Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மாறிலி மானிடர்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-10

படபடவென பாத்திரத்தை விளக்கி விட்டு காப்பியை போடத் துவங்கினார் சமுத்திரம்.. “அப்பா.. அங்க இருக்க வாளியில அம்மா தண்ணீ கலக்கி வச்சிருக்குறாங்க..” என ஜெயா கூறவும், “அவளை எவன் புண்ணாக்கை போட்டு கலக்க சொன்னான்.. புண்ணாக்கு விக்குற விலை தெரியுமா அவளுக்கு..” என திட்டி கொண்டே தண்ணீர் காட்ட, சினை மாடு அதனை ரசித்து குடித்தது.. வாளியில் நீர் காலியான பின்னும் அங்கும் இங்கும் உருட்டி நக்கிக் கொண்டிருக்க, “ட்டுர்.. வா.. அங்க என்னத்த போட்டு உருட்டிக்கிட்டு கிடக்க.. நட.. ம்ம்ம்.. நடங்கேன்..” என அதட்டி இழுத்துச் சென்று கம்பில் கட்டினார்..

உள்ளே சென்ற தண்ணீர் பசியைக் கிள்ள, தீவன கொட்டகையில் கிடந்த மொறுமொறுப்பான வைக்கோலை மெல்லத் துவங்கியது.. முற்றத்தில் பலகையைப் போட்டு, படிக்கும் புத்தகங்களை திறந்து ஏதேதோ குறிப்பெடுத்து கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்தார் நேசமணி.. சாலையை நோக்கி மூன்று கடைகளும் கிழக்கு நோக்கி இரண்டு கடைகளும் கட்டப்பட்டிருக்க, அதனை ஒட்டியிருந்த தொட்டியில் கிடந்த தண்ணீரை கோதி தலையில் வடியவிட்டு சிகையை மடித்து விட்டார்..

அவரைப் போலவே அவரது கேசமும் அடங்கியதில்லை.. அடங்கப் போவதுமில்லை.. பின் மெல்ல நடைபோட்டு, கடைகளில் ஒன்றைத் திறந்தார்.. உருளும் இரும்பு கதவின் உராய்வு இசையைக் கேட்ட சமுத்திரம், ஆர்ப்பாட்டமின்றி ஜெயாவின் முன்னே வைத்தார்.. தாயை ஒருமுறை ஏறிட்ட ஜெயாவை, “ம்ம்.. குடுத்துட்டு வா.. சின்னவன் வார நேரமாச்சுது..” என்கவும் பாவாடையை இழுத்துக் கொண்டே கடையை நோக்கி நடந்தாள்.. நேசமணிக்கு காபியை கொடுத்து விட்டு வரும் பொழுது அண்ணனின் மிதிவண்டியின் ‘கிளிங்.. கிளிங்’ என்ற ஓசையும் கேட்டது..

வீட்டின் முன் மிதிவண்டியை நிறுத்திய துரைமணி, “அம்மா.. நான் வந்துட்டேன்..” என்ற குரலோடு பின்னே கேரியரில் வைத்திருந்த புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.. நேசமணி-சமுத்திரம் தம்பதியினருக்கு உயிரோடிருக்கும் மூன்று செல்வங்கள்.. முதல் குழந்தை பிறந்து இறக்க, அடுத்து வந்தவனை பெரியவனாக பாவித்து கொண்டனர்.. அடுத்ததாக சின்னவன்.. இறுதியாக ஜெயா.. கடைக்குட்டி.. நேசமணி உடனான உரையாடல்களுக்கு உகந்தவள்..

அப்பொழுது, கைகளில் ஏதோ ஒரு பொட்டலத்தை தான் கொண்டு வருகிறார்.. “யோல்.. இத பிடி..” என நீட்டவும் உள்ளே ரேடியோவில் ஆகாசவாணி கேட்டுகொண்டிருந்த துரை அதர பதற ஓடிக்கொண்டிருந்த பாடலினை நிறுத்தினான்.. ஜன்னல் வழியே உள்ளே நோக்கி, “ஆன்..” என உறுமி விட்டு நடக்க, காலை நடக்கப்போகும் களேபரத்திற்கு தயாராகவே உறங்கியது அவ்வீடு..

மறுநாள் காலை ஏழுமணி,

மொத்த வீடும் அவசரகதியில் பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தது.. சாப்பாட்டை டிபன்களில் கட்டி பிள்ளைகளின் பைகளில் வைத்து விட்ட சமுத்திரம் ஒரு கையில் பின்னலையும் மற்றொரு கையில் பையுமாக துரிதப்படுத்தி கொண்டிருந்தார்.. வழக்கமான நாட்களின் இந்நேரம் வீடு சற்று பொறுமையாகத் தான் இருக்கும்.. ஆனால் இன்று எப்படியாவது சீக்கிரமே கிளம்பி ஓட வேண்டும் என்ற கட்டாய நிலை..

முதல் ஆளாக துரை மிதிவண்டியை எடுத்துக் கொண்டு பறந்தே விட, அவசரமாய் வெளியே வந்த ஜெயா மாட்டிக் கொண்டாள்.. வாசலில் பெரியவன் பெரிய பையோடு வந்து நிற்க, நேசமணியும் கடையில் அமர்ந்திருந்தார்.. அப்பாவையும் அண்ணனையும் திருதிருவென விழித்துவிட்டு குடுகுடுவென உள்ளே ஓடினாள்.. அவளின் இந்த செய்கையிலே சமுத்திரம் உணர்ந்து கொண்டார்..

மாதங்கள் கடந்து காணும் தன் பிள்ளையை நோக்கி ஓடிவர, நேசமணியின் செருமல் தடுத்து நிறுத்தியது.. “என்ன சீக்கிரமே வந்தாச்சு??” என வினவ, “உடம்பு ஒத்துக்கலப்பா..” என பணிவாக ஜார்ஜ் கூறினான்.. “என்ன உடம்பு ஒத்துக்கல.. இங்க இருந்து போகும் போதே அது தெரியலையா?? எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் போகணும்னு அறிவில்லையோ?? படிக்க காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா தான அறிவுன்னு ஒன்னு இருந்திருக்கும்.. படிக்க காலத்துலயும் சரி.. இப்போ இருக்க காலத்துலயும் பெத்தவன் பேச்சை கேக்கணும்.. கீழ்படிஞ்சு நடக்கணும்னு கிடையாது.. என்கிட்டே படிச்ச ஒவ்வொரு பயலும் அப்படி இருக்கான்.. என் மானத்த வாங்குறதுக்குன்னே எல்லாத்தையும் பண்ணுறது..” என தோள்களில் கிடந்த துண்டை எடுத்து உதறிக் கொண்டார்..

அவர் பேசி முடிக்கும் வரை மூச்சு வெளியேறும் சத்தம் கூட கேட்காமல் அமைதியாக நின்றனர் இருவரும்.. “என்னமோ பண்ணுங்க..” என்று விட்டு நேசமணி நகர, தாய்க்கும் மகனுக்கும் வேகமாய் துடித்துக் கொண்ட இதயம் இயக்கத்தை சற்று மிதப்படுத்தியிருக்க வீட்டினுள் சென்றனர்..

ஜார்ஜ் நேசமணியை உரித்து வைத்தாற் போல முக வடிவமைப்பு என்றாலும் நெற்றியும் அதில் புரளும் சுருள் கேசமும் சமுத்திரத்தின் சாயல்.. முகம் மட்டுமல்ல மதியும் நேசமணியை போல தான்.. அறிவாளி, புத்திசாலி, எதையும் நுணுக்கமாக ஆராயும் திறம் படைத்தவன், பழகும் அனைவரிடமும் மனதில் நீங்கா இடம் பிடிக்க கூடிய மன்னவன் என்று புகழ்ந்து கொண்டே சென்றாலும் நேசமணியின் பார்வையே வேறு..

அவரின் வகுப்பில் மாணவனாக இருந்த சமயத்தில் தொடங்கியது இந்த மாறுபட்ட கண்ணோட்டம்.. அவன் முதல் மதிப்பெண் வாங்குகிறான் நீ ஏன் வாங்கவில்லை?? என்ற கேள்வியில் தொடங்கியது இருவருக்கும் இடையில் விலக்கம்.. படித்து மதிப்பெண் வாங்குவது எவராலும் முடியும்.. புரிந்து அதனை மற்றவர்களுக்கு புகுத்துவது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்..

பள்ளியிலே வெறுத்துப் போன மதிப்பெண்கள் கல்லூரியிலும் கசக்கத் துவங்கியது.. அங்கு தொடங்கியது இருவருக்கும் விரிசல்.. அள்ள அள்ள குறையாத கேள்விச்செல்வம் பெற்றவன் பரீட்சையில் பக்கம் பக்கமாய் எழுத எரிச்சல்படுகிறான்.. வாத்தியார் மகன் இப்பேர்ப்பட்ட தொழிலில் இருக்கிறான் என்ற பெருமை சேர்க்கவில்லை என்ற குறை தந்தைக்கும் எனக்கு கிடைக்காத வேலையா இருக்க முடியும் என்ற மெத்தனம் தனயனுக்கும் புகுந்து விட்டது..

அதன் விளைவு பம்பாயில் ஒரு வருடம் பணிபுரிந்து விட்டு, உடல் அந்நகரத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாததால் வீடு திரும்புகிறான்.. எப்படியும் இவன் உருப்படப் போவதில்லை.. என்ற முடிவிற்கு வந்த தந்தையை என்ன செய்தாலும் அவருக்கு தாளப்போவதில்லை என்ற மூச்செரிந்தான்..

உடல் வலியில் முனகிக் கொண்டு எழுந்து அமர்ந்த புவனேஸ்வரி, வெயில் உச்சியில் சுழித்தும் தான் எழவில்லையே என்பதாலும் என்றும் இல்லாத திருநாளாய் எவரும் வீட்டில் இல்லை என்பதாலும் குழம்பிப் போய் சுற்றும் முற்றும் பார்த்தாள்.. முதலில் கண்ணில்பட்டது பூட்டியிருந்த கதவுதான்.. வெயில் வீட்டினுள் ஏறக்கூடாது என்பதற்காக கதவை சாத்தியிருக்கலாம் என எண்ணியவள் மெல்ல கூர்ந்து கவனிக்க, தாழிடப்பட்டிருந்தது..

“யம்மையோ.. யம்மையோ.. ஏலே மகேசா... யப்பா..” என அழைத்துப் பார்க்க, ஒரு சத்தமும் இல்லை.. அவளின் குரல் அவளுக்கே திரும்ப கேட்க, பயத்தில் உறைந்து கைகளை அசைக்க தலைமாட்டில் வேப்பிலை இருந்தது.. “எனக்கு பேய் பிடிச்சிட்டா?? அதான் எல்லாரும் என்னைய விட்டுட்டு கிளம்பி போயிட்டாவளா?? பேய் பிடிச்சா நடந்தது எதுவும் ஞாவம் இருக்காதே..” என தனக்குள்ளே பேசி கொள்ள, “ஐயோ.. எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்...” என தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்..

கட்டிலுக்கு அருகே ஒரு ஜன்னல் இருப்பது நினைவிற்கு வர, திறந்து சாலையில் நடந்து சென்ற ஒருவரை கையசைத்து கூப்பிட்டு, “எங்க அம்ம எங்க இருக்காவன்னு பாத்து கொஞ்சம் சொல்லுதியளா.. நான் உள்ள இருக்கத மறந்து போய் கதவை பூட்டிட்டாவ..” என உதவி கேட்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது.. பிரிந்து நின்ற உயிர் தற்பொழுதுதான் மீண்டும் உடலை சேர்கிறது..

“இங்கனே இருந்தா எரிச்சலா இருக்குமேன்னு செத்தேன் அவிய வீட்டுக்கு போயி உக்காந்தேன்.. உடனே ஆள உள்ள வச்சு பூட்டிட்டாடோயின்னு ஊர்ல கூப்பாடு போட்டுட்டா.. அவா என்ன ஒரு மாதிரியா முழிக்கா.. அப்பிடியா பிள்ள உள்ள இருக்கது கண்ணு தெரியாம பூட்டிட்டு போவேன்.. கூரோட பேசணும்..” என வளவளத்து கொண்டிருந்த கனியம்மாளை உஷ்ணமாக பார்த்தாள்..

“அப்பிடி உணரு இருந்தா எதுக்கு என்னைய உள்ள போட்டுட்டு பழக்கம் வுட போன.. நல்ல தாயா இருக்கவா எழுப்பி வுட்டுட்டு போயிருப்பா..” என குறைபட்டு கொள்ள, “நல்லா இருக்கு தாயி.. உன் கதை.. தாயிக்கு அறிவுரை சொல்லுத அளவுக்கு பெரியாளாயிட்ட..” என்றார் கனியம்மாள்.. “வுடு .. வுடு.. உனட்ட சத்தம் குடுத்தா என் நெஞ்சு தான் அடைக்கு..” என பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க முனைய, “உனட்ட மல்லுக்கு நின்னு என் மூச்சே போவுது.. நான் எதாச்சும் சொன்னேனா?? உங்கட்ட மோதி மோதியே என் ஆவி அத்து போவுது..” என காற்புள்ளியை இட்டார் கனியம்மாள்..

“யம்மா ஆத்தா.. ஆள விடு.. உனட்ட பேசி அநியம் கொண்டு போயிற முடியும் பாரு..” என கும்பிட்டு விட்டு, “தட்டை மட்டும் தள்ளி வுடு.. இப்பயே மணி பன்னெண்டு ஆய்ட்டு.. ஒன்னு ஆனா நேரே வாசல்ல வந்துட்டு மழுங்கட்ட மாதிரி வந்து நின்னுருவா..” என்கவும், “ஒன்னும் கிழிக்க வேணாம்.. கொஞ்ச நாளைக்கு சும்மா கெட.. உடம்புல சத்து இருந்தா தான சுத்த முடியும்..” என்று விட்டு காய்த்த கஞ்சியை ஊற்றி கொணர்ந்தார் கனியம்மாள்..

“என்ன இது?? தட்ட எடுன்னா கஞ்சிய கொண்டாந்து நீட்டுத.. கொஞ்சமாவது அறிவு இருக்கா..” என பேசிக் கொண்டிருந்தவள், “ஷ்.. உடம்பு காந்துது...” என பாவாடையை சற்று விலக்கி பார்க்க விபரீதம் புரிந்தது.. கண்களில் பயம் மின்ன, “யம்மயோ.. எனக்கு என்ன ஆச்சு.. பொட்டு பொட்டா போட்ருக்கு..” எனள் கேட்டாள் புவனேஷ்வரி.. “அம்மம் போட்டா அப்பிடி தான் இருக்கும்..” என்றபடியே நீட்ட, “எனக்கு வேண்டாம்.. நீயே குடி.. கஞ்சிய கண்டாலே வாந்தி வருது.. பழையத புளிஞ்சி செத்தொண்டி தண்ணி ஊத்தி கொண்டா.. வயிறு பசிக்கு..” என்றாள் புவனேஷ்வேரி..

“காத்துலே ரெண்டு இளக்குனா தெரியும்.. பழைய கஞ்சி வேணுமாம்ல.. பழைய கஞ்சி.. அம்மம் போட்டுருக்குதுன்னு சொல்லுதேன்.. மண்டையில ஏறுதான்னு பாரு.. இத தான் குடிக்கணும்.. நீ என்ன ஆட்டம் ஆடுனாலும் இது தான் உனக்கு.. அம்மம் இறங்குதது வரைக்கும் இப்பிடி தான் இருக்கணும்.. பீடி தட்டுல கைய வையு கையை முறுச்சிப்புடுதேன்.. வேணும்னா சொல்லு.. ராசம்ம வீட்டுல நாலு முருங்கலைய பறிச்சிட்டு வந்து தடுமங்கஞ்சி காய்ச்சி தாரேன்.. குடிக்கணும்னா குடி.. இல்லன்னா எக்கேடோ கெட்டு போ.. அவரு வந்து என்ன அடிச்சு கொல்லட்டும்.. அதான உன் ஆச.. என் உயிர எடுக்கதுக்குன்னே என் வயித்துல வந்து பெறந்திருக்கு..” என பொரிந்து தள்ளினார் கனியம்மாள்..

புவனேஸ்வரிக்கு ஒரு விஷயம் நன்றாக மூளையில் உரைத்து விட்டது.. என்ன தான் முரண்டு பிடித்தாலும் தண்டனை மாறப்போவதில்லை.. இந்த விஷயத்தில் அப்பா கூட அம்மாவின் பக்கம் தான் நிற்கப்போகிறார்.. போதிய படைபலம் இல்லாத நிலையில் சரணடைவதே மேல் என்ற முடிவிற்கு வந்தவள், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் “சேரி.. போ தொலையுது.. எனக்கு தடுமங்கஞ்சி காய்ச்சி தொவையல் அரைச்சு தா..” என கைதாகாமல் சிறைவாசம் அடைந்தாள்..

வீட்டிற்கு வந்து சேர்ந்த வேலப்பன் ஒரு மூச்சு திட்டித்தீர்க்க, வாங்கிக் கொண்ட கனியம்மாள் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.. இருவருக்கும் சண்டை முற்றினால் எழுந்து தீர்க்கும் அளவில் புவனேஸ்வரியின் உடலில் தெம்பு இல்லையே.. அடுத்து மூன்று பார்வைகளுக்கு சென்று வர, ஒரு துளி எண்ணெய் கூந்தலை அடையவும் இல்லை.. நீர் அவளை தீண்டவும் இல்லை.. வேப்பிலையோடே சுருண்டு கிடந்தவள் வீட்டை விட்டு வெளியே வரவும் இல்லை.. பொக்களத்தில் சந்தனம் பூச சொன்னால் உடல் முழுவதும் பூசிக் கொண்டு கருப்பனின் பெண்வகை போல அமர்ந்து பயமுறுத்தினாள்..

ஆனாலும் இதையே சாக்காக கொண்டு வீட்டில் இல்லாத ஆட்டம் போடுகிறாள்.. தாளித்த பொருட்கள் ஆகாது என்பதற்காக அனைவரையும் கஞ்சியை குடிக்க வைத்து.. இவள் பயன்படுத்திய எதையும் மற்றவர்கள் தொடக்கூடாது என்பதால் சமுக்காளமாக நார் கட்டிலில் அமர்ந்து குதிப்பது.. வீட்டில் எந்த வேளை(லை)யும் பாராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடியாடுவது.. வாங்கி வரும் வாழைப்பழத்தை எவருக்கும் கொடுக்காமல் சாப்பிடுவது.. என்று கொஞ்சம் அதிகமாக தான் செல்கிறாள்..

அவள் மட்டுமா.. வேலப்பன் வருகிற வரத்தெல்லாம் வரலாற்று கல்வெட்டுகளில் பொறிக்கலாம்.. மெனக்கெட்டு சென்று இளம் பனங்குலையை வெட்டி வந்து, பதநீரில் போட்டு அனைவரையும் பார்க்க வைத்து மகளுக்கு மட்டும் கொடுப்பது.. அருகிலேயே அமர்ந்து (வேப்பங்)குளை வீசுவது.. பட்டணத்திற்கு சென்று சந்தன வில்லை வாங்கி வருவது என்று அதிகப்படியாக தான் பண்ணுகிறார்.. என்ன செய்வது?? பார்த்தும் பார்க்காதது போல செல்ல வேண்டியுள்ளது.. ப்ச்..

சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த கனியம்மாளின் அருகே சென்று அமர்ந்து கொண்டு, “ஏம்மையோ.. தடுமங்கஞ்சி எப்பிடி காய்ப்ப??” என அதிசயமாக வினவ, “என்னத்துக்கு இப்போ வந்து கேக்க??” என சந்தேகமாய் பார்த்தார் கனியம்மாள்.. “ச்ச்.. சொல்லு ம்மே.. இப்போ தெரிஞ்சிட்டா தான நாளைக்கே நீ கீழ வுழுந்து கிடந்தாலும் ஒழுங்கா கஞ்சி காய்ச்சு குடுப்பேன்..” என்றவளை அப்படியே கொதித்து கொண்டிருக்கும் நீரில் அமிழ்த்தி விடவா என்பது போல கோபம் வந்தது..

“வாயில வசம்ப தேய்க்க.. நான் கீழ வுழுந்து கெடந்தா அப்பனும் மொவளுமா கொண்டாடுவியளே தவிர ஒரு வாய் கஞ்சி கூட தர மாட்டியளா.. நான் இழுத்துட்டே கெடந்தாலும் என் ரெண்டு மக்கட்ட போவேனே தவிர உனட்ட மட்டும் வர மாட்டேன்ம்மா.. ஆள பேசி பேசியே கொலையா கொன்னுருவ..” என கூற, “பேச்ச மாத்தாத.. ஒரு பிள்ள வந்து கேட்டா சொல்லி குடுக்கணும்.. சொல்லி தராம எப்பிடி சமையல் படிக்க முடியும்.. பெறவு.. வடக்கு வீட்டுக்காரிட்ட போயிட்டு.. ‘என் மொவா பாக்க தான் வெளிய உள்ள வேலை அவ்ளோத்தையும் பாப்பா.. அடுப்படிக்கு போவ சொல்லுங்களேன்.. ஒன்னும் தெரியாது..’ன்னு குறை வழக்கு போடணும்.. சொல்லு..” என விடாது கேட்டாள் புவனேஷ்வரி..

“சேரி.. சொல்லுதேன்.. ஒழுங்கா கேளு.. சோத்த வடிச்ச நீத்தண்ணி இருக்குல்லா.. அதுல நாலு பருக்க சோத்த போட்டு நல்லா குழைய தண்டிக்கு வேவ வுடனும்.. நல்லா குழைஞ்சு வந்ததும் மஞ்ச தூளும் சீரக தூளும் போட்டு ஈரான்கியம் ரெண்டு, வெள்ள பூடு, நாலு மிளவு செத்தேன் போல போட்டு. கடைசியா முருங்கலைய போட்டு மூடி வச்சிரணும்.. தண்ணிய நிறைய வச்சா தான் கஞ்சி மாதிரி வரும்.. இல்லன்னா சட்டி தான் கரிஞ்சி வரும்..” என கூறி முடிக்க, “எவ்ளோ பெரிய வேலை..” என வியப்பாக பார்த்தாள்..

கஞ்சி ஒரு புறம் கொதித்துள் கொண்டிருக்க, கனியம்மாள் அம்மியில் துவையலை அரைக்கத் துவங்கினார்.. பக்கத்திலேயே அமர்ந்து “ஏம்ம.. அந்த வடக்கு தெருவுல இருக்காவல்லா..” என கோளினை ஆரம்பித்தவளின் விரல்கள் ஒவ்வொன்றாக அம்மியின் ஓரங்களில் ஊர்ந்து அரைக்கும் முடிக்கும் முன்னே அரை மூடியை முடித்திருந்தாள்.. கொடுத்த பொருளில் கால் பங்கே துவையலாக வந்து சேர்ந்தது.. “சரி.. சோமில்லாத பிள்ளைய போட்டு என்னத்த வையிதுக்கிட்டு..” என விட்டுத்தள்ள, அவளுக்கு வசதியாய் போயிற்று..

அதிலிருந்து நான்காம் நாள் அம்மை முற்றிலுமாய் இறங்கி விட, மஞ்சளும் வேப்பிலையும் கலந்த நீரில் மஞ்சள் பூசி குளித்தாள்.. இப்படி மூன்று தண்ணீர் ஊற்றி முடித்த பின்னே பரிபூரண சுகம் கண்டது போல உணர்ந்தாள்.. இந்த பயணத்தில் வெறுத்தே விட்டாள் வாழ்க்கையை.. அதன் பிறகு சதா நேரமும் பீடி தட்டோடு அமரும் வீம்பை சற்று தள்ளியே வைத்தாள்.. மீண்டும் ஒருமுறை வந்தால் தாக்கு பிடிக்க உடல் இருக்குமோ இல்லையோ புவனேஷ்வரி இருக்க மாட்டாள்.. நாவே செத்து போனது போலிருந்தது..

“நாக்குல ருசி தெரியும் முன்ன.. அத திங்கட்டா.. இத திங்கட்டா..ன்னு பேய் வரத்து வந்துட்டாம்மா..” என கனியம்மாள் வடக்கு வீட்டுக்காரியிடம் கூறி முகவாயில் கைவைத்து கொண்டார்.. “ச்சேரி.. விடு.. நோயில கெடந்து வந்த பிள்ள.. இப்படி தான் என்னத்த திம்போம்னு இருக்கும்..” என ஆறுதல் கூற வேண்டியவளோ, “சும்மாயே உன் மொவ பேய் வரத்து தான வருவா..” என கூற, கனியம்மாளும் மறுப்பு கூறாமல் ‘ஊ..’ங் கொட்டி கொண்டார்..

மாலை நேரத்தில் நூறு தூள் மட்டுமே சுற்றும் புவனேஷ்வரி பக்கவாட்டில் பள்ளிகளுக்கும் வேலை தேடிக்கொண்டிருந்தாள்.. அன்றும் அப்படி தான்.. வாசலில் சாக்கு விரித்து அமர்ந்திருந்த புவனேஷ்வரி, வீட்டில் இருந்த ரேடியோவை ஒலிக்க விட்டிருந்தாள்.. ரேடியோவோடு மண்பானையில் இணைக்கப்பட்ட காலண்டர் அட்டை கொண்ட ஸ்பீக்கரில் அந்த தெருவுக்கே பாடல் ஒலித்தது..

சோர்வாக வந்து திண்ணையில் அமர்ந்த வேலப்பன், எப்பொழுதும் போல மகள் உருட்டும் பீடியின் அழகை பார்த்துக்கொண்டிருந்தார்.. அப்பொழுது, “ஏப்பா.. அந்த ராயப்பன்ண்ணே கடையில் எனக்கு ரோஜா வில்லை வாங்கி தாங்க.. கமரகட்டும் வேணும்..” என வந்து நின்றான்.. “மாடு கணக்கா வளந்துட்ட.. இன்னும் பால்வாடி பிள்ள மாதிரி வில்லை வாங்கி சப்பிட்டு அலையணும்னு நினைக்கியே.. ச்சீய்.. பிள்ளையால நீ..” என புவனேஷ்வரி சீண்டுவதற்கு தொடங்க, “ஏ.. நீ சும்மா கெட.. சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்து புடாத..” என அதட்டிய கனியம்மாள் “இதுக்குலாம் எங்கல துட்டு வச்சிருக்க.. வீட்டுக்கு பின்னாடி பணங் காய்க்க மரத்தை வச்சுருக்கியோ..” என கேட்டார்..

“பாக்கிக்கு வாங்கிக்கிடுதேன்..” என ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பதிலை கூறவும், “ஆன்.. நொட்டும்.. கடை பாக்கி நீயால கட்டுத.. குறுக்கு ஒடிய சுத்தி, எல்லா பாக்கியும் கட்டுதது நானு.. கடை பக்கம் போன கால நொடிச்சிருவேன்..” என மிரட்டினாள் புவனேஷ்வரி.. “ஆன்.. நொடிப்ப.. நொடிப்ப.. அது வரைக்கு என் கையு என்ன புளியங்கா பறிக்குமோ..” என சிறுபிள்ளை போல ராகம் இழுக்க, “ஏலே..” என நிறுத்தியிருந்தார் வேலப்பன்..

“இங்க பாருங்க ப்போ.. அவா சோமில்லாம கெடக்கும் போது நல்லா தின்னால்லா.. அவா குடிக்கான்னு நமக்கும் கஞ்சா போட்டு கொன்னுட்டு இப்போ சமுக்காளமா உக்காந்துட்டு வெட்டி பேச்சு பேசுதா.. எனக்கு திங்கணும் போல இருக்கு..” என இறைஞ்ச, சின்ன பையன் தானே என்பதால் சரி என்றார் வேலப்பன்.. “ச்சேரி.. போறது தான் போறீய.. வரும் போது வத்தல் ரெண்டு வாங்கியாங்க.. கறிக்கு போடணும்..” என கனியம்மாள் கூடுதல் வேலையை கூறிட, “அதான்.. அப்பிடி தான்.. ஒவ்வொன்னா யாவு.. போவும் போதே மொத்தமா வாங்கியாறதுக்கு இல்ல.. இங்கன கொஞ்சோண்டு.. அங்கன கொஞ்சோண்டுனு மனுஷன யமத்து பண்ணிட்டு..” என திட்டியபடியே நடந்தார்..

அப்பொழுது,

“ஏ.. மகேசா.. இந்தா.. இந்த ரெண்டு அணாவுக்கு வாங்கியா.. பாக்கில எழுதாத..” என பீடித்தூளுக்கு நடுவே கிடந்த இரண்டு அணாவை தூக்கி கொடுத்தாள்.. ஆர்வமாக அருகில் வந்தவனின் உள்ளங்கையில் வைத்து விட்டு, “எனக்கும் சேத்து வாங்கியா..” என்க “மாட்டேன்.. போ..” என பழிப்பு காட்டியவனின் தலைமுடியை பற்றியிருந்தாள்.. “ஏமோ.. ஏப்போ.. வுட சொல்லுங்க... வலிக்கி..” என கத்தி கூப்பாடு போட்ட பின்னரே விடுதலை கிடைத்தது.. “எனக்கு மட்டும் வாங்கிட்டு வராம இரு..” என சுட்டுவிரல் கொண்டு எச்சரிக்க, பின்னால் திரும்பி வாயில் இரண்டு விரல் வைத்து விரித்து நாவை நீட்டி பழிப்பு காட்டி விட்டு அப்பாவோடு நடந்தான்..

“இவ்வளோ வளந்ததுக்கு பெறவும் சின்ன சிறுசுங்க மாதிரி ஒன்ன ஒன்னு அடிச்சிட்டு அலையுது..” என திட்டிக்கொண்டே நகர்ந்த கனியம்மாளை, “எமோ.. உள்ள இருக்க இலை கட்டையும் எடுத்தா.. இப்பயே வெட்டி வச்சிட்டோம்னா காலையில உனக்கு வேலை கம்மியா இருக்கும்லா..” என குரல் கொடுத்தாள்..

சிறிது நேரத்தில் மகேசன் மட்டும் கைகளில் கமரகட்டோடும் சட்டை பையில் ரோஜா வில்லையும் போட்டுக்கொண்டு கால்கள் ஒன்றையொன்று தந்தியடிக்க வந்து சேர்ந்தான்.. “எனக்கும் தாலே..” என வன்முறையோடு புடுங்கி கொண்ட புவனேஷ்வரி வாயில் போட்டு கொள்ள கன்னமே இல்லாத முகத்தில் உள்ளே சென்ற வில்லை சிறிய மேட்டை உருவாக்கியிருந்தது..

வாயினுள் போடாமல் விரலிலே வைத்து கொண்டு நாவால் நக்கிக் கொண்டிருந்த மகேசனை இடிக்க, கமரகட்டு பிடிப்பின்றி தரையில் உருண்டிருந்தது.. “ஏமோ.. இவாள பாரும்மா...” என கத்திக்கொண்டே, புரண்டதில் படிந்திருந்த சாணித்தூளையும் மணலையும் தண்ணீரில் கழுவிவிட்டு, வாயில் போட்டுக்கொண்டான்.. “இதுக்கு தான் அப்பலே சொன்னேன்.. வாயில போடணும்..” என சிரித்தும் கொண்டாள் புவனேஷ்வரி..

இவ்வளவு கொழுப்பாக அவள் செய்யும் பொழுது அவன் மட்டும் விட்டு வைப்பானா?? கன்னப்பகுதியில் திரண்டு நின்ற வில்லைகளை இருபுறமும் இருந்து குத்திட, கடவாய் பல்லில் மோதி கன்னத்து சதைகளில் வலி எடுத்தது.. “நாய..” என அடித்தவள், “அப்பாவ எங்க?? கோயில்ல நின்னு பழக்கம் பேசுதாவளோ..” என கேட்டபடியே தலையை உயர்த்த கோவிலின் மண்டபத்தில் எந்த தலையும் தெரியவில்லை..

“எனக்கு தெரியல.. வரும் போது பெரியப்பா வீட்டுல கூட்டமா நின்னுது.. அதுல நின்னு பேசிட்டே என்ன வீட்ட பாத்து போன்னு சொல்லிட்டாவ..” என்றவன் திண்ணையில் சரிந்து கொள்ள, “ஏமோ.. ஏமோ.. இங்க சீக்கரம் வாங்க.. ஏதாவது ஒன்னு சொல்லணும்னா தான் ஆடி அசைஞ்சு வாரது.. சீக்கரம்..” என சிடுசிடுக்க, “வேலைய பாத்துட்டு இருக்கும்போது தான் ஏமோ.. வாமோன்னு கனைக்க வேண்டியது.. வீட்டுல தான இருக்கேன்.. ஊருக்கே கேக்க மாதிரி ஏலம் போட்டுக்கிட்டு கெடக்கா.. என்னன்னு சொல்லித் தொல.. சோத்த வடிக்கனும்..” என அதற்கு மேல் படபடத்தார் கனியம்மாள்..

“ஏம்ம.. அங்க மேல தெருவுல கூட்டமா இருந்துச்சாம்.. அதுல நின்னு பேசிட்டு இருக்காவளாம் அப்பா.. அவன்வ என்னத்தயாவது ஏற்கு மாறா பேசுதான்னு உன் வீட்டுக்காரரு அங்க நின்னுட்டு என்னத்தயும் இழுத்துட்டு இருக்காம.. சண்டைய மட்டும் போட்டனுவன்னா பரவாயில்ல.. கைய வச்சான்வன்னா என்ன பண்ணுதது.. போ.. போய் என்னன்னு பாரு.. சோத்த தான வடிக்கனும்.. அத நான் பாக்கேன்.. சீக்கரம் போய் பாரு..” என விரட்டினாள் புவனேஷ்வரி..
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம் – 11

ஜார்ஜ் ஊருக்கு வந்து பத்து நாட்கள் கடந்து விட்டது.. இப்பொழுது வரை நேசமணி முகம் கொடுத்து பேசவும் இல்லை.. தெருவில் நின்று சத்தம் போடவும் இல்லை.. இந்த அமைதி சமுத்திரத்திற்குத் தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.. ஜார்ஜும் நேசமணியை ஒரு பொருட்டாய் நினைக்காமல் தவறாது ஆலயத்திற்குச் சென்று பாலர் வகுப்புகள், வாலிபர் வகுப்புகள் என்று நேரத்தை செலவிட்டுப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான்.. அன்று மாலைப் பொழுதில் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு, ஒரு கையில் வேதாகமத்தை நெஞ்சோடு அணைத்தபடி நடந்து வந்து சேர்ந்தான்.. வாசல் முன் நட்டுவைத்திருந்த முருங்கைகளுக்கு நடுவே தெரிந்த ஒளியால் கண்டுகொண்ட சமுத்திரம் வாசலில் குன்றியிருந்த ஒளியில் வந்தமர்ந்தார்..

வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த சமுத்திரத்தை கண்டதும், “என்னம்மா வாசல்ல உக்காந்திருக்கிய.. அவன் வரலியா??” எனக் கேட்டவன், “உன் மவா ஊருக்குப் போய்ட்டா போலயே..” என்றபடியே கிடைத்த சிறு இடைவெளியில் உள்ளே நுழைந்தான்.. “ஆமா.. நாளைக்குக் காலையில ஹாஸ்டல்ல இருக்கணும்னு சொல்லிட்டாங்களாம்.. நம்ம துரை தான் பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு போய் விட்டுட்டு வந்தான்...” எனக் கழுத்தை மட்டும் திருப்பிய சமுத்திரத்தினுள் பல குழப்பங்கள்..

உடையை மாற்றி விட்டு தாயின் காலுக்கு அடுத்து இருந்த படிக்கட்டில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான்.. “இந்த வெளிச்சத்துல படிக்காத பெரியவனே.. கண்ணு கெட்டு போகும்..” என்று அக்கறையுடன் கூறி உள்ளே அனுப்ப, ரேடியோவில் “முஜே நீந்துன்னு ஆயே..” என்று இந்தி பாடல்களைப் போட்டு வாசிப்பை தொடர்ந்தான்.. “அவர்ட்ட சண்டை போட்டுட்டு பம்பாய் வரைக்கும் கிளம்பி போயிட்டு ஏன் திரும்பி வந்த?? ஏரியா சரி இல்லையோ..” என மெல்ல பேச்சு கொடுக்க, “இல்லம்மா.. ஏரியா எல்லாம் நல்லா தான் இருந்துது.. ஆனா என் உடம்புக்கு ஒத்துக்கல.. நைட் ஷிப்ட்.. காலையில வந்து தூங்குனா சாயங்காலம் தான் எந்திரிக்க முடியும்.. எந்திரிச்சு அந்த ஊருல போய் நம்ம சாப்பாட்ட எதிர்பாக்க முடியுமா?? ஒரு தூதும் ஒரு பாவ்பாஜியும் சாப்ட்டதுல பின்னாடி புண்ணு வடிக்க ஆரம்பிச்சிட்டு.. அதான் வந்துட்டேன்..” என்று விட்டு மீண்டும் மூழ்கிப் போனான் அந்தப் புத்தகத்தினுள்ளே..

சரி என்று சாலையை வேடிக்கை பார்க்க, ஒரே பெண்பிள்ளை வீட்டை விட்டு கிளம்பியதும் மொத்த வீடுமே களை இழந்தது போல வெறிச்சோடிக் கிடந்தது.. அந்த நேரத்தில் “ஏன் நாங்க இல்லையா??” என்பது போலப் பசுக்கள் “ம்மா..” எனக் குரல் கொடுத்தது.. “ம்க்கும்.. வைக்கல் அள்ளி போடணும்னு நினைச்சேன்.. மறந்தே போயிட்டேன்.. சின்னவன் கிளம்பி போனதும் நீ வருவியான்னு பார்த்துட்டே வாசல்ல உக்காந்தேன்.. அந்தால மறந்து போயிருக்கேன்.. கோட்டிக்காரி மாதிரி..” எனத் தன்னைத் தானே புலம்பிக் கொண்டு எழுந்து, தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கு தீவனம் அள்ளிப் போடச் சென்றார் சமுத்திரம்..

அந்த நேரத்தில் வீடு திரும்பிய நேசமணி கடையைத் திறக்க, அவருடைய மற்றொரு கடையில் வாடகைக்கு அமர்ந்த உள்ளி வியாபாரி ஒருவர், “என்ன நேசமணி வாத்தியாரே.. பம்பாய் போன பெரியவன் வந்துட்டான் போல..” எனப் பழக்க தோஷத்திற்காகக் கேட்க, “என்ன வந்தான்.. படிக்கக் காலத்துல இருந்து இப்போ வரை என் பேச்ச எங்க கேக்கான்ங்கியரு.. அவரு பெரிய சண்டியரு.. நம்ம பேச்ச எல்லாம் கேக்கப் போறதில்ல.. அவர் நினைச்சத தான் நடத்துவாரு.. ஆள போல உள்ளவனுவ எல்லாரும் என்னத்தையோ படிச்சுப் பாஸ் பண்ணி, கவர்மென்ட் உத்தியோவத்துல உக்காந்துருக்கான்.. எனக்கு வாய்ச்சது சும்மா மாடு மேஞ்சிட்டு திரியுது.. நம்ம என்னத்த சொல்ல முடியும்.. ஒன்னு சொன்னா போதும் ஆத்தாக்காரி வந்து குறுக்க நின்னுர்றா.. வாத்தியார் புள்ள மக்குன்னு சும்மாவா சொன்னான்..” என நெடு உரையை ஆற்றிய திருப்தியில் கதவை திறக்க, “சரி வாத்தியாரே.. நான் வாரேன்..” என்றுவிட்டு இடத்தைக் காலி செய்தார் கடைக்காரர்..

இந்த வார்த்தைகள் அனைத்தும் உள்ளே இருந்த ஜார்ஜிற்குத் தேள் கொட்டியது போலக் காந்த, “இவர் வாயை அடைப்பதற்காகக் கண்டிப்பாக வேலைக்குச் சென்றே ஆக வேண்டும்..” என்ற உறுதியை எடுத்தான்.. நேசமணியைப் பற்றிச் சுருங்க கூற முடியாது என்றாலும் அந்த நெடுவிளக்கத்தில் மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளலாம்.. தலைமுறை தலைமுறையாக ஆசிரியர் பணி செய்து வர, நேசமணியின் அப்பாவிற்கும் அப்பா வாங்கிய ஏதோ ஒரு சாபத்தால் நேசமணியின் அப்பா அப்பாத்துரைக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைத்து பிறந்து இறக்க தொடங்கின..

நான்கு பிள்ளைகளை இழந்த அப்பாத்துரையிடம் அந்தச் சாபத்திற்குப் பரிகாரம் சிலர் கூற, ஐந்தாவது வாரிசாகப் பிறந்தார் நேசமணி.. பிறந்தும் அதில் பல சிக்கல்கள்.. சில சகாப்தங்களின் பிறப்புக்களுக்கு முன் சில பலிகள் கேட்குமாம் வரலாறு.. நோய் நொடியோடு நோஞ்சானாக இருந்த நேசமணியை ஒரே பிள்ளையே என்று மார்பிலும் தோளிலும் தூக்கி போட்டு வளர்த்தார்.. இவருக்குப் பின் இரண்டு தம்பிகள் பிறந்ததெல்லாம் வேறு கதை..

ஒற்றைப் பிள்ளை என்பதில் செல்லம் அதிகமாகி விட, “அஞ்சாவது பிள்ள பஞ்சா பறக்கும்..” என்ற சொலவடைக்கு இலக்கணமாகிப் போனார்.. நல்ல படிப்பறிவினை பெற்ற நேசமணிக்கு இருபத்தி ஐந்து வயதில் அரசாங்க ஆசிரியராகப் பதவி கிடைக்க, இரண்டு வருடத்தில் இருபத்தி ஒன்பது வயதான சமுத்திரத்தை திருமணம் செய்து கொண்டார்.. ஆக ஆசிரிய குடும்பத்திற்கு ஆசிரிய மருமகளே தேர்ந்தெடுக்கப்பட்டார்..

ஆசிரியர்களுக்கே உரித்தான கர்வம் ஜார்ஜால் பூர்த்திச் செய்யப்படவில்லை என்ற கோபம் அவன் மேல் வெறுப்பை உண்டாக்கியது.. ஜார்ஜும் இவர் மேல் கொண்ட கோபத்தால் இளங்கலை இயற்பியல் படிப்பை வேண்டுமென்றே விடுப்பு எடுத்துத் தோல்வி அடைந்து வாழ்வை கேள்விக்குறியாக்கி கொண்டான்..

தற்பொழுது தந்தையின் வார்த்தைகளைத் தாங்கி கொள்ளாமல் என்று இல்லை.. தன்னாலும் முடியும் என்பதை உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற வெறியில் குடிமைப்பணித்தேர்வை எழுதத் தொடங்கினான்.. தொடர்ந்து நூலகம் சென்று எடுத்து வந்த புத்தகங்களோடு வாழ்வை நடத்தினான்.. கேட்கும் பொழுதெல்லாம் சமுத்திரமும் தயங்காமல் பணத்தை எடுத்து கொடுத்தார்..

புவனேஸ்வரியின் வார்த்தைகளில் அங்கிருந்து வேகமான எட்டுக்களோடு கனியம்மாள் கிளம்பிட, சாலையில் இறங்கி விட்டவரின் பாதங்களால் உருவான அழுத்தத்தை முற்றத்தில் அமர்ந்திருந்த புவனேஸ்வரியால் உணர முடிந்தது.. சாணி மெழுகிய தரையின் சிறப்பு அதுவல்லவா..

அவரின் வேகத்தைக் கண்டு பாதி வழியில் ராசம்மாள் மறித்து, “ஏ.. கனியம்மா.. இவ்வளோ அவசரமா எங்க போறீய..” என வினவ, அவ்வளவு தான்.. வந்த வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, “ங்கே.. கேளுங்க கூத்த.. சாயங்காலமா காப்பிய போட்டு முத்தத்துல உக்காந்து குடிச்சிட்டு இருந்தா எங்க வீட்டு சிறுசு இருக்கேருங்க.. வேலைக்கும் போறதில்ல.. ஒரு ரூவா காசு கொண்டாந்து வீட்டுல தர்றதுக்கும் துப்பில்ல.. கமர்கட்ட வாங்கியா ரோஜா பாக்க வாங்கியான்னு சும்மா இருந்த மனுஷனை உசுப்பிக் கூட்டிட்டு போயிட்டான்.. அந்தாளே என்னைக்காவது தான் உருப்படியா வந்து சேருதாரு.. இதுதான் சாக்குன்னுட்டு கடைக்கு இழுத்துட்டு போயிட்டான்.. போன மனுஷன் அந்தாலே போனவரு தான்.. இந்தச் சின்னப் பயல மட்டும் வீட்டுக்கு விட்டு வச்சிருக்காரு.. இந்த ராத்திரில எங்கயாச்சும் போயிட்டானா என்ன செய்யுததும்மா.. அதுக்கும் எனட்ட தான் மல்லு கட்டனும்.. சேரி.. நின்ன இடத்துலயாவது வால சுருட்டிட்டு நிப்பாறானு கேளுங்க.. ஆளுக்கு முந்திக்கிட்டு எவன அடிக்கலாம்.. எவன சாத்தலாம்னு பாக்கணும்.. இவரு வீரம் அங்க செல்லலன்னா போதும் நேரே வீட்டுல தான் கனைக்கணும்.. இந்த மனுஷன கட்டிக்கிட்டுப் பாடாப் படுதேனம்மா...” என ராகமாய்ப் பாடி கொண்டிருந்தார்..

“சேரிக்கா.. அங்க என்னயுதாருன்னு பாத்துட்டு வாரேன்.. சீக்கரம் போவலன்னா வீட்டுல சோத்த வடிக்கேன்னு காலுல கீலுல போட்டுட்டான்னா வச்சிக்கோங்க.. எவன் தூக்கிட்டு செமக்க.. இப்ப தான் அம்மம் போட்டுச் செத்தேன் நிமிந்து நிக்கா..” எனத் தன் பாட்டைப் பாடி கொண்டே அங்கிருந்து நகர்ந்த கனியம்மாள்; இரண்டு மூன்று இடங்களில் இதே பாட்டைப் பாடி விட்டு மேலத்தெருவை அடையும் பொழுது மணி எட்டாகியிருந்தது.. பொன்னம்மா திண்ணையில் சோகமே உருவாய் தலையில் கையை வைத்து அமர்ந்து தலையைக் கவிழ்த்திருந்தார்..

வீட்டில் பொறுப்பாகச் சோற்றை வடித்து விட்ட புவனேஷ்வரி சாம்பாரின் வழிமுறை தெரியாமல் அப்படியே இறக்கி வைத்துவிட, தம்பிக்கும் தனக்கும் தட்டில் போட்டு உண்ண அமர்ந்தனர்.. புவனேஸ்வரிக்கு பீடியை உருட்டி விட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ருசியின்றி உள்ளுக்குள் இறங்க, மகேசனோ சொல்லலாமா வேண்டாமா எனக் கண்களை உருட்டி யோசித்துக் கடைசியாக “எனக்கு எதுக்கு வம்பு.. கொழம்பு நல்லா இல்லன்னு சொன்னா அடுத்த நேரம் கஞ்சிக்கு வழியில்லாம பண்ணிப்புடுவா...” எனச் சத்தமின்றிப் பொடுபொடுவெனத் தொண்டையில் கொட்டி விட்டு உள்ளிறக்க தண்ணீரை மடமடவெனக் குடித்து முடித்தான்..

தாயை எதிர்நோக்கி வாசலில் ஒரு பார்வையும் தட்டில் மற்றொரு பார்வையும் வைத்துக் கொண்டே பீடியை உருட்டிக் கொண்டிருக்க, அக்காவிற்குத் துணையாகத் திண்ணையிலே பாயை விரித்துச் சாய்ந்து விட்டான் மகேசன்.. வடக்கு வீட்டுக்காரி மேம்பார்வைக்காக வராண்டாவில் நடக்க, “ஏ.. புவனா.. அப்பல போன உங்க அம்ம இன்னுமா வர காணும்..” எனக் கேட்க, “ஆமா.. இன்னும் வரல.. என்னயுதாவன்னு தெரியல..” என்றவளின் பேச்சு பேச்சாக இருந்தாலும் விரல்கள் இயக்கத்தை நிறுத்தவே இல்லை..

அதன் பின்னே நினைவிற்கு வர, மகேசனை வாசலை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, வீட்டினுள் நுழைந்து இதுவரை அங்கும் இங்குமாகச் சொருகி வைத்திருந்த சிறுக சிறுக சேர்த்த சேமிப்பை ஒன்று கூட்டினாள்.. நாணயமாய்ச் சம்பாதித்த நாணயங்களையும் பத்திரமாய்ச் சேமித்த பணத்தாள்களையும் ஒன்றாய் குவித்து வைத்து எண்ணத் தொடங்கினாள்.. அப்படியும் இப்படியுமாக ஆயிரத்து நூற்றி இருபத்தி மூன்று ரூபாய் சேர்ந்திருந்தது.. அனைத்தையும் ஒரு பையில் கட்டி, பீரோவின் கிடங்கில் பத்திரமாக வைத்து பூட்டி சாவியைப் ஒட்டுப்பறை கிடுக்கில் ஒளித்து வைத்தாள்..

மீண்டும் எதுவுமே நடவாதது போல முற்றத்தில் அமர்ந்து கொள்ள, கொஞ்ச நேரம் கழித்து வந்தார் கனியம்மாள்.. “நேரம் ஆச்சோ.. சாப்பிட்டியளா?? அங்க அவிய பேசிட்டே இருந்ததுல நேரானதே தெரியாம போயிட்டு.. சோத்த வடிச்சிட்டியா?? யம்மாடி.. கொழம்ப அப்பிடியே போட்டுட்டு போயிட்டனா.. கொதிச்சு காய்ஞ்சிருக்கும..” என்றவாறே அடுப்பாங்கரையை நோக்கி ஓட, “நாங்க ரெண்டு வேரும் சாப்பிட்டுட்டோம்.. நீங்க வார வரைக்கும் வயித்துப் பசிலே கெடக்கவா??” எனக் கூறினாள் புவனேஷ்வரி..

“என்ன சாப்பிட்டியளா?? கொழம்ப நான் தாளிக்காமல்லா போட்டுட்டு போனேன்.. நீ தாளிக்கலயாக்கும்.. என்னனி தான் பாத்தியோ.. அந்தப் பயலுக்கும் அததான் ஊத்தி குடுத்தியாக்கும்..” எனக் குறைப்பட்டுக் கொள்ள, “நான் என்னயுவேன்.. நீ பாட்டுக்கு போட்டுட்டு எங்கனயோ பழக்கம் வுட்டுட்டு கெடந்தா.. வீட்டுல பிள்ளயளுவ இருக்குமே.. சாப்பிட்டுதுவளோ இல்லையோன்னு நீ தான் ஓடியாரனும்.. இதாவது பாத்தேனேன்னு சந்தோசப்பட்டுக்கோ.. அத வுட்டுட்டுக் குறை பேசனும்னே எதாச்சும் சொல்லாத...” எனப் பதிலுக்குப் பேசினாள் புவனேஷ்வரி..

“அங்க அவிய பேசிட்டு இருக்கும் போதே ந்தா வாரேன்க்கான்னு வுட்டுட்டு ஓடியா வர முடியும்.. ஆளுக்கு மேல வளந்த புள்ள இதெல்லாம் பாக்காதோன்னு கேக்க மாட்டாவளாக்கும்.. நல்ல பிள்ள நீ..” என மழுப்பலாகப் பேசிக் கொண்டே தாளித்து, ஊற்றிவிட்டுத் தட்டில் சோற்றோடு வெளியே வந்தார் கனியம்மாள்..

“அங்க என்ன நடந்துது?? என்ன சொன்னாவன்னு சொல்லுததுக்கு இல்ல.. வந்ததும் உடனே சோத்த போட்டுட்டு உக்காந்துற வேண்டியது..” எனப் புவனேஷ்வரி குத்தலாய் பேச, “இவ்வளோ நேரம் அங்க நின்னே கேட்டது காலு உளையுது.. தொண்ட வரவரங்கு.. ஒரு வாய் சோத்த திங்க வுட மாட்டைக்க..” எனத் திருப்பிக் கொண்டே உண்ணத் தொடங்கினார்.. “ஆஆஆன்னன்ன்ன்ன்.. என்ன பேசும் போது எங்களுக்கு இனிக்கனும்.. இவியல ஒரு வார்த்த சொல்ல முடியல.. உடனே பொத்துட்டு வந்துருது.. ஒழுங்கா பிசைஞ்சி சாப்புடு..” எனக் கூறி விட்டுத் தட்டில் இருந்த பீடியை வட்டுப்பெட்டிக்கு மாற்றினாள்..

கனியம்மாள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அடுத்த நாளுக்கான இலையை ஈயப்பாத்திரத்தில் முக்கி எடுத்துத் திண்ணையில் சாய்த்து வைத்துக் கொண்டே, “என்னம்மோ நடந்துது.. அப்பா எங்க??” என வினவினாள் புவனேஷ்வரி..

“அந்தக் கொடுமைய ஏன் கேக்க?? நம்ம அரசி இருக்கால்ல.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியூர்ல வேலைனுட்டு கிளம்பி போனா.. இவா கூடப் படிச்சவளோ பழகுனவளான்னு தெரியல.. கூட்டிட்டு போயி வேலை வாங்கிக் குடுத்துருக்கா..” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, “ஏம்ம.. இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே.. இத கேக்கவா இவ்ள நேரம் ஆக்குன..” எனக் குறுக்கே நுழைந்தாள் புவனேஷ்வரி.. “வயசுக்கு மூத்தவிய ஒன்னு சொல்லிட்டு இருக்கும் போதே குறுக்கப் பேசப்டாதுன்னு தெரியாதோ உனக்கு.. உங்கப்பன மாதிரி கோணக்கால் நீட்டுதியே.. எம்மா இது எங்க போயி முடியுமோ..” என முகவாயில் கைவைத்துக் கொண்ட கனியம்மாளை “நான் எங்கேயோ போய் முடியுதேன்.. நீ முதல்ல ஆரம்பிச்ச கதைய முடிச்சு அழு..” என மீண்டும் அதே பாதைக்குக் கொண்டு வந்தாள்..

“ஆன்.. அப்பிடி அந்தப் பிள்ள கூட்டிட்டுப் போனது அவளோட புருஷன் வச்சு நடத்துன ஸ்கூல் போலுக்கு.. அவா நர்சாம்.. அதான் இவா படிச்சிருக்காளேன்னு டீச்சரா இருன்னுருக்கா.. இவாளும் நல்லவால்லா.. உடனே அங்க இருக்கப் பிள்ளையளுக்குப் பாடம் சொல்லி குடுக்கது.. இங்க பக்கத்துல தெரிஞ்ச பிள்ளையளுக்கு இடம் வாங்கிக் குடுக்கதுன்னு இருந்திருக்கா.. நாளாவ நாளாவ அந்தப் பிள்ளையோட புருசனுக்கு அரசிக்கும் நடுவுல இதாயி போச்சு.. கல்யாணம் கெட்டாம உன் புள்ள வாழுதா வாழுதான்னே அங்க போயிட்டு வாரவனுவ எல்லாரும் சொல்ல.. இங்க இவிய நம்பவே இல்லையாம்.. என் மொவா அப்பிடி இல்லைன்னுட்டு இவ்வளோ நாளா இருந்துருக்காவ.. அடுத்த வாரம் வார கோயில் கொடைக்கு வருவான்னு பாத்தா வரவே இல்லியாம்.. தெரிஞ்ச ஒரு ஆளு உறுதியா சொல்லவும் தான் உண்மையா இல்லையான்னு பாக்க போயிருக்காவ.. எல்லாருமா சேர்ந்து.. உங்க அப்பனுக்குப் பஞ்சாயத்துன்னா சொல்லவா வேணும்.. நானும் வாரேன்னு தொத்திக்கிட்டு போயாச்சு..” எனக் கதையை முடித்தார் கனியம்மாள்..

“ஏமயோ.. இதுலாம் உண்மையா?? நம்ம அரசிக்காவா செஞ்சது??” என நம்ப முடியாமல் கேட்க, “ஆமாங்கேன்.. மூணு வாரத்துக்கு முன்னாடி முத்தம்ம மொவன் பட்டணத்துக்குப் போயிட்டு வந்து பார்த்துட்டு சொல்லிருக்கான்... எவனும் நமபலியாம்.. கோயில் மண்டபத்துல உக்காந்து சுத்துதவளுவ அங்கனையே கோள் பேசவும் தான் ஊருக்குள்ள விஷயம் வெடிச்சிருக்கு.. அதுக்குப் பெறவுல்லா நல்லா விசாரிச்சிட்டு உண்மைதான்னு தெரிஞ்சதும் அந்தால எல்லாத்தையும் அப்பிடி அப்பிடியே போட்டுட்டு ஓடியிருக்கான்வ..” என நடந்த அனைத்தையும் ஏற்ற இறக்கத்தையும் அப்படியே தனது கதை சொல்லலில் இணைத்திருந்தார் கனியம்மாள்..

“அப்போ இங்க இருந்து போறவிய அரசிய கூட்டியாந்துருவாவளா??” என புவனேஷ்வரி கேட்க, “எங்க.. வந்தா கூட்டிட்டு வருவான்வ.. இல்லன்னுட்டா என்ன பண்ண முடியும்.. அதான் பேசுததுக்கும் சேத்து தான் ஆள கூட்டிட்டு போவுது வண்டி..” என்றார் கனியம்மாள்.. “நானும் இங்கனதான் இருக்கேன்.. கடைக்குக் கிடைக்குப் போறேன்.. வயலுக்கும் தோட்டத்துக்கும் மாறி மாறி நடக்கேன்.. எனக்கு எதுவுமே தெரியல..” என அப்பாவியாய் விழிக்க, “ஆன்.. இப்போ மட்டும் முழி.. நமக்கு ஒன்னு தெரியலன்னா போதும்.. கடுகா பொரிஞ்சி.. நீ அப்பிடி.. உன் குடும்பம் இப்படின்னு பேச வேண்டியது.. ஊருல இருந்தா மட்டும் போதாது.. நாலு வேருட்ட சத்தம் குடுத்தா தான் தெரியும்..” எனத் தலையில் தட்டிவிட்டு, “சேரி.. உங்க அய்யா நாளைக்கு விடியக்காலையில தான் வருவாரு போலுக்கு.. நாம இப்போ தூங்குவோம்..” என்றார்..

நடந்த எதுவுமே தெரியாமல் திண்ணையில் கொர் கொர் எனக் குறட்டை விட்டு உறங்கி கொண்டிருந்த மகேசனை அடித்து எழுப்பி, “ஏலே.. எந்திரி.. பனி பெய்யுது.. இந்தக் குளிர்ல மேலுக்கு ஒன்னும் போத்தாம அந்தாக்குள்ள படுத்து கெடக்கான்.. என்னையும் பாரு.. என் மொகரையும் பாருன்னுட்டு.. எந்திரிச்சு பாயை உள்ள விரிச்சு தூங்கு..” எனக் கனியம்மாள் கட்டளையிட, பாதி உறக்கத்தில் எழும்பி நின்ற மகேசன், “ஏம்ம.. இப்பிடி என் உசுர வாங்குத.. நிம்மதியா உறங்க கூட விட மாட்டியா..” எனச் சிடுசிடுத்துக் கொண்டே பாயை சுருட்டி உள்ளே கட்டிலுக்குக் கீழே விரித்துக் கொண்டு படுத்தான்.. அவனுக்குக் கீழே படுத்த புவனேஷ்வரிக்கோ தூக்கம் வந்தால் தானே..

“இப்பிடி செஞ்சிட்டாளே... ஒரு வார்த்த யாருட்டயும் சொன்னாளா?? புத்தி கெட்டு போயிட்டு.. நாளைக்கு வந்ததும் மொத வேலையா போயி பாக்கணும்..” என்று தனக்குள்ளே முடிவெடுத்துக் கொண்டு உறங்க முயற்சித்தாள்..

அன்று, பள்ளியில் மாலை நேர வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய சமுத்திரம், வழியிலேயே “சமுத்திரம் டீச்சர்.. உங்க மொவன் UPSC பிரிலிமினரி பாஸ் பண்ணிட்டானாமே.. கைய குடுங்க..” எனத் தெரிந்த ஒருவர் கூறவும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனார்.. முதல் வேலையாக வீட்டிற்கு வந்ததும் பெரியவனை முற்றத்தில் நிற்கவைத்து ஜெபம் பண்ணி நெற்றியில் சிலுவையை போட்டார்..

குடும்பமே அந்த சந்தோசமான விஷயத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, சடுதியாக வருகை தந்த நேசமணி, “என்னவாம்??” என அலட்சியம் மின்ன கேட்டார்.. “பெரியவன்.. பிரிலிமினரி பாஸ் பண்ணிட்டானாம்..” எனச் சமுத்திரம் அடிக்குரலில் கூற, “ம்ம்ம்...” என ‘உம்’ கொட்டிவிட்டு நகர்ந்தார்.. அன்று இரவு வந்து சேர்வதற்குள் தெருவில் இருந்த அனைத்து கடைகளுக்கும் ஏறி இறங்கி பெருமை பீத்தி விட்டார்.. வரும் பொழுது நினைவாகக் கைநிறையத் தின்பண்டங்களும் பழங்களும் வாங்கிக் கொண்டு வந்து வாசலில் வைத்து விட்டு, “யோளா.. இத உள்ள எடுத்துட்டு போ..” என அதட்டவும் சமுத்திரம் எடுத்துக் கொண்டார்..

“ம்ம்...” என உதட்டை வளைத்து மேலும் கீழுமாக விழித்து விட்டு நகர, அவரின் பார்வையின் அர்த்தத்தை மொழி பெயர்க்கும் வித்தையை இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லை.. முதல் பரீட்சையில் முடிவு மிகச் சிறப்பாக வந்து சேர கொஞ்சமாய் மெத்தனத்தில் ஜார்ஜ் சுற்ற, இரண்டாவது தேர்வில் தோல்வியைத் தழுவினான்..

அதற்கும், நேசமணி சமுத்திரத்தின் முன் நின்று, “இதுக்குத் தான் அந்த வரத்து வந்தியளாக்கும்...” எனக் கேலியாகப் பேசி விட்டு நகர்ந்திட, மனம் பிசைவது சமுத்திரத்திற்குத் தான்.. கணவனை ஏதும் சொல்ல முடியாது என்றால் பெரியவன் சற்று வித்தியாசமானவன்.. சில நேரங்களில் அமைதி காப்பவனைக் கோபம் ஆக்கிரமித்திருக்கும் நேரத்தில் அருகிலேயே செல்ல முடியாது..

மீண்டும் ஒருமுறை முயற்சித்து, சென்ற முறை போல இரண்டாவது தேர்வில் சறுக்கியது.. நேசமணியைப் போலத் தானும் அவனுடைய மனதை நோகடிக்க விருப்பமில்லாமல் கேட்கும் பொழுதெல்லாம் என்ன?? எது?? என்று கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுத்தார்.. இருவரின் சம்பளத்திலும் இருந்து ஐந்து ரூபாயை மட்டுமே வீட்டுச் செலவினங்களுக்கு நேசமணி அளிக்க, அதிலும் சிக்கனமாகக் காயை நகர்த்தினார் சமுத்திரம்..

பொன்னரசியைத் தேடி சென்ற கும்பல் திரும்ப வரும் பொழுது வெறுங்கையை வீசிக் கொண்டு வர, பொன்னம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்.. அங்கே சகல வசதிகளோடும் மரியாதையுடனும் அந்தக் கல்விசாலையின் தலைமை பொறுப்பை வகிக்கும் அரசி, திரும்ப வர விருப்பம் கொள்வாளா என்ன??

அதிலே புவனேஸ்வரிக்கு அக்காவின் மீது பற்றுதல் சிறிதாக உடைந்து விட்டது.. “என்ன இருந்தாலும் இவ்வளோ வேரு போயி கூப்பிட்டும் வரலன்னு சொல்லிட்டான்னா எம்புட்டுக் கிராமுட்டித்தனம் ஏறி போயிருக்கனும்..” எனத் தன் வீம்பை கையில் எடுத்துக் கொண்டாள்..

அங்குச் சென்று கதை கேட்டு வந்த கனியம்மாள் தான், “சேரி.. பக்கத்துல ஒண்ணா தான் வச்சிருப்பான்னு போயிருக்காவ.. போயி பாத்தா மொத்தத்துக்கு அவளே ராணி மாதிரி இருக்காளாம்ல.. அந்தப் பயல மொதல்ல கட்டுன புண்ணியாட்டி இவ்வளத்துக்கும் இவளுக்குச் சினேகிதி.. அவா ஒரு வார்த்த சொல்ல மாட்டாளாக்கும்.. ஏ தாயி.. நீ இருக்கது சரி இல்ல.. ஒழுங்கா வீடு போய்ச் சேருன்னு.. இங்க இருந்து போன ஆளுவள வெளியே நிப்பாட்டி பாக்க விருப்பமில்லன்னு சொல்லி வுட்டாளாம்.. காரியக்காரி.. பெத்த தவப்பன் வந்து நிக்கான.. ஒருவாட்டி தலைய காமிச்சிட்டு போணும்னே தோணலையாக்கும்.. இந்தக் கிறுக்கிய நம்பி அந்த வட்டார்ப்பட்டில ஒரு பயல பாத்து பேசி முடிச்சுட்டு வந்துட்டாவளாம்.. அவன் வந்து கேட்டா என்னன்னு சொல்ல?? இப்பிடி வீட்டு மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டாள.. எந்த ஊருலயாவது பொம்பள புள்ள இப்பிடி பண்ணுவாளா???” என நெஞ்சம் பொறுக்குதில்லையே என்று புலம்பி தீர்த்தார்..
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-12

சம்பவம் நிகழ்ந்து சில நாட்களாக ஊரின் ஒவ்வொரு மூலையிலும் இந்தச் செய்தி வாயிற்கு அவலாக மென்று தீர்க்க, ஒரு வழியாக மெல்ல மெல்ல மறதிக்குள் மறைந்தது.. ஆனால் மறக்கவே தேவையில்லாத மனமோ உறுதியாய் ஒரு ஓரமாகத் தகிக்கச் செய்து கொண்டிருந்தது..

அன்று வடிவாளம்மன் கோவில் கொடை...

நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் முதல் நாள் பெரிய சுவர் கொண்ட வீட்டின் முன் வெள்ளை நிற வேட்டி விரித்துக் கட்டி, அதில் படம் ஓட்டுவர்.. படம் என்றால் சாதாரணமான ரகம் இல்லை.. அதற்கும் இரு அணிகளாகப் பிரிந்து பஞ்சாயத்து வைத்து விடுவது வழக்கம்தான்.. சிவாஜி கணேசன் படம் போட்டால் ஊரின் கிழடுகட்டைகள், “பாருங்கய்யா.. மனுஷன் நடிப்பை..” எனப் பெருமை கொள்ள, தலைவர் எம்ஜிஆர் படம் போட்டு விட்டால் இளசு கூட்டங்கள் விசில் போடுவதும் திரையின் முன்னே ஆட்டம் போடுவதுமாக இடமே களைக்கட்டும்..

‘ஆயிரத்தில் ஒருவன்’ போடும் பொழுதெல்லாம் ஒரு வருடத்தில் உணர்ச்சி பொங்க தோள்களில் கிடந்த துண்டுகளை விசிறி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவர்.. இரண்டாவது நாள் மாலை நேரத்தில் கோவிலின் முன்புறத்தில் மேடை அமைத்து வில்லு பாட்டுக்களைத் தொடங்கி விடுவர்.. காலை நடைபெறும் பூஜைகளுக்குக் கூடச் செல்லாத புவனேஷ்வரி வில்லு அடிக்கும் நேரத்தில் முதல் ஆளாகச் சென்று அமர்ந்து விடுவாள்..

ராகம் இழுத்து வடிவாளம்மான் தோன்றிய கதையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒருவர் பாடலாகப் பாட, நடுவில் சலித்து விடக் கூடாது என்பதற்காக, “என்னன்னே சொல்லுதிய??” “அம்மா, என்ன சொன்னா தெரியுமா??” என அருகில் சிங்கி அடித்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்து கேட்பார்.. “என்ன சொல்லுறிய??” “என்ன சொன்னா??” என மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க, கதை மிகச் சுவாரசியமாகச் செல்லும்..

வில்லுப்பாட்டுக்களில் இடம் பெறாத பல கதைகளும் அம்மனுக்கு உண்டு என்றாலும் செவிவழி கதைகள் சிலருக்கு சிலவை என்று துண்டுதுண்டாக மக்களிடையே சிதறிக் கிடந்தது.. அதில் ஒன்று எல்லாக் கோவில்களுக்குமே இருக்கும் கள்ளனின் கதை தான்..

ஒரு நாள் விடிந்தும் விடியாமலும் இருக்கும் சமயம்.. குளிர்காலம் என்பதால் பனிமூட்டம் வேறு சூழ்ந்து இருந்தது.. ஏற்கனவே தோட்டங்களும் வயல்களும் காடுகளும் சூழ்ந்த பகுதியில் இருக்கும் வடிவாள்ளம்மன் கோவில் மரங்களால் மறைத்திருந்தாலும் பனியும் தன் பணியைச் செவ்வனே செய்தது..

பெரிய அளவில் பாதுகாப்பு என்று மதில் சுவர்கள் எழுப்பாமல் ஒற்றைச் சுவர் எழுப்பி உண்டியலையும் பதித்திருந்தனர்.. அரவமின்றி உள்ளே நுழைந்த கள்ளன், உண்டியலை உடைத்துக் காணிக்கை பணத்தை அள்ளி, தனது வேட்டியில் கொட்டி மூட்டையாகக் கட்டி கொண்டு ஓடப் பார்த்தான்..

தொக்கு தொக்கென்று வேகமாக ஓடியவன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடைக்கல் எதுவுமின்றி முகங்குப்புற விழுந்து உருண்டான்.. கீழே விழுந்த கள்ளனுடைய பொதியில் சில்லறைகள் குலுங்கும் சத்தம் கேட்கவும், காலையில் தண்ணீர் பாய்க்க வந்த ஒருவரின் காதுகளில் இந்தச் சத்தம் கேட்டது..

“எவம்ல அது??” என்ற அதட்டலோடு ஓடி வர, அந்தாள் ஓடி வரும்முன் தப்பித்து விட வேண்டும் என்று எழுந்து ஓடிய கள்ளனின் கால்களை யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வு.. ஏற்கனவே கல்லே இல்லாத இடத்தில் இடறி விழுந்தது வேறு வயிற்றில் பயத்தைக் கரைத்திருக்க, இப்பொழுது தனக்கு நேர்வதை உணர்ந்து பீதியில் உறைந்தான்..

“வடிவாளம்மென் கோயிலுக்குள்ள எவனோ கள்ளப்பய புகுந்துட்டான்.. ஏலே.. யாரு.. இங்க ஓடியாங்கலே..” எனக் குரல் கொடுக்க, நால்வர் இணைந்து வருவது நிழலாகத் தெரிந்தது.. அதைக் கண்டதும் உச்சக்கட்ட பீதியில் “யம்மா.. எந் தாயே.. நான் செஞ்சது.. தப்புதான்.. நான் செஞ்ச பாவத்துக்கு என்ன மன்னிச்சு வுட்டுரு தாயே.. இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேன்..” எனக் கோவிலை நோக்கி கும்பிட்டு விழ, கால்களில் இருந்த பிடி தளர்ந்தது..

ஆட்கள் வரும் முன் பணத்தை அங்கேயே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியே விட்டான்.. வந்து பார்த்த ஆட்கள் திருட்டு நிகழ்ந்தது உண்மை தான் ஆனால் இங்கேயே போட்டு விட்டுப் போகக் காரணம் என்ன என்று தெரியாமல் சிதறிக் கிடந்த நாணயங்களில் ஒன்றை கூடத் தனக்கென எடுத்துக் கொள்ளாமல் அதே வேட்டியில் முனிந்து அம்மனின் காலுக்கு அடியில் வைத்து விட்டனர்..

சில வருடங்கள் கழித்து, திரும்ப வந்த அதே கள்ளன் தன்னுடைய காணிக்கையையும் அம்மன் காலடியில் கிடந்த காணிக்கையையும் சேர்த்து மதில் அரையாள் அளவுக்கு மதில் சுவர் எழுப்பிக் கொடுத்து ஊருக்கு முன்னால் கும்பிட்டு விழுந்து குற்றத்தை ஒப்புக்கொண்டான்.. அதனைக் கேட்ட மக்கள் அனைவரும் அம்மனை கையெடுத்துக் கும்பிட்டனர்.. அதன் பிறகும் அந்தப் பகுதியில் கள்ளர்கள் நடமாட்டம் இருப்பினும் ஒற்றைப் பைசா கூடக் கோவிலில் இருந்து வெளியே செல்வதில்லை..

மூன்றாவது நாள் காலையிலேயே சாமி கும்பிட்டு நேர்ந்து விட்ட ஆடுமாடுகளை அம்மனுக்குப் படையலிடுவர்.. நேர்த்திக் கடனில் வந்து சேர்ந்த கோழிகளைச் சிறு மரத்தால் ஆன மேடையில் அமர்ந்து கொண்டு பூசாரி ஒவ்வொன்றாகக் கழுத்தை திருகி அருகில் எரிந்து கொண்டிருக்கும் படப்பில் எரிந்து விடுவார்.. துள்ள துடிக்கும் கோழிகளின் உயிர் அந்த நெருப்பிலே எரிந்து இரையாகிப் போகும்..

படப்பு என்பது பனையில் இருந்து வெட்டப்பட்டு எடுத்து வந்த காய்ந்த சருகுகளைக் கோபுரம் போல அடுக்கி அதில் தீ வைத்து பலியிடுவர்.. இரவு முழுவதும் வெந்து சேர்ந்த கறிகளை வெட்டாமல் கையாலேயே பிய்த்து ஒவ்வொரு வரிக்கும் கொடுத்து, கூடவே உளுந்தஞ்சோறு - ஊற்றிக் கொள்ளக் கோழிக்குழம்பு கொடுத்தனுப்புவர்..

இந்த விஷயத்தில் புவனேஷ்வரி அந்தக் காலம் தொடங்கி இப்பொழுது வரை கெட்டிக்காரி.. ஆளுக்கு முன் எழுந்து சென்று பாத்திரத்தில் வாங்கிவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே சட்டியை வழித்து நக்கிவிட்டு கழுவும் இடத்தில் நல்ல புள்ளையாகப் போட்டு விடுவாள்.. சில நேரங்களில் பெரியப்பா வீட்டு பங்கினையும் சேர்த்து மோசடி செய்து விடுவாள்.. ஆகப் படப்பு சாப்பிட்டது இந்தக் குடும்பத்தில் அவள் மட்டுமே..

வேலப்பன் வழக்கம் போலக் கொடை என்று வந்து விட்டால் கோவிலே சரணாகதி என்று கிடந்து இரவு நேரங்களில் கோவிலுக்குப் பின்னே காய்க்கும் கள்ளில் மூழ்கி விடுவார்.. நான்காவது நாளில் வெட்டப்படும் கிடாக்களின் கறி பகிர்ந்தளிக்கப்பட, அம்மியில் அரைத்து கூடவே உருளையும் கத்தரியும் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கறிக்காகத் தவம் கிடப்பர் குழந்தைகள்.. இந்நாளில் வேலப்பன் கூட வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை..

இந்தக் கொடையில் பெரியப்பா வீட்டுத் தோசை தான் கிடைக்காமல் போனது.. கோவில் கொடை வருகிறதென்றால் போதும்.. குடும்பத்தில் உள்ள சின்னஞ்சிறுசு தொடங்கி இளவட்டம் வரை பெரியப்பாவின் வீட்டில் கூடி, கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.. காலையில் வைக்கோல் படப்பிற்குப் பின்னால் நின்று தெம்மாங்குச்சி, நொண்டி, தவளை, கோலிக்காய் மற்றும் பம்பரம் என்று விளையாடி தீர்க்க, மதியத்தில் உண்ட மயக்கத்தில் வயிற்றில் நிரம்பி நிற்கும் சோற்றைச் செரிக்காமல் பார்த்து கொள்வதற்காக அதிகச் சிரமம் இல்லாத தாயம், பாண்டிக்குழி என்று அடக்கமாகத் திண்ணையில் அமர்ந்து விடுவர்..

இரவு நேரத்தில் தான் கூத்தே நடக்கும்.. திருடன் போலீஸ், ஓடிபிடித்து என்று வீட்டை சுற்றியும் உள்ளே புகுந்தும் பெரியவர்களை ஒரு வழி செய்து விடுவர்.. இதில் சிறப்பான தோசை பக்கம் வரலாம்.. மூன்று நாட்கள் முன்பே வாங்கி வைத்த புழுங்கல் அரிசியைப் பக்குவமாக உளுந்தோடு ஊற வைத்து, ஆட்டு உரலில் மாவாட்டி, பெரிய பானையில் எடுத்து வைத்து விடுவர்..

மறுநாள் காலை நான்கு மணிக்கே தொடங்கும் தோசை சுடுதல் பணி மிக வேகமாக நடைபெறும்.. தடயம் குலுங்க முதல் ஆளாக மண்ணெண்ணெய் அடுப்பின் முன் குத்த வைத்து அமர்ந்து கொள்ளும் கிழவி விளக்கெண்ணெய் தேய்த்து, மந்த மந்தமாகச் சுட்டுப் பனைப்பெட்டியில் போட்டு வைக்க, வருமே ஒரு மணம்!!! அதற்கு மொத்த குடும்பமும் அடிமை.. சுட்டு கொடுத்துவிட்டு தன வீட்டிற்குச் செல்லும் வரை குழந்தைகள் அருகில் செல்வதில்லை.. கிளம்பி விட்டால் போதும் அடிபிடியாக வரிசையாக அமர்ந்து இடித்து வைத்த எள்ளுப்பொடியை தொட்டுக் கொண்டால் போதும்.. அது தான் அமிர்தம்...!!

இதெல்லாம் ஒரு காலம்.. கிழவியை ஆயிரம்தான் திட்டினாலும் கோவில்கொடை காலங்களில் இருந்திருக்கலாமோ என்று தோன்றத்தான் செய்கிறது.. வடிவாளம்மன் சாமியாடும் கிழவிக்கு ஏகபோக மதிப்பும் உண்டு.. இடையிடையே நிகழும் முளைப்பாரி மற்றும் மாவிளக்குச் சமயங்களில் கிழவியின் பங்கு அதிகமிருக்கும்.. விரதம் இருக்க வேண்டும்.. தலை வாரக்கூடாது.. செருப்புப் பயன்படுத்தக் கூடாது.. காலையிலேயே பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நிறைவேற்ற முடியாத புவனேஷ்வரி முளைப்பாரியில் பங்கு கொள்வதில்லை..

ஆனால் பொன்னரசி தவறாமல் கலந்து கொள்வாள்.. பத்து நாளுக்கு முன்பே சாமி கும்பிட்டு, ஜாடிகளில் பல்தாவர விதைகளிட்டு ஓரிடத்தில் வைத்து விடுவர்.. பின் ஒவ்வொரு நாளும் அதிகாலமே எழுந்து தலைக்குக் குளித்துப் பிள்ளையாரை சுற்றிவந்து வழிபட்டு, அடுத்ததாக அம்மன் கோவிலிலும் வழிபாட்டை நடத்திவிட்டு, விதைகள் போடப்பட்ட ஜாடிக்கு நீர் ஊற்றிவிட்டு வருவர்.. மேற்கொள்ளும் விரதமும் வேண்டுதலுமே விதைகளில் இருந்து பச்சையும் மஞ்சளும் கலந்த முளை வருவதற்குக் காரணம் என்று கூறினாலும் வாராத கூந்தலின் பிரதிபலிப்புதான் முளை என்று பெண்களுக்கிடையே ஒரு நம்பிக்கையும் உண்டு..

மாவிளக்கு பூஜைக்குச் சிறுவயதாக இருக்கும் பொழுது ஆசைக்குக் கலந்து கொண்டதாகப் புவனேஸ்வரிக்கு ஒரு ஞாபகம்.. கனியம்மாளுக்கு இதில் அனுபவம் இல்லாமல் போக, “உனக்கென்ன?? வயல்ல போயி களை பெறக்கவும் பீடிய உருட்டவும்தான் உங்க வீட்டுல சொல்லி தந்துருக்காவ... வேற என்னத்தயாவது படிச்சிட்டு வந்துருக்கியா??” எனக் கடிந்து கொண்டு வெளியேற, “ம்ம்க்கும்.. இதுல்லாமா சொல்லி தருவாவ.. நானும் பள்ளிக்கொடம் படிக்கும் போது முதல் மாணவின்னு பேரு எடுத்துருக்கேன்.. அஞ்சாவதுக்குப் பெறவு தான் எங்க அப்பன் படிக்க விடாம வயலுல வேலைய யாவிட்டானே.. அந்தக் காலத்துலேயே நான் படிச்சிருந்தா இந்நேரத்துக்கு எங்கேயோ இருப்பேன்.. உங்க அப்பன்ட்ட இடி வாங்கிக்கிட்டு கெடக்க மாட்டன்..” எனத் தன் பெருமைகளை யாருமில்லை என்றாலும் கூறிக் கொண்டார்..

அக்காவுக்கும் தங்கைக்கும் அவர்களின் தாய்மார்களே தயார் செய்து கொடுக்கக் கிழவியைத் தேடி வந்தாள்.. ஆனால் அவளுக்கு முன்னே சித்தி மகள் வந்து நிற்க, பாதித் தயாராகி விட்டது.. முழுவதும் முடிந்ததும் வாங்கிக் கொண்டு சென்றிட, “ஏ.. பாட்டியோ.. எனக்கு மாவிளக்கு செஞ்சி தாயேன்..” எனக் கேட்டாள்..

“என்னளா.. மாவிளக்கு செஞ்சு தரணுமா?? உங்க அப்பன் பெரிய இவன் மாதிரி என் மொவள எங்கயும் வுட மாட்டேன்னான்.. இப்போ மட்டும் சரின்னுட்டானோ??” எனக் கேலிக் குரலில் கூத்தாட, “அப்பாவுக்கு இதுலாம் தெரியாது.. ப்ச்.. நீ செஞ்சு தருவியா மாட்டியா??” எனக் கேட்டாள் புவனேஷ்வரி.. “ஏம்?? உங்க அம்ம எங்க போனாளாம்??” எனக் கிழவி கேட்க, ‘அவர் செய்யவில்லையா??’ எனக் கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக ‘அவர் எங்கே??’ எனக் கேட்பதே வழக்கம்.. அவர்களின் பாஷை.. பாணி எல்லாம்..

“ம்க்கும்.. அவியளுக்குச் செய்யத் தெரியாதாம்.. இந்த ஒரு வாட்டி தான கேக்கேன்.. ரொம்ப இங்காத ன்ன..” எனச் சற்று கீழிறங்கி கேட்ட புவனேஷ்வரி, மறுநொடியே “செஞ்சி தருவியா மாட்டியா??” என அதிகாரமாக கேட்க, “கொண்டா.. அப்பனுக்கு மேல மொவளுக்குப் பொத்துட்டு வருது..” எனக் கையில் இருந்த மாவை வாங்கிக் கொண்டார்..

இரண்டு நாட்களுக்கு முன் உரலில் இடித்துச் சலித்த அரிசிமாவை கொடுக்க, ருசிக்கு தேவையான பதார்த்தங்களும் சிறிது சிறிதாய் தண்ணீரும் ஊற்றி பிசைந்து நடுவே விரல்களால் குழி உண்டாக்கி எண்ணெய் ஊற்றி திரியை மாவினுள் புதைத்து விட்டார்.. பல நாட்களாக ஏங்கிய மாவிளக்கு கிடைத்து விட்டது..

பின்னே எத்தனை முறை மற்றவர்களிடம் கேட்டிருப்பாள்.. “ஏப்ள.. கொஞ்சோல மாவு தாப.. ருசி பாக்க மட்டும் தான்.. இத்தினோண்டி தந்தாலும் போதும்பிள..” என்று கெஞ்சினாலும் ஒருவராவது தந்தார்களா?? ம்ஹும்.. விரல் நுனிக்கு கூடத் தரவில்லை.. இப்பொழுது அவள் கைகளிலேயே ஒன்று இருக்கிறது..!!

மிக மகிழ்ச்சியோடு வரிசையில் சென்று நின்று கொள்ள, விளக்கு ஏற்றப்பட்டது.. அந்த வெப்பத்தில் மாவானது வெந்து விடும்.. அதுவே மாவிளக்கு.. இப்படி விளக்காக பாவிக்கப்பட்டதினுள் ஏற்றப்பட்டு எண்ணெயின் உதவியால் வேகவைக்கப்படும் மாவிற்குத் தனி ருசி உண்டு..

விளக்கை ஏற்றிவிட்டு, கொஞ்ச தூரம் நடந்திருப்பாள்.. பட்டென அணைந்து போனது.. அருகில் நடந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் நெருப்பினைக் கடன்வாங்கி விளக்கினை உயிர்ப்பித்துக் கொள்ள, கொஞ்ச தூரம்.. மீண்டும் அதே அணைதல்.. இப்படியாகக் கோவிலுக்குச் செல்வதற்குப் பத்து பன்னிரண்டு முறை அணைந்து அணைந்து திரியை தீண்டிக் கொண்டே வர, கோவிலுக்குள் செல்லும் பொழுது எண்ணெய் தீர்ந்து விட்டது.. கோவிலில் அனைவரும் விளக்கோடு பிரகாசமாக இருக்க, இவளின் விளக்கும் சரி.. கவலையினால் வீங்கிப் போன முகமும் சரி.. இருளடித்துப் போயிருந்தது..

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு நின்றது.. அப்பொழுது கூட்டத்தில் இவள் மட்டும் இப்படியான நிலையில் மாட்டிகொண்டதை அறிந்து ஒரு பெண்மணி கோவிலின் பிரதான விளக்கை ஏற்ற வைத்திருந்த எண்ணெயை ஊற்றி விளக்கை எரியச் செய்தார்.. இதிலே பெரிதும் உடைந்து போனவள், வீட்டிற்கு வரவும் வெடித்து விட்டாள்.. மாவிளக்கு வேறு அணைந்து அணைந்து எரிந்ததால் ஆங்காங்கே திட்டுக்களாய் வெந்தும் வேகாமலும் இருக்க, புவனேஷ்வரி காளியாகி விட்டாள்..

“அந்தக் கிழவி தான்.. எனக்கு மட்டும் என்னனி தான் பிடிச்சு தந்தாளோ.. போவ போவ சட்டு சட்டுன்னு அணையுது.. நினைச்சேன்.. அவளுக்கு என்மேல ஏதோ ஒண்ணு இருந்திருக்கு.. அதான்.. இதுல வச்சு தீட்டிட்டா.. மாவு சரியில்ல.. எண்ணெய் நிக்க மாட்டைங்கு..” என ஒரு ஆட்டம் ஆடி தீர்க்க, கண்களில் நீர் வழிய மகளைக் காண முடியாது உடனே அங்கே சென்று ஒரு சண்டையைப் போட்டுவிட்டே வந்தார் வேலப்பன்..

அன்று இரவு முழுவதும், “அப்பா சொல்லுத பேச்ச கேட்டா இது நமக்குத் தேவதானா??” எனச் சற்றே யோசித்துக் கொண்டிருக்க, கனியம்மாளோ “பொம்பள பிள்ள இந்த ஆட்டம் ஆடாத.. மாவிளக்கு அணைஞ்சதுக்கு எல்லாம் இந்த ஆட்டம் ஆவாது..” எனக் கண்டித்தார்.. மறுநாள் காலை பாட்டி வீட்டு முன்னே உடலை சிலுப்பிக் கொண்டு நடக்க, “ஏளா.. இந்தா.. ஆலங்கனி மொவளே..” எனக் கத்தி அழைத்தாள் கிழவி..

“நான் தான் உனட்ட சத்தம் குடுக்காம போறேம்லா.. பெறவு என்னத்துக்குக் கூப்ட்டுச் சத்தம் குடுக்க.. உனக்கும் எனக்கும் ஆவாது..” எனத் திருப்பிக் கொள்ள, “உங்க அப்பன்ட்ட என்னளா சொல்லி குடுத்து தொலைச்ச.. நாசமத்து போற பய.. கண்ட மேனிக்கு வைதுட்டுப் போறான்.. என்ன ஏதுன்னு கேட்டா ஒன்னும் சொல்லாம போயிட்டான்..” எனக் கேட்டாள் கிழவி.. “அது....” எனப் புவனேஷ்வரி தொடங்கவும் உள்ளே நுழைந்த பெரியப்பாவும் அப்பாவும் தாயை உள்ளே தள்ளி, கதவை மூடினர்..

நேற்று சண்டை போட்ட அப்பா, இப்பொழுது ஏன் இங்கே வருகிறார் என்ற யோசனையோடு நிற்க, “புவனா.. நீ இங்க என்னயுத.. ஒழுங்கா வீட்டுக்கு ஓடு..” எனப் பெரியப்பா விரட்ட, செல்வது போல நடித்துப் பிச்சிமூட்டிற்குப் பின்னே ஒளிந்து கொண்டாள்.. அப்பொழுது, கடகடவெனக் கழுத்தில் மணிகளோடு பக்கத்துத் தெருவில் கடை வைத்திருக்கும் மணி பாதங்களால் தரையில் நாட்டியம் நிகழ்த்தி கொண்டே வர, அவருடைய முகமே சரியில்லை..

நாக்கை வெளியில் துருத்தி “ம்ஹும்..” என்ற உறுமலோடு தோள்களை அசைத்து பாட்டியின் வீட்டின் முன்னே ஆடத் துவங்கினார்.. அதற்குள் ஊர் மக்கள் அங்கே குழுமிட, அந்தக் கூட்டத்தில் “நல்லா நின்னுட்டு இருக்கும் போது திடீர்னு தூண்டில் மாடன் வந்துட்டான்.. வந்ததும் அம்மன தேடி வந்துட்டு போல..” என்ற வாக்கியங்கள் தெளிவாகவே காதில் விழுந்தது..

அறையில் வைத்துப் பூட்டப்பட்ட பாட்டி கதவைத் தட்ட, ஒவ்வொரு அடியும் இடிபோல இறங்கி வீட்டை குலுக்கியது.. புவனேஷ்வரியின் மனதிற்குள் திக் திக் என அடித்துக் கொண்டாலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆர்வகோளாறில் முன் வரிசையில் வந்து நின்று கொண்டாள்.. சிறிது நேரத்திற்கு எல்லாம் நிலை குலுங்க, கதவு அப்படியே சரிய உள்ளிருந்து பாட்டி வேகமாக ஓடி வந்தார்.. அவருடைய செய்கைகளும் பாவனைகளும் மணியை ஒத்திருக்க மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே “ஆத்தா வந்துட்டா..” என முணுமுணுக்க ஆடிய ஆட்டத்தில் புவனேஷ்வரியே ஆடிப் போனாள்..

இருவரும் கோவிலை நோக்கி தடதடவென ஓட, மக்களும் பின்னாலேயே சென்றனர்.. அதற்குப் பிறகு கோவில் பக்கமும் செல்லவில்லை.. கிழவியிடம் வியாக்கியானம் பேசவும் இல்லை.. வீட்டிற்குள்ளேயே பெட்டி பாம்பாக அடங்கிக் கொண்டாள்.. புவனேஷ்வரி பழைய நினைவுகளில் இருந்து மீளும் பொழுது “ம்ஹும்...” என்ற பெருமூச்சு வெளிவந்தது..

எப்படியெல்லாம் கொண்டாட்டமாக இருந்த வீடு கிழவி சென்ற பின் சில நிகழ்வுகள் மட்டும் விட்டுப்போக, அரசி செய்த செயலால் அனைத்தும் குடி முழுகிப் போனது.. யோசனைகளை எல்லாம் கைவிட்டு கனியம்மாளோடு கோவிலுக்குக் கிளம்பி சென்றாள்.. இரண்டு அடிக்கு முன்பே கேந்தியின் மணமும் விபூதியின் வாசமும் நாசிக்குள் சென்று கொடை என்ற உணர்வை தந்தது..

கோவிலின் சுற்றுச் சுவரில் லில்லி மாலைகள் சாத்தப்பட்டு இருக்க, கருவறையினுள்ளே வடிவாளம்மன் தெய்வீகமான புன்னகையோடு அருள்பாலிக்க, வெளியே பன்னிரண்டு தெய்வங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.. முன்பு ஆடி வந்த தூண்டில்மாடனும் இந்த வரிசையில் ஒருவர் தான்.. இரண்டு மூன்று மாலைகளுடன் வெளியே தெய்வங்கள் வீற்றிருக்க, உள்ளேயோ தாயின் கழுத்து நிரம்பும் அளவிற்கு ஆரஞ்சும் மஞ்சளுமாய்க் கலந்த கட்டிகேந்திகளைக் கொண்டு கட்டப்பட்ட மாலைகள் அடுக்கப்பட்டிருந்தன.. அதனூடே எலுமிச்சை பழத்தினால் பயபக்தியாய் தொடுக்கப்பட்ட மாலையும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

பூவின் மணம் ஒருபுறம் என்றால் ஆரத்தியில் சந்தனமும் குங்குமமும் கலந்து விட, படையலில் நிறுத்தப்பட்டிருந்த சாம்பிராணி பத்தி நறுமணம் கமழச் செய்தது.. அருகில் நின்ற பூசாரி ஒவ்வொரு மாலையாகக் கழற்றி பக்கவாட்டில் இருந்த சுவற்றில் சாத்திக் கொண்டிருக்க, சிவப்பு பட்டுடுத்தி அம்சமாகக் காட்சி தருகிறாள் வடிவாளம்மன்..

கண்களில் நிறைத்துவிட்டு கைகளைக் கூப்பி வேண்டிக் கொண்ட புவனேஷ்வரி; அங்கிருந்து நகர்ந்து, ராட்டினங்களையும் வளையல் கடைகளையும் தின்பண்டக் கடைகளையும் பார்வையிடத் துவங்கினாள்.. பின் தனக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்போதே மக்கள் கூட்டம் ஓரிடத்தில் அறிவிப்பின்றிக் குழும, “பங்கு பிரிக்கதுல எவனுக்காவது இடிச்சிருக்கும்.. அந்தால அவனே இவனேன்னு சண்டை போல..” என்று நினைத்த புவனேஷ்வரி, அதில் நாட்டமின்றி வளையல்களைக் கைகளில் நுழைத்து பார்த்து கொண்டிருந்தாள்...

அப்பொழுதுதான் அவளுக்கும் மண்டையில் உரைக்கிறது.. ஒருவேளை அந்தக் கூட்டத்தில் வேலப்பனோ மகேசனோ இருந்தால்?? மகேசனும் சமீப காலமாகக் கோபம் வந்தால் கையில் கிடைப்பதை தூக்கி அடிக்கப் பழகியிருக்கிறான்... பரம்பரை ரத்தம் விட்டு வைக்குமா என்ன?? போட்ட வளையலை மீண்டும் கழற்ற கூடத் தாமதிக்காது சரட்டெனக் களைந்து விட்டு, விறுவிறுவெனக் கூட்டத்தை எட்டிப்பார்த்தாள்..

அப்பாடா.. இவள் நினைத்தது போலப் பாகப்பிரிவினை சண்டை இல்லை.. வீட்டின் கிழக்கில் வசிக்கும் முனுசாமி சாமியாடிக் கொண்டிருந்தார்.. புவனேஸ்வரிக்கு தான் இது போன்ற காட்சிகளை அருகில் காண்பதில் அலாதி பிரியமாயிற்றே.. கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு முதல் ஆளாகச் சென்று நின்று கொண்டாள்..

அவள் மட்டுமல்ல ஊரே ஒரு ஆர்வத்தில் தான் குழுமியிருந்தது.. நடுவே கம்பீரமாகக் கழுத்தில் மாலையோடு நாக்கை துருத்தி, தலையைச் சாய்த்து உடலை சிலுப்பி ஆடிக் கொண்டிருந்தார்.. புவனேஸ்வரியின் பாட்டியின் மறைவிற்குப் பிறகு எவரின் மீதும் அம்மன் அருள் இறங்கவில்லை.. ஆண்டுகள் கழித்துத் திரும்ப வந்த அம்மனை அனைவரும் பயபக்தியோடு கையெடுத்து கும்பிட, பூசாரி ஆரத்தி தட்டை எடுத்து வந்தார்..

முனுசாமி இன்னும் உக்கிரமாக ஆட்டத்தைத் தொடர, அருகில் கொண்டு வரப்பட்ட விபூதியில் கையை அடித்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.. ஒருவேளை இந்த வருடம் மும்மாரி மழை பெய்யும் என்பதை உணர்த்தவோ என்று தங்களுக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் எவரும் எதிர்பார்த்திராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது..

தட்டில் இருந்த சூடத்தை வேலப்பன் எடுத்து ஆடி கொண்டிருந்த முனுசாமியின் உள்ளங்கையில் வைத்து விட, வலி தாளாமல் கீழே விழுந்தது.. அதே சமயம் சாந்தியடைந்து கீழே சரியவும் அனைவரும் வேலப்பனை பிடித்துக் கொண்டனர்.. “ஏலே.. அம்மனே ரொம்ப வருஷம் கழிச்சி இப்ப தான் வந்துது.. அதையும் இப்பிடி கெடுத்துட்டியே.. ஏம்லே இப்பிடி பண்ணுன..” என வேலப்பனை சட்டையைப் பிடித்திட, மகேசன் தான் அனைவரையும் தடுக்க முயன்று கொண்டிருந்தான்..

புவனேஸ்வரியும் கனியம்மாளும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அப்படியே நின்றிருக்க, “யோவ்.. அவன் பொய் சாமி ஆடுதான்.. அம்மனுக்கு என்னிக்குச் சூடம் சுட்டுது..” என நறுக்காகக் கேட்க, கூட்டத்தில் பதிலில்லை.. “எங்கம்ம போனதுக்குப் பெறவு யாரு மேலயும் சாமி இறங்கல.. ஒருவேள இறங்கிச்சின்னா எப்பிடி ஆடும்னு எனக்குத் தெரியும்லே.. இவன் கள்ளச் சாமி ஆடிட்டு திரியுதான்..” என வேலப்பன் கூற, கூட்டத்தில் இருந்த ஒருவன், “ஏலே.. ஆலங்கனி.. மல்லு இழுக்கணும்னு என்னத்தயாவது செய்யாத.. சூடம் காட்டி தான் அம்மன இறங்க வைப்பாவ.. அப்பிடி அம்மன அனுப்பிட்டு கதையாலே கட்டிட்டு இருக்க.. உனக்கு உங்கம்மைக்குப் பெறவு எவனும் ஆடப்பிடாதுன்னு பொறாமை.. அதாம்ல இப்பிடி பண்ணுத..” என எடக்கு மடக்காகப் பேசினான்..

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, “சேரிலே.. நானே பொய் சொல்லுதேன்னே வச்சிப்போம்லே.. அப்பிடி பொய் சொன்னா அது எனக்கு.. அந்த வடிவாள்ளம்மனே தண்டனை தரட்டும்..” என்று விட்டு மகேசனின் கையைப் பிடித்துக் கூட்டி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.. சிலர் “குடிக்காரப்பய.. இப்பிடி பண்ணிப்புட்டான...” என முகவாயில் விரல் வைத்துக் கொள்ள மற்றொரு கூட்டமோ, “பாப்போம்.. அந்த ஆத்தாவே ஒரு தீர்ப்ப சொல்லுவா..” என முணுமுணுத்துவிட்டு கலைந்தனர்..

பார்வையாளராக நின்ற புவனேஷ்வரிக்கு தான் குலை நடுங்கியது,, அம்மன் தண்டிக்கவில்லை என்றால் சந்தோசம்.. ஒருவேளை வேலப்பனின் கணிப்பு சரியாகி ஏதாவது நடந்து விட்டால்?? குடும்ப மானமே போய்விடும்.. ஏனெனில் வடிவாளம்மானின் சன்னதியில் வைத்து எந்தக் குற்றமும் செய்துவிட முடியாது.. சில நாட்களிலேயே ஏதாவது ஒரு காரணத்தினால் படுக்கையில் கிடத்திவிடும்.. ஆளையும் இழந்து மானத்தையும் இழக்க வேண்டுமே என்ற பயத்தில், “அம்மா.. வடிவாளம்மா என் அப்பா ஏதாவது தப்பு பண்ணி தண்டனை குடுக்கதா இருந்தா தயவு செஞ்சி அதை எனக்கே குடுத்துரு..” என வேண்டுதலை போட்டு விட்டுவீட்டை நோக்கி நடையைக் கட்டினாள் ஏற்கனவே சாவை கண்ணில் பார்த்துவிட்டு வந்த வீராங்கனை..
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-13

இந்திய குடிமைப்பணித் தேர்வின் மீது வெறுப்பு மண்டிய பின் ஜார்ஜின் பார்வை பதிந்தது தமிழ்நாடு அரசு அரசாணையத் தேர்வுகளின் மீது.. இந்த முறை ஜார்ஜ் மட்டுமில்லாது துரையும் சேர்ந்து கொண்டு இருவராகத் தேர்விற்குத் தயாராகினர்.. துரை அமர்ந்த இடத்தில் இருந்து நகராமல் கண்களை நீக்காமல் புத்தகத்திலேயே பதித்திருக்க, ஜார்ஜ் ஒரு இடத்தில் அமர்வதில்லை.. புத்தகத்தை எடுத்து மடியில் வைத்து விட்டால் போதும் ஒரு பக்கத்திற்கு இத்தனை நிமிடங்கள் என வகுத்து, முடிந்ததும் தூக்கி போட்டுவிட்டு கிளம்பி விடுவான் பெரியம்மாவின் வீட்டிற்கு..

சமுத்திரம் வீட்டில் ஏகப்பட்ட பெண்குழந்தைகள் என்றாலும் ராஜம்மாள் பெரியம்மாளுக்கு ஜார்ஜ் மீது தனிப் பிரியம்.. திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக அத்துடன் உறவை விலக்கி கொள்ளாமல் பிள்ளைகள் மூலம் வளர்ந்து கொண்டே தானிருந்தது.. அந்த வகையில் சமுத்திரம் வீட்டாரிடத்தில் சேரக் கூடாது என்று நேசமணி கட்டளைகள் பிறப்பித்திருக்க, அதனை மீறுவதற்காகவே அவதாரம் எடுத்து வந்த ஜார்ஜ் அதனைத் திறம்படச் செய்து வந்தான்..

பொழுது அன்றும் பெரியம்மாக்களின் வீட்டையே சுற்றி வருவதால் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அழைத்ததைவிட ஜார்ஜின் பெயரையே நாவில் தேய்த்து வைத்திருப்பர்.. விடுமுறை என்றால் போதும்.. நேசமணியின் இருப்பைத் தவிர்ப்பதற்காக மிதிவண்டியில் பெரியம்மா வீட்டிற்குச் செல்பவன் தான்.. தூங்குவதற்கு மட்டுமே வீடு..

பெரியம்மாக்களுக்கு ஜார்ஜ் எப்படியோ அதே போலப் பெரியம்மாக்களின் மக்களுக்குச் சமுத்திரம்.. வீட்டைத் தேடி வந்து விட்டால் போதும்.. அவர்களின் மொத்த தேவையையும் பூர்த்திச் செய்தே ஆவார் சமுத்திரம்.. இதில் சம்பந்தமில்லாதது போல நேசமணி நடந்து கொள்ள, ஜார்ஜ் எப்பொழுதும் அம்மாவின் புறம் நின்று ஆதரவு கொடுப்பதே..

ஆனால் சமீப காலமாகத் தன்னுடைய சொந்தங்களை விட்டு விட்டு சமுத்திரத்தின் வீட்டார்களிடம் கொஞ்சமாய் ஒட்டிப் போகிறார் நேசமணி.. இரு மகன்களும் அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்க, காலாகாலத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைக் கருத்தில் கொண்டார் நேசமணி.. கேட்டால், “அவன் தான் என்ன மதிக்கவே கூடாது.. நான் சொல்லுதத கேக்கவே கூடாதுன்னு இருக்கான்... அதுக்கு நானும் அப்பிடியே இருந்திற முடியுமா??” என்றார்..

திருமணம் என்று வந்து விட்டால் அதற்கென்று தரகர்களை நாட வேண்டும் என்ற அவசியம் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்பதால் தெரிந்தவர்களிடம் விஷயத்தைக் கூறி வரனைத் தேடினார்.. இது எதுவுமே தன்னைப் பாதிக்கப் போவதில்லை என்பது போல காலையில் எழுந்து ஆலயம் செல்வது, பின் படிப்பது, பெரியம்மா வீட்டிற்குச் செல்வது, இரவில் இந்தி பாடல்களில் மெய்மறந்து லயிப்பது என்று ஜார்ஜின் உலகில் வேலைகள் மிகச் சரியாகச் சென்று கொண்டிருந்தது..

ஒரு வாரத்தில் ஒரு வரன் வந்து சேரவும், ஜார்ஜை தயார் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி போனது சமுத்திரத்திற்கு.. முடியாது என்றால் முடியாது என்று முரண்டு பிடிப்பவனை இழுத்துக் கொண்டு செல்வது மிகச் சிரமம் தானே.. பெண் பார்க்கும் வீட்டிற்கும் சென்றாயிற்று.. பெண்ணையும் பார்த்தாயிற்று.. பார்ப்பதற்குப் பேரழகி என்றால் பேசி பார்த்த இடத்தில் பெரியவர்களுக்கும் எந்தக் குறையும் இல்லை.. ஒரே குலம், ஒரே கோத்திரம் அனைத்தையும் விட வசதியில் இவர்களுக்குச் சளைத்தவர்களில்லை..

வசதி என்றதும் நேசமணியின் வசதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமே.. தெற்கூரில் பாதி நிலப்பரப்பு இவருக்குத் தான் சொந்தமென்பதால் எவரிடமும் சென்று ‘நேசமணி வாத்தியார்’ என்று கேட்டால் உடனே தெரிந்து விடும்.. பல வேலையாட்களைக் கொண்டு மிகச் சிறப்பாக விவசாயம் சொந்த நிலம் அனைத்திலும் செய்து வந்தாலும் ஆசிரிய தொழிலும் சிறப்பாகச் செய்வார்.. பள்ளியில் இவரது பெயரை கேட்டால் போதும் மாணவர்கள் தொடை நடுங்கிப் போவார்கள்.. பாடம் சரிவரப் பயிலவில்லை என்றால் அக்குளிற்குக் கீழே இருக்கும் சதைப்பற்றைத் திருகி விடுவாரே..

தனது உடல்நலத்தையும் உணவுமுறையையும் பொருட்டாக மதியாமல் காலையிலேயே தோட்டத்திற்குச் சென்று பயிர்களுக்குத் தண்ணீர் பாய்த்துவிட்டு பள்ளிக்கும் சென்று, மாலையில் மாட்டிற்குப் புல்லும் தட்டையும் வெட்டி வருவார்.. சுறுசுறுப்பாக வேலை செய்து, சேரும் பணத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நிலபுலன்களை வாங்கித் தனது எல்லையை விரித்துக் கொண்டே வருகிறார்.. பிந்துசாரனிடம் இருந்து பெற்ற நாட்டைச் சாமர்த்தியமாக விரிவடையச் செய்த அசோகனின் வகையறா தான் இந்த நேசமணி..

திருமணமாகி சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நேசமணியின் அயராத உழைப்பினால் உருவானதுதான் இப்பொழுது வசிக்கும் வீடு.. தற்பொழுது வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகிலேயே மற்றொரு இடமும் வாங்கி வீட்டைக் கட்டி வருகிறார்.. இப்பேர்ப்பட்ட நேசமணியின் தவப்புதல்வனுக்கு வரப்போகும் மனைவியின் புகழ் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும்.. தன்னைப் போலச் சுறுசுறுப்பு இல்லை என்றாலும் மூளையின் அறிவு தன்னைவிட அவனுக்கு அதிகம் என்பதை மனதிற்குள் ஒப்புக் கொள்ளும் நேசமணி நேரில் ஒருபோதும் காட்டிக்கொள்வதில்லை..

எனவே தான் மிக மிகக் கவனமாக வரன் தேடி வருகிறார்.. மின்சார வாரியத்தில் தகப்பனும் தாயும் பணிபுரிய, இளங்கலை படிப்பு முடித்திருந்த பெண்ணை அனைவருக்கும் பிடித்துப் போக, பிடிக்க வேண்டியவனோ பிடிக்கவில்லை என்றான்.. கதை முடிந்தது.. வீட்டிற்கு வந்ததும் நேசமணி வாத்தியார் பிரம்பை எடுக்காவிட்டாலும் வார்த்தைகளால் பிரம்பு வீசி விடுவாரே என்ற பயத்தில் சமுத்திரம் பம்மி கொண்டிருக்க, ஜார்ஜ் சகஜமாகவே இருந்தான்..

ரத்தபந்தத்தைத் தவிர வேறெந்த பெண்ணிடமும் பழகாத ஜார்ஜின் கண்ணியமான பேச்சு படிக்கும் காலங்களிலேயே பல பெண்களைத் திரும்பி பார்க்க வைத்தது.. ஆனால் ஜார்ஜுக்கு தான் திருமணம் பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை.. பெண்களைப் பற்றிய எந்த அபிப்பிராயமும் இல்லை.. வீட்டில் வந்த பின் நேசமணியின் ஆட்டம் கொடுமையாக அமையும் என்று எதிர்பார்க்க, அவரோ வாயைத் திறக்கவில்லை..

வாயைத் திறந்து பேசினால் தானே என்ன நினைக்கிறார் என்பது புரியும்.. இப்படி மௌனம் சாதித்தால் என்னவென்று எடுத்துக் கொள்வது?? நேசமணி இப்படி என்றால் ஜார்ஜின் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் இல்லை.. எனக்கென்ன?? என்பது போல நடந்து கொண்டான்.. குடும்பமாக அமர்ந்து பேசும் வழக்கமே காணாத அந்த வீடு அதன் பாட்டில் அமைதியை அணைத்து உறங்கிக் கொண்டிருக்க, இவை அனைத்தையும் பழகிப் போன சமுத்திரம் நெஞ்சின் ஓரத்திற்குக் கேள்விகளைத் தள்ளிவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்..

அடுத்தடுத்து பரீட்சைகளை ஜார்ஜ் எழுதி கொண்டிருக்க, புதிய வீடும் தயாராகி இருந்தது.. நேசமணி பணிபுரியும் பள்ளிக்கு எதிர்புறத்தில் இருக்கும் வீடு சமுத்திரம் பணிபுரியும் பள்ளிக்கு அருகில் அமைந்தது.. தினமும் தூரமாய் அலைய முடியாது என்பதால் பள்ளிக்கு அருகில் குடிவந்தனர்.. இருந்தாலும் நேசமணி தனது கடமையைச் செவ்வெனச் செய்து கொண்டிருக்க, சிறிதும் சலனமின்றி, பார்க்கும் பெண்கள் அனைத்தையும் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டே வந்தான் ஜார்ஜ்..

கோவில் கொடை முடிந்ததினால் ஊரே பரபரப்பு குறைந்து காணப்பட, வாழ்க்கை மெல்ல தன் பாட்டிற்கு நகர்ந்து கொண்டே இருந்தது.. அவ்வவ்போது ஊருக்கு வந்து செல்லும் ராகவேந்திரன் தவிர, சொல்லி கொள்ளும் அளவில் வேறெந்த மாற்றங்களும் புவனேஷ்வரி வாழ்வில் நடக்காது போக, இழுத்த இழுப்பில் சென்று கொண்டிருந்தது அவளது வாழ்க்கை..

அன்று, வட்டார்ப்பட்டியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் பெரியப்பா வீட்டிற்கு வந்திருக்க, கூழ் குடிப்பதற்கு மோர் கேட்க செல்வது போல மெல்ல கூட்டத்தினுள் நுழைந்தாள் புவனேஷ்வரி.. அவள் கேட்டு வந்த மோரினை ஊற்றிக் கொண்டிருந்த பொன்னம்மா சேலை தலைப்பில் மூக்கை சீந்திவிட்டு மீதி பாதியை உறிஞ்சிக் கொண்டார்.. “பெரியம்மாவும் அவ சுத்தமும்..” எனப் புவனேஸ்வரியின் மூளை காறி உமிழ, முகத்தைச் சுளித்துக் கொண்டாள் புவனேஷ்வரி..

அவளின் சுனங்கிய முகத்தைக் கவனித்துக் கொண்டு பின்னாளில் பிடித்துக் காட்டும் நிலையிலா பொன்னம்மா இருக்கிறார்?? எரிகிற நெருப்பில் சுள்ளியை ஏன் எறிவானேன்?? என்று அமைதியாகக் கடந்து விட, மோர் செம்பை உற்றுப் பார்த்தாள்.. இந்த மோரைக் கொண்டு அப்பாவின் வேஷ்டி வழி ஊற்றினால் எதுவும் மிஞ்சாது தண்ணீராய் ஒழுகிப் போகும்.. என்ன கேடு வந்தாலும் புத்தி மாறப் போவதில்லை என்று உச்சு கொட்டிவிட்டு வெளியே வந்தவள் கதவில் சாய்ந்து நின்றாள்..

மாப்பிள்ளை உறவுக்காரர்கள் நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசி கொண்டிருக்க, பெரியப்பா தலைமேல் கைவைத்து அமர்ந்திருந்தார்.. அவரைப் பார்க்கவும் வருத்தமாகத் தான் இருக்கிறது.. என்ன செய்வது?? நடப்பதை மாற்றும் சக்தி இவளுக்கு இல்லையே.. அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன் என்று அனைவரும் பேசிய பின்னும் இறங்காதவளை என்ன செய்யட்டும்?? கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மெல்ல வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்..

மகேசனும் ஊருக்கு வந்த ராகவேந்திரனும் வயலிற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றிருக்க, அம்மாவும் அப்பாவும் பஞ்சாயத்தில் முக்கியப் புள்ளியாக ஆதரவிற்கு அமர்ந்திருந்தனர்.. வீட்டில் தனியே வந்து அமர்ந்தவள், பொறுப்பாக இலையை வெட்டிக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது வெளியே ஏதோ அரவம் கேட்க வெளியே சென்று பார்த்தால் கையில் கொம்பை ஊன்றி தோளில் சாக்கு பையைப் போட்டு நின்றிருந்தான் ஒருவன்..

“வீட்டுல அம்மா இல்லையா தாயி..” என விசாரிக்க, “இல்லியே.. பக்கத்துல போயிருக்காவ.. என்ன வேணும்??” என விவேகமாய்க் கேட்டாள் புவனேஷ்வரி. “கோயில் கொடை முடிஞ்சிருக்கு..” என இழுக்க அவளுக்குப் புரிந்து விட்டது.. அந்தக் காலகட்டத்தில் ஒரு வணிக முறை நடைமுறையில் இருந்தது.. ஒவ்வொரு சமுதாயத்தையும் பிரிவினையாக நோக்காது தொழில்களாகப் பிரித்து வைத்திருந்தனர்.. ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் இந்த முறையில் நிறைவேற்றப்படும்..

சான்றாக ஒரு கொல்லன், ஒரு தச்சன், ஒரு விவசாயி, ஒரு நாவிதன், ஒரு வண்ணான் இப்படிப் பல தொழில்கள் இருக்க, தேவைப்படும் வேளைகளில் வேலை செய்து விட்டு மொத்தமாய் அறுவடை காலங்களில் தானியங்களும் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளையும் பெற்று செல்வர்.. பணப் புழக்கம் வெறும் சம்பிரதாயத்திற்கும் சந்தைக்கும் மட்டுமே..

ஏற்கனவே அம்மா எடுத்து வைத்த நெல்லை கொடுத்திட, “சாப்பிட ஏதாவது எடுத்தா தாயி..” எனக் கேட்க, வீட்டில் இருந்த கிண்ணத்தில் குழம்பை கோதி கொடுத்தாள்.. திண்ணையில் அமர்ந்து உண்டவன் பெரிய கும்பிட்டோடு கிளம்பிட, எதுவும் புரியாத புவனேஷ்வரி ‘என்னவோ’ என்று விட்டுவிட்டாள்..

பஞ்சாயத்து எல்லாம் முடிந்த கனியம்மாள் வீடு திரும்ப, முற்றத்தில் டப்பின் அருகே கிடந்த கிண்ணத்தைப் பார்த்து விட்டார்.. எப்பொழுதும் இரவு நேரங்களில் மட்டுமே சமைக்கும் கனியம்மாள் சோறு, குழம்பு அனைத்தையும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு சோற்றுப் பானை, குழம்பு சட்டியை இரவே விளக்கி வைத்து விடுவார்.. காலையில் தட்டும் டம்ப்ளருமே பயன்படும்.. இரண்டு நாட்களுக்கு முன் ரோட்டில் வந்த பாத்திர கடைக்காரரிடம் வாங்கிய கணமான கிண்ணம் இங்கு வந்து சேர்ந்ததன் மாயமென்ன என்ற யோசனையோடே அழைத்தார்..

“ஏ.. புவனா.. இங்க வா... இந்தக் கிண்ணத்துக்கு இங்க என்ன வேலை..” எனச் சற்று அதட்டலாகவே கேட்க, பதறிப் போனாள் புவனேஷ்வரி.. கனியம்மாள் அவ்வளவு எளிதில் கோபமாக மாட்டார் என்பது தெரியும்..

“நாசுவன் வந்தான்.. சாப்புட சோறு குடுக்கனும்லா..” எனப் பவ்யமாகவே கூற, “என்ன கிண்ணத்துல குடுத்தியா?? கூரு கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு.. எவளாவது கிண்ணத்துல குடுப்பாளா??” எனப் பக்கத்தில் இழுத்து “செரட்டையில ஊத்தி குடுத்தா குறைஞ்சிருவியோ.. மெனக்கெட்டு மேல கெடக்கக் கிண்ணத்த எடுத்துருக்கா பாரேன்.. அடுத்த வாட்டி வந்தா என்னையே வந்து கூப்புடு.. நல்லா இருப்ப..” எனப் பொருமிக் கொண்டார் கனியம்மாள்..

அவர் கூறிய மறைவான பாகுபாடு இவளுக்குத் தாமதமாகப் புரிய, ‘பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்..’ என்ற சொலவடையும் நினைவிற்கு வந்ததும் அமைதியாக எதிர்த்துப் பேசாமல் நின்றாள்.. “ஒன்னு செய்யு.. நீயே உக்காந்து விளக்கி எடுத்தா.. சாம்பல போட்டு அரக்கி தேய்க்கணும்.. அப்ப தான் புதுசு கணக்கா இருக்கும்..” என்று விட்டு உள்ளே செல்ல, “என்னது?? நான் பாத்திரம் விளக்கனுமா?? என்ன தைரியத்துல என்ன பார்த்து இப்பிடி சொன்ன??” என வீரவசனம் பேச ஆசை தான்..

உணர்ச்சி வசப்பட்டு வீர உரை நிகழ்த்தி விட்டாள் எனில் வீதி என்று கூடப் பாராது தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல் பாய்ந்து வந்து அப்பி விடுவாரே கனியம்மாள்.. முகத்தை ஒரு முழத்திற்குத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவளும் முன்பின் பழக்கம் இல்லாத ஒன்றை தன்னுடைய இஷ்டத்திற்குச் செய்ததிற்கு அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.. என்ற நோகலோடு பலகையை இழுத்து போட்டு அமர்ந்தாள்..

இந்தப் பாத்திரம் விளக்கும் இடத்தில் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ்ந்திருக்க, அது சரித்திரமாக மாற்றும் பொருட்டுப் பக்கத்து திண்ணையின் விளிம்பு பெயர்ந்து நின்றது.. அந்த விரிசல் அன்றைய நாளை நினைவு கொள்ளச் செய்தது.. ராமசாமி கோயில் கொடைக்கு வேலப்பன் இளம் ஆட்டுக்கறியாகப் பார்த்துப் பேரம் பேசி, வாங்கி வந்திருந்தார்..

வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ கிடைக்கும் ஆட்டுக்கறிக்குத் தவம் கிடக்கும் புவனேஷ்வரி; கனியம்மாளிடம் தரையில் நில்லாது பறந்து கொண்டிருந்தாள்.. “உங்க அப்பன் எடுத்துட்டு வருவாருன்னு கனவா கண்டுட்டு இருந்தேன்.. செத்தேன் பொறேன்.. பறந்துட்டே இருக்க.. ஈருள்ளி உரிக்கணும்.. வெள்ளை பூடு உரிக்கணும்.. நீ செய்வியா?? வேலைய சொன்னா பெரிய இது கணக்கா தட்ட தூக்கி மடியில வச்சிட்டு நிமித்திக்கிடுவ.. அடுப்பாங்கரையில இந்தப் புகையுள்ள கெடந்து சங்கட படுதது நான் தான.. குழல வச்சி ஊதி ஊதி பத்த வைக்கது எவ்வளோ சங்கடம் தெரியுமா?? ஒருநாள் இந்தப் பாட நீ பாரு.. வெறவ பத்த வைக்கதுக்குள்ளேயே சங்கடப்பட்டுப் போவ.. மண்ணெண்ன அடுப்பு வாங்கித்தான்னு கேட்டா மனுஷன் கேட்டா தான..” என ஒருபாடு புலம்பி தள்ள, “உன்னிய போய்க் கேட்டேன் பாரு.. என்ன சொல்லணும்..” எனச் சலித்துக் கொண்டே வெளியே வந்தாள் புவனேஸ்வரி..

“ஏ.. ந்தா.. பெரிய இதாட்டம் வந்து அது பண்ணட்டா இது பண்ணாட்டான்னுட்டு.. ஒன்னு சொல்லவும் உச்சாண்டி கொம்புக்கு ஏறிட்டு நீ பாட்டுக்கு போற.. உள்ள வந்திய.. எல்லா வேலையும் பாக்கவா செத்தேன் முன்ன பின்ன தான் பாட்ட என்னத்தயும் சொல்ல தான் செய்வா.. அந்தால போற.. வா.. வந்து உரி..” எனக் கனியம்மாள் கூற, “பேசாட்டு பீடியவே சுத்திட்டு கெடந்திருக்கலாமோ..” என நொந்து கொண்டே அடுப்பாங்கரைக்குள் நுழைந்தாள்..

இரட்டை அடுப்புச் சுண்ணாம்பினால் கட்டப்பட்டிருக்க, விறகுகளைத் தயாராக எடுத்து வைத்து விட்டு உள்ளியை உரித்துக் கொண்டிருந்தார்.. போதாத குறைக்கு அம்மி வேறு பாறாங்கல் போலப் போட்டு வைத்திருக்க, “ய்யய்யய்யயய.. இந்த அம்மி வேற.. இத்துன்னூண்டு இடத்த வச்சுட்டு எம்புட்டு ஆட்கள வேலைக்குக் கூப்புடுதது.. ம்ஹும்.. எங்க உக்காரட்டுமோ தெரியல..” என்றபடியே அம்மியில் குளவியைத் தள்ளி ஒதுக்கி விட்டு அமர்ந்தாள்..

“ஏ.. அம்மியில உக்காராதன்னு எத்தன வாட்டி சொல்லுதது?? பொம்பள பிள்ள அம்மியில குத்த வைப்பாளா??” என அதற்கும் கனியம்மாள் கண்டிக்க, “உன்னோட பெரும் யமத்தா இருக்கு.. ஆவாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்ங்குற மாதிரி எதாச்சும் ஒன்ன கரிச்சு கொட்டிட்டே இருக்க.. நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. போ..” எனக் கிடைத்தது தான் வாய்ப்பு என்று எழுந்து செல்ல முற்பட்டாள் புவனேஷ்வரி..

அவளின் கரங்களைப் பிடித்துத் தரையில் அமர வைத்த கனியம்மாள், “அம்மில உக்காந்தா உக்காருத எடம் பருக்காதுன்னு சொல்லுவாவ.. நீயே இத்தான்தண்டி தான் இருக்க.. அதுக்குச் சொன்னா உடனே எங்கடா எடம் கிடைக்கும்னு ஓடுததுக்கு ரெடியா நிக்க வேண்டியது.. ந்தா.. உள்ளிய உரி..” என மனைஅரிவாளில் சின்ன வெங்காயத்தின் மூக்கையும் வாலையும் அரிந்து கொடுத்தார்.. அடுப்பின் வழியே உருவான புகையும் வெங்காயத்தின் நீரில் உருவாகும் நெடியும் கண்களை எரிக்க, கசக்கி கொண்டே உரித்தாள்..

அவ்வளவு தான்.. கனியம்மாள் கொடுத்த வேலையை மூக்கை சீந்தியடியே உரித்து விட்டு எழுந்த புவனேஷ்வரி இடுப்பை பிடித்துக் கொண்டு பின்னால் சாய்ந்து நிமிர்ந்தாள்.. “இந்த வயசுலேயே குறுக்கு வலி வருது.. ஒரு உள்ளி உரிக்கும் முன்னே இப்பிடி வலிக்குதுன்னா நாளைக்குப் போற வீட்டுல என்ன தான் வேலை பாப்பியோ..” எனப் பதார்த்தமாகக் கூறிய கனியம்மாளை முகம் சுருக்கி முறைத்து விட்டு மடியில் கிடந்த தூசியை உதறி விட்டு எழுந்தாள்..

“கீழ தள்ளி வச்சிட்டு உதறுனா கை நொடிஞ்சிருமோ.. மேலே நின்னுட்டு உதறுதியே.. மூக்குல ஏறுதுல்லா..” என முகத்தில் கையைக் கொண்டு விசிறினார் கனியம்மாள்.. “ம்ம்ம்...” என இழுத்த புவனேஸ்வரியை, “அந்தப் பரண்ல கெடக்கப் பானைய எடுத்து விளக்கிட்டு வா.. போன வருஷம் கவுத்தி வச்சது.. புழுதி அடைஞ்சு கெடக்கோ என்னமோ..” என அசால்ட்டாகக் கூற, “என்னது?? நானா??” என விழித்தாள் அவள்..

“என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க.. போ.. போய் விளக்கிட்டு வா.. இல்லன்னா இந்தக் கறிய குட்டியோண்டியா வெட்டு..” எனக் கனியம்மாள் நீட்ட, “நான் பானையவே விளக்குதேன்..” என்று விட்டு காலடி சத்தம் கேட்கும்படியாக நடந்து சென்றாள்.. ஒரு பலகையைப் போட்டு எம்பி எடுத்தவள் வாசலுக்கு வரும் பொழுது பானையின் நிறம் மஞ்சளாக இருந்தது தூசி படிந்து..

பாவாடையை முட்டியில் மடங்கும் இடத்தில் சுருக்கி வைத்து குத்த வைத்து அமர்ந்தவள் பானையைச் சற்று காட்டமாகவே தரையில் வைத்தாள்.. அருகில் சாம்பலும் தென்னை நாரும் ஒரு தட்டில் இருக்க, நாரில் சாம்பலை ஈரமாகத் தொட்டுப் பானையில் வைத்து கரகரவென்று தேய்த்தாள்.. எங்கே தேய்த்ததும் அவள் அதிகாரத்திற்குப் பயந்து நீங்கிக் கொள்ள அந்தத் தூசி என்ன வேலப்பனா?? ஒரு வருடமாக அடுப்பில் தாளிக்கும் எண்ணெய் திவலைகள் சிதறி பானையின் மேற்பரப்பில் தெறித்திருக்க, ஓட்டுப்பறையில் இருக்கும் தூசிபடிந்து விடாப்பிடியாக அமர்ந்து கொண்டது..

நிறம் மாறாமல் போக, சற்றே எரிச்சலான புவனேஷ்வரி மேலும் சாம்பலை எடுத்துக் கொண்டும் பயனில்லை.. எண்ணெய் பிசுக்கு போவேனா என்றது.. புவனேஷ்வரிக்கோ வருட கணக்கில் ஒரு கேள்வி இருந்து வந்தது.. மண்பானையில் சூடு ஏறி, கறி கொதித்து அம்மியில் இடி இடிஇடியென இடித்து மசாலா உள்ளே போட்டு குழம்பாகத் தட்டிற்கு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.. ஏன் ஒரு மாற்றமாக ஈயபாத்திரத்தில் சமைக்கக் கூடாது? சூடு ஏறவும் விளக்குவதற்கும் எளிதாக இருக்கும்.. விறகும் அவ்வளவாகத் தேவைப்படாதே..

இதே கேள்வியைக் கேட்டால், “பாத்திரத்துல போட்டுட்டு அதே வாசம் வீசிட்டே இருக்கும்.. என்னிக்கி கறி அவிச்சாலும் இந்தச் சட்டி தான்..” என அதட்டி விடுவார் கனியம்மாள்..

இன்றோ ஒருபடி மேலே சென்ற புவனேஷ்வரி, பேசாமல் இந்தப் பானையை இங்கேயே போட்டு உடைத்து விட்டால்?? அடுத்து பானையின்றி ஈயப்பாத்திரத்தையே தேர்வு செய்ய வேண்டும்.. வேறு வழியுமில்லை.. என்று தனக்குள்ளே திட்டத்தைத் தீட்டிய புவனேஷ்வரி நேரடியாகச் செய்தால் மாட்டி கொள்வாள் என்பதனால் வேறொரு வழியையும் கண்டுபிடித்தாள்..

பாத்திரம் விளக்கும் பொழுதே கை நழுவுவது போல இரண்டு மூன்று முறை கீழே போட்டு பார்த்து விட்டாள்.. உடைவேனா என்று நின்றது அந்தப் பானை.. களிமண்ணினால் ஆன பானையைத் தீயினால் சுட சுட கணம் கூடும், கல்லாக இறுகிப் போகும்.. இப்படித் தான் திருமணமாகி வந்த காலத்தில் இருந்து கனியம்மாள் பயன்படுத்தி வரும் கறிப்பானை அது.. அவ்வளவு எளிதில் உடைந்திடுமா என்ன??

அதற்காகப் புவனேஸ்வரியும் லேசான ஆள் என்று யூகித்திட முடியாது.. ஒரு கட்டத்திற்கு மேல் தரை சரி வராது என்ற முடிவிற்கு வந்தவள், அருகில் இருந்த திண்ணையில் இடிக்கப் பானை அப்படியே இருக்கத் திண்ணை தான் விரிசல் விழுந்து, விளிம்பு சிதறியிருந்தது.. அந்தச் சத்தத்தில் கனியம்மாள் வெளியே வர திண்ணை உடைந்து கிடக்கக் கையில் பானையோடு நின்றிருக்கும் புவனேஷ்வரி மீது கோபம் தீயாய் வந்தது..

“என் அப்பன் வீட்டுல இருந்து கொண்டாந்ததுல இது ஒன்னு தான் உருப்படியா இருக்கு.. அத கெடுக்கதுக்குன்னே என் வயித்துல அவதாரம் எடுத்து வந்துருக்கா பாரேன்..” எனத் திட்டி தீர்த்ததோடு மட்டுமில்லாமல் இரண்டு அடிகளையும் போட்டு வைத்தார்.. பழைய அடிகள் முதுகில் தற்பொழுது உணர்ந்தவள் கிண்ணத்தை மெல்ல கழுவி விட்டு உள்ளே நுழைந்தாள்..
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-14

எதற்கு இந்தப் பாகுபாடு?? என்ற கேள்வியைக் கேட்கும் வீரப் பெண்மணி அல்ல புவனேஸ்வரி.. பாவப்பட்ட பாமரனின் வீட்டில் பிறந்து பணத்தின் பஞ்சத்தினால் பரிதவித்துத் தனக்கான பெயரை வழங்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் வேலப்பனின் மகள்.. சில சம்பிரதாயங்களும் வழக்க முறைகளும் நிலவி வந்த காலக்கட்டத்தில் வீட்டு பெண்களின் கண்டிப்பில் கட்டுக்கோப்பாக மட்டுமே வளரும் வகையறா..

கிண்ணத்தை அங்கிருந்த பரணில் அடுக்கிவிட்டு மீண்டும் வாசலில் இருந்த பீடித் தட்டை தள்ளி வைத்து விட்டு, கால்களை விரித்து அமர்ந்தாள்.. பச்சை நிறமான ஒற்றைக் கரத்தில் அடங்கி நின்ற நூல் கற்றையை விரிக்க, முடிவேயில்லாத கூந்தல் போல அவிழ்ந்து விழுந்தது.. கால் விரலில் மாலை போல அணிவித்து மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நூலை அங்கிருந்த சூட டப்பாவில் சுற்றத் தொடங்கினாள்.. தறி அடிப்பவர்கள் போல அழகாய் பிரிந்து வர, இடையிடையே தோன்றும் சிக்கல்களை எடுத்தும் விட்டாள்.. அறுத்திடும் வலிமை கொண்ட மெல்லிய நூலை சுற்றியதால் பெருவிரலில் சிறுகுழி விழுந்து சுற்றுப் புறத்தை பச்சையாக மாற்றி விட்டிருந்தது..

மற்றொரு பீடித் தட்டை எடுத்துக் கொண்டு அவளருகில் அமர்ந்த கனியம்மாள்; பக்கத்தில் இருந்த கப்பில் இருந்த தண்ணீரை தொட்டு கைகளை ஈரப்படுத்தி விட்டு இலைகளைப் பிரித்தார். “இங்கேரு.. ஒன்னு தெரியுமா??” என ஆரம்பிக்க, “சும்மா சலம்பாம என்னனு சொல்லு...” எனச் சிடுசிடுத்தாள்..

“தெரியுமான்னுதான் ஆரம்பிச்சிருக்கேன்.. அந்தால கடிக்க.. தாயிட்ட எப்பிடி பேசணும்னு தெரியுதா?? நாளைக்கு...” எனத் தொடங்கும் பொழுதே, “யம்மா.. சொல்ல வந்தத சொல்லு தாயி.. நானே சிக்கு சிக்கா இருக்கேன்னு எரிச்சல்ல இருக்கேன்.. நீயும் பக்கத்துல கெடந்து தொணதொணன்னுட்டு...” என்றாள்..

“நம்ம அரசி இருக்கால்ல..” எனப் பழக்கத்திற்குத் தோதுவாக மர்மமாய்த் தொடர எண்ணி நிறுத்தி நிறுத்தி பேசவும் “ஆமா.. இருக்கா.. அவளுக்கென்ன??” என எரிச்சலடைந்தாள் புவனேஷ்வரி.. “அவளுக்கு ஒரு எழவும் இல்ல.. போ.. இனி என்னத்தயாவது சொல்லுதேன்னு வந்தேம்னா என் புத்திய வெளிய கெடக்கக் கட்ட வாரியளால அடி.. ஒன்னு சொல்ல வுடுதாளா??” எனத் திட்டி கொண்டே பெட்டியில் இருந்த இலையைச் சருகைக்கு மாற்றிவிட்டு நூலையும் தூளையும் தட்டில் தட்டிக் கொண்டு எழுந்தார்..

புகையிலையின் நரம்பு உருட்டும் பொழுது வளைந்து கொடுக்காமல் தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் மடங்காமல் நிற்கும் பகுதியை கத்தரியால் கிழித்து விடுவர்.. அந்தத் தூசி இவளின் நூலினுள் மாட்டி மேலும் சிக்கலை உண்டாக்க, “இப்போ என்னயனுங்க?? நானும் பாத்துட்டே இருக்கேன்.. சும்மா சும்மா எதாச்சும் பண்ணி என் மண்டைய கீறிட்டே இருக்க... எந்திரிச்சுப் போறன்னா போய் அழனும்..” என மேலும் எரிச்சலில் கத்தினாள்..

“நல்லா தான இருந்த வார வழியில வெறி நாய் கடிச்சிட்டு போலருக்கு..” என முணுமுணுத்துக் கொண்டே தட்டை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் முத்தம்மாளின் வீட்டிற்குச் சென்று விட்டார் கனியம்மாள்.. நிமிடங்கள் நில்லாது ஓடிக் கொண்டிருக்க, கோபம் தணிந்த புவனேஷ்வரி சாவகாசமாய் அமர்ந்து யோசிக்கத் தொடங்கினாள்.. என்னதான் கனியம்மாள் அவளின் சேமிப்பை அள்ளி வேலப்பனிடம் நீட்டியிருந்தாலும் காரணமே கூறாமல் கடிந்து கொள்வது அவ்வளவாகச் சரியாகப் படவில்லை..

அதே நேரத்தில் மன்னிக்கவும் முடியவில்லையே.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக உழைத்த பணம் ஆயிரத்து சொச்ச ருபாய் இருந்த பீரோவின் சாவியைச் சரியாக ஒட்டுப்பறையில் இருந்து எடுத்துக் கொடுத்தால் கோபம் வராதா?? குடிப்பதற்குக் காசில்லை என்பதற்காக மகளின் சேமிப்பை தாரை வார்த்து கொடுப்பாளா ஒரு தாய்.. இப்பொழுது தான் கனியம்மாளின் அக்கா, தங்கச்சிமார்கள் கூறும் ‘கூரு காணாது’ என்ற வார்த்தை சரியென்று தோன்றியது..

பெரியப்பா வீட்டில் இருந்து திரும்பிய புவனேஷ்வரி பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியாக சோதிக்க, உள்ளே சில்லறைகள் மட்டுமே மீதமிருந்தது.. சீட்டுத் தொடங்கிச் சரியாகக் கட்டுவதில்லை.. மற்றவர்கள் கட்டினால் சீட்டு முடியும் முன்னே சென்று பணம் வாங்கிப் பாழும் பானத்தில் போதாமல் செய்து விடுகிறார்.. இதில் மாதாமாதம் மோட்டாருக்கு டீசல் செலவு வேறு இவள்தான் பார்த்துக் கொண்டாள்..

இது போதாதா?? என்ன தான் வேலப்பனுக்கு நல்ல விதமான ஒரு பக்கம் இருப்பினும் இப்படி ஒரு சூழலில் அவை எல்லாம் நினைவில் நிற்பதேயில்லை.. குடித்து விட்டு ரோட்டில் நின்று வருகிறவனையும் போகிறவனையும் மரியாதை இன்றி மடத்தனமாகப் பேசும் முட்டாள் குடிகாரன்தான் நினைவுக்கு வருகிறான்.. நினைத்தாலே பத்திக் கொண்டு வருகிறது..

பேசாமல் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாமா?? இல்லை இரவில் சாப்பிடும் உணவில் விஷத்தை வைத்து விடலாமா?? என்ற அளவிற்குக் கோபம் தகித்துக் கொண்டிருந்தது.. சும்மாவே தன்னுடைய பொருள்மீது கை வைத்தாலே பொறுத்து கொள்ளாத புவனேஸ்வரியின் பொக்கிஷம் மீது படை எடுத்திருந்தால் பொறுத்து கொள்வாளா என்ன??

சரி.. இப்பொழுது சமாதானம் செய்யலாம்.. வீட்டிற்கு வந்தபின் நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவிற்கு நாலு கேள்வி கேட்டுவிட வேண்டும்.. இல்லையெனில் மனம் கேட்காது என்று நூலை சுற்றிய டப்பாவை பீடித்தட்டில் போட்டுவிட்டு நூல் கற்றையைச் சுருட்டி பழைய வட்டுப்பெட்டியில் போட்டு விட்டு நடையைக் கட்டினாள்..

கண்களைத் துடைத்துக் கொண்டு, தாவணியை முன்னால் இழுத்து சொருகி கொண்டு நடந்தவளை, “புவனா...” என்ற அழைப்பு நிறுத்தியது.. திரும்பி பார்க்க அங்கு நின்றது சொர்ணமேரி அக்கா.. “யக்கா..” என இவள் முறுவலிக்க, “எங்க போற??” என விசாரித்தார்.. “எங்க அம்ம முத்தம்ம வீட்டுக்கு பீடி சுத்த போயிருக்காவலா.. அதான்.. கூட்டிட்டு வர போறேன்..” என்கவும் “சேரி.. போயிட்டு வா..” என்று விட்டு நகர்ந்தாள் சொர்ணமேரி..

“யக்கா.. நீங்க எங்க போறீய... நானும் வாரேன்...” என்றபடியே ஆவலுடன் தொற்றிக் கொண்டாள்.. ஒரு வீட்டின் முன்னே நின்ற சொர்ணா, “புவனா நாங்க ஜெபம் பண்ண போறோம்..” எனத் தயக்கத்துடன் கூற, “நானும் வாரேன்..” என இணைந்து கொண்டாள்.. அங்கே கிடைத்த அமைதியில் யோசித்து ஒரு முடிவை அடைந்தாள்.. எப்படியும் இந்நேரம் பணம் பாழுங்கிணற்றில் விழுந்து தொலைந்திருக்கும்.. வீட்டில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் திரும்ப வரப்போவதில்லை.. இனி எவரின் கைகளுக்கும் கிடைக்காத வகையில் சேமிக்க வேண்டும்..

எறும்புக்கு கூடு கட்ட சொல்லி கொடுக்கவா வேண்டும்.. மீண்டும் எழுந்து நிற்குமே.. அதற்காகக் கனியம்மாளை சும்மாகவும் விடக் கூடாது.. அடுத்த நேரம் இதே போல முட்டாள்தனம் செய்யும் முன்பு ஒரு முறையாவது தான் கேட்க போகும் கேள்விகள் நினைவிற்கு வர வேண்டும்.. ஜெபம் முடித்து விட்டு வீடு திரும்பிய புவனேஷ்வரி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்கக் கனியம்மாளோ, “வெறி நாய் வாயில போய் ஏன் விழுவானேன்..” என்று கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டார்..

இரவில் தள்ளாடியபடியே வந்து சேர்ந்த வேலப்பனை காணும் பொழுது ரத்தம் கொதித்து “என் துட்ட தின்னுப்புட்டு தள்ளமாடி வாரன்ன..” எனக் கருவி கொண்டிருந்தது.. இது தான்.. இது தான் சரியான சமயம்.. “ஏம்ம.. பீரோவுல இருந்த என் துட்ட யாரு எடுத்தது.. மேல ஓட்டுப்பறையில வச்சிருந்த சாவிய யாரு எடுத்தது??” என வினவ, “நாம்லா எடுக்கலம்மா.. நீ சாவிய எங்க வச்சிருந்தன்னே.. தெரியாது.. இதுல பீரோவுல எங்கன போயி துட்ட எடுக்க..” எனப் பிரமாதமாகப் பொய் பேசினார்..

“ஏம்ம.. எப்பிடி ம்மே.. இப்பிடி வாய் கூசாம பொய் சொல்லுத.. பீரோவுல துட்டு வச்சிருந்தது அவனுவ ரெண்டு வேருக்கும் தெரியும்.. ஓட்டுப்பறைக்குள்ள நான் சாவி வச்சிருந்தது யாருக்கும் தெரியாது.. அன்னிக்கு நான் வைக்கும் போது நீ தான் பாத்த...” என அழகாய் பொய்யை வெளிகொணர்ந்திட, “நான் எதுக்கு உன் துட்ட எடுக்கப் போறேன்.. எனக்கு ஆசை பாத்தியா.. நீயா எங்கனயாச்சும் மறந்து வச்சிட்டு போயிருப்ப.. உங்க அப்பனுக்குத் துட்டை மோப்பம் புடிக்கச் சொல்லியா குடுக்கணும்..” என அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டார் கனியம்மாள்..

“யம்மா.. தாயி.. உனட்ட போயி கேட்டேன் பாரு.. என் புத்திய செருப்பால அடிக்க ஆளு இல்ல.. போதும்மா.. இத்தோட நிறுத்திக்கோங்க.. உங்க சங்காத்தமே வேண்டாம்.. ஆள வுடுங்க.. அந்தத் துட்ட வச்சிட்டு என்னனியும் நாசமா போங்க.. எனட்ட புருசனும் பொண்டாட்டியும் துட்டு கேட்டு வந்து நின்னா மனுஷியா இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்..” எனக் கத்திவிட்டு அமைதியாகப் பீடியை உருட்டத் தொடங்கினாள்..

அவளுடைய பேச்சில் இருந்த மனவேதனை புரிந்ததினாலா?? இதற்கு மேலும் பேசினால் மீண்டும் ஆடி விடுவாளே என்பதினாலா?? நிலைமை சரியில்லை என்பதினாலா?? இப்படி எத்தனை ஆலாக்களைப் போட்டாலும் கனியம்மாளின் ஆழ்மனத்தின் ஓட்டத்தைக் கணிக்க இயலாது..

அடுத்து வந்த நாட்களில் புவனேஷ்வரி அதிரடியாகக் களத்தில் இறங்கி விட்டாள்.. குடும்ப மானம் சந்தி சிரித்தாலும் பரவாயில்லை.. பணம் இன்றி வாழ்க்கை நடத்த முடியாது என்று சீட்டு நடத்துபவரின் வீட்டிற்கே நேரில் சென்று இவர்களின் குடும்பச் சீட்டை பிள்ளைகள் இன்றி வேலப்பனோ கனியம்மாளோ வந்து கேட்டால் குடுக்க வேண்டாம் என்றும் யாருக்குமே தெரியாமல் தனது பெயரில் மற்றொரு சீட்டு தொடங்கவும் கேட்டுக் கொண்டாள்..

ஏற்கனவே இவளின் குடும்பச் சூழல் அறிந்த அவரும் அவள் கேட்டவை நிறைவேற, வழிவகை செய்து கொடுத்தார்.. மீண்டும் அதே வாழ்க்கை சுழற்சி.. பள்ளிக்கும் சென்று வந்து பீடியையும் உருட்டிக் கொண்டிருந்தாள் புவனேஷ்வரி.. பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற சுடர் அவளுக்குள் அக்னி தீபமாகக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது..

இதற்கிடையில் அவ்வவ்போது சொர்ணமேரியின் தோழி ஒருவர் வீட்டிற்கு வந்து ஏழ்மையினால் கஷ்டப்படும் குடும்பத்தின் மீட்பிற்கும் இரட்சிப்புக்கும் ஜெபிக்க மதிய நேரத்தில் வந்து சென்றார்.. மதிய நேரத்தில் வேலப்பனும் மகேசனும் வயலில் நிற்க, கனியம்மாளும் கணக்கு போட பீடி கடைக்கு சென்று விட தனியே இருக்கும் புவனேஷ்வரி ஜெப கூடுகையை நடத்தினாள்..

மதிய உணவை முடித்து மந்தமாக இருக்கும் வேளையில் நாய்கள் கூட வயிற்றை காட்டி கொண்டு நிழலில் இளைப்பாற, எவருக்கும் தெரியாது என்ற தைரியம் தான்.. இது சரியா என்பதெல்லாம் அறிவிற்கு அப்பாற்பட்டது.. எவ்வழியிலாகிலும் தனது குடும்பத்திற்கு ஏற்றம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் தான்..

ஆனால் அன்று புவனேஷ்வரிக்கு சனிதிசை நடந்திருக்கும் போல.. யதார்த்தமாக வெளியே வந்த வடக்கு வீட்டுக்காரி இதனை பதார்த்தமாக பார்த்து விட அன்று மாலையே பூகம்பம் வெடித்தது.. மாலை வீடு திரும்பிய வேலப்பனை பார்த்து, “என்ன ஆலங்கனி.. வீட்டுக்கு வேதக்காரவிய எல்லாம் வந்துட்டு போறாவ போலுக்கு.. கோயில் கொடையில நடந்தத பாத்ததும் பயம் வந்துட்டாக்கும்..” என இக்கன்னா பேச்சு பேசவும் கோபம் ஏறி விட்டது..

“என்ன சொல்லுதிய.. யாரு வந்தா??” என சற்று கடுமையுடன் கேட்க, “என்னப்ள புவனா.. உங்க ஐயாவுக்கு சொல்லலியாக்கும்..” என தேக்கி வைத்த எரிச்சலை வைத்து தீட்டி விட்டார்.. ஒரு முறைப்போடு நோக்கிய புவனேஷ்வரி, “நான் தான் வர சொன்னேன்..” என்றாள் கம்மிய குரலில்.. “யாருட்ட கேட்டுளா வர சொன்ன.. என் வீட்டு மானத்த வாங்குததுக்குன்னே அலையுதியோ..” என கனியம்மாள் கடிந்திட, வார்த்தைக்கு வார்த்தை ஏ.. ஏ.. என்று அளித்தவர் கோபம் ஏறவும் எளாவுக்கு மாறியிருந்தது..

“ம்ம்..” என கனியம்மாளை ஒரு பார்வையில் அடக்கிய வேலப்பன் புவனேஸ்வரியை நோக்க அதில் ஆயிர அர்த்தம் பதிந்திருந்தது.. ஏதும் பதிலுருக்காமல் உள்ளே சென்ற புவனேஸ்வரியை தூங்கும் நேரத்தில் “இதுக்கு தான் கோயிலுக்கே வராம கெடந்தியோ..” என்ற கனியம்மாளின் பேச்சை கேட்க பிடிக்காமல் திருப்பி கொண்டாள்.. “ச்சே.. இந்த அம்மைக்கு இதான் வேலையே.. பெத்த பிள்ளைய எவனாச்சும் எதாச்சும் சொல்லியாச்சுன்னா போதும்.. உடனே நம்பிட்டு ஏ தாயி இப்பிடியா பண்ணனும்னு கேக்கணும்.. இதே நம்ம நல்லது பண்ணட்டும் வாய அடைச்சிக்கிடனும்.. ஊருல உள்ளவா சொல்லுதது தான் வேத வாக்கு..” என நொந்து கொண்டாள்..

மறுநாள் மதிய நேரத்தில் வழக்கமாக வரும் அக்காவும் வந்திட, சாலை என்றும் பாராது சகட்டு மேனிக்கு திட்டி அனுப்பி விட்டார்.. இதில் புவனேஸ்வரிக்கு ஏக மனவருத்தம்.. ஆனாலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியர் பிரசவ காலத்தில் விடுப்பு எடுக்க, காலியிடம் நிரப்பும் பணியைச் சிறப்பாகச் செய்து வந்தாள்.. இதனாலேயே பணியின் இறுதி காலத்தில் உடல்நல குறைவிற்காக எடுக்கும் விடுப்பிற்கும் சென்று வந்தாள் புவனேஷ்வரி..

நாட்கள் கொஞ்சமாய் நகர, மறந்திருந்த தைரியம் மீண்டும் பிறந்து அவர்களின் வீட்டிற்கே சென்று வந்தாள் புவனேஷ்வரி.. பல இக்கட்டுக்களின் மத்தியில் வருபவளை மறுக்க மனமில்லாமல் ஏற்று கொள்ள, அதையும் யாரோ ஒருவர் வேலப்பனிடம் போட்டு கொடுக்க குடித்து விட்டு வீடு தேடி சென்று அவமானப்படுத்தினார்.. இதற்கு மேலும் பொறுக்க முடியாத புவனேஷ்வரி, தன் வீட்டிலேயே தனிமையில் ஜெபிக்க தொடங்கினாள்..

அன்றும் அப்படியே மீனாட்சிபுரத்தில் இருக்கும் பள்ளியில் ஒரு ஆசிரியரின் இடத்தை நிரப்பும் பணியை முடித்துவிட்டு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு திரும்பினாள் புவனேஷ்வரி.. மாலையில் சோர்வாக வீடு திரும்பும் பொழுது ஞாபகமாகச் சீட்டு கட்டிவிட்டே வந்தாள்.. திண்ணையில் அமர்ந்தவளிடம், “நான் அன்னிக்கே சொல்லனும்னு நினைச்சேன்.. நீ கடிச்ச கடில அந்தால போயிட்டேன்.. நம்ம அரசி இருக்கால்ல..” என்றபடியே அருகில் அமர்ந்தார் கனியம்மாள்..

“ஆன்.. கேக்கணும்னு நினைச்சேன்.. அன்னிக்கு அந்த வட்டார்ப்பட்டிக்காரவிய எதுக்கு வந்தாவளாம்.. மெனக்கெட்டு அவர வையுததுக்குன்னு வண்டி பிடிச்சு வந்தாவளாக்கும்..” எனக் கோள் கேட்க ஆர்வமாக, “அத ஏன் கேக்குற.. வந்தவன்வ அவர வச்சு வாங்கிட்டானுவ.. முகமே சுண்டி போயிட்டு.. ஒரு பொம்பளபுள்ள பண்ணுன தப்புக்கு கண்டவன்ட்டையும் கையக்கட்டி நிக்க வேண்டியதா ஆயிட்டு.. பெறவு அவனுவளுக்கும் நியாயம் சொல்லன்னுமென்ன?? கெட்டி தாரேம்னுட்டு இப்போ இல்லன்னா ஆத்திரம் வராதா?? இருந்தாலும் வந்தவன்வ கெட்டிக்காரனுவ.. வாயால வையிதுட்டு மட்டும் தான் இருந்தானுவ.. கையை ஓங்கல.. இதே அவனுவ ஊர்ல கையால பேசிட்டு தான் மித்தபடி லொட்டு லொசுக்குலாம்..” என நீண்டு கொண்டே சென்ற கனியம்மாளின் பேச்சை நிறுத்தினாள் புவனேஷ்வரி..

“வட்டார்ப்பட்டிக்காரனுவ பெருமைய பேசுததுக்குத் தான் அன்னிக்கே குதிச்சிட்டு இருந்தியாக்கும்..” என்கவும் “அதான உன்ன அவசரகுடுக்கங்கது.. சொல்ல வந்தத ஒழுங்கா கேளு.. வந்த பயலுவ ஒன்னு பேச இங்க உங்க ஐயா கத்தன்னு ஒரே சந்தக்கடை கணக்கா இரைஞ்சிட்டு இருக்க, உங்க பெரியப்பாதான் நிறுத்த சொல்லிட்டு சட்டுன்னு மன்னிப்ப கேட்டுட்டாரு.. ஆனா அரசிக்குன்னு பாத்த பய.. ச்சே.. பாராட்ட வேண்டிய பய.. நடந்தது நடந்துட்டு.. உங்க புள்ளைய கட்டிக்கிடுததுக்கு எனக்கு இஷ்டம்தான்.. ஒருவேள திரும்ப வந்தா சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டானாம்.. இப்பிடி ஒரு பயல விட்டுப்புட்டா கல்யாணம் ஆன பய கூட இருக்கான்னு எல்லாருக்கும் கோவம்..” எனக் கனியம்மாள் கூறி முடிக்கவும் “ச்சே.. என்னா மனுஷன்..” என உதட்டை வளைத்து கொண்டாள் புவனேஷ்வரி..

சொந்த ஊரில் இருந்த வீட்டைவிட்டு பணிக்காக ஏற்படுத்தப்பட்ட வீட்டில் குடியேறிவிட்டனர் நேசமணியின் குடும்பத்தினர்.. அங்கிருந்தவரை இடைவெளி அதிகமிருந்ததால் பிரச்சனை அதிகமில்லை.. இங்கோ சற்று நெருக்கம் என்பதால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது சமுத்திரம் தான்..

தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நிதமும் சண்டை தான்.. அப்பா நிற்கும் வரை ஒரு வார்த்தை கூடக் குரல் உயர்த்திப் பேசாத ஜார்ஜ் அவர் சென்றபின் அவர் கூறிய அனைத்திற்கும் எதிர்ப்பதத்தில் நடந்து கொள்ளத் தொடங்கினான்.. அவர் என்ன சொல்வது நான் என்ன செய்வது?? என்ற வீம்பு தான்.. இதனை விட அனைத்தையும் மெளனமாகச் செய்பவனைக் கண்டிக்கும் வழி தெரியாது நேசமணி தான் தவித்தார்..

வேண்டுமென்றே சொல்லிக் கொள்ளும்படியாக எந்த விஷயமும் செய்யாமல் ஊரைச் சுற்றித் திரிய தொடங்கினான் ஜார்ஜ்.. நேசமணி மீது கொண்ட கோபத்தால் தன் வாழ்க்கை வீணாகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அனுபவ வயதை அடைவதற்கு முந்தைய நிலை அவனுடையது..

இந்த அக்கப்போருக்கு நடுவே, அவர்களின் வீட்டின் மேற்கு பகுதியில் ஒரு குடும்பம் குடிபெயர்ந்து வந்தது.. எங்கிருந்து வந்தார்கள்?? ஏன் வந்தார்கள் என்பதெல்லாம் எவருடைய அறிவிற்கும் எட்டவில்லை.. இவர்களின் குடும்பத்தைக் கவிழ்த்தி போட்டது போல ஒரு அமைப்பு.. முதல் இரண்டு பெண்கள், அடுத்தாக ஆண் வாரிசு.. எந்த வசதியுமே இல்லாதவர்களுக்கு இங்கிருந்து உதவிகள் செல்ல, சமுத்திரம் அங்கேதான் மிகப்பெரிய முட்டாள்தனத்தை நிகழ்த்தினார்..

சிறிய இடத்தில் குடியமர்ந்தவர்களுக்கு முறையான பத்திரங்களோ கோப்புகளோ இல்லாமல் இருக்க, வாரி வழங்கும் வள்ளல் பரம்பரை போலப் பத்திரத்தை எடுத்துக் கொடுத்தார்.. அவ்வவ்போது ரவிக்கை இரவலுக்கு ஜெயாவிடம் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள, சமுத்திரம் நல்லபடியாகவே பழகி கொண்டார்..

மறுநாள்... கனியம்மாளும் புவனேஷ்வரியுமாகச் சேர்ந்து சீனியம்மாளை பார்க்க சென்றனர்.. வேலப்பனோ சகோதரிக்கு பிடிக்கும் என்று சில பொருட்களை அனுப்பி வைக்க, துணிப்பையில் இட்டுக் கொண்டு நடையைக் கட்டினர்.. போக்குவரத்திற்காகச் சாலை போடப்பட்ட ஊரில் நடைபயணம் மேற்கொண்டு முக்கால் மணி நேரத்தில் சீனியம்மாளின் வீட்டை அடைந்து விட்டனர்..

இருவரையும் கண்டதும் சீனியம்மாள் வாய் கொள்ளாத புன்னகையோடு வரவேற்றிட, கொண்டு வந்த பொருட்களைக் கொடுத்தனர்.. “இந்தப் பய.. இன்னும் மறக்காமத்தான் அலையுதானாக்கும்.. அத அங்கன வையு.. இப்ப இப்பிடி உக்காருங்கேன்..” எனக் கனியம்மாளை அருகே அமர வைத்து, அருகில் இருந்த பிச்சிக்கொடியில் இருந்து பூவைஒ பறித்து முந்தானையில் போட்டுக் கொண்டிருந்தார் சீனியம்மாள்.. “எங்கன மைனி.. காலையிலேயே எங்க அக்காவுக்கு இதுலாம் கொண்டு போனாதான் ஆச்சின்னு ஒத்த காலுல நின்னுட்டாரு...” எனப் பெருமையாகக் கனியம்மாள் பேச, “இதுக்கு ஒன்னும் குறைச்ச இல்ல..” என நொடித்துக் கொண்டு சுற்றி நடக்கத் துவங்கினாள் புவனேஷ்வரி..

இரண்டு ஊர் கிழவிகள் சேர்ந்தால் என்ன நடக்கும்.. பக்கத்து வீடு, அதுக்கும் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, எதார்த்தமான வீடு என்று அனைத்து வீட்டையும் வீதிக்கு இழுத்து, அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து, அடி ஆழம் வரை சென்று அலசி விடுவர்.. கோளுக்கு என்றே கர்வமான விருது பெண்களுக்கே கொடுக்க வேண்டும்.. “இப்பிடி தான் மைனி.. அவா இருக்கால்லா..” எனக் கனியம்மாள் தொடங்க, “அவா புருஷன் இப்பிடி பண்ணி புட்டானாம்லா..” எனச் சீனியம்மாள் தனக்குத் தெரிந்ததைக் கூறிக் கொண்டிருந்தார்..

இவர்களுக்கு நடுவே அமர்ந்து தனக்குத் தெரியாத பல விஷயங்களை அவதானித்துக் கொண்டிருந்த புவனேஸ்வரியை கவனியாது, “அந்த மேலத்தெருக்காரன் இருக்காம்லா.. அதான் மைனி.. கள்ளநோட்டு.. அந்தப் பயலுக்கும் பக்கத்து வீட்டுக்காரிக்கும் ஏதோ ஒன்னாம்லா.. அடிக்கடி போகையும் வரையுமா இருக்காளாம்.. திடீர்னு அவா வரத்து குறைஞ்சதும்தான் ரெண்டாவது ஒன்ன கூட்டிட்டு வந்துட்டானாம்லா..” எனக் கனியம்மாள் கூறிக் கொண்டிருக்க, “ஏ... நீ வேற.. அந்தப் பய அப்போவே அப்பிடி.. நான் அங்கன இருக்கும் போதே என் சிநேகிதிக்கு நூல் விட்டுட்டு திரிஞ்சான்.. அவனே ஒரு மாதிரிபட்ட ரகம்.. அவனுட்ட போயா வுழுந்தா??” என நாடியில் கைவைத்துக் கொண்டார் சீனியம்மாள்..

“கள்ள நோட்டுன்னா.. செலுவி அவிய வீட்டுக்காரரா??” எனச் சந்தேகம் கேட்ட புவனேஸ்வரியை கண்ட பின்னரே சுற்றும் முற்றும் கவனியாது பழக்கத்தில் மூழ்கிப் போனதை உணர்ந்தனர்.. உடனே, “எவனா இருந்தா உனக்கென்ன?? நீ என்னத்துக்கு வந்த?? பள்ளிக்கொடத்துல யாரோ பாக்க வர சொன்னாவன்னு சொன்னல்லா.. போய்ப் பார்த்துட்டு வா.. நேரமாவுது.. பொழுது சாயும் முன்ன போவனும்.. இலைய வேற திண்ணையிலேயே போட்டுட்டு வந்துட்டேன்..” என அதட்டினார் கனியம்மாள்..

“ப்ச்.. போயி தொலயுதேன்.. எப்பிடியாச்சும் என்ன எங்கனயாவது தள்ளிரனும்னே நினைச்சிட்டு இருக்க வேண்டியது..” என முறுமுறுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.. பள்ளிக்கு சென்று விடுப்பு எடுக்க வேண்டிய ஆசிரியரை சந்தித்துத் தனக்கான வகுப்பினையும் வேலைகளையும் குறித்துக் கொண்ட புவனேஷ்வரி படித்த பள்ளிக்கே ஆசிரியையாகச் சென்று நிற்பதும் ஒரு வகைப் பெருமை தானே..

வந்த வேலையை முடித்துவிட்டு கனியம்மாளும் புவனேஸ்வரியும் வீட்டிற்குக் கிளம்ப, “புவனா.. நீ முந்தி ஒரு பள்ளிக்கொடத்துக்கு வேலைக்குப் போனல்லா.. அந்த டீச்சரு எனக்குச் சொந்தம் வேண்டியவிய.. எங்க வீடு இருக்குல்லா.. அதுக்கு எதுத்தாப்புல தான் இருந்தாவ.. தூரத்து சொந்தம்ங்தால உறவு முறை பிடிபடல.. அந்தா இருக்கேரு.. அதான் அவிய வீடு.. நீ ஒரு வார்த்த போயி பேசிட்டு வா..” எனச் சமுத்திரத்தின் வீட்டை காண்பிக்க, “உனக்குச் சொந்தம்னா நீயும் வா.. நான் என்னன்னு போயி பேசட்டும்..” எனத் தயங்கினாள் புவனேஷ்வரி..

“சும்மா போயி சத்தம் குடு.. என்ன தெரியுமான்னு அடையாளம் சொல்லு.. முந்தி பாத்ததா ஞாவம் இருக்கான்னு தெரியாதென்ன.. நீ முதல்ல முன்னாடி போ.. நான் வாரேன்..” என்றிட, புவனேஷ்வரி நடந்தாள்.. வாசலை கடந்து உள்ளே செல்லும் பொழுது ஒரு அடுக்கு மட்டும் ஓட்டுப்பறையாகவும் அதில் இருபுறம் திண்ணையும் அமைக்கப்பட்டிருந்து.. அதற்குப் பிறகு அனைத்தும் கான்க்ரீட் போடப்பட்டிருக்க, “பெரிய பணக்காரவிய போல..” என எண்ணிக் கொள்ள, “இல்லாமலா.. டீச்சர் வீடென்ன??” என மூளை தன் இருப்பைக் காட்டியது..

வீடு அமைதியாக இருக்கவும் திண்ணையில் அமர்ந்து ஆங்கிலச் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த ஜார்ஜை பார்த்து “டீச்சர் இருக்காவளா??” என வினவ, “உள்ள இருக்குறாங்க..” என்றவனின் கண்கள் காகிதத்தை விட்டு நகரவே இல்லை.. சரி என்று உள்ளே நுழைந்து “டீச்சர்...” என அழைக்கவும் அடுப்படியில் நின்ற சமுத்திரம் வெளியே வந்தார்.. வந்த விஷயத்தைக் கூறவும் வெளியே நின்ற கனியம்மாளை நலம் விசாரிக்கச் சென்றார்..

“கனி, இது உன் மொவளா??” எனச் சமுத்திரம் புன்னகையோடு கேட்க, “ஆமா.. இங்க பக்கத்துல ஒரு வேலையா வந்தேன்.. உங்க வீடு இங்கன இருக்குன்னு கேள்விப்பட்டேன்.. நீங்க இருப்பியளோ என்னவோன்னு தான் இவள அனுப்பி வுட்டேன்..” என்றார் கனியம்மாள்.. இருவரும் ஒரே ஊரில் பாவாடை போட்ட காலத்தில் நெருங்கிய தோழிகள் இல்லை என்றாலும் சிறிய அறிமுகத்தோடு இருந்திருந்தனர்..

“அப்பிடியா?? நல்ல பிள்ள தான்.. லீவ் ப்ளேசுக்கு உன் மொவா தான் வாரான்னு எனக்குத் தெரியாது கேட்டுக்கோ.. தெரிஞ்சிருந்தா விசாரிச்சி வச்சிருப்பேன்.. சின்னவனும் நீயும் ஒண்ணா படிச்சியோமா?? ஸ்கூல் போட்டால பாத்தது மாதிரி இருக்கு..” எனச் சமுத்திரம் வினவ, மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் புவனேஷ்வரி..

“சோமாயிருக்கியளா?? வீட்டுல எல்லாரும் எப்பிடி இருக்காவ??” எனக் கனியம்மாள் நலம் விசாரிக்க, “நல்லா இருக்கோம்.. அம்மா அப்பா எல்லாரும் சௌக்கியமா??” எனப் பதிலுக்கு விசாரித்துக் கொண்டார் சமுத்திரம்.. அதற்கு மேல் பேசி கொள்ள என்ன இருக்கிறது.. இரண்டு வினாடி அமைதிக்குப் பின், “சேரி.. நான் வாரேன்...” எனக் கனியம்மாள் விடைபெற்றுக் கொள்ள, “இன்னொரு நாள் இங்கனகுள்ள வந்தா வீட்டுக்கு வா..” என விடை கொடுத்தார்..

அவர்கள் இருவரும் அங்கிருந்து செல்ல, சரியான நேரமாய் மிதிவண்டியை உருட்டிக் கொண்டே உள்ளே வந்தார் நேசமணி.. அவரைக் கண்டதும் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து மௌனமாக உள்ளே சென்றார் சமுத்திரம்.. வீட்டிற்குள் நுழையவுமே ஜார்ஜ் அங்கிருக்க “ம்க்கும்..” எனச் செருமலை போட்டுவிட்டு “ஒன்னுத்துக்கு உதவப் போறது இல்ல.. செட்டுமையா உக்காந்து பேப்பர் படிக்கதுக்கு மட்டும் குறையே வச்சிர கூடாது..” என்ற வசையைப் போட்டுக் கொண்டே சாப்பிட அமர்ந்தார்.. அவரின் ஏளன பேச்சு தாங்க முடியாமல் கோபத்தில் அங்கிருந்து எழுந்து சென்றான் ஜார்ஜ்..
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-15

சமுத்திரத்தை பார்த்ததும் கனியம்மாளுக்குப் பிறந்தவீட்டு நினைவு வந்திட, “நாங்க எல்லாம் எப்பிடி வாழ்ந்தோம் தெரியுமா?? எங்க வீட்டுல என்னை அப்பிடி பாத்துகிட்டாவ.. இங்க வந்து உன் அப்பன்ட்ட பாடாபடுதேன்..” என்று புலம்பலையே புராணமாகப் பாடிக் கொண்டிருக்க “கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடும தலைய விரிச்சு ஆடிக்கிட்டு கெடந்துச்சாம்..” எனத் தலையிலடித்துக் கொண்டாள் புவனேஷ்வரி..

வீட்டிற்கு வரவும் சோர்வாக அமர்ந்த புவனேஷ்வரி ஒரு டம்ளர் காபியை கேட்க, கருப்பட்டியில் போட்டு தொட்டுக் கொள்வதற்குச் சோளப்பொறியும் கிடைக்க, கடகடவெனக் குடித்து முடித்தவள் வேலையைத் தொடங்கினாள்.. வழக்கம்போல நேரம் நகர்ந்து கொண்டிருக்கக் கடையத்தா வந்தார்.. இவ்வூரில் இருந்து திருமணம் செய்து கொடுத்த பெண்களைச் சென்ற ஊரின் பெயரை அடைமொழியாக வைத்தே அடையாளம் கூறுவர்.. பெயரை மறந்து போன புவனேஷ்வரி கோள் பேசும்பொழுது உபயோகிக்கும் ‘கடையத்தா’ என்ற பட்டப்பெயரை உபயோகித்தால் வாயை கிழித்து விடுவாளே என்ற பயத்தில் “ஏமோ.. இங்க வா.. இந்தா இந்த அக்கா உன்ன தேடி வந்துருக்காவ..” எனச் சாமர்த்தியமாகத் தப்பித்தாள்.

“ஏ.. ந்தா.. நீயா?? வா.. வா..” என அழைக்க, “யக்கா..” என்று திண்டில் அமர்ந்தாள் அவள்.. “என்ன விசேஷம் இன்னிக்கு வந்துருக்க.. காப்பி குடிக்கியா??” என விசாரிக்க, “அண்ணாச்சிகிட்ட நம்ம புவனாக்கு ஒரு எடம் சொல்லிருந்தேன்.. அதான் என்ன சொல்லுதாவன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்..” என்றாள்.. “அப்பிடியா?? எனட்ட ஒன்னும் சொல்லலியே..” எனக் கனியம்மாள் விழிக்க, “முந்தாநாள் தான் சொன்னேன்.. இப்பிடி வட்டார்ப்பட்டியில நம்ம ஆளுவ தான்.. சொந்தமா கடை வச்சிருக்கான் போல.. ஆளும் நல்ல குணமான ஆளு தான்.. நம்ம புவனாவ சொன்னேன்.. உடனே சரின்னுட்டாவ.. அதான் அண்ணாச்சி ஒரு வார்த்த சொன்னாவன்னா கேட்டுக்கோங்க.. அங்கேயும் சொல்லிப்புடுவேன்.. பாத்துக்கோங்க..” என்றாள்..

புவனேஷ்வரியோ காதில் விழுந்தும் விழாதது போலப் பீடியையே உருட்டி கொண்டிருக்க, “அவரு எனட்ட ஒன்னும் சொல்லல.. தோட்டத்துக்குப் பருத்தி பெறக்க போயிருக்காரு.. வந்ததும் சொல்லி வுடுதேன்.. நீயே வந்து கேட்டுட்டு போயிரு..” என வழியனுப்பி வைத்தார் கனியம்மாள்.. அவள் செல்லவும் “ஒரு மனுஷன்.. ஒரு பிள்ளைக்கு நல்லது செய்யும் போது வீட்டுல உள்ளவியட்ட நிரந்து கலந்து பேசுவான் கண்டிருக்கும்.. உடனே மைனிட்ட தான் போய் எருவனும்.. வீட்டுல இருக்க நான் கிறுக்கி.. என்னமோ பண்ணி தொலயுதான்..” எனப் புலம்பி கொண்டே உள்ளே சென்றார்..

இரவில் வழக்கம் போலத் தள்ளாடி வந்த வேலப்பனிடம் எதுவுமே பேச முடியாமல் போக, காலை வாயை கொப்பளித்துக் கொண்டிருந்தவரிடம் மெல்ல சென்று “நேத்து கடையத்தா வந்தா.. அவா என்னமோ வட்டார்ப்பட்டில எடம் சொன்னாளாம்லா.. என்ன சொல்லட்டும்னு கேட்டா...” என்று கனியம்மாள் தனக்குத் தெரிந்ததைத் தெரிவித்தார்..

“ம்ம்.. நான் சொல்லிக்கிடுதேன்...” என்றுவிட்டு சென்ற வேலப்பனை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியாமல் நின்றார் கனியம்மாள்.. அதற்குப் பிறகு இரண்டு நாட்களில் வேலப்பன் வேண்டாமென்று கூறி விட்டதாகச் செய்தி வந்ததடைந்தது.. ஆனாலும் மீண்டும் தேடி வரத்தான் செய்தது.. வேலப்பன் தான் விடாப்பிடியாக முடியாது என்று மறுத்து விட்டார்.. காரணம் கேட்டால் காது அடைத்துக் கொண்டது போல உட்கார்ந்துக் கொள்ள, “காதுல ஈயத்த காய்ச்சி ஊத்த..” எனத் திட்டிக் கொண்டார் கனியம்மாள்..

இதற்கு மத்தியில் புவனேஷ்வரி வேறு “எனக்கு வேதக்கார மாப்பிள்ளையா வந்தா நல்லா இருக்கும்..” என மனதில் வேண்டி கொள்ள, அதிலே உறுதியாகவும் இருந்தாள்.. வேலப்பனுடைய அமைதியே கனியம்மாளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.. அடுத்து மகளுக்கு என்ன செய்வது?? திருமணத்திற்குப் பொருள் எவ்வாறு திரட்டுவது?? என்ற கவலையே இல்லாமல் வேலப்பன் நடந்து கொள்வது ஒரு புறம் கோபத்தையுமே தூண்டியது..

ஊர் சுற்றியாகத் திரிந்து கொண்டிருந்த ஜார்ஜை கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் நேசமணி வறட்டுப் பிடிவாதத்தில் இருந்தார்.. ஊரை சுற்றினாலும் பெண்களிடம் சேட்டை செய்யும் ‘பொறுக்கி’ என்ற பெயரை வாங்காமல்தான் இருந்தான்.. தற்பொழுது குடியிருக்கும் ஊர் சற்று முன்புக்கு முரணானது என்பதால் ஊருக்குள் இல்லாமல் பட்டணம் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தில் அமர்ந்து நண்பர்களோடு அரட்டை அடிப்பது, தியேட்டருக்கு செல்வது என்று பொழுதை போக்கிக் கொண்டிருந்தான்..

ஊரை பற்றி முழுமையாகத் தெரியாது என்றாலும் நேசமணியின் தம்பி.. அதாவது ஜார்ஜின் சித்தப்பாவிற்குப் பெண் எடுத்தது இவ்வூரில் தான்.. பிள்ளைகள் இல்லை என்ற மனக்கசப்பில் கிணற்றில் குதித்த பெண்ணைக் கொன்று விட்டதாகக் கூறி அளவுக்கு மீறி பணத்தைக் கரந்தது மட்டுமில்லாமல் அவதூறு கூறி சங்கடப்படுத்திய ஊர்க்காரர்களின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை..

போதாக்குறைக்கு வீட்டின் அருகில் இருந்த கோவிலின் படியில் அமர்ந்து நண்பர்களைச் சந்திக்கச் சென்ற துரையின் நண்பர்கள் அவ்வழியே சென்ற பெண்களை விசிலடித்துக் கேலி செய்து விட்டனர்.. இது ஒன்றுக்கு இரண்டாய் வீட்டில் ஆவுதாலியாய் சேர, அங்கு இருந்தவர்களில் முதல் அடையாளமாய் வாத்தியாரின் இரண்டாவது மகன் என்று குற்றம் சாட்டப்பட்டது..

அந்நேரத்தில் நல்ல வேளையாக நேசமணி வீட்டில் இல்லாமல் போக, உண்மையை அறிந்து கொண்ட சமுத்திரம் மகனுக்காகப் பேசி அனுப்பிவிட மற்றவர்களை மில்லின் அருகே பிடித்து அடித்து விட்டனர்.. இந்த விஷயம் நேசமணியின் காதிற்குச் சென்றடைய, வீட்டில் தோலை உரித்து விட்டார்.. இப்படிப் பல காரணங்கள் ஊருக்குள் நடமாடாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டது..

வீட்டின்முன் சாலைகள் இல்லாத காரணத்தால் வாய்க்கால் பாத்தியாகக் கட்டப்பட்டிருந்தது.. மேற்கு புறத்தில் பத்திரம் கிடைத்ததில் இருந்து நடவடிக்கை வேறு மாதிரியாக மாறியிருக்க, சமுத்திரம் பேச்சைக் குறைத்திருந்தார்.. இப்பொழுது கால்வாய் நிறைந்து சாலையில் ஓட, இவர்களின் வீட்டின் முற்றத்தில் திண்டு போடப்பட்டிருந்ததால் பாதிப்பில்லை.. ஆனாலும், “ஏ.. முருகேன்.. இப்படிச் சாக்கடை உடைஞ்சு போவுது.. கொஞ்சம் பாக்கலாம்லா..” எனச் சமுத்திரம் சாந்தமாகக் கூற, “அதுக்கு நான் என்னயட்டும்..” என்று திமிராகவே கூறினான்..

“அதுக்கு இல்ல முருகேன்.. ஒரு களவத்தி வச்சி அணைபோட்டு வச்சன்னா ரோட்டுல தேங்கி நிக்காம இருக்குமேன்னு சொன்னேன்..” என அப்பாவியாக வழிமுறையைக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் மரியாதையின்றிப் பேச வாயெடுத்தான்.. அதற்குள் அங்கே வந்த ஜார்ஜ், “ஏம்மா.. வாசல்ல நின்னு என்ன சத்தம் போட்டுட்டு இருக்கிய.. உள்ள போங்க..” என அதட்டி உள்ளே அனுப்பினான்..

சமுத்திரமும் அவன் அதட்டலில் அடுத்த வார்த்தை ஏதும் பேசாமல் அமைதியாகிட, அடுத்த நாளே அதம்பத்திற்கு என்று வந்தான் முருகன்.. காலையில் முற்றம் பெருக்கச் சென்ற சமுத்திரத்தை வேடிக்கை பார்த்தபடியே ஜார்ஜ் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான்.. குனிந்து பெருக்கி கொண்டிருந்த சமுத்திரத்தின் அருகே புழுதி பறக்க, என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து சென்றான் ஜார்ஜ்..

அங்கே பெருக்கிக் கொண்டிருந்த தாயின் மீது சிறுசிறு கற்கள் விழுமாறு வேகமாகப் பெருக்கி கொண்டிருந்தான் முருகன்.. அவ்வளவு தான்.. உறங்கி கொண்டிருந்த ஜார்ஜின் உள்ளே இருந்த மிருகத்தை எழுப்பி விட்டான்.. ஜார்ஜ் அமைதியானவன் என்றும் சொல்ல முடியாது.. அதிகாரமானவன் என்றும் சொல்ல முடியாது.. எங்குமே வம்போ சண்டையோ வேண்டாம் என்று அமைதி காப்பவனைத் தூண்டி விட்டான் முருகன்..

ஜார்ஜின் மனமென்னும் சிம்மாசனத்தில் உச்சத்தில் இருக்கும் தாயை அவமானம் செய்தாள் விட்டுவிடுவானா?? கொள்கையை உடைத்துக் கொண்டு “ஏ.. என்னயுதிய?? ஆளு மேல தூசி படுதுல்லா..” என்றவனின் குரல் சுமாராகவே கம்பீரமாகத் தான் ஒலிக்கும்.. நேசமணியின் ரத்தம் அல்லவா.. அவனுடைய சத்தத்தில் அங்கே கூட்டம் குழுமிட, “நான் என்னயுதேன்.. என் முத்தத்த தூக்கேன்.. புழுதி படுதுன்னா வீட்ட விட்டு வெளிய வராம இருக்கச் சொல்லு.. அத வுட்டுட்டு கனைச்சிட்டு வந்தன்னா மரியாத இல்ல பாத்துக்கோ..” என முருகன் ஜார்ஜை சீண்ட, பொறுமையை மொத்தமாக இழந்திருந்தான்..

“என்னலே சொன்ன??” எனக் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க, வாய் சண்டை அங்கே இரைச்சலாக மாறிக் கொண்டிருந்தது.. இந்தப் புறம் சமுத்திரமும் துரையும் ஜார்ஜை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க, அந்தப்புறம் ஊர்க்காரர்கள் முருகனை பிடித்துக் கொண்டிருந்தனர்.. அப்பொழுது தான் இடையே வந்த தன்னுடைய மூத்த மகளைப் பிடித்து ஜார்ஜின் மீது தள்ளி விட்டான்.. அந்த நொடி பொழுதில் சுதாரித்துக் கொண்டவன் விலகிக் கொண்டான்.. அவனுடைய திட்டம் என்னவென்று அறிந்து கொண்ட பின்னும் நிகழ்த்த அனுமதிக்க ஒரு புத்திமான் விடுவதில்லை..

அங்கே நடந்த சண்டையைப் பாதியிலே முடித்து, “எல்லாம் உங்களால வந்தது... அன்னிக்கு படிச்சு படிச்சு சொன்னேன்.. பத்திரத்த எடுத்து நீட்டாதீயன்னு.. அப்போ கேட்டியளா?? இப்போ பாருங்க.. எங்க வந்து நிக்குதுன்னு.. என்னமும் பண்ணுங்க..” எனத் தாயிடம் கடிந்து கொண்டு “நீயே உன் முத்தத்த தூக்கிட்டு எங்கேயும் போ.. நீ இருக்கப் பக்கம் வந்தா என்னனு கேளு..” என ஆத்திரமாகக் கத்திக் கொண்டு உள்ளே வந்து அமர்ந்தவனின் நெஞ்சம் பதறியது..

அந்த ஒரு வினாடி சுதாரித்து விலகவில்லை என்றால் என்னவாயிருக்கும்?? சண்டையில் என் மகளைக் கையைப் பிடித்து இழுத்தான் என்று அவளைத் தன் தலையில் கட்டி வைத்திருப்பானே.. நொடிநேரத்தில் அறிவு வந்ததே என்று நிம்மதி கொண்டாலும் ‘ச்சீ.. பெத்த மகளையே இப்படிப் பயன்படுத்த முடியுமா??’ என்று அருவெறுப்பும் எழுந்தது.. இவ்வளவிற்கும் அவனுடைய மகளை முகத்திற்கு நேராய் கூடப் பார்த்ததில்லை..

இப்பொழுது புரிந்து விட்டது.. எப்படியாவது அவனைக் குற்றப்படுத்திப் பெயரை சீரழித்து விட வேண்டும் என்று ஒரு கும்பலே கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது.. இந்த லட்சணத்தில் சித்தப்பாவிற்கு பெண்கொடுத்த வீட்டார் வேறு ‘எங்கே இவனது வீழ்ச்சி?’ என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.. இதற்கு நடுவே தன்னை உத்தமனாகவே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தன் நடத்தையைப் பத்திரப்படுத்திக் கொண்டான்..

இதற்கு நடுவே விஷயம் நேசமணிக்கு தெரிந்து விட, சமுத்திரத்தை “உன்ன எவம்ளா வெளிய போய்த் தூத்துக்கிட்டுக் கெடக்கச் சொன்னது.. ஒரு நாள் தூக்காம விட்டா குடி மொழுவி போதாக்கும்.. குப்பையா கெடந்தா போவுது.. உனக்கென்ன?? கண்ட பயலுவட்டையும் பேச்சு வாங்கிக்கிட்டு.. யாரு அவன்?? நேத்துப் பஞ்சம் பொழைக்க வந்த பரதேசி.. நீ குடுத்த எடத்துல இப்பிடி துள்ளுதான்.. மண்டையில மூளை இருக்கா..” எனத் திட்டி தீர்த்து விட்டார்..

நடந்த அனைத்துமே நேசமணியின் காதுகளை எட்டியிருக்க, ஜாரஜ்ஜை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.. இல்லை என்றால் “உன்ன எவம்ல வெளிய போயி கத்த சொன்னது?? படிச்சதுக்குத் தக்கன அறிவு வேண்டாமா?? உங்க அம்ம கூடச் சேந்து சேந்து மூளையில மிச்சம் கெடந்த அறிவும் மழுங்கி போச்சு...” எனக் கரித்துக் கொட்டியிருப்பார்.. விஷயத்தின் தீவிரம் புரிந்தும் மனசாட்சியே இல்லாமல் பேசுவதற்கு நேசமணிக்கு ஜார்ஜின் மீது அக்கறை இல்லாமல் இல்லை..

நடந்த சம்பவங்கள் அனைத்தும் மூளைக்குள் அரித்துக் கொண்டிருக்க, வெளியில் சென்று வந்த ஜார்ஜ் வாசலில் நின்று தோழிகளோடு ஜெயா அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.. சற்றுத் தூரத்தில் கரண்ட் கம்பம் அருகே ஆண்கள் கூட்டம் ஒன்று நின்றது.. ஒழுக்கம், கௌரவம் இரண்டிற்கும் களங்கம் பிறக்க எந்த அண்ணன் தான் அனுமதிப்பான்..

வந்த விருட்டோடு ஜெயாவை உள்ளே இழுத்து சென்று “வெளிய நிப்பியா?? வெளிய நிப்பியா??” என அடி வெளுத்து விட்டான்.. தங்கை மீது தவறில்லை என்பதும் தெரியும்... ஆனாலும் நாளை அவள் எதிர்பார்க்காமல் பிரச்சனை கிளம்பி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை.. விஷயம் புரிகிறதோ இல்லையோ ஆனால் என்றுமே ஜார்ஜ் ஜெயாவை அடிக்கும் பொழுது குறுக்கே செல்வதுமில்லை.. அவனைக் கண்டிப்பதுமில்லை சமுத்திரம்.. அவன் காரணமின்றி ஏதும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கை எனலாம்.. தங்கை மீது இருக்கும் முழு உரிமை எனலாம்..

புவனேஷ்வரி சொந்த ஊரிலேயே இருக்கும் பள்ளிக்கு வேலை நிமித்தமாக செல்ல, இத்தனை நாட்கள் ராஜாங்கம் செய்த இடத்தில் சிறுபூச்சி அதுவும் இதே பள்ளியில் படித்த இவள் தங்களுக்கு சரி சமமாக வேலை செய்வதா என பலரும் வயிறு எரிந்தனர்.. இதில் புவனேஷ்வரி வேறு நல்ல நிறமான சேலையை எடுத்து சுற்றி, நீளமான சடையிட்டு அதில் கனகாம்பர பூ வைத்து வளைய வர, பொறாமை தீ சற்று கொழுந்து விட்டு எரிந்தது.. நிர்வாகத்தில் இருப்பவரின் மனைவி இவளிடம் நல்லாவே பேச்சு கொடுத்தாலும் பின் பக்கமாக கோள் பேசும் குழுவின் தலைவி..

எங்கே இவளை சாய்க்கலாம் என்று எண்ணியவர்கள் கடந்து செல்லும் போது கேலியாக இக்கன்னா பேச்சு பேசுவதும் அவளுடைய நடையை கிண்டலடிப்பதுமாக இருந்தனர்.. அப்பொழுது அவளுடைய எட்டு இடது வலமாக சுழித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க, உடனே மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டது.. விசாரிப்பதற்காக அழைத்து விட, பள்ளியை நடத்தியவரின் தாய் இவளுக்கு பெரியம்மா முறை வேண்டும் என்பதால் “சொல்லுங்க பெரியம்மா..” என்றபடியே நுழைந்தாள் புவனேஷ்வரி..

“ந்த.. ஸ்கூல்லுல பிள்ளயளுவளுக்கு எட்டு தப்பா போட சொல்லி குடுக்கியாம்லா..” என நேரடியாகவே விஷயத்திற்கு வர, “இல்லியே பெரியம்மா.. சரியா தான சொல்லி குடுத்தேன்..” என ஒரு சிலேட்டில் வரைந்து காட்ட, அவருக்கோ தவறாக தோன்றவில்லை.. எட்டு அப்படியாக தானே போட வேண்டும் என்று தன் மகனை நோக்க, “சிலரு இப்பிடிக்கா போடுவாங்க..” என்றார்.. யோசனைகள் சென்று கொண்டிருக்கும் போதே, ‘ரெட்ட கொம்பு’ ‘ஒத்த கொம்பு’ என்று கிண்டலும் கேலியாகவும் பட்டப்பெயர் வைத்து அழைத்ததை நினைவில் வைத்திருந்த புவனேஷ்வரி “பெரியம்மா.. அப்பிடியே ரெட்டை கொம்பும் இப்படி தான போடணும்..” என்று எழுதினாள்..

“ஆமா.. வேற எப்படி எழுதணும்??” என்றிட “ஆறுன்னு போட்டுட்டு பெறவு மேல ஒரு கொம்பு போடுதுதுவ பிள்ளிய..” என புவனேஷ்வரி கூறவும் தான் உண்மை புரிந்தது.. குழநதைகளின் எழுத்துக்களை திருத்துவதற்காக போய் தேவையில்லாத பட்டம் வாங்கி நிற்கிறாள் என்று.. அந்த விசாரணை அப்படியே கைவிடப்பட்டுப் போனது.. இந்த விஷயம் அறிந்து அடுத்தடுத்த பல சங்கடங்களையும் தொந்தரவுகளையும் கொடுத்து கொண்டே இருக்க, பள்ளிகளுக்கு அன்று ஆய்வு நடத்தப்பட்டது..

தொடக்க பள்ளிகளின் நிலையை குறித்து அடிக்கடி ஆய்வு நடத்தப்படுவது வழக்கம்.. அன்று வழக்கம் போல பணியினை செய்து கொண்டிருந்த புவனேஷ்வரியின் மூளைப் படமும் அவள் விளக்கிய எளிமையான தகவல்களும் மிகவும் பிடித்து போய் ஏஇஒ பாராட்டி விட்டு செல்ல காதில் புகை வராத குறை தான்.. அதற்கு பின்பு அழைத்தாலும் அந்த பள்ளிக்கு மட்டும் செல்வதேயில்லை.. கேட்டால் “இந்த ஊருக்கார பயலுவ கண்ணுக்கு எதுத்தால மட்டும் நல்லா இருந்துறவே கூடாதும்மா..” என விரக்தியாக முடித்து விடுவாள்..

அன்று வழக்கத்திற்கு மாறாகச் சென்ற ஒரு மணிநேரத்தில் தோட்டத்தில் இருந்து வந்து நின்ற வேலப்பனை கனியம்மாள் விநோதமாக நோக்கிக் கொண்டிருக்க, புவனேஷ்வரியோ “இவியளுக்கு வேற வேலையே இல்ல..” எனச் சலித்துக் கொண்டே வாயில் இருந்த நூலை பற்களால் கடித்தாள்.. அதைவிட அங்கும் இங்குமாய்க் குட்டி போட்ட பூனை போல உருளும் வேலப்பனை இந்த முறையும் புருவம் நெரிய நோக்கினாள் புவனேஷ்வரி..

அப்பொழுது சடுதியாக வாசலில் சிலரின் காலடி சத்தம் கேட்க வெளியே வந்து நோக்கினாள்.. ஒரு குடும்பம் தன் வீட்டு வாசலில் நிற்கவும் வேலப்பனின் வேலைதான் என்பதை உணர்ந்து கொண்டாள்.. இந்த முறையும் வீட்டில் எதுவுமே கூறாமல் ஏதோவொன்றை செய்யும் அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது.. ஆனாலும் பற்களைக் கடித்துக் கொண்டு புன்முறுவலோடு நோக்க, அன்று கள்ளனிடம் இருந்து காப்பாற்றிய நேசமணியைப் பார்த்ததும் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது..

அனைவரையும் உபசரித்து அமர வைக்க, தங்களின் மூத்த மகனுக்குப் புவனேஸ்வரியை கேட்டு வந்திருப்பதாகக் கூற அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.. ஆனால் பெண்ணுடைய தோற்றத்தை காண வேண்டுமே.. வீட்டில் தானே இருக்கிறோம் என்ற மிதப்பில் கிழிந்த ரவிக்கையுடன் நைந்து போன பாவாடையும் நறநறவென்ற நூல்கள் பிரிந்து வந்து நின்ற தாவணியோடு வந்து நிற்கிறாள்.. எந்தப் பகட்டும் பூச்சும் இல்லாத புவனேஸ்வரியை பார்த்ததும் நேசமணிக்கு ஜார்ஜிற்கு சரியாக இருக்கும் என்று தோன்றவும் “ம்ம்க்கும்..” என்று செருமிக் கொண்டு சமுத்திரத்தை நோக்கினார்..

அவரின் பார்வையின் அர்த்தம் புரிந்து “சம்மதம்னா உங்க அக்கா மருமகன்ட்ட சொல்லுங்க..” என்றார்.. புவனேஷ்வரி அதிர்ச்சியிலேயே உறைந்து நிற்க, வந்தவர்கள் அனைவரும் விடைபெற்று சென்றனர்.. இன்னும் முடிவாகவில்லை.. தங்களின் விருப்பத்தை மட்டுமே தெரிவித்துச் சென்றிருக்க, வேலப்பன் விசாரிக்க வேண்டும்.. அவருக்குச் சரி என்றால் தானே மேற்கொண்டு பேச்சு வார்த்தை நிகழும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வழக்கம் போலத் தட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்..

இந்த இடைவேளையில் வீட்டிற்கு வந்து சேர்ந்த நேசமணி போட்டா ஒன்றை சமுத்திரம் கைகளில் திணிக்க, அதனை எடுத்துக் கொண்டு ஜார்ஜிடம் சென்று விஷயத்தைக் கூறினார்.. என்னே ஆச்சரியம்.. வரிசை கட்டி நின்ற பெண்களுக்கு மறுப்பு கூறிய ஜார்ஜ் எந்த வசதியும் இல்லாத புவனேஸ்வரியை பார்க்காமலேயே சரி என்றான்.. ஆச்சரியத்தைப் புறந்தள்ளி விட்டு மகிழ்ச்சியோடு நேசமணியிடம் கூறினார்.. அவரோ என்றும் போல “ம்ம்..” என்று கொண்டார்..

ஜார்ஜ் ஆன்மீகத்தில் சற்று உறுதியாக நம்பிக்கை கொண்டவன்.. முழுவதுமாக வேதாகமத்தை படித்து முடித்தவன், ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?? உலகத்தின் இந்தச் சிற்றின்பத்தில் என்ன சுகம் கிட்டிவிடப் போகிறது.. சிற்றின்பத்தினுள் வாழ்க்கையைத் தொலைப்பது பேரின்பத்தைத் தவற விடுவது போலல்லவா?? வாழ்க்கை என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.. திருமணமா இல்லை திரும்பும் இடமெல்லாம் சென்று வருவதா??” என ஞானி போல யோசித்துக் கொண்டிருந்தவனைச் சூழ்நிலைகளை மாற்றியிருந்தது..

பெண்களைப் பற்றி இதுவரை எந்த அபிப்பிராயமும் இல்லை.. ஏன் அவர்கள் மீது ஈர்ப்பு கூடக் கொள்ளாத ஒருவனைக் காலம் கல்யாணத்தில் நிறுத்தி களிக்கிறது.. ஜார்ஜின் கூடவே அரசாணையத் தேர்வுகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த துரைக்கு அரசு பணி கிட்ட, தினமும் சென்று வருவதற்காக டிவிஎஸ் சாம்ப் வண்டியை வாங்கியிருந்தான்.. அவன் உபயோகிக்காத நேரத்தில் ஜார்ஜ் பட்டணத்திற்குச் சென்று வருவான்..

அன்றும் அப்படித் தான்.. பட்டணம் சென்று வந்தவன், மீனாட்சிபுரத்திற்குப் பக்கத்தில் நடை தளர்ந்து வந்து கொண்டிருந்த வேலப்பனை கண்டான்.. தோட்டத்தில் அரிந்த கத்தரிக்காய்களைச் சந்தையில் போட்டு விட்டு சுள்ளென்ற மதிய வெயிலில் மந்தமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.. அருகில் சென்று “எங்க போறீங்க??” என ஜார்ஜ் வினவ, “வீட்டுக்கு தான் தம்பி..” என்கவும் “ஏறுங்க.. நான் கொண்டு போய் விடுதேன்..” என்றான் ஜார்ஜ்..

நேசமணி கொடுத்த படத்தில் ஜார்ஜ்ஜை பார்த்திருந்த வேலப்பன், “பரவாயில்ல தம்பி.. நான் இப்படியே நடந்து போயிருவேன்.. இங்க பக்கத்துல தான்...” என மறுக்கவும், “இந்த மத்தியான வெயிலுக்குள்ள எப்பிடி நடப்பீங்க.. நீங்க வண்டியில ஏறுங்க.. கொண்டு போய் வுடுதேன்..” என விடாப்பிடியாக வண்டியில் ஏற்றிக் கொண்டான்.. செல்லும் வழியில் “ஏதாவது சாப்புடுதீங்களா?? ஆள் அசந்தாப்புல தெரியுது..” என விசாரிக்க “வீட்டுக்குப் போய்க் கஞ்சி குடிச்சிக்கிடலாம்..” என மறுத்து விட்டார் வேலப்பன்..

ஊரின் எல்லையில் இறக்கி விட்ட ஜார்ஜ் திரும்பி செல்ல, வேலப்பன் ஊருக்குள் வந்து அடித்த குட்டிகரணம் தான் வேடிக்கையே... பார்க்கும் அனைவரிடமும் மாப்பிள்ளையின் புகழ்பாடி கொண்டே வீட்டை அடைய, அவர் பாடிய புராணத்தை நூலாகவே தொகுத்து வழங்கலாம் போல.. திருமணத்திற்கு முன்னே மருமகனை மெச்சிக் கொண்ட வேலப்பன் சீனியம்மாள் மூலமாகத் தங்களின் சம்மதத்தைக் கூறி அனுப்பினார்.

மாப்பிள்ளையின் படத்தைப் பார்க்காமலேயே சம்மதித்த புவனேஸ்வரிக்கு ஒரு காரணம் மட்டுமே இருந்தது.. அவள் எதிர்பார்த்தது போலேயே வேதக்கார மாப்பிள்ளை.. ஆனாலும் அப்பா பாடும் புராணம் தான் காதையே கூசிப் போகச் செய்தது.. அவர்களின் வழக்கப்படி, திருமணம் முகூர்த்த அரிசி அளப்பது, பூ வைப்பது, பொங்கி போடுவது என்று இயல்பாக இருந்தாலும் அவள் பயந்ததோ அலந்தரத்திற்குத் தான்..

அலந்தரம் என்பது மணப்பெண்ணை மணமேடையில் மாலையோடு அமரவைத்து முன்னால் குடத்தில் மஞ்சள் நீரில் ஊறவைத்த அரச இலைகள் போடப்பட்டிருக்கும்.. பெண்ணின் உறவுக்காரர்கள் வரிசையாக வந்து குடத்தில் இருக்கும் இலையை எடுத்து இரண்டாகப் பிய்த்து சுற்றுவார்கள்.. இப்படி ஒவ்வொருவராகச் செய்து மணமகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவர்..

எந்த நிலையிலும் தான் முன்னேறி விடக் கூடாது என்று எதிர்பார்த்திருந்த சொந்த்தக்கார பயலுகளின் முன்னிலையில் அமர்ந்திருக்க அவர்களின் ஆசீர்வாதத்தை வாங்கிதான் திருமணம் செய்ய வேண்டுமா என்ற எரிச்சலில் அமர்ந்தவளுக்கு இந்த வாய்ப்பு இனிக்கத்தான் செய்தது.. அது மட்டுமல்ல.. பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் உறவுக்காரர்களை வைத்தே நிகழ்த்த வேண்டும் என்ற நிலை நீங்கியதே என்று நிம்மதி கொண்டாள்..

வேலப்பனின் சம்மதம் நேசமணியை வந்தடைய, அடுத்த நாள் சம்பிரதாயத்திற்காகப் பெண் பார்க்க சென்றனர்.. இந்த முறை ஏனோ தானோவென்று நிற்காமல் நல்ல சேலையினைச் சுற்றிக் கொண்டு அடக்கமாக முன்னே வந்து நின்றாள்.. சம்பிரதாயங்களைப் பெரியவர்கள் பேசிக் கொள்ள, இருபது களஞ்சி நகை போடுவது என்று முடிவாகியது.. இந்தத் தொகை வேலப்பனுக்குப் பெரிது தான்.. கனியம்மாள் கொண்டு வந்த நகையைத் தவிர மேற்கொண்டு எந்தத் தங்கத்தையும் உருவாக்காத பொழுதிலும் நல்ல வரன் என்பதால் சம்மதித்தார்..

இதை விட நேசமணியின் வார்த்தைகள்தான் புவனேஷ்வரியின் காதில் நச்சென்று கேட்டது.. ஜார்ஜ் வேலையில்லாமல் இருப்பதால் ஆசிரியர் படிப்பிற்குத் தகுதியான புவனேஸ்வரிக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற உறுதியை அளித்தார்.. இதை விடப் பெரிய வாக்கு வேண்டுமா?? திருமணத்தின் செலவுகளில் பெரிதாக மாப்பிள்ளை வீட்டாரின் தலையீடு இருப்பதில்லை என்பதால் இந்த வரன்தான் என்று முடிவாகிப் போனார் வேலப்பன்..

ஆனாலும் புவனேஸ்வரிதான் செலவுகளுக்குத் தந்தை என்ன செய்யப் போகிறாரோ என்ற கலக்கத்திலேயே நின்றாள்.. ஜார்ஜிற்கும் புவனேஸ்வரிக்கும் திருமணம் உறுதியாகிட, இது ஒரு கலப்புத் திருமணமாகியது.. கோவில் கொடையில் முதல் ஆளாக அமர்ந்து வில்லுப்பாட்டு கேட்பவளுக்கும் ஆலயத்தில் பிரசங்க மேடையில் நின்று ஆத்மார்த்தமாகப் பிரசங்கிப்பவனுக்குமான நிச்சயம் கலப்புத் திருமணமாகத் தானே இருக்கும்..

இருவருக்கும் பேசிமுடித்த பின்புதான் ஜார்ஜ் பொன்னரசியைப் பற்றிய விஷயத்தை கேள்விப்படுகிறான்.. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்’ என்பது போல ஒன்று விட்ட சித்தி ஊரைவிட்டு ஓடிப்போனால்கூட அக்குடும்பத்தில் பெண்ணெடுக்கத் தயங்குவர்.. நேசமணியும் இதை யோசிக்காமலா முடிவெடுத்திருப்பார்?? ஒருவரோடு பழக வேண்டுமானால் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் குணநலனையும் தெரிந்து கொள்பவனுக்கு இது இக்கட்டில் கொணர்ந்து விட்டிருந்தது.. ஆனாலும் எதையோ யோசித்துக் கொண்டு ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுப்பது சரியல்ல என்று அந்த விஷயத்தை அடியோடு தன நினைவலைகளில் இருந்து அழித்து விட்டான்..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-16

கார்த்திகை மாதத்தில் நிச்சயதார்த்தம் என்று முடிவாகிட, நடுவில் கொஞ்சமாய் இடைவேளை கிட்டியது.. திருமணத்திற்குப் பொருள் ஈட்ட வேண்டுமே.. மாப்பிள்ளை சோறு என்ற பெயரில் சொந்தங்களும் சொக்காரங்களும் அவ்வபோது வந்து பொங்கி போட்டுச் சென்றார்கள்.. வலுவில்லாத மணமக்களை வலுவாக்கவே இந்த சம்பிரதாயத்தினை உருவாகியிருக்க, எவ்வளவு சாப்பிட்டாலும் தெம்பே ஏறாத புவனேஷ்வரி உடல்வாகில் வழக்கம் போல எந்த முன்னேற்றமும் இல்லை..

இதற்கிடையில் வேலப்பனின் பாசம் பெருகி வழியத் துவங்கியது.. மார்கழி மாதத்தில் போடவேண்டிய கோலத்திற்கு இப்பொழுதே கோலப்பொடி சுண்ணாம்பு ஆலையில் சென்று அள்ளி வந்தார்.. புவனேஸ்வரியின் தனித்திறமை என்றால் அது அவளின் விரல் வித்தை தான்.. எலும்புகள் போர்த்தப்பட்ட தேகம்தான் மாயங்களை வரைகிறது..

பீடியை சைசாக உருட்டுவது, ஓவியத்தில் நளினம் கொண்டு வருவது, கைவினை பொருட்களான கூடை பொம்மைகள் செய்வது, எம்ப்ராய்டரி பின்னுவது என இன்னும் இன்னுமாய் வரிசை கட்டி நிற்கும் திறமைகளில் கோலம் போடுவதும் அடக்கம்.. கோலப்பொடியை அள்ளி பெருவிரலுக்குச் சுட்டுவிரலுக்கும் நடுவே வைத்து அரக்கி கம்பிகளை ரெட்டையாக இழுக்கும் பொழுது அதில்தான் எத்தனை நேர்த்தி!! எத்தனை அழகு!! எத்தனை ரம்மியம்!!

பன்னிரண்டு முடித்து ஆசிரியர்பட்டறை பள்ளிக்குச் செல்லும் பருவம் அது.. பொங்கலுக்கு முந்தைய நாள் மாலையில் அவள் போட்டிருந்த ரங்கோலி இருந்த அழகைக் கண்டு, மறுநாள் விடியும்முன்னே சென்று, வண்ணப்பொடிகள் வாங்கி வந்திருந்தார் வேலப்பன்.. “செத்தேன் சதை போட்டு வெள்ள தொலியோட பெறந்திருக்கட்டும்.. அப்பனும் மொவளும் தரையிலேயே கால வைக்க மாட்டாவ போலிருக்க..” என்று கொண்டார் கனியம்மாள்..

கனியம்மாள் இருவரையும் திட்டிக்கொண்டாலும் மறுநாள் கோலம் அழியாதவாறு சுற்றிலும் பெருக்கி முற்றம் தெளித்து விடுவது அவரின் தனித்திறமை.. கோலப்பொடியை கொண்டு வந்து வைத்துக் கொண்டு ‘கோலம் போடு’ என்று வலியுறுத்தி அதன் அழகை கண்குளிர ரசித்துக் கொண்டார்.. ஆனாலும் நூற்றுக்கணக்கில் ஒரு நோட்டில் வரைந்து சேமித்து வைத்திருந்தாள்..

கனியம்மாளின் ரெட்டைவடம் செயினும் இரண்டு வளையல்களும் புவனேஸ்வரிக்காக இருக்க, வேலைக்குச் சென்றபின் அவள் எடுத்த வெள்ளிக்கொலுசும் சேர்ந்து கொண்டது.. இந்த லட்சணத்தில் இருபது களஞ்சிக்கு எங்கே செல்வது?? புவனேஷ்வரிதான் இது போன்ற அவசர காலத்திற்கெனச் சேமித்து வைத்த பணமும் தனியே தொடங்கிய சீட்டும் கைகொடுத்து உதவியது..

பணத்தை எடுத்துக் கொண்டு வேலப்பனும் சரியாய் செலவழிப்பதை கண்காணிக்கப் புவனேஸ்வரியும் கூடவே சென்றாள் பட்டணத்திற்கு.. சந்தையினுள் ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்த புவனேஸ்வரியை சந்தையை அடுத்து இருந்த நகைக்கடைக்குள் அழைத்துச் சென்றார்..

சிறுவயதில் அக்காவையும் தங்கையையும் பார்த்து நீளச்செயின் ஒன்று கோபி மாடலில் வாங்க வேண்டும் என்று சேமித்த பணம் அது.. ஆனால் கனியம்மாளின் ரெட்டைவடம் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு நெக்லஸ் வாங்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.. விருப்பப்படியே இதயவடிவ இரட்டை அடுக்கு நெக்லஸ் ஒன்றை தெரிவு செய்து வாங்கிக் கொண்டாள்..

கொண்டு சென்ற ஆயிரத்தில் எண்ணூறு ரூபாய்க்கு நகை எடுத்ததும், புவனேஸ்வரியை கடையம் ரோட்டில் நிற்க வைத்து விட்டு எங்கோ என்று விட்டார் வேலப்பன்.. கையில் நகையோடு பரபரப்பான சாலையில் நிற்பதற்குப் புவனேஸ்வரிக்கு மனம் திக் திக்கென்றது.. கொஞ்ச நேரத்திலேயே முகம் வியர்க்க, தள்ளமாடி வந்த வேலப்பனை கண்டதும் கோபம் தலைக்கேறியது.. ஆனாலும் புத்தியே அதுதான் என்றானதிற்குப் பிறகு நெஞ்சிலும் வாயிலும் அடித்துக் கொண்டால் சேதாரம் யாருக்கு?? என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு வேலப்பனை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தாள்..

“தோளுக்கு மேல வளந்த பொம்பள பிள்ளைய கூடக் கூட்டிட்டு போயிட்டு கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிட்டு வந்து நின்னா என்ன ஆவுதது?? கொஞ்சமாச்சும் கூரு வேண்டாமாக்கும்.. இந்த மனுஷன வச்சிட்டு.. இந்தப் பிள்ளைய எப்பிடிம்மா நான் கரை சேக்கது??” என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ, “ய.. ச்சும்மா கெட... என்னத்தயாவது சலம்பிட்டே இருக்கணும்.. அதான் வந்து தொலைஞ்சிட்டோம்லா.. பெறவு என்ன ஒப்பாரி வைக்க.. ஒரு எழவும் விழல.. ந்தா.. இத கொண்டு உள்ள வையு..” எனத் தாயை அதட்டிவிட்டுக் கையில் இருந்த மஞ்சள் பையை நீட்டினாள் புவனேஷ்வரி..

தன்னிலையில் இல்லாத தகப்பனை ஒருவளால் தாங்க முடியாது தம்பிகளைத் துணைக்கு அழைக்க, மூவருமாகத் திண்ணையில் கிடத்தினர்.. பின் உள்ளே நுழைந்த புவனேஷ்வரி, “இந்த நல்ல புத்தி மொத காலத்துல நான் சொல்லும் போதே கேட்டுருக்கணும்.. இப்போ தான் இதுலாம் தெரியுதோ.. தோளுக்கு மேல வளந்த பொம்பள புள்ள சேத்து வச்சிருந்தத கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எடுத்து நீட்டுனியே.. அப்போ புத்தி வரலியோ.. பெரிய இவா மாதிரி பேசாத.. எரிச்சல கிளப்பிக்கிட்டு.. போயி சோத்த கொண்டா..” எனத் திட்ட, கனியம்மாள் வாயை திறந்தாரில்லை..

பாதிக்கப்பட்டவள் பொரிந்து தள்ளும் பொழுது பெற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.. சாப்பிட்டு முடித்து வேலப்பனுக்கும் சாப்பாட்டைக் கொடுத்து விட்டே தூங்கினாள்..

திருமணம் முடிவாகியபின் ஜார்ஜ் இயல்பாகவே வலம் வந்தான்.. இவ்வளவிற்கும் “பொண்ணு எப்பிடி இருக்கா??” என்று ஒருவரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை.. கேட்டாலும் கூறும் நிலையில் எவரும் அவ்வீட்டில் பழகிக் கொள்ளவில்லையே..

நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஜார்ஜிற்குக் கல்யாணம் என்றதும் பலருக்கும் அதில் ஆச்சரியம்.. சிலரோ, “நீ சாமியாரா போயிருவன்னுலா நினைச்சோம்..” என்றே கேட்டனர்.. புன்னகையோடு அனைவரையும் கடந்திட, சில நாட்களிலேயே தம்பியை போல அவனும் புது வண்டி ஒன்றை வாங்கிக் கொண்டான்.. நாளை நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்பதை நினைக்கும் பொழுது வயிற்றுப் பகுதியில் ஏதோ ஒன்று உருள, இதயத்தில் மெல்லிய வெட்கம் தோன்றி மறைந்தது..

பெரிதாகச் சம்பிரதாயம் சடங்குகள் ஏதும் இல்லாமலிருக்க மணமக்களின்றி பெரியவர்களே தட்டு மாற்றியதும் மிக எளிதாகவே முடிந்தது.. நிச்சயதார்த்தம் முடிந்ததும் கிளம்பிய ஜெயா சும்மா இருக்காமல் “உங்களுக்கு முடி நீளமா பிட்டி வரைக்கும் இருக்குன்ன..” எனப் பாராட்டிவிட்டு சென்றாள்.. உடனே முட்டியை தொடும் முயற்சியில் இறங்கி நின்ற கூந்தலை முன்னால் போட்டு கண்களில் நிறைத்தவள் மறுநொடியே ஒரு முழத்திற்கு வெட்டி விட்டாள் புவனேஷ்வரி..

என்ன இவள்?? என எண்ணும் சிந்தையை “இவள் என்ன பைத்தியமா??” என எண்ண வைக்குமளவிற்குப் பின்கதையும் உண்டு.. சிறுவயதில் இருந்தே அடர்த்தியாக அடியில் படுவேகமாக வளரும் முடியை புவனேஷ்வரி சரியான பராமரிப்புக் கொடுக்காமல் எனக்கென்ன என்பது போலப் போட்டு வைத்தாள்.. அதற்கெல்லாம் தண்டனை பெறுவது கனியம்மாள் தான்.. ஏனோ தானோவென்று தூக்கிப் போட்ட கூந்தலில் சிக்குப் பிடித்துப் போக, ஒவ்வொன்றாக அவளுக்கு வலிக்காமல் பிரித்து எண்ணெய் தேய்த்துச் சீவி பின்னலிடுவதற்குள் கை விரல்களுக்குப் போதும் போதுமென்றாகி விடும்..

அவ்வளவு அடர்த்தியை மூன்று பிரிவாகப் பிரித்துப் பின்ன, கைகளுக்குள் அடங்காமல் சங்கடப்படுத்தும்.. இந்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவள் பாட்டிற்குத் தலையை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டிருக்க “ஒழுங்கா இரேன்...” என்று எத்தனை தடவை தான் கொட்டு வைப்பது??.. வலி மண்டைக்கு இறங்காமல் அடர்ந்து நிற்கும் கூந்தல் கற்றைகள் பார்த்துக் கொள்ள, கொட்டும் மொழிகளில் தான் வலி எடுக்கும்..

கீழேவரை பின்னி விட்டால் ஆம்பள பயல்களோடு இணைந்து விளையாடுகிறேன் என்ற பெயரில் அடிமுனையைப் புழுதியாக்கிக் கொண்டு வருவாள்.. எனவேதான் எப்பொழுதும் கைவசம் கருப்பு ரிப்பன் வைத்து அடியில் பின்னி மடித்துக் கட்டிவிடுவார்.. இதெல்லாம் நலமாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் புவனேஷ்வரியின் தலை முழுக்கப் பேன் புழுக்கத் துவங்கியது..

முடியின் வேரையே கண்டுபிடிக்க இயலாத நிலையில் பேனை எப்படி ஒழிப்பது?? முதலில் ஓரளவு முயன்று பேனை பிடித்துக் குத்திய கனியம்மாளுக்கு நகம்தான் வலித்தது.. ஆனால் பேனோ அந்தக் கரிய காட்டில் தனது குடும்பம் குட்டிகளோடு மகிழ்ந்து வாழ, பலுகிப்பெருகி கொண்டிருந்தது.. சூழ்நிலை கையை மீறிப் போகும் பொழுது ஒரு இக்கட்டான முடிவை எடுத்து தானே ஆக வேண்டும்..

கருப்பாய் உருண்டு திரண்டு முடிகளுக்கிடையே நீச்சல் அடிக்கும் முண்டுகளை விட்டுவிடலாம்.. தலைக்குக் குளித்ததும் வெள்ளை வெள்ளையாய் பறக்கும் குன்னிகளைக் கூட விட்டு விடலாம்.. இரண்டையும் பேன் சீப்பில் கூட இழுத்து விடலாம்.. ஆனால் முன்நெற்றியிலும் சென்னியிலும் பீய்த்து வைத்திருக்கும் ஈரை என்ன செய்வது??

ஈருவழியைக் கொண்டு இழுத்தால் அவ்வளவு நீள முடியைக் கடந்து வரும் பொழுது பாதியிலேயே தங்கி விடுகிறது.. இதில் எப்படித் தலை வழித்தாலும் அசிங்கமாக முத்து முத்தாய் மினுங்கிக் கொண்டு நிற்கிறது.. இதற்குக் கனியம்மாளின் தீர்வு என்னவாக இருக்கும்? அந்த யூகம் என்ன?? அவர் வகுத்தாரே ஒரு வியூகம்.. அங்கே தான் நிற்கிறார்..

புகையிலை வெட்டும் கத்தரிக்கோலை எடுத்து, அதிகமாய் அடுக்கி நிற்கும் முடியை தெரிந்தெடுத்து க்ரிச் க்ரிச்க் தான்.. வெளியே தெரியாமல் ஓரளவிற்கு முடியை வெட்டி ஈரை ஒழித்தாகி விட்டது.. ஆனால் கறுத்த முண்டினை விட்டால் அடுத்த இரண்டு நாளில் இதை விடப் பெரிய படையை உருவாக்கி விடும்..

இதற்கும் ஒரு சிறப்பான திட்டம் வைத்திருந்தார்.. ஒரு மூடியில் ரேசன் கடையில் வாங்கிய மண்ணெண்ணெயை ஊற்றி விட அனைத்தும் செத்து போகும் என்று அறிவாக யோசித்த கனியம்மாள், அதற்குக் கீழே இருக்கும் புவனேஸ்வரியை யோசிக்க மறந்தார்.. அவ்வளவு தான்.. மண்ணெண்ணெய் ஊற்றியதும் பேன்கள் செத்ததோ இல்லையோ ‘ஐயோ அம்மா... அப்பா...’ எனத் தரையை அடித்துக் கொண்டு அலற துவங்கினாள் புவனேஸ்வரி..

அப்பொழுது தான் விறகுவெட்டச் சென்ற வேலப்பனும் வந்து சேர வேண்டுமா.. மகள் மண்ணெண்ணெய் எரிச்சலில் கதறிக் கொண்டிருப்பதைக் கண்டு துடித்து, அருகில் இருந்த பானையைத் தலைகீழாகக் கவிழ்த்தார்.. தண்ணீர் சேர்ந்ததும் எரிச்சல் சற்றுக் குறைந்திருக்க, வேகமாகக் குளித்தாள்.. குளித்தபின் தான் மண்டையிலும் உடலிலும் இருந்த எரிச்சல் குறைந்திருந்தது..

வெளியே வேலப்பன் கனியம்மாளை பார்த்து, “ஏ.. கூரு கெட்ட கிறுக்கி.. என் புள்ளைய கொஞ்ச நேரத்துல கொல்ல பாத்துட்டியேளா.. மண்ணெண்ணைய ஊத்துனாளாம்... உன் தலையில ஊத்தி கொளுத்த வேண்டியது தான..” எனச் சரமாரியாகத் திட்டி தீர்த்தபின் தான் ஆங்காங்கே வெட்டப்பட்ட முடியையும் கண்டார்..

“ஏளா.. கிறுக்கு பய மொவளே.. இப்பிடியா நத்தலும் கொத்தலுமா வெட்டி போடுவ.. பொம்பளபிள்ள தலைய பன்னி வச்சிருக்கா.. இன்னொரு தடவ இப்பிடி பண்ணுதத பாத்தேன்.. உன் தலைய பன்னிப்புடுவேன்..” என எச்சரித்து விட்டு மகளின் கூந்தலை பராமரிக்கும் பணியை ஒத்திகைக்கு எடுத்துக் கொண்டார் வேலப்பன்..

தினம் தினம் வயலுக்கு அழைத்துச் சென்று ஊற்றில் நிறைந்து நின்ற கிணற்றில் மூழ்கி எழவும் பாத்தியில் நிற்கும் எள்ளுக்குளையைப் பறித்து வந்து தலையில் வைத்து அரக்கி தேய்த்து விடுவார்.. தோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் விவசாயத்தின் மொத்த அடிப்படையாய் இருக்கும் வயலின் கிணறு என்றும் பாராது குளிக்க வைத்தார்..

பட்டணத்தில் இருந்து வெட்டிவேர் வாங்கி வந்து எண்ணெய் காய்ச்சி, பதமான சூட்டோடு எண்ணெய் தடவி சிக்கும் எடுத்து விடுவார்.. விடுமுறை என்றால் போதும்.. பாட்டியின் வீட்டில் குளுவர்கள் கொண்டுவரும் கொம்பினாலான பேன் சீப்பை வாங்கி, அங்கேயே அமர்ந்து கொள்வார்.. முன்னேற்பாடாக டீக்கடையில் இருந்து ஒரு டம்ளர் வெந்நீர் கொதிக்கக் கொதிக்க வாங்கி வந்து அருகிலேயே வைத்துக் கொள்வார்.. சீப்பில் இழுத்து குதுகுதுவென வரும் பேனை வெந்நீரில் தள்ள, சூட்டில் நெளுநெளுவென நெளிந்து, இறந்து போகும்..

எங்கே திரும்பி பார்த்தால் அருவருப்பைக் கண்டுவிடுவோமோ என்று நகராமல் தலையை மட்டும் அப்பாவின் கைகளில் கொடுத்து விட்டுக் கண்களை மூடி கொள்ள, மீதியை பாட்டி திட்டித்திட்டி ஈருவழி கொண்டு இழுத்து குத்துவார்.. இப்படிப் பார்த்து பார்த்து வளர்த்த முடியை எவளாவது வெட்டுவாளா?? எனக் கேட்க தோன்றுகிறது அல்லவா?

இவள் வெட்டுவாள்.. புவனேஸ்வரியின் குணம் அப்படியானது.. மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிலோ பெருமூச்சு விடும் அளவிலோ தன்னிடம் ஏதாவது ஒன்று இருந்தால் உடனே அழித்து விடுவாள்.. அதனைத் தற்காப்பு என்பதா?? திமிர் என்பதா?? இதற்கு அவள் தான் பதில் கூற வேண்டும்.. “ஏன் ப்ள இப்பிடி செஞ்ச.. உனக்கு கொஞ்சமாச்சும் கூரு இருக்கா??” என்று எவராவது கேட்கலாம் தான்.. ஆனால் புவனேஷ்வரியின் “என் முடிய நான் வேட்டுதேன்.. உனக்கு எங்க இடிக்கி..” என்ற பதிலை எண்ணினால் வந்த கேள்வியும் தொண்டைக்குள்ளே கரைந்து விடும்..

திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நேசமணியின் வீட்டில் நடந்து கொண்டிருக்க, புவனேஸ்வரியின் வீடு வழமையாய் காட்சியளித்தது.. புவனேஷ்வரி தான் “கல்யாணத்துக்கு நாலு வேரு வந்து போற எடம் மாதிரியா கெடக்கு.. ஓட்டையும் ஒடசலுமா.. சொவத்த பாரு அங்கங்க பல்லை இளிச்சிக்கிட்டு.. செத்தேன் இந்த சொவத்துக்கு சுண்ணாம்பு அடிச்சி போடலாம்.. தொழுவ ஒதுங்க வைக்கணும்.. அந்த அறிவு இருக்கான்னு பாரேன்.. போவனும்.. போயி பருத்திய ஆய்ஞ்சி சந்தையில போட்டு தண்ணிய மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து மலந்துரனும்.. வீட்டுல இருக்கவா தான் எல்லாத்தையும் குறுக்கு ஒடிய பாக்கணும்..” எனத் திட்டி கொண்டே மகேசனிடம் சுண்ணாம்பு வாங்கி வர பணித்திருந்தாள்.

வாங்கி வந்த சுண்ணாம்பை தொட்டியில் கொட்டி நீரை ஊற்றிப் போட்டாள்.. சில நிமிடங்களுக்கு குபுகுபுவென கொப்புளங்கள் கொதித்து வெடிக்க, அருகில் இருந்த தென்னை மட்டையைக் கொண்டு கவனமாக கலக்கினாள் புவனேஷ்வரி.. சுவற்றுக்கு அருகில் இருக்கும் பொருட்களையும் சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை கழற்றி, ஒதுங்க வைத்துவிட்டு வர, சுண்ணாம்பு மிதமான சூட்டிற்கு வந்திருந்தது..

ஒரு வாளியில் எடுத்து ஏற்கனவே மீதம் இருந்த நீலத்தை சேர்த்து கலக்க வெளிர்நீலமாக மாறியது.. பின் வீட்டினுள் பலகையை போட்டுக் கொண்டு ராகவேந்திரனும் மகேசனும் சுண்ணாம்பு அடிக்க, வெளிசுவற்றிற்கு புவனேஷ்வரி குனிந்து அடித்து கொண்டிருந்தாள்.. இது சாலை வழி நடந்து சென்றவர்களின் கண்ணில் பட, “ம்ஹும்.. பாரேன்.. கல்யாண ஆத்துரத்துல கெடந்து மக்களே சுண்ணாம்பு அடிக்கத..” என நாடியில் கைவைத்து இட்டுக்கட்டி பேசியதாய் புவனேஷ்வரி எண்ணிக் கொண்டாள்..

வீட்டார் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இருக்க, ஜார்ஜின் நண்பர்களும் வந்து இறங்கினர்.. வீட்டில் ஒரு மாதிரி என்றால் நண்பர்களிடம் ‘வேறு மாதிரி’.. சற்று நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே அவனுடைய நக்கலும் நையாண்டியும் தெரியும்.. பட்டாளத்தோடு ஊருக்கு எல்லைப்புறமாய் சென்று கொண்டாட்டங்களை நடத்தி கொண்டிருக்க, ஜார்ஜ் தயார் செய்த ‘பிரெண்ட்ஸ் கார்ட்ஸ்’ வீட்டில் இருந்த நேசமணியின் கைகளுக்கு அகப்பட்டது..

இரவு நண்பர்களோடு வீடு திரும்பும் பொழுது மொத்த வீடும் மயான அமைதியுடன் காணப்பட, ஏதோ ஒரு கச்சேரிக்கு அடிபோட்டு விட்டது என்பதை உணர்ந்து கொண்டான் ஜார்ஜ்.. வழக்கம் போல ஜெயாவுக்கும் நேசமணிக்கும் நிகழும் வாய்க்கால் தகாறாராகத்தான் இருக்கும் என்று அடியெடுத்து வைத்த ஜார்ஜ், எந்த சலனமும் இன்றி அமர்ந்திருந்த ஜெயாவை நோக்கினான்..

“இவா நல்லா தான இருக்கா..” என்ற யோசனையோடு நடந்தவனை மறித்து கொண்டு நின்ற நேசமணி “இதுலாம் என்னலே..” எனக் கடிந்தார்.. அவனிடம் பதிலின்றி தொண்டைக்குள் திரண்ட எச்சிலை விழுங்கியவாறு எங்கேயோ வெறிக்க “பிரெண்ட்ஸ் கார்டு அடிக்காவலாம்ல.. முளைச்சு மூணு இலைகூட விடல.. அதுக்குள்ளே பெத்தவன் வேண்டாம்னு ஆயி போச்சு.. ஆன்..” என அதட்டினார்..

எதற்கும் அசையாமல் நின்றவன் இந்த முறை புதிதாக, “பிரெண்ட்ஸ் கார்ட் அடிக்கதுல என்ன இருக்கு?? எனக்கு பிடிக்கி.. அடிக்கிறேன்..” என எதிர்த்தே பேச, தன்னிடம் பதில்கூட கூறாமல் செல்பவன் எதிர்த்து பேசுகிறானே என்ற ஆத்திரம் கொண்டார் நேசமணி.. “உனக்கு பிடிச்சா பெத்தவன் வேண்டாம்னு தூக்கி போடுவியோ.. இவன் பேரை தவித்து வேற ஒண்ணுமே இல்லை.. நம்ம எல்லாம் இப்போவே வேண்டாதவியன்னு ஆயிட்டோம்.. இப்போவே இப்பிடி செஞ்சான்னா நாளைக்கு எப்பிடி மதிப்பான்?? இந்த கார்ட இங்கேயே கிழிச்சு..” என கூறி கொண்டிருக்கும் போதே ஜார்ஜ் அதை கிழித்து எரிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்..

அவனுடைய திடீர் செய்கையில் அமைதியாக அமர்ந்திருந்த சமுத்திரம் எழுந்து அவனை அழைக்க செல்ல, “ஆன்.. கூப்புடு.. எல்லாம் உன்னால வந்ததுளா.. அவன வளத்து வுடுததே நீ தான்..” என நேசமணி பிடித்துக் கொள்ள, “சும்மா சொல்லாதிய.. நான் என்ன பண்ணுனேன்.. அவன் என்னத்தையோ ஆசைக்கு பண்ணிட்டு போறான்னு வுடுததுக்கு இல்ல..” என்றார் சமுத்திரம்..

“கேக்க நேரம்லாம் கையில துட்ட குடுத்து காமிச்சன்னா இப்பிடி தான் எவனையும் மதிக்காம அலைவான்.. முதல்ல பொண்டாட்டி சொல்லுத பேச்ச கேட்டால்ல பிள்ளைவ கேக்கும்..” என திட்டிவிட்டு சென்று படுத்து கொண்டார்.. இது அடிக்கடி நிகழும் என்பதால் வீட்டார் அனைவரும் தூங்க சென்றிட, தாய்க்கு தான் தூக்கமேயில்லை..

சிறுவயதில் நேசமணியின் அடிக்கு பயந்து கொண்டு இடுப்பில் வழிந்து ஓடும் டவுசரை பிடித்து கொண்டு ஓட்டம் எடுக்கும் ஜார்ஜ் ஏதாவது ஒரு வைக்கோல் படப்பிற்குள் ஒளிந்து கொள்வான்.. தற்பொழுது இருக்கும் வீட்டின் இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவனுடைய சிநேகிதன் செல்வனுடைய தந்தை தான் அவனையும் அழைத்து கொண்டு நேசமணியிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவார்.. அதுவே பின்னாளில் கோபித்துக் கொண்டு எங்காவது செல்லும் பழக்கமானது..

மறுநாள் காலை, திருமணம் புவனேஸ்வரியின் ஊரில் இருக்கும் திருச்சபையில் நடத்துவதாக முடிவாகியிருக்க, அனைவரும் அதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.. ஜெயா தான் புவனேஸ்வரியின் அருகே அமர்ந்து அண்ணன் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்த அனைத்தையும் அணிவித்துக் கொண்டிருந்தாள்.. கிறித்தவ முறைப்படி என்பதால் வெள்ளை வலையை மடித்தாகி விட்டது.. எங்கே கோர்ப்பது என்று தான் இங்கே கேள்விக்குறி..

ஏனோ கொண்டையிடும் பெண்களை கண்டாலே ஜார்ஜிற்கு ஒவ்வாமை என்பதால் ஜடை என்று முடிவாகி, பின் கணம் தாங்க மாட்டாள் என்று சடையாரமும் தவிர்க்கப்பட்டிருக்க தவித்து போனாள் ஜெயா.. அதன் பின்னே கொண்டு வந்து பையினுள் ஏதோ தட்டுப்பட, எடுத்துப்பார்த்தால் கற்கள் பதித்த கிரீடம்.. தீர்வு கிடைத்து விட்டதென ஜெயா கிரீடத்தில் வலையை கோர்த்து கூந்தலோடு பின்னினாள்.. இடுப்பை தாண்டிய பின்னலில் பூ சரத்தை சுற்றி சுற்றி பூவால் நிறைத்து விட்டனர்..

கனியம்மாளின் ரெட்டை வடத்தை சமீபத்தில் வாங்கிய நெக்லசோடு அணிந்து காதில் பாட்டியின் தங்கத்தில் செய்த கம்மலை காதுமாட்டியோடு இணைத்து கைகளில் இரண்டு வளையலை நிறைக்குமாறு கடையில் வாங்கிய பித்தளை வளையல்களோடு அமர்ந்திருந்த புவனேஷ்வரி ஒருவித உணர்விற்கு ஆட்பட்டு தனக்கு நேரும் அனைத்தையும் பொறுமையாக ஏற்கும் பொம்மையாகவே அமர்ந்திருந்தாள்..

அப்பொழுது தாய்மாமன் என்ற கட்டிற்கு மாமா நுழைந்து அவர் சார்பில் மாலை அணிவித்து, மோதிரமும் பரிசாக அளித்து விட்டு, “நம்ம முறைப்படி கலியாணம் செஞ்சிருந்தா இந்த மாமா உனக்கு எல்லா கட்டயும் செஞ்சிருப்பேன்.. சேரி.. இருக்கட்டும்..” என்று விட்டு சென்றார்..

இங்கே, சமுத்திரம் மெல்லமாக நேசமணியின் காதில் “பெரியவன் இன்னும் வரல..” என கிசுகிசுக்க, “இந்த நேரத்துக்கு எங்க போனான் அந்த வெறுவாக்கெட்ட பய...” என சத்தமாய் அதட்டினார்.. அந்த வார்த்தையை கேட்ட சொந்தபந்தங்கள் அவர்களுக்குள்ளாகவே பேசத் தொடங்கினர்.. சமுத்திரம் பதட்டத்தில் கையை பிசைந்து கொண்டிருக்க, துரை அண்ணனை அங்கும் இங்குமாய் தேடிக் கொண்டிருந்தான்..

நேசமணி எவனுக்கு வந்த கவலையோ என்ற அலட்சிய பார்வையோடு நிற்க, கூட்டத்தில் நின்ற சித்தப்பா தான், “ஏ.. பெரியவன் எப்போல இருந்து வீட்டுல இல்ல..” என பொறுப்பாக விசாரித்தார்.. சமுத்திரம் நடந்தவைகளை கூற, “நல்ல கதையா இருக்கே.. இதுக்குலாமா கோவச்சிட்டு போவான் மனுஷன்.. சேரி.. சேரி.. இங்கனக்குள்ளேயே பேசிட்டு நிக்காம ஆவ வேண்டிய வேலைய பாருங்க..” என்று கூறி விட்டு குழுக்களாக தேட துவங்கினர்..

வழக்கமாக செல்லும் பெரியம்மா வீடுகளில் சென்று துரை விசாரிக்க, வீட்டினுள்ளே சமுத்திரம் தேடிக் கொண்டிருந்தார்.. ஜார்ஜ் செல்வதற்கு வாய்ப்புகளாக இருக்கும் அனைத்து இடங்களிலும் சென்று தேடித் திரிய, கிடைத்தபாடில்லை.. எங்கேதான் போயிருப்பான் என்று ஒரு கட்டத்தில் விரக்தி தோன்ற, அந்த வினாடியில் தான் ஒரு விஷயம் உரைத்தது சித்தப்பாவிற்கு..

அண்ணன் இளவயதில் இருக்கும் பொழுது என்ன சண்டை என்பதெல்லாம் நினைவில் இல்லை.. ஆனால் நிகழ்வு தெளிவாக இருக்கிறது.. தெற்கூரில் ஆலயம் கட்ட வேண்டும் என்ற முடிவு எடுத்த பொழுது, நேசமணியின் தாத்தா தன்னுடைய சொந்த நிலத்தை கொடுக்க அழகான ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.. உபதேசியாருக்கும் நேசமணிக்கும் ஏற்பட்ட கருத்து தகராறில் “எவன் கோயில்ல வந்து எவன் நாட்டாமை பண்ணுதது..” என்று கோவிலை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பியே விட்டார்..

அதனால் ஆலயத்தின் அன்றைய ஆராதனை நடத்த முடியாமல் போக ஐயரும் ஆலயத்தின் மூப்பர்களும் இணைந்து நேசமணியை தேடாத இடமெல்லாம் தேடிக் கொண்டிருக்க, அவரோ கவலையே இன்றி வடகாட்டில் உளுந்து விதைத்துக் கொண்டிருந்தாராம்.. பின் சென்று பதமாக நிதானமாக பேசி அவரை வழிக்கு கொண்டு வருவதற்குள் ஐயர் ஒரு வழியாகி விட்டார்..

இது நினைவு கூர்ந்த சித்தப்பா ஒவ்வொரு காட்டின் செட்டுகளிலும் தேட, “அப்பனையே போல” என்ற கூற்றை உறுதி செய்வதற்காகவே உருவெடுத்தது போல வடகாட்டின் செட்டில் கிணற்றுக்கு அருகே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் ஜார்ஜ்..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-17

கோபித்துக் கொண்டு கிணத்தடியில் பதிவிருப்பவனை நோக்கி நடக்க, தரையின் அலைவரிசையைக் கொண்டே அங்கே வருபவர்களை யூகித்துக் கொண்டான் ஜார்ஜ்.. “என்ன சித்தப்பா..” எனச் சத்தம் கொடுக்க, “ஆன்… னொன்ன சித்தப்பா.. ஏலே பெரியவனே.. அங்க கலியாணத்த வச்சிட்டு இங்கன வந்து கெடக்க.. உனக்கே நியாயமா படுதா??” என்றபடியே முட்டளவிற்கு வளர்ந்து நின்ற குளைகளுக்கு நடுவே நீச்ச்சலடித்தபடி வந்தார் சித்தப்பா..

“வுடுங்க.. எங்க ஐயா தான் ஏறுக்கு மாறா பேசுதாரே..” என்ற ஜார்ஜ் அருகில் நின்ற தாத்தா இலை செடியை கைகளாலேயே நறுக்கிக் கொண்டிருந்தான்.. “உங்க ஐயாவ மண்ணள்ளி தட்டு.. அவரு என்னைக்கி தான் ஒழுங்கா பேசிருக்காரு..” என்ற சித்தப்பா இடக்கையை ஊன்றி, மெல்ல முட்டியை மடக்கி, “ப்பா..” என்ற பெருமூச்சோடு அவனருகே அமர்ந்தார்

“ங்கேரு.. பெரியவனே.. நான் சொல்லுதத கேளு.. உங்க ஐயா யார மதிச்சிருக்காரு.. அவரு பெறந்து வளந்த எடம் அப்பிடி.. எங்கள எல்லாம் எங்க ஐயா சைக்கிள் கேரியர்ல கூட ஏஎத்த மாட்டாரு.. பின்னால எங்க அம்மன்னா முன்னால எப்பவும் உங்க ஐயா தான்.. இப்பிடி வளந்தவரு மடங்கிப் போவனும்னா எப்பிடி..” என்க, சுருங்கிய ஜார்ஜின் முகம் இன்னும் இயல்பானபாடில்லை..

“இன்னொரு விசியம் சொல்லுதேன்.. கேளேன்.. நானும் உங்க ஐயாவும் என்னத்துக்குப் பாக்க இடத்துல மூஞ்ச திருப்பிக்கிட்டு போறோம்னு நெனைக்க.. அன்னிக்கி நம்ம செல்வராஜ் கடையில உக்காந்துட்டு இருக்கும் போது அங்கோடி போனவர ‘பேசாத வீட்டுக்குப் பண்டம் என்னத்துக்கு’ன்னு லேசா தான் கேட்டேன்.. பொட்டுன்னு ‘குடுத்து வச்சிருக்கவன் வாங்குதானு’ட்டாரு.. நான் என்னவோ வெளையாட்டுக்கு தான் பேசுனேன்.. ஆனா அவரு பேசுனது நெஞ்சுல இறங்கிட்டு.. இவ்வளோ நடந்ததுக்குப் பெறவு எப்பிடி முகம் குடுத்து பேச முடியும்..” எனத் தனது சோக கதையை எண்ணி நொந்து கொண்டார் சித்தப்பா..

சித்தப்பாவிற்குக் குழந்தை இல்லை என்பதைக் குத்தி காட்டுவதற்காகத் தான் அப்படி ஒரு வார்த்தை பேசியுள்ளார் என்பதை யூகித்துக் கொண்ட ஜார்ஜ் ஒரு நிமிடம் சித்தப்பாவை ஆழ்ந்து நோக்கினான்.. குழந்தை இல்லை என்பதைக் குறையாகவே கருதாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘பெரியவனே’ என்றழைக்கும் இவர் வீட்டிற்கும் நேசமணி அறியாதவாறு கள்ளத்தனமாய்த் தான் சென்று வருகிறான்..

“கூடப் பெறந்த எனட்டயே அவரு இப்பிடி தான் பேசுதாருங்கும் போது நீயெல்லாம் எம்மாத்திரம்?? உங்க ஐயாவ வுடு.. கலியாணத்துக்குக் கெளம்பிட்டு இருக்க அந்தப் பிள்ளைய நெனச்சு பாத்தியா?? உங்க ஐயாவ மாதிரி நீயும் ஆயிராத..” எனத் தொடையில் தட்டவும் தான் அவனுடைய முகத்தில் ஒரு தெளிவு.. ஏற்கனவே அக்காவை பற்றி இப்படி ஒரு சங்கதி பரவிக் கொண்டிருக்கும் போது நடக்கவிருந்த திருமணமும் பாதியிலேயே நின்று விட்டது என்று அறிந்தால் அந்தப் பெண்ணிற்கு ஜென்மத்திற்கும் மணமேடை வாசமே கிட்டாது..

சித்தப்பாவுடன் கிளம்பிய ஜார்ஜ் வீட்டிற்குச் சென்று உடை மாற்றித் திருமணத்திற்குத் தயாராகி, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த மகிழுந்தில் ஏறிக் கொண்டான்.. அச்சிற்றூரின் உள்ளே நுழைந்து ஆலயத்தின் முன்னே நிற்க, கதவைத் திறந்த ஜார்ஜை வரவேற்க மகேசனும் ராகவேந்திரனும் தயாராய் நின்றனர்.. பச்சைப் பாலும் வாழைப் பழமும் ஊட்டி, மாலை அணிவித்து வரவேற்க, சகோதரி முறைக்கு அரசி இல்லாததினால் சித்தி மகள் ஆரத்தி எடுத்தாள்.. “யத்தான்.. என்ன அப்பிடியே உள்ள போயிறலாம்னு பாத்தியளா?? கிப்ட்.. கிப்ட்..” என வாயடித்தபடி நின்றவள் கொஞ்சமாய் வாயாடி.. அருகில் நின்றவர்கள், “ஏபிளே.. என்ன பேசுத..” என அதட்ட, அதற்குள் ஜார்ஜ் பையில் இருந்து ஒரு தொகையைப் பரிசாய் அளித்து விட, ஆலயத்தினுள் அழைத்துச் சென்றனர்..

அலங்காரத்திற்காக வண்ண வண்ணக் காகிதங்கள் சுருள் சுருளாகச் சுவற்றி வரிவரியாக ஒட்டப்பட்டிருக்க, சில நிமிடங்களில் மணப்பெண்ணும் பாதிரியாரும் வந்து சேர்ந்திட உபதேசியார் வரவேற்க ஓடினார்.. பீடத்தின் மீது ஏறி நின்ற ஐயர்வாள் @ குருவானவர் வழக்கமான ஆராதனை முறைமையைப் பின்பற்றிக் கொண்டிருக்க, மணமக்கள் இருவரும் ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர்..

திருமணத்திற்கென்று எழுதப்பட்ட பிரத்தியேகமான முறைப்படி தொடங்கியது.. பாதிரியார் எழுந்து, ஒலிவாங்கியின் முன் நின்று, “பிரியமானவர்களே, இந்தப் புருஷனையும் இந்த ஸ்திரியையும் தேவ சமூகத்திலும் இந்தச் சபைக்கு முன்பாகவும் பரிசுத்த விவாக நிலைமையில் சேர்க்கும்படி இவ்விடத்தில் கூடி வந்திருக்கிறோம். விவாகமானது மேன்மையுள்ள நிலைமையாயிருக்கிறது. அது மனிதன் பாவம் செய்யாமலிருந்த காலத்தில் தேவனால் நியமிக்கப்பட்டதாயும், கிறிஸ்துவுக்குள் அவர் திருச்சபைக்குமுள்ள ஞான ஐக்கியத்தைக் காட்டுகிறதாயும் இருக்கிறது. கிறிஸ்து நாதர் கலிலேயா நாட்டிலுள்ள கானாவூரில் நடந்த கலியாணத்துக்குப் போயிருந்து, முதலாம் அற்புதத்தைச் செய்து, இந்தப் பரிசுத்த நிலைமையை மேன்படுத்திச் சிறப்பித்தார். அப்போஸ்தலனாகிய பவுலும். இது எல்லோராலும் கனமாக எண்ணப்படத்தக்கதென்று புகழ்ந்திருக்கிறார். ஆகையால் இதை அற்பமாய் எண்ணி, யோசனையில்லாமல், புத்தியில்லாத மிருகங்களைப்போலத் தேக இச்சைகளை நிறைவேற்றவேண்டுமென்று விவாகம் செய்யாமல் விவாகம் நியமிக்கப்பட்ட முகாந்திரங்களை எண்ணி, பயபக்தியோடும் விவேகத்தோடும் தகுந்த, யோசனையோடும், தெளிந்த புத்தியோடும் தேவனுக்கஞ்சி விவாகம் செய்ய வேண்டும். அந்த முகாந்திரங்களாவன :

முதலாவது, கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்று அவருக்கேற்ற பயபக்தியில் வளர்க்க, விவாகம் ஏற்படுத்தப் பட்டது.

இரண்டாவது, விரக்தராயிருக்க வரம் பெறாதவர்கள் வேசித்தனத்திற்கு விலகி, பாவத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படி கல்யாணம் செய்து, கிறிஸ்துவின் சரீரத்தில் அசுசிப்படாத அவயவங்களாய்த் தங்களைக் காத்துக்கொள்ள, விவாகம் ஏற்படுத்தப்பட்டது.

மூன்றாவது, சுகத்திலும் துக்கத்திலும் ஸ்திரீ புருஷர் ஒருவரால் ஒருவர் பெறக்கூடிய சிநேகத்தையும் சகாயத்தையும் ஆறுதலையும் அடைய விவாகம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் பரிசுத்த நிலைமையிலே சேர்க்கப்படும்படி, இவ்விரண்டு பேரும் இப்பொழுது வந்திருக்கிறார்கள். ஆகையால் இவர்களை ஒருவரோடொருவர் ஒழுங்கின்படி சேர்க்கக் கூடாத நியாயமான முகாந்திரத்தை யாரானாலும் சொல்லக்கூடுமானால், இப்பொழுதே அதைச் சொல்லக்கடவன். சொல்லாவிட்டால் இனி ஒருக்காலும் சொல்லாதிருக்கக் கடவன்..” என்று சபையிடத்தில் கூறி விட்டு மணமக்கள் இருவரையும் பலீபீடம் அருகே வர செய்தார்..

பின், “தேவவசனத்துக்கு ஏற்காத வகையாய்ச் சேர்க்கப்பட்டவர்கள் தேவனால் சேர்க்கப்பட்டவர்கள் அல்லவென்றும், அவர்கள் செய்த விவாகம் விவாகம் அல்லவென்றும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஆகையால் எல்லா இருதயங்களின் இரகசியங்களும் வெளிப்படும் பயங்கரமான நியாயத்தீர்ப்பு நாளிலே நீங்கள் இருவரும் உத்திரவாதம் செய்யவேண்டுவதாலே, நீங்கள் ஒழுங்கின்படி விவாகத்தினாலே சேர்க்கப்படக்கூடாத முகாந்திரம் உண்டென்று உங்களிலே யாராகிலும் அறிந்திருந்தால், அதை இப்பொழுதே அறிவிக்கவேண்டுமென்று உங்கள் இருவருக்கும் கட்டளையிடுகிறேன்..” என்று வழக்கமான தடைகள் ஏதேனும் உண்டா என்று சபையாரிடத்தில் வினவ, எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் அனைவரும் அமைதி காத்தனர்..

மேலும் தொடர்ந்து, “ஜார்ஜாகிய நீ தேவ நியமத்தின்படி பரிசுத்த விவாக நிலைமையில் ஒருமித்துவாழ, இந்த ஸ்திரீயை உனக்கு விவாக மனைவியாக ஏற்றுக்கொண்டு, சுகத்திலும், துக்கத்திலும் இவளை நேசித்து, ஆதரித்துக் கனப்படுத்திக் காப்பாற்றி, நீங்கள் இருவரும் உயிரோடிருக்குமளவும், பிறர்முகம் பாராமல் இவளுக்கே புருஷனாயிருப்பாயா?” என்று வினவ, “இருப்பேன்..” என்று பயபக்தியாய் சம்மதித்தான்..

அதன் பின், மணமகளிடம், “புவனா மேரியாகிய நீ தேவ நியமத்தின்படி பரிசுத்த விவாக நிலைமையில் ஒருமித்துவாழ, இந்த மனிதனை உனக்கு விவாகப் புருஷனாக ஏற்றுக்கொண்டு, இவனுக்குக் கீழ்ப்படிந்து பணிவிடை செய்து, சுகத்திலும், துக்கத்திலும் இவனை நேசித்து, ஆதரித்துக் கனப்படுத்திக் காப்பாற்றி, நீங்கள் இருவரும் உயிரோடிருக்குமளவும், பிறர்முகம் பாராமல் இவனுக்கே மனைவியாயிருப்பாயா?” என்று வினவ, “இருப்பேன்..” என்றாள்..

பின் சபையை நோக்கி, “விவாகஞ் செய்ய இந்த ஸ்திரீயை இந்தப் புருஷனுக்குக் கொடுக்கிறது யார்?” என்று வினவ, வேலப்பன் முன்னோக்கி வந்தார்.. ஜார்ஜ் தன்னுடைய வலது கையால் புவனா மேரியின் (மதச்சடங்குகளுக்கு எதுவாக பெயர் மாற்றம் செய்திருந்தனர்) வலது கையைப் பிடிக்கச் செய்து, தாம் சொல்லுகிற பிரகாரம் அவனைச் சொல்ல சொன்னார் பாதிரியார்..

“ஜார்ஜாகிய நான் புவனா மேரியாகிய உன்னை இன்றுமுதல் எனக்கு விவாக மனைவியாக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பரிசுத்த நியமத்தின்படி, நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மைப் பிரிக்குமளவும், உன்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் வாக்குக் கொடுக்கிறேன்.” என்று அவளிடத்தில் உறுதி கூற, இந்த முறை புவனேஷ்வரி தன் வலது கையினால் புருஷனுடைய வலது கையைப் பிடிக்கச் செய்து, பாதிரியார் சொல்லுகிற பிரகாரம் அவளைச் சொல்ல சொன்னார்.

“புவனா மேரியாகிய நான் ஜார்ஜாகிய உன்னை இன்றுமுதல் எனக்கு விவாகப் புருஷனாக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பரிசுத்த நியமத்தின்படி, நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மைப் பிரிக்குமளவும், உன்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் வாக்குக் கொடுக்கிறேன்.” என்றாள் புவனேஷ்வரி..

மணமகன் மணமகளுக்கு திருமண உறுதி சங்கிலி அணிவித்து “இந்த மாங்கல்யத்தினாலே நான் உன்னை விவாகம் செய்து, என் சரீரத்தினாலே உன்னை மேன்மைப்படுத்தி, எனக்கு உண்டான உலகச் சொத்துகளை உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிறேன். பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஆமென்.” என்றான் ஜார்ஜ்.. இருவரும் முழங்கால்படியிட்டிருக்க, ஆராதனை நடத்தும் பாதிரியார், “ஜெபம் பண்ணக்கடவோம்.” என்றதும் அனைவரும் முழங்காலிட்டு, பெண்கள் வழிந்து போன முக்காடுகளைச் சீர்ப்படுத்திக் கொண்டனர்..

“மனுக்குலம் அனைத்தையும் படைத்துக் காப்பாற்றுகிற அநாதி தேவனே, ஆவிக்குரிய எல்லா நன்மைகளையும் ஈகிற கருணாகரனே, நித்திய ஜீவனுக்குக் காரணராகிய கடவுளே, ஈசாக்கும் ரெபெக்காளும் உண்மையாய் ஒருமித்து வாழ்ந்ததுபோல், உமது நாமத்தினால் நாங்கள் ஆசிர்வதிக்கிற உமது அடியாராகிய இந்தப் புருஷனும், இந்த ஸ்திரீயும் இந்த மாங்கல்யத்தை அடையாளமாகவும், அத்தாட்சியாகவும், புருஷன் தரிப்பிக்க ஸ்திரீ தரித்துக்கொண்டதினாலே, தங்களுக்குள்ளே செய்த உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொண்டு, நிறைவேற்றி, எப்பொழுதும் பூரண அன்பும் சமாதானமும் உள்ளவர்களாய் ஒருமித்து வாழ்ந்து, உமது கற்பனைகளின்படி நடக்க, எங்கள் கர்த்தராகிய இறைவன் மூலமாய் இவர்கள்மேல் உமது ஆசீர்வாதத்தைப் பொழிந்தருளும். ஆமென்.” என்று ஜெபம் செய்தார்..

அப்பொழுது குருவானவர் மக்களுக்கு நடுவே வந்து இருகரம் உயர்த்தி, “தேவன் இணைத்தவர்களை மனிதன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன். ஜார்ஜும் புவனா மேரியும் பரிசுத்த விவாக நிலைமையில் ஒருமித்து வாழச் சம்மதித்து. தேவ சந்நிதியிலும், இந்தச் சபைக்கு முன்பாகவும் அதை அறிக்கையிட்டு, ஒருவருக்கொருவர் வாக்குக் கொடுத்து, உறுதிக்கு அடையாளமாக மாங்கல்யத்தைத் தரித்து, கைபிடித்துத் தெரியப்படுத்தினதாலே, இவர்கள் கணவனும் மனைவியுமாயிருக்கிறார்களென்று, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அறிவிக்கிறேன். ஆமென்.

நீங்கள் மறுமையிலே நித்திய ஜீவனை அடையத்தக்கதாக இம்மையிலே ஒருவருக்கொருவர் ஆதரவாய் வாழும்படி, கர்த்தர் உங்களைச் சகல ஆசீர்வாதித்தினாலும் கிருபையினாலும் நிரப்பக்கடவர். ஆமென்.” என்று இருவரையும் கணவன் மனைவியாக ஆசீர்வதித்தார்..

பின்னர், “பரம பிதாவே, மனுக்குலம் விருத்தியாகிறது தேவரீர் அளிக்கும் வரமாயிருக்கிறது. இவர்கள் புத்திர பாக்கியம் அடைந்து, உமக்குத் துதியும் கனமும் உண்டாக, அந்தப் பிள்ளைகள் சன்மார்க்கராய் வளருகிறதைக் கண்டு களிகூருமளவும், அன்பும் நீதியும் உள்ளவர்களாய் ஒருமித்துவாழ, இவர்கள் இருவருக்கும் உமது ஆசீர்வாதத்தை அனுக்கிரக்கிக்க வேண்டுமென்று, வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

ஒன்றும் இல்லாதிருக்கையில் சர்வ வல்லமையினால் அனைத்தையும் சிருஷ்டித்த தேவனே, சிருஷ்டித்தவைகளை ஒழுங்குபடுத்தின பின்பு, உமது சாயலின்படியே சிருஷ்டிக்கப்பட்ட புருஷனிலிருந்து ஸ்திரீயை உருவாக்கி, அவர்களை ஒன்றாக இணைத்து, விவாகத்தினால் ஒருமைப்படுத்தி, அவர்களை ஒருக்காலும் பிரித்துவிடக்கூடாதென்று கற்பித்தருளினீர். கிறிஸ்துவுக்கும் அவருடைய திருச்சபைக்குமுள்ள ஐக்கியத்தையும், ஞான விவாகத்தையும் காட்டத்தக்கதாய் விவாக நிலைமையை மேன்மையான இரகசியமாக நியமித்தீர். கிறிஸ்து தமது மணவாட்டியாகத் திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து, தமது சொந்த சரீரமாக அதைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல, இந்தப் புருஷன் உமது வசனத்தின்படி தம் மனைவியில் அன்பு கூறவும் , இந்த ஸ்திரீயும் தன் புருஷனிடத்தில் அன்பும் பட்சமும், உண்மையும் பணிவும் உள்ளவர்களாயிருக்கவும், எப்பொழுதும் அமைதலும், அடக்கமும், சமாதானமும் உள்ளவர்களாய்த் தேவ பக்தியுள்ள பதிவிரதப் பத்தினிகளைப் பின்பற்றவும், உமது அடியாராகிய இவர்களுக்கு அனுக்கிரகம்பண்னும். கர்த்தாவே, இவர்கள் இருவரையும் ஆசிர்வதித்து, இவர்கள் உமது நித்திய ராஜ்ஜியத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி. கிருபை செய்தருளும். ஆமென்.” என்று இறைவனிடம் இவர்களுக்காகப் பிரார்த்தித்தனர்.. பின் திருமணம் நடைபெற்றதிற்கான சான்றில் கையொப்பமிடும் பொழுதே வேலப்பன் புவனேஷ்வரியின் அருகில் நின்றார்...

திருமணமான தம்பதியினர் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, ஜார்ஜின் கரத்தில் புவனேஷ்வரியின் கரத்தை ஒப்புவித்தனர் பெற்றவர்கள்.. ஜார்ஜ் தன் கைகளில் தஞ்சம் புகுந்த புவனேஷ்வரியின் கைவிரல்கள் எங்கே சற்று அழுத்தம் கொடுத்தால் உடைந்து விடுமோ என்கிற மென்மையில் இருக்கவும் பெரும் கவனமெடுத்து, பூவையை பூவைப் போலப் பற்றியிருந்தான்..

திருமணம் முடிந்த கையோடு பெண்ணின் வீட்டில் விருந்து உண்டு விட்டு, வந்தவர்களின் ஆசிகளைப் பெற்ற மணமக்கள் கிளம்பி, நேசமணி தற்போதிருக்கும் ஊருக்கு பயணப்பட்டனர்.. தனது வீட்டாரைப் பிரிந்து செல்லும் புவனேஷ்வரியின் முகம் வாடி போக, கனியம்மாள்தான் கண்கள் கலங்கி அழவே செய்தார்.. அடித்தாலும் பிடித்தாலும் அம்மா என முதல் அழைத்த மகள் அல்லவா?! ஏற்கனவே ஊரின் ஆலயத்தைத் திறந்து மணியடித்திருந்த உபதேசியார் இவர்களை வரவேற்று ஜெபம் செய்து அனுப்பினார்.. ஒரு ட்ரங்கு பெட்டியில் தனக்கான உடமைகளை எடுத்து வந்த புவனேஷ்வரி புகுந்த வீட்டில் ஒன்றி போக சற்று தயங்கினாள்..

இதற்கிடையில் ஜெயா வேறு அண்ணனை தனியே அழைத்து வந்து “அவங்க அம்மா நம்ம கிளம்பும் போது ‘என் பணப்பெட்டி போவுதே..’ன்னு அழுதாங்க.. அவங்க வீட்டுல என்ன நிலைமையோ?? அதான்.. நீ மாசத்துல ஒரு வாட்டியாவது அங்க கூட்டிட்டு போயிட்டு வந்துரு..” என்க, “ம்ம்ம்..” என்று விட்டுக் கடந்தான்..

அங்கே புவனேஷ்வரியின் கூந்தலில் சுற்றியிருந்த பூவை பிரிப்பதற்குள் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.. ஊசிகள் எக்கு தப்பாக மாட்டிக் கொண்டு நிற்க, “சடையாரம் வைக்காம பூவை வச்சதுக்கே இப்பிடி வலிக்கே.. சடையாரம் மட்டும் வச்சிருந்தேன்னோ.. செத்தேன்..” என்று முனகிக் கொண்டவள் ஒரு ஊசியை எடுக்கும் பொழுது, “ம்மா..” என்று வலியில் கத்தியே விட்டாள்.. “என்ன??” என்று மறுநிமிடமே ஜார்ஜ் அங்கிருக்க, ஒவ்வொன்றாக உருவி எடுக்க உதவி செய்து கொண்டிருந்தான்.. கைகள் மட்டுமில்லை சிரசும் பிஞ்சு குழந்தையிடம் தோற்றுவிடும் மென்மையில்தான் இருந்தது..

அன்று மாலையே சீர்வரிசை, தட்டு முட்டுச் சாமான்கள், கட்டில் என்று வேனில் இறக்கிய வேலப்பனை, பெரியம்மா மருமகள் “வேனுல வந்தியளாக்கும்.. ஒரு கார் பிடிச்சிருக்கலாம்லா..” என்கவும் குழம்பிப் போனார்.. அதே பெரியம்மா மருமகள் புவனேஷ்வரி வழியில் சொந்தக்காரியாக இருந்து ஜார்ஜின் உறவில் திருமணம் முடித்து வந்த புவனேஷ்வரி போன்றவளே.. குணத்தில் ஒத்தவளில்லை

“எதுல வந்தா என்ன அண்ணி.. வந்துட்டுல்லா...” எனக் கேட்க வேண்டும் என்று தொண்டை வரை வந்த வார்த்தையை மட்டுப்படுத்திக் கொண்ட ஜார்ஜ் அனைவரின் முகத்தையும் நோக்கினான்.. எல்லாரும் இயல்பாகவே இருக்க, வேலப்பன் அதிலும் புன்னகை மாறாமலும் வார்த்தைகளால் வேதனைப்படாமலும் வெள்ளந்தியாக நின்றார்..

வந்த பொருட்கள் மிகக் குறைவு என்றாலும் அதுதான் இங்கேயே இருக்கிறதே என்று விட்டுவிட்டனர்.. மறுநாள் எழுந்த புவனேஷ்வரி, பல் துலக்குவதற்காக வீட்டைச் சுற்றி வந்து விட்டு வாயில் ப்ரஷோடு நின்ற ஜார்ஜிடம் மெல்ல சென்று, “சாம்பல் இல்லியா??” எனக் கேட்டாள்..

“ம்ம்.. இந்தா..” கையில் இருந்த பற்பசையை நீட்ட, “பிசுக்கு மருந்து வச்சா பல்ல விளக்கனும்.. சாம்பல் இல்லையா..” எனக் குழந்தை போல மருகிக் கொண்டு நின்ற புவனேஷ்வரியை கண்டு மெல்ல புன்னகைத்தான் ஜார்ஜ்.. “அடுத்து பட்டணத்துக்குப் போகும் போது உனக்கும் பிரஷ் வாங்கிட்டு வாரேன்.. இப்போதைக்கு இதை வச்சு பல்ல தேயி..” என்றிட, சுட்டு விரலில் கொஞ்சமாய்ப் பிதுக்கி வழக்கமான சாம்பலை போல வைத்து தேய்க்கத் தொடங்கினாள்..

காலையில் சமுத்திரம் இட்லி அவித்துக் கொண்டிருக்க, “அத்த.. நான் எதாச்சும் உதவி செய்யட்டுமா..” என வந்தமர்ந்தாள் புவனேஷ்வரி.. “வா.. தாயி.. இந்தத் தேங்காய எடு.. பாத்து.. தேங்கா கீறி முனை இப்போ தான் தீட்டுனது..” எனச் சமுத்திரம் கூற, பார்த்துப் பக்குவமாகச் செய்து கொடுத்தாள் புவனேஷ்வரி.. “உங்க வீட்டுல இருந்து இட்லி கொப்பரை வரலயா?? எதுக்கும் வாங்கி வச்சிக்கோ..” எனக் கூற அதற்கு ‘உம்’ கொட்டி கொண்டாள் புவனேஷ்வரி.. புகுந்த வீட்டில் எவரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதிலேயே பல சந்தேகங்களைக் கொண்டிருந்த புவனேஷ்வரி அனைத்திற்கும் தலையை மட்டும் ஆட்டினாள்..

ஆனால் இரவு கழிந்து விடியும் பொழுதில் “எப்படியும் இதுதான் வீடு.. நம்ம பழகி தான் ஆவணும்..” என்று முடிந்தவரை ஒவ்வொருவரிடமும் தயக்கத்தைக் குறைத்திருந்தாள்.. என்னதான் சமுத்திரத்திடம் இயல்பாகப் பேசி பழகினாலும் ஜார்ஜின் மீது ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.. அவருக்கு என்ன பிடிக்குமோ?? எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ?? நமது நடவடிக்கைகள் பிடிக்காமல் போய் விடுமோ?? என்ற பலவாறு கேள்விகள் இருந்ததினாலேயே இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையில் தான் இருந்தது..

பின் மறுவீடு செல்லும் சம்பிரதாயத்திற்காகக் கிளம்பி நிற்க, இந்த முறை சாமர்த்தியமாக வேலப்பன் கார் பிடித்து வந்திருந்தார்.. ஆனால் ஜார்ஜ், “எதுக்கு இதுலாம்.. நம்ம வண்டிலேயே போயிரலாம்.. ரெண்டு பேருக்கு எதுக்குக் காரு..” என மறுத்து விட, திருமணமான முதல் நாளே வண்டியில் மறுவீடு சென்றனர் தம்பதியினர்.. தன் மனைவியின் பிறந்தவீட்டு பொருளாதார நிலை பற்றி நன்கு அறிவான் ஜார்ஜ்.. ‘இல்லாதவனை அதைச் செய் இதைச் செய் என்று வற்புறுத்துவது’ என்பது அவனுடைய அகராதியில் கீழ்த்தரமான செயல்.. அதிலும் மனைவி கொண்டு வந்த ட்ரங்கு பெட்டியில் நல்லதாகச் சில சேலைகளும் சில நோட்டு புத்தகங்களும் சான்றிதழ்களும் தவிரப் பெரிதாக வேறொன்றுமில்லை..

அதை விடத் தன் வீட்டோடு அவள் பொருந்தி போவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.. தன் வீட்டில் கடமைக்கு என்று சாம்பலினால் அரக்க தேய்க்காமல் விரல் சூப்பி விட்டு வரும் புவனேஷ்வரி, வாய் துர்நாற்றம் அடித்து விடக் கூடாது என்பதற்காகப் புதினா வைத்து வாய்க் கொப்பளிப்பது வேப்பங்குச்சியினால் பல் விளக்குவது என்று பழக்கமில்லாத ஒன்றை பழக்கமாக்கி கொள்ள முயலுகிறாள்.. ஆனால் அனைத்தும் ஜார்ஜின் கண் பார்வையில் பால்வாடியில் ஸ்லேட்டை எச்சில் தொட்டு துடைக்க, ஆசிரியரை கண்டதும் கையால் அழிப்பது போலப் பாவலா செய்யும் குழந்தையாகவே தெரிந்தது..

மணமக்களுக்காக கனியம்மாள் ஆட்டுக்கறி சமைத்துக் கொண்டிருக்க, மகேசன் கடைக்கு இலை வாங்க சென்றிருந்தான்.. ஜார்ஜ் சற்று கூச்ச சுபாவம் என்றாலும் ராகவேந்திரனோடு கட்டிலில் அமர்ந்து வேலையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தான்.. இருந்தது கொஞ்ச நேரம்தான் என்றாலும் சமுத்திரம் தனது மகனை பற்றி முக்கியமான பழக்கங்களைக் கூறியிருந்தார்..

“பெரியவன் கொஞ்ச கூச்ச சுபாவம்.. பாக்கதுக்கு அவிய ஐயாவ மாதிரி முரடா தெரிஞ்சாலும் பழகிட்டா நல்ல பையன்.. சட்டுன்னு கோவம் வரும்.. மத்தபடி கெட்டிக்காரன்.. எங்கேயும் அவ்ளோ லேசுல சாப்புட உக்காந்துற மாட்டான்.. கல்யாண பந்தில கூடச் சாப்புடாம தான் வருவான்.. அதுலயும் கறி எடுக்க அன்னிக்கி அவன் போதும்ங்க அளவுல இருந்தா மட்டும் தான் சாப்புடுவான்.. இல்லன்னா ரசத்த கூட ஊத்தி சாப்புட்டுக்கிடுவான்.. நாளைக்கி உங்க வீட்டுக்கு விருந்துக்குப் போறதுனால தெரிஞ்சி வச்சிக்க..” என்றிருக்கப் புவனேஷ்வரிக்கு மனம் பட்டுபட்டென அடித்துக் கொண்டே இருந்தது..

என்ன தான் திருமணம் ஆகியிருந்தாலும் வசதியாக தன் விருப்பம் போல வாழ்ந்தவனுக்கு இந்தச் சிறிய குடிசை வசதியாக இல்லாவிட்டாலும் போதுமானதாக இருக்குமா?? தன் அன்னையின் கைப்பக்குவம் பிடிக்குமா?? விருந்துக்கு வந்த இடத்தில் கை நனைக்காது சென்று விடுவாரா?? இப்படிப் பலதரப்பட்ட கேள்விகள் மூளைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தாலும் தன்னுடைய மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாள் புவனேஷ்வரி..

வேலப்பன் கறி எடுத்துக் கொடுத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.. வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைக்குத் தரும் மரியாதையா இல்லை தயக்கமா என்றெல்லாம் தெரியாது.. அதிகமாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதில்லை.. அவ்வளவு ஏன்?? எதிரில் வந்தாலும் ஓரிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்ததாகப் பேச ஏதுமில்லாமல் இமைகள் வேகமாக அடித்துக் கொள்ள, அடிக்கடி இதழ்கள் விரிய புன்னகைத்து இறுதியாக முறுவலித்து “பாப்போம்..” என்று தலையாட்டி நகர்ந்து கொள்வர்.. அந்த ஓரிரண்டு வார்த்தையும் “என்ன மாமா??” “என்ன மாப்பிள்ளை??” என்பது தான்..

மதிய விருந்து தயாராகியதும் அந்தச் சிறிய ஓட்டுப்பறை வீட்டில் பொருட்களைப் பக்கவாட்டில் நகர்த்தி வைத்து, நடுவே சிறுபகுதியை காலியாகச் செய்திருந்தனர்.. தண்ணீர்குடம், பித்தளை அண்டா அனைத்தும் தொழுவத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.. சாணத்தரையில் சாக்கு விரித்து, முன்னால் சாப்பாட்டுப் பாத்திரங்களை அடுக்கியிருக்க, வாழை இலையை விரித்துக் கொள்ளட்டும் என்று வரிசையாக வைத்திருந்தனர்.. “சாப்பிட வாங்க..” என கனியம்மாள் அழைக்கவும் ஜார்ஜ் சங்கோஜமாக உணரவும் கொஞ்சமாய்க் கணவனின் முகபாவனைக்கு அளவுகோலை கண்டுபிடித்திருந்தாள் புவனேஷ்வரி.. “சின்னவேன்.. அந்தப் பலகைய எடுத்து அத்தானுக்குப் போடு..” என கனியம்மாள் கூற, “ஏமோ.. நான் பாத்துகிடுதேன்..” எனக் குறுக்கே நுழைந்த புவனேஷ்வரி பெஞ்சில் இருந்த பொருட்களைக் கொஞ்சமாய்த் தள்ளி வைத்து விட்டுக் கட்டிலில் இலையை விரித்தாள்..

தங்களைப் போலத் தரையில் அமர்ந்து உண்டு பழக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் “சேரி.. எதுக்கும் மேலேயே உக்காந்து சாப்டட்டும்..” என்று இந்த ஏற்பாடு.. புவனேஷ்வரியின் பயத்தைத் தீர்க்கும் வகையில் இலையில் வைத்ததை ஒதுக்காமல் சாப்பிட்டான் ஜார்ஜ்.. கனியம்மாள்தான் எலும்பு இல்லாத கறியாக அரித்து அரித்து ஊற்றிக் கொண்டிருக்க, வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டுமே என்பதால் “போதும். போதும்..” என்று நிறுத்தி விட்டான்..

விருந்து உபசரிப்பு முடியவும் சற்று ஆற அமர உட்கார்ந்து ராகவேந்திரனிடம் பேசிக்கொண்டிருக்க, தாயும் மகளும் அடுப்பாங்கரையில் இருந்த மிச்ச வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தனர்.. ஜார்ஜும் மச்சான் இருவரிடமும் அவர்களின் வேலையைக் குறித்து விசாரித்து அக்கறையாகச் சில பரிந்துரைகளையும் கூறிக் கொண்டிருந்தான்..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-18

வெளியே வெயில் இறங்க ஆரம்பித்திருக்க, மணமக்கள் இருவரும் கிளம்புவதற்குத் தயாராகினர்.. பிறந்த வீட்டு சார்பாக இருவருக்கும் கல்யாண அரிசிப்பெட்டி வழங்குவதற்காகக் கனியம்மாள் வெளியே அமர்ந்திருந்த வேலப்பனை அழைத்தார்.. வேலப்பனைக் கண்டதும் எழுந்து கொண்ட ஜார்ஜ், சட்டையைக் கீழே இழுத்தபடி, “நீங்க சாப்பிட்டீங்களா மாமா??” எனக் கேட்டான்.. “சாப்புட்டாச்சி மாப்பிள்ள..” எனப் புன்னகைத்து கொண்டவர்; கனியம்மாளை பார்த்து ‘எங்கே?’ என்று கண்ணசைக்க, பீரோவிற்குப் பின்னால் இருந்து சில கிலோக்கள் அரிசி வைத்து, இதர சாமான்களான மஞ்சள் போன்றவற்றைக் கொண்ட வெள்ளையில் நீலநிற வரிகளிட்ட பக்கெட் ஒன்றை எடுத்து வந்தார்.

“மாமா.. இதுலாம் எதுக்குப் போட்டுக்கிட்டு..” என்ற ஜார்ஜின் வார்த்தையில் சிறிதும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாதிருக்க, “பரவாயில்ல மாப்பிள்ள.. கட்டுன்னு ஒன்னு செய்யனும்லா..” என்று விவேகமாகப் புவனேஷ்வரியின் கைகளில் கொடுக்க, வாங்கிக் கொண்டாள்.. பின்னாளில் இருபது வருடங்களும் பொத்,தி பாதுகாக்கப்பட்ட இதே பக்கெட்டை ஒரே நிமிஷத்தில் கீழே போட்டு விளிம்பு வெடிக்க வைக்க ‘ஜூனியர் புவனேஷ்வரி’ என்ற வல்லவனுக்கு வல்லவன் வந்ததெல்லாம் வேறு கதை..

முற்றத்தில் நின்ற வண்டியின் பெடலை ஜார்ஜ் அழுத்திக் கொண்டிருக்க, “எப்ளே.. புவனா.. உங்க அம்ம வீட்டுக்கு வந்தியாக்கும்.. ஒரு எட்டு இங்கோடி வந்து என்னையும் பாக்கது..” என்றபடியே வடக்கு வீட்டுக்காரி சுற்றுச் சுவரில் கைவைத்து நின்றிருந்தார்.. பழைய கோபமும் துடுக்குத்தனமும் தற்பொழுது முற்றிலுமாய் வடிந்திருக்க, “போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்று ஜார்ஜிடம் அனுமதி வாங்கிவிட்டு சென்றாள் புவனேஷ்வரி.. “என்ன தம்பி..” என ஜார்ஜிடம் பேச முயற்சிக்க, ஒரு குறுநகையோடு நிறுத்தி கொண்டான்..

அப்பொழுது அருகே தயக்கத்தோடு வந்த வேலப்பன், “புவனாவுக்குப் பேசி முடிச்சது இருவது களஞ்சி.. ஆனா பதினாறுதான் போட முடிஞ்சிது.. கூடிய சீக்கரம் நகை பாக்கியக் குடுத்துறோம்..” எனக் கூற, அதன் பின்னே தான் நகைபாக்கி என்று ஒன்று இருப்பதே ஜார்ஜிற்குத் தெரிய வருகிறது.. இருந்தாலும் “பரவாயில்லை.. நான் எந்த நகைபாக்கியும் கேக்கல..” என அடுத்த வார்த்தை பேசுவதற்குள் புவனேஷ்வரி வந்து சேர்ந்திருந்தாள்.. அதற்கு மேலும் இது பற்றிப் பேச விருப்பமில்லாத ஜார்ஜ் பேச்சை முடித்துக் கொண்டு, “போயிட்டு வாரோம்..” என்று விடை பெற்றான்..

கண்டிப்பு மிக்க நேசமணியே ஜெயாவிற்கு உலகை வெல்லும் நாயகனாகத் தெரியும் பொழுது குடிகாரன் என்ற ஒன்றை தவிர்த்து மகளின் மீது பாசத்தை ஊற்றும் வேலப்பன் புவனேஷ்வரியின் மனதில் உச்சத்தில் இருக்கமாட்டாரா.. ஊரில்படும் அவமானங்களோடு சேர்த்துத் தன்னிடம் கெஞ்சுவது போல நின்றதை அறிந்தால் அவள் மனம் வேதனையுறாதா?? என்ற கேள்வி ஜார்ஜை அப்படியாக நடந்து கொள்ளச் செய்தது..

நகைபாக்கி என்ற சொல் ஜார்ஜினுள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதே.. வசதியான வீட்டு நேசமணிக்கு நல்ல படித்த பெண் என்பதால் சமுத்திரத்தை திருமணம் செய்து வைத்திருக்க, ஐந்து பெண்களோடு பிறந்த சமுத்திரத்திற்கு மட்டும் அதிகமாய் செய்யப் போதுமான பொருட்கள் இல்லை எனலாம்.. இன்று போல அன்றும் நகைப்பாக்கி என்ற குற்றம் சமுத்திரத்தின் பிறந்த வீட்டின் மீது விழுந்தது.. சம்பளம் அதிகமே வாங்கினாலும் இந்தப் பழியில் இருந்து மட்டும் தப்பவே முடியவில்லை..

ஒரு கட்டத்திற்கு மேல் விஷயம் விஷமமாகி நேசமணியின் தாய் அதாவது ஜார்ஜின் பாட்டி, சமுத்திரத்தை வீட்டை விட்டு துரத்தி “வந்தா நகைப்பாக்கியோட வா.. இல்லன்னா அப்பிடியே போயிரு..” என்று எச்சரித்தும் விட்டார்.. அதன் பின் அப்படி இப்படிப் பணம் புரட்டி, வீடு வந்து சேர்ந்தார் சமுத்திரம்.. இது பற்றி எந்தக் கவலையுமின்றி, கலவரத்தில் பங்கு கொள்ளாமல் இருந்த நேசமணி கெட்டவருமில்லை.. கல்நெஞ்சக்காரருமில்லை.. கடிவாளம் கட்டிய குதிரையாவார்.. அவருக்கு விதித்த பாதையில் விரைந்து செல்பவர்..

இந்தக் கதையும் சமுத்திரம் வாயினால் அல்லாமல் பாட்டியின் பெருமை புராணங்களில் இருந்தே தெரிந்து கொண்டான் ஜார்ஜ்.. தனக்கு நேர்ந்த கொடுமையைத் திரும்பச் செய்வதில் சமுத்திரம் நிச்சயம் உடன்படமாட்டார்.. ஆனாலும் அதே நிகழ்வு மீண்டும் தொடர செய்வதில் ஜார்ஜிற்கு அறவே விருப்பமில்லை..

ஆனாலும் இரண்டே நாட்களில் நேசமணி மீண்டும் பழைய பிரச்சனையைக் கிளறத் துவங்கினார்.. முன்னர் முட்டி கொண்டு நின்ற அதே ‘பிரெண்ட்ஸ் கார்ட்’ சச்சரவே தான்.. குடும்பத்தினர் முன் அவமானப்படுத்தியதற்கே கோபித்துக் கொண்ட ஜார்ஜ் மனைவி முன் அவமானம் நிகழ்ந்தால் என்ன செய்வான்?? ம்ம்.. மீண்டும் அப்பாவிடம் கோபத்தில் கத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்..

இங்கே நடக்கும் நிகழ்வுகளுக்குப் பழக்கப்படாத புவனேஷ்வரிதான் சற்று தடுமாறினாள்.. என்னதான் குடிகாரனின் வீட்டில் பிறந்து வளர்ந்தாலும் ஓயாத கூச்சல்களைத்தான் சண்டை என்று எண்ணியிருக்க, உடல் நடுங்கும் அளவிற்குக் கத்தல்களும் சண்டைதான் என்று இன்று புரிந்து கொண்டாள்.. நேசமணியின் ஒவ்வொரு ஓசையான சத்தத்திற்கும் சமையலறையில் இருந்த புவனேஷ்வரியின் உடல் நடுங்க, என்ன நிகழ்கிறதோ என்ற பயத்தில் வெளியே வந்தாள்..

கூடத்தில் நின்று நேசமணி கத்திக் கொண்டிருக்க, வாசலில் ஜார்ஜ் ஆத்திரமாகப் பைக்கை எட்டி உதைத்து கிளம்பிச் சென்று கொண்டிருந்தான்.. நடப்பது என்ன?? என்று யூகிக்கும் முன்னே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.. திருமணத்திற்கு முன் நடந்த எந்தச் சேட்டையையும் அறியாததால் திருதிருவென விழித்துக் கொண்டிருந்த மருமகளின்முன் மேலும் குரலை உயர்த்த விரும்பாத நேசமணி ‘கப்சிப்’ என்று அங்கிருந்து நகர்ந்தார்..

அங்கே அவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க, ஜெயா இயல்பாக ஏதோ ஒரு மப்ளரை பின்னிக் கொண்டிருந்தாள்.. சமுத்திரமும் துரையும்தான் நேசமணியிடம் பொறுமைகாக்குமாறு மன்றாடிக் கொண்டிருந்தனர்.. “புவனா..” என சமுத்திரம் அழைக்க, “அத்த...” என்றாள் பணிவாக.. “நேசமணி வாத்தியாருக்கு இதுதான் வேலை.. அவன் என்னத்தயாவது செஞ்சதும் அதையே பிடிச்சிக்கிட்டு மல்லு கட்டுவாரு.. இவனும் சும்மா கெடக்கதுக்கு இல்லாம ஏதோ பிரெண்ட்ஸ் கார்டு அடிச்சிட்டான்.. அந்தால அவனயே ஒரேடியா வறுக்காரு.. இதுக்கு என்னிக்கு தான் விடிவுகாலம் வரப்போவுதோ தெரியல.. இப்பிடிதான் கலியாணத்துக்கு முன்னாலையும் வையுதாருன்னு எங்கனயோ போய் உக்காந்துக்கிட்டான்.. இவரும் எனக்கென்னன்னு இருந்துட்டாரு.. இவிய சித்தப்பா தான்.. ஊரெல்லாம் தேடி நல்லாத்த சொல்லி கூட்டியாந்தாரு..” என்க, புவனேஷ்வரிக்கு தான் பக்கென்றானது..

ஆனாலும் வந்த இடத்தில் இருக்கும் சூழ்நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற முடிவோடு கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தொடர்ந்தாள்.. அடுத்த நாள் மதியம் ஆகியும் ஜார்ஜ் வீட்டிற்கு வரவில்லை.. மனதிற்குள் பதட்டம் இருப்பினும் எவரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் விழித்தாள்.. நேசமணி எந்தச் சலனமும் இன்றி வழக்கமாக வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருவதுமாக இருந்தாரே தவிர, ஜார்ஜைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை..

இதற்கு அனைத்தும் காரணமான ஜார்ஜோ பெரியம்மா வீட்டில் அமர்ந்து கொண்டிருக்க, அவனை உபசரித்த பெரியம்மா தான் “செல்வன்.. இப்பிடி கல்யாணம் ஆயி ரெண்டே நாளுல வீட்ட வுட்டு வந்து இங்க உக்காந்தன்னா என்ன கணக்கு??” எனக் கேட்டார்.. சமுத்திரம் வீட்டாருக்கு மட்டும் அவன் பொக்கிஷமாகத் தெரிய ‘செல்வன்’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுவது வழக்கம்..

“உங்களுக்குத் தெரியாது பெரியம்மா.. சும்மா இருங்க.. ஆ பூன்னா என்னத்தயாவது பேசி வைதுட்டே கெடக்காரு.. நான் அப்பிடி என்ன தப்புப் பண்ணிட்டேன்.. பிரெண்ட்ஸ் கார்ட் அடிச்சேன்.. நீங்களே சொல்லுங்க.. பிரெண்ட்ஸ் கார்ட்ல எவனாவது தாய், தவப்பன், ஒட்டு உறவுன்னு அத்தனையையும் அடிப்பானா.. குலம் கோத்திரம்னு போடுதது பிடிக்கலன்னுதான் நான் குடுக்கதுக்குத் தனியா அடிச்சேன்.. அது என்னவோ பெரிய குத்தம் மாதிரி அன்னாடு குத்தி குத்தி பேசுனா ஒரு மனுஷனுக்கு ஆத்திரம் வராதா..” எனத் தன்னுடைய வருத்தத்தைக் கூறினான்..

“அதுக்குன்னு இப்பிடியே இருக்கப் போறியா.. உனக்கும் உங்க அப்பாக்கும் என்னிக்கு தான் சண்ட ஓய?? அன்னாடு போடுதது தான.. இங்கன வந்து உக்காந்ததும் எல்லாம் சரியாவ போவுதா.. இல்ல உங்க அப்பாதான் தேடி வரப் போறாரா.. கலியாணம் பண்ணிட்டு வந்தவள அங்கன போட்டுட்டு வாரதுக்கு எதுக்குக் கலியாணம் பண்ணனும்?? பேசாம நீ உன் வீட்டுலயும் அவா அவா வீட்டுலயும் கெடக்க வேண்டியது தான...” என்றவாறே கத்தரிக்காய் வத்தல் பொரித்துக் கொண்டிருந்தார்..

“நாம்லா அங்க போய்ப் பாக்க மாட்டேன்.. செல்வி வரட்டும்.. அங்க என்ன நடக்குன்னு பாத்துட்டு போவோம்..” என்ற ஜார்ஜ் கட்டிலில் சாய, “என்ன?? என்ன பத்தி பேசுன மாதிரி இருந்துது...” என்றபடியே செல்வி வந்தாள்.. “இங்க வா.. நீ என்னயுத.. போயி எங்க வீட்டுல என்ன நடக்குன்னு பாத்துட்டு வா..” என அனுப்பி வைக்க, கிடுகிடுவென வேகமாய்த் தலையாட்டி விட்டு சைக்கிளை கிளப்பிக் கொண்டு காற்றைக் கிழித்துப் பறக்கத் துவங்கினாள்..

ஜார்ஜ் கூறியபடி வீட்டில் என்ன நடக்கிறது என உளவு பார்க்கச் சென்றவள் முதலில் தேடியது சித்தப்பாவை தான்.. இவளை கண்டதும் உடனே யூகித்துக் கொண்டு, “அடே.. ஐயா உங்க வீட்டுல வந்து உக்காந்துருக்காராக்கும்.. அங்க உக்காந்துட்டு இங்க என்ன நடக்குன்னு வேவு பாக்கதுக்குச் சொல்லி வுட்டானாக்கும்..” என்று இவளுக்கும் தாராளமாக வசைமொழிகள் கிடைக்கும்.. ஆதலால் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே உள்ளே நுழைந்த செல்வி; சித்தியை கண்டதும் வந்த வேலையை மறந்து விட்டாள்.. “ய.. சித்தி..” என மதிய உணவிற்குக் காய் வெட்டிக் கொண்டிருந்த சமுத்திரத்தின் அருகில் அமர்ந்து வாயளக்கத் தொடங்கி விட்டாள்.. சமையல் முடிந்து உணவை உண்ட செல்வி ஜெயாவிடம் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டு அப்படியே உறங்கியும் போனாள்..

இவள் வருவாள், வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஜார்ஜ் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய பொறுமையை இழந்து, “சரி.. பெரியம்மா.. நானே வீட்டுக்கு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்..” என சாரத்தை மடக்கி கட்ட, “அதான் செல்வி பாத்துட்டு வாரேம்னுட்டு போனால்ல..” எனக் கேட்டார் பெரியம்மா.. என்ன தான் வாய் போ என்றாலும் மனமோ இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாமே என்று கேட்டது.. “யாரு.. செல்வி.. பாத்துட்டு வருவாளா.. மொதல்ல அவள அனுப்புததுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்.. அவளுக்குச் சித்திய கண்டா போதுமே.. ஒரு வேலையும் ஓடாத..” என்றுவிட்டு வண்டியை கிளப்பினான்..

வீட்டிற்கு வந்து பார்த்தால் அவன் கூறியதை மிஞ்சும் அளவில் வராண்டாவின் கட்டிலில் நிம்மதியாகத் துயில் கொண்டிருந்தாள் செல்வி.. அவனுடைய வரவை கண்ட சமுத்திரம், “பெரியவனே.. வா.. எங்க போன...” என அக்கறையாய் விசாரிக்க, அந்தச் சத்தத்தில் புவனேஷ்வரி எட்டிப் பார்த்தாள்.. சுண்டிப் போன முகத்தில் தற்பொழுது ஆனந்தம் சிறு கீற்றாய் விரிந்து கொண்டிருந்தது..

“ஒருத்தன் வீட்ட வுட்டு போனா என்ன யாதுன்னு தேட போற சோலியே இல்ல.. எனக்கென்னன்னு இருந்திடனும்.. பாத்துட்டு வான்னு சொன்னா வாசல்ல பேன்னு படுத்து தூங்குது..” என்று செல்வியின் தலையில் கொட்டிவிட்டு “சரி.. நான் குளிச்சிட்டு வாரேன்.. சாப்பாடு எடுத்து வைங்கம்மா..” என்று விட்டுக் குளிக்கச் சென்றான் ஜார்ஜ்.. சமுத்திரமும் “புவனா.. சோத்து பானையில இருக்கத வச்சி குடு..” என்று விட்டு தன் வேலைகளில் மூழ்கிப் போனார்.. ஜார்ஜ் குளித்துவிட்டு வந்து அமரவும் சாப்பாட்டைப் பரிமாற, “நீ சாப்பிட்டியா??” எனக் கேட்க, மெல்ல அசைந்தது புவனேஷ்வரியின் சிரசு. “அப்போ சாப்பிட்டது இருக்கட்டும்.. இப்போ சாப்பிடு..” என்று மற்றொரு தட்டினை எடுத்துக் கொடுத்தான்..

“அவா இப்போ தான் சாப்பிட்டா.. அஞ்சு நிமிஷம் கூட ஆவல.. நீ சாப்புடு..” எனப் புவனேஷ்வரியின் தயக்கத்தை அறிந்த சமுத்திரம் அவ்வழியே செல்வது போலக் கூற, “ஆளு சாப்பிடும் போது கூட உக்காந்து சாப்பிட்டா தான சாப்புடுத ஆளுக்கும் திருப்தியா இருக்கும்..” என்று விட்டுத் தட்டைக் காட்டினான்.. புவனேஷ்வரி ஒரு நெகிழ்ச்சியோடு இரண்டு வாய் மட்டும் உண்டு கொண்டாள்..

அடுத்து வந்த நாட்களில் நேசமணி மருமகளுக்கும் என்று ஒரு பங்கை எடுத்து வைக்கத் தொடங்கினார்.. ஜார்ஜின் மீது வருத்தம் இருப்பினும் புதிதாகச் சொத்து வாங்குவது குறித்த ஆலோசனைக்கு அவனிடமே சென்று நின்றார்.. சமுத்திரமும் அவர் காலத்தில் மாமியார் கொடுமை என்றால் என்ன?? என்று ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்ந்ததினால் புவனேஷ்வரியிடம் பெரிய அளவில் தனது அதிகாரத்தைக் காட்ட முனையவில்லை.. துரையின் வயதை ஒத்து, ஒரே வகுப்பில் பயின்ற காரணத்தினாலோ என்னவோ ‘அண்ணி’ என்பதை மாத்திரம் தவிர்த்து ‘நீங்க’ ‘வாங்க’ ‘போங்க’ என்று மரியாதையைக் காண்பித்துக் கொண்டான்.. திருமணமாகாத ஜெயாவை புதுமணத் தம்பதிகளின் அருகேகூட விடுவதில்லை..

சிறுவயதில் இருந்தே ‘காதல்’, ‘புருஷன்-பொண்டாட்டி’ போன்ற வார்த்தைகள் கெட்டவார்த்தை போன்று பாவிக்கப்பட்டுக் குழந்தைகளின் செவியில் விழாமலும் அவர்களின் நாவில் உச்சரியாமலும் கண்டிப்புடன் வளர்த்துவிட்டார் சமுத்திரம்.. கேட்டால், “ஒரு ரோட்டுல கருப்புச் சட்டை போட்டவனும் வெள்ளை சட்டை போட்டவனும் போறானுவன்னு வச்சிக்கோ.. பாதி வேரு எங்கடா இந்த வெள்ளை சட்டை மேல சாக்கடைய அள்ளி எறியலாம்னு சந்தர்ப்பம் பாத்து காத்து கெடப்பானுங்க.. கருப்பு சட்ட போட்டவன் மேல ஒரு கோட்ட கால்வா(ய்) ஒட்டியிருக்கும்.. அத இந்த உலகம் பாக்காது.. வெள்ளை சட்டயில எங்கயாச்சும் ஒரு சொட்டு இல்லன்னா ஒரு புள்ளி மை இருக்கான்னு கவனமா கண்ணுல வெளக்கெண்ணய ஊத்திகிட்டு பாக்கும்.. நம்ம பாதைய நீதியா நாமதான் பாத்துக்கணும்.. வாழ்க்கையில எப்போவும் கடவுளுக்குக் கீழ்படிந்த பிள்ளையாவும் சாமுவேல் மாதிரி புத்திசாலியாவும் தாவீது மாதிரி ஆண்டவரோட இணைந்து வாழனும்..” என்று அறிவுரையைக் கொடுப்பார்..

ஆனால் அந்தத் தாவீது ராஜா தன்னுடைய நீதியினால் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அறியாமல் அதே அரசனின் நாமத்தையே மகனுக்கும் சூட்டியிருந்தார்.. அவருடைய விவேகத்தையும் அறிவையும் அப்படியே கொண்டேயிருந்தான் ஜார்ஜ்..

ஒருநாள், சமுத்திரத்தை தேடி சென்ற ஜெயா, “ம்மா.. எனக்கு ஒரு உதவி பண்ணுங்களேன்..” என்றாள்.. “ம்ம் சொல்லு..” என்ற சமுத்திரம் வேதாகமத்தில் கண்நோக்கமாயிருந்தார்.. “அவங்க இருக்காங்கல்லா...” எனத் தொடங்க, “யாரு??” என்று மூக்கு கண்ணாடியை மேலேற்றினார் சமுத்திரம்.. “அ... அது... அவங்க தான்.. பெரியவன்..” என்று அடுத்த வார்த்தையை மென்று துப்பிக் கொண்டிருக்க, “புவனாவா??” என்று மேலும் அவளைத் தயங்க வைக்காமல் கேட்கவும் மேலும் கீழுமாய்த் தலையசைந்தது..

“அவங்க கையில மருதாணி நல்லா பிடிச்சிருந்தது.. எனக்கும் வச்சுதர சொல்லுங்களேன்..” என்றிட, “நம்ம வீட்டுல நிக்க மருதாணிய பறிச்சு அரைச்சி வச்சா பிடிக்கப் போவுது.. சின்ன நொள்ள மாதிரி அடுத்த ஆட்கள வைக்கச் சொல்லுதது என்னம்மா இருக்கு..” என்ற சமுத்திரத்தின் குரலில் அதிகாரம் தொனித்தது.. “அதில்ல.. நான் வச்சா ஆரஞ்சு கலர்ல தான் பிடிக்கும்.. ஆனா அவங்க நீட்டமா வைக்கது செவப்பா நல்லா திக்கா பிடிக்கு.. அதான்.. கொஞ்சம் சொல்லுங்களேன்..” எனக் கெஞ்சலாகக் கேட்க, மற்றவர்களுக்குத் தேவையை நிறைவேற்றும் அன்னபூரணி, மகளுக்கு மட்டும் மறுப்பாளா என்ன??

உடனே, “புவனா.. புவனா..” என்று அழைக்க, அடுத்த அறையில் துவைத்து காயப்போட்டு எடுத்து வந்த துணியை மடித்துக் கொண்டிருந்த புவனேஷ்வரி வேலையை அப்படியே போட்டு விட்டு வந்தாள்.. “சொல்லுங்க அத்த..” என்று வந்து நிற்க, “நாம ஜெயாளுக்கு மருதாணி வச்சு விடுவியாம்.. நீ வச்சா திக்கா பிடிக்காம்..” என்க, புன்னகையுடன் “வாங்க வச்சு விடுறேன்..” என்றால் புவனேஷ்வரி.. பாதியிலே விட்டு வந்த மீத துணியையும் மடித்துவிட்டு வீட்டு முற்றத்தில் கருவேப்பிலையுடன் நின்ற மருதாணியை ஆயத் தொடங்கினர்.. புவனேஷ்வரியின் வீட்டில் இருப்பதைவிட இது சற்று வித்தியாசமாக இருந்தது.. இடையிடையே கிளைகள் தோன்றி உருவுவதற்குள் இலைகள் சேதமடைந்து கையில் ஆரஞ்சாய் சிவக்கத் தொடங்கியது..

பறித்து வந்ததை அம்மியில் வைத்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்த புவனேஷ்வரியின் அருகிலேயே அமர்ந்து வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் ஜெயா.. “நீங்க சீனி, புளி எல்லாம் வச்சு அரைக்க மாட்டீங்களா?? தண்ணீயே ஊத்தல..” எனச் சந்தேகம் கேட்டுக் கொள்ள, “சீனி புளி வச்சி அரைச்சா எனக்குப் பிடிக்காது.. நெறைய தண்ணி வச்சோம்னா அதுலேயே எல்லாம் போயிரும்...” என்றுவிட்டு சிறிய இடை வளைய தூக்கி அரைத்து கொண்டிருந்தாள்..

கனியம்மாள் வீட்டில் கிடந்த அம்மியை கொடுத்தனுப்ப மறந்து போயிருக்க, சமுத்திரத்தின் அம்மியில் அரைக்க நேர்ந்தது.. அந்தக் காலத்தில் கொத்தியதால் அம்மியே மேடை போல இருக்கக் குழவி தூண் அளவிற்கு இருந்தது.. இரண்டு இழுப்பிலேயே குறுக்கு இரண்டாய் பிளந்து கொள்வது போல இருந்தது..

இதுவே புவனேஷ்வரியின் வீடாய் இருந்திருந்தால், சரியாக நெல்லை பயிர் செய்ததும் ஒரு சாரல் அடிக்கும்.. அந்தத் தூறலில் முற்றத்தில் நிற்கும் மருதாணி சாட்டைச் சாட்டையாக வளர்ந்து நிற்க, ஒற்றைக் கையாலேயே அப்படி ஒரு உருவு உருவி அதற்குக் கீழேயே போடப்பட்டிருக்கும் அம்மியில் வைத்து கடபுடவென்று அரைத்து ஐந்தே நிமிடத்தில் கைகளில் வைத்து விடுவாள்..

நீளமாகக் கூச்சி கூச்சியாக இருக்கும் விரல்களில் தொப்பி மட்டும் போட்டால் எடுப்பாக இருக்காது என்பதால் விரலின் இரண்டாவது ரேகை வரை இழுத்து விடுவாள்.. ரத்தம் குறைந்த வெண்மை உள்ளங்கையில் நடுவில் ஒரு தோசையை வைத்து சுற்றி ஒரு எட்டு முதல் ஒன்பது பருப்பு பருப்பாக ஒட்டி வைத்து விடுவாள்.. அடுத்த அரைமணி நேரத்தில் கழுவி எடுத்தால் அப்படி ஒரு அழகு இருக்கும்.. இதுவே இரண்டு வீடு தள்ளி ஒரு அக்கா நடுவில் கடலை பருப்பை மையத்தில் வைத்து வளையம் வளையமாக நிறம் பிடிக்க, ஊருக்குள் இருவரும் மருதாணிக்கு பெயர் பெற்றவர்கள்..

இதோ, தண்ணீரே இல்லாமல் அரைத்து ஜெயாவின் கையில் அழகாய் வைத்து விட்டு, மீதியை தன் கைகளிலும் வைத்து கொண்டாள்.. இருந்தும் மீதி இருக்க, சமுத்திரம் வேண்டாம் என்று விட்டார்.. புவனேஷ்வரியின் அறிவுரைப்படி ஜெயா நடந்து கொள்ள, அவள் கேட்ட அடர்சிவப்பு கிடைத்தே விட்டது.. உடனே கிளம்பி விட்டாள் ஜெயா.. ஊரில் தனக்குத் தெரிந்த அனைத்துத் தோழிகளிடம் காட்டி பெருமையடித்துக் கொள்ள. மீதி இருந்தவற்றை இடது கையைச் சின்னச் சின்னதாய் உருட்டி வலது கையிலும் வைத்து விட்டாள்.. சிரட்டை நிறைய இன்னும் மீதமிருக்கிறது..

இரவில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெயா குழந்தை போலத் தன் இரு அண்ணன்களிடம் காண்பித்துப் பெருமை கொள்ள, “உனக்குத் தான் இவ்வளோ செவப்பா பிடிக்காதே..” என்று துரை சந்தேகத்தைக் கேட்க, “இது அவங்க வச்சு விட்டது..” என நெளிந்தாள்.. துரை புன்னகைத்துக் கொள்ள, ஜார்ஜிற்கு தினம் தினம் வியப்பை அளித்துக் கொண்டிருந்தாள்.. அவன் பார்க்கும் பழகும் ரத்த சொந்தமில்லாத பெண் அல்லவா.. அவளுடைய ஒவ்வொரு செயலுக்கு ரசிப்பை வெளிப்படையாக வீசி விடாமல் மனதிற்குள்ளே தேக்கி வைத்துக் கொள்கிறான்.. எரிமலையாக வெடிக்கும் காலம் கன்னம் சுருங்கி கால்கள் தள்ளாடும் வயதாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய கணிப்பு..

தூங்குவதற்கு அறைக்கு வரும் பொழுது புவனேஷ்வரி, அமர்ந்து கால் விரலிலும் பாதத்திலும் மருதாணி பூசிக் கொண்டிருக்க மனமோ “இந்நேரம் வீட்டுல இருந்திருந்தா அப்பாவுக்கும் தம்பிக்கும் வச்சி வுட்ருக்கலாமோ??” என யோசித்துக் கொண்டிருக்க, ஒரு கரம் தன்னிச்சையாக நீண்டது.. யோசனையில் இருந்த புவனேஷ்வரியின் இரு கைகளிலும் இருந்த மருதானியின் சிவப்பும் ஓயாது ஓசை எழுப்பும் வளையல்களும் ஜார்ஜின் கவனத்திற்குச் சென்றது.. அவள் விழியின் அசைவில் எண்ணத்தைப் புரிந்து கொண்டு மருதாணி பூசி கொள்ளத் தயாராகி விட்டான்..

அவளின் மெல்லிய கரம் கனத்த விரல்கள் ஒவ்வொன்றாகப் பிடித்து மருதாணி பூசிக் கொண்டிருந்தது.. அப்பொழுது, “நாளைக்கு எங்க சின்னையாட்ட வீட்டுக்கு வாரேன்னு சொல்லிட்டேன்.. போவனும் சரியா.. எங்க அம்மாட்ட மட்டும் சொன்னா போதும்.. அப்பாட்ட வேணாம்.. அதுக்கும் மூஞ்ச தூக்கி வச்சிக்கிடுவாரு..” என்றதும் “சரி.. நான் கெளம்பி நிக்குறேன்..” என்று பொறுப்பான குடும்ப ஸ்திரீயாகக் கூறினாள் புவனேஷ்வரி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

அத்தியாயம்-19

தனக்குத் தெரிந்த வகையில் சமையல் செய்து கொண்டிருந்த புவனேஷ்வரி, “அத்த.. நாளைக்கு வருஷ பிறப்பு வருதுல்லா..” என ஆர்வத்துடன் வினவ, “ஆமா.. அதான் வீட்டை துடைச்சிடலாம்னு பாத்தேன்.. மேல ஸ்லாப்புல கெடந்த குத்து சட்டி, தவலை வேற தூசியா கெடக்கு..” என ஒவ்வொரு பானையாக அடுக்கி கொண்டிருந்தார் சமுத்திரம்.. “நான் வேணா பானைய விளக்கட்டுமா அத்த.. நீங்க வீட்ட கழுவி வுடுங்க..” எனத் துணைபுரிய முனைப்பாக நின்றாள்..

பின் ஆளுக்கு ஒரு வேலையாகச் செய்து கொண்டிருக்க, சமையல் கட்டில் இருந்த பாத்திரங்களைக் கொணர்ந்து போட்ட சமுத்திரம்; மற்றொரு பலகையில் அமர்ந்து சோப்பை தென்னை நாரில் தொட்டு விளக்கத் தொடங்கினார்.. “கொஞ்சம் முன்னக்கட்டி கலியாணம் முடிஞ்சிருந்தா கிறிஸ்மஸுக்கு வந்துருக்கலாம்ன்ன.. சேரி.. வருஷ பிறப்புக்கு கோயிலுக்கு வாரல்ல.. அங்க எப்பிடி?? உங்க ஊருல ஆராதனைக்கு எல்லாம் போவியா??” என அவளைப் பற்றி விசாரிக்க, “இல்ல அத்த.. ராத்திரிக்கு ஆராதனை வைக்கதுனால எங்க அப்பாவுக்குப் பயந்துட்டு போவ முடியாது.. அஞ்சு வருஷ சங்கபணமும் மாமா தான கட்டுனாங்க..” என்றாள் புவனேஷ்வரி..

அவளுடைய மன உறுதியை குறித்துக் கொண்ட சமுத்திரம், “உனக்காவது உங்க அப்பா வுடல.. இருந்தாலும் வைராக்கியமா இருந்து வந்துருக்க.. நாம்லா வந்த புதுசுல இவிய வீட்டுல பண்டிக கொண்டாடுத லட்சணத்துல அசந்தே போயிட்டேன்..” எனக் கூறவும், “அப்படியா அத்த” கதை கேட்க ஆர்வமானாள் புவனேஷ்வரி.. உடனே காலை நீட்டி, சேலையைப் பொதிந்து கொண்ட சமுத்திரம், “நான் கல்யாணம் ஆயி வந்த புதுசு கேட்டுக்கோ.. எங்க மாமியார் வீட்டுலதான் ஒண்ணா இருந்தோம்.. அதுக்குப் பெறவு தான் தனியா வந்தோம்னு வையேன்.. கிறிஸ்மஸ் பண்டிகை.. காலையில எந்திரிச்சு புதுச போட்டுக்கிட்டு இட்லி சாப்புட்டுட்டு மதியம் கறி எடுத்து சாப்புட்டா அவிய பண்டியல் முடிஞ்சிது.. அவ்வளோ தான்..” என உதட்டை வளைத்து, “நாந்தான்.. ராத்திரி எந்திரிச்சுக் கெடைக்கச் சேலைய சுத்திக்கிட்டு ஒரு பைபிள கையில பிடிச்சிட்டு கோயிலுக்கு முதல் மணிக்கே போய்ட்டு வருவேன்.. எல்லாரும் ‘யம்மா.. அப்பாத்துரை மருமொவளா நீயு?? உங்க வீட்டுல யாரும் வரமாட்டாவள’ன்னு கேப்பாவ.. இப்பிடி நானா கோயிலுக்குப் போவ ஆரம்பிச்சதும் துணைக்கு உங்க சின்ன மாமாவ அனுப்பி வைப்பாவ.. அந்தப் பயலும் நாலு அடிக்கு தள்ளியே நடந்து வந்து கோயிலுக்குள்ள காலு படாம ஓடிரனும்.. இப்பிடி கொஞ்சம் கொஞ்சமா தான் கோயிலுக்குப் போயி என் காலத்துக்குப் பெறவு இந்த மூணு பிள்ளையளயும் ஞாயித்துக் கிழமை ஆனதும் ஆராதனைக்கு ஒடுங்கலேன்னு வளத்துருக்கேன்.. அதுலயும் பெரியவன் நல்ல பக்திமான்.. ஒருத்தனாவே ஆராதனையும் நடத்தி பிரசங்கமும் பண்ணிப்புடுவான்.. அவன் பிரசங்கம் அவ்ளோ அருமையா இருக்கும்..” என்றார் சமுத்திரம்..

“அப்போ மாமா வரலியா அத்த..” எனக் கதையை ஆர்வமாகக் கவனித்த புவனேஷ்வரி வினவ, “ம்க்கும்.. அவரு இங்க தான் நாட்டாமை பண்ணிக்கிட்டு திரிவாரு.. மழைக்குக் கூடக் கோயில் பக்கம் ஒதுங்க மாட்டாரு.. என்னனியோ கல்யாணத்தன்னிக்கி வந்துட்டாரு.. பெரிய சண்டியரு கணக்கா பேசுவாரு.. ஒரு வசனம் கேளு, தத்தைக்கா பித்தைக்கான்னு உளறுவாரு..” எனக் கூற கிளுக்கி சிரித்துக் கொண்டனர் பெண்கள் இருவரும்..

பேச்சு வழக்கத்தில் பாத்திரங்கள் தேய்த்து அடுக்கி கொண்டேயிருக்க, புளியும் செங்கட்டியும் வைத்து வெண்கல பாத்திரத்தை வெளுக்க வைத்திருந்தனர்.. பேச்சு அடுத்தத் தெரு வரை நீண்டு கொண்டிருக்க, ஜெயா பசியோடு வந்து சேர்ந்தாள்.. “நீங்க போங்கத்த.. நான் விளக்கிக்கிடுதேன்..” எனப் புவனேஷ்வரி பொறுப்பை எடுத்துக் கொள்ள, “அவா வச்சு சாப்புடுவா.. பிரெண்ட்ஸ் வீட்டுல நின்னு வளமைதான நீட்டிட்டு வந்துருப்பா.. குடு.. நானும் விளக்குதேன்..” என மறுத்தார் சமுத்திரம்.. “நான் பாத்துகிடுதேன்த்த.. நீங்க போங்க.. அண்ணி பசியில வந்து நிக்காங்களன்ன..” என்ற புவனேஷ்வரிக்கு உறவு முறை பிடிபடவில்லையா இல்லை வயது பிடிபடவில்லையா என்று தெரியவில்லை..

பேச்சு வழக்கில் எப்பொழுதோ ஜார்ஜ், “எங்க அக்கா..” என உரைத்திருக்க, குழம்பியிருக்கலாம்.. அந்த ‘எங்க அக்கா’ என்ற வார்த்தை சில நேரங்களில் பக்குவப்பட்ட பாட்டி போலப் பேசுவதால் கடுப்பிலும் பல நேரங்களில் கேலிக்காகவும் பயன்படுத்தப்பட, சமுத்திரமும் ‘உன் உடன்பிறந்தா கிட்ட விட்டு குடுத்து போனா என்னவாம்..” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் துரையைத் திட்டியிருந்தார்.. அதில் தான் புவனேஷ்வரி ‘எதுக்கு வம்பு’ என்று மரியாதையைக் கொடுத்தாள்..

“ஐயோ.. நான் அண்ணி இல்லை.. உங்களுக்கு நாத்தனார்தான் வரும்.. நீங்க தான் எனக்கு அண்ணி..” என ஜெயா நகைப்போடு கூற, “நீ ஒழுங்கா அண்ணின்னு சொல்லிருந்தா அவா ஏன் இப்பிடி உழப்ப போறா..” என்றபடியே மகளை அழைத்துச் சென்றார் சமுத்திரம். தன்னுடைய அறியாமையை எண்ணி நாக்கை கடித்துக் கொண்ட புவனேஷ்வரி பணியைத் தொடர்ந்தாள்..

வழக்கமான பாத்திரத்திற்கு மத்தியில் கழுத்து வரை கரி பிடித்திருந்த பானையைக் கண்டதும் தாயின் நினைவு வந்தது.. “இப்பிடி கவுத்தி போட்டு தூருல முதல்ல அழுத்தி தேய்ச்சிட்டு மேலயும் நாரை வச்சு அழுத்தி விளக்கனும்.. அப்போ தான் நிறம் வரும்..” என்ற கனியம்மாளின் அறிவுரையைப் பின்பற்றிக் கழுவிய புவனேஷ்வரி டப்பில் போட்டு அலசும் போது தான் கவனிக்கிறாள்.. தூரில் பொத்தல் விழுந்து ஒழுகிக் கொண்டிருந்தது..

கனியம்மாள் கூறியது அன்று பிடித்த கரியைப் போக்கும் வழிமுறை.. இவள் பிரயோகம் செய்தது பல நாட்களாகப் பானையோடு ஒன்றிப் போன கரியை நீக்குவதற்காக.. இவள் தேய்த்ததில் கரியோடு செய்தது பானையும் கையோடு வந்திருந்தது.. அப்பொழுது வெளியே வந்த சமுத்திரம், “யம்மாடி.. இது சோத்து பானைலா.. இத போய் ஓட்டயாக்கிட்டியே...” என அதிர்ச்சி கலந்த வருத்தத்தில் கூற, புவனேஷ்வரிக்கு இதயமே இடிந்து விழுந்தது.. தவறு செய்து விட்டோமே என்று பரிதவிப்பை முகபாவமாகக் காண்பித்த புவனேஷ்வரி “எப்பவும் போலத் தான் விளக்குனேன் த்த..” என மெல்லிய குரலில் கூற, “உங்க வீட்டுல வேற.. இங்க வேற.. இப்பிடி ஒட்டயாய் போச்சு பாரு.. சொட்டிருந்தா கூட நெளிச்சு எடுத்துப்புடலாம்.. ஈயம் ஓட்ட வாரவன் வேற அடுத்த வாரம்தான வருவான்.. அது வரைக்கி எதுல சோத்த பொங்குவேன்..” எனச் சமுத்திரம் அங்கலாய்க்க தொடங்கினார்..

ஈயம் தேய்க்க வருபவன் மாதத்தில் ஒருமுறையே வருகை தர, ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஓட்டையான ஈயப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்துவிடுவர்.. ஈயம் அடிக்க வாய்ப்பில்லாத பாத்திரங்களை அவனிடமே கொடுத்து விட்டு அதற்குப் பதில் அவனிடமே புதிய பானை ஒன்றையும் வாங்கிக் கொள்ளுவர்.. வாய்ப்பிருக்கும் பானைகளின் ஓட்டைகளிலும் துளைகளிலும் ஈயத்தை வைத்து சுத்தியலால் அடித்து அடைத்து விடுவான்..

இப்பொழுது பிரச்சனை சமுத்திரம் தன்மீது வருத்தம் கொண்டது அல்ல.. ஒரு வாரத்திற்கு எந்தப் பானையில் சோறு பொங்குவது என்ற கேள்வியே பூதாகரமாக எழுந்து நின்றது.. விறகடுப்பில் தான் பொங்குவது என்பதால் ஒரு வாரத்திற்கு மட்டும் மண்பானையில் சமைப்பதற்குச் சமுத்திரம் ஒப்புக் கொள்ள, அதே ஊரில் பாத்திரக் கடை வைத்திருந்த புவனேஷ்வரியின் ஊர்க்காரரிடத்தில் குறைந்த விலைக்கு ஒரு மண்பானை வாங்கிக் கொண்டனர்..

“இப்போ சரியா போச்சு தாயி.. அதுக்காகப் பாத்திரத்த அழுத்தி தேய்க்கலாம்னு இருக்காத.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. பாத்து பக்குவமா விளக்கனும்..” என சமுத்திரம் அறிவுரை வழங்க, சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.. அழகாய் பிடித்து, சூளையில் வெப்பமூட்டிய பின் ஒரு கட்டையால் அடித்துப் பார்க்கும் பொழுது அடிகளை வாங்கிய பின்னும் கீறல் விழாத மட்பாண்டங்களே தகுதி பெறும் என்பது போல சிற்சில அடிகள் விழத்தான் செய்யும் என்று கடந்தாள் புவனேஷ்வரி..

அன்று மாலை, ஜார்ஜ் அவளைச் சித்தப்பா வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அது அவர்களுடைய பரம்பரை வீடு.. நேசமணி தனியே வந்ததிற்குப் பிறகு சித்தப்பாதான் பழைய வீட்டில் தந்தையோடு வசிக்கிறார்.. சொந்த வீடு என்பதால் சுற்றிலும் சொந்தக்காரர்கள் சொக்காரர்கள் என்றிருக்க, ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்குவதற்குள் குறுக்கே ஒடிந்து விடுவது போல இருந்தது.. அனைவரிடமும் இயல்பாகப் பேசி எளிதில் பழகிய புவனேஷ்வரியை அனைவருக்கும் பிடித்துவிட, வீட்டின் முன்னே வட்டமாக அமர்ந்து வளமை நீட்டத் தொடங்கினர்..

“உங்க அத்த சோமாருக்காவளா.. உங்க மாமா இன்னும் பேசாம தான் முறுக்கிட்டு அலையுதாரா என்ன??” என விசாரிக்க, “அத்த நல்லா இருக்காங்க.. மாமா பேசுவாங்களே..” என்றவளை அப்பாவியெனப் பார்த்தனர் மங்கையினர்.. “உனக்கு விஷயமே தெரியாதா ப்ளே...” எனக் கனமணி அத்தை தான் தொடங்கினார்.. “உன் மாமனாருக்கும் மாமியாருக்கும் நடுவுல பேச்சு வார்த்தையே கெடையாது.. இப்போ இல்ல.. மொத காலத்துலேருந்து அப்படித் தான்.. என்ன முழிக்க.. ஒரே வீட்டுலதான் இருக்காவ.. ஆனா பேச்சே கெடயாது.. இங்கயும் சமுத்திரம் மட்டும் வந்துட்டு போயிட்டு இருந்தா.. பெறவு வாத்தியார் என்ன சொன்னாரோ தெரியல.. போக்குவரத்தே இல்லாம போயிட்டு.. ஜார்ஜ் மட்டும் தான் வந்துட்டு போவான்..” எனக் கூற, பக்கத்திலிருந்த மற்றொரு அத்தை, “எப்பிடியோ மூணு பிள்ளையையும் பெத்து வளத்து ஆளாக்கிட்டாவ... நாங்கல்லாம் ஆச்சரியமா பாப்போம்.. என்னனி தான் இந்த மனுஷ்ன்ட்ட இருந்து மூணு பிள்ளையையும் பெத்து எடுத்தாவளோன்னு.. எதுத்தால கண்டா கூடச் சத்தம் குடுக்க மாட்டாரு வாத்தியார்..” என்றார்..

இது அனைத்தையும் கேட்கும் புவனேஷ்வரிக்கு ஆச்சரியமாக இருந்தது.. நேசமணிக்கு இப்படி ஒரு பக்கம் இருக்குமா என்று.. அதற்குள் ஜார்ஜ் உள்ளே கூப்பிட, மரத்தாலான சாய்வு நாற்காலியில் தொட்டில் போன்று தொங்கவிடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் அப்பாத்துரை.. அணிந்திருந்த மூக்கு கண்ணாடியினுள் புதைந்து கிடந்த கண்களைக் குறுக்கி கொண்டு புவனேஷ்வரியின் அடையாளத்தைக் கண்டுகொண்டார்.. “உக்காரும்மா..” எனக் கூற அவசரமாகச் சித்திதான் ஒரு நாற்காலியை எடுத்து போட்டார்..

அதற்கு முன் பழக்கதோஷத்தில் சுவரோரமாய் அமர்ந்திருந்த தன் பதியின் அருகே அடக்கமாக அமர்ந்து, “பரவால்ல த்த..” என்றாள்.. இருவரிடமும் நலம் விசாரித்து ஒவ்வொன்றாகப் பேசி கொண்டிருக்க, நேரம் சென்றதே தெரியாமல் போனது.. பின் விடைபெற்றுக் கொள்ள எழுந்த இருவரையும் அருகே அழைத்துத் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்த அப்பாதுரை மனைவியைத் தவிர வேறெதையும் பொருட்டாகக் கொள்ளாதவர்.. நெற்றியில் எண்ணெயால் அடையாளமிட்டு வேதாகமத்தின் நடுவே இருந்த சில பத்து ரூபாய் தாள்களைத் திணித்தார்.. முதலில் வேண்டாமென்று மறுத்தாலும் அவரின் ஆசையை மறுதலிக்க விரும்பாமல் பெற்று கொண்டனர்..

சோர்வாக வீடு திரும்பிய இருவருக்கும் திண்ணையில் அமர்ந்து காபி ஆற்றிக் கொண்டிருந்தார் சமுத்திரம்.. நல்ல வேளையாக நேசமணி வருவதற்கு முன்னமே சென்று வந்தாகி விட்டது.. காபியோடு சுண்டலை வறுத்து உப்புத் தண்ணீர் தெளித்து வைத்திருந்த சமுத்திரம், “எல்லாரையும் பாத்தியளா??” என விசாரிக்க “ம்ம்.. பாத்தாச்சு ம்மா..” என்று அமர்ந்த ஜார்ஜ் காபியை குடிக்கத் தொடங்கினான்..

“நீ காப்பிக் குடிக்கலயா?? அங்க ஏதும் கைநனைக்கலல்லா??” எனப் படபடப்புடன் கேட்க, “அங்க அந்த அத்த காப்பியும் முறுக்கும் தந்தாவ.. வேண்டாம்னா நல்லா இருக்காதன்னு குடிச்சேன்..” எனப் புவனேஷ்வரி புரியாமல் பொடுபொடுவென உண்மையைக் கூறினாள்.. “யார சொல்லுதா பெரியவன்.. அவள்ட்டயா வாங்கிக் குடிச்சா??” என ஜார்ஜை நோக்க, ஆமென்றான்.. “யம்மா.. கெடுத்துபுட்டாள.. அவா கன்னிசாமி வச்சிலாம் கும்புடுவால.. செய்வினை, பில்லி சூனியமுன்னுட்டு கரி வேலைலாம் பாக்கதுல கெட்டிக்காரி.. முதல்ல உங்கள அங்க விட்டுருக்கக் கூடாது.. பெரிய தப்புல்லா பண்ணிப்புட்டேன்.. காப்பில என்னத்தலாம் கலந்து குடுத்தான்னு தெரியலையே.. கடவுளே.. இப்போ நான் என்ன பண்ணட்டும்..” என அங்கலாய்க்க தொடங்கினார் சமுத்திரம்..

உடனே ஜார்ஜ் தான், “ம்மா.. நீங்களும் பயப்பட்டு அவளையும் பயப்பட வைக்காதீங்க.. பாருங்க.. நல்லா பயந்துட்டா.. சும்மா செய்வினை, பில்லி சூனியம்னு ஆட்கள பயமுறுத்திக்கிட்டு.. போய் எண்ணெய் கொண்டாந்து ஜோம் (ஜெபம்) பண்ணி சிலுவை போட்டு வுடுங்க..” என அனுப்பி விட்டான்.. “அது சும்மா ஊருக்குள்ள ஒரு புரளியா கெளம்பிட்டு இருக்கு..” என்ற பின்னரே சற்று ஆசுவாசமானாள் புவனேஷ்வரி.. இது போன்ற கதைகள் மனபலவீனத்தைத் தோற்றுவிக்கும் என்று என்றோ ஒருநாள் மனோதத்துவப் புத்தகத்தில் படித்ததாக நினைவு..

ஜெபஎண்ணெயுடன் வெளியே வந்த சமுத்திரம் அதரங்களில் ஜெபம் முனங்கி கொண்டே இருவருக்கும் நெற்றியில் போட்டுவிட்டு தனக்குள்ளே ஜெபித்தபடியே உள்ளே சென்றார்.. உடனே ஜார்ஜின் அருகே இழுத்து அமர்ந்த புவனேஷ்வரி முட்டிமடக்கி கைளால் அணைகட்டியபடியே, “ஏப்பா, அத்த சொல்லுத மாதிரி அந்த அத்த அப்பிடியா??” எனச் சந்தேகம் கேட்டவளின் குரல் இன்னும் பயத்தைத் தழுவியே இருந்தது..

“இவங்கலாம் சொல்லுத மாதிரி மந்திரம் எல்லாம் போடுதது இல்ல.. எங்க சித்திக்கு ஒரு பொம்பள பிள்ள பெறந்து வளந்ததுக்கு அப்புறம் காலரால செத்து போச்சு.. அந்தப் பிள்ளைக்கு வருஷா வருஷம் படையல் போட்டு அடிக்கடி கன்னி சாமியா கும்பிடுவாவ.. உடனே ஊருக்குள்ளே புரளியா வந்துட்டு..” எனக் கதையைக் கூற, கண் தட்டாமல் கேட்டு கொண்டிருந்தவள், “இப்பிடி தான்ப்பா.. எங்க சின்னத் தாத்தா இருந்தாரு.. செத்ததுக்குப் பெறவும் அவரு அங்க இங்கனு ராத்திரிக்கு உலவுவாருன்னு ஊருல சொன்னான்வ.. எங்க வீட்டுல யாரும் நம்பலயே.. பெறவு ஒரு நாலு.. ஆடி அமாவாசைக்குன்னு நினைக்கேன்.. அமாவாசைக்கு எங்கனயாவது களவாண்டா ஆயுசுக்கும் அகப்பட மாட்டான்னு சொல்லுவாவ.. அன்னிக்கு என்ன பண்ணிருக்கான்.. வீட்டுல களவாண்டா மாட்டிக்கிடுவோம்னு தென்னந்தோப்புக்கு போயிருக்கான்.. முன்னாடி சின்ன மரத்துல ஏறி பொடுபொடுன்னு காயப் பறிச்சுப் போட்டுட்டானாம்.. இறங்கலாம்னு கீழ வந்தா முடியலயாம்.. பெறவு என்ன செஞ்சிருக்கான்.. விடியுறது வரைக்கும் மேலேயே உக்காந்துட்டு விடிஞ்சதும் அந்த வழியா போன ஒரு ஆளு சொன்னதக் கேட்டு ‘ஏ தாத்தோய். தெரியாம பண்ணிப்புட்டேன்.. வுட்ருன்னு கெஞ்சிருக்கான்.. உடனே கீழ இறங்கி ஓடியே போயிட்டானாம்.. அதுக்குப் பெறவுதான் எங்களுக்கே தெரியும்.. எங்க சின்னத் தாத்தா நடமாடுதாருன்னு.. அந்தத் தோப்பு வழியா போற யாரையும் விடாம தொல்ல பண்ணுவாராம்.. ‘ஏ சின்னதாத்தா.. நாந்தான்..’னு அடையாளம் சொல்லிட்டா வுட்ருவாராம்..” எனச் சின்னப் பிள்ளை போலக் கதை கூறிக் கொண்டிருந்தாள்..

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கதையாக விருப்பம் போலப் பேசி கொண்டே செல்ல, இருவருக்கும் நடுவில் இருந்த தயக்கம் என்ற ரேகை மெல்ல அழியத் துவங்கியிருந்தது.. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டேயிருக்க, ஒருநாள் நேசமணியும் சித்தப்பாவும் சேர்ந்து வீட்டிற்கு வந்தனர்.. மொத்த குடும்பத்திற்கும் எந்த ஆச்சரியமும் இல்லை.. ஏன் சின்ன அலட்டல்கூட இல்லை.. ஏனெனில் நேசமணி எப்பொழுது யாருடன் சண்டை போடுவார்?? எப்பொழுது பேசுவார்?? என்பதெல்லாம் அவருக்கே தெரியாத நிலையில் ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விழி விரித்துச் சோர்வானேன்?? என்று பழகி விட்டிருந்தனர்..

இப்பொழுதெல்லாம் நேசமணி வாங்கிய இடங்களை விற்கத் தொடங்கியிருந்தார்.. ஏன்?? என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதிலும் வரப்போவதுமில்லை, ‘வேண்டாம்’ என்றால் நிறுத்தபோவதுமில்லை என்பதால் ஜார்ஜே இதிலெல்லாம் தலையிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொண்டான்.. அன்றும் அப்படித் தான்.. அண்ணனும் தம்பியும் அமர்ந்து ஒரு இடத்தை விற்பது குறித்து ஆலோசனை பண்ணிக் கொண்டிருந்தனர்.. தண்ணீர் கொடுக்க வந்த புவனேஷ்வரியின் காதில் இந்த உரையாடல் விழ, “மாமா.. இப்பிடி பேசுதேனேன்னு நினைச்சிக்காதீய.. இப்போ விக்கப் போற இடத்த நானும் பாத்துருக்கேன்.. நல்ல எடம்.. மண்ணு அப்பிடி இருக்கு.. போட்டத விட ரெண்டு மடங்கு எடுக்கலாம் லாபம்.. விக்கதாவே இருந்தாலும் கொஞ்ச நாளுக்குத் தள்ளி போடலாமே.. இவ்ளோ குறைஞ்ச விலைக்கு அப்பிடி நல்ல எடத்தைக் குடுக்கண்டாம் மாமா..” எனத் தன்னுடைய கருத்தை கூற, நேசமணி ‘உம்’கொட்ட, சித்தப்பாவோ எதுவுமே பேசவில்லை..

புவனேஷ்வரி தற்பொழுது புகுந்த வீட்டோடு நன்கு பொருந்தி போய்விட்டாள் என்பதால் நேசமணியிடம் நினைப்பதை அப்படியே பேசி விடுகிறாள்.. அவரும் மருமகளை எங்குக் கடிந்து கொள்வது என்று நிதானிக்க, இந்த நிலைக்கு வந்திருந்தது.. ஜார்ஜும், “நானே எங்கப்பாவ பேச பயப்படுவேன்.. நீ தைரியமா பேசிட்டியே..” என மறைமுகமாகப் பாராட்ட, “நீங்களே சொல்லுங்கப்பா.. அவ்ளோ நல்ல இடத்தை வெறும் நாலாயிரத்துக்குக் குடுக்கணுமா??” என்றாள் தன் கருத்தில் இருந்து விலகாது.. எவ்வளவு சொன்னாலும் கேட்கப்போவது இல்லை என்பதால் ஜார்ஜால் புன்னகைத்து மட்டுமே கடக்க முடிந்தது..

அடுத்த நாளே எவருக்கும் தெரியாது விற்றதோடு மட்டுமல்லாமல் புவனேஷ்வரியிடம் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் நடந்தார் நேசமணி.. அவருக்கு இவள்மேல் கோபம் என்றால் இவளுக்கு அவர்மேல் வருத்தம்.. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மருமகளோடு பேச்சை அறவே நிறுத்திக் கொண்ட நேசமணி, தேவையான பொருட்களில் குறையே வைக்கவில்லை.

ஆனாலும் ஜார்ஜின் மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் அரித்துக் கொண்டேயிருக்க, சமுத்திரத்திடம் சென்று முறையிட்டான்.. “அம்மா... எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும் போது என்ன சொல்லி பேசி முடிச்சீங்க?? டீச்சர் ட்ரைனிங் முடிச்சிருக்கா.. கல்யாணத்துக்குப் பெறவு வேலை வாங்கித் தர்றேன்னு சொன்னியளா இல்லையா??ஆறுமாசம் ஆவுது.. இன்னமும் வீட்டுல உக்காந்துதான் சாப்புடுதோம்...” எனக் கேட்க, “ஆமா பெரியவன்.. உங்க அப்பா தான சொன்னாரு.. அவருட்ட போய்க் கேளு..” என்ற சமுத்திரம் கேள்வியைத் தட்டிக் கழிக்கவே நினைத்தார்.. இக்கட்டான கேள்விக்குப் பதிலளிக்கும் திண்மம் அவருக்கு இல்லையே..

“அவருட்ட நான் என்னத்த போட்டு கேக்க.. நான் பேச ஆரம்பிக்கதுக்குள்ள அவரு பாட்டுக்கு உச்சாண்டி கொம்புக்கு எறிருதாரு.. நீங்களே கேட்டு சொல்லுங்க.. எத்தன நாளைக்குத் தான் சும்மாவே உக்காந்து உங்க உழைப்புல சாப்புட..” என்று அனுதினமும் தாய்க்கும் மகனுக்குமாய் வாக்குவாதம் வளர்ந்து கொண்டே சென்றது.. வழக்கமாகத் தனக்குத் தேவையானவைகளைத் தாய் மூலமாக நேசமணியின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஜார்ஜ் இம்முறையும் அதே வியூகத்தையே பிரயோகித்தான்..

ஒரு கட்டத்திற்கு மேல் ஜார்ஜின் கேள்விகளைத் தாங்காமல், காலையில் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த நேசமணியிடம் சென்று, “இந்த.. கல்யாணத்துக்கு முன்னால என்ன சொல்லி கூட்டிட்டு வந்தீங்க.. அந்தப் பிள்ளையளுக்கு ஒரு வேலைய வாங்கிக் குடுக்கப்பிடாதா..” என லேசாகக் காதில் போட்டு வைக்க, அதுவோ குண்டாக வெடித்தது..

“உன் பெரிய மொவன் கேட்டானோ... எங்க அவன்?? உன்ன அனுப்பி வுட்டுட்டு பின்னாடி நிக்கானோ?? வேலை வாங்கிக் குடுக்கணுமாம்ல.. வேலை.. ஐயா என்ன படிச்சு கிழிச்சிட்டாரு.. காலேஜுக்கு அனுப்புனா ஒழுங்கா போவாம ஒப்பி அடிச்சிட்டு அலைஞ்சா எந்த மொன்ன பய வேலை குடுப்பான்.. வேலைய கையில வச்சு கிலுக்கிட்டா அலையுதேன்...” எனச் சரமாரியாக வசைபாட, ஜார்ஜிற்குக் கோபம் அனல் தெறித்தது..

“இப்போ யாரும் எனக்கு வேலை வாங்கித் தர சொல்லல.. கல்யாணம் கட்டி குடும்பமா ஆனதுக்குப் பெறவும் இன்னொருத்தர் கைய நம்பிட்டு நிக்கக் கூடாதேன்னு தான் கேட்டேன்.. நான் என்ன தப்பாவா கேட்டேன்.. நீங்கதான என் பொண்டாட்டிக்கு வேலை வாங்கிக் குடுக்கேன்னு பேசி முடிச்சீங்க.. கல்யாணம் ஆயி மாசக்கணக்கா ஆவுது.. ஒரு மனுஷன் கேப்பானா மாட்டானா??” என்று வந்து நின்றான் ஜார்ஜ்..

அவ்வளவு தான் தகப்பனுக்கும் மகனுக்கும் நடுவே இத்தனை நாட்களாய் நிகழ்ந்து கொண்டிருந்த பனிப்போர் தற்பொழுது வெட்ட வெளிக்கு வந்து விட்டது.. நேருக்கு நேர் நின்று பேசும் இருவரும் ‘விடாக்கொண்டனும் கடாக்கொண்டனும்’.. இதில் யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்று தெரியாமல், “பெரியவனே.. அதான் நான் பேசிட்டு இருக்கேம்லா.. நீ ஏன் குறுக்கால வார..” என அமைதிப்படுத்த முயல, “கிழிச்சீய...” என்ற ஜார்ஜ் தன்னிலையிலேயே இல்லை..

“ஒ.. அவ்ளோ ரோசம் வருதோ.. அப்பிடி வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தா வீட்ட விட்டு போ...” என்ற நேசமணி அங்கிருந்த வெண்கல தவலையை உதைக்க, கோபத்தின் உச்சியில் இருந்த ஜார்ஜ், வேகமாக வீட்டிற்குள் சென்று சூட்கேஸ் ஒன்றை விரித்துத் தன்னுடைய சான்றிதழ்களையும் சில சட்டை பேண்டுகளையும் அள்ளி வைத்தான்.. “பெரியவன்.. அம்மா சொல்லுதத கேளு.. ஆத்துரத்துல மடத்தனம் பண்ணாத..” எனக் கெஞ்சிய சமுத்திரத்தின் பேச்சு செவிடனின் காதில் ஊதிய சங்கு போலானது..

அறையின் ஓரத்தில் கண்ணீர் வழிந்த அப்பாவி கண்களுக்குச் சொந்தக்காரி புவனேஷ்வரியை, “நீயும் எடுத்து வை...” எனக் கூற, சொன்னபடியே செய்தாள்.. கண்டபடி பேசிய கணவனுக்கும் கோபத்தில் முறுக்கி கொண்டு நின்ற மகனுக்கும் நடுவே ஒரு பாசப்போராட்டத்தில் சிக்கிக் கொண்டது சமுத்திரம் தான்.. புவனேஷ்வரியோ கட்டிய கணவன் காட்டிய வழியில் நடக்கத் துவங்கினாள்.. இதோ வீட்டின் மூத்த மகனும் மருமகளும் வீட்டைவிட்டு துரத்தப்பட்டனர், வெளியேறினர் என்று பார்ப்பவர்களின் கண்களுக்கு எப்படி வேண்டுமானாலும் புலப்படலாம்..

நடுவீட்டில் சிந்திக் கிடந்த தண்ணீரை கண்ணீரோடு துடைத்துக் கொண்டிருந்த சமுத்திரம் அவ்வப்போது சேலை தலைப்பில் மூக்கை சீந்திக் கொண்டார்.. கைகளில் பெட்டியோடும் செல்ல இடமில்லாமலும் நான்கு மாதமான கர்ப்பிணி மனைவியுடன் சாலையில் நடந்து கொண்டிருக்கிறான் ஜார்ஜ்.. மனம் முழுக்க ரணம்.. தெரிந்தவர்களின் வீட்டில் சென்று உதவி என்றோ அடைக்கலம் என்றோ நிற்க தன்மானம் ஒப்புக்கொள்ளவில்லை.. அடைக்கலம் என்று தேடி வந்தவர்களுக்குத் தயங்காமல் தங்கி தாபரிக்க வீடும் உண்ண உணவும் உடமையும் கொடுத்து உதவிய குடும்பத்தின் வாரிசும் வருங்கால வாரிசும் வீதியில் வலம் வந்து கொண்டிருக்கிறது..

தனியே வந்திருந்தால் கூட வருத்தம் கொஞ்சமாய் இருந்திருக்கும்.. ஊர்காட்டில் எங்கேயோ படுத்து எழும்பி விட்டுச் செல்லலாம்.. கூடவே மனைவி.. மாசமான மனைவி.. அவளுக்கான அடிப்படை வசதியைக் கூட நிறைவேற்ற முடியாமல் போனதே.. கொஞ்சமாய்ப் பொறுமை காத்திருக்கலாம் என்று ஒரு மனம் கடிந்து கொண்டாலும் நாளையே குழந்தை குட்டி என்றாகி விட்டால் சம்பாத்தியம் என்று ஒன்று வேண்டுமே.. தங்களுக்குப் பிறந்த பாவத்திற்கு அவர்களும் இதே கொடுமையை அனுபவிக்க வேண்டுமே.. இப்பொழுதே கேட்டது தான் சரி என்று தொலைநோக்குப் பார்வை எடை போட்டது..
 
Status
Not open for further replies.
Top Bottom