Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 32


மணியரசி வந்து உண்மையைச் சொல்லி சென்றபின் மிகன் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டான்..



அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல், தன் மனதோடும் போராட முடியாமல் கண்களை மூடி படுத்திருந்தான்.




திகழொளியை அவன் இத்தனை நாள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அப்போது நியாபகம் வந்து, அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது. அந்த நொடி சொல்ல முடியாத மரணவேதனையை அனுபவித்தான்.


மரணத்தின் கடைசி நொடி கூட இப்படி வலிக்குமா என்று தெரியாது..ஆனால் அவன் அப்போது அப்படியொரு வலியை அனுபவித்தபடி படுத்து இருந்தான்.




உலகமாறனோ மருமகள் சென்ற பின் மகன் அறையை விட்டே வெளியில் வரவில்லையே? என்று நினைத்தபடி அவனைத் தேடிச் சென்றார்.



மகன் படுத்திருந்த கோலமே அவனின் வேதனையைச் அவருக்கு சொல்லாமல் சொல்லியது..



மெல்ல மகனின் அருகில் அமர்ந்தவர் அவனின் தலையை மென்மையாக வருடினார்..



தந்தையின் மென்மையான வருடலில் கண்விழித்தவன்.தந்தையை அருகில் கண்டுதும் தலையை குனிந்த படி எழுந்து அமர்ந்தான்.



தப்பு செய்த குழந்தையாய் மகன் அமர்ந்திருந்த விதமே அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.



சில நொடிகள் அமைதியாய் அமர்ந்திருந்தவர் மெல்ல பேச்சு எடுத்தார் " என்னப்பா பிரச்சினை..?ஏன் திகழி அவங்க அம்மா விட்டீற்கு தீடிர்ன்னு போனாள்..?என்றவரிடம் மகனோ பதில் எதுவும் சொல்லாமல் மெளனம் சாதித்தான்.



"ஏதாவது சொல்லுப் பா.. இப்படி பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்? உனக்குள்ளேயே அத்தனையும் போட்டு அழுத்திக்காதே..! இத்தனை வருடம் கழித்தும் திகழியைத் தான் கல்யாணம் செயதுக்குவேன்னு சொன்னே. நானும் நீ நல்லா இருந்தா போதும்ன்னு அவங்க வீட்லே பேசி கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்..நீங்க தான் பா வாழனும்..! என்ன பிரச்சினையானாலும் பேசிதீர்த்துகனும்.."என்றார் வருத்ததுடன்.



அப்போதும் தந்தையின் பேச்சுக்கு பதில் பேசாமல் தலையை குனிந்த படியே அமர்ந்திருந்தான் மிகன்.



உலகமாறனோ நெடிய மூச்சுடன் " நீ இன்னும் நீரன் பிரச்சினையை மறக்கவில்லையா..? திகழி நல்ல பெண் பா..! அவளை தள்ளி இருந்து பார்த்த எனக்கே புரியுது! அவளை நேசித்த உனக்கு அவள் குணம் புரியவில்லையா..?"என்ற தந்தையை அடிப்பட்ட குழந்தையாய் நிமிர்ந்து பார்த்தான் மிகன்.



" தம்பி உன்னை நம்பி வந்தவளை நீ தான் பார்த்துக்கணும்.நீரன் குணம் மோசம்ன்னு எனக்கு எப்பவோ தெரியும். உன் அத்தைக்காக நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.ஆனால், நான் இத்தனை நாள் பொறுத்திருந்தது தப்புன்னு இப்ப தோணுது . அவனால் என் மகனின் வாழ்க்கையே இப்ப கேள்விக் குறியாகிடுச்சே..?" என்று கலங்கிப் பேசிய வரை திகைத்துப் பார்த்தான் மகன்.



" தம்பி நீ தான்ப்பா என் உயிர் ! உனக்காக தான் நான் வாழ்வதே..! திகழியுடன் நீ சந்தோஷமா வாழனும் ..! அதை நான் பார்க்கனும்..! என் பேரன் பேத்தியை எல்லாம் நான் பார்த்ததுட்டு தான் உங்கம்மா கிட்ட போகனும்ன்னு நினைச்சேன். ஆனால் நீ என்னை இப்பவே போகவச்சுடாதே..!" என்றவரிடம்..மகனோ "அப்பா.." என்றான் குரல் தழுதழுக்க..



"தம்பி என்ன பிரச்சினை இருந்தாலும் ,முதல்லே நீ போய் திகழியை இங்கே கூட்டிட்டு வா..! நம் வீட்டிற்கு வாழ வந்த பொண்ணு ! கண் கலங்கிட்டு அவங்க வீட்டுக்கு போனா? அது நல்லதில்லை ..! அந்த பாவம் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .."என்றார் வருத்தத்துடன்..




மகனோ பதில் பேச முடியாமல் "அப்பா ..!"என்று குழந்தை போல் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டான்..



அவரோ, ஆறுதலாக மகனை தட்டிக் கொடுத்தபடி "இங்க பாருப்பா உன் மனசை நீரன் ஏதோ சொல்லி கெடுத்து வச்சு இருக்கான். போனவனைப் பற்றி பேசி இனி பயனில்லை..நீங்க வாழவேண்டியவங்க ! திகழி தான் உனக்கு ஏத்த பொண்ணு.! .என்ன பிரச்சினை இருந்தாலும் அவ கிட்ட பேசி சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா..!"என்றார் கட்டளையாக..



அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன்,அதற்கு மேல் தாங்க முடியாமல் தந்தையிடம் தன் மனதிலிருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தான். தன் அத்தை வந்து சொல்லிச் சென்ற உண்மைகளையும் சொன்னான்.



உலகமாறனோ, அதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்! தான் நினைத்ததை விட பிரச்சினை பெரிதாக இருக்கே..என்று நினைத்தார்.



தன் தங்கையை இங்கே அழைத்தே வந்து இருக்க கூடாதா ? என்று முதல் முறையாக எண்ணியவர் மகனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்..


" தம்பி நான் உன்னை புத்திசாலின்னு நினைச்சேனே ! ஆனால், நீ இப்படி ஒரு அடி முட்டாளாக இருந்திருக்கியே ! திகழி கேட்டதில் என்ன தப்பு? நீரன் சொன்னதை நம்புனீயே! ஒரு முறையாவது திகழியிடம் என்ன நடந்ததுன்னு கேட்டாயா? விசாரிச்சீயா? கட்டிய மனைவியை நம்பவில்லை!எவனோ சொன்னதை நம்பி உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுட்டீயே..!" என்றார் கோவமாக..



தந்தையின் கோபத்தைக் கண்டு "அப்பா.."என்றான் எழுப்பாத குரலில்..



அவரோ ,"நான் தான் தப்பு பண்ணிட்டேன்..உங்க அம்மா போனபின் நான் இன்னும் உன்னை சரியாக கவனித்து இருக்கனும். அம்மா பாசத்திற்கு நீ ஏங்க கூடாதுன்னு உங்க அத்தையை இங்கே கூட்டி வந்து தப்பு பண்ணிட்டேன்.நீரனைப் பற்றியும் எதுவுமே தெரியாமல் இருந்து விட்டேன். புத்திர பாசத்தில் உங்க அத்தையும் எல்லாத்தையும் மறைச்சுட்டா..இனி யாரை குறை சொல்லி என்ன செய்ய..உன் வாழ்க்கை உன் பொறுப்பு ! இனியாவது போய் உன் பொண்ட்டாட்டியை கூட்டிட்டு வந்து ஒழுங்கா குடும்ப நடுத்துற‌ வழியைப் பாரு !"'என்று மகனுக்கு புத்தி சொன்னார்.



அவனோ, தலை குனிந்த படியே அமர்ந்திருந்தான்.தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க கூட அவனுக்கு தைரியம் வரவில்லை ..



மகன் அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "நீயெல்லாம் என்னத்தே காதலிச்சையோ தெரியலே.."என்று சலித்துக் கொண்டே எழுந்தார்.



அவனோ "அப்பா.." என்றான் வேறு எதுவும் பேசாமல்..


