Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மாறிலி மானிடர்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-20

புவனேஷ்வரிதான் பயங்கரமான நம்பிக்கையுடன் நடந்தாள்.. தன்னுடைய தேவைகள் அறிந்து பூர்த்திச் செய்யும் கணவன் இம்முறை கைவிட்டு விடுவானா என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்குள் ஊன்றியிருந்தது.. பிறந்த இடத்தில் தனக்கான ஒவ்வொன்றையும் தானே தேடி அடையும் புவனேஷ்வரியை புகுந்த வீட்டில் பாதுகாப்பாக ஒவ்வொரு இடங்களுக்கும் கூட்டிச் செல்லும் ஜார்ஜ் மீது நம்பிக்கை இல்லாமலா?? ஆனாலும் கவலையினால் துவண்டு போன ஜார்ஜின் முகத்தைக் காணும் பொழுதுதான் சங்கடமாக இருந்தது..

இருப்பினும் அதனைத் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு, “முதல்ல தங்குததுக்கு ஒரு எடம் பாப்போம் ப்பா.. எனக்குப் பீடி சுத்த தெரியும்.. உங்களுக்கும் வேலை பாக்க தெரியும்.. கவர்மென்ட் வேலை இருந்தா தான் வேலையாச்சா?? காலத்த ஓட்ட கடவுள் இருக்க மாட்டாரா..” என்றவளின் நம்பிக்கையான வார்த்தை அவனுக்குள் ஒரு அசட்டுத் தைரியத்தை விதைத்தது..

அதே ஊருக்குள் வாடகை வீடு பார்ப்பது இரு குடும்பத்திற்கும் அவமானமும் கேலிகளும் வந்து சேருமே தவிர எந்த நிம்மதியும் கிடைக்கப் போவதில்லை என்று ஊருக்கு வெளியே நடக்கத் துவங்கினர்.. இரண்டு பெட்டிகளைக் கைகளில் ஏந்தி கொண்டும் மனைவியைப் பக்கவாட்டில் நடத்திக் கூட்டி வந்து கொண்டிருந்த ஜார்ஜின் நினைவிற்குச் சமுத்திரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி புரத்தின் நினைவு வந்தது.. அங்கே உள்ள பழக்கத்தினால் வீடும் கிடைக்கும், நிம்மதியும் வாழ்வாதாரமும் கிடைக்கும் என்பதால் அங்கே செல்ல முடிவெடுத்தனர்..

அந்த ஊரினுள் நுழையும் பொழுதே, “தம்பி..” எனச் சத்தம் கொடுத்தவர் சமுத்திரத்தின் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவர்.. அவரிடம் பொதுவான காரியங்களைப் பேசியவர்கள் தவறியும் கைகளில் இருக்கும் பெட்டியைக் குறித்தோ தங்களின் வெறுங்கால்களைக் குறித்தோ எதுவுமே கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஓரளவிற்கு விஷயம் புரிந்தது.. அவருடைய பார்வையை அளந்த புவனேஷ்வரி, “அண்ணாச்சி.. இங்க வீடு எதாச்சும் வாடகைக்குக் கெடைக்குமா??” என விசாரிக்க, “வாங்க.. நம்ம வீடு பக்கத்துல ஒன்னு காலியா தான் கெடக்கு... யாருக்கும் குடுக்க மாதிரி இல்ல.. உங்களுக்கு நான் சொல்லுதேன்” என்று நம்பிக்கை அளித்தே அழைத்துச் சென்றார்..

தற்பொழுது தங்கி கொள்ள வீடும் கிடைத்து விட, வேலை கிடைக்காதா?? இருந்த ஒரே அறையில் சமையலும் செய்து உடமைகளையும் வைத்தது போகத் தூங்குவதற்குக் கொஞ்சமாய் மட்டுமே இடம் மீதியிருந்தது.. அதற்குள் இருவரும் குறுக்கி படுத்து சமாளித்து வந்தனர்.. அவ்வூர் பூக்களின் வனம் என்றே வரையறுக்கப்பட ஒரே காரணம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல ஊர்களின் மலர் உற்பத்தி இங்கிருந்து தான் செல்லும்.. பருவத்திற்குப் பருவம் பூக்கள் மாறினாலும் அளவு மாறுவதில்லை.. காலையில் சந்தைக்குக் கொண்டு சென்ற பூக்களில் சேராத ‘தப்பு பூ’ பறித்து வந்து தொடுத்து விற்பதின் மூலம் சிறிய அளவிலான வருமானம் சேர, மீதத்திற்கு அக்கம் பக்கத்தினருக்கு பீடி உருட்டி, சேர்க்கத் துவங்கினாள்..

ஜார்ஜ் ஒவ்வொரு தோட்டமாகச் சென்று, தென்னை மரம் ஏறி தேங்காய் பறித்துப் போட, சொச்ச கூலியோடு உணவிற்கு இரண்டு தேங்காயும் கிடைக்கும்.. மளிகை சாமான் பட்டியலில் ஒரு சாமான் கழிவதில் ஒரு ‘ஹப்பாடா’ போட்டுக் கொள்ளலாம்.. கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கை இப்படியே நகர்ந்து கொண்டிருக்க, வழக்கம் போல மரத்தில் ஏறிய ஜார்ஜ் வழுக்கி கீழே விழுந்தான்.. விழுந்த வேகத்தில் முட்டியில் சதை பேந்து ரத்தம் துளிர்க்க, மெல்லமாக நொண்டியபடியே வீடு வந்து விட்டான்..

அருகே இருந்த படிக்கட்டை பிடித்தபடி திண்ணையில் அமர்ந்து விட்ட ஜார்ஜிற்கு வீட்டினுள் செல்வது தான் சாகசமாகத் தோன்றியது.. ரத்தக் காயத்தைக் காண்பித்து மனைவியைப் பயமுறுத்த விரும்பாது வாசலிலேயே அமர்ந்து விட்டான்.. எப்படி இருக்க வேண்டியவன்?? என்று இந்நேரத்தில் வினாக்களை எழுப்பி வீணாகப் பலவீனப்படுத்த விரும்பவில்லை.. இது தான் வாழ்க்கை.. “எப்படி இருந்தேன்??” என்று பெருமையாக எண்ணி பார்ப்பதினாலோ “எப்படி ஆயிட்டேன்??” என்று அழுது புரள்வதினாலேயோ எதுவும் மாறிட போவதில்லை.. வாழ்க்கை இழுத்துச் செல்லும் வேகத்திலேயே நாமும் பயணிக்க வேண்டும் என்று திண்ணையிலேயே அமர்ந்து தத்துவம் எழுதிக் கொண்டிருந்த ஜார்ஜ், அவ்வழியே சென்ற தெரிந்த பையனை அழைத்தான்..

“என்ன ண்ணே.. வெளியே உக்காந்திட்டியளோ.. அக்கா வீட்ல இல்லையோ..” என வீட்டிற்குச் சோடா வாங்கிச் சென்று கொண்டிருந்தவன் ஜார்ஜின் அழைப்பினால் வந்தான்.. “வேலைக்குப் போன எடத்துல மரத்துல இருந்து வுழுந்துட்டேன்.. அது காலுல செத்தேன் பெருசா இளைச்சிட்டு.. கொஞ்சமா பிடிச்சா அப்பிடியே உள்ள போயிருவேன்...” என் உதவி கேட்க, அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான் ஜார்ஜ்..

முட்டியில் ரத்தம் காய்ந்து நிற்க, மடக்கி அமரும் போது புண்ணில் தோல் இழுத்து வலியைத் தந்தது.. பல்லைக் கடித்துக் கொண்டே காலை நீட்டிய ஜார்ஜ் சாரத்தை நீளமாய் விரித்து மறைத்தான்.. நல்ல வேளையாகப் புவனேஷ்வரி வீட்டில் இல்லை.. பூ விற்பதற்கோ பீடியை கணக்கு போடவோ சென்றிருந்தாள்.. முக்கில் சாய்த்து வைத்திருந்த பாயை மெல்ல விரித்து, சாய்ந்து படுத்துக் கொண்டான்.. விழும் பொழுது கூட எதுவும் தெரியவில்லை.. ஆனால் நேரம் செல்லச் செல்ல உடல் வலி கொடியதாக இருந்தது..

கண்களை மூடியும் உறக்கம் வரமால் போக, சிந்தையோ ஏதேதெல்லாமோ அசை போடத் துவங்கியது.. ஜார்ஜிற்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட, ஏற்கனவே கருப்பாக இருக்கிறார் என்று வெறுத்துக் கொண்டிருந்த பாக்கியம்மாள் இதுதான் சாக்கு என்று தாய் வீட்டில் இருந்து அழைத்து வரவே இல்லை.. வருவார், வருவார் என்று சமுத்திரம் காத்துக் கொண்டிருக்க, நேசமணிக்கோ இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது..

எப்போதும் போல இதற்கும், ‘எனக்கென்ன??’ என்று இருந்து விட்ட நேசமணியைத் தெரிந்தவர்கள் கொண்டு பள்ளியிலே சந்தித்து, நியாயமான கேள்விகளை எழுப்பி நிதர்சனத்தைப் புரிய வைத்து சேர்த்து வைத்தனர் வீட்டார்.. அதற்குப் பின்னும் மூன்று குழந்தைகள் பிறந்து, வீட்டை விட்டு விரட்டியதும் நேசமணியும் சமுத்திரமும் தஞ்சம் புகுந்ததும் இதே ஊர் தான்.. ஆக ‘பரம்பரை பரம்பரையாக’ ஒரே நிகழ்வு ஏதாவது சூழ்நிலையில் நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது.. ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதோ ஒன்று முன்னேற்றமடைய, இந்தத் தலைமுறையில் மாற்றி எழுத வேண்டும்.. “என்னிக்கும் என் அப்பா மாதிரி நான் இருக்கக் கூடாது.. என் பிள்ளைங்களுக்கு நான் அப்பாவா தான் இருக்கணும்.. டீச்சரா இருக்கவே கூடாது..” என்று முடிவெடுத்தான்.. திருப்தி என்ற உணர்வு ஏதேனும் ஒன்றில் நிலைபெற்று விட்டாலும் போதும் உடனே துக்க தேவர்கள் தோன்றிவிடுவரே..

பூ விற்பதற்குப் பயன்படுத்தும் நார்பெட்டியும் வட்டுப்பெட்டியும் இடுப்பில் இருக்க உள்ளே நுழைந்த புவனேஷ்வரி; தனக்கு முன்னமே வந்து தூங்கி கொண்டிருந்த ஜார்ஜைக் கண்ணுற்றாள்.. வேலை குறைவாக இருக்கும் நாட்களில் சீக்கிரமே வந்து விடும் ஜார்ஜ் இம்முறையும் இயல்பாகவே தெரிந்திட்டான்.. வழக்கம் போலச் சமைப்பது, பாத்திரம் கழுவுவது என்று வேலைகளில் மூழ்கிப் போன புவனேஷ்வரி சாயங்காலம் ஆகவும் ஜார்ஜை உசுப்பினாள்..

“ஏப்பா.. எந்திரிங்க... லைட் போடுத நேரத்துல படுக்காதீய...” என உசுப்ப, அரைக்கண்களைத் திறந்து பார்த்தான் ஜார்ஜ்.. புவனேஷ்வரியைக் கண்டதும் பட்டென எழுந்து அமர்ந்தவனின் மூளைக்குள் ஒரே கேள்வி, “இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா??” என யோசித்தவன், “எப்பிடி தூங்குனேன்னே தெரியல.. நல்லா அசந்து தூங்கிட்டேன்...” என்றான்.. “காப்பிப் போட்ருக்கேன்.. குடிங்க...” என டம்ப்ளரை நீட்டிய புவனேஷ்வரி ஜார்ஜை கவனிக்கத் துவங்கினாள்..

டம்ப்ளரில் வாய் வைத்து ஒரு மிடறு விழுங்கும் ஜார்ஜ் சூட்டினால் கன்னம் நெற்றி சுருங்க கண்களைக் குறுக்கி மீண்டும் அடுத்த மிடறுக்கு தயாராவான்.. எவ்வளவு வறுமையில் இருந்தாலும் மாதம் ஒரு முறையாவது ஆட்டுக்கறி வாங்கி வந்து விடுகிறான்.. அடுத்த நேரத்து கஞ்சிக்கு வழி தெரியாத வாழ்க்கையில் “இதுலாம் எதுக்குப்பா?? சோறு பொங்கி ரசம் வச்சி தொட்டுக்கத் தொவையல் அரைசிக்கிட்டா போதும்..” என்றாலும் கேட்பதில்லை.. வேலப்பனே தேடியிருந்தாலும் இப்படி ஒருவரை தேடியிருக்க முடியாது.. கடவுளிடம் மனமுருக வேண்டியதற்குக் கிடைத்த வரமோ என்று கூட எண்ணினாள்..

இரவில் வாசலில் அமர்ந்து புவனேஷ்வரி அறியாமல் வெந்நீர் போட்டுப் புண்ணைக் கழுவும் பொழுது ஏற்பட்ட எரிச்சலில் ‘உஷ்...’ ‘ஆ...’ என்ற மெல்லிய வலி குரலில் வெளியே வந்து பார்த்தவள் அதிர்ந்தே போனாள்.. “யம்மாடி.. எப்பிடி சதை கித எல்லாம் அத்துருக்கு... யப்பா எனட்ட சொல்லியிருக்கலாம்லா...” எனக் கலங்கிய குரலில் வினவ, “ஒண்ணுமில்ல.. இது சின்னச் சிராய்ப்பு தான்..” எனச் சமாளித்தாலும் கண்களில் வலி தெரிகிறதே.. “எப்பிடி ஆச்சி??” என வருத்தங்கலந்து கேட்ட புவனேஷ்வரியிடம் உண்மையைக் கூற, “இனி அங்கல்லாம் போவேணாம்.. ஒரு நாலு நாளைக்கு வீட்டுல இருங்க.. பெறவு என்ன பண்ணலாம்னு பாக்கலாம்...” என்று அதிகாரமாய் ஆணையிட்ட புவனேஸ்வரியிடத்தில் அக்கறை மின்னியது..

அதே நேரத்தில், வழக்கமாக அக்காவைக் காண வந்த மகேசனும் ராகவேந்திரனும் மாமனாரின் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் கோபத்தில் சண்டை பிடிக்கத் தொடங்கினர்.. ராகவேந்திரனாவது பொறுமையாக அமர்ந்து என்ன?? யாது?? என்று கேட்டுக் கொண்டிருக்க, மகேசன் துள்ளத் தொடங்கினான்.. “உங்கள நம்பி தான அனுப்பி வச்சோம்.. இப்பிடி வீட்ட விட்டு அனுப்புனா என்ன அர்த்தம்?? வீட்டுக்கு வந்த பிள்ளைய வெளிய அனுப்புதது தான் உங்க லட்சணமா?? அப்பிடி உங்களுக்குள்ள சண்ட வந்து வெளிய போனா எங்களுக்கும் சொல்லணுமென்ன?? இப்பிடி அமுக்குனியாவா இருக்கது.. இதுக்கு எங்க அக்கா எங்க வீட்டுலே இருந்துருக்கலாம் போலருக்கு...” என எகிறவும் “ஏலே... எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க.. ந்த கத்துதது எல்லாத்தையும் எங்கனயும் வச்சிக்கோ.. என் வீட்டுல ஒரு பயலும் காலெடுத்து வைக்கப் பிடாது...” என உச்சஸ்தாயியில் நேசமணி கத்த, வீடே அதிர்ந்தது..

மீண்டும் ஒரு முறை வெண்கல பானை உருண்டது என்றால் நெளிந்து ஒரு காசுக்கும் ஆவாது என்பதனால் சமுத்திரம் பொறுமையாக இருப்பிடத்தைக் கூறி அனுப்பி வைத்தார்.. அங்கே முகவரியை பெற்றுக் கொண்ட தம்பிகள் நேரே அக்காவை பார்க்க ஓடி வர, வீட்டில் ஜார்ஜ் மட்டுமே இருந்தான்.. சிறிது நேரத்தில் புவனேஷ்வரியும் வந்திட, அக்காவை கண்டதும் வேதனையில் ஓவென்று கண்ணீர் வடிக்க அங்கே ஒரு பாசப்போராட்டமே நிகழ்ந்தது.. பின் ஆற அமர உட்கார்ந்து பேசி நலம் விசாரிக்க, அது மட்டும் தானே சாத்தியம்..

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மேலும் வருத்தப்படுத்த விரும்பாமல் கிடைக்கும் வேலை அனைத்தையும் செய்தான் அந்த ராஜாவீட்டு கன்றுக்குட்டி.. முன்பு போலப் பூ பறிக்கவும் செல்ல முடியாமல் பீடி சுற்றும் வேலையை மட்டும் தொடர்ந்தாள்.. இது ஒருபுறம் இருக்க, அந்தப் புறத்தில் புவனேஷ்வரியின் வீட்டார் பேசி சமுத்திரத்தை இருவரையும் அழைத்து வர செய்து விட்டனர்..

மீண்டும் திரும்பி வந்தாலும் நேசமணி இவர்களின் முகத்தில் விழிக்காமலேயே கடந்து சென்றார்.. இருவருக்கும் வருமானம் என்று ஏதாவது ஒன்று வேண்டுமே என்பதால் மளிகைக் கடை வைத்துக் கொடுப்பது என்று முடிவாகிட, ஏற்கனவே நேசமணி வாங்கிப் போட்டிருந்த கட்டிடத்தில் கடை வைப்பதற்காக முப்பதாயிரமும் கொடுத்தார் சமுத்திரம்.. நேசமணியின் மீது அளவு கடந்த நேசம் கொண்ட ஜார்ஜ் கடைக்கு ‘மணி ஸ்டோர்’ என்றே பெயர் சூட்டினான்.. ஊரிலேயே முதல் பல்பொருள் அங்காடியும் முதல் வண்டியும் கொண்டிருந்த ஜார்ஜ் ஒவ்வொரு பொருளையும் நியாயமான விலைக்கே வியாபாரம் செய்ய, ஊருக்குள் கடைக்கென்று தனி மதிப்புக் கூடியது..

அந்தத் தெருவில் இருக்கும் ஒரு அக்கா தான், “செல்வன்.. நேத்து சரியா தான் சொல்லிவுட்டேன்.. மணி ஸ்டோர் போயி பருப்பு வாங்கியாங்கன்னு.. மனுஷன் எங்கயோ வாங்கியாந்துட்டாரு.. பூரா புழுவும் சூத்தையுமா இருக்கு.. அடுப்புல போட்ட நேரத்துல இருந்து வேவனாங்கு.. அடுப்பையும் தபதபன்னு கொதிக்க வச்சிட்டேன்.. ஒரு ப்ரோஜனமும் இல்ல.. அதான் நானே வந்துட்டேன்.. நூறு கிராம் துவரம் பருப்பு குடு செல்வன்...” என்று வந்து நின்றார்.. பொருட்களின் தரம் பார்த்தே சரக்கு இறக்கும் ஜார்ஜின் கடையிலேயே வழக்கமான வாடிக்கையாளர்கள் ஆனார்கள் பெண்கள்..

அதிலும் தீபாவளி சமயத்தில் பெட்டிக் கடையில் கூட அந்த ப்ரைஸ் பண்டம் விற்கப்படும்.. மணி ஸ்டோரில் என்றும் அதற்கு அனுமதியில்லை.. நாலணா கொடுத்து ஒரு சீட்டு வாங்கி மேலே பூசப்பட்டிருக்கும் முலாமை சுரண்ட, உள்ளே ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.. அந்த எண்ணிற்குத் தொங்க விடப்பட்டிருக்கும் அட்டையில் பொட்டு வெடியோ, துப்பாக்கி வெடியோ இருந்தால் பரிசு உண்டு.. இல்லையேல் எதுவும் கிடையாது.. நாலணா நஷ்டத்தில் சென்றிடும்.. கிட்டத்தட்ட லாட்டரி ஏலம் போன்றது என்பதால் இதனை நடத்தி சிறுவர்களிடம் இருந்து வருமானம் பார்ப்பதில் உடன்பாடு இல்லை..

வாழ்க்கை தானாகவே தன்னைச் சரி செய்து கொள்ள, புவனேஷ்வரிக்கு வளைகாப்பு நிகழ்த்துவதற்காக அவளின் வீட்டார் அனைவரும் வந்திறங்க முடிவெடுத்தனர். நேசமணி தான் “அந்த ஊர்க்கார பய ஒருத்தனும் என் வீட்டு வாசப்படிய மிதிக்கப்பிடாது சொல்லிட்டேன்.. மீறி வந்தானுவ.. நடக்கதே வேற.. கண்ட கண்ட பய எல்லாம் என்னையே பேசுதான்...” என உறுமிவிட்டு நகர்ந்தார்..

அவர் கூறியதை மீறி வளைகாப்பு நிகழ்த்தவும் வீம்பு கொண்ட நேசமணி கோபித்துக் கொண்டு தெற்கூரில் இருக்கும் வீட்டிற்குச் சென்று விட்டார்.. விழாவில் மாமனார் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் இனிதே நடைபெற்று வீட்டிற்கும் அழைத்தும் சென்று விட்டனர்.. கோபித்துக் கொண்டு சென்ற நேசமணி வீட்டில் தனியே சமைத்து உண்ணத் தொடங்க மீத குடும்பம் இங்கிருந்தது.

ஜார்ஜ் தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடையை அடைத்துவிட்டு வாரத்திற்கு ஒருமுறை சென்று புவனேஷ்வரியை பார்த்து வந்தான்.. ஏனெனில் முருங்கைக்காய் தோற்று விடும் தோற்றத்தில் இருக்கும் புவனேஷ்வரி குழந்தையைச் சுமப்பது என்பது அச்சம் தர கூடியது என்று எண்ணினான்.. அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்த ஜார்ஜ் எண்ணி முப்பத்தியிரண்டே நாளில் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்..

கேட்டதற்கு, “ஆமா வேற என்னைய சொல்லுதீய.. அங்க ஒரு வண்டி வசதியும் இல்ல.. ஆத்திர அவசரத்துக்குச் சொல்லி விடப் போன் கூட இல்ல.. ஆஸ்பத்திரிக்கு வரணும்னா நாலு கிலோமீட்டருக்கு உள்ள இருந்து மெயின் ரோட்டுக்கு வந்தாவனும்.. ஏதாவது ஒன்னுன்னா யாரு பாப்பா??” என வசனம் பேசினான்..

அடுத்து வந்த நாட்களில் கவனிப்பு என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மறைமுகமாக அவளின் தேவை அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் ஜார்ஜ்.. ஒரு நாளெல்லாம் குங்கும பூ வாங்கி வந்து பாலில் கலந்து குடிக்கக் கூறிக் கொண்டிருக்கும் காலத்தில் குங்குமப் பூ என்றால் என்ன என்பது கூடப் பலருக்கும் தெரியாது..

பிரசவத்திற்குக் குறித்த தேதியில் பத்து நாட்களில் வரவிருக்க, வீட்டின் இறுதியில் சமையலுக்கென்று ஓட்டுப்பறை போட்டிருந்த அறையில் அமர்ந்து சமைத்து கொண்டிருந்தாள் புவனேஷ்வரி.. அன்று காலை ஜார்ஜ் கத்தரிக்காயும் அவரைக்காயும் வாங்கி வந்திருக்க, கனியம்மாளின் பழைய நினைவுகளை அசைபோட்டப்படியே கத்தரியை புளிக்குழம்பும் அவரையைப் பொரிக்கவும் செய்தாள்.. மதிய நேரத்தில் வீட்டிற்கு உண்ண வந்த ஜார்ஜிற்குப் பரிமாறி விட்டு அருகிலேயே அமர்ந்திருந்தாள்..

எப்பொழுதுமே இப்படித் தான்.. கணவன் உண்ட பின்னே இவள் உண்ணும் பழக்கம் இருந்தது.. ஒரு நாளில் கூடப் பத்து மணி தாண்டியும் வீட்டிற்கு வராத ஜார்ஜிற்காக உண்ணாமலேயே காத்திருந்த போது, “ய.. தாயி.. அவன் பெறவு வந்தாம்னா சோறு வச்சி குடுக்கலாம்.. இப்பிடி மாசமா இருக்கவா சாப்புடாம கெடக்காத.. அவன் வந்ததும்தான் சாப்புடுவான..” என்று சமுத்திரம் கண்டித்தும் இந்தப் பழக்கத்தை மட்டும் கைவிட முடியவில்லை..

இப்பொழுதும் அதே பழக்கத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து இருந்தவளை நோக விடாமல் உண்ட தட்டில் கைகழுவி பாத்திரம் கழுவும் இடத்தில் வைத்து விட்டு வரும் பொழுது, வயிற்று வலியால் கதறத் துவங்கி விட்டாள்.. உடனே அருகில் ஒரு காரை பிடித்து உதவிக்கு அம்மாவை அனுப்பிவிட்டு பின்னாலேயே பைக்கில் வந்தான் ஜார்ஜ்.. உடல் முழுவதும் ஒரு பயம்.. என்றும் இல்லாத திருநாளாக இன்று கத்தரிக்காய் புளிக்குழம்பு ருசியாக வந்திருக்கிறது என்று பாராட்டினான்.. ஒரு வாய் சோறு கூட உண்ணவில்லை புவனேஷ்வரி..

அதற்குள் இப்படியா?? என்று நொந்தவாறே மருத்துவமனையில் இருந்து வேலப்பனின் வீட்டாருக்கு செய்தி அனுப்பினான்.. வீட்டில் இருந்த அனைவரும் வண்டி பிடித்து மருத்துவமனைக்கு விரைந்தனர்.. சில கிலோமீட்டர் தூரத்திலேயே மருத்துவமனை இருக்க இன்னும் லேசாக அமைந்தது.. பல இன்னல்களுக்குப் பின் அவள் சுமந்த பத்திர மாத்துத் தங்கம் பூமியில் கால்பதித்து வீலென்று கத்தியது..

முதலில் பெண் குழந்தை என்று மகிழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தாரிடத்தில் ஒப்படைக்கும் பொழுது கனியம்மாளே முதலில் தூக்கினார்.. குழந்தையின் தலை சற்றுப் பெரிதாக இருக்க மேற்படி தலையைத் தேய்த்து விடும் பணியைச் சற்று முன்னர் பாட்டி என்ற பதவியை அடைந்த கனியம்மாள் திறம்படச் செய்து கொண்டிருந்தார்.. அதற்கு முன்னே அவளுக்குப் பழம், ப்ரெட் என்று வயிற்றிக்கு எளிதான பதார்த்தமாய் வாங்கி வந்திருந்தான் ஜார்ஜ்.. சுகப்பிரவசம் என்பதால் அடுத்த நாளே பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள் புவனேஷ்வரி..

இந்த விஷயம் நேசமணிக்கு தெரிவிக்கப்பட, துள்ளாட்டம் போட்டவர் கோபத்தை ஓரம் கட்டிவிட்டு பேத்திக்காக என்று பரிசுகளைத் தயார் செய்தார்.. குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான வசதிகள் அங்கே கிடைக்கச் சிரமம் என்று ஜார்ஜ் நினைக்க, அடிப்படை கழிவறை வசதி இல்லாததினாலும் தண்ணீருக்காகக் கனியம்மாள் கஷ்டப்படுவதையும் கண்ட புவனேஷ்வரியே ஜார்ஜிற்குச் சொல்லி அனுப்ப, சில தினங்களிலேயே புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாள்..

தன்னுடைய பேத்தி வந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் பாசம் உள்ளுக்குள் பெருகி ஓடினாலும் கோபம் கொந்தளித்தாலும் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டு தான் வந்தார் நேசமணி.. மகனையும் மருமகளையும் ஏறெடுத்தும் பார்க்காதவர் தொட்டிலில் கிடந்த பேத்தியை எட்டிப்பார்த்தார்.. அப்படியே பரம்பரை முகத்தை உரித்து வைத்திருந்த குழந்தைக்குத் தங்க சங்கிலியை அணிவித்து விட, இன்றளவும் ‘நேசமணி வாத்தியார் பேத்தி’ என்ற கர்வம் அவளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது..

மகள் தொட்டிலில் தூங்கும் பொழுதும் தரையில் துண்டு விரித்துக் கிடத்தியிருக்கும் பொழுது மட்டுமே வேடிக்கை பார்க்கும் ஜார்ஜ் கைகளில் தூக்குவதற்கு ஒரு பயம்.. அந்தப் பிஞ்சு பாதங்களையும் சென்டிமீட்டர் உயரம் இருக்கும் பச்சிளங் குழந்தையைத் தன்னால் பாதுகாப்பாக உணரசெய்ய முடியுமா என்ற தயக்கம்..

அன்று ஒரு நாள், வழக்கம் போல நடு அறையில் போட்டிருந்த கட்டிலில் படுத்து அதனருகே கட்டியிருந்த தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி விட்டு ஆட்டிக் கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.. அப்பொழுது ஒரு பத்து மணியளவில் விழிப்பு தட்ட, கடைசி அறையில் வாசலில் யாரோ நிற்பது போலத் தோன்றியது.. நேசமணியின் கட்டிட திறமையை இங்குக் கூறியே ஆக வேண்டும்.. வரிசையாக மூன்று அறை வீதம் இரண்டு வரிசையாக ஆறு அறையாகக் கட்டி வைத்திருந்தார்.. இதில் ஒவ்வொரு அறைக்கும் அடுத்த அறைக்குச் செல்ல வாசல் உண்டு..

அப்படித் தான் நடு அறைக்கும் கடைசி அறைக்கும் நடுவே இருந்த கதவில் அப்படியே ஒரு உருவம்.. வெள்ளை போல வெளிச்சமான சேலை கட்டி, அது ஒரு பெண் உருவமே தான்... இதை உணர்ந்ததுமே கண்களைத் தீண்டிவிட்டுக் கொண்டாள் புவனேஷ்வரி.. அது உண்மையே தான்.. அந்த உருவம் மெல்ல நகர்ந்து அவளின் அருகேயே வந்து விட்டது.. கத்துவதற்கோ தப்பிப்பதற்கோ அறிவற்று அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் புவனேஷ்வரி..

அவளின் அருகே வந்த உருவம் தொட்டிலின் பக்கவாட்டிலேயே நின்று, துணியை விலக்கி, குழந்தையின் மீது பார்வையைப் பதித்திருந்தது.. பிஞ்சுக் கால்களில் வெள்ளி வளையம் மின்ன, மூடிய மொட்டுக் கைகளில் வசம்பு துண்டுகள் கயிற்றில் கோர்க்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருக்க, மெல்லிய இமை மூடிய கண்கள் அங்கும் இங்குமாய் நகர்ந்து ஆழ்நிலை தூக்கத்தில் இருந்தது குழந்தை.. ஒரு நிமிடம் ஆடியேப் போனாள்.. தன்னை விடுத்து குழந்தை என்றதும் தாய்க்கே உரித்தான வீரம் அங்கு உயிர்பிக்க “நீங்க யாரு??” என்று சத்தமாகவே கேட்டாள்.. பதிலில்லாமல் மெல்லிய புன்னகையே கிடைக்க, “எதுக்கு இங்க வந்தீங்க?? போங்க...” என்று ஏதோ ஒரு தைரியத்தில் கூறவும் மெல்ல கரைந்தது அவ்வுருவம்..

உடனே தொட்டிலில் கிடந்த குழந்தையைத் தூக்கி, தன்னோடு பிணைத்துக் கொண்டு கதவு ஜன்னல் அனைத்தையும் இறுக்கமாகப் பூட்டி தலை வழியே இழுத்துப் போர்த்தி, கண்களையும் இறுக்கி மூடி கொண்டாள் புவனேஷ்வரி.. இது எதுவும் தெரியாத ஜார்ஜ் பதினோரு மணிக்கு கடையை அடைத்துவிட்டு இயல்பாக வீடு திரும்பினான்..

ஜார்ஜ் வர தாமதமானால் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு தூங்குவது வழக்கம் என்பதால் கதவை தட்டினான்.. முதல் அறையில் க்ரில் தான் என்பதால் இரண்டு பக்கமும் இருந்து திறக்க முடியும்.. உள்ளே இருப்பவளோ பயத்தில் ஆடிப் போயிருந்ததால் “யாரு??” என வினவ, “என்ன கேள்வி கேக்க.. ஏ.. நாந்தான்...” என்று ஜார்ஜ் கூறினான்.. கட்டிலை விட்டு காலை கீழே வைப்பதற்கே பயப்படும் புவனேஷ்வரி, “எனக்குப் பயமா இருக்கு.. கதவுக்குக் கீழ இருக்க ஓட்ட வழியா சாவிய வெளிய போடுதேன்.. நீங்களே திறந்துட்டு வாங்கப்பா...” என்றவளின் குரல் மிகவும் நடுங்கியது..

அவளின் குரலில் இருந்த மாற்றத்தை கொஞ்சமாய் மொழிபெயர்த்துக் கொண்ட ஜார்ஜ், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விசாரித்தால் “பல்லு முன்னாடி தெத்தி, வெள்ள சேலை கட்டி ஒரு பொம்பள வந்து நம்ம பாப்பா பக்கத்துல நின்னுச்சுப்பா.. நான் பயந்தே போயிட்டேன்..” என்றவளின் நடுக்கம் குறையவே இல்லை.. ஜார்ஜும் மேலும் சில அடையாளங்களைக் கூறி கேட்க, ஆமென்று தலையாட்டினாள்..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-21

“அது வேற யாருமில்ல.. எங்க ராஜம்ம பெரியம்மா.. அதுக்கு நான்னா ரொம்பப் பிடிக்கும்... அதான் பிள்ளைய பாக்க வந்துருப்பாவ.. ஒண்ணுமில்ல பயப்படாத... ஒன்னும் பண்ண மாட்டாவ.. நமக்குத் துணையா தான் இங்க வந்துருக்கும்..” என்றவனின் குரல் சிறு வயதில் குடும்பப் பிரச்சினையில் விஷம் குடிந்து இறந்து போன பெரியம்மாவின் வருத்தத்தைப் பிரதிபலித்தது..

அதனாலேயே அடுத்து வந்து நாட்களில் மகளுக்கு ஆலயத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது ராஜம் என்ற பெயரையே இணைத்து விட, அன்று போன பெரியம்மா தன்னுடனே வாழ்வது போன்று எண்ணினான் ஜார்ஜ்.. தலை சுமப்பதற்கு முன்னே விளையாட்டுச் சாமான்களில் பல விதங்களைக் காண்பித்த ஜார்ஜ் நடந்து பழகும் மகளைத் தனித்து விட்டு விடுவானா?? அவளுடைய கால் கொலுசின் சத்தத்திற்குத் தாளம் போடும் பொம்மைகளும் கார்களையும் வாங்கிக் குவித்து விட்டான்..

அதை விடக் குழந்தை புரண்டு படுத்து விட்டதா, தலை சுமந்து விட்டதா என்றெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜார்ஜ், குழந்தை தத்தி புத்தி நடக்கும் பொழுது தரையில் பாதம் படாத அளவில் தூக்கிக் கொண்டே அலைந்தான்.. கொஞ்சமாய் நடக்கப் பழகியிருக்க, தோளில் தூக்கிக் கொண்டு எங்குச் சென்றாலும் கூடவே கூட்டிச் சென்றான்.. இதில் முக்கியமாக வண்டி ஓட்டும் பொழுது இடக்கையில் குழந்தையும் வலக்கையில் வண்டியின் ஹான்ட்பாரும் என்றே சுற்ற, ஊரே திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது.. அது எதுவுமே ஜார்ஜின் புத்திக்கு ஏறாமல் உலகின் முதல் பொக்கிஷமாகவே பாவித்தான்..

தந்தை பங்கிற்குச் செல்லம் வாரி வழங்கி கொண்டிருக்க, கண்டிப்பான தாயாக உருவெடுத்து விட்டாள் புவனேஷ்வரி.. வசம்பு, சுக்கு, பூண்டு, மிளகு, கடுக்காய் வைத்துக் கல்லில் உரசி சங்கில் வைத்து குழந்தைக்கு உரைப்பு கொடுத்தாள்.. பால்குடியை ஒரு கட்டத்தினுள் சுருக்கி ஆகாரம் அளிக்கத் தொடங்கினாள்.. தினம் காலையில் எழுந்து குளிப்பாட்டி பவுடர் பூசி கன்னத்தில் மையிட்டு இல்லாத முடியில் பூவும் சூடி விடுவாள்..

இத்தனை கவனிப்புகள் புவனேஷ்வரி செய்து கொண்டிருக்க, கால்களில் போட்டிருந்த கொலுசு சிணுங்க அன்று வாசல் வரை வந்து நின்ற குழந்தை தூணைப் பிடித்து எழுந்து “ப்பா... ப்பா...” என்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் உள்ளே நுழைந்தான் ஜார்ஜ்.. இதில் ஜார்ஜ் பூரிப்படைந்து குழந்தையைத் தூக்கி கொஞ்ச, இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றாள் புவனேஷ்வரி.. “யோல்.. உன்ன டெய்லி குளிச்சோத்தி பவுடர் அடிச்சு வுட்டா உனக்கு உங்க ஐயா தான் கண்ணுக்கு தெரியுதென்ன..” என்று கன்னத்தில் மெல்லமாய் இடிக்க, முத்துப் பற்கள் தெரிய சிரித்த குழந்தை பட்டென அப்பாவோடு ஒட்டிக் கொண்டது..

இதற்கிடையில் புவனேஷ்வரியும் விட்டுப் போன தன்னுடைய ஆசிரியப் பணிக்கு செல்லத் துவங்கினாள்.. ஆலயத்தால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் சென்று வந்த புவனேஷ்வரி முன்பு போல சம்பளப் பிடிப்பில் சிக்கி கொண்டாள்.. “கழுத போய்த் தொலை...” என்று அதையும் உதறித் தள்ள, அதே பள்ளியில் நிரந்தரப் பணியமர்விற்கு வாய்ப்பு இவளைத் தேடி வந்தது.. அதற்குச் சந்தோசப்படவே முடியாத அளவிற்கு மற்றொரு கட்டுப்பாடும் வந்து சேர்ந்தது.. திருமணத்தின் போது அனைத்தையும் மாற்றிய நேசமணி சான்றிதழில் சிறு பகுதியை மாற்றாமல் விட்டிருந்தார்..

முழுவதுமாக எங்களில் ஒருவளாக வரவேண்டும் என்ற கட்டளைக்குப் புவனேஷ்வரி சரியென்றாலும் இதற்குச் சற்றும் சம்மதியாத ஜார்ஜ் மாற்றவே முடியாது என்று ஒற்றைக் காலில் நின்று விட்டான்.. கேட்டால், “கடவுள் பேரை வச்சு வேலை கிடைக்க வேண்டாம்.. கடவுள் தந்தா பாப்போம்..” என்று மறுத்தே பேசினான்..

இங்கு இப்படி மனப்போராட்டம் நடந்து கொண்டிருக்க, அங்கே வேலப்பன் புதிதாக ஒரு போராட்டம் செய்து கொண்டிருந்தார்.. மகளுக்குச் சேர வேண்டிய நகைப்பாக்கியை நிலத்தை விற்று அடைப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்.. அவருடைய கூற்று நியாயம் என்று வீட்டிலுள்ளவர்கள் ஆமோதிக்க, ஜார்ஜ் மறுத்துப் பேசினான்.. “அதான்.. நாங்க இப்போ நல்லா தான இருக்கோம்.. இப்போ எதுக்கு நகைப்பாக்கி?? வீட்டுல அடுத்து ரெண்டு ஆம்பள பயலுக இருக்கான்வ.. அவனுங்களுக்கு அடுத்து பாக்கணும்.. கையிருப்புன்னு ஒன்னு வேணும்லா...” எனச் சற்று கோபமாகவே கேட்டான்..

இது எதுவுமே புரிந்து கொள்ளும் நிலையில் போதையில் தள்ளாடி கொண்டிருந்த வேலப்பன் நினைவில் இருந்ததெல்லாம் மகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே.. அந்நேரத்தில் தான் நேசமணி இவன் மீது இருந்த கோபத்தில் ஒவ்வொரு இடமாக விற்றுக் கொண்டு வர, இவரும் அதையே செய்கிறார்.. இருவரிடமும் கூறி பார்த்தாயிற்று.. கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்களை என்ன செய்வது?? இருந்த மொத்த கோபமும் வேலப்பன் மீது இறங்க, தள்ளி விட்டு வந்து விட்டான் ஜார்ஜ்..

விஷயம் அறிந்த மொத்த ஊரும் ஜார்ஜை அடிப்பதற்குத் திரண்டு நிற்க, பிறந்த வீட்டிற்குச் சென்று வரும் புவனேஷ்வரியின் வழியும் அடைபட்டுப் போனது.. இப்படிப் பிறந்த வீட்டின் ஆதரவு இருவருக்கும் கிட்டாத நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவு என்றே வாழ்ந்து வந்தனர்.. இந்நிலையில்தான் தெருவில் விளையாடி கொண்டிருந்த ராஜத்தை காணவில்லை..

“யம்மாடி பிள்ள எங்க போச்சோ தெரியலையே..” என்று ஒவ்வொரு வீடாகத் தேடி புவனேஷ்வரி அலைய, பிள்ளை பிடிக்கும் எவரும் இந்தப் பக்கம் வந்திருக்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுதலை வேறு வைத்தாள்.. அவள் வேண்டியது இறைவனுக்குக் கேட்டதோ என்னவோ ஒருவர், “உன் பிள்ள ஸ்கூல்க்குள்ள இருக்கு..” என்று வழியைக் காண்பிக்க வயிற்றில் பிடித்த பயமென்னும் தீ அணையத் துவங்கியது.. வேகமாகப் பள்ளிக்குள் ஓட, அங்கே முதலாம் வகுப்பில் சட்டை ஏதும் போடாமல் ஜட்டியோடு மாணவர்களுக்கு நடுவே அமர்ந்து வாயில் விரல் வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சுட்டிக்கார ராஜம்..

அப்பொழுது தான் புவனேஷ்வரியின் மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.. அவள் யார்?? நேசமணியின் பேத்தி... ஜார்ஜின் மகள்.. அந்தப் படிப்பாளி பரம்பரையின் வழியில் வந்தவளல்லவா.. இந்த அவசரம் அவளுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை தான் என்ற முடிவுக்கு வந்த புவனேஷ்வரி மறுநாளில் இருந்து சட்டையும் ஜட்டியும் போட்டு தலைவாரி, பூச்சூட்டி, கடையில் இருந்த ஸ்லேட்டை எடுத்துப் பையில் வைத்துப் பால்வாடியில் கொண்டு அமர வைக்கும் பொழுது ராஜத்திற்கு வயது இரண்டு..

காலை முழுவதும் பள்ளி சென்று வரும் ராஜத்திற்குக் கேட்பதற்குப் பல கேள்விகள் இருக்கும்.. பாதி வார்த்தைகளை மென்றும் சிலவற்றைக் கடித்துத் துப்பியும் பலநூறு கேள்விகளை எழுப்புவாள்.. அனைத்திற்கும் விளக்கம் அளித்து விட இவர்களுக்கும் மனதிடம் வேண்டுமே.. சில நாட்களிலேயே பள்ளியில் கிடைத்த நட்புகள், வீட்டின் அருகே கிடைத்த நட்புகளுடனும் இணைந்து தெருவில் விளையாடுவதைப் பழக்கமாகக் கொண்டாள்.. “அத்தைக்கா புத்தைக்கா தாம்பாளம்..” என்று தொடங்கி, “பம்பை பரட்டை பப்பங்குட்டி செரட்டை..” என்று அவளின் விளையாட்டுப் பருவம் சென்று கொண்டிருந்தது..

அந்த நேரத்தில் தான், எதிர்வீட்டில் இவள் வயதையொத்த சிறுமிக்கு தம்பி பிறந்திருக்க, தொட்டிலை சுற்றி சுற்றியே வந்தாள் ராஜம்.. இந்த விஷயத்தைக் கவனித்த புவனேஷ்வரி ஜார்ஜிடம் கூற, தங்களின் குழந்தை விளையாடுவதற்கும் தன்னுடைய மொழியில் பேசி சிரிக்கவும் தனக்கு ஒரு துணையைத் தேடுகிறது என்று புரிந்து கொண்டனர்.. ஒற்றைக் குழந்தையாக வளர்வதில் இருக்கும் சிக்கல்களை விவாதித்த பெற்றோர்கள் அவளுக்காக மற்றொரு குழந்தைக்கு முடிவெடுத்தனர்..

குழந்தையின் மழலை பேச்சில் மயங்கி கொண்டிருந்தவர்களுக்குப் பேரிடியாக வந்து விழுந்தது வேலப்பனின் உடல்நலக் குறைவு.. அவ்வூரோடு பல சச்சரவுகள் இருப்பினும் புவனேஷ்வரிக்காக அங்கு செல்ல முடிவெடுத்தான் ஜார்ஜ்.. ஊர் முழுவதும் அடிப்பதற்காகத் திரண்டு நின்றாலும் மகேசனே இருவரையும் தைரியமாக உள்ளே அழைத்துச் சென்றான்.. கட்டிலில் படுத்துக் கிடந்த வேலப்பனின் முகத்தில் மகளைக் கண்டதும் அப்படி ஒரு பொலிவு..

ஆனால் ஜார்ஜிற்குத் தான் அவரை நேரிடையாக முகம் பார்க்க சங்கடமாக இருந்தது.. தான் இழுத்துப் போட்டதில் தான் உடல் நலம் குன்றி விட்டதோ என்ற குற்ற உணர்ச்சி பொங்கி நிற்க, ஒரு ஓரமாக நின்றான்.. வேலப்பனோ மெல்ல தன்னுடைய விழிகளை நகர்த்தி அவனை நோக்க, அந்தக் கண்ணில் தெரிந்தது நன்றியுணர்வா?? இல்லை ஏக்கமா என்பதைப் புரிந்து கொள்ள முடிவில்லை.. ஆயினும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை.. தந்தையைப் பார்த்து விட்டு வந்த பின் புவனேஷ்வரியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை எண்ணி ஜார்ஜ் தான் குழம்பி போனான்.. ராஜத்தின் பிறப்பிற்குப் பின் வெளியே குளிரடித்தாலும் மழையடித்தாலும் ஒரு பொட்டு வெளிச்சம் கூட உள்ளே நுழையாதவாறு இறுக மூடிக் கொண்டு தூங்கும் புவனேஷ்வரி, தற்பொழுது வெட்ட வெளியில் தைரியமாகத் தூங்குகிறாள்..

என்ன ஆனது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, அவள் பாட்டிற்குக் குடம் தூக்குவது குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது என்று வயிற்றில் வளரும் குழந்தையைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தாள் புவனேஷ்வரி.. நடுவே வேலப்பனின் இறப்பு செய்தி வர, மொத்த வீடும் ஆடிப் போனது.. அங்கே கூட்டி சென்றதில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை கூட வெளியிடாது தேமென அமர்ந்திருந்தவளை கண்ட அனைவருக்குமே ஒரு பயம்..

வாழ்வில் பாசம் என்பதை உணரச் செய்யாத நேசமணி மீதே ஜார்ஜிற்கு நேசம் உள்ளே கொட்டிக் கிடக்கிறது.. அப்பாவின் செல்ல மகள் புவனேஷ்வரிக்கு வேதனை எப்படி இருக்கும்?? அருகில் இருந்தவர்கள் “ய.. கனியம்ம.. உன் மொவள அழ சொல்லு.. உள்ளுக்குள்ள இருக்கது எல்லாத்தையும் கத்தி அழ சொல்லு.. மாசமா வேற இருக்கா... கொஞ்சம் கவனி..” என்று அறிவுரை கூற, அவளருகே செல்வதற்கே பயமாக இருந்தது கனியம்மாளுக்கு.. யார்யாரோ என்னவெல்லாமோ கூறி பார்த்து விட்டனர்..

ம்ஹும்.. வாயில் கட்டி சந்தானம் பூசி நடு வீட்டில் புது வேட்டி சட்டையுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த வேலப்பனின் மீதிருந்த விழியை நகர்த்தவே இல்லை.. இதில் இன்னும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது ஜார்ஜ் தான்.. கடைசி வேளை வரை தன்னால் ஒரு மன்னிப்பு கூடக் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அவனை ஆட்கொண்டிருந்தது.. இறுதியாக வேலப்பனை அடக்கம் செய்வதற்குப் பெட்டியில் தூக்கி வைக்கும் பொழுது, ‘விடமாட்டேன்..’ என்று முரண்டு பிடித்த புவனேஷ்வரியின் அழுகை அங்கே தொடங்கி, அடக்கம் செய்துவிட்டு வரும்வரை தொடர்ந்தது.. அந்த அழுகை அனைவரின் மனதையும் சற்று உலுக்கி தான் பார்த்தது..

அதன் பின் விசேஷ சாப்பாடு, பதினாறாம் பக்கம், பொட்ட மக்க கட்டு என்று அனைத்து கட்டுக்களையும் நிறைவேற்றுவதற்குள் புவனேஷ்வரி ஒரு வழியாகிப் போனாள்.. சில நாட்களிலேயே, “சொல்ல சொல்ல கேக்காம குடிச்சே அழிஞ்சு போனான்.. நம்ம என்ன பண்ண முடியும்.. திருப்பிக் கொண்டர முடியாதுங்கப்போ என்னைய முடியும்..” என்று தனக்குத் தானே சமாதானம் பேசிக் கொண்டாள்.. அதன் பிறகு முடிந்த அளவிற்குப் புவனேஷ்வரியின் வீட்டாரையும் கவனித்துக் கொள்ளத் துவங்கினான் ஜார்ஜ்..

ஏற்கனவே ஒரு பிரசவத்தைப் பார்த்த புவனேஷ்வரிக்கு இந்த முறை தைரியம் அதிகமாகவே இருந்தது.. அசட்டுத்தனமும் கூடத்தான்.. குறித்த நாளில் குறித்த நேரத்தில் சரியாகச் சுகப்பிரசவமாகி பூமியில் ஜனித்ததோ ஒரு பெண்குழந்தை.. இந்தத் தடவை ஜார்ஜோடு இணைந்து அனைவரும் எதிர்பார்த்தது ஆண்வாரிசை.. சகுனங்களும் அப்படியே அமைந்திருக்க, இந்தத் திருப்பத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை..

ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே முனங்கிக் கொள்ள, புவனேஷ்வரி கண்டுகொள்ளவே இல்லை.. பேறுகாலத்திற்குப் பிறந்த வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்துக் கொண்ட ஜார்ஜின் கையில் பிரசவத்தின் போது இருந்தது வெறும் நூற்றைம்பது ருபாய் மட்டுமே.. தட்டுப்பாடு ஏற்பட, துரையிடம் கொஞ்சமாய்ப் பணம் இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.. பிறந்தது பெண்குழந்தை என்பதோடு மட்டுமல்லாமல் பிறந்த நேரத்தில் பஞ்சத்தோடு வருகை தந்தது என்பதால் தந்தைக்குக் குழந்தை மீது ஈடுபாடே இல்லாமல் போனது..

புவனேஷ்வரி மட்டுமே குழந்தையை எந்தப் பாகுபாடும் பாராமல், “என்னவா இருந்தா என்ன?? என் பிள்ள தானே...” என்றாள்.. சமுத்திரம் மனது கேளாமல் ஒரு சமயத்தில் “ரெண்டும் பொட்டையா பெத்துட்ட..” என வாய்தவறி வார்த்தையை விட, அதனைப் பிடித்துக் கொண்டாள் புவனேஷ்வரி.. “என்ன சொன்னீய த்த.. ரெண்டும் பொட்டையா?? அவன் அவன் பொம்பள பிள்ள இல்லாம தவம் இருந்துட்டு இருக்கான்.. நீங்க என் பிள்ளையள குறை சொல்லுதீய.. ரெண்டு இல்ல.. அஞ்சு பொட்டய பெத்தாலும் நான் தான் கஞ்சி ஊத்துதேன்.. எனக்குத் தொழில் தெரியும்... எத்தன பெத்தாலும் பீடி சுத்த சொல்லி குடுத்து அழகா கரையேத்திருவேன்.. நானும் யாருட்டயும் கையேந்தி நிக்க மாட்டேன்.. என் பிள்ளியளும் கையேந்தாதுவ..” என வீரவசனம் பேச, அதில் கோபித்துக் கொண்டு போனவர் தான்.. அத்தோடு பேச்சு வார்த்தையும் அறவே நின்று போனது...

இரண்டாவது குழந்தை சற்று நிறமாக இவளைப் போலவும் இவர்களின் பரம்பரையின் அடையாளம் போலப் பிறந்திருக்க, வேலப்பனின் நினைவு வந்ததோ என்னவோ நெஞ்சிலேயே பொத்தி பொத்தி வளர்க்கத் துவங்கினாள்.. ராஜம் தங்கச்சியையே சுற்றி சுற்றி வட்டமடித்து, மூடியிருக்கும் கைகளைத் திறந்து தன்னுடைய ஒற்றை விரலை உள்ளே வைத்து விட, இறுக பற்றிக் கொள்ளும் குழந்தை.. அதிலே சிலாகித்து மகிழ்வாள் ராஜம்.. அந்தப் பிணைப்பு பல காலங்களுக்கு நின்று பேசப்போகிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்..

இடையில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தை, உயிர் உருகி நின்ற குழந்தை, இப்படியே இறந்து விட்டாலும் பரவாயில்லை என்று கூடத் தோன்றியது ஜார்ஜிற்கு.. இது ஏன் இப்படித் தோன்றுகிறது என்று யோசித்தால் விடையில் ஒற்றைப் புள்ளி மட்டுமே கிடைத்தது..

அப்பொழுது தான் அரசு ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்க, நேர்காணல் தேர்வுக்காகப் புவனேஷ்வரியை அழைத்துக் கொண்டு கட்டிடம் கட்டிடமாக அலைந்து கொண்டிருந்தான் ஜார்ஜ்.. சில இடங்களில் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்த, “கிடைத்தால் கிடைக்கட்டும்..” என்று விடாப்பிடியாக நேர்பாதையில் முயற்சித்துக் கொண்டிருக்க, இரண்டாவது கைக்குழந்தையோ வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது..

சமுத்திரம் திருப்பிக் கொண்டு சென்றாலும் பேத்தி பாசம் கட்டியிழுக்காதா என்ன?? தினமும் வீட்டிலேயே அமர்ந்து குழந்தையைக் கவனித்துக் கொள்ள, கொஞ்சுவதற்கு நிறமாக இருந்ததும் மற்றொரு காரணமாகப் போனது.. பிறந்ததில் இருந்து கையிலேயே தூக்காத தந்தை அங்கும் இங்கும் செல்லும் போது சேட்டையையும் விளையாட்டையும் நிறுத்தி விட்டு ஏக்கமாக நோக்க, ஜார்ஜிற்கோ பாவமாகப் போனது.. என்ன தான் கோபம் இருந்தாலும் குழந்தையை இப்படி நினைக்கத் தோன்றி விட்டதே என்று நொந்து கொண்ட ஜார்ஜ்; குனிந்து குழந்தையைத் தூக்க அவனுடைய கைகளுக்குள் எம்பி எம்பி துள்ளாட்டம் போடத் துவங்கியது..

ஆண்பிள்ளை வேண்டுமென்று ஆசைப்பட்டதும் தவறில்லை.. பெண்குழந்தை பிறந்ததும் தவறில்லை.. அதற்காகத் தண்டிப்பது எல்லாம் நியாயமற்ற செயல் என்ற ஜார்ஜ் பெண்ணாக இருந்தால் என்ன எனக்கு மகன் தான் என்று வாங்கி வந்த கால்சட்டையை அணிவித்து ‘தம்பி’ என்றே அழைத்தான்.. இதற்கு நடுவில் சமுத்திரம் என்ன நினைத்தாரோ “ஜோஷ்..” என்று பெயரில் ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்..

இரு பெண்குழந்தைகளையும் வீட்டில் தனியே விட்டுவிட்டு கணவனும் மனைவியுமாய் ஒவ்வொரு இடங்களுக்காக அலையத் துவங்கினர்.. எந்தச் சிறுபகுதியை சான்றிதழில் மாற்ற வேண்டும் என்றனரோ அதே பகுதியை மாற்றாததினால் வேலையும் கிடைத்து விட்டது.. இதோ குடிகாரனின் மகளாகப் பிறந்து அரசு ஆசிரியராய் பணி நியமனம் செய்யப்படுகிறாள் புவனேஷ்வரி..

நேசமணியின் கண்டிப்பில் வளர்ந்தாலும் ஒரு நல்ல தோழனாகவும் சதா நேரமும் புலம்பலும் பற்கடிப்பும் கொண்ட வீட்டில் பிறந்தாலும் நல்ல ஒரு தாயாகவும் ஜார்ஜ்-புவனேஷ்வரி தம்பதியினர் வாழ்ந்திட, இதோ இவர்கள் பெற்ற இரண்டாவது குழந்தை ஜோஷ் சுதந்திரமாக அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.. மனித வாழ்க்கை வாழையடி வாழையாக முடிவிலியாகவும் இருக்கச் சில மாறிலி மானிடர்களால் மட்டுமே சில மாற்றங்களும் நிகழ்கிறது.. வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்தவர்களின் பாடுகள் உயர்ந்து நிற்கும் மூன்று தூண்களுக்கும் அஸ்திவாரமாகப் பூமியில் புதைந்து கிடக்கிறது.. அஸ்திவாரத்தின் ஆதிவரலாற்றை அடிப்படையை வெளிப்படுத்தும் முயற்சியில் இந்த ‘மாறிலி மானிடர்கள்’ நாவல்.
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
இறுதி அத்தியாயம்

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு,

பல மாற்றங்கள் நிகழ்ந்தே போனது.. நடந்த அனைத்தையும் பதிவு செய்வதற்கு மற்றொரு சகாப்தம் எழுதினாலும் போதுவதில்லையே.. வழக்கமாக வெற்றிகளை காணும் பொழுது ஏற்படும் உத்வேகத்தை விட வெற்றிக்கு பின்னால் நின்ற வெறும் நிகழ்வை நோக்கினால் உத்வேகத்தை விட உண்மை புரியும்.. பணிக்கு பிறகு மூன்றாவது முறை கருவுற்றிருந்த புவனேஷ்வரியை “பொம்பள புள்ள தான்..” என்று கேலி செய்தாலும் அசராது நின்றவள் பெற்று எடுத்தது அந்த குடும்பத்திற்கான இளவரசனை..

என்றும் போல அன்றும் குட்டி குட்டியாய் சிறுகதைகளை கிறுக்கி கொண்டிருந்த எனக்கு அருகில் வேலையை முடித்து விட்டு வந்து அமர்ந்தார் என்னை பெற்ற புவனேஷ்வரி.. முன்னர் கூறிய “ஜூனியர் புவனேஷ்வரி’ சாட்சாத் நானே தான்.. தண்ணீர் எடுத்ததிற்கான சுவடாக சேலையில் ஈரவாசம் பிடித்திருக்க உள்பாவாடையை காய வைக்கும் பொருட்டு விசிறியின் கீழே வந்து அமர அது என்னருகாகி போனது..

“என்னடி எப்ப பாத்தாலும் டொப்பு டொப்புன்னு தட்டிக்கிட்டு கெடக்க??” என்று மடிக்கணினியை எட்டிப்பார்க்க, “சும்மா.. வீட்டுல தான இருக்கோம்னு கதை எழுதி பாத்துட்டு இருக்கேன்...” என்று முறுவலித்தேன்.. “கதையா?? கதைலாம் எழுத தெரியுமா?? அவ்ளோ பெரிய ஆள் ஆய்ட்டியோ??” என்று ஆச்சரியமாக பார்க்க ‘ம்ம்ம்..’ என்று கொண்டேன்.. நேர் துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்றால் நேர் நேர் குணம் கொண்ட நாங்கள் மைதானத்திற்கு செல்லாத குத்துசண்டை வீரர்களாக வலம் வருவோம் என்று அர்த்தம்..

“இங்க காட்டு..” என எட்டி பார்க்கும் முன் விலக்கி கொண்டு, “இப்பிடி எட்டி பாக்காம இருங்களேன்.. யாராவது பக்கத்துல உக்காந்துட்டு இருந்தா எழுதவே முடியாது..” என்று காரணம் கண்டுபிடிக்க, எதிரில் அமர்ந்து ஆராய்ச்சி மாணவியாக தன் மடிகணினியில் மூழ்கி போன ராஜம், “ஆமா ம்மா.. கொஞ்ச நேரம் அவள டிஸ்டர்ப் பண்ணாம இருங்க.. அவ பாட்டுக்கு அடிக்கட்டுமே..” என்றவள் எனக்கும் குரு ஆவாள்..

“ம்க்கும்.. ரொம்ப தான் பண்ணுதிய... எல்லாம் இந்த சின்ன மண்டைய சொல்லணும்.. பொறுமையா இருந்த பெருசையும் கெடுத்துட்டாள..” என வழக்கமான குற்றசாட்டை கூறிவிட்டு, “ம்க்கும்.. எங்களுக்கு காட்டாம மறைச்சி வச்சு எழுதிதியளாக்கும்.. பாரு.. ஒருநாள் நானும் எழுதுவேன்... என் வாழ்க்கைய எழுதி புக்கா வரும்.. அத வாங்கி படிக்க எல்லாரும் கண்ணீர் விட்டு அழுவாங்க...” என அவரின் விளையாட்டுத்தனமான சவாலை விட்டார்..

உடனே, குபீரென்று இருவரும் சிரித்திட “என்னடி சிரிக்கிய.. உண்மைக்கும் தான்.. என் வாழ்க்கையலாம் எழுதுனேன்னு வையேன்.. அப்பிடி இருக்கும்.. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..” என்று நொடித்து கொண்டார்.. “ஏடே.. இங்க கொஞ்சம் வாயேன்.. அம்மா ஏதோ சொல்லுதாவ..” என்று வெளியில் போன் பார்த்து கொண்டிருந்த தம்பியை அழைக்க, அவன் தான் அசராமல் கேலி செய்வதில் கெட்டிக்காரன்.. அம்மா சொன்னதை ராகம் மாறாமல் அப்படியே செய்ய மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினோம்..

அன்று இரவே சாப்பிடும் நேரத்தில் ஜார்ஜும் வந்து சேர, நடந்ததை கூற சிரசில் அடிக்க ஒரே சிரிப்பு கூத்து தான்.. இந்த நிகழ்வு அத்தோடு மறந்து போக, ஒரு கட்டத்தில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எழுதுவது என்ற விதிமுறைக்குள் வந்து நின்றேன்.. குழப்பங்களுக்கு மத்தியில் உழன்ற எனக்கு நுங்கு சாப்பிட்டு கொண்டிருந்த புவனேஸ்வரியின் அமர்வு மீண்டும் அந்நிகழ்வை நினைவுப்படுத்தியது.. ஏனெனில் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி இருவரின் வாழ்க்கை கதை..

சில தினங்களுக்கு பிற்பாடு, இரவு உணவிற்கு பின் மச்சியில் நிலவு குளியலில் குடும்பமாக கதைத்து கொண்டிருக்க, அந்த பரிசு வெளிப்படுத்தப்பட்டது.. புவனேஷ்வரி வாழ்க்கையின் மிக அரிதான பொக்கிஷங்கள் அடங்கிய நாட்குறிப்பின் பிரதிபலிப்பாக புத்தகம்.. பிரித்து படித்த புவனேஸ்வரிக்கு ஏற்பட்ட சிரிப்பினால் கண்ணீர் துளிகள் தெறிக்கிறது.. இது தான் ஆனந்த கண்ணீர் போல..

புத்தகத்தின் ஒரு பக்கத்தை கூட படிக்காத ஜார்ஜ், தெத்து பற்கள் தெரிய சிரித்து கொண்டிருந்த புவனேஷ்வரியின் முகம் பார்த்து வரிகளை வாசிக்கிறார்.. அதிலே புன்னகையும் மலர்கிறது.. இது தான் காலம் காணாத காதலா?? புகைப்படத்தில் கூட மனைவியின் முகம் பார்க்கும் கணவனின் கள்ளத்தனத்தில் ஒளிந்திருக்கிறதோ இந்த மாயக்காதல்..

“எனக்கு பிடிச்ச ஹீரோ என் அப்பா.. பிடிச்ச ஹீரோயின் அம்மா..” என்று ராஜம் என்றோ உளறிய வரிகளை ‘என்னே ஒரு முட்டாள்த்தனமான அறிவு..’ என்று கடந்திருக்கிறேன்.. அதன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது.. காதலை கேலி பேசிய நானே ‘இதை போன்று அழகான காதலை அடையாளம் காண அடுத்த ஜென்மம் வேண்டும்..’ என்று யோசிக்கிறேன்..

பலமுறை என்னை அமரவைத்து, ‘பதினாலு வருஷத்துக்கு முன்னால உங்க அம்மா எப்பிடி இருந்தா தெரியுமா??’ என்று கதை கூறும் அப்பாவை அப்பட்டமாய் கலாய்த்து, இன்றும் அம்மாவிற்கு அதே அளவு முக்கியத்துவம் அளிக்கும் பொழுதெல்லாம் திட்டி தீர்க்கும் எனக்கு புரியவில்லை.. 'அன்றில் பறவைகளின் அவதாரம் மண்ணிலும் நடக்கிறது..' என்று.. இப்பொழுது ஒன்று புரிகிறது.. ‘முதலில் அவர்கள் தம்பதியினர்.. அதன் பின்னே தந்தை தாய்..’ இந்த வாழ்வின் இயல்பான தத்துவம் புரிவதற்கு இத்தனை ஆண்டுகளா??
 
Status
Not open for further replies.
Top Bottom