Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கத்திமுனை காயம் செய்யும்..கண்பட்டால் மாயம் செய்யும் = ராம் ஸ்ரீதர் / சிறுகதை

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
180566204_10223363100000291_7164283938228795740_n.jpg

காலையில் சீஸ் தடவப்பட்ட ரொட்டித் துண்டுகளை மென்றுகொண்டு, செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தபோது, அந்த அழைப்பு வந்தது.


இடம்: பெங்களூர் - இந்திரா நகர்
காலம்: 23 மே 1999
நேரம்: காலை 9.20 (இருக்கலாம்)
=========================

இவ்வளவு துல்லிய விவரங்கள் தருவது பிற்பாடு நடக்கப்போகும் ஆச்சரியங்களுக்கு உதவியாக இருக்குமே என்பதுதான் காரணம்.

===========================

"விக்ரம்" என்றேன்.

மறுமுனையிலிருந்து ஒரு ஜாமூன் குரல், "விக்ரம், கரன்ஜித் ஹியர்" என்றது.

கரன்ஜித்?? கேள்விப்படாத தேன் தடவப்பட்ட குரல்."எஸ்" என்றேன்.

"எனக்காக ஒரு நியூஸென்ஸ் கேஸை நீ கவனிக்கவேண்டும். செய்வாய்தானே?" என்றது அந்தத் தே.த. குரல்.

"நிச்சயம். விவரம் சொல்ல முடியுமா?" என்றேன்.

"விக்ரம், உனக்கு ப்ரிகேட் ரோட் / சர்ச் ஸ்ட்ரீட் முனை தெரியும்தானே? அங்கே இருக்கும் ப்ளோ அவுட் (Blow Out) பாருக்கு இன்று வரமுடியுமா? காத்திருப்பேன்" என்றது அந்த பாயாஸக்குரல்.

"நேரம்" என்றேன் என் கெத்து குறையாமல்.

"ஒரு 11.30 - 12:00 மணி?"

"சந்திக்கலாம். என் ஃபீஸ்....." மேற்கொண்டு தொடரும் முன்

"ப்ளாங் செக் கொண்டு வருகிறேன்" என்று அந்தக் குரல் வெட்டியது.

==========================

பெங்களூரில் நான் நடத்திவரும் என்னுடைய இந்தத் தனியார் துப்பறியும் தொழிலில் இது போன்ற குரல்களுடன் அழைப்புகள் வருவது மிகவும் அபூர்வம்.

பொதுவாக, ஏதாவது ஒரு நஞ்சுண்ட ராவ் அல்லது கிருஷ்ணா ராவ் அழைத்து, தன் மகளுக்காக பார்த்திருக்கும் மாப்பிளையைப் பற்றிய விவரம் திரட்ட முடியுமா? என்பது போன்ற த்ராபையான அழைப்புகளே வரும்.

எப்படி இருந்தால் என்ன? நாய் விற்ற காசு குறைக்கவா செய்யும் என்று விட்டுவிடுவேன். அட, பழமொழியெல்லாம் பேசுகிறாயே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். என்ன செய்வது? வயதாகிவிட்டது.

ஆரம்பித்த 8 வருடங்களில் நிறையவே குற்றங்களைப் பார்த்து, குழந்தைகளைக் கண்டுபிடித்து, கல்யாண மாப்பிளை / பெண் சோரம் போனதா? தண்ணி / தம் பழக்கம் உண்டா? தான் வெளியூருக்குப் போகும்போது மனைவி கற்போடு இருக்கிறாளா?..…

மேல் விவரங்கள் எதற்கு? ஸினேரியோ புரிந்தால் சரி.

ஓரளவு பணமும், புகழும் வந்து, என்னுடைய சில நல்ல சட்டைகள் கிழிந்து, சில பேருடைய எலும்புகள் முறிந்து....PEEV (Private Extra Eye Vikram) பெயர் வாங்கியாகி விட்டது.

சில மழுப்பலான கேஸ்களை போலீஸ் நேரடியாகக் கையாளாது. காரணம், அரசியல், புகழ், பணம் போன்ற அடாவடியான காரணங்கள்.

சுஜாதா ஸார் மூலம் உப்பார்பேட் எஸ்.பி பிராபகர் ராவ், நல்ல பழக்கம்.

சுஜாதா ஸார் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து, "ஏதேனும் சிக்கலான போலீஸ் கேஸ் வந்து உன்னிடம் உதவி கேட்டால் செய்வாயா? விளையாட்டுத்தனமாக இருந்துவிட மாட்டாயே?" என்று கேட்டார்.