"செய்யறதை எல்லாம் செய்துட்டு அப்பா..அப்பான்னா என்ன அர்த்தம்..எழுந்து போய் முதல்லே திகழியே கூட்டிட்டு வா.." என்று எரிச்சலுடன் பேசியவரிடம்..


"அப்பா நான் எந்த முகத்தை வைத்துட்டு போறது எனக்கு கஷ்டமா இருக்கு பா.."


" எந்த முகத்தை வச்சுட்டு போறதுன்னா ? இந்த முகத்தை வச்சுட்டுத் தான் போகனும்.. உப்பு திண்ணா தண்ணீ குடிச்சுத் தான் ஆகனும்.. போய் அவ கையிலே ! கால்லே ! விழுந்தாவது கூட்டிட்டு வா!" என்றார் சற்று கோபமாக..



மிகனோ, பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் இனியும் அமைதியாக இருந்தால் அப்பாவுக்கும் கோபம் வரும் என்று எண்ணியபடி "சரி போறேன்..! "என்றான் தந்தையிடம் சமாதானமாக..



"ம்..! "என்றவர் ஒரு நெடிய பெரூமூச்சுடன் அறையை விட்டுச் சென்றார்.



மிகனோ, அதன்பிறகு வேகமாக கிளம்பி தன் வண்டியை எடுத்துக் கொண்டு, மாமனார் வீடு நோக்கிப் பறந்தான்.



திகழொளி வீட்டிற்கு பெட்டியுடன் வந்தவுடன் பெற்றவர்களுக்கு புரிந்துவிட்டது..கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை என்று..


தாய், தந்தையிடம் எதுவும் சொல்லாமல் தன் அறையில் தஞ்சம் புகுந்துந்தவள் ! தம்பியிடம் மட்டும் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.



அமுதனோ, தமக்கை சொன்னதைக் கேட்டவுடன் வானுக்கும், பூமிக்கும் குதித்தான்.


"அந்த ஆளு திருந்தவே மாட்டாரா? அன்னைக்கே அந்த ஆளை நம்பாதேனேன்னு சொன்னேன் கேட்டீயா? இப்ப நீ தானே கஷ்டப்படறே.." என்று தமக்கையை கடிந்து கொண்டான்.



"அம்மு நானே நொந்து போய் வந்திருக்கேன்! நீயும் என்னைப் நோகடிக்காதே ! என்னால் தாங்க முடியாது.." என்று கண்கலங்கியவளிடம்..



" ஏதோ கோவத்தில் பேசிட்டேன்.. சாரிக்கா ! நீ கவலைப்படாதே எல்லாம் சரியாகும் ,,"என்று அப்போதைக்கு ஆறுதலாக பேசினான்.



திகழொளியோ, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அப்படியே படுத்து கண்களை மூடிக்கொணடாள்..



அமுதனும் அவளை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியில் வந்தவன்‌, கவலையாக அமர்ந்திருந்த தாய், தந்தையிடம் "சின்ன சண்டை தான் சீக்கிரம் சரியாய்டும்.." என்று பொய்யுரைத்தான்.இப்போதைக்கு அவர்களையும் வேதனைப்படுத்த வேண்டாமென்று..



திகழொளியோ ,இருட்டும் வரை அப்படியே தான் படுத்திருந்தாள்..



அமுதனுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல், தலையில் கை வைத்தபடி வெளியில் மாடி படிக்கட்டில் அமர்ந்திருந்தான்.



அப்போது மிகன் வேகமாக வந்து வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். வண்டிச் சத்தம் கேட்டு எழுந்த அமுதன் மிகனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் சென்று "நில்லுங்க ! இப்ப எதுக்கு இங்கே வந்து இருக்கீங்க..?" என்றான் கோபமாக..


"அமுதா உங்கிட்ட இப்ப எதுவும் பேசற மனநிலையில் நான் இல்லை..நான் உடனே உங்க அக்காவே பார்த்துப் பேசனும்..!"


"எதுக்கு இன்னும் அவளை சாவடிக்கவா..?ஏன் இப்படி அவளை உயிரோடு கொல்றீங்க..? உங்களே காதலிச்சதை தவிர அவ வேறே என்ன தப்பு செய்தா..?"


