Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed எல்லையில் ஒரு எத்தன்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 21



"பத்மாவதி “



"சொல்லுங்கள்.”



"அதோ மேற்கில் மறைகிறானே பகலவன். அவன் மறையும் போது வானத்திற்கு சிவப்பு வண்ணத்தை பூசி செவ்வானமாக்கிவிட்டு மறைகிறான். அதைப் பார்க்கும் போது எனக்கு உன்னுடைய சிவந்த கன்னம் தான் நினைவுக் கு வருகிறது.இனி நான் எப்போது இந்த செவ் வானத்தை கண்டாலும் என் மனம் உன்னைத்தான் நினைக்கும் “



"காதல் பேச்சில் நீங்கள் வல்லவர்தான். இல்லையென்றால் பன்றி வேட்டையாட வந்த நீங்கள் குறுகிய காலத்தில் கன்னி வேட்டையில் இறங்குவீர்களா?”



"அந்த வேட்டையில் நான் வென்று விட்டேன். இந்த கன்னி வேட்டையில் தான் நான் வென்றேனா இல்லையா என்று தெரியவில்லை.”



"கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு வரும் நான் சாமியை சந்திக்க செல்லாமல் இந்த ஆசாமியை சந்திக்க வரும் போதே தெரியவில்லையா? நீங்கள் கன்னி வேட்டையில் வெற்றி ஈட்டியது. “



"பூடகமாக பேசி என் பொறுமையை சோதிக்காதே பத்மாவதி .உன் பவள வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்.அத்தான் என்ற சத்தான சொல்லில் செத்தான் இந்த அபயவர்மன்.”



" நீங்கள் நாளைய கடம்பத்தின் அரசர். நானோ மலை சாதிப்பெண் .? நாம் இருவரும் எப்படி?”



"வாழ்க்கையில் ஒன்று சேர முடியும் என்று தானே கேட்க வருகிறாய்? என் விருப்பத்திற்கு என் தந்தை எப்போதும் தடை போட மாட்டார். உன் விசயத்தில் அப்படி ஏதாவது தடை வந்தாலும் அதை தகர்த்து உன் கையை பிடிப்பான் கடம்பத்தின் இளவரசன்”



"உங்களின் அந்தஸ்திற்கு நீங்கள் முல்லைவனத்தின் இளவரசியைத் தான் மணம் முடிக்க வேண்டும்”



“உன்னை விடவும் பேரழகியா அவள்?”



"என்னை விடவும் அவள் அழகாக இருந்தால் என்னை விட்டு சென்று விடுவீர்களா?”



' என் கண்களுக்கு எப்போதும் நீ பேரழகி தான். உன்னை விட வா அந்த ரத்ன மாலா பெரிய அழகியாக இருந்து விடப் போகிறாள்?”



"அவள் என்னை விடவும் அழகு மட்டும் தான். அவளது எத்துப் பற்களை வைத்து ஒரு விருந்திற்கே தேங்காய்களை சுரண்டி விடலாம்”



"அவ்வளவு கோரமாகவா அவள் இருக்கிறாள்?”



"இன்னமும் சொல்லவா? அவளைப் பற்றி.”



"இந்த இன்பகரமான நேரத்தில் அவளைப் பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும். எங்கே என் அருகில் வா”



பத்மாவதி அபயவர்மனை கட்டி அணைத்த போது அவனை யாரோ தட்டி எழுப்பினார்கள்.



கொட்டடியில் இருந்த கைதிகள் அபயவர்மனை சுற்றி வட்ட வடிவமாக நின்றிருந்தனர்.



"இளவரசே! நம் கொட்டடியில் 5 பேர் எதிரிகளின் சித்ரவதை தாங்காமல் இறந்து விட்டனர். மக்களை காப்பாற்ற வேண்டிய நீங்கள் இறந்து போன ஓரு பெண்ணின் நினைவில் மூழ்கி உங்கள் கடமையை மறந்து விட்டீர்கள். நாளை நம்மில் எத்தனை பேர் சாகப்போகிறோம் என்று தெரியவில்லை." என்றான் அவர்களில் ஓருவன்.



" நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.? நான் சாகத் துணிந்து விட்டேன். உங்கள் அனைவரையும் தப்பிக்க வைத்துவிட்டு மரண தேவியை அணைத்து கொள்கிறேன்." என்றான் அபயவர்மன் வேதனையுடன் .



"மகேந்திரனின் வேண்டுகோளை நீங்கள் ஏற்காவிட்டால் நாம் யாரும் இங்கிருந்து உயிருடன் ேபாக முடியாது. குறைந்த பட்சம் நீங்கள் இங்கே அடைபட்டு கிடப்பது கடம்பத்திற்கு தெரிந்தாலாவது நமக்கு விடிவு காலம் பிறக்கும்." என்றான் இன்னொருவன்.



" அதற்கு இங்கிருந்து யாராவது உயிரோடு வெளியேற வேண்டுமே? இங்கிருந்து வெளியேற மரணத்தை தவிர வேறு வழியில்லை.”



"ஓரு கள்வனெல்லாம் சவால் விட்டு சிறையிலிருந்து தப்பி செல்லுமளவிற்கு கடம்பத்தின் நிலமை தாழ்ந்து போய்விட்டது”



"தாயகத்தின் பெருமையை கட்டி காப்பாற்ற வேண்டிய இளவரசரோ காதலில் மூழ்கி குடி மக்களை காக்கும் கடமையிலிருந்து தவறி பிதற்றி கொண்டிருக்கிறார்”



"போதும் நிறுத்துங்கள்.உங்களை காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதற்கு நம்மில் யாராவது இங்கிருந்து தப்பித்து எல்லையோர மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும்.” என்றான் அபயவர்மன் கோபத்துடன் .



"எங்களில் ஓருவர் தப்பித்தாலும் நீங்கள் இங்கே பணயக் கைதியாக அடைபட்டு கிடப்பீர்கள். அது அனைத்து முயற்சிகளையும் முனை மழங்க செய்து விடும். நீங்கள் இங்கிருந்து தப்பி செல்வதே சரியானது.”



"காதல் எண்ணத்தில் மூழ்கி கிடந்த எனக்கு என் கடமையை நினைவுட்டி விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.! இனி நாம் இங்கிருந்து தப்பி செல்வதைப் பற்றி யோசிப்போம்." என்றான் அபயவர்மன்.



மற்றவர்களின் முகத்தில் மலர்ச்சி பரவியது.



" ஆனால் ஓரு விசயத்தை நான் நினைவு படுத்துகிறேன். இங்கிருந்து உங்களை நான் மீட்ட பின்பு என்னுடைய முடிவில் யாரும் தலையிடக் கூடாது" என்றான் அபயவர்மன்.



அனைவரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டு தலையசைத்தனர்.



"இந்த வேலையை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன் பத்மாவதி " என்றான் கலக்கத்துடன் அபயவர்மன்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 22



சத்திரத்திலிருந்து மல்லனும், பாலனும் தங்கள் குதிரைகளோடு புறப்பட்டு போன பின்பு அருகிலிருந்த அறையிலிருந்து நான்கு பேர் வெளி வந்தனர்.



"கவனித்தாயா? நேற்று இரவு முழுவதும் அந்த முரடன் அறைக்குள் தூங்காமல் வெளியே படுத்து கொண்டிருந்தான்." என்றான் அவர்களில் ஒருவன் -



" அவன் தலைமாட்டில் வாளை வைத்திருப்பதை நான் கவனித்தேன். அந்த ஒற்றை நாடி மனிதன் அறையில் பாதுகாப்பாக இருந்தான். இரவு முழுவதும் அவன் வெளியே வரவேயில்லை." என்றான் இன்னொருவன்



"அப்படியானால் அந்த ஒற்றை நாடி நபரிடம் விலை உயர்ந்த பொருள் ஏதாவது இருக்க வேண்டும். இந்த காட்டு பன்றி அவனுக்கு துணையாக வந்திருக்க வேண்டும்.”



"அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அவனை வீழ்த்தி விட்டால் போதும். ஓற்றை நாடியிடமிருக்கும் அந்த விலை மதிப்பு மிக்க பொருள் நம்மிடம் வந்துவிடும்.”



"அவர்கள் மலை கோட்டையை நோக்கி போவதாக தெரிகிறது.”



“அப்படித்தான் அந்த கடோத்கஜன் நேற்று இரவு சத்திரத்து நிர்வாகியிடம் சொன்னான். அதை நான் என் இரண்டு காதுகளால் கேட்டேன்.”



"பிறகென்ன? நாம் வேட்டையை ஆரம்பிப்போம். கிடைத்ததை சுருட்டி கொண்டு சிட்டாக பறந்து விடுவோம்”



அந்த கள்வர் கும்பல் சத்திரத்திலிருந்து கிளம்பியது. குதிரைகளில் கிளம்பியவர்கள் குறுக்கு வழியில் விரைந்து மல்லனும் பாலனும் வந்து சேரும் பாதையில் இணைந்து காத்திருக்க தொடங்கினர்.



"நாம் நால்வரும் திடிரென பாதையின் நடுவில் தோன்றி வழிமறிக்க போகிறோமா?"



"எதற்கு? குதிரைகள் நம் மீது ஏறி ஓடி நம் சாணியை பிதுக்கவா?” என்று கிண்டலாக பதிலளித்தான் மற்றவன்.



