Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL குவியமென்பது பாவையானது - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
817
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
Messages
7
Reaction score
15
Points
3
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

❤️
 
Messages
7
Reaction score
15
Points
3


அத்தியாயம் 1 :

"பத்து மணிக்கெல்லாம் வெளிய போகணும் ரெடியா இரு. வெளியே வேலை இருக்கு. போய்ட்டு வந்துடுறேன்"

சட்டையணிந்தப்படி சொன்னவன் குரலில், இது தான் என் முடிவு மறுபேச்சில்லாமல் நீ செய்தே ஆக வேண்டுமென்ற கட்டளை தோணி மட்டுமே இருந்தது.

மாறாக.. மருந்திற்கும் எதிர் நிற்பவளுக்கு இதில் மனம் எவ்வளவு நோகுமென்று அவன் யோசிக்கவில்லை.

அவள் என்ன நினைக்கிறாளென அவனுக்குக் கவலை இருந்ததாகவும் தெரியவில்லை.

அவ்வளவு ஏன்? இதைப் பற்றி அவளிடம் கலந்தாலோசிக்கக் கூட இல்லை. அது அவனுக்குப் பழக்கமுமில்லை.

“என்ன சொன்னது காதுல விழுந்துச்சா? இல்லையா?”

கவனம் எங்கோ இருப்பது போல் அவள் முகம் திருப்பி நின்றிருந்ததில், காதோரம் அவன் குரல் கடுமையாக ஒலித்தது.

அதில் “ஆங்ங்” எனத் திரும்பியவள் துள்ளிகுதிக்காத கணக்காக இரண்டடி பின்னெட்டு வைத்து நகர

“இப்ப என்ன செய்துட்டேன்னு மெரள்றா இவ.. ஏன் நான் இவகிட்ட வரக்கூடாதா”

கல் வைத்த லக்ஷ்மி டாலர் செயினோடு.. மஞ்சள் வாசனை மாறாது மிணுங்கி கொண்டிருக்கும் தாலிக்கொடி கவனத்தில் விழ.. அவனுக்கு முகம் அப்படியே கடுகடுவென்றாகி விட்டது.

இவன் நிலை இப்படியாயிருக்க அவளுக்கு இவ்வளவு அருகில் அவனிருப்பதே பதட்டத்தை வரவழைத்திருக்க.. இப்பொது அவன் கடுமையும் சேர.. எதற்குச் சொல்கிறான் என்பது புரிந்ததில் லேசாக நீர்கோர்த்த விழிகள் அவனைப் பார்த்தது இயலாமையாய்.

“ம்ம்ப்ச்” அப்படியொரு கோபம் பொங்கியது அவனுக்கு.

திருமணம் ஆகி மூன்று நாட்களே ஆகிறது. என்னென்ன ஆசைகள்? எத்தனையெத்தனை கனவுகள்? இதற்காகத் தானா? இதைக் காணத்தானா? எதையோ பறிகொடுத்த முகத்துடன், எந்த நேரமும் சோர்வாகப் புதிதாகத் திருமணம் ஆனவள் போலவா இருக்கிறாள்.

ஏனென்ற புரிதல் மிகுந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். அவள் பேசியிருந்த வார்த்தைகள் நினைவில் வந்துப்போக உள்ளம் கொந்தளித்தது.

இவ்வளவு யோசிக்கும் இவன், வார்த்தைகளில் ஆறுதல் அளித்தானா? என்பது கேள்விக்குறியாக இருக்க.. அதை நினைக்கவில்லை.

அவளே புரிந்து தேறிவர வேண்டுமென்றால்? என்ன நியாயம்?

‘ம்ம்ப்ச்!! சொன்னாதானா? ஸ்பேஸ் குடுத்தேனே.. இருந்த சூழ்நிலைக்கு நான் மட்டும் வேறென்ன செய்திட முடியும்’

அவனுக்கு, அவனே வெள்ளை கொடியை பறக்க விட்டுக் கொண்டாலும்.. திருமணத்தன்றே கோபமாகவேனும் வாயடித்தவளை, வாயை மூட வைத்தவன் அவன் தானென உணரவில்லை.

அவன் மட்டும் வார்த்தை விடாமல் சற்று நிதானிதிருந்தால் எல்லாம் மாறியிருக்கலாம். ஆனால் அது அவன் கை மீறிய ஒன்றாகிற்றே.

“இப்போ எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன் குடுக்குற நீ”

அவன் பேசியதில் நிமிர்ந்து வெறித்துப் பார்த்த விழிகளும்.. விரல்களுக்கிடையே சிக்கி தவிக்கும் புடவை முந்தானையும்.. என்ன சொல்லியதோ? வாய் வரை வந்த மிச்ச வார்த்தைகளைப் பற்களுக்கிடையே மென்று விழுங்கினான்.

உறுத்து பார்த்து அவன் நிற்க.. “உங்ககிட்ட எனக்குப் பேசணும்” சொல்ல முயன்றவளுக்கு வெறும் காற்று தான் வெளிவந்தது. வார்த்தை வரவில்லை உடலும் மனமும் ஒருங்கே கூசி போனது.

துடித்த உதட்டை பற்களால் கடித்து, பொங்கிய உணர்வுகளை அடக்கி பேச முயல.. ம்ம்ஹும் முடியவில்லை. என்னவென்று, எப்படியென்று பேசவாம்? அருவருத்துப் போனது.

‘ஹைய்யோ கடவுளே!! எனக்குச் சக்தி குடேன்’ அவள் மன்றாடிகொண்டிருக்க அவன் கிளம்ப எத்தனித்தான்.

பார்த்தவள், சுதாரித்து அவனை வழிமறித்தாலும்.. அப்படியே நிற்க,

“ஒன்னு பேசு. இல்ல என்னைப் போக விடு. சும்மா அழுதழுது மனுஷன கடுப்பாக்கிட்டு” திருமணமானதிலிருந்து இதை மட்டுமே அவளிடம் காணவும்.. அவனை மீறி வெடித்திருந்தான். அவன் பார்த்த பெண் இவளல்லவே.

கேட்டவள் அப்படியே ஸ்தம்பித்தாள். தன்னிடம் நல்லபடியாக நடந்தவன் இவன் தானா? சந்தேகமாய் இருந்தது. கலங்கின கண்கள் கண்ணீரை சுரப்பதை கூட நிறுத்தியிருந்தது.

நேற்று நடந்தது ஒன்றுமே இல்லாதது போல் எவ்வளவு சகஜமாகப் பேசுகிறான். எப்படி முடிகிறது இவனால்? என்னால் முடிய வில்லையே தவித்தாள்.

பெற்றவர்களுக்குத் தான் நான் யாரோவாகி விட்டேன். இவனுக்குக் கூடவா? துவண்டு போனாள்.

இத்தனை நாள், இவனிடம் கண்ட பரிவு அத்தனையும் கனவோ? குழம்பித்தான் போனாள் பெண்.

அது சரி, பெற்று வளர்த்தவர்களே என்னை நம்பவில்லை. இவனைச் சொல்லி குற்றமில்லை தான். திடத்தை வரவழைத்து தேறினாள்.

இத்தனையும் கிரகித்தவளுக்கு.. அவளுக்காகவே அவன் செய்கைகள் அனைத்துமென்பது, உணராது போனது கொடுமை தான்.

‘நான் என்ன இவளை திட்டினேனா? இல்லை பழி சுமத்தினேனா? கல்யாணமாகி மூணு நாள் ஆச்சு. இன்னும் என்னை இவ புருஷனா ஏத்துக்கலையா? அவ்வளவு கூட வேணாம் சக மனுஷனா கூடவா பார்க்க கூடாது. மனசுல இருக்கறதை பேச என்னவாம்’

வெடித்தெழுந்த உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாமல், அவள் ஏதோ சொல்ல வருவதும், பின் விழுங்குவதுமாக இருந்ததில், கடுப்பேறியது அவனுக்கு.


‘பேசற மாதிரியா நீ நடந்திருக்க? அந்தப் பொண்ணு கழுத்துல கத்தி மட்டும் தான் வெக்கல நீ? கல்யாணத்துக்கு முன்னமும் சரி. அப்பறமும் சரி. இப்போ புரிஞ்சிக்கலன்னு கோவப்பட்டா எப்பிடி?’ உள்ளே குரல் எழும்ப..

அவள் நிலை புரிந்தும், தன் எண்ணப்பாதையையும் தடுக்க முடியாமல் தாடை எலும்புகள் விடைக்க நின்றவனுக்கு.. அவள் எடுத்தெறிந்து பேசினாலும் பேசியதே இனித்துத் தொலைத்தது இப்பொது.

'அன்னைக்கு மட்டும் எங்க போச்சாம் இந்தத் தயக்கம். எதையுமே புரிஞ்சிக்காம என்னவெல்லாம் பேசினா' நியாயம் கேட்டான் கூடவே அது அப்படியே ஏக்கமாக மாற, தன்னைத் திட்டவாவது பேச மாட்டாளா தோன்றியது.

ம்ம்ஹும் அதெங்கே? அவளுக்குத்தான் வார்த்தையே வருவேனா அடம் செய்கிறதே. அவள் எதுவும் பேச போவதில்லையென்பது புரிய, தான் எடுத்த முடிவு சரி தான் உறுதி வந்திருந்தது.

கல்லாகத் தனக்குள் இறுகிப் போனவன், அவளைக் கடக்கப் போக, கூசின தேகமதை நிலை நிறுத்தி “எ.. என்.. எனக்கு எங்கேயும் வர வேண்டாம்” திக்கி திணறி என்றாலும், ஒரு வழியாகச் சொல்லியே விட்டாள்.

“என்ன?” திரும்பியவன் புருவம் சுருக்கினான்.

“எங்க போறோம் உனக்குச் சொல்லவே இல்லை. அது தெரியாமலே வரலைன்னு சொல்லுவியா நீ” கூர்மையாகக் கேட்டதோடு, “உன் சம்மதத்தை நான் கேக்கவே இல்லையே” என்றான் மேலும். அலட்சிய தொனியில்.

அவனது அலட்சியத்தில் கோபம் துளிர்க்க, பதட்டமெல்லாம் எங்கேயோ போய் ஒட்டி கொண்டது அவளுக்கு.

அவனை ஏறெடுத்து பார்த்தவள் “எனக்குத் தெரிந்தாலும் சரி, தெரியலைனாலும் சரி, உங்களோட எனக்கு வர பிடிக்கல. வர மாட்டேன்” என்றாள் அவளும் அழுத்தமாக.

“சரி இருக்கட்டும் அதனால என்ன?”

‘உன் சம்மதத்தை யார் கேட்டா? நான் சொல்றதை செய்ய வேண்டியது தான் உன் வேலை’ போல் அலட்சிய தொனியை கை விடாமலே அவன் பேச, எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே இப்படிப் பேசுவான் அவள் முறைத்தாள்.

‘அது சரி என் சம்மதம் இல்லாமலே திருமணம் செய்தவனாயிற்றே அந்தத் திண்ணக்கம். இதிலும் அவ்வாறே நடந்துகொள்ளச் சொல்கிறது போல. சூழ்நிலை அவ்வாறிருந்ததில் தவறி விட்டேன். இதிலும் விட்டு விடுவேனென்று நினைத்தானோ’

‘நீ என்ன முறைத்தாலும் எனக்கொன்றுமில்லை’ என்று நின்றான் அவனும். இதைத் தான் அவளிடம் எதிர்பார்த்த ரீதியில்.

‘அன்றைக்கு ஏதோ அவள் பேசியதில் கடுப்பேறி, ஆத்திரத்தில் பேசி விட்டேன். அதில் கோபப்பட்டு முகத்தைத் தூக்கி வைப்பாளா இவள்?’ என்ற எண்ணம் தான். அதைப் பார்த்தவளுக்கு ஆத்திரம் இன்னும் வெடிக்கவும்..

“என்னால எங்கேயும் வர முடியாது. என்னை அதிகாரம் செய்ற ரைட்ஸ் உங்களுக்கு இல்லை. முடிஞ்சதை பார்த்துகோங்க” போய்க் கட்டிலில் சட்டமாக அமர்ந்துகொண்டாள்.

‘அன்று இதெல்லாம் ஒன்றுமே இல்லையென்பது போல் நல்லவன் சீன் போட்டுவிட்டு, இப்பொது காரியம் சாதிக்கப் பார்க்கிறான். அப்படியென்ன இவனோடு ஒரு வாழ்க்கை வேண்டுமெனக்கு? தேவை இல்லை’ என்ற எண்ணம் உருவாக ஆரம்பித்திருந்தது. அதை முறியடிப்பது போல,

"ஏன் வர முடியாது காரணத்தையும் சொல்றது " எதிர்த்து பேச முடியா கடினக்குரலில் சொன்னவன் மெல்ல இவளை நோக்கி எட்டு வைத்த ஒவ்வொரு அடியிலும், அத்தனை அழுத்தம் கூட, அவளுக்குள் தட தடக்க ஆரம்பித்தது.

ஏறிட்டு பார்க்க பயந்து கண்களை இறுக்க மூடிக்கொள்ள, அவள் பயம் சரியென்பது போல், முழுவதுமாக ஆக்கிரமித்து நெருங்கி வந்தவன், அவள் தாடையை இறுக்கமாகப் பிடித்தான்.

வலியில் அவள் முகம் சுருக்க “யார் தரனும். ம்ம்.. உனக்குக் கூட அந்த உரிமை இல்லை” மறுக்கவே முடியாத குரலில் சொன்னவன். அதோடும் விட்டானா?

“வேறெங்க போகப் போறதா உத்தேசம். உன்னை நம்பாத உன் அம்மா வீட்டுக்குப் போகப் போறியோ” என்றானே பார்க்கலாம்.

வழிந்தோடிய கேலியில் திரண்டிருந்த தைரியம் அனைத்தும் வடிந்து, அந்தக் குரலிலும் அந்தத் தொனியிலும் தொண்டை அடைத்து வந்தது அவளுக்கு.

விக்கித்துப் போனவளுக்கு மடை உடைத்துக் கண்ணீர் கன்னத்தில் ஒழுகியது. கழிவிறக்கம் தன்னாலே ஆட்கொள்ள அவனைப் பார்த்தாள்.

ஆம்!! கழிவிறக்கம் தான். அவளது தன்னம்பிக்கையை எல்லாம் ஒடித்து மூலையில் அமர்த்திவிட்டதே தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்.

அதற்க்கு சிகரம் வைப்பது போல் “இங்க பாரு டி, உன்னைக் கட்டி குடுத்தாச்சு. இனிமே அது தான் உன்னோட வீடு புரிஞ்சிதா? நீ செய்த வேலையால விருந்துக்குக் கூட எந்த மூஞ்சிய வெச்சு கூப்டுறதுன்னு தெரியாம இருக்கோம். வீட்டுக்கு வந்துடுறேன்.. கூட்டிகிட்டு போய்டுங்க அது இதுன்னு உளறின? கன்னம் கன்னமா அறைஞ்சு தள்ளிடுவேன். அந்த எண்ணமே வரக்கூடாது. நல்லபடியா மாப்ளகிட்ட நடக்குற வழிய பாரு”

இங்கிருப்பவர்கள் பேசும் விதம் பிடிக்காமல், நெருப்பில் நிற்பது போல் தேகம் தகித்துப் போனதில், விடிந்ததா? விடியவில்லையா? பார்க்கும் எண்ணமின்றி, அவனுக்குத் தெரியாமல் அவனின் அலைபேசியைத் தெரியாமல் எடுத்து, பார்வதிக்கு அழைத்து, தன்னை அழைத்துப் போகச் சொல்ல,

அவர், வார்த்தைகளிலேயே அவளை அவளுக்கே பிடிக்காத அளவிற்குச் செய்துவிட்டார்.

“ம்மா!! நான் சொல்றத கொஞ்சம் கேளும்மா. பேச விடும்மா என்னை. நான் உன் பொண்ணு ம்மா. நீயே என்னை விட்டு குடுக்கலாமா” எவ்வளவோ கெஞ்சியும் மேற்கொண்டு பேச விடவில்லை.

“நீ என்ன டி பேச போற? உன் இஷ்டத்துக்கு விட்டு தான் எங்கள இந்தளவுக்குக் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க. போதும். நீ பேசியதும் போதும். உன்மேல நம்பிக்கை வெச்சு நாங்க உன் வார்த்தையைக் கேட்டதும் போதும். இனிமே நாங்க சொல்றத நீ கேளு” கடைசி வரை அவள் சொல்ல வந்ததைச் சொல்ல விடவே இல்லை.

“இந்தளவுக்கு வந்தும், ஒன்னும் சொல்லாமல் மாப்பிள்ளை உன்னை அவங்களோட கூட்டிட்டு போனதே நாங்க எந்த ஜென்மத்துல செய்த புண்ணியமோ தெரியல. அத நெனச்சு நாங்க நிம்மதியா இருக்கோம் அது உனக்குப் பொறுக்கலையா? கடவுளே இவளுக்குக் கொஞ்சம் நல்ல புத்திய கொடேன்” புலம்பியப்படியே வைத்துவிட்டார் அலைபேசியை.

அவ்வளவு தானா? என் மீது இவர்களுக்குப் பாசமே இல்லையா? விக்கித்து நின்றாள் பெண்.

மருத்துவமனையில் வைத்து இவர்களைப் பார்த்தது. அதுவும் மங்கலாக. அதன் பிறகு மகள் என்ற நினைப்பில் அவர்கள் அழைக்கவே இல்லை. இவளுக்குப் பேச உரிமை மறுக்கப் பட்டது.

‘எனக்கு இவர்களைப் பார்க்கவேண்டுமென்று தோன்ற, இவர்களுக்கு அந்த எண்ணமே இல்லையா? தவித்துப்போய் அழைக்கிறேன், என்ன ஏதேன்று கேட்க கூடத் தோன்றவில்லையா? நான் இவர்கள் மகள் இல்லையா? கட்டிக்கொடுத்தால் மகளைத் தலை மூழ்கி விடுவார்களா? என்ன ஏதேன்று கேட்க வேண்டாம். எப்படியிருக்கிறேன் நல விசாரிப்பு கூடவா இருக்காது?’ வெறுமை வேரோட நின்றாள்.

அப்போது தான் உறைத்தது. மகள் வாழ்க்கை நன்கு அமைய வேண்டுமென இவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. தலை மூழ்க வேண்டுமென்றே தள்ளி விட்டிருக்கின்றனர் என.

சுற்றிலும் துரோகமாக இருக்க, சிறிது நாட்களில் எத்தனையெத்தனை அடிகளைத் தான் தாங்குவாள்? போதாக்குறைக்கு நெருப்பில் நிற்கும் நிலையாக இப்பொது சூழ்நிலை வேறு துவண்டுதான் போனாள்.

நேற்றிரவு புழுக்கமாக இருக்கிறதேவென மாடிக்கு சென்றவளுக்கு, கணவனிடம் மாமியாரும் நாத்தனாரும் பேசிகொண்டிருந்தது, அப்படியே இப்போதும் காதில் ஒலிக்க, கரித்துக் கொண்டு வந்தது கண்கள்.

“ஒரு நட மருமகளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் ஒரு செக்கப் செய்திட்டு வந்திடுவோமாப்பா, நீ என்ன சொல்ற” இது அவன் தாய்.

“ஆமாண்ணா என்ன ஏதுன்னு தெளிவா தெரிஞ்சிகிட்டா, அடுத்து என்னன்னு யோசிக்கலாம். போட்டது போட்ட படி எல்லாம் அப்படியே இருக்கு. வெளிய எல்லாரும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க நமக்குப் புரிஞ்சாலும் ஏதாவது ஒரு முடிவெடுக்கணும் தானே. தள்ளி தள்ளி போடுறதுல என்ன மாறிட போகுது சொல்லு” இது அவன் தங்கை.

‘கேட்ட அவளுக்குக் காதுகள் அத்தனை கூசியது. பேசின அவர்களுக்குக் கூசவில்லையா? பெண் எனவும் பாராமல் எப்படியெல்லாம் பேசுகிறார்கள்? என் ஒழுக்கத்தைப் பேச இவர்கள் யார்? தாலி கட்டிய இவனும் கேட்டுக்கொண்டு வேறு நின்றானே’ ஆத்திரமாய் வந்தது.

இப்படியே சென்று, நான்கு வார்த்தை நாக்கை பிடுங்குவது போல் கேட்டால் என்னவெனக் கூடத் தோன்றவிட்டது.

என்னவெனக் கேட்பது? அவ்வளவும் அவள் நடத்தை பற்றிய விமர்சனம் அல்லவா? இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் இவர்கள் பரவாயில்லை நினைத்திருந்தவளுக்கு, இவர்களிடமும் இப்படியெல்லாம் தன்னைப் பற்றிப் பேச்சு நிலவுகிறதென்பது அப்போது தான் புரிந்தது. ‘ச்சை’ நினைக்கவே அருவருத்துப் போனது.

முன்பிருந்தவளாயிருந்தால் நினைத்ததோடு மல்லுக்கு நின்றிருப்பாள். அவ்வளவு ஏன் கேட்ட மறு நொடியே வீட்டை விட்டு வெளியேறி இருப்பாள். கூடப் பார்வதியே விட்டிருக்க மாட்டார்.

“எவ டி அவ.. என் பொண்ண பார்த்து நாக்கு மேல பல்ல போட்டுப் பேசறது” ஆடி தீர்த்திருப்பார்.

ஆனால், இப்பொது அவரே ஆமாம் சாமி போடும் நிலையில் தான் உள்ளார். அநாதரவாகத் தெருவில் தான் நிற்க வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு முதல் நம்பிக்கை பெற்றவர்களிடம் கிடைக்க வேண்டும் அவள் தவறு செய்தாளோ இல்லையோ மற்றவர்கள் தூற்றும் போது ஆறுதலாக இருக்க வேண்டும். அதன் பிறகு அறிவுரை வாயால் சொல்வதோ, கையால் சொல்வதோ அவர்கள் பாடு. எக்காரணத்தைக் கொண்டும் விட்டுகொடுக்கக் கூடாது. ஆனால், இங்குச் செய்யாத தவறை திரித்து, பழி சுமத்தி இப்பொது இந்த நிலைக்கு அவர்களே காரணமாகி போனர்.

