Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL காதலும் கனலாய் சுடுவதேனோ - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
Messages
12
Reaction score
16
Points
3
KKS
அத்தியாயம் -1

சுட்டெரிக்கும் சூரியப் பொழுதுகள் மெல்ல துயில் கொள்ள ஆரம்பித்த பின் மாலைப் பொழுது.. வட்ட வடிவ கிண்ணத்தில் உறைந்து கிடந்த தயிராய் மஞ்சளும் வெள்ளையுமாய் பௌர்ணமி நிலவு அந்த நீலக்கடலுக்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

பூரணமை தினத்தின் காரணமாய் வழக்கத்திற்கு மாறான ஆவேசத்தில் வந்து விழுந்தது கரை மீதான அலைகள்.

தன்னை பார்க்கும் அனைவரையும் குளிர்வித்து விடும் வெண்பிறை அன்றும் பாரபட்சமின்றி இரவு நேரக் குளுமையை காற்றில் கலந்து குதூகலமாய் வீசிக் கொண்டிருக்க, அதோடு சேர்ந்து தானும் கும்மியடிக்கும் விதமாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி தூரத்தில் ஆட்களற்ற இடத்தில் மணற் பரப்பில் மல்லாக்க படுத்தவாறு இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனின் மீது எந்த ஒரு பாதிப்பையும் அந்த நிலவால் ஏற்படுத்த முடியவில்லை..

இதயப் பரப்பு முழுக்க வேதனைகளையும் வெஞ்சினத்தையும் மட்டுமே சுமந்திருக்கும் ஒருவனை அந்த வெண்ணிலவால் மட்டும் என்ன செய்ய முடியும். பெருமூச்சுடன் தோல்வியை தழுவி மேல் நோக்கி எழும்ப ஆரம்பித்தது.

நடு உச்சி நெருங்கும் நேரம் வரையிலும் அவன் நிலையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு யாரிவன் பைத்தியக்காரன் என்றே தோன்றும். ஆனால் அவனிலை அறிந்தோர்க்கு மட்டுமே புரியும் அவன் இழப்பும் அதனால் அவன் படும் வேதனைகளும்.அதற்கு அவன் கண்களில் இருந்து காது வரை காய்ந்து போயிருந்த கண்ணீர் தடங்களே சாட்சி.

இதே மணலில் இதே இடத்தில் வெள்ளை தேவதையாய் மின்னும் வெள்ளி நிலவை தந்தையும் மகனுமாய் போட்டி போட்டுக்கொண்டு காதலித்து கண்ணுற்ற நொடிகள் எல்லாம் ஒரே நாளில் ஒரே நொடியில் மாயமாய் போனதின் வலி.இன்றோடு அவர் இறந்து மூன்று மாதங்கள் கடந்திருந்த பொழுதிலும் ரணம் ஆறவில்லை.

சுற்று புறம் மறந்து தன்னில் தொலைந்திருந்தவனை தட்டி எழுப்பியது விடாது அதிர்ந்த கைபேசி. சலிப்புடனே அதை எடுத்து பார்த்தவன் திரையில் தெரிந்த பெயரைக் கண்டு பதற்றத்துடன் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ சித்தப்பா இந்த நேரத்துல கூப்பிட்டுருக்கீங்க. அம்மா நல்லாருக்காங்க தானே?"

"அம்மா நல்லாருக்காங்க யஸ்வந். அப்பவே மாத்திரை சாப்பிட்டு படுத்துட்டாங்க. நீ இன்னும் வரலையேன்னு தான் கூப்பிட்டேன். ஆபீஸ்ல ஒன்னும் பிரச்சனையில்லையே?"

அவர் பதிலில் நிம்மதியடைந்தவன் "ஒன்னும் பிரச்சனையில்லை சித்தப்பா. பீச்சுக்கு வந்தேன். நேரம் போனதே தெரியலை."

"பீச்சுக்கா! என்னாச்சு யஸ்வந் அப்பா நியாபகமா? ஆபீஸ்ல யாராச்சும் எதாவது சொன்னாங்களா?"

"......"

இவனின் அமைதியில் ஓரளவு நடந்ததை யூகித்தவர் " யஸ்வந்த் இதுக்கெல்லாம்..... "என்று கோபமாய் ஆரம்பித்தவரை இடைமறித்தான்.

"சித்தப்பா அதை பத்தி பேச வேண்டாம். நான் கிளம்பிட்டேன். சீக்கிரம் வந்துருவேன்.நீங்க போய் தூங்குங்க."என்றவன் கைபேசியை அணைத்தவன் காரை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அப்போது தான் கவனித்தான் கடலை நோக்கி வேக எட்டுக்களில் நடந்து சென்ற அப்பெண்ணை. நள்ளிரவு நேரத்தில் அந்த நிகழ்வு ஏனோ அசாதாரணமாய் தோன்றவே அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றான் யஸ்வந்.

அவனது சந்தேகம் சரிதான் என்பது போல் அந்த பெண் கடலின் உள்ளே செல்ல ஆரம்பிக்கவும் இவன் கத்திக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவளை நோக்கி.

"ஹலோ.. நில்லுங்க.. என்ன பண்றீங்க..?"என்று கத்திய இவன் குரல் கடலின் இரைச்சலையும் மீறி அவள் காதில் விழுந்ததோ என்னவோ முன்னிலும் வேகமாய் கடலினுள் இறங்க ஆரம்பித்தாள்.. அவளின் முயற்சியை அறிந்த யஸ்வந்த் நாலே எட்டில் அந்த பெண்ணை நெருங்கி அவள் கைகளை பற்றினான்.

இவன் பிடித்ததும் வெறி பிடித்தது போல் அவன் முகம் பார்க்காமல் கைகளை உதறி தடுமாறி கீழே விழ இருந்தவளை இடை பற்றி நிறுத்தி தன் புறம் திருப்பினான்.

முகம் முழுதும் நீரில் நனைந்திருக்க கண்களை திறக்க முடியாமல் அவன் பிடியை விடுவிக்க போராடியவளை கண்ட யஸ்வந்த் ஒரு நொடி நெற்றி சுருக்கி யோசித்த அடுத்த கணம்,

"அஞ்சலி !" யென அழைத்திருந்தான் அவளை.

அதுவரை அவனோடு போராடிக் கொண்டிருந்தவள் அவன் அழைப்பை கேட்டு அதிர்ந்து விழிகளைத் திறந்தாள்.

வெண்ணிலவின் வெளிச்சத்தில் ஒளிர்ந்த அவனது முகத்தைக் கண்டு திகைத்தவள்,

"தே... தேவா..."என்று திணறலாய் சந்தேகமாய் அவனை நோக்கினாள்.

"உன்னோட சீனியர் தேவா தான். என்ன காரியம் பண்ண இருந்த அஞ்சலி?"என்று அவளை பிடித்து உலுக்க,

"தேவாஆஆஆஆ "என்ற கதறலுடன் அவன் மார்பில் சரண் புகுந்தாள் அஞ்சலி.

அவளின் இந்த செய்கையில் திகைத்து நின்றான் யஸ்வந்த் தேவ். தூரத்து உறவினர் போல் தூரத்து நட்பு என்ற வகையில் தான் அவனுக்கு அஞ்சலியுடனான பந்தம்.

கல்லூரி ஜூனியர் என்ற முறையில் மட்டுமே பழகி வந்த ஒரு பெண்ணிடம் இருந்து இத்தகைய நெருக்கமான செயலை எதிர்பாராமல் தான் திகைத்து நின்றான். ஆனால் மறு நிமிடம் அவள் சற்று முன் செய்யவிருந்த மடத்தனம் நினைவுக்கு வந்ததும் அவள் மன அழுத்தத்தை புரிந்து கொண்டான்.

மனம் இளக ஆதரவாய் அஞ்சலியின் தலையை வருடியவன் "ஒண்ணுமில்ல அஞ்சலி. எல்லாம் சரியாகிடும்." என்றுவிட்டு சிறிது நேரம் சங்கடமாய் அந்நிலையிலேயே இருக்க சற்று நேரத்தில் தெளிந்த அஞ்சலி அவனை விட்டு விலகி நின்றாள்.

ஒரு வித அழுத்தத்தில் அவனை கண்டதும் தாய் மடி சேர்ந்த கன்றின் நிலையில் அவனை அணைத்திருந்தாலும் மனம் சற்று சமன் பட்டதும் தன் செயலை எண்ணி தவித்தாள். 'அவன் என்ன நினைத்திருப்பான்!'என்ற படபடப்பும் அவள் சற்று முன் செய்யவிருந்த நிகழ்வில் தோன்றிய குற்றவுணர்ச்சியும் சேர,

"சாரி தேவா.." உள்ளே போன குரலில் உரைத்தவாறு தலை குனிந்து நின்றாள். அவளின் கைபற்றி கரைக்கு அழைத்து வந்தான் யஸ்வந்த் தேவ். தன் காரின் அருகில் சென்றவன் உள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை அவள் குடிக்கும் வரையிலும் அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

வெகுவாய் அழுது களைத்திருப்பாள் போலும். கண்கள் சிவந்து தடித்து கிடந்தது. சரியாக சாப்பிட்டு எத்தனை நாள் ஆனதோ என்னுமளவு நிறைய இளைத்திருந்தாள். மாநிறத்திற்கும் கீழான அவள் முகம் வெளுத்துக் கிடந்தது. ஏன் இப்படி இருக்கிறாள் என உள்ளூர கவலையாய் இருந்தது அவனுக்கு.

"என்னாச்சு அஞ்சலி? ஏன் இப்படி இருக்க?"என்று தன்னையும் மீறி கேட்டுருந்தான் தேவ்.

பதில் சொல்ல வேண்டியவளோ மௌனமாய் கடலை பார்த்திருந்தாள்.

"பதில் சொல்லு அஞ்சலி. சூசைட் பண்ணிக்குற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை.. "

"......."

"இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். இங்க திரும்பி என்னை பாரு அஞ்சலி."என்று அவளின் தோள் பற்றி திருப்ப, நிமிர்ந்து இவனைப் பார்த்தாள்.

அவனின் குற்றம் சாட்டும் பார்வை மீண்டுமாய் தன்னை சுட விழிகளை தாழ்த்திக் கொண்டவளின் விழியோரம் கண்ணீரின் பளபளப்பு.

"என்கிட்ட எதுவும் கேக்காதீங்க தேவா. எதையும் சொல்ற மன நிலைல நான் இல்லை. என்னை மன்னிச்சிருங்க."

"சரி எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் என்ன பிரச்சனையா இருந்தாலும் எதிர்த்து போராடனுமே தவிர இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா அஞ்சலி..உங்க அம்மாவை பத்தி யோசிச்சு பார்த்தியா?"

"யோசிச்சு பார்க்க இப்ப அவங்க உயிரோட இல்ல தேவா."சொல்லும் பொழுதே குரல் உடைந்திருந்தது.

"ஓ.. காட்..சாரி அஞ்சலி.."என்றான் பரிதவிப்பாய்.

அவள் மௌனமாய் அழுகையில் கரைய இவன் தவிப்பாய் பார்த்திருந்தான்.

"அஞ்சலி ப்ளீஸ் அழாத.இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு."

"இல்ல தேவா அழலை."என்று கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"உன்னோட இழப்பு அதிகம் தான். அதுக்கான தீர்வு தற்கொலையா இருக்குமா அஞ்சலி. உன்னை எப்படி எல்லாம் வளர்த்திருப்பாங்க உங்க அம்மா?உங்க அப்பாவும் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பாங்க? அதெல்லாம் நீ இந்த நிலைமைக்கு வரணும்னா. இப்படி நீ செஞ்சா உயிரோட இல்லைனாலும் அவங்க ஆத்மா வருத்தப்படாதா."

"புரியுது தேவா. ஆனாலும் அவங்கள காப்பாத்த முடியாம போன என்னைப் பார்த்து எனக்கே வெறுப்பா இருக்கு. அதோட..."இன்னும் எதோ சொல்ல வந்தவள் தூரத்தில் கேட்ட விசில் சத்தத்தில் படபடப்பானாள்.

தூரத்தில் காவலர் வருவதைக் கண்ட தேவாவும் "கார்ல ஏறு அஞ்சலி. மத்தத பிறகு பேசிக்கலாம்."

"இ.. ல்ல. என் வீடு பக்கம் தான். நான் நடந்தே போய்டுவேன்."

"ப்ச் இந்நேரத்துல தனியா எப்படி போவ. வீணா ஆர்கியூ பண்ணாத அஞ்சலி. கார்ல ஏறு."என்று லேசாய் அதட்டவும் வேறு வழியின்றி காரின் முன்பக்க கதவை திறந்து ஏறி அமர்ந்தாள்.தேவும் மறுபக்கம் அமர்ந்து காரை இயக்கினான்.

பீச்சில் இருந்து மெயின் சாலைக்கு வந்தவன்,

"சொல்லு அஞ்சலி. உங்க வீடு எங்க இருக்கு.?"என்று கேட்க, அஞ்சலி முகவரியை சொல்லவும் முறைத்தான் அவளை.

"இந்த இடம் பக்கமா உனக்கு. நடந்தே போய்டுவியா. ஏன் அஞ்சலி இப்படி இருக்க.."என்று கேட்க, அவனை தயக்கமாய் பார்த்தவள்,

"நான் வரும் போதும் நடந்து தான் வந்தேன்."என்று மெல்லிய குரலில் உரைக்க அதிர்ந்து தான் போனானவன்.

'இந்தப் பெண்ணை என்ன செய்வது' என்பது போல் பார்த்துவைக்க,

"நான் வேணும்னே பண்ணல தேவா. ஒரு நிலைலயே மனசு இல்ல. எப்படி வீட்ல இருந்து கிளம்பினேன், எப்படி இங்க வந்தேங்கறதே இப்ப நினச்சு பார்க்கும் போது கனவு மாறி தான் இருக்கு. தற்கொலை செஞ்சுக்க கூட பிளான் பண்ணியெல்லாம் வரலை. கடலைப் பார்த்ததும் என்னை மீறிய ஒரு வேகத்தில் தான் அப்பிடி பண்ணிட்டேன். இப்ப யோசிக்கும் போது தப்புன்னு புரியுது."

"விடு அஞ்சலி. நடந்து முடிஞ்சது எல்லாம் முடிஞ்சதாவே போகட்டும். இனி நீ தனியா இருக்கேனு கவலைப் படாத. ஒரு நல்ல பிரண்டா காலம் முழுக்க உனக்கு துணையா இருக்கேன். படிச்சிருக்க. தன்னம்பிக்கையோட இரு. லைப் ஒரு தடவ தான். கஷ்டமோ நஷ்டமோ அதையும் தாண்டி வாழ்ந்து காட்டணும். சரியா "என்று அவள் தலையை வருட அவள் கண்ணீருடன் தலையசைத்தாள்.

சிறிது நேரம் அமைதியான மவுனம் இருவருள்ளும்.

"லாஸ்டா எப்ப சாப்பிட்ட."என்று தேவ் இருந்திருந்தார் போல் கேட்க இவள் பார்வை மீண்டும் தரையை தொட்டது.

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிப் பழகு அஞ்சலி."அவன் தன்மையாய் தான் சொன்னான் என்றாலும் அதில் ஒருவித அழுத்தத்தை உணர்ந்தாள் அஞ்சலி.

"அது.. நேத்து நைட்.."என்று சொல்ல, பெருமூச்சு கிளம்பியது இவனுள்.

அதன் பிறகு தேவ் அஞ்சலியிடம் எதுவும் பேசவில்லை. அவனது மவுனம் அவளை தாக்கியது.

"தேவா..."சமாதானப்படுத்தும் விதமாய் வந்த அழைப்பில் அவள் புறம் திரும்பியவன்,

"டோன்ட் ஒர்ரி. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.."என்றுவிட்டு பார்வையை சாலையில் பதித்தான்.

அவன் புரிதலில் கொண்ட நிம்மதியில் அவனையே பார்த்திருந்தாள் அஞ்சலி. 'காலேஜ்ல இருந்து இப்ப வரைக்கும் நீங்க அப்பிடியே இருக்கீங்க தேவா. பார்க்கவும் சரி பழகவும் சரி........... காதலிக்கவும் சரி..'என்று நினைத்தாள்.

சென்னையில் புகழ் பெற்ற கலைக் கல்லூரியொன்றில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டில் அஞ்சலி படித்துகொண்டிருந்த சமயம், அதுவரை எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளாதவர்களை மட்டும் தேர்வு செய்து வேறு கல்லூரியில் நடக்கும் காமெர்ஸ் ஃபெஸ்டிவலில்( commerce festival) கலந்து கொள்ள அனுப்பி வைத்திருந்தார் வணிகவியல் துறை ஹச் ஓ டி (HOD).

"சோபி எனக்கு பயமா இருக்கு டி...கிளாஸ்ல செமினார் எடுக்க சொன்னவே கால் எல்லாம் உதரும்.. இப்ப அவ்ளோ பேர் முன்னாடி ஆட்ஷோ(addshow)லாம் சான்ஸே இல்லடி..அதிலும் ஆன் த ஸ்பாட் தலைப்பு வேற. சாத்தியமா ஸ்டேஜ்லேயே மயங்கி விழுந்துருவேன் சோபி.."

"அடி அஞ்சு,நானே பயத்துல பதறிட்டு கிடக்குறேன். நீ என்னை ஓடற பஸ்ல இருந்து குதிக்க வச்சுருவ போலயே."

"நல்ல ஐடியாடி.. குதிச்சு ஓடி போயிடுவோமா "என்று சொன்ன அஞ்சலியை முறைத்தாள் சோபனா.

"ஓடியெல்லாம் போக முடியாது. நம்மள அள்ளிட்டு தான் போகணும். இவ்ளோ வேகத்துல போற பஸ்ல இருந்து குதிச்சா ஹோல் பார்ட்சும் கலண்டு விழுந்திரும்."

"பரவாயில்லடி. அப்பிடியாச்சும் இதுல இருந்து தப்பிச்சுடுவோமே "

"ஆமாமாம்..தப்பிச்சு போய் எமன் அங்கிள் கிட்ட எக்ஸ்ட்ரா பாய் போட்டு படுத்துக்குவோம்."

"பாய் வேண்டாம் டி. பெட் போட்டு படுத்திடுவோம். அப்போ தான் சுகமா தூக்கம் வரும்."

"அடியே..உன் மொக்கைக்கு குதிக்குறதே பெட்டெர்.."என்று எழுந்தவள் அஞ்சலியையும் சேர்ந்து இழுக்க ஒட்டு மொத்த பஸ்சும் திரும்பி பார்த்தது இவர்களை.

இவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த யஸ்வந்த் தேவ் இவர்களை பார்த்து "என்னாச்சு கேர்ள்ஸ்?எனி ப்ரோப்லம்?"என்று கேட்டாலும் அவன் சிரிப்பை அடக்குவது புரிந்தது. ஒருவேளை இவர்களது பேச்சை கேட்டுருப்பானாக இருக்கும்.

"ஹிஹி.. நத்திங் சீனியர்.."என்றுவிட்டு சோபனா அமர்ந்துவிட்டு, 'பே ' வென தேவையே பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலியையும் இழுத்து அமர வைத்தாள்.

"என்னடி மாடே இப்படி பார்த்து வைக்குற. அவன் என்ன அவ்ளோ அழகாவா இருக்கான்."

"ஏன் அவங்களுக்கு என்ன.. பால்டீ மாதிரி எவ்ளோ செம்மயா இருக்காங்க."

"ஆமா விட்டா ஊதி ஊதி குடிச்சுருவ போலயே.."

"அதுக்கெல்லாம் நமக்கு குடுப்பினை இல்லடி. வேடிக்கை பார்த்தே மனச தேத்திக்க வேண்டியது தான். "என்று சொல்லி பெருமூச்சு விட,

"பார்த்த மூனே நாளுல இவ்ளோ மூச்சு ஆகாதுடி. கொஞ்சம் மெதுவா விடு. இல்லைனா முன்னாடி உக்காந்திருக்கவன் அப்பிடியே பறந்து போய்டப் போறான்."என்று கிண்டல் செய்யவும்,

"ம்க்கும் "என்று முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்..

நல்லவேளை முன்பு போல் இல்லாமல் இவர்களுக்குள்ளவே குசுகுசுவென பேசிக்கொண்டதால் முன்புறம் அமந்திருந்த தேவின் காதில் எதுவும் விழவில்லை..

காதல் கனல் இனி மெல்ல சுடும்

Word count -1298

Thread 'காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments' https://www.sahaptham.com/community/threads/காதலும்-கனலாய்-சுடுவதேனோ-comments.617/
 
Last edited:
Messages
12
Reaction score
16
Points
3
KKS-2


விரிந்த மலரில் வெளிப்படும் வாசமாய்
அவன் காதல் அவளுக்கு!!


அந்த ஆடிட்டோரிய அரங்கம் முழுவதும் மாணவப் பட்டாளங்களால் நிரம்பி இருந்தது.. அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.இன்னும் அரைமணி நேரத்தில் ஆட்ஷோ நடக்கவிருந்ததன் காரணமாய் மைக்கில் ஒவ்வொரு கல்லூரியாக அழைத்து தலைப்பை குடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் பேனா பென்சில் கிரைண்டர் என்று வித்தியாசமான தலைப்புகள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கல்லூரியும் தங்களுக்கு குடுத்த பொருளை நடித்து விளம்பரப்படுத்த வேண்டும். கலந்து கொள்ளும் ஐந்து நபர்கள் மட்டும் அரைமணி நேரத்திற்குள் கலந்து ஆலோசித் தீமை ரெடி செய்து நடித்து பயிற்சி எடுக்க வேண்டும்.

பிறகு அதை மேடை ஏறி அனைவர் முன்னிலும் நடித்துக் காண்பிக்க வேண்டும். அதிக மதிப்பெண் பெரும் கல்லூரி வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள்.தேவ் அவர்கள் கல்லூரி சார்பாக சென்று தலைப்பு வாங்கி வந்தான்.

"ஹப்பாடா ஹாஸ்பிடல் வந்துருக்கு. எங்க பேப்பரும் பேனாவும் வந்துருமோன்னு நினச்சேன்."என்றான் அவர்கள் ஐவரில் ஒருவன் மதன்.

"அது வந்தா கூட ஈசிடா. இது தான் டஃப். அவனுங்கல்லாம் காமெடியா குடுத்தே ஸ்கோர் பண்ணிடுவாங்க. இதுல அப்பிடி எதும் குடுக்க முடியாது. நாங்க இருக்கோம்ங்கற மாதிரியான அப்ரோச் தான் செய்ய முடியும். அதுல கிரியேட்டிவ்வா செஞ்சா தான் ஜெயிக்க முடியும்."

"இப்ப என்ன சீனியர் பண்றது."

"டோன்ட் ஒர்ரி கைஸ். நம்ம பெஸ்ட்ட கொடுப்போம். தைரியமா ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்ணுங்க. அதுவே போதும்."என்று சொல்லவும் அனைவரும் கொஞ்சம் நம்பிக்கையாகவே தலையசைத்தனர்..

பிறகென்ன அடுத்த அரைமணி நேரத்தில் பக்காவான தீமில் மேடையேற தயாராய் வந்தது நம்மணி.

"ஹய்யோ மரண பயமே இருக்கே அஞ்சு.எப்படியாச்சும் இங்கிருந்து என்னைக் காப்பாத்தி கரையேத்திடு முருகா!" என்று தனக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்த அஞ்சலியை இடித்தாள் சோபனா.

"என்னடி ஒப்பிச்சிட்டு இருக்க? உனக்கு குடுத்த டயலாக் நியாபகம் இருக்கு தானே?"

"ஹான்.. இருக்குன்னு தான் நினைக்குறேன்.."

"எதே நினைக்குறியா! என்னடி இப்படி சொல்ற.அதான் கைல பிட்டு வச்சிருக்கியே. அப்பப்போ படிச்சுக்கோ சொதப்பிடாத . நல்ல வேளை எனக்கு ஒன்லி ஆக்ஷன் தான்."

"எனக்கு பயமா இருக்குடி. ஸ்டேஜ்ல போய் மறந்துட்டேனா?"

இவர்கள் அருகில் நின்றிருந்த தேவா, "முடிஞ்ச வரைக்கும் நியாபகம் வச்சுக்கோ. மறந்தாலும் கைல இருக்குற பேப்பர் பாத்து பேசிடு."என்று சொல்லவும் சரியென தலையசைத்தாள்.

இவர்களுக்கு முன் மற்ற கல்லூரிகள் அனைத்தும் சிறப்பாய் நடித்து முடித்திருக்க, இவர்கள் முறை கடைசியாக தான் வந்தது..

இவர்கள் அணியும் சிறப்பாய் நடித்து கொண்டிருந்தனர். மற்றவர்களை விடவும் தீமும் மிக அருமையாய் வந்திருக்க கடைசியாய் முடிக்க வேண்டிய அஞ்சலியால் அத்தனையும் சொதப்பியது.

முதலில் நன்றாக பேச ஆரம்பித்தவள் இடையில் சிலதை மறந்து விட மாணவர்கள் கூட்டம் விசிலடித்து கத்த ஆரம்பித்தது. அதிலேயே அவளுக்கு சகலமும் மறந்து விட, பக்கத்தில் இருந்த சோபனா மெல்லிய குரலில்,

"பார்த்து படிச்சிரு அஞ்சு "எனவும் அவசரமாய் கையிலிருந்த பேப்பரை விரித்தாள்.. அதைக் கண்ட மாணவர் கூட்டம் பெரும் இரைச்சலை கூட்டிவிட அழுகை கண்ணைக் கட்டிக்கொண்டு நின்றது. அதற்கும் மேல் தன்னால் முடியாது என்று நினைத்து, பேப்பரையும் மைக்கையும் கீழே வைத்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மேடையை விட்டு இறங்கி ஓடிவந்துவிட்டாள்.

*********

"அஞ்சலி.... அஞ்சலி..."என தேவ் அழைக்கும் குரல் எங்கோ தொலைதூரத்தில் கேட்பது போல் ஒலித்தது.

இவளிடம் பதிலில்லாமல் போகவே அஞ்சலியின் கன்னம் தட்டி அழைத்தான்.அதிலும் லேசாய் முனகினாளே தவிர விழிக்க வில்லை.

லேசாய் இவனுள்ளும் பதற்றம் தொற்றிக்கொள்ள தண்ணீரை முகத்தில் தெளித்தான். தன் மேல் சில்லென பட்ட நீரில் தூக்கத்தில் இருந்து விழித்தாள் அஞ்சலி.

"அஞ்சலி....அஞ்சலி ஆர் யூ ஓகே..?"

"ஹான்... எ... ஸ் தேவா.. ஐ அம் ஓகே.சாரி கொஞ்சம் தூங்கிட்டேன் போல"என்றவாறு முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"ஒன்னும் பிரச்சனையில்ல அஞ்சலி. சாப்பிடத்தான் எழுப்பினேன். இந்தா சாப்பிடு."என்று கையில் இருந்த உணவு பொட்டலத்தை அவளிடம் தந்தான்.சற்று யோசனையாய் பார்த்தவள்,

"நான் வீட்டுக்கு போய் சாப்பிடுக்கவா தேவா ?"என்று தயங்கியே அவனிடம் கேட்டாள்.

"ஏனாம்.. இன்னும் சாப்பிட நல்ல நேரம் வரலையாமா?"லேசாய் கண்டிப்பும் நக்கலும் கலந்த தொணியில் வந்த கேள்வியில் வேகமாய் இல்லையென தலையாசைத்தவள் உண்ண ஆரம்பித்தாள்.

சிரிப்புடன் அவளை பார்த்திருந்தவன் காரில் பாடலை ஒழிக்க விட்டு இருக்கையில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான் பாடலின் தாளத்திற்கு ஏற்றவாரு ஸ்டேரிங்கில் தாளமிட்டது அவன் கைகள்.

யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது..!

"அஞ்சலி காலேஜ் டைம்ல நீ என்னை சைட்டடிச்ச தானே?" பாடலினால் நிறைந்திருந்த அமைதியை தடை செய்வது போல் அவன் கேட்கவும் இதயம் துள்ளி வெளியே வந்துவிடும் நிலையில் புரையேறியது அஞ்சலிக்கு..

"ஹே மெதுவா..."என்று அவள் தலையை தட்டியவன்,

"என்ன பொண்ணு நீ. இதுக்கெல்லாம் இப்படி ஷாக் ஆகலாமா? இதே காலேஜ் டைம் அஞ்சலியா இருந்தா,ஆமாம் சைட் அடிச்சேன். அழகா இருந்தா சைட்டடிக்க தான் செய்வாங்க ன்னு நீ சொல்லியிருப்பா. "

ஆமாம் சொல்லியிருப்பாள் தான். அவ்வளவு ஏன் மூன்று மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் கூட சொல்லியிருப்பாள். ஆனால் இப்போது! நினைக்க நினைக்க நெஞ்சம் கசந்தது. அது அவள் பதிலிலும் வெளிப்பட்டது.

