வண்ணங்கள் வாசனைகளால் ஆனவை
புள்ளினங்கள் எனப்படும் பறவைகள் இரை தேடிப் பறக்கும் அந்த அதிகாலைக் கவிதையில் நனைந்தபடி வானத்தைப் பார்த்தேன். பல வண்ணங்களின் சேர்க்கையில் மயக்கியது. மூச்சை உள்ளிழுத்து நன்றாக சுவாசிக்க வாசனை ஒன்றும் தெரியவில்லை. இல்லை வாசனை இல்லை என்றும் முழுதாகச் சொல்லி விட முடியாது. எங்கள் வீட்டில் பொங்கும் பால் வாசனை, எங்கோ மலர்ந்திருந்த பூ வாசனை, வாசல் தெளிக்கும் மண் வாசனை கூடவே எல்லா நகரங்களுக்கும் உரித்தான மெல்லிய சாக்காடை நாற்றம் எல்லாம் தெரிந்தது. ஆனால் வண்ணங்களின் வாசனையை என்னால் வேறுபடுத்த முடியவில்லை அல்லது தெரியவில்லை.
வண்ணங்களைக் கண்களால் பார்த்தலன்றி எப்படித் தெரிந்து கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு தேவியக்காவைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அனைவரும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவள் ஒன்றும் பெரிய திரை நட்சத்திரம் இல்லை. அதனால் உங்களை மன்னித்து வண்ணங்களை மேலே தொடர்கிறேன். தேவியக்காவைப் பற்றி நினைக்க நினைக்க வழக்கமாக மனதில் ஓடும் பிரமிப்பு பன்மடங்கு அதே வீரியத்துடன் தாக்கியது. எத்தகைய பெண்?
அரை டவுசரிலிருந்து முழு பேண்டிற்கு மாறும் நேரம் தான் நாங்கள் அந்த ஊருக்கு குடிபோனோம். அது வரையில் பக்கத்து டவுனிலிருந்த என் அப்பா அந்த கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியதால் இந்தப் புலம் பெயர்தல். பத்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் மற்றொரு ஊருக்கு குடி போவது புலம் பெயர்தலா என்றால் ஆம் என்பேன் நான். ஏனெனில் தாய் மண் என்பதும் இல்லை என்பதும் மனம் சார்ந்தது. நீங்கள் என்ன தர்க்க வாதம் செய்தாலும் நான் கேட்கப்போவதில்லை என்ற உறுதியை எடுத்து விட்டதால் நேரல் களையாமல் சொல்ல வந்ததைக் கேட்டால் நல்லது.
பதினோராம் வகுப்பில் சேர்ந்த எனக்கு அந்த ஊரில் சில தோழர்கள் கிடைத்தார்கள். இப்போது உள்ளது போல தொடுதிரை விளையாட்டுக்களாலும், கணிப்பொறிகளாலும் நிறைந்திருக்கவில்லை என் பள்ளி இறுதி நாட்கள். எனவே கிரிக்கெட் விளையாட(ஏனைய விளையாட்டுக்களான கிட்டிப்புள், கோலி, எறி பந்து போன்றவை எங்கள் தரத்துக்குக் கீழே அதாவது சிறுவர்கள் விளையாடுவது. +1 படிக்கும் நாங்கள் அதை விளையாடினால் எங்கள் கௌரவம் என்னாவது? ), நோட்டுப் புத்தகங்கள் பரிமாறிக்கொள்ள வாகான நட்புக் கிடைத்தது. பெண்களைப் பற்றிய பேச்சையும், வர்ணனைகளையும் தவிர்க்கிறேன்.
அப்படி அரையாண்டுத்தேர்வு முடிந்த ஒரு நாளில் தான் நான் தேவியக்காவைப் பார்த்தேன், மன்னிக்கவும் கவனித்தேன். ஏனெனில் எங்கள் தெருக்கடைசியில் இருக்கும் வீட்டுத் திண்ணையில் இருந்தபடி எங்களை வேடிக்கைப் பார்க்கும் அந்தப் பெண்மணியை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன். அன்று கவனிக்கக் காரணம் இருந்தது. எப்போதும் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் அன்று படிகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். ஏதேனும் காசு விழுந்து விட்டதோ என நினைத்தேன். சற்று நேரத்தில் உள்ளே போய் விட்டாள். அந்தத் தெருப்பெண்கள் அவளோடு பேசி நான் பார்த்ததில்லை. மாலை ஐந்து மணி முதல் விளக்கேற்றும் நேரம் வரை ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் சில பெண்கள் கூடிப் பேசுவார்கள். அதிலும் கோடி வீட்டுப் பெண் கலந்து கொள்ள மாட்டாள்.
தெரு முக்கில் இருக்கும் கடையிலிருந்து அம்மா என்னை பருப்பு வாங்கிவரச் சொல்ல ஓடினேன். அப்போது தான் அந்தப் பெண் "இந்தாப்பா தம்பி! கொஞ்சம் இங்க வா" என்றாள். ஆச்சரியமான நான் "என்னக்கா?" என்றேன். "கடைக்கா போற? எனக்குக் கொஞ்சம் உப்பு மட்டும் வாங்கிட்டு வரியா?" என்றாள். அவள் பார்வை அலைந்தது. சரி குடுங்க என்று சொல்லி காசை வாங்கிக் கொண்டு ஓடினேன். கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டு அம்மாவிடமும் சொன்னேன்.
"நீ ஏண்டா அவ கூப்பிட்டான்னு போன? கழுதைக்கு வேற ஆளே கிடைக்கலியா? நாசமாப் போக! இனி அவ கூப்பிட்டான்னு நீ போயி நின்னே அப்பா கிட்ட சொல்லி தோலை உரிச்சுப்பிடுவேன்" என்றாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. சாதாரணமாக அம்மா மற்றவர்களுக்கு உதவு என்றும் சொன்னதில்லை உதவாதே என்றும் தடுத்ததில்லை. ஆனால் ஏன் இன்று இப்படி? விஷயம் தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலிருக்கவே அம்மாவிடமே கேட்கும் தவறைச் செய்தேன். மேலும் நாலு வசவுகள் கிடைத்தது தான் மிச்சம். இனி வேறு வழியே இல்லை. மணியிடம் தான் கேட்க வேண்டும். இந்த மணியை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். பள்ளிப்படிப்பு ஏறாது ஆனால் மற்ற விஷயங்களில் இருக்கும் ஞானம் ஆளை வியக்க வைக்கும். அதிலும் குறிப்பாக ஆண் பெண் உறவு பற்றிய தகவல் களஞ்சியமாக இருப்பார்கள் இவர்கள். கட்டாயம் உங்கள் ஊரிலிலும் அவன் மணி அல்லது செந்தில் அல்லது குமார் என்ற பெயரில் இருந்திருக்கலாம். இந்த விவரிப்பு கண்டிப்பாக மணியைப் பற்றி அல்ல .
"மணி அந்தக் கோடி வீட்டுல இருக்குற அக்கா எங்கிட்ட உப்பு வாங்கிட்டு வரச் சொன்னாங்கடா வாங்கிக் குடுத்ததுக்கு எங்கம்மா என்னை ஏசுனாங்கடா ஏன்?"
ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தவன் இல்லாத மீசையை தடவிக்கொண்டான். "அப்படித்தான் திட்டுவாங்க! எங்க வீட்டுல அடிச்சே போட்டிருப்பாங்க" என்றான். ஏதோ ஒரு பெரிய ரகசியம் ஒன்று கட்டவிழப் போகிறது என்ற புல்லரிப்பு என்னுள் ஓடியது.
"ஏண்டா" என்றேன் ரகசியக் குரலில் காரணமே இல்லாமல். "அது அப்படித்தான்" என்றான் அதை விடப் பரம ரகசியமாக.
"பிளீஸ் சொல்லேன்! அவங்களுக்குப் பிள்ளைங்க இல்லையா? புருசன் என்ன செய்யுறாரு? ஏன் யாருமே அவங்க கூடப் பேச மாட்டேங்குறாங்க?"
"எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் தாண்டா அவங்க நல்லவங்க இல்ல!"
"அப்படீன்னா?"
"ம்ச்! இதுக்குத்தான் ரெண்டுக்கெட்டான் பசங்களோட பழக்க்கூடாதுன்னு சொல்லுறது. அவங்க ஒரு மாதிரி! புருசன்னு யாரும் இல்லை! அப்பப்ப பஞ்சாயத்து பிரசிடெண்டு வந்துட்டுப் போவாரு. அவங்களுக்குக் கண்ணு குருடானப்புறம் யாருமே வரது இல்ல"
அவனது பதில் முகத்தில் அறைந்தது. அந்த அக்காவுக்குக் கண் தெரியாதா? அப்படியானால் என்னை அழைத்தார்களே? எப்படி?" கேள்விகள் என் மனதில் எழுந்தன. அவற்றை மணியிடம் கேட்க அவன் சிரித்தான்.
"ஏண்டா! அவங்க ஒரு மாதிரியானவங்கன்னு சொல்லுதேன் அதை விட அவங்களுக்குக் கண்ணு தெரியாதது முக்கியமாயிடிச்சா உனக்கு?" என்றான். பிறகு தான் அந்த அக்காவின் பெயர் தேவி என்பதும் உற்றார் உறவினர் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது. அந்த வயதில் இப்படி யாருமற்றவர்களாக ஒருத்தி இருப்பாள் என்ற நினைப்பே என்னை அழுத்தியது. இன்னும் என்னென்னவோ சொன்னான். சிலவற்றை புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை சில விஷயங்கள் என் காதிலேயே விழவில்லை. அதன் பிறகு எனக்கு தேவியக்காவின் மேலான பிரமிப்பும் பரிதாபமும் கூடியது. பிரமிப்பு ஆள் துணையே இல்லாமல் தனியாக தன்னிரக்கம் இல்லாமல் வாழ்கிறார்களே என்று, பரிதாபம் அப்படி வாழ வேண்டி வந்து விட்டதே என நினைத்து. அவர்களுடன் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. சில நாட்கள் காத்திருந்து அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்குப் போன நாளில் தேவியக்கா வீட்டுக்குப் போனேன்.
பேச ஆளில்லாமல் வாழ்வதால் என்னை வரவேற்பாள், எனது பரந்த மனதைக் கொண்டாடுவாள் என்று நான் நினைத்தது போக நாயை விரட்டுவது போல என்னை விரட்டினார்கள்.
"சின்னப்பையனை மாதிரி இருக்கு! இங்க எதுக்குல வந்த? எந்த நாயி உன்னை இங்க அனுப்புச்சி? அவங்க விளங்காமத்தான் போகப்போறாங்க" என்று தொடங்கி காலம் கெட்டு விட்டது பால் மணம் மாறாத பையன் வருகிறான் என்று சொல்லிக் கொண்டே போனாள். அப்போது தான் அவள் என்னை ஏன் விரட்டினாள் என்று புரிந்தது. அக்கா அக்கா என்று கத்தி அவளை அமைதிப்படுத்தினேன்.
"யக்கா! கொஞ்சம் காது குடுத்துத்தான் கேளேன். நான் உங்கூட பேசிட்டுப் போலாம்னு வந்தேங்க்கா! நடு வீட்டு பலராமன் சார் பையன் நான். பேரு ராஜா. அன்னைக்கு உங்களுக்கு உப்பு வாங்கிக் குடுத்தனே?" என்றது சற்றே மௌனமானாள்.
"என்ன பேசணும்?"
சற்றே தயங்கினேன். என்ன சொல்ல?
"உம் வந்து வந்து..உங்களுக்குக் கண்ணு தெரியாதாமே? ஆனா அன்னைக்கி என்னை எப்படிச் சரியாக் கூப்பிட்டீங்க? கண்ணு தெரியல்லைன்னு மத்தவங்க கிட்ட பொய் சொல்லி வெச்சிருக்கீங்களா?"
எனது கேள்வி குழந்தைத்தனமாகப் பட்டதோ என்னவோ சிரித்தார்கள். மணிகள் சிதறினாற்போல இருந்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் அப்படி இல்லை. சாதாரணமாக இருந்தது. எனக்குள் எந்தப் பூவும் பூக்கவில்லை.
"இப்படி உக்காரு!" என்று என்னை அமர்த்தி தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். கஸ்தூரி மஞ்சள் வாசனை தூக்கியது.
"நீ இன்னைக்கு பச்சை சட்டை தானே போட்டிருக்க?"
சட்டையைப் பார்த்தேன் இளம்பச்சை தான்.
"எப்படிக்கா?"
அக்காவின் கண்கள் எங்கோ பார்த்தன. ஆனால் அதில் ஒரு பளபளப்பு. முகத்தில் மெல்லிய சிரிப்பு.
"எல்லா நிறத்துக்கும் ஒரு வாசனை இருக்கு ராஜா! அதை நாம கத்துக்கிட்டோம்னா கண்ணில்லாமலே என்ன கலர்னு கண்டுபிடிச்சிடலாம்." என்றாள்.
அந்த சந்திப்புக்குப் பிறகு நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம். எப்படியோ யாருக்கும் தெரியாமல் நாங்கள் நட்பை வளர்த்தோம். அவள் பேசப் பேச எனக்கு பிரமிப்புக் கூடியதே தவிர குறையவில்லை. அவளுக்குக் கண்கள் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது. பிறகு வண்ணங்களைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினோம்.
"ராஜா! இந்த ஊதாக் கலர் இருக்கே அதுக்குன்னு தனியா ஒரு வாசனைடா! எனக்குக் கண்ணு போனப்புறம் தான் அது தெரிஞ்சதுன்னு நினைக்காதே! சின்னப்பிள்ளையில இருந்தே கலருக்கு வாசனை உண்டுன்னு எனக்குத் தெரியும். என் வாழ்க்கையை சீரழிச்ச ஆண்டவன் கண்ணு குருடாகப் போகப் போகுதுன்னு தெரிஞ்சே தான் இப்படி ஒரு வரத்தைக் குடுத்தான் போல இருக்கு. நீலம்னா வான வாசனை, பழுப்புன்னா மண் வாசனை, அப்புறம் மஞ்சள்னா வெயில் வாசனை, அடுக்கிக் கொண்டே போனாள்.
"நான் நம்புறேன்னு பொய் சொல்லிக்கிட்டே பொறீங்களாக்கா? வானத்துக்கும் வெயிலுக்கும் ஏது வாசனை? மண் வாசனையாவது உண்டு"
"உண்டுடா! வானம் பூமி, மனுஷங்க எல்லாருக்கும் தனித்தனி வாசனை உண்டு. அதை உணர்ற சக்தியை நம்ம மூளை வளர்த்துக்கணும். மொட்டை மாடியில தனியா நின்னு வானத்தை அண்ணாந்து பார்த்து மூச்சை இழுத்துப் பாரேன், வானமே தன்னோட வாசனை என்னன்னு காட்டிக் கொடுக்கும். அப்படியே தான் வெயிலும். காய வெச்ச துணிகளை மடிக்கும் போதே வெயில் வாசனை தெரியுமே?"
அமைதியாக இருந்தேன். முதல் முறையாக தேவியக்கா சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணினேன்.
"எல்லாத்தையும் வாசனைன்னு சொல்றீங்களே? உங்களுக்கு நாத்தமே தெரியாதா?"
முகம் வாடி சீரியசானது.
"சில ஆம்பிளைங்க பக்கத்துல வரும்போதே தெரிஞ்சிடும்டா அவங்க நாத்தமே சொல்லிடும். ஆனா அது தான் எனக்கு விதிச்சது."
"பொம்பளைங்க?"
"அவங்க எங்கே என் பக்கத்துல வராங்க?"
எப்படியோ எங்கள் நட்பை மோப்பம் பிடித்து விட்டான் மணி. எங்கள் வயது அதை விட மூத்தவர்கள் என்று அனைவரும் கேலி பேசினார்கள். ஆனாலும் நான் பொருட்படுத்தவே இல்லை. இவர்களுக்கு என்ன தெரியும் தேவியக்காவின் அருமை? அவர்களது ரசனை அறிவு இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று விட்டு விட்டேன்.
"டேய்! ராஜா! தேவியை நீ தொட்டுப் பார்த்திருக்கியா?"
"சேச்சே! என்னடா நீ?"
"பார்க்கவே இத்தனை அழகா இருக்காளே? அவங்க மார்பும், இடுப்பும் சொக்குதுடா! நம்ம ஊருல அப்படி ஒரு பொண்ணைப் பார்க்கவே முடியாது. அவன் அவன் காத்துக்கிட்டு இருக்கான். நீ தினம் போற தொடலைன்னா எப்படிடா?"
எனக்கு அழுகை வந்தது. அதே நேரம் வெட்கமாகவும் ஏதோ கிளுகிளுப்பாகவும் இருந்தது. அவசரமாக ஒன்றுக்குப் போக வேண்டும் போலவும் தோன்றியது. அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து அலைக்கழித்தன. முன் எப்போதும் இல்லாத அளவு உடல் கொதித்தது. அம்மா என்னவோ ஏதோ என்று பயந்து போய் விபூதி பூசினாள். மறு நாள் ஏதோ தோன்ற அதிகாலையே தேவியக்காவின் வீடு நோக்கி கால்கள் நடந்தன. உள்ளே போட்டிருந்த தாழ்ப்பாளைத் திறக்கும் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும் என்பதால் கிடுகிடுவென உள்ளே போனேன்.
கிணற்றடியில் தேவியக்கா குளித்துக் கொண்டிருந்தார்கள். நெஞ்சு வரை ஏற்றிக் கட்டியிருந்த அரக்கு நிற உள்பாவாடை முழுவதும் நனைந்து அவர்களது அழகை அப்படியே காட்டியது. ஈரத்துணியின் ஊடே தெரிந்த பெண் உடலின் ரகசியங்கள் என்னை என்னவோ செய்தன. என்னையும் அறியாமல் அப்படியே பார்த்து நின்றேன். மஞ்சள் பூச சற்றே பாவாடையைத் தூக்கியபோது வாழைத்தண்டு கால்கள் என் மனதில் மதிந்தன. பேசாமல் கூடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். மூச்சு முட்டியது. ஏதோ ஒன்று என்னை உந்தித்தள்ளியது.
பத்து நிமிடத்தில் புடவை கட்டிக் கொண்டு வந்து விட்டாள்.
"அடடே! ராஜாவா வா வா" என்று உற்சாகமாக ஆரம்பித்தவள் முகம் திடீரென கோபத்துக்குப் போனது. கண்ணீரும், வெறுப்பும் போட்டி போட்டு வழிந்தன முகத்தில்.
"போடா வெளிய! நாயே! இதுக்குத்தான் வந்தியா? உன்னை நல்ல பையன்னு நெனச்சேனே! இப்படி ஒரு கேவலமான ஆசைக்கு மனசுல இடம் குடுத்துட்டியே? உன் வாடையே காட்டிக் குடுத்திடுச்சே! உன் வயசு என்ன? நீ ஆசைப்படுறது என்ன? எல்லா ஆம்பிளைங்களை மாதிரி நீயும் அதுக்குத்தான் அலையுறவனா? வேண்டம்ப்பா வேண்டாம். நல்லாப் படிச்சி நீ நல்லா இருக்கணும்." என்று அழுதாள்.
அவளது கண்ணீர் என்னைச் சுட்டது. மனதின் அழுக்குகள் ஓடி மறைந்தன. அவளது அழுகை என்னைக் கரைத்தது. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. தலையில் அடித்துக் கொண்டு நானும் அழுதேன்.
"அக்கா! என்னை மன்னிச்சிடுங்கக்கா"
"வேண்டாம்! இனி வேண்டாம்! நீ இனிமே இந்த வீட்டுக்கு வராதே! வந்தா நானே உங்கம்மா கிட்டச் சொல்லிடுவேன். என்னை ஏமாத்திட்டியேடா" என்று அழுது கொண்டே இருந்தாள். அன்று அப்படியே வெளியில் வந்தவன் தான். அதன் பிறகு அவள் வீட்டுக்கும் போகவில்லை அவளோடு ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை. +2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சென்னையில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததும் ஊரை விட்டு நான் வந்து விட்டேன். என் நினைவடுக்குகளின் அடி ஆழத்துக்குப் போனாள் தேவியக்கா. எப்போதாவது அம்மாவைக் கேட்பதுண்டு. அப்போது தான் தெரிந்தது அவள் ஊரை விட்டே போய் விட்டாள் என்று. அதன் பிறகு அவளைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. இன்று ஏன் திடீரென அவள் நினைவு வந்தது என யோசித்துக் கொண்டே நின்றேன்.
"ராஜ்! இன்னைக்கு உங்கம்மா நம்ம வீட்டுக்கு வராங்க! ரயில்வே ஸ்டேஷன் போகலையா?" என்று என்னை உசுப்பினாள் வாழ்க்கைத்துணை. மடமடவெனக் குளித்து தயாராகி காரை ஓட்டியபடி எக்மோர் சென்று நடமேடை சீட்டு வாங்கி நடந்தேன். வரிசையாகப் பிச்சைக்காரர்கள் கூட்டம். அதில் ஒரு பெண்மணி நான் கடக்கும் போது சட்டென மூச்சை உள்ளே இழுத்தாள். முகம் மலர்ந்தது. மெல்லிய குரலில் "ராஜா வாசனை வருதே! இன்னைக்கும் பச்சை சட்டை தான் போட்டிருக்கானா?" என்று முணுமுணுத்தாள் அவள். குனிந்து சட்டையைப் பார்த்தேன். கரும்பச்சை பீட்டர் இங்கிலாந்து சட்டை என்னைப் பார்த்து சிரித்தது.