தாரகை 6
விளக்கங்கள்
குழப்பங்களுக்கு
விடையாகலாம்
ஆனால்
முடிவாகிடமுடியாது.
ஆரிமா தன் திட்டத்தை விளக்கி முடித்ததும் ஐவருக்கும் அதை ஏற்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனாலும் அந்த திட்டத்தை மேலுமொருமுறை ஆராயவேண்டுமென்று ஐவரும் நினைத்துக்கொண்டனர்.
ஏனோ அந்த திட்டங்களில் தவறு இருப்பதாகவே ஐவருக்கும் தோன்றியது. ஆனால் இது அவர்களிடமல்ல. இங்குள்ள நிலைமையை அவர்களை விட ஆரிமாவும் நிகனிகாவுமே நன்றாக அறிவர். அதனால் அவர்கள் கூறுவதை ஒப்புக்கொள்வது தவிர வேறு வழி இருந்திடவில்லை.
ஆரிமா அனைத்தும் விளக்கியதும் அவர்கள் ஐவரையும் நிகனிகா மற்றும் தாத்மினி தலைமையில் இரு குழுக்களாக பிரித்து இருவேறு இடங்களில் தங்குவைப்பதென்று முடிவானது.
நிகனிகாவின் குழுவில் பவித்ராவும் நவநீதனும் இருக்க தாத்மினியின் குழுவில் ரக்ஷிதா, ஆகாஷ், மற்றும் ப்ரவீனும் இருந்தனர்.
ஆரிமாவின் திட்டத்தின் படி பிரிந்து செல்வதற்கு முன் தன் நட்புக்களுடன் உரையாட நினைத்தான் நவநீதன்.
நிகனிகாவிடமும் தாத்மினியிடமும் கூறிவிட்டு தன் நட்புக்களை தனியே அழைத்து வந்த நவநீதன் மற்றவர்களிடம் கழுத்திலிருந்த மாலையை கழற்றச்சொல்லிட்டு தானும் கழற்றியவன்
“அந்த ஆரிமா சொன்ன திட்டத்துல ஏதோ குளறுபடி இருக்கிறதாக உங்களுக்கு தோனலயா?” என்று கேட்க பவித்ராவும்
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு நவீ. நமக்கு இங்குள்ள நடைமுறை எப்படினு தெரியலைனா கூட சில விஷயங்களை கூடவா நம்மால ஊகிக்க முடியாது?” என்று கேட்க
“ஆமாடா. அவங்க சொன்ன சில விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக இருக்கு. நாம எது செய்றதுனாலும் ஒருதடவைக்கு இரண்டு தடவை ஆராய்ந்து செய்யனும்.” என்று ப்ரவீன் கூற
“எனக்கும் ப்ரவீன் சொல்லுறது தான் சரினு தோன்றுது. ஆனால் நிகனிகாவும் தாத்மினியும் அதுக்கு தடையாக இருந்தா என்ன பண்றது?” என்று ரக்ஷிதா கேட்க நவநீதன்
“நாம முதல்ல இந்த இடத்தை பத்தின விவரங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேகரிக்கனும். நமக்கான நேரம் ரொம்ப கம்மியாக இருக்கு. அதோடு நாம செய்யப்போற எந்த செயலையும் செய்றதுக்கு முதல்ல நமக்குள்ள அதை பத்தி டிஸ்கஸ் பண்ணனும். இந்த மாலையை நாம கழட்டிட்டா நம்ம மொழி அவங்களுக்கு புரியாதுங்கிறது தான் நமக்குள்ள ஒரே ப்ளஸ். தேவையேற்படும் போது அதை நாம சரியாக பயன்படுத்திக்கனும். இன்னொரு விஷயம் நமக்குள்ள தொடர்பாடலுக்கு ஏதாவது வழியிருக்கானு தெரிஞ்சிக்கனும்.”
“நான் அந்த பொண்ணு தாத்மினிகிட்ட கேட்டேன். அவ அதுக்கு ஏற்பாடு பண்ணுறதாக சொல்லியிருக்கா.” என்று ப்ரவீன் கூற
“ம்ம்… அது என்னதுனு பாரு. அவங்களுக்கு தெரியாமல் அதை நாம பயன்படுத்தமுடியுமானு தெரிஞ்சிக்கோ.” என்று நவநீதன் கூற
“சரிடா. அதை நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் உங்களோட சுய பாதுகாப்புக்கு என்னென்ன செய்யமுடியுமோ அதை செய்துக்கோங்க. அதை மத்தவங்களுக்கு தெரியப்படுத்த முடிந்தால் தெரியப்படுத்துங்க.” என்று ப்ரவீன் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.
அவர்கள் பேசி முடித்ததும் மீண்டும் மாலையை அணிந்து கொண்டவர்கள் மீண்டும் தாத்மினி மற்றும் நிகனிகாவிடம் வந்தார்கள்.
அவர்களை அழைத்துக்கொண்டு இருவரும் இரு வேறு திசையில் நடந்தனர்.
நிகனிகா நவநீதனையும் பவித்ராவையும் அழைத்துக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் நிறைந்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.
அவ்விடம் ஆட்களாலும் வெவ்வேறு பொருட்களாலும் நிறைந்து சந்தை போலிருந்தது. நிகனிகாவிடம் கேட்டபோது அது அப்பிராந்தியத்தின் சந்தை என்றாள்.
“இங்கேயும் எங்க உலகத்தை போல நாடுகள் கண்டம்னு பிரிவுகள் இருக்கா?” என்று நவநீதன் கேட்க
“ஆம். இங்கும் பிரிவுகள் உண்டு. ஆனால் மேற்பிரபஞ்சம் போன்று அத்தனை விஸ்தரமானதல்ல. மொத்தமாக மத்யுக உலகத்திற்கு சொந்தமாக 78 பிராந்தியங்கள் உள்ளன. அவ் ஒவ்வொரு பிராந்தியமும் மனிதர்களால் ஆளப்படுகிறது. அந்த 78 பிராந்தியங்களும் 8 தேசாந்திரங்களுக்கு கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அந்த தேசாந்திரங்களை அனாகதய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கின்றனர். அந்த 8 தேசாந்திரங்களும் மகாராஜா அதுராதகனின் ஒற்றையாட்சியின் கீழ் வருகின்றது. இப்போது நாம் நின்றிருப்பது. ருத்விது ப்ராந்தியம். இங்கு தான் மகாராஜா அதுராதகனின் ரத்ன மாளிகை அமைந்திருக்கிறது. நாம் அனைவரும் பணியாளர்களாக மாறு வேடம் பூண்டு மாளிகையினுள் புகுந்திட வேண்டும். அதற்கு தேவையானவற்றை வாங்கிடவே தங்களை இவ்விடம் அழைத்து வந்தேன்.” என்று கூற சற்று தயங்கினர் மற்ற இருவரும்.
ஆதுரி இந்த திட்டத்தை கூறிய போது அவர்களுக்கு இது பல ஆபத்துக்களை தேடித்தருமென்றே தோன்றியது. அப்போது நவநீதன்
“நிகனிகா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாம கட்டாயம் அந்த மாளிகைக்கு பணியாளர்களாக போகனுமா?”
“இது தானே ஆரிமாவின் திட்டம்.” என்று நிகனிகா கேட்க அப்போது பவித்ரா
“ஆமா நிகனிகா. எனக்கும் நவீ சொல்றது சரினு தான் படுது. இன்னும் எங்களுக்கு இந்த உலகத்துல உள்ள பழக்கவழக்கங்கள் நடைமுறைகள் எதுவும் புரியலை. இது எதுவுமே தெரியாமல் மாளிகைக்குள்ள போறது அத்தனை பாதுகாப்பில்லை. ஆரிமா நேரம் கம்மியாக இருப்பதால இதை பற்றி யோசித்திருக்கமாட்டாங்க. ஆனால் அவங்க சொன்னபடியே எதை பற்றியும் தெரிஞ்சிக்காமல் உள்ளே போனா நிச்சயம் எங்களோட நடவடிக்கைகளே எங்களை காட்டிக்கொடுத்திடும். இதனால் நீங்களும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு இருக்கு.” என்று பவித்ரா யதார்த்தத்தை கூற நிகனிகாவிற்கும் அது சரியென்றே தோன்றியது.
“இப்போது என்ன செய்வது?” என்று கேட்க நவநீதன்
“நாம மாளிகைக்கு வெளியே தங்கலாம். இங்க இருந்தே மாளிகையை உளவுபார்க்க முடியுமானு பார்க்கனும். இங்க இருந்தபடியே நம்ம திட்டத்தை ஆரம்பிக்கலாம். உள்ள போய் ஆகனுங்கிற நிலைமை வந்தா உள்ள போகலாம்.” என்று கூற மற்றவர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.
மீண்டும் நவநீதன்
“நம்ம திட்டத்துல நாம செய்திருக்க மாற்றம் நம் மூன்று பேரை தவிர இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரியவேண்டாம். தேவையேற்படும் போது அவங்களுக்கு தெரியப்படுத்தலாம்.” என்று கூற மற்றவர்களும் சரியென்றனர்.
அதன் படியே அந்த சந்தைக்கு சென்று நிகனிகாவின் உதவியோடு தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டவர்கள் அதன் பின் ரத்ன மாளிகையின் பின்புறமிருந்த ஒரு சந்தினுள் அவர்களை அழைத்து சென்றாள் நிகனிகா.
அந்த சந்தின் இரண்டு புறமும் ஒரு கோர்வையாக மண்சுவற்றாலான வீடுகள் அமைந்திருந்தது.
அந்த சந்தின் முடிவிற்கு அவர்களை அழைத்து சென்றவள் அவளின் இடப்புறமிருந்த வீட்டின் கதவினை தட்டினாள்.
சற்று நேரத்தில் ஒரு பெண் கதவை திறந்து அவர்களை உள்ளே வரச்சொன்னாள். உள்ளே வந்ததும் அந்த பெண் நிகனிகாவிடம்
“மாளிகைக்கு செல்வதாக கூறினாய்?”
“ஆம். ஆனால் திட்டத்தில் சில மாற்றம். அதனாலேயே இவர்களை இங்கு அழைத்து வந்தேன்.”
“ஓ…. ஆகட்டும். அவர்களை அழைத்துக்கொண்டு கீழ் தளத்திற்கு செல். நான் சற்று நேரத்தில் வருகிறேன்.” என்றுவிட்டு அந்த பெண் உள்ளே சென்றிட நிகனிகாவும் அவர்களை அழைத்துக்கொண்டு அவள் கூறிய அடித்தளத்திற்கு சென்றாள்.
அந்த அடித்தளமும் இன்னொரு வீடு போன்றே காணப்பட்டது.
அங்கு வந்ததும் நிகனிகா
“இது என் தோழியின் இடம். தற்சமயம் அவள் மட்டுமே இங்கிருக்கிறாள். இங்கு வெளியாட்கள் யாரும் வரமாட்டர்.” என்று நிகனிகா அவ்விடத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட மற்றைய இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது தன் முகத்தை மறைத்துக்ககொண்டிருந்த அந்த துண்டினை அகற்றிய பவித்ரா ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு
“எப்படி தான் இதையெல்லாம் முழு நேரமும் போட்டிருக்கீங்க. இந்த கொஞ்ச நேரத்துலயே எனக்கு வெறுத்து போயிடுச்சு. இதுக்கு மாஸ்கே தேவலாம் போல இருக்கு.”
“தமக்கிது புதியதென்பதால் அவ்வாறிருக்கிறது. எமக்கோ இது பல வருட பழக்கம்.” என்று நிகனிகா கூற
“அதுவும் சரி தான்.” என்று நிகனிகா கூறியதை ஆமோதித்தாள் பவித்ரா.
பெண்களின் சம்பாஷணைகளில் கலந்துகொள்ளாத நவநீதன் அந்த அடித்தளம் முழுதையும் கண்களால் அலசினான்.
அங்கு படுக்கை முதற்கொண்டு விளக்கு, மேஜை, ஒரு சிறிய அலுமாரி, தண்ணீர் ஜாடி, இரண்டு முக்காலிகளென்று அனைத்தும் இருந்தது. சுற்றும் முற்றும் ஆராய்ந்தவன் நிகனிகாவின் புறம் திரும்பி
“இங்கேயிருந்தபடி மாளிகையை உளவு பார்க்க ஏதும் வழியிருக்கா?” என்று கேட்டான் நவநீதன்.
பேசியபடியே தாம் வாங்கிவந்திருந்த பொருட்களை பவித்ராவின் உதவியோடு அந்த அலுமாரியில் அடுக்கிக்கொண்டிருந்த நிகனிகா திரும்பி
“மாளிகையில் என்ன நடப்பதென்று தெரிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல. வெளியிலிருந்து யாரும் மாளிகையை உளவு பார்க்க முடியாதபடியே அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஆரிமா நம்மை மாளிகையினுள் நுழையச்சொன்னார்.”
“எல்லாம் சரி. ஆனா என்ன தான் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் உளவு பார்ப்பதற்கு ஏதுவாக ஒரு ரகசிய வழி இருக்கும். அது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நம்ம வேலை சுலபமாகிடும்.”
“ரகசிய வழியொன்றுண்டு. ஆனால் அதன் மூலம் நாம் உளவு பார்ப்பதென்பது முடியாத காரியம். அது பல நாட்களுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது.” என்று கூற சற்று யோசித்த நவநீதன் ரத்ன மாளிகையின் வரைபடம் கிடைக்குமா என்று கேட்க தான் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினாள் நிகனிகா.
அப்போது மேல் தளத்திலிருந்து கீழே வந்தாள் நர்த்தகி என்றழைக்கப்படும் நிகனிகாவின் தோழி.
அவளை கண்டதும் ஏதோ பேச வாயெடுத்த நவநீதன் அமைதியாகிட அதை கண்டுகொண்டவள் போல்
“என்னிடம் ரகசியம் காத்திடுமளவிற்கா நான் சந்தேகத்திற்குரியவளாக தெரிகிறேன்?” என்று கேட்க நிகனிகாவோ அவளை முறைத்தபடியே
“உன் ஓயாத நாவினை பற்றி நன்கு தெரிந்தபின் அதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திடுவர்.” என்று அவளை கேலி செய்ய
“என் புகழ் பரப்பிட நீயொருத்தியே இம் மத்யுக உலகத்திற்கு போதுமடி.” என்று சலித்துக்கொள்ள
“உற்ற தோழியாயிருந்து இதை செய்யத்தவறினால் அது நம் நட்பிற்கு அழகன்றே.” என்ற நிகனிகாவை முறைப்பது இப்போது நர்த்தகியின் முறையானது.
“என்னை கேலி செய்து கேடயம் பெற்றிடவே உனக்கு அந்த பிரம்மன் உருக்கொடுத்தானா?”
“உண்மையை உரைப்பதற்கு கேடயமெதற்கடி?என் ஆருயிர் சகியே.” என்று ஒருவரை மாற்றி ஒருவர் வம்பு செய்துகொண்டிருக்க இதை விட்டால் இப்படியே தொடருமென்றெண்ணிய நவநீதன்
“எனக்கு அந்த மாளிகையோட வரைபடம் கிடைக்குமா?” என்று கேட்க அதில் சுற்றுப்புறம் உணர்ந்த பெண்கள் இருவரும் அசடு வழிந்தனர்.
அப்போது நர்த்தகி தன் கையிலிருந்த சிறு பொதியொன்றை அவன் முன் நீட்டினான்.
“இது என் பாட்டனார் ரத்ன மாளிகையை பற்றி சேமித்து வைத்திருந்த குறிப்புகள். இது பற்றி அவரை தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அவர் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேளைதனில் இவற்றை என் வசம் ஒப்படைத்து இவற்றின் அடையாளத்தை அழித்திடுமாறு கூறினார். ஆனால் ஏதோவொரு உந்துதலில் நான் இவற்றை பத்திரப்படுத்தியிருந்தேன். அவர் மரணத்தின் பின் இதனை பற்றி ஆராய்ந்தபோது தான் இது ரத்ன மாளிகை பற்றிய குறிப்பேடென்று புரிந்தது.” என்று கூற அவசரமாக அதனை நர்த்தகியின் கையிலிருந்து வாங்கிய நவநீதன் அந்த பொதியிலிருந்தவற்றை எடுத்து அங்கிருந்த மேஜை மீது கடை பரப்பினான்.
அதில் பல காகிதங்களிருக்க அவை ஒவ்வொன்றாக நவநீதன் பிரித்துப்பார்க்கத்தொடங்க அவனுக்கு உதவினாள் பவித்ரா.
அந்த காகிதங்களில் எதிலும் வரைபடங்களோ ரத்ன மாளிகைகள் பற்றிய விவரங்களோ இல்லை. அந்த காகிதங்களில் இருந்தவையெல்லாம் ஒரு உருவமும் இரண்டு வரிகளில் வார்த்தை கோவைகளும். அதுவும் அந்த வார்த்தைகள் வித்தியாசமாகயிருக்க பவித்ராவிற்கும் நவநீதனுக்கும் எதுவும் புரிந்திடவில்லை.
இவற்றை பார்த்து குழம்பிப்போன நவநீதன்
“இதுல வரைபடம் ஏதும் இருக்கிற மாதிரி தெரியலையே.” என்று நர்த்தகியை பார்த்து கேட்க
“இதில் வரைபடமெதுவும் இல்லை. இதில் குறிப்புகள் மட்டுமே உள்ளது. இந்த ரத்ன மாளிகையை எம் வம்சாவளியினரே பல நூற்றாண்டுகளுக்கு முன் வடிவமைத்தனர். ரத்னமாளிகை இருநூறு வருடங்களுக்கு ஒரு முறை புனருத்தாரனம் செய்யப்படும். அதனை மேற்கொள்ளும் பொறுப்பு எம் வம்சாவளியினரையே சேரும். கடைசியாக என் பாட்டனாரின் காலத்திலேயே புனருத்தாரனம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு ரத்னமாளிகையை முழுதாய் சுற்றிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மாளிகையின் வரைபடத்தை வரைந்துள்ளார். அவர் ரகசியமாக செய்த இச்செயல் மன்னரின் செவிகளை எட்டிட அதன் விளைவாக அவரின் நாவும் கையும் துண்டிக்கப்பட்டதோடு உண்மையான பிரதி தீக்கு இறையானது. ஆனால் அதிஷ்டவசமாக என் பாட்டனார் வரைபடத்தை வரைவதற்கு முன் அவர் மட்டும் அனுமானிக்கும் வகையில் சில குறிப்புக்களை குறித்து வைத்திருந்தார். அதனையே என்னிடம் கொடுத்து அழித்திடக்கூறியிருக்கிறார்.”
“இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று பவித்ரா கேட்க
“இவையனைத்தும் என் பாட்டனாரின் உயிர்த்தோழர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் அவருக்கு பாட்டனார் வசம் இப்படியானதொரு குறிப்புத்தொகுப்பு இருப்பது தெரியாது. அவர் பாட்டினாரின் இந்த நிலைமைக்கு காரணம் என்னவென்று விளக்கியபோதே இத்தனை விவரங்களையும் அறிந்துகொண்டேன். பாட்டனார் கொடுத்த குறிப்பு ஒன்றின் வாசகத்தில் இருந்த சில சொற்களை நான் ரத்னமாளிகையின் வாயிலில் கண்டேன். அச்சந்தர்ப்பத்திலேயே இந்த குறிப்புக்கள் மாளிகை பற்றியதென அறிந்துகொண்டேன்.” என்று நர்த்தகி அனைத்தையும் விளக்கினாள்.
அப்போது நவநீதன்
“சரி. எனக்கு இந்த மொழி புரியலை. இதை ஒருதடவை படிச்சி காட்ட முடியுமா?பவி நீ நர்த்தகி படிச்சிக்காட்ட அதை எழுது. எனக்கு நிகனிகா படிச்சி காட்டட்டும். நான் எழுதிக்கிறேன்.” என்று கூற பவித்ராவும் அவன் சொன்னபடி செய்யத்தொடங்கினாள்.
வினாடிகள் கடந்திருக்க அனைத்தையும் எழுதிமுடித்ததும் நவநீதன் நிகனிகா மற்றும் நர்த்தகியிடம்
“உங்களுக்கு தெரிந்;த அரண்மணையில் இருக்கிற இடங்களையும் அது எந்தெந்த திசையில் இருக்குதுங்கிற விவரத்தையும் ஒரு வரைபடமாக வரைந்து தாங்க. நானும் பவியும் இந்த குறிப்புகளிலிருந்து ஏதாவது கண்டுபிடிக்கமுடியுமானு பார்க்கிறேன்.” என்று கூற பெண்கள் இருவரும்
அவன் கூறியபடி செய்யத்தொடங்கினர்.
இங்கொரு முயற்சி நடந்துக்கொண்டிருக்க மற்றவர்களை அழைத்து சென்ற தாத்மினி அவர்களை அந்த பிராந்தியத்தின் வேறொரு முனைக்கு அழைத்து சென்றாள்.
செல்லும் வழியில் ஒருவன் தாத்மினியை வழிமறித்து
“தாத்மி யாரிவர்கள்? இதற்கு முதல் இவர்களை எங்கும் பார்த்ததாய் நினைவில்லையே?” என்று அத்வைதன் என்றழைக்கபடும் நபர் கேட்க
தாத்மினியோ
“உமக்கு உம் காதலி யாரென்றே சரியாய் நினைவிருக்காத பட்சத்தில் இவர்களை நினைவிருக்க வாய்ப்பிருக்குமா?” என்று கூற தலையை நாலாபுறமும் அசைத்த அத்வைதன்
“நான்…நீ…” என்றவன் தடுமாற அதைகண்ட தாத்மினி
“என்ன இப்போது பேசவேண்டியதையும் மறந்துவிட்டிரா?” என்று அவனை மீண்டும் வாரிட
“உன்னிடம் நாகொடுப்பதற்கு முன் என் மதியை பயன்படுத்தத்தவறியதின் விளைவை அனுபவிக்கிறேன் இப்போது.”
“விஷயம் புரிந்ததல்லவா? இப்போது யாம் அனைவரும் செல்லும் வழிவிட்டு விலகி நில்லும்.” என்று கூறிவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு அவள் முன்னே நடக்க அத்வைதனோ தன்னை நொந்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
இதை பார்த்திருந்த ப்ரவீன் ஆகாஷிடம்
“எங்க போனாலும் உன்னை மாதிரியே ஒருத்தன் இருக்கான்டா.” என்று கூற அதை ஆமோதிப்பது போல் ரக்ஷிதாவும்
“சரியாக சொன்ன ப்ரவீன். இப்போ இவங்க அந்த ஆளை அசிங்கப்படுத்துன மாதிரி தான் இவனையும் நிறைய பொண்ணுங்க கலாய்ச்சிருக்கும்.” என்று கூறியபடியே ஆகாஷை முறைக்க அவனோ வெளியே இளித்தபடியே உள்ளே
“அவ சும்மா இருந்தாலும் இவன் விடமாட்டான் போல . டேய் நீ தனியாக மாட்டும் போது உனக்கு இருக்குடா.” என்று மனதிற்குள் ப்ரவீனை திட்டிக்கொண்டான்.
இவர்கள் மூவரும் சற்று பின்னால் வந்தபடியே மெதுவான குரலில் பேசிக்கொண்டதால் இவர்கள் பேசியதெதுவும் தாத்மினியிற்கு கேட்கவில்லை.
சுமார் அரை மணித்தியால நடைபயணத்திற்கு பின் அவர்களை ஒரு கட்டடத்தின் முன் றிறுத்தினாள்.
அந்த கட்டடம் அந்த நீண்ட பரந்த வெளியில் பாதி இடத்தினை ஆக்கிரமித்திருக்க அதன் அமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. அதன் அமைப்பு நிலத்திற்கடியிலிருந்து முளைத்த கள்ளிச்செடிபோல் இருக்க கள்ளிச்செடியில் காணப்படும் முட்கள் போல் அந்த கட்டிடத்தை பனித்துளிகள் ஆக்கிரமித்திருந்தது. அதை பார்த்து வியந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்.
அவர்கள் தேடலிற்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்மினி
“இவை பார்ப்பதற்கு பனிக்கட்டிகள் போன்றிருந்தாலும் இவை பனிக்கட்டிகளல்ல. இவையனைத்தும் வேள்வியின் வெற்றியை தெரிந்து கொள்வதற்காக மெய்யுனர்களால் உருவாக்கப்பட்ட மாய சிமிழிகள்” என்று தாத்மினி விளக்க அதை கேட்ட ப்ரவீன்
“சிமிழிகள்னா?” என்று வினவ
“இக்கட்டிடத்தின் மேற்பரப்பு முழுதும் லட்சக்கணக்காக மாயசிமிழிகள் உள்ளன. வேள்வியின் விளைவால் நெருப்பு வளையத்தின் சக்தி குறைவடையும் வீதத்திற்கு அமைவாக இங்குள்ள மாய சிமிழிகள் ஒளிரும். நான் அறிந்தவரை நெருப்பு வளையத்தின் சக்தி மாய உருவம் பெற்று இங்கு தான் சேமிக்கப்படுகிறது.” என்று கூற அப்போது ரக்ஷிதா
“ஆனா நிகனிகா நெருப்புவளையம் தன்னோட நெருப்பை மேற்பகுதிக்கு அனுப்புறதாக தானே சொன்னாங்க?” என்று கேட்க
“ஆம் அது உண்மை தான். ஆனால் நெருப்புவளையத்தின் சக்தியை குறைப்பதற்கு அதன் சக்தியை அதிலிருந்து களைந்திட வேண்டும். களையப்பட்ட சக்தியியை உரிய விதத்தில் பத்திரப்படுத்தாவிட்டால் அது உருமாறி மீண்டும் நெருப்புவளையத்தை அடைந்திட வாய்ப்புள்ளது. அதனாலேயே களையப்பட்ட சக்தியை மாந்திரீக சக்தியின் உதவியோடு மாய சிமிழியினுள் அடைத்திடுவர். சக்தியை இழந்த நெருப்பு துகள்களே மேற்பகுதி பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது.” என்று கூற அவளது அனுபப்படுகிறது என்ற வார்த்தை மற்றவர்களை ஸ்தம்பிக்கச்செய்தது.
“என்னது அனுப்பப்படுதா?அப்போ இதை யாரோ வேணும்னு தான் செய்றாங்களா?” என்று பவித்ரா கேட்க
“ஆம். சக்தியிழந்த நெருப்புத்துகள்கள் இங்கேயே தங்கிவிட்டால் அது மத்யுக உலகத்திற்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்திடுமென்பதாலும் மாயசிமிழிகளுக்குள் அடைந்திருக்கும் சக்தி தவறுதலாக வெளிப்பட்டுவிட்டால் அந்த துகள்களுடன் சேர்ந்துவிடுமென்ற அச்சத்தாலும் அவற்றிலிருந்து சக்தி களையப்பட்டதும் உடனடியாக அவை மாயப்புயலினாடாக வெளியேற்றப்படுகிறது.” என்று தாத்மினி கூறியதை கேட்டு சற்று அதிர்ந்து தான் போனார்கள் மூவரும்.
இத்தனை நாட்களாய் எரிமலை வெடிப்பினை இவர்கள் இயற்கையின் சீற்றமென்று எண்ணியிருக்க இன்றோ அது உலகின் இன்னொரு பகுதியிலுள்ளவர்களின் சதியென்று புரிந்துகொண்டனர்.
செய்திகளில் பார்த்த எரிமலை வெடிப்புக்களின் பாதிப்புக்கள் மூவரின் கண்முன்னே வர அவர்களுள் எழுந்த கோபம் அவரவர் விழிகளில் வெளிப்பட்டது.
அதை உணர்ந்தது போல் தாத்மினியும்
“சினம் கொள்ள இது உரிய நேரமுமோ தகுந்த இடமுமோ அல்ல. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் தோல்விக்கான படிகளை நோக்கி நகர்கிறோமென்று மனதில் கொள்ளுங்கள்.” என்று கூற மற்றவர்களுக்கும் அதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியிருக்கவில்லை.
“இப்போ நாம எங்க தங்கப்போறோம்.” என்று ஆகாஷ் கேட்க
“ஆரிமாவின் திட்டப்படி நாம் இங்கு உதவியாளர்களாக பணியாற்றப்போகிறோம். நம் திட்டப்படியே நீங்கள் அனைவரும் ஊமையர்களாக நடித்திடவேண்டும். எந்த காரணம் கொண்டும் தாம் அனைவரும் யாரென்று மற்றவர்கள் அறிந்திடக்கூடாது. அவ்வாறு தெரிந்திடும் பட்சத்தில்…” என்று நிறுத்த
“அப்படி தெரிந்த ஆட்களை ஆரிமா சொன்ன மாதிரி செய்யனும். அதானே?” என்று ப்ரவீன் கூற
“ஆம். நான் இப்போது தங்களனைவரையும் உள்ளே அழைத்து செல்லப்போகின்றேன். அவர்கள் முன் எக்காரணம் கொண்டும் தலையை உயர்த்திட வேண்டாம். கடைக்கண் பார்வை கூட ஆபத்து தான். நினைவில் கொள்ளுங்கள்.” என்று அவர்களை எச்சரித்;துவிட்டு உள்ளே அழைத்து சென்றாள்.
அவர்களை உள்ளே அழைத்து சென்ற தாத்மினி யாரிடமோ ஏதோ கூறிவிட்டு இவர்களை ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள்.
அங்கொருவர் அங்குமிங்கும் அலைந்தபடி ஏதோ செய்தபடியிருக்க அவரின் முன் தலைகுனிந்து நின்றவள்
“உதவிக்கு சிலரை அழைத்து வந்துள்ளேன்.” என்று கூற அங்கிருந்த நபர் நொடி நின்று நிதானித்துவிட்டு
“உன் பெயரென்ன?” என்று பொதுவாக கேட்க யாரை கேட்கிறாரென்று அறிந்து கொள்ள தலையுயர்த்த முயன்ற மூவருக்கும் தாத்மினியின் வார்த்தைகள் நினைவு வர மூவரும் அதே நிலையில் நின்றனர்.
அவர்கள் மூவரையும் ஆழ்ந்த பார்த்த அந்த நபர்
“இவர்களை மதினாவிடம் அறிமுகப்படுத்திவிட்டு இவர்களுக்கான வேலைகளை பிரித்துக்கொடு.” என்று கூறிவிட்டு அந்த நபர் தன் வேலையை தொடர அவர் கூறியபடி மதினா என்ற பெண்ணிடம் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு அவர்;களை வெளியே அழைத்து வந்தவள் அவர்களிடம் சில விடயங்களை தெளிவுபடுத்திவிட்டு அவ்விடத்தின் பின்புறத்திற்கு அழைத்து சென்றாள்.