Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மொட்டுகள் மலரும் தருணம்

Saha Thozhi

New member
Messages
1
Reaction score
1
Points
1
மொட்டுகள் மலரும் தருணம் - சஹா



சென்னையின் பிரபல பொறியியல் கல்லூரி அந்த வருடத்தின் வானரங்களை அன்புடன் வரவேற்க கூட்டத்தில் ஒருத்தியாக தன் வெண் பஞ்சு பாதம் வைத்தாள் வெண்ணிலா.

கருவிழி இரண்டும் காற்றில் கவி பாட துடித்த செவ்விதழ்களை மெலிதாய் கடித்து கொண்ட வெண்ணிலா தன் உடன் வருபவளின் காதை கடிக்க அவளோ நடுங்கியவளின் விரல்களை தன்னோடு கோர்த்து கொண்டாள்.


வெண்ணிலா… இயற்கையில் அமைதி.
வாழ்வின் மறக்க முடியாத கசப்புகளை எளிதில் கடக்க இவளிடம் கற்று கொள்ள வேண்டும்.
உப்பி இருக்கும் கன்னமும் அதில் விழும் குழியும் ஓர் முறை பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அழகு.

“வசீ, எந்த பக்கம் போகணும்னு தெரியலையேடி!” என்று கூற

“ எனக்கும் என்ன தெரியும்? நானும் உன் கூட இப்போ தான வரேன்… இரு யார்கிட்டயாவது கேப்போம்” என்ற வசந்தி அவர்களை கடந்து போன ஒருத்தியை அழைத்து
“ B.E. computer science first year எந்த பக்கம் போகணும்?” கேட்க அவள் காட்டிய வழியில் சென்றனர்.

மேல் தளத்தின் மூன்றாம் அறை அவர்கள் தேடியது.

மாடி படிகளில் சில மாணர்வர் கூட்டம் ஒன்றாய் அமர்ந்து கதையடித்து கொண்டிருக்க அவர்களை கடந்து தான் இவர்கள் செல்ல வேண்டும்.

“ மச்சான், அங்க பாரு… ஒரு மார்டன் மஹாலக்ஷ்மியும் குடும்ப குத்துவிளக்கும் வருது…” என்று ஒருவன் சத்தமாக கூற அது இவர்களின் காதிலும் தெளிவாய் விழுந்தது.

‘தங்களை தான் கூறுகிறார்கள்’ என்று புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் வசந்தி நகர வெண்ணிலா மட்டும் அவர்களை திரும்பி பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தாள்.

“நிலா, பாக்காத… பாத்தா கூப்பிட்டு வச்சு ஏதாவது ரகளை பண்ணுவாங்க… கம்முன்னு வா” என்று தோழியை கடகடவென இழுத்து சென்றாள்.

“ என்ன ரஞ்சா? அந்த பொண்ணு உன்னையே பாத்துட்டு போறா? தெரிஞ்ச பொண்ணா?” என்று முதலில் பேசியவன் கூட்டத்தில் இருந்த ஒருத்தனிடம் கேட்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

“ என்னடா? என்ன கேட்ட?” என்று பார்வையை அவள் மறைந்ததும் இவர்களிடம் திருப்பி கேட்க

“ தெரிஞ்ச பொண்ணான்னு கேட்டேன்?” என்றான்.

“ ம்ம், சொந்தக்கார பொண்ணு” என்று முடித்து கொண்டான் நிரஞ்சன்.

அவர்களும் அதற்கு மேலும் ஏதும் கேட்காமல் விட்ட கதையை மீண்டும் அளக்க வெண்ணிலாவும் வசந்தியும் வெளியே வருவது இவன் கண்களுக்கு தெரிந்தது.


நிலாவின் பார்வை இவனிடம் மட்டுமே நிற்க, ‘என்ன நினைத்தானோ?’


“ஒரு நிமிஷம்… இதோ வரேன்” என்றபடி அவர்களை நெருங்கியவன் இருவரையும் தன் நட்பு வட்டத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் நிறுத்தி வைத்து கொண்டு,
“என்ன?”என்றான்.

“அது வந்து… அத்தான்...” என்று தயங்கியபடி அவள் கூற

“ஸ்டாப்பிட், என்ன இது அத்தான் பொத்தானுட்டு… இது காலேஜ். நாலு பேர் கேட்டா என்ன நினைப்பாங்க?” என்று அவன் கடுப்பாக

“ஏன்டி, மூஞ்சில மூணு கிலோ இஞ்சிய அப்பி வச்சு இருக்கான்… இவனையா உருகி உருகி காதலிக்குற?” என்று வசந்தி அவளின் காதில் கிசுகிசுத்தாள்.

அதை கேட்டு இருவருமே அவளை முறைக்க,

“என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு… எனக்கு வேலை இருக்கு” என்று அவன் கத்தவும்

‘ஆமா, பெரிய வேலை அந்த குட்டி சுவத்துல உக்காந்து கதையடிக்குறது பெரிய வேலை’ என்று வசந்தி மனதில் கூற

“இல்ல.. அத்…” என்ற நிலா அவன் முறைக்கவும்

“ ஹாஸ்டல்ல அட்மிஷன் பார்ம்ல கையெழுத்து போடணும்… மாமா இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க… அதான் கொஞ்சம் கால் பண்ணி தரிங்களா?” நடுங்கியபிடி அவள் கூற

அவளை முறைத்தாலும் தன் மொபைலில் அவன் தந்தைக்கு அழைப்பு விடுக்க மறுமுனை கட் செய்யப்பட்டது.

அதற்கும் அவளையே முறைத்துவிட்டு வசந்தியிடம்,
“ஏய், உன் மொபைலை கொடு” என்று அவளிடம் இருந்து மொபைலை வாங்கி கொண்டு அதில் அவரின் எண்ணை அழுத்தி ஸ்பீக்கரில் போட்டான்.

இந்த முறை அழைப்பு எடுக்க பட்டு,

“ஹலோ” என்று கேட்க

நிலா, “ மாமா, நான் நிலா பேசுறேன்” என்றாள்.

“கண்ணா, வந்த இடத்துல இன்னும் வேலை முடியலடா… நீ காலேஜ் போ… நான் மதியம் வந்துடுறேன்” என்று கூறினார்.

“சரி மாமா”

“ அப்புறம் அந்த தடிமாடு அங்க தான் சுத்திட்டு இருப்பான். அவனா உன் கூட பேசினாலும் நீ பேச கூடாது… அவன் நம்ம எதிரி… நியாபகம் வச்சிக்கோ சரியா?” என்று அவர் கூற இந்த பக்கம் இவன் தலையில் அடித்து கொண்டான்.

‘பெத்த மகனை பாத்து எதிரின்னு சொன்ன ஒரே ஆள் இந்த ஆள் தான்’ என்று எண்ணி கொண்டான்.

வசந்தியோ தனக்குள் சிரிப்பை அடக்க நிலா தான் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள்.
‘சிரித்து விட்டு அவனிடம் பாட்டு வாங்க வேண்டுமே’ என்ற பயம்.

ஆனால் மறுமுனையில் அவரே தொடர்ந்தார்.

“ ஒழுங்கா போய் படிக்கிற வேலைய பாக்க சொல்லு கண்ணா, பெரிய அறிவாளி.. அவர் செல்லுல இருந்து கூப்ட்டப்போ எடுக்கலைன்னு வேற செல்லுல இருந்து கூப்டுறார். இதை எங்களால கண்டுபிடிக்க முடியாது பாரு… நான் அந்த சுப்பனை பெத்த அப்பனாக்கும்…” என்று அவர் போனை வைத்து விட இங்கு வசந்தியோ,

‘அட்ரா அட்ரா… அங்கிள் நீங்க மாஸ்டர் பீஸ்’ என்று மனதில் கூறி கொண்டாள்.
ஏனோ அவளுக்கு அவரை ரொம்ப பிடித்து போனது.

நிரஞ்சன் நிலாவை முறைத்தபடி நிற்க

“ஹாய் பப்பாளி… நீ இங்க இருக்கியா? உன்னை உன் க்ளாஸ்ல போய் தேடிட்டு வரேன்” என்றபடி அங்கு புதியவன் ஒருவன் வந்தான்.

அவன் மகேஷ்.

நிலாவின் தாய் வேணியின் உடன் பிறந்தவர் தயாளன்… நிரஞ்சனின் தந்தை.

தந்தை ரவிக்குமாரின் தங்கை கோதையின் மகன் தான் இந்த மகேஷ்.

சிறு வயதிலேயே நிரஞ்சனுக்கும் நிலாவுக்கும் பேசி வைத்திருந்தனர். அதனாலேயோ என்னவோ? நிலா அவனை அளவிட முடியாத அளவுக்கு நேசித்து கொண்டிருக்கிறாள்.

கடந்த வருடம் நிலாவின் தந்தை ரவி நெஞ்சுவலியில் இறந்து விடவே ‘தன் இரு மகள்களையும் சீக்கிரம் திருமணம் முடித்து விட வேண்டும்’ என எண்ண தொடங்கிவிட்டார் வேணி.

அதன்படி முதலில் தன் அண்ணனிடம் பேச அவர்,

“நிலாவின் படிப்பு முடியட்டுமே வேணி” என்று தயங்க

“இல்ல அண்ணா… எனக்கு மனசுக்கு சரியா இல்ல அவர் போனப்புறம்… அதனால கல்யாணத்தை முடிச்சுடுவோம்.. அதுக்கு அப்புறம் வேணா அவ மேற்கொண்டு படிக்கட்டும்” என்று அவர் உறுதியாக நிற்க தயாளன் வேறு வழியின்றி தன் வீட்டில் பேச தொடங்கினார்.

அப்போது தான் பிரச்சினை தொடங்கியது நிரஞ்சனின் வாய் மொழியில்.

“அப்பா, இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்ல” என்று.

“ஏன்? உன்னை என்ன நாளைக்கே தாலி கட்டி குடும்பஸ்தனா மாறுன்னா சொன்னேன். இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பாத்துக்கலாம்னு தானே சொல்றேன்”

“இல்லப்பா… நீங்க என்ன சொன்னாலும் சரி, எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்… அது மட்டுமில்லாம..”

“என்ன சொல்லு?”

“எனக்கு நிலா மேல அப்டி எந்த ஒரு பீலிங்க்ஸும் வரலை.”

“அடிச்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல்… என்னையே எதிர்த்து பேச கத்துகிட்டியா? ஒழுங்கா சொல்றத மட்டும் செய்” என்று அவனை நோக்கி கை ஓங்க அவசரமாக அவருக்கு குறுக்கே வந்தாள் நிரஞ்சனின் தாய் லக்ஷ்மி.

“என்னங்க இது வளந்த பிள்ளைய போய் கை ஓங்கிட்டு…”

“ அவன் என்ன சொல்றான்னு நீயும் கேட்டுட்டு தான இருந்த?”

“அதுக்காக… இங்க பாருங்க நிலாவ எனக்கும் பிடிக்கும் தான். அதுக்காக நம்ம விருப்பத்துக்காகவா இந்த கல்யாணம்… வாழ போறது அவங்க… அதை புரிஞ்சிக்கோங்க..”

“ என்ன நீயும் அவனுக்கு ஜால்ரா அடிக்கிறியா?” அவர் லஷ்மியின் பக்கம் தன் கோபத்தை திருப்ப

“நான் யார் பக்கமும் பேசல… கட்டாய படுத்தி கல்யாணம் மட்டும் தான் நம்மால பண்ணி வைக்க முடியும். இதனால நாளைக்கு கஷ்ட பட போறது நம்ம நிலா தான். அதனால ஒழுங்கா நீங்களே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க…” என்று அவர் தலையில் அடித்து கொண்டு நகர்ந்தார்.

இரண்டு நாட்களாக தலையை தொங்க போட்டு கொண்டு நடமாடும் தன் அண்ணனையே பார்த்த வேணி அவரிடம், “ என்ன ஆச்சுணா? வீட்ல ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க அவர் ‘ எப்படி சொல்வது?’ என்று புரியாமல் விழித்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் கோதை மற்றும் வேணியையும் சமையலறையில் நின்று கொண்டிருக்கும் நிலாவையும் ஓர் பார்வை பார்த்தார்.

“என்ன ஆச்சு அண்ணா?” என்று கிருஷ்ணனும் கேட்க

“நிரஞ்சன் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்றான் தம்பி. படிப்பு முடியட்டுமே. இதை தான நானும் சொன்னேன். வாழ போறது அவங்க தான.. நாம கட்டாய படுத்த முடியாதுல்ல..” என்று தயங்கியபடி கூற வேணி அதிர்ச்சியோடு அவரை நெருங்கி,

“அங்க என்ன நடந்துச்சு அண்ணா.. உண்மைய மட்டும் சொல்லு?” என்க

அவரோ தயங்கியபடி கூறி இருந்தார் அனைத்தையும்.

சுற்றி இருந்த அனைவரும் கனத்த அமைதியோடு நிற்க அங்கு சமையல் அறையில் எல்லோருக்கும் டீ எடுத்து வைத்து கொண்டிருந்த நிலா தன் விழி நீரை துடைத்து விட்டு அனைவருக்கும் டீயை கொடுத்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்று விட்டாள்.

“சரி, பேசி முடிச்சாச்சா.. இனி நான் பேசுறேன். அக்கா என் பையனுக்கு உன் பொண்ணை கட்டி கொடுக்க உனக்கு சம்மதமா?” என்று கிருஷ்ணன் கேட்க
வேணியோ, ‘என்ன செய்வது?’ என்று தன் அண்ணனை பார்த்தாள்.

“தம்பி, நீ எதுக்கும் மகேஷ் கிட்ட…” என்று அவர் கூற

“ தேவையில்ல அண்ணா.. என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான்” என்று கூறியிருந்தார்.

அவர் எதேச்சையாக இதை கூறியிருந்தாலும் தயாளன் முகம் வாட தலை குனிந்தார்.

“அய்யோ அண்ணா, உங்களை குத்தி காட்டணும்னு இதை சொல்லல… உங்கள கஷ்ட படுத்தி இருந்தா மன்னிச்சுடுங்க” என்று பதறியபடி கிருஷ்ணன் கூற

“அப்டிலாம் ஒன்னும் இல்ல தம்பி, மறுபடியும் எதுவும் குழப்பம் வந்துட கூடாதே? அதுக்கு தான் சொன்னேன்…” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டார்.

ஆனால் மகளின் மனம் அறிந்த வேணியோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்க அன்றைய இரவு அவர்கள் எப்படி கடந்தார்கள் என்பது விந்தையே!!.

நடு இரவில் மெல்ல விசும்பும் சத்தம் கேட்டு அருகில் படுத்து கொண்டிருந்தவளை திருப்பினாள் நிலாவின் தங்கை கயல்விழி.

“அக்கா, அழாத அக்கா… கஷ்டமா இருக்கு” என்று கூற
திரும்பி படுத்து தங்கையின் தோளில் சாய்ந்து மேலும் விசும்ப தொடங்கினாள்.

“முடியல கயல், ரொம்ப கஷ்டமா இருக்கு… அத்தான் இப்டி சொல்லுவாங்கன்னு எதிர்பாக்கலை… சின்ன வயசுல எல்லாரும் ‘இவன் தான் உன் புருஷன்’ன்னு சொல்லும் போது அதை பெருசா எடுத்துக்கல. ஆனா எல்லா பொண்ணுக்கும் ஒரு கட்டத்துல ‘தனக்கு வர போறவன் எப்டி இருப்பான்?’னு நினைவு வரும். அந்த சமயத்துல என் கண்ணு முன்னால எல்லாரும் அத்தான காட்டவும் அந்த நிமிஷத்துல இருந்தே அவரை என் புருஷனா நினைச்சு தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… அதான் என்னால….” மேலும் முடியாமல் அவள் திணற அவளின் முதுகை தடவி கொடுத்தாள் கயல்.

“ அக்கா, கவல படாதக்கா… எல்லாம் நல்லதே நடக்கும்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
உண்மையில் இது எல்லாருக்கும் அதிர்ச்சி தான். எல்லாரை காட்டிலும் இவளுக்கு தான் அதிக வலி.
என்ன தான் நேசம் அது வலித்தாலும் வெளியில் இயல்பாய் இருப்பது போல காட்ட அவளுக்கு மிக கடினமாகி போனது.

‘தன் எண்ணத்தை வேறு பக்கம் மாற்றினால் மட்டுமே இதில் இருந்து மீள்வது சுலபம்’ என எண்ணியவள் ஒரு நாள் தாயிடம் வந்து நின்றாள்.

“அம்மா, என் கூட படிச்ச வசந்தி சென்னைல மேற் படிப்பு படிக்க அப்ளை பண்ணி இருக்கா… நானும் மேற்கொண்டு படிக்கிறேன்மா” என்று.

முதலில் ஏதும் பேசாமல் அவர் அமைதியாக இருந்தாலும் தன் மகளை விழியால் அழைக்க அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ அம்மாவ மன்னிச்சுடு கண்ணா…”

“ எதுக்குமா?”

“ உன் மனசுல ஆசைய வளர்த்து விட்டது என் தப்பு தான். அதான் என் பொண்ணு இப்போ ரொம்ப கஷ்ட படுறா. இந்த அம்மாவை மன்னிப்பியாடா” என்று அவர் கன்னம் வருடி கேட்க அவள்,

“ ம்மா, எனக்கு எந்த கஷ்டமும் இல்லம்மா… யாராருக்கு என்ன எழுதி இருக்கோ அது படி தான் நடக்கும். இதுக்கு நீ ஏன்மா மனசை போட்டு குழப்பிக்கிற…” என்று கூற அவளின் நெற்றியில் முத்தம் வைத்தார் வேணி.

‘என் மகள் எப்போதுமே இப்படி தான். எந்த சூழலையும் சுலபமாக கடந்து விடும் குணம் இவளுக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம்’ எப்போதும் போல அப்போதும் அவர் கண்ணீர் பெருமை பொங்க

“ம்மா, சொல்லுமா… நான் படிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“படிடா கண்ணா, உனக்கு என்ன தோணுதோ அதை படி. உனக்கு எங்க போய் படிக்கணுமோ அங்க போய் படி. இந்த மாமா எப்போதும் உனக்கு துணையா இருப்பேன்” என்று பின்னால் நின்று கொண்டிருந்த தயாளன் கூற அவளுக்கு சந்தோஷத்தில் அழுகையை வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்று அவள் கூற அவளின் கண்ணீரை துடைத்து விட்டார்.

அதன் பின் அடுத்து வந்த சில மாதங்களில் வசந்தியின் உறவினர் துணையோடு அந்த கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைக்க நேற்று முன்தினம் தான் வசந்தியின் உறவினரோடு சென்னை வந்திருந்தாள்.

அவசர வேலையாக வெளியூர் சென்று இருந்த தயாளன் நேரே கல்லூரிக்கு வந்துவிடுவதாய் கூறியிருக்க அதன் பின் நடந்தவைகளை தான் நாம் முன் கண்டோம்.

“ஹேய் பப்பாளி, ஹாஸ்டல் வசதியா இருக்கா? எங்க வீட்ல தங்க சொன்னதுக்கு பெரிய மனுஷி மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல” என்று அவன் முறைத்தான்.

ஆம், கிருஷ்ணன் கோதை மற்றும் அவர்களின் ஒரே புதல்வன் மகேஷும் சென்னையில் தான் வாசம்.

‘அவர்கள் வீட்டிலேயே நிலா தங்கி படிக்கட்டும்’ என்று கூற அவள் “வேண்டாம்” என மறுத்துவிட்டாள்.

“ஏன்டா நிலா, எங்க வீட்ல தங்க உனக்கு விருப்பம் இல்லையா?” என்று கோதை கேட்க

“அய்யோ இல்லை அத்தை, எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்… இங்க நீங்க எல்லாரும் என்னை ஏதோ துக்கம் போல பாக்குறது எனக்கு என்னமோ போல இருக்கு. அதுக்கு தான் சொன்னேன். கொஞ்ச நாள் தான்… அதுக்கு அப்புறம் நான் உங்க கூட வந்து தங்கிக்கிறேன்” என்று கூற அனைவரும் அதற்கு மேல் அவளை கட்டாய படுத்தவில்லை.

இங்கு நிரஞ்சன், மகேஷை முறைத்தபடி விறுவிறுவென சென்று விட்டான்.

அவனுக்கு மகேஷிடம் எந்த தனி கோபமும் இல்லை. தன் கண்ணில் படும் சமயமெல்லாம் தயாளன்,
“மகேஷ் மாதிரி ஒரு பையனை பாக்க முடியுமா? தக்கப்பன் பேச்சை தட்டாத தங்க பிள்ளை. எனக்கும் வாய்ச்சிருக்கே தருதலை…” என்று அவன் காது பட சத்தமாக கூற அவன் தாயை முறைத்து விட்டு சென்றுவிடுவான்.

இப்படியாக பல இடங்களில் மகேஷை ஒப்பிட்டு அவன் எந்த தவறும் செய்யாமலே தன் தந்தையிடம் திட்டு வாங்க அதுவே அவன் மகேஷை எங்கு கண்டாலும் முறைக்க வைத்தது.

அவனை எதிரி போல் முறைத்துவிட்டு செல்வான்.
இப்போதும் அவன் வரவும் இவன் கோபமாக நகர்ந்து கொண்டான்.

முதல் வகுப்பிற்கான மணி அடிக்க,
“சரி பப்பாளி, நீ போ… நாம மதியம் கேண்டீன்ல மீட் பண்ணுவோம்” என்று அவளிடமும் வசந்தியிடமும் கூறி கொண்டு இவனும் செல்ல

“ பேசாம நீ இந்த மகேஷை லவ் பண்ணி இருக்கலாம்… எவ்ளோ ஸ்வீட்டா பேசுறேன் பாரு. முன்னாடி ஒன்னு போச்சே ஜிஞ்சேர் மங்கி” என்று வசந்தி கூற

“அடச்சீ அசிங்கமா பேசாத… வா போகலாம்” என்று அவளை இழுத்து சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர,
ஒரு நாள் மதிய உணவு இடைவெளியில்
நிலா, “ மகி, அத்தை மாமா கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு… கால் பண்ணி கொடு” என்றாள்.
அவனும் அவர்களுக்கு போன் போட்டு கொடுக்க கோதையோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

கோதை, “நிலா வீட்டுக்கு வரவே இல்லை… இந்த வாரம் வீட்டுக்கு வா” என்க

“இந்த வாரம் முடியாது அத்தை. எழுத வேண்டியது நிறைய இருக்கு. அதனால இன்னோரு நாள் வரேன்..” என்று கூறிவிட்டு மேலும் சில நேரம் பேசிவிட்டு வைத்தாள்.

இன்று மதிய வகுப்புகள் குறைவு என்பதால் கொஞ்ச நேரம் அதிகமாகவே வசந்தியும் நிலாவும் பொழுதை கழிக்க மகேஷ் வேலை இருப்பதாய் கூறிவிட்டு சென்று விட்டான்.

ஹாஸ்டலில் தங்கும் அவர்கள் பிரிவு மாணவிகளும் அவர்களோடு ஒன்றாய் குழாமிட்டு பேசி கொண்டு இருந்தனர்.

நிலா மட்டும், “எழுத வேண்டியதை காரணம் காட்டி வகுப்பிற்கு வந்துவிட்டாள்.

நிரஞ்சன் வகுப்பை கடந்து தான் அவர்கள் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

ஏனோ, அந்த ஜன்னலின் வழி அவனை அவள் தேட நண்பர்கள் கூட்டத்தில் அவன் தலை மட்டும் இல்லை. அவள் அவனை தேடியபடியே கடக்க ஒருவன் மேல் மோதி நிமிர்ந்தாள்.

“ சாரி, கவனிக்கல…” என்று அவசரமாக கூற அங்கு கைகளை கட்டியபடி அவளை பார்த்திருந்தான் நிரஞ்சன்.

“நீங்களா???” அவள் மேலும் திகைத்து நிற்க

“கண்ணை முன்னாடி வச்சு நட.. அதென்ன ஒரு பக்கம் தலை சைடு வாங்கி நடக்குற…” என்று சிரிப்போடு அவன் கூற அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

‘எப்பா, கோழிக்குண்டு கணக்கா… என்னமா உருட்டுறா கண்ணை!!’ என்று தனக்குள் கூறியவன் அவளை நெருங்கி

“என்னையா தேடுன?” என்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
‘அவன் கண்டு கொண்டான்’ என்பது ஒரு பக்கம்.
‘திட்டுவானோ?’ என்ற பயம் ஒரு பக்கம் என அவள் தலை நிமிர்ந்து அவனை பார்க்க பயந்து ஓடி விட்டாள்.
அவளின் சென்ற திசையை பார்த்து மெல்ல சிரித்து கொண்டான்.
அவளின் செய்கைகள் எல்லாமே அவனுக்கு புதிதாய் இருந்தது.

எப்போதும் அவர்கள் வகுப்பை கடக்கும் சமயம் அவனை தேடுவதும் அவன் அவளை பார்த்து விட்டால் தலையை கவிழ்த்து கொண்டு நடப்பதுமாய் அவளின் அந்த குழந்தை தனத்தில் அவன் வெகுவாக கவரப்பட்டான்.

அவனையும் அறியாமல் அவன் முகத்தில் அவளின் செய்கை சிரிப்பை ஏற்படுத்தி செல்லும்.





மறுநாள்

வசந்தியோடு வந்து கொண்டிருந்தவள் அவர்களின் வகுப்பு வாயிலில் சாய்ந்தபடி கையில் இருந்த செல் போனை நோண்டி கொண்டிருந்த நிரஞ்சன் பட்டான்.
“என்னடி, ஜிஞ்சர் மங்கி… நம்ம ஏரியால மாங்கா பறிக்குது?” என்று வசந்தி காதை கடிக்க அவளை முறைத்தவள் அவனை கண்டாள்.

அவன் அவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.

“போச்சு அந்த ஆபத்தான மிருகம் நம்மள நோக்கி தான் வருது” என்று அவள் கூற நிலா அவளின் கையை அவன் அறியா வண்ணம் கிள்ளினாள்.
அதற்குள் அவர்களை நெருங்கிய நிரஞ்சன்,

“இந்தா…” என்று ஒரு பாக்ஸை அவளிடம் நீட்டினாள்.
“ என்ன அத்…. என்னது இது?” என்று அவள் தயங்க

“பிரிச்சு பாரு” என்று அவன் கூறவும் அவள் வாங்கி பிரித்தாள்.

உள்ளே ஒரு அழகான மொபைல்.

“உனக்கு தான்” என்று அவன் கூற
“ எனக்கா?? ஆனா ஹாஸ்டல்ல மொபைல் யூஸ் பண்ண கூடாதே. யார் கிட்டயும் பேசனும்னா லேண்ட் லைன்ல தான் பேசணும்னு சொல்லி இருக்காங்களே…” என்று அவள் கேட்க

“ப்ச், அதுலாம் ரூல்ஸ்னு அப்டி தான் சொல்லுவாங்க கண்டுக்காத… ஏன் உங்க ஹாஸ்டல்ல வேற யாரும் மொபைல் யூஸ் பண்றதே இல்லையா? அவங்க எல்லாரும் எப்டி யூஸ் பண்றாங்களோ அப்டியே நீயும் யூஸ் பண்ணு… அப்டியே பார்த்தாலும் ஏதும் சொல்லமாட்டாங்க… இதோ இந்த லம்பாடி கூட மொபைல் வச்சு இருக்கே… உனக்கு எதுக்கு பயம்?” என்று அவன் கூற

“எது லம்பாடியா? ஹலோ மிஸ்டர்…” வசந்தி கோவத்தோடு பார்க்க

“நான் மங்கினா நீ லம்பாடி தான்… நீ கொஞ்சம் சும்மா இரு… நிலா, இதுல சிம் போட்டு இருக்கேன்… ஆக்டிவ் ஆகிட்டு… க்ளாஸ்குள்ள போகும் போது சைலண்ட்ல போட்டுக்கோ…” என்று கூறிவிட்டு அவன் நகர

அவனின் ‘நிலா’ என்ற அழைப்பிலேயே ஆனந்த அதிவுற்றவள் அடுத்து அவன் சிரித்த முகத்தோடு நகரவும் சந்தோஷ வானில் பறக்க தான் செய்தாள்.
அவளின் சந்தோஷம் அடுத்த சில நொடிகளில் பறிக்கப் பட போவது அறியாமல்.

வகுப்பு தொடங்கிய நேரம் அனைவரும் அமைதியான சூழலில் பாடத்தில் கவனம் பதித்து அமர்ந்திருக்க நிலா மட்டும் புத்தகத்தின் நடுவில் அவளின் ஆசை அத்தான் கொடுத்த முதல் பரிசையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

பேராசிரியர் அவளை கவனிப்பதை உணர்த்தும் வகையில் அவளை அவர் அறியாமல் வசந்தி சுரண்ட அவள் நினைவு இங்கிருந்தால் தானே.

மெலிதாய் அந்த கை பேசியை வருடி கொடுத்து கொண்டிருந்தாள்.
அதற்குள் அவளை நெருங்கிய அவர்,

“நிலா, வாட்ஸ் திஸ்?” என்று கேட்க
“சார்..” என்று பயந்தபடி எழுந்து கொண்டாள்.
“க்ளாஸ் டைத்துல மொபைல் யூஸ் பண்ண கூடாதுன்னு தெரியாது?” என்று அவர் கேட்க
“சாரி சார்…” என்று தயங்கியபடி கூறினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவர்,
“இந்த டைம் உன்னை சும்மா விடுறேன்… நெக்ஸ்ட் இந்த தப்பு நடக்காம பாத்துக்கோ… அதை இப்டி கொடு” எனவும் அவள் அதிர்வுடன் நிற்க அவர் அதை கண்டு கொள்ளாமல் நகர்ந்தார்.

அடுத்து வந்த நொடிகளை அவள் கண்ணீரோடு தான் கடத்த வேண்டி இருந்தது.

வசந்தி ‘எல்லாரும் பார்ப்பதை’ விழியால் சுட்டி காட்டி உணர்த்த அவள் அதையும் மீறி லேசாக விசும்பி கொண்டிருந்தாள்.

வகுப்பு முடிந்து அனைவரும் எழுந்து செல்ல ஒரு சிலர் மட்டும் அவளை ‘பாவம்’ போல பார்க்க

“ஏய், போய் வேலைய பாருங்க… ஏதோ துக்கம் மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு…. நிலா முதல்ல அழுறத நிறுத்த போறியா இல்லையா?”

வசந்தி போட்ட சத்தத்தில் இருந்த சிலரும் வெளியேற அவர்கள் மட்டும் தனித்து இருந்தனர்.
என்ன சொல்லியும் அவள் அழுகையை நிறுத்தாமல் புலம்பி கொண்டிருந்தாள்.
“ அத்தான் முதல் முதல்ல வாங்கி தந்தது…” என்று குழந்தை போல கூறுபவளை மேலும் கடிந்து கொள்ள முடியவில்லை.

அவளை ‘என்ன சொல்லி சமாதானம் செய்ய?’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் மகேஷ்.

“ஏய், என்ன ரெண்டு பேருக்கும் சாப்பிடணும் தோணலையா?” என்றபடி.

“பப்பாளி, என்ன ஆச்சு ஏன் அழுற? யாரும் ஏதும் சொன்னாங்களா?” என்று அவன் கேட்க வசந்தி தான் நடந்ததை கூறினாள்.

அதை கேட்டு அவன் விடாமல் சிரித்து வைக்க
“சிரிக்காத மகி… எனக்கு அழுகையா வருது” என்று கூற

“ஏய், நிஜமாவே நீ சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கிற பப்பாளி… இந்த சின்ன விஷயத்துக்கா உக்காந்து இப்டி அழுற… நான் கூட என்னமோ ஏதோனு பயந்துட்டேன்…” என்று மேலும் சிரிக்க

“எதுடா சின்ன விஷயம்? அது உனக்கு வேணா சின்ன விஷயமா இருக்கலாம். எனக்கு அப்டி இல்ல… நமக்கு ரொம்ப பிடிச்சவங்க தரக்கூடிய எந்த பொருளும் நமக்கு அது பொக்கிஷம் மாதிரி… அதுலயும் அத்தான் அது எனக்குன்னு முதல் முதலா வாங்கி தந்தது. அது எனக்கு எவ்ளோ பிடிச்சு இருந்துச்சு தெரியுமா? நமக்கு பிடிச்ச பொருள் நம்ம கைய விட்டு போகும் போது வர கூடிய வலி இருக்கே… அது…. அனுபவிச்சா தான் தெரியும்… உனக்கு என்ன காதல் தோல்வியா? அதை நீ உணருறதுக்கு… உனக்கும் கயலை பிடிக்கும் அவளுக்கும் உன்னை பிடிக்கும்… என்னை மாதிரியா?” என்று ஏதேதோ பேசி கொண்டே சென்றவளை தலைக்கு மேல் கை தூக்கி

“அம்மா தாயே, இப்போ என்ன உனக்கு அந்த போன் வேணும் அவ்ளோ தானே? என் கூட வா” என்று அவளின் கையை பிடித்து ஸ்டாஃப் ரூம் அழைத்து வந்திருந்தான்.

“ மே ஐ கமின் சார்”

“வா மகேஷ்…” அவன் பின்னால் தயங்கிய வாறே நின்ற நிலாவை பார்த்தார்.

“ஸாரி சார்… நிலா லைஃப்ல இப்போ தான் மொபைல கண்ணால பாக்குறா. அதான் அது எப்டி இருக்குதுன்னு ஆராய்ச்சு பண்ணிட்டு இருந்தா போல… இனிமே தனியா உக்காந்து ஆராய்ச்சி பண்ண சொல்றேன் சார்…” என்கவும் அவர் சிரித்து கொண்டே,

“மகேஷ், நீ இருக்கியே..” என்றபடி மொபைலை அவளிடம் கொடுத்தார்.

“நிலா, நீ ஃபீல் பண்றது புரியுது. பட் இட்ஸ் மை டியூட்டி… இன்னைக்கு உனக்கு எக்ஸ்க்யூஸ் கொடுத்தா நாளைக்கு இதே தப்பை இன்னொருத்தர் பண்ணுவாங்க… எல்லாருக்கும் என்னால எக்ஸ்க்யூஸ் கொடுக்க முடியாது பாரு… அதான் உன்னோட மொபைலை வாங்கி வச்சுட்டேன்… அட்லீஸ்ட் அந்த பயத்துலயாவது என் பீரியட்ஸ்ல மொபைல் யூஸ் பண்ணமாட்டாங்க பாரு. நீன்னு இல்ல… அந்த இடத்துல யார் இருந்தாலும் இப்டி தான் நடந்திருப்பேன்” என்று அவர் கூற

“ஸாரி சார்” என்று அவள் கூற இருவரும் அவரிடம் விடைபெற்று கொண்டு வந்தனர்.

“எம்மா தாயே… திருப்தியா? இதுக்கு போயா பக்கம் பக்கமா கருத்து சொன்ன… ஆமா என்ன சொன்ன? எனக்கும் கயலுக்கும் எந்த கவலையும் இல்லையா? யார் சொன்னது? கயல் அக்காக்கு கல்யாணம் ஆனா தான் எங்களுக்கு கல்யாணம் நடக்கும்… அதோட என் ஆளு இப்போ தான் 12th படிக்கிறா… அவ காலேஜ் முடிச்சு… இன்னும் ஏகப்பட்ட கவலை இருக்கு எங்களுக்கு…” என்று அவன் கூற இவள் சிரித்து கொண்டே

“சரிங்க சார்… உங்க காதலுக்கும் கவலை கருப்பட்டி எல்லாம் இருக்கு ஒத்துக்குறேன்..” என்று கூற

“குட், இப்படியே சந்தோஷமா சிரிச்ச முகமாக இரு… சீரியல் நடிகை மாதிரி அழுற வேலை வச்சுக்காத…” என்று அவள் தலையை குட்டிவிட்டு சென்றான்.

தொலைவில் இங்கு நடந்த அனைத்தையும் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் நிரஞ்சன்.
எப்போதும் அவளை இந்த மதிய வேளையில் பார்ப்பது வழக்கம். அதிலும் இன்று ஏனோ ஏக குஷி…
அவளை காண வந்தவன் அங்கு அவள் இல்லை என்பதால் வகுப்பிற்கே வந்திருந்தான்.
அப்போது தான் மகேஷிடம் அவள் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
உண்மையில் அவன் அவளிடம் இப்படி ஒரு உணர்வை எதிர்பார்க்கவில்லை.
அவள் மனதில் இருந்து வார்த்தையாய் வந்த வலிகளெல்லாம் அவன் மனதை காயப்படுத்தி சென்றது.
‘அவளுக்கு அவனை பிடிக்கும்’ என்பது அவன் அறிந்த ஒன்று தான். ஆனால் அவன் மறுப்பு அவளை இந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கும் என்பதை அவன் அறியவில்லை.
அவளின் அழுகை அவனை ஏன் காயப்படுத்த வேண்டும்? என்ற சிந்தனை அவனுக்குள் இல்லை.
அவனறியாமலே நிலாவின் மீதான ஈர்ப்பு துளிர் விட தொடங்கியது.
அது அவன் மனதில் காதலாய் மொட்டவிழ்க்குமா??

அதுவும் சாத்தியாமனது அடுத்து வந்த சில தினங்களில்..

நான்கு நாட்கள் வந்த விடுமுறையில் அவள் மகேஷின் வீட்டிற்கு செல்ல அந்த நான்கு நாட்களும் அவனுக்கு நான்கு யுகங்களாய் கடந்தது.
அவளை காணாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவள் அவன் மனதை கொள்ளை கொண்டிருந்தாள்.
‘காதலின் கணம் காத்திருப்பில் தெரியும்’ என்பது போல அவன் அவளின் மீதான தன் நேசத்தை உணர்ந்து கொண்டிருந்தான்.
விடுமுறை கழிந்து அடுத்த நாளில் அவளை காண ஆவலாய் ஓடி வந்தான்.

இத்தனை நாளும் அவன் அவளை தேடியது என்னவோ?
அவளின் குழந்தை குணத்தை காணும் ஆவலாக இருக்க இன்று அவளை தன் மனம் கவர்ந்தவளாய் காண துடித்து கொண்டிருந்தான்.
அவ்வளவு சீக்கிர வேளையில் அவனை அங்கு கண்டு புருவம் நெறித்திட பார்த்தவளை,
“நிலா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்… வா போகலாம்” என்று கை பிடித்து அழைத்து வந்திருந்தான் கேன்டீனுக்கு.

அவனையே கேள்வியாய் பார்த்திருந்தவள் அவனின் மௌனத்தை கலைத்தாள்.

“ என்ன ஆச்சு அத்தான்?”

“அது வந்து… நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும்… நீ தப்பா எடுத்துக்க மாட்டியே?”

அவனின் பீடிகையில் புரியாமல் பார்த்தவள்,
“என்ன சொல்லணும்?” என்றாள்.

“ அது…. எனக்கு… எனக்கு உன்னை ரொம்ப பி.. பிடிச்சுருக்கு நிலா” என்றான்.

அவள் அப்போதும் அமைதியாக அவனையே பார்த்திருக்க அவன் எதிர்பார்த்த எந்த பிரதிபலிப்பும் அவளிடம் இல்லை என்பதால் அவனே,
“என்ன நிலா? நா சொன்னது உனக்கு விளங்கலையா?” என்றான்.

“ம்ம், விளங்குது அத்தான்” என்று கூற அவன் யோசனையோடு அவளை பார்த்து
“ உனக்கு என் மேல கோவமா நிலா?”

“எதுக்கு கோவம் வரணும் அத்தான்?”

“ இல்ல… வீட்ல கல்யாணம் பேசினதுக்கு….” அவன் முடிக்க முடியாமல் திணற

அவள், “அய்யோ கோவமெல்லாம் எதுவும் இல்லை அத்தான். சொல்ல போனா வருத்தம் இருந்தது.. என்னை உங்களுக்கு பிடிக்கலனு சொல்லும் போது… ஆனா இப்போ அந்த வருத்தம் கூட இல்லை… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கூறும் போதே அவள் விழியை விட்டு சிந்திய இரு துளி நீரை வைத்து நாமும் அறியலாம் அவளின் அந்த சந்தோஷ தருணத்தை.

ஆதுரமாய் அவளின் கையை அழுத்தி கொடுத்தான்.

“நிலா, எனக்கு அப்போ வேற வழி தெரியல… விருப்பம் இல்லாம வாழ்க்கைய தொடங்குறதுல எனக்கு இஷ்டமில்ல… கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ரெண்டு பேருக்கும் தான் கஷ்டம்… அதான் அப்டி சொன்னேன்… ஆனா எப்போ நான் உன்னை… உன் கண்ணுல என்னோட காதலை கண்டேனோ… தினமும் என்னை தேடி பாக்குற அந்த கண்கள்… என்னையே அறியாம அதை தேடி… அதை விரும்பின்னு… இப்போ இந்த தருணம் நான் எனக்கான காதலை உணர்ந்து நிக்கிறேன்… என்னை மன்னிச்சு… என் காதலை ஏத்துப்பியா நிலா?” என்று விழியில் ஆவல் ஏந்தி அவளின் கைகளை அழுந்த பற்றி அவன் கேட்க
அவள் பதில் சொல்ல முடியா தவிப்பில் திணறி கொண்டிருந்தாள்.

“ அத்தான்… எனக்கு இது போதும்… நான் தேடிய காதல் எனக்கு கிடைச்சுடுச்சு… ஆனா? ” என்றவளின் விழியை துடைத்து விட்டவன்..

“ நீ சொல்ல வரது எனக்கு புரியுது.. என் அப்பா கிட்டயும் உன் அம்மா கிட்டயும் இந்த விஷயம் பத்தி நானே பேசுறேன்” என்று அவளுக்கு ஆறுதல் கூறியவன் அடுத்து வந்த பத்து நாட்களில் தன் சொந்த ஊருக்கு கிளம்பி இருந்தான்.



நிரஞ்சனின் வீட்டில் வழக்கம் போல அவன் தந்தை அவனை கண்டதும் முகத்தை செய்தித்தாளில் புதைத்து கொள்ள அவரிடம் வந்து நின்றான்.
“அப்பா…”
எந்த பதிலும் அவரிடம் இல்லை மீண்டும் அழைத்தான்.

“அப்பா… நா உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”
அவர் செய்தி பேப்பரை மடித்து வைத்து விறைப்பாக அமர்ந்திருக்க அவனே தொடர்ந்தான்.

நீண்ட மாதம் கழித்து கணவனும் மகனும் பேசிக்கொள்ளும் அற்புத காட்சியை கண்டு மகிழ்ந்த லக்ஷ்மி அவர்கள் அருகில் வந்தார்.

“அம்மா, நான் ஒரு பெண்ணை விரும்புறேன்… அந்த பொண்ணையே எனக்கு பேசி முடிக்க சொல்லுங்க… கல்யாணம் எங்க படிப்பு முடிஞ்ச அப்புறம் தான்” என்று அவன் கூறி முடிக்க

“எடு அந்த கட்டைய…. யார் கிட்ட வந்து என்ன பேசுற? என் தங்கச்சி பொண்ணை கட்டிக்க துரைக்கு கசக்குதாம்… ஆனா வேற பொண்ணை கட்டிக்க நானே போய் இவருக்கு பேசிட்டு வரனுமாம்…” அவர் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருக்க அவனோ வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு

“ அப்பா… இப்போ அந்த பேச்செல்லம் எதுக்கு? எனக்கு அந்த பொண்ணை பேசி முடிப்பீங்களா… இல்ல நானே இழுத்துட்டு போகட்டுமா?” என்க

“டேய்…” என்று பதறியபிடி லக்ஷ்மி அவனை அடக்க

“லக்ஷ்மி, அந்த கடப்பாறையை கொண்டா… நானே இவன் தலையில போடுறேன்… நானே பெத்தேன்… நானே கொன்னேன்னு சொல்லிக்கிறேன்… அடங்காம பேசிட்டா இருக்கான். கொஞ்ச நாள் போனா அவனே மனசு மாறி நிலாவை கல்யாணம் பண்ண ஒத்துப்பான்னு நீ சொல்ல போய் தானே பேசாம இருந்தேன்… இப்போ பாரு.. இவன் பேசுற பேச்சை..” அவர் ஏக தாலத்தில் குதிக்க அவன்,

“நானும் அதே தானப்பா சொல்றேன்” என்றான்.

அவர் மேலும் அவனை முறைக்க மகனின் முகத்தில் தெரிந்த குறும்பில் கணவனை அடக்கி விட்டு,

“டேய் ரஞ்சா… என்ன சொல்ற நீ?” என்று அவனை கூர்ந்து கவனித்து கேட்க அவன் சிரித்து கொண்டே,

“அப்பா கிட்ட நீங்க சொன்னதை தான்மா நானும் சொல்றேன்… எனக்கு நிலாவை பிடிச்சு இருக்கு… போய் அத்தை கிட்ட பேச சொல்லுங்க… ஆனா கல்யாணம் மட்டும் எங்க படிப்பு முடிஞ்ச அப்புறம்னு சொன்னேன்… இவர் என்னடானா? கட்டைய கொண்டா கடப்பாறையை கொண்டானு காமெடி பண்ணிட்டு இருக்காரு” என்று அவன் கூற அந்த தாயும் அவன் சொன்ன செய்தியில் சந்தோஷ மிகுதியில் அவனை கட்டி கொண்டார்.

தயாளனும் தன் சந்தோஷத்தை அவனின் தலை வருடி காட்ட திடீரென மறு நொடி,

“ என்ன விளையாடுறியா? நீ வேணான்னு சொன்னா போய் வேணாம்னு சொல்லவும்… சரின்னு சொன்னா போய் சரின்னு சொல்லவும்… இது என்ன காய்கறி வாங்குற காரியமா? நீ சொன்னது சொன்னது தான்.. நிலா உனக்கு இல்ல… நான் அவளுக்கு ஏத்த வேற நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வச்சுக்கிறேன்” என்று கூற

அவன் அவரை நெருங்கி அணைத்து கொண்டபடி,
“அப்பா உங்களுக்கு நடிக்க வரலை” என்று காதில் கிசுகசிக்க அவனை முறைக்க முயன்று பின் அவனோடு சேர்ந்து சிரித்தபடி அணைத்து கொண்டார்.

அதன் பின் அவனும் அவரும் சேர்ந்தே வேணியையும் பேசி சம்மதிக்க வைத்தனர்.
அவரும் சரியென ஒத்துக்கொண்டார்.

“ எனக்கு என் மகள் எதிர்காலம் பத்தின கவலை தான் அண்ணா… அதுக்கு தான் சீக்கிரமே ரெண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்.. இப்போ தான் என் மக படிக்கிறாளே… அதனால நீங்க சொன்ன மாதிரி ரெண்டும் படிச்சு முடிச்சதும் மூணு வருஷத்துல ஒரே மேடையில இவங்க கல்யாணத்தை பேசி முடிச்சுடுவோம்…”என்று அவர் கூற அவனும் மகிழ்வாய் அவரிடம்,

“ உங்க மக எதிர்காலம் பத்தின கவலையை விடுங்க அத்தை… நிலாக்கு இனி எப்போமே நான் இருக்கேன்..” என்று கூற அந்த தாயுள்ளம் தன்னை விழி நீரால் நனைத்து கொண்டது ஆனந்தத்தில்.

சில வருடங்களுக்கு பிறகு:
பெரியவர்களின் நல் வாழ்த்துக்களோடு குறித்த நன்னாளில் நிலாவை
அவளின் உணர்வோடு அவளையும் உரிமையாக்கி கொண்டான் நிரஞ்சன்.
இனி அவர்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் காதல் ரோஜா மொட்டவிழ்ந்து மணம் வீசும்

முற்றும்​
 

Latest posts

New Threads

Top Bottom