சிங்கப்பெண்ணே !!!
ரம்மியமான மழை நாள் அன்று, ஆனால் அது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் ரம்மியம், அலுவலகத்துக்கு நனைந்து வந்து சேரும் சாதாரண கிளார்க் உத்தியோகத்தர்கள் வர்ண பகவானை திட்டாமல் இருக்க முடியாது. அப்படியான நாள் ஒன்றில் தான் பாதி நனைந்த புடவையை கூட கணக்கெடுக்காமல் கணனி முன்னால் அமர்ந்து வருட இறுதி கணக்குகளை சரி பார்த்துக் கொண்டு இருந்தாள் மதுமிதா . நடு முற்பதில் இருக்கும் அவள் , இரு குழந்தைகளின் தாய் என்று கூற முடியாதளவு அளவான தேகமும் சிவந்த நிறமும் உடையவள் ஆவாள்.
அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தவள் முன்னே வந்து நின்ற நித்யா "மது, அக்கவுண்ட்ஸ் பைலை எடுத்துக் கொண்டு உன்னை மேனேஜர் வர சொல்லி சொன்னார்" என்றதுமே அவள் மனமோ நின்று துடித்தது.
கிட்டத்தட்ட வயது ஐம்பதை நெருங்கும் மேனேஜர் ராஜ்குமாருக்கு இன்னும் இளம் வாலிபன் என்ற எண்ணம் மட்டும் ஆழ் மனதில் பதிந்து இருந்தது. அதுவும் மதுமிதா என்றால் காலிலேயே விழுந்து விடுவான். ஆனால் அவனுக்கோ அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் அனைத்து வசதிகளும் என கடவுள் அள்ளி அள்ளி கொடுத்து இருந்தான்.
பெண் பித்தனாக அவன் இருந்தாலும் தன்னுடைய நலன் கருதி அனைத்து பெண்களிடமும் அத்து மீற மாட்டான். எந்த பெண் தன்னை எதிர்த்து போர்க் கொடி தூக்க முடியாத நிலையில் இருக்கிறாளோ அந்த பெண்ணை சீண்டுவதே அவன் முழு முதற் கடமையாகும். சில நாட்கள் முன்னால் வறிய குடும்பத்து பெண்ணை சீண்டி அவள் வேலையை விட்டே நின்று விட்டாள். இப்போது அவன் அடுத்த இலக்கு மதுமதி. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்ன புதிதா? தங்கள் குடும்ப நிலை கருதி அது நான்கு சுவருக்குள் மறைந்து போவது தான் கசப்பான உண்மை ஆயிற்றே.
பாதையில் சுற்றி திரியும் வேலை வெட்டி இல்லாத ஆண்கள் மட்டுமல்ல டை அணிந்து வேலைக்கு செல்லும் முகமூடி போட்ட சில ஆண்கள் பின்னாலும் பெண்களை பாலியல் பொருளாக மட்டும் பார்க்கும் வக்கிர குணம் இருப்பது பலருக்கு தெரியாத உண்மை என்று தான் கூற வேண்டும். அதில் மேனேஜர் ராஜ்குமார் மட்டும் விதி விலக்கா என்ன? வெளியில் கண்ணியமாக ஆண் மகனாக இருப்பவன் மனமோ வக்கிரத்தின் உச்சத்தில் தான் திளைத்துக் கொண்டு இருந்தது.
நித்யா வந்து சொன்னதுமே மதுமதி முகம் இறுக , பெருமூச்செடுத்து கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்தவள் தனது தொலைபேசியையும் அவனிடம் கொடுக்க வேண்டிய கோப்பையும் எடுத்துக் கொண்டு அவன் அறையை நோக்கி நடந்தாள். அவள் தனது இருக்கையை தாண்டவில்லை பின்னால் இருந்த ஒரு பெண் மற்றைய பெண்ணிடம் "என்னடி நம்ம மேனேஜர் ரூமுக்கு அடிக்கடி போறத பார்த்தா பெரிய இடத்து சமாச்சாரம் ஒன்னு இருக்கும் போல" என்று கூற அது மதுமதி காதில் தெளிவாக விழுந்து அவள் மனதை கத்தி கொண்டு அறுத்து.
"பெண்ணுக்கு பெண் எதிரி என்று கணிக்காமலா சொன்னார்கள்?" என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. எதுவுமே தெரியாமல் இப்படி பேசுபவர்கள் உண்மையை சொன்னால் "உன் டிரஸ் தான் அவர் இப்படி பேச காரணம், " என்று சம்பந்தமே இல்லாமல் நேர்த்தியாக அணிந்து வரும் புடவையை கூட தமது வக்கிர புத்தியால் குறை கூறும் சமூகம் இது என்று அவள் அறியாமல் இல்லை.
அதனாலேயே அவளுக்கு நேர்ந்து வரும் கொடுமைகளை யாரிடமும் இது வரை பகிர்ந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தாள். ஆனாலும் மதுமதி மேல் படியும் ராஜ்குமாரின் ஏக்க பார்வைகளையும் கூட்டங்களில் மற்றயவர்கள் கூறும் பரிந்துரைகளை நிராகரிப்பவன் அவளிடம் மட்டும் வலுக்கட்டாயமாக பரிந்துரை சொல்ல சொல்லி வற்புறுத்தி அவள் கூறும் பரிந்துரையை புகழ்வதும் மற்றையவர்கள் கண்ணில் படாமல் போகுமா என்ன?
அதுவே அவள் மேல் பொறாமையை விதைக்க கண் காது மூக்கு வைத்து இப்போதே அலுவலகத்தில் சாடை பேச ஆரம்பித்து இருந்தார்கள்.
ஆனால் அவள் மனதுக்குள் வெந்து கொண்டு இருப்பது அவள் மட்டுமே அறிவாள். ஆண்கள் அன்பாக பேசினால் நல்லவர்கள் என்று நினைக்கும் பக்குவமடையாத பெண்ணல்ல அவள். பல இன்னல்களை தாண்டி வந்தவளுக்கு ராஜ்குமாரின் தேன் ஒழுகும் வார்த்தைகளின் பின்னால் இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் இல்லை. இது வரை அவனிடம் முடிந்த வரை விலகி இருந்தவளை இரு நாட்கள் முன்னால் அழைத்தவன் தனது மனதை வெளிப்படையாக உரைத்து விட்டான்.
இரு நாட்கள் முன்னர்,
"சார்" என்றபடி அறைக்குள் நுழைந்தவளை ஏறிட்டு பார்த்தவன் "ம்ம் வாங்க, இருங்க" என்று சொல்ல அவளும் அவன் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். முன்னால் அமர்ந்தவளது நெற்றியில் இருந்து மூக்கு கண் என்று ரசித்தவன் கண்கள் வஞ்சனை இன்றி கழுத்துக்கு கீழ் இறங்கி அவள் மார்பையும் ரசித்தது. அவன் பார்வையை அறிந்தவள் கூசி போக கையில் இருந்த கோப்பை மார்பின் முன்னால் பிடித்து மறைத்துக் கொள்ள அவனோ "எத்தனை நாளுக்கு மறச்சு வைக்கிறதா உத்தேசம்?" என்று கேட்க அதிர்ந்து போனது என்னவோ அவள் தான். அவன் மறைமுக பேச்சையும் மறை முக பார்வையையும் அறிந்தவளுக்கு அவனது வெளிப்படையான பேச்சுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று அப்போது தெரியவில்லை. அவனை அதிர்ந்து பார்க்க அவன் கண்ணில் இருந்தது என்னவோ காமம் மட்டுமே.
சில பெண்கள் தாறுமாறாக திட்டி விட்டு வந்து விடுவார்கள் ஆனால் சில அப்பாவி பெண்களுக்கு பேச கூட தெரியாத சந்தர்ப்பத்தில் பயமும் அதிர்ச்சியும் மட்டுமே அவர்கள் பார்வையில் நிலைத்திருக்கும். மதுமதி இதில் இரண்டாவது வகை.
தன்னை அதிர்ந்து பார்த்தவளிடம் "மது, என் பார்வை உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறன். நீயும் தனிமையில் இருப்ப, நானும் ஏங்கி போய் இருக்கேன்" என்று ஆரம்பிக்க "சார் இது தப்பு" என்றால் முதல் முறை தைரியத்தை வரவழைத்தவாறே.
அவனோ " இங்க பாரு மது, இது தப்பே இல்லை. நீ மட்டும் ஓகே சொல்லு உன்னை நான் ராணி போல வாழ வைக்கிறேன்.. இந்த ஆபிஸ் முழுக்க உன் கைக்குள் வச்சுக்கலாம்" என்று சொல்ல "ப்ளீஸ் சார் என்னால முடியாது" என்றவள் எழ போக "ரிலாக்ஸ் மது, ஒரு ரெண்டு நாள் யோசிச்சு பதில் சொல்லு, நான் வெய்ட் பண்றேன். அண்ட் இது நமக்குள்ள இருக்கட்டும். இந்த விஷயம் வெளிய போனா சேதாரம் உனக்கு தான்" என்று சிரித்தபடியே மிரட்டவும் அவன் தவறவில்லை. அவனை அழுத்தமாக பார்த்தபடி வெளியேறியவள் மனதில் ஆயிரம் யோசனைகள். ரெண்டு நாள் விடுப்பு எடுத்தவள் இன்று தான் அலுவலகத்துக்கு வந்து இருந்தாள். அவள் வந்ததை அறிந்தவன் மீண்டும் அவளை அக்கவுண்ட்ஸ் பைலுடன் அறைக்குள் அழைத்துக் கொண்டான்.
அவளும் "சார்" என்றபடி உள்ளே நுழைய, "மது கம் " என்று வாயெல்லாம் பல்லாக அழைத்தவன் முகமோ எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தது.
உள்ளே வந்தவள் அவன் முன்னால் இருந்த இருக்கையில் அமர , அவளை ரசித்தபடி அமர்ந்து இருந்தவன் "ரொம்ப மழை போல" என்றான் நனைந்து இருந்த அவள் புடவையை அழுத்தமாக பார்த்தபடி அவளோ பெருமூச்செடுத்து தன்னை தானே கட்டுப்படுத்தியவள் கையில் இருந்த கோப்பை அவனிடம் நீட்டி "சார் இந்த பைலை கேட்டீங்களா?" என்று கேட்க அதை வாங்கி ஓரமாக வைத்தவன் "அத பிறகு பார்த்துக்கலாம், முடிவு எடுத்துட்டியா?" என்று கேட்டான்.
அவளோ "என்ன முடிவு சார் ? புரியல" என்று சொல்ல அவனுக்கு கோபம் வந்தாலும் அதைக் காட்டி திரண்டு வந்த தாழியை உடைக்க விரும்பாதவன் "அது தான்" என்றான். அவளோ புருவம் சுருக்கி பார்த்து "கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்" என்று கேட்க "இவ எப்படி தான் ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டாளோ " என்று முணு முணுத்தவன் "இந்த வீகென்ட் என் கெஸ்ட் ஹவுஸுக்கு வர முடியுமா?" என்று கேட்க அவளோ "எதுக்கு சார்" என்று கேட்க அவனுக்கு தலையை எங்கேயாவது கொண்டு முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. இதற்கு மேல் மறைத்து மறைத்து பேச முடியாது என்று நினைத்தவனுக்கு அவள் துருவி துருவி கேட்பது சந்தேகத்தை உருவாக்க "என்ன ரெகார்ட் பண்றியா?" என்று கேட்டான். அவளோ "நான் ஏன் சார் ரெகார்ட் பண்ணனும்? நீங்க கேட்கிறதே புரியல" என்று சொல்ல "போனை கொடு" என்றவனிடம் அவளும் போனை நீட்டினாள்.
அவனோ அதை வாங்கி பார்க்க அதில் ரெகார்ட் செய்வதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. உடனே பெரு மூச்சு விட்டவன் "வெளிப்படையா கேட்கேன் மது, நீ செம செக்சியா இருக்க, ஐ வாண்ட் எ பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வித் யு" என்று சொல்ல அவளோ அவனை அழுத்தமாக பார்த்து "இல்ல சார் என்னால முடியாது. எனக்கு ஒரு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு,.... " என்றாள்.
அவனோ "எஸ்,அத தான் நானும் சொல்றன்,உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, சோ யோசிச்சு முடிவு பண்ணு , நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கிறன்.. ஈவினிங் முடிவு சொல்லணும்.ஆனா முடிவு ஆமா என்று தான் இருக்கணும் " என்றவன் கண்கள் மீண்டும் அவள் மேனியை தழுவ மேசையில் கை குற்றி எழுந்தவள் "ஈவினிங் பேசிக்கலாம் சார்" என்று சொன்னபடி வெளியேற அந்த காமுகனோ அவள் பின்னழகை ரசித்துப் பார்த்தான்.
வெளியேற போனவளை "மது பைலை எடுத்து போ" என்று சொல்ல அவளும் இறுகிய முகத்துடன் பைலை எடுக்க கையை வைக்க அவள் கை மேல் அவன் தனது கையை வைக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. அவனிடம் இருந்து கையை விரைவாக உருவிக் கொண்டவள் அவனை அனல் தெறிக்க பார்த்தபடி பைலை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேற அவனோ "மீன் என்றால் தூண்டிலில் சிக்க தானே வேணும்" என்று சொல்லிக் கொண்டான்.
தனது இருக்கையில் வந்து அமர்ந்த மதுமதிக்கோ மீண்டும் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. மனம் எல்லாம் தனது வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்ட இருக்கையில் சாய்ந்து கண் மூடி தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை மீட்ட தொடங்கினாள்.
பிளஸ் டூ படித்துக் கொண்டு இருந்த இளம் சிட்டு அவள். படிப்பில் விளையாட்டில் என அனைத்திலும் முதலிடம் வகிக்கும் கெட்டிக்காரி. அப்போது தான் பாடசாலைகளுக்கு இடையான மகளிர் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவியாக மதுமதி விளையாட சென்ற போது பி.டி மாஸ்டர் சுரேஷின் அறிமுகம் கிடைத்தது. வேறு பாடசாலையில் உடற்பயிற்சி ஆசிரியராக பணி புரியும் அவன் மதுமதியை பார்த்ததும் அவள் அழகில் விழுந்து விட்டான்.
உடல் பயிற்சி ஆசிரியர் என்றால் கேட்கவும் வேண்டுமா ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடல் கட்டுடன் இருந்தவன் மீது பெண்கள் பார்வை படியாமல் இருந்தால் அதிசயம் தானே. ஆனால் அவன் பார்வை படிந்தது என்னவோ மதுமதி மீது தான். அங்கு ஓய்வாக இருந்த சமயம் அவளிடம் பேச தொடங்கியவனுக்கு அவளை தனது வலையில் விழ வைப்பது பெரிய விடயமாக தெரியவில்லை. பெண்கள் அனைவரும் ரசிக்கும் ஒருவன் தன்னிடம் மட்டும் பேசுவது அப்போது விடலைப் பருவத்தில் இருந்தவளுக்கு பெருமையாக இருக்க அவளும் அவனிடம் பேச ஆரம்பித்தாள். அதற்கு ஏற்ற போல அவள் நண்பிகளும் "சார் எவ்வளவு அழகா இருக்கிறார், உன் மேல ஒரு ஐடியா இருக்குன்னு தோணுது. நீ லக்கி தாண்டி" என்று ஏற்றிவிட அவளும் அவன் மீது காதலில் சிறிதும் யோசனை இன்றி விழுந்து விட்டாள்.
அன்றைய நாளுக்கு பிறகு அவள் தனியார் வகுப்புக்கு செல்லும் இடங்களை அறிந்து கொண்டவன் அவள் வகுப்பு முடிந்து வரும் போது அவளுக்காக காத்து இருந்து காதலை வளர்க்க தொடங்க போன் வசதி இல்லாத அவர்கள் காதலும் நேரிலும் காதல் கடிதங்களிலும் வளர்ந்தது.
இப்படியே நாட்கள் நகர, சிறந்த புள்ளிகள் எடுக்க வேண்டிய அவளோ எடுத்தது சாதாரண புள்ளிகள் மட்டுமே. காதலில் திளைத்தவளுக்கு கல்வி ரெண்டாம் பட்சமாக போக கல்வியில் கோட்டை விட்டு விட்டாள். ஒரே பெண் குழந்தையான அவளையும் அவள் பெற்றோர் பெரிதாக கண்டிக்காமல் அவள் விருப்பப்படி முடிவெடுக்க அனுமதித்தார்கள். எங்கே அதிகம் படித்தால் தன்னை மதிக்க மாட்டாள் என்று அறிந்த அவள் காதலனும் ஒரு சாதாரண கோர்ஸ் செய்ய தனியார் வகுப்புக்கு சேர்த்து விட்டான். அங்கு கல்வி கற்றாலோ இல்லையோ காதல் பாடம் நன்கு கற்றுக் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக மதுமதியின் காதல் விடயம் அவள் தந்தையை அடைய அவளை நிதானமாக அழைத்து விசாரித்தார். அவளோ சுரேஷ் கொடுத்த தைரியத்தால் உண்மையை அவர்களிடம் கூறி விட்டாள். அவள் தந்தையும் நிதானமாக யோசித்தவர் "நான் அந்த பையனை பற்றி விசாரிச்சு பார்க்கிறேன்" என்று கூற அவளும் சந்தோஷமாக நாட்களை கடத்த தொடங்கி அலுவலகம் ஒன்றில் சாதாரண கிளார்க் வேலை ஒன்றுக்கும் சுரேஷின் சிபாரிசின் மூலம் சேர்ந்து விட்டாள். அவள் தன்னை விட உயர கூடாது என்று அவன் நினைத்தான் தவிர அவளை முழுதாக அடைத்து வைக்க அவன் யோசிக்கவில்லை. இது தான் கல்லுக்குள் ஈரமோ?
அதே சமயம் சுரேஷை பற்றி விசாரித்த அவள் தந்தைக்கும் நல்ல விதமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவன் அடி தடி என்று திரியும் ரவுடி என்று அறிந்தவர் அதிர்ந்து தான் போனார். அப்போது மகளை அழைத்து அவர் விடயத்தை கூறிய போது அவளும் அதை சுரேஷிடம் கூற அவனோ "நான் ரவுடி தான் , ஆனா உன்னை மட்டுமே நினைச்சுட்டு இருக்கிற ரவுடி" என்று காதல் வசனம் பேசி அவள் மனதை கரைத்தவன் "நமக்கு கல்யாணம் நடக்கலன்னா நீ எழுதுன காதல் கடிதத்தை ஊரே வாசிக்கும்" என்று மறைமுக மிரட்டலையும் விடுத்தான். அவளுக்கோ அவன் மேல் காதல் பெருக்கெடுத்து ஓட அவனை பிரிய அவளும் நினைக்கவில்லை. அவன் மிரட்டலை கூட துச்சமாக எண்ணியவள் "என் மேல் உள்ள காதலால் தானே இப்படி பேசுகிறார்" என்று பைத்தியகார தனமாக யோசித்துக் கொண்டாள்.
அவள் தந்தை அவ்வளவு கூறியும் அவள் பிடிவாதம் பிடித்து அவனை மணந்து கொள்ள ஆயத்தமானாள். அவள் தந்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் ஒத்துக் கொண்டது மகள் ஆசைக்காக மட்டுமல்ல சுரேஷ் ஆட்கள் வைத்து "குடும்பத்தையே கொளுத்தி விடுவேன்" என்ற மிரட்டல் காரணமாகவும் என்று அவர் மட்டுமே அறிந்த உண்மை. அவள் தாய் கெஞ்சி அழுதும் அவனை திருமணம் முடிக்க அவள் முடிவெடுத்தாள்.
திருமணம் அன்று அவள் அறைக்குள் வந்த அவளது தந்தை "எனக்கு மனசே கேட்கலாம்மா , நீ இப்போ சொல்லு கல்யாணத்தை நிறுத்துறேன்.. என் கண் முன்னாடி என் மகள் வாழ்க்கை அழிஞ்சு போறத பார்க்க முடியல " என்று கண்ணீர் வடிக்க அவர் மார்பில் சாய்ந்தவள் "நீங்க சுரேஷை தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க அப்பா, அவர் ரொம்ப நல்லவர்" என்றாள். மகள் வெகுளித்தனத்தை நினைத்து விரக்தி புன்னகை சிந்தியவருக்கு தெரியும் தான் திருமணத்தை நிறுத்தினால் கூட மகள் அவனுடன் சென்று விடுவாள் என்று. கடைசியாக குடும்ப மனதையாவது காப்பாற்றலாம் என்று நினைத்தவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.
திருமணம் முடிந்து அவர்கள் வாழ்க்கை தனி குடித்தனத்துடன் சிறப்பாக ஆரம்பமானது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல சுரேஷின் குணம் மோகம் தணிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்தது. கேரம் விளையாட ஒரு நாள் அவளை அழைத்தவன் அவள் வெற்றி பெற்றது பொறுக்க முடியாமல் கரம் பலகையை அடித்து உடைத்தது தனி கதை. கோபம் என்பது அவன் கூட பிறந்ததோ என்னவோ டி வி தொடக்கம் அனைத்தும் அவன் கோபத்துக்கு இரையாக அவள் மீதும் அவன் கை வைக்க தவறவில்லை. குடி, சிகெரெட், கெட்ட வார்த்தை பிரயோகம் என்று அவளுக்கு பிடிக்காத கெட்ட விஷயங்களை கூட சமூகத்துக்காக.சகித்துக் கொண்டாள். சமூகம் சமூகம் என்று வாழ்ந்தவள் தனக்காக வாழ மறந்து போனாள்.
அவன் கொடுமைகளை பொறுத்துக் கொண்டவளுக்கு அதை தனது வீட்டினரிடம் சொல்ல கூட அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் தந்தை அவ்வளவு அறிவுரை கூறியும் அவரை எதிர்த்து திருமணம் முடித்தாள் அல்லவா?
இப்படியே நாட்கள் நகர, அவளுக்கு முதல் குழந்தை கருவில் உருவான சமயம் அவன் அடாவடித்தனம் கொஞ்சம் குறைந்து போனது. அவளை கையில் வைத்து தாங்கவும் இல்லை அதே சமயம் கொடுமை படுத்தவும் இல்லை.
யாரையும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று அவன் கூறியதால் என்னவோ தனியாக தனது கர்ப்ப காலத்தை கடத்தினாள் மதுமதி. அதே சமயம் குழந்தையும் பிறந்து அவன் குணம் கொஞ்சமாக மாறிய போது அவள் நிம்மதியாக உணர்ந்தாள். முதல் குழந்தை மேல் எல்லை இல்லாமல் அவன் பொழிந்த பாசமே அந்த சந்தர்ப்பத்தில் அவளுக்கு போதுமானதாக இருந்தது.
இதே சமயம் சில வருடங்கள் கழித்து ரெண்டாம் தடவை அவள் கர்ப்பமான போது நான்கு வயசான குழந்தையை நர்சரிக்கு அழைத்து சென்றவன் மனம் நர்சரி ஆசிரியை மேல் ஈர்க்கப்பட்டது. கர்ப்பமான மனைவியை மறந்தவன் தனது காதல் வார்த்தைகளை அந்த ஆசிரியை மேல் வீச அந்த இளம் திருமணம் ஆகாத ஆசிரியையும் அவனுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவன் வலையில் விழுந்த ஆசிரியையுடன் அவன் தனது கள்ள காதலை வளர்க்க, அது கர்ப்பமாக இருந்த மதுமதி காதை அடைந்தது. அதைக் கேட்டு அவளோ கோபத்துடன் சண்டை போட அவளை ஓங்கி அறைந்தவன் "ஆமாடி, எனக்கு அவ கூட தொடர்பு, இருக்கு, நான் ஆம்பிள எப்படி வேணும்னாலும் இருப்பேன்" என்றவன் இரவு நேரத்தை கூட மனைவி குழந்தையை மறந்து அந்த ஆசிரியை வீட்டில் கழிக்க ஆரம்பித்தான்.
அவளால் அந்த சந்தர்ப்பத்தில் அழ மட்டுமே முடிந்தது தவிர அவனை எதிர்த்து போராடும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இருக்கவில்லை. தனது பிரச்சனையை யாரிடமும் சொல்ல கூட முடியாத நிலையில் தனக்குள் அழுது கரைந்தவள் நடைப் பிணமாக வாழ தொடங்கினாள். அவனை மீறி அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கோழையாகவே இருந்தாள்.. அப்போது தான் அவள் இரண்டாம் குழந்தையையும் பிரசவித்து இருக்க, வேலையாள் ஒன்றை அவளை பார்க்க நியமித்து இருந்தானே தவிர குடும்பத்தினர் யாரையும் அவளுடன் அளவுக்கு மீறி பேசவோ பழகவோ அனுமதிக்க வில்லை. அப்படி வந்து பார்த்தாலும் கூட, மூன்றாம் மனிதர்கள் போல பார்த்து விட்டு போவார்கள் தவிர மனதால் நெருக்கமாக அவனை மீறி அவளுடன் பேச பயந்து போனார்கள். அவளுக்கும் கூட அதே பயம் தான்.
இப்படியே நாட்கள் நகர, ரெண்டாவது குழந்தை பிறந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் அவன் ஏற்கனவே ஈடுபட்ட ஒரு அடிதடி சம்பவம் தொடர்பான ஒரு பிரச்சனையில் அவன் கடத்தப்பட, துடி துடித்து போனது என்னவோ மதுமதி மட்டும் தான். அவனுடன் சல்லாபித்த ஆசிரியையும் திருமணம் முடித்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருந்தாள். இது தான் ஆசை நாயகிக்கும் கட்டிய மனைவிக்கும் இடையான வித்தியாசம் போல..
தொலைந்த போன கணவனை தனித்து கண்டு பிடிக்க முடியாமல் தவித்தவள், பல வருடங்கள் கழித்து இரு குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் சென்று தஞ்சமடைந்தாள். அவள் தந்தையிடம் "அப்பா, அவருக்கு என்னாச்சுன்னு பாருங்க" என்று கதறி அழ தொடங்க அவரோ மனதுக்குள் "போய் தொலஞ்சுடானேன்னு சந்தோஷ படாம , அழுகிறாயேம்மா" என்று நினைத்தவர் அதை வெளியில் சொல்லவில்லை.
அவளும் குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு போலீஸ் நிலையம் என்று கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு மேல் ஏறி திரிந்த போதும் கூட எட்டு மாதம் கழித்து அவன் உடல் கூட கிடைக்காத நிலையில் அவன் இறந்து விட்டான் என்ற செய்தி மட்டுமே அவளை அடைந்தது. அவனுக்காக அழுது கண்ணீர் விட்ட ஒரே ஜீவன் அவள் மட்டுமே. அவன் கெட்டவனாக இருந்தாலும் அவன் மேல் அவள் கொண்ட காதல் உண்மை அல்லவா?
அதன் பிறகு விதவை கோலம் பூண்டவள் குழந்தைகளுக்காக வாழ தொடங்கினாள். அந்த சமயத்தில் தான் அவளது மூத்த பெண் குழந்தை பத்து வயதை அடைந்த போது அவர்கள் வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்த ஒரு பையனாலும் அவன் நண்பர்களாலும் கடத்தப்பட்டாள். "அம்மம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை" என்று பொய் சொன்ன அந்த பெயிண்ட் அடிக்கும் பையன் தெரிந்தவன் என்பதால் அவனுடன் பாடசாலையில் இருந்து வெளியேறியவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. விடயத்தை கேட்டு துடி துடித்த மதுமதி போலீஸ் ஸ்டேஷன் தொடக்கம் எல்லா இடங்களிலும் மகளை தேடி அலைந்து திரிந்தாள். அவள் வாழ்க்கையில் கண்ணீர் மட்டுமே எஞ்சி இருக்க கடவுள் அவளை மீண்டும் மீண்டும் சோதித்தனே தவிர அவளுக்கு நிம்மதி என்பதை கொடுக்கவே இல்லை.
குழந்தை விடயம் என்பதால் சி.ஐ,டி தொடக்கம் அனைவரும் மும்முரமாக ஈடுபட்ட போதிலும் கடத்தியவன் யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் போனது. அப்போது தான் மதுமதியின் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து மாறுபட்ட குரலில் இருபது லட்சம் காசு கேட்டான் கடத்தல்காரன்.
அவளும் போலீசிடம் விடயத்தைக் கூற அவர்கள் "நாங்க பார்த்துக் கொள்கிறோம் மேடம்" என்றபடி போன் நம்பரை வைத்து ஆட்களை தேட தொடங்கினார்கள் . அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றாவது கேஸ் மட்டுமே, ஆனால் அமதுமதிக்கோ கருவறையை அறுக்கும் வலி அல்லவா? உடனே போலீசிடம் "எனக்கு காசு போனாலும் பரவாயில்லை , என் குழந்தை வேணும்" என்று கூறி விட்டு நகை அனைத்தையும் ஈடு வைத்து காசை எடுத்தவள் தெரிந்தவர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் கேட்டு இருபது லட்சம் காசை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.
ஆனால் சதியோ விதியோ அடுத்த நாளே காலையில் ஒரு பாழடைந்த கிணற்றில் குழந்தையின் சடலம் ஒன்றை கண்டுபிடித்த போலீசார் மதுமதிக்கு அழைத்து சடலத்தை இனம் காட்ட சொல்லி வர சொல்ல அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள் அவள்.
அவளுக்கோ இதயத்தை யாரோ குத்திக் கிழிக்கும் வலி மட்டுமே எஞ்சி இருக்க நடைப் பிணமாக அந்த இடத்தை அடைந்தவள் மனமோ சடலத்தை கண்டதும் உயிருடன் மரித்துப் போனது. ஆம் அது அவளது அன்புக் குழந்தையே. உயிரற்ற பிணமாக படுத்து இருந்த தனது குழந்தையை கண்டு அன்னை அவளது கதறல் அந்த ஊரையே உலுக்கியது.
குழந்தையின் இறுதிச் சடங்குக்கு சென்ற என்னிடம் அந்த தாய் "என் மகளுக்கு வீணை பழக்கி விடுறேன்னு சொன்னியேம்மா, ஆனா இப்போ அவளே இல்லையே" என்று கேட்டு கதறியது இப்போதும் கூட எனது மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. அந்த இறப்பில் பல கதறல் மத்தியில் இந்த பிஞ்சை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்றே பலர் அங்கு வந்த போலீசாரிடம் கோரிக்கை வைக்க விரைந்து செயல்பட்ட போலீசார் இரு நாட்களில் குற்றவாளிகள் ஆறு பெயரை கைது செய்து இருந்தார்கள்.. அப்போது விசாரித்ததில் காசுக்காக கடத்திய அந்த இரக்கம் அற்ற ஜீவன்கள் அந்த குழந்தையில் வாயையும் கையையும் பாடசாலை சீருடையால் கட்டி மிகச் சிறிய மலசல கூடத்தில் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து இருக்கிறார்கள். அந்த பிஞ்சொ மூச்சு திணறி இறந்து விட ,அப்போதும் கூட இரக்கம் இல்லாமல் காசு கேட்டு போன் பண்ணி இருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல உடலானது துர் நாற்றம் வீச தொடங்க பயந்த அந்த வாலிபர்கள் அந்த குழந்தையை அருகே இருந்த கிணற்றில் போட்டு இருக்கிறார்கள்.
இதை கேட்டதும் அந்த குழந்தை பட்ட துன்பத்தை நினைத்து பொலிஸாருக்கே வலிக்க தொடங்க இதே போல கயவர்களை உயிருடன் விட கூடாது என்று நினைத்த போலீஸ் அதிகாரி அந்த கயவர்களை தப்பி ஓட முயற்சித்தார்கள் என்று கூறி ரோட்டில் வைத்து சுட்டுத் தள்ளி அந்த இறப்புக்கு நியாயம் செய்தார்கள். ஆனாலும் போன உயிர் திரும்பி வருமா என்ன? மூத்த குழந்தையை இழந்து நாட்களை கடத்திய மதுமதி இரண்டாவது பெண் குழந்தையை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க தொடங்கினாள். "யார் அழைத்தாலும் போக கூடாது" என்று கூறி தனது வளர்த்து வந்தாள். இப்பொது அவள் மகளும் வயதுக்கு வந்து பதின் வயதில் கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள். முதல் குழந்தை இறந்த சந்தர்ப்பதில் , கெட்டவனாக இருந்தால் கூட அவள் கணவன் சுரேஷ் பக்கத்தில் இருந்து இருந்தால் அவனையும் மீறி இப்படி நடந்து இருக்குமா? என்று நினைத்து அவனை இழந்ததுக்காகாவும் அவள் கண்ணீர் விட்டது என்னவோ உண்மை தான். கணவன் இறந்ததை கூட தாங்கிக் கொண்டவளுக்கு மகளின் இறப்பு மீளா துயராக இருக்க நான்கு சுவர் மட்டும் அறிந்த கண்ணீருடன் நாட்களை கடத்தி வந்தாள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் அலுவலகத்தில் இந்த மேனேஜரின் தொல்லை வேறு அவளை படாத பாடு படுத்தியது. அவள் தந்தையை தவிர அவள் சந்தித்த ஆண்களால் அவளுக்கு துன்பம் மட்டுமே இருந்து வர ரெண்டு நாள் விடுப்பெடுத்தவள் நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருந்தாள்.
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தவள் கண்களில் இருந்து தனது வாழ்க்கையினை நினைத்து கண்ணீர் வழிய அதை துடைத்தவள் பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்தாள். சற்று குனிந்து அணிந்து இருந்த மாலையினை தூக்கி பார்த்தவள் அதில் பொருத்தி இருந்த மைக்ரோ வீடியோ கமெராவை கழட்டி எடுத்து அதிலிருந்த சிப்பை கணணியுடன் இணைத்துக் கொண்டவள் அதில் ராஜ்குமார் பேசிய வக்கிர காணொளி பேச்சுக்களை கண்ணியில் சேமித்துக் கொண்டாள்.
பயந்து பயந்து, ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து அவள் கண்டது என்ன? மோசமான கணவன், அவன் இறப்பு, குழந்தையின் இறப்பு , போதாதற்கு பாலியல் தொல்லை வேறு, என்று அவள் இதுவரை அனுபவித்தது வலிகள் மட்டுமே. "ஆண்கள் அடிக்கும் போது திரும்பி அடித்தால் பக்கத்தில் வர பயப்படுவார்கள் ...இந்த தைரியமும் நம்பிக்கையும் தான் என் மகளுக்கும் தேவை. பிற்காலத்தில் அவளும் என்னை போல பயந்து வாழ கூடாது,, நான் செய்த தவறை என் மகள் செய்ய கூடாது. நான் அவளுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டவள் அந்த காணொளியை "செக்ஸுவல் ஹர்ராஸ்மென்ட் " என்ற தலைப்பில் மின் அஞ்சல் மூலம் தலைமைக் காரியாலத்துக்கு அனுப்பியவள் ஒரு பிரதியை போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பினாள்.
தலைமை காரியாலத்துக்கு மின்னஞ்சலை அனுப்பி சிறிது நேரத்தில் , ராஜ்குமார் அவசரமாக மதுமதியை கூப்பிட்டு அனுப்ப இந்த முறை அவள் பயந்து கொண்டு அவனிடம் செல்லவில்லை. தைரியமாக அவன் அறைக்குள் "சார் கூப்பிட்டிங்களா?" என்றபடி நுழைய அந்த ஏ,சி யிலும் வியர்த்து வடிய அமர்ந்து இருந்த ராஜ்குமார். "என்ன பண்ணி வச்சு இருக்க மதுமதி?" என்று சீறினான். அவளோ "என்ன பண்ணினேன் சார்?" என்று புன்னகையுடன் கேட்க "உனக்கு திமிர் கூடி போச்சா?" என்று ஆரம்பித்தவன் இது கோபப்படும் தருணமல்ல என்று உணர்ந்து கொண்டு " இங்க பாரு விருப்பமில்லன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே," என்று கேட்க "நான் சொன்னேன் சார், ஆனா நீங்க தான்" என்று இழுக்க அவனும் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு தான் இருந்தான். இப்போது அவள் கேஸை வாபஸ் வாங்க வேண்டியதே அவனுக்கு முக்கியமாக பட நிதானத்தை கடைப் பிடித்தவன் "ஓகே நடந்தது நடந்து போச்சு, ஐ அம் சாரி, இனி உன் பக்கமே வர மாட்டேன், இந்த ஆபீஸ் மேட்டர் நான் மேனேஜ் பண்ணிகிறேன், ஆனா இந்த போலீஸ் கேஸ் எல்லாம் வாபஸ் வாங்கிடு, உனக்கும் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கா, இப்படி போலீஸ் நிலையத்துல ஏறி இறங்குகிறது அவ எதிர்காலத்தை பாதிக்கும்" என்று நயவஞ்சகமாக பேச கேலியாக இதழ்களை வளைத்தவள் "இப்போ தானா சார் என் பொண்ணோட எதிர்காலம் நினைவு வந்திச்சு ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இத தானே நானும் சொன்னேன்.
வாழ்க்கையில் நல்லா அடிபட்டுட்டேன் சார், அதுவும் இந்த ஆம்பிளைங்களால நல்லா அனுபவிச்சுட்டேன். என் அப்பாவை தவிர ஒரு நல்ல ஆண்மகன் என் கண்ல இது வரைக்கும் படல , அடங்கி ஒடுங்கி இருந்து தான் என் மூத்த பொண்ணை இழந்தேன். அன்னைக்கே நான் ஆக்ரோஷமா இருந்து இருந்தா. "மதுமதி பொண்ணுடா அவ" என்று பயந்து என் பொண்ணு மேல் கை வைக்க அவன் யோசிச்சு இருப்பான். தனியா இருக்கிற பொண்ணு மேல கை வைக்க ஒவ்வொருத்தனும் பயப்படணும். அந்த பயத்தை நாம உருவாக்கணும். சமூகம் . பயம், , பெண்மை என்று ஒதுங்கி ஒதுங்கி போனா எல்லாரும் ஏறி மிதிச்சுட்டு தான் போவாங்க . மாறி அடிச்சா தெறிச்சு ஓடுவான். இப்போ நான் மாறி அடிக்க ஆரம்பிச்சு இருக்கேன்.
என் ரெண்டாவது பொண்ணையும் நான் இழக்க விரும்பல, இப்போ எங்க பார்த்தாலும் பொண்ணுங்களுக்கு பாலியல் கொடுமை தான், அத பார்த்து அவள் ஒடுங்கி போக கூடாது. என்னை பார்த்து எதிர்த்து நிற்க கத்துக்கணும்... . இப்போ நீங்க சொன்ன போல என் பக்கம் இனி நீங்க வரமாடீங்க, ஆனா இன்னொரு பொண்ணு பக்கம் போவீங்க, என்னை போல இன்னொரு பொண்ணும் பாதிக்கப் பட கூடாது சார், எல்லாத்துக்கும் மேல என் பொண்ணும் ஒரு காலத்துல வேலைக்கு வருவா , உங்களை போல இன்னொருத்தன் அவ கூட தப்பா நடக்க முயலலாம். ஆனா உங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தா அந்த இன்னோருத்தன் என் பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே பயப்படுவான். இப்போ சொல்றன் சார் இந்த மதுமதி மாறி இருக்கிறது என் பெண்ணுக்காக தான் சார், அவ எதிர்காலத்துக்காக மட்டும் தான் சார். இது தான் ஆரம்பம் .." என்றவள் திரும்பி வாசலை நோக்கி நடக்க அவள் நடையில் அப்படி ஒரு நிமிர்வு.
முற்றும்