"பிறகு எப்படி அவர்களை மடக்குவது? வேறு உபாயம் ஏதாவது இருக்கிறதா?" என்றான் ஒருவன்.



"நம்மில் ஓருவன் பாதை நடுவே காக்காய் வலிப்பு வந்தவனைப் போல் விழுந்து கிடக்க வேண்டியதுதான். அதை பார்த்து இருவரும் உதவி செய்ய குதிரைகளை விட்டு இறங்கி வருவார்கள். அப்போது மறைந்திருக்கும் நாம் நம் வேலையை காட்ட வேண்டியதுதான்.”



"அதோ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். மலை பாதையில் இன்னும் இரண்டு திருப்பங்களை தாண்டினால் இந்த இடத்திற்கு வந்து விடுவார்கள். ஒருவனைத் தவிர மற்றவர்கள் பதுங்குங்கள்" என்றான் ஓருவன்.



அவர்களில் ஓருவன் சாலை நடுவே படுத்து கொண்டு கை கால்களை வெட்டி வெட்டி இழுக்கத்

தொடங்கினான்.



சாலை நடுவே கிடந்தவனை பார்த்த மல்லன் "பாலா! எச்சரிக்கையாக இரு.சுற்றுப்புறத்தில் ஓரு கண் வை." என்றபடி குதிரையிலிருந்து இறங்கினான்.காக்காய் வலிப்பு காரனை நெருங்கியவன் அவனை கூர்ந்து பார்த்து விட்டு " என்ன தம்பி?வாயில் நுரை வரவில்லை. கையில் இரும்புகாப்பை காணவில்லை. நீ தொழிலுக்கு புதியவனா? ஓளிந்திருக்கும் உன் கூட்டாளிகளை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் இந்த குறுவாள் உன் தொண்டையை அறுத்து விடும்" என்றபடி தன் குறுவாளை எடுத்து காக்காய் வலிப்பு காரனின் கழுத்தில் வைத்தான்.



"அவன் நம் ஆளை மடக்கி விட்டான். நாம் அந்த ஓற்றை நாடியை மடக்குவோம்." அவர்களில் மூவர் பாலனை நோக்கி வாளோடு ஓடி வந்தனர் .பாலனின் கையிலிருந்த சவுக்கு மின்னலாக செயல்பட்டு அவர்களின் கையிலிருந்த வாளை பறித்து தரையில் வீசியது. பாலனின் சவுக்கு வீச்சை வியப்போடு மல்லன் பார்த்து ெகாண்டிருந்த போது காக்காய் வலிப்புக்காரன் மின்னலாக எழுந்து ஓடினான். "அவர்கள் சுதாரித்து விட்டார்கள். தப்பி ஓடுங்கள்" நால்வரும் மறைவிலிருந்த குதிரைகளில் தாவி ஏறினர்.



"அவர்களை தேக்கி நிறுத்த இதை தவிர வேறு வழியில்லை." என்ற கள்வர்களில் ஓருவன் தன் வில்லை வளைத்து அம்பை பாலனை நோக்கி ஏவினான்.



அதைப் பார்த்த மல்லன் “ஆபத்து.! கவனமாக இரு" என்று கத்தினான்.



அவனது குக் குரலை கேட்டு எச்சரிக்கையடைந்த பாலன் தன்னை நோக்கி வரும் அம்பிலிருந்து விலகி தப்பித்தான். குறி தவறிய அம்பு ரத்னபாலனின் தலைபாகையை தாக்கி அதை கீழே விழச் செய்தது.



சில நிமிடங்களில் தலைப்பாகைக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த தலைமுடி அலையலையாக கீழே இறங்கியது. நீண்ட கார் குழலோடு நின்ற இளவரசி ரத்ன மாலாவை பார்த்த மல்லன்" நல்ல வேளை ! உன்னுடைய சுய உருவத்தை அந்த கள்வர்கள் பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒரு பெண்ணிடம் தோற்று ஓடி வந்து விட்டோமே என்று மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்" என்றான்.



சவுக்கை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்ட ரத்ன மாலா குதிரையிலிருந்து இறங்கி தன் தலைப்பாகையை கையில் எடுத்து கொண்டாள்.



"மல்லரே! என் அழகை இழித்தும் ,பழித்தும் பேசி என் நண்பிகளிடமும் என் உறவினர்களிடமும் எனக்கு அவமானத்தை தேடி தந்த அந்த அபயவர்மன் எனக்கு உயிரோடு வேண்டும். இந்த சவுக்கு அவன் முதுகு தோலை உரிக்க வேண்டும். அவனது அலறலை நான் காது குளிர கேட்க வேண்டும்" என்றாள் ரத்ன மாலா.



"கவலைப்படாதீர்கள் இளவரசி! அதற்குத்தான் நான் இருக்கிறேனே?" என்றான் மல்லன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 23



வீரர்கள் அங்கிருந்து போய் விட்டதை உறுதி செய்து கொண்ட ஆதித்தனும், எதிர்காலமும் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வருவதற்கும் குட்டையிலிருந்து “ தண்ணீர் “ என்றதீனமான குரல் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குரல் வந்த திசையை நோக்கிய ஆதித்தன் குட்டையில் விழுந்து கிடந்தவர்களில் ஓருவன் குற்றுயிராக இருப்பதை பார்த்தான். ஆதித்தனின் விழிகளும், குட்டையில் விழுந்து கிடந்தவனின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் ச ந்தித்து கொண்டன.



"பயப்படாதே நண்பா! இரு நான் அங்கு வருகிறேன்" என்ற ஆதித்தன் அவனை சென்று சேர தடையாக இருந்த முட்களை அகற்றி வழி ஏற்படுத்தினான். அதன் வழியாக குட்டைக்குள் நுழைந்தவன் அந்த குற்றுயிராக இருந்த நபரை கைலாகு கொடுத்து தூக்கி கொண்டு கரைக்கு வந்தான்.



குதிரைகளில் தண்ணீர் குடுவைகளை விட்டு வைத்தால் அவற்றை யாராவது திருடி சென்று விடக் கூடும் என்பதால் எதிர்காலம் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் குடுவைகளை எடுத்து வந்திருந்தான். எதிர்காலம் நீட்டிய தண்ணீர் குடுவையை வாங்கிய ஆதித்தன் அதிலிருந்த நீரை அவன் வாயில் ஊற்றினான்.



"இவனது தோற்றத்தைப் பார்த்தால் இவன் கடம்பத்தின் காவல் வீரர்களில் ஓருவனாக இருப்பான் போல் தோன்றுகிறது." என்றான் எதிர்காலம்.



“உங்களின் ஊகம் சரிதான். நான் கடம்பத்தின் காவல் வீரர்களில் ஒருவன் தான். என் பெயர் சித்திரசேனன். நான் உங்களை இளவரசரின் மெய் காவல் படையில் பார்த்திருக்கிறேன்." என்றான் சித்திரசேனன்.



" காணாமல் போன இளவரசரை தேடித் தான் நாங்கள் இங்கு அலைந்து கொண்டிருக்கிறோம்" என்றான் ஆதித்தன்.



"உங்களின் தேடல் முடிவுக்கு வந்து விட்டது. நீங்கள் நினைப்பதுபோல் இளவரசர் காணாமல் போகவில்லை. முல்லைவனத்தின் இளவரசன் மகேந்திரன் அவரை கடத்தி கொண்டு வந்து சிறை வைத்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறான். என்னை இறந்து விட்டதாக கருதி பிணங்களோடு பிணமாக ஏற்றிக் கொண்டு வந்து விட்டனர். எனக்கு மிக நன்றாக தெரியும். என் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருக்கிறது. நான் நீண்ட நேரம் உயிர் வாழ மாட்டேன். எப்படியாவது இளவரசரையும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்.உங்களுக்கு தேவையான விசயங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்" என்றான் சித்திரசேனன்.



"கோட்டையை ஓட்டிய காலி இடத்தை எதற்காக தயார் செய்து வைத்திருக்கிறான் மகேந்திரன்?”



"அது ஆயுத தளவாட கொட்டடி . இங்குள்ள கைதிகளை கசக்கி பிழிந்து அதை கட்ட திட்டமிட்டிருக்கிறான். விரைவிலேயே அந்த கொட்டடி செயல்பட துவங்கி விடும். ஏராளமான ஆயுதங்கள் இங்கேயே தயாராகி விடும் - அது மட்டுமல்ல தனக்கு கீழ்படிந்த சிற்றரசுகளுக்கும், நிலச்சுவாந்தார்களுக்கும் மகேந்திரன் ஓலை அனுப்பி கொண்டிருக்கிறான்.”



“எதற்காக ஓலை?" என்றான் எதிர்காலம்.



"கடம்பத்தின் மீது போர் தொடுக்க சித்தமாகிவிட்டான்.மகேந்திரன்.அதற்காக அவர்கள் வசமிருக்கும் படை வீரர்களை இங்கேஅனுப்ப சொல்லித்தான் உதவி கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறான். இன்னும் கொஞ்ச நாளில் முல்லைவனத்தின் பல பகுதிகளில் இருந்து நிறைய வீரர்கள் இங்கு வந்து குவியப் போகிறார்கள். பிறகு ரத்ன மாலாவை இள வரசர் அவமானப்படுத்தியதை சாக்கிட்டு கடம்பத்தின் மீது முல்லைவனம் படையெடுக்கும். இது தான் மகேந்திரனின் திட்டம். இங்கே மேய்ந்து கொண்டிருந்த பன்றி கூட்டங்களை இங்கிருந்து விரட்டியவனும் அவன் தான் " என்றான் சித்திரசேனன்.



