Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
இது நாள் வரை ராதாவே குழந்தையை குளிக்க வைப்பதும் மற்றைய மருந்துகளை அவளை குடிக்க வைப்பதுமாக செய்து கொண்டிருந்ததால், எதையும் சரிவர செய்யத் தெரியாமல் திணறினாள் அதிதி.


அவளின் திணறலை கண்ட விக்ரமன் என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் ஜானகியம்மாளை அவளுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தான். அவளும் அவரது உதவியை ஏற்றுக் கொண்டாள்.


ஒரு வார காலமாக ஜானகியம்மாள் உதவியுடன் குழந்தைக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவள், இன்றைக்கு தானே குழந்தையை குளிக்க வைக்கலாம் என நினைத்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.


அந்நேரம் பார்த்து வீட்டினுள் நுழைந்த விக்ரமன் குளியல் அறையிலிருந்து சத்தம் கேட்கவும் அங்கு சென்று பார்த்தான்.


அங்கு ஒரு சிறிய பலகையில் அமர்ந்து தனது புடவையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு, குழந்தையை கால்களில் குப்புறப் படுக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் உடம்பிற்கு சோப்பு தேய்த்து குளிக்க வைத்துகொண்டே, தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் அதிதி.


அவள் குழந்தையை குளிக்க வைக்கும் அழகை ஓரத்தில் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், சிறிது நேரத்திற்குப் பிறகே அதிதியின் வாழைத்தண்டு கால்களை கவனித்தான்.


மூன்றரை மாதமாக அவளை விட்டு விலகியே நிற்பவனுக்கு திடீரென பழைய நினைவுகள் தோன்றி திக்கு முக்காட வைக்க, காமன் அனுப்பும் அம்புகளை உடைக்க பாடாதபாடு பட்டான்.


திரும்பிச் சென்று விடுவோமா? என நினைத்தவன், மறுபடியும் இந்த தரிசனம் எப்போது கிடைக்குமோ? என மீண்டும் தன் விழிவேட்டையினை தொடர்ந்தான்.


இதுயெதையும் அறியாதவள் குழந்தையை குளிப்பாட்டி முடித்தவுடன், "அவ்வளவு தான். என் அம்முலுமா குளிச்சாச்சு. எங்க பாப்புக்குட்டி குளிச்சாச்சு. என் புஜ்ஜிமா ரொம்ப சமத்து!" என அழாமல் குளித்தக் குழந்தையை கொஞ்சி, துண்டால் துடைத்துக்கொண்டே திரும்பினாள்.


கதவில் சாய்ந்து நின்றிருந்தவனைக் கண்டு முதலில் திகைத்தவள் பின், கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து குழந்தையின் குட்டி நகங்களை சிறிய நகவெட்டியால் மெதுவாக வெட்டினாள்.


முகம் மற்றும் உடலிற்கு பவுடர் போட்டு, நெற்றி, கன்னம், உள்ளங்கால் என அனைத்து இடங்களிலும் கண்மையால் வட்டப் பொட்டு வைத்தவள் பின், தான் கட்டிலில் எடுத்து வைத்திருந்த சிறிய காட்டன் கவுனை அணிவித்து விட்டாள். குழந்தையும் குளித்த சோக்கில் ஃபேன் காற்றில் மயங்கித் தூங்கியது.


இவை அனைத்தையும் சோபாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் பின், தான் தேடி வந்த கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் வெளியே செல்வதைப் பார்த்த ராதா தயங்கிக்கொண்டே அவ்வறைக்குள் நுழைந்தார்.


"அதிதி" என்றழைத்து அவள் அருகிலும் அமர்ந்தார்.


"குழந்தையை குளிப்பாட்டுறதை பெரிய வித்தை மாதிரி காட்டி என் குழந்தையை எங்கிட்டயிருந்து இவ்வளவு நாளா பிரிச்சி வச்சிட்டீங்கல்ல? எந்த முகத்தோட என்னைப் பார்க்க வந்தீங்க?" என அவர் கூற வந்ததை கேட்காமல் வெளியே அனுப்பி கதவைச் சாத்தினாள் அதிதி.


ஒருவேளை விக்ரமனிடம் கேட்டதற்குப் பதில் உயிரிழந்த அந்த இரண்டு ஜீவன்கள் யாரென ராதாவிடம் கேட்டிருந்தால் உண்மை புலப்பட்டிருக்குமோ என்னவோ?


யாருடனும் பேசாமல் முறைத்துக் கொண்டிருந்தவள் அவ்வீட்டின் பூச்செண்டுகளிடம் மட்டும் அன்பான சித்தியாய் நடந்துகொண்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
ஒரு நாள் அம்முலுவுடன் விளையாட வந்திருந்த வாண்டுகள் சிறிது நேரம் விளையாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அதிதியிடம் போய், "சித்தி பாப்பாவை எங்க ரூமுக்கு கொடுக்கறீங்களா? விளையாடிட்டு தர்றோம்" எனக் கேட்க,


கிஷோர், "ஏய் நிஹாக்கா, பாப்பாவை தூக்கிட்டு வா. நாச்சி பாட்டிக்கிட்ட போவோம். அவங்க பாவம். நம்மக்கிட்ட பாப்பாவை பாக்கணும்னு தூக்கிட்டு வர சொன்னாங்கல்ல?" என்று வெகுளியாகக் கூற, அதிதிக்கு உண்மை விளங்கியது.


"ஆளாளுக்கு தூக்கிட்டு போய் விளையாட ஆராதியா பாப்பா என்ன பொம்மையா? ஒழுங்கா இங்க அவக்கூட விளையாடுறதுனா விளையாடுங்க. இல்ல வெளிய கார்டன்ல போய் விளையாடுங்க. பாப்பாவெல்லாம் தர முடியாது" என காட்டமாகப் பேசி அனுப்பி வைத்தாள்.


மாலையில் நாச்சியம்மையை வரவேற்பறையில் பார்த்தவள், "என்ன சின்ன புள்ளைங்களை வச்சி வேவுப் பார்க்கறீங்களா? அதான் என் புள்ளைய தர மாட்டேனு சொல்லிட்டேன்ல? அப்புறம் ஏன் என் பொண்ணு மேலேயே உங்க கண்ணுயிருக்கு? மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது பண்ணுனீங்கன்னா மரியாதை கெட்டு போய்டும் ஜாக்கிரதை" என்று வெடித்தாள்.


அவளின் பேச்சை கேட்க சகியாதவரும் தன் அம்முலுவை விட்டு விலகியே இருந்தார்.


இப்படியே அதிதி யாருடனும் பேசாமல் முறைத்துக்கொண்டும், அடிக்கடி தன் கணவனை சீண்டிக்கொண்டும் இருக்க, குழந்தை பிறந்து ஐந்தாம் மாதமும் தொடங்கியது.


டைனிங் டேபிளில் எப்பொழுதும் போல தனது ஐபோன் ஸ்கிரீனில் குழந்தையை கண்காணித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிதி, திடீரென்று குழந்தையை ஸ்க்ரீனில் பார்த்து தன் விழிகளை விரித்து பின், வேக வேகமாக கையை கழுவி விட்டு எழுந்து அறையை நோக்கி ஓடினாள்.


அவள் ஓடுவதை கண்ட விக்ரமனும் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து அவளின் பின்னேயே ஓடினான்.


இருவரும் ஓடிச்சென்று ஒருசேர அறைக்குள் நுழைந்தனர்.


விக்ரமன் குழந்தையைப் பார்த்துவிட்டு, "ஏய் என்னாச்சுடி? அம்முலு நல்லாத் தானே இருக்கா? எதுக்கு இப்படி ஓடி வந்த?" என சிடுசிடுக்க,


அதிதி அவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன், "அம்முலு குப்புறப் படுத்துட்டா" என்றவுடன் தான் அவனும் அதனை உணர்ந்தான்.


வாசலில் நின்றிருந்த நாச்சியம்மையும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அதைக் கண்டு சந்தோசப்பட்டனர். குழந்தையைத் தன் கைகளில் ஏந்த வேண்டுமென்று ஏங்கினார் நாச்சியம்மை. ஆனால், அதிதியின் வாய்க்குப் பயந்தார்.


இரண்டு மூன்று முறை குழந்தையை தூக்க முயற்சி செய்து அதிதி கேட்ட கடுஞ்சொற்களால் ஒரு வாரம் தூங்காமல் இருந்தது அவருக்குத் தானே தெரியும்.


அலமுவை அதிதியிடமிருந்து பிரித்து அவளை வெளியேற்ற நினைத்தார் நாச்சியம்மை. ஆனால், தற்போது அதிதியால் அவரே குழந்தையை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலைமை. இது தான் விதி என்பதோ?


"இன்னைக்கு வீட்டுல ஏதாவது இனிப்பு செய்" என்று மட்டும் ராதாவிடம் கட்டளையிட்டுவிட்டு கீழே சென்றுவிட்டார்.


அதிதி தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட விக்ரமனும் அவள் கையிலிருந்த குழந்தையை நெருங்கி, "அம்முலுமா எப்படா நீங்க நடப்பீங்க?" என அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க குனிந்தான்.


குழந்தையை முத்தமிட குனிந்தவனின் நாசியில் மெது மெதுவாய் ஏறியது அதிதியின் பால் மேனி வாசம்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
"ஹுக்கும்.. ஹுக்கும்.." என இருமி தன்னை நிலைப்படுத்தியவன் வேகமாக லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.


மதியம் குழந்தையின் துணிகளை அலமாரியில் மடித்து வைத்துக் கொண்டிருந்த அதிதி கதவு தட்டப்படும் சத்தத்தில், "உள்ள வாங்க ஜானகிம்மா" என்றாள்.


உள்ளே வந்தவர் தான் எடுத்து வந்த மதிய உணவினை டேபிளின் மேல் வைத்து விட்டு அதிதியிடம் மனம் கேளாமல், "விக்ரமன் தம்பி ரொம்ப நல்லவருமா" என்றார்.


அவளோ காரமாகப் பேசினாள்.


"அவரைப் பத்தி எதுவும் என்கிட்ட பேசாதீங்க ஜானகிம்மா. மொத்தக் குடும்பமும் எவ்வளவு அழகா என்கிட்ட நடிச்சிருக்கு. நானும் லூசு மாதிரி அதையெல்லாம் உண்மைனு நம்பி ப்ச்! இந்த வீட்டுல நீங்க மட்டும் தான் எங்கிட்ட உண்மையா இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு. அதான் உங்களை மட்டும் என்கிட்ட பேச அனுமதிச்சிருக்கேன். வீணா அவரைப் பத்தி பேசி அதையும் கெடுத்துக்காதீங்க. சரியான போர்ஜரி குடும்பம் இது. ஏற்கனவே என்னைய ஏமாத்தீட்டீங்களே மாமானு ஒருத்தி வந்தா. அவக்கிட்ட என்ன சொல்லி நடிச்சி ஏமாத்துனாருனு தெரியல. இதுல இவர் ரொம்ப நல்லவராம், வல்லவராம். சரியான பொம்பள பொறுக்.." என அவள் கூறி முடிக்கும் முன்,


"நிறுத்துங்கம்மா!" என கொந்தளித்துக் கத்தினார் ஜானகியம்மாள்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ண மறக்காதீங்க டார்லிங்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 13


தான் அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்த முதல் நாளே தன்னை அந்நியமாய் நினைக்காமல் தனக்கு அந்த வீட்டை சுற்றிக் காண்பித்தவர் ஜானகியம்மாள்.


அவரா இன்று இப்படி தன்னிடம் குரலை உயர்த்தி பேசுவது? என்று அதிர்ந்து பார்த்தவளிடம், "என்ன வார்த்தைம்மா பேசுறீங்க? நான் இங்க வேலைக்கு சேர்ந்து பதினஞ்சு வருஷம் ஆகப்போகுது. நீங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட மூணு பொண்ணுங்களும் இங்க தான் வேலைப் பார்த்தாங்க. அதுங்க எல்லாத்தையும் தன் கூடப் பிறவாத தங்கச்சியா பார்த்தவரு விக்ரமன் தம்பி. அவரைப் போய் பொறுக்கி அது இதுன்னுட்டு. தப்புமா. அன்னைக்கு கௌதமன் தம்பி உங்கக்கிட்ட தப்பாப் பேசினதை பார்த்தப்போ எனக்கு மனசு பக்குன்னுச்சி. நான் தான் விக்ரமன் தம்பியைப் பார்த்து நடந்ததை சொன்னேன்." என அந்நிகழ்வையும் அந்நாளையும் நினைவு கூறத் தொடங்கினார் ஜானகியம்மாள்.


*


தன் காரை எடுக்க சாவியை நுழைத்து திருகிக் கொண்டிருந்த விக்ரமனை நெருங்கி, “தம்பி” என்றழைத்து அருகில் போய் நின்றார் ஜானகியம்மாள்.


"சொல்லுங்க ஜானும்மா? ஏன் தயங்கி நிற்கறீங்க?" என்றவன் கேட்க,


"தம்பி அதிதி பாப்பா ஒரு பிரச்சனையில இருக்காங்க." என்றார் அவர்.


திகைத்தான் விக்ரமன்.


"அதிதியா? என்ன சொல்றீங்க ஜானும்மா?" என்றான்.


"ஆமா தம்பி, கௌதமன் தம்பி அதிதி பாப்பாக்கிட்ட தப்பாப் பேசிக்கிட்டிருந்ததை நான் பார்த்தேன். செடிக்கு தண்ணி ஊத்திக்கிட்டிருக்கும் போது அவங்க பேசினது என் காதுல விழுந்தது. அதுக்கு அதிதி பாப்பா கௌதமன் தம்பியை நல்லாத் திட்டி விட்டுட்டாங்க. ஆனாலும் ஏதோ தப்புன்னு தோணுச்சு. எனக்கு மனசு கேட்கல. அதான் உங்கக்கிட்ட சொன்னேன். அதிதி பாப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி." என்றதும் அவன் முகம் இறுகியது.


"கவலைப்படாதீங்க ஜானும்மா. நான் என்னனு பார்க்கறேன். இதை வேற யார்கிட்டயும் சொல்லலையே?" என்றதும்,


"இல்ல தம்பி யாருக்கிட்டயும் சொல்லல." என்றார்.


குழப்பத்துடனே காரைக் கிளப்பினான் விக்ரமன்.



*


அதிதிக்கு ஜானகியம்மாள் கூறியதனைத்தும் அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் குறுக்கிடாமல் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஜானகியம்மாள் தொடர்ந்தார்.


"அதுக்கப்புறம் என்னாச்சுன்னு எனக்குத் தெரியாதும்மா. ஆனா ஒரு வாரம் கழிச்சு விக்ரமன் தம்பி என்கிட்ட வந்து, நீங்க சொன்ன நாள்லயிருந்து கௌதமனை கண்காணிக்க ஆரம்பிச்சேன் ஜானும்மா. கௌதமன் அடிக்கடி ஸ்ருதி அண்ணி தங்கச்சி மோனிகாவை சந்திக்கிறதை கேள்விப்பட்டு, அவளை என் கஸ்டடிக்கும் கொண்டு வந்து விசாரிச்சேன். அப்படி விசாரிச்சதுல ரெண்டு பேரும் சேர்ந்து அதிதியோட நடத்தையை தப்பா காமிக்க திட்டம் போட்டுக்கிட்டு இருக்கறது எனக்கு தெரிய வந்துச்சி. மோனிகாவை மிரட்டி வெளிநாடு போக வச்சிட்டேன். கௌதமனையும் எச்சரிச்சி மும்பை அனுப்பிட்டேன். நீங்க மட்டும் சொல்லலைனா இது எனக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பெரிய பிரச்சினை உண்டாகி குடும்பமே ரெண்டாகியிருக்கும். ரொம்ப நன்றி ஜானும்மா. இப்ப தான் அதிதி முகத்துல உண்மையான சந்தோஷத்தை என்னால பார்க்க முடியுது. கொஞ்ச நாளாவே பித்துப் பிடிச்ச மாதிரி திரிஞ்சானு சொல்லி என் கையைப் பிடிச்சி குலுக்கினாரு. ஆனா, விக்ரமன் தம்பி இன்னொன்னும் சொன்னாரு. கௌதமன் தம்பி உங்களை தொந்தரவு செய்யுறாருனு மோனிகாவுக்கு யார் சொன்னானு தெரியல? அந்த நேரத்துல வேற யாராவது அங்க இருந்தாங்களா ஜானும்மானு கேட்டாரு. நான் இல்லைனு சொன்னேன். அப்புறம் சரி நானே கண்டுபிடிச்சிக்கறேன் ஜானும்மானு போயிட்டாரு" எனத் தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் மடை திறந்த வெள்ளமாய் அதிதியிடம் கொட்டினார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அதிதி நன்றி பெருக்கில் அவரது கைகளைப் பற்றிக் கொண்டாள்.


பின், தழுதழுத்தக் குரலில், "ரொம்ப நன்றி ஜானகிம்மா." என்றாள்.


ஜானகியம்மாள் அந்த நன்றிக்கு உரிமை பாராட்டவில்லை. அவளிடம் ஆதங்கப்பட்டார்.


"அப்படிப்பட்ட விக்ரமன் தம்பியைப் போய் என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கம்மா? எனக்குத் தெரியும் அந்த மோனிகா பொண்ணு நம்ம தம்பியை எப்படியெல்லாம் சுத்தி சுத்தி வரும்னு. ஆனா, ஒரு நாள் கூட தம்பி அந்தப்பொண்ணை ஏறெடுத்துப் பார்த்தது கிடையாது. அவரைப் போய் இவ்வளவு கேவலமா நினைச்சிட்டீங்களேம்மா?" என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.


அதிதி உண்மையாகவே தனது வார்த்தைகளுக்காக வருத்தப்பட்டாள்.


"மன்னிச்சிடுங்க ஜானகிம்மா. நான் பேசின வார்த்தை அதிகம் தான். நான் பேசினது தப்பு தான். உங்க எல்லாருக்கும் நல்லவரா இருக்கறவரு எனக்கு மட்டும் ஏன் கெட்டவராகிப் போனாரு? இவ்வளவு நாளா என்கூட வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் நடிப்புனு சொன்னா, எனக்கு எப்படி இருக்கும்? பழி வாங்கத் தான்டி உன் கூட நான் இருந்தேன்னா எப்படியிருக்கும்? ஹக்.. ஹக்.." என்று கேவிய அதிதியை சாமாதானப் படுத்தும் விதமாக,


"இதுக்குப் பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்மா. நீங்க பொறுமையா தம்பிக்கிட்ட பேசிப் பாருங்க." என்று தன்னால் முடிந்த அளவு ஆறுதலை கூறிவிட்டு, தனக்கிருந்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார் ஜானகியம்மாள்.


அவர் சென்ற பிறகு தன் அறையிலிருந்து அமைதியாக யோசித்த அதிதி, "ஆமா அந்த கௌதமன் தப்பானவன்னு மும்பைக்கு அனுப்பினவரு, அன்னைக்கு மாடியில அவன் என் கையப் பிடிச்சதை மட்டும் ஏன் சந்தேகப்பட்டாரு?" எனத் தன் மூளையை கசக்கி பிழிந்து தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்.


பின், ஒரு முடிவுக்கும் வர முடியாமல் துவண்டு போனாள்.


அவனிடம் கேட்டு தெளிவு பெறவும் மனம் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்தக் குழப்பத்திலேயே திரிந்தாள் அதிதி.


அவளின் இந்த விலகலில் பித்துப் பிடித்தவன் போலானான் விக்ரமன்.


இருவரையும் பார்த்த நாச்சியம்மைக்கு அப்போது தான் தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது.


அம்முலுவுக்கு ஆறாம் மாதம் தொடங்கியிருந்த போது அதிதிக்கு புதிய பிரச்சினை ஒன்று உருவானது.


தொடர்ச்சியாக உபயோகித்து வந்த குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தீர்ந்து போய் விட, அனைத்தையும் புதிதாக வாங்க வேண்டிய சூழல் உண்டானது.


எவ்வாறு வாங்குவதென யோசித்த அதிதி தன் கணவனிடம் கேட்டு வாங்க ரோஷப்பட்டு, தன் பணத்தில் வாங்க முடிவு செய்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
உடனே ஜானகியம்மாளை அழைத்து அவரிடம் இருந்த அலைபேசியை வாங்கி, தனது தாத்தாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.


எதிர்புறம் ஏற்ற சங்கரப்பாண்டியன் யாரென்று வினவவும், "நான் அதிதி பேசுறேன். என் அம்மா வழி சொத்துலயிருந்து வர்ற பணத்துல ஒரு முப்பதாயிரம் யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க." என்று வேகமாகக் கூறினாள்.


பின் வெகுநேர அமைதிக்குப் பின் அவர், "நல்லாயிருக்கியா அதிதிமா?" எனவும்,


"ஹான் நல்லாயிருக்கேன். எனக்கென்ன குறையிருக்கப்போகுது? நீங்க இங்கயிருந்து கிளம்பும் போது தான் என் புருஷனும் மாமியாரும் எப்படி என்னை தங்கத் தட்டுல வச்சி தாங்கினாங்கனு பார்த்தீங்களே?" என நக்கலாகக் கேட்டாள்.


அவர் அமைதியாகவும் ஆவேசமாகப் பேசினாள்.


"இங்க இந்த வீட்டுல இருக்கறவங்களை விட எனக்கு முதல் எதிரி நீங்க தான். இங்க இருக்கறவங்க முன்னாடி உங்களை அவமானப்படுத்த வேண்டாம்னு தான் அன்னைக்கு பொறுமையா பல்லைக் கடிச்சிக்கிட்டு நின்னேன். நான் இப்ப வாழ்க்கை இழந்து தனி மரமா நிற்கறதுக்கு மூலக்காரணமே நீங்களும், என்னைப் பெத்தவரும் தான். கல்யாணத்தன்னைக்கு நீங்க சொன்னீங்கன்னு தானே நான் அவருக்கு என் கழுத்தை நீட்டினேன்? நான் சின்ன வயசா இருக்கும் போது, என் அப்பா ஃபாரின்ல இருக்காருனு பொய் சொன்னீங்க. அதுக்கப்பறமா மானசா சித்தியும் ஆனந்தவதி அத்தையும் சொல்லி தான் என்னோட அப்பா ஜெயில்ல இருக்காருன்னே எனக்கு தெரிஞ்சது. அதுக்கப்பறம் எனக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்கறதையே நான் மறந்துட்டேன். இப்ப வரை அவர் யாரை கொன்னாருனு எனக்குத் தெரியாது. ஆனா என் புருஷன் குடும்பத்துல இருக்க யாரையோ தான் கொன்னுருக்காருனு உங்களுக்குத் தெரியும் இல்ல? சொல்லுங்க? யாரை அவரு கொன்னாரு? எதுக்காக கொன்னாரு? எதுக்காக என்னை இந்த குடும்பத்துல வந்து வாழ சொன்னீங்க?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அவரைத் திணறடித்தாள்.


அவள் கேட்ட கேள்வி எதற்கும் சங்கரப்பாண்டியன் பதில் கூறாமல் இருக்கவும் கோபத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அதிதி.


இணைப்பு துண்டிக்கப்படவும், அவள் தன்னை தாத்தா என்று கூட அழைக்கவில்லை என்பதை உணர்ந்தவரின் மனம் நொந்து போனது.


தன் வாயை சத்தியத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் தன் மூத்த மகனிடம் 'நான் இப்ப என்ன பண்ணுவேன்டா சந்திரா?' என மானசீகமாக கேட்டு சோர்ந்து போனார்.


அன்று நாச்சியம்மையின் வீட்டில் வைத்து தன்னிடம் நன்றாக பேசிய தன்னுடைய பெயர்த்தி தற்போது அலைபேசியில் பேசியதை கேட்டு, அவள் மனக்காயத்தை உணர்ந்து கொண்ட சங்கரப்பாண்டியன் தன் வாழ்வின் கரைபடாத பக்கங்களை சக்கர நாற்காலியில் படுத்துக்கொண்டு புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்.


*


இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன் தொழிலில் ராஜாவாய் கொடிகட்டிப் பறந்தார் சங்கரப்பாண்டியன்.


இருபத்திமூன்று வயதாகும் தன் மூத்த மகனுக்கு திருமணம் முடிக்க நினைத்தவர் தன் தொழில் பங்குதாரரின் மகள் மானசாவைப் பேசி முடித்தார்.


ஆனால், உதயச்சந்திரன் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்திருப்பதை அப்போது அவர் அறியவில்லை.


உதயச்சந்திரன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் கீதா என்ற பக்கத்து ஊரிலிருந்து படிக்க வந்த ஜவுளி கடைக்காரரின் மகள் ஒருவள், அவரின் பால் ஒரு தலை காதல் கொண்டாள்.

அதனைக் கண்டு கொண்ட அவளின் தோழிகள் அவளை அடிக்கடி உதயச்சந்திரனுடன் சேர்த்து வைத்து கேலி பேசினர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
ஒரு நாள் உதயச்சந்திரனை நினைத்து காதல் கடிதம் ஒன்றை எழுதினாள் கீதா. அது தவறுதலாய் அவளின் தோழிகளின் கைகளில் சிக்கியது.


கடிதத்தை படித்துப் பார்த்த அவளின் தோழிகள் அதனை உதயச்சந்திரனிடம் காண்பிக்கப் போவதாக மிரட்ட, அதற்கு பயந்த கீதா அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்பதாய் ஒப்புக் கொண்டாள்.


அப்படித்தான் ஒருநாள் அவர்கள் கேண்டீனுக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அதற்கு கீதா முடியாதென்று மறுக்கவும், தங்கள் கையிலிருந்த கடிதத்தைக் காட்டி அவளை அடி பணிய வைக்க முயன்றனர்.


ஆனால், அவர்கள் அசந்த நேரம் கையிலிருந்த கடிதத்தை பிடிங்கிக்கொண்டு ஓடி விட்டாள் கீதா.


ஓடிச்சென்றவள் நேராக மோதி நின்றது உதயச்சந்திரனின் மார் மேல்.


அவனை நிமிர்ந்து பார்த்து போதோ பயத்தில் வெடவெடத்துப் போனாள்.


ஏற்கனவே கல்லூரியின் அன்னை தெரசா என்று அழைக்கப்படும் மென்மை மனம் கொண்டவள் கீதா என்பதை அறிந்திருந்த உதயசந்திரனுக்கு அவளின் அந்த பயம் வினோதமாய் தோன்றியது.


அவள் தன்னைக் கண்டு பயப்படுவதையும், அவள் கையிலுள்ள கடிதத்தையும், பின்னேயே துரத்தி வந்த அவளின் தோழிகளையும் கண்டு மனதிற்குள் ஏதோ முடிச்சுப் போட்டவன், விரைவிலேயே தனக்கும் அந்த கடிதத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை புரிந்து கொண்டான்.


உடனே அவள் கையிலிருந்த கடிதத்தையும் பறித்து வாசிக்க ஆரம்பித்தான்.


சந்திரனை எதிர்பார்த்து மலர காத்திருக்கும் அல்லியின் மனமிது… என ஆரம்பித்த அக்கடிதமானது, இப்படிக்கு காதலி.. ஆம், நீங்கள் ஏற்றாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உங்களை மட்டுமே விரும்பும் உங்கள் காதலி என நிறைவடைந்திருந்தது.


கடிதம் முழுவதையும் வாசித்து முடித்த உதயச்சந்திரன் அதில் தன் பெயர் எழுதியிருப்பதைக் கண்டு கீதாவை அழைத்துக்கொண்டு கல்லூரியின் பின்புறம் சென்றான்.


எடுத்த எடுப்பிலேயே "இது எவ்வளவு நாளா நடக்குது?" என்றவன் உறும,


படபடத்த விழிகளுடன், "ரெண்டு வருஷமா." என்று தனது தாவணியின் முந்தானை நுனியை திருகிக்கொண்டே பயத்துடன் சொன்னாள் கீதா.


"ஓ! அப்படியா? இந்த காலேஜ்ல இருக்கறது ரெண்டே சந்திரன்கள் தான். ஒன்னு உதயச்சந்திரன் நான். இன்னொன்னு நம்ம காலேஜ் பியூன் ஜெயச்சந்திரன். இது எனக்கு எழுதியிருக்க வாய்ப்பேயில்ல. நீ தான் என்னைப் பார்த்தாலே பத்தடி தூரம் பயந்து ஓடுவியே? அப்போ அந்த ஜெயச்சந்திரனுக்குத் தான் லவ் லெட்டர் எழுதியிருக்கியா?” என்றதும்,


"ச்சே! அவருக்கெல்லாம் நான் எழுதல. அவர் எனக்கு அப்பா மாதிரி. உங்களுக்கு தான் லவ் லெட்டர் எழுதினேன்." என நாணமாக அவள் நகரப் பார்க்க,


அவளின் கைப்பிடித்து தடுத்தவன், "என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?" என உறுமினான்.


பின்னால் நகர்ந்துகொண்டே சென்று சுவரில் முட்டி நின்றாள் கீதா.


இரு கைகள் கொண்டு அவளை அணை கட்டியவன், "என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?" எனத் தன் குரலை உயர்த்தினான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
"நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவனு சொன்னேன். போதுமா?" எனத் தன் விழிநீரை அர்ப்பணம் செய்தாள் கீதா.


அவளை நெருங்கி, "ம்! வெரி குட். இப்படி தான் தைரியமா காதலை சொல்லணும். சரி, நானும் உன்னை லவ் பண்றேன்" என்று அவள் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டு இடை வளைக்க, பேச முடியாமல் தொண்டையிலேயே வார்த்தைகள் சிக்கிக்கொண்டது கீதாவிற்கு.


"இந்த லெட்டரை நானே வச்சிக்கறேன். அதான் அச்சாரத்தை போட்டுட்டேன்ல?" என்றதும் மீண்டும் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றாள் கீதா.


"படிப்பு முடிஞ்சதும் என் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன். அதுவரைக்கும் ஒழுங்கா படிச்சி பி.எஸ்சி முடிக்கற வழியைப் பாரு. நானும் எம்.பில் முடிச்சிருவேன்." என்று அவளை விடுவித்து தன் காதலை அதிரடியாக கூறியதோடு மட்டுமல்லாமல் அறிவுரையும் கூறிச் சென்றான்.


உதயச்சந்திரன் தன் தந்தையின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவன். தன் தந்தையின் முன் எவரேனும் கை நீட்டி பேசினால் மறுநாளே அவரை வெளுவெளுவென்று வெளுத்துக் கட்டி, தன் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்யும் அளவிற்கு அடாவடி அப்பாப்பிள்ளை.


இப்படிப்பட்டவன் தன் தந்தை தனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் பேசி முடித்துள்ளதாகக் கூறவும் முதல் முறையாக தன் தந்தையின் பேச்சை எதிர்த்து, தான் வேறு பெண்ணை காதலிப்பதாகக் கூறினான். அவளைத் தான் திருமணம் முடிப்பேன் என்றும் ஒற்றைக் காலில் நின்றான்.


அவனின் விருப்பத்தை மாற்ற முடியாது என்பதையறிந்த சங்கரப்பாண்டியனும் நிச்சயத்தை நிறுத்தாமல் டில்லியில் படித்துக் கொண்டிருந்த தன் இளைய மகன் ஈஸ்வருக்கு அந்த தொழில் பங்குதாரரின் மகள் மானசாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.


கீதாவிடம் சொன்னபடியே, தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தன் தந்தையின் சம்மதத்துடன் அவளை திருமணம் செய்து கொண்டான் உதயச்சந்திரன்.


இருவரும் காதலை திகட்டத் திகட்ட ஆழ்ந்து அனுபவித்தனர்.


உதயச்சந்திரன்-கீதா திருமணம் நடந்து முடிந்த ஆறு மாதத்திலேயே ஈஸ்வரும் மானசாவை திருமணம் செய்து கொண்டு, பண்ணைபுரத்திலேயே தங்கிக் கொண்டான்.


திருமணமான ஒரு வருட முடிவில் கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக, தன் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்துவிட்ட திருப்தியில் தன் இன்னுயிரை நீத்தாள் கீதா.


குழந்தைக்கு தன் அன்னை பெயரின் முதலெழுத்தை எடுத்து அதிதி என பெயரிட்டான் உதயச்சந்திரன்.


தாயில்லா தன் மகளை தன் அன்னையின் துணையுடன் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.


இதற்கிடையில் நச்சுப் பாம்பாக உதயச்சந்திரனிடம் தன் நட்பை பலப்படுத்திக் கொண்டான்.

மானசாவின் அண்ணன் பிரபு. பிரபுவின் வஞ்சக குணம் அறியாத உதயச்சந்திரனும் அவனுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தான்.


அந்த நட்பின் பலனாக தான் இரு உயிர்களை அழிப்பதற்கு காரணமாக அமையப் போவதையும், தன் உயிருக்கும் மேலான மகளை பிரிந்து சிறை செல்லப் போவதையும் உதயச்சந்திரன் அப்போது அறிந்திருக்கவில்லை.


தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom