Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விவசாயம் விலை போகாது

yali raj

New member
Messages
2
Reaction score
0
Points
1
வணக்கம்,

கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நான் மெதுவாக அடுத்தபடியில் கால்வைக்கிறேன்.

ஆம் இது என் முதல் சிறுகதை. கதையை படித்து உங்கள் மேலான விமர்சனங்களின் மூலம் என் குறை நிறைகளை தெரிந்துகொள்ள உதவுங்கள்

நன்றி

யாளிராஜ்
 

yali raj

New member
Messages
2
Reaction score
0
Points
1
விவசாயம் விலை போகாது

“உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு-உன்
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்”

என்ற இனிமையான பாடலுடன் குழந்தைக்கு தொட்டில் ஆட்டுவது போல் மேடு பள்ளங்களில் சாய்ந்தாடி வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து.


“யப்பா! அணைக்கரை ஸ்டாப் வரப்போகுது வாப்பா” என்று பாடலையும் கடந்து கணீர் என ஆதிவேந்தன் காதில் ஒலித்தது நடத்துனரின் குரல்.

தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு சட்டென்று தனது மூட்டை முடிச்சுகளுடன் ஆதி எழுந்து வரவும், பேருந்து நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது. பேருந்திலிருந்து இறங்கி திமிர் முறித்தவனாய் (சோம்பல்) ஒரு நிமிடம் தனது ஊர் செல்லும் பாதையை உற்று நோக்கினான்.

ஆம்! அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் சென்றால் பூஞ்சோலை என்ற கிராமம். அது தான் ஆதியின் ஊர். குக்கிராமம் என்பதால் பேருந்து வசதி அவ்வளவாக இல்லை. நேரமோ விடியற்காலை பொழுது ஆகப் போகின்றது என்பதால் தந்தைக்கும், நண்பர்களுக்கும் தொல்லை கொடுக்க நினைக்காமல் நடையைக் கட்ட தொடங்கினான்.

அவன் நடந்து செல்லும் பாதை செம்மண் சாலை. இரண்டு புறமும் இயற்கை எழில் கொஞ்சும் கரும்பு வயல்கள். இருள் பிரியாத அந்த ஏகாந்த பொழுதில் கரும்புத்தட்டைகளின் மெல்லிய உரசல் ஓசையும், முன் தின பெளர்ணமி நாளின் நிலவு வெளிச்சமும் அவனுக்கு இருட்டில் நடக்கும் நினைவே இல்லை. சற்று தூரம் நடந்திருப்பான் அங்கே நெல் வயலின் நடுவே நீர் ஓடும் சலசலப்பு. அவனுக்கு நினைவு வந்தது மிலிட்டரி மாமா வயலின் பம்புசெட்டுதான் அது. சிறுவயதில், ஏன் கல்லூரியில் சேரும் முன்பு வரை தன் சகாக்களுடன் ஆட்டம் போடும் இடங்களில் அதுவும் ஒன்று. அடுத்து சுப்பையா தாத்தாவின் மாந்தோப்பு. சிறுவயதில் மாங்காய் பறிக்க வரும் நியாபகம் வர, அங்கு பார்த்தவனுக்கு ஏமாற்றமே. அங்கு இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வேர் பறிக்கப்படாமல் பாதி காய்ந்து இருந்தது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடையை தொடர்ந்தான்.


‘அப்பாடா! ஒரு கிலோமீட்டர் வந்தாச்சு. இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் இருக்கு’ என்று அவன் ஊருக்கு குறுக்கே போகும் காவிரி ஆற்று பாலத்தை அடைந்ததும் தனக்கு தானே சொல்லிக்கொண்டான். கடந்த வருடம் காய்ந்து கிடந்த ஆற்றில் இன்று தண்ணீர் நிறையவே சென்றது. அவனுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி. பள்ளிப் பருவத்தில் தோழர்களுடன் அந்த ஆற்றங்கரையில் நாவல் பழங்கள் சுவைத்து, நேரம் போவது தெரியாமல் குளித்து, விளையாடி, வீட்டில் சென்று அடி வாங்கியதை நினைக்கும் போது அவன் இதழ் ஓரங்களில் அவனையும் அறியாது புன்னகை எட்டிப் பார்த்தது.

வானம் மெல்ல வெளிர தொடங்கியது. காக்கை, குருவி என பலவகை பறவைகள் இசை சங்கமத்தை தந்து ஆதிவேந்தனை கடந்து தங்கள் தொழிலுக்கு கிளம்பின (இறை தேட). ஆற்று பாலத்தை கடந்ததும் இருபுறமும் பச்சை போர்வை போர்த்திய நெல் வயல்களை கண்டான். பால் கொண்ட நெல் கதிர்களை கண்டு ஆச்சரியப்பட்டான். ‘போன வருஷத்துக்கு இந்த வருஷம் தேவலாம், நல்லாருக்கு வெளச்சல்’ என்று நினைத்தவன் ‘எங்க நடுவுல சோமு தாத்தா நிலத்துல ஏதோ நீட்டுக் கொட்டகை இருக்கு’ என்று சற்று குழம்பியவாரு நடையை தொடர்ந்தான்.

ஊர் எல்லையை அடைந்தான். ஆண், பெண் என கூட்டம் கூட்டமாக வயல் வேலைகளுக்கு ஆட்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் பெண்கள் கூட்டம் ‘யாருடி வள்ளி மொவனா? டவுனுல படிக்குறானே அந்தப் பயலா! இப்படி வளந்துட்டானே!’ என்று முனு முனுத்து சென்றதை ஆதி கவனித்தான்.

ஆதி தனது தெருவின் உள் நுழையும் போதே திண்ணையில் அமர்ந்திருந்த பாப்பாத்தி பாட்டி “யாருயா அது? அந்த கோழிய தொறந்து விடப்பா” என்று சொல்ல.

சற்று சத்தமாக “கந்தன் மொவன் ஆத்தா” என்றவாறு கோழியை திறந்து விட்டவனிடம் “ஓ! சின்ராசு பேரனா” என ஆதியின் தாத்தா பெயரை சொல்ல “ஆமா ஆமா ஆத்தோ” என்றவாறு நடையைக் கட்டினான்.

அதற்குள் ஆதியின் குரல் கேட்டு பத்து சூரியனை ஒற்றை முகத்தில் கொண்டு வள்ளி வெளியே வந்து “வாயா ராசா நடந்தாப்பா வந்த? அப்பாக்கு போனு கீனு போட்டுருக்கக் கூடாது. புள்ள எம்புட்டு தூரம் நடந்து வந்திருக்கு” என்று சற்று வருத்தப்பட்டவளிடம் “பரவாலமா அதுக்கு என்ன. இது ஒரு தூரமா, நம்ம ஊருதான என்ன பயம்” என்றவன் “அப்பா எங்கமா?” என்று கேட்டப்படி வீட்டிற்குள்ளே நுழைந்தான்.

வள்ளி வாசலில் சாணி தெளித்தவாரு “அவரு என்னைக்குடா தம்பி அஞ்சு மணிக்கு மேல வீட்ல இருந்தாரு. அவருக்கு என்னையும் உன்னையும் விட அந்த அஞ்சு ஏக்கரா நிலம்தான் எல்லாம்” என்றவர் கோலம் போட்டு முடித்து மகனுக்கு டீ போட்டு குடுத்துவிட்டு வீட்டு வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.


பேருந்தில் வந்த களைப்பில் ஆதியும் உறங்கத் தொடங்கினான்.


காலை உணவு அருந்த வந்த கந்தன் ஆதியைக் கண்டு “என்னடி போன வாரம் வரன்னு பேசும் போது சொன்னான், ஆனா இப்படி திடுதிப்புனு வந்துருக்கான் புள்ள” என்றவாறு உணவருந்த தொடங்கினான்.

ஆதியும் தூக்கம் கலைந்து எழுந்தான். “அப்பா” என்று கூப்பிட “வாப்பா வாப்பா. சரி சரி நீ குளிச்சுட்டு சாப்டுபா. நான் வயல்ல களை எடுக்குறவங்களுக்கு டீ, வடை வாங்கிக் குடுத்துட்டு வந்துர்ரேன்” என்று கூறி பரபரப்பாய் சென்றான் கந்தன்.

வயலுக்குச் சென்று வீடு திரும்பிய கந்தன் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதியிடம் “என்னப்பா காலேஜ்லாம் எப்படி போகுது? பரீட்சைலாம் நல்லா எழுதிருக்கியாப்பா?”