" என்ன சொல்கிறாய் நீ?" என்றான் எதிர்காலம்.



"மலைக்கோட்டையின் கழிவுகள் இந்த குட்டையில் கொட்டப்படுவது தான் வழக்கம்.அதை உண்டு வாழ காட்டு பன்றிகள் இங்கே வருவதுண்டு. எப்போதும் மலை கோட்டையின் தலைவன் இறந்த பிணங்களைஇந்த மரண குழியில் தள்ளுவது தான் வழக்கம். அதனால் பன்றிகள் பல்கி பெருகி வளர்ந்தன. மகேந்திரன் இங்கு வந்த பின் இளவரசரை திரும்ப வர வைக்க இந்த பன்றிகளைப் பயன்படுத்தி கொண்டான். இங்கிருந்த குழியில் முட்களை வெட்டி போட்டு அவற்றிற்கான ஆகாரங்களை கிடைக்காமல் செய்ததுடன் அவற்றை மலை கிராமங்களை நோக்கி விரட்டி விட்டு ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விட்டான்." என்றான் சித்ரசேனன்.



ஆதித்தன் அவனிடம் தனக்கு தேவையான Uல விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டான். தனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் சொல்லி முடித்த நிம்மதியில் தன் இறுதி மூச்சை நிறுத்தி கொண்டான் சித்திரசேனன்.



"இவன் உடலை அடக்கம் செய்து விடலாமா?" என்றான் எதிர்காலம்.



"வேண்டாம். அதற்கு நமக்கு நேரமில்லை. வா போகலாம்" என்றான் ஆதித்தன்.



"இளவரசர் இங்கிருப்பது உறுதியாகிவிட்டது. நான் சென்று மலை கிராமத்தில் உள்ள என் வீரர்களை இங்கே அழைத்து வரவா?”



"வேண்டாம். நாம் இருவரே போதும். இளவரசரை எளிதாக மீட்க என்னிடம் ஓரு யோசனை இருக்கிறது." என்ற ஆதித்தனை வியப்போடு பார்த்தான் எதிர்காலம்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 24



.மகேந்திரன் கையில் ஓலையை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். உள்ளே வந்து வணங்கி நின்ற கோட்டை தலைவனின் வருகையை கூட அவன் கவனிக்கவில்லை. சற்று நேரம் பொறுமையாக நின்று பார்த்த கோட்டை தலைவன் மகேந்திரனின் கவனத்தை கவரும் விதமாக மெல்லதொண்டையை செருமினான்.



அவனது குரலைக் கேட்ட மகேந்திரன் சட்டென்று சுய நினைவிற்கு வந்தான். எதிரே நின்று கொண்டிருந்த கோட்டைத் தலைவனின் மேல் அவன் பார்வைநிலைத்தது. வேறு வழியின்றி மீண்டும் ஒருமுறை வணக்கம் வைத்தான் கோட்டை தலைவன்.



"இந்த ஓலை வந்ததிலிருந்து உங்களின் முகமே சரியில்லை.! எதையோ பறிகொடுத்தது போல் வருத்தமாக இருக்கிறீர்கள்" என்றான் கோட்டை தலைவன்.



"என் குழப்பத்திற்கும், வருத்தத்திற்கும் காரணம் இருக்கிறது ஜெயந்தா .! அரண்மனையிலிருந்த என் அன்பு தங்கை ரத்ன மாலாவை நேற்றிலிருந்து காணவில்லை. தன் அழகை கடம்பத்தின் இளவரசன்பழித்துப் பேசியதால் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்தாள் என் தங்கை. அவளை அவமானப்படுத்தியவனை தண்டிக்கவே அபயவர்மனை நான் கடத்தி வந்தேன்" என்றான் மகேந்திரன்.



"அவமானம் தாள முடியாமல் இளவரசி விபரீதமான முடிவு எதையும் எடுத்துவிடக் கூடாது என்பது தான் என் கவலை." என்றான் ஜெயந்தன்.



"என் தங்கை மிகுந்த தைரியசாலி. ஆண்களைப் போலவே போர் கலையை அறிந்தவள். சவுக்கை கையில் எடுத்தால் மரத்தில் நாம் குறிப்பிடும் ஒரு குறிப்பிட்ட இலையை மட்டும் தனியாக துண்டித்து காற்றில் பறக்க விடுமளவிற்கு திறமைசாலி. அவள் கோழைத்தனமாக எந்த முடிவையும் எடுத்திருக்க மாட்டாள். என்னுடைய கவலை வேறு.”



" என்னவென்று கூறுங்கள். தீர்த்து வைக்க முனைகிறேன்.”



"நான் கடம்பத்தின் இளவரசனை கடத்தி வந்து யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். கடம்பத்தை வம்பிழுப்பதற்காக இந்த பாதையில் செல்லும் அவர்கள் நாட்டு வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறேன். தன் நாட்டு வியாபாரிகளுக்கு ஆபத்தென்றால் உடனே ஓடி வர வேண்டிய நரேந்திர வர்மன் அமைதியாக இருக்கிறான். நம் நாட்டிற்கு எதிரான எதையும் செய்ய மறுக்கிறான்." என்றான் மகேந்திரன்.



"மலைவாழ் மக்களின் வேண்டுகோளுக்காக பன்றிகளை வேட்டையாட தன் மகனை அனுப்பியவர் கடம்ப மன்னர். இப்போது வணிகர்களின் இன்னலை தடுக்க எதையும் செய்யாமல் அவர் அமைதியாக இருப்பது எனக்கு சந்தேகத்தை தருகிறது. உங்கள் கேள்வியும், சந்தேகமும் அர்த்தமுள்ளது.”



" இப்போதாவது என் மனவோட்டத்தை புரிந்து கொண்டாயே? எனக்கென்னவோ புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது " என்றான் மகேந்திரன்.



"நீங்கள் சொல்ல வருவது?” என்றான் குழப்பத்துடன் ஜெயந்தன்.



"நான் அபயவர்மனை கடத்தி வந்தது போல் என் தங்கை ரத்ன மாலாவை அந்த நரேந்திரவர்மன் தன் ஆட்களை வைத்து கடத்தியிருப்பானோ? அதனால் தான் இவ்வளவு அமைதியாக இருக்கிறானோ? என்னவோ?” என்றான் மகேந்திரன்.



"உங்கள் கூற்றில் உண்மையிருக்கிறது. ஆனால் ஓரு பெண்ணை கடத்தி செல்லுமளவுக்கு நரேந்திரவர்மன் தன் நிலை தாழ்ந்து நடந்து கொள்வாெனன்று எனக்கு தோன்றவில்லை. போரில் கூட குழந்தைகள், பெண்கள், வயதானவர்களை கொல்லக் கூடாது என்பது தானே தமிழர் மரபு?" என்றான் ஜெயந்தன்.



"சிந்திக்க வேண்டிய விசயம்தான் நீ கூறுவது. இப்போதைய சங்கடம் என்னவென்றால் அபயவர்மன் காணாமல் போனதை நரேந்திரவர்மன் எப்படி நாட்டு மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறானோ அதே போல்ரத்ன மாலா காணாமல் போனதையும் நாம் மறைக்க வேண்டிய தேவை யிருக்கிறது." என்றான் மகேந்திரன்.



"மணமாகாத ஓரு இளம் பெண் காணாமல் போய்விட்டாலே உலகம் பலவாறாக பேசும். இப்போது இளவரசி காணாமல் போய்விட்டது வெளி உலகிற்கு தெரிந்தால் பலரும் பலவிதமாக பேசுவார்கள். ஊர் வாயை மூட முடியாது.”



" அதனால் தான் யோசிக்கிறேன். ஊர் வாயை மூட முடியாது.ஆனால் எல்லையை மூடி விடலாம்.ரத்ன மாலாவை யாராவது கடத்தியிருந்தால் கடம்ப நாட்டிற்கு இந்த வழியாகத்தான் செல்ல முடியும். அதனால் மலை கோட்டைக்கு வரும் பாதையை தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டு வாருங்கள். நம் கண்காணிப்பை தாண்டி ஒரு ஈ., எறும்பு கூட இங்கிருந்து வெளியேற கூடாது. ரத்ன மாலாவை தேட மன்னர் தீவிரமாக ஆட்களை ஏவி விட்டிருக்கிறார். அதனால் நாம் இப்போதைக்கு அவளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை”என்றான் மகேந்திரன்.



"உங்கள் உத்தரவை நிறைவேற்ற வீரர்கள் அதிகம் தேவை. நம்மிடம் குறைவான எண்ணிக் கையில்தான் வீரர்கள் இருக்கிறார்கள். கைதிகளும் உணவு இல்லாமலும், சித்ரவதையாலும் மரணித்து கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட நான்கு பேர் மரணமடைந்து விட்டார்கள்.”



" நாளை காலை புதிய வீரர்கள் நம் ஓலைக்கு இணங்கி நம் கோட்டைக்கு வந்து சேர்வார்கள். அதன் பிறகு நாம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளலாம்" என்றான் மகேந்திரன்.



ஆதித்தனுக்கான கால அவகாசம் குறைய ஆரம்பித்திருந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 25



பன்றி குட்டையிலிருந்து தங்களின் பழைய இடத்திற்கு வழக்கமான முறையிலேயே பதுங்கி பதுங்கி வந்து சேர்ந்தனர் ஆதித்தனும், எதிர்காலமும்.



"இங்கே இருப்பது நாம் இருவர் மட்டுமே. நம்மால் எப்படி அந்த கோட்டைக்குள் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் இளவரசரை மீட்டு வர முடியும்? கனவில் கூட அது நடக்காது." என்றான் எதிர்காலம் கவலையுடன் .



"மனம் இருந்தால் மார்க்கமுண்டு நண்பனே! இறந்து போன சித்திரசேனன் விலை மதிப்பு மிகுந்த பல தகவல்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறான். அவற்றை மிகச் சரியாக பயன்படுத்தினால் அங்கிருக்கும் அனைவரையும் நம்மால் காப்பாற்றிவிட முடியும்." என்றான் ஆதித்தன்.



"அதை விளக்கமாக சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன். அல்லவா?" என்றான் எதிர்காலம்.



" நாளை மதியம் ஒரு சிறிய படைப்பிரிவு இங்கே வந்து சேரப்போகிறது. அவர்கள் முல்லைவனத்தின் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு ஊரை சேர்ந்த முன் பின் அறிமுகமில்லாத வீரர்கள் ஒரே அணியாக சேர்ந்து இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த கோட்டை உள்ள இடம் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் - இங்கே உள்ளவர்கள் யாரையும் அவர்களுக்கு முன் பின் அறிமுகமில்லை.அதே போலத்தான் கோட்டையில் உள்ளவர்களுக்கும் .அதை நாம் பயன்படுத்தி கொள்வோம்" என்றான் ஆதித்தன்.



"அதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? இங்கே வந்து கொண்டிருக்கும் வீரர்களை நடுவழியில் சந்தித்துமலை கோட்டை இன்னும் தூரத்தில் இருப்பதாக கூறி அவர்களை திசை மாற்றிவிடலாமா?" என்றான் எதிர்காலம்.



"உனக்கும் மூளை கொஞ்சம் வேலை செய்கிறது " என்றான் ஆதித்தன்.



"உன்னுடன் சிறிது நாட்கள் பழகி விட்டேனல்லவா? அது தான் என் மூளையும் உன் மூளையை போலவே சிந்திக்கிறது." என்றான் எதிர்காலம்.



"நீ கூறியது நல்ல யோசனைதான். ஆனால் அதை நாம் செய்ய போவதில்லை." என்று புன்னகைத்தான் ஆதித்தன்.



"வேறு மார்க்கம்?" என்றான் எதிர்காலம்.



" நாளை மதியம் வரும் படைப்பிரிவோடு நானும் இணைந்து கொள்ள போகிறேன். கோட்டையின் உள்ளே பிரவேசிக்க போகிறேன். அதற்கு நீ தான் உதவி செய்ய போகிறாய்" என்றான் ஆதித்தன்.



"நானா ? நான் எப்படி?”



" அதை பிறகு சொல்கிறேன். முதலில் உன் மோதிரத்தை கழற்றி என்னிடம் கொடு”



"அது எதற்கு உனக்கு?" என்றான் எதிர்காலம் குழப்பத்துடன் .



" உன் மோதிரம் தான் எனக்கு சில காரியங்களை சித்தி செய்து தரப்போகிறது." என்றான் ஆதித்தன் -



எதிர்காலம் கழற்றிகொடுத்த மோதிரத்தை தன் விரலில் அணிந்து கொண்டான் ஆதித்தன்.



" சரி. நாம் இருவரும் காலை உணவை அருந்தலாமா?" என்றான் ஆதித்தன்.



"நீ உணவு உண்.நான் கோட்டையை கண்காணிக்கிறேன். பிறகு நான் உண்ணும் போது நீ கண்காணி. உணவை எடுக்கும் போது குதிரைகளின் வாயை கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து விடு. பாவம் வாயில்லா பிராணிகள். எதையாவது அசை போடட்டும்" என்றான் எதிர்காலம்.



அதே நேரம் தொலைதூரத்தில் வந்து கொண்டிருந்தனர் மல்லனும் ரத்ன மாலாவும். தலைப்பாகையை மீண்டும் தலையில் அணிந்து ஆணாக உருவம் மாறியிருந்தாள் ரத்ன மாலா.



“அந்த ஆதித்தனை இந்த கானகத்தில்நாம் எங்கு போய் தேடுவது?" என்றான் மல்லன்.



" அவன் நேற்று மலை கிராமத்தில் தான் இருந்திருக்கிறான். அங்கிருந்த என் தோழி ஓருவள் புறா மூலம் சேதி அனுப்பியிருந்தாள். அவன் மலை கிராமத்திற்கு வந்திருக்கிறான் என்றால் அபயவர்மன் கடம்ப நாட்டில் இல்லை என்று அர்த்தமாகிறது. இந்த கள்வன் மலை கிராமத்திலிருந்து நம் நாட்டு எல்லையை கடந்திருக்கிறான். அதனால் முல்லைவனத்திற்குள் அபயவர்மன் இருப்பதற்கான ஏதாவது ஓரு உறுதியான தடயம் அவனுக்கு கிடைத்திருக்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஓரே பாதை இதுதான். இந்த நேரத்தில் நாம் அவர்களை நேருக்கு நேராக சந்தித்திருக்க வேண்டும்" என்றாள் ரத்ன மாலா.



" கோடை விடுமுறையை கழிக்க இங்கே அடிக்கடி வருபவள் நீ தான். அதனால் இந்த பகுதியை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் உன் யூகங்களை நான் நம்புகிறேன்." என்றான் மல்லன்.



அதே நேரம் மலை காட்டின் நடுவே ஒரு வெளிச்சம் மின்னவாக வெட்டி மறைந்தது.



"மல்லரே! அந்த வெளிச்சத்தை கவனித்தீர்களா?" என்றாள் ரத்ன மாலா.



"கவனித்தேன். அது ஒரு உலோகத்தின் மீது பட்டு எதிரொளிக்கும் சூரியனின் வெளிச்சம். அது அநேகமாக ஒரு வாளாக இருக்கலாம்" என்றான் மல்லன்.



"இல்லை. அதுவொரு தொலைநோக்கி கண்ணாடி குழல்" என்றாள் ரத்ன மாலா.



" அப்படியானால் இந்த மலை காட்டில் கண்காணிப்பவர்கள் யாராக இருக்கும்?" என்றான் மல்லன்.



"வேறு யார் ?நம் பங்காளி ஆதித்தன் தான் " என்றாள் ரத்ன மாலா கண்ணில் பொருத்தியிருந்த தொலைநோக்கு கண்ணாடியை பார்த்தபடி.

எல்லையில் ஒரு எத்தன்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 26



மல்லனும் ரத்ன மாலாவும் தங்களை போலவே காட்டில் மறைந்து நின்று தங்களை கண்காணித்து கொண்டிருப்பதை ஆதித்தனும், எதிர்காலமும் அறியாமல் இருந்தனர். இருவரில் ஒருவர் ஓய்வெடுக்க மற்றொருவர்மலைக்கோட்டையில் நடக்கும் நடமாட்டங்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.



தற்செயலாக பன்றி குட்டையை தாண்டி செல்லும் பாதையை கவனித்த ஆதித்தனின் முகம் மாறியது. அவனது கைகள் எதிர்காலத்தின் தோளை உலுக்கின, தொலைநோக்கு கண்ணாடியிலிருந்து தன் கண்களை விடுவித்துக் கொண்ட எதிர்காலம் என்ன என்பது போல் ஆதித்தனை நிமிர்ந்து பார்த்தான்.



"அங்கே பார்" என்று ஆதித்தன் பன்றி குட்டையை கடந்து செல்லும் மலைப்பாதையை சுட்டி காட்டினான். எதிர்காலம் ஆதித்தன் சுட்டி காட்டியதிசையில் பார்வையை செலுத்தினான். அந்த பாதையில் தொலைதூரத்தில் சிறு மணல் புயல் எழுந்து கொண்டிருந்தது. ஒரு சிறு படைப்பிரிவு அந்த பாதையில் வந்து கொண்டிருப்பதன் அறிகுறி அது. நண்பர்கள் இருவருமே அதை சட்டென்று புரிந்து கொண்டார்கள்.



" இவர்கள் நாளை வரவேண்டிய படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லவா?இதென்ன திடிரென இன்றே வந்து விட்டார்கள். சித்திரசேனன் சொன்ன தகவல் பொய்யானதா?" என்றான்.



"அதைப் பற்றி யோசிக்க நமக்கு இப்போது நேரமில்லை. என்னிடம் ஒரு திட்டமிருக்கிறது. அதன்படி நடந்தால் எல்லாமே ஜெயமாகும்" என்றான் ஆதித்தன்.



"சொல் உன் திட்டத்தை .என்னால் முடிந்ததை செய்து முடிக்கிறேன்.." என்றான் எதிர்காலம்.



தன்னுடைய திட்டத்தை தெளிவாக எடுத்துரைத்த ஆதித்தன் " என் திட்டம் புரிந்ததா?" என்றான்.



"நீ சொல்வது மிகவும் ஆபத்தான திட்டம். புலியின் வாயில் தலையை விடுவதற்கு ஓப்பானது. மாட்டி கொண்டால் தலை தனியாகி விடும்” என்றான் எதிர்காலம்.



" உன்னுடைய பங்கு பணியை மட்டும் சரியாக நிறைவேற்று நண்பா! என் வேலையை நான் கச்சிதமாக முடிக்கிறேன். உனக்கு இனி தான் நிறைய வேலை இருக்கிறது. இந்த மலைப்பாதை வளைந்து செல்லும் இடத்திலிருந்து உன் வேலையை நீ ஆரம்பிக்க வேண்டும். இறுதி வேலை பன்றி குட்டையில் காத்திருக்கிறது. நாம் போட்ட திட்டப் படி எல்லாமும் இம்மி பிசகாமல் நடக்க வேண்டும். நான் இங்கிருந்து கிளம்புகிறேன். வரும் வீரர்களை தேக்கி நிறுத்துவது உன் வேலை." என்ற ஆதித்தன் அருகிலிருந்த இலந்தை செடியின் முள் ஓன்றை ஓடித்து எதிர்காலத்தின் கையில் கொடுத்தான். "இது தான் உனக்கு நான் தரும் துருப்பு சீட்டு.

சரியாகப் பயன்படுத்து." என்ற ஆதித்தன் பதுங்கியபடி அங்கிருந்து கிளம்பினான்.



ஆதித்தன் போவதை பார்த்து கொண்டிருந்த எதிர்காலம் தன் குதிரையை அழைத்து கொண்டு பிரதான சாலைக்கு வந்தான். ஆதித்தன் கூறிய பாதையின் வளைவான பகுதிக்கு வந்தவன் கையிலிருந்த இலந்தை முள்ளை குதிரையின் கால் லாடத்தில் அழுத்தமாக பொருத்தினான். குதிரையை பாதையின் குறுக்காக நிறுத்தியவன் அங்கிருந்து கோட்டையை பார்த்தான்.பாதையின் வளைவு கோட்டையை பார்வையிலிருந்து மறைத்தது.வெகு வேகமாக வந்த குதிரை வீரர்கள் பாதையை மறித்தபடி ஓருவன் நிற்பதை பார்த்து வேகத்தை குறைத்தனர்.



முகப்பில் நின்ற வீரன்" யாரப்பா நீ? பாதையை விட்டு விலகி குதிரையை நிறுத்து." என்றான்.



"நிறுத்தத்தான் நானும் நினைக்கிறேன். இந்த குதிரை என் கட்டளைக்கு பணிய மறுக்கிறது. எப்போதும் என் பேச்சை கேட்டு நடக்கும் குதிரை இது. இன்று என்னவோ அழிச்சாட்டியம் செய்கிறது. இளவரசர் மகேந்திரன் வேறு அவசர வேலையாக என்னை அனுப்பி வைத்தார்." என்றான் எதிர்காலம்.



"நீ மலை கோட்டையிலிருந்தா வருகிறாய்? நாங்களும் அங்கே தான் போகிறோம்.”



" இதோ இந்த வளைவைத் தாண்டினால் மலை கோட்டை தான். நான் அங்கு பணிபுரியும் வீரன் தான் " என்று கூசாமல் பொய் பேசினான் எதிர்காலம்.



"அப்படியானால் உனக்கு உதவி செய்வது எங்களுடைய கடமையாகிறது." என்றவன் குதிரையிலிருந்து கீழே இறங்கி எதிர்காலத்தின் குதிரையை பலவாறாக அதட்டி சத்தம் போட்டு பார்த்தான். "இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மறுக்கிறது" என்றான் எதிர்காலம்.



அடம் பிடிக்கும் குதிரை இன்னும் நான்கு பேரின் கவனத்தை கவர அவர்களும் குதிரையோடு மல்லு கட்ட ஆரம்பித்தனர். அவர்களில் ஓருவன் குதிரையின் ஒரு கால் நொண்டுவதை கண்டான்." இதோ இந்த காலில் ஏதோ விசயமிருக்கிறது" என்றவன் அந்த காலை தூக்கி பார்த்தான். அதிலிருந்த முள்ளை பார்த்தவன்" பார்த்தீர்களா? குதிரைஅடம் பிடிக்க இதுதான் காரணம்" என்றான் பெருமிதத்தோடு.



" புத்திசாலி நீ! உடனே கண்டுபிடித்து விட்டாய் - உன்னை நான் பாராட்டுகிறேன் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆமாம் நீங்கள் நாளை வருவதாகத்தானே இளவரசர் கூறினார். " என்றான் எதிர்காலம்.



"நடுவில் ஓரு குறுக்குவழியை கண்டுபிடித்து வந்ததால் சீக்கிரம் வந்து விட்டோம். உன் குதிரையை ஓரமாக நிறுத்தினால் நாங்கள் மலை கோட்டையை சென்றடைவோம். பயணத்தால் வெகுவாக களைப்படைந்திருக்கிறோம்.”



“உங்களின் நிலை புரிகிறது. கோட்டையில் ஓய்வெடுங்கள். இரவு உணவு அருமையாக இருக்கும். நான் இளவரசர் சொன்ன வேலையை முடித்துவிட்டு விரைவில் வருகிறேன்" என்றான் எதிர்காலம்.



"குதிரையை சற்று நேரம் நடத்தியே கூட் டி செல். இரத்த ஓட்டம் சீரான பிறகு நீ அமரலாம்”



"அறிவுரைக்கு நன்றி" எதிர்காலம் பாதையின் ஓரமாக நிற்க குதிரைகள் ஓவ்வொன்றாக அவனை தாண்டி சென்றன.



கடைசி குதிரை வீரன் எதிர்காலத்தை கடக்கும் போது "நன்றி நண்பா " என்றான். அந்த குரல் எதிர்காலத்திற்கு பழக்கமான ஆதித்தனின் குரல்.



"இந்த குதிரைக்குரியவன் அந்த மரத்தடியில் என்னால் தாக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அவன் கை கால்களை முக்கியமாக வாயை கட்டி போட்டுவிட்டு அடுத்த காரியத்தை பார்." என்றபடி ஆதித்தன் கடந்து சென்றான்.



சிங்கத்தின் வாயில் தலையை விட கிளம்பி விட்ட வனை திகைப்போடு பார்த்தான் எதிர்காலம்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 27



மல்லனும், ரத்ன மாலாவும் ஒளிந்திருந்து தங்களின் தொலைநோக்கு கண்ணாடியின் மூலம் ஆதித்தன் செய்ததையெல்லாம் கவனித்து கொண்டிருந்தனர்.



"அந்த கள்வன் பலே கில்லாடி தான். படை வீரர்களின் வரிசையில் கடைசியாக வந்த வீரனை சரியான நேரம் பார்த்து வீழ்த்தி விட்டான். மற்றவர்களின் கவனத்தை சற்றும் கவராமல் தன் வேலையை மிக கச்சிதமாக முடித்து விட்டான்." என்றான் மல்லன்.



"ஆமாம். அந்த கள்வன் சாமான்யமானவன் கிடையாது.அந்த வீரனை ஒரே குத்தில் வீழ்த்தி மரத்தின் ஓரமாக கிடத்தி விட்டான். அவனது நண்பனும் சமர்த்தன்தான். தன் குதிரையை சாக்கிட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டான். இருவருமே கனகச்சிதமாக நடந்து கொண்டு விட்டனர்." என்றாள் ரத்ன மாலா.



"இரண்டே பேர் வெகு துணிச்சலாக இந்த காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றால் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். உள்ளே நுழைவதற்கு இத்தனை திட்டம் தீட்டியவர்கள் இங்கிருந்து தப்பி செல்ல சரியான திட்டத்தை வகுக்காமலா இருந்திருப்பார்கள்?" என்றான் மல்லன்.



" கள்வன் அதற்கும் சரியான திட்டத்தை வைத்திருப்பான்.வெளியேறும் வழி தெரியாமல் மடிய அவன் அபிமன்யு அல்லவே? மேலும் அவன் இறங்கிய காரியங்களில் இதுவரை தோற்றதேயில்லை." என்றாள் ரத்ன மாலா.



" இதுவரை அவன் தோற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு இப்போது தோல்வியை பரிசளிக்க நான் முடிவு செய்து விட்டேன்" என்றான் மல்லன்.



" என்ன செய்ய போகிறீர்கள்?" என்றாள் ரத்ன மாலா.



"அந்த கள்வன் எமகாதகன். அவன்மலை கோட்டைக்குள் நுழைந்திருக்கிறானென்றால் கண்டிப்பாக கடம்பத்தின் இளவரசன் அபயவர்மன் இங்கே தான் இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அவன் அபயவர்மரை மீட்ட பின்பு நாம் அவனிடமிருந்து இளவரசனை மீட்பது குதிரை கொம்பு. அவனை தண்டிக்க நினைக்கும் உன் கனவு கானல் நீராகும். மேலும் அபயவர்மனுடன் சேர்ந்து அவர்கள் மூவராகி பலம் கூடுதலாகி விடும். மூவருமே சிறந்த வீரர்கள் .நம் பக்கம் இருவர் .அதிலும் நீ பெண்.” என்றான் தயக்கத்துடன் மல்லன்.



"பெண் என்றால் இளப்பமா மல்லரே?" என்றால் சீற்றத்துடன் ரத்ன மாலா.



"நான் அப்படி சொல்லவில்லை. நான் சொல்ல வந்ததை நீதவறாக புரிந்து கொண்டு விட்டாய்.”



" என்ன தான் சொல்கிறீர்கள்? புரியும்படி சொல்லுங்கள்”



"நாம் அபயவர்மன் விசயத்தில் முந்தி கொண்டு விட்டால் இவற்றையெல்லாம் தவிர்த்து கொண்டு விடலாம் என்று சொல்ல வந்தேன்.”



" உமது யோசனை சரிதான். ஆனால் ஒரு விசயத்தை மறந்து விட்டீர்கள். ஆதித்தனை கணக்கில் வைத்த நீங்கள் வெளியே இருக்கும் அவனது நண்பணை கணக்கில் வைக்க தவறிவிட்டீர்கள். தப்பிச் செல்லும் திட்டத்தில் அவன் தான் முக்கிய சூத்ரதாரி உள்ளே இருக்கும் ஆதித்தனால் வெளியே எதையும் செய்ய முடியாது.”



"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். நாம் இருவருமே கோட்டைக்குள் பிரவேசிக்கலாம். மகேந்திரனை உன் போல் சிறு பிராயத்திலிருந்தே எனக்கு தெரியும் “



" அதனால் அபயவர்மனை பற்றி நீங்கள் கேட்டதும் ஆமாம் அவன் இங்கு தான் இருக்கிறான் அழைத்து செல்லுங்கள் என்று என் அண்ணன் சொல்வான் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? என் தந்தை கேட்டே உண்மையை சொல்லாமல் மறைத்தவன் அவன்.”



"அப்படியானால் நான் கோட்டைக்குள் பிரவேசிப்பது வீண்தானா?" என்றான் மல்லன் ஏமாற்றத்துடன் .



"அவனை ஏமாற்ற என்னிடம் ஒரு திட்டமிருக்கிறது. இதோ என் தந்தை கையெழுத்திட்ட வெற்று ஓலை. ராஜ முத்திரையும் அதில் இருக்கிறது. அரசர் வேட்டைக்கு செல்லும் காலத்தில் புதிய சட்டங்களை, உத்தரவுகளை நிறைவேற்ற கையெழுத்திட்ட வெற்று ஓலைகளை அரண்மனையில் விட்டு செல்வது வழக்கம். அது என் அன்னையிடம் பத்திரமாக இருக்கும். அதை நான் எடுத்து வந்து விட்டேன். அது இப்போது நமக்கு பயன் படப் போகிறது " என்றாள் ரத்ன மாலா தன் பையில் வைத்திருந்த ஓலையை எடுத்த படி.



"ஆகா! அந்த வெற்று ஓலையை வைத்து பல வேலைகளை செய்யலாமே?" என்றான் மல்லன்.



"ஆமாம். அதன் மதிப்பை நானும் உணர்ந்திருக்கிறேன்.நான் சொன்னதை ஓலையில் எழுதுங்கள். அபயவர்மன் இங்கேயிருப்பது ஓற்றர்கள் மூலம் மன்னருக்கு தெரிய வந்து விட்டது. அவனை அழைத்து செல்ல நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். . இளவரசி ரத்ன மாலாவை நீங்கள் கண்டுபிடித்து பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். இளவரசின் கசையடி ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே அவள் அரண்மனைக்கு வருவாள். அதற்கு அபயவர்மன் வேண்டும் என்று எழுதுங்கள் .என் அண்ணன் இப்போது அபயவர் மனை உங்களை நம்பிஅனுப்ப மறுக்க மாட்டான் “



" ஆஹா! சரியான திட்டம். நீயும் என்னுடன் வரலாமே?” என்ற மல்லன் ஓலையில் ரத்ன மாலா சொன்னதை எழுத தொடங்கினான்.



"ஆண் உடையில் இருப்பது நான் தான் என்று என் அண்ணன் கண்டுபிடித்து விட்டால் காரியம் கெட்டுவிடும், ஓலைக்கு அவன் செவிசாய்க்க மாட்டான். நான் இங்கிருந்து ஆதித்தனின் கூட்டாளியை கண்காணிக்கிறேன். நீங்கள் கோட்டைக்குள் நுழையுங்கள்.”



" எச்சரிக்கையாக இரு ரத்னா" என்ற மல்லன் தன் குதிரையை மலை கோட்டையை நோக்கி விரட்டினான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 28



கோட்டைகதவிற்கு முன்னால் வந்து நின்ற சிறு படையை பார்த்த காவல்வீரர்கள் கோட்டை தலைவன் ஜெயந்தனிடம் அதனை கூறினார்கள். அவன் மகேந்திரனிடம் கோட்டை கதவை திறந்து விட அனுமதி கேட்க விரைந்தான்.



நாளை வரவேண்டிய வீரர்கள் இன்றே வந்து சேர்ந்ததால் வியப்படைந்தான் மகேந்திரன். புதிதாக வந்து சேர்ந்த வீரர்கள் மதிய நேரத்தில் வந்து சேர்ந்ததால் அவர்களுக்கான உணவை உடனடியாக தயார் செய்ய வேண்டியிருந்தது. நீண்ட பயணத்தில் களைத்து வந்த வீரர்களை கோட்டையை சுற்றி பார்க்க உத்தரவிட்ட மகேந்திரன் மதிய உணவை துரிதமாக சமைக்க சமையல் ஆட்களுக்கு கட்டளையிட்டான். அவனது கட்டளையை ஏற்று கொண்ட ஜெயந்தன்" கைதிகளின் கொட்டடியில் இன்றும் நான்கு பேர் மரணமடைந்து விட்டார்கள்" என்றான்.



"உடல் உழைப்பிற்கு பழக்கமில்லாத வணிகர்கள் விரைவிலேயே தங்கள் உயிரை விட்டு விடுகிறார்கள். பாவம் அவர்கள். இறந்த உடல்களை பன்றி குட்டையில் வீசி விட்டு கைதிகளின் மீதான சித்ரவதைகளை குறைத்து கொள்ள சொல்லி அறிவுறுத்துங்கள்" என்றான்.



சற்று நேரத்தில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. அந்த சிறு படை உள்ளே நுழைந்தது. உள்ளே நுழைந்த வீரர்களை இன்முகத்துடன் வரவேற்றான் ஜெயந்தன்.



" நாளை நீங்கள் வருவதாக எதிர்பார்த்தோம். எப்படி நீங்கள் இவ்வளவு விரைவாக வந்து சேர்ந்தீர்கள்?" என்றான் ஜெயந்தன்.



" வழியில் எதிர் பட்ட ஓரு வணிகர் எங்களுக்கு ஒரு குறுக்குவழியை காட்டினார். பாதை சற்று கரடு முரடாக இருந்தாலும் பயணம் எளிதாகவே இருந்தது. வழியில் உங்கள் வீரன் ஒருவன் வழிகாட்டி உதவினான். " என்றான் வீரர்களில் ஒருவன்.



"எங்கள் வீரர்களில் ஓருவனா ? இங்கே என் அனுமதியில்லாமல் கோட்டையிலிருந்து யாரும் வெளியேற முடியாதே?" என்றான் சந்தேகத்தோடு ஜெயந்தன்.



"அந்த வீரர் இளவரசர் கூறிய ஒரு அவசர வேலையை செய்து வர கிளம்பியதாக தெரிவித்தார். “



"எனக்கு தெரியாமல் இளவரசர் யாரையும் அனுப்ப வாய்ப்பில்லையே? சரி இருக்கட்டும். நான் இதைப் பற்றி பிறகு விசாரிக்கிறேன். நீங்கள் முன்னறிவிப்பின்றிதிடிரென வந்து சேர்ந்ததால் உங்களுக்கான உணவை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் உங்கள் புரவியை லாயத்தில் கட்டி விட்டு கோட்டையை சுற்றி பாருங்கள். அதற்குள் உணவு தயாராகி விடும்." என்றான் ஜெயந்தன்.



அவர்கள் லாயத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது தன் அருகே நடந்து கொண்டிருந்தவனிடம் தன் குதிரையின் கடிவாளத்தை நீட்டிய ஆதித்தன்" உன்னை தொந்தரவு செய்வதற்கு என்னை மன்னித்து விடு நண்பா.! உன் குதிரையுடன் என் குதிரையையும் சேர்த்து லாயத்தில் கட்டி விடு நண்பா. என்னால் இயற்கை உபாதையை தாங்க முடியவில்லை" என்றான் படபடப்புடன்.



ஆதித்தனின் தவிப்பை பார்த்தவன்" அதற்கென்ன நண்பா. உன் குதிரையை நான் பார்த்து கொள்கிறேன். நீ போய் வா" என்றான்.



"நன்றி நண்பா " என்ற ஆதித்தன் கைதிகள் இருந்த கொட்டடியின் பக்கம் மெல்ல நழுவினான். அதிர்ஷ்டம் ஆதித்தனின் பக்கம் இருந்தது. மதிய உணவு வேலைக்கு காவலர்கள் அகன்று விட்டதால் அங்கே காவலுக்கு யாருமில்லை.கொட்டடியின் தாழ்பாழில் ஒரு இரும்பு கம்பி மட்டும் வளைத்து செருகப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த ஆதித்தன் தன்னை யாரும் கவனிக்கவில்லையென்று உறுதி செய்து கொண்டவனாக அந்த இரும்பு கம்பியை எடுத்து விட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான். உள்ளே ஒரே ஓரு சன்னலில் இருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.



கொட்டடியின் இருளுக்கு கண்கள் பழகாததால் சற்று நேரம் நின்றான் ஆதித்தன். உள்ளே புதிதாக நுழைந்தவனைப் பார்த்து உள்ளே இருந்தவர்கள் பயத்துடன் எழுந்து நின்றனர். கண்கள் இருட்டுக்கு பழகியதும் தரையில் நால்வர் இறந்து கிடப்பதை ஆதித்தன் பார்த்தான். தன் அதிர்ச்சியை வெளியே காட்டி கொள்ளாதவன் "இங்கே கடம்பத்தின் இளவரசன் அபயவர்மன் யார்?" என்றான்.



அனைவருமே அமைதியாக நின்றனர். "நான் உங்களின் எதிரியல்ல. நண்பன்தான். பயப்படாமல் உண்மையை கூறுங்கள்” என்றான்.



அவர்களில் ஓருவன் அபயவர் மனை நோக்கி_ தன் விரலை நீட்டினான்.



"யார் நீ? " என்றான் அபயவர்மன்.



அதற்கு பதில் கூறாத ஆதித்தன் தன் கையிலிருந்த எதிர்காலத்தின் மோதிரத்தை காட்டினான்.



"இந்த மோதிரத்தை நினைவிருக்கிறதா?" என்றான் ஆதித்தன்.



"என் ஆப்த சிநேகிதன் எதிர்காலத்திற்கு நான் பரிசாக கொடுத்தது “



" அவனது நண்பன் நான். உங்களை மீட்க வந்திருக்கிறேன்.”



உள்ளே இருந்தவர்களிடம் சட்டென்று ஒரு சுறுசுறுப்பு பிறந்தது. ஆதித்தன் அவர்களிடம் தன் திட்டத்தை விவரிக்க தொடங்கினான்.



அதே நேரம் உணவருந்தும் இடத்திற்கு வந்த ஜெயந்தன் அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த நான்கு வீரர்களை பார்த்து " முட்டாள்களே! இங்கே நீங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கொட்டடியில் உள்ள கைதிகள் தப்பிவிட மாட்டார்களா?" என்று கோபத்துடன் இறைந்தான்.



" கொட்டடியை பாதுகாப்பாக பூட்டித்தான் வைத்திருக்கிறோம். நாங்கள் இங்கே சாப்பிட வந்தது கைதிகளுக்கு தெரியாது. நாங்கள் வெளியே காவல் பணியில் இருப்பதாகத்தான் கைதிகள் கருதுவார்கள். மேலும் உங்களின் மேற்பார்வையில் யாரும் இங்கிருந்து வெளியேறி விட முடியுமா?" என்றான் வீரர்களில் ஒருவன்.



ஜெயந்தனுக்கு ஏனோ புதிய வீரர்கள் வழியில் சந்தித்த ஒரு வீரனைப் பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. அதை பற்றி மகேந்திரனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள நினைத்தான்.



"சரி. சாப்பிட்டு விட்டு இறந்து போன கைதிகளை பன்றி குட்டையில் தள்ளி விட்டு வாருங்கள்" என்றான் ஜெயந்தன்.



"சாப்பிட்டு விட்டு உடனே அங்கே சென்றால் அங்கே அடிக்கும் நாற்றத்தில் சாப்பிட்டதை வாந்தியெடுத்து விடுவோம் - அதனால் சற்று நேரம் கழித்து எங்கள் பணியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்றான் வீரர்களில் ஒருவன் பயந்தபடி.



" எதையோ செய்து தொலையுங்கள்" என்ற ஜெயந்தன் மகேந்திரனின் அறையை நோக்கி நடந்தான். அவனை குறுக்கிட்ட வீரன் ஒருவன் " வாயிலில் வீரமல்லன் என்ற ஒருவர் வந்திருக்கிறார். இளவரசருக்கு நெருக்கமானவராம் . அவரைஉள்ளே அனுமதிக்கலாமா?" என்றான்.



"வா போகலாம்" என்ற ஜெயந்தன் தான் வந்த வேலையை மறந்து விட்டு கோட்டை வாயிலை நோக்கி நடக்க துவங்கினான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 29



மல்லனின் வருகையை ஜெயந்தனின் மூலமாக கேட்ட மகேந்திரனின் முகம் மாறியது. "மல்லன் இங்கு வந்திருக்கிறாரா? என் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவராயிற்றே மல்லன்? மிக ரகசியமான பல வேலைகளை என் தந்தை இவரை நம்பி ஓப்படைப்பது வழக்கம்.அவரும் அப்பாவின் நம்பிக்கையை குலைப்பது போல் இதுவரை நடந்ததில்லை. இப்போது என்ன காரியமாக இங்கே வந்திருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றான் மகேந்திரன்.



"மன்னருக்கு தெரியாமல் நாம் ஓலை அனுப்பி வீரர்களை இங்கே வரவழைப்பது அவருக்கு தெரிந்திருக்குமோ ? " என்றான் ஜெயந்தன்.



" காணாமல் போன ரத்ன மாலாவை ேதடி இங்கே வந்திருக்கிறாரா ? இல்லை நீ சொன்ன விசயத்தை ஊர்ஜிதப்படுத்தி கொள்ள இங்கே வருகை தருகிறாரோ என்னவோ? ஓன்று மே புரியவில்லையே?" என்றான் மகேந்திரன்.



" நீங்களாக எதையும் சொல்லி மாட்டி கொள்ளாதீர்கள். அவர் என்ன விசயமாக இங்கே வந்திருக்கிறார் என்பதை அவரே கூறட்டும்" என்றான் ஜெயந்தன்.



"அதுவும் சரிதான். நீ போய் அவரை இங்கே அழைத்து வா" என்று ஜெயந்தனுக்கு கட்டளையிட்டான் மகேந்திரன்.



சற்று நேரத்தில் மகேந்திரன் இருந்த அறைக்குள் நுழைந்தான் வீரமல்லன். அவனை பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்தவனைப் போல் முகத்தை வைத்து கொண்ட மகேந்திரன் மல்லனை அனணத்தபடி "வாருங்கள் மல்லரே! உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றான். அவனது வரவேற்பை புன்சிரிப்புடன் ஏற்று கொண்டான் மல்லன். " உட்காருங்கள் மல்லரே! யார் அங்கே ? மல்லருக்கு பழரசம் கொண்டு வாருங்கள்" என்றான்.



"அதெல்லாம் எதுவும் வேண்டாம் மகேந்திரா. நான் வந்த காரியம் வேறு " என்றான் மல்லன்.



"சொல்லுங்கள் மல்லரே! நாட்டின் எல்லையை நோக்கி நீங்கள் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் போதே நீங்கள் ஈடுபட்டுள்ள காரியத்தின் தீவிரம் புரிகிறது. இங்கே எல்லையில் என்ன செய்கிறீர்கள் மல்லரே! உமது காரியத்திற்கு எமது உதவி ஏதாவது தேவையா?" என்றான் மகேந்திரன்.



"உன் ஆதுரமான கேள்விக்கு நன்றி மகேந்திரா.! உன்னுடைய உதவி தேவைப்படாமலேயே நான் வந்த காரியம் முடிந்து விட்டது. உன் தங்கை ரத்ன மாலாவை ேதடித் தான் நான் இங்கு வந்தேன்" என்றான் மல்லன்.



" என்ன? என் தங்கை ரத்ன மாலாவை தேடிவந்தீர்களா? அவளை கண்டுபிடித்து விட்டீர்களா என்ன? அவள் எல்லையில் என்ன செய்கிறாள்? இப்போது எங்கிருக்கிறாள்?" தன் தங்கையை தேடி மல்லன் வந்திருப்பதை கேட்ட மகேந்திரன் பதட்டத்தில் கேள்விகளை வரைமுறையின்றி கொட்டி கவிழ்த்தான்.



"பொறுமகேந்திரா! ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? உன் தங்கை வழக்கம் போல் மலை கிராமத்தில் ஓய்வெடுக்க சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்து விட்டாள். அவளை தேடி அரண்மளையே அல்லோகலப்பட்டு விட்டது. உன் தந்தை ரத்ன மாலாவை தேடும் பொறுப்பை பலரிடம் பகிர்ந்து கொடுத்தார். அவர்களில் நானும் ஓருவன். நான் ரத்ன மாயா இங்கேதான் வந்திருப்பாள் என்று ஊகித்தேன். வழியிலேயே அவளை மடக்கி பிடித்து விட்டேன். அவளை இப்போது பத்திரமான இடத்தில் நான் வைத்திருக்கிறேன்.”



" நல்லது மல்லரே! உமது காரியத்தால் எனது மனம் மகிழ்கிறது.நான் ரத்ன மாலாவை பார்க்க முடியுமா?" என்றான் மகேந்திரன். எதிர்பாராத அவனது கேள்வியால் திடுக்கிட்ட மல்லன்"உன் தங்கையை நான் உரிய பாதுகாப்போடு தலைநகரத்திற்கு அனுப்பி வைத்துவிட்டேனே? அவளை பார்ப்பது சாத்தியமல்ல" என்றான்.



"அவளை அரண்மனைக்கு திருப்பி அனுப்பியதே சரியான செயல். சரி நீர் இங்கு வந்த நோக்கம்?" என்றான் மகேந்திரன்.



"நான் வந்த நோக்கத்தை இந்த ஓலை சொல்லும் " என்று தான் தயாரித்த ஓலையை மகேந்திரனிடம் கொடுத்தான் மல்லன்.



அதை படித்த மகேந்திரன் "அபயவர்மன் இங்கிருப்பது அப்பாவுக்கு எப்படி தெரியும்?" என்றான்.



"ஓற்றர்களும், உளவாளிகளுக்கும் என்ன வேலையென்று நினைத்தாய் மகேந்திரா! உன் நிழல் என்ன செய்கிறதென்று கூட மன்னருக்கு தெரியும். நாட்டில் நடக்கும் ஓவ்வொரு விசயமும் மன்னரின் காதுகளுக்கு உடனடியாக சென்று சேர்ந்து விடும். இல்லையென்றால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாள முடியாது" என்றான் மல்லன்.



"நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகவே புரிகிறது. என் கண்ணுக்கு அகப்படாமல் தங்கள் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் ஓற்றர் படை வீரர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்றான் மகேந்திரன்.



"யாருக்கும் சந்தேகம் வராமல் பணியாற்றுவதுதானே அவர்களின் பணி ? " என்றான் மல்லன்.



"நான் படை திரட்டுவது?”



“அரசர் அனைத்தையும் அறிவார்”



"யார் அங்கே ? சிறையில் இருக்கும் அபயவர்மனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான் மகேந்திரன்.



காவல் வீரர்களில் ஓருவன் அபயவர்மன் அடைக்கப்பட்டிருந்த கொட்டடியை நோக்கி நடந்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 30



கொட்டடியில் அடைபட்டு கிடந்த அபயவர்மனிடமும், மற்ற கைதிகளிடமும் தன் திட்டத்தை தெளிவாக எடுத்துக் கூறினான் ஆதித்தன்.



"இன்னும் சற்று நேரத்தில் இறந்து போன இந்த நால்வரின் உடலையும் எடுத்து செல்ல மகேந்திரனின் ஆட்கள் வரப்போகிறார்கள். இந்த நான்கு பிணங்களில் ஓருவராக இளவரசர் அபயவர்மர் நடிக்க வேண்டும். பிணமாக மூச்சடக்கி நடிப்பது சற்று சிரமம் தான். ஆனால் இப்போது நமக்கு வேறு வழியில்லை. இளவரசர் இந்த பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித் தாக வேண்டிய கட்டாயம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்றான் ஆதித்தன் இளவரசனை பார்த்து.



"கவலைப் பட வேண்டாம் நண்பனே! நான் இவர்களை மட்டும் விட்டு விட்டு தனியாக தப்பி செல்வதை நினைக்கும் போது மிகுந்த சுயநலம் கொண்டவனாக என்னை உணர்கிறேன்" என்றான் அபயவர்மன்.



"கவலைப் பட வேண்டாம் இளவரசே! நீங்கள் மட்டும் தப்பிக்க போவதில்லை. இங்கே இருக்கும் அனைவருமே தப்பிக்கத்தான் போகிறார்கள்." என்ற ஆதித்தன் தன் இடுப்பில் ஓளித்து வைத்திருந்த கண்ணாடி வில்லையை கைதிகளில்ஓருவனின் கையில் வைத்தான்.



"வெளியே பகலவன் தன் அக்னி வெப்பத்தை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறான். அந்த வெளிச்சம் இந்த சன்னல் வழியாக உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தை இந்த கண்ணாடி வழியம் ஒன்று திரட்டினால் நெருப்பை உண்டாக்கி விட முடியும். அதை பயன்படுத்தி இங்கிருந்து தப்பிப்பது உங்கள் சாமர்த்தியம் " என்றான் ஆதித்தன்.



| “நல்ல யோசனை. நாம் இதை உடனே அமல்படுத்துவோம்" என்றான் கைதிகளில் ஓருவன்.



" முதலில் இறந்த பிணங்களில் ஓன்றை கதவை திறக்கும் மறைவில் நிற்க வையுங்கள். யாரோ இந்த பக்கமாக வருகிறார்கள். நான் கதவை திறக்கிறேன். அதன் மறைவில் பிணத்தை ஓளித்து வையுங்கள். இளவரசே! உங்கள் நடிப்பை ஆரம்பியுங்கள்" என்ற ஆதித்தன் கதவை திறந்தான். கதவிற்கும் சுவருக்கு மான இடைவெளியில் இறந்து போனவர்களில் ஓருவனது உடல் நிற்க வைக்கப்பட்டது.



ஆதித்தன் கதவை திறந்ததும் எதிர் பட்ட காவல் வீரன்" யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?" என்றான்.



உடல் குடீரென வேர்க்க அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஆதித்தன் யோசித்து கொண்டிருந்த போது அவனுக்கு பின்னால் வந்த ஒரு வீரன் "நாம் சாப்பிட்டு விட்டு வர மாட்டோம் என்று நினைத்த கோட்டை தளபதி இவனிடம் பிணங்களை அப்புறப்படுத்தும் வேலையை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்" என்றான்.



"ஆமாம். இவர் சொல்வது தான் உண்மை. நீங்கள் வருவீர்களோ? மாட்டீர்களோ என்ற சந்தேகத்தில் தான் என்னை அனுப்பி வைத்தார். நான் உள்ளே சோதித்து விட்டேன். நான்கு பேர் உயிரிழந்து கிடப்பது உண்மை தான் " என்றான் ஆதித்தன்.



"நல்லவேளை! உதவிக்கு நீ வந்தாய்?வா போய் இறந்த பிணங்களை வண்டியில் ஏற்றுவோம். எங்களில் ஓருவன் வண்டியை எடுத்து வர போயிருக்கிறான் அவன் வரட்டும் வேலையை ஆரம்பிப்போம்" என்றான் காவல் வீரர்களில் ஓருவன்.



மிக விரைவிலேயே வண்டியுடன் அந்த வீரன் வந்து சேர்ந்து விட நால்வரும் சேர்ந்து பிணங்களை வண்டியில் ஏற்ற துவங்கினர். முதலில் அபயவர்மனின் உடலை வண்டியில் ஏற்றிய ஆதித்தன் மற்ற மூவரின் உடலை இளவரசனின் உடல் மீது அடுக்கி அவன் மூச்சு விட வசதி செய்து கொடுத்தான்.



வண்டியை ஓட்டி ஒருவன் தயாரானான்.காவலுக்கு வண்டியில் ஏற வேண்டிய வீரர்களில் ஓருவன்" அந்த நாற்றம் பிடித்த பன்றி குட்டைக்கு வர எனக்கு விருப்பமேயில்லை" என்றான்.



" கவலைப்படாதே நண்பா! உனக்கு பதிலாக நான் போகிறேன். இந்த கோட்டைக்கு புதிய வனாகிய நான் அந்த பன்றி குட்டையை காண வெகு ஆவலாக இருக்கிறேன்" என்றான் ஆதித்தன்.



"அப்பாடா! உன்னால் நான் பிழைத்தேன். ஒரு முறை அங்கே போய் வந்தால் இனி எப்போதும் அங்கே போகும் ஆசையே வராது.”



"பரவாயில்லை. உனக்கு பதிலாக நான் போகிறேன். ஆமாம்.கோட்டை கதவை திறக்க செய்வது எப்படி?" என்றான் ஆதித்தன்



"இதோ இப்படி " என்ற வீரன் நீண்ட சீழ்க்கை ஓலியை எழுப்பினான்.



"இதே ஒலியை இரண்டு முறை ஓலித்தால் அபாயம் கோட்டை கதவை மூடுங்கள் என்று அர்த்தம். இவற்றையெல்லாம் விரைவாக நீ கற்று கொள்ள வேண்டும்”



" அபாரம்! இவற்றையெல்லாம் நான் விரைவிலேயே கற்று கொள்கிறேன்" என்ற ஆதித்தன் வண்டியில் தாவி ஏறினான் . வண்டி அங்கிருந்து கிளம்பியது. அதே நேரம் அபயவர்மனை அழைத்து செல்ல வந்த வீரன் சீழ்க்கை அடித்த வீரனை நெருங்கி மகேந்திரனின் உத்தரவை தெரியப்படுத்தினான். இரண்டு வீரர்களும் கொட்டடிக்குள் நுழைந்த போது கதவுக்கருகில் இருந்த பிணம் சரிந்து விழுந்தது. அபயவர் மனை தேடி ஏமாந்தவர்கள் நடந்த சதி வேலையை சட்டென்று புரிந்து கொண்டார்கள். வெளியே இருவரும் வந்து பார்த்த போது வண்டி மைதானத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. கோட்டையின் கதவுகள் அகலத் திறக்க துவங்கியிருந்தது.



சீழ்க்கை வீரன் தன் வாயால்அந்த வினோத சீழ்க்கை ஓலியை இரண்டு முறை எழுப்பி எச்சரிக்கையை காற்றில் அனுப்பினான்.



அந்த ஒலியை கேட்டதும் கோட்டையின் கதவுகள் மூடத் தொடங்கின.
 

New Threads

Top Bottom