Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சின்னத்தாயி - BALARAJ JAYAPRIYA

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
சின்னத்தாயி





“ என்னைக்கு உங்க அம்மா என்ன விட்டுப் போனாளோ அன்னைக்கே மனுஷங்க மேல இருந்த நம்பிக்கை எல்லாம் அடியோட அழிஞ்சு போச்சு. பாசம்,உறவு,பந்தம் எல்லாம் சினிமாவுக்கும் கவிதைக்கும் எழுதிவைத்த வார்த்தைகள் மட்டும்தான். தேவைன்னு போய் நின்னுட்டா வீட்டு கதவ மூடிட்டு ஒழிஞ்சிக்கிற கூட்டம் தான் இந்த காலத்துல அதிகமா இருக்கு. என்னதான் செய்ய இந்த மெஷின்களை என்னைக்கு கண்டுபிடிச்சாங்களோ அதில இருந்து மனுஷங்க மனசும் மெஷின் போல ஆயிடுச்சு.”





“ யாரதான் பழி சொல்றது? எல்லாமே கலிகாலம்! எனக்கு வேற எதுவுமே வேணாம் புள்ள. காலாகாலத்துல உன்னை யார் கையிலயாச்சும் புடிச்சுக் கொடுத்துட்டு அப்புறம் நான் கண்ண மூடிட்டனா அது போதும் புள்ள. “ என்று முணுமுணுத்தபடி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார் முத்துராசு. தந்தையின் புலம்பலைக் கேட்டு தலையை அசைத்தபடி எலுமிச்சைப்பழ நிறமாய் வயதுக்கு வஞ்சகம் இல்லாத வளத்துடன் விறகு வெட்டிக்கொண்டிருந்த சின்னத்தாயின் கண்ணுக்கு தெரியாமல் ஒரு சொட்டு கண்ணீர் அந்த இடத்தில் விழுந்து தொலைந்தது....





“ உன்னோட திரிஞ்ச புள்ளைங்க எல்லாம் கல்யாணம் முடிச்சு கையில ஒன்னும் வைத்துள்ள ஒன்னுமா திரியுதுங்க ஆனா உனக்கு ஒரு கல்யாணம் காட்சி நடக்க மாட்டேங்குதே! ஏன் தான் இந்த கடவுள் நம்மள மட்டும் இந்த அளவுக்கு சோதிக்கிறான்னு தெரியலையே” என்று மீண்டும் மீண்டும் புலம்ப கண்ணீருக்கிடையில் முத்துராசுவின் வார்த்தைகள் கரைந்து கரைந்து வந்தன.



தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட சின்னத்தாயின் அழுகை மீண்டும் மடை உடைத்தது.





இத்தகைய புலம்பல் இன்று நேற்றல்ல சின்னத்தாயின் தாய் இறந்ததிலிருந்தே இந்த புலம்பல் எட்டுத்திக்கும் இரைந்து கொண்டே தான் இருக்கிறது.





இவ்வாறு இவர்களின் வாழ்க்கை ஒரு புறமும் நிம்மதியின்றி ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்க ஊராரின் நாக்குகளும் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே சென்றது. ஆனால் அவை எதையுமே காதில் வாங்காது தான் உண்டு தன் மகள் உண்டு என்று தனது வாழ்க்கையை நடத்தினார் முத்துராசு. ஊராரின் பேச்சுக்கு செவி கொடுக்காத போதிலும் தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து மனதிற்குள்ளேயே நெகிழ்ந்து கொண்டிருந்தார் முத்துராசு.





இவ்வாறே காலமும் கடந்தது.......





ஒருநாள் முத்து ராசுவின் வீட்டருகே வழமைக்கு மாறாக காகம் கரைந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட முத்துராசு “என்ன புள்ள இன்னிக்கு புதுசா நம்ம வீட்டு கிட்ட காக்கா இம்புட்டு நேரமா கரையிது? நம்ம வீட்டுக்கு விருந்தாளிக யாரும் வரப்போறாங்களோ? என்று கூறிவிட்டு சீ! சீ! நம்ம வீட்டுக்கு எல்லாம் எங்க விருந்தாளி வரப்போகுது என்று முகம் சுளித்து தனக்குத்தானே கூறிக் கொண்டார் முத்துராசு.





அவ்வாறு கூறியபடியே குலைத் தள்ளி இருந்த வாழையின் இலைகளை கத்தியால் கழித்துக் கொண்டிருந்தார் முத்துராசு.



அவ்வாறு நேரமும் கடந்தது........





காலையில் கிழக்கில் உதித்த சூரியன் மெது மெதுவாக நகர்ந்து வானில் உச்சியில் பல் காட்டிக்கொண்டிருந்தது.





உச்சி வெயில் மண்டையைப் பிளக்க கலைப்பில் பெருமூச்சு வாங்கியபடி தரையில் அமர்ந்தார் முத்துராசு.சின்னத்தாயி முத்துராசுவுக்கு நீர் எடுக்க உள்ளே சென்றுவிட்டாள்.





சில நிமிடங்கள் கடந்தது..........





அப்போது அவ்வழியே அறியாத சில புதுமுகங்கள் நடந்து வருவதை முத்துராசு கவனித்தார். பிறகு “ஏ புள்ள சின்னத்தாயி இங்க கொஞ்சம் வா” என உஷ்ண குரலில் சின்னத்தாயை அழைத்தார் முத்துராசு.





பின்னர் சின்னத்தாயும் தந்தையின் அழைப்பைக் கேட்டு குவளை நீரை தரையில் சிந்த விட்டபடி விரைந்து வந்தாள்.





“என்னப்பா? எதுக்கு கூப்புட்டிங்க?” என்று சின்னத்தாயி கேட்டாள்.





“ அங்க பாரு புள்ள புதுசா யாரோ வாறாங்க உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா?” என்று சின்ன தாயிடம் கேட்டார் முத்துராசு.





“ எனக்குத் தெரியாது அப்பா. நான் இதுவரைக்கும் இவங்கள கண்டதே இல்லை. பக்கத்து தெருவுக்கு எதுவும் போவாங்களா இருக்கும்.” என்று கூறி சின்னத்தாயி கொண்டு வந்த நீரை முத்துராசுவிடம் கொடுத்தாள்........





முத்துராசு நீரை அருந்தி விட்டு மிச்சம் இருந்த வேலைகளை செய்வதற்கு ஆயத்தமாகினார். அப்போது பக்கத்து தெருவுக்கு செல்வோர்கள் என்று நினைத்த புதுமுகங்கள் முத்துவின் வீடு நோக்கி வந்தன.





முத்துராசு அவர்களின் வருகையை பார்த்து திடுக்கிட்டுப் போனார். “ யார் ஐயா நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று முத்துராசு கேட்க, அவர்கள் நாம் உங்கள் மகளை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். அந்த ஒரு நொடியில் சொர்க்கத்தையே எட்டிப்பிடித்த சந்தோஷம் பொங்கியது முத்துராசுவிற்கு....





பிறகு சின்ன தாயிடம் சம்மதம் கேட்டு திருமணம் தொடர்பான எல்லா விடயங்களையும் பேசி முடிக்க, மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக அதிக பணத்தை எதிர்பார்த்தனர். அதிர்ச்சியில் ஆழ்ந்த “முத்துராசு கால்களில் பாம்பு சுற்றியது போல் இருந்தது.” என்னசெய்வதென்று அறியாமல் தன் மகளின் வாழ்க்கையை எண்ணி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் முத்துராசு.





அவ்வாறே சில மாதங்கள் கடந்தோடின....

கல்யாணத் திகதியும் முன்னோக்கி வந்து கொண்டிருந்தது...





தம்மால் முடிந்தவரை பணத்தை புரட்டியும், மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைப் புரட்ட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்த கண்ணீர் வடித்தார் முத்துராசு. பிறகு தண்ணீரில் ஊறிய கண்களை மெல்ல துடைத்துவிட்டு, அழுத அடையாளங்களை அழித்து விட்டு, எதிர் வீடு நோக்கி நடந்தார் முத்துராசு.





கால்களுக்குள் ஏதோ குறுகுறுப்பு!





மனசுக்குள் பரபரவென்று பரவும் ஒரு மின்சாரம்.





வாசலை மிதித்த போது அழுத்தியது ஒரு சோகம்.





வாசல் கடந்து, படிகள் உயர்ந்து, நிலைப்படி அடைந்து, முத்துராசு வீட்டுக்குள் தன் பார்வையை வீசியபோது, இடக்கையில் மணி அடித்து, வலக்கையில் கற்பூர கரண்டி ஏந்தி, சாமி படத்துக்குச் சுற்றிக்கொண்டிருந்த கவுண்டர் தீபம் காட்டிக்கொண்டே யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்.





கதவுக்கும் வலிக்காமல் காதுக்கும் வலிக்காமல் முத்துராசு மெல்ல தட்டினார் கதவை.





பக்கவாட்டில் திரும்பிய கவுண்டர் முத்துராசுவை பார்த்ததும் கற்பூர கரண்டியும் மணியையும் ஓரத்தில் வைத்து விட்டு அவரை நோக்கி வந்தார்.





“என்ன முத்துராசு இந்தப்பக்கம் வந்துருக்க? என்ன விஷயம் சொல்லு” என்றார் கவுண்டர்.





முத்துராசு கூனிக்குறுகி தன் மகளுக்கு கல்யாணம் வைத்திருப்பதாகவும், கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்றும் கேட்டார். கவுண்டரும் சரி தான் தருவதாகக் கூறி கடனாக பணத்தை முத்துராசுவிற்கு கொடுத்தார்.





முத்துராசு கவுண்டரின் கால்களில் வெட்டப்பட்ட வாழையாய் விழுந்தார். தனக்கு செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறி பணத்தை எடுத்துக்கொண்டு வீடு சென்று கல்யாண வேலைகளை செய்யத் துவங்கினார்.





அவ்வாறே சில நாட்கள் கடந்து கல்யாண திகதியும் வந்தது...





ஒரு வழியாக சின்னத்தாயின் திருமணத்தை முடித்து வைத்து மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணை பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்தார் முத்துராசு. சின்னத்தாயோ தந்தையைப் பிரிய மனமின்றி உள்ளம் உருகியபடி மாமன் வீடு நோக்கிப் புறப்பட்டாள்.





முத்துராசு சோகத்தில் சிதறிய இதயத்தை இணைத்து, வேதனையை மறைத்து இலேசாக புன்முறுவல் செய்தார். சின்னத்தாயும் தந்தையின் புன்முறுவல் கண்டு மனதை தேற்றிக் கொண்டு புறப்பட்டாள்.





பிரிவுத் துயர் தாங்காது நீண்ட நாட்களின் பின் தன் மகளைப் பார்க்க செல்ல ஆயத்தமானார் முத்துராசு.





வெறுங்கையோடு செல்ல மனமின்றி சின்னத்தாயிக்கு பிடிக்குமென்று பிட்டு செய்து வீட்டின் முன் நீண்டு வளர்ந்திருந்த வாழைக் குருத்தை வெட்டி எடுத்து பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டார் முத்துராசு.







பேரூந்து பயணம் தொடர்ந்தது...





தன் பார்வையை இயற்கையின் வழியில் செலுத்திவிட்டு மனம் முழுதும் தன் மகள் சின்னத்தாயை நினைத்தபடி பயணம் செய்கிறார் முத்துராசு.





அவ்வாறே தன் மகள் வாக்கப்பட்டு சென்ற அட்டணம்பட்டியை அடைந்தார் முத்துராசு. தன் மகளை காணப்போகிறோம் என்ற பேரானந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறார் முத்துராசு.





விரைந்த நடையில் வீட்டை அடைந்தார் முத்துராசு.





வீட்டு வாசல் அருகில் சென்ற முத்துராசுவிற்கு பேரதிர்ச்சி ஆமாம், வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் சிதறி தலைகீழாய் கிடந்தது. என்ன நடந்திருக்கும் என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் முத்துராசு....





திடுக்கென்று ஒரு சத்தம், ஆழ்ந்த யோசனையில் இருந்த முத்துராசு பழைய நிலைக்கு திரும்பினார். வீசப்பட்ட காகிதமாய் சுவரில் மோதி வந்து விழுந்தால் சின்னத்தாயி. அதனைக் கண்ட முத்துராசு விழிகள் பிதுங்கி “சின்னத்தாயி! சின்னத்தாயி!”என்று பலத்த சத்தத்துடன் கதறியபடி ஓடினார்.





சுவரில் மோதி விழுந்த சின்னத்தாயி தன் தந்தையின் முகம் கண்டு “அப்பா! அப்பா!” என்று குலுங்கி குலுங்கி அழலானாள்.





சுவரோடு சுவராக தேய்ந்து, தரையோடு தரையாய் தாழ்ந்து குத்தவைத்துக் குமுறினாள்...





“ கல்யாணம் கட்டிக் கொடுத்ததுக்கு அப்புறம் உன்னை நான் இந்த கோலத்தில் பார்ப்பேன்னு நினைக்கலையே சின்னத்தாயி” என்று முத்துராசு கண்ணீரோடு கூறினார்.





ஆமாம். முத்துராசு நினைத்தபடி சின்னத்தாயி சந்தோஷமாக இல்லை. அவளது கணவன் ஒரு மது மன்னன்.எந்நாளும் அளவில்லாமல் குடித்து விட்டு சின்னத்தாயை துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் தான் அவனின் பொழுதுபோக்காக இருந்தது. அது மட்டுமின்றி அவள் மீது சந்தேகம் கொண்டு விலைமகள் என்று பட்டம் சூட்டினான்.





அன்று அந்த காட்சியை நேரடியாக கண்ட முத்துராசு நெஞ்சுடைந்து போனார். ஆவேசத்தில் எழுந்து முத்துராசு இனிமேல் உனக்கு இப்படி பட்ட வாழ்க்கை தேவை இல்லை என்று கூறி தன் மகள் சின்னத்தாயை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டார்...





அவ்வாறே சில நாட்களும் கடந்தன....





நாட்கள் நீள நீள ஊராரின் நாக்குகளும் நீண்டன. ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு உலகின் வாயில் இரட்டை நாக்கு என்பது உண்மைதான் போலும். ஏனென்றால் சின்னத்தாயி புகுந்த வீட்டில் இருந்து வந்து பிறந்த வீட்டிலேயே இருப்பதை அறிந்த ஊரார் ஏளனமாக பேசியது மட்டும் இல்லாமல் அவளின் நடத்தையையும் விமர்சிக்கத் தொடங்கினர்.





சின்னத்தாயின் விளிம்பில் ஒட்டியிருந்த உயிரும் அருந்தது. ஆனால் முத்துராசு தன் மகளைப் பார்த்து “கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் தன் நிழல் பார்த்து தானே குறைக்கும்” என்று ஆறுதல் கூறினார்.





தன் மகளுக்கு ஆறுதல் கூறிய முத்துராசு தனக்கு ஆறுதல் கூறிக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளானார். மனதிலிருந்து வேதனை நாளுக்கு நாள் அதிகரிக்க அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் முத்துராசு கண்ணை மூடிட சின்னத்தாயோ புத்தி மழுங்கிப் போனால்.





தந்தையின் பிரிவுத் துயரில் ஆழ்ந்து போயிருந்த சின்னத்தாயி கண்ணீரில் தரையை குளிக்க விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அவளது நிலைமை வாழ்வா? சாவா? என்ற இரண்டு முடிவுகளில் தான் இருந்தது. ஆனால் எடுத்த முடிவோ மரணம்...





ஒரு வினாடி! ஒரே வினாடி தாய்மையின் தவிப்பும்; பெண்மையின் தவிப்பும் வந்து அவள் கண்களில் விக்கியது.





ஆமாம், சின்ன தாயின் வயிற்றில் தன் குடிகார கணவனின் கரு ஒன்று உயிர் பெற்றிருந்தது. அக்கருவின் இடத்தே...





“ போய் வருகிறேன் கண்ணே! இல்லை, ஜென்மங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. போகிறேன் கண்ணே! என்னை சுமந்த தாய் தந்தையே! உள்ளுக்குள் உயிர் வளர்த்த காற்றே! எது வாழ்க்கை என்பதையும், எது வாழ்க்கை இல்லை என்பதையும், சொல்லிக் கொடுத்த மனிதர்களே! என்னை நோக்கி மரணம் அல்லது மரணத்தை நோக்கி நான்.” என்று கூறி தன் உயிரை விட்டாள் சின்னதாயி.





எல்லா பெண்களினதும் யதார்த்த வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்த சின்னத்தாயின் மரணம், அவளின் உள்ள உணர்ச்சிகளின் மௌனம் கிழித்த அற்ப மானுடங்களை நடந்த இடத்தில் நிறுத்தி நின்ற இடத்தில் திரும்ப வைத்தது.



சீதை மீது படிந்த சந்தேக அழுக்கை சலவை செய்ய ராமன் அவளை தீயில் இறக்கினான். சீதை மட்டும் அன்று ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தால், உன்னை பிரிந்து இருந்த காலத்தில் என் கற்புக்கு இழுக்கு நேர்ந்திருக்குமோ என்று என்னை தீக்குளிக்கச் சொல்லும் இராமனே நீ ஏகபத்தினி விரதனாயிற்றே, நீ என்னை பிரிந்திருந்த காலத்தில் உன் கற்பு சத்தியமாய் வழுக்கவில்லை என்பதற்கு சாட்சி இருக்கின்றதா? வா! தீயில் இரண்டு பேரும் சேர்ந்து இறங்குவோமா? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தால் சின்னத்தாயி போன்ற சீதைகள் வழி வழியே சீரழிந்திருக்க மாட்டார்கள்.
 
Top Bottom