மா அப்போ நீங்க போய் சாப்பிடுங்க..எனக்கு பசிக்கும் போது நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்.."
"சரி சாப்பிடாமல் படுக்காதே..!" என்றவர் ஒரு பெருமூச்சுடன் சென்றார்.
மணியரசியின் மனசுக்குள் கணவன், மனைவிக்குள் ஏதோ சண்டை போல் என்று சிறு சந்தேகம் உண்டானது ! அவர் வயதுக்கு உரிய அனுபவமும், திகழொளியின் அழுது வீங்கி இருந்த முகமும் அவரைச் சரியாக கணிக்கச் செய்தது.
மிகனோ ,வெளியில் மனம் போன போக்கில் சுற்றிவிட்டு இருட்டிய பின்பு தான் வீட்டுக்கு வந்தான்.
மணியரசியோ, உள்ளே வந்தவனை பார்த்தவுடன் சாப்பிட அழைத்தார்.
அவனோ, எனக்கு பசிக்கலே அத்தே..பாப்பா சாப்பிட்டாளா? என்ன செய்யறா ..?என்றான்.
"அவ சாப்பிட்டு அப்பவே தூங்கிட்டா.. ஆமாம் அது என்னப்பா ? புருசன், பொண்டாட்டி இரண்டு பேரும் ஒரே போல் பசிக்கலேங்கிறீங்க.."என்றபடி அவனைப் கேள்வியாகப் பார்த்தார்.
"ஏன் திகழி சாப்பிடலையா..?"
"ஆமாம் . சாப்பிடக் கூப்பிட்டதற்கு பசிக்கலே மா வேண்டாம்ங்கிற.."
"ஓ..! "என்றவன் எதுவும் பேசாமல் யோசனையுடன் நின்றான்.
பேசாமல் நின்றவனிடம் மணியரசியோ, "மிகன் நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ.. ! திகழி உன்னை நம்பி வந்தவ.. நீதான் அவளை அனுசரித்து நடந்துக்கனும் ! அவளுக்கு சிலது தெரிஞ்சும், தெரியாமலும் இருக்கும். நீ தான் பா பொறுத்து போகனும். உன்னையே நம்பி வந்தவளே அழுக வைக்காதேப்பா..போகப் போக எல்லாம் சரியாய்டும்.." என்றவரிடம்..
"அத்தே நான் எதுவும் செய்யலே.."
அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல் , "மிகன் எங்க மூன்று பேரின் நம்பிக்கையே நீ தான் பா ! நீ நல்லா வாழ்ந்தா தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும். இந்த குடும்பம் பட்டது எல்லாம் போதும். பழசை மறந்துட்டு புதுசா உன் வாழ்க்கையை தொடங்குப் பா ! அது தான் எல்லாருக்கும் நல்லது.." என்றார் வருத்தத்துடன்.
அவனோ, எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான்.
மணியரசியோ, "நான் சொல்வதைச் சொல்லீட்டேன் .அப்புறம் உங்க இஷ்டம்.." என்றவர்.. இரண்டு பேருக்கும் உணவை ஹாட் பேக்கில் வைத்து அவனிடம் கொடுத்து.. "எத்தனை நேரமானாலும் , இரண்டு பேரும் ஒழுங்கா சாப்பிட்டு தூங்குங்க..!" என்றபடி உணவை அவன் கையில் திணித்தார்.
மிகனோ, தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவர் கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றான்.
மணியரசி பேசியதில் யோசனையுடன் வந்தவனின் கண்களில் அழுது வீங்கிய முகத்துடன் படுத்திருந்த மனைவி தான் தென்பட்டாள்.
ஏற்கனவே சிறு கோவத்தில் இருந்தவனுக்கு இந்த காட்சி மேலும் கோவத்தைக் கூட்ட உணவை மேஜை மீது வைத்து விட்டு அவள் அருகில் சென்று "திகழி எழுந்திரு !" என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்.
கணவனின் குரலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளிடம்.."ஏன் டீ அப்படி நான் உன்னே என்ன செய்துட்டேன்.இப்படி மூஞ்சி வீங்கிற அளவு அழுது வச்சு இருக்கே..இந்தளவு வெறுப்பு இருந்தா எதுக்கு டீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டே..?" என்றான் வழக்கம் போல் தவறாகவே புரிந்து கொண்டு..
அவளோ, மிகன் என்னாச்சு "ஏன் இப்படி பேசறீங்க..?நான் தலைவலின்னு தான் படுத்து இருந்தேன்.."
"பொய் சொல்லாதே ! அத்தைக்கு தெரியும் அளவு அழுது இருக்கே.."
"இல்லே மிகன்.."
"பேசாதே ! நீ எதுவும் சொல்லாதே ! உன்னைப் பத்தி தான் எனக்கு நல்லாத் தெரியுமே ! ஏன் டீ என் வாழ்க்கையில் திரும்பவும் வந்தே..?என்னை உயிரோடு கொள்ளவா? நான் நிம்மதியாகவே இருக்க கூடாதா..?" என்று அவளைப் பற்றி உலுக்கி எடுத்தான்.
அவளோ, செய்வது அறியாமல் கல்லாக நின்றாள்.
"நான் என்ன டீ பாவம் செய்தேன்.உன்னை மனதார நேசித்ததை தவிர வேறு எதுவும் செய்யலையே..நான் தொட்டது பிடிக்கலைன்னா அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தானே.? உன் பக்கமே வந்து இருக்க மாட்டேனே..வலிக்குது டீ இங்கே உயிர் போற மாதிரி வலிக்குது டீ .."என்று தன் நெஞ்சை தொட்டு காட்டீனான்.
அவன் முகமோ ! சொல்ல முடியாத வேதனையை சுமந்திருந்தது.
அவளோ, எதுவும் பேசாமல் அவனை கண்களில் நீர் தேங்கிய விழியுடன் பார்த்தாள்..
அவள் பார்வையை எதிர் கொண்டபடி "என் உயிருக்கு மேல் உன்னை நேசித்தேனே..!" என்றவனிடம்..
"நானும் தான் என் உயிரை விட உங்களை நேசித்தேன். ஆனால், இதுவரை என்னை நீங்க நம்புனீங்ளா?ஒரே ஒரு முறை என்ன நடந்தது என்று இன்றுவரை என்னிடம் கேட்டீங்களா? நீங்களாகவே எதையோ நம்பிட்டு என்னை குற்றவாளி ஆக்கி தீர்ப்பும் வழங்கிட்டீங்க..குற்றவாளிக்கு கூட தன் பக்க நியாயத்தைச் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க.ஆனால் நீங்க இன்று வரை என்னையே குற்றவாளி ஆக்கிட்டீங்க .."என்றவளிடம்..
"உன்னை நம்பத்தான் என் மனம் ஆசைப்படுகிறது! ஆனால், உன்னால் ஒரு உயிர் போச்சே அதுக்கு என்ன டீ சொல்லறே..?"
"நீங்க எத்தனை முறை பொய்யை உண்மையாக சொன்னாலும், அதற்கும் எனக்கும் ஒரு துளி கூட சம்பந்தமில்லை..என்னைக்கு என்ன நம்புவீங்களோ! அப்போ நம்புங்கோ..! அப்புறம் நீங்க கிஸ் பண்ணியதற்கு நான் அழுகலே ..குழந்தைக்காக பண்ணுனேன்னு சொன்னீங்களே ? அதுக்குத் தான் அழுதேன். உங்களுக்கு அவ்வளவு என்ன பிடிக்காமல் போச்சான்னு.."என்றவளை வியப்பாக பார்த்தான் அவளின் நாயகன்.
அவளோ ,தன்னை வியந்து பார்த்தவனிடம் "என் மனசில் நேசத்தை முதன் முதலாக விதைத்தவர் நீங்க தான்.அன்றும் சரி இன்றும் சரி என் மனசில் நீங்க மட்டும் தான் இருக்கிறீங்க..என் உயிர் உள்ளவரை நீங்க மட்டும் தான் இருப்பீங்க..உங்களுக்கு எப்போ என் மேல் நம்பிக்கை வருதோ ! அப்போ வரட்டும்.."என்றவள் சட்டென்று அவன் எதிர்பாராத நேர்ததில் அவன் உயரத்திற்கு எம்பி அவன் கன்னங்களில் தன் பட்டு இதழ்களை முதன் முதலாக பதித்தாள்.
அவனோ, அவளின் செயலில் உறைந்து போய் நின்றான். அப்படியே அசையாமல் கிரேக்கச் சிலையாக நின்றவனிடம் "குழந்தைக்காக கொடுத்த முத்ததத்தை நீங்களே வச்சுக்கோங்க.உங்களுக்கு புடிச்சு எப்போ எனக்காக கொடுக்குறீங்களோ! அப்போ இந்த முத்தத்தை நான் பொக்கிஷமா எனக்குள் வச்சுக்குறேன்..முதல் முத்தமும்! முதல் காதலும்! என்றுமே பொக்கிஷம் தான் ..! "என்றவள் அவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் படுக்கையில் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவனோ, மனைவியின் வார்த்தையிலும் செயலிலும் அளவிடமுடியாத ஆனந்தத்தில் இறக்கை இல்லாமல் பறந்தான்.மனம் முழுவதும் சொல்ல முடியாத நிம்மதியோ மகிழ்ச்சியோ அவனை
ஆட்கொண்டது.அதை அனுபவித்த படி அவனும் விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் அவளின் மறு புறம் படுத்தான்.
இருவரும் கண்களை மூடி படுத்திருந்தாலும் இருவரின் நினைவிலும் ஒருவரை ஒருவர் முதல் முதலாக பார்த்துக் கொண்ட நிகழ்வு தான் நிழலாடியது.அவர்களின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
மணியரசி கொடுத்த உணவு உண்ணாமலேயே வீணானது.
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அடுத்த யூடி சனிக்கிழமை.
அன்புடன்
இனிதா மோகன்