Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL விக்கிரமாதித்தனும் வான்பரியும் Tamil Novel

Status
Not open for further replies.

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
அத்தியாயம் 9:



"மாமா... நீங்க இல்லைனா நான் செத்துடுவேன்.... இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க... ப்ளீஸ்..." அழுது வீங்கிய கண்களுடன் விக்ரம் நின்றிருந்தான். அதாவது பூவிழியின் நினைவுகளுக்குள் விக்ரம் நின்றிருந்தான்.

"பூவிழி... இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா நான் செத்துடுவேன்..." எதிரிலிருந்த ஆண் கூற, பூவிழியின் அழுகை இன்னும் அதிகமாகியது.

"அப்போ வாங்க... ரெண்டு பேரும் சேர்ந்தே செத்துடலாம்..." பூவிழி கண்களை துடைத்துக் கொண்டு கூற, "செத்த பிறகு சொர்கத்துக்கோ இல்ல நரகத்துக்கோ போனாக் கூட நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்... என்னுடைய மனசுல என்னைக்குமே உனக்கு இடம் கிடையாது புரிஞ்சிக்கோ..." என்றான் அவன் கோபமாக.

"நீங்க பொய் சொல்லலாம்... ஆனா உங்க கண் பொய் சொல்லாது... நீங்க என்னை தான் லவ் பண்ணறீங்க. என்னை மட்டும் தான்..." பூவிழி அவனின் கண்களை ஊடுருவி பார்க்க, சற்று தடுமாறியவன் பிறகு,

"ம்ச்... கனவு உலகத்துல இருக்காத பூவிழி. சரி நீ என்னை லவ் பண்ணற இல்ல. உன்னுடைய லவ் உண்மையானதா இருந்தா, நீ விக்ரம் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கனும்...."

"உங்களை மனசுல வச்சிட்டு எப்படி உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க முடியும் மாமா. இதுனால உங்களுடைய அண்ணன் வாழ்க்கை தான் பாதிக்கப்படும்... புரிஞ்சிக்கோங்க... நான் இல்லைனா ஆயிரம் பொண்ணு வருவாங்க... ஏன் என்னை ஃபோர்ஸ் பண்ணறீங்க..." என்றாள் என்னவளின் குரல் அழுகையில் நடுங்கியது.

"ஆயிரம் பொண்ணு வருவாங்க... ஆனா எல்லாருமே நீயாக முடியாது பூவிழி...." என்றான் அவன். அவன்- விஜய்... விக்ரமின் தம்பிதான்...

"நான் செத்துட்ட பிறகு உங்க அண்ணனை எனக்கு தாளி கட்ட சொல்லுங்க..." என்றவள் கோபமாக அவ்விடத்தை விட்டு நகர, அடுத்த நிமிடமே விஜய் தன் கையின் மணிக்கட்டு பகுதியை பட்டென்று ஒரு சிறிய கத்தியால் வெட்டியிருந்தான். சத்தம் கேட்டு திரும்பிய பூவிழி, விஜயின் இரத்தத்தைப் பார்த்து பதறிப்போக, விஜயோ அடுத்து கத்தியை தன் கழுத்தில் வைத்திருந்தான்.

"நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா அடுத்து என்னுடைய கழுத்தை தான் வெட்டிக்குவேன். எனக்கு நூறு வருஷம் சந்தோஷமா வாழனும்னு ஆசை. என்னுடைய சாவுக்கு நீ காரணம் ஆகிடாத... ப்ளீஸ் ஒத்துக்கோ..." என்றவனிடம் அடுத்து என்ன கூறுவது என்று பூவிழிக்கு தெரியவில்லை.

"மாமா... முதல்ல ஹாஸ்பிடல் போகலாம். அப்புறம் இதைப்பத்தி பேசிக்கலாம். என்கூட வாங்க..." என்று பூவிழி கதற எங்கே அவன் செவிமடுத்தால் தானே? வேறுவழியின்றி அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இதோ மோதிரம் அணிவிக்க விக்ரமிடம் தன் கையை நீட்டியிருந்தாள்.