“நல்லா போகுதுப்பா. நல்லபடியா பரீட்சை எழுதியிருக்கேன். இது கடைசி வருசம்பா இனிமே அதிகம் காலேஜ் போக தேவ இல்லப்பா. புராஜக்ட் சொல்லுவாங்க அது பண்ணனும்” என்றதற்கு அனைத்தும் தெரிந்தவனாய் மகனின் பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தான் கந்தன்.

ஆதி தொடர்ந்தான் “அப்பா இது கடைசி வருசங்கறதுனால காலேஜ்ல அடுத்த வாரம் டூர் போறாங்கப்பா. பணம் வேணும்பா” என்றவனிடம், “எவ்வளவு ஆகும் டா தம்பி” என்றான் கந்தன்.

“டூர், டிரஸ், பர்ச்சேஸ், சாப்பாட்டு செலவு எல்லாம் சேர்த்து பதினைந்தாயிரம் ஆகும்” என்றவுடன் ஒரு நிமிடம் உடைந்தே போனான் கந்தன்.

“ஏன் சாமி இப்போ இவ்வளவு செலவு செஞ்சு அந்த டூர் போய்தான் ஆகனுமா?” என்று கந்தன் முடிப்பதற்குள் “அப்பா இது கடைசி வருசம். எல்லாரும் போறாங்க” என்றான்.

“எல்லாரும் போறாங்கனா அவங்கள்ளாம் இருக்கப்பட்டவங்களா இருப்பாங்க. நாம அப்படியா?” என்று கந்தன் முடிக்க.

“அப்பா நாம மட்டும் ஒன்னும் இல்லாத பிச்சைக்காரங்களா. எல்லாரும் போறாங்க நான் போலனா என்ன நினைப்பாங்க. நான் கண்டிப்பா போகனும்பா” என்று குரல் உயர்த்தினான் ஆதி.

ஏதோ கந்தன் சொல்ல வருவதற்குள்
“அதுலாம் தெரியாதுபா நான் டூர் போகனும் சும்மா எதும் காரனம் சொல்லாதிங்க ,அம்மா சொல்லுமா” என வள்ளியை துனைக்கு அழைத்து “எனக்கு டூர் போக பணம் வேனும் இல்லனா காலேஜ் போக மாட்டேன்” என்று வேகமாக வெளியே சென்றவனை
“எங்கடா........”என்று கேட்டாள் வள்ளி
“மைதானத்துக்கு விளையாட போறேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினான் ஆதி



வீடு அமைதியாய் இருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு பெருமூச்சு விட்டவனாய் கந்தன் எழுந்திரிக்க முற்பட, கந்தனை ஏறிட்டுப் பார்த்த வள்ளியை “ஏய்! சும்மா புள்ள ஆசப்படுறான் அப்படி இப்படினு ஆரம்பிச்சுடாதடி. நம்ம நெலம உனக்கே தெரியும், ஒரு ஒரு நாளும் எப்படி வவுத்துல நெருப்ப கட்டிகிட்டு தூங்கி எழுந்திருக்கிறோம்னு. நம்ம ஊருல முக்காவாசி பயலுக புள்ளைகல படிக்க வைக்காம வேலைக்கு அனுப்புனாங்க. ஆனா நான், நாமதான் படிக்காம கஸ்டப்படுறோம் நம்ம புள்ளயாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரனும்னு நினைச்சு நம்ம கஸ்டத காட்டிக்காம கடன உடன வாங்கி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு வட்டிக்கு வாங்கி படிக்க வச்சா, பணத்தோட மதிப்பு தெரியாம! நாம ஒரு ரூபாய் சம்பாதிக்க படுற கஷ்டம் புரியாம! நான் வாங்குன கடனுக்கே வட்டி கட்ட முடியாம கெடக்குறேன். கடன் குடுத்தவன் கண்ணு எல்லாம் என் இடத்த புடுங்குறதுலயே இருக்கு. நானும் இப்ப குடுத்துடுறேன், நாளைக்கு குடுத்துடுறேன்னு அவங்கள சமாளிச்சுட்டு இருக்கேன். இது எதுவுமே தெரியாம உன் அரும மொவன் என்னடானா பதினைந்தாயிரம் கேக்குறான். நானே நேத்து தான் நாயா பேயா அலஞ்சு செல்வராசுட்ட மூனு பைசா வட்டிக்கு விதநெல் வாங்க காசு வாங்குனேன். எல்லாம் தெரிஞ்ச நீயும் உன் புள்ளைக்கு பணம் வாங்கி குடுக்க சொல்ற மாதிரியே பாக்குற ம்ம்ம்ம்ம்” என்று வள்ளியை முறைத்தான் கந்தன்.

“என்னய்யா பண்றது” என வள்ளி முடிப்பதற்குள் “என்ன பண்றது கோழி பண்ண வைக்க ஒருத்தன் வந்து இடத்த கேட்டு போனானே அவன்ட நிலத்த குடுத்துடட்டா சோமு அய்யா மாதிரி? மூனு மாசமா ஒருத்தன் சோப்பு கம்பெனி வைக்க குடுங்கனு நிலத்து மேல கண்ணா இருக்கானே அவனுக்கு குடுத்துடவா? இல்லனா சுப்பையா மாமா ஆச ஆசயா புள்ள மாதிரி மூனு தலைமுறையா வளத்த மாந்தோப்ப கடன் தொல்லையால காத்தாடி போடுறதுக்கு குடுத்தாரே, இன்னைக்கு அந்த புள்ளைங்க எல்லாம் தல வெட்டப்பட்டு கெடக்கே அந்த மாதிரி நானும் நம்ம தோப்ப குடுத்துடவா? இல்ல தொலைபேசி கோபுரம் வச்சு நம்ம தினம் தினம் பாத்து சந்தோசப்பட்ட சிட்டுக் குருவியோட சந்ததியவே அழிச்ச அந்த கூட்டம் கேக்குது அதுக்கு குடுத்துடவா? அப்படி இல்லனா ஊரே பணத்துக்காக ஆசப்பட்டு தலைமுறை தலைமுறையா பாத்த விவசாயத்த விட்டுட்டு அந்த ரியல் எஸ்டேட்காரன்ட நிலத்த குடுத்துட்டு விவசாயத்தையே மறந்து போன மக்கள் மாதிரி நானும் குடுத்துடவா?

குறுக்கிட்ட வள்ளி “ஏங்க நாமலே ஒத்த புள்ள பெத்து வச்சுருக்கோம். அவனுக்கு செய்றதவிடவா இந்த நிலம் முக்கியம்.”

அமைதியாய் கண்ணை மூடியவன், சற்று யோசனைக்கு பிறகு “சரியா தான் வள்ளி சொல்ற. என் ஆதங்கத்த உன்ட கொட்டாம வேற யாருட்ட கொட்டி தீர்ப்பேன். அதான் உன்ட அப்படி சொன்னேன். உண்மதான் என் புள்ளைய விட எனக்கு எதுவும் பெருசு இல்லதான். நான் முடிவு பண்ணிட்டேன் வள்ளி ரொம்ப நாளா நாட்டாமகார அய்யா இடத்த கேட்டுகிட்டு இருக்கார். அவருட்ட இடத்த குடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். மேற்கால இருக்க மூனு ஏக்கராவ குடுத்துட்டு மீதி இருக்க இரண்டு ஏக்கர்ல விவசாயம் பண்ணா போதும். கடன்காரங்க வேற ரொம்ப நெருக்குறாங்க. இப்போ நம்ம புள்ளைக்கும் பணம் தேவப்படுது. அதான் சரியா இருக்கும்” என்றான்.

வள்ளி திடுக்கிட்டவளாய் “என்னயா சொல்ற இடத்த விக்க போறியா! நான் சும்மா சொன்னயா. அப்பவாது புள்ளைக்கு வேற எங்கையாவது பணம் புரட்டி தருவனு.”

“இல்ல வள்ளி. இனிமே மேலும் மேலும் கடன்காரனா ஆக வேணாம். என் புள்ள கெளரவமா வாழனும். இந்த விவசாயம், கடன் எல்லாம் என்னோட போகட்டும் வள்ளி. ஆனா ஒன்னு வள்ளி இந்த இடம் எங்கள்ட எத்தன தலைமுறையா இருக்குனு எனக்கு தெரியாது. ஆனா இது வரைக்கும் இந்த இடமும், இதுல நாங்க செஞ்ச விவசாயமும் எங்கள வாழதான் வச்சதே தவிர ஒரு நாளும் அழிச்சிடல. என் அப்பன், தாத்தன் தூக்கிப்பிடிச்சு யாருமே இந்த இடத்தையும் சரி, இந்த விவசாயத்தையும் சரி ஒதுக்கல. ஆனா இன்னைக்கு நான் ஒதுக்குற அளவுக்கு ஆளாகிட்டனேங்குற ஒரு குற்ற உணர்ச்சிதான் என்ன பாடாப்படுத்துது வள்ளி” என்று கண்ணீர் சிந்தினான்.

“வேணாம்யா யோசிச்சு முடிவு எடுக்கலாம்யா. நமக்கு சோறு போட்ட இடம்யா” என்று வள்ளி கூற.

“சும்மாரு வள்ளி நமக்கு மட்டுமா சோறு போட்டுச்சு இந்த இடம். ஊருக்கே சோறு குடுத்துச்சு. நான் என்ன ஆசப்பட்டா குடுக்குறேன், என் நிலம என் விதி. என் தாத்தன் பூட்டன் காலத்துலருந்து வந்த பாரம்பரிய தொழில் இந்த விவசாயம். இது என்ன கோடி கோடியா பணம் கொட்டுற தொழிலா வள்ளி. இத ஆசப்பட்டு தான் என் தாத்தா அப்பா எல்லாருமே செஞ்சாங்க. இதுல ஒரு மனதிருப்தி இருக்கு அத விட்டுடக்கூடாதுனு தான் நினச்சேன். ஆனா இப்போ என் புள்ளையும் நீயும் சொன்ன வார்த்தைகள் என்ன முடிவு எடுக்க வச்சிருச்சு வள்ளி” என்று அமைதியானான்.

கணவன் கண்ணீர் கண்ட வள்ளியும் எதுவும் பேசவில்லை விம்மியபடி அமர்ந்திருந்தாள்.

பொழுது சாய்ந்தது, வீடே அமைதியாய் இருந்தது. வெளியே சென்ற ஆதி வீடு திரும்பியவன் உறங்கச் சென்றான்.

“டேய் சாப்பிட்டுட்டு படுடா” என வள்ளி கூற “வேணாம்” என்ற ஒற்றை வார்த்தையில், போர்வையை இழுத்து போர்த்தி தூங்க தொடங்கினான்.

பின் ஒருவர் பின் ஒருவராக உணவருந்தாமல் உறங்க தொடங்கினர். போர்வையினுள் அமைதியாக ஆதியும், கண் மட்டுமே மூடி தூங்காமல் வள்ளியும், சத்தமின்றி வழிந்தோடிய கண்ணீரை துடைத்தபடியே கந்தனும் உறங்குவதுபோல் இருக்க. பொழுது விடிந்தது. ஆதி காலையிலேயே தன் நண்பன் நீலமேகத்துக்கு கைபேசியில் தொடர்பு கொண்டிருந்தான். இதனை டீ குடித்தவாரு கந்தனும், வீட்டு வேலை செய்தவாரு வள்ளியும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஆதி மறுமுனையில் இருந்த நண்பனிடம் “நீலமேகம் நான் டூர் வரலடா.”

“ஏன்டா?”
“வரலனா வரல, காரணம் ஒன்னும் இல்லடா.”

“மச்சான் நீ வராம போர் அடிக்கும்டா.”

“தப்பா எடுத்துக்காம என்ன வற்புறுத்தாதடா.”

“அப்பறம் உன் பெரியப்பா கம்பெனில பகுதி நேர வேல இருக்குனு சொன்னல, நாளைக்கு போய் அவர பாக்கட்டுமா. நீ வேலைக்கு பேசுறியாடா.”

“நான் கூப்பிட்டப்போ வரலனு சொன்ன. இப்பலாம் எஞ்சாய் பண்ற வயசு இப்ப யாரு வேலைக்கு போவான்ன.”

“இப்போ கேட்டு சொல்றியா இல்ல வேற கம்பெனி பாத்துக்கட்டா?”

“ச்சேய் ஏன்டா மச்சான் கோவப்படுற. நாளைக்கு நீ போய் பெரியப்பாவ பாரு. நான் பேசிடுறேன்” என்று நீலமேகம் கூற.

“ரொம்ப நன்றிடா மாப்ள” என்று ஆதி முடிக்கும் முன் “அடப்போடா நீ வந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ வரலனு சொல்ற. உன்ன வற்புறுத்துனாலும் புடிக்காது. சரிடா மச்சான் பாத்துக்கோ. நேர்ல வா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். ஓகேடா மச்சான் வச்சுடுறேன்” என நீலமேகம் முடிக்க உரையாடல் முடிந்தது.

கந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை, வள்ளிக்கோ குழப்பம்.

அருகில் வந்த ஆதி “அப்பா நாளைக்கு ஊருக்கு போறேன், கொஞ்சம் வேலை இருக்கு. காலைல நீங்க வந்து பஸ் ஏத்திவிடுங்க” என்று சொல்லி சென்றவனை என்னவென்று விளங்காமல் கணவனும் மனைவியும் நீரில் முகம் பார்க்கும் காகமாய் பார்த்துக்கொண்டனர்.

மறுநாள் விடிந்தது. உணவு அருந்தி தன் அம்மா சமைத்து கொடுத்த பலகாரங்களை திணித்துக் கொண்டு “போய்ட்டு வரேன்மா” என்று கிளம்பினான் ஆதி.

“பாத்து போய்ட்டுவாயா” என்று வள்ளி வழி அனுப்ப, கந்தன் மகனை சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேருந்தில் ஏற்றிவிட கிளம்பினான்.

“அப்பா ஒரு நிமிடம்” என்று ஊரின் நூலகத்தை கடக்கும்போது கந்தன் தோளை ஆதி அழுத்த, சைக்கிளில் இருந்து இறங்கிய ஆதி நூலகத்திற்குள் விறு விறுவென்று ஓடினான். திரும்பி வந்தவன் கையில் ஏதோ பெரிய புத்தகம் “போங்கப்பா” என்று ஆதி குரல் கொடுக்க, கந்தன் கிளம்பினான். கந்தனும், ஆதியும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. பேருந்து நிறுத்தம் வந்தது.

கந்தன் மகனிடம் “ராசா அப்பா பணம் தரமாட்டனு சொன்னதுல வருத்தமாயா. அதான் அப்பன்ட பேசலயாபா” என்று கேட்க

“இல்லப்பா அப்படிலாம் இல்ல.”

“நான் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பணம் புரட்டி தரன்யா. நீ டூர் போயா” என்ற கந்தனிடம்

“இல்லப்பா எனக்கு டூர் முக்கியம் இல்ல. நம்ம இடம் தான் முக்கியம், நம்ம விவசாயம் தான் முக்கியம், நீயும் அம்மாவும் தான் முக்கியம், என் தாத்தா, தாத்தனோட தாத்தாவோட அடையாளம் தான்பா முக்கியம்” என்று தன் தந்தையின் கைகளைப் பற்றி கதற, மகனின் கண்ணீரை கண்ட கந்தன் ஆடிப்போனான்.

ஆதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டே “வேணாம்பா நீங்க இடத்த விக்க வேணாம். நீங்க எவ்வளவு வேணும்னாலும் கடன் வாங்கிக்கோங்க. நான் வேலைக்கு போய் கடன அடைக்குறேன். நாம நம்ம விவசாயத்த விடவேணாம்பா” என்று தேம்பினான்.

கந்தனுக்கு தெரியாது ஆதி விளையாடச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்றவன் கைபேசியை மறந்துவிட்டு அதை எடுக்க வீட்டுக்கு வந்ததும், அப்பொழுது தன் அப்பா அம்மா பேசியதைக் கேட்டதும்.

இரவு வரை மைதானத்தில் தன் தந்தையின் வறுமையை அசைபோட்டதும், இரவு முழுவதும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு அழுததுமே கந்தனுக்கு தெரியாது.

பேருந்தும் வந்ததும் “நான் போய்ட்டு வரம்பா” என்று சொல்லிச் சென்ற ஆதியை கண்களில் ஆனந்த கண்ணீர் கொப்பளிக்க பார்த்துக்கொண்டிருந்தான் கந்தன்.

பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்த ஆதி தீடிரென நியாபகம் வரவே “அப்பா அந்தப் புத்தகத்த எடுங்க” என சைக்கிள் கேரியரில் இருந்த புத்தகத்தைக் காட்ட. அதை வேகவேகமாக எடுத்து மகனிடம் நீட்டும்போது அந்தப் புத்தகத்தை கந்தன் கவனிக்கத் தவறவில்லை.

ஆம்! அது ‘நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறும் இயற்கை விவசாயமும்.’

பேருந்து புறப்பட்டது. என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து பெருமிதத்துடன் தன் மகனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கந்தன்.

இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுத்துவிட்டால் விவசாயம் என்றுமே விலை போகாது.

இப்படிக்கு
யாளி ராஜ்​
 

New Threads

Top Bottom