"அமுதா நானே நொந்துபோய் வந்து இருக்கேன்! நீயும் என்னை நோகடிக்காதே..! ப்ளீஸ் வழி விடு! நான் திகழியை இப்ப பார்த்தே ஆகனும்! என்னை நம்பு! இனி உங்க அக்காவை நான் என் கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பேன்..!"என்றான் மிகன்..



அமுதனுக்கோ, மிகனின் கண்களில் தெரிந்த வலி மனதை ஏதோ செய்ய..எப்படியோ அக்கா நல்லா இருந்தா போதும்! என்று வழி விட்டவன்.. "அக்கா அவ ரூம்லே இருக்கா.." என்றான்.



அதை கேட்டு தலையை ஆட்டிவிட்டு வேகமாக உள்ளே செல்ல திரும்பிய மிகனை "ஒரு நிமிடம்!" என்று தடுத்து நிறுத்திய அமுதன்..


"நீங்க சொல்றது உண்மைன்னு இப்ப கூட நம்பி அக்காவை பார்க்க அனுப்புறேன். ஆனால், மறுபடியும் எங்க அக்கா கண்ணுலே தண்ணீயே பார்த்தேன்! நான் மனுசனா இருக்க மாட்டேன்.."என்று எச்சரித்தான்.



மிகனோ, ஒரு நொடி கண்களை இறுக மூடித்திறந்தவன் பதிலே பேசாமல் உள்ளே சென்றான்.



வரவேற்பறையிலிருந்த பொன்னியும், அறவாணனும் தங்கள் மாப்பிள்ளையை அந்த நேரத்தில் பார்த்து திகைத்தாளும்‌, எதையும் காட்டிக் கொள்ளாமல் இன் முகமாகவே வரவேற்றனர்.


அவர்களிடம் "திகழி எங்கே..?" என்று கேட்டான்..


அவர்களோ " அவ ரூமுலே இருக்கா தம்பி" என்றனர்.


"நான் திகழியை பார்த்துட்டு வரேன்‌!" என்று மாமனார் மாமியாரிடம் கூறியவன், அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் மனைவியின் அறைக்குச் சென்றான்.


திகழொளியோ, வாடிய கொடியாய் சுருண்டு படுத்திருந்தாள்.அவள் கண்களில் நீர் மட்டும் அருவியாக வடிந்து கொண்டிருந்தது.



அறைக்குள் சென்ற மிகன்‌, மனைவி இருந்த நிலையை கண்டு தன்னையே நொந்து கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்.



மனைவியிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு, அவள் கண்களில் வடிந்த கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான்..



கணவனின் ஸ்பரிசம் பட்டவுடன் விழிகளை சட்டென்று திறந்தவள், கணவனை அந்த நேரத்தில் அங்கு கண்டவுடன் அடித்தபிடித்து எழுந்து அமர்ந்தாள்.



மிகனோ, "ஒளி.." என்று அழைத்தவனுக்கு, அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை..எங்கே ஆரம்பித்து எப்படி பேசுவது என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை..



இது கனவா? நனவா? என்று புரியாமல் திகைத்து பார்த்த மனைவியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், "ஒளி சாரி டா..சாரி டா.." என்றான்..


அவளோ ,எந்த வித எதிர்வினையும் ஆறாறாமல் சிலையாக அமர்ந்திருந்தாள்..


தொடரும்..

Hi friends,

உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 32 போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த அத்தியாயம் புதன்கிழமை..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Girija priya

Member
Messages
31
Reaction score
31
Points
18
Migan....Yentha mugatha vachikitu avala parka poradhu....
Mindvoice.... Mask pottu po😏
Ippadi azhudha udane mannichidanuma.....mudiyadhu ... mudiyadhu 😏Nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
Migan....Yentha mugatha vachikitu avala parka poradhu....
Mindvoice.... Mask pottu po😏
Ippadi azhudha udane mannichidanuma.....mudiyadhu ... mudiyadhu 😏Nice intresting ud sis ❤️
Thank you dear 😘
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 33


மிகனுக்கு மனைவியின் அமைதி மனதிற்குள் பெரும் பிரளயத்தையே கொடுத்தது.


செய்வதறியாமல் அவளின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு "ஒளி ரீயலி சாரிடா ..உங்கிட்ட மன்னிப்பு கேட்கும் அருகதை கூட எனக்கில்லை.."என்றான் தாளமுடியாத துக்கத்துடன்..



திகழொளியோ, கணவன் பேசியதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை..சில நிமிடம் அப்படியே அமைதியாகவே இருந்தாள்..



மிகனோ, சிறிது நேரம் அவளை அணைத்தபடியே இருந்தான். அவனுக்கு அந்த அணைப்பு மிகவும் தேவைபட்டது.திகழொளியோ சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.



மிகனுக்கு மனைவியின் விலகலும், அமைதியும் பெரும் வலியை கொடுத்தது. இருந்தும் மனைவியிடம் என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்று நினைத்து ஒரு நெடிய மூச்சுடன் பேச ஆரம்பித்தான்.



"திகழி யார் என்ன சொன்னாலும், நான் உன்னை நம்பியிருக்கனும்!ஆனால், நான் நம்பாமல் பெரிய தப்பு செய்துட்டேன்.. அதற்காக உங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கிறேன்.. ப்ளீஸ் டா என்னை மன்னிச்சுடு.. "என்றான்.



திகழொளியோ, இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.



"ப்ளீஸ் திகழி ஏதாவது பேசு டா..இப்படி அமைதியா இருந்தா எனக்கு பயமா இருக்கு.. என் கூட சண்டையாவது போடு ! இல்லே நாலு அடி கூட அடி ! ஆனால், அமைதியா மட்டும் இருக்காதே என்னால் தாங்க முடியலே டா.."என்றான் அவளின் கைகளைப் பற்றிய படி..




அப்போதும் திகழொளி மெளனமாகவே இருந்தாள்.



மிகனோ , " ஒளி என் தப்பை நான் இப்போது தான் உணர்ந்தேன் டா.. என்றவனிடம் அதுவரை அமைதியாக இருந்தவள், அவனை ஏறெடுத்துப் பார்த்தபடி "என்ன திடீர் ஞானோதயம்.." என்றாள்..



"அத்தை தான் எல்லா உண்மைகளும் சொன்னாங்க..இது எதுவும் தெரியாமல் இத்தனை நாளாக நான் தான் பெரிய முட்டாளாக இருந்து இருக்கேன்.." என்றவனிடம்..



அவளோ சலனமே இல்லாமல் "ஓ ..! அப்போ இப்பவும் என்னை நம்ப உங்க அத்தை தான் காரணம். அவங்க சொன்னதால் தான் என்னை நம்பியிருக்கீங்க..இன்னும் என்னை நம்ப இன்னொருவருடைய வார்த்தை தான் உங்களுக்கு தேவைப்படுது.."



"அச்சோ !ஒளி அப்படி இல்லை.. அத்தை சொல்லும் போது தான் எனக்கே நிறைய உண்மை புரிஞ்சுச்சு.."



"போதும் மிகன் ! இதுக்கு மேலேயும் என்னை கொல்லாதீங்க.. கட்டுன பொண்டாட்டியை நம்ப மத்தவங்க வார்த்தை தேவைப்படுது.. இதை கேட்டு என் மனசு எப்படி குளிந்து போச்சு தெரியுமா..?"



"திகழி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டா.."


"எனக்கு இப்ப தான் நல்லா புரியுது..உங்க அத்தை சொல்லலேன்னா காலத்துக்கும் என் மீது நம்பிக்கை வந்து இருக்காது அப்படித் தானே..?"



" அப்படி இல்லை டா..உன்னே என் உயிரா நினைச்சு இருந்தேன்..நீ எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைத்து இருக்கும் போது.. நீரன் வந்து நீயும் அவனை விரும்பி ஏமாத்திட்டேன்னு சொல்லி அழுததை பார்த்து என்னால் தாங்க முடியலே டா..அதுவும் ஆதாரத்தோடு அவன் சொல்லும் போது என்னால் நம்பாமல் இருக்க முடியலை.." என்றவன் நீரன் செய்ததை ஒண்ணு விடாமல் சொன்னான்..