இவர்கள் என்னைக் கீழிறக்கி வைக்கவும் தானே, நேற்று வந்தவர்கள் பார்வையிலும் கீழாகி போனேன். திருமணம் ஆகி இருந்தாலும் அவளைப் பொறுத்தவரையில் யாரோ ஒருவனிடம் இதை எப்படிப் பேச மொத்த பலமும் இழந்தவள் போல் துவண்டு போனாள்.

நம்புபவர் யாரும் இன்றி, ஒற்றை ஆளாய் அவளுக்கு அவளே போராடி, களைத்து போய் விட்டாள்.

‘இல்லை, நான் எந்தத் தப்பும் செய்யலை. யாரவது என்னை நம்புங்களேன்’ மனம் ஊமையாய் அழுதது.

மூக்கை சிந்திக்கொண்டு அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதென, இதெல்லாம் அவள் குணத்திற்குப் பழக்கமே இல்லாத ஒன்று. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாக இருக்கும். அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும்.

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக நடப்பவை.. அவள் இயல்பை தொலைத்து.. சுருண்டுபோக வைத்திருந்தது.

இவ்வளவிற்கும் சூழ்நிலை அவ்வாறு அமைந்து போனது. இதில் அவள் தவறு எதுவும் இல்லை. அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்க வில்லை. காட்சி பிழை அவ்வாறு ஆகிப்போனதே யார் குற்றமாம்.

கசங்கிய முகத்துடன் அவள் எண்ண ஓட்டத்தில் அலைபாய அமர்ந்திருந்தவளை, பார்த்த பிறகு.. பேசிய பிறகு, தான் உணர்ந்தான் வலிக்க அவளைச் செய்துவிட்டோமென்று.

‘அவள் பேசுவது பொறுக்காமல் இப்படித்தான் பேசி விடுகிறேன் என்னையும் மீறி’ மனம் வலிக்க, அவளைப் பார்த்தான் நுனி மூக்கு சிவந்து கசங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள் தோள் இறங்கி கம்பீரம் தொலைந்திருந்தது.

அவன் மீதே ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது என்ன நினைத்தானோ சட்டென விலகி வெள்ளை வேட்டி கால்களில் உரசி கசங்குமளவு விறுவிறுவென நடையை எட்டிபோட்டு, அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

தன் வாழ்க்கை தன் கை நழுவி போவதை, எதுவும் செய்யமுடியாத படிக்கு, வெறும் பத்து நாட்களில் தன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிட்ட கணவனின் முதுகை வெறித்துப் பார்த்திருந்தாள் பரிபூரணி.

இன்று மட்டுமா? பெண் பார்க்க வந்த அன்றும், முதன் முதலாய்ப் பார்த்தது. சோபாவையே விழுங்கி, ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தவனது, பரந்து விரிந்து திடகாத்திரமாகயிருந்த புறமுதுகை தான்.

உட்கார்ந்திருந்தபடியே, வலப்பக்கமாகத் தலையை மட்டும் திருப்பி, கன்னக் கதுப்பு பிதுங்க, காதோரம் கிருதா அசைய, புன்னகையுடன் யாரிடமோ பேசிகொண்டிருந்தான் ஆதவன்.

‘என்ன வெள்ள வேட்டி இந்தப் பக்கம் திரும்பவே மாட்டானா எப்படி இவன்கிட்ட பேசறது? சொன்னா சரின்னு கேட்டுக்குவானா? இல்லை, கோவப்பட்டுத் திட்டுவானா? ரொம்பப் பெருசா இருக்கானே? கோவப்பட்டுப் பொளேர் ன்னு அடிச்சிட்டா என்ன செய்றது?’ ஏதேதோ எண்ணங்கள் ஓட, வைத்த கண் எடுக்காமல் அவள் பார்த்திருந்தாள்.

‘டியே பூரணி உன் உடம்பு தாங்கலைனா வேற எந்த உடம்பு டி தாங்கும்’ நேரம் காலமில்லாமல் மனம் குரல் எழுப்பியது.

‘அப்ப அடி நிச்சயங்குறியா?’

‘பின்ன பொண்ணு பார்க்க வந்தவங்ககிட்ட, கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்ல, என்னைப் பிடிக்கல சொல்லிருங்க சொன்னா கொஞ்சவாங்களா உன்னை? ஆள பாத்தியா பல்கா இருக்காப்ல. கிருதாவெல்லாம் வேற பெருசு பெருசா வெச்சிருக்காங்க. மூக்குக்கு மேல கோவம் வரும் போல’

‘ஆங்!! மீசை பெருசா வெச்சிருந்தா தான் சொல்வாங்க? நீ என்ன மாத்தி சொல்ற?

‘ம்ம்க்கும்!! இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். என்கிட்ட மட்டும் வாய் நல்லா பேசு. வேற யார்கிட்டயும் பேசிறாத’

‘இப்போ என்னதான் என்னைச் செய்யச் சொல்ற நீ?’

‘பக்குவமா பேசு சொல்றேன்.’

‘எப்பிடி?’

‘கல்யாணமெல்லாம் வேண்டாம்னு சொல்லாம, உன்னோட நிலைமையை மட்டும் எடுத்து சொல்லு போதும். நல்ல மனுஷனா இருந்தா அவரே விலகிடுவார்’

‘சரி பேசறேன். அப்போவும் விலகலைனா?’

‘வேற வழி!! வெள்ளை வேட்டிக்கேத்த காட்டன் புடவையா மாறிக்க வேண்டியது தான்’. எனவும் விழித்தாள்.

"ம்ம்ஹும் உன் முழியே சரி இல்லை. எனக்கென்னமோ சீக்கிரமே பல்க்கோடா சேர்ந்து நீயும் பஸ்கி எடுக்கப் போறன்னு தான் தோணுது. சும்மா சொல்ல கூடாது ஜோடி பொருத்தம் அவ்ளோ அம்சம்.சட்டுன்னு புடிச்சாலும் அப்பா சூப்பரான ஆளைத் தான் பிடிச்சிருக்காரு. மனுஷன் உன்னையே கர்லா கட்டையா நெனச்சு சுத்துனாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்ல'

"ஏய் என்ன நக்கலா அதை மட்டும் நடக்க விட மாட்டேன் பாக்கறியா" கடுப்பாகியவள் வேகமாய்க் குரலை வெளிப்படுத்திவிட ,

அந்நேரம் பார்த்து "என்னத்த டி நடக்க விட மாட்ட அங்க என்னடி செய்ற"

வேகமாகக் கதவை திறந்து பார்வதி வந்ததில் இவள் திரும்பிவிட அவள் குரலிற்கு அவன் திரும்பி பார்த்ததோ மீசைக்குள் ஒளித்துவைத்த புன்னகையுடன் திரும்பி கொண்டதோ தெரியாமல் போனது.

அதற்குப் பிறகு சம்பிரதாய முறைப்படி பெண் பார்க்கும் வைபவம் நடக்க ஆரம்பித்திருக்க, எல்லோரும் இவளை பார்த்ததில், அவனைத் தனியாகக் காணும் வரை இவள் அவனைக் காண வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

“மாப்பிள்ளைக்கு உன்னைப் பிடிச்சிருக்காம்டி, மாப்ள வேற பார்க்க ராஜா கணக்கா இருக்காரு, போதாக்குறைக்கு நல்ல சாம்பாத்யம் வேறயாம், சொந்தமா நாலு மெடிக்கல் ஷாப் ஊருக்குள்ளயே இருக்காம், ஒரே ஒரு தங்கச்சியாம் அதையும் கட்டி க்கொடுத்தாச்சாம், பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம், மேல பவுன் கேட்டாலும் பரவால்ல இந்த மாப்ளயே முடிச்சிருவோம்னு உங்கப்பா ஒரே முடிவா இருக்காரு" பார்வதி வந்து சொல்லவும்,

"ம்மா இதெல்லாம் அநியாயம். கல்யாணமே வேணாம் சொல்றேன் நீங்க வந்தவரை மாப்பிள்ளைன்னே கூப்பிடுறீங்க" பூரணி கோபமானாள்.

"என்னடி கல்யாணம் வேணாம், அப்ப காதல் மட்டும் வேணுமோ? எடு செருப்ப! பொண்ணு பார்த்து இவ்வளவும் நடந்துட்டு இருக்கு இப்போ வந்து வேணாம் சொல்லிட்டு இருக்க, என்ன தெனாவட்டு ஏறி போச்சா உனக்கு? இத்தனை நாள் சொன்னதெலாம் என்னடி?" அவளுக்கு மேல் பார்வதிக்குக் கோபம் ஏறியது

"ரெண்டுமே வேணாம்னு தான் சொல்லிட்டு இருக்கேன். உங்களுக்குத் தான் புரியமாட்டேன்னுது" முணுமுணுத்தவள் அன்னையின் கோபம் அறிந்து உடனே தகைந்தாள்.

"ம்மா! ப்ளீஸ்ம்மா! நான் சொல்றதை இந்த ஒரு முறை கேளும்மா" கெஞ்சினாள்.

அப்போதும் அசராமல் "இத்தனை நாள் கேட்டதுக்குத் தான் நல்ல பேரை வாங்கிக் கொடுக்கப் பார்த்தியே? இதுக்கு மேல வேற கேக்கணுமா? அமைதியா இரு எங்களுக்குத் தெரியும் என்ன செய்யணும்னு " அவர் கோபம் குறையவதாய் இல்லை.

அவள் கெஞ்சலெல்லாம் ஒரு விஷயமே இல்லையென்பது போல் பார்வதி விட்டேத்தியாகச் சொல்ல,

"சரி என் விருப்பதுக்கு மாறா அதையும் இதையும் சொல்லி கல்யாணம் செய்து வைக்க நிக்கிறீங்க ஓகே, எனக்கு மாப்ள பிடிச்சிருக்கா பிடிக்கலையாங்கறதும் உனக்கோ அப்பாக்கோ ஒரு விஷயமில்லாதது போலப் பேசறீங்க?"

"வந்தவங்களுக்கும் உங்களுக்கும் பிடிச்சிருந்தா போதுமா? வாழப்போறவ நான் ம்மா எனக்குப் பிடிக்க வேணாமா? அவனை எனக்குப் பிடிக்கலம்மா" எப்படியாவது திருமணத்தைத் தவிர்க்க துடித்தாள்.

"என்ன டி அவன் இவன்னு மரியாதை இல்லாம, உன்னைக் கட்டிக்கப் போறவர் நியாபகம் வெச்சிக்க, எனக்கும் உங்கப்பாவுக்கும் அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு இதுக்கு மேல என்ன வேணும் இந்தக் கல்யாணம் நடக்கும்"

"ம்மா" பூரணி கலங்க..

"இத பாருடி இதுக்கெல்லாம் உங்கப்பா தான் உருகி கசிவாரு, நான் இல்லை புரியுதா? உனக்குப் பிடிச்சாலும் ஒண்ணுமில்ல, பிடிக்கலைன்னாலும் ஒண்ணுமில்ல, நீ சொல்லித்தான் பெத்தோமா? இல்லை நீ சொல்லித்தான் வளர்த்தோமா? உன்னைப் பெத்து வளர்த்த எங்கள விட உனக்கு நல்லது தெரிஞ்சிடுச்சோ? தடி கழுத! உனக்குப் பின்ன ரெண்டு தங்கச்சிங்க வயசுக்கு வந்து நிக்குதுங்க அவங்கள பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா டி?"

"இப்ப பேச வருவாங்க, கேட்டாங்கன்னா உனக்கும் புடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லணும். அத விட்டுட்டு, வேற எதையாவது மனசுல நெனச்சுக்கிட்டுத் திருகுதாளம் செய்து கல்யாணத்தை நிறுத்தலாம்னு பார்த்த? கொன்னு குழி தோண்டி பொதச்சிருவேன்."

விட்டால் அடித்து விடுபவர் போல் விரல் நீட்டி மிரட்டி சென்ற பார்வதி, இன்றென்று இல்லை, கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் வெடுக்கென்று பேசி மனம் நோக எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

"என்னை நம்பவே மாட்டியா ம்மா நீ " உள்ளே குமைந்த வார்த்தைகளைக் கண்ணீர் கன்னத்தில் உருண்டு சொல்ல, அதைக் கண்டும் காணாதவாறு அவர் சென்றுவிட்டிருந்தார்.

அந்நேரம் அம்மையப்பனும் வர "ப்பா நீங்களுமா" பரிதாபமாகப் பார்த்தாள் பூரணி.

செல்லமாக வளர்த்த மகளின் பார்வை அவரை என்னென்னவோ செய்தது. இருந்தாலும் வெளிகாட்டவில்லை.

'இந்தளவுக்கு வந்ததே உன்னால தான்' போல் பார்வை பார்த்து,

"எங்க மானம் மரியாதையெல்லாம் இப்போ உன் கைல தான் இருக்கு, நாங்க இருக்கறதும் இல்லை குடும்பத்தோட இல்லாம போறதும் நீ சொல்லப்போற பதில்ல தான் இருக்கு, புரியும்னு நினைக்கிறேன்" கடந்த ஒரு வாரமாகப் பேசாதவர் ஆதங்கமாகச் சொல்லி செல்ல, அந்த வார்த்தையில், அவளை ஆற்றவோ, தேற்றவோ தான் அங்கு ஆள் இல்லாமல் போனது.

'அப்போ நான் இவங்க குடும்பத்துல இல்லையா? என்னை மீறி நடந்த அந்த ஒரு விஷயத்தால நான் இவங்க பொண்ணு இல்லாம போய்ட்டேனா" தன்னிறக்கம் குடிகொள்ள அப்படியே சிலையென நின்றதெல்லாம் சில நிமிடங்கள் தான்.

'நான் ஏன் வேணாம் சொல்ல போறேன்? ஆனா வந்தவனை என்னை வேணாம் சொல்ல வெக்கிறேன். அப்ப என்ன செய்வாங்களாம்? என்னை நம்ப மாட்டாங்க ஆனால் இவங்க சொல் பேச்சு மட்டும் கேட்கணுமா? முடியாது'

நினைத்தவளுக்கு அவள் குணம் மீண்டது, வந்திருப்பவனின் பிடிவாத குணம் அறியாமல்.

ஆனால், அவள் நினைத்ததற்குப் பதில் நடந்தது வேறாகிப் போக,
எதையும் தடுக்கவோ, இல்லை மறுக்கவோ தோன்றாத, ஒரு மாதிரியான மனநிலைக்கு வந்துவிட்ட பூரணி, எல்லாம் தன் கை மீறி போவதை சர்வ அலங்காரத்துடன் நின்று வேடிக்கை பார்த்திருந்தாள்.

குவியும்...
 
Last edited:
Messages
7
Reaction score
15
Points
3
அத்தியாயம் 2

ஆதவனிற்கு யார் மீது கோபத்தை காட்டுவதென்று தெரியாமல், இருசக்கர வாகனத்தின் மீது காட்ட கியரும்,ஆக்சிலரேட்டரும் அவனிடம் அலறியது.

'அணு அணுவா கொல்றா டா என்னை' பூரணியின் அந்த முகமே அவன் கண்ணுக்குள் ஊஞ்சலாடியது.

எந் நிமிர்வை கண்டு உள்ளம் களித்ததோ, அதை அவனே உடைக்கும் சூழ்நிலை அமைந்து விடுகிறதை நினைத்து தவித்தான்.

இவ்வாறு பூரணியிடம் பேசிவிட கூடாதென்று நினைக்கிறான் தான். ஆனால்! அவள் எங்கே விட்டாள். எதையாவது பேசி அவனையும் பேச வைத்து விடுகிறாள். நொந்தே போனான்.

முத்தியால் பெட்டையிலிருந்து எப்போதும் அரைமணி நேரமாகும், காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அவன் வைத்திருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு வந்து சேர. ஆனால் இன்று பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்திருந்தான்.

நான்கைந்து கடைகள் சேர்ந்தது போலிருக்கும் கட்டிடத்தின் வாசலிலிருக்கும் படிகட்டில் முட்டி விடும் வேகத்தில் ஓட்டி வந்தவன், பின் நிதானித்து புல்லட்டை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

"ஆத்தாடி விட்டா வண்டிய கடைக்குள்ள விட்ருப்பாரு போலயே, என்ன அண்ணன் முகமே சரி இல்லை"

மெடிக்கல் கடையில் வேலை செய்யும் இளைஞன் நின்று பார்த்திருந்தவன், வேக வேகமாக கடைக்குள் ஓடினான்.

"அண்ணே அண்ணன் வந்திருக்காரு, கோவமா இருக்கார் போல" பதட்டதோடு சொல்ல,

"டேய் சொல்றத ஒழுங்கா சொல்ல மாட்டியா? யாரு அண்ணன்? எந்த அண்ணன டா சொல்ற? உனக்கு ஊர்ல இருக்கவன் பூரா பேரும் அண்ணன் தான். இதோ இப்ப கூட பாரு! என்னையும் அண்ணன்னு தான் சொல்ற. நான் யாரைன்னு நினைக்க?"

மருந்துகளை குறிப்பெடுத்தபடி, சொன்னவனுக்கு மேலாக அண்ணன் போட்டு, அண்ணனென்று சொன்னவனை கடுப்பேத்தினான் சந்திரன்.

"அய்யோ! சந்திர ண்ணா! உங்களை தவிர்த்து வேற யாரை அண்ணன்னு சொல்லுவேன். எல்லாம் நம்ம ஆதவன் ண்ணா வை தான் சொல்றேன். கடைக்கு வந்திருக்காங்க அவங்க. வேணா நீங்களே வந்து பாருங்க"

"ஏது! ஆதவனா?, அவன் என்னடா செய்றான் இங்க?வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னான்?" இதை வெளியில் சொன்னவன்,

'வீட்ல புது பொண்டாட்டிய விட்டுட்டு இங்க என்ன செய்றான் இந்த பய' இதை மனதில் நினைத்த சந்திரன், ஆதவனின் பால்ய நண்பன்.

ஒன்றாகவே படித்த ஆதவன் கடை வைத்து அமர, வேலை தேடியும் கிடைக்காது அலைந்து சோர்ந்திருந்த சந்திரனும் அவனோடு சேர்ந்துக்கொண்டான்.

முதலில் வேலையாளாக இருந்தவனை, ஆதவன் தான் பாட்னராக சேர்த்துக் கொண்டான். இரண்டு கடை ஆதவன் பெயரிலும், இரண்டு கடை இருவர் பெயரில் ஒன்று சேர்ந்து நடத்தினாலும், நான்கையும் சந்திரன் தான் மேற்பார்வை பார்த்துக் கொள்கிறான்.

காலையில் ஒரு முறை கடைக்கு வரும் ஆதவனை, இரவு தின கணக்கு பார்க்கும் போதும், கடையில் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டுமே மேற்கொண்டு அவனை பார்க்க முடியும்.

பரபரவென சந்திரன் வெளியே வர, அதற்குள் கடைக்கு உள்ளே இருக்கும் ஸ்டாகிங் அறைக்கு வந்திருந்தான் ஆதவன்.

"டேய்! கடைல நிக்காம இங்க என்ன செய்ற நீ, அங்க லைன்ல பொம்பள புள்ள மட்டும் நிக்குது. சேர்ந்தாப்ல நாலு கஸ்டமர் வந்தா சமாளிக்க முடியுமா அதனால?ஆளில்லைனா கடையை ஒழுங்கா பாத்துக்கணும்னுல்லாம் இருக்க மாட்டிங்களாடா? எப்பவும் நெம்புக்கோல் வெச்சு நெம்பிகிட்டே இருக்கணுமா உங்களுக்கு? வாங்கற சம்பளத்துக்காகவாவது கொஞ்சம் வேலை செய்ங்கடா"

கடையில் வேலை செய்யும் இளைஞனை பார்த்து, வந்ததும் வராததுமாக ஆதவன் காய, அப்படியே சுருங்கியது அவன் முகம்.

"டேய்! டேய்! ஆதவா! இப்போ அவனை எதுக்கு திட்டுற? நீ வரன்னு என்கிட்ட சொல்ல தான்டா அவன் வந்தான்" சந்திரன் சொன்னவன்,

"இவனே! நீ போடா! போய் கடையை பாரு "அவனை அனுப்பினான்.

"சர்ண்ணா" என்றாலும் தெளிவே இல்லாமல் இளைஞன் சென்றுவிட,

"என்னடா? என்னாச்சு? ஆளும் சரியில்லை! பேச்சும் சரியில்லை! வந்ததும் வராததுமா கடை பையன் மேல காயுற, வீட்ல பிரச்சனை ஒண்ணுமில்லையே" சரியாக நாடிபிடித்தான் சந்திரன்.

"என்னால முடியல டா மச்சா ம்ம்ப்ச்" எதற்கும் கலங்காத ஆதவனின் குரல் கரகரத்து வெளிவந்ததில்,

"டேய்! மாப்ள! என்னடா சொல்ற? என்ன சொல்ல வர? கொஞ்சம் புரியற மாறி சொல்லுடா" தன்னாலே பதட்டம் ஒட்டிக்கொண்டது சந்திரனுக்கு.

அத்தனை எளிதில் கலங்கும் ஆளில்லை ஆதவன். அத்தனை ஆளுமையாய் எத்தனை விஷயங்களை அசால்டாக முடித்திருக்கிறானென்று,கூட இருந்து அனைத்தையும் பார்த்தவனாகிற்றே சந்திரன்.

"என்னை என்னன்னு டா சொல்ல சொல்ற" ஆதவன் சலித்துக்கொள்ள, இடிந்து போனவன் போல் பேசுவதை சந்திரனால் பார்க்க முடியவில்லை.

"டேய் இவனே போய் டீ வாங்கியா " வெளியே பார்த்து குரல் கொடுத்தவன்,

"மொதல்ல வந்து உக்காரு நீ " நாற்காலியை எடுத்து போட்டான் நண்பனுக்கு.

"என்னடா இதுக்கே டென்சனாயிட்டா எப்பிடி" ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவனாகையால் ஆதவன் சொல்லாமலே தெரிந்தவகையில் கணித்து சொல்ல,

"உனக்கு புரியல மச்சான். எனக்கு தான் இதை நினைக்க நினைக்க மண்டையே வெடிக்கிது" என்றவனுக்கு, என்ன சொல்வது எப்படி சொல்வதென்றே புரியவில்லை.