என் வாழ்வில் ஒரு சிலபேர் மீது எனக்கு கலப்படமில்லாத, உண்மையான மரியாதை உண்டு.
அவர்களில் முதன்மையானவர் சுஜாதா ஸார். அவருக்கு வாக்குக் கொடுத்தேன். பிறகு அவரும் சென்னைக்குக் கிளம்பிப் போய் செட்டிலாகிவிட்டார்.

========================

சரியாக 11.40 மணிக்கு ப்ளோ அவுட் பாரை அடைந்து 'வைட்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட்' .......அரையிருட்டில் காத்திருந்தேன்.

12.00 மணிக்கு அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள். மிகவும் வயது குறைவான பெண்ணாகத்தான் தெரிந்தாள். பார்த்தவர்களை பைத்தியம் பிடிக்க வைக்கும் அழகும், அதற்கேற்ப உடலமைப்புடன்....இப்படியெல்லாம் பெண்கள் இருக்கிறார்களா என்ன??

என்னுடைய இருக்கையிலிருந்து கையைக் காட்டினேன். அரையிருட்டில் என்னைப் பார்த்து அடையாளம் (??) கண்டுகொண்டு, அருகே வந்து அமர்ந்தாள்.

பொதுவாக, வாசனை சமாச்சாரங்களை நான் அறிந்தவரை நிறைய பெண்கள் சற்று அதிகமாகவே உபயோகிப்பார்கள். இந்தப் பெண் அப்படி அல்ல என்று உணர்ந்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். மிக மெலிதான, ஆனால் வித்தியாசமான வாசனை....

"கரன்ஜித்?? விக்ரம்" நீட்டப்பட்ட கையைக் குலுக்கினேன்.

தொடரும் எங்கள் உரையாடல் ஒருமையில் இருப்பதை கவனிக்கலாம். எங்கள் பேச்சு ஆங்கிலத்தில் நடந்ததால், அந்த மொழியில் நீ / நீங்கள் வித்தியாசம் கிடையாததால், தமிழில் அதைச் சொல்லும்போது அவ்வாறு சொல்கிறேன்.

புன்னகைத்தாள். அழகான பல்வரிசை. "கரன்ஜித் கௌர் வோரா என் முழுப் பெயர். நான்தான் கரன்ஜித் என்பதை எப்படி யூகிக்க முடிந்தது?" என்றாள் உறுத்தாத ஆங்கிலத்தில்.

"என் தொழில்.......சுலபமாக மோப்பம் பிடிக்க முடியும்...இரண்டாவது, உள்ளே நுழைந்தவுடன், நீ என்னை இங்கே வர அழைத்ததால், டேபிள் உன் பெயரிலிருக்கும் என்ற யூகத்தில் பேரரிடம் கேட்டேன். இங்கே என்னை அமரச் சொல்லிவிட்டான்" சிரித்தேன்.

"ஓ ....தட்ஸ் ஈஸி" என்று அவளும் சிரித்தாள்.

"ஆம் என்னைப் பார்த்து அடையாளம் தெரிந்த மாதிரி சிரித்தாயே? அது எப்படி?" என்றேன்.

"உனக்கு முரளியைத் தெரியும்தானே? அவன் என்னுடைய நண்பன். உன்னுடைய புகைப்படம் ஒன்றை எனக்குக் காட்டி அறிமுகம் செய்தான்" என்றாள்.

அடப்பாவி....முரளி !! என்று அவன் மேல் ஒரு செகண்ட் பொறாமை வந்தது.

"மகிழ்ச்சி...., எந்தவிதத்தில் என் உதவி தேவை? அதற்கு முன் உன் வயதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

"ஓ, பதினெட்டு....அடல்ட் தான்" என்று சிரித்து, "யங் அடல்ட் என்று சொல்லலாம்" என்றாள்.

"நிச்சயம்.....என்ன உதவி...." என்று இழுத்தேன்.

"நீ போலீஸ் மாதிரி நம்பிக்கையான ஆள்தானே?"

"ஆம். போலீஸ் நம்பிக்கையானவர்கள் என்றால், அதைவிட நான் அதிக நம்பிக்கையானவன்தான்" என்றேன் குரலில் மேலும் ஒரு டோஸ் நம்பிக்கையை அதிகமாகச் சேர்த்து.

"எனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது......" அவள் தொடரும் முன் வெட்டினேன்.