திகழொளியோ, அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டவள்."ஏன் மிகன் நீங்க நேசிச்ச பொண்ணை வேறொருத்தன் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா.?ஆதாரம் உண்மை தானா என்று யோசிக்க மாட்டீங்களா? ஏன் ஒரு முறையாவது என்னை கேட்டீங்களா? இல்லை உண்மை என்னன்னு விசாரிச்சீங்களா? சொல்லுங்க.." என்றாள் தாங்க முடியாத ஆதங்கத்துடன்..



"திகழி நீ கேட்கிறது எல்லாம் கரெக்ட் தான்..ஆனால், நான் தான் அறிவில்லாமல் கேட்பார் பேச்சு கேட்டு முட்டாள் தனமா நடந்து கொண்டேன்..என்னை மன்னிச்சுடு டா இனி எப்போதும் நான் அப்படி நடந்துக்க மாட்டேன்.."



"எப்படி நம்பறது மிகன்.உங்க அத்தை வந்து சொல்லலேன்னா இன்னும் நம்பியிருக்க மாட்டீங்க..காதல்லே நம்பிக்கை தான் முக்கியம்..அந்த நம்பிக்கை என்மீது உங்களுக்கு ஒரு சதவீதம் கூட இல்லை..உங்க மனசை தொட்டு சொல்லுங்க ஒரு முறையாவது நான் நீரன் கூட பேசியதை நீங்க பார்த்து இருக்கீங்களா..பதில் சொல்லுங்க.." என்றவளிடம் மிகனோ தலையை குனிந்த படி அமர்ந்திருந்தான்.



"மிகன் நீங்க அத்தனை தூரம் என்னை அசிங்கபடுத்திய பிறகு கூட உங்கள் மீது எனக்கு வருத்தம் வந்ததே தவிர கடுகளவும் வெறுப்பு வரலே..என்றாவது என் மிகன் என்னை புரிஞ்சுப்பார்! நம்புவார் ! என்று காத்திருந்தேன்..ஆனால் கடைசி வரை நீங்க என்னை நம்பலே.."



"இல்லை டா உன்னை அளவு மீறி நம்பினேன்.. நீ எனக்கு துரோகம் செய்திட்டே!என் நம்பிக்கை பொய்த்து போய் விட்டதே! என்று தான் எனக்கு கோபம் வந்தது.."



"நம்புனீங்களா? ஜோக் அடிக்காதீங்க..நம்பிக்கைன்னா என்னன்னு தெரியுமா? உலகமே என்னை குறைசொன்னாலும் அவள் அப்படி செய்திருக்க மாட்டான்னு நம்பி சொல்லனும்! உங்களே யாராவது ஏதாவது சொன்னா நான் நம்புவேனா? என் மிகன் அப்படி செய்ய மாட்டார்ன்னு உறுதியாக நம்புவேன் .."என்றவளுக்கு கண்ணீர் தான் வந்தது.



"திகழி தப்பு தான்! நான் செய்தது மிகப் பெரிய தப்பு தான்! இனி ஒரு போதும் இப்படி நடந்துக்க மாட்டேன் டா.."



" எப்படி உங்களை நம்பறது மிகன் !நாளைக்கு வேலை செய்யற இடத்துலே எவனாவது ஏதாவது சொன்னா அப்பவும் இப்படிதான் நம்புவீங்க! குற்றவாளின்னு நீங்களே தீர்மானீச்சு தண்டனையும் தருவீங்க..!"



"ஏய் திகழி இப்படி எல்லாம் சொல்லாதே என்னால் தாங்க முடியலே டா.."


"ஒரு வார்த்தை நான் சொன்னதே தாங்க முடியலேன்னா? இத்தனை வருசம் என்னை எத்தனை பேசி இருப்பீங்க..அத்தனையும் தாங்கிட்டு இன்னும் உங்களே நேசிச்சுட்டுத் தானே இருந்தேன்..! என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அன்றே உங்களை வெறுத்திருப்பாங்க..ஆனால் நான் ஒரு நாள் கூட உங்களை வெறுக்கவும் இல்லை..மறக்கவும் இல்லை..உங்களை அவ்வளவு நேசித்தேன்.ஆனால், என் நேசத்திற்கு நீங்க கொஞ்சம் கூட தகுதியே இல்லைன்னு நிருபீச்சுட்டீங்க.."


