உணர்ந்து கொள் நட்பே
'சஞ்சய் வெட்ஸ் ஹரினி'என்ற அந்த பெயர்பலகை பூக்களாலும் மின்விளக்குகளாலும் மின்ன அதை கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தான் ரகு ஹரினியின் அண்ணன்.. திடீரென தன் தோளில் தொடுகையை உணர்ந்த ரகு திரும்பி பார்க்க எதிரில் தன் நண்பர்கள் சரண், மனோ இருவரையும் கண்டவன் தாவி அணைத்து
"ரொம்ப தேங்க்ஸ் மச்சான். என் தங்கச்சி கல்யாணத்த எப்பிடி நடத்த போறேன்னு ரொம்ப குழப்பத்துல இருந்தேன்டா. இவ்வளவு பெரிய உதவி பன்னிருக்கீங்க மறக்கவே மாட்டேன் டா" என கண்ணிலிருந்து கன்னத்தினூடாக கண்ணீர் வழிய ரகு கூற,
"நீ ஒரு கஷ்டத்துல இருக்கப்ப நாங்க பார்த்துட்டு இருப்போம்னு நீ எப்பிடி நினைக்கலாம். நீ எங்ககிட்ட சொல்லாம இருந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா.. நீ எங்க ஃப்ரென்டுடா ரகு" என்ற சரணும் அவனை ஆதரவாக அணைக்க,
"டேய் போதும்டா... உங்க கண்ணீருல மண்டபமே மூழ்கிடும் போல. நல்ல நேரம் நெருங்கிருச்சி தாலி கட்ட போறாங்க சீக்கிரம் வாங்கடா" என்ற மனோ சரணையும் ரகுவையும் இழுத்துச் சென்றான்
'கெட்டி மேளம் கெட்டி மேளம்' என ஐயர் சொல்ல, மங்கல வாத்தியங்கள் முழங்க, கல்யாண மாப்பிள்ளை மணப்பெண்ணின் கழுத்தில் மங்கல நாணைப்பூட்டி தன்னவளாக்கிக்கொண்டான்.. இதை ரகுவும் அவன் அம்மாவும் கண்கலங்க அட்சதை தூவி வாழ்த்த அவன் நண்பர்கள் அவனை ஆதரவாக தோளோடு அணைத்திருந்தனர்.
ரகு,சரண்,மனோ மூவரும் நெருங்கிய நண்பர்கள்.சிறுவயதிலிருந்து ஒன்றாகவே பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும் முடித்தனர். தற்போது சரண் புதிதாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி ஆரம்பித்து அதை திறம்பட நடத்திக் கொண்டு வர ரகுவும் மனோவும் அவனுக்கு உதவியாக அவன் கம்பனிலேயே வேலை செய்கின்றனர்..
ஆனால் விதியோ அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு ஆட்டத்தை ஆரம்பித்தது. எவனை தங்களுக்கு நண்பனாக கருதி அவனுக்கு உதவி செய்தார்களோ அவனே பின்னாளில் அவர்கள் முதுகில் குத்திச்செல்வான் என்பதையும், செய்த உதவியை மறக்க மாட்டேன் என்று கூறியவனே அவர்கள் தன் நண்பர்கள் என்பதையும் மறந்து நடந்து கொள்ளப்போகிறான் என்பதையும் அப்போது அம்மூவரும் அறியவில்லை..
விதி வலியது..
நாட்கள் நகர மூன்று வருடங்ளிலேயே சரணுடைய உழைப்பாலும், சாமர்த்தியத்தினாலும், நட்பு பலத்தினாலும் அவனுடைய கம்பனி வளர்ச்சியடைந்து வெற்றியை கண்டது. அதே சமயம் விதி அவர்களின் நட்பை சோதிக்கவென ஒரு விளையாட்டையும் துவங்கியது.
