Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed எல்லையில் ஒரு எத்தன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 31



மகேந்திரன் அபயவர்மனை அழைத்து வர ஆளை அனுப்பிய பின்புமல்லன் பேச ஆரம்பித்தான்.



" மகேந்திரா!சொன்னாலும் புரியாது மண்ணாளும் கலை. நீ அரசியல் விவகாரங்களில் ஓருகத்து குட்டி. வாலிப முறுக்கிலும், இளமை துடிதுடிப்பிலும் நீ உன் மனம் போனபடி செயல்பட்டு கொண்டிருக்கிறாய். அது யாருக்கும் தெரியாது என்று வேறு நினைத்து கொண்டிருக்கிறாய். இளம் கன்று பயமறியாது என்பதை போல் நீ அபயவர்மனை சிறை செய்து வைத்திருக்கிறாய். உன் செயலால் இரு நாடுகளிடையே ஏற்படப் போகும் விளைவுகளை நீ அறியமாட்டாய். உன் தந்தைக்கு தேவையற்ற மன உளைச்சலை நீ ஏற்படுத்தி விட்டாய்”



"இதே அறிவுரைகள் அபயவர்மனுக்கும் வழக்கப்பட்டிருக்கலாமே?" என்றான் மகேந்திரன் கிண்டலாக .



" அவனுக்கும் அறிவுறைகள் வழங்கப்பட்டிருக்கும். அதை கேட்டு நடக்க அவனது மது பழக்கம் தடையாக இருந்திருக்கும் " என்றான் மல்லன்.



"இங்கே என்னால் அவன் சிறைபட்ட நாட்களிலிருந்து அந்த பழக்கத்தை அவன் மறந்து விட்டான்.”



" உன் காரியத்தால் நிகழ்ந்த ஓரே நன்மை அதுவாகத்தான் இருக்க முடியும்." என்றான் மல்லன்.



அதே நேரம் சீழ்க்கை ஒலி ஒன்று எழுந்தது.



"என்ன அது? வினோதமான சத்தம்?" என்றான் மல்லன்.



"கோட்டை கதவை திறப்பதற்கான சமிக்ஞை . பிணங்களை எடுத்து செல்லும் வண்டி கிளம்பி விட்டதென்று நினைக்கிறேன். பலம் வாய்ந்த அந்த கதவுகள் திறப்பதற்கும் வண்டி வெளியேறுவதற்கும் நேரம் சரியாக இருக்கும். அதை கணக்கீடு செய்து தான் இந்த சீழ்க்கை ஓலி முறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். “என்றான் மகேந்திரன்.



சில நொடிகளில் அதே சீழ்க்கை ஒலி இரண்டு முறை விட்டு விட்டு ஓலித்ததும் மகேந்திரன் பரபரப்படைந்தான்.



"ஏதோ வில்லங்கமாக நடைபெறுகிறது. இங்கேயே இருங்கள். விரைவில் வருகிறேன். என்ற மகேந்திரன் அறையை விட்டு அவசரமாக வெளியேறினான். அவனை மல்லன் பின் தொடர்ந்து வெளியே வந்தான்.



அதே நேரம் வண்டியில் உட்கார்ந்திருந்த ஆதித்தன் சீழ்க்கை ஓலியை கேட்டு எச்சரிக்கையடைந்தான். திறந்து கொண்டிருந்த கோட்டை கதவுகள் நேர் மாறாக மூட ஆயத்தமாவதை கண்டான். நடந்த சதி வேலை வெளியாகி விட்டதோ என்று நினைத்தவன் தன் பார்வையை கைதிகள் இருந்த கொட்டடியின் பக்கம் திருப்பினான். அங்கே வீரர்கள் பரபரப்புடன் உலாவுவதையும் வண்டியை கை நீட்டி பேசுவதையும் கவனித்தவன் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதென்ற முடிவுக்கு உடணடியாக வந்தான்.



தன் எதிர்புறம் வேல் கம்புடன் நின்று கொண்டிருந்த வீரன் குழப்பத்துடன் "இங்கே என்ன நடக்கிறது?ஏன் நம்மை தடுக்க நினைக்கிறார்கள்?" என்றான்.



"அது ஏனென்று எனக்குத் தெரியும் " என்ற ஆதித்தன் அவன் முகத்தில் இடி போன்ற குத்து ஒன்றை விட்டான். அவனது குத்தை எதிர்பாராத அந்த வீரன் வண்டியிலிருந்து சரிந்து விழுந்தான்." போதும் இளவரசே! நடித்தது. எழுந்திருங்கள். நம் வேலையை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்." என்றான். அபயவர்மன் பிணக்குவியல்களை தள்ளி விட்டு விட்டு எழுந்தான். அதே நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனை பின்னால் இருந்து எட்டி உதைத்த ஆதித்தன் " நீ வண்டியை ஓட்டும் வேகம் போதவில்லை நண்பனே! நீ நிலத்தில் சற்று நேரம் இளைப்பாறு. நான் வண்டியை ஓட்டுகிறேன்." என்றபடி அவனை கீழே தள்ளி விட்டான். அதே வேகத்தில் அவனது இடத்தில் உட்கார்ந்த ஆதித்தன் குதிரைகளை அடித்து விரட்ட துவங்கினான்.



கண் எதிரே கோட்டையின் கதவுகள் மூடப்படுவதையும் இரு கதவுகளுக்கு இடையிலான இடைவெளி குறுகலாவதையும் பார்த்த ஆதித்தன் "இளவரசே! ஈட்டியை குறி தவறாமல் வீசுவீர்களா?" என்றான்.



"அதில் நான் வித்தகன் " என்றான் அபயவர்மன்



"உங்கள் வித்தையை காட்ட அருமையான வாய்ப்பு .அதோ வண்டியில் உள்ள இரண்டு ஈட்டிகளை எடுத்து கொள்ளுங்கள். கோட்டை கதவுகள் இரண்டும் இணையும் நெற்றி பகுதி நமக்கு எதிராக உள்ளது. கதவுகளின் மேல் நெற்றியை நோக்கி இந்த இரண்டு ஈட்டிகளை எரியுங்கள். கதவுகளை மூட அதன் நெற்றியில் உள்ள இந்த ஈட்டிகள் தடையாக இருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதா?" என்றான் ஆதித்தன்



"நன்றாகவே புரிந்தது. இப்போது பார் என் வித்தையை " என்ற அபயவர்மன் ஆதித்தன் கூறியது போலவே இரண்டு ஈட்டிகளை இரு கதவின் நெற்றி பகுதிகளில் எய்து நிறுத்தினான்.