"திகழி ! ப்ளீஸ் டா அப்படி எல்லாம் பேசாதே .. நானும் உன்னை என் உயிர்க்கு மேல் நேசிக்கிறேன்.. இத்தனை வருடத்தில் உன்னை ஒரு நாள் கூட நினைக்காமல் இருந்தது இல்லை..உன்னை மீண்டும் பார்த்த பொழுது என் உயிரே எனக்கு திரும்பி கிடைச்சது போல் இருந்துச்சு..இதுக்கு மேலும் உன்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு தான் அவசரப்படுத்தி மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்..எனக்கு நீ வேணும் டீ..காலம் பூரா உங்கூட சந்தோஷமா நான் வாழனும்.."என்றவனிடம்..


"எந்த நம்பிக்கையில் உங்க கூட வாழ முடியும்..? போதும் மிகன்..என்னால் இதுக்கு மேல் தாங்க சக்தி இல்லை..நாம் பிரிஞ்சுடலாம் அது தான் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது.."


"அப்படி சொல்லாதே! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது ..என் அவசர புத்தியால் எல்லாமே தப்பா போச்சு..இனி அப்படி எப்போதும் நடக்காதுன்னு நான் உனக்கு உறுதி கொடுக்கிறேன்..ப்ளீஸ் டா என்னை நம்பி வா! நம் வீட்டுக்கு போகலாம்.."


"மிகன் என்னால் முடியாது..நான் எங்கேயும் வரலே..போதும் நான் பட்டது எல்லாம். எங்க வீட்லே கூட உங்களை வேண்டாம்ன்னு சொன்ன போது ! நீங்க தான் வேணும்ன்னு நான் என் பெற்றவர்களை எதிர்த்து நின்றேன்.. ஆனால் நீங்க? வேண்டாம் மிகன்! இனி திருப்பி திருப்பி அதையே பேச எனக்கு விருப்பம் இல்லை..போதும் என்ன‌ விட்டுடுங்க..நான் இப்படியே இருந்துக்கிறேன்.."



"திகழி ப்ளீஸ் டா எனக்கு ஒரு வாய்ப்பு கொடு டா."


"நான் எத்தனை முறை கேட்டேன் நீங்க எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தீங்களா..?"


"திகழி வார்த்தையால் என்னை கொல்லாதே! நான் தான் ஒத்துக்கிறேனே நான் செய்தது மிகப்பெரிய தப்புன்னு என்னை மன்னிக்க மாட்டீயா?"



"மிகன் உங்களை மன்னிக்க நான் யார்?எனக்கு என் மீதே வெறுப்பா இருக்கு..மனசு விட்டுப் போச்சு ..போதும் எனக்கு இப்ப நிம்மதி தான் வேண்டும்.என்னை விட்டுடுங்க ப்ளீஸ்..!" என்றவளை..பார்த்தவனுக்கு உயிரே போய்விட்டது.அவள் தன்னை இந்தளவு வெறுத்து விட்டாளோ? என்று நினைத்தவனுக்கு மனம் வலியில் துடித்தது..



ஒரு நிமிடம் கண்களை இறுக முடித் திறந்தவன் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டு ." என்னால் இனி உன்னை பிரிந்து வாழவே முடியாது ..ஆனால் உன் நியாமான கேள்விக்கு எங்கிட்ட எந்த பதிலும் இல்லை..நீ என்னை மன்னிச்சு ஏற்கும் வரை நான் காத்திருப்பேன்..இத்தனை நாள் உன்னை கஷ்டபடுத்தியதே போதும்..இனி எனக்கு உன் நிம்மதி தான் முக்கியம்..ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன்! இனி எந்த சூழ்நிலையிலும் உன்னை நான் நம்புவேன் இது உறுதி..!"என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்..அவள் முகத்தை கைகளில் ஏந்தி "நீ என்னை மன்னித்து ஏற்கும் வரை நான் எத்தனை நாள் ஆனாலும் காத்திருப்பேன்.." என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவளை விட்டுக் கிளம்பினான்..


அவனின் கண்களில் உயிரே இல்லை..வெறுமை தான் தெரிந்தது.. கையில் கிடைத்த சொர்க்கத்தை இழந்து விட்டோமே !என்று அவன் மனம் ஊமையாக அழுதது.



ஆனாலும், அவளின் நிம்மதி தான் முக்கியம் என்று புரிந்தது..ஆழமான நேசத்தில் விட்டுக் கொடுப்பதும் அன்பு தானே! அவளுக்காக அவளை விட்டுக் கொடுத்தான்..நமக்கு அதிகம் பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காக..நிம்மதிக்காக நாம் விலகி இருப்பது கூட சில சமயம் நல்லது தான்..சில நேரங்களில் தேவையான இடைவெளி

கூட அன்பையும், புரிதலையும் அதிகரிக்கச் செய்யும்..


அவளை வற்புறுத்தினால் இன்னும் அவளுக்கு தன் மீது வெறுப்பு தான் வரும்..என்று நினைத்து அமைதியாக சென்றான்.




இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்து இருக்கிறார்கள்.அந்த அன்பே அவர்களை சேர்த்து வைக்கும் என்று நம்பினான்..அவள் மனம் மாற காத்திருப்போம் என்று நினைத்துக் கிளம்பினான்..



திகழொளியோ, கணவன் சென்றபின் தேற்றுவாறற்று அழுது கரைந்தாள்.



பெற்றவர்களுக்கும், அமுதனுக்கும் புரிந்து விட்டது இந்த சண்டை இப்போது முடியாதென்று..



ஓய்ந்து போய் வீடு வந்த மகனின் முகத்தைக் கண்டதுமே தெரிந்துவிட்டது உலகமாறனுக்கு மருமகள் என்ன சொல்லி இருப்பாளேன்று..!



தந்தையைக் கண்டதும் மிகன் அவரை அணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் மெளனமாக நின்றான்.அவன் மனதில் சொல்ல முடியாத வலி!



மகனின் நிலை புரிந்து தட்டிக் கொடுத்தவர்.. "எல்லாம் சீக்கிரம் சரியாகும் மனம் தளராதே தம்பி.."என்று மட்டும் சொன்னார்.



மிகனோ தந்தையிடம் தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்று படுத்தவனுக்கு வாழ்க்கை பூதாகரமாக தெரிந்தது.



அடுத்தது என்ன செய்யப் போறோம்ன்னு தெரியாமல் அவன் மனம் முழுவதும் வெறுமையே நிறைந்திருந்தது..



திகழொளி கேட்ட கேள்வி எல்லாம் அவனை வாள் கொண்டு அறுத்தது.

முன் புரியாத உண்மையும்..அவள்‌பக்க நியாயமும் அவனைச் சுட்டது.



உலகமாறனோ, மகனின் நிலை கண்டு மனம் தாள முடியாமல் மனைவியின் நிழற்படம் முன் நின்று கண்ணீர் சிந்தினார்..



'நான் எங்கேயோ ஏதோ தப்பு செய்துட்டேன் மா.. இனியாவது அவன் வாழ்க்கை சரியாக ஏதாவது வழி காட்டுமா !'என்று மனதார வேண்டி நின்றார்.

.


மகன் மாமானார் வீடு சென்றதும் தன் தங்கையை அழைத்து அவர் மனதில் தோன்றிய கேள்விகளைத் தாள முடியாமல் கேட்டே விட்டார்.



மணியரசியோ ,அண்ணன் கேட்டதும் உடைந்து போய் அழுது கொண்டே தன் தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.



ஆனால் உலகமாறனோ, அதன் பிறகு பதில் பேசவே இல்லை..இனி பேசி என்ன பயன் என்று நினைத்தார்..



ஆனால் மணியரசியோ அண்ணனின் முகத்தை பார்க்கவே கூசிப்போனார்..தன் தவறின் வீரியத்தை அப்போது தான் அவரே உணர்ந்தார்..


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

New Threads

Top Bottom