அவளை நெருங்கி அவன், "அம்முலுமா" என அழைக்க, வியர்வையில் குளித்திருந்த அம்முலு தலையைத் தூக்கிப் பார்த்தது.
"என்னடா? எங்க பட்டுக்குட்டிக்கு வேர்க்குதா?" என்றவன் எட்டி காரின் ஏசியை ஆன் செய்ய, தந்தை மகளின் பாசப்பிணைப்பில் “ப்ச்” என சலித்துக்கொண்ட அதிதி சேலையை இறுக்கிப் பிடித்திருக்கும் குழந்தையின் கையை தட்டிவிட்டாள்.
"ஏய்! என் பொண்ணுக்கு வேர்க்குதுடி. கொஞ்ச நேரம் காத்து வரட்டும். முந்தானைய மூடாத" என குழந்தைக்காக போர்க்கொடி தூக்கினான் விக்ரமன்.
"ம்? அப்போ நீங்க கொஞ்சம் வெளிய போய் நில்லுங்க" என அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தாள் அதிதி.
"ஏன்? நான் எதுக்கு வெளிய போகணும்? நான் என்ன அடுத்தவனா?" என எகிறினான் விக்ரமன்.
"ஆமா, ஆமா, நண்ட சுட்டு நரிய காவல் வைப்பாங்களாக்கும்?" என நொடித்துக் கொண்டவள், அவன் சொன்னபடியே வேறுபுறம் திரும்பிக்கொண்டு காற்றோட்டமாகவே அவன் புதல்விக்கு பால் கொடுத்தாள்.
கடமை முடிந்ததும் நேரே குழந்தையுடன் மேல்நாட்டு உடையிருக்கும் பிரிவுக்குள் நுழைந்தாள் அதிதி.
மேலும், விக்ரமனிடம் அறிவிப்பாக கூறினாள்.
"உங்கப் பொண்ணுக்கு மட்டும் தான் ட்ரெஸ் எடுத்திருக்கேன். எனக்கின்னும் எடுக்கல." என்று அலட்டினாள்.
"சரி, உனக்கு தான ட்ரெஸ் எடுக்கணும்? சாரி செக்சன் போகாம, இங்க எதுக்கு வந்திருக்க? என்ன முறைக்கிற? சரி, நம்ம ரூமுக்குள்ள வேணும்னா நீ இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கலாம். ஆனா, வெளியன்னா முடியவே முடியாது" என்றவனை மதிக்கவேயில்லை அதிதி.
அவன் பொறுமையாய் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில், "நாச்சூம்மா பழங்காலம். அவங்களுக்கு இந்த ட்ரெஸ் எல்லாம் பிடிக்காது" என்றான் அடிக்குரலில்.
"பிடிக்காதா? நான் என்ன அவங்களையா போட சொல்லப்போறேன்? நான் தானே போடப்போறேன்? அவங்களுக்கு பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? ஒருவேளை நான் இந்த ட்ரெஸ் போடுறது அவங்களுக்குப் பிடிக்கலைனா நான் அவங்க முன்னாடி வர்றப்போ மட்டும் அவங்களை கண்ணை மூடிக்க சொல்லுங்க." என்று அலட்சியமாய் கூறினாள்.
"நீ இவ்ளோ நாள் புடவை தானே கட்டின? இப்போ மட்டும் என்ன வந்தது? வேணும்னே பண்றியா?" என்றவன் உறும,
"ஆமா, நீங்க எப்படி என்கிட்ட நடிச்சீங்களோ, அதே மாதிரி நானும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தேன் போதுமா? பொங்கலன்னைக்கு பஞ்சுமிட்டாய் கலரு, பத்த வைக்காமலேயே எரிக்குதுனு கைக்கொட்டி சிரிச்சீங்கல்ல? வாங்க, வந்து எந்த கலரு எனக்கு நல்லாயிருக்குனு சொல்லுங்க" என மேற்கொண்டு மூன்று மணி நேரம் ஒவ்வொரு உடையாக அணிந்து வந்து, "இது நல்லாயிருக்கா? இது நல்லாயிருக்கா?" என அவனை பொறுமையிழக்கச் செய்தாள்.
"இந்த பொண்ணுங்க மட்டும் எப்படித்தான் ஏழாம் நூற்றாண்டுல சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு இப்படி எட்டாம் நூற்றாண்டுல நம்மளை வச்சு செய்றாங்களோ தெரியலப்பா" என சலித்துக் கொண்டவன்,
அவள் காட்டும் அனைத்திற்கும், "நல்லாயிருக்கு. வாவ்! நைஸ். சூப்பர்." என பூம் பூம் மாடு போல் தலையாட்டி வைத்தான்.