அதன் பின் தான் அக்னி தனது ஆட்டத்தை ஆரம்பித்தான். இப்படி அவன் தொழிலுலகில் தன் வெற்றிக்கொடிகளை நாட்டிக்கொண்டிருந்தாலும், சொந்த வாழ்வில் தன் மனதில் பட்ட ரணத்தின் விளைவால் சுயநலத்தின் மறு உருவமாய் மாறி நின்றான்.
தனது அன்னையிடம் பட்ட சூட்டால் பெண்களையே வெறுத்தவன், தன் பாட்டி மற்றும் தங்கையைத் தவிர, மற்ற அனைத்துப் பெண்களையும் வெறும் சுயநலவாதிகளாகவே கருதினான்.
தனது நிறுவனத்திற்கு போட்டோ ஷூட்டிற்காக வரும் பெண்கள் பலருடன், எவ்வித கட்டுப்பாடுமின்றி உல்லாசமாய் வாழ்ந்தான்.
பணத்திற்காக இணங்குபவர்களையெல்லாம் ஏகபோகமாய் அனுபவித்தான்.
இவன் இப்படி சீர்கெட்டு அலைய, அனுஷாவும், அசோகமித்ரனும் வளர்ப்புத் தாயால் நற்பண்புகளுடன் வளர்க்கப்பட்டனர்.
ஆயாவாகயிருந்தாலும் அவரின் அன்புக்கும், சொல்லுக்கும் இருவரும் கட்டுப்பட்டனர். அவரின் அன்புடன் அடிக்கடி நீதிதாசனின் கண்டிப்பும் சேர, இருவரும் நன்மக்களாய் வளர்ந்தனர்.
அசோகமித்ரன் அப்படியே அக்னிமித்ரனுக்கு நேர்மாறான குணங்களை கொண்டவனாய் இருந்தான். அவனின் குறும்பு வழியும் விழிகளும், கலகலப்பேச்சும் அனைவரையும் அவன் மீது காதல் கொள்ள வைத்துவிடும்.
வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தன் ரசிகராக மாற்றுவதில் அவன் வல்லவனாயிருந்தான்.
சிறுவயதிலிருந்தே காவலதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவன், தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனேயே அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி, அதில் வெற்றியும் பெற்றான்.
முதல் முயற்சியிலேயே அரசுத் தேர்வில் வெற்றி பெற்றவன், தன் ஐ.பி.எஸ் பணியை தனது உயிருக்கு நிகராகக் கருதினான். தனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே நேர்மையாகச் செய்தான்.
கண்ணில் காணும் பெண்களிடமெல்லாம் கடலை போடுபவன், வேலையென்று வந்துவிட்டால் மட்டும் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸராக மாறிவிடுவான்.
அக்னிமித்ரன் இந்தியா வந்த பிறகு அவனிருக்கும் திசையே திரும்பாத அசோகமித்ரன், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்.
இருவரும் டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நிலை வந்தாலும் கூட, ஏதோ தனிக்காட்டில் வசிப்பவர்கள் போன்ற தோரணையுடனேயே அமர்ந்திருப்பர்.
ஆனாலும், விதிவிலக்காக அவர்கள் இருவருக்குள்ளும் ஒத்துபோகும் ஒரே விஷயம், அவர்களின் அன்புத் தங்கை அனுஷா மட்டுமே.
இரட்டையர் எப்போதும் அவளொருத்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். அவளைத் தவிர வேறெதனாலும், யாராலும் அவர்களை கட்டுப்படுத்த இயலாது.
ஒரு வருடத்திற்கு முன்பு தன் பள்ளிப் படிப்பை முடித்த அனுஷா, தான் ஆடை வடிவமைப்பில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பி.எஸ்சி பேஷன் டிசைனிங் படிப்பை லண்டன் யுனிவர்சிட்டியில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பின், தனது அண்ணன்மார்களின் அனுமதி மற்றும் எச்சரிக்கைகளுடன் லண்டன் சென்றாள்.
அங்கு சென்ற ஆறு மாதத்தில் அங்குள்ள நாகரீகத்தையும், பேச்சுவழக்கையும் கற்றுக் கொண்டவள், பகுதி நேர வேலைக்கும் சென்றாள்.
என் படிப்பு செலவையும் மற்ற இதர செலவுகளையும் நானே சமாளித்துக்கொள்வேன் என்று வைராக்கியமாய் கூறியவள், பெயருக்கு மட்டும் தன் வீட்டினர் கொடுத்த கார்டுகளை வைத்துக்கொண்டாள்.
முதல் வேலையாக தனது தோழிகளுடன் சேர்ந்து தனியே அறையெடுத்து தங்கியவள், அதற்கு தன் வீட்டிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பவும், கண்ணீர் கயிற்றால் கட்டிப்போட்டாள்.
வீட்டினரும் ஒரு கட்டத்தில் அவள் தனியாக எல்லா செலவுகளையும் பார்த்தால் தான் அவளுக்கென்று சில பொறுப்புகள் வரும், எதையும் தனியாக சமாளிக்கின்ற தன்னம்பிக்கை வரும் என அவள் வழியில் விட்டனர்.
சுதந்திர பறவையாக திரிந்த அனுஷா ஒரு ஞாயிறன்று தன் தோழிகள் சிம்ரன் மற்றும் சோனாவுடன் சேர்ந்து, டபிள்யூ டபிள்யூ மேட்ச் நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.
எப்போதும் போல் அவர்களின் ஆதர்ச வெற்றியாளன் முசாகோ ஜான், தன்னை எதிர்த்து நின்ற இரண்டு வீரர்களை ஒரே அடியில் வீழ்த்தி, ஆறரை அடி மாமிச மலையாக உயர்ந்து நின்றிருந்தான்.
அவனை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாய் அவன் பெயர் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி அவனின் தீவிர ரசிகைகளாக, "முசாகோ! முசாகோ! வீ லவ் முசாகோ!" என இளவட்டங்கள் பலர் கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து தாங்களும் கத்தியவர்கள், கைகளில் கோக் மற்றும் பாப்கார்னை வைத்துக்கொண்டு தங்கள் இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டனர்.
திடீரென அரங்கமே அதிரும் வகையில் அந்த பாக்ஸிங் ரிங்கிற்குள் குதித்தான் இந்தியாவிலிருந்து வந்த அந்த ஆறடி கட்டழகன்.
வெறுமனே அந்த நிகழ்ச்சியை காண மட்டுமே கூட்டத்தில் ஒருவனாய் நின்றிருந்தவன் அனுஷாவின், "வீ லவ் முசாகோ" என்ற கூச்சலால் கோபமுற்று, தான் குளிரை தாக்குப் பிடிக்க போட்டிருந்த ஜாக்கெட்டை கழற்றி வீசி விட்டு, ரிங்கிற்குள் குதித்தான்.
தன்னளவிலிருந்த வீரர்களே தன்னை எதிர்த்து பின்பு தாக்கு பிடிக்க முடியாமல் தலை தெறித்து ஓட, இந்தப் பொடியனா என்னை வீழ்த்தப் போகிறான் என்ற எண்ணத்தில், அவனை கண்டு நக்கலாக சிரித்தான் முசாகோ ஜான்.
இயேசு புராணத்தில் தாவிதைக் கண்டு கோலியாத் சிரித்ததை போல இருந்தது அது.
அவனின் நக்கல் சிரிப்பில் தன்னிரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்த புதியவன், சண்டைக்கு தயாரானவனாய் தன் கைகளை ஒரு பாக்ஸிங் போஸிற்கு கொண்டு வந்தான். புதியவனின் என்ட்ரியில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக சண்டையை கவனிக்கத் தொடங்கினர்.
அனுஷாவின் தோழி சிம்ரன், "யாருடி இவன்? நம்ம நாட்டுக்காரன் மாதிரி இருக்கான்? செம நாட்டுக்கட்டையா வேற இருக்கான்டி. அய்யோ! அவன் ஆர்ம்ஸை பாருங்கடி. வாவ் செம!" என அவனை வர்ணித்துக் கொண்டிருக்க, அனுஷாவோ தன் கை விரல் நகங்களை கடித்துக்கொண்டு மேடையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணியடித்தவுடன் முசாகோ ஜான் தன் ஒரு டன் எடையுள்ள கைகளால் புதியவனின் தாடையில் குத்த வர, ஒரு நூலளவில் விலகிய புதியவன், எம்பி தன்னிரண்டு கால்களையும் சேர்த்து அவன் பிடரிப்பகுதியில் போட்டு, அந்த மாமிச மலையை கீழேத்தள்ள, குப்புற விழுந்தான் முசாகோ.
புதியவனிடமிருந்து இந்த வேகமான தாக்குதலை எதிர்பார்த்திராத மக்கள் அனைவரும் சுவாரசியமாய் அவனின் ஒவ்வொரு இயக்கத்தையும் கவனிக்க ஆரம்பித்தனர்.
முசாகோ எழாமலிருக்க அவனின் வலது கையையும் அடிப்பட்ட கழுத்தையும் சேர்த்து புதியவன் வளைக்க, வலியில் எழ முடியாமல் மூஞ்சை சுருக்கித் தவித்தான் முசாகோ.
அவர்களின் அருகில் வந்த நடுவர் ஒருவர் ‘ஒன்று இரண்டு மூன்று’ என மேடையில் மூன்று முறை குத்தி புதியவனின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி நிமிடம் வரை நிசப்தத்துடன் அங்கு நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும், புதியவனின் வெற்றி உறுதியானதும் அவனை பாராட்டும் விதமாய் ஹோவென கத்தி ஆரவாரம் செய்தனர்.
புதியவன் விடுவித்த பின்பும் முசாகோ எழாமல் கிடப்பதைக் கண்டு அவனின் உதவியாளர்கள் அவனை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர்.
மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நடுவர்கள் அவனிடம், "வாட்ஸ் யுவர் நேம் சாம்ப்பியன்?” என்று சத்தமாக கத்திக் கேட்க, சிரித்துக்கொண்டே அனைவரையும் பார்த்து கையசைத்தவன் "விஜய்குமார், ஷார்ட்லி வீ.கே ஃப்ரம் இந்தியா" என்றான்.
கலையவிருந்த கூட்டத்தினர் அவனின் பதிலை பின்பற்றி, "வீ.கே, வீ.கே, வீ லவ் வீ.கே" எனக் கத்தி அமர்க்களம் செய்தனர்.
தன் ஹீரோ முசாகோ தோற்றதால் முகத்தை உர்ரென்று வைத்திருந்த அனுஷா, தனது ஆப்பிள் செவன்டீன் ப்ரோ மேக்ஸில் வீ.கே என தட்டச்சு செய்து கூகுள் பகவானை துணைக்கழைத்து புதியவனை பற்றி அறிய முயன்றாள்.
அவளின் முயற்சி வீண் போகவில்லை. அவனின் பெயரை தட்டச்சு செய்ததுமே அடுக்கடுக்கான தகவல்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வந்து நின்றன.
அதை வாசித்துக் கொண்டிருந்தவள் ஒரு குறிப்பிட்ட வரியை வாசித்துவிட்டு அடக்க முடியாமல் சிரித்தாள்.
"வீ லவ் வீ.கே" என முழங்கி கொண்டிருந்த சிம்ரனும், சோனாவும் அவள்புறம் திரும்பி என்னவெனக் கேட்க, அவள் தன் அலைபேசியில் காட்டிய வரியை வாசித்து அவர்கள் புரியாமல் நின்றனர்.
அவர்கள் வட இந்தியர்கள் என்பதை மறந்துவிட்டாள் அனுஷா.
பின் அவளே, “இந்த வீ.கேவோட முதல் படம் லத்திகா பார்ட் டூ. நாளைக்கு தான் அது ரிலீஸ் ஆக இருக்குது. யாருக்கெல்லாம் டிக்கெட் புக் பண்ணட்டும்?” என புன்னகையில் இதழ்கள் நெளிய கேட்க,
"யார் புக் பண்ணினாலும் எனக்கும் சேர்த்து புக் பண்ணுங்க” எனச்சொல்லி அவளை அதிரவிட்டான் விஜய்குமார்.
அவனின் கம்பீரமான குரல் அவளுக்குள் பயப்பந்தை உருள விட்டது.
தொடரும்...