"ஒரு நீல டீ ஷர்ட் பார்ட்டி - திடகாத்திரன் - 6 அடி இருக்கலாம். உள்ளே நுழைந்து உன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறானே? அவன்தானா உன் சிக்கல்?" என்றேன்.

சட்டென அவள் பார்வை அவன் மேல் சென்று மறுபடி மீண்டது, "பாஸ்டர்ட், இங்கும் வந்துவிட்டான். அவனே தான். கிட்டத்தட்ட 10 நாட்களாக என்னை எங்கு சென்றாலும் வேட்டை நாய் போல பின் தொடர்கிறான். ஒரு நாள் பேச முயன்றான். நான் சட்டென டாக்ஸியேறி சென்றுவிட்டேன். அவன் யாரென்று தெரியவில்லை. நிழல் மாதிரி எங்கு சென்றாலும் பின் வருகிறான்" அவள் குரலில் ஒருவித பதட்டம் தெரிந்தது.

"புரிகிறது கரன்ஜித் . நிழல் விழாத இந்த அரையிருட்டிலும் வந்துவிட்டானே. சிக்கல்தான். யார் என்று கேட்கலாம். எனக்கு ஒரு பியர் (என்னுடைய ப்ராண்ட் பெயரைச் சொன்னேன்) சொல்லு. கூடவே மிளகு சற்று அதிகம் சேர்த்த ஒரு மஸாலா ஆம்லெட்" பதிலுக்குக் காத்திராமல் எழுந்தேன்.

அவன் என்னைப் பார்த்துவிட்டு வேறு பக்கம் யாரையோ தேடுவது போல.... "முயற்சிக்காதே, முரண்டு பண்ணாமல் என்னுடன் கொஞ்சம் வெளியே வா. பேசலாம்" படியிறங்கினேன்.

வெளியே வந்து நின்று கொண்டேன். அருகே ஒரு பெட்ரோல் பங்க் மதிய நேர சுறுசுறுப்பில் இருந்தது. அவன் மெதுவாக வெளியே வந்தான். வெயில் கண்ணாடி அணிந்துகொண்டு.

"யார் நீ ? என்ன வேண்டும்?" கன்னட ஆங்கிலம்.

அவனைப் பார்த்து புன்னகைத்தேன். என் உயரம் 6 அடி 3 அங்குலம். எனவே, என் கண் பார்வையைத் தாழ்த்தியே பேசினேன்.

"நீ யார் என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. என்னுடன் இருக்கும் கரன்ஜித்தை வேட்டை நாய் மாதிரி பின் தொடராதே. உனக்கு நல்லதல்ல. நான் போலிஸுக்கு போக மாட்டேன். நீ ஆஸ்பத்திரிக்குப் போக முயற்சிக்காதே" என்றேன்.

அமிதாப் பச்சன் அளவு இல்லை என்றாலும், என் குரலும் சற்று கனமான பாரிடோன் (baritone) குரல்தான்.
அவனும் புன்னகைத்தான். "மிரட்டுகிறாயா? நான் யார் என்று தெரியாமல் பேசாதே!"

"அட, நீ இடி அமின் ஆகவே இருந்துவிட்டு போ. எனக்கு எந்த சாணியும் இல்லை. ஆனால், உன் உளவு வேலையை விட்டுவிடு"

சற்று...சற்றுதான் அருகில் வந்தான். சட்டென்று என் வலதுகையால் அவன் தொண்டையில் தட்டினேன். அவன் அதை எதிர்பார்க்காமல் ஒரு கணம் மூச்சுக்காகத் திணறியபோது, அவன் வலது விலாவின் கீழ் அடித்தேன். கீழே விழுந்துவிட, கூட்டம் எங்களைச் சுற்றி சேர ஆரம்பித்தது. சிரமத்தோடு எழுந்தவனை வலது காலால் பலமாக இடுப்புக்குக் கீழே உதைத்தேன். மறுபடி விழுந்தான்.

"இனி, இது மோசமாகும். எச்சரிக்கிறேன். போய்விடு" திரும்பி நிதானமாக பாருக்குச் செல்லும் படிகளில் ஏறி மறைந்தேன்.

===================

உள்ளே துடிப்பான இசைக்குச் சில இளைஞர்கள் மெய்மறந்து ஆடிக் கொண்டிருக்க, மெதுவாக கரன்ஜித் அருகே சென்று அமர்ந்தேன். நான் அமரவும், நான் கேட்டிருந்த பியரும், ஆம்லெட்டும் என் முன்னால் வைக்கப்பட்டன. என்னை நிமிர்ந்து பார்த்த கரன்ஜித் "என்னாயிற்று அவனுக்கு?" என்றாள்.

நான் பியர் கோப்பையிலிருந்து ஒரு மிடறு விழுங்கிவிட்டு, கோப்பையை மேசை மேல் வைத்தேன், "எனக்குத் தெரிந்து இனி அவன் இங்கே வரமாட்டான் என்று தோன்றுகிறது" என்றேன் நிதானமான குரலில்.
என்னை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் பயம் தெரிந்தது, "விக்ரம், உண்மையில் வேறு பிரச்சினை எதுவும் ஆகாதுதானே?"

"ஆகாது என்றுதான் நினைக்கிறேன். அவன் எதற்காக உன்னைப் பின்தொடர்கிறான் என்று தெரியவில்லை என்கிறாய். எனக்கும் புரியவில்லை. உன் அப்பாவுக்கு வேண்டாதவனா? வியாபாரத்தில் சிக்கல் ? சொந்தக்காரர்கள் மூலம் சொத்தில் ஏதேனும் வில்லங்கம்? இப்படி ஏதாவது நடந்திருந்தால் என்னிடம் மறைக்காமல் பகிர்ந்துகொள்ளலாம்" என்றேன்.

"நீ குறிப்பிட்டது எதுவுமே இல்லை. நான் ஒரு ம்யூசிக் வீடியோ செய்தேன் - ஒரு இரண்டு மாதம் முன்பு - என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய பாண்ட்தான். அதில் நான் கொஞ்சம் செக்ஸியாக உடை அணிந்திருந்தேன். அந்த விடீயோவின் ஒரு காப்பி எப்படியோ என்னுடைய கல்லூரி நண்பன் கௌஷிக் வசம் போய்விட்டது. அவனுக்கு எப்போது என் மீது சற்று விவகாரமான கண். படுக்கையில் என்னை ஒரு முறையாவது சாய்த்து விடவேண்டும் என்ற ஹாரிஸாண்டல் இன்டென்ஷனுடன் திரிந்தான். என்னிடம் ஒருமுறை வெளிப்படையாகவே பேசினான். நான் கோபமாக மறுத்துவிட்டேன். இங்கே வந்த வெற்றுக் குண்டன், கௌஷிக் ஆள் என்று நினைக்கிறேன். அவன் எப்படியாவது என்னைச் சம்மதிக்க வைக்கும் நோக்கத்துடன் பின்னால் நாய் போல வருகிறான்" என்றாள்

தொண்டையில் குளிர்ச்சியான பியருடன், மிளகின் காரம் சேர்ந்து இளஞ்சூட்டில் ஆம்லெட் உள்ளே சென்று கொண்டிருந்ததை அனுபவித்தவாறே என் முன் இருந்த கரன்ஜித் பேசுவதைக் கவனித்தேன்.

அவள் வார்த்தை ஜாலத்தை வெகுவாக ரசித்தேன். படுக்கைக்கு ஒருவன் கூப்பிடுகிறான். இந்தப் பெண் என்னடாவென்றால் ஆங்கிலத்தில் ஸ்டைலாக அதை 'ஹாரிஸாண்டல் இன்டென்ஷன்' (horizontal intention) என்கிறாள்.

இவ்வளவு சின்ன வயதிலேயே கவர்ச்சியாக உடையணிந்து ம்யூசிக் வீடியோவெல்லாம் தயாரித்து...… அவளைப் பார்க்கும் போது நிறையவே கிளர்ச்சியாக இருந்தது.

நம்மூரில் (பெரும்பாலான) பெண்களுக்கு இருக்கும் தயக்கம், பயம், வெட்கம் போன்றவை, நான் பார்த்தவரை பெங்களூரில் உள்ள பல பெண்களிடம் இருந்ததில்லை. சரியாகச் சொல்வதானால், கரன்ஜித் போன்ற மேற்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு......

"நீ எதுவும் சாப்பிடவில்லையா?" என்றேன்.

சிரித்தாள். நன்றி சொன்னாள்.

"எனக்கும் பியர் பிடிக்கும், ஆனால், தேவையில்லாத இடத்தில சதை போடும். முகம் உப்பினாற்போல ஆகிவிடும். வேண்டாம்" என்றாள்.

நான் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.

"சரி, வேறு ஏதாவது ஜூஸ்....?" முடிக்கும் முன், "எனக்குப் பிடித்தது பைன் ஆப்பிள். இப்போது ஸ்டாக் இல்லையாம்" என்றாள்.

சிறிது நேரம் என்னென்னவோ பேசினாள். அவளுடைய எதிர்காலக் கனவு, எதிர்பார்ப்புகள், பெற்றோர் / உடன் பிறந்தோர்..…

"ஒரே சகோதரன், பெயர் சந்தீப். என்னைப் பார்த்தாலே பயப்படுவான். அவனுடைய ஜீன்ஸ், டி ஷர்ட் எல்லாம் திருடிவிடுவேன். போட்டுக்கொண்டு நண்பர்களோடு அலைவேன். கிட்டத்தட்ட நானொரு டாம்பாய் தெரியுமா? பெண் என்ற அடையாளமே அவ்வளவாகப் பிடிக்காது....."

சில வருடங்கள் கழித்து அவளுடைய இந்த ஸ்டேட்மெண்டை நினைத்து நிறைய நாள் சிரித்ததுண்டு. ஏனென்று உங்களுக்கு விரைவில் சொல்கிறேன்.

"நாம் செல்லலாமா?" என்றேன்.

எழுத்து கொண்டாள். "பில்?" என்றேன்.

"வராது" என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள். "என்ன? அந்த பார் தெரிந்தவர்கள் நடத்துவதா? காசு கொடுக்க வேண்டாமா?" என்று கேட்டேன்.

"இல்லை. என் அப்பா நடத்துவதுதான்" என்று சொல்லி மறுபடியும் என்னை ஆச்சரியப்படுத்தினாள்.

==================

மூன்று நாட்கள் கழித்து, "விக்ரம், விஷயம் தீவிரமாகிறது. இந்த கௌஷிக் சனியன் என்னைக் கூப்பிட்டிருக்கிறான். நீ அன்று பாரில் பார்த்து அடித்து விரட்டினாயே, அதே வெற்றுக் குண்டன் இன்று நான் காலையில் பார்க்கில் ஜாகிங் சென்று கொண்டிருந்தபோது என்னை இடைமறித்து இன்று மாலை ஆறு மணிக்கு அதே பாருக்கு வரவேண்டும் என்று சொன்னான். 'உன்னுடைய அந்த பாடிகார்டையம் வேண்டுமானால் கூட்டி வா' என்று நக்கலாகச் சொன்னான். நீ என்ன நினைக்கிறாய்?? நீ வருவாய்தானே? இல்லாவிட்டாலும் நான் போய்தான் ஆகவேண்டும். நாளை இன்டர்நேஷனல் செலிபிரிட்டி ஆகப்போவதால் என்னுடைய அந்த வீடியோ / அல்லது புகைப்படங்கள் தப்பானவர்கள் கையில் சிக்கக்கூடாது. தட்'ஸ் அ மஸ்ட்" என்றாள்.

சில வினாடிகள் யோசித்தேன். போன சந்திப்பிற்கு பின்னர் சமர்த்தாக எனக்கு தபால் மூலம் நான் சொன்ன தொகையை செக் அனுப்பிவிட்டாள். போய்த்தான் பார்ப்போமே.

"சரி, கரன்ஜித் வருகிறேன். அதே பார். மாலை மணி 5.45க்கு வந்துவிடுகிறேன். நீயம் வந்துவிடு. அவர்கள் வரும்முன் சிறிது பேசிவிடலாம்" என்றேன்.

குரலில் மகிழ்ச்சியுடன், "தட்ஸ் மை பாய்" என்றாள்.

'நாளை இன்டர்நேஷனல் ஸெலிப்ரிட்டி ஆகப்போவதால்.... ' அப்பா என்ன ஒரு நம்பிக்கை !!

========================

அன்று மாலை சந்தித்த போது உற்சாகமாக இருந்தாள், "விக்ரம், உனக்குத் தாங்க்ஸ் சொல்லியே ஆகவேண்டும் நீ அனுப்பிய வரதன், சிறிது நேரத்திற்கு முன் என்னிடம் சம்பந்தப்பட்ட வீடியோ/ புகைப்படங்கள் - அதன் நெகட்டிவ் உட்பட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார். ஒரு ஸ்டாம்ப் ஒட்டிய பாண்ட் பேப்பரில் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், இனி எதுவும் பாக்கி இல்லை என்று எழுதியிருந்ததில் கையெழுத்துப் போடச் சொன்னார். உனக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்தார். உன் அலுவலக ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது. இங்கு வரக் கிளம்பியிருப்பாய் என்று நினைக்கிறேன்" என்றாள்.