இது அனைத்தையும் நிச்சய மோதிரம் அணிவதற்காக அவள் கையை பிடித்த அந்த ஒரு நொடியில் உணர்ந்துக்கொண்ட விக்ரம், தன் கையில் இருந்த மோதிரத்தை கீழே நழுவ விட்டிருந்தான். இந்த அதிர்ச்சியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை... பூவிழி விஜயைத்தான் காதலிக்கிறாள் என்பது ஒரு அதிர்ச்சி என்றால், தன் திருமணத்திற்காக விஜய் கையை அறுத்துக்கொண்டது மற்றொரு அதிர்ச்சி.

அந்த திருமண பேச்சுவார்த்தையை அங்கேயே முழுக்கு போட்டுவிட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தவனுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதிர்ச்சியா? ஆச்சரியமா? என்னவென்று கூறுவது...! அவன் பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த அந்த வெண்குதிரை அவன் எதிரே நின்றிருந்ததைக் கண்டு கண்களை கசக்கிக் கொண்டவன் இது அதுவா? என்று அதை சுற்றி சுற்றி பார்க்க, அதைப் போலத்தான் தெரிந்தது. இருந்தாலும் மண்டபம் என்பதால் மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் குதிரையோ என்று நினைத்து அருகில் குதிரை ஓட்டி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க, தூரத்தில் விஜய்தான் விக்ரமை நோக்கி வந்துக்கொண்டு இருந்தான். வேறு மனிதர்கள் யாரும் அங்கு எங்கும் இல்லை.

"ஹேய்... நீ அந்த தீவுல இருந்த குதிரை தான?" என்றபடி அவன் அதன் தாடையில் கைவைத்து லேசாக வருடியபடி கேட்க, அதுவும் ஆம் என்பதுபோல் தலையாட்டியது.

"இவ்வளவு நாள் எங்க இருந்த... எனக்கு ஒரு பிரச்சினைனா வந்து நிக்கறியே எப்படி?" என்றவன் அடிப்பட்ட அதன் காலை பரிசோதிக்க, காயம் மறைந்து அந்த இடத்தில் மட்டும் வட்டமாக முடி வளராமல் அதன் தழும்பு தெரிந்தது.

அதைப்பார்த்ததும் நூறு சதவிகிதம் இது அதுதான் என்று உறுதி செய்தவன், விஜய் அருகில் நெருங்கி விட்டதை உணர்ந்து, அவனிடம் பேச பிடிக்காமல் அங்கிருந்து அகல நினைத்து இந்த குதிரையிலேயே ஏறி ஓடிவிடுவோமா என்று தோன்றிய மனவோட்டத்தை தலையைத் தட்டி கட்டுப்படுத்தினான். பின்னே சேணம் இல்லாத குதிரையில் ஏறி பயணித்தால் கீழே விழுந்து மண்ணைக் கவ்வுவது உறுதியாயிற்றே!

விஜயுடன் பேச விக்ரம் விரும்பாததற்கு காரணம், என்னதான் விஜய் விக்ரமிற்காக இவ்வாறு செய்திருந்தாலும் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது பெறும் தவறு தானே!

"விக்ரம்... என்ன ஆச்சு. ஏன் எல்லாத்தையும் பாதியிலயே நிறுத்திட்டு வந்துட்ட... என்ன பிரச்சினை உனக்கு?" என்று அருகில் வந்த விஜய் கேட்க, அவனை மௌனமாக ஒரு பார்வை பார்த்தவன், பிறகு மூச்சை இழுத்துவிட்டு கொண்டு கையை நீட்டினான். அவன் கையை நீட்டிக்கொண்டு நின்றிருப்பதை பார்த்து அவனின் சக்தி திரும்ப வந்ததை உறுதிசெய்துக் கொண்ட விஜய், "உன்னுடைய சக்தி திரும்ப வந்ததெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லைடா... விஸ்வநாதன் மாமா இதைப் பற்றி தெரிஞ்சு தானே கல்யாணத்துக்கு கேட்டாரு... அப்பறம் உன் பிரச்சினை என்ன?" என்று கேட்க,

"ஏன் உனக்கு தெரியாதா? நான் தான் ‌பூவிழியோட கைய தொட்டனே... நீ கவனிக்கலையா... அவ அதிகமா அழுத விஷயத்தை பார்த்தேன். கைய லேசா தொட்டதுக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு... இதுல கல்யாணம் பண்ணனுமா? நான் அப்நார்மல் தான்... பைத்தியம் இல்லடா..." என்றான் விக்ரம். பூவிழி தன்னிடம் காதலைக் கூறி அழுததை விக்ரம் பார்த்துவிட்டான் போல என்று யூகித்த விஜய்,

"விக்ரம்... பூவழி சின்ன பொண்ணு... ஒரு அட்ராக்ஷன்ல அப்படி நடந்துகிட்டா... அதுக்குன்னு கல்யாணத்தை நிறுத்தனா எப்படி?" என்றான் சாதாரணமாக.

"சரி ... உன் கையை முதல்ல கொடு... அப்பறம் நான் இந்த கல்யாணம் நடக்கனுமா வேண்டாமான்னு முடிவு பண்ணறேன்..." என்று விக்ரம் கூறி தன் கையை அவனிடம் மீண்டும் நீட்ட, விஜயோ இரண்டடி பின்னால் நகர்ந்து, தன் கைகளை நன்றாக பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டான். முழுக்கை சட்டை அணிந்திருந்ததால் அவன் கை முழுவதும் மறைக்கப்பட்டது...

"என்னடா சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற... பூவிழியை விட நல்ல பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா... தயவுசெய்து வா..." என்று விஜய் கூற, அவன் சட்டையின் காலரை பிடித்து நிறுத்திய விக்ரம், தன் ஒரு கையால் நன்றாக அவன் தாடையை பற்றிக்கொள்ள, விஜய் எவ்வளவு திமிறியும் அவன் விடுவதாக இல்லை.

சில வினாடிகளில் அவனை விடுவித்த விக்ரம், தான் உணர்ந்து கொண்ட சில உண்மைகளால் கோபமுற்று சட்டென்று விஜயின் கண்ணத்தில் அறைந்துவிட, கதிகலங்கி நின்ற விஜய், அடுத்த நிமிடமே உள்ளே அடக்கி வைத்திருந்த கண்ணீரையெல்லாம் வடிக்கத் துவங்கினான்.

"நீ என்ன லூசாடா... நான் உன்கிட்ட சொன்னேனா எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு... நான் ரிஸ்க் எடுத்து அந்த தீவுக்கு போனது விஸ்வநாதன் மாமாவுக்காக தான்... பூவிழிக்காக ஒன்னும் இல்லை... என்னுடைய ப்ராப்ளம் தெரிஞ்சும் அவர் தன்னுடைய ஒரே பொண்ணை எனக்கு கட்டி வைக்க நினைக்கிறாரே. அந்த தியாக உணர்வுக்காக... அவருக்கு ஒரு நல்ல பெயரை தேடி தரனும் அப்படிங்கிற எண்ணத்துல தான் நான் ரிஸ்க் எடுத்தேன்... நீ என்னடான்னா எனக்கு பூவிழியை பிடிச்சிருக்குன்னு நினச்சு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியேடா... பெரிய தியாகின்னு நினைப்பா என்ன? இத்தனை வருஷத்துல இதுவரைக்கும் யாராவது ஒரு பெண்ணையாவது மனசுல நினைச்சு இருப்பனா... எல்லாத்தையும் உன்கிட்ட தானடா ஷேர் பண்ணுவேன்... என் நிலைமை புரிஞ்சு தான ஒவ்வொரு விஷயமும் செய்வேன். நான் எப்படி ஒரு பொண்ணு மேல ஆசையை வளர்ப்பேன்... உனக்கு சொல்லறதெல்லாம் வேஸ்ட்... நீ எனக்கும் உண்மையா இல்லை... உன்னை லவ் பண்ண பொண்ணுக்கும் உண்மையா இல்லை... ஏன் உனக்குமே உண்மையா இல்லை.... இனி என் முகத்துலயே முழிக்காத..." என்றவன் திரும்பி இரண்டடி வைத்து பிறகு யோசனை வந்தவனாக மீண்டும் விஜய்யிடம் திரும்பினான்.

"இரண்டு வருஷமா நான் ஏன் உன்னை தொடரதில்லைன்னு அடிக்கடி கேட்பியே... ஏன் தெரியுமா... உன்னை தொட்டால் உன்னுடைய ஃபீலிங்ஸை என்னாலயும் உணர முடியும்.... அனுபவிக்க முடியும்... ஒருநாள் எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு வந்து என்கிட்ட சொன்ன... அப்போ தான் முடிவு பண்ணேன் இனி உன்னை தொடக்கூடாதுன்னு. ஏன்னா இப்போ உனக்கு ஒரு லவ் வந்துடுச்சு... உனக்குன்னு பர்ஸனல் ஃபீலிங்ஸ் வரும். அதுவே எனக்கும் அந்த பொண்ணு மேலயே வந்துடுச்சினா என்ன செய்யறது... அது நான் உனக்கு செய்யற துரோகம் ஆச்சேன்னு தான் உன்னை அவாய்ட் பண்ணேன். மனசளவுல கூட நீ லவ் பண்ணற பொண்ணை நினைச்சிடக் கூடாதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தா, நீ என்னடான்னா லவ் பண்ண பொண்ணையே எனக்கு கட்டி வைக்க பார்த்து இருக்க... இது ஒன்னும் தியாகம் இல்லடா... முட்டாள்தனம்... ஒழுங்கா பூவிழியை கன்வின்ஸ் பண்ணப் பாரு..." என்றவன் நடையைக்கட்ட இவ்வளவு நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த அந்த குதிரை விக்ரமின் பின்னாலேயே சென்றது.

விக்ரம் கூறுவது உண்மைதான்.... மற்றவர்களை அவன் தொடும்போது அவர்களின் உடல் வலியை மட்டுமல்லாது மனதின் வலியையும் உணர்வான். அப்படித்தான் ஒருமுறை தெரியாமல் ஒரு சிறுவனை தொட்டுவிட்டான். அவனின் மனதின் வலியை விக்ரம் உணர்ந்ததால் அந்த வலிக்கு காரணமான அந்த சிறுவனின் தந்தையையே கொன்றுவிட துடித்திருக்கிறான். ஒருதடவை ஒரு குழந்தையின் தாயைத் தொட்டதால் அந்த பெண் அனுபவித்த பிரசவ வலியை அனுபவித்தது மட்டுமல்லாமல் அந்த குழந்தை மீது பாசம் பொங்கி வழிந்து, கிட்டத்தட்ட ஒரு வாரமாக இரவில் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று அந்த குழந்தையை பார்த்துவிட்டு வந்திருக்கிறான். இதுபோன்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கோபம், பாசம் எல்லாம் சம்மந்தமே இல்லாமல் வரும்போது பொருந்தாக் காதலும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று விஜயை தொடுவதையே தவிர்த்தான். அவனுக்காகவே வேறு ஊருக்கு பணி நிமிர்த்தமாக சென்றான்.

இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்துக் கூட பார்க்காத விக்ரம், பூவிழியுடன் திருமணம் என்றதும் உயிரையே பணயம் வைக்க துணிந்துவிட்டானே... அப்படியானால் விக்ரமிற்கு பூவிழியை பிடித்துள்ளது என்று நினைத்து தான் விஜய் பூவிழியுடன் அவ்வாறு பேசியது. மற்றபடி அவனுக்கு அவள் என்றால் உயிர். ஆனால் அண்ணனுக்காக தன் உயிரானவளையே விட்டுக்கொடுக்க துணிந்து அப்படி அவளிடம் பேசினான். பேசிவிட்டு வந்தபிறகு அவன் அழுத அழுகை அவனுக்கே புதிதுதான்... இரண்டு வருடங்களாக தன் காதலைச் சொல்லாமல் அவளின் படிப்பு முடிய காத்துக் கிடந்தவனுக்கு விக்ரம் பூவிழியின் திருமணப் பேச்சு பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், அவன் தன் அண்ணனின் வாழ்க்கைக்காக அமைதி காத்தான்.

ஆனால் விக்ரமின் சக்தி விஜய், பூவிழியின் வாழ்க்கையை மட்டுமல்லாது விக்ரமின் வாழ்க்கையையும் சேர்த்தே காப்பாற்றியது என்னவோ உண்மைதான். இவ்வளவு நாளாக விக்ரமாதித்தனுக்கு சாபமாக தெரிந்த அவனின் சக்தி இன்று வரமாக தெரிந்தது....


- தொடரும்.

இப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...



 
Status
Not open for further replies.
Top Bottom