Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
பேஸ்புக்கிலும் இங்கும் கமெண்ட் செய்ய மறக்காதீங்க பட்டூஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 14



கொஞ்சம் கொஞ்சமாக சங்கரப்பாண்டியனிடம் நற்பெயர் பெற்று அவரிடமும் நெருங்கிய பிரபு அரசியலில் தடத்தை பதிக்கும் ஆசையை அவரது மனதிலும் வளர்த்து விட்டான்.


அதன்படி அவரும் அவன் விரித்த வலையில் விழுந்தார்.


பதவி மோகத்தை ஏற்படுத்தியவன் அந்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என அவரை ஆசைக்காட்டி போட்டியிடுமாறு கட்டாயப்படுத்தினான்.


காலம் தனக்கு வைத்திருக்கும் சோதனையை அறியாமல் மிகப்பெரிய கட்சியில் சேர்ந்து, தேர்தலில் நிற்க முடிவு செய்தார் சங்கரப்பாண்டியன்.


அதிதிக்கு இரண்டு வயதான போது அவளை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு, தன் தந்தை முதன் முதலில் தேர்தலில் நிற்பதால் அவரை வெற்றி பெறச்செய்யும் பொருட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமானான் உதயச்சந்திரன்.


ஈஸ்வரன் தொழிலை கவனித்துக்கொள்ள, சங்கரப்பாண்டியனும் உதயச்சந்திரனும் மானசாவின் அண்ணன் பிரபுவுடன் சேர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.


ஏற்கனவே தன் மனைவியின் இறப்பில் சோர்ந்திருந்த உதயச்சந்திரனுக்கு தற்போது அதிகபடியான தேர்தல் வேலைகளால் மேலும் களைப்பு உண்டானது.


அவனின் களைப்பைப் போக்குகிறேன் என அவனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கினான் பிரபு.


பல பேர் குடியைக் கெடுத்த இந்த மது தன் குடியையும் கெடுக்கப்போவதை அறியாமல் போதையில் மூழ்கித் திளைத்தான் உதயச்சந்திரன்.


வாய்ப்பு கிடைக்கும் போது அவனைத் தீர்த்துக்கட்டி விட்டால் சொத்து முழுவதும் தன் தங்கை கணவன் ஈஸ்வரனுக்கே சென்று விடும் என கணக்கிட்ட பிரபு, உதயச்சந்திரனை அழிக்க கண்கொத்தி பாம்பாக காத்திருந்தான்.


எப்படியாவது சங்கரப்பாண்டியனை தேர்தலில் வெற்றிபெறச் செய்து விட்டால் அவருக்கு பிறகு ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிடலாம் எனவும், அவன் மூலம் காலம் முழுக்க தான் பணத்தை எரித்து குளிர் காயலாம் எனவும் கோட்டை கட்டி வாயைப் பிளந்திருந்தான்.


சங்கரப்பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கும் நாளன்று வீடே திருவிழாக்கோலம் பூண்டது.


அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. கட்சியில் உள்ள பெரிய தலைகள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஜெயித்தது போன்ற உணர்வை அப்போதே பெற்றார் சங்கரப்பாண்டியன்.


*


அப்படியே நல்ல விதமாகவே நாட்கள் சென்றிருக்கக்கூடாதா? என நினைத்த சங்கரப் பாண்டியன் தன் கண்களை திறக்க, அவரின் முன் கண்ணீருடன் நின்றிருந்தார் அங்காளப் பரமேஸ்வரி.


உடனே உணர்ச்சிவசப்பட்டு விசாரித்தார் அவர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
"என்னாச்சு அங்காளு?" என்றதற்கு தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்தார் அங்காளப் பரமேஸ்வரி.


அதிலிருந்த வரிகள் இவையே.


*


அன்புள்ள அப்பாவுக்கு,


நான் நலம். அங்கே எல்லோரும் நலமா? கொஞ்ச நாட்களாகவே உங்களிடமிருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லையே, ஏன்பா? ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் என் மகள் அதிதிக்கு நல்லபையனுடன் கல்யாணம் நடந்திருப்பதாக கடிதம் போட்டீர்கள். ஐந்து மாதங்களுக்கு முன்னால் அவளுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் சொன்னீர்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த கடிதத்தில் வேறு ஏதோ எழுதியிருக்கிறதேபா? உங்கள் பெயரில் தான் கடிதம் வந்திருந்தது. எழுத்தைப் பார்த்ததும் அதை நீங்கள் எழுதவில்லை என்று கண்டுபிடித்து விட்டேன். எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அந்த கடிதத்தில் எழுதியிருப்பது உண்மையா? இல்லையா? என்று தான்.


சொல்லுங்கப்பா உங்களை நம்பி தானே என் அதிதியை விட்டுவிட்டு நான் ஜெயிலுக்கு வந்தேன்? ஏன் என் பொண்ணை அந்த வீட்டிற்கு அனுப்புனீர்கள்? என் பொண்ணு அனுபவிக்கிற கஷ்டத்தை கேட்டதிலிருந்தே சோறு தண்ணீர் உள்ளே இறங்க மாட்டேன் என்கிறது. இங்குள்ள சிறை காவலாளி என் நண்பன் கந்தனின் ஆறுதலில் தான் கொஞ்சம் மனம் தேறியிருக்கிறேன். விரைவில் பதில் எழுதி அனுப்புங்கள். இல்லையெனில் உங்கள் உயிருக்குயிரான மகனின் இரங்கல் செய்தி தான் உங்கள் செவியை வந்தடையும்.


இப்படிக்கு,


உதயச்சந்திரன்.


*


அங்காளப் பரமேஸ்வரி மகனுக்காக பரிதவித்தார்.


"என்னங்க? நம்ம சந்திரன் இப்படி எழுதியிருக்கான்? அந்த கந்தன் நாச்சியம்மையோட ஆளுனு நாம அவனுக்கு எழுதின லெட்டர் எல்லாம் அவனைப் போய் சேரலை போலயேங்க? நிச்சயதார்த்தத் தன்னைக்கு அந்த நாச்சியம்மை கந்தன் மூலமா நம்ம சந்திரனை கொலை செஞ்சிடுவேனு மிரட்டினதால தானங்க நம்ம அதிதியை அவங்கக்கூட அனுப்பி வச்சோம்? ஆனா, இப்ப இவன் எழுதியிருக்கறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க." என பெத்த மனம் துக்கம் தாளாமல் கரைந்தது.


சங்கரப்பாண்டியன் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தார்.


"நான் ஜெயிலுக்குப் போய் எல்லா உண்மையையும் அவனை நேர்ல பார்த்து சொல்லிடுறேன் அங்காளு. நம்ம மகன் தற்கொலை செஞ்சுக்கற அளவுக்கு கோழை இல்ல. என்ன சொன்னா உடனே வேலையாகுமோ அந்த தந்திரத்தைத் தான் அவன் பயன்படுத்தியிருக்கான்" என ஆறுதல் வார்த்தைகள் உரைத்து தன் மனைவியை சமாதானப்படுத்தினார். அது வேலை செய்தது.


அதிதி தனது தாத்தா பணியாள் ஒருவரின் மூலம் அனுப்பிய பணத்தை ஜானகியம்மாளிடம் கொடுத்து குழந்தைக்கு தேவையான பொருட்களின் பட்டியலையும் தயாரித்து, பக்கத்தில் உள்ள மருந்து கடைகளில் வாங்கி வரச் சொன்னாள்.


சாயுங்காலம் அறைக்கு வந்தவர் தந்த பொருட்களையெல்லாம் சரி பார்த்துவிட்டு கட்டிலில் வைத்தவள், அறையினுள்ளேயே அடைந்து கிடப்பது பிடிக்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.


பொழுது சாயும் நேரத்தில் குளிர் காற்று வீச, குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து புல் தரையில் வெறும் காலுடன் உருட்டிக்கொண்டே அங்குள்ள பூக்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அப்பொழுது அதிதி என்றொரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். வந்திருந்தது கௌதமன்.


அவள் கொதித்துப்போய் விலகப் பார்க்க அவன், "என்னை மன்னிச்சிடு அதிதி. அன்னைக்கு உன்கிட்ட எதையும் விரிவா பேச முடியல. விக்ரமனும் என்னை பேச விடல. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உடனே போயிடனும்னு தான் என்கிட்ட சொல்லியிருந்தான். அவன் அன்னைக்கு நம்மளை தள்ளியிருந்து பார்த்துக்கிட்டு இருந்ததால தான் என்னால உன்கிட்ட எதையும் முழுசா சொல்ல முடியல" என புதுக்கதை சொன்னான்.


அவன் கூறுவது புரியாமல் விழித்தவள் புருவங்களை இடுக்கினாள். அவனே அவளுக்கு விளக்கினான்.


"அன்னைக்கு இதே இடத்துல உன்கிட்ட தப்பா பேசினதுக்கப்பறம் விக்ரமன் என்னை போலீஸ்ல மாட்டி விட்டு, என் தொழிலையெல்லாம் முடக்கிட்டான். ஏன்னு கேட்டதுக்கு உங்கிட்ட தப்பா பேசினதை சொல்லி, என்னை மும்பை போகச் சொன்னான். நானும் வேற வழியில்லாம அங்கப் போனேன். ஆனா, விதி தான் என்னை அங்க அழைச்சிட்டுப் போயிருக்குனு நினைக்கறேன் அதிதி" என்றவனின் முகம் இறுதி வாக்கியத்தில் மட்டும் பிரகாசமாக, அவனை விளங்காமல் பார்த்தாள் அதிதி.


"ப்ராமிஸ், அங்க தான் நான் என் தேஜூவைப் பார்த்தேன் அதிதி. அவப் பேரு தேஜஸ்வி. என் ஆஃபீஸ்ல வொர்க் பண்ற பொண்ணு. மிருகமா இருந்த என்னை மனுசனா மாத்தினவ. காதல்னா என்னனு எனக்கு புரிய வச்சவ. அவளை பார்த்தப்பறம் தான் நான் உன்கிட்ட பேசினதெல்லாம் எவ்வளவு தப்பான வார்த்தைகள்னு எனக்கு புரிஞ்சது. நேரா இங்க வந்தவுடனேயே விக்ரமன் கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனா, அவன் என்கிட்ட மன்னிப்பு கேட்க தேவையில்ல. அதிதிக்கிட்ட போய் கேளுனு சொன்னான். கூடவே, நான் தான் உன்னை மும்பை அனுப்பினேனு அவளுக்கு தெரிய வேணாம்னு கேட்டுக்கிட்டான். நானும் சரினு உன்கிட்ட மன்னிப்பு மட்டும் கேட்டேன். அன்னைக்கு நான் உன்கிட்ட ஏதாவது உளறி வச்சிடுவேனோனு பயந்து தான் அவன் குறுக்கப் புகுந்தான். ஆனா, உன் நிச்சயதார்த்தத் தன்னைக்கு நான் தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறதா இருந்தது அதிதி. கடைசில என்னாச்சுன்னா.." என்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைவு கூறத் தொடங்கினான் கௌதமன்.


*


நாச்சியம்மை தான் சம்பந்தம் பேச வந்துள்ளதைக் கூறி உதயச்சந்திரனின் உயிருக்கு தான் உலை வைக்கப்போகும் அவர்களின் இக்கட்டான நிலையையும் விவரிக்க, எவ்வாறு தன் பெயர்த்தியை இதிலிருந்து விடுவிப்பது என யோசித்த சங்கரப்பாண்டியன் சமயோஜிதமாய் வார்த்தை அம்புகளை பிரயோகித்தார்.


"நான் இப்போ என் பேத்திக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை குணத்துல ராமன் மாதிரி. அவருக்கு நிகரா உன் வம்சத்துல எவன் இருக்கானோ அவனுக்கு என் பேத்தியைக் கேளு. தர்றேன்" என்று நாச்சியம்மைக்கு கிடுக்குப்பிடி போட்டார்.


அதில் நாச்சியம்மையின் முகம் இருண்டது.


பின், தன்னை சமாளித்துக் கொண்டவர், "நான் என்ன ஜனகன் மக சீதாவையா என் மகனுக்கு பொண்ணுக்கேட்டு வந்திருக்கேன்? அவ அப்பன் ஒரு கொலைகாரன். அவன் இப்ப எங்க இருக்கானு இந்த ஊருக்கேத் தெரியும். சும்மா உளறாம அவளை அனுப்பி விடுங்க" என்றார்.


அச்சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வதென சங்கரப்பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அம்மாளிகைக்குள் நுழைந்தாள் அதிதி.


இனி நாச்சியம்மையின் முடிவிற்கு அடிபணிவதை தவிர வேறு வழியில்லை என்றவர் அதிதியை அனுப்பி வைக்க முன் வந்த போது தான் ஒரு திருப்பத்தை உண்டாக்கினார் நாச்சியம்மை.


ஆம், விக்ரமனை அனுப்பி அதிதியை அழைத்து வரச்சொன்னார்.


விக்ரமன் அதிதியின் கை பிடிக்கும் போது, என் வம்ச ராமனை பார்த்துக்கொள் என சங்கரப்பாண்டியனை மிதப்பாக பார்த்தார் நாச்சியம்மை. பின், அனைவரையும் கேலியாக பார்த்துவிட்டு தன் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
*


காட்சி நிரலாக தன் கண் முன் ஓடிய அனைத்து நிகழ்வுகளையும் அதிதியிடம் கூறி முடித்த கௌதமன், "உன்னை எனக்குனு சொல்லிட்டு பின்னாடி இல்லைனு மாத்தினதைத் தான் என்னால ஏத்துக்க முடியல அதிதி. அந்த கோபத்துல தான் முட்டாள் தனமா என்னென்னவோ பண்ணிட்டேன். மொத நீ எனக்கானவனு நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். வாழ்க்கையில பாதி பேர் இப்படித்தான், முதல்ல யாரையோ தனக்கானவன் தனக்கானவள்னு நம்பி வாழ்க்கையில பல அடிகள் பட்டப் பின்னாடி தான், தன் துணையை அடையாளம் காணுறாங்க. அந்த வரிசையில நானும் இப்போ ஒருத்தனாகிட்டேன். என்னை மன்னிச்சிடுமா" எனத் தன் தவறுகள் அனைத்தையும் உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.


அதிதிக்கு அவன் கேட்ட மன்னிப்பு மனதில் பதியவில்லை.


'அப்பாவோட உயிரைக் காப்பாத்தத் தான் தாத்தா என்னை இங்க அனுப்பினாரா? ஆனா, அப்பா எப்படி ரெண்டு பேர் உயிர் போக காரணமானாரு?' என மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தாள்.


பின், கௌதமனின் சொடுக்கு சத்தத்திலேயே நிகழ்காலம் வந்தாள்.


"ஓஹ் சாரி! நீங்க என்ன சொல்லிட்டு இருந்தீங்க?" என்று பேந்த பேந்த விழித்தாள்.


"சரியாப் போச்சு போ! நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன் அதிதி" என்றவன் சொல்ல,


'மன்னிப்பா? நீங்க பேசின வார்த்தைகளையெல்லாம் என்னால மன்னிக்க முடியாது. ஆனா, மறக்க முயற்சி செய்றேன்" என்றவள் நகரப் பார்க்க கௌதமன் தொடர்ந்தான்.


"எங்கம்மா ஏதோ பழி வாங்கத்தான் உனக்கு விக்ரமனை கல்யாணம் செஞ்சு வச்சாங்கனு எனக்குத் தெரியும். ஆனா, நான் உன்கிட்ட தப்பா பேசினது தெரிஞ்சு விக்ரமன் என்கிட்ட இவ்வளவு கோபப்படுவானு நான் எதிர்பார்க்கல அதிதி. ஐ திங் விக்ரமன் உன்னை விரும்புறான். அவன் இவ்வளவும் செஞ்சதுக்கு காரணம் உன் குடும்பம் செஞ்ச தப்பும், என் அம்மாவோட வார்த்தைகளும் தான். நீ அவன் காதலை வெளிக்கொண்டு வந்தாலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும். என்னையே ஒருத்தி தன் காதலால இப்படி மாத்தியிருக்கான்னா உன்னால முடியாதா அதிதி? சீக்கிரமே நீயும் விக்ரமனும் சேர்ந்து தான் நம்ம வீட்டுல பேசி எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும். நான் இப்ப மறுபடியும் மும்பை போறேன். திரும்ப வரும் போது உங்க ரெண்டு பேரையும் ஒன்னா தான் பார்க்கணும்" என்றவன் கீழே குனிந்து,


"பெரியப்பா போயிட்டு வரேன்டா ஆராக் குட்டி" என குழந்தையின் பஞ்சுக்கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு மும்பை கிளம்பிவிட்டான்.


தன் கணவன் தன்னை சந்தேகிக்கவில்லை என்பதை உறுதியாக அறிந்தவளுக்கு மனம் சற்று ஆறுதலடைந்தது.


ஆனால், தன் மற்றைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருந்தாள்.


பின், குழந்தையின் சத்தத்தில் கலைந்து அவளை தூக்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.


எப்போதையும் விட இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து விட்டிருந்த விக்ரமன், கட்டிலிலிருந்த பொருட்களைக் கண்டு ருத்ரமூர்த்தியானான்.


"ஏய்! என்னடி இது? யார் காசுல வாங்கின?" என்று கோபமாகக் கேட்டவனுக்கு, பதில் அளிக்காமல் தன்போக்கில் அமர்ந்திருந்தாள் அதிதி.


அமைதியாக இருந்தவளைக் கண்டு வந்த ஆத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் தூக்கிப்போட்டு சுக்குநூறாக உடைத்தான் விக்ரமன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
"நான் இன்னும் உயிரோட தான்டி இருக்கேன்." என்றும் கர்ஜித்தவன்,


"இவ என் அம்முலு. இவளுக்கு யார் காசுலயும் எதுவும் வாங்க அவசியமில்ல." என்றபடியே பால்கனி சென்று புகைக்கத் துவங்கிவிட்டான்.


அனைத்தையும் கண்டு புது தெளிவு கிடைத்த நிம்மதியில், 'இனிமே தான் மாமூ உனக்கு கச்சேரியே இருக்கு' என்று மர்மப் புன்னகை புரிந்தாள் அதிதி.


மறுநாள் காலையில் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அவனுக்குத் தெரியாமல் அவனின் கார் சாவியை எடுத்து ஒளித்து வைத்தாள். அதுவும் குழந்தையின் தொட்டிலுக்குள் ஒளித்து வைத்தாள்.


குழந்தையும் சாவியை தன் கைகளுக்குள் இறுக்கிப் பிடித்துக்கொண்டே வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.


அலுவலகம் கிளம்பிய விக்ரமன் கார் சாவியை காணாமல் அனைத்து இடங்களிலும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்க, அவனை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தாள் அதிதி.


தன் தந்தை படும் கஷ்டத்தை பொறுக்க முடியாத குழந்தை, "ம்ம்.. ம்ம்.. ங்கா.. ங்கா" என்று சத்தமாகக் கத்தி தன் தந்தையை அழைத்தது.


குழந்தையின் சத்தத்தில் திகைத்தவள், ‘எவ்வளவு நேக்கா அப்பாவை கூப்பிடுறா பாரு? நான் ஒரு பிளான் போட்டா அதை என் வயித்துல பொறந்தவளே கெடுத்துருவா போலயிருக்கே. எப்பவும் வைக்கிற இடத்துல இன்னைக்கு சாவிய காணோம், நீ பார்த்தியானு ஒரு வார்த்தை கேட்கறாரானு பாரு. இதுக்கே நீங்க குளிக்கும் போது தண்ணியில்லாம தவிக்க விடணும் மாமூ’ என மனதில் கழுவி ஊத்திக்கொண்டே குத்துக்கல்லாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.


தொட்டிலிலிருந்து சத்தம் வரவும், "என்னடா அம்முலுமா? அப்பாவுக்கு உன் கூட விளையாட நேரமில்லடா. அப்பா ஆஃபிஸ் போகணும்" என தன் போக்கில் பேசிக்கொண்டே சாவியைத் தேடிக் கொண்டிருந்தான் விக்ரமன்.


தேடித்தேடி அலுத்தவன் பதினைந்து நிமிடங்கள் தேடியும் சாவி கிடைக்காமல் போகவும் கோபத்தில் தனது ஷூ காலால் தரையை உதைக்க, அவனின் பதட்டத்தைக் கண்டு திருப்தியடைந்தாள் அதிதி.


மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்தவன் வேறு வழியின்றி மற்றொரு காரில் சென்று விட்டான்.


பனிரெண்டு மணியளவில் அலுவலகத்தில் தன் செகரெட்டரியிடம் மெயில் அனுப்ப வேண்டியவைப் பற்றி கூறிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு திடீரென புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதனை ஏற்று யாரென்று கேட்டான்.


எதிர்புறம் உற்சாகமாய் வந்தது குரல்.


"ஹாய் மாமூ! நான் தான் உங்க அம்முக்குட்டி பேசுறேன். வீட்லயிருந்தே ரொம்ப போர் அடிச்சதா? அதான் நானும் அம்முலுவும் ஷாப்பிங் வந்தோம். உங்க ஆஃபீஸ்க்கு பக்கத்துல இருக்க மாலுக்கு தான் வந்திருக்கோம்" என்றதும் திகைத்தான் அவன்.


இவ்வளவு நாள் தன் மேலிருந்த வெறுப்பில் விலகியே இருந்தவள் தற்போது முன்பு போல் மாமூ என தன்னை அழைப்பதை கேட்டு, ஜில்லென்றிருந்தது விக்ரமனுக்கு. மேலும், தொடர்ந்தாள் அவள்.


"அப்புறம் இது என்னோட நம்பர் தான் மாமூ. உங்க போன்ல சேவ் பண்ணிக்கோங்க. புது ஆப்பிள் ஐபோன் செவென்டின் ப்ளஸ் வாங்கியிருக்கேன். எவ்ளோ தெரியுமா? ஒரு லட்சம் சம்திங். எவ்வளவு நாள் தான் ஜானகியம்மாக்கிட்டயே போன் வாங்கி பேசுறது? அதான் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு புது போன் வாங்கிட்டேன். ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. எனக்கும் பாப்பாவுக்கும் வேண்டியதெல்லாம் வாங்கிட்டு, பில் போட்டு பார்த்தா இருபது லட்சம்னு சொல்றாங்க. ஏன் இவ்வளவுனா நீங்கப் பண்ணின ஃபேசியல், பாடி மசாஜ் ரொம்ப காஸ்ட்லி மேடம்னு சொல்றாங்க. பகல் கொள்ளை பாருங்க.நீங்க வேற நேத்து எல்லாத்தையும் உடைச்சி, பாப்பாவுக்கு ஏதாவது வாங்கினா உங்க காசுல தான் வாங்கனும்னு சொல்லிட்டீங்க. அதான் இவங்கக்கிட்ட என் ஹபி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இதுக்கெல்லாம் செட்டில் பண்ணிடுவாருனு வெயிட் பண்ண சொல்லிருக்கேன். நானும் உங்க ப்ராபெர்ட்டி தானே மாமூ? எனக்கும் நீங்க தானே வாங்கி கொடுக்கணும்? சீக்கிரம் வந்து பில் பே பண்ணுங்க மாமூ" என இறுதியில் கொஞ்சலாகப் பேசினாள் அதிதி.


அவள் தன்னை கதற வைக்கவே இவ்வாறு செய்கிறாளென்று உணர்ந்து கொண்டவனின் முகத்தில் புன்னகையின் சாயல்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
கமெண்ட்ஸ் தான் ரைட்டர்களின்‌ ஸ்ட்ரென்த்😉
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 15


தன் மாத லாபமே ஐந்து கோடியை தாண்டும் என்பதை அறியாமல் இருபது லட்சத்தை பெரிதாகக் கூறி தன்னை கலங்கடிக்க நினைப்பவளின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாமல் பயந்தது போலவே நடித்தான் விக்ரமன்.


"ஏய்! என்ன சொல்ற?" என்றான்.


எதிர்புறம் கொண்டாட்டமாய் இருந்தது அதிதிக்கு.


"இப்போ எதுக்கு மாமூ டென்ஷன் ஆகறீங்க? பக்கத்துல தண்ணியிருந்தா எடுத்துக் குடிங்க. நீங்க இங்க கார்ல வர குறைஞ்சது பத்து நிமிஷமாவது ஆகும். நான் உங்களுக்கு இருபது நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க இங்க வரலைனா, எல்லாத்தையும் இங்கயே வச்சிட்டு நான் வீட்டுக்கு போயிருவேன். ஆனா அதுக்கப்பறம் என் குழந்தைக்கு ஏன் இதெல்லாம் வாங்கின? எவன் காசுல வாங்கினனு எல்லாம் கத்தி கூப்பாடு போடக்கூடாது. நான் தான் என் பொண்ணுக்கு வாங்கித் தருவேனு வீராப்பும் பேசக் கூடாது" என்று எச்சரித்து அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.


அரக்கப் பறக்க தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு அவளிருக்கும் இடம் நோக்கி புறப்பட்டான்.


மிகப்பெரும் குழப்பத்தை தான் அங்கு சந்திக்கப்போவதை அறியாமல் வேகமாக பேரங்காடியை நோக்கி காரை செலுத்தினான் விக்ரமன்.


உள்ளே நுழைந்தவன் அவளிருக்கும் பகுதியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கு செல்ல, பணம் செலுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்தவள், "பரவாயில்லையே, பத்து நிமிஷத்துக்கு பத்து செகண்ட் முன்னாடியே வந்துட்டீங்க" என கேலியாகக் கூறினாள்.


பணம் செலுத்தி பில் வாங்கியவன் துரிதப்படுத்தினான். "வா! கீழப் போகலாம்" என்று.


அவளும் நல்ல பிள்ளையாய் அவன் கூடவே கார் பார்க்கிங் வரை வந்தாள்.


அங்கு நின்றிருந்த தன் காரின் டிரைவரிடம், "நீங்க ஜானகியம்மாவை கூட்டிட்டு வீட்டுக்குப் போயிருங்கண்ணா. நான் இவரோட வண்டியில வந்திடுறேன்" என்றாள்.


"ஏய்! எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடி. நீ இவங்களோடவே போயிரு" என மறுத்தான் விக்ரமன்.


அவனை கண்டு கொள்ளாதவள், "நீங்க போங்க" என ஜானகியம்மாளிடமிருந்த தன் குழந்தையை வாங்கிக்கொண்டு அவரை டிரைவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.


"ஹேய் லூசு! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"


ம்ஹீம்! எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை அதிதியிடம்.


ஒரேயொரு முறை மட்டும் அவனை அலட்சியமாய் திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் காரின் பின் இருக்கையில் ஏறியமர்ந்து அம்முலுவுக்கு பால் கொடுக்கத் தொடங்கி விட்டாள்.


வேறு வழியின்றி அவளருகில் அமர்ந்தவன் காரின் கதவை அடைக்க காரினுள் ஏற்பட்ட புழுக்கத்தாலும், அவளின் மாராப்பு சேலை மூடியிருந்ததாலும் அம்முலு சிணுங்கிக்கொண்டே பால் குடித்துக் கொண்டிருந்தது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
அவளை நெருங்கி அவன், "அம்முலுமா" என அழைக்க, வியர்வையில் குளித்திருந்த அம்முலு தலையைத் தூக்கிப் பார்த்தது.


"என்னடா? எங்க பட்டுக்குட்டிக்கு வேர்க்குதா?" என்றவன் எட்டி காரின் ஏசியை ஆன் செய்ய, தந்தை மகளின் பாசப்பிணைப்பில் “ப்ச்” என சலித்துக்கொண்ட அதிதி சேலையை இறுக்கிப் பிடித்திருக்கும் குழந்தையின் கையை தட்டிவிட்டாள்.


"ஏய்! என் பொண்ணுக்கு வேர்க்குதுடி. கொஞ்ச நேரம் காத்து வரட்டும். முந்தானைய மூடாத" என குழந்தைக்காக போர்க்கொடி தூக்கினான் விக்ரமன்.


"ம்? அப்போ நீங்க கொஞ்சம் வெளிய போய் நில்லுங்க" என அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தாள் அதிதி.


"ஏன்? நான் எதுக்கு வெளிய போகணும்? நான் என்ன அடுத்தவனா?" என எகிறினான் விக்ரமன்.


"ஆமா, ஆமா, நண்ட சுட்டு நரிய காவல் வைப்பாங்களாக்கும்?" என நொடித்துக் கொண்டவள், அவன் சொன்னபடியே வேறுபுறம் திரும்பிக்கொண்டு காற்றோட்டமாகவே அவன் புதல்விக்கு பால் கொடுத்தாள்.


கடமை முடிந்ததும் நேரே குழந்தையுடன் மேல்நாட்டு உடையிருக்கும் பிரிவுக்குள் நுழைந்தாள் அதிதி.


மேலும், விக்ரமனிடம் அறிவிப்பாக கூறினாள்.


"உங்கப் பொண்ணுக்கு மட்டும் தான் ட்ரெஸ் எடுத்திருக்கேன். எனக்கின்னும் எடுக்கல." என்று அலட்டினாள்.


"சரி, உனக்கு தான ட்ரெஸ் எடுக்கணும்? சாரி செக்சன் போகாம, இங்க எதுக்கு வந்திருக்க? என்ன முறைக்கிற? சரி, நம்ம ரூமுக்குள்ள வேணும்னா நீ இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கலாம். ஆனா, வெளியன்னா முடியவே முடியாது" என்றவனை மதிக்கவேயில்லை அதிதி.


அவன் பொறுமையாய் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில், "நாச்சூம்மா பழங்காலம். அவங்களுக்கு இந்த ட்ரெஸ் எல்லாம் பிடிக்காது" என்றான் அடிக்குரலில்.


"பிடிக்காதா? நான் என்ன அவங்களையா போட சொல்லப்போறேன்? நான் தானே போடப்போறேன்? அவங்களுக்கு பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? ஒருவேளை நான் இந்த ட்ரெஸ் போடுறது அவங்களுக்குப் பிடிக்கலைனா நான் அவங்க முன்னாடி வர்றப்போ மட்டும் அவங்களை கண்ணை மூடிக்க சொல்லுங்க." என்று அலட்சியமாய் கூறினாள்.


"நீ இவ்ளோ நாள் புடவை தானே கட்டின? இப்போ மட்டும் என்ன வந்தது? வேணும்னே பண்றியா?" என்றவன் உறும,


"ஆமா, நீங்க எப்படி என்கிட்ட நடிச்சீங்களோ, அதே மாதிரி நானும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தேன் போதுமா? பொங்கலன்னைக்கு பஞ்சுமிட்டாய் கலரு, பத்த வைக்காமலேயே எரிக்குதுனு கைக்கொட்டி சிரிச்சீங்கல்ல? வாங்க, வந்து எந்த கலரு எனக்கு நல்லாயிருக்குனு சொல்லுங்க" என மேற்கொண்டு மூன்று மணி நேரம் ஒவ்வொரு உடையாக அணிந்து வந்து, "இது நல்லாயிருக்கா? இது நல்லாயிருக்கா?" என அவனை பொறுமையிழக்கச் செய்தாள்.


"இந்த பொண்ணுங்க மட்டும் எப்படித்தான் ஏழாம் நூற்றாண்டுல சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு இப்படி எட்டாம் நூற்றாண்டுல நம்மளை வச்சு செய்றாங்களோ தெரியலப்பா" என சலித்துக் கொண்டவன்,


அவள் காட்டும் அனைத்திற்கும், "நல்லாயிருக்கு. வாவ்! நைஸ். சூப்பர்." என பூம் பூம் மாடு போல் தலையாட்டி வைத்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
938
Reaction score
1,132
Points
93
ஒருவழியாய் துணியெடுத்து முடித்தவள் நேரே நகைக்கடைக்குள் போய் புகுந்தாள்.


விக்ரமனின் டெபிட் கார்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக நுண்ணிய வேலைப்பாட்டில் அமையப் பெற்ற ஐம்பது லட்சம் பெறுமானமுள்ள நகைசெட் ஒன்றை தேர்வு செய்தாள்.


அவள் எதிர்பார்த்தது போல் விக்ரமன் அதிர்ச்சியொன்றும் அடையவில்லை. "உனக்கு இது ரொம்ப அழகா இருக்கும் அதிதி." என்று மட்டும் ரசித்து சொன்னான்.


"இது ஒண்ணும் எனக்கில்ல. நம்ம அம்முலுவுக்கு. பொண்ணைப் பெத்திருக்கோம். இப்போயிருந்தே அவ கல்யாணத்துக்கு சேர்த்து வைக்க வேணாமா? எல்லாரும் உங்களை மாதிரியே பழிவாங்குறேனு சும்மா கட்டின புடவையோட கூட்டிட்டு போவாங்களா?" எனக்கேட்க அதன் பிறகு வாயையே திறக்கவில்லை விக்ரமன்.


இறுதியில் அவள் வாங்கியிருந்த அனைத்திற்கும் பணம் செலுத்திவிட்டு, "வா போகலாம்" என்றவன் விரட்ட,


"இருங்க. இங்க பீட்சா நல்லா இருக்கும்னு இப்ப தான் ஒரு சேல்ஸ்மேன் சொன்னாரு. சாப்பிட்டுப் போகலாம்" என்று சட்டமாய் புட்கோர்ட் சென்று அமர்ந்தாள்.


ஏற்கனவே தன் மதிய உணவு நேரம் தாண்டிவிட்ட வெறியில் இருந்தவன், அவளின் ஆட்டத்திற்கு ஆடிக்கொண்டு அருகில் போய் அமர்ந்தான்.


அப்போது தூரத்தில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த பதினைந்து வயது பெண் அவனை ஈர்த்தாள்.


அதிதி வேறுபுறம் திரும்பியிருக்க அந்தப் பெண்ணை தன் அலைபேசியில் படம் பிடித்தவன் அதிதி அந்தப் பெண்ணை பார்த்துவிடக் கூடாதென, அவளை வேகமாக அங்கிருந்து கிளம்ப வைக்கும் பொருட்டு, "எனக்கு மீட்டிங் போகணும். இப்போ தான் அர்ஜென்ட்னு மெசேஜ் வந்தது. சீக்கிரம் வா. உன்னை வீட்ல விட்டுட்டு போறேன்" என துரிதப்படுத்தினான்.


அதிதி, "நீங்க வேணும்னா ஆஃபிஸ் போங்க. அம்முலுவை என்கிட்ட தாங்க. நான் பீட்சா சாப்பிட்டு தான் வீட்டுக்குப் போவேன். வீட்லயிருந்து இவ்ளோ தூரம் வந்த எனக்கு திரும்பி போகத் தெரியாதா?" என அவனின் அவசரம் புரியாமல் முறுக்கிக் கொண்டாள்.


இனி அவளிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவன் வேகமாக குழந்தையுடன் வெளியேறினான்.


"ச்சே! இவருக்கிட்டப் போய் குழந்தையை கொடுத்தது தப்பாப்போச்சே." என அவன் பின்னேயே ஓடி வந்தாள் அதிதி.


அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்றவன் தனக்கு தெரிந்த துப்பறிவாளர் ஒருவரிடம் தன் அலைபேசியிலிருந்த போட்டாவை அனுப்பி தான் பேரங்காடியில் பார்த்த பெண்ணைப் பற்றி விசாரிக்கச் சொன்னான்.


இரவில் தன்னறையின் பால்கனியில் அமர்ந்து தான் பேரங்காடியில் பார்த்த பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டே அவன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.


அதிதி, ‘நாம வாங்கிட்டு வந்த பொருளுக்கு வேலை வந்துருச்சி' என தன் ஷாப்பிங் பேகிலிருந்த வைன் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தாள்.


'க்ளிங்' என்ற சத்தத்தில் எட்டிப் பார்த்த விக்ரமன், "இதெல்லாம் எதுக்குடி வாங்கின? நீ குழந்தைக்கு தாய்ப்பால் வேற கொடுத்துட்டு இருக்க. ஒழுங்கா குப்பைல போடு." என்று சீறினான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom