Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL காதலில் விழுந்தேன் காதலா - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
காதலில் விழுந்தேன் காதலா
 
Last edited:

MANI EZHILAN

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
3
Points
1
காதல் செய்வோம் காதலா
காதலில் விழுந்தேன் காதலா
காதல் (பாகம்) ஒன்று
- கவிஞர் க.மணிஎழிலன்

சட்டென்று வந்த மின்னலாய்
என் இதயத்தில் ஒளிர்ந்தாய்

பட்டாம்பூச்சி
தொட்டுவிட்டுப்போன சுகத்தை
உன் அறிமுகத்தில் தந்தாய்

கட்டழகன் நீ
கண்பார்வையில் ஏதேதோ
என்னிடம் சொன்னாய்

வட்டமிடும் வெண்ணிலவாய்
உன் நினைவுகளையே
சுற்ற வைத்தாய்

பட்டமிடும் உன் கையில்
என் மனதைப்
பிடித்துக்கொண்டாய்

கொட்டித் தீர்க்க
எவ்வளவோ உள்ளது
என்னிடத்தில்
எப்போது கூறுவேன்
உன்னிடத்தில்
அதற்கும் நேரம் நீ தந்தால்
கட்டிலின் மீது காதலை
மொத்தமாய்ச் சொல்கிறேன்

காதல் செய்வோம் வா காதலா

பிரேமாவின் குறுஞ்செய்தியில் வந்த கவிதையை மனோ படித்துக்கொண்டிருந்தான். இதற்கு என்ன பதில் அனுப்புவது என்கிற குழப்பத்தோடு செல்ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தான். நாம் ஒருவரை காதலிக்கிறோம் என்பதைவிட நம்மை ஒருவர் காதலிப்பது எப்போதும் குதூகலம்தான். எந்த வயதானாலும், எந்தச் சூழலாக இருந்தாலும் அந்தக் காதலை நினைத்து உள்ளூர மகிழ்வோம்.
பிரேமாவை முதன்முதலாகச் சந்தித்தது இரண்டு நாட்களுக்கு முன்புதான். அதற்குள் இப்படி ஒரு குறுஞ்செய்தியை அவன் எதிர்பார்க்கவில்லை. மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. ஆனாலும் பதில் அனுப்ப தயக்கம் இருந்தது. அதற்கு நிறைய காரணங்கள். இருப்பினும் பிரேமாவின் மனதை இந்தத் தயக்கம் காயப்படுத்திவிடுமோ என்கிற எண்ணத்தால் உடனடியாக அவளுக்கு பதில் அனுப்பவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று காத்துக்கொண்டிருந்தான்.
“நான் காத்திருக்கவா?” என்று மீண்டும் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அதற்கும் எவ்வித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
“நான் காத்திருப்பது நியாயம்தானா என்கிற குழப்பம் எனக்கே உள்ளது. உங்களுக்கு அனுப்பிய செய்தி உங்கள் மனதைக் காயப்படுத்தினால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அடுத்த குறுஞ்செய்தி வந்தது.
காதலில் காத்திருத்தல்தான் அழகு. ஆனால் பொறுமை இழந்து அவள் அடுத்தடுத்து அனுப்பும் செய்தி இவனைத் தடுமாறச் செய்தது. இனி பதில் அனுப்பாவிட்டால் அவள் என்னென்ன செய்வாளோ? என்று பயந்து உடனே செல்ஃபோனை எடுத்து “வெயிட்... பிறகு சொல்கிறேன்” என்று மட்டும் டைப் செய்து அனுப்பிவிட்டான்.
கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும் ஒரு சிம்பளை மட்டும் அவள் திருப்பி அனுப்பினாள்.
பிரேமா அருமையாகக் கவிதை வாசித்தாள். அவளது கவிதையில் ஒரு ஜீவன் இருந்தது. கவிதை வாசிக்கும்போது அடிக்கடி இவனையும் பார்த்துக்கொண்டிருந்ததை அவனும் கவனித்தான். அவள் வாசித்துமுடித்த பின் இருவர் கவிதை வாசித்தனர். அதற்குப்பின் இறுதியாக மனோ கவிதை வாசித்தான். அதில் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. யார் இவன்? எங்கிருந்து வந்தான்? இப்படி பட்டாசாக கொளுத்துகிறானே என்று ஆச்சரியப்படும்படி கம்பீரமாகவும் நறுக்கென்றும் இருந்தது அவனது கவிதைகள். விழா முடிந்ததும் அனைவரும் அவனை மொய்த்துக் கொண்டார்கள். பலர் அவனது செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டார்கள். பிரேமாவும் வாங்கினாள். அவள் எண் வாங்கும்போது “உங்க கவிதை ரொம்ப அருமையாக இருந்தது. நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?” அடுக்கடுக்கான இவனது கேள்வியில் சற்றுத் தடுமாறியே பதில் சொன்னாள்.
தான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ்பேராசிரியையாக வேலை செய்வதாகவும், இந்த விழாவில் கலந்துகொள்ளவே சென்னை வந்ததாகவும் சொன்னாள்.
யாரும் கவனிக்காத நேரத்தில் “உங்க கண் ரொம்ப அழகு” என்றாள்.
மனோ அவளை நிமிர்ந்து பார்த்ததும் பட்டென்று திரும்பிக் கொண்டாள். அவளிடமிருந்துதான் அந்த வார்த்தை வந்ததென்று தெரிந்தும் தெரியாததுபோல் அவன் நடந்துகொண்டான்.
அவள் இரவு இரயிலில் ஏறியவதும் சாட் பண்ணத் தொடங்கிவிட்டாள்.
‘வணக்கம். நான் பிரேமா.’
‘வணக்கம். சொல்லுங்க.’
‘வீட்டுக்குப் போய்ட்டீங்களா?’
‘ம்...’ நீங்க கிளம்பிட்டீங்களா?
‘ம்... நான் டிரெயின் ஏறிட்டேன்.’
‘ஓ... ஹேப்பி ஜர்னி’
‘தேங்க்ஸ். அப்புறம்’
‘என்னது”
‘ம்... ம்... சாப்ட்டீங்களா?
காதலர்களின் தொடக்கம் இப்படித்தானோ? மனதுக்குள் நினைத்தபடி மனோ கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தான்.
என்ன சொல்வது? இதைத் தொடரலாமா? சற்று குழப்பமான மனநிலையுடன்... டைப் செய்தான்.
‘ம்... சாப்பிட்டேன். ஓகே. நீங்க போனவுடன் மெசேஜ் பண்ணுங்க. பை’
‘ம்... பேசலாமா?’
இவனுக்கு தடுமாற்றம் ஆரம்பித்தது.
‘இப்போது வேண்டாம். வீட்டில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.’
‘அப்போ... சாட் பண்ணலாமா?’
‘சாரி... கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். நாளை பேசுகிறேன்.’
மனோவின் இந்த பதில் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
அவள் மனதை காயப்படுத்துகிறோமோ என்று கவலையாக இருந்தது மனோவுக்கு. சற்று நேரம் கழித்து.
‘ஓகே. ஊருக்குப் போனவுடன் மெசேஜ் பண்ணுங்க. குட் நைட்’ என்று டைப் செய்தான்.
அவள் முகத்தில் ஒளி வீசியது.
கோபமான முக சிம்பளை இரண்டு போட்டுவிட்டு ‘ஓகே’ என்று மட்டும் டைப் செய்து அனுப்பினாள்.
மெல்லிய சிரிப்புடன் ஆன்லைனிலிருந்து ஆஃப்லைனுக்கு வந்தான். ஆனால் அவன் மனதுக்கு ஏதோ ஆன் ஆனது. அதை ஆஃப் செய்யலாமா வேண்டாமா என்று அவனுக்குள் குழப்பம் ஆனது.
மறுநாள் காலை.
‘குட்மார்னிங். நான் வந்துட்டேன்’ பிரேமாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததும்,
‘ஓகே’ என்று டைப் செய்து அனுப்பினான்.
‘அவ்வளவுதானா?’ கேள்வி அனுப்பினாள்.
‘கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்’ பதில் அனுப்பினான்.
காத்திருந்தாள்.
அவனிடமிருந்து எந்தக் குறுஞ்செய்தியும் அதற்குப்பின் வரவில்லை. அன்று இரவு ஒரு கவிதை வந்தது. ஆர்வமாக திறந்து படித்தாள்.
“கண்ணாடிச் சட்டத்தில்
அழகாய்த் தெரிந்தது முகம்
உடையும்வரை”
அவனிடமிருந்து ஹைக்கூ கவிதை ஒன்று வந்திருந்தது.
இதற்கு என்ன அர்த்தம்? புரிந்தும் புரியாமல் அதற்கு என்ன பதில் அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவனிடத்தில் ஏதோ ஒரு குழப்ப நிலை என்பது மட்டும் புரிந்தது. அதே குழப்பம் இவளுக்கும் இருப்பதை அவனால் எப்படி புரிந்துகொள்ள முடிந்தது. இது அவளை ஆச்சரியப்படுத்தியது. அவன் இவ்வளவு துல்லியமாக யோசித்திருக்கிறானே என்று நினைக்கையில் அவன் மேல் உள்ள காதல் அதிகரித்தது.
“ஒரே சிந்தனையில்
இருவரும் இருகோடுகளாக
இணைக்கமுடியாத
தண்டவாளங்களாய்
ஆனாலும் அவைதானே
உண்மையான
அன்புக்கு அச்சாரம்”
அவளிடமிருந்து இப்படி பதில் வந்தது.
மனோ இதைப் புரிந்துகொண்டான்.
‘அன்பு என்பது
அன்பாகவே இருக்கட்டும்
அத்துமீற வேண்டாம்
இருக்கும் நட்பும்
இழந்துவிடுவோமோ என்கிற
பயம் எனக்கு’
அவனது பதிலில் கிறங்கிப் போனாள். தனக்காக கவிதை எழுதும் ஒருவரிடம் மனதைப் பறிகொடுப்பது காலம்காலமாக இருந்துவரும் ஒன்றுதானே. தனக்காகக் கவிதை எழுதி வரும் புலவர்களுக்கு தன் நாட்டையே கொடுத்த அரசர்களும் இருந்திருக்கிறார்கள். பைரன் என்கிற இளவரசனின் கவிதைக்கு மயங்கிய அழகிகளின் எண்ணிக்கை 200க்கும் மேலாம். அந்த அழகிகளை தன் அரண்மனையிலேயே கல்லறையாக்கிய கதையை அவளும் படித்திருக்கிறாள். எழுத்தால் தன்னைக் கட்டிப்போடும் இவனை விட்டுவிடக் கூடாது என்பது மட்டும் அவளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மறுநாள் காலை அவளிடமிருந்துதான் அந்தக் கவிதை அவனுக்கு குறுஞ்செய்தியாக வந்தது.
‘காதல் செய்வோம் காதலா’ என்று ஆரம்பித்தது அந்தக் கவிதை. முதல் வரியைப் படித்ததும் குப்பென்று வேர்த்தது அவனுக்கு...
‘டிபன் சாப்பிடாம என்ன போனையே பார்த்துட்டிருக்கீங்க? முதல்ல சாப்புடுங்க...’ என்று அதட்டினாள் மனோவின் மனைவி.
- தொடரும்...
 

