கபிலனின் நிலா - நிகழ்வு: 6
மாறன்-மேகலை வீடு
அன்று கல்லூரி விடுமுறை நாள். கபிலனும், மாறனும், அமுதன் வீட்டிற்குச் சென்றதை உறுதிசெய்த, நந்தினி மாறன் வீட்டிற்கு மேகலையைக் காணச்சென்றுகொண்டிருந்தாள்.
அந்த தெருவோரம் செவலைப் பசு ஒன்று அவசர அவசரமாய்ப் புல் மேய்ந்துகொண்டிருந்தது. அதன் அருகில் பிறந்து மூன்றே மாதமான கன்றுகுட்டி. அப்பசுவின் ஒவ்வொரு அங்குல நகர்வுக்கும் அதன் கழுத்தில் இருந்த வெண்கலமணி 'டிங், டிங்' என ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. காலைப்பசி ஆற்றும் அன்றாட நிகழ்வுதான். ஆனால் அத்தனை அவசரம் அந்தப்பசுவிடம். அந்தப் பசுவைக்கடந்து சென்றாள், நந்தினி.
அவளுக்கு முன், "தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், கோஸ்ஸே…" காய்கறி விற்பவர் பரபரவென தள்ளுவண்டியில் கூவிக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அவருடன் அவரின் மனைவியும் காய் விற்பனைக்கும், வண்டியைத்தள்ளுவதற்கும் உதவியாய்ச் சென்றுகொண்டிருந்தார்.
அந்தத் தெருவோரம் இருந்த வேப்பமரங்களும், புங்கை மரங்களும் பலமாய்க் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அதனடியில் இளைப்பார அமர்ந்திருந்த குட்டி நாய்கூட, நாக்கை வெளியே தள்ளி மூச்சிரைக்க அமர்ந்திருந்தது.
நந்தினிக்கு முன்னும் பின்னும் அந்த காலனி மக்கள் நடந்தும், சைக்கிள், பைக்கிலும் பறந்துகொண்டிருந்தனர். ஒரு விடுமுறை நாளில் நடக்கும் அன்றாட இயல்பான வேலையும், நிகழ்வும்கூட அவ்வளவு பரபரப்போடு நடந்துகொண்டிருந்தது.
ஆனால், அதையெல்லாம் கடந்து சென்ற நந்தினியிடம், ஒரு நெருங்கிய இதயத்தை, நொறுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற எந்தவித பதட்டமும், முகத்திலோ, செய்கையிலோ இல்லை.
முழங்காலை முழுதாய் மறைக்காத அரைப்பாவாடை, கறுப்பு நிறத்தில். அதற்கு பொருத்தமாய் வீ வடிவில் கழுத்து வைத்த கருமைநிற பனியன்துணியினாலான குட்டைக்கைச் சட்டை. அது அவளின் வழக்கமான விடுமுறை நாள் ஆடை. அவளின் எலும்பிச்சம்பழ நிறத்திற்கும், அந்தக் கருமை ஆடைக்கும், அந்த நண்பகல் வெயிலுக்கும் மின்னினாள் நந்தினி -அழகி. அந்த அழகில்தான் எவரும் அவள் மனதை அறியாதவாறு கட்டிப்போடுவாள். அதற்குமேல் சாமர்த்தியமான கொஞ்சும் பேச்சும் கைகூடும் நந்தினிக்கு. தான் நினைத்ததை வீழ்த்த, அவள் கூடவே பிறந்த இரு கூர்ஆயுதங்கள் அந்த வசீகரமும், பேச்சும்.
"மேகா இருக்காளா மா", வீட்டு வாசலில் காய்கறிக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்த மாறன்-மேகலையின் அம்மாவைக் கேட்டாள், நந்தினி.
“வா, நந்தினி. ஜம்முனு இருக்கமா. உள்ளதான்மா இருக்கா, போ”. மேகலையின் அம்மாவையும் கவர்ந்திருந்தது நந்தினியின் தோற்றம்.
“தேங்க்ஸ் ஆண்டி” புன்முறுவலுடன் வீட்டினுள் சென்றாள், நந்தினி.
“மேகா.. என்ன பன்னிட்ருக்க”
“வா, நந்து. என்ன அதிசயமா நீ மட்டும் வந்திருக்க. உன் நண்பன் கபிலன் வரலயா?” சிரித்தாள், மேகலை. அந்தச் சிரிப்பில் ஒரு எதிர்பார்ப்பு நடக்காமல்போனது அப்பட்டமாய்த் தெரிந்தது. நந்தினி அதைக்கவனித்தாள்.
“அவனுக்கு எங்கடி நம்ம அருமை தெரியப்போகுது. அவன் ஒரு நெலையில இல்ல. பார்த்தியா, நீ வந்த உடனே அவனப்பத்திக் கேக்குற. இதேமாதிரி அவன் உன்னையப்பத்திக் கேப்பானா? அவனுக்கு, எவ அவன கண்டுக்காம இருக்காளோ, அவளபத்துன நினைப்புதான் இருக்கும். எனக்கு செம கோவம் வருது மேகா அவன்மேல”. வந்த காரியத்துக்குப் பலமான அடித்தளம்போட்டாள், நந்தினி.
நந்தினி என்ன சொல்லவருகிறாள் என மேகா யோசித்தாள்?!
“சரி வீட்டுல உன் அண்ணே இல்லையா. அப்பா எங்கே?”- மாறன், அமுதன் வீட்டிற்குச் சென்றது தெரிந்தும், தெரியாததுபோலக் கேட்டாள், நந்தினி.
“இல்ல நந்து. அண்ணே, அமுதன் வீட்டுக்குப் போயிருக்கான். இனி அவன் ஈவ்னிங்தான் வருவான். அப்டி என்னதான் பேசுவாய்ங்களோ. அப்பா டவுனுக்குப் போயிருக்கார். அவர் வர்றதுக்கும் லேட்டாகும்”, மேகா அலுத்துக்கொண்டாள். நந்தினிக்கு மகிழ்ச்சி. “நாமசெய்ய வேண்டியதை செய்றதுக்கு நிறைய டைம் இருக்கு.” மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
“சரி அவுங்க வரப்போ வரட்டும். நீ சொல்லு, நான் நேராவே கேக்குறேன். கபிலன நீ லவ் பண்ரேல?
“என்ன சொல்ற நந்து!”. மேகலைக்கு மனம் பகீர் என்றது. ஒருவேளை எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிருச்சா? தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
“மேகா, நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிட்டுதான் வரேன். கபிலன் இருக்கும்போது நீ எப்டி இருக்க; அவன் நிலாவைப்பத்தி பேசும்போது உன் மனசு எப்டி அலைபாயுது, எல்லாம் தெரியும். வேற யார்ட்ட நீ இதப்பத்தி பேசமுடியும் சொல்லு? உன் அண்ணனுக்கு தெரிஞ்சா, அவன் கபிலனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான். நீதான் கபிலன் மனச குழப்புறன்னு உன் மேல கோபப்படுவான். மத்த எல்லாரும் கபிலன், நிலாவ லவ் பன்றனால, உன்னையதான் தப்பு சொல்வாங்க.”
“தனக்கு துணையாக ஒருத்தியிருக்கிறாள் என மகிழ்ச்சி அடைவதா, தான் காதலிக்கும் விவரம் நண்பர்களுக்குள் தெரிந்தால் இருக்கும் நட்பும் கெட்டுப்போய், கபிலனைப் பார்க்கும் சூழலும் இல்லாமல்போகுமா”. மேகா குழம்பிப்போய் நின்றாள்.
“என்ன யோசிக்கிற, மேகா. எனக்கு உன் மனசு தெரியும். கபிலனும் நானும் எவ்ளோ க்ளோஸ்னு உனக்கே தெரியும். நிலா, நீ, கபிலன் மூனு பேரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ்தான். அதனாலதான் சொல்றேன். நீதான் கபிலனுக்குப் பொருத்தமானவ. சரி சொல்லு, நாளைக்கே கபிலன் உன்னைய லவ் பண்றேனு சொன்னா நீ அப்டியே அக்செப்ட் பண்ணிப்பியா? இல்ல உனக்கு அவன் என்னென்ன செய்யனும்னு எதிர்பார்ப்போ, கண்டிஸனோ இருக்கா?”
“இல்ல.. நான்.. அது எப்டி நடக்கும். கபிலன் நிலாவ லவ் பண்றானே”. மேகாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தினறினாள்.”
“என்னமா, எதாவது சாப்டுறியா. ஏன் நின்னுட்டே இருக்க. உக்காந்து பேசுங்கம்மா”. வெளியே காய் வாங்கிவிட்டு திரும்பிவந்த மேகலையின் அம்மா நந்தினியிடம் அன்பாகச் சொன்னார்.
“இல்லமா. நான் சாப்ட லேட்டாகும்”. பதில் சொன்ன நந்தினி மேகாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். மேகா தீவிரமாக தான் சொன்னதைப்பற்றி யோசிப்பது தெரிந்தது. மனசுக்குள் மகிழ்ச்சியுற்றாள்.
“சரி உக்காருடி நீ”. தன் திட்டப்படி பேச்சைத் தொடர, மேகாவை அமரச்சொல்லி, தானும் அருகில் அமர்ந்தாள், நந்தினி.
“எனக்குத் தெரியும் மேகா, உனக்கு எந்த கண்டிஸனும் இருக்காது. ஏன்னா நீ கபிலன காதலிக்கிற, அவனயே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற. ஆனா நிலா, தான் போடுற கண்டிஸனுக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணிப்பேனு கபிலன்டயே சொல்றா. அதுக்கு இந்த லூசுப்பையன், என்னமோ அவ இவனத்தான் லவ் பண்றேனு சொன்னமாதிரி கவிதை எழுதிட்டு உக்காந்திருக்கான். நான் சுயநலமா யோசிக்கிறேன்னுகூட நினைச்சுக்கோ மேகா. நான் கபிலனோட நல்லதுக்காகத்தான் உன்ட பேசிட்டிருக்கேன். அதோட அவன எந்த கண்டிஷனும் இல்லாம ஏத்துக்குற பொண்ணா நீ இருக்குற. அதுவும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேயே. அதான் மேகா சொல்றேன். நீதான் அவனுக்கு பொருத்தமானவ. அதான் கபிலனுக்கும் நல்லது.”
தன் பேச்சில் ‘கபிலன் நலனுக்காகத்தான்’ என திரும்ப திரும்பச் சொல்ல மறக்கவில்லை நந்தினி. அது மேகாவைக் கவர்ந்தது. நிலா கபிலன் காதலை ஒத்துக்கொள்ளாததும் அவளை யோசிக்கவைத்தது. தான் எந்த நிபந்தனையும் இல்லாமல் வாழ்க்கையை ஒப்படைக்க தயாராயிருப்பாதாய்த் தெரிந்தால், கபிலன் இன்றில்லையெனினும், நாளை தன்னை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை வருமெனத் தோன்றியது, மேகாவிற்கு.
“நந்து, எனக்கு கபிலன் கிடைச்சா அதவிட வாழ்க்கைல வேறெதுவும் பெரிசில்ல. ஆனா அது நடக்குமா, நான் எப்டி கபிலன்ட லவ் பண்றேனு சொல்றது. அவன் நிலாவோட பதிலுக்காக 3 வருஷம்கூட வெய்ட் பண்றேனு சொல்லிருக்கான். அதான் யோசிக்கிறேன்”. நந்தினி வலையில் வீழ்ந்தாள் மேகா!
“நான் எதுக்கு இருக்கேன். உனக்கும், கபிலனுக்கும், ஏன் நிலாவுக்குக்கூட எந்த மனக்கஷ்டமும் வராத மாதிரி நான் பாத்துக்குறேன். நீ மட்டும் கபிலனுக்காக எதையும் செய்வன்றதுல உறுதியா இரு”. நந்தினி உறுதி அளித்தாள்.