"அட்டகாசம்! நான் நினைத்தது போலவே செய்து விட்டீர்கள்”



வண்டி கோட்டை கதவை நெருங்கிய போது கதவுகளின் இடைவெளி குறுகலாகி கதவின் மேலிருந்த ஈட்டிகள் தடையாக நின்றன. கிடைத்த குறுகிய இடைவெளியில் குதிரைகள் வெளியேறி விட வண்டி இருகதவுகளிலும் முட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நின்றது.



நடப்பதை பார்த்து கொண்டிருந்த மகேந்திரன் " எதிரிகள் வசமாக சிக்கி கொண்டு விட்டார்கள்" என்றான்.



அபயவர்மன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 32



ஆலையில் அகப்பட்ட கரும்பாக வண்டி இரண்டு கதவுகளுக்கு இடையே அகப்பட்டு நின்றது. கதவை தள்ளி கொண்டிருந்த வீரர்கள் தங்களின் முயற்சியை நிறுத்திவிட்டு இருவரையும் பிடிக்க வெளியே வந்தனர். மெல்ல மெல்ல வீரர்கள் தங்களை சூழ்வதை பார்த்த அபயவர்மன் செய்வதறியாது திகைத்தான்.



ஆதித்தனோ எதிரிகள் சூழ்வதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அடுத்தடுத்த முயற்சிகளை ஆரம்பித்தான்.



"இளவரசே! சற்றும் தாமதிக்காமல் வாகனத்தின் முன்பகுதிக்கு விரைந்து வாருங்கள். கதவுக்கு வெளியே இரண்டு குதிரைகள் வண்டி அகப்பட்டதால் வேகம் குறைந்து நின்று கொண்டிருக்கின்றன. அதன் மேல் ஏறுங்கள்" என்று சொன்ன ஆதித்தன் கண நேரமும் தாமதிக்காமல் வண்டியை குதிரைகளோடு பிணைத்திருந்த கயிற்றை வாளால் துண்டித்தான். அதே வேகத்தில் சாரதியின் இருக்கையிலிருந்து குதிரையின் மீது கனகச்சிதமாக குதித்தான். குதித்த வேகத்தில் குதிரையின் கழுத்தை தன் இரு கைகளால் வளைத்துப் பிடித்து கொண்டான். கடிவாளம் இல்லாத குதிரையில் பயணிக்க இதை விட வேறு வழியில்லை என்பதை ஆதித்தன் அறிந்திருந்தான்.



ஆதித்தன் சொன்னதையும், செயலில் காட்டியதையும் புரிந்து கொண்ட அபயவர்மன் அவனது வழியை பின்பற்றி இன்னொரு குதிரையின் மீது தாவிகுதித்தான். வண்டியோடு இணைக்கப்பட்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குதிரைகள் இரண்டும் சுதந்திரமாக கூடுதல் வேகத்தோடு வெளியே பாய்ந்தன. கோட்டை கதவுகளுக்குள் அகப்பட்டு வண்டி நின்று விடும் என்று நினைத்த வீரர்கள் எந்த தாக்குதலும் நடத்தாமல் இருந்தனர். கதவை தள்ள வே ஆட்கள் சரியாக இருந்ததால் அதற்கு எந்த வழியும் இருக்கவில்லை. இப்போது இரண்டு பேர் தந்திரமாக வெளியேறுவதை பார்த்த உப்பரிகை வீரர்கள் தங்கள் கைவசமிருந்த வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களை இருவர் மேலும் குறிபார்த்து வீச ஆரம்பித்தனர்.



குறி தவறிய அவர்களின் ஆயுதபிரயோகத்திலிருந்து இருவரும் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.



இருவரையும் துரத்தி செல்ல வேண்டுமானால் கதவுகளை திறக்க வேண்டும் என்பதால் அனைவரும் கதவுகளை தள்ளி திறக்க முயற்சித்தனர்.



நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்த மகேந்திரன் "சண்டாளர்கள்! தப்பி விட்டார்கள். யார் அந்த வீரன்?எப்படி உள்ளே வந்தான்?" என்று கோபத்தில் இரைந்தான்.



அவன் அருகே வந்த மல்லன்" அவன் பெயர் ஆதித்தன்.அபயவர் மனை மீட்க இங்கே வந்திருக்கிறான். தன் முயற்சியில் வெற்றியும் அடைந்து விட்டான்." என்றான்.



"இங்கே இவ்வளவு கடுமையான பாதுகாப்பு நிலவும் போது அவன் எப்படி உள்ளே வர முடிந்தது?" என்றான் மகேந்திரன்.



" புதிதாக வந்த வீரர்களுடன் கலந்து உள்ளே வந்திருப்பான் என்று நான் நினைக்கிறேன்" என்றான் மல்லன்.



அங்கே வந்த ஜெயந்தன்" என்னை மன்னித்து விடுங்கள் இளவரசே! புதிய படை வீரர்கள் வரும் வழியில் ஓரு வீரனை சந்தித்ததாக சொன்னார்கள். அவன் கண்டிப்பாக நம் ஆளாக இருக்க முடியாது. அவன் ஆதித்தனுக்கு உதவியாக வந்த அந்நியனாகத்தான் இருக்க வேண்டும். வேலைப் பளுவில் உங்களிடம் இதைக் கூற நான் மறந்து விட்டேன்" என்றான் -



"உன் மறதியால் வந்த வினையை பார்த்தாயா? புதிய வீரர்களை இங்கேயே பாதுகாப்பாக இருக்க சொல். அவர்கள் இன்னும் உணவு உண்ணவில்லை. களைத்து போன வீரர்களை வைத்து கொண்டு வேட்டையில் ஈடுபட முடியாது. நம் வீரர்களை உடனே கிளம்ப சொல்,! அபயவர்மன் உயிரோடு வேண்டுமென்று அப்பா ஓலை அனுப்பியிருக்கிறார்.மல்லரே!எதிர்பாராத சம்பவத்தால் இங்கே நிலமை மாறிவிட்டது. சற்று பொருத்து கொள்ளுங்கள். அபயவர்மனை பிடித்து கொண்டு வருகிறேன்" என்றான் மகேந்திரன் -



"அபயவர்மனுக்காகவும், உனக்காகவும் நான் காத்திருக்கிறேன்" என்றான் மல்லன்.



"கோட்டையின் கதவுகளை திறந்தே வையுங்கள். வீரர்கள் தங்கள் குதிரைகளோடு வெளியேறட்டும். ஜெயந்தா கோட்டையை உன் பொறுப்பில் விட்டு செல்கிறேன். கவனமாக பார்த்து கொள்" என்றான்.



அடுத்த சில நிமிடங்களில் குதிரைகள் சீறிக் கொண்டு கிளம்பின. அதே நேரம் கொட்டடியில் இருந்த கைதிகள் ஆதித்தன் ெகாடுத்து சென்ற கண்ணாடியை பயன்படுத்தி தீ மூட்ட ஆரம்பித்தனர். அறைக்குள் கிடந்த காய்ந்த வைக்கோல், பழைய துணிகளைப் பயன்படுத்தி தீயை பெரிதாக வளர்த்து எடுத்தனர்.



கைதிகள் இருந்த கொட்டடியில் புகை வருவதை பார்த்த வீரர்களில் சிலர் ஜெயந்தனிடம் தகவலை சொல்ல ஓடி வந்தனர்.



தகவலை கேட்ட மல்லன்" இது அந்த கள்வனின் சதி வேலைகளில் ஓன்றாக இருக்க கூடும். இது நமக்கு விலக்கப்பட்ட வலை. இதில் நாம் ஏமாந்து விட கூடாது. ஆயுதம் தாங்கிய வீரர்களை அனுப்பி முதலில் அவர்களை கைது செய்.பிறகு தீயை அணைக்க முயற்சி செய்" என்றான்.



மல்லனின் யோசனைப்படி நடந்தான் ஜெயந்தன். ஆதித்தனின் இரண்டாவது திட்டம் மல்லனின் தலையீட்டால் படுதோல்வியடைந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 33



தன்னுடைய இரண்டாவது திட்டம் படுதோல்வியடைந்ததை அறியாமல் அபயவர்மனுடன் விரைந்தான் ஆதித்தன். தாங்கள் ஏமாந்து போனதை அறிந்த கோட்டை வீரர்கள் அந்த கோபத்தை கோட்டை கதவுகள் மீது காட்டி அதை எளிதாக திறந்து விட்டனர்.கதவுகளுக்கு நடுவே உடைந்து கிடந்த வண்டியை தூக்கி ஓரமாக போட்டு விரைந்து வரும் குதிரைகளுக்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தனர் வீரர்கள் .மகேந்திரனின் தலைமையில் புயலென புறப்பட்டது குதிரைகளின் அணிவகுப்பு.



நடப்பவற்றையெல்லாம் மறைந்து நின்று பார்த்து கொண்டிருந்தாள் ஆண் உடையில் இருந்த ரத்ன மாலா. அவளது கண்கள் மல்லனைத் தேடி ஏமாந்தன. மல்லன் விரைவில் வெளியேறி வந்தால் குறுக்கு வழியில் விரைந்து அபயவர்மனை மடக்கி விடலாம் என்று அவள் திட்டமிட்டிருந்தாள். அவளது எண்ணப்படியே சீக்கிரமாக வந்து சேர்ந்தான் மல்லன்.ரத்ன மாலாவிடம் வந்து சேர்ந்த மல்லன்" நம் திட்டம் பலிக்கவில்லை ரத்னா. காரியம் கைகூடி வரும் வேளையில் அந்த கள்வன் முந்திக் கொண்டு விட்டான். உன் அண்ணன் அபயவர் மனை மீட்டு வரும் வரை நாம் இங்கு காத்திருக்கத்தான் வேண்டும்." என்றான்.



"இங்கே நாம் காத்திருக்க வேண்டியதில்லை.அந்த கள்வன் அபயவர்மனுடன் இருக்கும் வரை தூசு கூட அவனை நெருங்க விட மாட்டான். ஏதாவது தந்திரம் செய்து என் அண்ணனை ஏமாற்றி விடுவான். அதனால் நாம் குறுக்கு வழியில் விரைவோம். மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த விரியன்களுக்காக காத்திருப்போம்" என்றாள் ரத்ன் மாலா



"அந்த குறுக்கு வழி உனக்கு?”



"வெகு பரிச்சயம். பல முறை அதில் நான் பயணத்திருக்கிறேன்”



"ஆதித்தனுடன் வந்த இன்னொருவன்.?”



அவன் திடிரென என் கண்களிலிருந்து மறைந்து விட்டான். ஓரு அபாயகரமான திட்டத்தின் அச்சாணி அவன் என்பது என் கணிப்பு.”



"அவனைப் பற்றி கவலைப்பட நமக்கு நேரமில்லை. வா! நீ கூறிய குறுக்கு வழியில் விரைவோம்" என்றான் மல்லன்.



இருவரும் தங்களின் குதிரைகளை குறுக்கு வழியில் திருப்பி னர்.



அதே நேரம் குதிரையில் விரைந்து கொண்டிருந்த அபயவர்மன் " கடிவாளம் இல்லாத குதிரையில் பயணம் செய்வது சிரமமாக இருக்கிறது" என்றான்.



" மன்னித்து கொள்ளுங்கள் இளவரசே! நான் தான் வண்டி கதவில் மாட்டி கொண்ட அவசரத்தில் கடிவாளத்தையும் சேர்த்து துண்டித்து விட்டேன். இன்னும் சற்று தொலைவில் தான் எதிர்காலம் காத்திருக்கிறான் பொறுத்து கொள்ளுங்கள்" என்றான்.



பன்றி குட்டையை தாண்டி இரண்டு குதிரைகளும் விரைந்தன. அதே நேரம் பாதையின் ஓரத்தில் ஓங்கி உயர்ந்திருந்த மேட்டு பகுதியில் நின்ற எதிர்காலம் தன் கைகளை ஆட்டி தன்னை வெளிப்படுத்தினான்.



இரண்டு குதிரைகளும் மேட்டில் ஏறி எதிர்காலத்தின் அருகே சென்றன. புரவியிலிருந்து குதித்து இறங்கிய ஆதித்தன் "இளவரசே! உங்கள் குதிரைக்கு இங்கேயிருக்கும் காட்டு கொடிகளை பயன்படுத்தி கடிவாளம் ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் குதிரையை பத்திரமான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்" என்றான்.



அபயவர்மன் குதிரைகளில் ஓன்றை மேட்டின் மறுபுறம் அழைத்து சென்றான்.



"என் மோகினியை அழைத்து வந்ததற்கு நன்றி நண்பா!" என்ற ஆதித்தன் " நான் சொன்னபடி எல்லா ஏற்பாடுகளும் தயாரா?" என்றான்.



" எல்லாவற்றையும் தயார் செய்து விட்டேன். வேலை நெட்டி முறித்து விட்டது" என்றான் எதிர்காலம்.



"வரும் வழியில் உன் ஏற்பாடுகளை பார்த்து விட்டுத்தான் வந்தேன்”



"போதுமல்லவா? இல்லை வேறு ஏதாவது?”



"போதும்'! இளவரசர் கடிவாளம் மாற்றும் வரை நாம் அவர்களை தேக்கி நிறுத்தி வைத்தால் போதும் " என்றான் ஆதித்தன்.



சற்று நேரத்தில் குதிரைகள் வெகு வேகமாக ஓடி வந்தன. ஆதித்தன் தன் கையில் எரிகழல் என்ற ஆயுதத்தை எடுத்து கொண்டான். நட்சத்திர வடிவிலான அந்த ஆயுதம் தொலைதூர இலக்குகளை வீழ்த்த கூடியது. பாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளை இழுத்து வளைத்து காட்டு கொடிகளால் கட்டி வைத்திருந்தான் எதிர்காலம்.



"நான் வலது பக்கம், நீ இடது பக்கம். குறி தவற கூடாது. புரிந்ததா?" என்றான் ஆதித்தன். குதிரைகள் நாள் காற் பாய்ச்சலில் வரும் போது எதிர்காலம் தன் வில்லில் அம்பை ஏற்றி மரத்தில் கட்டப்பட்டிருந்த காட்டு கொடிகளை குறி பார்த்தான். குதிரைகள் மரங்களை நெருங்கி வரும் போது இருவரும் ஏக காலத்தில் தங்கள் ஆயுதங்களை காட்டு கொடிகளின் மேல் பிரயோகித்தனர்.



காட்டு கொடிகள் அறுபட்டதால் இயல்புக்கு மாறாக கட்டி வைக்கப்பட்டிருந்த கிளைகள் மிகுந்த விசையோடு பழைய நிலைக்கு திரும்பின. கிளைகளுக்கு நடுவே சிக்கிய வீரர்கள் தாக்குதலால் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அடுத்தடுத்து வந்த குதிரை வீரர்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்து கிடந்த வீரர்களின் மேல் குதிரைகளை விட்டு விட்டு குதிரைகளோடு தடுமாறி விழுந்தனர்.



நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்த மகேந்திரன் தன் குதிரையின் வேகத்தை குறைத்தபடி "எமகாதகர்கள்" என்றான் கோபத்துடன் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 34



சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை பயன்படுத்தி ஆதித்தனும், எதிர்காலமும் நடத்திய எதிர்பாராத தாக்குதலால் தன்னுடைய வீரர்கள் படுகாயமடைந்து வீழ்ந்ததை பார்த்த மகேந்திரன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். தொடர்ந்து ஆதித்தனும், எதிர்காலமும் தங்கள் வில்லை வளைத்து அம்பை வீரர்களின் மீது எய்யத் தொடங்கியதும் மகேந்திரன் தன் வீரர்களின் வேகத்தை குறைத்து அவர்களை தேக்கி நிற்க வைத்தான்.



"இளவரசே.!நாம் அவர்களை திருப்பி தாக்கினால் என்ன?" என்றான் வீரர்களில் ஒருவன்.



"முட்டாள்! அவர்கள் தாக்குதல் நடத்த தோதான மேட்டுப்பாங்கான பகுதியில் இருக்கிறார்கள். நாம் அவர்களை திருப்பி தாக்குவதும் அவர்களை வீழ்த்துவதும் சாத்தியமல்ல. ஆனால் நம்மை தாக்குவது அவர்களுக்கு எளிதான வேலை. நாம் பொறுத்திருந்து தான் செயல்பட வேண்டும். நம் வருகையை எதிர்பார்த்து இந்த தாக்குதல் திட்டத்தை முன்னேற்பாடாக செய்து வைத்திருக்கிறான் என்றால் அவனை நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது. மேலும் மலை கிராமத்தில் அபயவர்மனின் சிறு படைதங்கியிருக்கிறது. அந்த படை அங்கேயே இருக்கிறதா இல்லை இவர்களுக்கு உதவியாக இங்கு வந்து கொண்டிருக்கிறதா என்று சரியாக தெரியாத நிலையில் நாம் அம்பு போன்ற எளிதில் தீரக் கூடிய ஆயுதங்களை வீணடித்துவிடக் கூடாது. மலை கிராமத்தை இந்த மூவர் கூட்டணி அடையும் முன்பாக நாம் இவர்களை பிடித்ததாக வேண்டும். புரிகிறதா?" என்றான் மகேந்திரன்.



"புரிகிறது இளவரசே! அவர்கள் தாக்குதலை நிறுத்தும் வரை நாம் காத்திருப்போம்”



அதே நேரம் தன் வசமிருந்த அம்புகளை எதிர்காலத்தின் அம்பு கூட்டில் போட்ட ஆதித்தன் "நண்பா ! நான் இளவரசரை அழைத்துக் கொண்டு முன்னால் செல்கிறேன். நீ இந்த அம்புகள் தீரும் வரை அவர்களை தேக்கி நிறுத்தி வை. இந்த கடிவாளம் இல்லாத ஓற்றை குதிரையை இங்கேயே விட்டு விட்டு நீ விரைவாக வந்து எங்களுடன் இணைந்து கொள்" என்றான் ஆதித்தன்.



"உன் திட்டம் எனக்கு புரிகிறது. நீங்கள் இருவரும் பாதுகாப்பான தொலைவு செல்லும் வரை நான் அவர்களை தேக்கி வைக்கிறேன். என்னைப் பற்றி கவலைப்படாமல் இங்கிருந்து இருவரும் செல்லுங்கள். இளவரசருக்காக உயிரை தத்தம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்." என்றான் எதிர்காலம்.



குதிரைக்கு கடிவாளத்தை தயார் செய்து விட்டு வந்த அபயவர்மன் எதிர்காலத்தை பார்த்து " எதிர்காலம். உன் போன்ற ஒரு நண்பன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றான்.



"கலங்காதீர்கள் இளவரசே! உங்களை காப்பாற்ற நான் என் உயிரையும் கொடுப்பேன். என்னைப் பற்றி கவலைப்படாமல் இங்கிருந்து கிளம்புங்கள்.உங்களை காண உங்கள் தந்தை ஆவலுடன் காத்திருக்கிறார்" என்றான் எதிர்காலம் அம்பை எய்தபடி.



வேறு வழியே இல்லாத நிலையில் இருவரும் எதிர்காலத்திடம் விடை பெற்று கொண்டனர். "இளவரசே! நீங்கள் கடிவாளம் பூட்டிய குதிரையை என்னிடம் கொடுங்கள். என்னுடைய மோகினியில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்.”



" மோகினியா?”



"ஆம்! அது தான் என் குதிரையின் பெயர். விரைவாக ஏறுங்கள். கிளம்பலாம்." என்றான் ஆதித்தன்.



இருவரும் குதிரைகளில் ஏறிக் கொண்டு காட்டு பகுதியில் குதிரைகளை விரட்டினர்.



இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்ட எதிர்காலம் செடிகளின் மறைவில் ஓளிந்து கொண்டு சில நிமிடங்களுக்கு ஒரு முறை அம்பை எய்து கொண்டிருந்தான். தன் கையிருப்பில் இருந்த அம்புகள் தீர்ந்ததும் தன் குதிரையை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து நழுவினான்.



எதிர்காலத்திற்கு முன்னால் விரைந்து கொண்டிருந்த ஆதித்தனும், அபயவர்மனும் காட்டுவழியில் கவனமாக முன்னேறி கொண்டிருந்தனர்.



" இந்த வழி உங்களுக்கு பரிச்சயமா இளவரசே ?" என்றான் ஆதித்தன்.



"ஆமாம். இது எனக்கு பழக்கமான பாதைதான். பல முறை இதில் நான் வந்திருக்கிறேன். இந்த பாதை நேராக நம்மை மலை கிராமத்திற்கே கொண்டு செல்லும்.ஆமாம். நன்பணே ! நீ யார்? உன் பெயர் என்ன? நீ எதிர்காலத்தின் நண்பன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவனது நண்பர்கள் அனைவரையும் நான் அறிவேன். எங்களின் நட்பு வட்டத்தில் நீ புதியவனாக இருக்கிறாய்? அதனால் தான் கேட்கிறேன்" என்றான் அபயவர்மன்.



"இளவரசே! என் பெயர் ஆதித்தன்”



"இந்த பெயர் எனக்கு பரிச்சயமான பெயராக இருக்கிறது. இது ஒரு பிரசித்தி பெற்ற கள்வனின் பெயரல்லவா?" என்றான் அபயவர்மன்



அந்த கள்வன் நான் தான் " என்றான் ஆதித்தன்



" என் தந்தைக்கும், என் நாட்டிற்கும் தீராத அவமானத்தை தேடி தந்த கள்வன் நீதானா? உருவிக் கொள் உன் வாளை. நாம் மோதிப் பார்ப்போம்" என்றான் அபயவர்மன் கோபத்துடன் .



அவனது கோபத்தை கண்டுகொள்ளாத ஆதித்தன் சிரிக்க ஆரம்பித்தான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 35



தன் தந்தையையும் தன் நாட்டையும் அவமதித்து விட்டு தப்பி வந்த கள்வன் ஆதித்தன் இவன் தான் என்று தெரிந்ததும் ஆத்திரம் தன் கண்ணை மறைக்க அவனை ஓண்டிக்கு ஓண்டி வாள் சண்டைக்கு அழைத்தான் அபயவர்மன்.

அவனது ஆத்திரமான பேச்சுக்கு மறுமொழி தராமல் சிரிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.



"ஏன் சிரிக்கிறாய் கள்வனே ? வாளை உருவு . நாம் இருவரும் மோதுவோம்" என்றான் அபயவர்மன்.



"தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது இளவரசே! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று. அது உண்மைதான் என்பதை நீங்கள் இப்போது நிருபித்து விட்டீர்கள்" என்று புன்னகைத்தான் ஆதித்தன்.



" என்ன சொல்கிறாய் நீ?" என்றான் அபயவர்மன் கொதிப்பு அடங்காமல் .



"உங்கள் தகப்பனாரையும், உங்கள் நாட்டின் விசித்திர சட்டத்தையும் அவமதித்த இந்த கள்வன் எதிரி நாடான முல்லைவனத்தின் சிறைகொட்டடியில் சிறைபட்டு கிடந்த உங்களை மீட்க ஏன் உங்கள் நண்பனுக்கு துணையாக வரவேண்டும்? அப்படி அவமதிப்பு செய்த ஒரு கள்வன் எதிரி நாடானமுல்லைவனத்தில் தஞ்சமடையாமல் ஏன் உங்களை காப்பாற்றிக் கொண்டு கடம்பத்திற்குள் திரும்ப நுழைய வேண்டும்? என் கேள்விகளை நீங்கள் சிந்தித்தால் உங்கள் மதியூகத்தை நான் பாராட்டுவேன்." என்றான் ஆதித்தன்.



"ஆமாம். உன் கேள்விகள் என்னை குழப்புகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்றால் நீ மகேந்திரனின் பக்கமாகவல்லவா நின்றிருக்க வேண்டும்? அதற்கு மாறாக நீ ஏன் என்னை காப்பாற்ற உதவ வேண்டும்?" என்றான் குழப்பத்துடன் அபயவர்மன்



"நான் கூறியவற்றை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.உங்களுக்கே உண்மை புரியும் " என்றான் ஆதித்தன்.



" என்னை காப்பாற்றத்தான் நீ வந்திருக்கிறாய் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. எனக்கு எதிரானவர்களுடன் எதிர்காலம் எப்போதும் கூட்டு சேர மாட்டான் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அப்படியானால் உன்னை இந்த காரியத்தில் ஈடுபடுத்தியவர்கள் யார்?" என்றான் அபயவர்மன்.



"வேறு யார்? மந்திரியும் மதியுதியுமான மழவராயர் தான் " என்றான் ஆதித்தன்.



"அவரது வயதுக்குறியமரியாதையை நான் இதுவரை அ வருக்கு கொடுத்ததேயில்லை.அதற்காக நான் இப்போது வருந்துகிறேன். அனுபவத்தின் மகிமையே தனிதான் " என்றான் அபய் வர்மன் வருத்தமான குரலில்.



"அதோ உங்கள் நண்பன் தன் வேலையை முடித்துவிட்டு விரைவாக வந்து விட்டான். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் எதிர்காலத்திடம் உண்மையை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றான் ஆதித்தன் பின்புறமாக கையை நீட்டி .



பின்புறமாக புயல் போல் குதிரையை விரட்டிக் கொண்டு வந்தான் எதிர்காலம். இருவரும் தங்களின் குதிரைகளின் வேகத்தை மட்டுப்படுத்த விரைவில் அவர்களுடன் இணைந்து கொண்டான் எதிர்காலம்.



"என்னாயிற்று நண்பா!" என்றான் ஆதித்தன்.



"நான் இன்னமும் அங்கே மறைந்து நின்று கொண்டு தாக்குதல் நடத்துவதாக எதிரிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணத்தினாலேயே மேற்கொண்டு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் தேங்கி நின்று விட்டார்கள். அவர்கள் இங்கு வந்து சேர வெகு நேரமாகும். அதற்குள் நாம் மலைக் கி ராமத்தை அடைந்து விடலாம். நம்முடைய சிறு படை அங்கே இருப்பதால் எதிரிகள் அங்கே வர தயங்குவார்கள். அந்த எமகாதகர்களிடமிருந்து இளவரசரை காப்பாற்றி வந்ததே மிகப் பெரிய வெற்றி" என்றான் எதிர்காலம்.



" நம் திட்டப் படி கொட்டடியில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டு விட்டதா?" என்றான் ஆதித்தன்



"நெருப்பும், புகையும் வருவதைப் பார்த்தேன். கைதிகளுக்கு அதிர்ஷ்டமிருந்தால் தப்பியிருப்பார்கள்" என்றான் எதிர்காலம்.



" உண்மைதான்.நான் அங்கே ஒரு புதிய மனிதனைப் பார்த்தேன். அவன் மிக ஆபத்தானவனாக தோன்றினான்.மகேந்திரன் நம்மை விரட்டி வரும் போது அவனை காணவில்லை. இப்போது ஏனோ அவனது நினைவு எனக்கு வருகிறது " என்றான் ஆதித்தன்.அவன் குறிப்பிட்டதுமல்ல னை.



மூவரும் மழவராயரை பற்றியும் அவரது திட்டத்தை பற்றியும் பேசியபடி குதிரைகளை நடத்தி கொண்டிருந்த போது பாதையின் குறுக்கே தன் கைகளை விரித்தபடி வந்து நின்றான் மல்லன்.



" நில்லுங்கள்" என்றான் உரத்த குரலில் மல்லன்.



மூவரும் அவனைப் பார்த்த போது ஆதித்தன் "நான் கூறியது இவனைத் தான் !” என்றான்.



எதிர்காலம்" இந்த தடையை நான் அகற்றுகிறேன்" என்றபடி தன் குறுவாளை மல்லனை நோக்கி வீசினான்.



குறுவாள் மின்னலென மல்லனை நோக்கி பாய்ந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 36



மல்லனை நோக்கி பாய்ந்த குறு வாளை இடையில் நுழைந்த ஓரு சவுக்கின் நுனி சுற்றி வளைத்து பிடித்து அப்பால் வீசியது.கண நேரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை நம்ப முடியாமல் திகைத்து நின்றனர் மூவரும்.



சவுக்கு வந்த திசையில் நின்றிருந்தாள் ஆண் உடையிலிருந்த ரத்ன மாலா. குறுக்கு வழியில் மூவரும் வரும் முன்பாகவே வந்து காத்திருந்தனர் மல்லனும், ரத்ன மாலாவும்.



"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் தடுத்து நிறுத்தியிருப்பது யாரையென்று உங்களுக்கு தெரியுமா?" என்றான் எதிர்காலம் மிரட்டும் தொனியில் .



" வீணாக மிரட்டாதே தம்பி.!முல்லைவனத்தின் சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் உன் இளவரசர் அபயவர்மருடன் எங்களுக்கு ஒரு வழக்கு இருக்கிறது. அதை தீர்த்து கொள்ளவே நாங்கள் உங்களை தொடர்ந்து வந்தோம்."" என்றான் மல்லன்.



"பிதற்றியது போதும். நான் இதற்கு முன் உங்கள் இருவரையும் பார்த்ததே கிடையாது. உங்களுடன் எனக்கு எந்த வழக்கும் பிணக்கும் கிடையாது." என்றான் அபயவர்மன்.



"பிணக்கும் வழக்கும் என்னோடு உனக்கு கிடையாது. ஆனால் அதோ சவுக்குடன் நிற்கும் நபருக்கும் உனக்கும் வழக்கு உண்டு. இருவரிடையேயும் நேர் செய்ய வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது" என்றான் மல்லன்.



"யார் இந்த நபர்? இவனது முகத்தை நான் எங்கோ பார்த்தது போல் உள்ளது." என்றான் அபயவர்மன்.



" இது யாரென்று தெரியவில்லையா? இவள் தான் நீ பழித்தும் இழித்தும் பேசிய முல்லைவனத்தின் இளவரசி ரத்னமாலா " என்றான் மல்லன்.



"ஓ! அந்த பேரழகி நீ தானோ? உன் அழகை என்னிடம் காட்டத்தான் ஆண் உடை தரித்து என்னை தேடி வந்தாயோ?” என்றான் அபயவர்மன் ஆச்சரியத்துடன்.



"அதற்காக நான் வரவில்லை. என் அழகை பழித்த உன் முதுகு தோலை உரிக்க வந்திருக்கிறேன்" என்ற ரத்ன மாலா தன் சவுக்கை காற்றில் சுழற்றினாள்.



"நன்றாகவே சவுக்கை சுழற்றுகிறாய். ஆனால் பார்பெண்ணே! எனக்கு வாள் வீச தெரிந்த அளவிற்கு சவுக்கை வீசத் தெரியாது.மோதல் என்றால் இருவருமே சம அளவு பலமுள்ளவர்களாக இருப்பது தானே போட்டிக்கு பெருமை. “



"அப்படியானால் உன் வாளை எடு. இருவரும் போது வோம்" என்ற ரத்ன மாலா தன் இடுப்பிலிருந்த வாளை உருவிக்கொண்டாள்.



"இளவரசே! சீக்கிரமாக போட்டியை முடியுங்கள். எதிரிகள் விரைவிலேயே இங்கு வந்து சேர்ந்து விடலாம்" என்றான் எதிர்காலம்.



"போயும் போயும் ஒரு பெண்ணிடம் மோதுவதா என்று தான் யோசிக்கிறேன்" என்ற அபய வர்மனின் நெஞ்சில் பதிந்தது ரத்ன மாலாவின் வாள் .



"போதும் வாய்பேச்சு. எடு உன் வாளை.வரத்தில் ஆண் பெண் என்ற பேதமில்லை! ஒரு வேளை என்னிடம் தோற்றுப் போய் விடுவோம் என்று பயப்படுகிறாயோ? என்னவோ? என்றாள் ரத்ன மாலா கேலியுடன் .



" இவள் வாய் மிகவும் நீள்கிறது" என்றான் அபயவர்மன்.



“வாள் எடுத்தால் என்கையும் நீளும்.பார்க்கிறாயா?" என்றாள் ரத்ன மாலா.



" எதிரிகள் விரட்டி வரும் போது போட்டியா? நாம் வேண்டுமென்றால் மலை கிராமத்தில் இந்த போட்டியை நடத்துவோமே?" என்றான் அதித்தன்.



"அதற்கு வாய்ப்பேயில்லை. அதோ எதிரிகள் நம்மை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டார்கள்" என்றான் எதிர்காலம் பாதையின் பின்புறம் வந்து கொண்டிருந்த மகேந்திரனையும் அவனது படைகளையும் சுட்டி காட்டியபடி.



மின்னல் வேகத்தில் வந்த மகேந்திரனின் படை அனைவரையும் சுற்றி வளைத்தது. குதிரையில் அமர்ந்திருந்த மகேந்திரன் வெற்றி சிரிப்பு பொன்றை சிரித்தான். "என்னிடமிருந்து தப்பி செல்ல நினைத்தால் அது நடக்குமா ? " என்றவனின் பார்வை மல்லனின் மீது படிந்தது.



"மல்லரே! நீர் எப்படி இங்கு வந்தீர்? நான் நீர்மலை கோட்டையில் இருப்பதாகவல்லவா நினைத்தேன்.?இங்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?" என்றான் ஆச்சரியத்துடன் .



"உனக்கு உதவி செய்ய வேண்டுமென்றுதான் நான் குறுக்கு வழியில் விரைந்து வந்து இவர்களை மடக்கினேன்" என்றான் மல்லன்.



"நல்ல காரியம் செய்தீர்கள். எதிரிகள் பிடிபட்டு விட்டார்கள். இவர்களை கைது செய்து இழுத்து வாருங்கள்" என்ற மகேந்திரன் ஆண் உடையில் இருந்த ரத்ன மாலாவை பார்த்து "யார் இந்த புது ஆசாமி?" என்றான்.



" உன் தங்கை தான்!" என்றான் மல்லன்.



"அவள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறினீர்களே? இங்கே எப்படி வந்தாள்? அதுவும் ஆண் உடைதரித்து. மல்லரே! இங்கே என்ன நடக்கிறது?" என்றான் மகேந்திரன்.



"ஓரு சிறிய கணக்கொன்று இங்கே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அதை தீர்த்து விட்டால் நாம் கிளம்பி விடலாம்" என்றான் மல்லன்.



"கணக்கா? என்ன கணக்கு " என்றான் மகேந்திரன் .



"என் அழகைப் பழித்தவனை நான் பழி வாங்க வேண்டாமா? அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கிறது. வாள் போட்டிக்கு அழைத்திருக்கிறேன் அபயவர் மனை.போட்டி நடைபெறும் நேரத்தில் நீ குறுக்கே வந்து கெடுத்து விட்டாய்" என்றாள் ரத்ன மாலா கோபத்துடன் .



"வாள் சண்டையில் என்னையே திணற செய்பவள் நீ? நீ சண்டை செய்வதைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டது. அபயவர் மா? ஒரு பெண்ணிடம் தோற்க தயாராக இரு" என்றான் மகேந்திரன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 37



வீரர்கள் சுற்றி வளைத்து நிற்க இருவரும் வாள் சண்டைக்கு ஆயத்தமானார்கள். இருவரும் கைகளில் வாளுடன் எதிரெதிரே நின்ற போது ஆதித்தன் "நடுவர் இல்லாமல் ஒரு போட்டி நடப்பது முறைதானா?" என்று ஒரு கேள்வியை வீசினான்.



"உன் கேள்வி அர்த்தமுள்ளது. இங்கே வயதில் மூத்தவர் மல்லன்.அவரே நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கட்டும்" என்றான் மகேந்திரன்.



இருவரிடையேயும் துவந்த யுத்தம் தொடங்கியது. துவக்கத்தில் பெண் தானே என்ற அலட்சியத்துடன் களமிறங்கிய அபயவர்மன் தான் எண்ணியது எவ்வளவு பெரிய தவறு என்று விரைவிலேயே புரிந்து கொண்டான்.ரத்னமாலா ஓரு ஆணுக்கு நிகராக வாள் சண்டையில் தேர்ச்சி பெற்றிருப்பதை அவளுடைய லாவகமான வாள் வீச்சில் தெரிந்து கொண்ட அபயவர்மன் தன் அலட்சியத்திற்கு விரைவிலேயே விடை கொடுத்து விட்டு தீவிர தாக்குதலில் இறங்கினான். சில நிமிடங்களிலேயே ரத்ன மாலா தன்னிடம் வேண்டுமென்றே தோற்க சண்டையிடுவது போல் உணர்ந்த அபயவர்மன் அவளது தலைப்பாகையை நோக்கி வாளை வீசி அவளை நிலைகுலைய செய்தான்.



தலைப்பாகையை இழந்து தன் கரிய கூந்தலுடன் சுழன்று கீழே சரிந்தவளின் கையை பிடித்து இழுத்தான் அபயவர்மன். அவள் கீழே விழுந்து காயம் பட்டு விடக் கூடாதென்ற எண்ணத்தில் தான் அபயவர்மன் அவளை தன் பக்கம் இழுத்தான் .தன் நெஞ்சில் வந்து மோதியவளின் முகத்தை பார்த்த அபயவர்மனின் வாள் நழுவி கீழே விழுந்தது. அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. " பத்மாவதி! நீயா ?நீ உயிருடன் தான் இருக்கிறாயா?" என்றான் அபயவர்மன் குதூகலத்துடன் .



"ஆமாம். நான் உயிருடன் தான் இருக்கிறேன்" என்றாள் ரத்ன மாலா மெல்லிய சிரிப்புடன்.



"பத்மாவதி இறந்து விட்டதாக கூறினாயே எதிர்காலம்? இதற்கென்ன சொல்கிறாய்?" என்றான் அபயவர்மன் ரத்ன மாலாவை தழுவியபடி.



“ எனக்கு ஓன்றும் புரியவில்லை இளவரசே! நான் விசாரித்த போது பத்மாவதி இறந்து விட்டதாகத் தான் கூறினார்கள்" என்றான் குழப்பத்துடன் எதிர்காலம்.



"இங்கே என்ன நடக்கிறது? " என்றான் மகேந்திரன் புரியாத நிலையில்.



"நான் சொல்கிறேன் அண்ணா .! மலை கிராமத்திற்கு வந்த நான் அபயவர் மரை கண்டதும் காதலித்தேன். அவரும் மலை சாதிப் பெண் என்று நினைத்து என்னை காதலித்தார். நான் அவரிடம் விளையாடுவதற்காக என் தோழி பத்மாவதியின் பெயரை என்னுடைய பெயராக மாற்றி கூறிவிட்டேன். விளையாட்டாக நான் செய்த செயல் மிகப் பெரிய விபரீதத்திற்கு வித்திடும் என்று நான் நினைக்க வேயில்லை. எதிர்பாராத விபத்தாக அவள் பாம்பு கடித்து இறந்து விட்டாள். விசாரிக்க வந்த எதிர்காலம் நான் பெயரை மாற்றி கூறியிருப்பதை அறியாமல் இறந்து போன பத்மாவதி நான் தான் என்று நினைத்து விட்டார். என் தோழியின் மரணத்தால் கவலையடைந்த மலை கிராம தலைவர் என்னை பாதுகாப்பு கருதி தலை நகருக்கு அனுப்பி விட்டார். என்னைப் பற்றி இழித்தும் பழித்தும் நானே தான் விளையாட்டுக்காக இளவரசரிடம் கூறினேன். என் விளையாட்டு செயல் பெரும் விபரீதத்தை கொண்டு வந்து விட்டது. அதற்காக எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள் ரத்ன மாலா.



“உன்னை மன்னிக்க வே முடியாது. உன் காதல் கதையை மறைத்து என்னை ஏமாற்றி உனக்கு பாதுகாவலனாக அழைத்து வந்து விட்டாய். உன்னை நம்பி பொய் ஓலையை கொடுத்து நான் மகேந்திரனை வேறு ஏமாற்றி விட்டேன்" என்றான் மல்லன் கோபத்துடன் .



"ஓ ஹோ! இது வேறு நடந்திருக்கிறதா? அபயவர்மன் பத்மாவதியின் மீது வைத்திருக்கும் காதலை நான் நன்றாகவே அறிவேன்.மல்லரே! கடும் சித்ரவதைகளின் போதும் அவன் பத்மாவதியை நினைத்தே உயிர் வாழ்ந்தான். என் தங்கைக்காக உயிரை விடும் ஒருவனை நான் மிகவும் துன்புறத்திவிட்டேன். அதற்காக அபயவர் மர் என்னை மன்னிக்க வேண்டும். நம் எல்லோரையும் ஏமாற்றிய இந்த பெண்ணுக்கு தண்டணை தரும் பொறுப்பை உம்மிடம் தருகிறேன். நல்ல தண்டணையாக கொடுங்கள்" என்றான் ம கேந்திரன்.



ரத்ன மாலா மல்லனை திகிலோடு பார்க்க "இனி எப்போதும் தப்பி செல்ல முடியாத ஆயுள் தண்டனையை தருகிறேன்" என்ற மல்லன் அபயவர் மனை நோக்கி ரத்ன மாலாவை தள்ளி விட்டான். தன் நெஞ்சில் விழுந்தரத்ன மாலாவை காதலோடு அணைத்து கொண்டான் அபயவர்மன்.



" இந்த காதல் விவகாரத்தை நீ முதலிலேயே சொல்லியிருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும் " என்றான் மல்லன்.



" என் தோழியின் எதிர்பாராத மரணத்தால் நான் நிலை குலைந்து போயிருந்தேன். அந்த இடைவெளியில் காரியம் கை மிஞ்சி போய்விட்டது. இந்த கள்வன் மட்டும் சரியான நேரத்தில் இளவரசரை கடத்தி வராவிட்டால் இந்த உண்மையாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும் - நாம் நன்றி சொல்ல வேண்டியது முதலில் இவருக்குத் தான் " என்றாள் ரத்ன மாலா.



"எனக்கும் இது எதிர்பாராத திருப்பம்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. மகேந்திரா நீ இளவரசியை அழைத்து செல். மல்ல ரே நீர் கடம்பத்திற்கு இளவரசருடன் பயணப்பட்டு திருமண தேதியை பேசி முடிவு செய்யுங்கள்" என்றான் ஆதித்தன்.



" ஆதித்தா ! நடந்தவை அனைத்திற்கும் நீதான் காரணம். நீயும் எங்களுடன் வந்து அரண்மனையில் விருந்தாளியாக தங்கவேண்டும்" என்றான் அபயவர்மன்



"அதை நான் வழிமொழிகிறேன்" என்றான் மகேந்திரன்.



"உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே்! கள்வனான நான் இந்த மாதிரியான விவகாரங்களில் ஈடுபட காரணமே இறந்து போன சித்திரசேனன், சிறையில் அடைபட்டு கிடக்கும் அந்த அப்பாவி கைதிகள் போன்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான். உங்களின் தனி மனித விருப்பு வெறுப்புகளால் பாதிக்கப்பட போவது சாதாரண குடிமக்களே! அவர்களை மனதில் வைத்து எப்போதும் ஆட்சி ெசய்யுங்கள். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவி. என் வேலை முடிந்து விட்டது. நான் வருகிறேன்" என்றான் ஆதித்தன்.



" உன் ஆதங்கம் புரிகிறது நண்பனே! அந்த கைதிகளை உரிய மரியாதையோடு அனுப்பி வைக்கிறேன். இந்த மாதிரியான தவறுகள் இனி நிகழாது என்று உறுதி கூறுகிறேன்" என்றான் மகேந்திரன்.



" நான் கிடைத்து விட்டதால் என் நாட்டின் விசித்திரமான சட்டம் இனி காலாவதியாகிவிடும். இனி சாதாரண மக்களின் நலனை எண்ணி பார்த்து எல்லா திட்டங்களையும் செயல்படுத்துவேன்" என்றான் அபயவர்மன்.



" நல்லது நண்பர்களே! நான் எங்கிருந்தாலும் உங்கள் நினைவுகளுடன் இருப்பேன். இதுவரை எனக்கு துணையாக இருந்த நண்பனே எதிர் காலம்.!நான் போய் வருகிறேன்" என்றான் ஆதித்தன்.



எதிர்காலத்தின் கண்கள் கலங்கின. " உன் போன்ற ஒரு வீரனை நண்பனை என்னால் மறக்கவே முடியாதுஆதித்தா!" என்றான் எதிர்காலம்.



"சரி நண்பர்களே! காலமும் நேரமும் கடவுளின் கருணையும் வாய்த்தால் நாம் அனைவரும் மீண்டும் சந்திப்போம். போய் வருகிறேன் ரத்ன மாலா.அபயவர் மனை பத்திரமாக பார்த்து கொள்" என்ற ஆதித்தன் அங்கிருந்து கிளம்பினான்.



ரத்ன மாலா கண்ணீர் மல்க அவனை பார்த்து கொண்டிருந்தாள்.



அவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஆதித்தன் தன் குதிரையில் புள்ளியாய் மறைந்தான்.



அவன் வருகைக்காக கள்வர் புறம் காத்திருந்தது.



முற்றும்.
 

bbk

Member
Messages
6
Reaction score
2
Points
18
கதை முழுக்க கூடவே பயணித்தவர் போல் கதை சொல்லியுள்ளீர் ஆச்சர்யம் அபாரமான திறமை
 
Top Bottom