MANI EZHILAN

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
3
Points
1
காதல் (பாகம்) இரண்டு

மல்லிகாவின் அதட்டலான குரலில் செல்ஃபோனை கீழே வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். இதுபோன்ற மெசேஜ் வருவது முதன்முறையல்ல இவனுக்கு. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். அதிலும் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கும். வாலிப வயதில் காதல் வருவது பருவவயது பாலுணர்ச்சி என்றால் வயதானபின் வருகிற காதல் காம உணர்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அதிலிருந்து மாறுபட்டு காதலை காதலாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒருவரின் தனித்திறமைகள், தோற்றங்கள், அவரது குணங்கள் இவைகளால் கவரப்பட்டு தன் மனதைப் பறிகொடுப்பவர்கள் ஏராளம். ஒருவரின் பணத்திற்காக வரும் காதலைத்தான் பெரும்பாலும் கள்ளக் காதல் என்கிறார்கள்.
தன்னுடைய பல எதிர்பார்ப்புகளில் ஒருசில மட்டுமே தன் துணையிடம் இருப்பதால் மற்றவற்றைத் தேடி மனது அலைபாய்கிறது. அவை எவரிடம் கிடைக்கிறதோ அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரின்மீது காதல் ஏற்படுகிறது. இதுவும் ஒருவகையில் வாலிபக் கோளாறுதான். இதைப் புரிந்துகொண்டவர்கள் இதிலிருந்து பக்குவமாக விலகி சாதனை செய்துகொண்டிருக்கிறார்கள். உணராதவர்கள் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.
மனோ ஒரு கவிஞன். சிறந்த பேச்சாளன். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன். அவனது தேடல் பரந்துவிரிந்து கிடக்கின்றது. அவனுள் ஆயிரம் ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள். அவனது மனைவி இவனது மன ஓட்டத்திற்கு நேர் எதிரானவள். ஆனாலும் மிகவும் பாசமானவள்.
மனோ அந்தக் கவிதையைப் படித்ததில் இருந்து பெரும்பாலும் மௌனமாகவே இருந்தான். அந்தக் கவிதை பற்றிய சிந்தனையிலேயே கழிந்தன நேரங்கள்.
பிரேமாவின் கவிதைக்கு பதில் எழுதினான்.
அவளைச் சந்திக்க கோவை வருவதாகவும், அவளுடன் ஒருநாள் முழுக்க இருப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பினான்.
மல்லிகாவிடம் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகச் சொல்லிவிட்டு மறுநாளே கிளம்பினான்.
அதிகாலை ஆறு மணிக்கு கோவை பேருந்து நிலையத்தில் இறங்கியதும், பிரேமாவிற்கு செய்தி அனுப்பினான். காத்திருக்கும்படி பதில் வந்தது.
அருகில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு, இரண்டு மெதுவடையை விழுங்கிவிட்டு அன்றைய செய்தித்தாள் ஒன்றை வாங்கிக்கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
இடையிடையே தான் செய்வது சரியா எனும் கேள்வி அவனுள் எழுந்துகொண்டே இருந்தது. மல்லிகா போன் செய்தாள்.
“என்னங்க... போய் சேர்ந்துட்டீங்களா?
“ம்... வந்துட்டேன்”
“தூங்கினீங்களா?”
“ம்.... கொஞ்சம் தூங்கினேன்.”
“எப்ப வருவீங்க?”
“நாளைக்கு”
“சரி வச்சிடவா?”
“ம்... நான் அப்புறம் கூப்பிடுறேன்.”
அவளின் வெள்ளந்தியான இந்த உரையாடல் அவன் மனதை என்னவோ செய்தது. நீண்ட நேரம் பிரேமாவின் போனுக்காக காத்திருந்தான். நேரம் ஒன்பது ஆனபோது பிரேமாவிடமிருந்து போன் வந்தது.
“எங்க இருக்கீங்க?”
“பஸ் ஸ்டாண்டுலதான்”
“சரி... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வர்றேன்.”
“ம்...” என்று முடிக்கும்முன் வைத்துவிட்டாள்.
பசி எடுத்தது. அருகில் உள்ள ஹோட்டலில் பூரி கிழங்கையும், வெங்காய தோசையும் சாப்பிட்டு முடித்தான். வெளியூர் பயணங்களில் அதிகாலை அவன் சாப்பிடும் வழக்கமான உணவு இதுதான். அதற்குக் காரணம். வெங்காயம் உடல் சூட்டைக் குறைக்கும் என்பான். அளவான இந்த உணவு வயிற்றுப் பிரச்சனை ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளும் என்பது அவனது கருத்து.
டிபன் முடித்துவிட்டு வெளியில் வந்து நிற்பதற்கும் அவள் வருவதற்கும் சரியாக இருந்தது. ஏதும் பேசவில்லை. ஹெல்மெட்டை கழற்றவில்லை. ஸ்கூட்டியில் வந்திருந்தாள். உட்காருங்கள் என்றாள். பேசாமல் அவளின் பின்னிருக்கையில் அமர்ந்தான். தோளைப் பிடிக்காமல் சற்று தள்ளியே அமர்ந்தான். அதை அவளும் கவனித்தாள் போலும், மெல்ல தனக்குள் சிரித்துக்கொண்டே ஓரிடத்தில் டக்கென்று பிரேக் பிடித்தாள். அவள்மேல் சாய்ந்து தோள்மீது கைவைத்து அழுந்தப் பிடித்தான்.
“இதுக்குத்தான் பிரேக் பிடித்தேன்...” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். மீண்டும் வண்டியை ஓட்டினாள்.
அவனுக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதியது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அசடு வழிந்தான். இவள்போல் தன் மனைவிக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லையே. என்ன தைரியமாக வண்டி ஓட்டுகிறாள். அடிக்கடி மனைவி முகம் நினைவுக்கு வந்தாலும் முகத்தை சிரித்தபடியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தான்.
“இப்ப நாம எங்க போறோம்?
“சொல்றேன்”
சற்று நேரம் மௌனம்.
“வாங்கன்னு சொன்னவுடனே வந்துட்டீங்க. அவ்வளவு அன்பா என்மேல?”
அவள் டக்கென்று கேட்டவுடன்,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. சின்னபொண்ணு ரொம்ப ஃபீல் பண்ணவைக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதான் வந்துட்டேன்” சமாளித்தான்.
பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு தெரு முனையில் நுழைந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு...
“அஞ்சு வீடு தள்ளி மல்லிச்செடி தெரியுது பாருங்க. அங்க வாங்க.” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவன் நடந்து செல்லும்முன் அவள் வண்டியை விட்டுவிட்டு விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.
அந்த வீட்டு வாசலுக்குச் சென்று காலிங் பெல் அழுத்தப் போனான். அவள் வேகமாக வந்து “சைலண்ட்டா வாங்க” என்று சிரித்தாள்.
உள்ளே நுழைந்தவுடன்...
“இது உங்க வீடா...?”
“இல்லை மத்தவங்க வீடு...” மீண்டும் சிரித்தாள்.
அசடு வழிந்தபடி, “யாரையுமே காணோம்?”
“சொல்றேன். இப்பதானே வந்தீங்க. முதல்ல ரிப்ரஷ் பண்ணுங்க. அப்புறம் சாப்பிடுங்க.”
“நான் சாப்புட்டுட்டேன்” என்றான் வேகமாக,
“எங்கே?”
“ரொம்ப பசிச்சது. ஹோட்டல்ல சாப்பிட்டேன்.”
“பரவாயில்ல... நான் செஞ்சதை கொஞ்சம் சாப்புடுங்க...”
வீட்டை நின்ற இடத்திலிருந்தே சுற்றிப் பார்த்தான். ஒரு ஹால் நடுவில் ஊஞ்சல், சாமி மாடத்தில் அழகான குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஹாலைத் தாண்டி சமையலறை. அதற்கு அடுத்தது வீட்டின் பின்புறம் கிணற்றடி. அங்கே ஒரு பாத்ரூம் இருந்தது. வாழைமரம், செம்பருத்திச் செடி என சிறிய தோட்டம் இருந்தது. ஹாலின் வலது புறம் இரு பெட் ரூம்கள்.
“அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறேன். பிரஷர், சுகர் எல்லாம் அதிகமாகிடுச்சு” என்றாள்.
“எந்த ஹாஸ்பிடல்? எங்கிருக்கு?” என்றான்.
“பக்கத்து ஏரியாவில். போகும்போது காமிக்கிறேன்”
வெளியில் உள்ள பாத்ரூமில் குளித்துமுடித்து வந்தவுடன், ஹாலில் நுழைந்தான். அருகில் சின்ன அலமாரி அதனுள் பல புகைப்படங்கள், விருதுகள், கேடயங்கள் இருந்தன. ஒரு புகைப்படம் மட்டும் சற்று பெரியதாக இருந்தன. அதில் பிரேமாவும், அவளது கனவரும் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.
“பசங்க எங்க?”
“ஸ்கூல் போயிருக்காங்க. அதனாலதான் ஒன்பது மணிக்கு வர்றேன்னு சொன்னேன். அவர் வெளியூரில் இருக்கார்.”
அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.
“சரி... வாங்க சாப்பிடுங்க...”
நாலு இட்லியும், சிறு பருப்பு சாம்பாரும் சுடச்சுட இருந்தது. வாசனை கமகமவென்று இருந்தது. மீண்டும் ஒரு கட்டு கட்டினான்.
“அப்புறம்... சொல்லுங்க. கூப்பிட்டவுடனே வந்துட்டீங்களே. ஏன்?” மீண்டும் அதே கேள்வி.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு தோணுச்சு. அதான் வந்தேன்.”
“அதை போனிலே பேசியிருக்கலாமே. எதுக்கு நேர்ல வரணும்?” கண்ணடித்து சிரித்தாள்.
“சில விஷயங்களை நேரிலதான் பேசணும்.”
“சரி சொல்லுங்க. என்ன பேசணும்?”
“அதை நான் அப்புறம் சொல்றேன். வேலைக்கு போகலையா?”
“இல்லை. நீங்க வர்றீங்கன்னு லீவு சொல்லிட்டேன்.”
“நான் நேத்துதானே சொன்னேன். நாளை வருவேன்னு. அதுக்குள்ள எப்படி லீவு சொன்ன?
“எங்க டீம்ல உள்ளவங்க அடஜஸ்ட் பண்ணிப்பாங்க. அது சரி என்ன பேசணும்னு சொன்னீங்க?” அவள் அதிலேயே இருந்தாள்.
“சரி பக்கத்துல எங்காவது கோவில் இருக்கா? போலாமா?” என்றான்.
“ம்ம்ம்ம்... டென்ஷன் படுத்தாதீங்க. எங்கிட்ட பேசணும்னு சொன்னீங்களே. அது என்னன்னு கேட்டேன்.” அவன் மீது பாய்வதைப்போல் கேட்டாள்.
“அவசரப்படாதே சொல்றேன். முதல்ல கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்.”
“சரி, இதோ வர்றேன்.” என்று உள்ளே போனாள்.
ஹாலில் உள்ள விருதுகளையும், போட்டோக்களையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் வெளியே வந்தாள். புடவையைக் கட்டிக்கொண்டிருந்தவள் கொசுவத்தை சொருகாமல் கையில் பிடித்தபடி அவனிடம்,
“இந்த புடவையோட ஃபிளிட்டை மடிச்சு விடுங்களேன் கொஞ்சம்” என்றாள்.
அவன் அவளை பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான்.
“சாரி. இது காட்டன் சாரி. அதான் உங்ககிட்ட கேட்டேன். பரவாயில்லை நானே மடிச்சிக்கறேன்.” என்று வேகமாக கொசுவத்தை மடித்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவனைக் கவனித்தாள். அவன் மெல்ல அருகே வந்து உட்கார்ந்து அந்தப் புடவையின் மடிப்பை சரி செய்தான்.
ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இந்தத் தருணத்தில் ஏற்படும் வேதியியல் மாற்றம் அவனுள் நிகழ்ந்தது. அவளிடமும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை உணர்ந்தான். தனிமையான சூழல், தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலை. இருவரும் அது(?) என்ன என்பதை உணர்ந்தவர்கள். எதிர்ப்பு இல்லாத அவளிடம் என்னவெல்லாம் செய்யலாம். அவளுக்கும் அதில் முழு உடன்பாடுதான்.
“பக்கத்துல என்ன கோவில் இருக்கு?” பேச்சை மாற்றினான்.
“அம்மன் கோவில் ஒன்னு இருக்கு. அது ரொம்ப விசேஷம். அங்க போய்ட்டு வரலாம்.” அவளும் அந்த உணர்வைக் காட்டிக்கொள்ளாதபடி பதில் கூறினாள்.
கிணற்றடிக்கு சென்று சற்றுநேரம் தோட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“உங்க வீட்டு தோட்டம் நல்லாயிருக்கு”
“இது வாடகை வீடு. இருக்கிறதை நான் மெயின்டெய்ன் பண்றேன் அவ்ளோதான். நான் ரெடி. போலாமா?”
காட்டன் புடவையில் கண்ணைக் கவர்ந்தாள்.
“நீங்கதான் வண்டி ஓட்டணும். சாரியில அன் கம்ஃபர்ட்டபுலா இருக்கும்.” சாவியை நீட்டினாள்.
இம்முறை வண்டியில் அவள் பின் சீட்டில் உட்கார அவன் தோள்மீது உரிமையாய் கைவைத்து பிடித்துக்கொண்டாள். இவன் எதுவும் சொல்லாமல் வண்டியை ஓட்டத் தொடங்கினான். ஒரு கணவன் மனைவியைப் போல் அங்கிருந்து கிளம்பினார்கள்.
வரும்போது தெருமுனையில் இறக்கிவிட்டவள்; கிளம்பும்போது ஒரே வண்டியில் பயணிக்கிறாள். அதுவும் உரிமையோடு ‘இதுமட்டும் பரவாயில்லையா?’ என்று அவளிடம் கேட்கத் தோன்றியது. ஆனாலும், அமைதியாகவே வந்தான்.
வழிநெடுக அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான நாட்களைப் பற்றி ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டே வந்தாள்.
கோவில் வாசல் அருகில் செருப்பை கழற்றிவிடப்போன ஓரிடத்தில் குறி சொல்லும் ஒரு பெண் அருகில் வந்து,
“அம்மா, மகராசி ஆத்தா மகமாயி சொல்ற வாக்கு கொஞ்சம் கேளு தாயி. சோடியா வந்திருக்கீங்க... உங்களுக்கு நல்லநேரம் ஆரம்பிக்குது தாயி. ஒரு நல்ல வாக்கு கேட்டுட்டு போங்க.”
“நாங்க கோயிலுக்கு போய்ட்டு வந்து கேட்டுக்குறோம்” என்றாள்.
“பரவாயில்ல தாயி. கேட்டுட்டு சந்தோசமா சாமிய கும்பிடுங்களேன்” என்று தன் பாணியில் மார்க்கெட்டிங் செய்தாள்.
பிரேமா என்னை திரும்பிப் பார்த்தாள். கேட்கவா என்பதுபோல்.
“சரி கேளு” என்றான் புரிந்தவனாய்.
“அம்மா ராசிக்கு ரெட்ட புள்ள பொறக்கும். அய்யாவ விட்டுப்பிரியாத குணம் உங்களுக்கு. நிறைஞ்ச மனசு. எல்லாத்துலயும் விட்டுக்கொடுப்பீங்க. கூடிய சீக்கிரம் வீடு வாசல்னு சொத்து நிறையும் உங்களுக்கு. சிக்கனமா இருப்பீங்க. புள்ளைங்களை பத்தியும் கவலைப்படுவீங்க. அய்யாவ பத்தியும் கவலைப்படுவீங்க. ஆனா அய்யா உங்கள கண்டுக்காம இருப்பாரு. பொறந்த வீட்டுல இருந்து தொல்லைக வரும். அய்யாவோட ஒத்துழைப்புலதான் அதை சரிபடுத்துவீங்க. உன் நெறைஞ்ச மனசுக்கு எல்லாம் நினைச்சபடியே நடக்கும் தாயி. அய்யாவுக்கு சொல்லவா?” என்று முடித்தாள்.
“ம்... சொல்லுங்க.” ஆர்வமானாள் பிரேமா.
“அய்யா மனசு தங்கம். உங்க மேல உசுரா இருப்பாரு. அவருக்கு உங்கள மாதிரி இல்ல. ஓட்டை கை. நெறைய செலவு பண்ணுவாரு. மிச்சம் வக்கிற பழக்கம் இல்ல அவருக்கு. வேலை வேலைன்னு இருப்பாரு. கண்டுக்காம இருந்தாலும் அவருக்கு உங்க நெனப்பு மட்டும்தான். உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் பார்த்துப்பாரு. வீடு வாசல்னு யோகம் கூடியிருக்கு. எல்லாம் ஆத்தா புண்ணியத்துல நல்லா நடக்கும் தாயி. நூறு ரூபா கொடு.”
“நூறு ரூபாயா. அம்பது ரூபா வாங்கிக்கோங்க.” என்றாள் பிரேமா.
“மனசார குடு தாயி. எல்லாம் நல்லாபடியா நடக்கும்.” விடாம சொல்லிக்கிட்டே இருந்தாங்க.
தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தான்.
“அவங்க சொன்னது சரிதான். நான்தான் பேசிக்கிட்டிருக்கேனே அதுக்குள்ள காசு கொடுக்கிறீங்க. உண்மையிலேயே உங்க கை ஓட்டை கைதான்.” என்றாள் சிரித்தபடி.
கோவிலுக்குள் நுழைந்ததும், அந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதியாக கும்பிட்டுக் கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில் ஒரு அய்யர்,
“இது மன்மதன். இவர் மார்மேல உள்ள குங்குமத்த பூசிக்கோங்க உங்களுக்கு ரெண்டு புள்ள பொறக்கும். அந்நியோன்யமா இருப்பேள்” என்றதும், வேகவேகமாக குங்குமம் எடுத்து தன் நெற்றியில் பதித்தாள். அவனது நெற்றியிலும் வைத்துவிட்டாள்.
“அடுத்தமுறை வரும்போது நாம அபிஷேகம் ஒன்னு பண்ணனும். நான் சொல்ற அன்னைக்கு வாங்க. நான் முன்னோடியே சொல்லி வச்சிடுறேன்.” பிரகாரம் சுற்றி வருகிறபோது விடாமல் பேசிக்கொண்டே வந்தாள் பிரேமா.
இவன் பெரும்பாலும் மௌனமாகவே வந்துகொண்டிருந்தான். தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு அடிக்கடி மெல்லிய சிரிப்பை சிரித்துக்கொண்டே “ம்... ம்...” என்று மட்டும் சொல்லி வந்தான்.
அங்குள்ள பிரசாதத்தை வாங்கிக் கொண்டு இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள்.
“எனக்கு இப்படி ஜோடியா அடிக்கடி கோவில் வரணும்னு ஆசை. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அப்படியே வந்தாலும் இவ்வளவு பொறுமையா உங்கள மாதிரி வரமாட்டாரு.” அவளுக்குள் உள்ள ஆதங்கத்தை சொல்லிக்கொண்டே வந்தாள்.
ஒருவரைப் பிடிக்காதபோது செய்வதெல்லாம் தவறாகவே தெரிகிறது. பிடித்துவிட்டால் அவர் செய்கிற தவறுகூட சரியாகத் தெரிகிறது.
எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் கடலளவு இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லோராலும் நிறைவேற்றிவிட முடியவில்லை. இருக்கும் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகிறபோது, எனக்காக இதுகூட செய்யமாட்டேன் என்கிறார்களே என்று கோபம் வருகிறது. சந்தித்த இரண்டு நாட்களில் பிரபோஸ் செய்தாள். பிறகு வரச்சொன்னாள். இப்போது கோவிலில் இருவரும் ஜோடியாக அமர்ந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு குறி சொல்பவர் இவர்களை தம்பதிகளாகவே முடிவு செய்துவிட்டார்.
“வீட்டுக்குப் போகலாமா?” என்று எழுந்தாள்.
“உன்னைப்பற்றி சொல்?” என்றேன்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாமா?” என்று சிரித்துக்கொண்டே கைப்பிடித்தாள்.
சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அவளது கையை விடுவிக்காமல் நகர்ந்தான்.
மணி பதினொன்றை கடந்துவிட்டது. வாட்சை பார்த்தபடி,
“இன்னும் நாலு மணி நேரம்தான் இருக்கு” என்றாள்.
“ஏன்?”
“உங்க கூட ஸ்பெண்ட் பண்றதுக்கு. அப்புறம் பசங்கள கூட்டிக்கிட்டு வரணும்.”
இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
இம்முறை நேராக வீடு வரைக்கும் அவர்கள் வண்டியில் ஒன்றாகவே வந்தார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் இவளைப் பார்த்துச் சிரித்தாள். இவளும் சிரித்தாள். அதற்குப் பின் கேஷுவலாக உள்ளே வந்துவிட்டாள்.
“அவங்க எதாவது கேப்பாங்களா உன்னை?” என்றான்.
“அவங்க என்கிட்ட பேசவேமாட்டாங்க. பார்த்தா சிரிப்பாங்க அவ்வளவுதான். பேருகூட தெரியாது.” என்றாள் சகஜமாக.
ம்... இதுவும் பலருக்கு சாதகம்தான். அடுத்தவீட்டு விஷயங்களில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ளாதது ஒரு வசதிதான். ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட இவர்கள் வருவதில்லை என்பது புரிந்தது. பெரும்பாலான கிராமங்களில் தெரு முனையில் நுழையும்போதே வருவது யார் என்று கேள்வி எழும். இங்கு அப்படி இல்லை. தவறு செய்ய நிறைய சந்தர்ப்பங்களை நமக்கு வழங்குவதே இந்தச் சமுதாயம்தான்.
- காதல் தொடரும்
 