தன்னுடைய அறையில் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த ரகுவின் கவனத்தை அவனுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு கலைக்க, அழைப்பு ஏற்று காதில் வைத்தான் ரகு. மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ முகம் கறுக்க,
"டேய் யாருகிட்ட என்ன வேல பார்க்க சொல்ற.. அவன் என் நண்பன்டா" என கோபத்தில் எகிறியவனை குறுக்கிட்ட அந்த நபர் தான் சொன்ன வேலையை செய்தால் அவன் எதிர்ப்பார்ப்பதை விட அதிக பணம் தருவதாக டீலிங் பேச,
அவர் பணம் என்றவுடன் ரகுவினுள் ஒழிந்திருந்த பணப்பிசாசு வெளியில் எட்டிப்பார்க்க அடம்பிடிக்க, யோசனையின் ஆழ்ந்திருந்த ரகுவின் அமைதியை தனக்கு சாதகமாக்கிய அந்த நபர் அவன் மனதிலுள்ள பணமிருகத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்.அதில் வெற்றியும் கண்டார்.
'இத செய்தாலும் எப்பிடியும் வெளில தெரிய போறது இல்ல. பணமும் கிடைச்ச மாதிரி ஆச்சு.. எவ்வளவு நாள்தான் நாமளும் இப்பிடி இருக்கிறது' என மனதில் நினைத்து ஒரு முடிவை எடுத்த ரகு இது தன் நண்பனுக்கு செய்யும் துரோகம் என்பதை இலகுவாக மறந்து போனவனாக அதற்கு சம்மதித்தான்.
அவர் கேட்டது போன்று தற்போது எல்லா கம்பனிகளும் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் அரசாங்க டெண்டருக்காக சரணுடைய கம்பனி எவ்வளவு தொகையை நிர்ணயித்துள்ளது என்பதை சரணுடைய மடிக்கணினியில் அது தொடர்பாக விபரங்கள் இருக்க அதை பார்த்தவன் அப்பிடியே அவனுக்கு அதாவது சரணுடைய எதிர் கம்பனிக்கு அனுப்பி வைத்தான்.
தன்னுடைய மடிக்கணினி திறக்கப்பட்டதற்கான குறுந்தகவல் சரணுடைய தொலைப்பேசிக்கு வந்தும் தன் நண்பர்கள் தான் என்பதை அறிந்து அவன் அதை பெரிதுபடுத்தவில்லை. சொல்லப் போனால் அவனுடைய நண்பர்கள் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி..
ஒரு வாரம் கழித்து நடந்த அந்த அரசாங்க டென்டர் தொடர்பான கூட்டத்தில் சரணுடைய எதிர் கம்பனி ஒரு ரூபாய் வித்தியாசத்தில் அதை கைப்பற்ற சரணும் வியாபாரத்தில் வெற்றி தோல்வி சகஜம் என சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.
ஆனால், ரகுவின் செயற்பாடுகளோ அதோடு நிற்கவில்லை. அதன்பிறகும் வந்த சில ப்ரோஜெக்டுகள் தொடர்பான விடயங்கள் கம்பனி ரகசியங்கள் என வெளியில் விற்று பணம் சம்பாதிக்க ஒரு கட்டத்தில் வெளிநாட்டு ப்ரோஜெக்ட் ஒன்றுக்காக சரணுடைய கம்பனிக்கு முற்பணமாக கிடைத்த ஐம்பது கோடியையும் திருடி வெளியூரிற்கே ஓடிவிட்டான்.
கொஞ்ச நாட்களாக ரகுவின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்தாலும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில் சரணும் மனோவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்றோ இவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என அறிந்து மொத்தமாக உடைந்து போனர் அவ்விரு நண்பர்களும்.
"ச்சீ.. என்ன மனுஷன்டா அவன்.. அவன் எல்லா ஒரு நண்பனா.." என மனோ ஆத்திரத்தில் கொதித்தெழ,
"விடு மனோ.. இப்போ இத பெரிசு படுத்த வேணாம். அடுத்து ஆகப்போறத பார்ப்போம். இதுல அவன் மேல மட்டும் தப்பில்ல. நம்ம மேலயும் தப்பு இருக்கு. அவனுக்கு என்ன தேவைன்னு நாம முன்னாடியே யோசிச்சு பன்னிருக்கனும்" என தலையை கவிழ்த்தியவாறு சரண் கூற,
"ஏன்டா இப்பிடி பைத்தியம் மாதிரி பேசுற.அவன் நம்மல நல்லா ஏமாத்திட்டான். இப்பவும் அவன விட்டுடலாம்னு சொல்ற" என மனோ கூற,
"அவன் நம்ம ஃப்ரெண்டுடா.. அவனே திரும்ப நம்மகிட்ட வருவான். அப்ப பார்த்துக்கலாம் விடு.." என சரண் அவனை சமாதானப்படுத்த தன் நண்பன் தனக்கு துரோகம் செய்தும் அவன் மேல் கோபப்படாது அவன் என் நண்பன் என தெளிவாக எந்தவித சலனமுமின்றி சொல்லும் சரணின் நட்பை பார்த்து அவ்விதியே பெருமைப்பட்டது.
இவ்வாறு ஆறுமாதம் கடக்க இவ் ஆறு மாதத்தில் ரகுவோ வெளியூரில் உல்லாசமாக அங்கு தனக்கு கிடைத்த நண்பர்களுடன் மது,சூது என கேளிக்கைகளில் பணத்தை வாரி இறைத்து சந்தோஷமாக இருந்தான். ஆனால், எல்லாருக்கும் தன் தவறை உணரும் நாள் என்று ஒன்று வரும் அல்லவா.. அது அவனுடைய வாழ்வில் ஆறு மாதம் கழித்து அன்று வந்தது.
நண்பர்களுடன் குடித்துவிட்டு கூத்தடித்து போதையில் ரகு சரிய, இது தான் தக்க சமயம் என்று அவனுடைய போலி நண்பர்கள் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டனர்.
காலையில் விழித்தவன் கண்ணை சுருக்கிக்கொண்டு எழ, இரவு குடித்ததால் தலைவலி வேறு எடுக்க தலையை பிடித்துக் கொண்டு கண்ணை திறந்து சுற்றி முற்றி பார்த்தான் ரகு. எழுந்தவன் குளியலறையில் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து ஆடையை எடுக்க அலுமாரியை திறக்க அங்கு வைத்திருந்த தன் பணப்பையை காணாது அதிர்ச்சியில் உறைந்தே விட்டான்..
என்ன நடந்திருக்கும் என்பது புரிய தலையில் கை வைத்து 'கடவுளே' என வாய்விட்டு புலம்பியவாறு கட்டிலில் இதயம் படபடக்க பொத்தென்று விழுந்தவன் அப்போது உணர்ந்தான்..
'Karma is boomerang'
அவன் உணர்ந்து சிலை போல் இருந்தது ஒருசில நிமிடங்கள் தான்.. தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சுய உணர்வு பெற்றவனுக்கு இதோ அடுத்த அடி..
மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் பதட்டமாக அங்கிருந்து தன் ஊருக்கு கிளம்பியவன் அவர்கள் சொன்ன வைத்தியசாலையை அடைந்தான். அங்கு அவன் அம்மாவுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழக்க உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும் என டாக்டர் கூற, தனக்கு தெரிந்த எல்லாருக்கும் செய்தி அனுப்பி உதவி வேண்டினான் ரகு.
அங்கும் இங்கும் அலைந்தவன் சரணையும் மனோவையும் நினைக்காமல் இல்லை. 'எங்கு தான் உதவி என்று கேட்க போய் அவர்கள் தன்னை நோக்கி ஒரு அருவருப்பான பார்வையை வீசினால்.. இப்பிடி ஒரு துரோகத்தை செய்து எப்பிடி அவர்கள் முன் உதவி என்று போய் நிற்பது'
என யோசனையில் ஆழ்ந்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல் இருக்கையில் தலையில் கைவைத்து கண்கள் கலங்க அமர்ந்தான்.
திடீரென 'அண்ணா' என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன் தன் தங்கை தனக்கருகில் அமர்ந்திருப்பதை கண்டு கண்கலங்க தலை குனிந்துக் கொண்டான். 'தன் தங்கை வாழ்கை சிறப்பாக அமைவதற்கும் தன் நண்பன் தானே காரணம்' என்ற குற்றவுணர்வோடு..
"இவ்வளவு நாள் ஏன் அண்ணா எங்ககிட்ட பேசல.. நிறைய தடவ உங்க நம்பருக்கு ட்ரை பன்னேன்.. ஏதோ வேல விஷயமா வெளியூருக்கு போயிருக்கீங்கன்னு அண்ணனுங்க தான் சொன்னாங்க. அதுக்காக பேசாமயா இருப்பீங்க.. அம்மா எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா" என ஹரினி வருத்தமாக சொல்ல,
அவன் குழப்பமாக பார்த்து " என்ன.. சரணும் மனோவுமா சொன்னாங்க' ரகு கேட்க,
" ஆமாண்ணா.. அதுமட்டுமில்ல நீங்க இல்லாத குறைய அண்ணனுங்களே தீர்த்துட்டாங்க.. டெய்லி அம்மாவ பார்க்க வருவாங்க உங்க சம்பளத்த கூட அம்மா கைலயே கொடுத்துட்டு போவாங்க.. அவசரமா ஏதாவது தேவவைன்னா கூட அவங்களே பார்த்துப்பாங்க.. என் புருஷன் அவசரமா வாங்கின கடனுக்கு கூட அவங்களே பொறுப்பு ஏத்துகிட்டாங்க"
என அவள் அடுக்கிகிட்டே போக இவனுக்கோ பேச்சே வரவில்லை. 'தான் எத்தகைய அசிங்கத்தை அவர்களுக்கு செய்தோம் ஆனால் அவர்களோ..' கண்களில் கண்ணீராக ஓட யோசித்துக் கொண்டிருந்த ரகுவின் அருகில் வந்த நர்ஸ்
" உங்க அம்மாவுக்கு கிட்னி கிடைச்சாச்சு.. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டாங்க" என சொல்லிவிட்டு சென்றார்..
'யாரு கிட்னி குடுத்தது.. அதுவும் பணம் கட்டாம ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டாங்களா' என அவன் குழம்பி போய் நிற்க, ஹரினியிடம் கேட்டதில் அவளும் 'இல்லை' என சொல்லிவிட. அவன் சந்தேகத்தை தீர்க்க தான் அங்கு யாரும் இல்லை.
சிகிச்சை முடிய நர்ஸிடம் ரகு விசாரிக்க " அது எங்க ஹொஸ்பிடல் ரூல்ஸ் வெளில சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க சொரி சார்" என நர்ஸ் கூறிவிட்டு செல்ல,
சிகிச்சை மேற்கொண்ட டாக்டரிடம் சென்றவன் அவனின் மூன்று மணிநேர கெஞ்சலில் ஒருவழியாக அந்த டாக்டரும் சம்மதிக்க, ரகுவை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்கு சென்று
" நீங்க எதிர்பார்க்குறவரு இங்க தான் இருக்காரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிருவாரு சீக்கிரம் பார்த்துட்டு கிழம்பிருங்க" என சொல்லிவிட்டு செல்ல,
கண்கள் மின்ன ஆர்வத்தில் கதவை திறந்து உள்ளே சென்றவன் அவ்வறையில் வைத்தியசாலை கட்டிலில் வயிற்றுப்பகுதியை சுற்றி கட்டோடு படுத்திருந்த சரணை கண்டு ஆடிப்போய் விட்டான்.அந்த இடத்திலே முட்டி போட்டு அமர்ந்தவன் கதறி அழுக தன் தோளில் தொடுகையை உணர்ந்து திரும்பி பார்க்க தன் அருகில் மனோ நிற்பதை பார்த்து அவமானத்தில் கூனிகுறுகி தலை கவிழ்ந்தான்.
அதே சமயம் மெதுவாக மயக்கத்திலிருந்து கண்விழித்த சரண் ரகுவை கண்டு புன்னகைக்க, 'தான் இவர்களுக்கு செய்த தூரோகத்துக்கு தன்னை திட்டுவார்கள், தண்டிப்பார்கள், அருவருப்பாக ஒரு பார்வையாவது தன்மீது விட்டெறிவார்கள்' என ரகு எதிர்ப்பார்த்திருக்க, சரணின் புன்னகையும் மனோவின் அமைதியும் அவனை உயிரோடே கொன்று விட்டது.
அவனை தோளோடு அணைத்தவாறு எழுப்பிய மனோ ரகுவை சரணின் அருகில் கூட்டிச்செல்ல கட்டிலில் படுத்திருந்தவனின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தான் ரகு.
" எனக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லடா.. உங்களுக்கு இப்படி ஒரு துரோகத்த பன்னிட்டேன்.. என்ன நீங்களே கொன்னுறுங்கடா.. தயவு செஞ்சி அமைதியா மட்டும் இருக்காதிங்கடா.." என அவன் கதற,
"என்ன நடந்தாலும் நீ எங்க ஃப்ரென்டுடா.. உன்ன தண்டிக்க எங்களுக்கு மனசு வரல.. இப்போ நீ பன்ன தப்ப உணர்ந்ததே எங்களுக்கு போதும்.." என சரண் அந்த வலியிலும் முயற்சித்து பேச,
"எப்பிடி டா உங்களால மட்டும் இப்பிடி இருக்க முடியுது.. உங்க நம்பிக்கையையே நா உடைச்சிட்டேன்.. ஆனா நா போனதுக்கப்றமும் என்னோட இடத்துல நீங்க ஒரு மகனா இருந்து என் குடும்பத்த பார்த்திருக்கீங்க.. இப்போ.." என பேச முடியாது அவன் நிறுத்தி அழுக,
அவனை அணைத்தவாறு மனோ " உன் குடும்பம் எங்களுக்கும் குடும்பம் தான்டா.. நீ வேணா நாங்க வேணாம்னு பணம் பின்னாடி போயிருக்கலாம். ஆனா எங்களுக்கு நீ பன்ன காரியத்துக்காக உன் குடும்பத்த ஒதுக்கி வைக்கவோ அவங்க கஷடப்படும் போது பார்த்துட்டு இருக்கவும் முடியல" என கூற,
"முடிஞ்சது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும்.. பொண்ணுங்கள விட ஆனா ஊனா நீ தான்டா டெப்ப ஓபன் பன்ற" என சரண் அந்த நிலைமையிலும் ரகுவை கேலி செய்ய,
" உங்களுக்கு என் மேல கோபமே இல்லையாடா. நா உங்களுக்கு துரோகம் பன்னிட்டேன்.. உங்க நட்பையே கொன்னுட்டேன்.. அப்பவும் எப்பிடிடா உங்களால இப்பிடி சாதாரணமா பேச முடியுது.. எதிரிய கூட மன்னிக்கலாம் ஆனா துரோகிய மன்னிக்கவே கூடாதுன்னு சொல்வாங்க... ஆனா என் குடும்பத்துக்கிட்ட கூட என்ன தப்பானவனா காட்டாம என்ன தண்டிக்க கூட மனசு வருதில்லன்னு சொல்ற அளவுக்கு நா அப்பிடி என்னதான்டா பன்னிட்டேன்." கண்களில் கண்ணீரோடே ரகு கேட்க,
ஒரு புன்சிரிப்பை உதிர்த்த சரண் "நீ எங்க நண்பன்டா. நீ தப்பு பன்ன அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்ட.. இப்போ இப்பிடி கூனிகுறுகி தண்டன கொடுன்னு எங்க முன்னாடி நிக்கிற பாத்தியா அதுலயே உன் தப்ப நீ உணர்ந்துட்ட.. முன்ன இருந்த நம்பிக்கையில இப்போ கொஞ்சம் கலக்கம் வந்திருக்கலாம்.. ஆனா நம்ம நட்பு அது எப்போவும் எங்க மனசுல மாறல.. அதனால தான் நீ பன்னதையும் மறந்தோம். மன்னிச்சிட்டோம்.. நடந்தது கனவாகவே போகட்டும்." என கூற,
"சரி அழுகுறத நிறுத்திட்டு நா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.. நம்ம நட்ப புதுப்பிக்க ஒரு வாய்ப்பு நாங்க உனக்கு தந்தா அத பயன்படுத்த மாட்டியா என்ன.."
என புருவத்தை உயர்த்தி மனோ கேட்க,
"கண்டிப்பா டா.. என்னோட நட்புல நா பன்ன கலங்கத்த நானே துடைச்செறிவேண்டா.. என்ன மன்னிச்சிருங்கடா.. நண்பன் துரோகம் செய்தும் அவன எதிரியா கூட பார்க்காம அவன மன்னிச்சி அதுக்கப்றமும் அவன் குடும்பத்துக்கு அவன் இல்லாத குறைய தீர்த்து பரிகாரமே செய்ய முடியாத அளவுக்கு பெரிய உதவியையும் செய்து இப்போ கூட நா பன்ன தப்ப நினைச்சி அழுறப்ப அழாதன்னு ஒரு வார்த்தை சொல்றிங்களேடா.. என்ன மாதிரியான நட்பு டா.." என ரகு தலைகுனிந்தவாறே கையெடுத்து கூம்பிட,
மனோ அவன் கைகளை கீழ் இறக்கி தலையை நிமிர்த்தி விட சரண் இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருந்தான். தான் செய்த துரோகத்துக்கு பரிகாரமாக அவர்கள் போதும் போதும் என்றளவுக்கு தன் நட்பால் அவர்களை நனைய வைப்பது மட்டுமன்றி தன்மீது வைத்து சிதைந்து போன நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முடிவெடுத்தான் ரகு.. விதியே தான் ஆரம்பித்த விளையாட்டின் முடிவில் சரணினதும் மனோவினதும் நட்பை பார்த்து கையெடுத்து கும்பிட்டது..
நட்பு ஒரு புனிதமான ஒன்று. எல்லா உறவுகளையும் விட நம்பிக்கை என்ற ஒன்று நட்பில் அதிகமே.. தன் நண்பன் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும். மன்னிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். .அதைவிட நட்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
'Karma' தான் செய்யும் சில தவறுக்கான தண்டனையை அவ்வுலக வாழ்க்கையிலேயே தாம் அனுபவிக்க நேரிடும்.ரகு அவர்களுக்கு எத்தகைய துரோகத்தை செய்தானோ அதே துரோகம் தனக்கு நேர்ந்ததும் தன் தப்பை தன் செயலை உணர்ந்தான்.அவன் மன்னிப்பு வேண்ட நட்புக்கு முக்கியத்துவம் அளித்து அவனுடைய துரோகத்தை மறந்து மீண்டும் அவனை ஏற்றுக்கொண்ட சரண் மனோவினது நட்பு எத்தகையது...
ஒருவருக்கு எந்தளவு நம்பிக்கைத்தன்மையாக இருக்க வேண்டுமோ அதே அளவு ஒருவர் உண்மையாக தப்பை உணர்ந்து திரும்பி வரும் போது மன்னிப்பையும் வழங்க வேண்டும்.இதில் எதுவும் குறைந்து விடப்போவதில்லை உறவே பலப்படும்
...
F.Zaki