சிவனேஸ்வரன் வீசியைத்தேடி புத்தகக்கடைக்கு வந்த போது புதிதாக வந்திருந்த புத்தகங்களை எல்லாம் வகை பிரித்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான் அவன்.
"வீசி.. வீசி.." என்று அழைத்துக்கொண்டே வந்து மூன்றாவது கட்டுக்குள் அவனை சந்தித்தவன், "டேய் ஒரு ஹெல்ப் டா" என்று அவசரக்கதியில் கூறினான்.
"ஹெல்ப்பா? சொல்லுடா என்ன புக் கண்டுபிடிச்சு கொடுக்கணும்.. ஃப்ளூயிட் மெக்கானிக்சா? எது?.."
"டேய்! அதெல்லாம் இல்லடா.. இது வேற ஹெல்ப்.."
"வேற ஹெல்ப்?.. ஒரு தடவை விஸ்கி வாங்கிட்டு வர சொன்னியே.. அது மாதிரி எதுவும் வாங்கிட்டு வரணுமா?"
"பாத்தியா?.."
"எல்லாம் அனுபவம் பேசுதுடா.."
"நான் தான் அப்போவே அதை குப்பைத்தொட்டியில போட்டுட்டேன்னு சொன்னேனேடா.."
"இன்னும் மறைவா சிகரெட் பிடிக்கிறதை விடலையே.."
"அட! அதெல்லாம் ஒரு காரணமாத்தான்டா.."
"சரி சொல்லு! என்ன ஹெல்ப்"
"அது நெஸ்ட் வீக் எனக்கு மாடல் எக்ஸாம்டா.."
"சரி.."
"இவ்வளவு நாள் நான் என் மாமாப் பொண்ணுக்கு ட்வெல்த் மேத்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.."
"ஆமா சொன்னியே.. தடுமாற்றமா இருக்குன்னு.."
"ம்ம், இப்போ அவளுக்கும் ரிவிஷன் எக்ஸாம் டா.. ஒரே டைம்ல எங்க ரெண்டு பேருக்கும் எக்ஸாம் வந்திட்டதால எனக்கு இப்போ அவளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத நிலைமை.. நீ தான் இதுல இப்போ எனக்கு உதவி பண்ணனும்டா"
"நான் என்ன பண்ண முடியும்?" தோள்களை குலுக்கினான் வீசி.
"புரியலை?" என்பது போல் பார்த்தான் சிவனேஸ்வரன்.
வீசி மூளையில் மின்னல் வெட்டிய அடுத்த நொடி, "டேய்! இந்த புக் ஸ்டாலை விட்டு என்னால எங்கேயும் நகர முடியாதுன்னு உனக்கு தெரியுமில்ல?.." என்றான்.
"ம்ம் தெரியும், அதுக்குத்தான் அவங்களை இங்க வர சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.."
"அதெல்லாம் சரிபட்டு வராதுடா.. நீ வேற ஆளை பார்த்துக்கோ.."
"டேய் ப்ளீஸ் டா.. உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா?.. வெறும் ரெண்டு வாரத்துக்கு மட்டும் தான்டா.."
புத்தகத்தை வகை பார்த்து அங்குமிங்குமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபடியே அலுத்துக் கொண்டான் வீசி. "உன்னோட ஒரே ரோதனையா போச்சுடா.."
"உனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே நான் தான்டா.. பழசெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோ.."
"டேய்! நான் பாட புத்தகத்தை தொட்டே மூணு வருஷம் ஆகுதுடா.. எல்லாம் டச் விட்டுப்போச்சு.."
"அதெல்லாம் ஒன் டைம் பார்த்தா ஞாபகம் வந்திடும் வீசி.. உன் நோட்ஸ் எல்லாம் தான் வீட்டுல இருக்குமே.. அம்மா பத்திரமா எடுத்து வச்சிருப்பாங்களே" எனவும்,
கொஞ்சம் யோசித்தவன், "டேய் ப்ளீஸ் டா.. இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்குடா.." என்றவனின் அனத்தலில், "உன் வாழ்க்கையுமா?" என்றான்.
"ம்ம், இப்போ நீ சொல்லிக் கொடுக்க ஒத்துக்கிட்டா தான் ரெண்டு வாரத்துக்கப்புறமும் ஷ்ரதா தொடர்ந்து எங்க வீட்டுக்கு படிக்க வருவா.. இல்லைன்னா மாமா வேற யாரையாவது கோச்சிங் கொடுக்க கூப்ட்டுட்டு வந்திருவாரு.."
"என்னடா நீ.. சரி, வரச்சொல்லு.. ஆனா சரியா ஒன்றரை மணிநேரம் தான் கிளாஸ்.. மோகன் அண்ணா சாயங்காலம் சிக்ஸ் டூ செவன் தேர்ட்டி கடையில இருக்க மாட்டாரு.. அந்த டைம் அவளை வரச் சொல்லு.."
"ம்ம் சொல்றேன் டா.. தான்க்யூ ஸோ மச் டா.. அப்படியே அவ கூட அவ ப்ரெண்ட் ஒரு நந்தியும் வரும் வீசி.."
"டேய் சிவா, எத்தனை பேருடா?.. ஒழுங்கா சொல்லு?"
"ப்ளீஸ் ப்ளீஸ்டா.. அவ மட்டும் தான்டா" என்று கெஞ்சினான் சிவனேஸ்வரன். வீசியும் ஈடுபாடின்றி சரியென்றான்.
அப்போது ரொம்ப மனநிறைவாக உணர்ந்தான் சிவனேஸ்வரன். இந்த உலகிலேயே அவனுக்கு ரொம்ப உத்தமனாகப்பட்டவன் வீசி மட்டும் தான். அவன் நிச்சயமாக ஷ்ரதாவிடம் கல்மிஷப் பார்வையோ கேலிப்பேச்சோ வைத்துக்கொள்ள மாட்டான் என்று நம்பினான் அவன். பெண்கள் என்றாலே அவனுக்கு கூச்சம் என்று தெரியும். ஆனாலும் வீசி பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானவன் ஆயிற்றே என்று மட்டும் பயந்தான்.
ஆம், அவன் பயப்படுவதிலும் அர்த்தமுண்டு. வீசி சிரித்தால் மன்மத லட்சணமாக இருக்கும். அவன் சிரிப்பின் முன் அலைபாயுதே மாதவனே தோற்றுப்போவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த இக்கட்டில் சிவனேஸ்வரன் தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான். "இருக்கட்டும்! நண்பனான என்னிடமே இதுவரை நூறு முறைக்கு கீழே தான் வீசி சிரித்திருப்பான்.. ஆகையால் சிரிப்பதற்கு வாய்ப்பில்லை. சிரித்தாலும் அவன் சிரிப்பில் ஷ்ரதா விழ அறிகுறியில்லை' என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.
மேலும் வீசிக்கு மேல் வர்க்கத்தினரைக் கண்டாலே ஆகாது. இவ்வழமையால் அவன் ஷ்ரதாவிடம் நற்பெயர் சம்பாரிப்பது கடினமே என்று கருதிக்கொண்டான்.
முடிவாக 'நண்பனின் காதலியை கைப்பற்றும் அளவிற்கு வீசி வஞ்சகன் அல்ல' எனும் நம்பிக்கையே அவனுக்கு பெரும் ஆறுதலை தந்தது.
மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்ற சிவனேஸ்வரன், ஷ்ரதாவை சந்தித்த நாளில் அடுத்தக்கணமே விஷயத்தை அவளிடம் தெரிவித்தான். அவள் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிகாட்டவில்லை. ஆனால், 'வேண்டாம் அத்தான்' என்று மட்டும் மறுதலித்தாள்.
அவன் அரும்பாடுபட்டு கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுக்கு அவளுக்கு தன்னை விட்டு செல்வது பிடிக்கவில்லை என்பதே திருப்திகரமாக இருந்தது.
ஷ்ரதாவிற்கோ வீசியை எதிர்கொள்வதென்பது சவாலாகத்தான் பட்டது. இதை விட ஒரு அவஸ்தையை தான் தன் வாழ்நாளிலேயே சந்திக்க முடியாது என்று எண்ணிக் கொண்டாள்.
"என்னை கூமுட்டையாக நினைப்பார்" என்று பல் விளக்கும் போது பாத்ரூம் கண்ணாடி பார்த்து சொன்னாள்.
"அவர் முன்பு போய் எப்படி இது தெரியவில்லை, எனக்கு அது புரியவில்லை என்பேன்?.. நிச்சயம், ஏய் மக்கு! உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது என்று கோபிப்பார்" தலை பின்னும் போது அவள் பின்னல் தப்பாய் போனது.
"இது கூட உனக்கு தெரியாதா என்று நிச்சயம் மட்டம் தட்டுவார்" - "சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது தட்டைப் பார்த்து என்ன புலம்பல்?" என்ற மீனாட்சியின் அதட்டலில் ஸ்பூனிலிருந்த பொங்கல் வாய்க்குள் போனது.
"இந்த அத்தான் ஏன் இப்படி அவரிடம் போய் என்னை கோர்த்து விட்டார்?. முருகா, ப்ளீஸ் எனக்கொரு வழி சொல்லு"- "என்ன ஷ்ரதா, பரீட்சை அன்னைக்கு கூட நீ இப்படி வேண்டி பார்த்ததில்லையே.. அப்படி என்ன வேண்டுற முருகன்கிட்ட?" தோள் தொட்டாள் தாரிணி சந்து.
ஆனால், தலையெழுத்து படி அவள் வீசியை நேரில் சென்று சந்திக்கும் படி தான் நிகழ்ந்தது.
சம்பவம் அன்று மாலையில் ஷ்ரதா சீருடையை களைந்துவிட்டு, புதிதாக எடுத்திருந்த பிஸ்தா பச்சை குர்த்தியையும், பழுப்பு பச்சை பட்டியாலாவையும் அணிந்து கொண்டாள். கிளம்பும் அவசரத்தில் அவள் வலப்புற தோளில் ஒழுங்கின்றி தொங்கிக் கொண்டிருந்தது பழுப்பு பச்சை துப்பட்டா. இடப்புற தோளில் தன் நீளப்பின்னலை வழிய விடுவது அவள் திட்டமாக இருந்தது.
அதிக மெனக்கெட்டு கண்ணில் இரண்டுமுறை காஜலைத் தீட்டினாள். பிறகு கண்ணாடியில் பார்க்க தன் அலங்காரம் மனநிறைவாக இருக்கவும் கீழே புறப்பட்டு வந்தாள்.
இவ்வளவு நாளில் இல்லாமல் இன்று அவள் அதிக சிரத்தையெடுத்து கிளம்பியிருந்தது அவளை உற்றுப் பார்க்க வைத்தது அவளது உற்றத் தோழியை.
காரணம் கேட்டதற்கு அது இதுவென்று மழுப்பிவிட்டாள் ஷ்ரதா.
புத்தகக்கடையை நெருங்க நெருங்க அவள் நடை அன்ன நடையானது.
அவள் அகப் போராட்டம் புரியாமல், "வேகமா வா ஷ்ரதா" என்று துரிதப்படுத்தினாள் தாரிணி சந்து.
இருவரும் சரியாக ஆறுமணிக்கு, 'ஷ்ரதாஞ்சலி புக் ஸ்டால்' என்று பெரிதாக பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருந்த அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.
வீசி முதலில் தாரிணி சந்துவை மட்டும் பார்த்துவிட்டு, "என்ன புக் வேணும்?" என்று எழுந்து நின்றான். வாடிக்கையாளர்கள் என்று நினைத்துக் கொண்டான் போலும்.
சுவாச ஓட்டம் அதிகமாகியது ஷ்ரதாவிற்கு. உடலின் உஷ்ணம் கூடி காய்ச்சல் வரும் போல் இருந்தது.
தாரிணி துடுக்காக, "சார், நாங்க டியூசனுக்கு வந்திருக்கோம்" என்றாள்.
"ஆமா! ஆமா! சிவனேஸ்வரன் சொன்னான்.. வாங்க!" என்று உள்ளே அழைத்துச் சென்றவன் புத்தகம் படிக்க போடப்பட்டிருந்த வட்டமேசை நாற்காலியில் இருவரையும் அமர சொன்னான்.
எதிர் சுவரில்,
"தலை குனிந்து என்னைப் பார்.
உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன்.
-புத்தகம்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இன்னொரு பக்கம்,
"ஆயிரமாயிரம் கருத்துகள் உள்ளிருப்பினும், மூடிக்கொண்டு அமைதியாய் தான் இருக்கின்றன புத்தகங்கள்" என்று இருந்தது. வாசித்துவிட்டு நாசுக்காக சிரித்துக் கொண்டாள் ஷ்ரதா.
"ம்ம் சிவா சொன்னான்; மேத்ஸ்ல தான் நீங்க வீக்குன்னு.. எக்ஸாம் எப்போ ஸ்டார்ட் ஆகுது?"
"கம்மிங் மண்டே சார்.."
"ஓஹ் ஒரு வாரம் இருக்கா?.. சிவாவுக்கு தான் இன்னைக்கு எக்ஸாம் இல்ல?.."
"ம்ம்.."
"சொல்லுங்க இன்னைக்கு என்ன ஹோம் ஒர்க்?" என்று கேட்டவன் அதற்கும் தாரிணியே பதிலளித்து தன் புத்தகத்தை எடுத்து நீட்டவும், எடுத்துக்காட்டு கணக்குகளை வைத்தே பயிற்சி கணக்குகள் முழுமையும் போட்டு முடித்தான்.
அவனின் இந்த அயற்சியிலா செயலில் ஷ்ரதாவும் தாரிணியும் கண்சிமிட்டும் சிலைகளாகினர்.
இந்தியக் குழந்தைகளை பொறுத்தவரை பயிற்சி கணக்குகள் என்பது அநியாயத்தின் கருப்பை. ஐம்பதையும் ஐம்பதையும் கூட்டினால் எவ்வளவு என்பது எடுத்துக்காட்டு கணக்காக இருந்தால், நிச்சயம் ஆயிரத்து நூத்து பனிரெண்டையும் தொள்ளாயிரத்து பதினைந்தையும் கூட்டி, ஏழால் கழித்து, முப்பத்து மூன்றால் பெருக்கினால் எவ்வளவு என்பதே பயிற்சி கணக்காக இருக்கும். எனவே அவர்களின் அதிர்ச்சிக்கு காரணமில்லாமல் இல்லை.
ஆனால், ஷ்ரதா தான் கூடுதலாய் மலைத்துப் போயிருந்தாள். பனிரெண்டு பூத கணக்குகளை இருபத்தைந்து நிமிடத்தில் போட்டு முடித்துவிட்டவனின் அசாத்தியத் திறமை இரும்பில் ஏறிய துருவாய் இன்னும் அவள் மனதைப்போட்டு அரிக்கவாரம்பித்து விட்டது. தான் பிறப்பெடுத்ததே வீண் என்று எண்ணுமளவிற்கு வந்துவிட்டாள்.
'முருகா! என்னவொரு மோசடி இது.. ப்ளீஸ் எப்படியாவது அவரோட இந்தத் திறமையை மறக்க வச்சிரு.. தைப்பூசத்துக்கு பால்குடம் தூக்குறேன்' என்று தீவிரமாய் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.
'அப்படி என்ன ஜாலம் இவர் கைகளில் மட்டும்!.. சே! முத்து முத்தான கையெழுத்து..' அவள் மனதுக்குள் பேசும் பொருளானான்.
"என்ன பார்க்கிற? புரிஞ்சதா?"
அவன் தன்னிடம் பேசிய முதல் வார்த்தை பரவசப்படுத்துவதற்கு பதில் பதைபதைக்க வைத்தது.
"ஆங் புரிஞ்சது! புரிஞ்சது!" என்று இருமுறை தலையாட்டினாள் புரியாமலேயே.
"சரி, எக்ஸாம்பிளுக்கு நம்பர் மாத்தி நான் ஒரு சம் கொடுக்கிறேன்.. நீங்க ரெண்டுபேரும் தனித்தனியா செஞ்சி காட்டுங்க.. ம்ம்?" என்றவன் கையுடனே இருவருக்கும் தனித்தனி நோட்டுகளில் கணக்கெழுதி கொடுத்தான்.
அவன் சொல்லிக் கொடுத்ததை சரியாக புரிந்துகொண்ட தாரிணி எருமை விறுவிறுவென்று விடை எழுதத் தொடங்கி விட்டது கடுப்பாக இருந்தது ஷ்ரதாவுக்கு.
'தாரிணியை பார்த்து எழுதலாம் என்றால் முனீஸ்வரி டீச்சர் மாதிரி அசையமாட்டேன் என்கிறானே இந்த உத்தம புருஷன்' என்றவள் தவித்த போதே தூணிலும் துரும்பிலும் இருக்கும் முருகன் அவளை காப்பாற்றி விட்டார்.
யாரோ ஒரு பெண்மணி ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவலை கேட்டு வந்திருந்தார்.
'கோடி புண்ணியம் ராஜேஷ்குமார் சாருக்கு' கும்பிடு போட்டவள் அவன் அவர் கேட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துத் தருவதற்குள் தாரிணியைப் பார்த்து விடையெழுதி விட்டாள்.
வியாபாரத்தை முடித்து விட்டு அருகில் வந்தவன், "முடிச்சாச்சா?.." என்று வினவ, இருவருமே கோரசாக "ஓ" போட்டார்கள்.
இருவரினது நோட்டையுமே வாங்கிப் பார்த்தவன் "குட்" என்றான்.
பின்பு அடுத்த அடுத்தக் கணக்குகளை பொறுமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ஷ்ரதா இம்முறை ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ரொம்பவே சிரமப்பட்டு மனதை ஒருநிலை படுத்தி கணக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
நிமிட முள் அரைவட்டம் போட்டு முழுதாக முப்பது நிமிடங்கள் கடந்தது. அவனும் இரண்டு முறை "குட்" சொல்லியிருந்தான்.
அவ்வேளை பக்கத்து டீக்கடையிலிருந்து அவன் எப்போதும் டீ அருந்தும் நேரத்திற்கு சரியாக டீ ஒன்றை எடுத்து வந்திருந்தார் நாகூர் அண்ணா.
அவர் காதில் பென்சில் செருகி இருந்தது ஏழு மணி இட்லியும் பரோட்டாவும் ரெடி என்று வீசியிடம் ரகசியம் பேசியது.
நடையில் அவசரம் காட்டியவரை நிற்பாட்டி, "உங்களுக்கு குடிக்க என்ன வேண்டும்?" என்று பெண்களிடம் திரும்பினான் அவன்.
ஷ்ரதா "வேண்டாம்" என்று குனிந்தபடியே மறுப்பாக தலையாட்டினாள்.
தாரிணியோ பசியில் "பால் சார்" என்றாள்.
ஷ்ரதா அவளின் தொடையை நிமிண்டியதைப் பார்த்துவிட்ட வீசி நாகூர் அண்ணாவிடம், "ரெண்டு பால்" என்று சொல்ல, தாரிணி, "இவளுக்கு பால் பிடிக்காது.. பூஸ்ட் கொண்டு வாங்க.." என்று உரக்க சொல்லி அதற்கும் ஷ்ரதாவிடம் வாங்கிக்கட்டி கொண்டாள்.
ஷ்ரதா தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாததற்கும், தாரிணியின் தொடையை நிமிண்டியதற்கும் அவளின் பணத்திமிரே காரணம் என்று நினைத்தான் வீசி.
அவன் யோசனைக்கேற்ப அடுத்த கால்மணி நேரமும், "சார், இது என்ன சொல்லுங்க?.. சார், அது எப்படி வரும்?.." என்று தாரிணி தான் மாற்றி மாற்றி அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர ஷ்ரதா வாயையே திறக்கவில்லை.
அவன் இடையிடையே கேள்வி கேட்டபோது கூட "ஹான்.. ஹூம்.. இல்ல.. ம்ம்" என்றே பதிலளித்தாள்.
அவனுக்குள் 'இவளது சுபாவமே இப்படி தானா? இல்லை அகம்பாவமா?' என்று கேள்வி எழுந்த வண்ணமே இருந்தது.
முழுதாக ஒன்றரை மணி நேரம் ஆனதும், "போயிட்டு வர்றோம் சார்" என்று இருவருமே எழுந்து நின்றார்கள்.
"ம்ம்" என்று தலையை ஆட்டியவன், ஷ்ரதா தன் செருப்பின் வாரை மாட்டிக்கொண்டிருந்த போது, "அக்கா எப்படி இருக்காங்க?" என்று நலம் விசாரித்தான்.
திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மதுபாலா அப்போது தான் கருத்தரித்திருந்தாள். 'மதுபாலாவை எங்கள் வீட்டிற்கு ஒரு வாரம் அழைத்துச் செல்கிறோமே" என்று அபிராமி கேட்டபோது கூட அருண்மொழியும் விஜயாதித்தனும் மறுத்து விட்டார்கள். அந்தக் கோபம் அவனுள் கனன்று கொண்டு தான் இருந்தது.
"ம்ம் நல்லா இருக்காங்க.." என்று சொல்லிவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா. அவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்😊
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
சே! எவ்ளோ அழகா பாடுறாங்க ஐஸ்வர்யா ராய்😜
கருத்துத்திரி,
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறுமுறை பிறந்திருப்பேன்.