Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
அத்தியாயம் - 1

பூமி வருடம் - 4000

ஒழுகும் நிலவு!
வழியும் இரவு!
இமைக்கும் விண்மீன்!
அலையும் காற்று!
மருகும் தனிமை!
மிரளும்‌ நான்!

பால்நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிராக இரவு வழிந்து கொண்டிருந்தது. மைத் தொட்டு இருள் வரைந்த தூரிகை, திருஷ்டி கழிக்க, நிலாப் பொட்டொட்டி அழகு பார்த்ததாம். நான்காயிரம்‌ வருடங்களாக இந்த உலகத்தில் மாறாத சில விடயங்கள் உண்டென்றால் அது திரண்ட இருளும், உருண்ட நிலவும்தான். மற்றவையெல்லாம் மருகித் தவித்து, மருவி, புள்ளிகளாய் மறைந்துவிட்டது. உலகத்தில் மாற்றம் காணாத மாண்புகளைச், சொக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

விழிகளில் களைப்புத் தட்டியதுபோல. அவளறியாமலே அது சுருங்கி மூடிக்கொண்டது. விழாக்கோலம் பூண்டு, அல்லி ராணியாய் உலாச் சென்ற ஒற்றை நிலவையும், கற்றை நட்சத்திரங்களையும் அடக்கம் செய்தது பகல். புலரும் வேளையில் உடலில் ஏற்பட்ட அசௌகரியத்தால் முகம்சுழித்து விழிகள் திறந்தாள் அவள்.

வண்ணப் பாறைகளால் கட்டப்பட்ட சிறிய வீடு அவளது வீடு. அனலைக்‌ கக்கும் சூரியனின் வெட்பம் உள்‌நுழையாதபடி வீட்டின் வெளிப்புறத்தில் சாந்துகள் பூசப்பட்டிருந்தது. அந்தப் பூச்சுகளில்லாமல் வீடுகள் கட்டுவது வீண். பாலைவனத்தில் வாழ்வதற்குச் சமம். ஏனெனில் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடுமளவு வெட்பத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறான் சூரியன். அளவான இடைவெளியில் ஒன்றுபோல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. சற்று தூரத்தில் மாபெரும் ஏரியொன்று இருந்தது.

"அதோ அங்க பார் அனிச்சம்" என்று சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை காட்டினாள் அன்னை. மாநிறத்தில் கொழுகொழு கன்னங்களுடன், மிழிகளை திரட்டி உருட்டி அந்த ஓவியத்தைக் கண்டாள் சிறுமி. அவள் மனம் ஏனோ படபடத்து அடங்கியது ஒருமுறை.

"அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள். அழகாய் இருந்தது அந்தக் கோள். உருண்டையாய் நீலமும், பச்சையும் கலந்த கலவையில் கொள்ளை கொண்டது.

அன்னையின்‌‌ குரல் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருந்தது மனதில். அந்த பசுமையான நினைவுகள் எப்பொழுது மனதில் தோன்றினாலும், மனம் சஞ்சலப்பட்டு, அடுத்த வேலை செய்யமாட்டேன் என சத்தியாகிரகம் செய்துவிடும். சண்டித்தனம் செய்து, எங்கோ அலைந்து கொண்டிருந்த மனதை‌ இழுத்துப் பிடித்து வைத்தாள். அவள் அனிச்சம். இருபது வயது நிரம்பியவள்.

கல் மேசையின் மேலேயிருக்கும் தொடுதிரையை உயிர்ப்பித்து, பூமியின் நுணுக்கங்களைக் கண்டாள் அவள். அது அவள்‌ உருவாக்கியது. அன்னையின் ஓவியங்களை உயிர்ப்பித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் செய்தது. ஆயிரம் முறை அதைப் பார்த்திருந்தாலும், ஒவ்வொருமுறை காணும் பொழுதும் உயிர்ப் பூ ஒன்று‌ பூத்துவிடும் அவளது மனதில். ஓவியத்தில் தீட்டப்பட்டிருக்கும் புவி உண்மையில் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நினைத்து சிலாகித்துக் கொள்வாள். ஆனால் நினைக்க மட்டுமே முடியும். அதுவே நிதர்சனம்.

அவள் கிளம்பும் நேரம் என்று அறிவுறுத்தியது கூண்டுக் கடிகாரம். எழுந்து அவசரமாகத் தயாரானாள்.
வீட்டிற்கு வெளியில் வந்தவள் அன்றைய தட்பவெட்பநிலை கண்டு அலுத்துக் கொண்டாள். வெய்யோனின் வெந்தழல் உயிரை உறிஞ்சிக் குடித்துவிடும்போல. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெட்பத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது திகைத்திருந்தது பூமி. அவள் உடையின் மேல் ஒரு வெளியங்கி அணிந்திருந்தாள். அது உயிர்வளியை(ஆக்சிஜன்) அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிறிய மகிழுந்தில் ஏறி அதை இயக்கினாள் அவள். அதை மகிழுந்து என்று சொல்லவும் இயலாது. இருசக்கர வாகனம்போல் தோற்றம் உடைய உந்துவண்டி. கண்ணாடிக் கூரையுடன் அழகாய் இருந்தது அந்த வாகனம். அதில் ஏறி உள்ளே அமர்ந்தவள் அதை இயக்க ஆரம்பித்தாள்‌. அதன் உருளை சக்கரம் சாலையில் உரசி மேலெழும்பியது. வண்டி இறக்கைகளின்றி பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வாகனத்தை தரையிறக்கி‌, சாலையில் இயக்க ஆரம்பித்தாள். வானில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் தரையிலும் வாகனத்தை இயக்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் விரைவாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அவள் ஒரு வழக்கறிஞர்.

உலகத்தில் கோவிலாகப் போற்றப்படுவது நீதிமன்றம் மட்டும்தான். அங்கு யாரும் பொய் கூறிட இயலாது. நீதிபதி ஆதிபகவனிடமிருந்து குற்றவாளிகள் தப்பிக்க இயலாது. உண்மையைத் திரித்துக் கூறினாலோ, இல்லை பொய்யுரைத்தாலோ தண்டனை நிச்சயம். அதேபோல் நேரம் தவறாமை மிக முக்கியமான ஒன்று. தாமதமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தால் அதற்கும் சிறை தண்டனை விதித்து விடுவார் ஆதிபகவன். அவர்‌ அழிவில்லாதவர்.


எப்படியோ அனிச்சம் சரியான நேரத்திற்கு அங்கு வந்துவிட்டாள். உள் நுழைந்ததும் அவளது வாதி அவளிடம் வந்து உரையாடினார்.

"திரு. திரவியம். கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்றது எல்லாம் உண்மைதானே?. மிகைப்படுத்தல் ஏதும் இல்லையே?" என்று அவனுடைய கூற்றுகளை உறுதி செய்தாள்.

"வழக்கு உங்க பக்கம் இருந்தாலும், தீர்ப்பு எளிதா வரணும்னு சில விஷயங்களை மிகைப்படுத்தி சொன்னாக்கூட உங்களுக்கும் தண்டனை. அதை‌ மனசுல வச்சுக்கோங்க" என்று அவள் கூற, எதிரில் இருந்தவனோ, தான் உண்மையாக இருப்பதாக நூறு சதவிகிதம் வாக்களித்தான்.

பிறகு ஆதிபகவன் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் அவரது இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆதிபகவன் என்பது மனிதன் அல்ல, கடவுளும் அல்ல. ஒரு எந்திரம். அனைத்தும் அறிந்த எந்திரம்.

(சுருக்கமாக புரியும்படி சொல்ல வேண்டுமானால் எந்திரன் படத்தில் வரும் எந்திரன் போல். அதைவிட அறிவு அதிகம் உள்ளவன்.")

உணர்வுகள் அற்றவன். ஆனால் உணர்வுகளைக் கணிப்பதில் வல்லவன். அவன் ஆராய்ந்த வழக்குகள் அனைத்தும் வெற்றிதான். வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்ட சரித்திரங்கள் இல்லை எனலாம். சொன்ன தேதிக்கு நீதிமன்றம் வரவேண்டும். இல்லை கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

வாதி, பிரதிவாதி இருவரின் தலையிலும் சில உபகரணங்கள் மாட்டப்படும். அதன் கட்டுப்பாடுகள் ஆதிபகவனிடம் இருக்கும். வழக்கின் தகவல்கள் உள்ள கோப்பு அளிக்கப்படும். அதைப் படித்து, சில வினாக்கள் எழுப்பப்படும் ஆதிபகவனால். இருவரும் விடையளிக்க வேண்டும். விடைகளின் உண்மைத்தன்மையை அவர்களின் மூளை‌ தோற்றுவிக்கும் உணர்வுகள் விளக்கிவிடும். உண்மை மட்டுமே பேசுபவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. பொய்யுரைப்பவர்கள் ஏதாவது ஒரு வினாவில் மாட்டிக்கொள்வார்கள். பொதுவாக முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மூளைக்கு நன்றாகவே தெரியும். பொய்யுரைக்கிறோமா இல்லையா என்று. விடையின் காலதாமதம், குழப்பம், குரலில் தோன்றும் பிசிறு என்று‌ அனைத்தையும் துல்லியமாக கணித்துவிடும். ஆதிபகவனை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. யாராவது ஊடுருவல் செய்ய முற்பட்டால் அதுவே அதன் தன்மையை மாற்றியமைத்துக் கொள்ளும்படி நிரலாக்கம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நிரலாக்கம் இயங்க ஆரம்பித்த பின்னர் முதல் வேலையே, ஊடுருவ முற்பட்டவனை கண்டறிந்து தண்டனை நிறைவேற்றுவதுதான். அதன் வயது 200. அவர்களை ஆண்ட புரட்சியாளர் ஒருவரின் திட்டம் இது. அவரது பெயர் ஆதிபகவன். அதையே இதற்கும் வைத்துவிட்டனர். பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்துவிட்டது ஆதிபகவன்.

இன்று ஒரு கொலை வழக்கு. அதில் இரண்டு நபரின் மேல் சந்தேகம். அதன் பொருட்டு விசாரணை தொடங்கியது. ஆதிபகவன் கேட்ட வினாக்களுக்கு இருவரும் விடையளித்தனர்.

வெகு நேரம் கேள்வி கேட்ட பின்னும் ஆதிபகவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் இருவரும் தெளிவாக பயமின்றி பதிலுரைத்தனர்.

இது எப்படி சாத்தியம்?. அங்கிருந்த அனைவருமே குழம்பி தவித்தனர். இவர்கள் இருவரும் கொலை செய்யவில்லை என்றால் கொலை செய்தது யார்?. அந்த மூன்றாம் நபர் யாராய் இருக்கும்?. தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் இவர்கள் இருவர் மட்டுமே சம்மந்தப்பட்டிருக்கின்றனர்.
நல்லாட்சியில் முதல்முறையாக ஒரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் போதிய தரவுகள் இல்லாததால் இந்த வழக்கை இன்னும் சில நாட்கள் ஒத்தி வைக்கிறேன் என்று ஆதிபகவன் கம்பீரமான குரலில் கூறிவிட்டு சென்றது.

அனிச்சம் இன்னும் நினைவு உலகத்திற்கு திரும்பவில்லை. அவள் இந்த தொழிலுக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஒருமுறை கூட இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்ததில்லை. இவ்வளவு ஏன்? ஒரு வழக்கு கூட நிலுவையில் இல்லை. எங்கு தவறு நிகழ்ந்தது. தவறுதான் நிகழ்ந்ததா இல்லை யாரேனும் பின்னிருந்து இந்த சூழ்நிலைகளை இயக்குகிறார்களா என்ற பெரியதொரு ஐயம் அவளது மனதில் எழுந்தது. சிந்தனையினூடே தன் பயணத்தையும் தொடர்ந்தாள்‌.

வீட்டிற்கு வந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். யோசனையாக அவளுடைய படிக்கும் மேசையின் முன் சென்று அமர்ந்தாள். நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது. அவளது அன்னை அவளுக்கு பூமியைப் பற்றி கூறிய கதைகள் எல்லாம் நினைவில் வந்தது. என்றுமே அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். அவள் நினைத்து நினைத்து வியந்து வியந்து மனதில் சேமித்து வைத்திருக்கும் பொன்னான தருணங்கள் அவை. தருணங்கள் மட்டுமல்ல அவள் தாயின் கதைகளும் கூடத்தான். அவள் தாயின் கதைகள் உண்மையா என்று கூட தெரியாது. அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று கூறுவோர் அநேகம்‌ பேர்.

மீண்டும் அதே வார்த்தைகள். அதே உணர்வுகள்.

"அதோ அங்க பார். அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்க பார்த்தாள்.

"அம்மா... பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்துச்சா அம்மா?"

"ஆமாமா. பூமி முழுக்க நீரால் சூழப்பட்டிருந்தது. ஆழிசூழ் அவனின்னு சொல்லுவாங்க பூமியை."

"ரொம்ப அழகா இருக்குமா. எனக்கு அந்த பூமிக்குப் போய் வாழணும் போல ஆசையா இருக்கு."

"அங்கதான் செல்லம் நீ இருக்க."

"இல்லமா... எனக்கு இது பிடிக்கல. இந்த படத்தில் உள்ள மாதிரியா பூமி இருக்கு?. இப்போ வெறும் கருப்பும், வெள்ளையும் மட்டும்தானே இருக்கு பூமியில."

"பூமி இப்படி மாறணும்னு விதி இருந்திருக்கு. இது ஒரு சாபம்தான். நம்ம கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் எல்லாம் பூமியில் இருந்திருக்கு."

"அப்பறம் ஏன் மா இந்த பூமி இப்படி ஆச்சு?."

"கோடி வருஷத்துக்கு முன்னாடியே இந்த பூமிப்பந்து உருவாகிருச்சு. அப்பறம் சில வேதியியல் மாற்றங்களால் நீர் உருவாச்சு. அப்பறம் உயிரினம். காலம் காலமாக நம்மைப் போல் மக்கள் வாழ ஆரம்பிச்சாங்க. நாகரிகம் வளர்ந்து, செழிப்பான வாழ்க்கை வாழ ஆரம்பிச்சாங்க‌. ஏதோ ஒரு அழுத்தம் பூமியில் உருவாகியிருக்கணும். ஒரு கட்டத்துக்கு மேல பூமியால் தாங்க முடியல. வெடிக்க ஆரம்பிச்சிருச்சு."

"எப்படிமா? வெடிச்சுச்சா?.. வெடிச்சா சின்ன சின்ன பாகமா சிதறி போயிருக்காதா?"

தன் ஐந்து வயது பிள்ளையின் அறிவாற்றலை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் அன்னை.

"பூமி சின்ன பொருள் இல்லமா.. நீ கற்பனை செய்ய முடியாத அளவு பெரியது‌. பூமிக்கு நடுவில் பாறைக் குழம்பு இருக்கு. வெப்பம் ஏற ஏற, அங்க அழுத்தம் கூடியிருக்க வேண்டும். அதனால் அது பல இடங்களில் ரொம்ப பெரிய அளவுல வெடிச்சுதாம்" என்று கூறியவள், ஓவியத்தொடர் ஒன்றை எடுத்து கடைபரப்பினாள். அதில் பூமியின் முப்பரிமாண தோற்றம் தோன்றி அதன் அடுக்குகள் தெரியுமாறு விளக்கப்பட்டிருந்து முதல் படம். அதன்பிறகு பூமியில் நீர் தோன்றியதில் தொடங்கி தொழில்நுட்ப வளர்ச்சி வரை மேல்தளத்தில் நிகழும் மாற்றங்களையும், அந்த மாற்றங்களால் பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்களையும்‌ ஒன்றாக எடுத்துரைக்கும் படி அடுத்தடுத்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. அதை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அனிச்சம். திடீரென, பூமியின் மையப்பகுதியில் கொதித்துக் கொண்டிருந்த பாறைக் குழம்பு அழுத்தம் தாளாமல் அங்குமிங்கும் கலங்கி தவித்தது. அதைப் பார்க்கவே படுபயங்கரமான காட்சியாய் இருந்தது. ஒரு கட்டத்தில் அது உருண்டையாய் இருந்த பூமிக்கோளத்தில் ஒரு வெடிப்பை உருவாக்க, மருகித் தவித்த செந்தழல் குழம்பு அதிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. பசும் பூமிக்கோளம் சில நிமிடங்கள் குருதி வடித்தது. ஆனால் சில நொடிகளில் அந்த சிறுவெடிப்பு‌ போதாமல் பல பெருவெடிப்புகள் உருவாக, பாறைக்குழம்புகள் பெருமளவு பூமியின் மேல்பரப்பில் ஒழுகி, பசுமைகளை கரியாக்கி, நீர்நிலைகளை ஆவியாக்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் பூமியின் ஒரு பாகம் முழுக்க கருமையும் மறுபாகம் முழுக்க வெண்மையும் மட்டுமே மிச்சமிருந்தது. பூமித்தட்டுகள் இடம்பெயர்ந்திருந்தது. வெடிப்புகள் ஒரு பக்கமாக உருவாக, ஒரு பக்கம் முழுக்க கருப்பு மற்றும் சாம்பல் தவிற வேறு நிறமில்லை. பூமித்தட்டு நகர்ந்ததில் வடதுருவமும் தென்துருவமும் ஒரு பக்கமாக இணைந்தது. அதில் மற்றொரு பக்கம் மட்டும் குளுமையைத் தக்க வைக்க, அது வெள்ளையாக காட்சியளித்தது. வெள்ளையும், கருப்புமாய் ஒரு பந்து. அதுவே பூமிப்பந்தானது என்று முடிந்தது அந்த ஓவியத் தொடர்.

இந்த ஓவியங்களை வைத்துதான் அவள் ஒரு காணொளி தயார் செய்திருந்தாள்.

அது அப்படியே அவளது மூளையில் பதிந்துபோனது.

அவளின்‌ எண்ணங்களை கலைக்கும் வண்ணம் அழைப்பு மணியடிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
அவளுடைய வருங்கால கணவன் நளந்தன் நின்று கொண்டிருந்தான்.
அவன் அவளுக்கு உற்சாகமாக வணக்கம் வைக்க, அவளோ இன்னும் வேற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

"அனி! என்ன ஆச்சு?. என்ன குழப்பத்துல இருக்க?"

"உள்ள வா நளன். அப்புறம் பேசலாம். குடிக்கத் தண்ணி வேணுமா?"

"ம்ம்ம்.. குடு.." என்றுவிட்டு அமர்ந்தான்.

அவள்‌ நீர் எடுக்க உள்ளே சென்றாள்.

நளன் அவளின் மேசையின் முன் அமர்ந்து, சற்றுமுன் அவள் கண்ட அசைவூட்டியினை இயக்கினான்.

அவள் நீர் எடுத்து வந்ததும் அதை வாங்கி பருகியவன், "இன்னும் எத்தனை முறை இதை பாத்துட்டே இருப்ப? இதெல்லாம் நம்பறியா என்ன?" என்றான்.

"நளன்.. உங்களுக்கு வேணா இதெல்லாம் வெறும்‌ கட்டுக்கதையா இருக்கலாம். ஆனா என்னோட மண்டைக்குள்ள சதா சர்வகாலமும் ஓடிட்டே இருக்க விஷயம்."

"ஆயிரம் வருஷம் முன்னாடி உலகம் இப்படி இருந்திருக்கலாம் என்று ஒரு அனுமானம்தான் இது. அதாவது யாரோ எழுதி வச்ச சில தரவுகளை வச்சு இப்படி ஒரு காணொளி தயார் செய்துருக்க. இது இப்படித்தான் இருந்ததுன்னு இன்னும் நிரூபிக்கப்படல. அப்புறம் எப்படி நம்பற?.."

"நெருப்பில்லாம புகையாது. மனிதர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி வச்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமேணும் உண்மையில்லாம இருக்க வாய்ப்பு இல்லை. இந்த காணொளில வர்ற மாதிரி உலகம் அழிஞ்சு போயிருந்துச்சுன்னா, துருவத்தில் இருந்த சொற்ப நபர்கள் மட்டும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கு. அவங்களுக்குத் தெரிஞ்சதை எழுதி வச்சிட்டு போயிருக்கணும். நிச்சயம் இதற்கான தரவுகள் கிடைக்கும். நீ வேணா பாரேன்" என்றாள் அவள்.

"இத்தனை வருஷமா கிடைக்காத ஆதாரம் இனி கிடைக்கும்னு சொல்றியா?"

"நிச்சயமா!! எனக்கு நம்பிக்கை இருக்கு."

"நீ தேவையில்லாம கற்பனைகளை மனதில் வளர்க்கறயோன்னு தோணுது.‌ அதீத கற்பனைகளும் கனவுகளும் நல்லதில்ல. இது உன் மனநிலையை பாதிக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு."

"ப்ப்ச்... உனக்கு புரியாது விடு."

"புரியற மாதிரி நீ எதுவும் சொல்லல அனி. எப்போ உன்னைப் பார்க்க வந்தாலும் இதை மட்டுமே பேசி என்னை எரிச்சலாக்குற" என்றே அவன் எரிச்சலுடன் மொழிய, அவள் கோபம் கொண்டாள்.

"உங்களுக்கு நான் சொல்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத விஷயம் எப்படி புரியும்?."

"இந்த உருப்படாத பேச்சு வேண்டாம். உலகம் ஒண்ணுதான். அது கருப்பும்‌ வெள்ளையும் கலந்த உருண்டை. அவ்ளோதான். உயிரே இல்லாத கதைக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிற. உன்னோட மனசுல நான் எங்க இருக்கேன்னு எனக்குத் தெரியல. உன் கூட வாழப்போற நாட்கள் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு" என்றான்‌ கோபமாக.

அனிச்சம் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்துவிட்டாள் அங்கிருந்த கல் நாற்காலியில். பூமியில் இருக்கும் 80 சதவீதம் பொருட்கள் கல்லினால் ஆனவை. அவளின் அமைதி அவனை ஏதோ செய்ய, அருகில் சென்று அமர்ந்தான்.

அதீத உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும்பொழுது, அவள் இப்படித்தான். உரையாடமாட்டாள். அவள் அன்னையின் மரணம்‌ நிகழ்ந்த பொழுதும் இப்படித்தான். அமைதியாக ஓரிடம் சென்று அமர்ந்துவிட்டாள். அரசு தகனம் செய்யும் ஏற்பாடுகள் ‌அனைத்தும் செய்து, அவளது அன்னையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட பொழுதும், விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மனிதன் உயிர் வாழும் சராசரி வருடங்கள் நாற்பத்தி ஐந்து. அதுவரைதான் உயிர் வாழ முடியும். அதன் பின்னர் சொற்ப நபர்களே வாழ்வதுண்டு. யாரும் ஐம்பதைக் கடந்ததாக சரித்திரம் இல்லை.

இரண்டு வருடங்களாக அனியைத் தெரியும் அவனுக்கு. அவள் அன்னை இருந்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் இப்பொழுது தனிமையை உணர்கிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தான். அதனால் விரைவில் அவளைத் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அவனின் பணி அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவனுடைய விடுப்பு கோரிக்கை நிலுவையிலேயே இருந்தது. அதனால் அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்வான். என்ன பேசிக்கொண்டிருந்தாலும், இறுதியில் அன்னையின் ஓவியங்களிலும், கதைகளிலும் வந்து நிற்பாள். அவனிடம் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று தர்க்கம் செய்வாள். எப்பொழுதும் பொறுமையாக கையாளும் அவன் இன்று சற்று அதிகப்படியாக கோபம் கொண்டுவிட்டான்.

அவள் அருகில் அமர்ந்தவன், அவளின் கைகளில் விரல் கோர்த்தான். அவள் விழிகள் ஊறிக் கொண்டிருக்கும் ஊற்றாய், கண்ணீர் உகுக்க ஆரம்பித்தது.

"அனி,‌ உங்க அம்மாவ ரொம்ப தேடுறியா? எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவன்‌ கூற, அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

"பதில் சொல்ல மாட்டியா? நீ என்னைத் தேடலையா? ஆனா நான் உன்னை ரொம்பவே தேடுறேன்" என்றான் வருத்தத்துடன்.

"மன்னிச்சிடுங்க நளன். நான்... நான்..." என்று திணறினாள் அவள்.

"வேண்டாம் விடு. சிரமப்படாத. உன்கூட நிறைய வருஷம் வாழணும். உனக்கே தெரியும் நம்ம மனசு நல்லா இல்லைன்னா வாழ்நாள்‌ குறையும்னு. எனக்கு பயமா இருக்கு" என்றான் அவன்.

அவன் பயத்தில் உள்ள நிதர்சனம் உணர்ந்திருந்தாலும், அவளால் அந்த நினைவுகளைவிட்டு வெளியே வரமுடியவில்லை.

சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் எழுந்து சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.

"யாரு வந்தா?"

"தெரியலை. உயிர்காற்று தீர்ந்து போச்சாம். அதான் குடுத்துட்டு வரேன்" என்றாள்.

யார் வந்து உயிர்க்காற்று கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்குவது உலகத்தின் மரபு. ஒவ்வொரு வீட்டிலும் உயிர்க்காற்று சேமிக்கும் கொள்கலன்கள் இருக்கும். அவற்றை வீட்டினர் உபயோகப்படுத்திக்கொள்வர். இப்படி யாராவது வந்து உயிர்க்காற்று வேண்டும் என்று வினவினாலும், அதைக் கொடுப்பது அவர்களின் வழக்கம். குடிநீர் கூட இப்படித்தான். இரண்டுமே அரசின் மேற்பார்வையில் இருக்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் இருந்து காற்றும் நீரும் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் நிரப்பப்படும். அதை அவர்கள் விரயமாக்காமல் உபயோகம் செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப்படும். வீடுகளே இல்லாத இடங்களில், இதற்கென்று அரசு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தளவு, ஒவ்வொரு துளி நீரும், காற்றும், அவர்களின் உயிருக்குச் சமமானவை. அப்படி ஒருவருக்குதான் அவள் உயிர்க்காற்று வழங்கிவிட்டு வருகிறாள்.

அதன்பிறகு அவள் மனம் இலகுவானது. இயல்பை மீட்டிருந்தாள். நளனுடன் சிறிது நேரம் உரையாடினாள்.

"பேசாம என்னோட வேலையை நீ செய்யலாம்."

"பூமியை அகழ்ந்தெடுத்து, அதன் தொன்மையை ஆராய்வது உண்மையாவே எனக்கு மனசுக்கு பிடிச்ச வேலைதான். ஆனால் என்ன செய்றது?. எனக்கு அதுக்கு படிக்க கொடுப்பினை இல்லையே. என்னோட நரம்பியல் மண்டலம், நான் இதைப் படிக்கத்தான் லாயக்குன்னு சொல்லிருச்சே. அரசாங்கத்தை மீறி நாம என்ன செய்ய முடியும்" என்று வருத்தப்பட்டாள் அவள்.

"அதுக்கென்ன?.. நம்ம கல்யாணம் நடந்த அப்புறம் என் கூடவே எல்லா இடத்துக்கும் வா. என்னைவிட நல்லாவே‌ அந்த வேலையை செய்வ."

"அது சட்டப்படி குற்றமாச்சே."

"அட‌ ரொம்ப யோசிக்காத.. எப்படியும் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் நீ வேலைக்கு போகப் போறதில்ல. அதுக்குள்ள குழந்தை பெத்துக்கணுமே. அதனால வீட்ல இருக்க நேரத்தில், நான் என்னோட அகழ்வு பணியைப் பத்தி சொல்றேன். நீ எனக்கு உதவி செய்" என்றான்.

அது உலகத்தின் வழக்கம். திருமணம் முடிந்த பெண்கள் முதல் இரண்டு வருடத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, சோதனைக் குழாயில் தம்பதியரின் கரு உருவாக்கப்படும். அதன்பிறகு அந்த கருவின் மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கருவில் உள்ள தவறுகளைக் களைந்துவிட்ட பின், அது பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். ஒவ்வொரு கருவுக்குள்ளும் சில பிரத்யேகமான மரபணுக்கள் செலுத்தப்படும். அது மிக முக்கியமான ஒரு செயல். ஏனெனில் அந்த செலுத்தப்பட்ட மரபணுவே, கருவின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு தெரிந்து உலகின் வெட்பம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பாதிக்கும் மேல் கரு தங்குவதில்லை.
அப்படியே கரு தங்கினாலும்‌ குழந்தை இறந்து பிறக்கும். இதனால் மனித இனம் பேரழிவை சந்தித்துக் கொண்டே இருந்தது.

இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததால் , மனித இனம் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக இது மாறிவிட்டது. ஆனாலும் மாற்றங்களை நூல் பிடித்து செல்லும் உயிர்கள் மட்டுமே இங்கு வாழமுடியும். அதாவது பரிணமிக்க வேண்டும். இயற்கையாக பரிணமிக்க இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைபோல. அதனால் செயற்கையாக பரிணமித்தனர் மனிதர்கள். அவர்களின் மூளை அவர்களுக்கு பேராயுதம். தொன்று தொட்டு வந்த கற்காலத்தில் இருந்து மனிதனின் அறிவாற்றலே அதிசயம் நிகழ்த்தியிருக்கிறது.

இருவரும் யோசனையில் இருக்க, வெளியில் அறிவிப்பு ஒன்று கேட்டது. அதுவும் ஆபத்துக் கால அறிவிப்பு. இவ்வகை அறிவிப்புகளுக்கு முன் ஒலிக்கவிடும் மனதை பிசையும் ஒலியே கிலியை ஏற்படுத்தும்.

இருவரின் முகங்களும் பேரச்சத்தை தத்தெடுத்திருந்தது.
 
Last edited:
அத்தியாயம் - 2

வெண் பாலை!
உறையும் பனி!
உலர்ந்த திரேகம்!
நடுங்கும் விரல்கள்!
விதிர்த்த நான்!
சூடாய் நீ!!!
அனைவரும் இந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்லுமாறு அரசாங்கம் கட்டளை இடுகிறது. ஏனெனில் இங்கு இருக்கும் சிவப்பு ஏரியில் சேகரிக்கப்பட்ட நச்சு வாயுக்கள் அனைத்தும் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். அதனால் இந்த ஊர் முழுக்க உள்ள மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள் என்றும், உதவி தேவைப்படுவோர் அரசாங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.

"ம்ம்ம்.... இது என்னைக்கு நடக்குமோன்னு நினைச்சிட்டே இருந்தேன்" என்றாள் அனிச்சம் முகத்தில் அப்பியிருக்கும் பயத்துடன்.

"இது நடக்கறது வழக்கம் தானே... சரி.. வா என்னோட வீட்டுக்கு போகலாம். தேவையான எல்லாத்தையும் எடுத்து வை" என்று கட்டளையிட்டான்.

அந்த சிவப்பு ஏரிக்கு அடியில் ஒரு மாபெரும் எரிமலை இருக்கிறது. நான்காயிரம் வருடம் பழமையான எரிமலை. அடிக்கடி வெடித்துச் சிதறும். ஆனால் ஏரியின் நீரால் அது வெளியே தெரியாது. ஆனால் அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்களை அந்த ஏரி சேமித்து வைத்துக் கொண்டே இருக்கும். அதனால் அந்த ஏரியின் நிறமே சிவப்பாய் இருந்தது.

நீரில் அந்த நச்சுக்காற்றின் அடர்த்தி அதிகமானதும் பெரும் சப்தத்துடன் வெடிக்கும் என்று எதிர்பார்த்தனர். அந்த நாளும் வந்துவிட்டதுபோல. எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ஏரியில் உள்ள வாயுக்கள் வெடித்து வெளியாகலாம். அதனால் இந்த முன்னேற்பாடுகள்.

முன்பொருமுறை இதே போல் ஓரிடத்தில் நிகழ்ந்தது. அங்கு வாழ்ந்த பல மக்கள் மறுநாள் விடியலில் பிணமாய்க் கிடந்தனர். அதனால் ஒவ்வொரு எரிமலை ஏரியிலும் உணரி(சென்சார்) பொருத்தப்பட்டிருந்தது. அது தகவல் மையத்திற்கு தகவல் அளித்துவிடும். அந்த ஏரியைச் சுற்றிலும் பத்து கி.மீ தூரம் வாழும் மக்களை அப்புறப்படுத்துவர்.

அனிச்சத்தை அழைத்துக்கொண்டு நளந்தன் அவனுடைய வீட்டிற்கு சென்றான். இருவரும் மகிழுந்தில் சென்றனர். அவனுடைய வீட்டை அடைந்த பின்னர், அவளை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தான்‌.

"சரி.. நீ ஏன் குழப்பமா இருந்த?.. அதை சொல்லு முதல்ல.." நளன்.

"இந்த உலகத்தில் என்னென்னமோ நடக்குது. என்னால நம்பவே முடியல. ஒரே அதிர்ச்சி மேல அதிர்ச்சிதான்" என்றாள் கவலையோடு அவள்.

"விஷயம் என்னன்னு சொல்லாமலே புதிர் போடுறதை வழக்கமா வச்சிருக்க. நீ இன்னும் விஷயத்தை சொல்லல."

"அது இன்னைக்கு ஆதிபகவனால வழக்குக்கு தீர்ப்பு வழங்க முடியலை. தீர்ப்பு தேதி ஒத்தி வச்சுட்டாங்க" என்று அவள் முடிப்பதற்குள் அவன் எழுந்துவிட்டான்.

"என்ன சொல்ற நீ!!. இது எப்படி சாத்தியம்?.. கனவு ஏதாச்சும் கண்டியா?" என்றான் அவன். அவள் அமைதியாக‌ அங்கிருந்த தொடுதிரையை‌ இயக்கி, அன்றைய செய்திகளை ஓடவிட்டாள்.

அதில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட, அதைக் கண்டு திடுக்கிட்டான் நளன்.

"என்ன அனி இது?. இது எப்படி நடந்துச்சு?."

"அதுதான் தெரியல. வரலாறு காணாத விஷயமெல்லாம் நடக்குது. கொஞ்சம் பயமா இருக்கு. ஆதிபகவன் இருக்கதாலதான் தவறுகள் செய்யாமல் நாம எல்லாம் அமரரா வாழ்ந்திட்டு இருக்கோம். இல்லை நிலைமை தலைகீழா மாறி எல்லாரும் அரக்கனா வாழ ஆரம்பிச்சா, எஞ்சியிருக்கும் இடுகாடு‌கூட இல்லாமப் போயிடும்."

"ஒருவேளை இது திட்டமிட்ட சதியா இருக்குமோ?"

"இதுல சதி செய்ய யாருக்கு தைரியம் இருக்கு சொல்லு."

"ரெண்டு விஷயம் தான் அனி. ஆதிபகவனின் பிம்பத்தை‌ உடைக்க, யாரோ செய்த சதி வேலை. இல்லைனா, வாதியோ,பிரதிவாதியோ பொய்‌ சொல்லியிருக்கணும்."

"பொய் சொல்றது சாத்தியமேயில்லையே. மூளை நினைப்பதைதான் ஆதிபகவன் கண்டுபிடிச்சுருவாரே."

"மூளையையும் மனசையும் குற்றவாளி கட்டுப்படுத்தியிருந்தா" என்றான் சிறிது நேர யோசனைக்கு பின்.

"அப்படியெல்லாம் முடியுமா?"

"அது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் முடியாதுன்னு சொல்ல முடியாது. பல வருஷம் மனதை தியான நிலையில் வைத்திருந்தா, மனம் நம்ம சொல்றதைக் கேக்கும்னு மனோதத்துவம் சொல்லுது. இப்போ கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளுள் அதுவும் ஒன்று."

"ஆனா அவ்ளோ மனோதிடம் உள்ளவன், உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்வானா?"

"திட்டமிட்டு செஞ்சிருக்கலாமே?"

"இல்லை.. இந்தக் கொலை முழுக்க முழுக்க எந்த திட்டமிடலும் இல்லாம நடந்திருக்கு."

"சரி‌ கடைசியா இப்போ என்ன செய்யணும்னு ஆதிபகவன் சொன்னாரு?."

"வாதி, பிரதிவாதி ரெண்டு பேரையும்‌ சில நாட்கள் அவருடைய கட்டுப்பாட்டில் வைக்கப் போறது உறுதி."

"அதுவும் சரிதான். எவ்ளோ நாள் மனோதிடத்தோட வலம்வர முடியும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். நீ என்ன செய்யலாம்னு இருக்க?.."

"நானும் அவங்களைப் பின் தொடரலாம்னு இருக்கேன். ஏதாச்சும் ‌சாட்சி கிடைக்குதான்னு பார்க்கணும். அவங்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்படணும்."

"செய்யலாம். ஆனா என்னால இன்னும் நம்ப முடியல.." என்றான் நளன்.

"நம்பித்தான் ஆகணும். எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு... இருக்கு... என்ன செய்றது..."

"சரி... உனக்கு எந்த அகழாய்வுக் களத்தில் பணியிடம்‌."

"எனக்கு தெற்குப் பாறையில்."

"எப்போ கிளம்பற?"

"நாளைக்கு.."

"நான் இங்க தனியா இருக்கணுமா? நினைச்சாலே வெறுப்பா இருக்கு."

"பேசாம நீயும் என்னோட வந்துடு. அங்க கொஞ்சநாள் தான் இருப்பேன். அடுத்து இந்த வழக்கு திரும்ப நீதிமன்றத்துக்கு வர இன்னுமும் நாள் இருக்கே. நீ என் கூட அங்க வா. வந்ததும் நாம இந்த வழக்கைப் பத்தி விசாரிக்கலாம்."

"உன் கூட அவ்ளோ நாள் எல்லாம் என்னால இருக்க முடியாது. ஆனா எனக்கும் அங்க வந்து பார்க்கணும்னு ரொம்பவே ஆசை. வேணா ஒருநாள் வரேன். அப்புறம் திரும்பி இங்க வந்துடுறேன். எனக்கு நிறைய வேலையிருக்கு."

"சரி.. எப்படியோ நீ‌ வந்தா சரி. இந்த தெற்குப் பாறை ரொம்பவே வித்தியாசமான இடம். உனக்கு ரொம்பவே பிடிக்கும்."

அதன்பிறகு இருவரும் தேவையான பொருள்களை வாங்கலாம் என்று கடைவீதி சென்றனர்.

செல்லும் வழியில் அனிச்சம் வாதாடிய வழக்கின் எதிர்வாதியைப் பார்த்தனர். அவனும் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தான். அனிச்சம் அவனை அடையாளம் கண்டுகொண்டு நளனிடம் உரைக்க, நளன் அவனைப் பின்தொடர்ந்தான்.

"நளன் என்ன செய்றீங்க?.." அனி.

"இப்பவே அவனைப் பின்தொடர்ந்து பார்க்கலாம். ஏதாவது துப்பு கிடைக்குதான்னு" நளன்.

இருவரும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல, அவன் அவனுடைய வீட்டிற்கு சென்றான். சாரளத்தின் வழியே அவனை நோட்டமிட்டனர்.

சென்றவன் நேராக தண்ணீர் குழாய்க்கு சென்று தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான். பல துளிகள் வீணாய் கீழே சிந்தியது.

அதன் பிறகு "நான் சாதித்துவிட்டேன்" என்று ஒரு சொல்லை மட்டும் உதிர்த்தவன் அறையில் சென்று படுத்துக்கொண்டான்.

"அனி, இவன் என்ன இப்படி நடந்துக்கிறான்?. அவனோட நடத்தையில் ஏதோ வித்தியாசமா இல்லை. அவன் சொன்னதைக் கேட்டியா? நான் சாதித்துவிட்டேன்னு சொல்லிட்டு போறான். அப்போ ஏதோ பெரிய தப்பு பண்ணி இருக்கான்னுதானே அர்த்தம்" நளன்.

"நளன், உனக்கு அவன் சொன்ன வார்த்தை பெரிசா தெரியுது. ஆனா அவன் செஞ்சதெல்லாம் கவனிச்சியா?"

"அப்படி என்ன பெருசா செஞ்சான்?. வந்தான், தண்ணி குடிச்சான், ரெண்டு வார்த்தை பேசினான், போய் படுத்துட்டான்."

"தண்ணி குடிக்கும்போது என்ன நடந்துச்சு?" என்று சொல்லவும் அவன் விழிகளில் மின்னல் வெட்டியது.

"என்ன இருந்தாலும் வக்கீல் வக்கீல் தான்!!."

"இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு. அவன் தண்ணி குடிச்சப்ப கீழ சிந்திருச்சு. நம்மள பொறுத்தவரை தண்ணி சிந்துனது பெரிய விஷயம். ஏன் ஒரு பெரிய தப்பு கூட" அனி.

"நீ சொல்றது ரொம்ப சரி. அப்படியே தவறுதலா கீழ சிந்திருந்தாக் கூட நெஞ்சு பதறும் இல்லையா. ஆனா அவன் கிட்ட அந்த பதட்டம் எதுவுமே இல்லை" நளன்.

"ஏதோ ஒண்ணு முரண்பாடா இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்கலாம். இன்னும் கொஞ்சநாள், அவனைப் பின்தொடர்ந்து வந்தா, உனக்கு ஏதாவது தகவல் கிடைக்கும்னு நினைக்கிறேன்."

"இவன் பெயர் என்ன?"

"தீரன்."

"உன்னோட கட்சிக்காரன் பெயர் என்ன?"

"திரவியன்."

இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அடுத்த நாள் புறப்பட்டு செல்ல அனைத்தும் தயார் செய்தனர். நளன் அனிச்சத்திற்கு தேவையான குளிர் தாங்கும் அங்கியை எடுத்து வைத்தான். அவர்கள் செல்லப்போவது ஒரு குளிர்ப்பிரதேசம்.

அனிச்சம் ஜன்னல் வழியாக அவளுடைய கற்பனை உலகில் சஞ்சரித்தாள். மீண்டும் ஒழுகும் நிலவும் வழியும் இரவும் அவள் உலகத்தை நிரப்பிவிட்டது.

அவளின் ரசனையை‌ ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நளன். அழகியலை ரசிப்பதில் அவனுக்குப் பிடித்தம் இல்லை. இருக்கும் நேரத்தை அறிவிற்கு அளிப்பதே அவனுக்குப் பிடித்தம். ஓரிடத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது நேரத்தை விரயம்‌ செய்வதாக தோன்றும். அரசாங்கத்திற்கு சரியான வேலைக்காரன். அவன் மண்டைக்குள் அவன் வேலை மட்டுமே ஓடும். இப்பொழுது அனைத்தையும் துறந்தது மூளை. மனம் அனிச்சத்தை ரசித்துக் கொண்டிருந்தது விசித்திரத்திலும் விசித்திரமாய். அவள் அருகில் சென்று அமர்ந்தான். அனிச்சை செயல்போல் அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள். அவன் அதரம் மெல்லிய மூரல் ஒன்றை உதிர்த்தது.
சற்று நேரம் யோசித்த நளன் மீண்டும் ஒரு வினாவைத் தொடுத்தான்.

"அவனோட வார்த்தைக்கு என்ன அர்த்தம்?" என்று அமைதியை உடைத்தான்.

"யாரோட வார்த்தை?" என்றாள் அவள்.

"தீரன்... இன்னைக்கு பார்த்தோமே."

"ஆதிபகவனை ஏமாத்தியாச்சுங்கற மமதையா இருக்கும்."

"ஆனா எப்படிங்கறது குழப்பமா இருக்கே? ஆதிபகவனைக் குழப்ப இவன் என்னவெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு?"

"நளன், ஒண்ணு நீ‌ சொன்ன மாதிரி மனசையும்‌ மூளையையும் திடப்படுத்தியிருக்கணும். இல்லை ஆதிபகவனைக் குழப்ப, அவரோட நிரலாக்கம் (ப்ரோக்ராம்) ஊடுருவல்(ஹேக்) செய்யப்பட்டிருக்கணும்."

"ரெண்டாவது சொன்னது நடக்காதே. அப்படி ஒரு சூழ்நிலையை கையாளுறது ஆதிபகவனுக்கு புதுசா என்ன? இதுல வேற என்னமோ இருக்கு."

எவ்வளவு யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை அவர்களுக்கு. இவர்களின் சிந்தனையின் நாயகன் கருப்பாய் இருந்த தொடுதிரையின்முன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றை செய்ய நினைத்து, அது வெற்றி பெறாமல் போக, மனதில் மூண்ட பயத்துடன் அந்த அறையைத் தன் பாதம் கொண்டு அளந்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் என்ன நினைத்தானோ, ஒரு பையை தோளில் மாட்டிக்கொண்டு எங்கோ புறப்பட்டான்.

நளந்தன் அனிச்சத்தை அந்த மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்குதான் அகழாய்வு பணிகள் நடந்து கொண்டிருந்தது. வெடிப்பு நிகழ்ந்ததால் பிரபஞ்சத்தில் நம்முடைய பால்வெளி உருவானதாக கருத்துப்படிவம் இருக்கிறது. அதேபோல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியில் நிகழ்ந்த பேரழிவால் பாறைக்குழம்புகள் பூமியின் தளத்தில் வெளிப்பட்டு, பூமியின் ஒரு பக்கத்தை கரும்பாலைவனமாக மாற்றியது. மற்றொரு பக்கம் குளிர்ந்து பனிப்பிரதேசமாக உருக்கொண்டது. இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் சொற்பமான நிலப்பரப்பில்தான் மனிதப்பிறவிகள் வாழ்ந்து கொண்டிருந்தது. அதுவும் பாறைகளால் உருப் பெற்ற நிலம்தான்‌. உறைந்திருக்கும் பனிப்பிரதேசத்தில் சில அடிகளுக்கு மேல் முக்கால் பங்கு உப்பு உறைநீர்க்கட்டிகள்தான். பாறைக்குழம்புகள் குளிர்ந்து கட்டிப்பட்டு பாறைகளாகவே இருந்தது ஒரு பக்கம் முழுக்க. அதற்கு அடியிலும் உப்புத்தன்மை கொண்ட உறைந்த மலைகள் பல இருப்பது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உவர்நீர்க்கட்டிகளாய் இருக்கும் மலைகள் எல்லாம் ஒரு காலத்தில் மீப்பெரு நீர்நிலைகளாய் இருந்திருக்கலாம் என்று கணித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இதை ஆதரிக்கும் ஆய்வாளர்களும் இருந்தனர். எதிர்ப்பவர்களும் இருந்தனர்.

எப்பொழுதுமே அறிவியலைப் பொறுத்தவரை இருவேறு கூற்றுகள் உலா வருமே. அப்படி இதற்கு எதிர்மறையான கருத்துப்படிவமும் இருந்தது. அதாவது உலகம் உருவாகும் பொழுதே இப்படித்தான் இருந்திருக்கும் என்று கூறியது ஒரு கூட்டம். கடல் என்ற ஒன்றை அறியாததால், உயிர்கள் நிலப்பரப்பில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கூறினர். அதனால் இதனை அறிய பல இடங்களில் அகழாய்வு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பணியில்தான் நளன் இருந்தான்.

மொத்த மக்கள் தொகையே கோடிகள் தான். நாடு, மொழி, இனம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை. அவர்களின் தலையாய பணியே, உயிர்வாயு உருவாக்கமும், மனிதர்களின் மூலம் அறிவதும்தான்‌. விவசாயம் அறியாதவர்கள். மரம் என்ற ஒன்றையே அவர்கள் பார்த்ததில்லை. அவர்களின் பிரதான உணவே சில வகையான பாசிகள்தான். அவை பாறைகளில் வளர்ந்து கொண்டே இருக்கும். அதை அறுவடை செய்து உண்ணுவர். பாறைக்குழம்பால் உருவான பாறைகளில் ஏராளமான தாதுக்கள் இருக்க, தொழில் வளர்ச்சிக்குப் பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும்.‌

சில தினங்களில் நளனுக்கும் அனிச்சத்துக்கும்‌ திருமணம் என்று முடிவு செய்திருந்தனர். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அரசின் பதிவேட்டில் பதிய வேண்டும். அவர்களின் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்தான் ஒப்புதல் வழங்கப்படும். ஏனெனில் அவர்களின் மரபணுக்கள் மூலம் குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா என்று பரிசோதனை செய்வர். ஏனெனில் பிறப்பின் விகிதத்தை விட இறப்பின் விகிதம் சற்று அதிகமாய் இருந்தது. அதை சரிவிகிதத்தில் மாற்றியிருந்தனர் தற்பொழுது. மனிதனின் வாழ்நாளே சுமார் 45-50 வருடங்கள்தான். எல்லா வகையிலும் இந்த பூமியில் வாழ்வது ஒரு சவாலான காரியமே. பெரும்பான்மையினர் அடுத்து வரப்போகும் சந்ததியினருக்கு ஏதேனும் தகவல் திரட்டவே வாழ்ந்தனர். வாழ்ந்தும் முடித்தனர். திருமணம்‌, காதல் எல்லாம் இனப்பெருக்கத்திற்கு ஒரு வழி. மற்றபடி உணர்வுகள் குவிந்து கிடக்காது மனதில். மனிதனாய் பிறப்போம். அரசால் நமக்கு கட்டளையிடப்பட்ட காரியங்கள் முடிப்போம். உயிர் துறப்போம். மனித இனம் அழிந்துவிடாமல் இருக்க, இடையில் ஒரு வாரிசு. அவ்வளவே.

இப்படித்தான் சமதளத்தில் ஓடும் நீரோட்டம் போல் அவர்கள் வாழ்வு சென்றுகொண்டிருந்தது.

அனிச்சமும் நளனும் பனிமலைப்பிரதேசத்திற்கு வந்திருந்தனர். அங்கு பெரிய பெரிய கருவிகள் கொண்டு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது. அந்த பனிப்பாறைகளுக்கு அடியில் வானலையுணரி(ரேடார்) போன்ற கருவிகள் கொண்டு ஏதேனும் தொன்மப்படிவம் இருக்கிறதா என்று ஆராய்ந்தனர். 100 அடியில் இருந்து சில அடிகள் மட்டும் பனிப்பாறைகள் அல்லாமல் வேறு ஏதோ சில பொருள்கள் இருப்பதுபோல் தென்படுவதாய் சுட்டிக்காட்டியது அந்தக் கருவி.

உண்மையில் பனிப்பாறைகளை உடைப்பது மிகவும் கடினமான செயல். ஆனால் அந்த தோண்டும் கருவி அதை எந்தவித சிரமமுமின்றி அழகாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

இவர்கள் ஆராய்ச்சி செய்யும் பகுதி புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. பூமியின் ஒரு பக்கம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. அதில் துருவங்கள் இரண்டிலும் சூரிய ஒளியில்லாமல் அதீத குளிர். ஆண்டில் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது. மழைப் பொழிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே. பூமியின் அந்தப் பகுதியை பனிக்கட்டிப் பாலைநிலம் என்றும் கூறலாம். இந்தப் பகுதியில் நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.

பூமியில் வசிப்பவர்களுக்குத் தேவையான நன்னீரில் கிட்டத்தட்ட 80 சதவீதமானது இங்கேயிருந்து கிடைப்பதுதான்.‌அதற்கான தொழிற்சாலைகளும் அங்கே உண்டு. அங்கிருக்கும் நன்னீர் உறைக்கட்டிகளை உருக்கி நீராய் மாற்றி, குழாய்‌ வழியில் மக்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் தொழிற்சாலைகள் ஏராளம். அந்தப் பணியாளர்கள் வாழ்வதற்கு மட்டுமே வாழ்வாதாரம் அங்கு உள்ளது. துருவத்தையொட்டியும், அவர்கள் வாழும் நிலத்தின் சற்று அருகிலும் மட்டுமே அவர்களால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் மேற்கொள்ள முடிந்தது. ஏனெனில் மேற்குப் பகுதி முழுக்க முழுக்க பனியால் சூழப்பட்டிருக்க, உள்ளே செல்ல செல்ல குளிர் உதிரத்தை உறைய வைத்து, உயிர் குடித்துவிடும்.

நளன் அனிச்சத்தை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை சுற்றிக் காண்பித்தான்.

"இந்த இடம் ரொம்ப வித்தியாசமா இருக்கு நளன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."

"ஆமா அனி. இந்த இடம் ரொம்ப வித்தியாசமான இடம்தான். ஏன்னா இங்க தினமும் சூரிய உதயத்தை பார்க்க முடியாது" என்று நளன் கூறியதும் அவனை நம்பாமல் பார்த்தாள் அவள்.

"கிண்டலா நளன்?. சொல்ற பொய் பொருத்தமாவாச்சும் இருக்க வேண்டாம்" என்று நக்கல் அடித்தாள் அவள்.

"வக்கீலுக்குப் படிச்சா மட்டும் பத்தாது. கொஞ்சம் அறிவையும் வளர்த்துக்கணும். நான் சொல்றது நூறு சதவிகிதம் உண்மை" என்றான் நளன்.

"உண்மையாவா? புவியோட அமைப்புகளைப் பற்றி எனக்குத் தெரியாது. நீதான் சொல்லேன். தெரிஞ்சுக்கிறேன்" என்றாள் அவள்.

"இந்த இடத்தில ஒரு வருஷத்துக்கு ஒரு தடவைதான் சூரியன் உதிக்கும்" என்று அவன் கூற, அவள் ஆச்சரியம் பொங்க அவனைப் பார்த்தாள்.

"அது எப்படி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவைதான் உதிக்கும்?"

"இது பூமியோட தென்துருவம். பூமி அட்சரேகையில் கொஞ்சம் சாய்ந்த வண்ணம் சூரியனை சுற்றி வர ஆறு மாசம் முழுக்க ஆகும். உதித்த சூரியன் மறையாது ஆறு மாசம் முழுக்க, மறைந்த சூரியன் திரும்பி வராது. பூமி சுழலும்போது தன்னோடு அந்த அச்ச கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி சூரியனை சுற்றி வரும். ஆறு மாசம் இந்தத் துருவம் முழுக்க சூரியனைப் பார்த்து இருக்கும். ஆறுமாசம் சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்குறதுனால சூரிய உதயம் கிடையாது" என்று விளக்கம் அளித்தான் அவன்.

அதைக் கேட்ட அனி வாயைப் பிளந்தாள்.

"கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஆறு மாசம் இந்த இடத்தில இருக்க முடியாது போல. பூமி எவ்வளவு விசித்திரமா இருக்கு!!. ஒரு பக்கம் பார்த்தா வெப்பம் நம்மளால தாங்க முடியல. இன்னொரு பக்கம் குளிர் தாங்க முடியல."

"சரி இப்போ சொல்லு நம்ம இன்னும் ஒரு நாலு நாள் இங்க இருந்துட்டு போலாமா?."

"அதுதான் நாள் கணக்கே கிடையாதுன்னு சொல்லிட்டியே. எனக்கெல்லாம் சூரியன் உதித்து மறைந்தால்தான் ஒரு நாள் முடிவுக்கு வரும். இங்கதான் அந்த கணக்கே கிடையாதே. எனக்கு நிலாவைப் பார்க்காம இருக்க முடியாது" என்றாள் அறிவிப்பாக.

"சரி அப்போ இங்க தென்துருவத்தோட கணக்குப்படி இங்கே இருந்திடலாம் பேசாம. சூரியன் உதிக்கணும். சூரியன் மறையணும். ஒரு வருஷம் ஆகும். நிலாவையும் பார்த்துட்டு போகலாம்" என்றான் கேலியுடன்.

"நான் எதோ விளையாட்டுக்கு சொன்னா, அதை பிடிச்சுப்பியா. எனக்கு என்ன தலையெழுத்தா இங்க இருக்கணும்னு? நான் நாளைக்கு கிளம்பணும். எனக்கு வண்டி ஏதாவது ஏற்பாடு பண்ணிக் கொடுத்திடு. நான் என்னோட வழக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும்."

"இல்ல நாளைக்குப் போக வேண்டாம். ஒரு ரெண்டு நாள் கண்டிப்பா இருக்கணும்."

"ரெண்டு நாள் இங்க இருந்து நான் என்ன பண்ணப் போறேன்?. ரெண்டு நாளில் இங்க என்ன பெருசா மாற்றம் வரப் போகுது. அந்த சூரியன் இருந்துட்டே தான் இருக்கப் போகுது" என்றாள் சலிப்புடன்.

"சூரியன் மறையும் காட்சியைப் பார்க்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல ஆறு மாசம் முடியப் போகுது. பூமியோட அட்சரேகை சூரியனுக்கு எதிர்திசையில் நகரப்போகுது" என்றான் அவன்.

அவள் பதிலேதும் கூறாமல் அவனை முறைத்தாள்.

"சூரியன் மறையறத நிச்சயம் நீ பார்க்கணும். அப்புறமா இங்க ஒரு நாள் இரவு மட்டும் தங்கிட்டு போகலாம். அந்த இரவில் ஒரு அழகியல் இருக்கும்" என்றான் அவன்.

"என்ன அழகியலா? இதைப்பத்தியெல்லாம் நீயா பேசுற? இரவுல என்ன அழகு இருக்கப்போகுதுன்னு சொல்லுவியே. பூமி ஒரு பக்கம் வெள்ளையாகவும், மற்றொரு பக்கம் கருப்பாகவும் இருக்கிற மாதிரி, இங்க ஆறு மாசம் முழுக்க பகலும், ஆறுமாசம் முழுக்க இரவும் இருக்கு. நீ என்னைத் தங்க வைக்க இதெல்லாம் சொல்றியா?"

"நானே இப்படி சொல்றேன்னா யோசிச்சு பாரு. ஆனா நான் என்னன்னு உனக்கு சொல்லமாட்டேன். நீ இருக்க கண்டிப்பா. உனக்கு பிடிக்கும். நீ உங்க வீட்ல பார்த்துட்டு இருந்தியே அசாத்தியமான சில காணொளிகள். அந்த மாதிரி அந்த இரவு கூட ஒரு அசாத்தியமான இரவாய் இருக்கும். அது அனுபவிச்சாதான் தெரியும் உனக்கு."

அவள் யோசனையுடன் சரியென்றாள்.

"நளன்.. பூமியோட ஒரு பகுதியாவது அழகா இருக்கே" என்றாள் பெருமூச்சுடன்..

"இந்த அழகுக்குப் பின்னாடி பெரும் ஆபத்து இருக்கு அனி" என்றான் நளன்.

"நம்மளால பூமியோட இன்னொரு பகுதியில் வாழ முடியிதா என்ன? எவ்ளோ வெப்பம்!!!" என்றாள் அவள்.

"இங்க இருக்க ஆபத்து தெரியாம பேசற. பனிப்புயல் கேள்விப்பட்டிருக்கியா?... பனிப்புயல் 300 கி.மீ. வேகம் வீசும். இப்போ‌ இதமான சீதோஷ்ணநிலை இருக்குன்னு சொல்றியே. பனிப்புயல் வந்தா இந்த நிலை சுமார் அரைமணி நேரத்திற்குள் நம்மள உயிருக்குப் போராட வச்சிடும். குளிரால எற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம். பூமியில் அதிர்ச்சி ஏற்பட்டால், பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி, சரிவு நோக்கி மெல்ல நகரும். அந்த சமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்கும். புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை மேலே இலேசாக மூடிவிடும். இந்த மாதிரி பனிப்பிளவுல எச்சரிக்கை உணர்வின்றி கால் வைத்து எத்தனை பேர் செத்துருக்காங்க தெரியுமா?" என்று நளன் கூற, அவள்‌ ஆச்சர்யம் பொங்க அவனைப்‌ பார்த்தாள்.

"நளன்.. உண்மையா செத்துருவாங்களா?" என்றாள் சந்தேகத்துடன்.

"ஆமா... பனிப் பிளவான இடத்தில் பனிக்கட்டியா இல்லாம கொஞ்சம் தளர்ந்து இருக்கும். அந்த நபர் அதலபாதாளத்தில் விழுந்து, உடனடி உறைதல் காரணமா உறைந்து போவாங்க. பனிப்புயலின் வேகத்தால் உறைபனிப்பாளங்கள் சீவி விடப்படுவதால், பனிப்பாளங்கள் சமதரையாக இல்லாமல் மேடு பள்ளமாகவே இருக்கும். அவற்றின்மீது நடக்க முற்பட்டால், உடைந்துபோன கண்ணாடித் துண்டுகள்போல் கால்களைக் கிழிக்கும்" என்று அந்த இடத்தின் உச்சங்களைக் கூறி அச்சுறுத்தினான் அவளை.

அவன் கூறிய விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி தாளாமல் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவனுடைய குழுவில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவளையும் அழைத்துக்கொண்டு அகழாய்வு நடக்கும் இடத்திற்கு வந்தான்.

சில மணி நேரங்களில் 100 அடியையும் தோண்டி இருந்தனர். அதன்பிறகு ஒரு செயற்கை நுண்ணறிவு படைத்த ஒரு இயந்திரத்தை உள்ளே செலுத்தி அங்கு அமிழ்ந்து இருக்கும் பொருளை எடுத்து வந்தனர். கொஞ்சம் பழுப்பு நிறத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான பொருள். அவர்கள் இதுவரை கண்டதில்லை. இதுவரை பூமியை அகழ்ந்ததில் இப்படி ஒரு பொருள் கிடைத்ததும் இல்லை. அனைவரும் அந்தப் பொருளின் விசித்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
Last edited:
கற்பனை எதிர்காலம் வாழ்வதற்கு சவாலான ஒன்றா இருக்கு. தீரன் என்ன வேலை பண்ணிருப்பான் ஒருவேளை ஹேக் பண்ணி அதை ஆதிபகவன் கண்டுபிடிச்சுட்டாரா? நளன் சொல்ற அந்த அழகியல பார்க்க எனக்கும் ஆர்வமா இருக்கு. மேல இருட்டு(கருப்ப) கீழ பனி(வெள்ளை) இதா அவன் சொன்ன அழகியல்? பனிபுயல் பத்தின செய்தி 👌👌👌. ஒருவேளை அந்த பழுப்பு நிறப் பொருள் மரமா இருக்குமோ🤔 பனில இருக்றதுனால அது கலர் மாறாம அப்படியே இருக்கோ? எபி👌👌👌👌
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom