Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பயணம் இது முதலா? முடிவா?

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
பயணம் இது முதலா? முடிவா?
ஜன்னலோரம் அமர்ந்திருந்தவள் விழிகள் மட்டும் வெளியே இருக்கும் எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்தபடி இருக்க, பின்னால் இருந்தவர்களின் கேலியும் கிண்டலும் பேச்சுகளும் சிரிப்பும் எதுவுமே அவள் செவிகளில் விழவில்லை. அவளின் மனமோ இன்று நடந்தவைகளையும் தன் நாயகினை பற்றியும் அசை போட்டு கொண்டிருந்தது.
இன்று,
பிரகாசத்தில் முகம் ஜொலித்தாலும் அவள் விழிகளில் தெரியும் சிறு பயத்தை கண்டு கொண்டவன் மெல்ல புன்னகைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
"பயப்படாதடா. எல்லாம் நல்ல படியா நடக்கும். ஒழுங்கா சாப்பிடு. கொஞ்ச தூரம் நட. முடிஞ்ச வேலையை செய். " என்றான் பட்டும் படாமல் தழுவியபடி.
சுற்றி முற்றி பார்த்தவன் எல்லோரும் அவரவர் வேலையில் தீவிரமாய் இருக்க, அவள் கரம் பற்றி மெல்ல அழைத்து சென்றான்.
அவள் உடைமாற்றுவதற்காக இருந்த அறை அது. "உள்ள வா" என்று அவளை அழைத்து கொண்டு மெதுவாய் தாழிட்டவன்.
"இங்க வா" என்று மெத்தையில் அமர வைத்தவன், தானும் அவளின் முன் மண்டியிட்டு மேடிட்ட வயிற்றில் கரம் கொண்டு மெல்ல வருடினான்.
"செல்ல குட்டி இங்க பாருங்க. அப்பா பேசுறேன். அம்மாவும் நீங்களும் பாட்டி வீட்டுக்கு போக போறீங்க. பத்திரமா இருக்கணும். நான் அப்பப்போ வரேன். நீங்க சமத்தா அம்மாவை தொந்தரவு செய்யாம இருக்கணும். சரியா?" என்று கேட்க, அவன் உள்ளங்கையில் இரண்டு முறை எட்டி உதைப்பது போன்ற உணர்வு தெரிய உவகையில் புன்னகைத்தான்.
"பார்த்தியா என் செல்லக்குட்டி கூட ரொம்ப சமத்து. சரின்னு சொல்லிட்டாங்க. தேவையானதை எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா?" என்று கேட்டான்.
"ஹ்ம். எடுத்து வச்சிக்கிட்டேன்" என்றாலும் அவளின் குரலில் ஒரு சோகம்.
"டேய்! எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்க? எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க ஆசையா?" என்றவன் மெல்ல அவளை அணைத்து கொண்டான்.
"ஆசை இருந்தா என் கூட வந்து கொஞ்ச நாள் இருக்கலாம்ல? நீங்க இல்லாம நான் மட்டும் போகனுமா?" என்று சிணுங்கினாள்.
கன்னங்களில் மின்னும் சந்தனம், கைகளில் குலுங்கும் வண்ண வண்ண வளையல்கள். நெற்றியில் குங்குமம், தலையில் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து தூவிய அரிசி அங்கங்கே தலையில் சிதறி அவளின் அழகிற்கு மேலும் அழகூட்ட, தன் மனைவியை ரசிப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.
"என்னால அங்க வந்து ரொம்ப நாள் இருக்க முடியாது. உனக்கும் தெரியும். நீ போய்ட்டு வா. இது பொண்ணுங்களுக்கு கிடைக்கிற இன்னொரு சான்ஸ். அம்மா வீட்ல கொஞ்ச நாள் தங்கி இருக்கிறதுக்கு. அப்புறம் இது மாதிரி வாய்ப்பு கிடைக்காது. கிடைச்சாலும் நான் விடமாட்டேன்" என்று கண்ணடித்து அவளின் பாதங்களை மெல்ல வருடினான்.
"கால் வீங்காம பார்த்துக்கோ. ரெகுலர் செக் அப் போ. நான் பத்து நாளைக்கு ஒரு தடவை உன்னை வந்து பார்க்குறேன்." என்று சிரித்தான்.
தன் கணவனின் அன்பில் மெய் சிலிர்த்தாலும் அவன் தன்னுடன் இருக்க முடியாது என்ற உண்மை அவளளால் ஏற்று கொள்ள முடியாமல் தவித்தாள்.
"பிரவீன்!" என்ற அன்னையின் குரலில் மனைவியை விட்டு சற்று நகர்ந்து நின்றவன்.
"இதோ வரேன் மா" என்று ஒரு முறை மனைவியின் அழகை ஏற இறங்க பார்த்து பின் ஆசையாய் தழுவி கொண்டான்.
"அம்மு நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். டென்சன் ஆகாத. பி.பி. நார்மல் லா இருக்கணும். பத்திரமா இரு. தினமும் நான் போன் பேசுறேன்." என்று விலகினான்.
"நீங்க பத்திரமா இருங்க. வேளா வேளைக்கு சரியா சாப்பிடுங்க. நான் இல்லைன்னு வீட்டுக்கு லேட்டா வரக்கூடாது. லேட்டா சாப்பிடறது தூங்குறது எல்லாம் செய்ய கூடாது." என்றாள் அன்பான அதிகார குரலில்.
தன்னை அன்பின் கட்டளையில் அடக்க கூடியவள் தன்னவள் மட்டுமே என்று நினைத்து சிரித்தான்.
"சரி டா. எல்லாம் நீ சொல்ற மாதிரியே செய்றேன்." என்று அவள் நெற்றியோடு மோதியவன் மெல்ல குனிந்து அவனின் நீண்ட இடைவெளிக்கான பரிசை பெற்றுக்கொண்டு விடுவிடுத்தான்.
"சரி போலாம். வா" என்று வெளியே வந்தனர் இருவரும்.
மண்டபம் முழுவதும் துடைத்து வைத்தது போல் காலியாக இருந்தது.
"சரி! தம்பி அப்போ நாங்க கிளம்பறோம். ராவு காலம் ஆரம்பிக்க போகுது" என்று அவனின் மாமனார் கூற, தன் மனைவியை ஒரு முறை பார்த்து விட்டு, "சரிங்க மாமா. பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க" என்று சிரித்தான்.
"சரி டா. வாம்மா நந்தினி போலாம்." என்றார் அவளின் அப்பா.
"ஹ்ம் சரிப்பா" என்று முன்னே நடக்க அவளின் கரத்தை விடாமல் பிடித்தபடி வந்தான் பிரவீன்.
"சொன்னது ஞாபகம் இருக்கட்டும் . நீ மட்டும் இல்ல. இப்போ ரெண்டு பேரு இருக்கீங்க. அதனால கொஞ்சம் உன் வாலு தத்தனமெல்லாம் சுருட்டி வச்சிக்க. நான் இருந்தா சொல்லிட்டே இருப்பேன். கொஞ்சம் நிதானமா இருடா" என்றான் மெதுவாய்.
"ஹ்ம்ம்" என்று தலையாட்டியவள் அவனை பிரிய மனமே இல்லாமல் பேருந்தில் ஏறினாள்.
லேசாக புடவை தடுக்க, தடுமாறி விழ போக பின் சுதாரித்தாள். பின்னால் நின்றிருந்தவன் அவளை தாங்கி பிடித்து பதறி போனான்.
"ஏய்! பார்த்து டி. இப்போ தான சொன்னேன். பத்திரமா இருன்னு? அடங்குறியா பாரு? " என்றவுடன் லேசாய் சிரித்திவள்.
"சரி மாமா. இனி பத்திரமா இருக்கேன்." என்று உள்ளே வேகமாய் சென்றாள்.
'இப்போ என்னை என்ன கூப்பிட்டா?' என்று தன்னை தானே கேட்டு கொண்டவன் அவள் அமர்ந்திருந்த ஜன்னலோரம் வேகமாய் வந்தான்.
"செல்லம்! இப்போ என்னை என்ன கூப்பிட்ட?" என்று குறும்பாய் பார்க்க, அவனை காண முடியாமல் நாணத்தால் தலை கவிழ்ந்தவள் நந்தி.
"இல்ல ஒன்னும் சொல்லலையே" என்று சிரித்தாள்.
"பொய்யா சொல்ற? உன்னை" என்று கூறும் பொழுதே பேருந்து கிளம்பியது.
"டேய்!" என்று தன் தோளில் கரம் வைத்து உலுக்கும் தந்தையை பார்த்து, "என்னப்பா?" என்றாள்.
"மா கொஞ்ச நேரம் வண்டி நிக்கும். கிழ கொஞ்ச நேரம் காத்தார நட டா." என்றார்.
"சரிப்பா" என்று எழுந்தவளை மெதுவாக கரம் பிடித்து இறக்கி விட்டார்.
சிறிது தூரம் நடந்தவள்.
"அப்பா! அங்க ஒரு கோவில் இருக்கு போலாம்பா" என்று தன் முன்னே இருந்த கோவிலை காட்டினாள்.
பேருந்தை பார்த்தவர்.
"சரி டா. வா" என்று இருவரும் கோவிலுக்கு சென்றனர்.
நிதானமாய் சாமி கும்பிட்டவள் மனம் சற்று தெளிந்து இதமாய் இருந்தது போல் தெரிந்தது.
"அப்பா! இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு. போலாம் பா" என்று சிரித்தாள் நந்தினி.
மீண்டும் வண்டியில் ஏறி அமர, அவள் இருக்கையின் பக்கத்து இருக்கையில் தன் கணவன் அமர்ந்திருப்பது போல் தோன்ற, 'ச்சே எப்போ பாரு இந்த மனுஷனையே நினைச்சிட்டு இருக்கறதால எங்க பார்த்தாலும் அவரை மாதிரி இருக்கு' என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் புலம்பி கொண்டு வந்து அமர்ந்தாள்.
திரும்பி பார்க்க அவன் மறையாமல் தன்னை பார்த்து சிரிக்க, "மாமா! ஏற்கனவே நீ வரலைன்னு ரொம்ப கடுப்புல இருக்கேன். இப்படி இன்னும் கடுப்பேதுற மாதிரி சும்மாவாச்சும் என் கண்ணு முன்னாடி வராத" என்றவள்.
"அப்புறம் நான் ஆசையா தொட்டு பார்த்தா காணாம போய்டுற. போடா." என்று ஜன்னலோரம் திரும்பி கொண்டாள்.
"நந்தினி மாப்பிள்ளைக்கு சாப்பிட ஏதாவது வேணுமானு கேளூடா? நான் கேட்டா சாப்பிட்டேன் அத்தை எனக்கு வேணாம்னு சொல்லிட்டார்" என்று அம்மா பின்னால் இருந்து குரல் கொடுக்க.
"என்ன அம்மாக்கும் ஏதாவது ஆகிடுச்சா? நான் தான் அவர் வரலைன்னு புலம்பினா? எங்கம்மா அவர் வந்திருக்கிறதாவே நினைச்சு பேசிட்டு இருக்காங்க. இந்த பயபுள்ள சும்மாவா? எல்லோரையும் பேசியே மயக்கிடுவான். என்னை மட்டும் தவிக்க விடுவான்" என்று தன் அருகில் இருக்கையில் இருந்தவனை பார்த்து, "இன்னும் நீ போகலையா? வழக்கமா ரெண்டு நிமிஷத்துக்கு மேல இருக்க மாட்டியே.
இப்போ என்ன இவ்ளோ நேரம் இருக்க?
ஒருவேளை அங்க என் மாமனுக்கு என் ஞாபகமாவே இருக்குமோ? அதான் அவன் மனசை இங்க அனுப்பிட்டானோ?" என்று அவன் முகத்தினை வருடினவள் அமர்ந்திருப்பவன் நிழல் அல்ல நிஜம் என்று உணர்ந்து கொண்டதும் அதிர்ச்சியாக பார்த்தாள்.
தன் மனைவியின் ஒவ்வொரு அசைவையும் இதுவரை அணு அணுவாக ரசித்தவன் மெல்ல அவள் செவிகளில், "ஏய் பொண்டாட்டி! உனக்காக மட்டும் தான் வந்திருக்கேன்." என்று அவளை பார்த்து சிரித்தான்.
"ஐ..." என்று கத்த ஆரம்பித்தவளின் வாயை பொத்தியவன்.
"அடியேய்! ஏன்டி இப்படி கத்துற? நான் உன் பக்கத்துல தான் இருக்கேன்" என்று குறும்பாய் பார்த்தான்.
'அய்யய்யோ! இவளை நேரம் இங்க இருந்தது மாயைன்னு நினைச்சுல்ல வாய் விட்டு பேசிட்டோம். இப்போ என்ன சொல்லுவான்?' என்று வெட்கத்தில் அவன் கரத்தை எடுத்துவிட்டு முகம் கவிழ்ந்தாள்.
"செல்லம்! நீ பஸ்ல ஏறதுக்கு முன்னாடி ஏதோ சொன்னியா? சரியா கேட்கலை. அதான் நேராவே வந்து கேட்டுக்கலாம்னு வந்துட்டேன். இங்க வந்து பார்த்தா தான தெரியுது..." என்று சிரிக்க, "அய்யோ! போங்க" என்று சிரித்து அவனின் நெஞ்சுனில் முகத்தை மூடிக்கொண்டாள்.
"நீ சாப்பிடலைன்னு சொன்னாங்க அத்தை ஏன்?" என்று கேட்டான் பிரவீன்.
"பசிக்கலை. நீங்க சாப்டிங்களா?" என்றாள் அன்பாய்.
"இல்லை. வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு யாராவது சாப்பிடாம இருப்பாங்களா? உன் வீராப்பு எல்லாத்தையும் என்கிட்ட காட்டு. என் பொண்ணுகிட்ட இல்ல" என்று செல்லமாய் முறைத்தவன்.
தன் மடியில் இருந்த உணவு பொட்டலத்தில் இருந்த உணவை தன் கரத்தால் எடுத்து அவளின் வாயருகே கொண்டு சென்றான்.
தன்னவனின் அன்பில் பெருமை பொங்க அதை வாங்கி கொண்டாள்.
"பொறுமையா நல்லா மென்று சாப்பிடு" என்று அவள் போதும் போதும் என்னுமளவிற்கு ஊட்டிவிட்டான்.
"நீங்களும் சாப்பிடுங்க. இன்னும் சாப்பாடு வாங்கட்டுமா?" என்றாள் அன்பாய் நந்தினி.
"ஹம். போதும் டா இதுவே இருக்கு. நான் இதை மட்டும் சாப்பிடறேன்" என்று சாப்பிட்டு முடித்தவன்.
தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு, "நீ தூங்கு. இன்னும் ரொம்ப நேரம் இருக்கு. நான் எழுப்புறேன்" என்று அவளை உறங்க வைத்தான்.
மீண்டும் பயணம் தொடர இரண்டு மணி நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தனர்.
நந்தினியை மெதுவாக எழுப்பி கீழே இறக்கி வீட்டின் முன் இருவருக்கும் ஆலம் கரைத்தனர்.
-தர்ஷினிசிம்பா
 
Top Bottom