"அந்த அஞ்சலி எங்கோ தொலைஞ்சு போய் பல நாள் ஆச்சு தேவா."என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"எங்கயும் போகல. உனக்குள்ள அடைச்சு வச்சுருக்க. பெரிய திண்டுக்கல் பூட்டா போட்டு பூட்டி வச்சுருக்க. கொஞ்சம் திறந்து விடு. எனக்கு அந்த அஞ்சலிய பார்க்க ஆசையா இருக்கு."

"எனக்கும் தான்.."என்றாள் முனகலாய்.ஆனால் அது பேராசை என்பது அவளுக்கே தெரியுமே.

"சரி சாப்பிடு.. இதான் சாக்குனு எஸ்ஸாக பார்க்காத."

"அப்பிடியெல்லாம் இல்ல."என்று சாப்பிட தொடங்கியவள் அப்போது தான் நினைவு வந்தவளாய்,

"நீங்க சாப்டீங்களா..?"என்று கேட்கவும் ,

"இப்பதான் என்னை பத்தி நினைக்க தோணுச்சா.."என்றான் சிரித்துக் கொண்டே.

"சாரி தேவா.."வருத்தமாய் மன்னிப்பு கேட்டாள்.அவள் தலையில் லேசாய் தட்டியவன்,

"சும்மா கிண்டல் பண்ணாக் கூட ஏன் உன் மூஞ்சி இப்படி போகுது ம்ம்..எனக்கு பசியில்ல நீ சாப்பிடு."

அவனை அப்பிடியே விடவும் மனசில்லை. வற்புறுத்தவும் தைரியம் இல்லை. அவனை பார்க்க வைத்துக்கொண்டு உண்ணவும் பிடிக்கவில்லை.

உணவை அளந்து கொண்டிருந்தவளை கண்டவன் "இப்ப என்னாச்சு.. ஏன் சாப்பாட்டுல கோலம் போட்டுட்டு இருக்க..?"

"முன்ன எப்படியோ. இப்ப நீங்களும் சாப்பிடலைன்னு தெரிஞ்சும் உங்களை பார்க்க வச்சிட்டு சாப்பிட பிடிக்கலை."இழுத்து பிடித்த தைரியத்தில் சொல்லி விட்டாள்.

சின்னதாய் சிரித்தவன்,"அவ்ளோதானே எனக்கு ஊட்டி விட்டுட்டே நீயும் சாப்பிடு " என்று சொல்லி விட்டு 'ஆ ' காட்டினான்.

மெல்லிதாய் வாய் பிளந்தாள் பெண்ணவள்.'என்னாச்சு இவங்களுக்கு. இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி நடந்து கொண்டதில்லையே.'என்று யோசிக்க, தேவ் மனதிலும் அதே எண்ணம் தான்.

'நான் ஏன் அஞ்சலியிடம் இவ்ளோ உரிமை எடுத்துக்கறேன். என்ன ஆச்சு எனக்கு. என் அம்மாவை கூட நான் ஊட்டி விட சொன்னதில்லையே. இவள் வேற அந்நியன பார்க்குற மாதிரியே பார்த்து வைக்குறா. அவளை இப்படியா சங்கட படுத்துவ தேவ்.'என்று மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவன், திறந்த வாயை சட்டென மூடிக்கொண்டான்.

"நா... நான் சும்மா தான் கேட்டேன். நீ சாப்பிடு "என்றுவிட்டு காரை விட்டு இறங்க முற்பட, அவனின் கை பிடித்து தடுத்தாள் அஞ்சலி. என்னவென்று அவன் பார்க்க,

"இந்தாங்க.."என்று உணவை நீட்ட, வியப்பாய் பார்த்தாலும், வாய் தானாக திறக்கும் வேலையை செவ்வனே செய்தது..அதிசயம் ஒன்று அழகாய் இதழ் விரித்தத்தில் இருவருள்ளமும் பெரும் ஆராய்ச்சி கொண்டது தத்தம் செயல்பாட்டை நினைத்து.

ஸ்பூனில் ஊட்டியது தான் என்றாலும் இருவருள்ளும் இனம் புரியா இத அலைகள். சற்று முன் அவர்கள் கொண்டிருந்த மன நிலைக்கும் இப்போதிருக்கும் நிலைக்கும் அத்தனை வித்தியாசம். பாடலோடு சேர்ந்த இசைத்தன இதய மனோஹரங்கள்.

அஞ்சலியின் வீடு வரும் வரையிலுமே இதே நிலை. அவள் வீட்டை அடையாளம் காட்டுவதை தவிர இருவருக்கு இடையிலும் அமைதி அமைதி அமைதி மட்டுமே.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அவளின் வீட்டை பார்த்தான். காம்பவுண்டுக்கு உள்ளிருந்த வீட்டின் நிழலுருவம் மட்டும் தெரியும் வண்ணம் இருட்டில் மூழ்கி இருந்தது. தூரத்தில் நாய் குறைக்கும் சத்தம் தவிர வேறு ஒலியில்லாதளவு ஆள் அரவமற்றுக் கிடந்தது அந்த வீதி.

அஞ்சலி காரிலிருந்து கீழிறங்க அவளுடனே தானும் இறங்கினான் தேவ்.

"தேவா! நீங்க கிளம்புங்க. இப்பவே ரொம்ப லேட்டாகிடுச்சு."அவள் அவனை அப்படியே கிளப்பிவிட அவசரமாய் சொன்னாள்.

"நீ தனியா இருந்துக்குவியா அஞ்சலி. நான் வேற எதாவது எற்பாடு பண்ணட்டுமா "என்றான் இருட்டில் மூழ்கிக் கிடந்த அவள் வீட்டை பார்வையிட்டவாறு.

"என்னோட வீட்டுல எனக்கென்ன பயம் தேவா. அம்மாவோட நினைவுகள் கூட எனக்கு துணை தானே. நீங்க கிளம்புங்க தேவா இதுக்குமேலும் உங்களோட தூக்கத்தை கெடுக்குற குற்றவுணர்வு எனக்கு வேண்டாமே "

இப்படி சொன்ன பிறகு அவனுக்கு கிளம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.அவளோடு துணைக்கும் இருக்க முடியாதே. 'இதென்ன எட்ட நின்று, விட்டு செல்லும் நிலை. இது சுத்தமாய் ஏன் எனக்கு பிடிக்கவில்லை ' என்று குமுறலும் ஆராய்ச்சியுமாய் மனம் தத்தளித்தது. மீண்டுமாய் விரக்தியில் எதாவது செய்துகொண்டால் 'ஐயோ! நினைவே கூர் ஊசியாய் இதயத்தை தாக்குகிறதே. இவளை எப்படி தனியே விட்டுச் செல்வேன் 'அந்த பயத்தை அப்படியே அவனைழைப்பில் வெளிப்படுத்தி விட்டான் போலும்,

"அஞ்சலி.."என்றழைக்க, அவனை பார்த்தவள் அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ,

"பயப்படாதீங்க தேவா. எந்த தப்பும் இனி செய்ய மாட்டேன்.எங்க அம்மா மேல ப்ரோமிஸ் "என்று சொல்லவும் தான் அத்தனை நிம்மதியை உணர்ந்தான் அவன்.

அது தந்த சிறு மகிழ்வில் அவள் கன்னம் தட்ட உயர்ந்த கையை கட்டுப்படுத்தி ஃபேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டவன்,

"கவனமா இரு அஞ்சும்மா.."என்று கனிவை குழைத்து வார்த்தையில் தடவி விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டான்.

அவனின் அஞ்சுமாவில் அவள் உடல் உயிர் அனைத்தும் சிலிர்த்துக் கொண்டு நின்றது அஞ்சலிக்கு.. 'இதென்ன புதிதாய் ஒன்று இதயத்திற்கு இதம் தருதே. இது சரியா என்று யோசித்தவள் நீண்ட பெருமூச்சுடன் வெளி கேட்டை திறந்து உள்ளே சென்றாள்.

வெறுமனே சாத்தி இருந்த வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் விளக்கை போடவும் வீட்டின் நிலை அவளை பார்த்து உரக்க சிரிப்பதை போலிருந்தது.

வீடு முழுதும் ஓட்டடை தூசி படிந்து பயன்படுத்தியே பல நாள் ஆன நிலையில் இருந்தது வீடு. ஒரே ஒரு கருப்பு பேக்கை தவிர அனைத்திலும் தூசி மண்டிக்கிடந்தது.

அத்துணை நேரம் இருந்த இதம் சட்டென மறைந்து சோர்ந்து போனாள் அஞ்சலி. சுவரோடு ஒட்டி அமர்ந்தவள் முகத்தை தன்னிரு கைகளிலும் தாங்கினாள்.

மூடிய விழிகளுக்குள் தேவ் சிரித்தான். இவள் முகத்தை அவன் மார்பில் தாங்கினான்.சோக கீதங்கள் நீங்கி சுகந்த பிறவாகம் அலையாக பொங்கி வழிய அவளின் சின்னஞ்சிரு இதயம் பேராவல் கொண்டது.

****

அடர்ந்த மரத்தின் கீழிருந்த இருக்கையில் அழுகையும் விசும்பலுமாய் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

"த்சொ.. த்சொ... என்னமா பாப்பா இப்படி சொதப்பிட்டயே. உன்னால தான் உன் டீமே தோத்து போச்சு"

"இவ்ளோ பயந்த புள்ள எதுக்குமா இந்த வேலையெல்லாம்? உங்க காலேஜ்லேயே பத்தோட பதினோன்னா கோராஸ் பாடிட்டு இருந்திருக்கலாம்ல"

அஞ்சலியை வம்பிலுத்தது அங்கிருந்த மாணவர்கள் கூட்டம்.தேவாவும் மற்றவர்களும் அருகில் வருவதைப் பார்த்ததும் விலகி சென்று விட்டனர்.

"என்ன அஞ்சலி இப்படி பண்ணிட்ட. பார்த்தாவது படிச்சிருக்கலாம்ல. இப்படி பாதியோட ஓடி வந்துட்ட. எல்லாரும் நம்ம டீமை பார்த்து சிரிக்கிறானுங்க."என்றான் மதன். அவனுக்கு கடுப்பாய் இருந்தது. அதிலும் மற்ற மாணவர்கள் கிண்டல் செய்யும் போது அவமானமாய் இருந்தது. அந்த கோவத்தையே அவளிடம் காட்டினான்.

"நீ மட்டும் சரியா பண்ணிருந்தா நாம தான் ஜெயிச்சிருப்போம். இப்ப அப்பிடியே கிளம்ப வேண்டியது தான். இதுவரைக்கும் நம்ம காலேஜ் வின் பண்ணாம போனதே இல்ல."என்றான் பரத்.

"சும்மா அவளையே சொல்லிட்டு இருக்காதீங்க. அவ என்ன வேணுன்னேவா பண்ணினா. அவளுக்கு ஸ்டேஜ் ஃபியர் அதிகம். கூட்டத்தை பார்த்ததும் பயந்துட்டா "அவளுக்காய் வாதிட்டாள் சோபனா.

"அப்படிப்பட்ட பொண்ணு எதுக்கு காம்பெடிஷன்க்கு வரணும். உடம்பு சரியில்லைனு லீவு போட்டிருக்க வேண்டியது தானே?"என்றான் மதன்.

"அவளா ஒன்னும் வரேன்னு தொங்கிட்டு வரல. ஹச் ஓ டி தான் போகலைனா இன்டெர்னல் குறைச்சுருவேன்னு சொல்லிட்டாரு. லீவ் போட்டா இன்டெர்னல்ல ஃபெயில் பண்ணிருவேன்னு வார்னிங் பண்ணிட்டாரு. அப்பறம் அவ என்ன தான் பண்ண முடியும்."

"ஒரு விஷயம் நாம செய்ய வேண்டி வந்தா அதுல முழு எஃபர்ட் போடணும். இப்படி பாதியோட இறங்கி வந்துட்டு அதுக்கு சாக்கு போக்கு சொல்லக் கூடாது.ஐ ஹேட் திஸ் கைண்ட் ஆஃப் ஆட்டிடியூட் "என்று விட்டு தேவ் அங்கிருந்து சென்றுவிட மதனும் பரத்தும் அவன் பின்னே சென்று விட்டனர்.

தேவா பேசிச் சென்றதை கேட்ட அஞ்சலியின் அழுகை தான் அதிகம் ஆனது.

"ஏய் அஞ்சு விடுடி. பசங்க ஏதோ கோவத்துல பேசறாங்க. முதல்ல அழுகைய நிப்பாட்டு.போறவன் வரவன்லாம் பார்த்துட்டே போறாங்க. வா போய் முகம் கழுவிட்டு வரலாம்"என்று அஞ்சலியை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு போனாள் சோபனா.

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து மதிய நேரத்தில் கல்லூரி வளாக மர நிழலில் தனியாய் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

"அழுமூஞ்சி பாப்பா தனியா என்ன பண்றீங்க?"என்றவாறு அவள் அருகில் வந்தமர்ந்தான் தேவ்.

"நான் ஒன்னும் அழுமூஞ்சி பாப்பா இல்லை. நீங்க தான் கோவக்கார டான்"என்றாள் லேசான முக திருப்பலுடன்.

"ஹாஹாஹா... நான் கோவக்கார டானா.. அதுசரி நான் ஒன்னும் புத்தர் இல்லையேமா. எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது கோவம் வரது இயற்கை தானே. அதுகூட இல்லாம இருக்கணும்னா எப்படி? நீயே சொல்லு?"என்கவும் உதட்டை கடித்து அமைதி காத்தாள்.

அவன் சொல்வது உண்மை தானே. அன்று நான் கொஞ்சம் தைரியமாய் இருந்திருந்தால் வெற்றி பரிசோடு கொண்டாட்டமாய் கல்லூரி வந்திருப்பார்களே. ஒவ்வொரு முறையும் தேவ் தலைமையிலான அணி எப்போதும் வாகை மலர் சூடியே கல்லூரி திரும்பும். இது அத்தனையும் பாழ்பட்டது தன்னால் தானே.தான் ஏன் இப்படி ஓரு தைரியமில்லாது போனேன்.

அவளைக் குறித்த சுயபட்சாதாபத்தில் மூழ்கி கிடந்த நேரம் அவள் தோள் தட்டினான் தேவ்.

"என்ன வருத்தப்படுறியா.."

"வேறென்ன செய்வதாம் " மூனகினாள் இவள்.

"ஒரு விசயத்துல தோத்துப் போய்ட்டா திரும்ப அதுல ஜெயிச்சுக் காட்டணும்ன்னு மனசுல ஒரு வைராக்கியம் வரணும் அஞ்சலி.அதை விட்டுட்டு அழுகறதுலயும் வருத்தப்படுறதுலயும் என்ன யூஸ் சொல்லு.

"நீங்க சொல்றது உண்மை தான். எதையும் சட்டுனு செஞ்சுற முடியாதே. ஆனால் கண்டிப்பா என்னை மாத்திக்க முயற்சி பண்றேன் "

"தட்ஸ் குட்."என்றவன் ".சரி கிளாஸ்க்கு லேட்டாச்சு பை "என்று விட்டு அவன் சென்றுவிட்டான்.

****

நிரம்பி கிடந்த தேன் கிண்ணத்தில் விழுந்து கிடந்த எறும்பைப் போல ருசிக்கவும் முடியாமல் மீளவும் முடியாமல் போவது போன்ற உணர்வில் தத்தளித்தாள் அஞ்சலி.

கல்லூரி கால அவள் ஈர்ப்பானது பூந்தோட்டத்தில் சிறகடித்து திரிந்த பட்டாம்பூச்சி போன்றது. அழகானதொரு சைட்டடிக்கும் நிகழ்வுகளுடன் பெரும்பாலும் கடந்து விட்டதில் அவளை உணர்வுப் பூர்வமான காதல் கணைகள் ஏதும் பெரிதாய் தீண்டி சென்றதில்லை.

காதல் என்ற ஒன்றை அவள் யோசித்தும் கொண்டதில்லை. காரணம் அவள் அம்மா. தானக்காய் உழைத்தவரை அவள் ஓய்வு குடுக்க வேண்டும்.அதனாலேயே திருமணம் என்ற ஒன்றைக் கூட யோசிக்காமல் இருந்தாள். பிறகெப்படி இவளுக்கு கண்டதும் கண்ணில் மின்னல் வெட்டும். அவளது மித மிஞ்சிய மின்னல் சைட்டடித்தல் தான்.

அப்படி தாமரை இலை தண்ணீராய் இருந்தவள் அடுத்தடுத்து விழுந்த அடிகளில் துவண்டு போய் கிடந்த நேரம் தேவனாய் வந்தான். இவளை சாவிலிருந்து ரட்சித்தான்.யாருமில்லா நிலை நிலைகுலைய செய்திருந்த நேரத்தில் நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அவன் முகத்தை கண்டவளுக்கு வலுவாய் ஒரு மின்னல் வெட்டியது நெஞ்சுக்கூட்டிற்குள்.

அது ஒன்றே அனைத்தும் மறந்து அவன் மார்பில் சரண் புகவும் வைத்தது. சிரித்து மகிழ்ந்த காலத்தில் வராத காதல், அவளுக்குள் அவள் தொலைந்து போன நேரத்தில் வந்ததுதான் விதியின் அழகான நகர்வு.

தன் வீட்டிற்கு சென்று மெத்தையில் விழுந்து நெஞ்சை நீவியபடி அவனின் அஞ்சுவில் தொலைந்து போக தயாராய் இருந்தவனுக்கும் தெரியவில்லை அந்தக் காதல் அவனை எத்தனையாய் சுடும் என்பதை.

Word count -1613

 
Status
Not open for further replies.
Top Bottom