மௌனமாகவே நேரம் கழிய, அதற்குள் டீ வந்திருந்தது. வாங்கி அவனுக்கொன்றும் தனக்கொன்றுமாக எடுத்துகொண்டவன், அமைதியாக அருந்த, ஆதவன் டீ கோப்பையின் நுனியை விரலால் வட்டமிட்டவாறு அமைதியாக இருந்தான்.

"எப்படியும் நீ சாப்டிருக்க மாட்ட, இதையாவது குடி டா, பிரச்சனை எங்க போய்ட போகுது. பாத்துக்கலாம். இப்போ குடி " வற்புறுத்த,

சிறிது நேரத்திற்கு பிறகு அருந்த ஆரம்பித்து, அதோட மெல்லிய குரலில் பிரச்சனையை மேலோட்டமாக சொல்லி முடித்திருந்த ஆதவன், அனைத்திற்கும் காரணமாக இருந்த தன்னை நினைத்து மிகவும் கீழாக உணர்ந்தான்.

"என்னடா மாப்ள? என்னென்னவோ சொல்ற?இதுல இவ்வளவு இருக்கா? நான் நினைக்கவே இல்லையே டா " என்ற சந்திரனுக்கு மேலும் என்ன சொல்வதென்றும் புரியவில்லை.

"கிட்டத்தட்ட பயித்தியம் பிடிக்கற நிலைமைல இருக்கேன் டா. எப்பிடி சரி செய்ய போறேன்னே தெரியல. அப்படியே சரி செய்தாலும் சரிவருமான்னும் தெரியல. யோசைனையா இருக்கு. அந்த பையன் ஒவ்வொன்னும் சொல்ல சொல்ல நெருப்புல குளிச்சது போல நின்னேன் டா. ஏற்கனவே கஷ்டத்துல இருந்தவளை நானும் வற்புறுத்தி கஷ்டபடுத்தி எப்படியெல்லாம் துடிச்சிருப்பா? என்னை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்குடா சந்திரா" சரிந்து அப்படியே தலையை பின்னுக்கு சாய்த்துகொண்டான் ஆதவன்.

"சரி செய்யலாம், சரி செய்யலாம். வருத்தப்படாதே, நீ ஏதாவது யோசிச்சு வெச்சிருக்கியா" தோள் தட்டி சந்திரன் ஆறுதல் சொல்ல,

"ம்ம்ம்"

"சொல்லு! சரி வருதா பாப்போம்"

சொல்லி முடித்த ஆதவன் கனம் தாங்க மாட்டது அப்படியே கண்களை மூடி கொள்ள,

"டேய்! என்னடா இது. எவ்வளவு ஆசை ஆசையா அந்த பொண்ணை கல்யாணம் செய்து கிட்டே? இப்போ என்ன டா? இப்பிடியொரு முடிவு எடுத்திருக்க. ஏற்கனவே கல்யாணத்துக்கு வந்தவனுங்க வாயில எல்லாம் பூரணி விழுந்து எழுந்துச்சு. இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா இன்னும் பேசுவாங்க பாவம் டா தங்கச்சி"

"என்னை என்னடா செய்ய சொல்ற? நான் செய்தது இப்போ அவ தலைல விழுந்திருக்கு. கல்லை போட்ட நான்தான மருந்தும் போடணும். இதை தவிர வேற வழி எதுவும் தெரியல டா மச்சா. எப்போவும் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்கா. எல்லாத்தையும் வற்புறுத்தி செய்ய வெச்சிட்டு இருக்கேன். இதையெல்லாம் பாக்கறப்ப பூரணிக்கும் பெருசா ஆட்சேபனை இருக்காதுன்னு தான் தோணுது"

"ம்ம்ம்! நீ சொல்றதும் ஒரு வகைல சரி தான் ஆதவா. தங்கச்சியை பார்த்தாலும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லாதது போல தான் இருந்துச்சு. எதுவா இருந்தாலும் நீ எடுத்த முடிவுல மாற்றமில்லையே? ஏன்னா விஷயம் கேள்விப்பட்டா பொண்ணு வீட்ல சும்மா இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது"

அவ்வளவே தான் சொன்னான் சந்திரன். வந்ததே அப்படியொரு கோபம் ஆதவனுக்கு.

"எங்க அவ அப்பனையும் ஆத்தாளையும் என் முன்ன வர சொல்லு பார்ப்போம்? அவங்கள பத்தியே பேசாத டா. எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான். ரெண்டு பேர் மேலயும் எவ்வளவு மரியாதை வெச்சிருந்தேன். எல்லாத்தையும் மறைச்சு கல்யாணம் செய்து குடுத்திருக்காங்க. இப்போ நான் தத்தளிக்கிறேன். அதெப்படி டா அவங்க பெத்த பொண்ணுக்கு அவங்களாலே துரோகம் செய்ய முடியுது." உடல் விறைக்க கை முஷ்டியை இறுக்கினான்.

"கோவப்படாத மாப்ள நம்ம பக்கமும் தப்பிருக்கு. கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காம நெருக்கினது நாமளும் தான"

"அதுக்காக தான் டா இவ்வளவு பொறுமையா இருக்கேன். இல்லைன்னா தெரிஞ்ச அன்னைக்கே அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பேன்" கோபபட்டவன்,

"இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா நானே நிறுத்தியிருப்பேன் டா கல்யாணத்தை, அவ்வளவு ஈவு இரக்கமில்லாதவன் இல்ல டா நான்"

குரல் கலங்க கசங்கிய முகத்துடன் சொல்லியதால் சும்மா விட்டான் சந்திரன் இல்லையென்றால் மானக்கேடாக கேட்டிருப்பான் அப்படியும் முடியாமல்

'அப்டியா மாப்ள நிஜமாகவா'வார்த்தையால் கேட்காமல் கண்களால் கேட்க அந்த கேள்விக்கு ஆதவனிடம் பதில் இல்லை.

"பூரணி முகத்தை பார்க்கவே முடியல டா. அவ முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கவே முடியலை என்னால. எப்பிடியெல்லாம் தவிச்சு போயிருப்பான்னு நினைக்கும் போது உள்ள ஒரு வலி வருது பாரு. நானெல்லாம் என்ன ஜென்மம் டா ன்னு வருது எனக்கே" வருந்தினான்.

"சரி டா கவலைப்படாத! முடிவெடுத்துட்டல்ல இனிமே பாரு எல்லாம் நல்லதாவே நடக்கும். யோசிக்காமல் செயல்படுத்து நடக்கறத பாப்போம்" சந்திரன் தோள் தட்டி சமாதானமிட்டவன்,

"சரி அம்மா என்ன சொன்னாங்க விஷயத்தை சொல்லிட்டியா" கேட்க,

"அவங்க என்ன சொல்லிட போறாங்க? தெரிஞ்ச வகையிலுமே அவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா படல டா. எனக்கு தான் குத்தி கிழிக்குது. இன்னும் எதையும் முடிவா சொல்லல. எதிர்ப்பு கண்டிப்பா இருக்கும். மகன் வாழ்க்கை கேள்விக்குறியாக்குதுன்னா பெத்தவ யார்தான் ஒத்துக்குவாங்க. ஆனாலும் நான் செய்யத்தான் போறேன். ரொம்ப குழம்பி போயிருந்தேன் இப்போ முடிவெடுத்துட்டேன்."

"பிடிச்சிருக்கா இல்லையா சொல்ல கூட விடாம, தங்கச்சியை உருட்டி மிரட்டி கல்யாணம் செய்யும் போது தித்திப்பா இருந்துச்சோ? இப்போ அனுபவி டி மாப்ள"

சந்திரன் சிரிப்போடு சொல்ல, தன் மனதை மாற்ற தான் பேசுகிறானென புரிந்த ஆதவனுக்குள் அந்நாளின் மிச்சம்.

அதுக்கு தான் உன் தங்கச்சி இங்க இருந்துகிட்டு ஆட்டி படைக்கிறா தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டவன் செய்த வேலைக்கு நானும் இப்போ அனுபவிக்கிறேன் போல டா" சொன்ன ஆதவனிற்கும் கசப்பை தாண்டி, தித்திப்பின் மீதி வியாபித்து, உதட்டில் மெல்லிய புன்னகை தோன்ற வைத்தது.

அது, பிதுங்கிய கன்னத்தின் வழியே கிருதாவில் பிரகாசித்தது.

"சரி டா நான் கிளம்புறேன். பார்த்துக்கோ ரெண்டு நாள் கழிச்சு வரேன்" சொன்ன ஆதவன் கிளம்பி விட,

'இவன்கிட்ட எதுவும் சொல்லவும் முடியாது. சொன்னாலும் இவன் ஏத்துக்க மாட்டானே' ரீதியில் பார்த்திருந்த சந்திரனுக்கு, பூரணி சரியென்று போனாலும் நண்பன் அப்படி விட்டுவிட மாட்டான் என்று தான் தோன்றியது.

அதற்கேற்ப, புகை கிளம்ப இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவனுக்குள், பரிபூரணியை பெண் பார்க்க சென்றிருந்த போது நடந்த நினைவுகள் புழுதி கிளப்பியது.
 
Messages
7
Reaction score
15
Points
3
"டியே பூரணி! தம்பிக்கு மாடி தோட்டம் பாக்கணுமாம் கூட்டிட்டு போய் காட்டிட்டு வா" பார்வதி குரல் வந்ததில்,

'வெள்ள வேட்டிக்கு என்ன அங்க குளிர் நிலவா காயுது. இந்நேரத்துக்கு மாடி தோட்டத்தை சுத்தி காட்ட' கொலை கடுப்பாக வந்தது பூரணிக்கு.

"தனியா பேசணும்னு சொல்ல கூட தைரியமில்லை. இவனெல்லாம் ஏன் பொண்ணு பார்க்க வரான். அதென்ன மாடிக்கு போனா தான் பேச்சு வருமா? ஏன் ரூம்ல நின்னு பேசினா ஆகாதாமா? பொண்ணு பார்க்க வர்ற நேரத்தை பாரு மொட்ட வெயில் மண்டைய பொளக்கற நேரத்துல.
இந்நேரத்துக்கு காத்து கருப்பு தான் வருமாம் கேள்விப்பட்டிருக்கேன்" அங்கே பார்வதியை ஆதவன் கலங்கடித்ததை அறியாமல், முணுமுணுத்த படியே அறையை விட்டு வெளியே வர,

"ம்ம்ம்! இந்த காத்து கருப்புக்கேத்த பூங்காத்து இங்கதான இருக்கு. அதான் பார்த்து பேசி, கையோட பாக்கெட்ல புடிச்சு போட்டுக்கிட்டு போகலாம்ணு வந்தேன். என்ன வரியா? போகலாமா?" திடீரென முதுகிற்கு பின்னால் கேட்ட குரலில் தூக்கி வாரி போட பூரணி திரும்ப, சுவற்றின் மீது சாய்ந்து கைகட்டி நின்று பார்த்திருந்தான் ஆதவன்.

