Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விரல்நுனி சம்பளம்

Senthil Kumar

New member
Messages
1
Reaction score
0
Points
1
விரல்நுனி சம்பளம்

R.செந்தில் குமார்

சார்மினார் தூண்கள் தாங்க, கோல்கொண்டா கோட்டையை கொண்டிருக்கும் ஹைதராபாத் நகரம், பரபரப்பான இந்த நகரின் நடுவில் பெரிய ஏரி, அந்த ஏரியின் நடுவில் பரபரப்பை சட்டை செய்யாமல் ஆழ்ந்த தியான நிலையில் ஒரு புத்தர் சிலை. அகோர பசிக்கு உணவாக பிரியாணியும், அவ்வப்போது சிற்றுணவிற்கு கொரிக்கசுவையான கராச்சி பேக்கரி பிஸ்கட்களும் நிறைந்த அந்த அரசநகரத்தின் விரிவாக்கம் தான் அங்குள்ள ஹைடெக் சிட்டி. சுற்றிலும் மென்பொருள் நிறுவனங்கள், கூகில், மைக்ரோசாப்ட், போலாரிஸ், டெல் என பல பன்னாட்டி நிறுவனங்களின் கிளைகள் அங்கு உள்ளன. நவீன அடிமைத்தனம் என தெரியாத மேல்தட்டு சிந்தனையில் திளைக்கும் பொறியியல் பட்டதாரிகள் அங்குள்ள இந்த நிறுவன்ஙகளில் பணிபுரிகிறார்கள்.. இரவா ? பகலா ? என குழப்பம் ஏற்படும் வண்ணம் 24 மணி நேரமும் பரபரப்போடு இயங்கும் மென்பொரும் நிறுவனங்கள் நிறைந்தது அந்த ஹைடெக் சிட்டி. இவ்வளவு பட்டதாரிகள் மேல்தட்டுசிந்தனையுடன் உலா வந்தாலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் ஒழுக்கம் அவர்களுக்கு இல்லாமல் போனது மிகவும் துரதிஷ்டம். இதனால் அந்த நகரவாசிகளுக்குநெருக்கடியை மனதில் மட்டுமல்லாதுசாலைபோக்குவரத்திலும் சந்திக்க வேண்டியுள்ளது.

அங்குள்ள ஒரு ஒரு முன்னனி நிறுவனத்தில் பணிபுரிபவன் நம் ஷ்யாம். சற்று ஒல்லியான ஆனால் தொப்பை விழுந்த தேகம், முள்ளம்பன்றியின் முதுகு போல் எப்போதும் நிமிர்ந்து நிற்கும் அவன் தலை ரோமங்கள், அந்த ரோமங்களில் மேல்பகுதியில் தன் வயதை மறைக்க அரைகுறையாய் செயற்கை கருப்பு மையை வேறு தீட்டி இருப்பான். துரு துருவென இருக்கும் கண்கள், கணிணியில் நடனமாடும் விரல்கள் என மொத்தத்தில் “ஓ காதல் கண்மனி” படத்தில் வரும் துல்கர் சல்மான் நாற்பது வயதில் எப்படி இருப்பாரோஅப்படி ஒரு தோற்றம். ஆனால் சிறுவயதில் போலியோ சொட்டு மருந்து கொடுக்காததால் அவனால் தன் கால்களிலை சுயமாக இயக்க இயலாது. ஆகையால் இந்த சமூகம் அவனை மாற்றுதிறனாளியாக அவனை அடையாளபடுத்தியது. ஷ்யாம்பிறந்தது, வளர்ந்த்து, படித்தது எல்லாம் சென்னை நகரில்.ஷ்யாம் தற்போது பிழைப்பிற்காக 20 வருடங்களாக ஹைதராபாத் நகரில். அதுவும் ஹைடெக் சிட்டியில் வசித்து வருகிறான். உயர் வாடகை வசிப்பிடமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவன் வசிக்கிறான். வசிப்பிடத்திற்கு அருகிலேயே அவனது அலுவலகம் அமைந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே தன்னால் மற்றவர்களை போல ஓடியாடி விளையாட முடியாத காரணத்தினாலோ என்னவோ அமர்ந்து விளையாடும் காணொளி விளையாட்டில் (விடியோ கேம்)ஷ்யாமுக்கு அலாதி பிரியம். எப்படிபட்ட காணொளி விளையாட்டு என்றாலும் கணிணியை வென்று விடுவான். இந்த அலாதி பிரியத்தின் காரணமாகவே வீட்டில் மெய்நிகர் உண்மை (வெர்சுவல் ரியாலிட்டி) விளையாட்டுகளில் தன் பொழுதை கழிப்பான்.

