பதிவு -1
கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசேல் என்ற வயல், இதமான காற்றில் அசைவதை இமைக்காமல் பார்த்தப்படி நின்றான். அடர்ந்த தன் சிகையை கோதியவனின் கண்களில் கூர்மை கூடியது. வயலில் இருந்த பார்வை உயர்ந்து தூரமாக இருந்த மலையின் மீது நிலைத்தது. அவன் முகத்தில் இறுக்கம் கூடியது.
புருவங்கள் நெறிய அவன் கைகளை இறுக்கி பிடிக்க, நரம்புகள் தெரிய நின்றவனையே பார்த்தப்படி இருந்த அவன் அன்னை, மகனை நெருங்கி கையைப் பற்றி. “தம்பி, சாப்பிட வாய்யா... விடிந்து எவ்வளவு நேரம் ஆயிடுச்சு....தண்ணீர் பாய்ச்சல் முடிந்தது இல்ல?”
“ஆமாம் மா. விடியல வயல் போகும்போது கஞ்சி தண்ணீர் குடித்து விட்டு தானே போனேன்....மா, பசி இல்ல...நேரத்துக்கு சாப்பிட நாம பட்டணத்து வாசி யா என்ன ? பசித்துப் புசி என்பது பெரியவர்கள் வாக்கு தானே...நீங்க சொல்லி தந்தது தானே மா”.
வயலை ஒட்டி அமைந்த அந்த குடில் வாயிலில் இருந்த திண்ணையில் அமர்ந்தான்.
அழகிய தோட்ட வீடு. குளிர்ந்த ஓலையால் மேய்ந்த ரெண்டு பத்தி வீடு. பெரிய முற்றம். ஒரு பத்தியில் உட்கார பழைமையான மர நாற்காலிகள், சுவரில் புத்தக அலமாரி, ஆங்கில தமிழ் இலக்கியங்கள், தாய் மண், களை எடு என நம்மாழ்வார் புத்தகங்கள்.
முற்றத்தில் இருந்த சின்ன சமையல் அறையை ஒட்டிய திண்ணை தான் அவனோட சாப்பாட்டு அறை. களி, கருவாட்டுக் குழம்பு ஊற்றி, பிசைந்த வண்ணம் இருக்கவும், “சாப்பிடும்போது கண்டதை நினைக்காத ...சாப்பிடு ராஜா. எல்லாம் நல்ல படியாக நடக்கும் ...மனசை குழப்பிக்காத”.
“ம் மா....என உண்டு, வாய் அலம்பியவன்... எல்லோரும் சாப்பிட்டாங்களா ?”
“ஆமாம் பா.. அவங்க கேட்டாங்க என்று தான் இதை செய்தோம்”.
“ஓ ....நல்லது மா. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்”.
“வெளியே விசயம் கசிந்து விட கூடாது...எச்சரிக்கை மா”.
“தெரியும் தம்பி. எல்லோ ஒரொரு வீட்டிலும் தங்க வச்சிருக்கிறோம். வெளிய தெரிய வாய்ப்பு வராது. கவலைப்படாதயா” ..
“இன்று ஒரு நாள் ...நாளைய விடியல் ...நமக்காக இருக்கணும்”...கைபேசி சத்தம் கேட்கவும், எழுந்து எடுத்தவன்.
“என்ன செய்து இருக்கிற பரணி, எல்லா இடமும் கவர் பண்ணிட்டியா ?, சமுக வலைத்தளம் மிகப்பெரிய ஊடகம், அதை சரியாக கையாண்டால்.... வெற்றி பெற்று விடலாம்”.
“அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும், முந்தைய நிகழ்வுகள் சாட்சியாக இருக்கிறதே” பரணி வருத்தமாக.
“புரட்சிகளின் தொடக்கம் எங்கேயும் அப்படித்தான்,
அன்று தனித்தனியாக துவங்கி இணைந்தோம். இன்று இணைந்தே தொடங்குவதால், நல்லதே நடக்கும் பரணி.
“அதான் விஜய், ஓரளவு சமூக சிந்தனை உள்ளவங்க, தலைமையாக உள்ளவங்களையும் இணைத்திருக்கிறேன். விவரங்களை மின்னஞ்சல் பண்றேன் பாருங்க விஜய்”.
“ஓ ..சரி..இடம் தயார் பண்ணி வைத்து விட்டாய் அல்லவா?
“சட்டப்படி அனுமதி வாங்கிவிட்டாய் அல்லவா ?”
“நாம் எப்படி தொடர்பு கொள்வது என்றும் ஏற்பாடு செய்து விட்டாய் அல்லவா ?”
“கவனம், யாருக்கும் சந்தேகம் வந்து விடாமல் பார்த்து நடந்து கொள்ளுங்கள்....கொஞ்சம் தப்பினாலும்...போச்சுடா”...என பேசி விஜய் போனை வைத்தான்.
விஜய், பரணி இருவரும் இயற்கையை நேசிப்பவர்கள். இருவருமே பொறியியல் பட்டதாரிகள். பரணி தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறான். இயற்கை வேளாண்மையில் நாட்டம்கொண்டு, விவசாயத்திற்கு வந்தவன்.
இருவரும் தங்கள் மண் மாதிரியை சோதிக்க வந்த இடத்தில் பழக்கம், நட்பாக உறுதி அடைந்தது. நட்பும் விருத்தி அடைந்தனர்.
சாதரணமாக தொடங்கிய பேச்சுவார்த்தை, அனுபவம் கொண்டு தொழில் யோசனைகள், கருத்துக்கள், என நட்பு இறுகியது. நட்பும் பெருகியதன் விளைவாக, இன்றைய சூழல் உருவாகியுள்ளது.
ஒத்த எண்ணங்கள் கொண்டவர்கள் இணைந்தால் நன்மையே தரும்.
--------------
அந்த குளத்துக்கரை அருகில் உள்ள மரத்தடியில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாங்க.. வாங்க போய் பார்க்கலாம்.
ஐந்தாறு இளம்பெண்கள் தாவணி, சேலை என உடுத்தி, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் புருவ நேர்த்தியும், நக பராமரிப்பும் கூர்ந்து நோக்கும்போது , இந்த இடத்துக்கு அந்நியர் என சொன்னது. அவர்கள் தங்களுக்குள் பேசியவைகள்...
“ஏய். இந்த ட்ரெஸ்லயும் நல்லா தான் இருக்கிறோம் இல்லடி?” என மாலா சொல்ல,
விது , "ஆமாம் ..ஆமாம்" என சொன்னாள்.
மற்றொருத்தி “ஆமாம் டி விது, ...செம யா இருக்கிற”...என விதுவை கலாய்த்தாள்.
“அடிங்” ...என விது துரத்த,
ராணி, “நிசமாடி....பர்தா மாதிரி சுடி, நைட்டினு ....நம்ம ஊருக்கு ஒவ்வாத உடையை உடுத்தி இருக்கிறோம்... இதமான இந்த பருத்தி சேலை ....சுகம் டி”.
“போடி அங்கிட்டு...எப்ப அவுந்துறோமோ கிலி பிடிச்சு நிக்கிறோம்...இவளுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது...அடி வெளுத்துடுவேன்”
“இன்னைக்கு ஒரு நாள் தானேடி, அட்ஜஸ்ட் கரோ ஜி”.
“டிகே, சேலைக்கு, உன் தாவணி பரவாயில்லை யா ?”
“இது எல்லா பக்கமும் தெரியிற உணர்வு வருதுடி அதனால் ...சங்கடமாக இருக்கு....இது முன்ன சரி...இப்ப நமக்கு பாதுகாப்பான உடை சுடி தான்டி”.
“இங்கேயே வாழ்றவங்க கொடுத்து வைச்சவங்க..!” ரசனையோடு சொன்னாள்.
“ஆமாம், கொடுத்து வைச்சவங்க தான்...அவங்களுக்கு இல்லாமல்....உழைப்பைக் கொடுத்து, தன்னையே அடகு வச்சவங்க ?”
“என்னடி சொல்ற”? ...
“நாம தங்கி இருக்கிற வீடு பார்த்த இல்ல...எந்த வசதியும் இல்ல.... ஆமா... வசதியும் இல்ல”.
“நீ அப்படி வர்றியா ..?”
“அப்படி பார்த்தால் பாவம் தான் ...அதை மாற்ற தானே நம்ம விஜய் முயற்சிக்கிறாப்பல ..நல்லது நடந்தால் சரி.... ஏதோ நம்மால் முடிந்தது.
மாறும் மாற்றிடுவான் ...நம்புவோம்”.
“ஆமாம், வெளியே சுற்ற வேண்டாம்னு சொன்னான் ல ...எவ்வளவு நாள் போகுமோ ...வேலையைப் பார்ப்போம் வாங்க” என கலைந்தார்கள்.
அரசு பங்களா
பெரிய மேசை ...அதில் நடுவாக மூன்று கரை வேட்டிகள்.. எதிரில் தமிழக உயர் அதிகாரிகள்.
இன்றைய பத்திரிக்கை தலைப்புச்செய்தி பார்த்தீங்களா ..?
“பல திட்டங்களும் இங்கே கிடப்பில் போட்டுட்டோம்னு கிழிகிழினு கிழித்து போட்டு இருக்கிறாங்க” என ஒரு தேசிய பத்திரிக்கையை மேசையில் வைத்தார்.
“எல்லாம் ...எடுத்து பாருங்க யா” ..
“பார்த்தோம் ஐயா” ..
“அது எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிக்கைபா, அப்படித்தான் சொல்வான்” என்றார் உடன் இருந்தவர்.
“மக்கள் போராட்டத்தால் நாம செய்ய முடியலையே”.
“இவங்க உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி சொல்வாங்களா ?”
உயர் அதிகாரி ஒருவர், “சார், அரசின் கொள்கை, சட்டம், மக்காளாட்சி இதனால்தான் தாமதமாகிறது சார்”.
“கொஞ்சம் அடக்கி வாசி, தேர்தல் வருது, அவங்களை பகைத்துக் கொள்ள கூடாது அவங்களை வைத்து தான் செய்யனும்” “சரி...சரி” ...என குரலை குறைத்தவர்
“இப்ப என்ன செய்ய போறீங்க ..?”
“என்ன சார் செய்யணும் ?”
“அந்த வேதா கேட்கிற பாதுகாப்பை கொடுங்க .. அவன் பார்த்துப்பான்”.
“சார் ...சட்டம் ஒழுங்கு ...என தமிழ்ச்செல்வி ஐ ஏ எஸ் இழுக்க ...”
“அதை பார்க்க நீங்க இருக்கிறீங்களே”.
“விஜய கார்த்திகேயன் சார், நீங்க நிறைய பேசுங்க, உங்கள் நண்பன் என்று சொன்னால் மட்டும் போதாது, நிஜமாக்குங்க மக்களை சமாதானப்படுத்தி, சம்மதிக்க செய்யுங்கள்”.
“என்ன சரி தானே” ...என மற்றுமொரு உயர் போலீஸ் அதிகாரியைப் பார்த்து கேட்க... “எஸ் சார்” என சொன்னார்.
“பார்த்துக்கோங்க” ...என அமைச்சர்கள் எழுந்து வெளியேறினர். அனைவரும் எழுந்து மரியாதை செய்ய, தலையை ஆட்டி ஏற்றபடி சென்றனர்.
தமிழ், அருகில் நின்ற விஜய கார்த்திகேயன் டிஎஸ் பி யிடம்.... பொருமினார்.
“ஆமாம், இவங்க மக்கள் முன்னால் ஒன்று சொல்றது, இங்கே வேற சொல்றது...நாம எதை பின்பற்ற....?”
“தமிழ், பகலில் பக்கம் பார்த்து பேசணும், இரவில் அதுவும் கூடாது ...சுவருக்கு கூட காது இருக்க போகுது”.
இருவரும் பள்ளிக்காலம் முதல் நண்பர்கள். ஒன்றாகவே படித்து பணிக்கும் சேர்ந்தவர்கள்.
அமைச்சரை அனுப்பிவிட்டு வந்த உயர் போலிஸ் அதிகாரி.. “நாளைக்கு நமக்கு சவால் ஆன நாள் தான், சமாளித்து தான் ஆகணும், வேதா பிளான்ட் தொடங்க தேவையான பாதுகாப்பை ஏற்பாடு பண்ணிக்கங்க”.
“ஓகே சார்”.
மேலதிகாரி ஒருவர், “எல்லாமே கிராமங்கள் தான் ...பெரிய தலைவேதனையாக இருக்காது”....
“எப்படி சொல்றீங்க ..?”
“கிராமத்தில் இருக்கிற குடும்பங்களே சில தான்... அதிலும் வயசானவங்க தானே ...அவங்க என்ன செய்ய முடியும்...பார்த்துக்கலாம்”.
“நாளைக்கு நூறு நாள் வேலைக்கு சிலரை அனுப்பிடலாம்... பெண்கள், ஆண்கள் கிளம்பிடுவாங்க”.
அமைச்சர்கள் சுற்று பயணம், ஐபிஎல் வேற நடக்குது எல்லாம் டிவியில் உட்கார்ந்து இருப்பாங்க...
அப்ப அந்த பகுதியில் மின்சாரம் இடையூறு இல்லாமல் பார்த்துக்கங்க... என இன்னும் சில கட்டளைகளை இட்டவர்...வெளியேறினார்.
இருவர் முகத்திலும் திருப்தி இல்லை. “என்ன விஜி இப்படி சொல்றாங்க .. டிவி, போட்டி என்று எளிதாகச் சொல்றாங்க ..?”
ஆட்டு மந்தையாக எண்ணுகிறார்கள். “யோகத்தில் வந்த பதவி தானே, காசு எல்லாம் பார்த்துக்கும் என்ற இளக்காரம் வேற என்ன ?”
பார்ப்போம் எப்படியும் நமக்கு இனி ஓய்வில்லை, நமக்கு ரெண்டு பக்கமும் இடி...?
“சமாளித்து வந்து விடுவோமா ?”
“எல்லாம் அவன் செயல், அவனே அறிவான்” என கை இரண்டையும் வானை நோக்கி உயர்த்தினான்.
நாளைய விடியல் யாருக்கு ......?
தொடரும்....