ஒரு வினாடி, திடுக்கிட்டு பின் உடனே சுதாரித்தேன். "வரதன் இங்கேயும் வந்திருக்கிறான், உன் நண்பன் கௌஷிக் அந்த வெற்று குண்டன் புடைசூழ" என்றேன் நக்கலான சிரிப்புடன்.

அந்த வரதன் என்ற, பார்க்க மிக சாதுவான, ஆள் மெதுவாக எங்கள் மேசையை அணுகி, "அப்படியே எழுந்து மெதுவாக வெளியே வாருங்கள். அடிதடி, அனாவசிய ரத்தசேதம் வேண்டாம்" என்றான் கிசுகிசு குரலில்.

இருவரும் மெதுவே எழுந்தோம். பார் சிப்பந்தி எங்களை அணுகி நாங்கள் கொடுத்த ஆர்டரை என்ன செய்வது என்று கேட்டான்.

கரன்ஜித் பதில் சொல்லும் முன், நான் "கேன்ஸல்" என்றேன்.

அவன் அவளைப் பார்க்க கரன்ஜித் தலையாட்டினாள்.

படிகளில் ஒருவர் பின் ஒருவராக இறங்கினோம். வெளியே ஓரமாக ஒரு வெளிர்நீல நிற மஸ்டா வேன் இருந்ததில் ஏறிக்கொண்டவுடன், வேன் சடுதியில் சென்றது. கப்பன் பார்க்கை நெருங்கி நின்றது.

அந்த வரதன், "இறங்குங்கள்" என்றான். நாங்கள் இருவரும் இறங்கிக்கொள்ள, பின்னால் அந்த வேனைத் தொடர்ந்து வந்த சிகப்பு நிற ஸ்டாண்டார்ட் வேனிலிருந்து கௌஷிக் மற்றும் அந்த வெற்று குண்டனுடன் இன்னும் இருவர் இறங்கினர்.

மாலை இருளத் துவங்கிய நேரம், கப்பன் பார்க்கில் அதிகம் நடமாட்டம் இல்லை. வாயிலில் இருந்த மஃப்ளர் கிழவன், "பார்க் மூடும் நேரம் சீக்கிரம் வந்து...." மேற்கொண்டு கன்னடத்தில் அவன் எதுவும் சொல்லும் முன், கௌஷிக் கையிலிருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் அவன் கையில் மாறவே, மஃப்ளர் கிழவன் மந்தஹாஸமாகச் சிரித்து, "சொல்ப பேகனே பங்த்பிடி ஸார்" என்றான் மரியாதையுடன்.

நாங்கள் பார்க்கின் நடுவே இருந்த கல்மேடையின் மீது அரைவட்டமாக உட்கார, அந்த வெற்று குண்டன், மற்ற இருவரும் நின்று கொண்டனர். உட்காரவில்லை.

"கரன்ஜித், உன்னிடம் என் ஆள் வரதன் மூலம் வீடியோ மற்றும் படங்களை, ஃபிலிம் ரோலுடன் கொடுத்துவிட்டேன். ஆனால், என்னிடம் விடீயோவின் காப்பி இருக்கிறது, உன் தந்தையிடம் பேசி, ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்துவிடு,நான் விலகிவிடுகிறேன்" என்றான் கௌஷிக், நான் இருப்பதையே கண்டுகொள்ளாமல்.

நான் தொண்டையைச் செறுமிக்கொண்டேன் "லுக், கௌஷிக், என்னுடைய ஆள் என்று நீ சொல்லி அந்த வரதனை கரன்ஜித்திடம் அனுப்பி, அவளிடமிருந்து, ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கிய போதே உன் கிரிமினல் மூளை புரிந்துவிட்டது. அந்த வீடியோ காப்பியை நீயே வைத்துக்கொள், கரன்ஜித் வா போகலாம்" என்று எழுந்தேன். வெற்று குண்டன், மற்ற இருவரும் என்னைச் சூழ்ந்தனர்.

கௌஷிக் சிரித்தான், "கரன்ஜித் என்ன இது?? டிடெக்டிவ் ஸாரிடம் அது என்ன வீடியோ என்று சொல்லவில்லையா?? இப்படித் துள்ளுகிறாரே?" என்று என்னைப் பார்த்து கண் சிமிட்டினான்.

கரன்ஜித் வெளிறிய முகத்துடன் என்னைப் பார்த்து, "விக்ரம், ஐ'ம் ஸாரி, அவை நிர்வாணப்படங்கள்" என்றாள்.

நான் அவள் சொல்வதைக் கேட்டு தலையை இடம் வலமாக ஆட்டினேன், "இருக்கட்டுமே. கரன்ஜித். இந்த கௌஷிக் நம்மிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கியபின் இதேபோல மீண்டும் ஒரு வீடியோ காப்பி இருப்பதாக நம்முடன் பேச்சு வார்த்தைக்காக வரமாட்டான் என்பது என்ன நிச்சயம்?? ப்ளாக்மெயில் செய்யத் துணிந்தவர்கள் இதற்கெல்லாம் அடங்கமாட்டார்கள்" என்றேன் அந்த வீடியோவில் இருப்பவை அவளின் நிர்வாணப் படங்கள் என்பதை அறிந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு.

கரன்ஜித் கௌர் வோரா அவளுடைய கன்னித்தன்மையை தன்னிடம் இழந்ததாக பெருமையுடன் சொல்லிக்கொண்ட கௌஷிக் எழுந்து நின்றான். அப்போதுதான் அவன் உயரத்தைக் கவனித்தேன். அவனும் நிச்சயம் 6'1" அல்லது 6'2" இருக்கலாம் என்று தோன்றியது.

"யூ நோ, டிடெக்டிவ், ஐ'ம் எ பாஸ்கெட் பால் சாம்ப்" என்றான் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில்.

"ஸோ...?" என்றேன் இருந்த இடத்தைவிட்டு எழுந்திராமல்.

"கரன்ஜித் உன் மீது ஏகமாக நம்பிக்கை வைத்திருக்கிறாள். அவளிடம் சொல். எனக்குப் பணத்தை வாங்கிக் கொடு. பிரச்சனை எதுவும் வேண்டாம்" என்றான் கௌஷிக்.

"நீ இந்த நாட்டின் பிரதமராகக் கூட இருந்துவிட்டுப் போ. நீ கேட்கும் தொகை மிக அதிகம். இரண்டாவது, மறுபடி எங்களிடம் இதே போல பணம் பிடுங்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்?" என்றேன்.

"டிடெக்டிவ் விக்ரம், கரன்ஜித் அப்பா மிகப்பெரும் பணக்காரர். இதெல்லாம் பிஸாத்து காசு, உனக்குத் தெரியாது" என்றான் கௌஷிக்.

"கௌஷிக், கொஞ்சம் டைம் கொடு. அடுத்த வாரத்திற்குள் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். இரண்டாவது என் அப்பா அலுவலக வேலையாக லூதியானா சென்றுள்ளார். திரும்ப 3 - 4 நாள் ஆகும்" என்றாள்.

"டன், கரன். ஸீ யூ" என்று அடுத்த நொடி அவர்கள் காணாமற்போனார்கள்.

பார்க்கிலிருந்து வெளியே வந்து கரன்ஜித்திற்கு ஒருஆட்டோ பிடித்து, அவளை அனுப்பிவிட்டு, நான் எம். ஜி ரோட் சென்றுவிட்டு, என் அலுவலகத்தை அடையும்போது இரவு மணி பத்தாகிவிட்டது. தொலைபேசி அழைக்கவே, "விக்ரம்" என்றேன்.

"விக்ரம், கரன்ஜித். ப்ளீஸ் நான் சொல்வதைக் கேள். கோபம் கொள்ளாதே" அதே தே.த. குரல்.

"கரன்ஜித், எனக்குக் கோபம் எதுவும் இல்லை. வருத்தம்தான். ஒரு கேஸில் நான் ஈடுபடும்போது, என்னுடைய க்ளையண்ட் என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். எதையும் என்னிடம் மறைக்கக் கூடாது என்று எண்ணுபவன் நான். கப்பன் பார்க் சென்ற பிறகே, உனக்கு ஒரு காதலன், உன் கன்னித்தன்மையை இழக்கும் அளவு நெருக்கமானவன். அவனுக்காக நிர்வாணமாக நீ போஸ் கொடுத்துள்ளாய் போன்ற உண்மைகள் தெரிந்தவன். முதலில் அப்படி எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டுவிட்டு, பின் ஏன் என் உதவி நாடி வரவேண்டும்? உங்களுக்குள் என்ன நடந்தது ? போன்ற கேள்விகள் இருந்தாலும், என்னிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாக நீ சொல்லாத காரணத்தினால், நான் விலகிக் கொள்கிறேன். நாளை, உனக்கு மீதி பில்லை அனுப்பிவைக்கிறேன். போனமுறை போல செக் அனுப்பிவிடு" என்றேன் குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல்.

"விக்ரம், ஐ அண்டர்ஸ்டாண்ட். அந்த விஷயங்கள் உனக்கு அவ்வாறு தெரிந்திருக்க வேண்டாம். இதன் பின்னணி சற்று சிக்கலானது. எனிவே, பில்லை அனுப்பு. ஸாரி" என்றாள்.

நான் பதில் பேசவில்லை. இணைப்பைத் துண்டித்தேன்.

கீழே கதவு தட்டப்பட்டது.

கதவைத் திறந்தபோது சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. கௌஷிக் அந்த வெற்று குண்டனுடன் நின்றிருந்தான்.

"ஹே டிடெக்டிவ், கொஞ்சம் பேசலாமா?" என்றான். மூச்சில் சாராயம் இருந்தது.

"கௌஷிக், நான் இந்தக் கேஸிலிருந்து விலகிவிட்டேன். பேசுவதற்கு எதுவுமில்லை. சென்றுவிடு" கதவை மூட முனைந்தபோது, அந்த வெற்று குண்டனின் ஷூ தடுக்கியது.

"நாட் ஸோ ஃபாஸ்ட், தேவையில்லாமல் என் அசிஸ்டண்ட் டேவிட்டை அடித்தாயாமே ? அதற்கு உன்னைக் கொஞ்சம் கவனிக்கலாமென்று....." அவன் முடிக்கும் முன் அவன் தாடையில் என் முஷ்டியால் வெடித்தேன்.

அவன் அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டே கீழே சேர்ந்தான். வெற்று குண்டன் எனப்படும் டேவிட் என் இடதுபுறமாக வர, அவன் இடுப்பில் மிதித்தேன்.

மூன்றாமவன் காரருகில் நின்றிருந்தான். என்னைப் பார்த்து ஓடிவர அவனுடைய மர்மப்ரதேசத்தில் உதைக்க, அவன் வந்த வேகத்திலேயே சாய்ந்தான்.

மறுபடி, கௌஷிக்.……இப்போது அவன் சுதாரித்திருக்க வேண்டும். சட்டென விலகியதால் அவனுடைய முஷ்டி என் காதருகே தொட்டுச் சென்றது. 180 டிகிரி திரும்பி அவனுடைய நடுத் தொண்டையில் பலமாக விரல்களைப் பாய்ச்சினேன். இன்னும் நான்கு நாட்களுக்கு அவனுக்கு திரவ உணவுதான். சட்டென எதையும் விழுங்க முடியாது.

மறுபடியும் டேவிட்...விலாவுக்குச் சற்று கீழ் அடிக்க, பலமான அடியில்….. மூவரும் தட்டுத் தடுமாறி எழுத்து காரில் ஏறி விலகினார்கள்.

======================

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நண்பன் பாபு ஷங்கரின் ஸ்டுடியோவில் அவனுக்காகக் காத்திருந்தவன், அங்கே டீப்பாய் மேல் அவன் விட்டுச் சென்றிருந்த ப்ளேபாய் இதழைப் புரட்டியவன் அப்படியே நின்றுவிட்டேன்.…

."ஸன்னி லியோன்,,,, உங்களுக்காக....."

மார்பில் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமல், கரன்ஜித் கௌர் வோரா.…

அடிப்பாவி....சொன்ன மாதிரியே இன்டர்நேஷனல் ஸெலிப்ரிட்டி ஆகிவிட்டாளே ......

=====================

இந்த உலகமே இன்று பார்த்து ஜொள்ளுவிடும் ஸன்னி லியோன், ஒரு காலத்தில் என்னுடைய க்ளையண்ட் என்பதில் மகிழ்ச்சிதான். ஆனால், சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்.....??

======================
பி.கு :

இந்தக் கதையின் உண்மைத் தன்மையில் சந்தேகம் இருப்பவர்கள், கூகிள் (Google) செய்து பார்த்தால், ஸன்னி லியோனின் பூர்வாசிரமப் பேர் கரன்ஜித் கௌர் வோரா என்பதும், அவர் அவருடைய 18 வயதிலேயே ஒரு பாஸ்கெட்பால் ப்ளேயரிடம் தன் கன்னித்தன்மையை இழந்தார் என்பது போன்ற விவரங்கள் கிட்டும்.

என் பேர் எங்கும் வராதவண்ணம் பார்த்துக் கொண்டுவிட்டேன்......
 
Top Bottom