மரணத்தின் விளிம்பில்
அவசர மற்ற அசைவுகள்...
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்கத்துடிக்கும் களங்கமற்ற கண்களோடு விட்டத்தைப் பார்த்தபடி படுக்கையில் பாக்கியம்... படுக்கை என்றால் சாதாரணப்படுக்கை அல்ல மரணப்படுக்கை.
தன் குடிகாரப் புருஷனின் இறப்பிற்குப்பின் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்குவதிலேயே ஏழையாகி போனவள் தான் பாக்கியம். மூத்த பிள்ளைக் காவேரிக்கு தங்க நகைகளை செய்து திருமணம் நடத்தி வழியனுப்ப தன் தாயை உச்சிமோந்து உவந்து காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி கட்டியணைத்து விடைப்பெற்றாள் மகள்...
தாயின் அரவணைப்பிலேயே இருந்து தன் தேவைகள் எல்லாம் நிறைவேற காதலியின் கரம் பிடித்து கொண்டு பெற்ற தாய்க்கு விடை கொடுத்தான் மகன்...
இந்தப் பூமி கிரகத்தில் புதியதொரு கிரகத்தை தன் பிள்ளைகளுக்கு உருவாக்கி கொடுத்த பாக்கியம் இன்று அனாதையாய் துயில்கொள்ளும் அமைதியகத்திற்கு செல்ல காத்திருக்கிறாள். ஆனால் முதுமை அங்கே அன்புக்காக ஏங்கி ஒற்றைக்காலில் தவம் இருக்கிறது என்ற உண்மையையும் நான் மறைப்பதற்கில்லை.
இத்தனை ஆண்டுகள் பிள்ளைகளுக்கென உழைத்து இளமை கரைந்து போய் இருப்பினும், அவளின் தேகம் சுருங்கிப்போய் இருப்பினும், தனக்கான ஒரு வாழ்க்கை வாழப்படாமலே போயிருந்தாலும், தன் பிள்ளைகளின் வருகைக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு கோடி வருட வாழ்க்கைக்கு சமம் என பெத்த மனம் பித்தென மாற தெளியாத சோக நீரில் ஆழ்ந்திருந்தாள் பாக்கியம்.
மரணத்தின் அழைப்பு ஓலைகளும் பாசக் கயிற்றின் ஊசலாட்ட ஓசையும் இறைந்து கிடக்கும் மரணத்தின் வாயிலின் மத்தியில் சோகம் ஒழுகும் மெல்லிய விளக்கொளியில், பாக்கியம் இத்தனைக் காலமும் தன் துயரம் சுமந்த அந்த கட்டிலில் படுத்து விடிய விடிய விழித்து கிடந்தாள்...
உயிர் தள்ளாடியது...
கண்களில் உரிய கண்ணீரும் ஏக்கத்தில் தள்ளாடியபடியே கன்னத்தில் விழுந்து தலையணையில் குடிகொண்டது.
ஆயிரம் ஆயிரம் கனவுகள் சுமந்து தன் பிள்ளைகளை சுமந்த பாக்கியம் இன்று தன் உடலை சுமக்க ஆளில்லாமல் பரிதாபமாய் கிடக்கிறாள்.
கடந்தது...
நேரம் கடந்தது...
விட்டத்தைப் பார்த்திருந்த கண்கள் மெதுமெதுவாய் கதவை பார்த்தப்படி சுற்றி நின்றது.
கதவின் திரைச்சீலை விலகியது...
திரைச்சீலைக்கு வெளியே பிசிறடிக்கும் ஒரு பெண் குரல் கத்தியது...
கூந்தல் கலைந்து, கோலம் சிதைந்து, வியர்வையில் பொட்டொழுகி, இரத்தச்சோகை கொண்டவளாய் நிறம் வெளுத்தப்படி உள் நுழைந்தாள் பாக்கியத்தின் மூத்தமகள் காவேரி.
பாக்கியம், சட்டென்று கண்ணிமிர்ந்து உள்நுழைந்தவளை பார்த்தாள்.
அவசரமாய் ஓடி வந்த காவேரி அம்மா! ஐயோ! என பதறினாள்.
இறப்பதற்கும் சம்மதமில்லாமல், வாழ்வதற்கும் வசதியில்லாமல் இத்தனை காலமும் தன் பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற இலட்சியத்தோடு உயிரை ஒற்றை விரலில் பிடித்திருந்த பாக்கியம் அன்பு உணர்ச்சியின் உச்சத்தில் ஏற கண்களில் நீர் கட்டியது.
நிலை தள்ளாடி, சுவரில் சாய்ந்த காவேரி படுக்கையில் இருந்த தன் தாய் பாக்கியத்தின் பாச நீர் தேங்கிய கண்களையே குறுகுறுவென்று பார்த்தாள்.
ஐயோ! அம்மா! அம்மா! என்று குழறி அவள் தன் தாயின் நிலை கண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
நிலை தள்ளாடி தரையில் சாய்ந்து அழுது புலம்பினாள்...
“ பதினெட்டு வருஷத்துக்கு அப்புறம் உன்ன நான் இந்த கோலத்தில பார்ப்பேன்னு நினைக்கலையே அம்மா” என்று கண்ணீருக்கு இடையில் அவளின் வார்த்தைகள் கரைந்து கரைந்து வந்தன.
பாக்கியம், தன் தலையை மெல்லமாக அசைத்து காவேரியின் முகத்தை பார்த்தாள்.
பாசத்துக்காக ஏங்கிய முதுமை சற்று சந்தோஷ விரக்தியில் நனைந்தது.
காவேரியின் அழுகை ‘சட்’ டென்று நின்றது.
தெறித்து தரையில் விழுந்த கண்ணீரில் ஒரு சொட்டு அவள் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காரணம் தன் தாய் முகத்தில் தோன்றிய புன்முறுவல்...
சிறிது நேரத்தின் பின் புன்முறுவல் கன்னச் சுருக்கத்தில் ஒளிந்துகொள்ள சோகமாய் ஒரு சிரிப்பு வெளி ஓடிவந்தது.
பாக்கியத்தின் பார்வையிலும் சிரிப்பிலும் மற்றும் ஒரு ஏக்கம் முகவரி தேடியது...
சில நிமிடங்கள் அவ்வாறே கடந்தன...
பிறகு பாக்கியத்தின் கண்கள் வான் பார்த்தன.
பிறகு சட்டென்று தாழ்ந்து காவேரியின் முகம் பார்த்தன.
தன் தாயின் இமைத்த விழியில் தென்பட்ட செய்கையின் அர்த்தம் புரிந்த காவேரி, “தம்பி உங்களை பார்க்க விரைவாக வருவான்” எனக் கூறினாள்.
வாழ்வா, சாவா என்ற பட்டிமன்றத்தில் இரு தரப்புகளும் இறங்கிவிட, தன் உயிரின் கடைசிச் சொட்டு ஒட்டியிருக்கும் மரணத்தின் விளிம்பில் தன் மகனின் வருகைக்காக காத்திருக்கிறாள்