MANI EZHILAN

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
3
Points
1
காதல் (பாகம்) மூன்று

வீட்டினுள் நுழைந்ததும், மனோ ஹாலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தான். பிரேமா உள் அறைக்குச் சென்றாள்.
“கொஞ்சம் டீ போட்டுத் தரமுடியுமா?” சத்தமாகக் கேட்டான்.
“இதோ வர்றேன்” என்றாள் அவளும் சத்தமாக.
“உன்னைப் பற்றி சொல்லவே இல்லையே” மீண்டும் கேட்டான்.
அவள் உள்ளிருந்தபடி “அங்க இருந்து கேட்டா எப்படி சொல்றது? இங்க வாங்க” என்றாள்.
இவன் எழுந்து உள் அறைக்குச் சென்றான். அவள் புடவையை மாற்ற புடவையைக் கழற்றிக் கொண்டிருந்தாள். வெளிக்கதவு தாழிடப்பட்டிருந்தது. நல்ல அழகும், வடிவும் உள்ள ஒரு பெண். வீட்டில் யாரும் இல்லை. அவளுக்கும் இதில் சம்மதம். இதைவிட சந்தர்ப்பம் வேறென்ன வேண்டும். உள்ளுக்குள் உஷ்ணம் பிறக்கிறது. கண்களில் காமம் கொப்பளிக்கிறது. அவளை அப்படியே கட்டிலில் கிடத்தினான். அவன் மார்பின் மேல் சாய்ந்தபடி,
“இந்தக் கட்டிலின் மேல் பலநாள் நான் அழுதிருக்கேன். எனக்குப் பிடிச்ச ஒருத்தனோட எப்போ இங்க இருப்பேன்னு ஏங்கியிருக்கேன். என்னதான் இருந்தாலும் எனக்கும் முழுமையா திருப்தியாகணுமே” என்றாள்.
இதற்கு மேல் நேரம் கடத்த விருப்பமில்லாமல் அவன் இதழின் மீது முத்தம் கொடுக்கச் சென்றபோது,
“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?” ஹாலில் இருந்த மனோவின் குரல் இவளை நிஜத்திற்கு வரவழைத்தது. புடவை மாற்றிக்கொண்டே இவள் கற்பனையில் மிதந்துகொண்டிருந்தாள்.
“இதோ வர்றேன். புடவை மாத்திட்டிருக்கேன்” என்றாள்.
அறைக் கதவு அவள் மூடவேயில்லை. இவனுக்கும் அது தெரிந்தது. ஆனாலும் ஊஞ்சலை விட்டு அவன் இறங்கவில்லை. கையில் ஏதோ ஒரு வாரப்பத்திரிகை ஒன்றை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். இவன் வருவான் என்று காத்திருந்தவள் புடவை மற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.
“ஏன் இங்கே உட்கார்ந்திட்டீங்க? உள்ள வருவீங்கன்னு நினைச்சேன்.” மெல்ல சிரித்தபடி கூறினாள்.
“கொஞ்சம் தலைவலிக்குது. ஒரு டீ கிடைக்குமா?” என்றான் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
“ஒரே நிமிஷம்... போட்டுத் தர்றேன்.” சமையலறை சென்றாள்.
“அவர் ஒரு அம்மா பைத்தியம். அவங்க கூடப் பொறந்தவங்க ரெண்டு தங்கச்சி. இவரு அவங்க சொல்றதை மட்டும்தான் கேப்பாரு.” மெல்ல தன் குடும்பத்தை பத்தி மீண்டும் ஆரம்பித்தாள். மேலும் தொடர்ந்தாள்.
“பையன் எய்ட்த்து படிக்கிறான். பொண்ணு சிக்ஸ்த்து படிக்கிறாள்.” நான்தான் பாத்துக்கிறேன். அவர் அடிக்கடி வெளியூர் போயிடுவாரு. அவர் சிவில் என்ஜினியர். எனக்கு விருப்பமே இல்லாம நடந்த கல்யாணம் இது.” அவளது வார்த்தை தழுதழுக்க ஆரம்பித்தது.
“நான் எது செய்தாலும் அதற்கு குதர்க்கமா பேசுவார். எனக்கு வேலை கிடைக்கற வரைக்கும் என்னை மனுஷியா கூட அவங்க மதிக்கல. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு தெரிஞ்சிக்கிட்ட அவரும் அவங்க வீட்லயும் கல்யாணத்துக்குப் பிறகு ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க. மாமியார் கொடுமைனா என்னான்னு எனக்குதான் தெரியும். நாத்தனார்கள் ரெண்டு பேரும் அடிக்கடி இவர்கிட்ட வந்து எதாவது சொல்லி வத்திவப்பாங்க. ரெண்டு மூணு முறை சூசைட் அட்டண்ட் பண்ணியிருக்கேன். நீயெல்லாம் எழுதி என்னத்த கிழிக்கப்போறேன்னு திட்டுவாரு. நான் வெளியூர் போறது பிடிக்காது. எனக்கு தூரத்து சொந்தத்துல அண்ணன் ஒருத்தர் இருக்காரு. அவர் தயவுலதான் ஒருசில இடங்களுக்குப் போறேன்” சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டாள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரம் கவலைகள். ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். தனிமனித உரிமைகளுக்கு தடை சொல்லும் சுயநலக்காரர்கள். தனித்திறமைகளோடு செயல்படும் ஒருவரை அந்தக் குடும்பம் ஆதரித்தாலே போதும் நாட்டில் உள்ள அத்தனை கள்ளக்காதலும் முடிவுக்கு வந்துவிடும். பலநேரம் ஆண்களுக்கும் இந்தப் பிரச்சனைகள் இருக்கும். இவளுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து ஆதரவாக இருந்திருந்தால் இவள் இன்னும் அவர்கள் மேல் அன்பாக இருந்திருப்பாள். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலவிஷயங்களை செய்துகொடுப்பாள். ஆனால் ஏதோவொரு சுயநலம் அவர்களை தடுக்கிறது. யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது மாதிரி. அவர்கள் மேல் உள்ள ஆத்திரம், கோபம், தனிமையான சூழ்நிலை அத்தனையும் சேர்ந்து அவளை தவறு செய்ய தைரியம் கொடுக்கிறது. தப்பு செய்தால் என்ன என்று நியாயம் கற்பிக்கிறது. இது என் சுதந்திரம். என் உரிமை. என்றெல்லாம் செய்யும் தப்பை சரிசெய்யப் பார்க்கிறது. வயது உள்ளவரை தான் காமம். அதற்குப்பின் தான் காதல் என்ன என்பது புரியும். தான் எதிர்பார்த்த விஷயங்களில் ஓரளவு தகுதியுடையவனாக இருந்தால் போதும் அவனை பயன்படுத்திக் கொள்ள மனது துடிக்கிறது. அவன் கல்யாணம் ஆனவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது. யாருக்கும் தெரியாமல் இந்த உறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. இது தவறு இல்லை என்று ஆணித்தரமாக நம்புகிறது. அடுத்தவரையும் இதைச் சொல்லி தூண்டிவிடுகிறது. கரும்பு தின்ன கூலியா என்று வெளுத்துவாங்குகிறார்கள் சந்தர்ப்பவாதிகள். சக்கையாய் பிழிந்து கைவிட்ட பிறகுதான் தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்று உணர்கிறார்கள்.
பிரேமாவும் தன் மனதில் உள்ள குறைகளைச் சொல்லி ஆறுதல் தேட முனைகிறாள். மெல்ல தன்னைப் பற்றிச் சொல்லி அவன் மடிமீது தலை வைக்கிறாள். அவன் அவள் தலையை கோதியபடி கதையைக் கேட்டுக்கொண்டே டீ குடித்துக்கொண்டிருந்தான்.
“இப்போ சொல்லுங்க. இது தப்பில்லைதானே?”
ஆமாம் என்று அவன் சொல்லவேண்டும் என்பதைத்தான் அவளும் விரும்புகிறாள்.
இவன் மௌனமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன எதுவுமே சொல்லமாட்டேங்கிறீங்க?”
“ம்... இதுல நான் என்ன சொல்றது? இது உன் வாழ்க்கை. நீதான் முடிவு பண்ணனும். எது வேணும், எது வேணாம்னு. இதனால உன்னோட பிரச்சனை எதாவது முடிவுக்கு வருமான்னு எனக்குத் தெரியல. இது ஒருவேளை நம்ப குடும்பத்துக்கு தெரிஞ்சா எவ்வளோ பிரச்சனையை நாம சந்திக்க வேண்டியிருக்கும்னு உன்னால உணரமுடியுதா?”
“தெரிஞ்சாதானே... தெரியாம நாமதான் பாத்துக்கணும்.” நான் நல்லா சம்பாதிக்கறேன். என்னை யாரும் கேள்வி கேட்கமுடியாது. நான் பாத்துக்கறேன். நீங்க நான் சொல்லும்போது வந்துடுங்க. உங்க அறிவும், என் அறிவும் சேர்ந்து ஒரு பிள்ளை வேணும். நான் கொஞ்ச நாள்ல வெளிநாடு போயிடலாம்னு இருக்கேன். பிள்ளைகளை அவர்கிட்ட விட்டுட்டு அங்கே போயிடுவேன். உங்க பிள்ளையை நான் வளர்க்கறேன். எனக்கு நீங்க மட்டும் போதும்” அவன் காலை இறுகக் கட்டிக்கொண்டு அவன் தொடையின் மீது தலையைச் சாய்த்தாள்.
பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நேரம் ஒன்றைக் கடந்தது.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“பசிக்குதே சாப்பிடலாமா? எங்காவது ஓட்டலுக்கு போலாமா?” என்றான்.
அவள் சிரித்தபடி, “பெட் ரூமுக்குப் போலாமா?” என்றாள்.
“சாப்பிட்டுட்டு வந்துடலாமா? பசி அதிகமா இருக்கு.” என்று மெல்ல சிரித்தபடி கூறினான்.
“ஒரு நிமிஷம்” என்று எதுவும் சொல்லாமல் மீண்டும் உள் அறைக்குச் சென்றாள். பத்து நிமிடத்தில் சுடிதாருடன் வெளியே வந்தாள்.
“வாங்க போலாம்”
இருவரும் வெளியில் வந்தனர். இம்முறை அவளே வண்டி ஓட்டினாள். சற்று தொலைவில் இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றாள். நல்ல வாழை இலை சாப்பாடு. இடையிடையே இவனது இலையில் இருந்து கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டாள்.
“நான் ஸ்வீட் அதிகம் சாப்பிடமாட்டேன்’ என்றதும்,
“பார்த்தாலே தெரியுது” என்று கண்ணடித்தாள்.
“உங்களை நிறைய மாத்த வேண்டியிருக்கு” என்றாள்.
“ஏன்? என்ன மாத்தணும்?”
“உங்க ஸ்டைல், டிரஸ் எல்லாமே”
அவன் சிரித்துக்கொண்டே, “அவ்வளவு தானே மாத்திடலாம்” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டையே கவனித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“ஏன் எதுவுமே பேசமாட்டேங்கிறீங்க? என்னை பிடிக்கலையா?”
“பிடிக்காமதான் இவ்வளவு தூரம் வந்தேனா?”
“அப்புறம் நான் எது கேட்டாலும் மௌனமா இருக்கீங்களே.”
“ம்... முதல்ல நீ பேசவேண்டியதை பேசிடு. அப்புறம் நான் பேசறேன்.?”
பில் வந்ததும் பர்சை எடுக்கப்போனான். வெடுக்கென்று பில்லை பிடுங்கிக்கொண்டாள்.
ஹோட்டலைவிட்டு வெளியே வர மணி இரண்டைக் கடந்தது.
“இன்னைக்கு டைம் ஆகிடுச்சு. வீட்டுக்குப் போய்ட்டு உங்க பேக் எடுத்துட்டு வந்துடலாம். நான் ஒரு இடத்துல உங்கள விடுறேன். பிள்ளைகளை வீட்டுல விட்டுட்டு அப்புறம் உங்கள வந்து பாக்கறேன். நாம வெளியில போலாம். ஓகேவா?”
“ம்... சரி. நீ வர்றவரைக்கும் நான் வெயிட் பண்றேன்.” என்று அவன் கூறியதும் அவளது முகத்தில் சின்னதாக ஒரு சோர்வு இருந்தது.
“உங்ககிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன். ஆனா டைம் பத்தல. திரும்பவும் எப்ப வருவீங்க?” கண்ணாடியில் அவனது முகத்தை பார்த்தபடியே பேசினாள்.
“ஊருக்குப் போய்ட்டு சொல்றேன். நிறைய பேசணும். போன்ல பேசலாம்” சொல்லியவனை ஒருபார்வை பார்த்து,
“இடுப்பை புடிச்சிக்கோங்க” என்றாள்.
“பரவாயில்லை. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க. நான் பாத்துக்கறேன்”
“நான் பிரேக் போடவா?” என்றாள் சிரித்தபடி,
“இப்ப நான் உஷாராயிட்டேன். அது வேஷ்ட்” என்றான்.
“வேஷ்ட் பிரேக் இல்லை, நீங்கதான்” கண்ணடித்தாள்.
மீண்டும் சிரிப்பொலி. அதற்குள் வீடு வந்துவிட்டது. இறங்கி உள்ளே சென்று, பரபரப்பாக இயங்கினாள். பள்ளிக்குப் போக தயாரானாள். இவன் தனது பேகை எடுத்துக்கொண்டான்.
பூஜையறைக்குப் பக்கத்தில் வரும்படி அழைத்தாள். அவனது நெற்றியில் திருநீறு பூசினாள். கண்களை மூடச் சொன்னாள். அவன் எதிர்பாராத வண்ணம் முத்தம் ஒன்றை தந்தாள்.
“என்னை விட்டுட்டுப் போறீங்க. உங்க நினைப்பாகவே இருப்பேன். சீக்கிரமா திரும்ப வாங்க” வெட்கப்பட்டுக்கொண்டே கூறினாள்.
அந்த முத்தத்தில் இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. அவன் தடுமாறிப் போனான். தடுக்கமுடியாது போன விபத்தாக அது அமைந்தது. அதை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. புதிய ஸ்பரிசம். எல்லாவற்றையும் மறந்துபோனான். காலையிலிருந்து நேரத்தை வீணடித்துவிட்டதாக தோன்றியது. அவனை உலுக்கினாள்.
“என்ன ஆச்சு?”
“ஒண்ணுமில்லை”
“சரி வாங்க போகலாம். டைம் ஆகிடுச்சு”
கிளம்பினார்கள். ஓரிடத்தில் அவனை ஒரு பூங்கா அருகே இறக்கி விட்டுவிட்டு காத்திருக்கும்படி சொல்லிவிட்டு சென்றாள். அந்தப் பூங்காவில் சென்று ஓரிடத்தில் அமர்ந்தான். தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம். அவனுக்குள் குழப்பநிலை தொடங்கியது. தன்னை இவ்வளவு அதிகமாக நேசிக்கும் ஒரு பெண். இது தனக்குத் தேவையா? பாவம் அவளது சூழலில் அது சரி. ஆனால் அவள் சொல்லும் எந்தப் பிரச்சனையும் இவனுக்கில்லை. அப்படியே இருந்தாலும் ஆள் மாற்றும் எண்ணமும் இவனிடத்தில் இல்லை. இது தொடரவேண்டாம் என்று நினைத்தவனை அவள் நிலைகுலையச் செய்துவிட்டாள். இப்போது கூட காத்திருப்பது சரியா? என்ற குழப்பத்தோடு அருகே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இந்த உலகில் திறமையாளர்கள், சாதனையாளர்கள் பலருக்கும் அவர்களது பின்னணியில் இருப்பவர்கள் அவர்களின் குடும்பத்தில் சம்பந்தமில்லாத வேறு ஒரு நபராக இருக்கிறார்கள். அவர்களுக்குள் என்ன உறவு என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் அது தவறானது என்பது வெளிச்சத்திற்கு வரும்வரை தெரிவதில்லை. பலர் இப்படிப்பட்ட உறவால் தங்களது வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு உறவு இருந்தால் மட்டும்தான் ஒருவர் சாதிக்க முடியும் என்று இருந்தால் இந்த உலகில் பாதி உறவுகள் கள்ளக் காதலில்தான் மூழ்கியிருக்கும். தன்னைச் சார்ந்த துணையைவிட வேறொருவர் மீது இத்தனை பாசமும், காதலும் வைக்க முடியுமா? இது நிரந்தரம் ஆகுமா? இதனால் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறிகள் எத்தனை? இவைகள் மனோவின் ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளும் சிந்தனைகளும்.
இவன் சென்னையை விட்டு கிளம்பும்போது அவன் முடிவு செய்திருந்த விஷயம், பிரேமாவோடு தனது தொடர்பு ஒரு நல்ல நட்பை உருவாக்கவேண்டும். அவளிடம் உள்ள அசாத்திய திறமைகள் தம்மோடு பயணித்தால் பல விஷயங்களை எளிதாகச் செய்யலாம். இவனைப் பொறுத்தவரை ஒரு நல்ல நட்பு என்பது காமம் இல்லாத காதல் என்பான். அந்த உறவை இவன் ஆணித்தரமாக நம்புபவன். ஆனால் இந்த உலகம் ஒரு ஆண், பெண் நட்பு என்பதையே ஏற்றுக்கொள்ளாத சூழலில்தான் உள்ளது. கணவன் மனைவிக்கு அப்பால் எந்த உறவும் ஆரோக்கியமானதல்ல என்று நம்புகிற உலகம் இது. நட்பாகவே இருந்தாலும் அது கள்ளக்காதல் என்று தவறாக முத்திரை குத்துகிறவர்கள் இங்கு ஏராளம். பனைமரத்தின் கீழ் பாலைக் குடித்தாலும் கள் என்கிற உலகத்தில் கள்ளையே குடித்துவிடலாம் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பாலின வித்தியாசத்தில் பழகும் இவர்களுக்கு கூடுதல் போதையாக காமம் கிடைத்துவிடுகிறது. சமுதாயச் சீர்கேடு என்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது.
சரியாக நான்கு மணிக்கு வந்துவிட்டாள் பிரேமா.
“சாரி. ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேனா?” என்றாள்.
“பரவாயில்லை. பார்க்கில இருந்தாலே டைம் போறது தெரியாது. பிள்ளைங்க தனியா இருப்பாங்களா?”
“ம். இருப்பாங்க. தனியா இருந்து பழகிக்கணும்னு சொல்லி வளர்த்திருக்கேன். வெளியில பூட்டிட்டு வந்துடுவேன். அவன்கிட்ட ஒரு சாவி இருக்கும். கையில போன் இருக்கு.”
“வா... காபி ஷாப் போகலாம்” என்று அழைத்தான்.
“இங்கே கொஞ்சநேரம் பேசலாமே” என்றாள்.
“போய்க்கிட்டே பேசலாம் வா.” அழைத்துச் சென்றான்.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் சில விஷயம் யோசிக்கணும். உன்கிட்ட நிறைய பேசணும்னு வந்தேன். ஆனா, எல்லாம் தலைகீழ மாறிடுச்சு. உன் குடும்ப சூழ்நிலை, உன்னோட தனிப்பட்ட வாழ்க்கை என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. நாம கொஞ்சம் திட்டமிட்டுதான் பல விஷயத்துல இறங்கணும்.” அவன் பேசிக்கொண்டே வந்தான்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவள் இவன் என்ன சொல்லவருகிறான் என்று ஆவலாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
“ஆறு மணிக்கு ஒரு டிரெயின் இருக்குல. அதுல கிளம்பலாம்னு இருக்கேன். காபி சாப்பிட்டு அப்படியே ஸ்டேஷன் போயிடலாம். முன்னாடியே டிக்கட் வாங்கிட்டா ஈஸியா இருக்கும். அங்க ஃப்ளாட்பாரத்துல உட்கார்ந்து பேசலாம். ஓகேவா”
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிவதற்குள் அவன் பேச்சை மாற்றினான் என்பது அவளுக்குப் புரிந்தது. நான் வேணும்னு சொல்றானா? இல்லை வேணாம்னு சொல்றானா? ஒண்ணுமே புரியலையே? என்று உள்ளுக்குள் புலம்பியவளாக அவனுடன் வந்தாள். அருகில் உள்ள காபி ஷாப்பில் காபியுடன் உட்கார்ந்தபோது,
“ஸ்டெய்ட்டா சொல்லுங்க. என்ன உங்களுக்குப் புடிச்சிருக்கா?” என்றதும்,
சிரித்தபடி “மறுபடியும் சொல்றேன் புடிக்காமயா இவ்வளவு தூரம் வந்தேன்.”
“அப்புறம் ஏன் காலையில இருந்து டைம் வேஸ்ட் பண்ணீங்க. நீங்க ஒரு முத்தம் கூட கொடுக்கல எனக்கு.”
“கவலைப்படாத, மொத்தமா இன்னொரு நாள் பாத்துக்கலாம். அதுக்கு முன்னாடி நான் சில விஷயம் சொல்றேன். அதக் கேளு. அப்புறம் அதப் பத்தி பேசலாம்.”
“சொல்லுங்க கேட்டுக்கறேன். ஆனா இனிமே நீங்கதான் எனக்கு முக்கியம். என்னைவிட்டு பிரியாதீங்க. உங்க மேல நான் உயிரையே வச்சிருக்கேன்.” அவள் கண்கள் கண்ணிர்த் துளிகளை கண்டது. அதைப் பார்த்தவன் அதிர்ந்தவனாக,
“முதல்ல கண்ணை துடை. இது பப்ளிக். பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க. நான் உன்னை விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன். ஓகேவா. டைம் ஆகிடுச்சு. வா ஸ்டேஷன் போகலாம்.” அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
கண்களைத் துடைத்தபடி அவன் கைகளைப் பற்றிக்கொண்டே நடந்தாள்.
இப்படித்தான் தொடங்குகிறது பல கள்ளக்காதல் கதைகள். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்து செய்வது நல்லக் காதல். எல்லோருக்கும் முற்றிலுமாக தெரிந்தவுடன் அது திருமணத்தில் முடியும். யாருக்கும் தெரியாமல் செய்வது கள்ளக்காதல். எல்லோருக்கும் தெரிந்தவுடன் அது பிரச்சனையில் போய் முடியும் இதுவே கள்ளக்காதல்.
இரயிலின் படியில் நின்றபடி அவளுக்கு கையை ஆட்டிக்கொண்டிருந்தான். ஏதோவொரு வகையில் இவனிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைக்கும் என்று நம்பினாள். அதேநேரத்தில் அடுத்தமுறை வருகிறபோது காலத்தை வீணடிக்காமல் கட்டிலின்மீது காதல் தொடரும் என ஆசையாகக் காத்திருந்தாள் இவன் அதற்குப்பின் திரும்ப வரப்போவதில்லை என்பதை அறியாமல்...
- காதல் தொடரும்...
 

MANI EZHILAN

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
3
Points
1
காதல் (பாகம்) நான்கு

சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவே இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. சிலநேரம் சாதகமான சூழ்நிலைகள் அமைந்துவிடுகிறது. சிலநேரம் சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். இதற்குப்பின் இப்படியொரு சந்தர்ப்பம் அமையுமோ என்கிற மனநிலையில் இன்னும் சிலர்; கரும்புக்காட்டில் காளை புகுந்ததுபோல் துள்ளி விளையாடி விடுவார்கள். பிறகு கலைந்து அலங்கோலமாய் கசக்கிப் பிழியப்பட்ட கரும்புச் சக்கையாய் மாறும்போதுதான் இது எவ்வளவு பெரிய விபரீதமான செயல் என்பதை உணர்வார்கள். தன் குடும்பத்தின் மீதும், தன் குழந்தைகள் மீதும் அன்பும் கவனமும் செலுத்தாத பெற்றோர்கள் பலர் தன் சொந்த சுயநலத்திற்காக இதுபோன்ற சூழ்நிலைகளை தாங்களாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். பிறகு அதை கடவுளே உருவாக்கியதைப் போல நியாயப்படுத்துவார்கள்.
பிரேமாவின் காதல் குறுஞ்செய்திகள் மனோவின் மனதை சலனப்படச் செய்தாலும், அவனை ஏதோ ஒன்று பிரேமாவுடன் இருந்த தனிமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்த விடாமல் செய்தது. பாலுணர்ச்சி என்பதை புரிந்துகொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அது தன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவரை அது கடவுள். தன்னை மீறும்போது அதுவே எமன்.
பிரேமாவைப் பொறுத்தவரை அவளுக்குக் கிடைத்த கசப்பான வாழ்க்கையால் அவள் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறாள். அது அவளுக்கு நியாயமாகவே படுகிறது. கிடைத்த வாழ்க்கையை நிறைவாக வாழமுடியாமல் தினம்தினம் நரக வாழ்க்கையை அவள் வாழும்போது மனது அலைபாய்வது இயற்கைதான். ஆனால் தன் பிள்ளைகளுக்கென்று ஒரு வாழ்க்கையை ஆண்டவன் கொடுத்திருப்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
பிரேமாவின் வாழ்க்கையில் காதல் மட்டுமே தேவையாக இருந்திருந்திருந்தால் ஒருவேளை மனோ தொடர்ந்து அவளோடு பயணித்திருப்பானோ என்னவோ. ஆனால் அவளுக்கு காதலைத் தாண்டி வேறொன்றும் தேவைப்படுகிறது. மனோவுக்கு அது(?) தேவைப்பட்டிருந்தால் ஒருவேளை பிரேமாவின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி இருந்திருப்பானோ என்னவோ. ஆனால் மனோவின் தேடல் என்ன என்பதை புரிந்துகொள்ள முயலாத பிரேமாவைப் பிரிய முடிவெடுத்தான் மனோ.
நான் அழைக்கின்றபோதெல்லாம்
வருவேன் என்றாய்
உன்னை அனுப்பினால்தானே
அழைப்பதற்கு

என் இதயத்துள்
சிறைவைத்த உன்னை
எப்படியடா நான்
வெளியில் விடுவேன்

வா என்று முடிப்பதற்குள்
வந்து நின்றாய்
வாரி அணைப்பாய்
என்று நினைத்தேன்
தள்ளி நின்றே
கள்ளைக் குடித்தாய்
உன் கண்ணில்
என்ன போதை வைத்தாய்
உன்னையே நினைக்கும்படி
செய்துவிட்டாயடா

இனி நீ எப்போது வருவாய்
என ஏங்கவைத்து
என்னை வென்றுவிட்டாயடா

இரயிலடியில் உன்னை
விழிநீரால் அனுப்பிவைத்தேன்
அனுப்பிய நிமிடம் முதல்
அதை நிறுத்தமுடியாமல்
தவிக்கின்றேனடா

எப்போது மீண்டும் வருவாயடா
என் கண்ணீரை
நிறுத்துவதற்கும்
கட்டிலில் என்னை
அணைப்பதற்கும்

இப்படிக்கு
அத்தான் என
அழைக்கத் துடிக்கும்
பிரேமம் மிகுந்த பிரேமா

சென்னை வந்து சேர்ந்த மனோவின் செல்ஃபோனில் பிரேமா அனுப்பிய இந்தக் குறுஞ்செய்தி காத்திருந்தது. மனோ அந்தச் செய்தி ஓபன் செய்யாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.
“ஏங்க.. டைம் ஆச்சு. சீக்கிரம் எழுந்துருங்க. இல்லைனா லீவ் சொல்லிடுங்க.” மல்லிகாவின் குரல் மனோவின் தூக்கத்தைக் கலைத்தது.
அதிகாலை வந்து சேர்ந்த மனோவிற்கு களைப்பு இருந்தது. மனக்குழப்பங்கள் உள்ளபோது உடலும் சோர்வடைந்துவிடுவதால் வேலைக்குச் செல்லும் மனநிலையில் மனோ இல்லை.
“நான் லீவு சொல்லிடறேன். நீ கிளம்பு” என்று மனைவியுடன் சொல்லிவிட்டு மீண்டும் போர்வைக்குள் புகுந்துகொண்டான்.
“சரி. டிபன் எடுத்துவச்சிருக்கேன். சாப்டுட்டு படுங்க” என்று கூறியபடி கதவை மூடிவிட்டுக் கிளம்பினாள் மல்லிகா.
போர்வைக்குள் இருந்தபடி மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோ. ஏதோவொரு குற்ற உணர்ச்சி உள்ளுக்குள் இருந்து இவனை தூங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது.
கண்களை வெறுமனே மூடி படுத்துக்கொண்டிருந்தான். செல்ஃபோன் ரிங் அடித்தது.
நிச்சயம் இது அவளாகத்தான் இருக்கும். எடுக்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தான். எடுப்பதற்குள் நின்று விட்டது. செல்ஃபோனை எடுக்காமல் அப்படியே வைத்துவிட்டான். மீண்டும் ரிங் அடித்தது.
சரி எடுத்துவிடுவோம். அவளிடம் உடனே எதுவும் சொல்லாமல் இப்படியே கொஞ்சநாள் போகட்டும். எதுவும் சொல்லாமல் கொஞ்ச நாள் இதைத் தள்ளிப்போடுவோம் என்று நினைத்துக் கொண்டே போனைக் கையில் எடுத்தான். கண்களை மூடியபடியே...
“ஹலோ...” என்று தூக்கத்திலிருந்து எழுபவன் பேசுவதைப் போல ஆரம்பித்தான்.
“ஹலோ... என்ன இன்னுமா தூக்கம்?”
இது அவளது குரல் இல்லையே! சட்டென்று விழித்தவனாக செல்ஃபோனைப் பார்த்தான். டிஸ்பிளேயில் நான்சி என்று இருந்தது.
“ஆங்... சாரி. நான் ஊருக்குப் போய்ட்டு காலைலதான் வந்தேன். டயர்டா இருந்தது. அதான் படுத்துட்டிருந்தேன். சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” சமாளித்தான்.
“ஓ சாரி. நான் அப்புறமா கால் பண்ணட்டுமா?”
“இல்லை பரவாயில்லை. எழுந்து உட்கார்ந்துட்டேன். சொல்லுங்க.”
“உங்களுக்கு நாளைக்குப் பிறந்தநாள்தானே. அதான் அட்வான்ஸா விஷ் பண்ணலாம்னு கால் பண்ணேன்”
“ஓ அப்படியா! தேங்க்ஸ். நீங்கதான் ஃபர்ஸ்ட் விஷ். ரொம்ப தேங்க்ஸ்”
“உங்களுக்கு பர்த்டே கிப்ட் குடுக்கலாம்னு இருக்கேன். நாளைக்கு மீட் பண்ணலாமா? நீங்க பிஸியா இருப்பீங்க. இருந்தாலும் கேட்கிறேன்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் நாளைக்குச் சொல்றேன். நீங்க கால் பண்ணுங்க. அப்புறமா மீட் பண்ணலாம்.”
“ஓகே.. பை.. தூக்கத்தை கன்டினியூ பண்ணுங்க” என்று போனை வைத்தாள் நான்சி.
கடைசியாக ஒரு பிஸினஸ் மீட்டிங்கில் சந்தித்திருந்தான் நான்சியை. பொதுவாக இவனைப் பற்றி ஒருமுறை தெரிந்துவிட்டால் உடனே மீண்டும் சந்திக்கவேண்டும் என்கிற அளவிற்கு மனோவின் புரொஃபைல் இருக்கும். பல விஐபிகளோடு இவன் சந்தித்தவைகளும், செய்த செயல்களும், பிஸினஸ் ரீதியான இவனது அப்ரோச்சும் பலருக்குப் பிடிக்கும். மேலும், இவன் ஒரு கவிஞன் என்பது கூடுதல் பலம். இதுவே பலநேரம் பலவீனமானதும்கூட...
நான்சியிடமிருந்து வந்த அழைப்பால் பிரேமாவைக் கொஞ்சநேரம் மறந்திருந்தான். நான்சியிடம் பெரிதாக அறிமுகமில்லை. ஒருமுறை சந்தித்து விசிடிங் கார்டும், அவனது புரொஃபைலை வாட்ஸ்அப் செய்ததோடு சரி.
அவனது புரொஃபைலில் பிறந்ததினத்தை தெரிந்துகொண்டுதான் பேசினாள் என்பதைப் புரிந்துகொண்டான். அவள் சென்னையிலேயே இருப்பதால் நாளைக்கு பொய் சொல்லி வெளியூர் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
மீண்டும் சொல்கிறேன்..
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைவிட, என்னை ஒருவர் காதலிப்பது என்பது எப்போதுமே ஒரு குதூகலம்தான்.
அடுத்த ஆட்டோகிராஃப் மனோவின் வாழ்வில் தொடங்கினாலும், பிரேமாவின் நினைவு ஒரேநாளில் முடிந்துவிடுமா என்ன?
மெல்ல எழுந்து ரிப்ரஷ் செய்துவிட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தான். தனது செல்ஃபோனை எடுத்து வாட்ஸ்அப்பை எடுத்து வந்த மெசேஜ் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்.
பிரேமாவிடமிருந்து வந்திருந்த கவிதையைப் படித்தான்.
‘அத்தான் என அழைக்கத்துடிக்கும் பிரேமம் மிகுந்த பிரேமா’ இந்த வார்த்தை மனோவை என்னவோ செய்தது.
இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான், விட்டுவிடுவாள் என்று நினைத்தவனுக்கு இவளது கவிதை வரிகள் மனதை மீண்டும் கொள்ளை அடித்தது. மீண்டும் அந்தக் கவிதையைப் படித்துக் கொண்டிருந்தான்.
பதில் கவிதை எழுதத் தொடங்கினான்.
விடைபெற்றுத்தான் வந்தேன்
ஆனால்
விட்டுவிட்டு வந்தேன்
என் இதயத்தை

கண்ணுறக்கம் இல்லாமல்
பயணத்தில் களைத்தேன்
உன் கவிதையில்தான்
இப்போது விழித்தேன்

என் கண்ணுக்குள்
போதை என்கிறாயே
கவிதையில்
மதுவை ஊற்றிய
மாது நீதானே

மனக்குழப்பத்தில்
உன்னிடம் எதுவும்
சொல்லாமல் வந்துவிட்டேன்
தெளிவுக்கு வந்தபின்
உன்னிடம் மீண்டும் வருகிறேன்
என்னை மீட்டுத் தருவாய்
என நம்புகிறேன்

அத்தான் என
அழைத்தாலும் சரி
அப்படியே எனை
அணைத்தாலும் சரி

நித்தமும் உன்னிடமே
மொத்தமாய் வீழ்வேன்
காத்திரு என் ஜீவனே
நான் வரும் வரை...

இப்படிக்கு
அதே பிரேமத்துடன்
மனோ
என்று முடித்தான். கவிதையில் காதலைப் பொழிந்தான். மெல்ல கண்கள் சொருக மீண்டும் படுத்தான். தூங்கிப் போனான். கனவில் அவள்...
“நிங்களு தமிழா? என்ன இஷ்டப்பட்டா?” மலையாளத்தில் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே ஓடினாள் மௌலானா.
குப்பென்று வியர்த்துக் கொட்டியது. பட்டென்று விழித்தான். கரண்ட் கட் ஆகி இருந்தது. கண் விழித்தான். என்ன இது. இப்படி ஒரு கனவு நமக்கு. ஒரே பொண்ணுங்களா நம்மள சுத்தி இருக்குற மாதிரி இருக்கே.
கேரளத்தில், மலப்புரத்தில் சில நாட்கள் மனோ ஒரு முஸ்லீம் வீட்டில் வேலை செய்தான். சென்னை வருவதற்கு முன் அங்குதான் வேலை செய்து கொண்டிருந்தான். அங்கே பக்கத்து வீட்டில் உள்ள ஒரு முஸ்லீம் பெண்தான் மௌலானா.
பிரேமாவைப் பற்றிக் கவிதை எழுதிவிட்டு படுத்தவனுக்கு மௌலானா கனவில் வரக் காரணம், முதன்முதலில் ஒரு காதல் கதையை எழுத நினைத்தவனுக்கு கண்ணெதிரே கிடைத்த காவியம் அவள். தென்னந்தோப்புகளுக்கு இடையில் இயற்கையோடு வேலை பார்க்கும் ஒரு எழுத்தாளனுக்கு, அதுவும் கவிஞனுக்கு எழுத்தின் வேகம் அதிகமாய் இருக்கும். அவன் கற்பனையாய் எதையோ எழுதுவதை விட, நிஜத்தில் ஒருவரைக் காதலிப்பது மாதிரி தன்னை நினைத்துக்கொண்டு அதையே கதையாக எழுதலாம் என்று முடிவெடுத்தவனுக்கு அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள மௌலானா நன்றாக ஒத்துழைத்தாள்.
இவன் கதையில் வரும் கதாப்பாத்திரத்தைப் போல் இவனிடம் வந்து பேசுவதும், இவனிடம் மெல்லப் பழகுவதும் இவன் கதைக்கு பொருத்தமாய் இருந்தது. ஆனால் கடைசிவரை தன் காதலை சொல்லாமலே அங்கிருந்து சென்னை வந்தவன் மனோ. பல ஆண்டுகள் கழித்து அவள் கனவில் வந்தது மனோவுக்குப் புதிராக இருந்தது.
பிரேமாவை முழுமையாக இவனால் காதலியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், இருவருமே திருமணம் ஆனவர்கள். திருமணத்திற்குப் பின் இப்படியொரு காதல் தேவைதானா என்கிற குழப்பமே மனோ அவளிடம் இருந்து எதுவும் சொல்லாமல் வந்தது. ஆனாலும் அவளது கவிதைகளும், அவள் அன்று நடந்துகொண்டதும் இவனை வெகுவாகப் பாதித்தது. இருந்தாலும் அன்று மௌலானாவை ஒரு கதைக்காகக் காதலித்ததைப் போல் பிரேமாவை தன் மனதின் மகிழ்ச்சிக்காக காதலிக்கலாம் என்று முடிவெடுத்தான். அதன் வெளிப்பாடே மௌலானா கனவில் வந்திருக்கலாம்.
சிலநேரங்களில் உள்மனதில் உள்ளவைகள் நம் கனவில் வந்து ஏதோ ஒரு நாளில் தன்னை முன்னிலைப்படுத்தும். அதுவே சரி என்பதுபோல் நம்மை அடிமைப்படுத்தும்.
மல்லிகாவிடமிருந்து போன் வந்தது.
“ஹலோ..”
“ம்.. சொல்லு.”
“ஏஞ்சிட்டீங்களா?”
“ம்.. சாப்பிட்டேன். மறுபடியும் படுத்திருக்கேன். தூக்கம் வருது?” பொய் சொன்னான்.
“சரி.. தூங்குங்க. ஒரு மணிக்கு வந்து எழுப்பறேன்.” போனைத் துண்டித்தாள்.
போனை கீழே வைப்பதற்குள் பிரேமாவிடமிருந்து கால் வந்தது.
“ஹலோ..”
“ம்.. சொல்லுங்க”
“அத்தான்..” என்றாள் மெல்லிய குரலில்.
“ம்.. சொல்லுங்க” மீண்டும் சொன்னான்.
“என்ன சொல்லுங்க? ங்க.. வேண்டாம். சொல்லுன்னு சொல்லுங்க அத்தான்” என்றாள் கொஞ்சலாக.
இடையில் செகன்ட் கால் வந்தது.
“ஆபிஸிலிருந்து கால் வருது. திரும்ப கூப்பிடட்டுமா?” என்றான்.
“ம்.. சரி.. கூப்பிடுங்க” டல்லாக போனை வைத்தாள்.
அந்த செகன்ட் காலை அட்டன்ட் செய்தான்.
“ஹலோ.. எழுந்திட்டீங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” நான்சியின் குரல்.
“ம்.. சொல்லுங்க”
“நாளைக்கு சினிமாவுக்குப் போலாமா?”
“ம்.. ம்.. நாளைக்கு காலைல சொல்லவா? நான் இன்னும் எழுந்துக்கல. அப்புறமா சொல்லட்டுமா?”
“ஏன்.. புடிக்கலையா?” அவள் கேட்ட தோரணை அவனை தூக்கத்திலிருந்து உலுக்கியது.
“என்ன சொன்னீங்க... புரியலை” புரியாததைப் போல் கேட்டான்.
“இல்லை என்னை புடிக்கலையான்னு கேட்டேன்” அழுத்தமாய்க் கேட்டாள்.
உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். பரவாயில்லையே நமக்கு இத்தனை ஆஃபரா? கிருஷ்ணன் மாதிரி நம்மளைச் சுத்தி ஒரே லேடிஸ் கூட்டமா இருக்கே. காலரைத் தூக்கிக்கொண்டான்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நாம கொஞ்சம் பேசுவோமே. அப்புறமா போலாம்” என்று சினிமா செல்வதைத் தவிர்த்தான்.
“சரி நாளைக்குக் காலைல காந்தி மண்டபம் வந்துடுங்க” என்றாள்.
“ஓகே.. ஆனா வேலைக்குப் போகணும். ஈவ்னிங் வரட்டுமா?
“ஏன் லீவு போடமுடியாதா. நான் உங்களுக்கு ஸ்பெஷல் இல்லையா?” போதை ஏற்றியது அவளது வார்த்தைகள். தன்னைப் பற்றி முழுமையாகத் தெரியாத ஒரு பெண் தன்னிடம் இப்படிப் பேசும்போது சராசரி ஆண் என்ன செய்வான். தடுமாற்றத்தில் தத்தளித்தான் மனோ.
கை அமுக்க ஒருத்தி, கால் அமுக்க ஒருத்தி என்று பல பொண்டாட்டிகளோடு மன்னர்கள் வாழ்ந்த கதையை காலம் காலமாக நமக்குச் சொல்லி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிவனில் தொடங்கி அத்தனை கடவுள்களையும் ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள் என்று சொல்லியே வளர்க்கிறார்கள். ஸ்டெப்னி வைப்பதில் தப்பில்லை என்று கார் கம்பெனி சொல்கிறது. கீப் லெப்ட் என்று வாசகங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா பாடல் வந்து அடிக்கடி காதில் விழுகிறது.
சூப்பர்ஸ்டார் நடித்த நெற்றிக்கண் படத்தை பத்துமுறை திரும்ப திரும்ப பார்க்கிறான். அவர் எப்படியெல்லாம் கோல் போடுறார் என்று வியக்கிறான். கிளைமாக்ஸ் சீனை மட்டும் ஸ்கிப் பண்ணிடுறான். நிஜ வாழ்க்கையும் அப்படித்தான் என்று அவனுக்கு மட்டுமில்லை பலருக்கும் புரிவதில்லை.
நம்ப சமூகம் எதுவும் தப்பில்லை என்று எழுதப்படாத அகராதியை நம் கண் முன் நிறுத்துகிறது. லிவிங் டு கெதர் காலத்துல கள்ளக் காதலும் புனிதமானதுதான் என்று விவாதம் செய்கிறார்கள்.
ஏற்கெனவே கோல் போடாம தவற விட்ட ஒருத்தனுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது சும்மாவா விடுவான்.
“நீங்க ஸ்பெஷல் இல்லைனு யார் சொன்னது? ஈவ்னிங் தான் பொதுவா லவ்வர்ஸ் மீட் பண்ணுவாங்க. அதான் கேட்டேன்”
“அப்படினா ஓகே” குஷியானாள்.
போனைத் துண்டித்து கிழே வைக்கும்போது, பிரேமாவிடமிருந்து மெசேஜ் வந்தது.
“எப்ப வருவீங்க”
“கூடிய சீக்கிரம்” பதில் அனுப்பிவிட்டு டிவியை ஆன் செய்தான்.
“ஜாக்கிரதை ஜாக்கிரதை
சின்னவீடு ஜாக்கிரதை
பொதுவா புருஷன்
சத்தியமா உத்தமனுங்க
சமயம் கெடைச்சா
சங்கதியில் மன்னனுங்க
ஜாக்கிரதை ஜாக்கிரதை
சின்னவீடு ஜாக்கிரதை”
மணி மதியம் ஒன்றானது. மல்லிகா வீட்டிற்குள் நுழைகிறாள். பாக்யராஜின் சின்னவீடு படத்திலிருந்து இளையராஜா பாடிக்கொண்டிருக்கிறார்.
“படமா போட்டிருக்கானா?. சூப்பர் படமாச்சே. செம காமெடியா இருக்கும்” மல்லிகா சொல்லிக்கொண்டே போக மனோவிற்கு வியர்த்தது...

- காதல் தொடரும்...​
 
Last edited:
Top Bottom