ஷ்யாம் குடும்பம் மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட ஒரு கிருஸ்துவ குடும்பம். மாற்றுதிறனாலி என்பதால் ஷ்யாமிற்கு அதீத இறை நம்பிக்கை. ஆம். கால்கள் கொண்டு ஊன்றிநிற்க இயலாத ஒரு மாற்றுதிறனாளிக்கு இறைநம்பிக்கை தானே ஊன்றுகோல். அதனால் தான் ஷ்யாமிற்கு இந்த கற்பனை ஊன்றுகோல் மீது அதீத நம்பிக்கை. ஒவ்வோரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் தேவாலயம் சென்று வழிபடதவறமாட்டான். அவன் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் அவனுக்கு அமைந்த துணைவியும் தேவாலயத்தில் தான் பரிட்சயமானார். ஷ்யாமின் துணைவியார் பெயர் காவ்யா. துணைவியார் காவ்யா அங்கு ஒரு மருத்துவமனையில் பணி செய்கிறார். பன்னிரண்டு வயதில் ஒரு மகன் மற்றும் பத்து வயதில் ஒரு மகள் என சிறிய குடும்பம்.

ஷ்யாம் பணிபுரியும் மென்பொருள் நிறுவனம் அவ்வப்போது அவனை ஆன்சைட் என்ற பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். ஆகையால் வருடத்தில் சில மாதங்கள் குடும்பத்தை பிரிந்து ஆம்ஸ்டர்டாம், கலிபோர்னியா, லண்டன் போன்ற வெளிநாட்டு நகரங்களில் தனிமையில் கழிக்க வேண்டிய நிலை. ஏற்படும். சமூக ஊடங்களில் வெளிநாடு சென்ற புகைப்படங்களை ஷ்யாம் பதிவேற்றம் செய்வதால் மற்றவர்கள் பார்வைக்கு அது ஒரு உல்லாச பயணமாக தெரியும். ஆனால் ஷ்யாமுக்கு மட்டும் அந்த வெளிநாட்டு பயணத்தில் தான் அனுபவிக்கும் சிரமங்கள் தெரியும். தன் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்(க்ளையன்ட்) தன்னை சந்தேகங்கள் கேட்டு எப்படி வருத்தெடுக்க போகிறான் என்று முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கான தீர்வுகளை வெளிநாடு போகும் போது கொண்டு செல்ல வேண்டும். ஆனாலும் அந்த வெளிநாட்டு பயணத்தின் நடுவில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் சில சுயபுகைபடத்தை(செல்ஃபி) எடுத்து முகநூலிலும் தன் நம்பர்கள் வாட்சாப் குழுக்களிலும் பகிர்ந்து தன் பயணத்தில் மகிழ்ச்சியாய் இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவான். ஆனால் அவன் நிறுவன வாடிக்கையாளர் கொடுக்கும் நெருக்கடி அவனை உண்மையில் அந்த வெளிநாட்டு பயணத்தை அனுபவிக்க விடுவதில்லை.

ஷ்யாம் தன்னுடைய நாற்பதாவது வயதில் அதுவும் தன் நிறுவனத்தில் ஒரு குழுவை வழிநடத்தும் தலைவன் (டீம் லீடர்). அது என்னவோ தெரியவில்லை ஷ்யாமின் குழுவில் அவனுக்கு கீழ் பணிபுரியும் சக ஊழியர்களில் பெரும்பகுதியினர் பெண்களாகவே நியமிக்கப்பட்டனர். தன் குழுவில் இத்தனை பெண்கள் இருப்பதால் நம் ஷ்யாமுக்கு எப்போதும் தலைகால் புரியாது. வீட்டில் இருக்கும்வரை தனக்கு திருமணமான நினைப்பு இருக்கும். அலுவலகம் வந்துவிட்டால் தனக்கு திருமணம் நடந்தை அவன் மனம் மறந்துவிடும் ஒரு சராசரி ஆண்மகன். அதனால் தினமும் அலுவலத்திற்கு மிக உற்சாகமாக வருவான்.

என்னதான் மாற்றுதிறனாளி என்றாலும் ஆண்மகன், ஆண்மகன் தானே. ஒரு சராசரி ஆணுக்குரிய சில பலவீனங்கள் நம் ஷ்யாமிற்கும் உண்டு. எப்போதும் பெண்கள் மத்தியில் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்வது அவனுக்கு கைவந்த கலை. டீம் மீட்டிங் எனப்படும் குழு சந்திப்பில் கூட அவனது புத்திசாலித்தனம் வெளிப்படும். பொதுவாகவே மிக புத்திசாலியான நம் ஷ்யாம் தன் குழுவில் இருக்கும் பெண்களிடம் உரையாடும் போது இன்னும் பெரிய புத்திசாலியாக தன்னை காண்பித்து கொள்வான்.

என்ன செய்வது குழு தலைவன் ஆயிற்றே ? அப்படி தான் இருக்க வேண்டும். அதுவும் தன் குழுவில் பெண்கள் அதிகம் இருக்கையில் அவர்கள் மத்தியில் உரையாடும் போதுகண்டிப்பாக தன்னை புத்திசாலியாக காட்டி கொள்ளவேண்டிய கட்டாயம் ஷ்யாமிற்கு உண்டு. எனவே அவன் அலுவலத்தின் மற்ற ஆண் ஊழியர்கள் கிண்டலாக “ஆண்களில் ராமன் கிடையாது”, “இந்த உலகத்தில் எவனுமே ராமன் இல்லை” போன்ற திரைப்பட பாடல்வரிகளை முனுமுனுத்துக் கொண்டே செல்வார்கள்.என்னதான் இறைநம்பிக்கை உள்ள ஒரு நபர் என்றாலும் ஷ்யாமும் சராசரி ஆண்மகன் தானே.

இன்றைய கைபேசி உலகில் அனைத்தும் விரல்நுனியில் கிடைக்கும் என்ற நிலை. இது ஷ்யாம் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். காலையில் அலுவலகம் செல்ல டாக்சி வேண்டுமானால் ஊபர், ஓலா போன்ற கைபேசி செயலிகளில் மூலம் விரல்நுனியில் அழைத்துவிடலாம். தனக்கு ஆறு இலக்க சம்பளம் என்பதால் பேடிஎம் போன்ற செயலிகளில் எப்போதும் பணம் வைத்து கொண்டு இருப்பான். ஏதேனும்பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதென்றால் உடனே வாங்கி விடுவான். பேடிம், அமேசான் பே, கூகில் பே போன்ற நிதிசெயலிகள் மூலம் வாங்கினால் கேஷ்பாக் கிடைக்கும் பணம் மிச்சம் என்பான். இப்படியான ஒரு நவீன நுகர்வு கலாச்சாரத்தில் ஊரிப்போன மேல்தட்டி சிந்தனைக்கு ஷ்யாமும் விதிவிலக்கல்ல.

சென்னையில் வசிக்கும் போது ஷ்யாமை வீட்டிற்கு வந்து பார்க்க எப்போதும் ஒரு நண்பர்கள் பட்டாளம் இருக்கும். ஞாயிற்றுகிழமைகளில் ஷ்யாமின் வீட்டில் அப்போது ஒரு பெரிய பட்டாளமே குவிந்திருக்கும். அவன் ஹைதராபாதிற்கு குடிபெயர்ந்த பின் அந்த நண்பர்கள் பட்டாளம் குறைந்து போனது. இருந்தாலும் அவ்வபோது அந்த பழைய சென்னை நண்பர்கள் ஹைதராபாத் வந்தால் ஷ்யாம் வீட்டிற்கு வர தவறுவதில்லை. அப்படி அவர்கள் வந்தால் போதும் உணவு உண்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என்பது அவன் வீட்டில் எழுதப்படாத விதி. அந்த உணவை வீட்டில் சமைக்காமல் ஸ்விக்கி, ஜொமாடோ போன்ற கைப்பேசி செயலி மூலம் விரல்நுனியில் வீட்டிற்கு வரவைத்து விடுவான். நண்பர்களுடன் திரைப்படம் செல்ல உடனே புக்மைஷோ கைப்பேசி செயலியில் திரைப்படம் செல்ல முன்பதிவு செய்து விடுவான்.

முன்பதிவு செய்து திரைப்பட டிக்கெட் கிடைத்துவிட்டால் உடனடியாக டாக்சியும் விரல்நுனியில் ஊபர் செயலிமூலம் வரவழைத்து திரைப்படத்திற்கு கிளம்பிவிடுவான். இப்படி ஒரு விரல்நுனி உலகில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வு இன்றைய அவசர உலகில் மிகவும் வசதியாக இருப்பாதாக நினைக்கும் ஒரு பெருமிதசிந்தனையை அவனிடத்தில் காண முடியும்.

2016 நவம்பர் எட்டாம் நாள் நம் பாரத பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த தினம். அது நம் ஷ்யாம் போன்ற விரல்நுனி வசதிகளுக்கு பழகிப் போன நபர்களை துளியும்பாதிக்கவில்லை. அன்றாட வீட்டு உணவிற்கு தேவையான மளிகை பொருட்களை கூட கடைக்கு சென்று வாங்காமல் பிக்பாஸ்கெட் போன்ற கைப்பேசி செயலி மூலம் வீட்டிற்கு வரவழைத்து விடுவான். இதற்கு அவனுடைய மாற்றுதிறனாலி ஆகையால் கடைவீதிக்கு செல்ல இயலாது என ஒரு காரணமும் உண்டு.

நம் ஷ்யாம் போன்றவர்களை இந்த செல்லா நோட்டு அறிவிப்பு என்ன செய்து விட முடியும் ? நாடே கொந்தளித்தாலும் நம் ஷ்யாமின் வாழ்வு அன்றைய செல்லா நோட்டு காலகட்டத்தில் எந்த சலனமும் இல்லாமல் நகர்ந்த்து.. தான் சந்தித்த நண்பர்களிடம் கூட நம் ஷ்யாம் பேடிம், கூகில்பே போன்ற இணைய பரிவர்த்தனைக்கு நம் இந்திய மக்கள் பழகி கொள்ள வேண்டும் அதில் பல வசதிகள் உள்ளது என டிஜிட்டல் இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கி அரசியல் பேசுவான். ஷ்யாம் அப்படி ஒரு அரசியல் அறிவாளி. பெரிதாக எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாத ஷ்யாம் இந்த இணைய பரிவர்த்தனையும் ஊக்குவிக்கும் இந்த செல்லா நோட்டு அறிவிப்பை மிகவும் வரவேற்று பேசுவான். இவனுடைய சமூக ஊடக பதிவுகள் கூட இந்த செல்லா நோட்டு அறிவிப்பை வரவேற்க்கும் விதமாக அன்று இருந்தது. வாட்சாப் குழுக்களில் கூட இவன் விவாதங்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாய் வம்படியாய் இருந்த்து.

உல்லாச பயணம் என்றால் ஷ்யாமிற்கு கொள்ளை பிரியம். அதுவும் குடும்பத்தினரை தவிர்த்து நண்பர்களுடன் தனி பயனம் என்றால் ஷ்யாம் தன்னை திருமணமாத இளைஞனாகவே நினைத்துக் கொள்வான். ஆபத்தான மலை பிரதேசமான லடாக், லேஹ் போன்ற பிரதேசங்களுக்கு நண்பர்களுடன் உல்லாசமாகபலமுறை சென்றுள்ளான். அவ்வபோது குடும்பத்தினருடன் விடுமுறை காலத்தில் சுற்றுலாவும் செல்வான்.

இப்படி எந்த சலனமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த நம் ஷ்யாம் வாழ்க்கை மாதமாதம் தான் பணிபுரியும் நிறுவனம் தரும் ஊதியத்தையும், தன் துணைவியாரின் ஊதியத்தையும் நம்பி இருந்தது. அவ்வப்போது தன் மாமனார் தரப்பிலிருந்து ஷ்யாம் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நச்சரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்காகவே தன் துணைவி தரப்பிலிருந்து உறவினர் எவரும் வீட்டிற்கு வந்தால் அவர்களை சந்திப்பதை தவிர்த்து விடுவான்.

அவனுடைய சிந்தனை எல்லாம் இந்த ஹைதராபாத் நகரில் அதுவும் தான் பணிபுரியும் ஹைடெக் சிட்டியில் சொந்த வீடு என்பது இன்னமும் ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பது தான். சற்று எட்டி வங்கியில் கடன் வாங்கினால் அந்த சொந்த வீடு என்ற அந்த கனவை அடைந்துவிடலாம், வங்கியில் கடன் வாங்கினால், தற்போது உள்ள விரல்நுனி வாழ்வின் வசதிகளை தற்காலிகமாக துறக்க வேண்டும் என்ற சிந்தனை அவனுக்குள் ஓடியது. தற்போது உள்ள வசதியான வாழ்க்கையை துறக்கவும் அவனுக்கு மனமில்லை. அதனால் சொந்த வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிப் போட்டு கொண்டே வந்தான். என்ன தான் ஆறு இலக்க சம்பளம் வாங்கினாலும் ரியல் எஸ்டேட் துறையின் விலைவாசி சொந்த வீட்டை இது போன்ற டிஜிட்டல் ஏழைகளுக்கு அடைய முடியா இலக்காகவே வைத்துள்ளது. பல நேரங்களில் சொந்த வீடு வைத்திருக்கும் தன் அலுவலக நண்பர்களை பற்றி அவன் சிந்திப்பான், தன் நண்பர்கள் சொந்த வீட்டிற்கான வங்கி கடனை திருப்பி செலுத்துவதில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கழிந்து விடுகிறது என்ற யதார்த்த நிலையை மிகவும் உணர்ந்தவன் நம் ஷ்யாம்.

இப்படி வெளிநாட்டு பயணம், உள்நாட்டு நண்பர்களுடன் உல்லாச பயணம், ஆறு இலக்க சம்பளம், மற்றும் தன் கைப்பேசி செயலிகளுடன் வசதியான விரல்நுனி உலகம் என ஷ்யாம் வாழ்வு பெரிய சலனமில்லாமல் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் அவன் நிறுவனம் பல நேரங்களில் அவனுக்கு வருடாவருடம் கொடுக்கும் ஊதிய உயர்வை நூதன முறையில் கொடுக்காமலோ, குறைத்து கொடுத்தோவஞ்சித்து வந்ததை அவன் உணரவில்லை. என்ன தான் வெளிநாட்டு பயணம் என நல்ல நல்ல ஊர்களுக்கு பணி நிமத்தமாய் ஷ்யாமை அனுப்பி வைத்து அவனை அவன் நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊழியனாக நடத்தினாலும் ஊதிய உயர்வு என்று வரும்போது அவன் நிறுவனத்தின் மனிதவள துறை அவனை பெரிதாக கண்டுகொள்வதில்லை.

பல வருடங்களாக ஷ்யாம் ஊதிய உயர்வு பற்றி பெரிதாக கவலை கொள்வதும் இல்லை. ஆனால் இன்று தன் நாற்பத்தி மூன்று வயதில் தன்னை விட திறமை குறைவாய், தான் பயிற்சியளித்த ஒரு இளைய ஊழியராக இருந்த பார்த்தசாரதி எனும் நண்பர் தனக்கு உயர் பதவியில் அதுவும் பிராஜக்ட் மானேஜராய் வரும் போது தான் ஷ்யாமிற்கு சற்று தன்னை சுற்றி நடப்பது பற்றி தெரிந்து கொள்ள முனைந்தான். கார்பரேட் நிறுவனத்தின் உண்மை முகம் அப்போது தான் நம் ஷ்யாமிற்கு புரிந்தது. நாற்பது வயதை கடந்த ஊழியர்களை ஒரு கார்பரேட் நிறுவனம் இப்படி தான் அவமானப்படுத்தும் என்பது ஷ்யாமிற்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. ஷ்யாம் இந்த நிறுவனத்திற்கு இரவு பகலாய் 20 ஆண்டுகள் பணி செய்துள்ளான். ஆரம்ப காலத்தில் தன் இளைய பருவத்தில் இந்த நிறுவனம் அளித்த ஊதிய உயர்வு, ஊக்க தொகை, பதவி உயர்வு என்பது தன் திறமைக்கு கிடைத்த அங்கிகாரம் என நினைத்து பெருமிதம் கொண்டிருந்தான்.

அந்த பெருமிதம் தற்போது சுக்குநூறானது. தான் இந்த நிறுவனத்தில் பணியில் சேரும் போது இருந்த பல மூத்த ஊழியர்கள் கடந்த சில வருடங்களாக மெல்ல மெல்ல நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அந்த ஊழியர்களுடன் முகநூலில், டிவிட்டர் போன்ற ஊடங்களில் மட்டும் ஷ்யாம் நட்பை தொடர்ந்து கொண்டிருந்திருந்தான். அந்த மூத்த ஊழியர்களில் முகநூல் பதிவுகளை பார்த்து அவர்கள் வேறு எங்கோ நல்ல பணியில் இருப்பதாக நினைத்து கொள்வான். முகநூலில் நடுத்தர வர்க்கம் தான் படும் துன்பங்களை பதிவிடுவதில்லையே, அதனால் ஷ்யாம் அவர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். தான் பணி செய்யும் நிறுவனம் அந்த மூத்த ஊழியர்களை வஞ்சித்து விட்டுதான் தனக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் அளித்தது என்பதை ஷ்யாம் அப்போது உணரவில்லை.

ஒருநாள் பணி நிமித்தமாக நம் ஷ்யாம் சென்னைக்கு வர நேர்ந்தது அப்போது தன் நிறுவனத்தில் பணிபுரிந்த தன்னுடைய பழைய குழு அதிகாரியான வளவன் என்பவரை சந்தித்தான். அவர் தான் ஷ்யாமை ஊக்குவித்து அவன் திறமையை வளர்த்தவர். அவர் தன் பணியை ராஜிநாமா செய்துவிட்டு செல்கையில் வேறு நல்ல நிறுவனத்தில் உயர்பதவி கிடைத்துள்ளது என கூறிவிட்டு சென்றார். ஆகையால் தற்போது வளவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஷ்யாம் விசாரித்தான். அப்போது வளவன் சொன்ன பதில் ஷ்யாமிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ! வளவன் தற்போது செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்தில் தன் தந்தை விட்டு சென்ற பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருப்பதாக கூறினார். ஏன் வளவனக்கு இந்த நிலை என வினவினான். அப்போது அவர் சொன்ன பதில் ஷ்யாமிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐம்பது வயதை கடந்துவிட்ட தன்னை அந்த நிறுவனம் மேலும் பணியில் அமர்த்தி கொள்ள விரும்பவில்லை என்பதால் பல வகையில் தொல்லை கொடுக்க ஆரம்பித்தாக வளவன் கூறினார். பணியில் வேண்டிமேன்றே குறை கண்டுபிடிக்கும் பிராஜக்ட் மேனேஜர், வருட ஊதிய உயர்வை நிராகரிப்பது, சிறிய தவறு என்றாலும் ஊதியத்தை குறைத்து தண்டனை அளிப்பது என வளவனக்கு பல தொல்லைகளை கொடுத்தது அந்த நிறுவனம். இருந்தாலும் வளவன் தன் ஹைதராபாத் சொந்த அடுக்கு மாடி வீட்டின் மீது வாங்கிய வங்கி கடன், மற்றும் தன் பெற்றோர் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடன், தன் மகிழுந்துவின் மேல் வாங்கிய கடன் போன்றவற்றை திருப்பி செலுத்துவதற்காக இந்த அவமானங்களை பொருத்து கொண்டு அந்த நிறுவனத்தில் பணியை தொடர்ந்தார் வளவன்.

முன்பு இருந்ததை விட மிக கவனமாக தன் பணியில் எந்த சிறு தவறும் நிகழ கூடாது என்ற பதட்டத்துடனேயே தன் பணியை அன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து செய்தார் வளவன். ஆனாலும் கார்பரேட் நிறுவனம் தன் கொள்கை முடிவாக ஐம்பது வயது நிரம்பிய வளவனை போன்ற ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பவது என்பதில் பிடிவாதமாய் இருந்தது. ஆகையால் வளவன் எதிலாவது தவறு செய்து சிக்குவார் அந்த தவறை காரணமாக்கி அவரை வேலையிலிருந்து துரத்திவிடலாம் என அந்த நிறுவனத்தில் மனிதவள அதிகாரி கண்கொத்தி பாம்பாய் காத்துக்கொண்டிருந்தார். மிகுந்த எச்சிரிக்கையுடனும், பதட்டத்துடனும் பணி செய்த வளவன் மீது எந்த தவறின் பழியையும் அந்த நிறுவனத்தால் சுமத்த முடியவில்லை. ஆகையால் அந்த நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் ஒரு அரஜக வழியை கடைபிடித்தனர்.

அன்று ஒருநாள் வழக்கம் போல் காலை தன் நிறுவனத்திற்கு பணி செய்ய வந்தார் வளவன். தன் அலுவலகத்தின் கதவு திறக்கும் அடையாள அட்டை காட்டப்பட்டும் கதவு திறக்கவில்லை. ஏன் கதவு திறக்கவில்லை ? என அலுவலக காவல் அதிகாரியை வளவன் விசாரித்தார், காவல் அதிகாரி அவரை மனிதவள அதிகாரியை அறை எண். 502ல் சந்திக்குமாறு கூறினார். அலுவலக அறை எண். 503ற்கு சென்றார் வளவன். அங்கு மனிவள அதிகாரி வளவனை கைகுலுக்கி புன்னகையுடன் வரவேற்றார். மனிதவள அதிகாரியை சுற்றி நான்கு உயரமான நபர்கள் முக நேர்த்தியாய் சபாரிசூட் அணிந்துகொண்டிருந்து நம் வளவனை முறைத்து பார்த்துகொண்டிருந்தார்கள். இவர்களுடன் ஒரு வக்கீலும் இருந்தார். மனித வள அதிகாரி ஒரு கடிதத்தை வளவனிடம் நீட்டி அதில் வளவனை கையொப்பமிடுமாறு கூறினார்.

கடிதத்தை வாங்கி படித்த வளவன் அது ராஜிநாமா கடிதம் அதில் தான் ஏன் கையொப்பமிக வேண்டும் ? என திருப்பி கேட்டார். ஆனால் மனித வளம் அதிகாரியுடன் இருந்த உயர்ந்த சபாரி சூட் நபர் கையொப்பமிடுகிறாயா ? அல்லது.......... என மிரட்டினார். கூட இருந்த வக்கீலும் “சார் ! அமைதியாக கையொப்பமிட்டுவிட்டு உங்க செட்டில்மெண்ட வாங்கிட்டு போங்க, பிரச்சனை பண்ணாதிங்க. இப்போ கையொத்து போடலேனா இருக்குற கொஞ்ச நஞ்ச செட்டில்மெண்டும் கிடைக்காது. அப்புறம் கோர்ட்டு, கேசு, வக்கீல் பீஸ்னு நீங்க தான் அலையனும். ஒன்னும் கிடைக்காது” என நயமாக மிரட்டினார். யாருக்கும் போன் செய்ய கூடாது என்று தன் கைபேசியையும் பிடிங்கி கொண்டார்கள். செய்வதறியாது அவர்கள் கேட்டது போல் கையொப்பமிட்டுவிட்டு கொடுத்தார் வளவன்.

கடித்தை வாங்கி கொண்ட மனிதவள அதிகாரி “வளவன் ! இப்போ நான் உங்களை அலுவலத்திற்கு கூட்டி செல்கிறோன், நீங்கள் உங்களுக்கு இன்னொரு பெரிய நிறுவனத்தில் உயர்பதவி கிடைத்துள்ளதால் தான் தற்போது இந்த நிறுவனத்திலிருந்து ராஜிநாமாசெய்துவிட்டு செல்கிறேன்” என விடைபெறுகிறோன் என உங்கள் செக்சனில் உள்ள சக ஊழியர்களிடம் கூறிவிட்டு செல்லுங்கள் என கராராக கூறினார். வளவனும் வேறு வழியில்லாமல் அவ்வாறே செய்தார். பிறகு ருபாய் மூன்று லட்சத்திற்கான காசோலை ஒன்றை வளவனுக்கு கொடுத்து அவரை மனிதவள அதிகாரி வழியனுப்பி வைத்தார். இப்படி தான் அந்த நிறுவனம் தன்னை வெளியேற்றியது என்று தன் சோகத்தை நம் ஷ்யாமிடம் பகிர்ந்து கொண்டார் வளவன்.

பின்பு பல நிறுவங்களில் வளவன் தன் அனுபவங்களை கூறி விண்ணப்பித்தும் ஐம்பது வயது நிரம்பியர் என்பதால் வளவனுக்கு எந்த நிறுவனமும் வேலை தர முன்வரவில்லை. கார்பரேட் நிறுவனங்களில் கொள்கை ஒற்றுமை தனக்கு தெரியாதை எண்ணி வளவன் மிகவும் வருந்தினார். வேலை இழந்ததாலும், வேறு வேலை எதுவும் கிடைக்காத்தாலும் வளவன் ஹைதராபாத்தில் இருந்த தன் சொந்த வீட்டை விற்று இருந்த கடனையெல்லாம் அடைத்துவிட்டு குடும்பத்துடன் தன் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டதாக கூறினார். பிழைப்பிற்காக தன் தந்தை விட்டு சென்ற தன் பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்வதாக வளவன் கூறினார்.

வளவனின் இந்த கதையை கேட்டு நம் ஷ்யாமிற்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை. தன்னை ஊக்கபடுத்தி நிறுவனத்தில் வளர்த்துவிட்ட வளவனுக்கே இந்த நிலை என்றால் தன்னுடைய நிலை என்னவாகும் ? என்ற பயம் நம் ஷ்யாமை படபடக்க வைத்தது. வளவனுக்காவது ஒரு சொந்த கிராமத்தில் கொஞ்சம் பரம்பரை நிலம் இருந்ததால் விவசாயம் செய்து கொண்டு பிழைக்கிறார். தன்னுடைய் நிலை அப்படியில்லயே என்று எண்ணும் போது ஷ்யாமிற்கு மேலும் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றதுடன் சற்றே உறங்கினான். இரவு இரயில் பயணம் முழுவதும் ஷ்யாமிற்கு இதே சிந்தனை. மறுநாள் காலை இரயில் ஹைதராபாத் நகரை வந்தடைந்தது ஷ்யாமும் தன் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்துவிட்டு இதே சிந்தனையுடன் குளிக்க சென்றான்.

குளிக்க சென்றபோது குளியறையில் வழுக்கி தடுமாறி கீழே விழுந்துவிட்டான். வலியில் அலறினான். அவன் அலறலை கேட்டி பதறிய அவன் துணைவி காவ்யா அவனை தூக்க முயற்சித்தால் ஆனால் இயலவில்லை ஷ்யாமும் தன் இடுப்பு பகுதியில் வலி மிகுதியால் மீண்டும் அலறினான். வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஷ்யாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சோத்தித்து பார்த்ததில் கீழே வழுக்கி விழுந்த அதிர்ச்சியில் ஷ்யாமிற்கு இடுப்பு பகுதியில் மிக மோசமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. பெரிய அறுவை சிகிச்சை செய்து குணமாக்க வேண்டிய நிலை. இனி எழுந்து நடமாட குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டான் ஷ்யாம். பணிக்கு செல்ல இயலாமல் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை. அவன் துணைவி காவ்யா அவனை கவனித்து கொண்டாள். ஷ்யாமின் உதவிக்கு அவனுடைய தாயாரும் சென்னையிலிருந்து வந்தார்கள். பல நண்பர்கள் ஷ்யாமின் இந்த விபத்தை கேள்விபட்டு அவனை வந்து சந்தித்து ஆருதல் கூறிவிட்டு சென்றார்கள்.

ஒரு மாதம் இப்படி உருண்டோடியது. பாதி முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. தன் வங்கி கணக்கில் வைத்திருந்த பணம் வளரவில்லை. மாறாக பணம் அன்றாடம் குறைந்து கொண்டிருந்தது. ஆம் ! மாத செலவிற்கு கைப்பேசி செயலியில் செலவு செய்பவனாயிற்றே, வங்கி கணக்கில் பணம் குறைந்து கொண்டு தானே போகும். விபத்து ஏற்பட்டு பணிக்கு செல்லாமல் இருப்பதால் அவன் நிறுவனம் அந்த மாதம்ஷ்யாமிற்கு ஊதியம் வழங்கவில்லை. கைப்பேசியில் மொபைல் பாங்கிங்க் செயலியை விரநுனியில் பார்த்தான் சம்பளம் வரவில்லை.

ஆம் ! சுவிக்கி, ஊபர், பிக்பாஸ்கெட், புக்மைஷோ என அனைத்து கைப்பேசி செயலிகளும் நமக்கு விரல்நுனியில் செலவினை ஏற்படுத்தும் செயலிகள் தானே ! இதை தானே வசதி என்கிறோம், டிஜிட்டல் இந்தியா என்கிறோம்.விரல்நுனியில் சம்பளம் தரும் கைப்பேசி செயலி ஏதேனும் இருக்கிறதா ? என ஷ்யாம் தேடித்தேடி பார்த்தான். அப்படி தான் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத காலகட்டத்தில் சம்பளம் தர விரல்நுனியில் ஒரு மொபைல் செயலி கூட கண்டிபிடிக்கப்படவில்லை என்ற பெரிய உண்மை அப்போது தான் ஷ்யாமிற்கு விளங்கியது. எங்கோ ஒரு நிறுவனம் மூலதனத்தை போட்டு ஒரு கைப்பேசி செயலியை வடிவமைத்து வசதி என்ற பெயரில் ஷ்யாம் போன்ற நடுத்தர வர்க்கத்தின் வருமானத்திற்கு விரல்நுனியில் செலவை அதிகரிக்க தான் இந்த செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அப்போது தான் ஷ்யாம் உணர்ந்தான். விரல்நுனியில் சம்பளம் தரும் செயலி வராதா ? என்ற ஏக்கத்துடன் விரைவில் குணமடைந்து மீண்டும் வருமானம் ஈட்ட விரைவில் பணிக்கு செல்ல மனதளவில் தயாரானான் ஷ்யாம். ஆனால் இனி ஷ்யாம் விரல்நுனியில் செலவு செய்ய பலமுறை யோச்சிப்பான் என்பது திண்ணம்.​
 

Latest posts

New Threads

Top Bottom