"என்ன என் தைரியம் போதுமா? இல்லை பத்தலையா? இல்லை இன்னும் கொஞ்சம் காட்டட்டுமா? என்ன பூரணி பேச்சையே காணோம்? ஆளில்லாதப்ப தான் பேச்சு வருமோ?" அவள் முன் வந்து கண்ணோடு கண் பார்த்து சீண்ட,

"ஊப்ப் இப்படியா பயமுறுத்துவீங்க, என் வீட்டுக்குள்ளயே வந்து என்னையே பயமுறுத்த எவ்வளவு தைரியம் இருக்கணும் உங்களுக்கு" கண்களை விரித்து துடுக்காக பேசிய பூரணியின் பார்வை, அடுத்த நொடியே அவனை தாண்டி சென்று மீண்டு வந்தது.

அனிச்சையாக பூரணி உடல் மொழியை இறுகி, "வாங்க" சொல்லி முன்னே செல்ல, அவள் கவனம் பார்வதியிடம் சென்று வந்ததென்பது ஆதவன் கண்களில் இருந்து தப்பவில்லை. புருவங்களை சுருக்கினாலும், ஒன்றும் கேட்கவில்லை பின் சென்றான்.

மாடி படியில் முதலில் பூரணி ஏறவும், ஆதவன் பின்னோடு ஏற, இவர்களை நோட்டம் விடவெனவே பார்வதியும் வந்திருந்தார் போல. கொல்லைபுற வாசலில் நின்ற படி, தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்ப்பதும், பிறகு இழுத்துகொள்வதுமாக இருக்க, அதை பார்த்து விட்டிருந்தான் ஆதவன்.

"உன்னோட அம்மாக்கு பூச்சி புடிச்சு சாப்டுற பழக்கம் ஏதாவது இருக்கா? தவள நாக்கை வெளிய நீட்ற மாதிரி தலையை மட்டும் வெளிய நீட்டி நீட்டி பாக்கறாங்க?" சொல்லிக்கொண்டே சிரித்தபடி ஆதவன் ஏற, எட்டி பார்த்த பூரணிக்கும் அவன் சொன்னதை வைத்து பார்க்க அப்படிதான் இருந்தது. சிரிப்பு வந்தது கவலைகள் மீறி.

"இங்கே பூச்சியா என்னை வெச்சு பாருங்க புரியும்." சொன்ன பூரணியின் சொல்லில் ஆதங்கம் மட்டுமே இருக்க "ஹோ அப்டி" புரிந்தது அவனுக்கும்.

ஏதோ உறுத்தினாலும் அதனை புறம் தள்ளும்படி "இப்போ புரிஞ்சுதா" லேசான சிரிப்போடு கேட்டவளை பார்த்து அர்த்தம் பொதிய சிரித்தவன்,

"ஆனா நீ வெறும் பூச்சி இல்ல பூரணி, அழகான வண்ணத்துப்பூச்சி, உங்க அம்மா கவலை படுறதுல நியாயம் இருக்கத்தான் செய்யுது" என்றவன் "நீ இன்னும் நல்லாவே சிரிக்கலாம். உன் முகம் சிரிக்கும் போது வசீகரமா இருக்கு. என்னையும் வசியம் செய்யுது"

ஆதவன் ஏறுவதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்து ரசனையோடு சொல்ல, பெண்ணவள் என்ன நினைத்தாளோ, சிரிப்பு சுவிட்ச் போட்டாற்போல் நின்றுவிட்டதோடு, முகம் லேசாக வாடியும் விட்டது.

'இவனுமா' அய்யோவென்று தோன்றியிருக்க அவஸ்தையாக நின்றாள்.

அதை மிக சரியாக தவறாக எடை போட்டவன் "சில் பூரணி! நான் சாதாரணமா தான் சொன்னேன். இதுக்கு எதுக்கு டென்ஷன் வா போகலாம்" என்றதோடு நின்றானா அவன்?

எதிர்பாரா வண்ணம் சட்டென திரும்பியவன், "என்ன த்தே பூரணிகிட்ட எதாவது விஷயம் சொல்லணுமா" என்றும் கேட்டு விட்டான்.

'என்ன அத்தையா? இது என்ன புது கதை' பூரணி ஸ்தம்பிக்க, 'என்ன மறுபடியும் அத்தையா' ஒரு நொடி நெஞ்சை பிடித்தபடி அரண்டே போனார் பார்வதி.

பின்னே அதை சொல்லி மட்டையாக்கி தானே, பூரணியிடம் தனியாக பேச சம்மதம் வாங்கி இருந்தான்.

"பூரணியை பார்த்தது மட்டும் போதாது, எனக்கு பேசணும். உங்க முன்னாடினாலும் எனக்கு ஓகே தான். தனியானாலும் எனக்கு ஓகே தான். பூரணியை கேட்டு சொல்லுங்க" தோள் குலுக்கி சொல்ல,

யாருக்கும் ஒரு நொடி பேச்சே எழவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. இப்பிடி எல்லாம் முன் பின் அறிந்ததில்லை. நடந்து பார்த்ததில்லை.

வேண்டாமென்று சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள கூடும் சாத்தியமும், சரியென்றால் அது பழக்கமில்லாத ஒன்றாகையால் தேவையில்லாத பேச்சுகள் எழும் சாத்தியமும் இருக்க, அம்மையப்பன் என்ன சொல்வதென்று விழிக்க, பார்வதி தான்..

"அதெப்டி கல்யாண பேச்சு ஒரு முடிவுக்கு வராமல் வயசு பொண்ண கூட தனியா பேச அனுப்ப முடியும்? எதுவாருந்தாலும் முடிவு செய்துட்டு பாத்துக்கலாம்" பார்வதி மறுப்பு தெரிவித்தாலும் ஆதவன் விடவில்லை.

"அதான! பொண்ண பெத்தவ சரியாதானே சொல்றா, தம்பி உங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. நீங்க சொன்னது உங்களுக்கே சரின்னு படுதா" சபையில் அமர்ந்திருந்த பூரணி வீட்டின் அக்கம் பக்கத்திலிருந்து வந்திருந்தவர்களில் ஒரு பெரியவர் கேட்க,

"பெருசு! இவ்வளவு பேசுறவன் இதை யோசிக்காமலா இருப்பேன். இதோ இங்க தான் இருக்கு என் தங்கச்சியும், வேணும்னா கேட்டுக்க அவ லவ் மேரேஜை எப்பிடி அரேஜ் மேரேஜா அய்யா மாத்தினேன்ன்னு கதை கதையா சொல்லும்"

"எது லவ்வா" வாயை பிளந்தவர் தான். மூடவும் இல்லை. அதன் பின் வாயை திறக்கவும் இல்லை. அப்படியே பார்வதி பக்கம் திரும்பியவன்,

"அட ரெண்டாவது மில்லினியமே பொறந்திருச்சு, இன்னும் பழைய பஞ்சாங்கம் போல பேசறீங்க. அனுப்ப சொல்றதே, நாங்க ரெண்டு பேரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர தான் அத்தை, அனுப்புங்க" ஒரே போடாய் போட்டு அவரையும் அரள வைத்திருந்தான்.

ஆதவன் அத்தை என்று விளித்ததில் மற்ற அனைத்தும் பின்னுக்கு போக, 'என்ன அத்தை யா' அதிர்ந்து போனது அவர் மட்டுமல்ல ஆதவனின் குடும்பமும் தான்.

ஆதவனின் தங்கை "அண்ணே நீ ஒரு பார்ம் ல தான் இருக்க போலயே, எல்லாரையும் ஓட வெக்கும் அந்தம்மாவையே நீ அரள வச்சிட்டியே" காதை கடித்தவள் சன்னமாக சிரிக்க,

"நீயும் உன் வீட்டுக்காரரும் அடிக்காத லூட்டியவா நான் அடிச்சிட்டேன். நானே பர்பார்ம் பண்ணது போதுமா இல்லையா ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன் கெடுத்து விட்டுடாத தாயே" அவள் வாயை அடைத்தவன் அவன் அன்னையை மறந்தும் பார்த்தானில்லை.

பேசியது தன் மகன் தானா? வியப்பா?நிம்மதியா? பிரித்தரிய முடியா உணர்விலே வைத்திருந்தவன்,

"கட்டினா உங்க பொண்ணை தான் கட்டுவேன். நான் முடிவுக்கு வந்த பிறகு தான் கேக்குறேன் த்தை. இப்போ எனக்கு தேவையெல்லாம் பூரணியோட சம்மதம் மட்டும் தான்"

பூரணியிடம் பேச வேண்டியதை எல்லாம், பார்வதியிடம் சம்மதத்திற்காக பேசி ஒத்திகை பார்த்திருந்தான்.

பார்வதிக்கும், ஆர்ப்பரித்திருந்த ஏதோ ஒரு தவிப்பு ஆதவனின் பேச்சில் அடங்க தான் செய்தது. இருந்தாலும் தயங்க,

'மாமியார் அநியாயத்துக்கு டப் கொடுக்கறீங்களா? நீங்களே இத்தனை பாடு உங்க பொண்ணு என்ன பாடு படுத்த போறாளோ' நினைத்தவன் பார்வதியை சரியென்று சொல்லும் வரை விடவில்லை.

அந்த நினைப்பில் இப்பொது தன்னாலே பார்வதிக்கு பதட்டம் ஒட்டி கொள்ளவும்,

"இல்லை! ஒண்ணும் இல்ல! சும்மா! அது வந்து! பூரணி! நீங்க! பேச" என்று உளற,

"அத்தை உங்க பொண்ணை நான் ஒன்னும் கடிச்சு தின்னுற மாட்டேன். பயப்படாம போங்க. ஹால்ல உங்க சம்பந்தியோட பேசிட்டு இருங்க வந்திடுவோம்" என்றானே பார்ப்போம் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை பார்வதி.

விட்டால் போதுமென்று வீட்டினுள் ஓடிவிட, பூரணி நிலை தான் பரிதாபமாய் இருந்தது.

அவனின் விளிப்பும், பார்வதியின் விழிப்பும் பயப்பந்தை அதிகமாய் உருட்டியது. நினைத்ததை விட விஷயம் கடினமாயிருக்கும் போலவே வதைத்தது அவளுக்கு.

என்னவாகுமோ மறுகியவள், என்னவானாலும் சரிதான் முடிவிற்கு வந்திருந்தாள். எடுப்பது சுலபமாக தான் இருந்தது ஆனால் நடை முறை அவ்வளவு சுலபமாய் இல்லையே அதுவும் ஆதவனிடம்.

மாடி சென்றதிலிருந்து ஆதவன் கைப்பிடி சுவரில் அமர்ந்து கை கட்டி அமைதியாக பூரணியை எடை போட, அவள் எதையோ சொல்ல வருவதும் பின் மருகுவதுமாக இருந்தாள். அவனை சந்திக்காமல் அலைமோதும் விழிகளும், காற்றில் அசைந்தாடும் முடிகற்றையை ஒதுக்கி விடும் நடுங்கிய விரல்களும், சொல்லாமல் சொல்லியது ஆதவனுக்கு சகலத்தையும்.

இதற்கிடையே, நிமிடத்திற்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் வந்து டீ,பலகாரம் வைத்து, வேறு ஏதேனும் வேண்டுமாவெனவும் கேட்டு சென்றதோடு, சூழ்நிலையை கிரகித்தும் செல்ல, அவனுக்கு ஊர்ஜிதமே ஆனது.

'ஆஹா! டேய்! பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டமில்ல போல டா, அவ அம்மா அப்பா மெரட்டலுக்கு பயந்து நிக்கிது கிளி, அதை சொல்ல முடியாம தான் தவிக்கிது போல' அவனுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தாலும், அவளின் அருகாமையில் குப்பேன்று இனம்புரியா உணர்வொன்று அவனை ஆட்கொண்டது.

உணர்வுகளுக்கு எவ்வளவு கடிவாளமிட்டும் முடியாமல் "ஊப்ப்ப்" ஒரு கையால் பின்னந்தலை கேசம் கோதி, இறுக பற்றி நின்றான்.

அப்போதும் முடியாமல், கிருதாவை உள்ளங்கையால் தடவிப் கொடுத்து, அப்படியே மீசைக்கு வந்து நீவி விட்டு கட்டுப்படுத்தி அவளை விழியகட்டாமல் பார்த்து நிற்க,

'இவளோட தான்டா உனக்கு வாழ்க்கை மிஸ் செய்திடாத டா' உள்ளே குரலில் சத்தம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமானது.

பின்னே! பரிபூரணி பெயருக்கேற்றார் போல் அழகிலும் பரிபூரணி தான். தைரிய லக்ஷ்மியையும், லக்ஷ்மி கடாட்சத்தையும் ஒருங்கே பெற்றவள். வயதை மீறிய வனப்பு தேகத்தில் தெரியும். என்னை பார் மயங்கி போவாய் சொல்லும்படியான முக வெட்டு. உயிரோட்டமுள்ள அகண்ட விழிகள். செதுக்கி வைத்த சிலை போல அவ்வளவு நேர்த்தியான அழகுடையவள்.

ஏற்கனவே ஒரு முறை தூரத்தில் பார்த்தே இவள் தைரியத்தில் கவரப்பட்டு பித்தேறி கிடந்தவன், இப்பொது இவ்வளவு அருகில் மொத்தமாய் தன்னை தொலைத்தே போனான்.

'உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா பூரணி' கேட்டு அவன் அவஸ்தைகள் மொத்தத்தையும் கொட்டி கவிழ்க்க அவன் ஆவி துடித்தது. அந்நேரம் அவன் சிந்தை கலைப்பது போல்,

"இங்க பாருங்க! நான் சொல்றதை கொஞ்சம் கோவப்படாம கேளுங்க ப்ளீஸ்" அவள் ஏதோ சொல்ல வர, அந்நேரம் சரியாக அவனது போன் சினுங்கியது.

சந்திரன் தான் அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்று ஆதவன் "ஹலோ" சொல்ல,

"டேய் கடைல ஆள் விட்டுட்டு கிளம்ப லேட் ஆகிருச்சு டா. வந்துகிட்டே இருக்கேன். அட்ரஸ் மெஸேஜ் செய்து விடு" சந்திரன் சொல்ல அப்போது தான் அந்த எண்ணம் உதித்தது ஆதவனுக்கு.

கேட்டதை கிறகிப்பவன் போல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், பட்டென்று உஷ்ணம் கனல முகத்தை மாற்றினான்.

உடனே குரலை கடினமாக்கியவன் "ஹலோ! டேய் என்னது வேணாம் சொல்லணுமா" அமர்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக குதித்து முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

"டேய் நான் யாருன்னு தெரிஞ்சும் எவ்வளவு தைரியமிருந்தா இந்த வார்த்தையை சொல்லுவ, என்னை என்ன மாக்கான்னு நெனச்சியா? உன் இஷ்டத்துக்கு பேசினா நான் கேட்டுகிட்டு போக" இவன் பூரணி பேச வருவதை மனதில் வைத்து பேச, சந்திரனிற்கு ஒன்றுமே புரியவில்லை குழம்பியது.

"என்ன உளறுரான் இவன்! டேய்! டேய் மச்சா! சந்திரன் டா! உன்னை வேணாம் சொல்ல சொல்லல. அட்ரஸ் வேணும் சொல்றேன். கேக்குதா" அவன் வண்டியை ஓரம் நிறுத்தி கத்த,

"எல்லாம் நல்லாவே கேக்குது டா வெளக்கெண்ண, நான் முடிவெடுத்தா எடுத்தது தான். மாத்தினதா சரித்திரமே இல்லை. புரிஞ்சிதா? எனக்கு ஒரு விஷயம் வேணும்னா தான் நேர்லயே வருவேன். இடத்தை தரேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்போ நழுவ பாக்குறியா? விட மாட்டேன் டா உன்னை. எனக்கு அந்த இடத்தை குடுத்தா உன் உடம்புல உயிர் தங்கும். இல்லை உயிரை எடுத்துருவேன் யோசிச்சிக்க"

இவன் மேலும் பேச, பேச பூரணிக்கு இவன் பேசும் ஒவ்வொன்றிலும் தூக்கி வாரி போட்டது. இவள் சொல்ல வந்த அனைத்தும் மறந்து போக, நாவு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

பின்னே! இரண்டு பேரை சேர்த்து பிசைந்து ஒட்டி வைத்தார் போல், அகண்ட கூடுதல் சதை இல்லாத கட்டுடல் தேகம். அதற்கேற்றவாரு அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம். சற்று நேரம் பார்த்தாலே எதிர் நிற்பவர்களை அளவெடுத்துவிடும் கூரிய கண்கள். அளவான மீசையை முறுக்கி விட்டிருந்தான்.

முகத்திற்கேற்ற குண்டு கன்னத்தை மறைக்கவெனவே, கிருதாவை பெரிதாக வைத்திருந்தான். பார்த்ததும் மரியாதை தரும் படியான வெள்ளை வெட்டி சட்டை உடை அணிந்து, பார்க்கவே சற்று கரடு முரடு ஆள் போலவே தோற்றம்.

இத்தனை அம்சங்களும் வாய்க்க பெற்ற ஆதவன், அளவிற்கு மீறி குரலை உயர்த்தி, மிரட்டி கண்கள் சிவக்க பேசினால் அவளும் தான் என்ன செய்வாள்? விட்டால் ஓடிவிடுவாள் போல் தான் நின்றிருந்தாள்.

சீண்டினால் தவிர்த்து,
தெரியாத யாரிடமும் அப்படி சட்டென்று நடந்துகொள்ள மாட்டாள் என்றாலும் அவளே சற்று அடாவடி ஆள் தான். அப்படியானவளே அவன் நடத்தையில் சற்று மிரண்டாள்.

கூடவே! சமீப நாட்களாகவே, இப்படியான அம்மையப்பன் பார்வதியின் குரல்களை கேட்டுக்கொண்டே இருந்ததின் பாதிப்பு அவளிடம் வெளிப்பட்டது.

'வெள்ள வேட்டி சரியான கோவக்காரனா இருக்கானே, எப்பிடி பேச? நான் பேசினாலும் இப்பிடித்தான் கோவப்படுவானோ? நெனச்ச போலவே அறைஞ்சிட்டா? ' மான சீகமாக கன்னம் பிடித்துக்கொண்டவளுக்கு பயமும் பிடிக்க ஆரம்பிக்க,

அந்த பக்கம், சந்திரன் விளக்கம் சொல்லிச் சொல்லி, பின் சலித்து நீ என்னவோ பேசிக்கொள் ரீதியில் அமர்ந்துவிட்டான்.

"என்னடா பேச்சையே காணோம். இவ்வளவு நேரம் பேசின இப்போ பேசு, பேசு டா! பேசுடாங்குறேன்" ஆதவன் இன்னமும் கத்த,

"பேசு! பேசு னா! என்னத்த டா பேச? என்னன்னு பேசினாலும் நீ உன் இஷ்டத்துக்கு தான் பேச போற, கத்தி கத்தி எனக்கு தொண்டை தண்ணியே வத்தி போச்சு. இவன் கூடவெல்லாம் சகவாசம் செய்ய வெக்கிறியே ஆண்டவா" சந்திரன் அந்த பக்கம் புலம்பினான்.

"அய்யோ! ப்ளீஸ்! கத்தாதீங்க, அம்மா வந்துட போறாங்க! ப்ளீஸ்! மெல்லமா பேசுங்க" இங்கே எப்படியோ சுதாரித்து பூரணி வாய் திறக்க,

"ஏய் என்ன" விரல் நீட்டி மிரட்டி கத்தினான்.

அதில் அவள் இரண்டடி பின்னுக்கு போக, "நான் என்னத்துக்கு மெல்ல பேசணும், என்ன நெனச்சீங்க என்னை எல்லாரும். ஆளாளுக்கு ஒன்னொன்னா சொல்வீங்க நான் தலையாட்டிட்டு போகணுமா? இங்க எல்லாம் என் இஷ்டம் தான். நான் நினைச்சது தான் நடக்கணும் புரிஞ்சிதா?" பூரணியிடம் வெடுக்கென்றவன்,

"டேய்! என்ன அமைதியாகிட்ட? எனக்கொரு முடிவ சொல்லாம உன்னை விட மாட்டேன்" போனிலும் கத்த,

"ஒரு அட்ரஸ் கேக்க போன் போட்டது குத்தமா டா! என் காது அவுஞ்சி போச்சே" சந்திரன் புலம்ப ஆதவனுக்கே சிரிப்பு தான்.

வெளிவராமல் விழுங்கியவன், பூரணியின் முகம் பார்த்தான். அதில் அவனுக்கு தேவையான பதில் கிடைத்தது.

இவ்வளவு போதுமென்ற எண்ணம் வர " அது அந்த பயம் இருக்கணும். என்னைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் வரணும் வாட்சப் செய்து விடுறேன். வந்து பத்திரத்தை குடுத்து கையெழுத்தை போட்டுட்டு காச வாங்கிட்டு போற வழியை பாரு " சந்திரனுக்கு அட்ரஸையும், மேற்கொண்டு சிலவற்றையும் தகவலாக அனுப்பி, மண்டையை காய வைத்து, ஒரு வழியாக போனை வைக்க, அங்கே ஒரு ஜீவன் என்ன நடந்ததேன்றே கிரகிக்க முடியாமல், போனை பார்த்திருக்க,

இங்கே கூர்மையாக பூரணியை பார்த்த ஆதவன் "ம்ம்ம்! என்ன நீ என்னமோ சொல்ல வந்தியே! என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு" அந்த குரலை மாற்றாமல் அப்படியே பூரணியிடமும் பேச,


"இல்லையில்லை ஒண்ணுமில்ல" பட்டென பதில் வந்தது அவளிடமிருந்து, பதட்டத்தை சுமந்து.

"ஒண்ணுமில்லையா" என்றவன் "ஒண்ணுமே இல்லையா" மீண்டும் மீண்டும் கேட்க,

"அய்யோ! நம்புங்க! நிஜமா தான் சொல்றேன். ஒண்ணுமே இல்லை" சொன்னவளிடம்,

"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. மேரேஜ்க்கு எனக்கு சம்மதம். உனக்கும் சம்மதம் தான, என்னை கல்யாணம் செய்துக்கோ என்ன" அவன் பட்டென சொல்லவும் "ஆங்" வென்று அதிர்ந்து போய் பார்த்தாள் பூரணி.

"என்ன முழிக்கற? இஷ்டமில்ல போல" வேட்டியை மடித்து கட்டியபடி அவன் கேட்ட விதமே 'எங்கே இஷ்டமில்லை சொல்லித்தான் பாரேன்' சவால் விட்டது.