“தேங்க்ஸ் டீ.” மேகாவுக்கு பேச்சே வரவில்லை. நந்தினி கையை இறுகப்பற்றிக்கொண்டாள். கண்ணில் நீர் ததும்பியது.
“என்னடி இதுக்கலாம் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. கண்ணைத்துடை. அம்மா பாக்கப்போறாங்க”.
மேகா தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தாள். இரு நந்து வரேன். வீட்டு ஹாலிலிருந்து உள்ளே போனவள், நேராக அடுத்த அறையிலிருந்த சாமி அலமாரியில் மனமார வேண்டிக்கொண்டு, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். அருகில் இருந்த கண்ணாடியைப் பார்த்தாள். அவள் மலர்ந்த நெற்றியில் சிவந்த குங்குமம், கபிலனே தன் கையால் வைத்துவிட்டதுபோல மனம் குளிர்ந்தாள். அடுப்பங்கறைக்குச் சென்று தன் அம்மாவிடம் சொல்லி, சூடாக ஒரு காபி போட்டு எடுத்துவந்து, ஹாலிலிருந்த நந்தினிக்குக்கொடுத்தாள்.
“என்னடி உடனடி ட்ரீட்டா?” மேகாவைச் சீண்டினாள், நந்தினி.
“அப்டிலாம் இல்ல… எனக்காக நீ இவ்ளோ பண்றதும், நீ உன் நண்பனுக்காக எவ்ளோ அக்கறைஎடுத்துக்குறதும், பாக்க நல்லா இருக்கு, நந்து!”.
நந்தினி, தன்னைப் பகடைக்காயாக ஆக்கிவிட்டாள் என்பதை உணராமல், மேகா உள்ளம் பூரித்தாள்.
“உன் நன்றிய, கபிலன் உன் கழுத்துல தாலிகட்டிக் கூட்டிப் போவான்பாரு, அப்ப சொல்லு. இனி நான் சொல்ற மாதிரி கேளு. ரொம்ப கவனமா இருக்கனும். நம்ம ஏழு பேருக்குள்ள இருக்குற ஃப்ரெண்ட்ஷிப் இதுனால கெட்டுப்போகக்கூடாது”. நந்தினி அக்கறையுடன் பேசுவதாகக் காட்டினாள். மேகலை கபிலனை நினைத்துப் புன்னகைத்தாள்.
“சரி மேகா. நான் போய்ட்டுவரேன். அம்மாட்ட சொல்லிரு”. நந்தினி கிளம்பினாள். மேகா வாசல் வரை சென்று வழியனுப்பினாள்.
.
கல்லூரி வளாகம்
கபிலன் நிலாவிடம் காதலைச்சொல்லி பல வாரங்கள் கடந்திருந்தது. இன்னும் நந்தினிக்கு முழுதாய்த் தூக்கம் வரவில்லை. எப்பொழுதும் கபிலன் நிலாவைப்பற்றியே சிலாகித்துக்கொண்டிருந்தான். சரியான சந்தர்ப்பத்தில் மேகலையைவைத்து கபிலனின் மனதைக் கலைக்கக் காத்திருந்தாள், நந்தினி. அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. அன்று கல்லூரிக்குச் செல்லும்போது கபிலனிடம் அதைப்பற்றி பேசவேண்டுமென நினைத்துக்கொண்டாள்.
கபிலனும் நந்தினியும் கல்லூரிக்குள் நுழைந்தனர். அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்திருந்தது. பேராசிரியர்களும், கல்லூரியின் அலுவல் பணியாளர்களும் விதிமுறைக்குட்பட்ட, திருத்தமான உடையணிந்து, பலர் பைக்கிலும், சிலர் சைக்கிளிலிலும் கல்லூரியின் உள்ளே சென்றுகொண்டிருந்தனர். மாணவர்கள் அதற்கு நேரெதிராக, ரவுண்ட் நெக் டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட், பென்சில் ஃபிட் பேண்ட், லெக்கின்ஸ், தோள்பட்டை முழுதும் தெரியும்படியான பனியனும் அணிந்து சென்றனர். அதில் சில பல சல்வாரும், சேலையும்கூட காணமுடிந்தது.
கல்லூரி மெயின்கேட்டிலிருந்து வகுப்பறைக் கட்டிடம் இருக்கும் தூரம் சிமெண்ட்டாலான பாதை. இருபுறமும் தொடர் பராமரிப்பில் வளர்க்கப்படும் பச்சையும், மஞ்சள் வண்ணமும் கலந்த சிறுசிறு இலைகள்கொண்ட குரோட்டன்ஸ் வகைச்செடிகள். ஓய்ந்திருந்த மழையின் துளிகளைத்தாங்கிய அந்தச் செடிக்கூட்டம், அங்கே மழைக்குப்பின் மீண்டும் விழித்திருந்த சூரியஒளியில், மின்னும் வைரத்தைத் தாங்கியிருந்ததுபோல் காட்சி தந்தது.
அச்செடிகளுக்கிடைய, ஒவ்வொரு பத்தடிக்கும் அந்த சிமெண்ட் சாலையின் இருபக்கமும், வேப்பமரங்களும், புங்கைமரங்களும் வரிசையாய் வளர்ந்து நின்றன. இருபக்க மரங்களின் கிளைகளும் பாதையின் மறுபக்கமிருந்த மரங்களின் கிளைகளுடன் கைகோர்த்ததுபோல் கிளைபரப்பியிருந்தது. அது கல்லூரியின் பிரதான வாயிலிருந்து, வகுப்பறைக்கட்டிடம் வரை, பச்சையிலைத்தோரணம் கட்டியதுபோலிருந்தது. சிமெண்ட் பாதையின் பள்ளங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்தது. அதில் மரக்கிளையின் பசுமையும், செடியிலைகளின் மஞ்சளும் கலந்து ரம்மியமாய்ப் பிரதிபலித்தன. அந்த காட்சி முழுவதும் அச்சடித்து வைத்த ஓவியம்போல் காட்சிதந்தன.
தனது பிங்க் நிற லேடி பேர்ட் சைக்கிளை உருட்டிக்கொண்டே, கபிலனுடன் அந்த ஓவியப்பாதையை நடந்து கடந்துசென்றுகொண்டிருந்தாள், நந்தினி.
“டேய், எங்கப்பா, அம்மா கல்யாண நாள் அடுத்தவாரம் சன்டே வருது. இந்ததடவ எங்க ஊர்ல ஒரு ஃபங்ஷன்வச்சு கொண்டாடலாம்னு இருக்கோம். நீ வருவேல?”
“எங்க?”
“எங்க ஊர்ல!. அதான் சொன்னேனே?!”
“தெரியல”
“என்ன தெரியல” - நந்தினி கொஞ்சம் கடுப்பானாள்.
“ஏன்டீ கத்துற?!”
“நான் கத்துறேனா?. நீ கொஞ்சநாளாவே சரியில்லடா. என்கூடப்பேசிட்ருக்கும்போதே உனக்கு மனசெல்லாம் எங்கேயோ அலையுது”. நந்தினி அப்பொழுதுதான் கோபத்தில் கத்தினாள்.
கபிலன் கீழே குனிந்தவாறே மேலும் பதில் எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
அடுத்தநொடி, சில்லென்று குளிர்த்தென்றல் அவனைத் தழுவிச்சென்றது. அவன் காலடிமுன் தேங்கியிருந்த மழைநீரில், அவன் தேவதை புன்னகைத்தாள்!.
கண்ணாடிபோன்ற அம்மழை நீர், வெண்ணிலாவின் கருவிழிகள் வெட்கத்துடன், கபிலனைப் பார்ப்பதை அப்படிப்பிரதிபலித்தன. சுற்றியிருந்த ஈரமும், பசுமையும், நிலாவின் பார்வை வழியே கபிலனின் இதயத்துக்குள் நுழைந்து குளிர்வித்தன. அவனைக்கடந்து கல்லூரிக்குள் சென்ற வெண்ணிலா, வழக்கம்போல் நேர்முகம் பார்க்காமல், தலைகுனிந்தவாறு சென்றாள். கபிலன் இருந்ததால், நந்தினியிடமும் நின்று பேசவில்லை. கபிலனைக் கடக்கும்போது அவளுக்குள் பூரிப்பு புன்னகையாய் மலர்ந்தது. அந்த ஓவியப்பாதையில், ஒரு சிலை நகர்ந்து சென்றதுபோல் இருந்தது, கபிலனுக்கு.
தான் முக்கியமான வீட்டு ஃபங்ஷனபத்தி அழுத்தமாகக்கேட்டும் பதில்சொல்லாமல் கபிலன் இருந்ததும், நிலா கடந்து சென்றபின் கபிலன் ஆனந்தத்தில் சஞ்சரித்ததும், நந்தினியை மேலும் கோபமூட்டியது. அவளுடைய சைக்கிளில் ஏறி, அவனிடம் எதுவும் சொல்லாமல் வகுப்பறைக்கட்டிடம் நோக்கி வேகமாகப் போய்விட்டாள். கபிலன் அதைக்கவனிக்கும் நிலையிலில்லை.
“கார்மேகத்தினுள்
ஒளிரும் பெளர்ணமிநிலவு
என்னைக் கடந்து செல்ல,
நிலைகுத்திய கண்களுடன்
நிமிர்ந்து பார்த்தேன்..
அக் கல்லூரி வளாகத்தில்,
காளைஎந்தன் மனதை
கணக்காகக் கொண்டுசென்ற
கன்னியவள்,
களிப்புடன் சென்றாள்!
அப்பொழுதுதான் புரிந்தது,
அப்பகல்வேளையில்,
கதிரவன் எனைக்கடிந்த காரணம்.
ஆம்,
எனை உரசிச்செல்லும்
அந்நிலாமங்கை,
அவன் வந்தால்
முகம் மறைத்துக்கொள்கிறாளே!.
நான் பார்த்து மகிழ,
அவனால் நெருங்க இயலவில்லை
என்ற கோபமாக இருக்கும்!”
நிலாவின் நினைவில் கபிலன் தன்மெய் மறந்தான்.
.
சோழரின் காஞ்சிபுரம். ராஜபாட்டை - அரண்மனை செல்லும் வழி
கார்காலக் குளிர்காற்று அந்தக் காலைவேளையில் அந்த நகரைச்சூழ்ந்திருந்தது. இளையராணி நந்தினி உயர்ந்த, வெள்ளைத்தோல் மின்னும், குதிரையில் மின்னலெனெ சீறிச்சென்றாள். பின்னால் அதேதிசையில் வல்லவன் வந்தியத்தேவன் தொடர்ந்து நடந்துவந்துகொண்டிருந்தான். ஆங்காங்கே மழை நீர் நிறைந்திருந்தது அந்த ராஜபாட்டையில். வரிவரியாகச் சென்றுவர இருந்தனர் யானை,குதிரைகளுடன் அரண்மனைக்காவலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள். முன்னும்பின்னும் சென்று கொண்டிருந்தனர் குடிமக்கள். ராஜபாட்டையின் இருபுறமும் நீண்ட அகன்ற அரசமரங்கள், கிளைகளின் வழியே சற்றுமுன் நின்றுபோயிருந்த மழைநீரைச் சொட்டுச் சொட்டாக இட்டுக்கொண்டிருந்தது. வல்லவனுக்கு இவை யாவும் கண்களில்பட்டதாகத் தெரியவில்லை. தூக்குப்பல்லக்கில் இளையபிராட்டி குந்தவை தன்னைக்கடந்து செல்லும்போது, அவள் திரைவிலக்கித் தரைபார்ப்பதுபோல், அங்கு தேங்கியிருந்த மழை நீரில் தன் மனங்கவர்ந்தவரின் முகம் பார்த்தாள். அதில் மதிகிறங்கி தனைக்கடக்கும் மக்களைப்பார்க்காமல், மனம்போனபோக்கில் சென்றான் வந்தியத்தேவன்!
இளையராணி நந்தினி கடுமையான முகத்தோடு எதிரே தன்னை கடந்துபோவதைக் கவனித்த வந்தியதேவனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவன், சற்று தூரத்தில் குந்தவையின் பல்லக்கும், அதன்பின் வந்தியத்தேவனும் வருவதைக்கண்டான். அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானித்தவனாய், வந்தியத்தேவனருகில் சென்று அழுத்தமாய் அவன் தோளில் கைவைத்து, சிறிது குரலை உயர்த்தியே கேட்டான்.
“வந்தியத்தேவரே, குந்தவையைப் பார்த்த களிப்பில், இளையராணி நந்தினியை மறந்துவிட்டீராக்கும்?”
பார்த்திபேந்திரனின் கைப்பிடியிலும், குரலின் அழுத்தத்திலும் தன்னிலைக்கு வந்தான் வந்தியத்தேவன்.
.
கல்லூரி வளாகம்
கல்லூரி உட்புறச்சாலையில் மெய்மறந்து நடந்துவந்துகொண்டிருந்த கபிலன், பார்த்திபனின் அழுத்தமான பிடியில் சுயஉணர்வு பெற்றான்.
“என்னடா”
“என்ன, என்னடா. நந்தினி எப்பவும் உன்கூடயேதான க்ளாஸ்ரூமுக்கு வருவா. இப்போ அவ வேகமா சைக்கிள்ளபோறா. முகத்துல அவ்ளோ கோவம் தெரியுது. என்ன நடந்துச்சு. இப்பதான் வெண்ணிலாவும் முன்னாடி போறத பார்த்தேன். நீ நிலாவப் பார்த்துட்டு, நந்தினிய டீல்ல விட்ருப்ப. அதான் கடுப்பா போறா. கரெக்டா?
“இல்லடா அவதான் பேசிட்டே வந்தவ திடீர்னு கத்துனா. நான் ஒன்னும் சொல்லல. இப்ப நீ சொல்லித்தான் அவ முன்னாடி கோவிச்சிட்டுபோய்ட்டானு தெரியுது”
“கிழிஞ்சுது. அப்ப நந்தினி போனதுகூட தெரியாம, நீங்க நிலவுல மூழ்கிட்டீங்கெலா கபிலரே”. பார்த்திபன் கிண்டலாய்க்கேட்டான்.
“டேய். இல்லடா. அவளுக்கு ஏதாவது வொர்க் இருந்திருக்கும். அதான் போயிருப்பா”
“பாவம்டா நந்தினி. உனக்காகத்தான எல்லாம் செய்யனும்னு நினைக்கிறா. அவட்ட கேட்டுதான, வெண்ணிலாட்ட லவ்வ சொன்ன. அவளயே மறந்திட்டு திரியாதடா”.
பார்த்திபன் கபிலனுக்குச் சொன்ன சொல்லில், கபிலனின்மேலிருந்த அக்கறையைவிட, பார்த்திபனுக்கு நந்தினியின்மேலிருந்த பற்றுதல் அதிகாமாய்த்தெரிந்தது. கபிலன் அதைக்கவனித்தான்.
“சரிடா. நான் பேசிக்கிறேன் டா, நந்தூட்ட”. பதில் சொல்லிவிட்டு கபிலன் தொடர்ந்து நடந்தான்.
.
அன்று வகுப்பறையில் அவனைவிட்டு பல வரிசை தள்ளிப்போய் அமர்ந்துகொண்டாள், நந்தினி. கபிலனும் அதைக்கவனித்து கொஞ்சம் இடைவெளிவிடுவோமென நினைத்து அமைதியாய் இருந்தான். அடிக்கடி நந்தினி என்ன செய்கிறாள் எனப்பார்த்துக்கொண்டே இருந்தான். மாலை வரை நந்தினி கபிலனிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. அன்றைய தினத்தின் கடைசி வகுப்பு ஆரம்பிக்கும்முன், நந்தினிக்கு அருகில்போய் உட்கார்ந்தான்.
“இப்ப எதுக்கு வந்த”
“நீ வரல. அதான் நான் வந்தேன்”
“ஏன், உன் நிலா வரலயா”
“அவ வந்தாலும், நான் உன்கூடதான வருவேன்”
“கிழிச்ச”
“சாரி, நந்து. நாம நெக்ஸ்ட் வீக் உங்க ஊருக்குப்போறோம். உங்க அப்பா-அம்மா கல்யாண நாள செலிப்ரேட் பண்றோம். ஜாலியா வீக் எண்ட் ரெண்டுநாளும் ஊர்சுத்திட்டு வர்றோம். ஓகே வா”
“சீரியஸாதான் சொல்றியா?. உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா, ரெண்டு நாளைக்கு என்கூட வர்றதுக்கு?”
தான் காலையில் கல்லூரிக்குள் வரும்பொழுது கபிலனிடம் சொன்னதை அவன் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்த நந்தினி, அவனாக மாலையில் எல்லா விவரமும் சொல்லி, வருவேன்னும் சொன்னதால் கோபம் குறைந்தது நந்தினிக்கு.
“கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க”. சிரித்தான், கபிலன். “ஆனா உன்கூட வரனால, உங்க அப்பா-அம்மா பேர சொல்லி நான் ஒத்துக்கவச்சுருவேன்”
“ம்ம். குட் பாய்” நந்தினி அவன் தலையில் செல்லமாய்த்தட்டி மகிழ்ந்துபோனாள்.
“டே, அப்புறம் இந்த ஃபங்ஷன் க்ளோஸ் ரிலேடிவ்ஸ்க்கு மட்டுந்தான் சொல்லிருக்கோம். அதனால, நம்ம மத்த ஃப்ரெண்ட்ஸ்ட சொல்லல. நீயும் இதபத்தி எல்லாரும் இருக்கும்போது பேசாத”
“அப்டியா. ம்ம்.. ஏன்..?!. சரி ஊர்ல வீட்டுல நடக்கப்போற ஃபங்ஷன். எல்லாரையும் கூப்டாலும் உன்னால கவனிக்க முடியாது. ஓகே நான் இதப்பத்திப்பேசல. ஆனா, யார்ட்ட சொல்லாட்டியும் அமுதன்ட சொல்லிருவேன். அவன் புரிஞ்சுப்பான்”. கபிலன் அவனாகவே சமாதானம் செய்துகொண்டான்.
“ஆமடா. நீ சொன்னதத்தான் நானும் யோசிச்சு ஃப்ரெண்ட்ஸ்ட சொல்லவேணாம்னு சொன்னேன். ஆனா மேகலைக்கு, சிவன் கோவில்ல ஒரு நேத்திக்கடன் இருக்கு. அதனால எங்க ஊருக்கு ஒரு நாள் கூட்டிட்டுப்போகச் சொன்னா. இதுக்காக அவள தனியா ஒருநாள் கூட்டிட்டுப்போக முடியாது. அதனால அவள மட்டும் இந்த ஃபங்ஷனோட கோவிலுக்கும் கூட்டிட்டுப்போலாம்னு இருக்கேன். மாறன்டயும், அவுங்க விட்டுலேயும் நான் பேசிக்கிறேன். நீ எதுவும் பேசிக்குழப்பாம இரு”
“சரி, நீ பேசி ஃப்ரெண்ட்ஸ்குள்ள மனஸ்தாபம் வராம பாத்துக்கோ. அவ்ளோதான் சொல்வேன்”
“கண்டிப்பா டா. எனக்காக இல்லேனாலும், உனக்காகக் கண்டிப்பா நான் உங்களுக்குள்ள எந்த மனஸ்தாபமும் வராதமாதிரி இதச்செய்றேன்”
நந்தினி உறுதியளித்தாள். கபிலன் பாதி சாமதானம் அடைந்தான். பல நாளாய் அவள் நினைத்த கபிலன்-மேகலை தனிமைச் சந்திப்பை ஏற்படுத்த அந்த ஊர் விழாவை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தாள்.
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-6
ReplyQuoteLikeReportUnapproveEditDelete