'இப்படி எருது கட்டு காளை மாதிரி நின்னு கேட்டா நானும் தான் என்ன தான் செய்வேன்' இவள் திருதிருக்க,

"என்ன பதில் சொல்லு! என்னை புடிச்சிருக்குல்ல" அவன் நெருங்க வர,

"ம்ம்ம்! இஷ்.. இஷ்டம் தான். பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்துக்கறேன்" பூரணிக்கு சற்று முன் அவன் பேசிய பேச்செல்லாம் மனதில் ஓட, சம்மதமென அவள் தலை, நாலா பக்கமும் அவள் சம்மதமில்லாமலே ஆடியது.

"இஷ்டமில்லை சொல்லியிருக்கணும்? அப்போ தெரிஞ்சிருக்கும்" கிருதாவை உள்ளங்கையால் தடவி மீசையை நீவி முரட்டுத்தனமாக முறுக்கி, கண்களில் தெறித்த கனலோடு அவன் சொன்ன விதத்தில்,

'எப்பா டேய் ஊர் உலகத்துல இப்பிடி எவனும் பொண்ணையே மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கமாட்டான்' உள்ளே மனம் குரல் கொடுத்தது.

'நானே கெஞ்சி சொல்ற வார்த்தையை, மெரட்டுற போல பேசிட்டு இருக்கேன். நீ வேற' அடக்கியவனுக்கு அதில் சிரிப்பு வந்தாலும் வெளியே விரைப்பாக முறைத்து தான் நின்றிருந்தான் ஆதவன்.

இதற்காக வருந்தபோகிறோமென அறியாமல்!

ஒரு வழியாக இருவரும் மாடியிலிருந்து இறங்கி உள் வர, நடையை அவன் எட்டி போட்டு பார்வதியை கடக்க, அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவர் மகளை பார்த்ததும்,

"மேல என்னடி தம்பி சத்தம் போட்டுகிட்டு இருந்தாரு! என்ன சொல்லி தொலைச்ச அவருக்கு கோபம் வர அளவுக்கு" மகளை கடிந்தார். அவர் பதட்டம் அவருக்கு.

"பூரணி ஒன்னும் சொல்லலை அத்தை, நான் தான் வேற ஒரு டென்ஷன் ல கொஞ்சம் போன்ல சத்தமா பேசிட்டேன். பூரணியை ஒன்னும் சொல்லாதீங்க" நின்று பொறுமையாக சொல்லி, அவர் மகளுக்காக அவரிடமே வக்காலத்து வாங்கி பார்வதி வாயை பிளக்க வைத்தவன்,

"இங்க நின்னு என்னடி பேச்சு வேண்டி இருக்கு, புள்ளைய உள்ள கூட்டிட்டு போ" ஆதவன் நிற்பதை பார்க்காது சொன்னபடி வந்த அம்மையப்பனை,

"அத்தையை திட்டாதீங்க மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்" சொல்லி அவரையும் வாயை பிளக்க வைத்தான்.

"என்னடி " அவர் பார்வதியை பார்க்க "நீங்க பேசிட்டு வாங்க மாமா, எனக்கு உங்களோட பேச வேண்டியிருக்கு" சொல்லியவன் நகர்ந்துவிட்டான்.

"என்கிட்டயும் பூரணியை சப்போர்ட் செய்து பேசினாருங்க" பார்வதி பேந்த பேந்த விழிக்க,

'வெள்ள வேட்டி பெரிய ஆளு தான். அம்மாவையே வாயை மூட வெச்சுட்டான்' பூரணிக்கு அந்த ரணகளத்திலேயும் குதூகலமாகவே இருந்தது.

பின்னே அவ்வளவு பேசுவார் பார்வதி. அதில் அடுத்தவர் மனம் நோகும், நோகாது எதையும் பார்க்க மாட்டார். வார்த்தையில் சட்டென நெருப்பள்ளி வீசி விடுவார். சில நாட்களாக வார்த்தையில் வெந்து கொண்டிருந்தவளுக்கு, அவரையே ஆதவன் வியர்க்க வைப்பதை பார்க்க சந்தோஷமாகவே இருந்தது.

"சரி வா என்னன்னு பாப்போம்" சொன்ன அம்மையப்பன் "நீ உள்ள போ பேசிட்டு வரோம்" மகளிடம் சொல்லி இருவரும் சென்றுவிட பூரணிக்கு தான் கையறு நிலை.

ஆதவனிடம் தன் பாச்சா பலிக்காது புரிந்தது. அதற்காக இதற்கு ஒத்துகொள்ளவும் முடியவில்லை. அவள் ஆசைகளும் கனவுகளும் வேறு.

துளிர்த்த கண்ணீரை அடக்கி நிற்க "அக்கா! அழாத க்கா! அம்மா திட்ட போறாங்க" தங்கைகள் இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதியின் தலை மறைந்ததும்.

இவர்களை கூட தன்னிடமிருந்து பிரிக்கிறாரே அன்னை! அப்படி என்ன செய்துவிட்டேன் ஆதங்கம் முட்டியது.

"ஏம்மா தங்கச்சிங்கள என்கூட சேர விட மாட்ற" கோவப்பட்ட பூரணியிடம்,

"ஏன்? உன்கூட சேர்ந்து உன் புத்தி அதுங்களுக்கும் வரதுக்கா? உன்னைத்தான் விட்டுட்டேன் அதுங்களையாவது இறுக்க பிடிச்சுக்கறேன்" கரித்து கொட்டியவர்,

"இனிமே அக்கா சொக்கான்னு அவகிட்ட போய் நின்னீங்க! முதுகு தோலை உறுச்சி விட்ருவேன் புரிஞ்சுதா? போங்க போய் நீங்களாவது ஒழுங்கா இருங்க" தங்கைகளை தன் கண் முன்னே அன்னை பேசியது வந்து போனது.

"அக்கா அழல! நீங்க போங்க! அம்மா திட்ட போறாங்க" அனுப்பியவள் அறைக்குள் புக,

இங்கே பெண் பார்க்க வந்தவன் பூ வைத்து, மோதிரம் போட்டு, தட்டை மாற்றி நிச்சயித்து விட்டே செல்லலாம் போல தனத்திடம் சொல்லியிருந்தான்.

"என்னப்பா! திடீர்னு இப்டி சொன்னா எப்படி" தனம் ஆதவனின் அன்னை தயங்கினார்.

"ம்மா நான் என்ன செய்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் நம்புறீங்கல்ல! அப்போ இதையும் நம்புங்க!" ஆதவன் ஒரே போடாக போட,

"ம்மா அண்ணணுக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு போல! அதை தான் இப்படி சொல்லுது. எனக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சிருக்குமா. முடிச்சிடலாம்" அவனின் தங்கை அமுதாவும் சொல்ல,

"அதில்ல டி! ஜாதகம் பாக்கணும். பொருத்தம் பாக்கணும்! எவ்வளவோ இருக்கு டி " அப்போதும் தயங்கினார் தனம்.

"மனப்பொருத்தம் நல்லாருந்தா போதாதாம்மா? உங்களுக்கு ஜாதகம் பொருந்தனும் அவ்ளோ தான? நான் பாத்துக்கறேன் விடுங்க! சந்திரனை மோதிரம், மத்த பூ பழம் எல்லாம் வாங்கிட்டு வர சொல்லிட்டேன். இன்னைக்கே நிச்சயம் செய்துக்கலாம்" ஒரேடியாக ஆதவன் பெற்றவளின் வாயை மூடியவன்,

"என்னம்மா என்ன சொல்றார் தம்பி" கேட்டு வந்த அம்மையப்பனிடமும்

"இன்னைக்கே நிச்சயம் செய்திடலாம்னு சொல்றாங்க அம்மா. நீங்க என்ன சொல்றீங்க மாமா" கேட்டு அவர் வாயை இரண்டாவது முறையாக பிளக்க வைத்தான்.

"என்னங்க! உடனேவா? எப்பிடிங்க " கேட்ட பார்வதியை அழுத்தமாக பார்த்தவன்,

"பின்ன நாங்க என்ன பிக்னிக்கா வந்திருக்கோம்? வந்து சும்மா போக?" அவரிடம் தொடங்கி,

"என்னங்க பொண்ணு பிடிச்சிருக்கு நிச்சயம் செய்றோம் சொல்றேன். என்னமோ அதிர்ச்சி ஆகறாங்க உங்க வீட்ல? இங்க தல நீங்க இல்லையோ " பார்வதியை உறைய வைத்து அம்மையப்பனை உரைக்க கேட்டான்.

அதில் ரோஷம் வர பெற்றவர் "கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்ட, போ போய் வந்திருக்கவங்களுக்கு பலகாரம் எடுத்துட்டு வா" மனைவியை கடிந்து அனுப்பியவர்

"அது ஒன்னுமில்லைங்க தம்பி! பொண்ணு பார்க்க மட்டும் தானே ன்னு சொந்தம் யாரையும் கூப்பிடல. அக்கம் பக்கம் சொன்னதோட முடிச்சிகிட்டோம். சொந்தம் மத்தியில நாளை பின்ன பேச்சு வரும் மூணு பொம்பள புள்ளைங்கள பெத்து வெச்சிருக்கமே, அவங்க அனுசரணை வேணுமே, அதான் யோசிக்கிறா போல " என்றார்.

"அதனால என்ன? நாங்களும் எங்களுக்குள்ள தானே வந்திருக்கோம். நமக்குள்ள நிச்சயம் முடிச்சிருவோம். அப்பறம் மேரேஜ் கிராண்டா வெச்சிடலாம் " அதற்கும் ஆதவன் தீர்வு சொல்ல,

"எப்பா! அம்மையப்பா! நீ என்ன இப்பிடி தயங்கற? தம்பி தான் தெளிவா சொல்லுதில்ல" பக்கத்துக்கு வீட்டு பெரியவர் ஆதவனுக்கு பரிந்துகொண்டு வந்தார்.

'வந்ததுலருந்து தொண தொணன்னு இருந்து, இப்போ தான் இந்த பெருசு நல்ல வார்த்தை பேசி இருக்கு' மனதில் நினைத்து ஆதவன் நல்பார்வை பார்த்து வைக்க, அந்த பெரியவர் சிரித்து வைத்தார்.

"என்னங்க கொஞ்சம் வறீங்களா" பார்வதி கணவரிடம் கிசுகிசுத்தவர், டீப்பாயில் பலகார தட்டை வைத்து நழுவ பார்க்க,

"பேசிட்டு இருங்க ஒரு நிமிஷம் இதோ வந்திடுறேன்" அம்மையப்பனும் மனைவி வால் பிடிக்க, இருவருக்குமே தன் மீது அதிருப்தி இருப்பது முகத்தில் தெரிந்தது.

அமர்ந்திருந்த வாக்கிலே நன்றாக நிமிர்ந்த ஆதவன் "நீங்க என்ன பேசினாலும் கவலை இல்லை. இன்னைக்கு நிச்சயம் நடந்தே தீரணும். இதை மனசுல வெச்சிகிட்டு போங்க ரெண்டு பேரும்" கடினமாக சொல்லி, அங்கிருந்த அனைவரையுமே ஒரு நொடி கதி கலங்க வைத்தான்.

குவியும்…
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom